Jump to content

பேரழகியின் புகைப்படம்


Recommended Posts

பேரழகியின் புகைப்படம்

- நாராயணிகண்ணகி

ஞாயிறன்று அம்மாவுடன் உட்கார்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தேன். மணமகன் தேவையில் லதாவின் புகைப்படத்தைப் பார்த்த அம்மா உறைந்த மாதிரி ஆகிவிட்டாள். கண்கள் பழைய நினைவுகளுக்கு ஓடி விட்டது. என்றாலும் எதையோ வென்றுவிட்ட ஆர்ப் பரிப்பு மௌனத்திலும் வெயிலாய் சுட்டிருக்க வேண்டும். அடுத்த நபரின் புகைப்படம் தொலைக்காட்சியில் வந்தும் நெஞ்சில் லதாவின் பிம்பம் அகலவில்லை.

தேவதை என்று சொல்வதை விட மேலான வார்த்தை உண்டா? அழகி எனும் சொல்லிற்குள் சுருக்கி விட விருப்பம் இல்லை. பேரழகி என்று சொல்வதே குறைவான மதிப்பீடு போல்தான் படுகிறது. அழகு என்பதற்கு ஆயிரம் பேர் ஆயிரம் விளக்கங்கள். அந்த ஆயிரங்களையும் தாண்டும் சில அழகுக்குறிப்புகள் இருக்கிறது. காமாட்சி +1 படிக்கும் போது அழகானவள் கிடையாது.
7.jpg
பத்தோடு பதினொன்றுதான். காமாட்சியை விட அகிலாவும், மனோன்மணியும் ரொம்ப அழகாக இருந்தார்கள். காமாட்சி லூசுத்தனமாக ப் பேசுவாள். எதற்கெடுத்தாலும் சிரிப்பாள். ஆண்கள் அவளை கிண்டல் அடித்துக் கொண்டே இருப்பார்கள். கவலையே பட மாட்டாள். மோசமான விமர்சனமும் அவளின் மீது விழும்.

‘என்னடி அவ குரங்கு மாதிரி சேட்டை பண்றா... மையை கண்ணு பூராவும் தடவி இருக்கா, நெத்தி பூராவும் ஸ்கிரீன் தொங்க விட்ட மாதிரி முடியை இறக்கி விட்டிருக்கா... கம்யூனிஸ்ட் கொடி வரைஞ்ச மாதிரி உதடு பூராவும் பெயிண்ட் அடிச்சிருக்கா...’ அந்த சுமார் காமாட்சி, +2 முழுமையாக முடிப்பதற்குள்ளேயே நடிகை ஆகிவிட்டாள், சினிமாத் துறையிலிருந்த உறவினர் மூலம். அதுவும் கதாநாயகியாக.

படம் ஹிட். தொடர்ச்சியாக தமிழ், தெலுங்கு இரண்டிலும் எல்லாப் பெரிய கதாநாயகர்களோடும் நடித்துக் கொண்டிருக்கிறாள். காமாட்சியாக அல்ல, காமாயாக. இப்போது அவளை குரங்கு மாதிரி என்று சொன்னால் தென்னிந்தியாவின் எல்லா ஊர்களிலிருந்தும் அடிக்க வருவார்கள். சமீபத்தில் ஒரு தொலைக் காட்சிப் பேட்டியில் காமாயைப் பார்த்தேன். பேட்டியாளர், “அழகான நீங்கள் இந்த உலகத்திலேயே அழகானவங்களா யாரை நினைக்கிறீங்க?” என்று கேட்டார்.

“அம்மா!” என்றாள். “ஸாரி! இந்த பதில் ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான். உங்களுக்கு மட்டுமல்ல. உலகத்தில் அத்தனை பேருக்கும் அவங்கவங்க அம்மா அழகுதான். அம்மாவைத் தவிர்த்து சொல்லுங்க...” தப்பிக்க விடாமல் மடக்கினார். அதற்குள்ளாகவே யோசித்து “அன்னை தெரஸா!” என்றாள். “மேடம்! வாராதீங்க. உலகத்துக்கே அழகானவங்க அந்த தெய்வம். ஏத்துக்கிறோம்.

