Jump to content

ஊஞ்சல் தேநீர்


Recommended Posts

 

ஊஞ்சல் தேநீர்

 

யுகபாரதி

புதிய தொடர் ஆரம்பம் - 1

‘தயாராயிருங்கள் காம்ரேட். நாளையோ, நாளை மறுநாளோ புரட்சி வந்துவிடும். கவலைகள் மடியப் போகின்றன. இழிவுகளும் கேடுகளும் தங்கள் மூட்டைகளைக் கட்டிக்கொண்டு கிளம்பக் காத்திருக்கின்றன.  காலம் நம்மை நோக்கி வருகிறது. கவனமாயிருங்கள்’ என யாரோ சில பேர், லட்சிய விதைகளை நமக்குள் விதைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இவர்களால் தான், ஓரளவாவது உயிர்ப்போடு இருக்கும் இன்றைய வாழ்வை சூனியம் கவ்வாதிருக்கிறது.
20.jpg
சொந்த நலனை விட்டொழித்து தம்முடைய அந்திமக் காலம் வரை உழைக்கும் அந்த ஒரு சிலரே வரலாறுகளையும் உருவாக்குகிறார்கள். ஆனாலும், உலக வரலாறுகள் முழுக்க தவறாகவே எழுதப்படுகின்றன. தங்களை உருவாக்க உதவியவர்களை, உழைத்தவர்களை அது ஒருபோதும் உண்மையாகக் குறித்து வைப்பதில்லை. ஏழாம் வகுப்பு இறுதித் தேர்வு விடுமுறையில் எனக்கும் புரட்சி செய்து வரலாறாகும் எண்ணம் இருந்தது.

அப்போது தஞ்சாவூர் பூக்காரத் தெருவிலுள்ள சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு தட்டி போர்டு எழுதுபவனாக நானிருந்தேன். தட்டி போர்டு எழுதுதல் என்றால் ஒன்றுமில்லை. கோயிலில் நிகழ்வுறும் விழாக்களைப் பற்றி குறிப்பெழுதி விளம்பரப்படுத்தும் வேலை. சதுரமாகவோ வட்டமாகவோ அல்லது நீள் சதுரமாகவோ தட்டியைத் தயாரித்து, வெள்ளைக் காகிதங்களை ஒட்டி, அதன்மேல் அவர்கள் தரும் குறிப்புகளை எழுதித் தர வேண்டும்.
20a.jpg
இன்று லட்சார்ச்சனை விழா, விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜை, தைப்பூசத் திருநாளை முன்னிட்டு பக்தர்கள் பால்காவடி, சந்தனக்காப்பு, பிரதோஷ சிறப்பு வழிபாடு என எதையாவது அந்தக் கோயில் குருக்களோ, ஈ.ஓ.வோ தரும் அறிவுரைப்படி எழுதித் தர வேண்டும். இதற்கென்றே கலர் மாத்திரைகள் என்னும் பெயரில் கலர் வில்லைகளை ஸ்டேஷனரிகளில் விற்பார்கள். ஒரு தட்டி எழுத குறைந்தது பத்து வில்லைகள் தேவைப்படும். அரக்கு கலர் வில்லைகளும் பச்சை நிற வில்லைகளும் கூடுதல் விலை.

அரக்கு வில்லைகளை இந்து மதத்தினரும், பச்சை நிற வில்லைகளை இஸ்லாமிய அன்பர்களும் வாங்கிப் பயன்படுத்துவார்கள். மத நம்பிக்கைகள்கூட வண்ணங்களால்தான் கட்டமைக்கப்பட்டுள்ளன. எனக்கு அந்த வேலையைச் செய்வதில் அலாதி பிரியம் இருந்தது. ஓவியனாகும் வெறியில் அலைந்துகொண்டிருந்த காலம் அது. அந்த வேலையைத் திறம்படச் செய்வதற்காகவே எழுத்துருக்களை வெவ்வேறு வகையில் எழுதிப் பழகினேன்.

சுவர் விளம்பரங்களில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துருக்களை காப்பி செய்தோ, உள்வாங்கிக்கொண்டோ நானும் அதைப் போலவே எழுதிப் பார்ப்பேன். எழுதிப் பழகிய எழுத்துருக்களை தட்டி போர்டுகளில் செப்பமாகக் கொண்டு வர முயற்சி செய்வேன். பார்ப்பவர்களை வியக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே நீட்டியும் குறுக்கியும் எழுத்துருக்களை நான் படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமல்ல.

சுப்ரமணிய சுவாமி கோயில் குருக்கள் கல்யாணராமன், என் அப்பாவின் அன்புக்குப் பாத்திரமானவர். அதன் காரணமாகவே அந்த வேலையை எனக்குக் கொடுத்தார்கள். அந்த வேலைக்குச் சொற்ப சம்பளமும் உண்டு. தவிர, பூஜை அன்று விசேஷ மரியாதையும், கூடுதல் பிரசாதமும் கிடைக்கும். படித்துக்கொண்டே வேலையும் செய்து வந்த என்னை அச்செயலுக்காகப் பலரும் பாராட்டுவார்கள். என்னை உற்சாகப்படுத்த அவர்கள் பாராட்டுவதை பெரிய விஷயமாக எடுத்துக்கொண்டு, ‘போன வார பிரதோஷத்திற்கு கூட்டம் வந்ததே என்னால்தான்’ என்பது போல பிகு செய்வேன்.

பக்குவப்படாதபோது கிடைக்கிற பாராட்டு பரிகாசத்துக்குரியது என்று இப்போது புரிகிறது. அது என் பிரதான வேலை இல்லை என்றபோதும் அதை மிகச் சிரத்தையோடு செய்து வந்தேன். முதல் நாள் தெரிவித்தால், மறுநாளே தட்டியைத் தயாரித்துத் தருவேன். விழாக்காலங்களில் இன்னும் விரைவாக. ஒருமுறை அவசர கதியில் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. என்னையும் அவர்கள் அவசரப்படுத்த, ‘லட்சார்ச்சனை’ என்பதற்குப் பதில் ‘லட்சியார்ச்சனை’ என்று எழுதிவிட்டேன். கல்யாணராமனும் கவனிக்காமல் தட்டியை கோயில் முகப்பில் கட்டிவிட்டார். அவ்வளவுதான்... ஒரே களேபரமாகிவிட்டது.

பக்த கோடிகளின் இதயம் புண்ணாகும்படி எழுதிவிட்டதாகப் புகார் கிளம்பியது. உடனே, அவ்வேலையில் இருந்து என்னைத் தூக்கிவிட்டார்கள். அதைவிட ‘கம்யூனிஸ்ட்காரரின் பையன் என்பதால் வேண்டுமென்றே லட்சார்ச்சனையை லட்சியார்ச்சனை என்று எழுதிவிட்டதாக’ப் புரளி கிளப்பினார்கள். வேண்டு மென்றே நான் அப்படி எழுதவில்லை என்று சொல்லியும் அவர்கள் நம்பவில்லை. என் ஓவியக் கனவுகள் அந்த சம்பவத்திலிருந்து பாழ்படத் துவங்கின. ஆனாலும், நான் விடவில்லை.

ஓவியங்களை வரைய முறையாகப் பயில  எவ்வளவோ முயற்சி யெடுத்தேன். அன்று நவீன ஓவியத்தில் தேசிய விருது பெற்றிருந்த தும்பத்திக்கோட்டை ஓவியர் புகழேந்தியிடம் போய், ‘‘ஓவியம் கற்றுத் தர இயலுமா?’’ என்று கேட்டேன். ‘‘நீங்களாக வரைந்து உருவாகவேண்டியதுதான். ஓரளவு வரைந்து தேர்ச்சி பெற்றபின் அதற்கென்றிருக்கும் கவின் கலைக் கல்லூரியில் சேருங்கள்’’ என்றார்.

அந்த வார்த்தையைப் பின்பற்றி கொஞ்ச காலம் வரைந்து வந்தேன். சுவர் விளம்பரம் செய்துவந்த பலரையும் சந்தித்து என் ஆசையை வெளிப்படுத்தி, என்னையும் வேலையில் சேர்த்துக் கொள்ளக் கேட்டேன். பலரும் பலவித காரணங்களைச் சொல்லி திருப்பி அனுப்பினார்கள். நானாகச் சில ஓவியங்களைக் கிறுக்கினேன். என்றாலும், விவேகானந்தரை வ.உ.சியைப் போலவும் காரல் மார்க்ஸை ஏங்கல்ஸைப் போலவும்தான் வரைய முடிந்தது.

எப்படியாவது எம்.எஃப்.உசேனாகும் தீவிரத்திலிருந்த என் ஆர்வத்தைப் பொருட்படுத்தி, என்னைத் தம்பியாக்கிக் கொண்ட அண்ணன்கள்தான் வீரமணியும் நீலமேகமும். இரண்டு பேருமே கட்சி மாநாடுகளுக்கு சுவர் விளம்பரம் எழுதுபவர்கள். அந்தக் காலத்தில் புகழ்பெற்றிருந்த தரணி சிமென்ட் விளம்பரத்தை ஊர்தோறும் எழுதியவர்தான் நீலமேகம் அண்ணன். இரவு நேரங்களில்தான் அவர்கள் பணி தொடங்கும். வண்ணக் கலவைகளை வாளியில் கரைத்துக்கொண்டு தெருத் தெருவாக தோழர்கள் துணையோடு புரட்சிகர கருத்துக்களை எழுதுவார்கள்.

நானும் அவர்களுடன் வாளி தூக்கவோ தூரிகையைக் கழுவித் தரவோ கிளம்புவேன். ஆளும் அரசைக் கண்டித்து அவர்கள் எழுதும்போது காவல்துறையினர் வந்துவிடுவார்கள். ‘இப்படியெல்லாம் எழுதக்கூடாது. கைது செய்வோம்’ என்பார்கள். ‘சரி, எழுதவில்லை’ என்று சொல்லி போக்குக் காட்டிவிட்டு வேறொரு சுவரில் போய் காவல்துறையின் அடக்குமுறைக்கு சவால் விடும் வாசகங்களை எழுதுவார்கள். அப்படித் தெருத் தெருவாகச் சுற்றிய காலத்தில்தான் சுவரெழுத்து சுப்பையாவைப் பற்றித் தெரிந்துகொள்ள முடிந்தது.

தீவிர திராவிடக் கழகத் தொண்டரான சுவரெழுத்து சுப்பையா செய்துவிட்டுப் போயிருக்கும் காரியங்கள் போற்றுதலுக்குரியன. தனி ஒரு மனிதனாக தமிழகத் தெருக்கள் முழுக்க பகுத்தறிவுப் பிரசாரம் செய்திருக்கிறார். ‘கடவுளை மற, மனிதனை நினை’ என்ற வாசகம் நமக்குள் பதிய அவரே காரணம். ‘நெற்றியில் திருமண், நெஞ்சிலே களிமண்’ என்றும், ‘விஞ்ஞானி கண்டது விரைவு ராக்கெட், அஞ்ஞானி கண்டது விபூதி பாக்கெட்’ என்றும் அவரே சுயமாக முழக்கங்களை உருவாக்கினார். அவர் கலர் வில்லைகளைப் பயன்படுத்தவில்லை.

நெடுஞ்சாலைகளில் உருகும் தாரையே மண்ணெண்ணெயைக் கலந்து மையாக்கியிருக்கிறார். தூரிகையைத் தேடவில்லை. தன் கைவிரலில் துணியைக் கட்டிக்கொண்டு சுவர்களில் எழுத்துருக்களைக் கொண்டுவந்திருக்கிறார்! பெரியார் ஒரு கூட்டத்தில் கலந்துகொள்கிறார் என்றால் முதல் நாளே அந்த ஊருக்குப் போய் தெரு முழுக்க எழுதுவார்; ‘மெகாபோன்’ மூலம் விளம்பரப்படுத்தியும் இருக்கிறார். மக்கள் பெருமளவு கூட்டத்தில் கலந்துகொண்டால், ‘நேற்று சுப்பையா வந்தாரா?’ என்று பெரியாரே கேட்கும் அளவுக்கு அவரது பணி இருக்கும்.
 

(பேசலாம்...)

http://kungumam.co.in

Link to comment
Share on other sites

  • Replies 75
  • Created
  • Last Reply
 

ஊஞ்சல் தேநீர்

 
 

யுகபாரதி - 2

சுவரெழுத்து சுப்பையா பள்ளிப் படிப்பைக்கூட தாண்டாதவர். ஆனாலும், அறிவாயுதத்தின் வீரியம் அவருக்குத் தெரிந்திருக்கிறது. மயிலாடுதுறையில் வசித்து வந்தாலும் அவருக்கென்று வீடோ, குடும்பமோ இருக்கவில்லை. கழகத் தொண்டர் ரெங்கசாமியின் டீக்கடையில் தங்கிக்கொண்டு அங்கே கிடைப்பதை உண்டு வாழ்ந்திருக்கிறார். சதா சர்வ காலமும் சுயமரியாதைக் கொள்கையை நெஞ்சில் தாங்கிக்கொண்டு தன்னைப் பற்றிய எந்த சிந்தனையும் இல்லாமல் இருந்திருக்கிறார். உடனிருந்த தோழர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும்கூட திருமணத்திற்கு அவர் சம்மதிக்கவில்லை.
21.jpg
யார் சொல்லுக்கும் கட்டுப்படாத சுப்பையா, எம்.ஆர்.ராதா மீது நன்மதிப்பு கொண்டவர். எனவே, அவர் சொல்லுக்குக் கட்டுப்படுவார் என்பதால் அவர் மூலமும், ‘பேட்டை தாதா’ என்றழைக்கப்பட்ட முத்துப்பேட்டை தருமலிங்கத்தின் மூலமும் கல்யாணப் பேச்சை ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த ‘பேட்டை தாதா’தான் ஒருகாலத்தில் மணலி கந்தசாமி போன்ற கம்யூனிஸ்ட் தோழர்களின் தலைமறைவு வாழ்க்கைக்கு உதவி புரிந்தவர். அரசின் கெடுபிடிகளுக்கு இரையாகாமல் அவர்களின் புரட்சிகர வாழ்வுக்குத் துணை புரிந்தவர்.

அவருடைய பேச்சுக்கும் எம். ஆர்.ராதாவின் பேச்சுக்கும் இசைவார் என தோழர்கள் கருதியது போலவே சுப்பையாவும் ஒருகட்டத்தில் திருமணத்திற்கு ஒப்புதல் தந்திருந்தார். தோழர்களும் அவருக்காக நிதி திரட்டியிருக்கிறார்கள். கூரை வீடு, கொஞ்சம் தட்டுமுட்டு சாமான்கள் வாங்க அந்நிதியைப் பயன்படுத்தச் சொல்லி தந்திருக்கிறார்கள். ஆனால், சுப்பையாவோ அந்தத் தொகை முழுவதையும் பிரசாரத்துக்கு செலவழித்துவிட்டு கல்யாணத்திற்கு கல்தா கொடுத்திருக்கிறார்.

அவர் சுவரில் எழுதிக்கொண்டிருக்கையில் என்ன நடந்தாலும் கண்டுகொள்ள மாட்டாராம். அவரை அடிக்க வந்தால்கூட அடியை வாங்கிக்கொண்டே, எழுத நினைத்ததை எழுதி முடிப்பாராம். ஒருமுறை ஒரு பிராமணர் வீட்டுச் சுவரில் எழுதிக்கொண்டு இருந்திருக்கிறார். அந்த வீட்டுக்காரர் குச்சியால் தட்டி ‘‘யாரைக் கேட்டு என் வீட்டு சுவரில் எழுதுகிறாய்’’ எனக் கேட்க, ‘‘யாரைக் கேட்டு ராமானுஜர் பிரசாரம் செய்தார்?’’ என்றிருக்கிறார்.

பிறிதொருமுறை நாகை புராட்டஸ்டன்ட் தேவாலய சுவரில் ‘தேவனின் ஆலயத்தை வியாபார ஸ்தலமாக்காதே’ என்ற பைபிள் வாசகத்தை ஒருபக்கமும், ‘கோயில் திருடர்களின் குகை’ என்ற காந்தியின் வாசகத்தை இன்னொரு பக்கமும் எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார். விஷயமறிந்த வைதீகர்கள் கொதித்தெழ, பிரச்னை பெரிதாகிவிட்டதாம். ‘பைபிளில் சொல்லியிருப்பதுதானே... காந்தியால் எழுதப்பட்ட வாசகம்தானே’ என்று விவாதப் புரட்சி செய்து கழகத் தோழர்கள் அவரைக் காப்பாற்றியிருக்கிறார்கள்.

மூட நம்பிக்கைகளிலிருந்து மக்கள் முற்றாக வெளியேற பெரியார் நடத்திவந்த கருத்துப் புரட்சிக்கு சுப்பையா போன்றோர் உதவியிருக்கிறார்கள். குப்பைத் தொட்டியைக் காட்டி, ‘‘இதிலே எதையாவது எழுதுங்கள்’’ என்றால், ‘புராணங்களை இதிலே போடு’ என்று எழுதும் நெஞ்சுரத்தோடு சுப்பையா செயல்பட்டிருக்கிறார். எது பக்தி? எது பித்து? என்பதை உணர்ந்தவராக அவர் இருந்ததால்தான், ‘கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போக’ என்ற ராமலிங்க வள்ளலாரை ஆதரித்திருக்கிறார்.

அன்றைய காங்கிரஸ் பேச்சாளர்களில் சிலர் பெரியாரைத் தரக்குறைவாகப் பேசியபொழுது அவரால் பொறுத்துக்கொள்ள முடியாமல் விவாதிக்கக் கூப்பிட்டிருக்கிறார். ‘முடியாது’ என்று முரண்டு பிடித்தவர்களோடு மோதவும் துணிந்திருக்கிறார். இன்றைக்குக்கூட நாம் தலைவர்கள் கொள்கையோடும், தொண்டர்கள் கொள்கைக்காகவும் வாழவேண்டும் என விரும்புகிறோம்.

அவ்வகையில், வரித்துக்கொண்ட கொள்கைக்காக வாழ்வதே வாழ்க்கையின் நோக்கம் என்று எத்தனையோ சுப்பையாக்கள் தங்களை இழந்திருக்கிறார்கள். தியாக வாழ்வை மேற்கொண்ட அவர்களுக்கு மணிமண்டபங்களோ மகுடாபிஷேகங்களோ தேவையில்லை. குறைந்தபட்ச நினைவுகூரல். அதுகூட கிடைப்பதில்லை என்பதுதான் சோகம்.

பெருமுயற்சி எடுத்து பெரியார் திராவிடக் கழகத் தோழர் வெ.ஆறுச்சாமி அவரைப் பற்றிய நூல் ஒன்றைக் கொண்டு வந்திருக்கிறார். சுப்பையாவுடன் பழகிய தோழர்களின் நினைவுகளுடன் அவர் கைப்பட டைரிக் குறிப்புகளாக எழுதி வைத்திருந்த சிந்தனைகளும் ஆவணமாக்கப்பட்டிருக்கிறது. சுப்பையா தன் வாழ்வையே சுவர் எழுத்துக்காக அர்ப்பணித்தவர். புகைப்படம் எடுக்கக்கூட விரும்பாதவர். ‘‘எதற்கு புகைப்படம்? பின்னால் மாலை போடவா!’’ எனக் கேட்டு முகங்காட்ட மறுத்திருக்கிறார்.

உயரமான சுவர்களில் ஒற்றையாளாக ஏறி ஏணியிலிருந்து எத்தனையோ முறை கவிழ்ந்திருக்கிறார். ‘‘யாரையாவது உதவிக்கு வைத்துக்கொள்ளக் கூடாதா?’’ என்று தோழர்கள் கேட்டதற்கு, ‘‘ஆளுக்கொரு வேலை செய்தால்தான் அதிக வேலை செய்ய முடியும்’’ என்றிருக்கிறார். அப்படித்தான் சென்னையில் ஒருமுறை சுவர் விளம்பரம் செய்துகொண்டிருக்கையில் காவல் துறையினர் வந்திருக்கிறார்கள். யாரோ ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் அவரைக் கைது செய்தவர்கள், விசாரிக்காமல் தார்ச்சட்டியைத் தலையில் கவிழ்த்திருக்கிறார்கள்.

யாரிடமும் எந்த உதவியும் கோர விரும்பாத சுப்பையா அமைதியாக இருந்திருக்கிறார். அதன் விளைவாக அவர் கண்பார்வை மங்கி இறுதியில் பார்வையே போய்விட்டது. அப்போதும்கூட ஒற்றைக் கண்ணால் தன்னுடைய சுவர் விளம்பரத்தைத் தொடர்ந்திருக்கிறார். பெரியார் மீது அவர் கொண்டிருந்த மரியாதையும் மக்களை அறியாமை அழுக்கிலிருந்து மீட்டெடுக்க அவர் கொண்டிருந்த ஆவேசமும் அளப்பரியன.

ஏன் இத்தனைப் பாடுகளையும் ஒருவர் இயல்பாக ஏற்றுக்கொள்கிறார்? எல்லோரையும் போல வாழ எண்ணாமல் எதையாவது சமூகத்திற்குச் செய்யவேண்டும் என எண்ணுகிறார்? பெரியாரின் தத்துவார்த்த கொள்கைகளை பிரசாரம் செய்வதே வாழ்நாள் கடமையாகக் கருத அவரை எது உந்தித் தள்ளியது? ‘இருக்கும் வரை பிறருக்கு உதவியாகவும், இறந்தபிறகு காக்கை குருவிக்கு இரையாகவும் இருங்கள்’ என்றார் பெரியார். அதை அட்சரம் பிசகாமல் செய்ய நினைத்தவர் சுப்பையா.

அதனால்தான், மயிலாடுதுறை ரயில் பாதையில் மரித்துக் கிடந்த அவர் உடலை காக்கை, குருவிகள் கொத்தித் தின்றன. கழகத் தோழர்களுக்குக்கூட செய்தி தாமதமாகவே தெரிந்திருக்கிறது. தோழர்கள் தகவலறிந்து போவதற்குள் ரயில்வே நிர்வாகமே அவரை அடக்கம் செய்துவிட்டதாகச் சொல்கிறார்கள். ஒரு கொள்கையைப் பற்றிக்கொண்டு உழைப்பவர், அந்தக் கொள்கை வெற்றி அடைகிறபோது அதற்கான பலனை எதிர்பார்ப்பது இயல்பு. பதவியாகவோ, பட்டமாகவோ அந்தப் பலனைப் பெறுவதில் தவறில்லை.

ஆனால் ‘பலனே தேவையில்லை’ என்று சொல்வதற்கு சிலரால்தான் முடியும். அவர்களே புரட்சியாளர்களாகக் கருதப்படுகிறார்கள். தமிழகத்தின் உட்கிராமங்களில் இன்னமும் சுவரெழுத்து சுப்பையாக்கள் இருக்கிறார்கள். ‘கட்சி மாநாடு’ என்று அறிவித்ததும் வண்ணக் கரைசலை தூக்கு வாளியில் எடுத்துக்கொண்டு தெருத் தெருவாக தலைவர்களின் படங்களை வரைந்து வருகிறார்கள்.

எட்டாம் வகுப்பிற்கு போக இருந்த எனக்குள், சுப்பையாவைப் பற்றி சொன்னவர்கள் அண்ணன்கள்தான். வண்ண வண்ண வில்லைகளைப் பயன்படுத்தி ஓவியனாகும் வெறியோடு இருந்த எனக்கு, கருப்பு நிறத்தின் தேவையை உணர்த்தியவர்கள் அவர்களே. அவர்கள் இடைவிடாமல் சொல்வதைக் கேட்டு நானும் சுப்பையா ஆவதற்கான சந்தர்ப்பங்கள் நிறைய இருந்தன. ஆயுதம் தாங்கிப் போராடுவது மட்டுமல்ல புரட்சி. அறிவாயுத நெருப்பை ஏந்திப் பிரசாரம் செய்வதும் புரட்சிதான்.

‘சைக்கிள் ஓட்டும் பெண்கள், செந்தமிழ் நாட்டின் கண்கள்’ என்று 1960ல் சுப்பையா, பெண்கள் பள்ளிக்கூட வாசல்களில் எழுதினார். ‘பெண்களை தீய வழிகளில் செல்லத் தூண்டும் இத்தகைய வரிகளை எழுதக்கூடாது’ என அன்றைக்கு அவருக்கு எதிராக எழுந்தவர்கள் கற்பனையாவது செய்து பார்த்திருப்பார்களா, கல்பனா சாவ்லாக்களை!

தோழர்கள் தரும் பழைய டைரிகளில் தனக்கு அவ்வப்போது தோன்றும் சிந்தனைகளைக் குறித்து வைத்த சுப்பையா, அதை வாகான சுவர் கிடைக்கும்போதெல்லாம் தீட்டத் துணிந்திருக்கிறார். இறுதிவரை அவர் ஒரே வண்ணத்தையும் ஒரே எண்ணத்தையும் கொண்டவராக வாழ்ந்திருக்கிறார். எங்கேயும் எழுதப்பட்ட சிந்தனைக்குக் கீழே தன் பெயரை அவர் எழுதவில்லை.

அவருடையதாக அவர் எதையுமே உரிமை கொண்டாடவில்லை. அவரைக்கூட அவர் பொதுச்சொத்து போலவே கருதியிருக்கிறார். சமூகத்திற்கான நம்பிக்கைகளை விதைப்பதொன்றே வேலை என்றிருந்த அவர் பெயரை வரலாறு தவற விட்டிருக்கலாம்; தவிர்க்க வாய்ப்பில்லை. நம்புவோம். நாளையோ, நாளை மறுநாளோ புரட்சி வருவதற்காக மேலும் சில சுப்பையாக்கள் சுவர்களிலும் காகிதங்களிலும் எழுதிக்கொண்டே இருப்பார்கள்.
 

(பேசலாம்...)
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊஞ்சல் தேநீர் ரொம்பவே சூடாய் இருக்கு....!  tw_blush:

Link to comment
Share on other sites

ஊஞ்சல் தேநீர்

 

யுகபாரதி - 3

‘‘தமிழை தங்கள் பெருமைகளில் ஒன்றாகக் கருதக்கூடிய தமிழர்கள், தங்கள் காலை தாமே நக்கிக்கொள்ளும் நாய்கள்...’’ எழுத்தாளர் ஜெயகாந்தன் இப்படியொரு வாக்கியத்தை 2005ம் ஆண்டு ஒரு மேடையில் பேசப் போக, தமிழ்நாடே கொந்தளித்தது. அவர் பேசிய மேடை தமிழ் மேடை அல்ல, சமஸ்கிருத மேடை. சமஸ்கிருதத்தை தூக்கிப் பிடிக்கவும் தமிழைத் தாழ்த்திப் பேசவும் அவர் துணிந்ததை ஒருவர் கூட ஆதரிக்கவில்லை.
19.jpg
சமஸ்கிருத சேவா சமிதியில் தனக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழாவில்தான் அப்படிப் பேசினார். அவர் அந்த மேடையில் நிறைய சர்ச்சைகளைக் கிளப்பினார். ‘வர்ண வேறுபாடுகள் இருக்க வேண்டும்’ என்றும், ‘அது இருந்தால்தான் வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும்’ என்றும் பேசினார். ‘‘இதெல்லாம் நல்ல புத்தியுடைய ஒரு தமிழ் எழுத்தாளன் பேசக்கூடியதா?’’ என விவாதம் தொடங்கியது.

‘‘எப்போதும் ஜெயகாந்தன் இப்படித்தான்; அதிரடியாகப் பேசி தன் இருப்பைத் தக்க வைத்துக்கொள்கிறார்’’ என்றும் சிலர் பேசிக்கொண்டார்கள். எழுத்தையும் இலக்கியத்தையும் தீவிரமாகக் கொண்ட என் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு ஜெயகாந்தனைத் தெரியும். ஆனால், அவருடைய எழுத்து முறையையும் சிந்தனை வார்ப்புகளையும் விளங்கிக்கொள்ள முடியாது.

நாங்கள் இலக்கியம் பயிலத் தொடங்கிய காலத்தில் அவர் எழுதுவதை அறவே நிறுத்திவிட்டார். 2002ல் அவர் எழுதிய ‘ஹர ஹர சங்கரா’ என்னும் சிறுநூலைத் தவிர அவர் வேறு எதையுமே புதிதாகப் படைக்கவில்லை. இருந்தபோதிலும் வாழ்நாள் சாதனையாளராக மதிப்பிட்டு இந்தியாவின் ஒரே உயரிய இலக்கிய விருதான ‘ஞானபீடம்’ அவருக்கு வழங்கப்பட்டது. அதைக்கூட ஞானபீட விருதுக்காகவே அவர் சிறுநூலை எழுதியதாக சிலர் பழித்தார்கள்.

விருதுக்காக எழுதக்கூடிய எழுத்தாளராக அவர் என்றைக்குமே இருந்ததில்லை. ஞான பீட விருது குறித்து சொல்லும்போது, ‘‘ஞானத்தையே  பீடமாகக் கொண்ட எனக்கு பீடமெதற்கு? ஞானமென்பது கிரீடம். பீடமல்ல’’ என்றுதான் கருத்து தெரிவித்தார். ‘‘ஜெயகாந்தன் அப்படி என்னத்தை எழுதிக் கிழித்துவிட்டார்?’’ என ஆவேசப்படும் சிறு பத்திரிகைக்காரர்கள் எங்களை ரொம்பவே குழப்பிக்கொண்டிருந்தார்கள். ‘‘அவர் எழுதியதில் ஒன்றுகூட கதையம்சம் உடையது அல்ல.

அத்தனையும் வெற்றுக்கூச்சல். கலாபூர்வமான சங்கதிகள் அவர் படைப்புகளில் எங்கேயும் தென்படவில்லை’’ என்பதுவரை அவரைக் கட்டுடைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு எழுத்தாளன் தான் எழுதியது போதும் என்று நிறுத்திக் கொண்டதையும் ‘‘எழுத எதுவும் இல்லாமல் நிறுத்திக்கொண்டார்’’ என்றுதான் விமர்சித்தார்கள். ஜெயகாந்தன் எழுத்து அறிமுகமாவதற்கு முன்பே அவருடைய மேடைப் பேச்சுகள் என்னைக் கவர்ந்துவிட்டன.

பாரதி பற்றி அவர் ஆற்றிய சொற்பொழிவைக் கேட்டு, ‘பாரதியை இவரிடமிருந்தே கற்க வேண்டும்’ எனத் தோன்றிற்று. காத்திரமான பேச்சு அவருடையது. முகம் கோணாமல் கருத்துக்களை வைக்கவேண்டும் என்னும் அவை நாகரிகத்திற்கு எல்லாம் அப்பாற்பட்டது அவர் பேச்சு முறை. எத்தனை மணி நேரம் பேசினாலும், அதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அவருக்குப் பட்டதை தர்க்க நியாயங்களோடு விளக்க முற்படுவார்.

ஒருமுறை இளையராஜாவின் சகோதரர் பாவலர் வரதராஜனின் நூல் வெளியீட்டு விழா. திரைத்துறையின் முன்னணிப் பாடலாசிரியர்கள் பலரும் கலந்துகொள்கிறார்கள். அந்த விழாவில், ‘‘வரதராஜன் வைத்திருந்த ஹார்மோனியப் பெட்டியை இளையராஜா கல்லாப்பெட்டியாக்கிவிட்டார்’’ என்றிருக்கிறார். விழாவை ஏற்பாடு செய்தவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

அதுமட்டுமில்லாமல், ‘‘இந்த மேடையில் அமர்ந்திருப்பவன் எவனும் கவிஞனில்லை. இவனெல்லாம் இளையராஜாவை நத்திப் பிழைக்கிறவன்’’ என்றிருக்கிறார். ‘‘மக்களுக்காகப் பாடுபவனே கவிஞன். மக்களை முன்னோக்கி அழைத்துப்போக எண்ணாமல் அவர்களை பின்னுக்கு இழுக்கிறவர்களை எப்படி கவிஞர்களாகக் கருதமுடியும்?’’ என்று சொல்லிக்கொண்டிருக்கையில் மேடையில் அமர்ந்திருந்த பாடலாசிரியர்கள் ஒவ்வொருவராகக் கீழே இறங்கியிருக்கிறார்கள்.

மறுநாள் தங்கள் கண்டனங்களையும் தெரிவித்திருக்கிறார்கள். ‘புதுச் செருப்பு கடிக்கும்’ என்ற ஜெயகாந்தனின் கதைத் தலைப்பை வைத்து ‘புதுச் செருப்பு அடிக்கும்’ என்று புலவர் புலமைப்பித்தன் எழுதிய பதிவு அவற்றில் முக்கியமானது. மொத்த அரங்கையும் தம் பக்கம் இழுத்துக்கொள்ளும் சாமர்த்தியத்தை அவர் பேச்சு கொண்டிருக்கும். முதல் வாக்கியத்தில் இருந்தே ரசிக்கவைப்பார்.

எஸ்.ராமகிருஷ்ணனின் ‘உலக சினிமா’ நூல் வெளியீட்டில், ‘‘உலக சினிமா என்பது வேறு. சினிமா உலகம் என்பது வேறு’’ என்று ஆரம்பித்து, எது சினிமா என்று சொல்லி முடிக்கையில் அரங்கமே உறைந்திருந்தது. சினிமா, அரசியல், பத்திரிகை என்று சகல துறைகள் பற்றியும் அவரால் பேச முடிந்தது. இலக்கியத்தில் அரசியலையும் ஆன்மிகத்தையும் கலந்த அபூர்வ ரசவாதியாக அவரை வியந்துகொண்டே இருக்கலாம். ஜெயகாந்தனின் எழுத்துகளை வியப்பதில் உள்ள சிக்கல், அவர் அவ்வப்போது வெளிப்படுத்தி விடுகிற கருத்துக்கள்.

எழுத்தில் உள்ளதைத்தான் பேச வேண்டுமென்றோ, பேசிய கருத்தை பின்வாங்கிக்கொள்ள வேண்டுமென்றோ அவர் நினைப்பதில்லை. அவர் மேடையில் பேசி விட்டுப் போனபிறகு அவரைப் பற்றி மட்டுமே பேசும்படியான நிலையை ஏற்படுத்திவிடுவார். இதை அவர் திட்டமிடுவதில்லை. இயல்பாக அவருடைய சிந்தனைகள் அப்படித்தான் அமையும். ‘தத்துவார்த்த பலத்தில்தான் ஒரு எழுத்தாளன் நெடுநாளைக்கு ஜீவித்திருக்க முடியும்’ என்பார்கள்.

ஜெயகாந்தன் என்கிற ஜெ.கே.வுக்கோ அந்தத் தத்துவத்தையே மறு விசாரணைக்கு உட்படுத்தும் ஆற்றலிருந்தது. மறைத்துப் பேசவோ, மேலோட்டமாக ஒன்றைப் புகழவோ அவர் விரும்பியதில்லை. கதைகளின் வாயிலாகவும் அவர் மனித சமூகத்தின் மீது தனக்குள்ள விமர்சனங்களையே முன்வைத்தார். அதனால்தான் அவர் கதாபாத்திரங்கள் லாரி டிரைவராய் இருந்தாலும், ரிக்‌ஷாவாலாவாய் இருந்தாலும் அவரைப் போலவே பேசின. கம்பனில், பாரதியில், புதுமைப்பித்தனிலிருந்து அவர் தன்னை நிறுவிக்கொண்டவர்.

அவர் காலத்தில் அவரைப் போல எந்த எழுத்தாளரும் கொண்டாடப்படவில்லை. மற்றவரைவிட அவருக்கு ஒரு ரூபாயாவது அதிக சன்மானம் தர விகடன் போன்ற முன்னணி பத்திரிகைகளே விரும்பின. நிறுத்தி நிதானமாக, கிளிப் பிள்ளைக்குச் சொல்வதைப் போலச் சொல்லுவார். ‘இப்படியும் இருக்கிறதுதானே... இதை ஏன் பார்க்கவில்லை’ என்பார். ‘ஒருகாலத்தில் சொல்லிய கருத்தை மாற்றி தற்போது வேறு மாதிரி பேசுகிறீர்களே?’ என்றால் ‘‘அதுதான் வளர்ச்சி’’ என்பார்.

‘‘சொன்னதையே சொல்ல வேண்டும் என்கிற அவசியம் என்ன இருக்கிறது?’’ என்பார். அதன் காரணமாகவே ஆரம்பத்தில் இடதுசாரியாக இருந்த அவர், அதன்பின் அதற்கு நேர்முரணான இந்துத்துவாவைக் கையிலெடுத்தார். அவரை விமர்சிப்பவர்களும் அவரைப் பொறுத்துக்கொள்ளவே செய்தார்கள்.  அவர் பேச்சைக் கேட்டவர்கள், அவர் படைப்புகளை வாசித்தவர்கள், ஒருமுறையாவது அவரை நேரில் சந்தித்துப் பேச விரும்புவார்கள்.

எனக்கு ஜெ.கே. என்றால் அப்படியொரு ஆசை. அவர் படைப்புகளை வாசிக்கையில் மிகுந்தெழுந்த பிரியத்தின் நீளத்தை அளவிட முடியாது. அவர் மேடையில் நின்று பேசும் கம்பீரம், முறுக்கிய மீசை, கேள்விகளைக் கேட்டு அவரே பதிலளிக்கும் முறை என நிறைய சொல்லலாம். அப்படியாகப்பட்ட ஜெ.கே.வை நேரில் சந்திக்கும் வாய்ப்புக்காக ஏங்கிக்கொண்டிருந்தேன்.

அப்போது நான் ‘கணையாழி’யில் உதவி ஆசிரியர். ஜெ.கே.வை அட்டைப்படமாகக் கொண்டு ஒரு சிறப்பிதழ் தயாரிக்கலாம் என ஆசிரியர் குழுவில் முடிவெடுத்தார்கள். அதற்கான முழுப் பொறுப்பும் என்னிடம் தரப்பட்டது. ஓவியர் ஆதிமூலம் அட்டைப்படம் வரைவதாக ஒப்புக்கொண்டார். சிறப்பிதழ் என்பதால் அவ்விதழில் ஜெ.கே.வின் நேர்காணல் அவசியம் இடம்பெற வேண்டும் என்று ஆசிரியர் ம.ரா. பிரியப்பட்டார்.

‘‘கேள்விகளை நீங்களே தயார் செய்யுங்கள்’’ என்றும் சொல்லியிருந்தார். நெடுநாள் ஆசை நிறைவேறப் போகிறது என்னும் ஆவலில் பதினைந்து வருடங்களாக ஜெ.கே.விடம் கேட்க நினைத்த கேள்விகளையெல்லாம் தொகுத்துக்கொண்டேன். ‘அவரை எனக்கு அறிமுகமில்லையே’ என்ற பொழுது தான் ‘‘ராஜ்கண்ணனைத் தொடர்புகொள்ளுங்கள்’’ என்று ம.ரா. அறிவுறுத்தினார்.

அந்த ராஜ்கண்ணன்,  ஜெ.கே.வை நிரம்பப் படித்தவர். பல ஆண்டுகளாக ஜெ.கே.யுடன் நெருங்கிப் பழகியவர். ஜெ.கே.யின் படைப்புகளை வரிசைக்கிரமமாகச் சொல்லவும் அதன் நுட்பங்களை உணர்த்தவும் கூடியவர். அவரைத் தொடர்பு கொண்டதும் ‘‘நிச்சயமாக செய்யலாம்’’ என்றார். கேள்விகளை அவரிடமும் ஒருதரம் வாசிக்கக் கொடுத்தேன். அவரும் வாசித்துவிட்டு ‘‘கேட்கவேண்டிய கேள்விகள்தான்’’ என்றார்.

அதோடு ‘ஜெ.கே. இந்தக் கேள்வியை இப்படி அணுகுவார்’, ‘அந்தக் கேள்விக்கு அப்படி பதில் சொல்வார்’ என யூகித்தார். கடைசியில் பார்த்தால் ராஜ்கண்ணன் சொன்னது போலவேதான் ஜெ.கே.வின் பதில்கள் அமைந்திருந்தன. ஒருவகையில் ஜெயகாந்தனின் வெற்றியாக அதைப் பார்க்கலாம். தன்னை வாசிப்பவர்களையும் தன் தரத்திற்கு மேம்படுத்திவிடக் கூடிய எழுத்து அவருடையது.

ஒரு மதியப் பொழுதில் ராஜ்கண்ணனிடமிருந்து அழைப்பு வந்தது. ஜெ.கே. கேள்விகளை அனுப்பச் சொன்னதாகவும், அடுத்த வார இறுதிக்குள் பதில்களைத் தருவதாகச் சொல்லியதாகவும் தகவலைப் பகிர்ந்துகொண்டார். எனக்கோ கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. ‘கேள்விகளில் எழுத்துப்பிழை வந்துவிடக் கூடாது’ என்பதற்காக ஒருமுறைக்கு பத்து முறை சரி பார்த்து அனுப்பி வைத்தேன்.

இடையில், ராஜ்கண்ணனின் இல்ல விழாவுக்கு ஜெ.கே. வந்திருந்தார். நானும் போயிருந்தேன். பரஸ்பர அறிமுகத்தில், ‘‘இவர்தான் கேள்விகளைத் தயாரித்த யுகபாரதி’’ எனவும் ராஜ்கண்ணன் சொல்லத் தவறவில்லை. ‘‘ஓ, அப்படியா?’’ என்று என்னைப் பார்த்துச் சிரித்தார். நான் நமஸ்கரித்துக் கொண்டேன். அவரைப் பற்றி எழுதுவதால் ‘வணக்கம்’ கூட ‘நமஸ்காரம்’ என்றே வருகிறது.

சொன்னது போலவே சொன்ன தேதியில் பதில்கள் தயாராயிருப்பதாய் ஜெ.கே. வீட்டிலிருந்து தொலைபேசி வந்தது. வழக்கம் போல அலுவலகப் பையனை அனுப்பாமல் நானே போனேன். ஜெ.கே.வை மீண்டும் ஒருமுறை நேரில் தரிசிக்கலாம் என்னும் அற்ப ஆசைதான்.
 

(பேசலாம்...)

kungumam.co

 

19 hours ago, suvy said:

ஊஞ்சல் தேநீர் ரொம்பவே சூடாய் இருக்கு....!  tw_blush:

சிறிது பொறுத்து இருங்கள்... நம்ம ஊர் கதைகள் எல்லாம் வருகிறது இனி வரும் தொடரில்.

Link to comment
Share on other sites

ஊஞ்சல் தேநீர்

 

யுகபாரதி - 4

 
 



சென்னை கே.கே. நகரில் ஜெயகாந்தன் வீடு. வீட்டுக்குப் போய் அழைப்புமணியை அடித்தேன். ஜெ.கே.வே வந்து கதவைத் திறந்தார். எத்தனை பெரிய எழுத்தாளர், கதவை தானே திறக்கிறாரே என்று பட்டது. அவரிடம் கேட்டிருந்தால், ‘‘என் வீட்டுக் கதவை வேறு எவன் வந்து திறக்கவேண்டும் என எதிர்பார்க்கிறாய்’’ என்றிருப்பார்.
10.jpg
நான் எதையும் கேட்கவில்லை. அவரே தொடர்ந்தார். ‘‘பாரதி, பதில்களை தட்டச்சு செய்துவிட்டு எடுத்து வா! நானே பிழைகளைத் திருத்தித் தருகிறேன். அதன்பிறகு அச்சுக்குப் போகட்டும்’’ என்றார். என்னால் நம்பவே முடியவில்லை. ஒரே ஒரு முறை ராஜ்கண்ணன் வீட்டு விசேஷத்தில் அறிமுகமான என்னையும் என் பெயரையும் அவர் எப்படி மறக்காமல் வைத்திருக்கிறார். அந்த ஆச்சரியத்தில் எதையுமே என்னால் பேச முடியவில்லை.

அவர் வீட்டை விட்டு வெளியேறியதும், அந்த பதில்களை உடனே வாசிக்கும் ஆர்வமேற்பட்டது. ‘தமிழ்நாட்டின் வியக்கத்தக்க ஒரு ஆளுமை, என் கேள்விகளை எப்படி எதிர்கொண்டிருக்கிறார்’ என பார்க்கும் ஆர்வமே அது. பக்கத்தைப் புரட்டினால் எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளித்திருந்தார். சமஸ்கிருத சமிதியில் அவர் பேசியது தொடர்பாகவும் ஒரு கேள்வி இருந்தது.
10a.jpg
அந்தக் கேள்விக்கு, ‘ஆமாம்... அப்படித்தான் சொன்னேன்’ என்று மட்டும் எழுதியிருந்தார். பிறகு பிழை திருத்தும்போது அந்தக் கேள்வியைக் குறியிட்டு ‘அது வேண்டுமா? பாருங்கள்’ என்று எழுதியிருந்தார். ஆசிரியர் குழு அந்தக் கேள்வியையும் பதிலையும் நீக்கிவிடச் சொன்னது. அவ்விதமே அடிபணிவதுதான் உதவி ஆசிரியனின் வேலை.

சமஸ்கிருத சமிதியில் அவர் பேசியது, அவரைப் பின்தொடர்ந்துகொண்டே இருந்தது. மறுப்போ மன்னிப்போ அவரிடமிருந்து வருமென்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். அந்நாளில், மயிலாப்பூர் சீனிவாசா அரங்கத்தில் தி.க.சி.க்காக ஒரு விழா எடுக்கப்பட்டது. அந்த விழாவில், ‘‘எந்த நாய் காலை நக்குகிறது? காலை நக்கக்கூடிய பிராணி பூனையே அல்லாமல் நாய் அல்ல. தமிழை, தமிழனை நாயாகக் கருதிய பீடாதிபதி பதில்சொல்ல வேண்டும்’’ என கோவி.லெனின் நேரடியாகக் கேட்டார்.

லெனினுடைய அன்றைய பேச்சு, தமிழ் இன உணர்வாளர்களின் உள்ளத்தைப் பிரதிபலிப்பதாக அமைந்தது. கைதட்டு வேறு. இறுதியாகப் பேச வந்தார் ஜெ.கே. சிங்கத்தைப் போல செருமிக்கொண்டார். ‘‘என்ன இப்போ, நான் அதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை’’ என்று ஆரம்பித்த ஜெ.கே.வின் அன்றைய பேச்சு முழுவதும் அதைப் பற்றியே இருந்தது. ‘‘நாயென்று சொன்னதுதான் பிரச்னையா? அப்படியென்றால் தன் காலைத் தானே நக்கிக்கொள்ளும் சிங்கம், முயல், கரடி என்று வச்சுக்கோ’’ என்றார். ஜெ.கே. கொஞ்சமாக இறங்கிவந்த இடம் அதுவாக இருக்கலாம்.

ஜெ.கே. என்றால் சபை அனுபவங்கள் இல்லாமலா? அவர் சபையைப் பற்றி ஓரளவு தெரியும். என்றாலும், கலந்துகொண்டதில்லை. எழுத்தாளர் சா.கந்தசாமி அப்போது ஜெ.கே.வை ஓர் ஆவணப் படமெடுக்கும் தயாரிப்பில் இருந்தார். அது நிமித்தம் ஜெ.கே.வை சந்திக்கும் வாய்ப்பு இருந்தது. என்னை ம.ரா.வும் ஓவியர் ஆதிமூலமும் அழைத்துப் போனார்கள். இருப்பதிலேயே நல்ல சட்டையை அணிந்து வகிடெடுத்து தலை வாரி இருந்தேன்.

அன்றுதான் சா.கந்தசாமி, ஜெயகாந்தனைப் பற்றிய ஆவணப்படத்தின் இறுதிப் படப்பிடிப்பை முடித்திருந்தார். ‘‘அடடே, சபைக்கா? வருகிறோம்... வருகிறோம்...’’ என்று வேறு சிலரும் எங்களுடன் வந்திருந்தார்கள். அவர் வீடு வரும்வரை எதை எதையோ பேசிக்கொண்டு வந்தார்கள். வீட்டை அடைந்ததும் ஆளுக்கொரு சால்வையைத்  தங்கள் தோள்களில் அணிந்துகொண்டார்கள்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. ‘ஒருவேளை ஜெ.கே.வின் சபைக்குப் போவதென்றால் சால்வையோடுதான் போக வேண்டுமோ? ஏற்கனவே சொல்லியிருந்தால் நானும் சால்வையோடு வந்திருப்பேனே’ என்பது போலப் பார்த்தேன். ‘ஒருவரைப் பார்க்கப் போனால் அவருக்குத்தானே சால்வையைப் போர்த்துவார்கள். இவர்கள் தங்களுக்குத் தாங்களே போர்த்திக்கொள்கிறார்களே’ எனவும் பட்டது. ஜெ.கே.வின் சந்திப்பில் நிகழப் போகும் ஆச்சரியங்களில் இதுவும் சேர்ந்ததுதானோ?

அமைதியாயிருந்தேன். மாடிப்படிகளில் ஏறி ஒவ்வொருவராக உள்ளே போனார்கள். இறுதியாக நான். உள்ளே ஜெ.கே. வெறும் பனியனோடு தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தார். ‘‘வா, பாரதி. எதிரே உட்கார்’’ என்றார். எல்லோரும் அவரவர்க்குப் பிடித்த மாதிரி உட்கார்ந்துகொண்டார்கள். அதன்பிறகு ஒவ்வொருவரும் சால்வையை விலக்கி சால்வைக்குள்ளிருந்த மதுபாட்டில்களை மேசையில் பரப்பினார்கள்.

அவர்கள் சால்வை அணிந்த கதை எனக்கு அப்போதுதான் பிடிபட்டது. மூலையில் ஒருவர். துணியில் வைத்து எதையோ புகையாக்கிக்கொண்டிருந்தார். கோப்பைகள் பரப்பப்பட்டன. எல்லா கோப்பைகளிலும் மது ஊற்றப்பட்டது. என் முன்னாலிருந்த கோப்பையிலும். எனக்கு நடுக்கமும் பதற்றமும் ஏற்பட, ஜெ.கே.வைப் பார்த்தேன். ‘பரவாயில்லை. எடுங்கள்’ என்பது போல அவர் பாவனை இருந்தது. நான் தயங்கினேன். ‘‘இதற்குமுன் பழகியிருந்தால் என் முன் தொடர்வதில் தவறில்லை.

பழக்கமில்லையென்றால் விட்டுவிடுங்கள். இங்கே தொடங்காதீர்கள்’’ என்றார். உடனே ஓரத்திலிருந்து ஒரு குரல். ‘‘அது எப்படி ஜெ.கே. சபை ஒருவருக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியும்’’ என்றது அந்தக்குரல். அப்போது ஜெ.கே. இதமாக இரண்டு மிடறு கோப்பையை உறிஞ்சியிருந்தார். அவர், ‘‘அது ஒன்றுமில்லை. ஏற்கனவே பழகியிருந்தால் பிரச்னையில்லை. இங்கு முதலில் ஆரம்பித்தால், பிறகு எப்போது அருந்தினாலும் என்னைத் திட்டும்படி ஆகிவிடும்.

என்னை முதலில் குடிக்க வைத்தவனை இப்பொழுதும் நான் திட்டுகிறேன் இல்லையா? அதுபோல அந்த சாபம் என்னையும் சேர வேண்டாமே’’ என்றதும் எல்லோரும் சிரித்தார்கள். என் கோப்பையை யாரோ ஒருவர் எடுத்து வேறு இடத்தில் வைத்தார். அறை புகையால் நிரம்பியிருக்க, ஜெ.கே.வின் கண்கள் சிவக்கத் தொடங்கின. பற்கள் நறநறத்தன. நாக்கு தடிமனான நிலையில் அவர் கேட்டார், ‘‘பாரதி ஏன் தேசாபிமானம், பாஷாபிமானம் என்று சொன்னான். தேசப்பற்று, மொழிப்பற்று என்று சொல்லியிருக்கலாமே.

அபிமானம் என்ற சொல் சமஸ்கிருதமென்று அவனுக்குத் தெரியாது. பாஷை, தேஸம் என்று சொல்ல வேண்டிய அவசியமென்ன? சொல்லுங்கள், தமிழ் வளர்ச்சித்துறை இயக்கு நரே’’ என்று ம.ரா.வைப் பார்த்துக் கேட்டார். அடுத்து சா.கந்தசாமி, ஆதிமூலம் என்று ஒவ்வொருவராக பதில் சொல்ல முனைந்தார்கள். யாருடைய பதிலையும் அவர் ஏற்கவில்லை. பதில்களுக்கெல்லாம் குறுக்குக் கேள்விகளைப் போட்டுக்கொண்டே வந்தவர், ‘‘நான் சொல்கிறேன்’’ என மீசையை நீவிக் கொண்டு பேசத் தொடங்கினார்.

‘‘பற்று என்ற சொல்லுக்கு ‘பற்று அற்ற’ என்ற நிலை இருக்கிறது. மொழியின் மீதோ தேசத்தின் மீதோ ஒருபோதும் பற்று அறக்கூடாது. பற்று கூடிக்கொண்டே இருக்கவேண்டும். அபிமானத்திற்குப் பொருத்தமான தமிழ்ச் சொல் எங்கேயிருக்கிறது காட்டுங்கள், பார்ப்போம்’’ என்றார். மதுவை அவர் அருந்தியிருந்தாலும் எனக்குத் தலை சுற்றியது. இப்படிக்கூட பாரதியை அலசவும் பேசவும் முடியுமா? ஒரு குறிப்போ, தயாரிப்போ இல்லாமல் இரண்டு மணி நேரமும் வார்த்தைகளில் சிலம்பம் ஆடி விட்டார்.

மொழி குறித்தும், திராவிட இயக்கம் குறித்தும் அவர் கொண்டிருந்த பார்வைகள் சிக்கலானவை. ‘ஆன்மாவின் அடி ஆழத்திலிருந்துதான் அவர் எல்லாவற்றையும் அணுகினாரா’ என்பது விவாதத்துக்குரியது. அவர் எழுதிய சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் அனைத்திலும் அவருடைய சிக்கலான இக்கருத்துக்களே சக்தியாகவும் சவாலாகவும் அமைந்திருக்கின்றன. அதன் விளைவாகவே ‘அண்ணாவையும் பெரியாரையும் பார்க்காமல் போயிருந்தால் நான் கம்யூனிஸ்ட் ஆகியிருப்பேன் என்று கலைஞர் சொல்லியிருக்கிறாரே?’ என்று கேட்டதற்கு, ‘அவர்களைப் பார்த்ததால்தான் நான் கம்யூனிஸ்ட் ஆனேன்’ என்று ரவி சுப்ரமணியன் தயாரித்த ஆவணப் படத்தில் பதிலளிக்கிறார்.

‘கணையாழி’ தயாரித்த சிறப்பிதழில், ஜெ.கே. பத்திரிகையாளராக இருந்து கலைஞரை எடுத்த ‘கல்பனா’ இதழ் பேட்டியும் வந்திருந்தது. அந்தப் பேட்டியில் ஜெ.கே.யின் தத்துவார்த்த புரிதல்கள் பதிவாகியுள்ளன. நாத்திகம் பற்றிய கேள்வியில் ‘முதலில் நான் ஆத்திகம் பற்றியும் என்னைப் பற்றியும் விளக்கி விடுகிறேன்’ என்கிறார். ஒரு பத்திரிகையாளன் தன்னைப் பற்றி சொல்லவேண்டியதில்லை. ஆனாலும், ஜெயகாந்தன் சொல்கிறார். ஏனென்றால் அவர் ஜெயகாந்தன்.

ஒருமுறை சர்.பிட்டி தியாகராய அரங்கில் மேலாண்மை பொன்னுசாமி நூல் வெளியீட்டு விழா. விழா தாமதமாகத் தொடங்கியது. சால்வை அணிவிப்பது பற்றி ஜெ.கே ஏதோ எழுத்தாளர் பிரபஞ்சனிடம் கமென்ட் அடித்தார். கூட்டத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் இருவரும் எதையோ தீவிரமாகப் பேசுவதாகப் பட்டது. பிரபஞ்சன் பேச எழுந்தார். உடனே விழாக் குழுவினர் ஓடிவந்து அவருக்கு சால்வை போத்தினார்கள்.

பிரபஞ்சன் சால்வையைப் பெற்றுக்கொண்டு, ‘‘ஆகவே நண்பர்களே, எனக்கும் அந்த அசம்பாவிதம் நடந்தது. இந்தச் சால்வையை வைத்துக்கொண்டு என்ன செய்வது? கட்டிக்கொண்டு குளிக்க முடியுமா? உடுத்துக்கொண்டு வெளியே போகமுடியுமா?’’ என்று சொல்லி ‘‘ஒன்றுக்கும் பிரயோசனமில்லாத சால்வைக்கு பதில் புத்தகமோ பணமோ ஏன் தரக்கூடாது?’’ என்று முடித்தார்.

அரங்கம் அதிர கைதட்டு. அடுத்து, ஜெ.கே. ‘‘என்ன இது, நாகரிகமில்லாமல். ஒருவர் அன்போடு கொடுத்தால் அதை நிராகரிப்பதா? விஷமே ஆனாலும் குடிப்பதுதானே பண்பு’’ என்று பிளேட்டை திருப்பி அடித்தார். பிரபஞ்சனுக்குத் தட்டிய அதே கைகள் அவருக்கும் தட்டின. விழா முடிந்தது. எல்லோரும் கலைந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

ஓரத்தில் பிரபஞ்சன் நின்று புகைத்துக்கொண்டிருந்தார். ‘‘என்ன சார்?’’ என்றேன். ‘‘நான் பேசிய அவ்வளவும் அவர் என் உடனிருந்து மேடையில் பேசிக் கொண்டிருந்ததுதான்’’ என்றார். ‘ஜெயகாந்தனையும் அவர் எழுத்தையும் தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொண்டவர்கள் யாருமில்லை’ என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது.
 

(பேசலாம்...)

kungumam.co.

Link to comment
Share on other sites

 
 

ஊஞ்சல் தேநீர்

 

யுகபாரதி 5

மசூதித் தெருவைக் கடந்தபொழுதுதான், அவர் மவுத்தாகிவிட்ட தகவல் வந்தது. அது தகவலல்ல. நெஞ்சை நிலைகுலையச் செய்யும் சொற்கத்தி. தகவலை என்னிடம் தயங்கித் தயங்கிப் பகிர்ந்துகொண்டவரின் குரல் உடைந்திருந்தது. அவருக்கு நானும் எனக்கு அவரும் ஆறுதல் சொல்லிக்கொள்ளும் வாய்ப்பை அச்சொற்கள் வழங்கவில்லை. பத்திரிகையிலும் அத்தகவல் சின்ன குறிப்போடு பிரசுரமாகியிருந்தது. அவ்வளவு சின்ன தகவலில் இருந்து விடுபட எனக்கு ஆறு மாத காலம் பிடிக்குமென்று நானுமே அப்போது நினைக்கவில்லை.
19.jpg
அதற்கு முன்னும், அதற்குப் பின்னும் பலர் மவுத்தாகியிருக்கிறார்கள். ஆனாலும், அவர் மவுத்தான தகவல் என்னை சுக்குநூறாக்கி சுட்டுப் பொசுக்கியதை சொல்லத்தான் வேண்டும். இஸ்லாமியர்கள்  ஒருவர் மரணமுறுவதை ‘மவுத்தாதல்’ என்றே சொல்கிறார்கள். காலமானார், இயற்கை எய்தினார், இறைவனடி சேர்ந்தார் என்று சொல்வதைவிட மவுத்தாதல் என்னும் சொல்லையே அவர்கள் பயன்படுத்துகிறார்கள். இது அரபு மூலத்தை அடிப்படையாகக் கொண்ட சொல்.

ஒருவர் மவுத்தாகிவிட்டால் ‘‘உண்மையாகவா சொல்கிறீர்கள்’’ என திரும்பத் திரும்பக் கேட்கிறோம். ஒருவர் மவுத்தாவது, நம்மைப் பொறுத்தவரையில் பொய்யாக வேண்டியது. உண்மையாகிவிடக் கூடாதது. எந்த சந்தர்ப்பத்திலும் நமக்கு நெருக்கமான ஒருவர் மவுத்தாகவே மாட்டார் என நாமாகக் கருதிக்கொண்ட அதீத கற்பனையின் வெளிப்பாடு அது.

அதன் காரணமாகவே, ‘நேற்றுகூட பேசினாரே’, ‘முந்தா நாள்தானே ரெண்டு பேரும் ஒன்றாக டீ குடித்தோம்’ என்று பழைய நினைவுகளை, நிகழ்வுகளைச் சொல்லத் தொடங்குவோம். ‘நமக்கெல்லாம் சாவே வராது’ என்பது போலவும், ‘இறந்து போனவர் அவசரப்பட்டு விட்டார்’ என்பது போலவும் கருதிக்கொள்வோம். இது நம்முடைய விருப்பமே தவிர, உண்மையல்ல.

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒருவருடைய மரணத்தை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நம்ப மாட்டேன் என முரண்டு பிடிப்பதால் ஆகப் போவதோ, அகலப் போவதோ ஒன்றுமில்லை. இந்த சமாதானம் சராசரிகளுக்கு மட்டுமே; கலையுலகவாதிகளுக்கு இல்லை! சில பல வருடங்களுக்கு முன் ஒரு கம்பெனியிலிருந்து என்னைப் பாட்டெழுதக் கூப்பிட்டிருந்தார்கள். அவர்கள் பாட்டெழுத வரச்சொன்ன இடத்தை வைத்தே அந்தக் கம்பெனியின் லட்சணம் தெரிந்தது.

வழக்கமாக அந்த லாட்ஜுக்கு வரச் சொன்னால், அது உதார் கம்பெனியாகவோ, உப்புமா கம்பெனியாகவோ இருக்கும் என்பது பொதுவான கருத்து. அந்தக் கருத்தை நானுமேகூட சில சந்தர்ப்பங்களில் சோதித்து இருக்கிறேன். இதற்கு முன்னும் ஒருசில படங்களுக்கான கம்போசிங்கிற்கு வரச்சொல்லி அந்த லாட்ஜிலிருந்து அழைப்பு வந்திருக்கிறது. அந்த அழைப்பை மதித்து நான் போய் எழுதிய எந்தப் பாடலும் இதுவரை வெளிவந்ததில்லை. அத்தகைய பெருமைக்கும் பிரியத்துக்கும் உரிய அந்த லாட்ஜிலிருந்து அழைப்பு.

அதை லாட்ஜ் என்று சொல்வதைவிட ‘கிளிக்கூண்டு’ என்பதுதான் பொருத்தம். ஒரே ஒரு படுக்கை. இரண்டு நாற்காலிகள். சிரமப்பட்டாலும் கூட திறக்க முடியாத ஜன்னல். எப்போதும் சூழ்ந்த இருள். உடல் பெருத்தவர் உட்கார்ந்து எழ முடியாதவாறு ஒரு குட்டி பாத்ரூம். அழுக்கும் பழுப்பும் படிந்த மூன்று கண்ணாடிக் கோப்பைகள்.ஃபிளாஸ்க் மாதிரி ஏதோ ஒன்று. இதை வைத்துக்கொண்டு ரொம்ப காலமாக அதை லாட்ஜ் என்று அந்த லாட்ஜ் முதலாளி எல்லோரையும் ஏமாற்றி வியாபாரம் செய்துகொண்டிருந்தார்.

வடபழனி போலீஸ் ஸ்டேஷனுக்குப் பின்னால்தான் அந்த கிளிக்கூண்டின் தோராய முகவரி. அது என்ன மாயமோ, மந்திரமோ தெரியவில்லை... ஊரில் இருந்து படமெடுக்க வரும் பலரும் அங்கு வந்துதான் தன் பெட்டியைத் திறப்பார்கள். பரம்பரை வீட்டை விற்றோ, பலசரக்குக் கடையில் கிடைத்த லாபத்தை எடுத்துக்கொண்டோ வரும் அவர்கள், கொஞ்ச காலத்திற்குப் பிறகு ஊருக்குக் கிளம்புவார்கள்; அல்லது ஊரைவிட்டே கிளம்புவார்கள்.

நான்கூட நினைத்ததுண்டு, அவர்கள் தாமாக இங்கு வந்து தங்குகிறார்களா? இல்லை, அதிகாலையில் கோயம்பேட்டுக்குப் போய் இந்த லாட்ஜிலிருந்து யாராவது அவர்களை அமுக்கிப் பிடித்து வருகிறார்களா என்று! இப்போது அந்தக் கிளிக்கூண்டை இடித்துக் கலைத்துவிட்டு யாரோ ஒரு  புண்ணியவான் அடுக்குமாடிக் குடியிருப்பைக் கட்டியிருக்கிறார்.

அந்தக் கிளிக்கூண்டு மட்டுமல்ல... அதுபோல இயங்கிவந்த எத்தனையோ கிளிக்கூண்டுகளுக்கு நான் போயிருக்கிறேன். எந்தக் கிளிக்கூண்டின் அழைப்பையும் தவறவிடாத சின்சியர் சிகாமணி நான். அப்போது என்றில்லை, இப்போதும்கூட ஒருவர் அன்போடு அழைத்துவிட்டால் நிராகரிப்பதில்லை.  அது டுபாக்கூர் லாட்ஜாக இருந்தாலும் சரி, ஃபைவ் ஸ்டார் ஹோட்டலாக இருந்தாலும் சரி... இம்மாதிரியான நற்குணங்களால் ‘வரவே வராது’ எனத் தெரிந்த படங்களுக்குக்கூட மிக சிரத்தையோடு பாடல் எழுதியிருக்கிறேன்.

ஓரிருமுறை ‘எழுத வாருங்கள், முன்தொகை தருகிறோம்’ என்றதை நம்பிப் போய், சொந்தக் காசில் படக்குழுவினருக்கு புரோட்டா வாங்கிக்கொடுத்த வரலாறும் என்னிடமுண்டு. அவ்வளவு வெள்ளந்தி நான். வெளிவரக்கூடிய படத்தைவிட, வெளிவராமல் போகும் படத்தில் பணிபுரிவது ஆரோக்கியமானது. எப்படியென்றால், வெளிவராத படத்தில் பெரும்பாலும் பேசிய பணத்தைக் கொடுத்துவிடுவார்கள். காசையும் கொடுத்து நம்மைக் காப்பாற்றவும் கூடியவர்கள் அவர்களே என்பதால் அவர்கள் அழைப்பை ஒருபோதும் தட்டுவதில்லை.

சொன்ன நாளில், சொன்ன நேரத்தில் அந்த லாட்ஜிற்குப் போய்விட்டேன். வரவேற்பறையில் என்னைக் கண்டுகொண்ட மேலாளர் சிரித்தார். ‘அவர் ஏன் சிரிக்கிறார்? எதற்கு சிரிக்கிறார்’ என எனக்கும் அவருக்கும் நன்றாகத் தெரியும். இதற்கு முன்னும் அவரும் நானும் இப்படி பலமுறை சிரிப்பாய் சிரித்திருக்கிறோம்.