ஆனா, எங்க கேள்விக்கு அது பதில் இல்லை. உங்க வயசுல, உங்களை விட அழகுன்னு நீங்க பிரமிக்கிற ஒருத்தரை சொல்லுங்க...” “லதா!” “லதா?” “நடிகை லதா இல்லை. எங்க ஊர்ல லதான்னு ஒரு பொண்ணு. அவங்களைத்தான் சொன்னேன். பல ராத்திரி லதாவை மாதிரி அழகா இல்லையேன்னு தூங்காம அழுதிருக்கேன். நானெல்லாம் என்னை அழகா காட்டிக்க நிறைய மேக்கப் பண்ணிக்குவேன். லதா எந்த மேக்கப்பும் இல்லாம சூப்பரா இருப்பா.

எந்த ரோஜாப் பூவாவது மேக்கப் பண்ணிக்குமா? எப்போ பார்த்தாலும் ரோஜாப்பூ மாதிரி இருப்பா அந்த லதா!” கேட்டதும் இமைகளை மூடி லதாவை நெஞ்சுக்குள் பார்த்தேன். அப்போது அம்மா தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தாள். “எந்த லதாவை சொல்றான்னு தெரியுதாம்மா...” “தெரியுது, தெரியுது. அவ என்ன பெரிய அழகியா? இருக்கிற இடத்துல இருந்தா எல்லாரும் அழகுதான். ஒரு பொண்ணு பத்துப் பாத்திரம் தேய்க்கிற வேலைக்காரியா இருந்தா அழகா தெரிய மாட்டா.

அதே பொண்ணு ஜெராக்ஸ் கடைல வேலை செஞ்சா சுமாரா இருப்பா. சந்தையில புதினா வித்தா அழகா தெரிய மாட்டா. அவளே கம்ப்யூட்டர்ல ஏதோ வேலை செஞ்சா ரொம்ப அழகா ஸ்டைலா தெரிவா. லதாவாம், அழகாம்... திமிர் பிடிச்ச பொண்ணுடா...” அம்மா சென்னைக்கு வந்து இருபது ஆண்டுகளில் இப்படி பேச கற்றுக் கொண்டாள். “அம்மா! லதா அழகுதான்.

குழந்தையில இருந்து திமிர் பிடிச்சவளாவே பார்த்துட்டு, உன் கண்ணுக்கு அது மட்டும்தான் தெரியுது...’’ “தம்பி! பணக்கார வீட்டுப் பொண்ணுங்க நம்ம மனசுக்கு அழகாத்தான் தெரிவாங்க... அதே லதா ஒரு வெட்டியான் வீட்ல பிறந்திருந்தா அழகா தெரிவாளா?” “ஏத்துக்கறேன்மா... இப்ப நாம லதா வீட்டை விட பணக்காரங்க இருக்காங்க. ஆனா, உனக்கு அவங்கதான் பணக்காரங்களா தெரியறாங்க.

மனசுல அப்படி பதிஞ்சி போச்சு. ரம்பா, ஊர்வசி, மேனகை தேவலோகத்துல இருந்தாத்தான் பேரழகிகள். இங்க பூமிக்கு வந்து நர்ஸா, போலீஸ் கான்ஸ்டபிளா இருந்தா அழகி கள்னு ஏத்துக்க மாட்டோம். அவங்களே விஜய்க்கோ, அஜித்துக்கோ ஜோடியா நடிச்சா ஏத்துப்போம்...’’ அதன் பின் அம்மாவிடமோ, வேறு யாரிடமோ லதாவைப் பற்றி பேசியதில்லை.

இப்போது தொலைக்காட்சியில் அவளைப் பார்த்ததும் ஞாபத்தில் பொழிய ஆரம்பித்தாள். எந்த வயதில் லதாவை முதன் முதலாகப் பார்த்தேன்? நினைவில்லை. ஆனால், ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே என்னை ‘ஆ’ வென வாயைப் பிளக்க வைத்தாள். என் அப்பாவுக்கு லதா வீட்டு எண்ணெய் ஆலையில் டிரைவர் வேலை. எண்ணெய் மெஷினை இயக்குபவருக்கும் டிரைவர் என்று பெயர். லதாவின் வீடும், எண்ணெய் ஆலையும் ஒன்றாகவே இருந்தது.