‘‘என்ன சார்... புதுசா கிளி வந்திருக்கா?’’ என்றேன். ‘‘ஆமாம் சார், வந்து பத்து நாள் ஆகுது. திருப்பூர் கிளி. எக்ஸ்போர்ட் செஞ்சி ஏகப்பட்ட சொத்து வச்சிருக்காம். கிளியின் ஒரே லட்சியம், படம் எடுக்குறதுதானாம். ‘முனியா... மாட்டப் புடிச்சி கட்டுறா’ டயலாக்கோடு ஒரு ரோலில் அவருடைய ஒண்ணு விட்ட சித்தப்பா பேரன் நடித்திருப்பதால் ஆரம்பத்திலிருந்து சினிமா அவங்க குடும்பத்துக்குத் தொடர்பாம். பாக்க திடகாத்திரமா இருக்கு. நல்லா பழகுது. பதினாறாம் நம்பர்ல இருக்கு, போய்ப் பாருங்க’’ என்றார்.

‘கிளி’ என்று சொன்னது, படமெடுக்க வந்திருக்கும் புதுத் தயாரிப்பாளரை. அது வெட்டுக்கிளியா, துட்டுக்கிளியா என்று பார்க்க பரபரப்போடு மாடிப் படியேறினேன். ஏறிக்கொண்டிருக்கும் என்னை கவனிக்காமல் எதிரில் இரண்டொருவர் இறங்கிக் கொண்டிருந்தார்கள். ‘மேலாளர் சொன்ன கிளி இதில் ஏதோ ஒன்றாயிருக்குமோ’ என்ற யோசனை.  பத்து நாள் ஆகிவிட்டதால் றெக்கை முளைத்து கிளி பறந்துவிடக்கூடாதே என்னும் ஐயம் வேறு.

அறைக் கதவு திறந்தே இருந்தது. இசையமைப்பாளர் கண்மணி ராஜா ஆர்மோனியத்தில் எதையோ வாசித்துக்கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் எழுந்து கைகொடுத்தார். ஏராளமான பக்தி இசைத் தட்டுகளை பட்டி தொட்டியெங்கும் பரவ விட்டவர். நல்ல இசை ஞானமுள்ளவர். முபாரக் என்னும் இயற்பெயரைக் கொண்ட கண்மணி ராஜா, இஸ்லாமியப் பாடல்களில் தனி முத்திரை பதித்தவர். ஒருசில படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பிறகு ‘‘தேநீர் அருந்துகிறீர்களா?’’ என்றார்.

‘வேண்டாம்’ என்று சொல்ல நினைத்து ‘‘ஓ... சாப்பிடலாமே’’ என்றேன். ‘‘சர்க்கரை போடலாமா?’’ என்றார். ‘‘நிறைய போடலாம்’’ என்று சொல்லிவிட்டு, ‘‘என்னைப் பார்த்தால் சர்க்கரை வியாதியுள்ளவனாகத் தெரிகிறதா?’’ என்று கேட்க, அவருக்கு தர்மசங்கமாகிவிட்டது. ‘‘இல்லை... இல்லை... நானும் அய்யாவும் சக்கரையில்லாம குடிக்கிறோம்’’ என்றார்.

‘அய்யா’ என்று அவர் சொன்ன பிறகு அறைக்குள் உட்கார்ந்திருந்த அந்தப் பெரியவரைப் பார்த்தேன். அறுபது வயதிருக்கும். சர்க்கரை மீது அதிக அக்கறையோடு இருக்க வேண்டிய அய்யா முகத்தில் கோகுல் சாண்டலை அப்பியிருந்தார். அத்தர் வாசனையும் அடித்தது. அவர் யார் என்று கண்மணி ராஜாவைக் கேட்கத் தயக்கமாயிருந்தது. ஒருவேளை, ‘மேலாளர் சொன்ன கிளிதான் இந்த அய்யோவோ’ எனவும் நினைத்தேன்.

ஆனாலும், முழுமையாக நம்புவதற்கில்லை. ‘கிளி திடகாத்திரமா இருக்கு. நல்லா பழகுது’ என்ற சர்டிபிகேட் அய்யாவுக்குப் பொருந்தவில்லை. வயதான ஒருவரை அப்படி எப்படிச் சொல்ல முடியும்? ஆக, நாம் சந்திக்க வந்த அல்லது நம்மை சந்திக்க இருந்த தயாரிப்புக் கிளி படிகளில் இறங்கிப் போய்விட்டது. கிளி வரும்வரை கூண்டில் காத்திருக்க வேண்டியதுதான்.

முன்தொகை பெற்றுக்கொண்ட பிறகு கம்போசிங்கில் ஈடுபடலாம் என்றிருக்கையில் அந்த அய்யா மலங்க மலங்க என்னைப் பார்த்தார். ‘‘தம்பி, ஒங்க பேரத் தெரிஞ்சிக்கலாமா?’’ என்றார். எனக்கு அவர் அப்படிக் கேட்டது சுருக்கென்றிருந்தது.  சாதாரணமான கேள்விதான் என்றாலும்கூட என்னைப் பார்த்து அவர் அப்படிக் கேட்டதும் மெல்லிய கோபத்தை வரவழைத்தது. ‘என்னைத் தெரியாமல் ஒருவர் இந்த சமூகத்தில் இருக்க முடியுமா? அப்படியே இருந்தாலும் அதை என்னிடமே கேட்கலாமா?’ என்பது போல!
 

(பேசலாம்...)

kungumam.co.

Link to comment
Share on other sites

ஊஞ்சல் தேநீர்

யுகபாரதி - 6

நான் அப்படிக் கோபப்படுவதற்குக் காரணம் என்னுடைய தம்பிகள். எழுதத் தொடங்கிய கொஞ்ச காலத்திலேயே ஏறக்குறைய நூறு பாடல்களுக்குமேல் திரையில் வந்துவிட்டது. அதிலும் பெருவெற்றி பெற்ற பாடல்கள் அதிகம். பல்லவியைச் சொன்னால் தெரியும் அளவுக்கு. ஏக அலப்பறையோடு அந்தக் காலத்தில் வலம் வந்த என்னை என் தம்பிகள் அவ்வப்போது கண்ணதாசனுக்கு இணையாகச் சொல்லுவார்கள்.
18.jpg
அவர்களுக்குள் யார் இராம.கண்ணப்பன், யார் பஞ்சு அருணாசலம் என்னும் போட்டி வேறு. இருவரும் கண்ணதாசன் உதவியாளர்கள். எனக்கு உதவுவதாகச் சொல்லிக்கொண்டு என் உதவியில் வாழ்ந்துவந்த அந்தத் தம்பிகள், என் பாடலைக் கேட்டு வைரமுத்து ஆடிப்போய்விட்டார் எனவும், வாலிக்கு வயிற்றுவலி வந்துவிட்டதாகவும் சொல்லி என்னை ஏகத்துக்கும் ஏத்திவிட்டிருந்தார்கள். ‘அண்ணே, ஒங்க ‘மன்மத ராசா’ பாட்டாலதான் இன்னைக்கு திரையுலகமே மறுவாழ்வு பெற்றிருக்கிறது’ என்பது வரை அவர்கள் சொல்ல நான் பூரித்திருக்கிறேன்.

பொதுவாக அப்படிப் புகழ்பவர்களை எனக்குப் பிடிப்பதில்லை என்றாலும் தம்பிகள் நம்முடைய சங்கை ஊதுவதில் என்ன தப்பு இருக்கிறது என்றே கருதினேன். நம்முடைய சங்கை தம்பிகள் ஊதலாம். நமக்குத்தான் சங்கு ஊதக்கூடாது என்று தம்பிகளைத் தடுக்காமல் இருப்பேன். அதிலும், ரகுமான் என்றொரு தம்பி. அரியலூர்க்காரன். அவனைப் போல உடம்பு கூசும் அளவுக்கு ஒருத்தரைப் புகழ முடியாது.

‘இந்த வருசம் தேசியவிருது வாங்க டெல்லிக்கு நானும் உங்களுடன் வருவேன்’ என்பான். ஏதோ வருடந் தவறாமல் நானே விருது வாங்கிக்கொண்டு இருப்பது போலவும், இந்த வருடமும் எனக்கு விருது வழங்குவதற்காகவே ஜனாதிபதி காத்திருப்பதுபோலவும் சொல்லிக்கொண்டிருப்பான்.

மறுத்தால் கோபித்துக்கொண்டு, ‘ஒங்களப் பற்றி உங்களுக்குத் தெரியல அண்ணே, நேத்துகூட பெளர்ணமி டிபன் சென்டர் மாஸ்டர் ஒங்க பாட்டப் பத்தி என்னிடம் மணிக்கணக்கா சிலாகிச்சார்’ என்பான். என் புகழ் மூலம் அவனுக்கு அவ்வப்போது அந்த டிபன் மாஸ்டர் இலவச ஊத்தப்பங்களை வழங்கி வந்தார் என்பது உள் பொதிந்திருக்கும் உண்மை. டிபன் கடை மாஸ்டரிலிருந்து இந்திய ஜனாதிபதி வரை அறிந்து வைத்திருக்கும் ஒரு கவிஞனை அந்த அய்யா யார் என்றது கவனத்துக்குரியது.

என்னை யார் என்று கேட்ட அந்த அய்யா யாராயிருக்கும் என்பது என் கவலை. அவசரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டிவிடாமல் அவரை ஏற இறங்கப் பார்த்தேன். அவரோ என் பதிலுக்குக் காத்திராமல் எதையோ மும்முரமாக எழுதிக் கொண்டிருந்தார். கண்மணி ராஜாவை விகல்பமாகப் பார்த்தேன், ‘என்னைப்பற்றி ஊர் உலகிற்கு நீங்கள் அல்லவா சொல்லவேண்டும்’ என்பது போல.

அவரோ பதறிப்போய்விட்டார். ‘என்னய்யா இப்படிக் கேட்டுட்டீங்க... கவிஞர்தான் இன்னைக்கு டாப். அவர் எழுதினா அந்தப் பாட்டு ஹிட்டுன்னு எல்லாரும் சொல்றாங்க. நம்ம படத்துக்கு எழுத ஒப்புக்கிட்டது நம்முடைய பாக்கியம்’ என்று சொல்லி வைத்தார். அவ்வளவு சிரத்தையோடு அவருக்கு பதில் சொன்னது என்னை குதூகலப்படுத்தியது. என்றாலும், வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. கிளிக்கூண்டுகளில் எப்போதும் அதிகப்பிரசங்கித்தனமாக நடக்கக்கூடாது. நடந்தால் காரியம் கெட்டுவிடும். அதுமட்டுமல்ல, புரோட்டா செலவு நம் தலையில் விழுந்துவிடும்.

தேநீர் வந்தது. ‘அய்யாவுக்கு சுகர் இருக்குங்களா...’ என்று என் கோபத்தை எள்ளலாக மாற்றி பேசத் தொடங்கினேன். என் உரையாடலின் ஆரம்பம் அவரைக் காயப்படுத்துவது. என்னை யாரென்று தெரியவில்லையா? இரு, தெரிவிக்கிறேன்  என்பது போன்ற வன்மம். ஆனால், அவர் என்னை ஒரு பொருட்டாகவே கருதாமல் மிகத் தாழ்ந்த குரலில், ‘ஆமாந் தம்பி, கண்ட்ரோல்லதான் இருக்கு. அசைவத்தை கொறச்சிட்டேன். டெய்லி நடக்குறேன். நைட்ல சப்பாத்திதான்’ என்று பட்டியலிட்டார். ‘பாத்துக்கோங்க.

இந்த வயசுல தேவையில்லாம பேசினாக்கூட சுகர் அதிகமாயிடும்’ என்றேன். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. என் வார்த்தையிலிருந்த குரூரத்தைப் பெரிதுபடுத்தாமல் வாஞ்சையோடு சிரித்தார். ஒரு சின்ன அமைதிக்குப் பின் ‘அய்யா, ஒங்க பேர நாந் தெரிஞ்சிக்கலாமா?’ என்றேன். அவர் சட்டென்று நிமிர்ந்து, ‘என் பேரு சலீம் தம்பி. நாகூர் சலீமுன்னு சொல்வாங்க’ என்றார்.

அவ்வளவுதான், என் மொத்த கொழுப்பும் அந்தப் பெயரைக் கேட்டதும் குறைந்துவிட்டது. நாடி நரம்பிலெல்லாம் ஒருவித நடுக்கம் ஏற்பட்டது. ‘தமிழக தர்காக்களைப் பார்த்து வருவோம் பாடலை எழுதிய சலீமா?’ என்றேன். ‘ஆமாந் தம்பி, அத கேட்டிருக்கீங்களா?’ என்றார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. திக்பிரமை பிடித்தது போலானது. ஒருசில பாடல்களைச் சினிமாவில் கிறுக்கிவிட்டு அதையே கெளரவமாகவும் உலக சாதனையாகவும் கருதுபவர்களுக்கு மத்தியில் சலீம் அய்யா எத்தனை பெருமைக்குரியவர்? இஸ்லாமிய வீடுகளில் அவர் பாடல்கள் ஒலிக்காத நாளில்லை.

காலையும் மாலையும் அவர் எழுதிய எத்தனையோ கீதங்களை மசூதிகளும் தர்காக்களும் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட ஏழாயிரத்தி ஐந்நூறு பாடல்கள். ‘ஈச்சமரத்து இன்பச் சோலையில்’ என்னும் ஒருபாடல் போதும் அவர் யார் என்பதை விளங்கிக்கொள்ள. நாகூர் சலீம் என்னும் பேரை சின்ன வயதிலிருந்து நான் கேட்டிருக்கிறேன். கல்லக்குடிகொண்ட கருணாநிதி’ என்னும் பாடலைக் கேட்டுவிட்டு இது யார் எழுதியது என வியந்திருக்கிறேன். அதேபோல `வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா’ என்னும் பாடல்.

வைகோ தி.மு.க.வில் இருந்து வெளியேறிய பொழுது தஞ்சை தெருக்கள் முழுக்க அப்பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. அப்பாடல் வைகோவுக்காக எழுதப்பட்ட பாடலல்ல. கண்ணதாசனும் ஈ.வி.கே.சம்பத்தும் தி.மு.க.வை விட்டு வெளியேறியபோது எழுதப்பட்டது. இசைமுரசு நாகூர் ஹனிபா கேட்டுக் கொண்டதற்கு இணங்க சலீம் அய்யாவால் எழுதித் தரப்பட்டது.

‘கப்பலுக்குப் போன மச்சான், கண்ணிறைஞ்ச ஆசை மச்சான்’ என்னும் பாடலை வெளிநாட்டு வேலைக்குக் கணவனை அனுப்பிய எல்லாப் பெண்களும் கேட்டிருப்பார்கள். நாடகத்தில் தொடங்கி தனி இசைத்தட்டுகள் வரை சலீம் அய்யா சலிக்காமல் இயங்கியவர். கம்பதாசனுக்குப் பிறகு இந்தி டப்பிங் பட பாடல்களுக்கு பொருத்தமான வார்த்தைகளைக் கொடுத்தவர். இந்தத் தகவல்கள் எல்லாம் ஏற்கனவே எனக்கு ஓரளவு தெரிந்திருந்ததால் அந்தப் பெயரைக் கேட்டதும் என்னுடைய நிலை தளர்ந்தது.

அசாத்திய சாதனை புரிந்த ஒரு பெரிய மனிதரை அடையாளந் தெரியாமல் அவமதிக்கத் துணிந்துவிட்டோமே எனப் பட்டது. ஒரு மாபெரும் இயக்கம் தன்னுடைய அடையாளங்களாகச் சில பாடல்களைக் கொண்டிருக்கும். கொள்கைகளை விளக்கவும் தொண்டர்களை உற்சாகப்படுத்தவும் அப்பாடல்கள் உதவுகின்றன. இயல்பாகவே கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக அப்படியான பாடல்களைப் பாடியே கூட்டத்தை கட்சிப் பிரமுகர்கள் ஆயத்தப்படுத்துவார்கள்.

அவ்வகையில் இன்று வரை தி.மு.க மேடைகளில் பாடப்படும் பல எழுச்சிப் பாடல்களை எழுதியவர் சலீம் அய்யா. வண்ணக் களஞ்சியப் புலவர் பரம்பரையைச் சேர்ந்தவர். முதல் இஸ்லாமியப் பெண் நாவலாசிரியை சித்தி ஜுனைதா பேகம், திரைப்பட வசனகர்த்தா தூயவன் ஆகியோரின் சகோதரர். எழுத்தாளர் நாகூர் ரூமியின் தாய்மாமா. தூயவன், திரைத்துறையில் பிரசித்தி பெற்றிருந்த போதும் கூட சலீம் அய்யா ஏன் கவனிக்கப்படாமல் போனார் என்பதை விளங்கிக் கொள்ள முடியவில்லை.

நாகூர் ஹனிபா, காயல் ஷேக் முகமது, குத்தூஸ் போன்றோர் இவர் பாடல்களைப் பாடி இசைத்தட்டுகளாக வெளியிட்டு இருக்கிறார்கள். இதுவரை நூற்றி ஐம்பது பாடகர்களையாவது அறிமுகப்படுத்தியிருப்பார். அவர் பாடலைப் பாடாத பின்னணிப் பாடகர்களே இல்லை எனலாம். இவர் எழுதிய இறைவனை யாருக்குத் தெரியும், நபி இரசூல் இல்லையென்றால்’ என்ற பாடல் ஒருகாலத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டது. பல்வேறு வாத பக்கவாத மூக்குடைப்புகளுக்குப்பின் சலீம் சொன்னதே சரி என்று ஏற்றுக்கொண்டார்கள்.

இவருடைய ‘காதில் விழுந்த கானங்கள்’ முக்கியமான கவிதைத் தொகுப்புகளில் ஒன்று. இஸ்லாமிய கவிதை மரபின் தொடர்ச்சியை, சொல்லாட்சியை அக்கவிதைகளில் கண்டுகொள்ளலாம். ‘கீழே இறக்கு... மக்கள் குரலுக்கு இணங்கு’ என்று இவர் எழுதிய காங்கிரஸ் எதிர்ப்புப் பாடலைக் கேட்டு அறிஞர் அண்ணாவே புகழ்ந்திருக்கிறார். ஒரு தொலைக்காட்சியில் இவரை நேர்முகம் கண்ட தொகுப்பாளர், ‘இவ்வளவு சாதனை புரிந்த நீங்கள் அடக்கமாகப் பேசுகிறீர்களே’ என்றார்.

உடனே, சலீம் அய்யா சொன்னார். ‘அடக்கமாகப் போகிறவன் அடக்கமாதான் இருக்கணும்.’ அந்த நேர்காணல் வெளிவந்த கொஞ்ச காலத்தில் அவர் மரணமுற்றது குறிப்பிடத்தக்கது. அடக்கம் அமரருள் உய்த்தது. அந்த சந்திப்பு என்னை வெகுவாக புரட்டிப் போட்டது. அவர் பாடல்களைக் கேட்குந்தோறும், எளிய வாழ்வை சாத்தியப்படுத்த இயலாதவர்களால் எதையும் சாதிக்க முடியாது என்றே தோன்றுகிறது.

சலீம் அய்யாவுக்கு நிறைய சாதிக்கவேண்டும் என்னும் வெறியிருந்தது. ஆனாலும், காலம் அவரை திரைத்துறையில் செழித்தோங்க விடவில்லை. பெயர் தெரியாத பல கிளிக்கூண்டுகளில் அவர் பாடல் எழுதிய காகிதங்கள் கசங்கிக் கிழிந்தன. ஏ.கே.வேலன், எம்.ஜி.ஆர் போன்றோர் முயன்றும்கூட அவருக்குத் திரைத்துறை கதவுகள் பெரிதாக திறக்கப்படவில்லை. சத்யராஜ் நடித்த ‘மகா நடிகன்’ திரைப்படத்தில் ஒரு பாடல் வந்திருக்கிறது.

‘தம்பி, ஒங்க பேர தெரிஞ்சிக்கலாமா’ என்ற பெரியவரின் பெயரைக் கடைசிவரை தமிழ் திரைப்பாடல் உலகம் தெரிந்து கொள்ளாமலே போய்விட்டது. எளிமையும் சாந்தமும் ஒரு படைப்பாளனை உருவாக்குகிறது. அதே எளிமையும் சாந்தமும்தான் அவனை அடுத்த கட்டத்திற்கு அழைத்துப் போகாமலும் இருந்து விடுகிறது. அவரைச் சந்தித்துவிட்டு வந்த அந்த இரவில் ஒரு விநோத பயம் என்னைத் தொற்றிற்று.

நாற்பதாண்டுகளுக்குப் பிறகு நாமும் இப்படித்தான் ஏதாவது ஒரு கிளிக்கூண்டில் உட்கார்ந்து, அன்று பாடல் எழுதவரும் புதுப் பையனிடம் ‘தம்பி, ஒங்க பேரத் தெரிஞ்சிக்கலாமா’ என கேட்போமோ? சலீம் அய்யா என்னிடமிருந்து மட்டுமல்ல, யாரிடமிருந்தும் என்றைக்கும் மவுத்தாக மாட்டார்.
 

(பேசலாம்...)

kungumam.co

Link to comment
Share on other sites

 

ஊஞ்சல் தேநீர்

யுகபாரதி - 7

தொண்ணூறுகளின் இறுதியில் நானும் சரவணனும் சென்னைக்கு வந்துவிட்டோம். சினிமா, பத்திரிகை, அரசியல், இலக்கியம் என அலைந்துகொண்டிருந்த எங்களை, விஞ்சுவதற்கு ஆளே இல்லை என்பதுபோல உள்ளூர்த் தோழர்களில் சிலர் உசுப்பிவிட்டிருந்தார்கள். ‘‘ஆகப்பெரும் திறமைசாலிகளாக இருக்கும் நீங்கள் தஞ்சாவூரில் இருந்து என்னதான் செய்யமுடியும்? உங்களுக்கான களம் சென்னை மாநகரே. சிறப்பாகச் செயல்படவும் செழித்தோங்கவும் சென்னைக்குக் கிளம்புங்கள். மேலே கூறிய துறைகளில் போதாமை நிலவுகிறது. அந்த போதாமைகளைப் போக்கும் திறன் உங்களிடமிருக்கிறது. உடனே கிளம்புங்கள். நம்முடைய அடுத்த சந்திப்பு சென்னையில் அமையட்டும்’’ என்பார்கள்.
8.jpg
அவர்கள் சொல்லியதுபோல நாங்களும் எங்களை, சகல துறைகளையும் மேம்படுத்தும் பராக்கிரமசாலிகளாக நம்பினோம். ஒருகட்டத்தில் சென்னைக்கு விஜயமாவது என்றும் முடிவெடுத்தோம். அம்முடிவு, அவர்களின் வார்த்தைகளை மெய்ப்பிக்க அல்ல. வாரி வாரிப் புகழ்ந்த அவர்களின் தொந்தரவிலிருந்து தப்பிக்க. மேலும் சிலநாள் நாங்கள் தஞ்சாவூரில் இருந்திருந்தால் அவர்கள் எங்களை சிதையிலோ சிலுவையிலோ அறைந்திருப்பார்கள்.

எங்கள் மீதுள்ள அக்கறையினால் அவ்வார்த்தைகளை அவர்கள் உதிர்த்தார்களா? இல்லை எங்கள் நச்சரிப்பு பொறுக்காமல் நாடு கடத்தினார்களா? இன்று வரை கூட யூகிக்க முடியவில்லை. சென்னையில் எங்களுக்கு யாரையுமே தெரிந்திருக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் சென்னை தமிழ்நாட்டின் தலைநகர் என்பதைத் தாண்டி ஒன்றுமே தெரியாது. பழகிய சிலபேர் கொளுத்திப்போட்டதில் பற்றிக்கொண்ட நாங்கள், கும்பி நெருப்பெரிய சென்னையில் வந்து விழுந்தோம்.

அழகழகான கட்டடங்கள் நிரம்பிய சென்னைத் தெருக்கள் அப்போதும் அழுக்குகளையே சுமந்திருந்தன. அதுவரை சாக்கடையாக ஒரு ஆறு ஓடும் என்று கனவில்கூட நாங்கள் நினைத்திருக்கவில்லை. பெரிய பெரிய பிஸ்தாக்கள் வாழும் சென்னை மா பட்டிணத்தில் பிச்சைக்காரர்களும், பிழைக்க வழியில்லாதவர்களும் அதிக எண்ணிக்கையில் இருப்பதைப் பார்த்த எங்களுக்கு அதிர்ச்சியாயிருந்தது. பரவாயில்லை. இதையெல்லாம் சரி செய்வதற்கே யாம் வந்திருக்கிறோம்.

இரண்டு பேரும் முன்நின்று இக்கேடுகளை நீக்கவும், சோம்பிக்கிடக்கும் சென்னையை சொர்க்கபுரியாக்கவும் தீர்மானித்தோம். சென்னை மாநகரைத் திருத்த வந்திருக்கும் எங்களை ஒரு ஈ, காக்கைகூட ஏறெடுத்துப் பார்க்கவில்லை. அந்த ஈயும் காக்கையும் அலுத்து சலித்து அடுத்த மாத இ.எம்.ஐக்காக ஆலாய்ப் பறந்து கொண்டிருந்தன. எல்லா காலத்திலும் சமூக மீட்பர்களுக்கு நேர்ந்த கதிதான். மனுஷ்யபுத்திரன் அவ்வப்போது எழுதுவதுபோல ‘என்ன மாதிரியான சமூகத்தில் நாமிருக்கிறோம்?’ தங்களுக்காக உழைக்க வந்திருக்கும் இரண்டு பெரும் ஆகிருதிகளை அடையாளம் காணக்கூட இந்த சமூகத்திற்கு முடியாமல் போகிறதே.

தங்களைக் கைதூக்கிவிட வந்திருப்பவர்களைப் பாராட்ட மனமில்லை என்றாலும், ஒருவேளை பட்டை சோற்றுக்காவது வழி செய்யக் கூடாதா? குடத்தைக் குப்புற கவிழ்த்ததுபோல் கொண்டு வந்த பணமெல்லாம் தீர்ந்துவிட்டது. ஊருக்கே திரும்பிவிடவும் யோசனைதான். ஆனாலும், எங்களைவிட்டால் சென்னையை யார் செப்பனிடுவது? வாய்க்கும் வயித்துக்கும் வழியில்லை எனினும் அவ்வளவு எளிதாக ஒரு வரலாறு வந்துவழியில் திரும்பிவிடுமா என்ன?

மூன்று வேளை உணவில்லையென்பது குறையில்லை, ஒருவேளை உணவுகூட இல்லாமல் நம்முடைய முன்னோர்கள் ஊருக்கு உழைத்திருக்கிறார்களே. சரவணன், எதார்த்தத்தை மீறி இப்படி எதையாவது பேசிக்கொண்டிருப்பான். சென்னைக்கு வர எனக்கும் சேர்த்து அவனே பிரயாண டிக்கெட்டெடுத்தவன் என்பதால் அவனைமீறி எந்த முடிவையும் என்னால் எடுக்க முடியாது. சரிதான் நண்பா, உன் சித்தம் எப்படியோ அப்படியே நடப்போம் என்றுதான் சொல்ல முடியும்.

பசி, அடிவயிற்றைக் கவ்விக்கொண்டு அகல மறுக்கும். ஈவு இரக்கமில்லாமல் எதைசெய்யவும் தூண்டும். நாங்கள் வந்திருந்த தொண்ணூறுகளின் இறுதியில்தான் தண்ணீரைக்கூட பாக்கெட்டில் விற்பனை செய்யும் விபரீதம் தொடங்கியது. பணமில்லாமல் பசியோடு சென்னையிலிருப்பது, இறந்துபோனவரிடம் நலம் விசாரிப்பது போன்றதுதான். ஆனாலும், அப்போதைய எங்கள் பசியைப் போக்க சில அரங்கங்கள் உதவின.

கம்பன் கழகமும், தமிழ்ச் சான்றோர் பேரவையும் புதுக்கல்லூரி இஸ்லாமிய மாநாடுகளும் எங்களுக்கான அரிசியை, உணவாக சமைத்துப் பரிமாறின. விழாவில் பங்கெடுக்க பிரத்யேகமாக வந்தவர்களைப் போல அவ்வரங்கங்களில் சாப்பிடுவதற்காகவே கலந்துகொள்வோம். சமூகம், எங்களை அடையாளம் காணவில்லையே என்று ஆரம்பத்தில் துக்கப்பட்ட நாங்கள், அப்புறம் யாருமே எங்களை அடையாளம் காணாத வகையில் நடந்துகொண்டோம்.

தெரிந்தால் விரட்டிவிடுவார்களோ என்னும் அச்சத்தில் தலையை குனிந்துகொண்டே சாப்பிட்டு எழுவோம். ஒருமுறை அப்படித்தான் ஜெர்மன் ஹாலில் தமிழ்ச் சான்றோர் பேரவை விழா. மதிய உணவு ஏற்பாட்டுடன் தடபுடலாக விழாவை நடத்தினார்கள். மாணவர் நகலக அதிபர் அருணாச்சலம் அந்நிகழ்வுகளை பின்னிருந்து இயக்கினார். உதிரி உதிரியாகப் பிரிந்திருந்த தமிழ் அமைப்புகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் அவர் அப்போது ஈடுபட்டிருந்தார்.

இறுதியில் அவராலும் தமிழின உணர்வாளர்களை ஒரு வட்டத்திற்குள் கொண்டுவர முடியவில்லை. அந்த விழா மூன்று அமர்வுகளைக் கொண்டிருந்தது. இயல், இசை, நாடகம். மூன்றிலும் சிறந்து விளங்கியவர்கள் பங்கெடுத்துக்கொண்டார்கள். காலையில் இருந்து மதியம்வரை ஒரு அமர்வு. அந்த அமர்வு எங்களைப் பெரிதாக கவரவில்லை. மதிய உணவு உண்டென்று சொல்லியிருந்ததால் ஒருவேளை பிடித்திருக்கலாம்.

சும்மா சொல்லக்கூடாது. மதிய உணவை ஜமாய்த்துவிட்டார்கள். இரவுக்கும் இதுபோல ஏற்பாடு செய்திருப்பார்களா என ஏங்கும் அளவுக்கு மதிய உணவின் மகிமை அமைந்தது. எதிர்ப்பார்ப்பில்லாமல் யார்தான் இருக்கிறார்கள்? நாங்களும் அன்று அங்கேயே பொழுதைக் கழிக்க முடிவு செய்தோம். இரவு உணவை உத்தேசித்து அல்ல. விழா ஏற்படுத்திய விநோத பரவசம், மாலைவரை எங்களை அங்கே இருக்கவைத்தது. இருள் மெல்ல கவிந்த பின் மாலையில்தான் அந்த அதிசயமும் நிகழ்ந்தது. அரங்கிற்கு வெளியே ஊசிமழை.

யாரோ ஒரு பெரியவர் மேடையேறினார். தபேலா, ஹார்மேனியத்துடன் மேலும் சிலர். கச்சேரி ஆரம்பானது. ‘அழகான அந்த பனைமரம் அடிக்கடி நினைவில்வரும்’, என்ற காசி ஆனந்தனின் பாடலை அவர் பாடினார். அதுவரை அந்தப் பாடலை நாங்கள் கேட்டதில்லை. அதற்கு முன்னாலும் அதற்குப் பின்னாலும்கூட அப்படியொரு குரலை நாங்கள் கேட்டதில்லை. அதைக் குரல் என்று சொல்லமுடியாது. உயிரை உருக்கிப்பிழியும் வஸ்து.

தமிழனின் செங்கோட்டு யாழ். தமிழ்த்தேசிய அடையாளத்தைப் பிரதிபலித்த சிதம்பரம் ஜெயராமனின், சீர்காழி கோவிந்தராஜனின் குரலை ஒத்திருந்தது அந்தக்குரல். கருத்த முகம். தோளில் நீலநிற ஜரிகை சால்வை. வயதின் காரணமாக அவ்வப்போது சுருதி சேராவிட்டாலும் உணர்ச்சியின் பாவத்தை அவர் உதடுகள் கொப்பளித்தன. மின்சாரம் உடலெங்கும் ஊடுருவியது போலிருந்தது. இன மீட்பு, மொழிப் பற்று, திராவிட அரசியல் விமர்சனம் என்று அவர் பாடிய பாடல் ஒவ்வொன்றும் உள்ளத்தைக் கடைந்தன.

மேலும் கீழும் அபிநயம் பிடித்ததில் அவ்வப்போது அவர் விரலில் அணிந்திருந்த மோதிரத்தின் ஒளி, குழல் விளக்கில் பட்டுத்தெறித்தது. உச்சஸ்தாயியில் எட்டுக்கட்டைக்கும் மேல்கூட அவர் அனாயசமாக போவார் போல. உச்சரிப்பில் தெளிவு. உந்திவரும் கருத்துகளில் ஒன்றுகூட சோடையில்லை. அவர் முழங்கிக்கொண்டே இருந்தார். முதுகுத் தண்டில் மின்னல் வெட்டிக்கொண்டே இருந்தது. அந்தப் பாடகரின் பெயரை அருகிலிருப்பவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டோம். அவர்தான் தேனிசை செல்லப்பா.

சி.பா.ஆதித்தனாரின் ‘நாம் தமிழர்’ காலத்திலிருந்து பாடிவரும் அவர், தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குப் பிடித்தமான பாடகர். 1987ல் பனிரண்டு நாள் உண்ணாவிரதமிருந்து மரணத்தைத் தழுவிய போராளி திலீபன், தன்னுடைய கடைசி ஆசையாக அய்யாவின் பாடலையே கேட்க விரும்பினான், என்றார்கள். ஒரு போராளி தன் இறுதி ஆசையாக கேட்கத்தக்க குரல்தான் அது. எத்தனை உணர்ச்சிக் கொந்தளிப்பு.

இசைக்கு மொழியில்லை. இசைக்கு இனமில்லை என்று சொன்னாலும், மொழியையும் இனத்தையும் அவர் பாடல்களிலிருந்தே அறிந்துகொள்ள முடிந்தது. திராவிடத்தின் மூத்த மொழியான தமிழின் இசைவடிவை அவர் நேர்த்தியாகக் கற்றிருந்தார். தமிழிசை அவரிடமிருந்து தனக்குரிய பங்கைப் பெற்றிருக்கிறது. நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நாடகங்களில் பாடிவந்த அவரை, ஒருகாலம் வரை ஆகர்ஷித்து ஆதரித்தவர் சி.பா.ஆதித்தனார்தான்.

‘நாம் தமிழர்’ இயக்கப் பொதுச்செயலாளர் சி.ஆர்.வரதராஜனின் அறிமுகத்திற்குப்பிறகு தன்னை மக்கள் பாடகராக மாற்றிக்கொண்டிருக்கிறார். 1958ல் மன்னார்குடியில் நிகழ்ந்த தனித்தமிழ் மாநாட்டில் பாரதிதாசனின் பாடலைப் பாடுவதற்காக அழைக்கப்பட்டிருக்கிறார். அதன்பின், தமிழ்த் தேசிய கொள்கைகளை மேடைகளில் முழங்குவது ஒன்றே தன் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டுவிட்டார். பாரதிதாசனின் பல பாடல்கள் ஸ்வர கட்டுமானத்திற்கு உட்படுவதல்ல.

ஆவேசத் தொனியை கொண்டிருப்பவை. அவருடைய விருத்தப்பாக்களை பதம் பிரித்து வாசிப்பதே தனிக்கலை என்றிருக்கையில் அதற்கு மெட்டமைப்பது சாதாரண காரியமில்லை. ஆதித்தனார், திருக்குறள் முனிசாமி, சின்னச்சாமி போன்றோர் அக்காரியத்தில் தனக்கு உதவிபுரிந்ததாக தேனிசை செல்லப்பா ஒரு நேர்காணலில் தெரிவித்திருக்கிறார். முன்னாள் அமைச்சர் திருச்சி செளந்தர்ராஜனும் பழம்பெரும் நடன இயக்குநர் புலியூர் சரோஜாவும் இணைந்து நடித்த ‘பேராசை பிடித்த பெரியார்’ என்னும் நாடகத்தை திராவிட இயக்கத்தவர்கள் மறந்துவிட மாட்டார்கள்.

அந்த நாடகத்தின் வாயிலாக பெரியாரின் கொள்கைகள் நாடெங்கும் பிரகடனப்படுத்தப்பட்டு வந்தன. சுயமரியாதை இயக்கத்தின் நோக்கமும் பயணமும் எதை சொல்லவந்ததோ அதை சொல்லிக்காட்டுவதற்காகவே நிகழ்த்தப்பட்ட அந்நாடகப் பாடல்களைப் பாடியவர் தேனிசை செல்லப்பா. அதற்காக பெரியார் நூறு ரூபாய் பரிசளித்திருக்கிறார். ஒரு ரூபாய் செலவு செய்வது என்றாலும் கோடிமுறை யோசிக்கும் பெரியாரிடம், ஒருவர் நூறு ரூபாய் பெறுவது பத்து லட்சம் கோடிக்குச் சமம்.

பணத்தை பரிசளிக்கும்போது பெரியார், ‘‘மறுக்கக்கூடாதுங்க... எங்க பாடினாலும் யாருக்குப் பாடினாலும் எவ்வளவு தருவீங்க’’ன்னு கேட்டுட்டுத்தான் பாடணும், என்றிருக்கிறார். ‘‘கொள்கையை முன்நிறுத்தி செயல்பட வேண்டும். பணம் பொருளை பெரிதாக கருதக்கூடாது’’ என சொல்ல வேண்டிய ஒரு தலைவர், ‘‘பணமில்லாமல் எங்கேயும் பாடாதே’’ என்றது கவனிக்கத்தக்கது.
 

(பேசலாம்...)

kungumam.co.

Link to comment
Share on other sites

 
 

ஊஞ்சல் தேநீர்

 
 

யுகபாரதி - 8

தேனிசை செல்லப்பாவின் குரல், கூட்டத்தைக் கட்டிப் போட்டுவிடும். அவர் கச்சேரிக்குப் பிறகு எத்தனை பெரிய சொற்பொழிவாளர்கள் வந்தாலும் அவர்கள் பேச்சு எடுபடாது. அரங்கு முழுவதையும் பறித்துக்கொண்டு போய்விடுவார். இன உணர்வையும் மொழி உணர்வையும் கொதிநிலைக்கு கொண்டுவந்து நிறுத்துவார். இப்பொழுதே கிளம்பிப்போய் துப்பாக்கிக்கு இரையாகத் தோன்றும். எனக்கும் சரவணனுக்கும் அந்த நாள் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்தது.
17.jpg
தேனிசைத் தென்றல் தேவாவை மட்டுமே அறிந்திருந்த எங்களுக்கு தேனிசை செல்லப்பா என்ற பெயரும் அவரின் அசாதாரண இசை அர்ப்பணிப்பும் அன்றுதான் புரிந்தது. உலகநாடுகள் முழுக்க அவர் பாடலால் அறியப்பட்டிருக்கிறார். குறிப்பாக, ஈழத் தமிழர்கள் அவர் பாடலுக்காக தவம் கிடக்கிறார்கள். அவர் ஒரு மேடையில் பாடுகிறார் என்றால் அது அவர்களுக்கு மேடை அல்ல. போர்க்களம். இன்றும் இவரால் பாடப்பட்ட ‘சந்தன பேழையில்’ என்று ஆரம்பிக்கும் புதுவை ரத்தினதுரையின் பாடலைத்தான் மாவீரர் நாளில் இசைக்கிறார்கள்.

மெழுகுவர்த்தி ஏந்தி அவர்கள் அப்பாடலை இசைக்கும்போது கண்ணீர் பெருகுவதைக் கட்டுப்படுத்த முடியாது. தமிழிசைக்கு நெடிய வரலாறு உண்டு. ஆபிரகாம் பண்டிதரின் ‘கருணாமிருத சாகரத்திலிருந்து’ அவ்வரலாறு தொடங்குகிறது என சிலர் சொன்னாலும் அதற்கு முன்பிருந்தே அதாவது, சங்க இலக்கிய காலத்திலேயே அதன் வேர் இருப்பதாக இன்னும் சிலர் ஆய்ந்திருக்கிறார்கள். தேனிசை செல்லப்பா அந்த வேரின் கிளைமரமாகவே கிளைத்திருக்கிறார்.
17a.jpg
இல்லையென்றால், அவர் பாடலைக் கேட்டு ஆஸ்திரேலியாவில் ஒரு பெண்மணி தாலிக்கொடியை, வளையலை, காது கம்மலை, இன்னபிற ஆபரணங்களை கழற்றி ஈழப் போருக்கு நிதியாகக் கொடுத்திருக்க மாட்டார். ‘எப்படித் தாங்குவது, எப்படி தாங்குவது, ஈழ தேசம் எதிரி கையில், எப்படித் தாங்குவது’ என்று அவர் மேடையில் பாடப் பாட கண்ணீர் உகுத்த அப்பெண்மணி தாமாகவே மேடைக்கு  வந்து தன்னிடமிருந்த நகைகளை நிதியளிப்புப் பெட்டியில் போட்டிருக்கிறார்.

கொடுமுடி கோகிலம் என்றழைக்கப்பட்ட கே.பி.சுந்தரம்பாள், இந்திய விடுதலைக்கு நிதி வசூல் செய்து கொடுத்ததைப் போல தேனிசை செல்லப்பாவும் ஈழ விடுதலைக்கு தன்னால் இயன்றதைச் செய்திருக்கிறார். இதயத்தின் ஆழத்திலிருந்து பாடும் பாடகர்களால் மட்டும்தான் அப்படியான வரலாறுகளை உருவாக்க முடியும். தேனிசை செல்லப்பா தமிழின வரலாற்றில் தவிர்க்கமுடியாத இசை அத்தியாயம் ஒருமுறை நார்வேயில் தேனிசை செல்லப்பாவின் இசைக்கச்சேரி. அரங்கு நிறைந்த கூட்டம்.

அந்தக் கச்சேரியில் தம்பிராஜா என்ற ஈழத்தமிழர் கலந்து கொள்கிறார். அதுவரை அப்படியொரு கச்சேரி நிகழ்ந்ததில்லை என்பதால் சிலிர்க்கிறார். அதன் காரணமாக அடுத்த ஆண்டும் செல்லப்பாவின் கச்சேரியில் கலந்துகொள்ள எண்ணுகிறார். என்றாலும், நோய் அவரை வரமுடியாதவாறு படுத்த படுக்கையாக்கிவிடுகிறது. ஒருகட்டத்தில் நோய்முற்றி, இனி பிழைக்க வழியில்லை என மருத்துவர்களும் சொல்லிவிடுகிறார்கள்.

அந்த அடாத சோகத்திலும் அவர் வருத்தப்பட்டது செல்லப்பாவின் கச்சேரியை கேட்க முடியாமல் போய்விட்டதே என்றுதான். வருத்தப்பட்டவர், அத்தோடு நில்லாமல் தன் விரலில் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றி, இந்த ஆண்டு அய்யா வந்து மேடையில் பாடும்போது என் வருத்தத்தை தெரிவித்து இதை அவர் விரலில் அணிவியுங்கள், என்றிருக்கிறார். மனைவியும் மகளும் அந்த சம்பவத்தை சொல்லி அதன்படியே மோதிரத்தை அணிவித்திருக்கிறார்கள். அந்த மோதிரத்தை அய்யா தன் இறுதிக் காலம்வரை அணிந்திருக்க வேண்டும் என்பது தம்பிராஜாவின் விருப்பம்.

தமிழ்ச் சான்றோர் பேரவை விழாவில், குழல் விளக்கில் பட்டுத்தெறித்த மோதிரத்தின் ஒளிக்குப் பின்னே இப்படியொரு செய்தியிருப்பது நெடுநாள் கழித்தே எனக்கும் சரவணனுக்கும் தெரிய வந்தது. தேனிசை செல்லப்பாவை புலம்பெயர்ந்த தமிழர்கள் கொண்டாடிய அளவுக்கு தமிழகம் கொண்டாடவில்லை. இங்கே இருக்கும் ஒருசில தமிழ் அமைப்புகளின் மேடைகளில் அவர் இன்றும் பாடி வருகிறார். பாரதிதாசன், பெருஞ்சித்திரனார், புதுவை ரத்தினதுரை, காசி ஆனந்தன், கவியன்பன் பாடல்களை அவர் பாடும்பொழுது நம்மையு மறியாமல் உணர்வுத் தளத்தில் சஞ்சரிக்கத் தொடங்குவோம்.

இசைக் கச்சேரி என்பதிலும் பார்க்க, தமிழிசை மீட்பையே அவர் ஒவ்வொரு மேடையிலும் செய்துவருகிறார். 1990ல் யாழ்ப்பாண முற்றவெளி மைதானத்தில் ஐந்துலட்சம்பேர் கூடி, அவர் கச்சேரியை கெளரவித்ததை வீரகேசரி தலைப்புச் செய்தியாக வெளியிட்டது. 1996ல் லண்டன் லம்போர்ட் ஸ்டேடியத்தில் இருபதாயிரம்பேர். பதினெட்டாயிரம் பேர் மட்டுமே அமர முடியும் என்ற நிலையில் இரண்டாயிரம்பேர் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

அனுமதி மறுக்கப்பட்ட அவர்களுக்காக அடுத்த சில நாட்களும் கச்சேரியைத் தொடர்ந்திருக்கிறார்கள். இப்போது சென்னைப் புறநகரை அடுத்த படப்பையில் வசித்துவருகிறார். இரண்டாயிரம் பாடல்கள். ஏராளமான இசைத்தட்டுகள். ஆயிரக்கணக்கான மேடைகள் என தமிழர்கள் வாழும் நிலப்பரப்பெங்கும் அவர் பயணித்திருக்கிறார். லண்டனில் மைக்கேல் ஜாக்ஸனுக்குப் பிறகு அதிகமான ரசிகர்களை ஈர்த்தவராக தேனிசை செல்லப்பாவைச் சொல்கிறார்கள்.

ஆனால், உள்ளூர் மேடைகளோ அவரை ஒதுக்கி வைத்திருக்கின்றன. இசை விழாக்களிலோ ஊடகங்களிலோ அவர் முகம் தென்படுவதில்லை. நானும் தம்பி ஆரோக்கியதாஸூம் அவரை ‘49ஓ’ திரைப்படத்தில் ‘இன்னும் எத்தனை காலம் வரை’ என்னும் பாடலைப் பாடவைத்தோம். சமூக மாறுதலுக்கான சிந்தனைகளை உள்ளடக்கிய அப்பாடலை எத்தனைபேர் கேட்டிருப்பார்கள் எனத் தெரியவில்லை.

பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்த நடிகர் சத்யராஜ் அவரைப்பற்றி சொன்னபோதுதான் அந்தப் படக்குழுவினருக்கே அவரைப்பற்றித் தெரிந்தது. தோளில் நீலத்துண்டு, சட்டைப் பையில் திருக்குறள் புத்தகம். இதுவே தமிழன் தன்னை தமிழனாக அறிவிக்கும் அடையாளம் என்றார் ஆதித்தனார். அந்த அடையாளத்தை தேனிசை செல்லப்பா இழக்க விரும்புவதில்லை.

ஒருவரை யார் என்று அறிந்துகொள்வதும் அவரைப் பின் தொடர்வதும் அவசியம். ஒருவரையும் தெரிந்துகொள்வதில்லை. தெரிந்தாலும் சொல்வதில்லை என்பதே இன்றைய தமிழ் இசை விமர்சகர்களின் போக்காக இருக்கிறது. ஒரு மேடையில் தேனிசை செல்லப்பா பாடுகிறார் என்றால் அந்தக் கச்சேரியைக் கேட்பது கடமை என்று ஈழத்தமிழர்கள் கருதுகிறார்கள். நாமோ அவர் யாரென்றுகூட அறியாமலிருக்கிறோம்.

உணவுக்காக ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ள போய் உணர்வு வயப்படுப்பட்டுவிட்ட நாங்கள் அதன்பின் சோம்பிக் கிடந்த சென்னையை சொர்க்கபுரியாக்கும் சிந்தனைகளுக்கு இடமளிக்கவில்லை. சோற்றுக்கு வழிதேடி, சொந்த ஊருக்கு போகாமலிருக்கும் காரியங்களில் ஈடுபடுகிறோம். சென்னைதான் உங்களுக்கான களம் என்று சொல்லி, எங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய தோழர்களுக்கு எங்களை ஆளாக்கிப் பார்க்கவேண்டும் என்னும் ஆசையிருந்தது.

இலக்கியம், சினிமா, அரசியல், பத்திரிகை என பொதுசனத்தோடு தொடர்புடைய ஏதோ ஒரு துறையில் செயலில் நாங்கள் ஈடுபடவேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். அதற்காகவே அவ்வப்போது அவர்கள் எங்கள் கொம்புகளை சீவி, ஜரிகை ரிப்பன்களை கட்டிவிட்டார்கள். அது புரியாமல் ஆரம்ப காலங்களில், சமூகத்தை முட்டிமோதி வீழ்த்திவிடலாம் என்னும் மூர்க்கத்தோடு சுற்றிக்கொண்டிருந்தோம்.

ஒவ்வொரு நாளின் முடிவும் இன்னொரு நாளின் தொடக்கத்தை அல்லாமல் அனுபவங்களையே வழங்குகின்றன. அநேகமாக, தொண்ணூறுகளில் சென்னை நகரில் நடந்த அத்தனை விழாக்களிலும் நாங்கள் கலந்துகொண்டிருக்கிறோம். மதிய உணவோடு கூடிய விழாவென்றால் முதல்நாளே பவுடரடித்து கிளம்பியிருக்கிறோம். வறுமை சோபித்திருக்கும் காலங்களில் பாடல்களும் கவிதைகளும் அதீத நம்பிக்கையை ஏற்படுத்தும்.

லட்சிய வாழ்வை நோக்கி நகர்வதற்கும் லட்சோப லட்ச மக்களை அடைவதற்குமான வழியைக் காண்பிக்கும். திலீபனுக்கும் அப்படித்தான் தேனிசை செல்லப்பாவின் குரலில் தோய்ந்திருந்த உண்மை பிடிபட்டிருக்கும். எந்த மக்களுக்காக போராடுகிறோமோ அந்த மக்களின் தொன்மங்கள்மீது ஒரு போராளி தன் பார்வையை செலுத்த இலக்கியங்களே உதவுகின்றன. இசைப்பாடல்கள் துணைபுரிகின்றன.

கண் பார்வையில்லாத இந்தி இசையமைப்பாளர் ரவீந்திரன் ஜெயினின் அதிகமான பாடல்களை கே.ஜே.யேசுதாஸே பாடியிருக்கிறார். யேசுதாஸ் பாடிய ‘கோரி தேரா’ போன்ற எண்ணற்ற வெற்றிப் பாடல்களை ரவீந்திரன் ஜெயினின் இசையில் கேட்பது தனி அனுபவம். ஒருமுறை ரவீந்திரன் ஜெயினிடம் ஒரு பத்திரிகையாளர் கேட்டார், ‘கண் பார்வையில்லாத உங்களுக்கு பார்வை வந்தால் யாரை முதலில் பார்க்க விரும்புவீர்கள்?’ ரவீந்திரன் ஜெயின் வழக்கமான தன் புன்னகை இழையோட பதிலளித்தார்.

‘யேசுதாஸை பார்க்கவே விரும்புவேன்! அரூபத்திலிருந்து இசையை கொண்டுவந்த என் ரூப லட்சணங்களை உலகமறியச் செய்தவர் அவரல்லவா? அவரில்லாமல் நானில்லையே. என்னை அவர் பிரதிபலித்திருக்கிறார். சுருதிகளாகவும் ஸ்வரங்களாகவும் மட்டுமே ரூபங்களை அறிந்துவந்த எனக்கு அவரைத் தாண்டி யாரை முதலில் பார்க்கப் பிடிக்கும்’ என்றாராம். தேனிசை செல்லப்பாவும் அத்தகைய சிறப்புடையவரே.

இன்றைக்கு உலகமெங்கும் புலம்பெயர்ந்திருக்கும் தமிழர்கள் அவருடைய குரலிலிருந்து தங்களைப் பார்க்கிறார்கள். மரபார்ந்த தங்கள் இசையின் மூல வடிவை நோக்கிய அவர்களின் தேடலுக்கு தேனிசை செல்லப்பா உதவி வருகிறார். இதுதான் தமிழனின் இசை என்பதுபோல எண்பது வயதிலும் அந்தக் குரல் போராளிகளுக்காக ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது. எங்கு பாடினாலும் தனக்கு எவ்வளவு தருவீர்கள், என்று பெரியாரே அவரைக் கேட்கச் சொல்லியிருக்கிறார். ஆனாலும், அவர் எந்த இடத்திலும் பணத்துக்காக பாடுவதில்லை. இனத்துக்காகவே பாடிவருகிறார். போதாமையை போக்கக் கிளம்பிய நானும் சரவணனும் செல்லப்பா போன்றோருக்குக் கிடைக்காத அங்கீகாரத்தைத் தேடித்தான் இப்போதும் அலைந்துகொண்டிருக்கிறோம்.
 

(பேசலாம்...)

kungumam.co.i

Link to comment
Share on other sites

 
 

ஊஞ்சல் தேநீர்

 
 

யுகபாரதி - 9

‘நாயகன்’, ‘தளபதி’ ஆகிய திரைப்படங்கள் மூலம் மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்ற மணிரத்னம், ‘பம்பாய்’ திரைப்படத்தை அடுத்து இயக்கிய திரைப்படம் ‘இருவர்.’ திராவிட அரசியலை முன்வைத்து எடுப்பதாகச் சொல்லப்பட்ட ‘இருவர்’ திரைப்படம் எப்படி இருக்குமோ? என்னும் ஆவலை எல்லோருமே கொண்டிருந்தார்கள். பேசிப் பேசியே வளர்ந்த திராவிட இயக்கத்தை ஒரு வரிக்குமேல் வசனங்களை அனுமதிக்காத மணிரத்னம் எடுக்கிறார் என்றால் சாதாரண விஷயமா என்ன?
18.jpg
‘இருவர்’ திரைப்படத்தைப் பொறுத்தவரை அது ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தே விசேஷ கவனிப்புக்கு உள்ளானது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக பொது வெளியிலும் அரசியல் களத்திலும் தவிர்க்க முடியாத சக்திகளாக வளர்ந்திருந்த இருவரைப் பற்றிய படம் என்பதால், அனைத்துத் தரப்பு மக்களும் அத்திரைப்படத்தை கூர்ந்து கவனித்து அதன் வருகைக்காக காத்துக்கிடந்தார்கள். படம் வெளிவந்த அன்று அதை உடனே பார்த்துவிட கூடிய கூட்டம், அதற்குமுன் வெளிவந்த அவருடைய எந்தப் படங்களுக்கும் நிகழாத ஆச்சர்யம்.

இரண்டு பெரும் ஆளுமைகளை சித்திரிக்கும் படம் என்பதால் அரசியல் நோக்கர்களும் திரை விமர்சகர்களும்கூட இருவரை மற்ற படங்களைப்போல எளிதாகக் கடந்துவிட எண்ணவில்லை. ‘இருவர்’ என்று தலைப்பிடப்பட்டிருப்பதால் அது பெரியார், அண்ணா என்ற இருவரா? இல்லை கருணாநிதி, எம்.ஜி.ஆர் என்ற இருவரா? என்னும் சந்தேகமிருந்தது. ஒருவழியாக படமும் வெளிவந்து பலராலும் பார்க்கப்பட்டது. ஆனால், அதீதமாக எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களுக்கு என்ன கதி நேருமோ அதுதான் ‘இருவர்’ திரைப்படத்திற்கும் நேர்ந்தது.

இரண்டு பெரும் ஆளுமைகளில் யாரைப் பிரதானப்படுத்துவது என்னும் சிக்கலில் இரண்டு பேரையுமே மணிரத்னத்தால் சரியாக வடிவமைக்க முடியவில்லை. அதைவிட, அத்திரைப்படம் திராவிட அரசியலைத் துளிகூட சொல்லவில்லை. இரண்டு ஆளுமைகளின் போட்டிகளையும் பொறாமைகளையும் திராவிட அரசியலாக அவர் புரிந்துகொண்டவிதம் சர்ச்சையை மட்டுமே கிளப்பியது. நானறிய ஒரு திரைப்பட இயக்குநர், அதற்கு முன்பும் சரி அதற்குப் பின்பும் சரி அது மாதிரியான கண்டனங்களை எதிர்கொள்ளவில்லை எனலாம்.

திராவிட இயக்க வரலாறு யாருடைய கண்களால் பார்க்கப்பட வேண்டும் என்பதிலும் யாருடைய உதடுகளால் சொல்லப்பட வேண்டுமென்பதிலும் மணிரத்னம் தோல்வியைத் தழுவினார். நான் தோல்வி என்று சொல்வது வணிகரீதியிலான தோல்வியை அல்ல. ‘இருவர்’ திரைப்படத்தை விமர்சித்து பத்திரிகைகள் பலவும் பத்திகளை வெளியிட்டன. திராவிட சிந்தனையில் ஊறித் திளைத்த கழகத் தோழர்கள் அத்திரைப்படத்தை முற்று முழுதாக நிராகரித்தனர்.

இன்னும் சிலர் ஒருபடி மேலேபோய் மணிரத்னத்தின் சிந்தனைகள் முழுக்கவும் திராவிட சமூகத்திற்கு எதிரானவை என வாதிட்டார்கள். மணிரத்னத்திற்கு எதற்கிந்த வேலை என்றும், அரசியல் போதாமையோடு திராவிட அரசியலைப் பார்த்திருக்கிறார் என்றும் கூக்குரலிட்டார்கள். அதற்குமுன் அவர் வாங்கிக் குவித்திருந்த பாராட்டுகள் மறுபரிசீலனைக்கு உள்ளாகின. அச்சமயத்தில் நான், ‘ராஜரிஷி’ என்னும் அரசியல் வார ஏட்டில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருந்தேன்.

எல்லா மட்டத்திலும் ‘இருவர்’ திரைப்படத்திற்கு எழுந்த எதிர்ப்பை ஒட்டி, ‘ராஜரிஷி’ பத்திரிகையிலும் ‘இருவர்’ குறித்து எழுதவேண்டும் என ஆசிரியர் துரை விரும்பினார். பத்திரிகையையோ சினிமாவையோ சாராத ஒருவர் அத்திரைப்படம் குறித்து எழுதினால் சிறப்பாக இருக்கும் என அவர் எண்ணியதற்கு ஏற்ப, மக்கள் கவிஞராக அறியப்பட்ட ‘இன்குலாப்பிடம் கட்டுரை கேளுங்களேன்’ என்றார். திராவிட அரசியல் மீது மாற்றுக் கருத்து உள்ளவர்கள் எப்படி அத்திரைப்படத்தை அணுகுகிறார்கள் என்பதை அறியும் திட்டமாகவும் அது இருந்தது.

நக்சல்பாரி இயக்க செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த இன்குலாப், அதற்கு முன் ‘தராசு’ இதழிலும் ‘உங்கள் விசிட்டர்’ இதழிலும் திரைப்படங்கள் குறித்து எழுதிய கட்டுரைகள் முக்கியமானவை. இன்குலாப்பை சந்தித்து கட்டுரை வாங்கிவர வேண்டிய பொறுப்பு எனக்களிக்கப்பட்டது. இன்குலாப்பின் கவிதைகள் மீதும் இன்குலாப் என்ற கவிஞர் மீதும் நான் கொண்டிருந்த அளவில்லாத அன்பின் பரிசாகவே அவ்வாய்ப்பைப் பெற்றதாகக் கருதுகிறேன். அப்போது இன்குலாப் புதுக்கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

இன்குலாப் என்ற கவிஞர், எந்த நேரத்திலும் கொண்ட கொள்கையிலிருந்து வழுவாதவர். சொல்லுக்கும் செயலுக்கும் முனையளவு கூட வித்தியாசமில்லாதவர். எளிய மக்களின் துயரங்களை எழுத்துக்கள் வாயிலாகவும் களப் போராட்டங்கள் வாயிலாகவும் எதிர்க்க வேண்டுமென்னும் எண்ணமுடையவர். அரசுக்கும் அதிகார மையத்திற்கும் சிம்ம சொப்பனமாக விளங்கியவர். எத்தனையோ நள்ளிரவுக் கைதுகளால் அவரும் அவருடைய குடும்ப உறுப்பினர்களும் ஆளும் வர்க்கத்தால் அச்சுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

பாரதிக்குப் பிறகு கவிதையின் தீவிரத்தை சமூக வெளிக்குக் கடத்தியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அதுவரை அவரை நான் நேரில் சந்தித்ததில்லை. ஆனால், அவரைப் பற்றி என்னுடைய பள்ளிப் பருவத்திலிருந்து தொடர்ச்சியாகக் கேட்டு வந்திருக்கிறேன். அவருடைய ‘வெள்ளை இருட்டு’ம், ‘சூரியனைச் சுமப்பவர்களு’ம் அவரை மகாகவி என்றே சொல்ல வைத்தன. தமிழர்கள் தங்கள் பெருமைக்குரிய அரசனாக சொல்லிக் கொள்ளும் ராஜராஜ சோழனை அவர்போல தோலுரித்துக் காட்டியவர்கள் எவருமில்லை.

சோழ ஆட்சியில் மக்கள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்பதையும் அதைக் கொண்டாடத் துடிக்கும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி எத்தகையது என்பதையும் எந்த தாட்சண்யமும் இல்லாமல் அவர் எழுதியிருக்கிறார். தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தஞ்சாவூரில் ராஜராஜசோழனுக்கு சிலை நிறுவும் பணி தொடங்கப்பட்ட சூழலில் தோழர் அ.மார்க்ஸ் போன்றோர் கவிஞர் இன்குலாப்பின் ‘ராஜராஜேஸ்வரியம்’ கவிதையை துண்டுப் பிரசுரமாக வெளியிட்டார்கள். சோழ ஆட்சியின் கேடுகளையும் எளிய மக்கள் அவ்வாட்சியில் எவ்வாறெல்லாம் துன்பப்பட்டார்கள் என்பதையும் மேடைதோறும் விளக்கினார்கள்.

அரைக்கால் டவுசரணிந்த பள்ளி மாணவனாக இருந்த நான், அவர்கள் கருத்துக்களை உள்வாங்கும் தி ராணியைப் பெற்றிருக்கவில்லை. ஏதோ சொல்கிறார்கள், எதற்கோ எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றுமட்டுமே புரிந்துகொண்டேன். ஆனால், அதற்குச் சான்றாக அவர்கள் வெளியிட்ட கவிதையை எழுதியவர் இன்குலாப் என்பதையும் அவர் வீரம்மிக்க கவிதைக்காரர் என்பதையும் விளங்கிக்கொள்ள முடிந்தது. சிறு பொறியாக என்னுள் விழுந்த இன்குலாப் என்னும் பெயர் அதன்பின் தீப்பந்தமாக கொழுந்துவிட்டெரிந்தது.

சமகாலத்தில் ஆவேச நெருப்புடைய கவிஞராக அவரை நான் உணர்ந்திருந்தேன். சமரசங்களுக்கோ சகாயங்களுக்கோ ஆட்படாத இன்குலாப்பும் அவருடைய கவிதைகளும் என்னைப் பற்றிக்கொண்டது அப்படித்தான். அதே காலகட்டத்தில்தான் அவருடைய கவிதை நூல் ஒன்று, சட்டமன்றத்தில் சர்ச்சையைக் கிளப்பி பாடத் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்க அவையில், மக்கள் கவிஞராக அறியப்படும் ஒருவருடைய கவிதை நூலை பாடத் திட்டத்திலிருந்து நீக்கிய காரியம் விநோதமாயிருந்தது.

எல்லா நினைவுகளையும் உட்செறித்துக்கொண்டு 1998ம் ஆண்டு ஒரு மதிய வேளையில், புதுக்கல்லூரிக்குப் போயிருந்தேன், இன்குலாப்பை சந்தித்து, ‘இருவர்’ திரைப்படம் குறித்து எழுதச் சொல்வதற்காக. அதுவரை அரசுக்கு சவால்விடக் கூடிய ஒரு கவிஞர் எப்படி இருப்பாரென்று நான் கற்பனை செய்துவைத்திருந்தேனோ அதற்கு நேர் மாறாக அவர் இருந்தார். மிக முக்கியமாக, ஆவேச நெருப்புடைய இன்குலாப், குழந்தை போலச் சிரித்து என்னை வரவேற்றார்.

புஜபலமிக்கவராக நான் கருதியிருந்ததற்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் பூஞ்சையான தேகத்தோடு அவர் இருந்தார். வார்த்தைக்கு வார்த்தை அன்பும் கனிவும் வெளிப்பட்டன. மதிய வேளை என்பதால் ‘‘உணவு அருந்தினார்களா?’’ என்றுதான் உரையாடலை ஆரம்பித்தார். வந்த விஷயத்தைச் சொல்வதற்கு முன்பாக அவரைப்பற்றி புகழத் தொடங்கியதும் தீட்சண்யம் மிக்க கண்களால் அதை விரும்பாத தொனியை வெளிப்படுத்தினார். ‘சிறுவயது முதலே உங்களை பார்க்கவேண்டும் என்றிருந்தேன். இப்போதுதான் சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது’ என்றதும் மெல்லிய புன்முறுவலால் குழைவாகப் பேசத் தொடங்கினார்.

இவருக்கெல்லாம் கோபமே வராது என்பது போல்தான் அவர் குரலிருந்தது. மெதுவாக நான் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டபின், நானும் ‘இருவர்’ படம் குறித்து கேள்விப்பட்டேன். ஆனாலும், இன்னும் அப்படத்தைப் பார்க்கவில்லை. பார்த்ததற்குப் பின்புதான் கருத்து சொல்ல முடியும் என்றார். இந்த வாரம் முழுக்க வெளியூர் பயணமிருக்கிறது. எனவே, ‘இருவர்’ திரைப்படம் குறித்து தற்போது எழுதும் வாய்ப்பில்லையே. தர்மபுரியை அடுத்த சிற்றூரில் கூட்டமிருப்பதால் உடனடியாக படத்தைப் பார்த்து, கட்டுரை எழுதித்தர இயலாதே என்று வருத்தப்பட்டார்.

இல்லை, நீங்கள் எழுதியே ஆகவேண்டும் என அடம்பிடித்ததற்கு, ‘கட்டுரையைவிட களப்பணி முக்கியமில்லையா?’ என்றார். சுளீரென்றிருந்தது. கவிஞனுடைய சமூகச் செயல்பாடு எழுத்து மட்டுமல்லை. அதைத்தாண்டியும் அவன் செய்ய வேண்டியவை நிறைய உள்ளன என்பதை இதைவிட எப்படிச் சொல்ல முடியும்? அதன்பின் பல சந்தர்ப்பங்களில் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தன்னை பிரதானப்படுத்துவதைவிட தன்னுடைய படைப்புகள் பிரதானப்பட வேண்டுமென அவர் விரும்பினார். தனக்குக் கிடைத்திருக்கும் பெயரையோ புகழையோ அவர் எந்த நேரத்திலும் சொந்தங் கொண்டாட விரும்பியதில்லை. ‘சாட்சி சொல்ல ஒரு மரம்’ என்ற நூலில் ஆய்வியல் அறிஞர் எஸ்.வி.ராஜதுரை சொல்வதைப்போல நெஞ்சுரம் மிக்க இன்குலாப்பின் புன்னகை வெறும் புன்னகையல்ல, அவருக்குப் பின்னே எழுத வந்த அத்தனைபேருக்குமான மோகனப்புன்னகை.