அப்பாவைப் பார்க்க அடிக்கடி ஆலைக்குப் போவேன். அப்பா எண்ணெய்யில் குளித்த மாதிரி தெரிவார். அவரது டவுசர் எள்ளுப் புண்ணாக்கில் தைத்த மாதிரி இருக்கும். நான் போகும் போதெல்லாம் தலைக்கு எண்ணெய் தடவி விடுவார். முகம் ஊற வழியும். சட்டைக் காலரின் எண்ணெய் பிசிண்டு எப்படி அடித்து துவைத்தாலும் போகாது. பள்ளியில் என் தலையில் வடியும் எண்ணெய்யைத் தேய்த்து கோவிந்தராஜும், பச்சை மிளகாய் வட்டம் செல்வமும் அவர்கள் தலைக்கு தடவிக் கொள்வார்கள். ‘எண்ணெய் செக்கு’ என்பதுதான் பள்ளியில் என் பெயர்.

சின்ன வயதில் நானும் காமெடியன்தான். தபால் பெட்டி டவுசர். சட்டைக்கு பதிலாக பாட்டியின் முடிச்சி போடுகிற ரவிக்கை. கால் பூராவும் பல இடங்களில் சீழ் மொட்டாய்ப் புண்கள். ஈக்கள் மொய்க்கிற குப்பை மாதிரி வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை. ஐந்தாம் வகுப்பு தாண்டிய பிறகுதான் கொஞ்சம் சுத்தப்பட ஆரம்பித்தேன்.

என் அழுக்குக்கு அவள் பழகினதே பெரிய விஷயம். லதா என்ன சொன்னாலும் செய்கிற அடிமையாக இருந்தேன். அவளின் மிச்சத்தை உண்பது, அவளின் செருப்பில் ஒட்டிய சேற்றைத் துடைத்து எடுப்பது, பன்ச்சர் சைக்கிளைத் தள்ளி வருவது, சலவைத் துணியை வாங்கி வருவது, நாய்க்குட்டியைக் குளிப்பாட்டி விடுவது, ரோஜாச் செடிக்கு ஆட்டுப் புழுக்கைகளை கொண்டு வந்து போடுவது, மரத்தில் எறி மாங்காய், காய் புளியங்காய் கொடுக்கப்புளி பறித்துப் போடுவது... லதா என்னைப் பலமுறை அடித்திருக்கிறாள்.

தொடையில் கிள்ளி இரு்கிறாள். தலையில் நங்கென்று கொட்டு வைத்திருக்கிறாள். அப்போதெல்லாம் அவளின் அடிமை என்கிற மன நிலைதான் எனக்குள்ளிருந்தது. அம்மாவும், அப்பாவும் கூட அவர்களின் வீட்டில் அடிமை போல்தான் வேலை செய்தார்கள். லதா உயர்ந்த ஆங்கிலப் பள்ளிக்குப்  போனாள். நான் சாதாரண பஞ்சாயத்துப் பள்ளி.

நான் எட்டாம் வகுப்பு தாண்டியதும் குடியாத்தம் அரசு விடுதியில் சேர்த்து விட்டார்கள். லதாவை ஏலகிரி மலையில் பணக்காரர்கள் படிக்கும் கான்வென்டில் சேர்த்தார்கள். +2 முடித்ததும் சென்னை சட்டக் கல்லூரி, அரசு விடுதி என எனக்கே அடையாளம் தெரியாமல் நான் மாறிவிட்டேன். விடுமுறையில் போகும் போதெல்லாம் லதாவை தூரத்திலிருந்துதான் பார்க்க முடிந்தது. ரயிலில் ஜன்னலோரம் உட்கார்ந்து, நதியை ரசித்து முடிப்பதற்குள் கடந்து விடுகிற மாதிரிதான் பார்த்தேன்.

ஒரு விடுமுறையின்போது, எண்ணெய் ஆலையில் புதிதாக இயந்திரங்கள் வாங்கி இருப்பதாக சொன்னார்கள், அதைப் பார்க்கச் சென்றபோது, கார் ஷெட்டிற்குள் புதிதாக வாங்கின வெள்ளை நிற காருக்கு அருகே லதா நின்றிருந்தாள். கார் விளம்பரத்திற்கு நிற்க வைத்த தேவதை மாதிரி. “வாடா இங்க... சௌக்கியமா..?’’ என்றாள். “ம்... ம்...” “காலேஜ் போயிட்டா, பெரிய இவனா? இந்த காரைத் துடை...’’ அதட்டினாள்.