விசாரணை என்னும் பேரில் தன்னை கைதுசெய்து, காவல்துறை படுத்தியபாட்டை அக்கட்டுரையில் விவரித்திருக்கும் எஸ்.வி.ஆர்., இதே மாதிரியான அடக்குமுறைக்கும் நெருக்கடிக்கும் ஆளான இன்குலாப்பின் கண்களிலிருந்தும் புன்னகையிலிருந்தும் சக்தியைப் பெற்றேன், என்கிறார். ஒருமுறை அவரைச் சந்திக்க வீட்டுக்குப் போயிருந்தபோது, இன்குலாப் சப்பாத்திக்கு மாவு பிசைந்து கொண்டிருந்தார் என பேராசிரியர் சரஸ்வதி சொல்லுவார். மனைவிக்கு உதவியாக மாவு பிசைந்து தரக்கூடிய ஒருவர்தான் மகாகவியாகவும் இருக்க முடிந்திருக்கிறது.

மனைவி இரவலாக வாங்கி வந்த அரிசியை காக்கைக்கு வாரி இறைத்த பாரதி மகாகவி என்றால் மனைவிக்கு உதவி புரிய யோசிக்காத இன்குலாப்பும் மகாகவிதான். சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளியில்லாமல் அவர் இயங்க முடிந்ததால்தான் கீழக்கரை சாகுல் ஹமீது மக்கள் கவிஞராக போற்றப்படுகிறார். இடதுசாரி தமிழ்த் தேசியம் என்பதில் இறுதிவரை இன்குலாப் கவனமாயிருந்தார்.

இந்தி எதிர்ப்பு போராட்ட காலத்தில் மாணவராக இருந்த இன்குலாப், அதில் ஈடுபட்டு சிறைவாழ்வை மேற்கொண்டிருந்தாலும் கால ஓட்டத்தில் தன்னை ஒரு மார்க்சிய கவியாகவே அறிவித்துக்கொண்டார். ஈழப் போராட்டம் உச்சம்பெற்றிருந்த வேளையில், தனக்கு வழங்கப்பட்ட கலைமாமணி விருதை ஏற்க மனமில்லையென்று திருப்பி அனுப்பினார். விருது பெறுவதற்காகவே ஆட்சியையும் ஆட்சியாளர்களையும் புகழக்கூடிய எழுத்தாளர்கள் மிகுந்துவிட்ட இதே சமூகத்தில்தான் விருதைத் திருப்பி அனுப்பும் இன்குலாப்பும் வாழ்ந்தார்.
 

(பேசலாம்...)

kungumam.co

Link to comment
Share on other sites

 

ஊஞ்சல் தேநீர்

 

யுகபாரதி - 10

இன்குலாப், சகல கட்டுகளையும் அறுத்தெறியும் துணிவைக் கொண்டிருந்தார். தமிழ்க் கவிஞர்களில் பாரதிக்குப் பிறகு அவருக்கு மட்டுமே சர்வதேசியப் பார்வையிருந்தது. ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் விடுதலைக்காக அவர் கடைசி வரை பாடிக்கொண்டே இருந்தார். ‘ஒளவை’, ‘குறிஞ்சிப்பாட்டு’, ‘துடி’, ‘மணிமேகலை’ போன்ற நாடக ஆக்கங்களிலும் அவர் மக்களின் குரலையே வெளிப்படுத்தினார். இருக்க இடமில்லாமல் உலகமெங்கும் புலம்பெயர்ந்து கொண்டிருந்த ஈழத் தமிழர்களின் அவலங்களை அவர் அவ்வப்போது சொல்லிக் கொண்டிருந்தார்.
12.jpg
அவருடைய ‘மனுசங்கடா நாங்க மனுசங்கடா...’ என்னும் பாடலை முழங்காத கட்சி மேடைகளே இல்லை. நாட்டுப்புறப் பாடல் ஆய்வாளரும் பேராசிரியருமான கே.ஏ.குணசேகரன் அப்பாடலை மேடையில் பாடும்போது உணர்வால் மொத்தக் கூட்டமும் உடைந்து அழத்தொடங்கும். வெண்மணி தியாகிகளுக்கான தேசிய கீதம் போல இன்றுவரை இசைக்கப்படுகிற அப்பாடலின் வீர்யத்தை விஞ்சக் கூடிய மற்றொரு பாடலை வேறு யாருமே எழுதவில்லை.

சத்தியத்தின் ஒளியில் மக்களைக் காட்டிய இன்குலாப்பைப் போல கொஞ்சம் முயற்சி செய்தால் எழுதி விடலாம். ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் அவர் வாழ்வை இன்னொருவர் வாழ முடியாது. அவருடைய வீடு, ஒரு பேராசிரியரின் வீடு போல இருக்காது. வசதி குறைந்த நிலையில்தான் அவர் வாழ்ந்து வந்தார். மேல் தளத்தில் குடியிருந்த அவர், எத்தனையோ சமயங்களில் விருந்தினரை அமர வைத்துவிட்டு கீழ்த் தளத்திலுள்ள தண்ணீரை சுமந்துவர ஓடியிருக்கிறார்.

‘ஏன் தோழர், உங்கள் வருமானத்திற்கு இதைவிட நல்ல வீட்டில் வசிக்கலாமே?’ என்றால் ‘‘இதுவே போதும்தானே’’ என்பார். ‘‘எளிய வாழ்வை வாழ பழகிக்கொள்வது நல்லதுதானே!’’ என்பார். தவிர, ‘‘நான் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம். உள்ளே போனால் மீண்டும் வருவேனோ மாட்டேனோ தெரியவில்லை. அப்படியிருக்கையில் என் பிள்ளைகள் பெரிய வீட்டில் வசித்து பழகிவிட்டால் நானில்லாத சமயத்தில் என்ன செய்வார்கள்? என் ஒருத்தனின் வருமானத்தில் நடந்து வரும் என் வீடு, நானில்லாத போதிலும் வசிக்கத்தக்கது இதுதான் என்பதால் இங்கேயே இருக்கிறோம்...’’ என்பார்.

வாழ்வை தெளிந்த புரிதலோடு வைத்திருந்த இன்குலாப்பை வியந்துகொண்டே இருக்கலாம். அச்சப்படத்தக்க ஆபத்து நிறைந்த தருணங்கள் அவர் வாழ்வில் நிகழ்ந்துகொண்டே இருந்தன. என்றாலும், அவர் எல்லாவற்றையும் எதிர்கொள்ளத்  தயாராயிருந்தார். தலித் அரசியல், பெண்ணியம் குறித்த அவருடைய பார்வைகள் காத்திரமான தளத்தில் வைத்து பேசப்பட வேண்டியவை. அவர் ஒவ்வொரு கட்டத்திலும், தான் சார்ந்திருந்த இயக்கத் தோழர்களால் விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கிறார்.

அதே சமயம், அந்த விமர்சனங்களை நேர்மையோடு ஏற்று எதிர்வினையும் ஆற்றியிருக்கிறார். பொருட்படுத்தத்தக்க விமர்சனமாக இல்லாதபட்சத்தில் அதை புன்னகையால் கடந்து போகவும் அவரால் முடிந்திருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு என்னுடைய நண்பர் ரவிக்குமாரின் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இன்குலாப்பிற்கும் ரவியைத் தெரியும். என்றாலும், அவர் அம்மாவை அதற்கு முன் பார்த்தது கூட இல்லை.

அம்மாவின் உடல்நிலை மிக மோசமான நிலைக்கு போய்க்கொண்டிருந்தது. ஒருகட்டத்தில் அறுவை சிகிச்சையைத் தவிர வேறு வழியே இல்லையென்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள். அம்மாவோ அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொள்ள மறுக்கிறார். எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் எங்களால் அம்மாவை சம்மதிக்க வைக்கமுடியவில்லை. என்ன செய்வதென்றும் விளங்கவில்லை.
 
அந்த சந்தர்ப்பத்தில்தான் இன்குலாப் மருத்துவமனைக்கு வருவதாக தொலைபேசினார். அம்மாவைப் பார்க்க இன்குலாப் வருவது மகிழ்ச்சிதான் என்றாலும், சூழல் சரியில்லையே என ரவி, தயங்கியும் தவிர்த்தும்கூட இன்குலாப் மருத்துவமனைக்கு வந்துவிட்டார். நான் உட்பட எல்லாரையும் வெளியே இருக்கும்படி சொல்லிவிட்டு அம்மாவுடன் அரைமணி நேரத்திற்கு மேலாக பேசிவிட்டு வெளியே வந்தார். அவர் என்ன பேசினார் என்று எங்களுக்குத் தெரியவில்லை.

ஆனால், அறுவை சிகிச்சைக்கு அம்மா ஒப்புக்கொண்டார். எங்களுக்கோ ஏதோ மாயம் நடந்தது போலிருந்தது. இத்தனை நாட்களாக மறுத்து வந்த அம்மாவை இன்குலாப் எப்படி சம்மதிக்க வைத்தார் என்பது ஆச்சர்யமாயிருந்தது. ‘என்ன தோழர், அம்மா திடீரென்று உங்களிடம் பேசியதும் சம்மதம் சொல்கிறார். அப்படி என்ன சொன்னீர்கள்?’ என்று கேட்டோம். ‘‘நான் எதையும் சொல்லவில்லை. எனக்கும் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள். பாருங்கள், இரண்டு ஆண்டுகளாக எந்த தொந்தரவும் இல்லாமல் நலமாக இருக்கிறேன் என்று தழும்பைக் காட்டினேன், அவ்வளவுதான்!’’ என்றார்.

இன்குலாப் ஒருவர்தான், தன்னுடைய தழும்பிலிருந்து இன்னொருவருக்குத் தைரியமூட்டுபவர். அறிமுகமில்லாதவர்கள் அல்லல்படுவதையே பொறுத்துக்கொள்ள முடியாத அவர், அருகில் இருப்பவர் மீது அன்பு பாராட்டுவதில் என்ன வியப்பு இருக்கிறது? எழுத்திலும் மேடையிலும் அவர் எப்படியோ அப்படித்தான் கல்லூரியிலும் நடந்துகொண்டிருக்கிறார். வழக்கமான பேராசிரிய முகத்தை அவர் பொருத்திக் கொள்வதில்லை. மாணவர்கள் தன்னை பேராசிரியாகப் பார்ப்பதைவிட சகோதரனாக, சகதோழனாக பார்ப்பதையே விரும்பியிருக்கிறார்.

மாணவர்களும் அவரை அவ்விதமே சுவீகரித்தார்கள். ‘மழைவந்து / நனைப்பதற்குள் / பார்க்க வேண்டும் / அவள் போட்ட கோலம்’ என்று ஒரு மாணவன் கவிதை எழுத, இன்னொரு மாணவன் அதே கவிதையை வேறு ஒரு மாதிரி எழுதினான். இரண்டாவதாக எழுதியவனுக்கு அக்கவிதையை இன்குலாப்பிடம் காட்ட தயக்கம். பெண்ணுரிமையைப் பேசக்கூடிய ஒரு பேராசிரியரிடம் அக்கவிதையைக் காட்டினால் என்ன நினைப்பாரோ என்னும் தயக்கம்தான்.

‘‘தயங்காமல் நீ எழுதியதைக் காட்டு...’’ என்கிறார் இன்குலாப். ‘மழைவந்து / நனைத்த பின் / பார்க்க வேண்டும் / அவள் கோலம்’ என்கிறான் அவன். ‘இதுவும் சிறப்புதானே, இதற்கு ஏன் தயங்கினாய்?’ என்று அவனை சகஜமாக்கிய செய்தியை அதே கல்லூரியில் மாணவனாக இருந்த ஹாஜாகனி சொல்லக் கேட்டிருக்கிறேன். ‘அரும்பு பருவத்தில் அப்படித்தான் தோன்றும். காலம் செல்லச் செல்ல எல்லாம் மாறிவிடும்’ என்றிருக்கிறார். அதோடு ‘பெண்ணை உடலாக மட்டுமே பார்க்கக் கூடாது’ எனவும் சொல்லியிருக்கிறார்.

கருத்து ரீதியான வேற்றுமைகளையும் கனிந்த அன்பினால் வெல்ல முடியும் என்றே அவர் நம்பினார். வயதில் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய தடுமாற்றங்களை எப்படி கையாள்வது என அவருக்குத் தெரிந்திருக்கிறது. வகுப்பறைகளில் பாடங்களைத் தாண்டியும் மாணவர்களுக்குச் சொல்லித்தர அவரிடம் ஏராளமிருந்தன. தனக்கு சரியென்று பட்டதை இன்குலாப் எந்த மேடையிலும் சொல்லத் தயங்கியதில்லை. பின் விளைவுகள் குறித்தோ தனக்கு நேரக்கூடிய பாதிப்புகள் குறித்தோ அவர் ஒருபோதும் அஞ்சியதில்லை.

இன்னுமே சொல்வதென்றால், அவர் தன்னுடைய கருத்துக்களில் தவறு நேர்ந்துவிட்டால் அதை திருத்திக் கொள்ளவும் மன்னிப்புக் கோரவும் தவறியதில்லை. ‘தலித்துகளைப் பற்றி தலித்துகளே எழுதுவார்கள். நீங்கள் எழுத வேண்டியதில்லை’ என்று சொன்னபோது, ‘ஆம், சரிதான்’ என்றவர் அவர். ஈழத்தில் அமைதி பேச்சு வார்த்தை அமுலில் இருந்தபோது விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் சந்திக்க விரும்பிய தமிழகக் கவிஞர் இன்குலாப்பே என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இன்குலாப்பை கட்டியணைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டபோது ‘‘ஒரு துப்பாக்கி, ஒரு பேனா’’ என்று பிரபாகரன் சொல்லியதை உடனிருந்த ஓவியர் மருது சொல்கையில் கண்களில் நீர் கட்டிக் கொள்கிறது.

‘‘பாரதி, இந்த அரசாங்கம், கவிஞர்களைக் கண்ணியப்படுத்தும். வாழ்ந்து பிணமானால், உன் போன்றோரை, பிணமாக வாழ்ந்தால், என் போன்றோரை!’’ என்று ஒரு கவியரங்கில் இன்குலாப் கவிதை வாசித்தார். பேரமைதி நிலவிய அந்த அரங்கம் அதன்பின் கைதட்டல்களால் இன்குலாப்பை கவுரவித்த காட்சியை இப்போது நினைத்தாலும் பெருமையாயிருக்கிறது. அழகியல் உணர்வுகளைவிட ஆவேசம் பெருகிவழியும் அவருடைய கவிதைகளை, எழுத்தை வணிகமாகப் பார்க்கிறவர்களால் ஏற்றுக்கொள்ள இயலாது.

‘‘இன்குலாப்பின் ஒருவரி கூட என்னை ஈர்க்கவில்லை’’ என்று எழுத்தாளர் ஜெயமோகன் எழுதப் போக, ‘‘ஜெயமோகனுக்குப் பிடிக்குமாறு எழுதினால் அது எப்படி என்னுடைய எழுத்தாக இருக்கும்?’’ என்று இன்குலாப் கேட்டார். தன்னுடைய எழுத்து எதை நோக்கி அமைய வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட எழுத்தாளனே தீர்மானிக்க வேண்டும். தான் வகுத்து வைத்திருக்கும் சட்டகத்திற்குள் இன்னாருடைய எழுத்து பொருந்தவில்லை என்பதுபோன்ற விமர்சனங்கள் புறந்தள்ளப்பட வேண்டியவை.

எத்தனையோ மேடைகளில் இன்குலாப்புடன் இணைந்து அமர்ந்திருக்கிறேன். பள்ளி பருவத்தில் எனக்குள் வந்த அவர், இதயத்திலிருந்து ஒருமுறைகூட வெளியே செல்லவில்லை. பழகுவதிலும் பாராட்டுவதிலும் அவரை மிஞ்ச முடியாது. கீழக்கரை தர்காவில், பேய் ஓட்டுவதற்கு பெண்களை குச்சியால் அடித்த கொடுமையை எதிர்த்து, தன் முதல் கவிதையை எழுதத் தொடங்கிய இன்குலாப்பை, திரும்பத் திரும்ப இந்த அரசும் அதிகார மையங்களும் அடித்துக்கொண்டே இருந்தன.

ஒருநாள்கூட நிம்மதியான வாழ்வை அவர் வாழ்ந்து விடக்கூடாதென்று துரத்திக்கொண்டே இருந்தன. ஊரப்பாக்கத்தில் உள் ஒடுங்கிய பகுதியில் நோய்மையினால் காலை இழந்த இன்குலாப், அப்போதும் மக்களை நோக்கியே ஓடிக் கொண்டிருந்தார். சிறுகதை, கவிதை , கட்டுரை, மேடை சொற்பொழிவு, நாடகம் என எல்லாவற்றிலும் மண்ணையும் மக்களையும் சிந்தித்தவராகவே இருந்தார்.

கடுமையான நோயின் வாதையிலும் மனிதத்தின் பாதைகளில் அவர் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு புல்லையும் நேசிக்கத் தெரிந்த அவர் இதயம், தனக்காக எதையுமே தேடவில்லை, சேர்க்கவில்லை. பட்டமோ பதவியோ விருதுகளோ முக்கியமில்லை. இடையறாமல் மக்களுக்குப் பணியாற்றுவதே தன் கடமை எனச் செயலாற்றினார். கவிதை எழுதக்கூடியவர்கள் தங்களுக்குள் யார் பெரியவர் என்னும் போட்டியில் இறங்குகிற போதெல்லாம் ‘அந்நிய சக்திகள் மக்களைப் போட்டிபோட்டுக் கொல்வதை எண்ணாமல் எதற்கு நமக்குள் போட்டி’யென்றே எச்சரித்திருக்கிறார்.

புரட்சி ஒன்றை மட்டுமே நோக்கி போய்க் கொண்டிருந்த அவர், இப்போது பூமியை விட்டே போய்விட்டார். இன்னும் அவருடைய கனல்கக்கும் பேச்சைக் கேட்கும் ஆவலில், பாட்டாளி வர்க்கத் தோழர்கள் அவர் சவப்பெட்டியைச் சுற்றிக் குழுமியிருக்கிறார்கள். இனி அவர் பேசப்போவதில்லை. அவரைப்பற்றி நாம்தான் பேசவேண்டும். எல்லா முற்போக்கு சக்திளோடும் உறவு பாராட்டிய அவர், வாழுங் காலத்திலேயே தன்னை வலுவாக நிறுவியவர். மக்களை ஏமாற்றும் அரசியல் சக்திகளை அண்டிப்பிழைக்கும் அநாகரிகத்தை அவர் ஒருநாளும் நெருங்கியதில்லை.

விருது பட்டியலில் இருந்து தன்னையும் தன்பெயரையும் தாமாகவே விலக்கிக்கொண்டவர். இன்குலாப், ஜிந்தாபாத் என்றால் போராடுவோம், வெற்றிபெறுவோம் என்று அர்த்தம். இன்குலாப் போராடினார். நாம் வெற்றி பெறுவோம். அல்லது இன்குலாப்புகள் போராடினால் எளிய மனிதர்கள் வெற்றி பெறுவார்கள். இன்குலாப்பின் மரணச்செய்தி செவியை எட்டியபோது இதயமே தூர்ந்துவிடும் போலிருந்தது. எளிய வாழ்விலிருந்து ஏகாதிபத்தியத்தை எதிர்த்த ஒரு மகாகவி, இனி ஒருபோதும் வரப்போவதில்லை.

இனிமேல் யார் எழுதித் தருவார்கள், துண்டுப் பிரசுரங்களில் மக்களுக்கான முழக்கங்களை? இன்குலாப், இருக்கும்வரை மட்டுமல்ல, இறந்த பிறகும் ‘பிறருக்கே’, தான் என்பதை சொல்லும் விதமாக தன்னுடலை மருத்துவ மாணவர்களுக்குத் தரச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். வீர வணக்கத்துக்குரிய ஒரு மகாகவியை தமிழ்ச் சமூகம் இழந்து நிற்கிறது. தர்மபுரியை அடுத்த சிற்றூரில் கூட்டமிருப்பதால் ‘இருவர்’ திரைப்படம் குறித்த கட்டுரையை எழுதித்தர வாய்ப்பில்லை என்றவரின் இரங்கல் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

இப்போது என் சிந்தையில் இருவராக பாரதியும் இன்குலாப்பும் வந்து வந்து போகிறார்கள். விடாது பெய்துகொண்டிருந்த பெருமழை, பயங்கர மழையாக கொட்டத் தொடங்குகிறது. இன்குலாப் உயிரோடு இருந்திருந்தால் என்ன சொல்லுவார்? தோழர்களே, மழையில் நனையாதீர்கள். நாளை போராட்டமிருக்கிறது!
 

(பேசலாம்...)

kungumam.co.

Link to comment
Share on other sites

 

ஊஞ்சல் தேநீர்

யுகபாரதி - 11

அவர் அந்தப் பாத்திரத்திற்குப் பொருந்துவாரா... என்னும் தயக்கம், என்னுள்பட எல்லோருக்கும் இருந்தது. தேசிய விருது பெறத்தக்க ஒரு நடிகர்மீது ஆரம்பத்தில் இப்படியொரு தயக்கம் இருந்தது என்பது இன்றைக்கு நகைச்சுவையாகப் பார்க்கப்படலாம். ஆனால், அதுதான் உண்மை. நடிகர் வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகளில் அவ்வப்போது துண்டு பாத்திரங்களில் தலைகாட்டிக் கொண்டிருந்த ஒருவர், படம் நெடுக வரக்கூடிய பாத்திரத்திற்குப் பொருந்துவார் என எதை வைத்துச் சொல்லமுடியும்?
4.jpg
‘மைனா’ திரைப்படத்தால் நிகழ்ந்த பல ஆச்சர்யங்களில் ஒன்றுதான், தம்பி ராமையாவும். அதுவரை அவருக்குள்ளிருந்த நடிகன் வெளிப்பட வாய்ப்பில்லாமல் இருந்தது. ‘மனுநீதி’, ‘இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’ ஆகிய திரைப்படங்களின் இயக்குநராக மட்டுமே அறியப்பட்டிருந்த தம்பி ராமையா, ‘மைனா’வின் பெரு வெற்றிக்குப் பின் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக மாறியிருக்கிறார்.

‘மைனா’ திரைப்படம் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமல்ல. பட்ஜெட்டே இல்லாமல் எடுக்கப்பட்ட படம். அதாவது, பணமே இல்லாமல் எடுக்கப்பட்ட படமென்றும் சொல்லலாம். காலம் தனக்கு வழங்கிய ஐந்து வாய்ப்புகளையும் சரியாகப் பயன்படுத்த விரும்பிய பிரபு சாலமன், ஐந்து முறையும் வெற்றியை நூலிழையில் தவற விட்டிருந்தார். ஆக்கத்திலும் தொழில்நுட்பத்திலும் மிகச்சிறப்பாக இருந்த அவருடைய திரைப்படங்கள் ஏன் ஐந்துமுறையும் பெரிய கவனத்தைப் பெறவில்லை என்பதை போகிறபோக்கில் புரிந்துகொள்ள இயலாது.
4a.jpg
ஏதோ ஒருகுறை. அந்தக் குறையை எப்படி நிவர்த்தி செய்வது என அவருமே அறிந்திருக்கவில்லை. கலைப்படைப்புகளிலுள்ள சுவாரஸ்யமே அதுதான். படைத்தவனை பார்வையாளனும், பார்வையாளனைப் படைப்பாளனும் நேர்க்கோட்டில் சந்தித்து திருப்தியுறுவது அவ்வளவு எளிதல்ல. பிரபு சாலமன் உழைக்கத் தயங்காதவர். எதையும் நம்பிக்கையோடு எதிர்கொள்ளக் கூடியவரும்கூட. ஒரு தோல்வியில் கிடைக்கும் பாடங்களை அடுத்த படைப்புகளின் வாயிலாக சரிசெய்ய எண்ணுபவர்.

நானறிந்தவரையில் அவர் சோர்ந்து சுருங்கிய சந்தர்ப்பங்கள் மிகக்குறைவு. இயல்பிலேயே நகைச்சுவை உணர்வு உள்ளவர் என்பதால் தடைகளைக் கடந்துவிடுவதில் அவருக்குச் சிரமமில்லை. ‘கொக்கி’ திரைப்படத்தில் அவருக்குக் கிடைத்த படிப்பினையை ‘லீ’ மற்றும் ‘லாடம்’  திரைப்படங்களில் பயன்படுத்தினார். ஆனாலும், தோல்விதான். என்ன செய்வதென்றே புரியாத நிலையில், சொந்தப்படம் எடுக்கப்போவதாக அவர் எங்களிடம் பகிர்ந்துகொண்டபோது நானும் இமானும் மெளனத்தை மட்டுமே பதிலாகத் தந்தோம்.

தன்னை நம்பக்கூடிய ஒருவர், மெளனங்களை சம்மதம் என்றே அர்த்தப்படுத்திக் கொள்வார். பிரபு சாலமனும் அவ்விதமே அர்த்தப்படுத்திக்கொண்டு ‘மைனா’ திரைப்படத்திற்கான ஆரம்பகட்ட வேலைகளில் ஈடுபடத் தொடங்கினார். கதை முழுமையடையவில்லை. என்றாலும், கதையின் போக்கு ஓரளவு பிடிபட்டிருந்ததால் நடிகர்களை தேர்வு செய்யும் பணி ஆரம்பமானது. கதையின் முக்கிய கதாபாத்திரங்கள் நான்கு. சுருளி, மைனா, சேது, ராமையா.

இந்த நால்வருக்குள் மட்டுமே சுழலும் கதை என்பதால் இந்தப் பாத்திரங்களை ஏற்று நடிக்கும் நடிகர்கள் அனுபவம்மிக்க நடிகர்களாக இருந்தால் தேவலாம் என்று தோன்றியது. அனுபவம்மிக்க நடிகர்கள் என்றால் அவர்கள் கேட்கக்கூடிய சம்பளத்தை தரவேண்டுமே... அதற்கு வழியில்லை. ஆசை ஆகாயத்தை நோக்கியும் எதார்த்தம் தரைக்குக் கீழேயும் இருக்கும்பட்சத்தில் அதை சாமர்த்தியமாக சமாளிப்பதில்தான் வாழ்க்கை இருக்கிறது. ‘நாடோடிகளி’ல் நடித்திருந்த பரணியும் ‘சிந்து சமவெளி’யில் ஒப்பந்தமாகியிருந்த அமலா பாலும் பிரதான பாத்திரங்களில் நடிக்கத் தேர்வு செய்யப்பட்டார்கள்.

இதில், பரணியின் போதாத காலம். அவரால் மைனாவின் நாயகனாக மாற முடியாமல் போனது. ரமேஷ் என்ற இயற்பெயரையுடைய விதார்த் அகஸ்மாத்தாக அந்த வாய்ப்பை பெற்றுக்கொண்டார். ராமையா கதாபாத்திரத்திற்கு ஆதவன் அழைக்கப்பட்டிருந்தார். ஏதேதோ காரணங்களால் அவரும் விலகிக் கொள்ள, அண்ணன் தம்பி ராமையா வந்து சேர்ந்தார். ஐந்துமுறை எண்ணியிருந்த இலக்கை எட்டமுடியாதபோதும் அதே உற்சாகத்தோடு அடுத்த முயற்சியை ஒருவர் தொடங்க முடியுமா?

முடியும் என்ற நம்பிக்கையில் பிரபு சாலமன், ‘மைனா’ திரைப்படத்தின் கதை குறித்தும் பாடல் குறித்தும் பேச அலுவலகத்திற்கு அழைத்திருந்தார். அலுவலகம் அமைந்திருந்த இடம் கண்ணம்மாபேட்டை. கண்ணம்மாபேட்டை என்றதும் சுடுகாடு நினைவுக்கு வருவதால் அலுவலகப் பையன் தொலைபேசியில் அலுவலக முகவரியைக் கேட்பவர்க்கு, தி.நகருக்குப் பக்கத்தில் என்றோ நந்தனத்திற்கு அருகில் என்றோ சொல்லிக் கொண்டிருப்பான்.

ஷாலோம் ஸ்டுடியோஸ் என்று வெள்ளைக் காகிதத்தில் பென்சிலால் கிறுக்கி, கதவில் ஒட்டியிருந்தார்கள். அலுவலகம் விலாசமாயிருந்தது. அங்கேயே சமைத்துக் கொள்ளவும் உதவி இயக்குநர்கள் தங்கிக் கொள்ளவும் ஏற்பாடாகியிருந்தன. பிரபு சாலமனின் பால்ய கால நண்பர் ஜான்மேக்ஸ் நிர்வாகப் பொறுப்புகளை ஏற்றிருந்தார். நிர்வாகம் என்றால் வேறு ஒன்றும் இல்லை. எங்கேயாவது பணத்தைப் புரட்டிவந்து அலுவலக வாடகையைக் கொடுக்கும் பொறுப்பு என்று வைத்துக் கொள்ளலாம்.

முதல்முறை அலுவலகத்திற்கு வந்துவிட்டுப் போகிறவர்கள் நிச்சயம் இந்தப்படம் எடுக்கப்படாது என்று சொல்லும்விதமாக சூழல் இருந்தது. அந்த இக்கட்டான சூழ்நிலையில்தான் தம்பி ராமையாவை பிரபு சாலமன் எனக்கு அறிமுகப்படுத்தினார். அதற்குமுன் அவரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். நேரடி அறிமுகம் இல்லை என்றாலும் அவ்வப்போது அவருடைய முகம் பரிச்சயப்பட்டிருந்தது. சட்டென்று இதயத்தைக் கவ்விக் கொள்ளும் அவருடைய பேச்சும் உடல்மொழியும் யாரையும் முதல் சந்திப்பிலேயே கவரக் கூடியன.

ராமையா பாத்திரத்திற்கு இவரா? என்று எனக்குள்ளிருந்த தயக்கத்தை ஒரு மணிநேர உரையாடலில் இவரைத் தவிர வேறு யாரும் அந்தப் பாத்திரத்திற்கு பொருந்தமாட்டார் எனச் சொல்லவைத்தார். ஒருவிதத்தில் எங்களுக்கு இருந்த தயக்கம், அண்ணன் ராமையாவுக்கும் இருந்ததன் விளைவே அவர் அப்பாத்திரத்தை சிறப்பாகச் செய்ய முனைந்தார் எனவும் கொள்ளலாம். தன்னை நிலைநிறுத்த காலம் அவருக்கு வழங்கிய எத்தனையோ சந்தர்ப்பங்களில் ‘மைனா’ முக்கியமானது; முதன்மையானது.

தீர்க்கமாக இதுதான், இப்படித்தான் நானென்று உலகிற்கு தன்னுடைய முகத்தைக்காட்டி, அந்த முகத்தை பிரகாசப்படுத்துவது இயல்பு. ஆனால், அண்ணன் தம்பி ராமையாவுக்கோ இதற்குமுன் நீங்கள் பார்த்த முகம் என்னுடையதில்லை என சொல்லவேண்டியிருந்தது. தன்னால் வரையப்பட்ட ஓவியத்தின் கோடுகளை, தானே அழித்து, புதிய கோடுகளைப் போடவேண்டிய கட்டாயம் அவருக்கு நேர்ந்தது. சினிமா என்னும் பெருங்கோட்டையை வசப்படுத்த அவர் நிகழ்த்திய தாக்குதலில் எத்தனையோ முறை அவரே காயப்பட்டு கீழே சரிந்த கதைகள் ஒன்றிரண்டு அல்ல.

காரைக்குடியை அடுத்த சிற்றூரில் பிறந்த ஒருவர் தேசிய அளவில் புகழப்பட, பாதைகளை பருவங்களை மட்டும் கடந்தால் போதாது. அதற்கு மேலேயும் கடக்க வேண்டிய காரியங்கள் அநேகமுண்டு. ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ் போன்றோர் தேசிய விருது பெறுகிறபோது கிடைக்கிற ஊடக கைதட்டும் கவனமும் தம்பி ராமையா, அப்புக்குட்டி, சமுத்திரக்கனி போன்றோர்க்குக் கிடைப்பதில்லை.

உண்மையில், முதல் வரிசையைவிட இரண்டாவது வரிசை நடிகர்களுக்கே கைதட்டல்களும் கெளரவங்களும் அவசியம். மிகச்சிறிய புள்ளியிலிருந்து தங்கள் கோலத்தை ஆரம்பித்த இவர்கள் வந்து சேர்ந்திருக்கும் இடம் பாராட்டுக்குரியது. தம்பி ராமையாவை பிரபு சாலமன் அறிமுகம் செய்து வைத்தபோது நானுமே கூட அவருடைய தகுதி குறித்து குறைத்தே மதிப்பிட்டிருந்தேன். அந்த மதிப்பு அவருடனான உரையாடலை தொடங்கும்வரைதான்.

சினிமாவில் பாட்டெழுதவும் இசையமைக்கவும் பிரியப்பட்டே சென்னைக்கு வந்ததாக அவர் தொடங்கிய அந்த உரையாடலில் அதுவரை அவர் பட்டுவந்த பாடுகளைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார். எழும்பூரில் புகழ்பெற்றிருந்த ஒரு ஹோட்டலில் மேலாளராக அவருடைய வாழ்க்கை தொடங்கியிருக்கிறது. இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பனாக கடமையாற்றவேண்டிய பொறுப்பிருந்தும் அது பற்றியெல்லாம் அக்கறையில்லாமல் அவர் சினிமாவிற்கு முயற்சிக்கவில்லை.

எந்த நேரத்திலும் குடும்பத்தைத் தவிக்கவிட்டுவிட்டு சினிமா வாய்ப்புகளைத் தேடக்கூடாது என்றே எண்ணியிருக்கிறார். ஒரு பக்கம் குடும்பத்தைக் கவனித்துக் கொண்டே சினிமாவையும் சிநேகித்திருக்கிறார். பல உதவி இயக்குநர்கள் அந்தக் காலத்தில் அவருக்கு உதவுவதாக வாக்களித்து ஏமாற்றியிருக்கிறார்கள். ஏமாற்று என்ற சொல் கடுமையாயிருக்கலாம். ஆனால், அண்ணன் ராமையா அதை சிரித்துபடியே விவரிக்கையில் அவர் கண்கள் கசிந்ததை என்னால் கவனிக்க முடிந்தது.

எல்லோரையும் சிரிக்க வைத்து சந்தோசத்தை ஊட்டிக் கொண்டிருக்கும் அவர் உடைந்தழுத பொழுதுகள் எண்ணிலடங்காதவை. ‘மைனா’ அவர்  வாழ்வு முற்றிலும் மாறுவதற்கு உதவியிருக்கிறது. அதேபோல ‘மைனா’வும் அவர் வருகைக்குப் பின்னர் அடைந்த நல்ல மாற்றங்களை நான்  அறிவேன். அதுவரை அந்தக் கதாபாத்திரத்திற்கு அவ்வளவு அடர்த்தி சேர்க்கப்படவில்லை. மேலெழுந்தவாரியாக ஒரு காவலர் என்பதாகவே  இருந்தது. அந்தக் கதாபாத்திரத்தின் குணாதிசயங்கள் தனித்துத் தெரிய அவரும் ஒரு காரணம்.

அவரிடம் பெறத்தக்க அம்சங்கள் எவையவை உள்ளனவோ அதையெல்லாம் பயன்படுத்திக் கொள்ள பிரபுசாலமன் விரும்பினார். இயல்பாக ஒருவருக்கு ஒருவர் கதைபற்றியும் கதாபாத்திரங்கள் பற்றியும் விவாதித்துக் கொண்டோம். பொருளாதார சிக்கலால் அவ்வப்போது படத்தைத் தொடர முடியாமல் இடைவெளிகள் ஏற்பட்டதுகூட, படம் செழுமையாக வெளிவர உதவின. கதை நால்வரைச் சுற்றி. அந்த நால்வரில் அண்ணன் ராமையா மட்டுமே மூத்தவர்.

‘மைனா’ திரைப்படத்தைப் பொறுத்தவரை அது வளர வளர அருகிருந்து பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. போலவே அண்ணன், தம்பி ராமையாவின் வளர்ச்சியும். அந்தக் காலத்தில் ‘மைனா’ படக்குழுவினர் எல்லோருக்கும் ஒரே மாதிரியான வேட்கைகள் இருந்தன. அப்படத்தில் பணிபுரிந்த அனைவருமே போதிய வெளிச்சமில்லாமல் திரைத்துறையில் இயங்கிக் கொண்டிருந்தோம். குறிப்பாக, நானும் இமானும் பத்து வருடங்களுக்கு மேல் அசராமல் பணியாற்றி வந்தாலும் தனி அடையாளத்தோடு காணப்படவில்லை.

வெற்றிப் பாடல்களை இருவருமே தந்திருக்கிறோம். என்றாலும், குறிப்பிட்டு எங்கள் பெயரைகளை யாருமே சொல்லவில்லை. எல்லோருமே வெற்றிக்காக ஏங்கிக் கொண்டிருந்தோம். வெற்றி என்பது சொல்லிக்கொண்டு வருவதில்லை. எங்களுக்கோ சொல்லிக் கொண்டு வந்தாலும் அது வெற்றியாக அமையவில்லை. ஒளிப்பதிவாளர் சுகுமார், கலை இயக்குநர் வைரபாலன், படத்தொகுப்பாளர் எல்.வி.கே.தாஸ், தம்பி ராமையா, விதார்த் என ஒவ்வொருவரும் ‘மைனா’வை இதயக்கூட்டில் அடைகாக்க ஆரம்பித்தோம்.

கதையில் செய்திருக்கும் மாற்றங்களை அவ்வப்போது பிரபுசாலமன் எங்களுடன் பகிர்ந்து விவாதங்களை ஏற்றுக்கொள்வார். அப்படத்தின் வெற்றிக்காக உழைத்தவர்களில் உணவு பரிமாறிய பையனும் சேர்ந்திருக்கிறான் என்பதுதான் செய்தி. ஒரு படைப்பாளன், காதுகளை திறந்து வைக்கத் துணியும் அந்தக் கணத்திலிருந்து வெற்றியின் வாசல் அவனுக்குத் திறந்து கொள்கிறது.
 

(பேசலாம்...)

kungumam.co.

Link to comment
Share on other sites

 

ஊஞ்சல் தேநீர்

 
 

யுகபாரதி - 12

இளவயது முதலே தெருக்கூத்திலும் மேடைப் பேச்சிலும் ஆர்வம் கொண்டிருந்த அண்ணன் தம்பி ராமையா ‘மைனா’ மூலமே தன் மொத்தத் திறனையும் உலகுக்குத் தெரிவிக்க காத்திருந்தார். தன்னைத் தானே செதுக்கிக் கொள்ளும் உளி அவருக்குக் கிடைத்தது. ஆனாலும், கடந்துவந்த காலங்களில் அவர் கல்லாயிருக்கவில்லை. வெவ்வேறு வகைகளில் தன்னை செதுக்கிக் கொண்டிருந்தார். எதுவாக என்பதில் அவருக்கு குழப்பம் இருந்திருக்கலாம். தாமதப்பட்டாலும் இலக்கை அடைந்திருக்கிறார்.
8.jpg
‘மைனா’வின் ஆகச்சிறந்த பெருமைகளில் ஒன்று தம்பி ராமையா. அவர் ஏற்று நடித்த பாத்திர வடிவமைப்பு விசேஷமானது. கிளைச்சிறை காவலர்களின் மனக்கொதிப்பையும் கொந்தளிப்பையும் அதற்கு முன் வெளிவந்த எந்த படங்களும் இத்தனை நேர்த்தியுடன் சொல்லவில்லை. அப்பாத்திரத்தில் அவரைத் தவிர வேறுயாருமே பொருந்தியிருக்கமாட்டார்கள் என்று இப்போது நம்பலாம்.

உண்மையில், செந்தாமரை என்ற கதாபாத்திரம் திரையில் காட்டப்படவே இல்லை. ஆனாலும், அண்ணன் தம்பி ராமையா உதிர்க்கும் சொற்களின் வாயிலாக, அப்படி ஒருவரை நம்மால் உருவகிக்க முடிந்தது. வாழ்வின் அனுபவங்களிலிருந்து உரம்பெற்ற ஒருவர் வெளிப்படுத்தும் அற்புதமான உணர்வுகளை வெகு இயல்பாக அவர் காட்டியிருந்தார். அண்ணன் தம்பி ராமையா எப்போதும் கதைகளோடு இருப்பவர். சொல்வதற்கு அவரிடம் ஏராளமான செய்திகளிருக்கும்.

‘ஒருமுறை இப்படித்தான் தம்பி...’ என்று அவர் ஆரம்பித்தால் அதை வைத்து நாலைந்து திரைப்படங்கள் எடுக்கத்தக்க சம்பவங்களை பெற்றுக்கொள்ளலாம். அவர் ஓர் இடத்தில் அமர்ந்திருந்தால் அந்த இடமே கதைகளால் நிரம்ப வழியும். அவருக்கே உரிய கலகலப்புடன் ஒரு விஷயத்தை சொல்ல ஆரம்பித்து, நவரசங்களையும் கொட்டிவிடுவார். அவர் உரையாடலில் மிகுதியும் வாழ்வு குறித்த கேள்வியிருக்கும். கொஞ்ச காலம் சிறையிலும் இருந்த அனுபவம் அவருக்குண்டு.

அதுகுறித்தும், அதிலிருந்து அவர் மீண்டது குறித்தும் எந்தத் தயக்கமும் இல்லாமல் எங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். சொல்லப்போனால் அவர் வாழ்வை மிகப் பூரணமாக உணர்ந்த தருணங்களாக அவற்றைக் கருதுவார். மாட்சிமை தங்கிய நீதித்துறையைத் தாண்டி ஒருவர் வெளியே வர, நிறைய உண்மையும் மனோதிடமும் தேவையென்பதை சொல்லியிருக்கிறார்.

நடிப்பார்வத்தோடு ஒருவர் சென்னைக்கு வருவதும் வாய்ப்புப் பெற்று நட்சத்திரமாவதும் பெரிய விஷயமில்லை. வெவ்வேறு வேலை செய்து, வாழ்வொன்றும் கனவொன்றுமாக இருந்து வெளிச்சம் பெறுவதுதான் அரிது. ஒருகாலம் வரை அவர் பரபரப்பான மேடைப் பேச்சாளர். எவ்வளவு பேருக்கு தெரியுமோ தெரியவில்லை. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மேடையில் அவர் சிறப்புரையாளராக தமிழகத்தின் பல ஊர்களுக்குப் பயணித்திருக்கிறார்.

அடுக்கடுக்காக அவர் பேசும் அரசியல் விஷயங்கள் வேறு எந்த கழகப் பேச்சாளர்களுக்கும் குறைந்ததில்லை. ‘எல்லாமே அனுபவந்தான் தம்பி...’ என்று அவர் வார்த்தைக்கு வார்த்தை சொல்லும்போது ஒரு மூத்த சகோதரனுக்கு உரிய அக்கறையிருக்கும். புகாரில்லாமல் வாழ்வை எதிர்கொள்ளும் ஒருவரால்தான் அனுபவங்களை பெறமுடியும். அந்தவிதத்தில் அண்ணன் தம்பி ராமையா அதிர்ஷ்டசாலி. ஹோட்டல் மேலாளர், உதவி இயக்குநர், கதை வசனகர்த்தா, பாடலாசிரியர், இசையமைப்பாளர், இயக்குநர் என பல அவதாரங்களை அவர் எடுத்திருந்தாலும் இறுதியில் நின்று நிலைபெற்றிருப்பது நடிப்பில்.

முதலிலேயே நடிப்புத்துறையைத் தேர்ந்தெடுத்திருக்கலாமே எனக் கேட்டால், ‘எனக்குக் காலம் கடந்துதானே எல்லாமே கிடைத்தன’ என்பார். ‘மைனா’ திரைப்பட வேலை மும்முரமாக நடந்துகொண்டிருந்த பொழுது மாதத்தில் ஒருமுறையோ இருமுறையோ அவரை சந்தித்து அளவளாவும் வாய்ப்பிருந்தது. நம்முடைய நாட்டார் கதைகளைப் பற்றி அவருடன் பேசத் தொடங்கினால் நேரம் போவதே தெரியாது.

அவராகவே சில சிலேடைகளை உருவாக்குவார். அடிப்படை தமிழர் மரபு குறித்த தெளிவோடு எதையும் அணுகக்கூடிய அவரது அரசியல் பகடிகள் அபாரமானவை. உலகமே இன்றைக்கு பகடி செய்து சந்தோசப்படும் பல வசனங்கள், எளிய மனிதர்களிடமிருந்து எப்படி எடுத்தாளப்பட்டன என்பதை ஒளிவு மறைவு இல்லாமல் ஒப்புக்கொள்வார். ‘டணால்’ தங்கவேலு, பாலையா, நாகேஷ், சந்திரபாபு என அக்காலத்திய நகைச்சுவை நடிகர்களின் சாராம்சங்களை ஒரு ரசிகராக அவர் வியந்து பேசுவது குறிப்பிடத்தக்கது.

கலைவாணர் என்.எஸ்.கே.யின் கலை பங்களிப்பையும் கருத்துச் செறிவையும் அவர்போல உள்வாங்கிக் கொண்ட இன்னொரு நடிகரைக் காண முடியாது. இன்றைக்கு வெளிவரும் பல படங்களில் கதாநாயகனுக்கோ கதாநாயகிக்கோ தந்தையாக நடிக்கிறார். இயக்குநர்கள் விரும்பித்தரும் எந்த பாத்திரத்தையும் ஏந்திக்கொள்பவராக இருக்கிறார். ஆனால், ‘மைனா’ சமயத்தில் அப்படியில்லை. அதற்கு முன் வெளி உலகுக்கு அவர் அவ்வளவாக அறியப்படவில்லை.

‘மலபார் போலீஸ்’ என்னும் திரைப்படத்தில் முதல்முதலாக சிறிய பாத்திரமேற்று நடித்தபொழுது இத்துறையில் இத்தனை உயரத்திற்கு வருவோமென்று நானே எண்ணவில்லை என்றிருக்கிறார். ‘மைனா’வில் இடம்பெற்ற ‘ஜிங்கி ஜிங்கி...’ என்னும் பாடலை பிரபுசாலமன் தவிர்க்கலாம் என்றபோது படத்தின் வியாபாரத்திற்கு உதவுமென்று ஓங்கிச் சொன்னவர்களில் அண்ணன் தம்பி ராமையாவும் ஒருவர்.

‘மைனா’ திரைப்படத்தில் பேருந்து கவிழும் காட்சியை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அந்தக் காட்சியில் உயிரை பணயம் வைத்து அவர் நடித்துக் கொடுத்ததை பிரபுசாலமன் பெருமைபட கூறாமல் இருப்பதில்லை. போதிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொள்ள பொருளாதார பலமில்லாத சிறிய படமொன்றில் ஆபத்து நேர்ந்துவிட்டால் அதன்பின் அந்தப் படக்குழுவினர் தலையெடுக்க முடியுமா? எது நடந்தாலும் பரவாயில்லை என துணிந்த அந்த துணிச்சலால்தான் அண்ணன் தம்பி ராமையா இன்று பாராட்டப்படுகிறார்.

‘கும்கி’யிலும்கூட இப்படியான சவால்களை அவர் எதிர்கொள்ள நேர்ந்தன. கோமாளி யானையை கும்கி யானையென்று பொய் சொல்லி ஊருக்குள் தங்கிவிட்ட பிற்பாடு, உண்மை வெளிப்படாதிருக்க அவர் செய்யும் சேஷ்டைகளை ரசிகர்கள் வரவேற்றார்கள். மதங்கொண்ட யானையை அடக்குவதற்கு கும்கி யானை பயன்படுத்தப்படும். கும்கி யானை என்றால் பயிற்சிப்படுத்தப்பட்ட யானை என்ற தெளிவை பலருக்கும் அத்திரைப்படமே ஏற்படுத்தியது.

‘கும்கி’ திரைப்படத்தில் காட்டிய கோமாளி யானைக்கும் படப்பிடிப்பு நிகழ்ந்து கொண்டிருக்கையில் மதம் பிடித்தது. பொதுவாக யானைக்கு மதம் பிடிப்பது தவிர்க்க முடியாதது. அது கோயில் யானையாயிருந்தாலும் சரி, காட்டு யானையாயிருந்தாலும் சரி. வருடத்தில் மூன்று மாதங்கள் எல்லா யானைகளுக்கும் மதம் அல்லது மஸ்து ஏற்படும். அந்த நேரத்தில் அது பாகனென்றோ பார்வையாளனென்றோ பார்க்காது. யாராயிருந்தாலும் முட்டித்தள்ளி ஒருவழி பண்ணிவிடும்.

ஏறக்குறைய படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் மாணிக்கம் என்ற பெயருடைய படப்பிடிப்பு யானைக்கும் மஸ்து ஏற்பட்டது. மஸ்து ஏற்பட்டுவிட்டது என்பதால் படப்பிடிப்பை ரத்து செய்யவும் இயலாது. ஓரிரு காட்சிகள் பாக்கியிருப்பதால் படப்பிடிப்பை நடத்தியே ஆகவேண்டிய நிலை. ஒருமுறை படப்பிடிப்புக்கு யானையை அழைத்து வருவதென்றால் மூன்று மாநிலங்களில் அனுமதி பெறவேண்டும். விலங்குகள் நலவாரிய அனுமதியைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

யானையை சமாளிப்பதைவிட அவர்களைச் சமாளிப்பதுதான் கஷ்டத்திலும் கஷ்டம். படப்பிடிப்பு தொடர்ந்தது. மாணிக்கம் எப்போது வேண்டுமானாலும் சீறலாம். மஸ்து ஏற்பட்ட யானைக்கு அருகில் போவதே ஆபத்து. அப்படியிருக்கையில், அதில் அமர்ந்து நடிப்பதென்றால் அதுவும் நகைச்சுவையை வரவழைக்க வேண்டுமென்றால் எத்தகைய சவாலென்று யோசித்துக் கொள்ளுங்கள். ஆனால், தம்பி ராமையா அதை அநாயாசமாக செய்துகாட்டினார்.

பிரபுசாலமன் முதல் படத்தில் வாழ்வை கொடுத்துவிட்டு அடுத்த படத்தில் அதைப் பறித்துக் கொள்ள எண்ணுகிறாரா? என ஹாஸ்யமாகப் படப்பிடிப்புத் தளத்தில் அண்ணன் தம்பி ராமையா உதிர்த்த சொற்கள் நகைச்சுவையல்ல. ‘சாட்டை’, ‘கழுகு’, ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ ஆகிய திரைப்படங்களிலும் தனக்கு அளிக்கப்பட்ட பாத்திரத்தை மிகச் சிறப்பாகவே செய்திருப்பார். ‘கும்கி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பில், ‘நடிக்க நீங்கள் பட்ட கஷ்டங்களைப் பற்றிக் கூறுங்கள்’ என்றதும் ‘படவேண்டிய கஷ்டத்தையெல்லாம் நான் நடிப்பதற்கு முன்பே பட்டுவிட்டேன்’ என்று அவர் பகிர்ந்துகொண்டது பக்குவத்தின் திரட்சி.

ஏன் தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர்கள் மலையாளத்தைப் போலவோ பெங்காலைப் போலவோ கொண்டாடப்படுவதில்லை? நாயக வழிபாட்டை திரையிலும் அரசியலிலும் விரும்பக்கூடிய நாம், இரண்டாம்கட்ட மூன்றாம்கட்ட பங்கேற்பாளர்களை அவ்வளவாக ஆராதிக்க விரும்புவதில்லை. ஒருவர் தன்னிடமுள்ள திறமையை, ஆற்றலைத் தயக்கமில்லாமல் வெளிப்படுத்தினாலும் அதை உரியவிதத்தில் கெளரவிக்கவோ மதிப்பளிக்கவோ தயங்குகிறோம்.

ஒரு திரைப்படத்தில் குணச்சித்திர நடிகர் தனித்து தெரிந்தாலும், அந்தப்படம் அதில் பிரதான வேடமேற்ற நடிகனுடைய படமாகவே பார்க்கப்படுகிறது. பாலையாவையும் நாகேஷையும் விட்டுவிட்டால் ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் இல்லை. ஆனால், அத்திரைப்படத்தை நாம் ரவிச்சந்திரன் நடித்த படமாகவோ ஸ்ரீதர் இயக்கிய படமாகவோ பார்க்கிறோமே தவிர, நாகேஷின் படமாகப் பார்ப்பதில்லை. நம்முடைய பார்வைப் பிழையினால் நாம் தவறவிட்ட இன்னொரு முக்கியமான நடிகை மனோரமா.

ஆயிரம் படங்களுக்குமேல் அவர் நடித்திருக்கிறார். சினிமாவின் ஆரம்ப சகாப்தத்திலிருந்து அவருடைய பங்களிப்பு இருந்துவந்திருக்கிறது. என்றாலும், அவர் பெற்றிருக்கும் பெருமையும் அடையாளமும் குறைவுதான். அந்தப் பாத்திரத்திற்கு அவர் பொருந்துவாரா? என ‘மைனா’ சமயத்தில் யோசிக்க வைத்த அதே அண்ணன் தம்பி ராமையா, எந்தப் பாத்திரத்திற்கும் பொருந்தக் கூடியவராக தன்னை நிரூபித்திருக்கிறார். இன்றைக்கு வெளிவரும் பல படங்களில் அவர் முக்கிய பாத்திரங்களை ஏற்றுவருகிறார்.

பிரதான நடிகர்களும் இயக்குநர்களும் விரும்பக்கூடிய ஒருவராக மாறியிருக்கிறார். இந்த மாற்றம் ஒரே நாளில் நிகழ்ந்ததல்ல. காலமும் வயதும் கடந்து கொண்டிருந்தாலும் அதைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் இயங்கியதால் விளைந்தது. தேசிய விருது பட்டியலில் இன்னும் சிலமுறையாவது அவர் பெயர் இடம்பெறும் வாய்ப்பிருப்பதாகவே எனக்குப் படுகிறது. மலையாள நடிகர்களான திலகனையும் நெடுமுடு வேணுவையும் நினைவூட்டக்கூடிய அண்ணன் தம்பி ராமையாவை இப்போதைய தமிழ் சினிமாவும் இயக்குநர்களும் கூடுதல் கவனத்தோடு கையாள வேண்டும்.

தன்னிடமுள்ள திறனையெல்லாம் அவர் காட்டிவிட்டார். ஆனாலும்கூட, அவரை இன்னும் இரட்டை அர்த்த வசனங்களைப் பேசும் நகைச்சுவை நடிகராகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த அண்ணனும் தனக்கு பெருமை சேர்க்காத பாத்திரங்களைத் தவிர்க்கலாம். அவரே ஒருமுறை சொன்னதுதான், ஒரு கலைஞன் வேண்டும் என்பதைவிட வேண்டாம் என்பதில் குறியாயிருக்க வேண்டும்.

பொருந்துகின்றன என்பதால் எல்லா பாத்திரங்களையும் ஒருவர் ஏற்கத் துணிந்தால், தான் யார் என்னும் அடையாளம் அடிபட்டுவிடும். ‘தம்பிக்கு முரட்டு வணக்கம்’ என்று உரையாடலை ஆரம்பிக்கும் அண்ணனுக்கு, எளிய இப்பதிவை பதில் வணக்கமாக செலுத்துவதும் அன்புதான். பாகனின் வருடலில்தான் யானையின் பலமிருக்கிறது. நான் பாகன்.
 

(பேசலாம்...)

kungumam.co

Link to comment
Share on other sites

 
 

ஊஞ்சல் தேநீர்

 
 

யுகபாரதி - 13

‘‘தோழர் என்ற சொல்லை பயன்படுத்தக்கூடியவரிடம் எச்சரிக்கையோடு இருங்கள்...’’ என ஒரு காவல்துறை உயரதிகாரி கருத்து தெரிவித்திருக்கிறார். உண்மையில், தோழர் என்ற சொல், அவர் சொல்வதுபோல எச்சரிக்கைகளோடும் சந்தேகங்களோடும் அணுகவேண்டிய சொல் அல்ல. பொதுவுடமைக் கொள்கைகளில் தன்னைப் பிணைத்துக்கொண்ட அல்லது பிணைத்துக் கொள்ள விரும்புகிற ஒவ்வொருவரும் ஆசையோடு உச்சரிக்கும் மந்திரச் சொல் அது. எளிய மனிதர்கள் தங்கள் உணர்வுகளையும் ஆறுதலையும் அச்சொல்லில் இருந்தே பெறுகிறார்கள்.
10.jpg
துயர்மிகுந்த இக்காலத்தின் சூழ்ச்சியை தரைமட்டமாக்க உதவக்கூடிய வலிமை அச்சொல்லுக்கே உண்டு. தோழர் என்ற சொல்லின் மெய்யான அர்த்தத்தை எனக்குக் கடத்தியவர்களில் முக்கியமானவர் தோழர் இளவேனில். அவருடைய ‘கவிதா’, மற்றும் ‘25, வெண்மணித் தெரு’ ஆகிய நூல்களைப் பற்றித் தொடங்கியதே என் எழுத்துப் பயணம். அந்நூல்களை வாசிக்காமல் போயிருந்தால் கலை இலக்கியங்கள் குறித்த என் பார்வைகள் கவலைக்குரியதாக மாறியிருக்கும்.

இப்பவும் கலை, கலைக்காகவா அல்லது மக்களுக்காகவா? என்று நடத்தப்படும் விவாதத்திற்கு தத்துவார்த்த விளக்கங்களைத் தரக்கூடிய நூல்களாக அவற்றைக் கருதலாம். செளந்தர்ய உபாசகர்கள் என்னும் பதப் பிரயோகத்தை வைத்துக் கொண்டு அந்நூல்களில் அவர் செய்திருக்கும் எழுத்து உச்சாடனங்கள் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை. உலகப் புரட்சிகளையெல்லாம் தன் எழுத்தின் வாயிலாக அவர் தொட்டுக்காட்டிய கம்பீரத்திற்காக எத்தனைமுறை வேண்டுமானாலும் அந்நூல்களை வாசிக்கலாம்.

மயக்குறு நடை என்பார்களே அப்படியான அழகுத் தமிழ்நடை அவருடையது. கவிஞர். விக்ரமாதித்தியன் சொல்வது போல விவிலிய மொழிநடையில் அவருடைய வாக்கியங்கள் அமைந்திருந்தாலும், அவற்றின் ஊடாக அவர் கட்டமைக்கும் கருத்துகள், புதிய ஏற்பாட்டின் மலைப்பிரசங்கத்திற்கு நிகரானவை. இன்றைக்கு தமிழில் எழுதிக்கொண்டிருக்கும் இளம் படைப்பாளிகள் பலரையும் அவருடைய எழுத்துகள் கவ்வி இருக்கின்றன.

ஆனாலும், அவருக்கே உரிய தனித்துவம் பிறிதொருவருக்கு வாய்க்கவில்லை. ‘எனது சாளரத்தின் வழியே’ என்ற தலைப்பில் அவர் கார்க்கி இதழில் எழுதிய கட்டுரைகள் இடதுசாரிகளின் எழுத்துகளுக்கு சாட்சியம் கூறுபவை. பகத்சிங்கும் இந்திய வரலாறும் என்ற சுப. வீரபாண்டியனின் நூலுக்கு தோழர் இளவேனில் எழுதிய முன்னுரை ஒன்று போதும் அவருடைய எழுத்துகள் எத்தகையன என்பதை எடுத்துச்சொல்ல.

அணிந்துரை என்பது ஒரு நூலுக்கு அணி சேர்ப்பது அல்லது அழகு சேர்ப்பது என்று எனக்கிருந்த கருத்தை மாற்றி, அறிவையும் அர்த்தபுஷ்டியையும் உண்டாக்குவதே அணிந்துரை என உணரவைத்தவர் இளவேனில். சுப.வீரபாண்டியனின் நூலை வாசிக்கையில் கண்ணீர்விட்டதாக இளவேனில் அந்த அணிந்துரையில் தெரிவித்திருப்பார். உண்மையில், இளவேனிலின் அணிந்துரையை வாசித்தபொழுதே எனக்கு அழுகை வந்தது.

நூலிலுள்ள சம்பவங்களை கண்ணீரோடு அவர் விவரித்திருக்கும் விதம் இந்திய வரலாற்றின் இருண்ட பக்கங்களை நமக்குக் காட்டும். குறிப்பாக, மகாத்மாவாகப் போற்றப்படும் காந்தி, பகத்சிங்கை எப்படிப் பார்த்தார் என்பதை அக்கண்ணீரிலிருந்துதான் நம்மால் கண்டடைய முடியும். ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு மேலாக இளவேனிலின் எழுத்துகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன். என்றாலும், அவர் அதே பொலிவோடு அதே தரத்தோடு எழுதிக்கொண்டிருப்பது ஆச்சர்யமளிக்கிறது.

காட்சி ரூபங்களாக அவருடைய எழுத்துகள் விரிகின்றன. பிரஞ்சுப் புரட்சியையும் ருஷ்யப் புரட்சியையும் வியட்நாமையும், கியூபாவையும் அவர் சொற்களிலிருந்தே நானும் அறிந்துகொண்டேன். ‘கவிதா’வும், ‘வெண்மணித் தெரு’வும் எனக்குள் ஏற்படுத்திய மாற்றத்தை அவருடைய ஆத்மா என்றொரு தெருப்பாடகனும் புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கமும் ஏற்படுத்தத் தவறவில்லை. இடைவிடாமல் ஒரு  நூலை வாசிக்கமுடியும் என்னும் நம்பிக்கையை அவர் நூல்களே வழங்கின.

விடிய விடிய நூல்களை வாசிக்கும் பழக்கமுடைய யாரையும், அவருடைய நூல்கள் விழிப்பை நோக்கித் தள்ளிவிடும். அடித்தட்டு மக்களின் அவலநிலையை ஆவேச நெருப்பால் சுட்டுப்பொசுக்கும் அவருடைய எழுத்துகள் ஏகாதிபத்தியத்தை வீழ்த்தும் வீரியமுடையவை. சென்னைக்கு வந்த புதிதில், யார் யாரையெல்லாம் சந்திக்கவேண்டும் என பட்டியல் வைத்திருந்தேனோ அந்தப் பட்டியலில் முதல் பெயராக தோழர். இளவேனிலின் பெயரையே வைத்திருந்தேன்.

எழுத்தில் மட்டுமே அறிந்திருந்த அவரை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பை, மூத்த பத்திரிகையாளரும் என் பத்திரிகை ஆசானுமான துரை என்கிற வித்யாஷங்கர் ஏற்படுத்திக் கொடுத்தார். பதினேழு ஆண்டுகளுக்கு முன், ஒரு மங்கிய மாலையில் சென்னை தி.நகர் இந்தியன் காபி ஹவுஸ் வாசலில் தோழர் இளவேனிலைச் சந்தித்தேன். அவரைச் சந்தித்த அந்த நாள், என் வாழ்வில் மறக்கமுடியாத நாள்களில் ஒன்று.

படைப்பாளர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள விரும்பாத என்னிலும் அச்சந்திப்பு நிழல் படம்போல் நிலைத்திருக்கிறது. எத்தனையோ ஆண்டுகளாக எழுத்தில் மட்டுமே நேசித்துவந்த ஒருவரை, நேரில் சந்தித்த அந்தத் தருணம் அதிஅற்புதமானது. எதிர்பார்ப்புகள் மொத்தமும் கைகூடின அந்தத் தருணத்தில் என்னால் எதுவுமே பேசமுடியவில்லை.

‘‘பிரிந்தவர் சேர்கையில் பேசவும் தோணுமோ?’’ என கண்ணதாசன் எழுதுவார். பார்க்கப் போனால், பிரியமுள்ளவரை சந்திக்கையிலும் அப்படித்தான் நேர்கிறது. பேசுவதற்கு எவ்வளவோ இருந்தும்கூட தோழர் இளவேனிலிடம் என்னைநான் யாரென்று வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. அது தயக்கமோ பயமோ அல்ல. பிரமிப்பு.

அந்த பிரமிப்பிலிருந்து இன்றுவரை என்னால் விடுபடமுடியவில்லை. அமைதியாக அவர் அருகில் நின்று, அவர் யாரிடமாவது விவாதிப்பதை ரசித்துவிட்டு அப்போதுபோலவே இப்போதும் திரும்பிவிடுகிறேன். மிகவும் சகஜமாகப் பழகக்கூடியவரே அவர். என்றாலும், அவர் எனக்குள் அண்ணாந்து பார்க்கத்தக்க பிரமாண்டமான தோற்றத்தைக் கொண்டிருக்கிறார். அந்த பிரமாண்டத்திற்கு எதிரில் நிற்கையில் என்னைநான் சிறிய புல்லாகக் கருதுகிறேன்.

பெருக்கெடுக்கும் வார்த்தைகளை பாயவிடாமல் ஏதோ ஒருவித அடர்ந்த அமைதி என்னுள்ளே அணைகளைக் கட்டி எழுப்புகின்றன. அதைவிட, அவரைப்பற்றி அவரிடமே புகழ்ந்து சொல்ல, அதை அவர் எப்படி எடுத்துக்கொள்வார் என்னும் எண்ணம் அமைதியாக வெளிப்படுகிறது. உலக இலக்கியமானாலும் உலக அரசியலானாலும் அனாயாசமாக காபி ஹவுஸ் வாசலில் நின்று பேசக்கூடிய ஒருவருக்கு, என்போன்றோர் அள்ளி வழங்கும் புகழுரைகளில் பெருமைப்படவோ பெருமிதப்படவோ ஒன்றுமே இல்லை.

‘மகரந்தங்களிலிருந்தும் துப்பாக்கி ரவைகள்’ என்னும் தலைப்பில் கவிஞர் இன்குலாப்பின் கவிதை நூல் குறித்து தோழர் இளவேனில் ஒரு முன்னுரை எழுதியிருப்பார். அதில், ‘ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு சிந்தனைக்கும் பின்னே ஒரு வர்க்கத்தின் முத்திரை குத்தப்பட்டிருக்கிறது’ என மாசேதுங்கை மேற்கோள் காட்டியிருப்பார். என் சொல்லிலும் என் சிந்தனையிலும் அப்படியான வர்க்க முத்திரைகளைப் பதித்ததில் தோழர் இளவேனிலுக்குப் பெரும் பங்குண்டு.

சொல்லாலும் சிந்தனையாலும் என்னை ஈர்த்த அவரை பாட்டாளி வர்க்க முத்திரைத்தாளாகவே பார்க்கிறேன். ஒருகாலம்வரை நானுமே தொட்டால் தீப்பிடிக்கும் எழுத்துகளை எழுதக்கூடிய இன்குலாப்பும் இளவேனிலும் ஒருவரே என்றுதான் நினைத்திருந்தேன். காலம் செல்லச்செல்லத்தான் உரைநடையில் இளவேனிலாகவும் கவிதையில் இன்குலாப்பாகவும் வெளிப்பட்ட அவர்கள் இருவரும் ஒருவரல்ல என்னும் உண்மை தெரிந்தது. ஒத்த சிந்தனையுடையவர்கள் இருவராக இருந்தாலும் ஒருவராகவே அறியப்படுகிறார்கள்.

அவர்கள் இருவரும் ஒரே மாதிரியான புன்னகையில் ஒரே மாதிரியான கொள்கையில் ஒன்றியிருப்பவர்கள். எழுத்துக்கும் வாழ்வுக்கும் இடைவெளியில்லாமல் வாழக் கூடியவர்களாக அவர்கள் தங்களை வடிவமைத்துக்கொள்ள மார்க்சீய சிந்தனைகளே அடிப்படை. போலி எழுத்துகளையும் போலி எழுத்தாளர்களையும் அவர்கள் பொறுத்துக் கொள்வதில்லை. வார்த்தைகளை மடக்கிப்போட்டு கவிதை என்று சொல்பவர்களை அவர்கள் ஒருபோதும் ஒப்புக்கொள்வதில்லை.