மறுக்க முடியாமல் தயங்கித் தயங்கிப் போனேன். அந்தச் சம்பவத்தை இப்போது நினைத்தாலும் பாதத்தி லிருந்து உச்சிவரை ஒருவித பறவைகள் உடம்பிற்குள் பறக்கின்றன. நான் கார் துடைப்பதை லதா கைகள் கட்டி வேடிக்கைபார்த்தாள். ஆலையிலிருந்து ஜன்னல் வழியாக அப்பாவும் பார்த்து விட்டு வேகமாக வந்து “தம்பி! ரயிலுக்கு நேரமாச்சுன்னு சொன்னியே... நீ புறப்படுப்பா, நான் துடைக்கிறேன்...” என்று துணியைப் பிடுங்கிக் கொண்டார். நான் கார் துடைத்தது அவருக்குப் பிடிக்கவில்லை.

அன்றிரவு அப்பா ஒரு வார்த்தை சொன்னார். “தம்பி! இந்த ஊருக்கு இனிமே வராதே... இந்த ஊரு உன்னைத் தேடி வரணும்...” அப்பாவின் பேச்சைக் கேட்டேன். சென்னைக்காரன் ஆகி விட்டேன். வழக்கறிஞராகி முப்பது ஆண்டுகள். சொந்த வீடு, கார், டாக்டர் மனைவி, கல்லூரி படிக்கும் இரண்டு பெண்கள். மேல் தட்டு வாழ்க்கை கிடைத்து விட்டது. சில வழக்குகளுக்காக சிலர் ஊரிலிருந்து தேடி வந்திருக்கிறார்கள்.

அப்பாவுக்கு சென்னை பிடிக்கவில்லை. என் ஆளுமை, என் கம்பீரம், என் வளர்ச்சி பிடித்திருந்தது. அவர் என்னை ரசிப்பதை நான் ரசித்தேன். அப்பா ரொம்ப நாள் இ்ல்லை. உடல்நிலை மோசமாகி பெரிய மருத்துவமனையின் சகல வசதிக்குள் படுக்க வைத்திருந்தபோதும் “என்னை ஊர்ல கொண்டு போய் விட்டுர்றா... அங்கதான் புதைக்கணும்...” என்றார். அவர் விருப்பப்படியே ஊரில் எல்லாம் நடந்து முடிந்தது.

பதினைந்து நாட்கள் அங்குதான் இருந்தேன். லதாவைப் பார்க்க முடியவில்லை. முப்பது ஆண்டுகள் கழித்து, தொலைக்காட்சியில், கல்யாண மாலையில் அவள் புகைப்படம். அம்மாவின் மனதிலிருந்தும் லதா போகாமலிருந்தாள். “திமிர் பிடிச்சவங்க தம்பி... நூத்துக் கணக்குல மாப்பிள்ளைங்க வந்தாங்க. எல்லாரையும் ஏதாவது குறை சொல்லி திருப்பி அனுப்பினாங்க... கொஞ்சம் உயரமாவும் கூடாதாம், கொஞ்சம் குள்ளமாவும் கூடாதாம், ஒல்லியாவும் வேணாமாம், குண்டாவும் வேணாமாம்.

பல்லு, மூக்கு, காதுன்னு ஒண்ணு விடாம கரெக்ட்டா இருக்கணும்னு பார்ப்பாளுங்க. அப்பவே இவ காலி மொந்தைல விழுவான்னு தெரியும்...” “அம்மா! ஒரு அழகான பொண்ணு, தன் கணவன் அழகா இருக்கணும்னு நினைச்சது தப்பா?” “தப்பில்லை. அளவுக்கு மீறி எதிர்பார்க்கக் கூடாது. நிஜமான அழகு என்ன தெரியுமா? அந்தந்த பருவத்துல அது அது நடக்கணும்.

அதான் அழகு. அழகு பூரா போயிட்டு, பாட்டி யானபிறகு மாப்பிள்ளை வேணும்னு விளம்பரம் பண்ணி இருக்கா. இவ்ளோ காலம் அவகிட்ட இருந்த அழகு தண்டம்தானே?” பச்சை மிளகாய் நறுக்குகிற மாதிரி கேட்டாள். வெளியே கார் வரும் சத்தம் கேட்டது. என் மனைவி க்ளினிக்கிலிருந்து வந்து விட்டாள். அந்த கார் ஷெட்டில் நின்று லதா அழைத்து “சௌக்கியமாடா? மறந்துட்டியா?” எனக் கேட்டு கட்டிப் பிடித்ததும், யாரோ வரும் சத்தம் கேட்டு காரைத் துடைக்கச் சொன்னதும், ரெண்டு சொட்டு கண்ணீரில் கரையப் பார்த்தது.

www.kungumam.co.i

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிஜமாவே மனசு கரைஞ்சு போச்சு .நல்ல கதை.....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.