மானுட விடுதலைக்கான போராட்டத்தில் கலையும் இலக்கியங்களும் அவர்களுக்கு மற்றுமொரு ஆயுதம் என்றுதான் சொல்கிறார்கள். ‘வாளோடும் தேன்சிந்தும் மலர்களோடும்’, ‘புரட்சியும் எதிர்ப்புரட்சியும்’ ஆகிய நூல்கள் சமீபத்தில் வெளிவந்துள்ளன. அதிலும், தோழர் இளவேனில் பழைய பரவசத்தை எனக்கு ஏற்படுத்தத் தவறவில்லை.

எழுத்தாளர் வண்ணநிலவன் உள்பட சிலர், எழுத்தில் முற்போக்கு பிற்போக்கு என்பதெல்லாம் இல்லை; அப்படி ஒரு பாகுபாடு உள்ளதாகச் சொல்லுவது கம்யூனிஸ்ட்டுகள் ஏற்படுத்தும் மாயை என்று வாதிடுவார்கள். அதற்காக இடதுசாரி இலக்கியங்களாக அறியப்பட்ட பல நூல்களை வாசித்து மதிப்பெண்ணும் போட்டிருக்கிறார்கள். தொ. மு. சி. ரகுநாதன், டி. செல்வராஜ், கு. சின்னப்பபாரதி, இராஜேந்திரசோழன் போன்றோரைப் பட்டியலிட்டு சங்கப் பிரச்சனைகளை எழுதுவது எப்படி இலக்கியமாகும் என்றும் கேட்கிறார்கள்.

எதுதான் இலக்கியமென்று சொல்லமுடியாத அவர்கள் எல்லோரையும் ஏற்றுக்கொள்வதில் காட்டும் தயக்கம் கவனிக்கத்தக்கது. அவர்கள் அப்படிச்சொன்னாலும், மக்கள் எழுத்து என்ற ஒன்று இல்லாமல் இல்லை. மக்களை எழுதுவதும் மக்களுக்காக எழுவதுமே முற்போக்கு இலக்கியம் என்று உலகமே ஒப்புக்கொண்டபின் இவர்களுடைய உசாத்துணைகள் தேவையே இல்லை.

யார் நம்மை எழுத வைக்கிறார்கள், யாருக்காக நாம் எழுதுகிறோம் என்ற தெளிவில்லாமல் எழுவதுவதும் எழுத்தா? என்பது வேறு விஷயம். சுவாரஸ்யத்துக்காகவும் சுய நுகர்வுக்காகவும் எழுதுவது அல்ல எழுத்து. தன்னைப் பின்தொடரும் அல்லது தான் பின்தொடரும் மக்களை முன்வைப்பதே எழுத்து. வெகுசன ஏடுகளில் வெளிவரும் வணிக எழுத்துகளைவிட, வாழ்வை அச்சு அசலாகப் பிரதியெடுக்கும் எதார்த்தப் படைப்புகளுக்கு ஆயுள் அதிகம்.

வித்வத்துக்காக எழுதுவதும் அவ்வாறு எழுதிக்கொண்டிப்பவர்கள் தங்களுக்குள்ள வித்யாகர்வங்களை வெளிப்படுத்த எண்ணுவதும் விமர்சனத்துக்குரியவை. ஒரு கட்டத்தில், ஒரு குறிப்பிட்ட சிற்றிதழில் கவிதை பிரசுரமானால் இலக்கிய அங்கீகாரம் கிடைத்துவிட்டதாக அதை எழுதியவர் பெருமைகொள்ளும் சூழல் இருந்தது. எதையாவது கவிதை என்று எழுதுகிறவர்களை ஊக்குவிக்கும் வேலையை அச்சிற்றிதழும் செய்துவந்தது. தோழர் இளவேனில் அச்சிற்றிதழின் உண்மைத் தன்மையை உலகுக்குக் காட்ட ஒரு காரியம் செய்தார்.

தன்னுடைய நண்பர்கள் சிலரை வரவழைத்து, ஆளுக்கொரு வார்த்தையைச் சொல்லச்சொல்லி கவிதை மாதிரி ஒன்றை அச்சிற்றிதழுக்கு அனுப்பி வைத்தார். வெறும் சொற்குவியலாக அமையப்பெற்ற அவ்வாக்கியங்களை கவிதை என்னும் பெயரில் அச்சிற்றிதழும் பிரசுரித்தது. சொற்குவியலை கவிதையாகப் பார்த்த அச்சிற்றிதழ், அதை எழுதியவர் அரூபசொரூபன் என அச்சிட்டிருந்தது அக்காலத்திய நகைச்சுவை. இப்படித்தான் இன்றைய நவீன கவிதைகள் எழுதப்படுகின்றன என நிறுவ, வேடிக்கையாக அவ்விளையாட்டை எண்பதுகளின் இறுதியில் நிகழ்த்தியவர் இளவேனில்..
 

(பேசலாம்...)

kungumam.co

Link to comment
Share on other sites

 

ஊஞ்சல் தேநீர்

 
 

-யுகபாரதி 14

தோழர் இளவேனில் பேரன்பும் பெருங்கோபமும் உடையவர். அதனால்தான், தொழிற்சங்க முன்னோடிகளில் ஒருவரான தோழர் வி.பி. சிந்தன் தன் எழுத்தாள நண்பர் கேசவதேவிடம், ‘இவனிடம் எனக்குப் பிடித்தது கோபம்’ என்று இளவேனிலை அறிமுகப்படுத்தியிருக்கிறார். தன்னை விமர்சிப்பவனின் நேர்மையை அல்லது தகுதியை பறைசாற்ற இம்மாதிரியான வேடிக்கைகளிலும் விளையாட்டுகளிலும் அவ்வப்போது இளவேனில் ஈடுபடத் தயங்கியதில்லை.
8.jpg
மக்களை ஏமாற்றும் சக்தி எந்த ரூபத்தில் வந்தாலும் அதை அரூப சொரூபனாக நின்று எதிர்க்கும் திறனும் ஆற்றலும் எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை. சுய தேவைகளைச் சுருக்கிக்கொண்டு, பொது வாழ்வுக்குத் தன்னை ஒப்புக்கொடுக்கும் ஒருசிலரே அத்திறனையும் ஆற்றலையும் பெறுகிறார்கள். எழுத்தில் அரசியலையோ அரசியலை எழுத்திலோ கொண்டுவரக் கூடாதென சிலர் எண்ணுகிறார்கள். நுட்பமான இலக்கிய வடிவங்களில் அரசியல் நுழைவதால் கலைத்தன்மை கெட்டுவிடும் என அவர்கள் நம்புகிறார்கள்.

அதுவுமே அரசியல்தான். அரசியலுக்கு இடமளிக்காத படைப்புகள் கால ஓட்டத்தில் கரைந்துவிடும் என்பவர்களே இளவேனிலைப் போன்றோர். ஒருவர் அரசியல் அறிவைப் பெற்றிருப்பதாலேயே அரசியல் கட்டுரைகளை எழுதிவிட முடிவதில்லை. அதற்குமேல் அது, யாருடைய அரசியல் என்று தெரிந்திருக்க வேண்டும். மேலும், ஆளும் தரப்புக்கோ அதிகார அச்சுறுத்தலுக்கோ அஞ்சக்கூடிய ஒருவர், அரசியல் கட்டுரைகளில் சோபிப்பதில்லை.
8a.jpg
தோழர் இளவேனில், அரசியல் கட்டுரைகளின் வாயிலாகவே தன்னை நிறுவியவர். ‘இளவேனில் கவிதைகள்’ என்ற தலைப்பில் அவருடைய கவிதைகள் வெளிவந்துள்ளன. என்றாலும், அவர் வெகுவாகக் கொண்டாடப்படுவது அரசியல் கட்டுரைகளால்தான். ஒருமுறை அவருடைய கட்டுரையை வாசித்துவிட்டால் அதன்பின் அவரே வேண்டாம் என்றாலும் அவருடைய எழுத்துகளுக்கு நாம் தீவிர தோழனாகிவிடுவோம்.

‘ஆத்மா என்றொரு தெருப்பாடகனை’ கீழே வைக்கமுடியாத அனுபவத்தை வாசிக்குந்தோறும் பெற்றுவருகிறேன். ‘இதற்குமுன் இப்படியொரு நூலை வாசித்திருக்கிறீர்களா’ என நண்பர்களிடம் சவால்விட்டு சிபாரிசும் செய்திருக்கிறேன். கவிதைகள், இலக்கியக் கட்டுரைகள், ஓவியங்கள், அரசியல் விமர்சனங்கள் என பல முகங்களில் இளவேனில் தென்பட்டாலும், பொதுவெளியில் அவரை சினிமா இயக்குநராகப் புரிந்துகொண்டவர்களே அதிகம்.

கலைஞர் எழுதிய ‘சாரப் பள்ளம் சாமுண்டி’ என்னும் நூலைத் தழுவி, அவர் இயக்கிய ‘உளியின் ஓசை’ திரைப்படத்தை அவ்வளவு எளிதாக யாரும் மறந்துவிடமாட்டார்கள். இளவேனில் தன் எழுத்தில் கொண்டிருந்த அடர்வை அத்திரைப்படம் சிலருக்குக் கொடுக்கவில்லை. மூலக்கதை இன்னொருவருடையது என்பதால் முழு ஆளுமை வெளிப்படாமல் போயிருக்கலாம். ஆனாலும், அத்திரைப்படம் வெளிவந்த சமயத்தில் எழுதப்பட்ட எந்தக் கட்டுரையிலும் இளவேனிலின் முந்தைய எழுத்து சாதனைகள் குறிக்கப்படவில்லை.

காத்திரமான அவருடைய எத்தனையோ கட்டுரைகளில் ஒன்றைக்கூட வாசிக்காதவர்களே அவர் திரைப்படத்தை விமர்சிப்பவர்களாக இருந்தார்கள். அவரை வெறுமனே ஒரு சினிமாவை இயக்கிய இயக்குநர் என்றுதான் என் கவனத்துக்கு வந்த எல்லாப் பத்திரிகைகளும் செய்திகளை வெளியிட்டன. அச்சு கோர்க்கப்பட்டு புத்தகங்கள் வெளிவந்த அந்தக் காலத்திலேயே எழிலான எழுத்துருக்களை உருவாக்கும் பணியில் இளவேனில் ஈடுபட்டிருக்கிறார்.

அவருடைய அட்டை வடிவமைப்பில் எத்தனையோ நூல்கள் வெளிவந்துள்ளன. இளவேனில் என அவரே அவர் கைப்பட எழுதிய வடிவத்தில்தான் அவர் பெயர் இன்றும் அச்சாகிக்கொண்டிருக்கின்றன. பத்திரிகையாளராகவும் பணியாற்றிய அனுபவம் இருப்பதால் நூலின் பக்க வடிவமைப்பிலும் அட்டை வடிவமைப்பிலும் அக்கறை செலுத்தக்கூடியவராக அவர் இருந்துவருகிறார். ‘மலையூர் மம்பட்டியான்’ என்னும் திரைப்படத்தின் எழுத்துருவை உருவாக்கியவர் அவர்தான்.

அப்படத்தின் கதை விவாதத்தில் அவருக்கிருந்த பங்கு குறித்து பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். எழுபதுகளின் இறுதியில் இருந்தே அவர் சினிமாவோடு தொடர்பு கொண்டிருக்கிறார். ‘நூறு பூக்கள் மலரும்,’ ‘வீரவணக்கம்’ ஆகிய தலைப்புகளில் அவரால் ஆரம்பிக்கப்பட்ட திரைப்படங்கள் என்ன காரணத்தினாலோ தொடரமுடியாமல் போயின. அதை அடுத்து, ‘நெஞ்சில் ஓர் தாஜ்மஹால்’ என்னும் தலைப்பில் அவர் தொடங்கிய திரைப்படமும் பாடல் பதிவோடு நின்றது.

சிவாஜி ராஜா என்பவரால் இசையமைக்கப்பட்ட அத்திரைப்படத்தின் பாடல்களை இளவேனிலே எழுதியதாக குறிப்பு இருக்கிறது. என்றாலும், அப்பாடல்களை கேட்கும் கொடுப்பினை நமக்கு வாய்க்கவில்லை. ‘உளியின் ஓசை’யைத் தொடர்ந்து அவர் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட ‘நீயின்றி நானில்லை’ திரைப்படமும் தொடங்கிய நிலையிலேயே துவண்ட காரணத்தை தேடிக்கொண்டிருப்பதில் நியாயமில்லை.

சினிமாவுக்குத் தேவையான சமரசங்களை ஒருவர் செய்துகொள்ளத் துணியாதபோது, அவருக்கான வாய்ப்புகள்  கை   நழுவிப்போவது தவிர்க்கமுடியாதது. கிடைத்த வாய்ப்பைக் கயிறாகப் பயன்படுத்தி மேலே ஏறுகிறவர்களும் உண்டுதான். என்றாலும், அது கயிறா பாம்பா என சந்தேகிக்க வேண்டியது அவசியம். தோழர் இளவேனில் மனதில் பட்டதை சட்டென்று சொல்லிவிடுபவர். அன்பை அதிர்ந்து வெளிப்படுத்தத் தெரியாத அவருடைய பண்புகளை எழுத்திலிருந்து உணர்ந்துகொள்ளலாம்.

இடதுசாரி தோழர்கள் ஆழ்ந்த தமிழ்ப் புலமை கொண்டவர்கள் அல்ல என்று வலதுசாரிகளால் பரப்பப்படும் வதந்திகளுக்கு பதில் சொல்லக்கூடியவராக இளவேனில் இருந்து வருகிறார். அவருடைய ‘காருவகி’ நாவல், சரித்திரத் தரவுகளைக் கொண்டு எழுதப்பட்ட மிக அற்புதமான வரலாற்றுப் புதினம். அந்நூலில், கலிங்கத்திற்கும் தமிழகத்திற்குமுள்ள தொடர்புகள் விவரிக்கப்பட்டுள்ளன.

கலிங்கப்போரில் அசோகனுடன் போரிட்ட மன்னன் யார் என்ற கேள்வியை எழுப்பி, அதற்கு சரியான விடையை சான்றுகளுடன் தந்திருக்கிறார். ஒரு வரலாற்றுப் புதினத்தில் ஆய்வுக்குரிய பகுதிகள் கொஞ்சமாவது இருக்கும். ‘காருவகி’ நாவலிலும் அப்படி விவாதிக்கவும் ஆய்வை மேற்கொள்ளவும் நிறைய உள்ளன.

அசோகனின் இறுதிப்போரில் அவனுடன் போரிட்ட மன்னன் ஆரியனாக இருக்க வாய்ப்பு குறைவு என வரலாற்று ஆய்வாளர் சுனிதிகுமார் சாட்டர்ஜி கூறியதற்கும் ‘காருவகி’யில் இளவேனில் காட்டிய சான்றுகளுக்கும் தொடர்பு இருப்பதை ஆய்வாளர்களே சொல்லவேண்டும். கொடுங்கோலனாக ஆட்சியில் அமர்ந்த அசோகன், மெல்ல மெல்ல பெளத்தத்தைத் தழுவவும் உயிர்களை அருளோடு அணுகவும் காருவகியின் நட்பே காரணம் என்ற கருத்தும் நிலவுகிறது.

காருவகி என்பவள் தமிழ்ப்பெண் என்றும் அவளது நட்பினால்தான் கலிங்கப்போர் முடிவுக்கு வந்தது எனவும் இந்நாவல் நிறுவுகிறது. பெளத்த துறவியான காருவகியின் அன்பைப் பெற்ற பிறகே அசோகனுக்கு போர் குறித்த எண்ணம் மாறியிருக்கிறது. போரிட்டு வெல்வதைவிட அன்பினால் உலகை வெல்வதே உயர்ந்ததென அவன் எண்ணியதாகவும், இளஞ்சேட் சென்னி என்றழைக்கப்பட்ட சோழ மன்னனே கலிங்கப்போரில் அசோகனுடன் போரிட்ட மன்னன் எனவும் நாவல் பேசுகிறது.

புனைவை மிக விரிந்த தளத்தில் மேற்கொண்டுள்ள இளவேனில், சங்கப்பாடலில் இருந்து அதற்கான சான்றுகளைக் காட்டியிருப்பது விசேஷம். அசோகனின் மனத்தைமாற்றிய காருவகியை கதை நாயகியாகக் கொண்டு எழுதப்பட்ட அந்நாவல், ஏனைய வரலாற்றுப் புதினங்களைவிட ஆய்வுக்கான ஊற்றுக்கண்ணை திறந்துவைக்கிறது. சாண்டில்யனோ ஜெகசிற்பியனோ இந்நாவலை எழுதியிருந்தால் காருவகி என்பதற்கு பதில் மழைமோகினி என்றோ மயில் என்றோ கவர்ச்சிகரமான பெயரை இட்டிருப்பார்கள்.

ஆனால், இளவேனிலோ காருவகி என்னும் தமிழ்ப் பெயரை சூட்டியிருக்கிறார் என திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு நூல் வெளியீட்டு விழாவில் பேசியது குறிப்பிடத்தக்கது. உலக ஊடகங்களால் மைக்கேல் ஜாக்சன் கொண்டாடப்பட்ட பொழுதும் சரி, அதற்குப்பின் அதே அளவுக்கு விமர்சிக்கப்பட்ட பொழுதும் சரி, அதை வெறுமனே பார்த்துக்கொண்டிராமல், மைக்கேல் ஜாக்சனுக்குப் பின்னே நிகழ்த்தப்பட்ட பன்னாட்டு வணிக நிறுவனங்களின் அரசியலை ஆவேசத்தோடு முன்வைத்தவர் இளவேனில் ஒருவரே.

இசையிலும் கடைப்பிடிக்கப்பட்ட இனவெறிக்கு எதிராக அவர் தீட்டிய கட்டுரைகள் போற்றிப் பாதுகாக்கத்தக்க ஆவணங்கள். தமிழ் நிலத்தில், இசைஞானி இளையராஜாவுக்கு எதிராக பத்மா சுப்ரமணியம் பரப்பிய அவதூறுகளையும்கூட அவர் சுட்டிக்காட்டத் தவறியதில்லை. நாட்டுப்புற இசையைத் தனதென்று வாதிட்ட பத்மாசுப்ரமணியத்தின் அப்பட்டமான புளுகு மூட்டையை அவிழ்த்துக் கொட்டிய எழுத்து அவருடையது.

பாவலர் வரதராஜன் தன் அண்ணன் என்று இளையராஜா சொன்னதை பொய் என்று சொன்னவர் பத்மா சுப்ரமணியம். இல்லாத ஒருவரை தன் அண்ணனாக இளையராஜா சொல்வாரென்று பத்மா சுப்ரமணியம் எப்படித்தான் யோசித்தாரோ தெரியவில்லை. எழுத்தில் இவ்வளவு நெகிழ்வாக தன்னைப் பிரகடனப்படுத்தும் இளவேனில், நிஜத்திலும் அப்படியா? என்று வித்யாஷங்கரைக் கேட்டேன். ‘எதார்த்தத்திலிருந்து எழுத்தை சமைக்கிற ஒருவர், எதார்த்தத்திற்கு எப்படி முரண்படுவார்’ என்றார்.

தோழர் இளவேனில், பொதுவாக உணவகங்களில் வைக்கப்படும் டிப்ஸ் தொகைக்கு எதிரானவர். சம்பளம் போதவில்லை என்றால் சங்கம் வைத்து முதலாளியிடம் முறையிட்டுப் பெற வேண்டுமே தவிர, தட்டிலிடும் சில்லறைகளை தொழிலாளர்கள் பொறுக்கக்கூடாது என்பவர். ஊழியத்துக்கான கூலியை முதலாளியிடம் போராடிப் பெறுவதுதான் உரிமை. அதைவிடுத்து, யார் யாரோ வைத்துவிட்டுப் போகும் இனாம்களுக்காக கையேந்திக் காத்திருக்கக்கூடாது எனச் சொல்லியிருக்கிறார்.

மீதத்தை எடுத்துக்கொள்ள எண்ணுபவன், தன்னையும் மீதமாகவே கருதநேரும் என்றிருக்கிறார். இப்பவும் இந்தியன் காபி ஹவுசில் பணியாற்றும் தொழிலாளர்கள் டிப்ஸ் பெறுவதில்லை என்றே கேள்விப்படுகிறேன். சகமனிதனை சமமாகப் பாவிக்கும் பக்குவமுடையவராக அவர் இருப்பதால்தான், இன்றைய தலைமுறையும் அவருடைய எழுத்துகளை உச்சிமோந்து உச்சரிக்கிறது.

நவீன ஓவியத்தின் தந்தை பிகாசோ, தனது இறுதிக் காலத்தில் தன் ஓவியங்களில் ரசிப்பதற்கு ஒன்றுமே இல்லை என ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததைக் குறிப்பிட்டு, பாதல் சர்க்காரின் நாடகங்களைக் கட்டுடைத்திருக்கிறார். பாதல் சர்க்காரின் நாடகங்களையே கட்டுடைத்தவர் என்றால் உடனே, அவர் ஏதோ நவீனங்களுக்கு எதிரானவர் என கருத வேண்டியதில்லை.

இளவேனில், நவீனங்களுக்கு எதிரானவர் அல்ல. நவீன பொய்மைகளுக்கே எதிரானவர். மரபு என்பது மதவகைப்பட்ட ஆசாரமல்ல. அது, கட்டுத்தளையும் அல்ல. ஒரு குறிப்பிட்ட காலத்திய, ஒரு குறிப்பிட்ட மக்களது அனுபவங்களின் முதிர்ச்சியே மரபு. மரபு என்பது இலக்கணம். அது ஒரு விஞ்ஞானம். விஞ்ஞானம் அறிவுக்கோ கலைக்கோ எதிரானதல்ல என்று சொல்லுவார்.

இடதுசாரி இலக்கியங்களில் எதுவுமே இல்லை. இலக்கியங்கள் என்னும் பேரில் அவர்கள் சோஷலிச போஸ்டர்களை அடித்துக்கொண்டிருக்கிறார்கள் என இப்போதும் பிரச்சாரம் செய்பவர்கள் இல்லாமல் இல்லை. எந்தப் பிரச்சாரத்தினாலும் மக்கள் கலை இலக்கியத்தின் மகத்துவத்தை மறுக்கமுடியாது. அதையும் தாண்டி, சோஷலிச போஸ்டர் அடிப்பது ஒன்றும் ரசக்குறைவான காரியமில்லை. அது, வாணி ஒழுகும் குழந்தையின் வாயைத் துடைத்துவிடும் தாயின் செயலுக்கு ஒப்பானது.

தோழர் இளவேனில் “என் எழுத்திலுள்ள பிழைகளைப் பொறுத்துக்கொள்ளுங்கள்” எனச் சொல்பவரை அங்கீகரிப்பதில்லை. ‘உனக்கே பிழையென்று தெரிந்தபின் அதையேன் அச்சிட்டு எனக்குக் கொடுக்கிறாய்’ என்றுதான் கேட்பார். எழுத்தை ஆளவேண்டும் எனவும் வாக்கியங்களுக்கு இடையே வாழ்க்கை இருக்கவேண்டும் எனவும் அவர் சொல்லியிருக்கிறார். ‘இரண்டாம் உலகைத் தேடி’ எனும் நூலின் எழுத்தாளர் எம்.ஜி.சுரேஷின் புகழ்பெற்ற முதல் சிறுகதை கார்க்கி இதழில்தான் பிரசுரமானது.

ஒரு படைப்பாளரை அடையாளங்கண்டு அவரைத் தொடர்ந்து எழுத வைப்பதில் அக்கறையோடு இருந்திருக்கிறார். இன்குலாப்பின் அநேக கவிதைகள் அவருடைய கார்க்கி இதழில்தான் வெளிவந்தன. “இளவேனில் எழுத்தில்” என்னும் தலைப்பில் அவருடைய எழுத்துக்கள் யாவும் தொகை நூலாக இப்போது வரத் தொடங்கியுள்ளன. இதுவரை அவரை வாசித்தவர்களும் புதிதாக வாசிக்கப் போகிறவர்களும் மீண்டும் தோழர் எனும் சொல் தரும் இன்பத்தில் லயிக்கக்கூடும்.

மேலும், தோழர் என்ற சொல்லின் ஜீவனுள்ள அர்த்தத்தை உணர காவல்துறை உயரதிகாரிகளும் அவர் நூல்களை வாசிக்கவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் காபி ஹவுசில் தோழர் இனிவேனிலைச் சந்தித்தேன். அன்றுமுதல் இன்றுவரை உருமாறாமல் அந்த நினைவு அப்படியே இருக்கிறது.

இப்பொழுதும் அந்தக்காபி ஹவுசைக் கடக்கையில் அனிச்சையாக என்தலை திரும்பி சாளரத்தை எட்டிப்பார்க்கிறது. அச்சாளரத்தின் வழியே தோழர் தென்பட்டால், யாரோபோல் அருகிருந்து அவர் விவாதிப்பதைக் கேட்டுவிட்டு அமைதியாகத் திரும்புகிறேன். நானும் தொழிலாளர்களைத் தோழர்களாக ஏந்திக்கொள்ள எண்ணுவதால், உணவு மேசையில் வைக்கப்படும் மீதிச் சில்லறைகளை மறக்காமல் எடுத்துக்கொள்கிறேன். ஆமாம், தோழர்கள் என்பவர்கள் அன்பைக்கூட பிச்சையாக இட விரும்புவதில்லை.
 

(பேசலாம்...)

kungumam.co.

Link to comment
Share on other sites

 

ஊஞ்சல் தேநீர்

 

யுகபாரதி - 15

பெரும்பாலான நேரங்களில் அரைக்கால் டிராயரணிந்து இலக்கியக் கூட்டத்திற்கு வரும் பையனாக அறியப்பட்டிருந்த நான், வயது வித்தியாசமில்லாமல் எல்லா இலக்கியவாதிகளிடமும் பழகிக்கொண்டிருந்தேன். நான் அவர்களுடன் பழகிக்கொண்டிருந்தேன் என்பதைவிட அவர்கள் என்னைப் பழக அனுமதித்தார்கள் என்பதுதான் விசேஷம். ‘இந்தப் பையனுக்கு என்ன தெரியும்’ என்று அவர்கள் ஒதுக்கவில்லை. ‘வேலை இருக்கிறது, பிறகு பார்க்கலாம்’ என தட்டிக்கழிக்கவில்லை.
15.jpg
தங்கள் படைப்புகளைப் படிக்கக் கூடியவனும் தங்களுக்கு நிகரானவனே என அவர்கள் நம்பினார்கள். அதன் பொருட்டே அவர்கள் என்னிடம் இலக்கியம் குறித்து ஆசையாகவும் அன்பாகவும் பகிர்ந்து கொண்டார்கள். அவர்களில் ஒரு சிலர் இன்னும் ஒருபடி மேலேபோய் ‘நீங்கள் இதுகுறித்து என்ன நினைக்கிறீர்கள்’ என்றும் கேட்டிருக்கிறார்கள். எது குறித்தும் அறிந்திராத எனக்கு அவர்கள் அப்படிக் கேட்பதும் அதற்கு நான் பதில்போல எதையாவது சொல்வதும் தொடர்ந்து கொண்டிருந்தது.

பதிமூன்று பதினான்கு வயதில் இலக்கியமாகப்பட்டது என்னையும் பொதுவெளியில் ஓர் ஆளாக எண்ண வைத்தது. ‘நாளை வந்துவிடுங்கள்’ என்று யாராவது துண்டுப்பிரசுரம் கொடுத்தால் அங்கே ஆஜராகிவிடுவேன். அது, அரசியல் கூட்டமா இலக்கியக் கூட்டமா என்றெல்லாம் பார்த்துக்கொண்டிருக்க மாட்டேன். அழைத்தால் கிளம்புவேன். அலுப்பூட்டினால் திரும்புவேன். அவ்வளவுதான்.

அதன் விளைவாக என்ன நிகழ்ந்ததென்றால், எழுத்தாளர் அசோகமித்ரனில் ஆரம்பித்து எங்களூர் இலக்கியச்செம்மல் சிவக்கொழுந்துவரை என் உறவு நீண்டிருந்தது. வயதுக்கு மீறிய பழக்கத்தினால் வழி தவறிவிடுவேனோ என வீட்டில் உள்ளவர்கள் பதறிக் கொண்டிருந்தார்கள். ஆனால், அதுபற்றியெல்லாம் நான் கவலைப்படாமல் எழுதுகிற எல்லோரையுமே எழுத்தாளர் என்று நம்பி, பத்திர எழுத்தரிடமும் பாசத்தோடு பழகிய காலம் அது.

ஒரு கட்டத்திற்குப் பிறகுதான் இவர் வேறு அவர் வேறு என்று புரிந்தது. இன்னின்னார் இன்னின்ன நூல்களை எழுதியிருக்கிறார்கள் என அறியவும் தெரியவும் நூல்களை வாசிக்கத் தொடங்கினேன். அந்நூல்களில் அவர்கள் என்ன எழுதியிருக்கிறார்கள் என்றோ, எதுகுறித்து விவாதிக்கிறார்கள் என்றோ புரியாத பருவத்தில் வாசிப்பு தரும் மயக்கம் கள்வெறிக்கு ஒப்பானதுதான்.

நாமும் அறிவுத் தளத்தில் இயங்குகிறோம் என்ற மயக்கம் இருக்கிறதே அதற்கு இணையாக ஒன்றைச் சொல்ல முடியாது. நூலிலுள்ள விஷயங்களே தெளிவாகப் புரியாத தருணத்தில் அந்நூல்கள் குறித்த விமர்சனங்களை என்னோடு பகிர்ந்து கொள்பவராக எழுத்தாளர் சுகன் இருந்தார். என்னிடம் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு நான் என்னை அறிவாளியாக அவரிடம் காட்டிக்கொண்டிருக்கிறேன். உண்மையில், அவர் நம்பும் அளவுக்குப் படித்திருக்கிறேன் என்பதைவிட நடித்திருக்கிறேன் என்பதுதான் இதிலுள்ள சுவாரஸ்யம்.

சுகன்தான் முதன்முதலில் வெ. சா. வைப்பற்றி எனக்குச் சொல்லியவர். வெ.சா. என்றால் வெங்கட் சாமிநாதன். அவரே தமிழ் நவீனத்துவத்தின் முகமாக மிளிர்கிறார். கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலாக தனிக்குரலாகவும் எதிர்க்குரலாகவும் ஒலித்த குரல் அவருடையது. கலை இலக்கியத்தின் தகுதிப்பாடுகளை தனக்கே உரிய மூர்க்கத்தோடும் முனை மழுங்காத ஆதங்கத்தோடும் வெளிப்படுத்திய அவர், கலை இலக்கிய விமர்சனத்துறை முன்னோடிகளில் ஒருவர்.

க.நா.சுவைத் (க.நா.சுப்பிரமணியம்) தொடர்ந்து விமர்சனத்துறையில் குறிப்பிடத்தக்க திசைவழியை ஏற்படுத்தியவர். இன்னும் சொல்லப்போனால் தமிழ் கலை இலக்கியத்தின் அடிப்படைக் கேள்விகளை அவர் ஒருவரே தொடர்ந்து எழுப்பிக் கொண்டிருந்தவர். இலக்கியப் படைப்புகளில் எது தக்கன, எது தகாதன என வரையறுத்துச் சொல்லக்கூடியவராக அவர் தன்னை வடிவமைத்துச் செயல்பட்டார்.
தன்னை மிஞ்சி எவருமே எழுத இல்லை என்பவர்களைக்கூட அவருடைய விமர்சனத் தராசு நிறுக்காமல் விட்டதில்லை. ஓசையை வைத்துக்கொண்டு கவிதையென்று வாதிடுபவர்களை அவரால் பொறுத்துக்கொள்ள முடிந்ததில்லை. எழுத்து என்னும் பேரால் வெளிவரும் இலக்கியக் குப்பைகளை அவர் அப்புறப்படுத்த விரும்பினார்.

அவருடைய விமர்சனத்தை எதிர்கொள்ள முடியாமல் அவர் விமர்சகரே இல்லை என்று பலரும் விளாசித் தள்ளினார்கள். அப்பொழுதும் அவர் தன்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை எந்தத் தயக்கமும் இல்லாமல் ஏற்றுக்கொண்டார். எதன் பொருட்டும் அவர் தன்னுடைய கொள்கைகளிலிருந்தும் கோட்பாடுகளிலிருந்தும் விலகாமல் நடைபோட்டார். தமிழுக்குச் சிந்தனை மரபு இல்லை.

ஆராய்ந்து பார்க்கும் மரபு இல்லை. நம்பிக்கை அடிப்படையிலான பார்வை மட்டுமே இருக்கிறது என்று அவர் எழுதப்போக, பண்டித சிகாமணிகள் அவரை உண்டு இல்லை என்று பண்ணிவிட்டார்கள். அதுசரி, உங்கள் விமர்சன அளவுகோல்தான் என்ன என்று வெ.சா.விடம் கேட்டதற்கு, ‘என் சுய அனுபவம்தான் என் விமர்சன அளவுகோல்’ என்றிருக்கிறார்.

வெ.சா. கொள்கை சார்ந்து எழுதுபவர்களை ஏற்பதில்லை. அவருடைய கொள்கைகளும் கோட்பாடுகளும் நிறுவனமயமான கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் எதிரானவை. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் கட்சி சார்ந்த கோஷங்களையோ முழக்கங்களையோ அவர் இலக்கியப் படைப்புகளாக ஒப்புக்கொள்வதில்லை.

சுகன் நடத்தி வந்த ‘சுந்தர சுகன்’ இதழில் வெ.சா.வைப் போல பல இலக்கிய ஆளுமைகள் எழுதிவந்தது குறிப்பிடத்தக்கது. சில நூறு பிரதிகள் மட்டுமே அச்சாகும் அவ்விதழ்கள் மூலம் இந்த இலக்கிய ஆளுமைகள் தங்களையும் தங்கள் கருத்துக்களையும் வெளிப்படுத்தி வந்தது வியப்புக்குரியதுதான். எண்ணிக்கை முக்கியமில்லை என்பதால்தான் அவர்களால் அச்சிறு இதழ்களிலும் தொடர்ந்து எழுத முடிகிறது.

பெரு வணிக ஏடுகளால் எட்டமுடியாத பல நுணுக்கமான புரிதல்களையும் எழுச்சிகளையும் அவ்விலக்கிய ஏடுகளே உருவாக்குகின்றன. ‘சி.சு. செல்லப்பாவின் ‘எழுத்து’ இதழில் வெளிவந்த ‘பாலையும் வாழையும்’ என்ற வெ.சா.வின் கட்டுரையை வாசித்திருக்கிறீர்களா?’ என சுகன் கேட்டபோதுதான் அப்படியொரு கட்டுரையும் நூலும் வந்திருக்கும் தகவலே எனக்குத் தெரியவந்தது.

அறுபதுகளில் வெளிவந்த அக்கட்டுரையை எழுபதுகளுக்குப் பிறகு பிறந்த எனக்கு தெரியப்படுத்தும் நோக்கில்தான் அவர் அவ்வாறு கேட்டார். அதுவரை வெங்கட்சாமிநாதன் என்பவர் நாவலோ சிறுகதையோ எழுதுபவர் என்றுதான் எண்ணியிருந்தேன். படைப்பிலக்கியத்தை உருவாக்குபவர்களே இலக்கியவாதிகள் என்றும், விமர்சனக்  கட்டுரைகள்  எழுதுபவர்கள் படைப்பாளர்களே  இல்லை  என்றும்,  கருதியிருந்தேன்.

என் கருதுகோளிலிருந்த பிழையை உணர்த்தி, இலக்கியமும் விமர்சனமும் எத்தகையன என்பதை எனக்கு விளங்கப்படுத்தியதில் சுகனின் அன்புக்கு பெரும்பங்குண்டு. ‘பாலையும் வாழையும்’ கட்டுரையை வாசித்தால் அது ஒருவருடைய முதல் கட்டுரை என்று சொல்ல முடியாது. அந்த அளவுக்கு தீவிரமான இலக்கியப் பார்வையுடைய கட்டுரை அது. நம்முடைய பன்னெடுங்கால இலக்கிய பாரம்பர்யத்தை மீட்டெடுக்கும் சத்திய குரல் அக்கட்டுரையில் ஒலிக்கும்.

கேள்வியும் பதிலும் ஆவேசமும் பின்னிப்பிணைந்த அக்கட்டுரைகள் எழுப்பிய கேள்விகள் இன்றும் அப்படியேதான் இருக்கின்றன. அதற்கு விடைகாணும் முயற்சியில் ஒவ்வொரு படைப்பாளரும் எழுதித் தோற்கிறார்கள் அல்லது தோற்று எழுதுகிறார்கள். ஒருவர் நல்ல இலக்கியத்தை தேர்ந்துகொள்ள அக்கட்டுரையை மட்டும் வாசித்தாலே போதுமானது.

இலக்கிய வளர்ச்சிக்கு எவை எவை உதவுகின்றன, எவை எவை தடையாக இருக்கின்றன என்பதை அக்கட்டுரையில் சொல்லியிருக்கிறார். தனக்கு முன்பிருந்த கலை இலக்கிய விமர்சகர்களிடமிருந்து வேறுபட்டு, வெ.சா. தனித்து தெரியவும் அதுவே காரணமாயிருக்கிறது. வளர்ச்சியை நோக்க வேண்டுமானால் சிறந்ததை கண்டடைய வேண்டும் என்பதில் அவர் தெளிவோடு இருந்தார். அதன் பொருட்டே அவர் நம்முடைய பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ள நல்லனவற்றை பட்டியிலிடுகிறார்.

அது அவர் உருவாக்கிய பட்டியல், அதை எப்படி நல்லதாக ஏற்க முடியும் என்றவர்களைத் தாண்டிச்செல்லவும் அவர் தயங்கியதில்லை. வெங்கட் சாமிநாதன் பழக எளியவரல்ல. எந்த நேரத்திலும் சட்டென்று பிணங்கிக் கொள்வார். ஒரு மாமத யானையைக் கையாள்வதைவிட கடினமானது அவரையும் அவர் எழுத்துக்களையும் விளங்கிக்கொள்வது என்றுதான் பலரும் எனக்குச் சொல்லியிருந்தார்கள்.

ஒருவர் அறிமுகமாவதற்கு முன்பே அவரைப் பற்றிய கற்பிதங்களால் நான் கதிகலங்கிப் போயிருந்தேன். விமர்சகர் என்றால் அவரிடமிருந்து பத்தடியாவது தள்ளியிருக்க வேண்டும் என என் நெருங்கிய இலக்கிய நண்பர்களால் அறிவுறுத்தப்பட்டிருந்தேன். அந்த சமயத்தில்தான் எழுத்தாளர் தஞ்சை ப்ரகாஷ் ‘வெ.சா. எழுத்து’ என்றொரு மாத இதழைத் தொடங்கினார். முழுக்க முழுக்க வெங்கட் சாமிநாதனின் எழுத்துக்கள் மட்டுமே இடம்பெற்று வெளிவந்த இதழ் அது. பழப்புத்தாள்களில் அச்சிடப்பட்ட அவ்விதழ்களே எழுத்தின் மெய்யான நிறத்தை வெளிக்கொண்டு வந்தன.
 

(பேசலாம்...)

kungumam.co

Link to comment
Share on other sites

 

ஊஞ்சல் தேநீர்

யுகபாரதி - 16

வெங்கட்சாமிநாதன், கொள்கை சார்ந்து எழுதக்கூடியவர்களை ஒருபோதும் ஏற்காதவர். அதைவிட கொள்கை சார்ந்து எழுதுவதன் மூலம் அவர்கள் தங்கள் கோஷங்களை முன்வைக்கிறார்கள் என்பதுதான் அவர் கருத்தாக இருந்தது. அவர் எந்த இடத்திலும், தான் கொண்டிருந்த கருத்துகளுக்கான தர்க்க நியாயங்களை நிறுவாமல் இருந்ததில்லை. போகிற போக்கில் எழுத்தையும் எழுத்தாளர்களையும் அடித்து நொறுக்குவதாக தன் விமர்சனம் அமைந்துவிடக் கூடாது என்பதில் கறாராகவே இருந்திருக்கிறார்.
4.jpg
‘மார்க்சின் கல்லறையிலிருந்து ஒரு குரல்’, ‘இலக்கிய ஊழல்கள்’ ஆகிய நூல்களில் அந்தக் கறார்த்தன்மையை கவனிக்கலாம். நீதியைப் பறைசாற்ற எழுதப்படும் இலக்கிய எழுத்துகள் அதே நீதியோடு இருக்கவேண்டும் என்றே அவர் எண்ணினார். ஆனால், அவருடைய நீதி என்பது ஆரிய நீதியாகவும் மார்க்சியத்துக்கு எதிரான நீதியாகவுமே புரிந்துகொள்ளப்பட்டன.

‘ஒரு நல்ல படைப்பைக்கூட எழுதாத வெங்கட் சாமிநாதனுக்கு படைப்பிலக்கியத்தைப் பற்றி கருத்து சொல்ல என்ன தகுதி இருக்கிறது’ என்றுதான் அவருக்கு எதிரானவர்கள் அவர்மீது விமர்சனம் வைத்தார்கள். விமர்சனத்தை எழுதக்கூடிய அவர் தன்மீது வைக்கப்பட்ட எந்த விமர்சனத்தாலும் காயப்படவில்லை என்பது முக்கியமானது. தன் கருத்துக்கு எதிரானவர்களை தன் நூலுக்கு முன்னுரை எழுதித்தரும்படி கேட்டு, அம்முன்னுரையை அட்சரம் பிசகாமல் பிரசுரிக்கும் துணிச்சல் அவருக்கிருந்தது.

‘தன்மீது விமர்சனம் வைப்பவர்களை, தான் எப்படி எடுத்துக்கொள்கிறேனோ அதுமாதிரியே தன்னையும் தன்னுடைய விமர்சனத்தையும் பிறர் எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று அவர் விரும்பினார். ‘Poetic reality’ மற்றும் ‘analytical reality’ இரண்டின் ஊடாகவே அவர் தன் விமர்சனத்தை கட்டமைத்தார். கவித்துவ போஷாக்கு என்ற பதம் அவர் கட்டுரைகளில் இருந்து நான் தேர்ந்துகொண்டது.

அரைக்கால் டிராயரணிந்து இலக்கியக் கூட்டத்திற்குப் போய்வந்த நான், முழுக்கால் சட்டையணியும் பருவத்தில்தான் அவரை முழுமையாகப் புரிந்துகொள்ள முடிந்தது. அவருடைய விமர்சனக் கட்டுரைகளை ஊன்றிப் படித்ததன் விளைவாக நல்ல இலக்கியம் பிடிபட்டது. அவர் நல்ல இலக்கியம் என்று நிறுவ முயல்வது மக்களுக்கு எதிரானது என இடதுசாரிகள் கட்சி கட்டினாலும், மக்களைப் புறந்தள்ளியதே நல்ல இலக்கியம் என்று அவர் எங்கேயும் எழுதியதாகத் தெரியவில்லை.

ஒருவேளை அதைத் தெரிந்துகொள்ளும் அளவுக்கு என் இலக்கிய அறிவு விசாலமடையவில்லையோ என்னவோ. அவர், ஒவ்வொரு கட்டுரையிலும் வெகுமக்களை இலக்கியம் என்ற பேரால் ஏமாற்றாதீர்கள் என்றுதான் எழுதியிருக்கிறார். சிறுகதை, கவிதை, நாவல், ஓவியம், நாடகம், இசை, சிற்பம், கூத்து, திரைப்படம் என அத்தனை துறைகள் சார்ந்தும் அவர் எழுதியிருக்கிறார்.

‘பாலையும் வாழையும்’ என்ற கட்டுரையில் வடிவமைத்த அதே சட்டகத்தை வைத்துத்தான் பின்வந்த ஐம்பது ஆண்டுகளும் இலக்கியத்தை அவர் அளந்தாரா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். கால ஓட்டத்திற்கு ஏற்ப அவருமே சில மனத்தடைகளைக் கடந்திருக்கிறார். தன்னுடைய கருத்துகளில் பார்க்கத் தவறிய பகுதிகளை மீளவும் எழுதி தன்னைப் புதுப்பித்திருக்கிறார்.

வெ.சா.வை வாசிக்கத் தொடங்கி அவரை முழுமையாக உள்வாங்கிக் கொண்ட சந்தர்ப்பத்தில்தான் ‘கணையாழி’யில் பணியாற்றும் வாய்ப்பு வந்தது. அவர் எழுத்துகளை வாசித்து இருந்தாலும் அவருடனான அறிமுகமென்பது தாமதமாகத்தான் கிடைத்தது. அப்போது அவர் டில்லியில்தான் இருந்தார். ராணுவப் பாதுகாப்புத் துறையில் பணியாற்றியதாகக் கேள்வி. என்னுடைய ‘மனப்பத்தாயம்’,
 
‘பஞ்சாரம்’ ஆகிய நூல்களுக்கு அவர் எழுதிய விமர்சனக் கடிதம்தான் அவருக்கும் எனக்குமான அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. எழுத்தாளர் தஞ்சை ப்ரகாஷின் வாயிலாக நூல்களைப் பெற்றதாகவும், எழுதத் தோன்றியதால் விமர்சனம் எழுதியதாகவும் அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார். அக்கடிதம் என் கைக்குக் கிடைக்கும்வரை அவர் என்னுடைய கவிதைகளை முற்றாக நிராகரிப்பார் என்றுதான் நினைத்திருந்தேன்.

அடர்த்தியும் ஆழமும் நிறைந்த அவருடைய விமர்சனக் கட்டுரைகளை வாசித்த யார் ஒருவரும் அப்படித்தான் கருதுவார்கள். இலக்கிய ஜாம்பவான்களாக அறியப்படும் பலரையும் கேலியும் கிண்டலுமாக விமர்சிக்கக் கூடிய வெங்கட் சாமிநாதன், என்னைப் பற்றியெல்லாம் எழுதுவார் என்று யூகிக்க வாய்ப்பில்லை. ஆனால், அவர் எழுதியிருந்தார். அந்த விமர்சனக் கடிதம் வியப்பு கலந்த பரவசத்தை என்னுள் பரவவிட்டது.

நான் சற்றும் எதிர்பாராத விதத்தில் அவருடைய விமர்சனம் அமைந்திருந்தது. ‘பல நேரங்களில் யுகபாரதி எனக்கு புதுமைப்பித்தனையும் பிச்சமூர்த்தியையும் நினைவுபடுத்துகிறார். ஒருவரிடத்தில் கேலியும் மற்றவரிடத்தில் விடம்பனமும். இரண்டிலும் சமூக விமர்சனம். இருவரிடமும் கவிதை யாப்பை, சந்தத்தை, முற்றாக ஒதுக்கியதாக சொல்ல முடியாது. அதற்காக அதையே கட்டியழுது, கருத்தையும் கவிதையையும் கோட்டை விட்டவர்களும் இல்லை’ என்று நீளும் அந்த விமர்சனக் கட்டுரை, ‘என் பார்வையில் கவிதைகள்’ என்னும் நூலில் இடம்பெற்றிருக்கிறது.

அந்நூலில் நான் உள்பட பல இளம் கவிஞர்களின் கவிதைகள் குறித்து வெ.சா. எழுதியிருக்கிறார். 1960ல் எழுதத் தொடங்கிய அவர் இரண்டாயிரத்தி சொச்சம்வரை வெளிவந்த படைப்புகளை விமர்சித்திருக்கிறார். ஒரு விமர்சகர், இவ்வளவு நீண்ட காலம் விமர்சனத் துறையில் பங்களிப்புச் செய்ததில்லை. எதிர்க் குரலாகவும் தனிக்குரலாகவும் அவர் சதா தன் வழியில் பயணப்பட்டிருக்கிறார்.

அந்தப் பயணத்தில் அவருக்கு எந்த ஆதாயமும் கிடைத்துவிடவில்லை. தமிழ், தன்னுடைய இலக்கியச் செழுமையை அவர் மூலம் கண்டடைந்தது. அவர் வெற்றுக் கூச்சலில் இருந்து நல்ல சங்கீதத்தைத் தரம் பிரித்தார். மோசமான சேஷ்டைகளில் இருந்து அரிய அபிநயங்களை நாடகங்களுக்குக் கடத்தினார். ‘அக்ரஹாரத்தில் கழுதை’ என்னும் ஜான் ஆபிரஹாமின் திரைப்படத்திற்கு மரியாதை செய்தார். நல்ல இலக்கியத்தை வரும் காலத்திற்கு காட்டிச்செல்வதே அவர் வாழ்வாக இருந்திருக்கிறது.

எனினும், கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு வழங்கிய இயல் விருதைத் தவிர அவர் எழுத்துகளுக்கு எவ்வித கெளரவமும் அந்தஸ்தும் அளிக்கப்படவில்லை. சிறு சிறு பத்திரிகைகளில் அவர் ஓயாமல் எழுதிக்கொண்டே இருந்தார். கண்ணில் படும் நல்ல சிறுகதையை, கவிதையை மெச்சினார். கவிதைபோல ஏமாற்று செய்தால் கண்டித்தார். ஒரு பத்திரிகை எத்தனை பிரதிகள் விற்கும் என்று கேட்டுக்கொண்டு அவர் எழுதியதில்லை.

பரவலாக அறியப்படாத பல சிற்றிதழ்களில் அவர் எழுதியிருக்கிறார். எதன்மூலமும் தன் விவாதத்திற்கு வலுசேர்க்க முடியும் என அவர் நம்பினார். அதிகாரமோ கூட்டமோ அவருடைய விமர்சனத்தைத் தீர்மானிக்கவில்லை. கடைசிவரை தன்னுடைய இருப்பு குறித்த இலட்சினை இல்லாமல்தான் அவர் செயல்பட்டிருக்கிறார். மார்க்சீய மறுப்பாளராகவும் திராவிட இயக்க எதிர்ப்பாளராகவும் புரிந்துகொள்ளப்பட்ட அவர், ஒரு சமயத்தில் கலைஞர் கருணாநிதியின் படைப்புகளையும் திராவிட இயக்க கருத்துக்களையும் விமர்சித்து காத்திரமாக எழுதுகிறார்.

அதே சமயத்தில் அவருடைய மகளான கனிமொழியின் கவிதைகளில் உள்ள உண்மையைத் தொட்டுக் காட்டுகிறார். இந்த முரணிலிருந்துதான் அவருடைய எழுத்து ஜீவிதத்தை அல்லது சத்தியத்தை சந்தேகிக்க முடியாமல் போகிறது. ஒரு பெருங்கூட்டம் தன்னுடைய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கக்கூடும் என அவர் அஞ்சியதில்லை. மனதில் பட்டதை எந்த முகமூடியும் அணியாமல் வெளிப்படுத்துபவராக இருந்திருக்கிறார்.

எத்தனைபேர் தன்னுடைய எழுத்துகளையும் கருத்துகளையும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்னும் எதிர்பார்ப்பு அவருக்கு இருந்ததாகத் தெரியவில்லை. ஆற்றொழுக்காக அவர் எழுதிச்செல்லும் நடை, எதிரே இருப்பவருடன் உரையாடுவது போலிருக்கும். பெரிய பெரிய தர்க்கங்களைக்கூட வெகு எதார்த்தமான மொழியில்தான் எழுதிச்செல்கிறார். தன்னுடைய கருத்துக்கு வலுசேர்க்கும் மேற்கோள்கள் அவருடைய எழுத்து நடையின் இயல்பிலேயே வந்து சேர்ந்துகொள்கின்றன.

அங்கீகாரங்களுக்காகவோ கெளரவங்களுக்காகவோ அவர் எழுதியதில்லை. மாறாக, தங்கள் படைப்பு குறித்து அவர் எழுதினால் அதுவே இலக்கிய அங்கீகாரம் என்று எண்ணும் நிலையை அவர் ஏற்படுத்தினார். அப்படிப்பட்ட வெங்கட்சாமிநாதன் என் கவிதைகள் குறித்து எழுதியதும் எனக்குத் தலைகால் புரியவில்லை. என்னைச் சந்திக்க வருபவர்களிடமெல்லாம் அக்கடிதத்தைக் காட்டி பெருமிதப்பட்டுக்கொண்டேன்.

“வெ.சா.வே உன்னை புகழ்ந்திருக்கிறார் என்றால் நீ பெரிய ஆள்தான்” என்றார்கள். “புதுமைப்பித்தனும் பிச்சமூர்த்தியும் உன் கவிதைகள் மூலம் நினைவுக்கு வருகிறார்கள் என்றால், அது சாதாரண வார்த்தையில்லை. அவருக்கு நன்றிக் கடிதம் எழுது” என்றார்கள். எனக்கோ நன்றி சொல்லி எழுத மனமில்லை. ஆதலால், ‘கடிதம் கிடைத்தது. மகிழ்ச்சி’ என்று மட்டும் பதினைந்து பைசா போஸ்ட் கார்டை அனுப்பிவைத்தேன்.

வரும் வாரம் சென்னை வர வாய்ப்பிருக்கிறது. முடிந்தால் சந்திக்கலாம் என்று அவரும் பதில் எழுதினார். சொன்னதுபோலவே சென்னை வந்ததும் என்னைத் தொடர்பு கொண்டார். அவர் தொடர்பு கொண்ட அன்று மேக்ஸ்முல்லரில் ஏதோ ஒரு நாடகம் அரங்கேற்றம் நிகழ்ந்ததாக நினைவு. அங்குதான் அவரைச் சந்தித்தேன். ஆரத்தழுவிக்கொண்டார்.

“நீர் இவ்ளோ சின்னப் பொடியன்னு நெனைக்கலேய்யா. நல்லா எழுதுறீர். இன்னும் நல்லா தொடர்ந்து எழுதும். என்ன செஞ்சிக்கிட்டு இருக்கிறீர்? பிரகாச பாத்தீங்களா?” என்று ஆரம்பித்த அந்த உரையாடல் மூன்று மணிநேரம் நீடித்தது. அவரிடமிருந்து வெளிப்பட்ட வாஞ்சை, அவர் எழுத்தில் வெளிப்படும் மூர்க்கத்திற்கு சம்பந்தமில்லாமல் இருந்தது. “ஒங்க எழுத்துக்கள படிச்சிருக்கேன். எல்லாத்தையும் அடிச்சி நொறுக்குறீங்களே” என்றேன். “அடிச்சி நொறுக்குற அளவுக்கு நம்மிடம் பலமில்லய்யா.. பட்டத சொல்றேன், அது உமக்கு அடிச்சி நொறுக்குறாப்புல இருக்குது” என்றார்.
 

(பேசலாம்...)

kungumam.co.

Link to comment
Share on other sites

 

ஊஞ்சல் தேநீர்

யுகபாரதி - 17
 
காவி நிற ஜிப்பாவில் சோடாபுட்டி கண்ணாடியுடன் ஒரு தமிழ்பேசும் டில்லிவாலாவாக அவரிருந்தார். அந்த சித்திரமே இன்றும் என் நெஞ்சில் நிழலாடுகிறது. கீழ்ப்பகுதி முழுக்க சுருக்கமான அவருடைய ஜிப்பாவில் அவ்வப்போது கண்ணாடியைத் துடைத்துக்கொண்டார். ‘காஃபி சாப்புடுவோமா?’ என்றார். ‘டிகிரி காஃபி இருந்தால் பிரமாதமாயிருக்கும்’ என்றார்.
22.jpg
அங்கிருந்து ஆட்டோ பிடித்து பாண்டி பஜாரிலுள்ள கீதா கஃபேவுக்கு வந்தோம். நல்ல காஃபிக்காக எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பிரயாணம் செய்ய அவர் தயாராயிருந்தார். நல்ல எழுத்துக்காக அதைவிட அதிக தூரம் பயணிக்கும் மனம் எனக்கிருந்தது. கிளிப்பிள்ளைக்கு சொல்லுவதைப்போல படிக்க வேண்டிய நூல்களைப் பட்டிய லிட்டார்.

அந்த சந்திப்புக்குப் பின் சிலகாலம் டில்லியிலிருந்து அவ்வப்போது கடிதம் எழுதினார். என்னை நேரில் சந்தித்த பிறகும் அவர் என்னை சின்ன பொடியனாக எண்ணாமல்தான் கடிதம் எழுதினார். ஓராண்டு இடைவெளியில் பணி ஓய்வு பெற்று சென்னைக்கே வந்துவிட்டார். தூரத்தில் இருந்தே தூண்டிக்கொண்டிருந்த அவர் அருகில் வந்ததும் அடிக்கொருதரம் அவரைப் பார்க்கவும் பேசவும் முடிந்தது.

மடிப்பாக்கத்தில் அமைந்திருந்த அவர் வீட்டிற்கு என்னுடன் பல இலக்கியத் தோழர்கள் வந்திருக்கிறார்கள். யாரை அழைத்துப்போனாலும் முகம் கோணாமல் பேசிக்கொண்டிருப்பார். ‘எப்பவுமே ஒம்ம சுத்தி ஆள் இருக்கு, அப்பறம் எப்படிய்யா எழுதுறீர்?’ என்பார். ‘எழுதறப்போ யாரும் இருக்கிறதில்ல’ என்றால் சிரித்துக்கொள்வார். ‘நம்புறேன் நம்புறேன்’ என்பார். தமிழ் இலக்கியத்தின் மூத்த விமர்சகர் அல்லது விமர்சன முன்னோடி ஒருவருடன் பழகுகிறோம் என்ற எண்ணத்தை அவர் எப்போதும் ஏற்படுத்தியதில்லை.

அவர் எழுதிய கட்டுரைகளைக் கொடுத்து ‘என்ன நினைக்கிறீர் இதுபற்றி’ என்பார். ‘நீங்களே பெரிய கருத்து கந்தசாமி, ஒங்க கட்டுரைக்கு நாங் கருத்து சொல்றதா’ என்று கலாய்ப்பேன். சிரித்துக்கொண்டே வழியனுப்பு வார். அவர் பழக எளியவரல்ல. சட்டென்று பிணங்கிக்கொள்வார் என்ற கூற்று என் விஷயத்தில் பொய்த்துப்போனது. உரிமையோடு அவருடன் பழக முடிந்தது. அவரைப் போல அவர் மனைவியான சரோஜா அம்மா, நான் போனதும் டபரா செட்டில் நுரைபொங்க டிகிரி காஃபியால் அன்பைப் பொழிவார்.

‘தஞ்சாவூர்க்காரங்களுக்கு காஃபியும் இலக்கியமும் இருந்தால் போதும், பேசிக்கொண்டே இருப்பீர்கள்’ என்பார். இந்த நினைவுகள் எல்லாம் பத்து பனிரெண்டு ஆண்டுகளுக்கு முந்தியவை. பராமரிக்கப்படாத ஒரு பழைய சைக்கிளில் கொட்டிவாக்கத்திற்கும் மடிப்பாக்கத்திற்கும் அலைந்து திரிந்த காலத்தில் விளைந்தவை. ஒரு சிறு பத்திரிகையில் உதவி ஆசிரியர் என்னும் பதவி உடலையும் உள்ளத்தையும் வருத்தக்கூடியதென்னும் தெளிவை அப்போது நான் பெற்றிருக்கவில்லை.

அங்கும் இங்கும் தனி ஆளாக சைக்கிளில் பறந்து பறந்து வாழ்வையும் இலக்கியத்தையும் தேடிக்கொண்டிருந்தேன். எழுத்தாளர். சுஜாதாவின் வீடு அமைந்திருந்த ஆழ்வார்பேட்டையில் கடைசி பக்க கட்டுரை வாங்க கால்கடுக்கக் காத்திருக்கிறேன். எதிரே அமைந்திருந்த எழுத்தாளர் இந்திராபார்த்தசாரதி வீட்டில் தாகம் எடுக்கும் போதெல்லாம் தண்ணீர் குடித்திருக்கிறேன். என்னவாகப் போகிறோம் என்ற தெளிவில்லாமல் சென்னைக்கு வந்திருந்தாலும் ஏதோ ஒன்றாக ஆகிவிடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது.

வெ.சா வேறு புதுமைப்பித்தனையும் பிச்சமூர்த்தியையும் ஒப்பிட்டுச் சொல்லிவிட்டதால் அவர்கள் இருவரில் ஒருவராக ஆகியே தீருவதென்ற ஏக்கம் என்னை துரத்திக்கொண்டிருந்தது. அது அவ்வளவு எளிதான காரியமில்லை என்று நான் சந்தித்த எந்த எழுத்தாளரும் எனக்குச் சொல்லவில்லை. வெ.சா மாதிரி வேறு யாரோ ஒருவர் பாரதிக்கும் மெளனிக்கும் இணையாக வருவீர்கள் என்று அவர்களைச் சொல்லியிருக்கலாம்.

சிறிது காலம் ‘கணையாழி’ பத்திரிகையோடு பிணக்குற்றிருந்த வெ.சா என்மீதுள்ள அன்பினால் அதில் எழுத சம்மதித்தார். தொடர் கட்டுரைகளாக நிறைய எழுதினார். சொன்ன தேதியில் கட்டுரைகளைத் தந்துவிடுவார். அடித்தல் திருத்தல் இல்லாமல் வெகு அழகாக அவர் எழுத்திருக்கும். குண்டு குண்டான எழுத்துக்களில் வாக்கியங்களையும் பத்திகளையும் நேர்த்தியாகப் பிரித்திருப்பார்.

இடையில் எதையாவது சேர்க்க வேண்டுமானால் கடைசி பக்கத்தில் சிவப்பு மையினால் எழுதி, இந்த இடத்தில் இதை சேர்த்துக்கொள் என்று அம்புக் குறியிட்டு அனுப்புவார். அப்போது ‘கணையாழி’யில் இலக்கிய ஆளுமைகள் குறித்து தனித் தனி சிறப்பிதழ் வெளியிடலாம் என ஆசிரியர் குழு முடிவெடுத்தது. ஆசிரியர் குழு என்றால் ஆசிரியர்தான். அவரைத் தாண்டி அங்கே குழுவெல்லாம் ஒன்றுமில்லை.

ஆலோசனைக் குழுவென்று சில பெயர்கள் அச்சாகியிருக்கும். அங்கு பணியாற்றிய ஆறு ஆண்டுக்காலத்தில் அந்த ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்த பலரை நானே சந்திக்கவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். முதலில் கலைஞர் சிறப்பிதழ் கொண்டுவரலாம் என்றதும் எனக்கு திக்கென்றிருந்தது.

இலக்கியவாதிகள், அதுவும், ‘கணையாழி’யை தொடர்ந்து வாசிக்கும் தீவிர இலக்கியவாதிகள் கலைஞரை இலக்கியவாதியாக ஒப்புக்கொள்ளாத நிலையில் இப்படியொரு சிறப்பிதழ் என்றால் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்றேன். ‘என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம். வெங்கட்சாமிநாதனிடம் கட்டுரை கேளுங்கள்’ என்றார் ஆசிரியர்.

ஏற்கனவே வெங்கட்சாமிநாதன் திராவிட இலக்கியங்களைத் திட்டித் தீர்த்திருக்கிறார். இந்த நிலையில் கலைஞரைப் பற்றி எழுதச் சொன்னால் என்ன சொல்வாரோ என்று தயக்கத்தோடு ‘கேட்டுப்பார்க்கிறேன்’ என்றேன். என்னுடைய தயக்கத்திலுள்ள நியாயத்தைப் புரிந்துகொண்ட ஆசிரியர், ‘நீங்கள் சொல்வதும் சரிதான். கேட்டுப்பாருங்கள். தவிர்த்தால் விட்டுவிடலாம். வேறு யாரிடமாவது வாங்கிக்கொள்ளலாம்’ என்றார். அன்று மாலையே சைக்கிளை எடுத்துக்கொண்டு வெ.சாவைப் பார்க்க மடிப்பாக்கம் கிளம்பினேன்.

‘வாம்மய்யா என்ன விசேஷம்’ என்றார். ஆசிரியர் விருப்பத்தை தெரிவித்தேன். ‘நீ சொன்னா எழுதுறேன்ய்யா. அவரு எழுதின மொத்த புஸ்தகத்தையும் வாங்கிட்டு வா, படிச்சிப் பார்த்துட்டு சொல்றேன். ஆனா ஒண்ணு, எனக்கு புடிக்கலன்னா... வற்புறுத்தக்கூடாது. சரியா’ என்றார். இரண்டொரு நாளில் மொத்த புத்தகங்களையும் வாங்கிக்கொண்டுபோய் கொடுத்தேன். ‘இவ்வளோவாய்யா அவரு எழுதியிருக்காரு’ என்றார். இரண்டு மூன்று நூல் அச்சிலிருக்கிறதாம் என்றதும் பெருமூச்சுவிட்டார்.

புத்தகங்களைக் கொடுத்த இரண்டாவது வாரத்தில் மிக நீளமான கட்டுரை ஒன்றை எழுதிக்கொடுத்தார். சிறப்பிதழுக்குப் போதுமான கட்டுரை அது. கலைஞரின் மொத்த படைப்புகளையும் வரிவிடாமல் குறிப்பிட்டிருந்தார். ஒருவர் தன் ஆயுள் காலத்தில் இவ்வளவு எழுதியிருக்கிறார் என்பதற்காகவே பாராட்டப் பெறுவார் என்று கட்டுரையை முடித்திருந்தார். எங்கேயும் இலக்கிய நயத்தையோ இதுபோல் இலக்கியத்தில் எழுதப்பெறவே இல்லை என்றோ சிலாகிக்கவில்லை.

தொடர்ந்து எழுதுவதே பெரும்சாதனை என்பதோடு நிறுத்திக்கொண்டார். சிறப்பிதழ் வெளிவந்தது. பெரும் பரபரப்புக்கு உள்ளான அக்கட்டுரை கலைஞராலும் வாசிக்கப்பட்டது. வெ.சாவுக்கு என்ன ஆயிற்று, கலைஞரைப் பற்றியெல்லாம் எழுதுகிறாரே என்று பிற சிற்றிதழ்கள் விமர்சித்தன. தன்னை நேசிக்கும் ஒருவன் கேட்டதற்காக எழுதினேன் என்று அவர் எங்கேயும் இறுதிவரை சொல்லவில்லை. தன்னுடைய தராசு நிலை தாழ அவர் அக்கட்டுரையை எழுதவில்லை.

மிக ஜாக்கிரதையாகவே எழுதியிருந்தார். என்றாலும், அக்கட்டுரையை எழுத வேண்டிய அவசியம் என்மீது வைத்திருந்த அன்பினால் நேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. விருப்பமில்லாமல் செய்ததாக அவர் நேர்ப்பேச்சிலோ கட்டுரையிலோ வெளிப்படுத்தவில்லை. உண்மை விபரீதமானதே அய்யா என்றுதான் அங்கலாய்த்தார். நான் எழுதுவதில் கசப்பு ஏற்பட்டால் உமக்கும் ஆசிரியருக்கும் பங்கம் வருமே என்றுதான் வருத்தப்பட்டார்.

அதன்பின் திரைத்துறையில் நான் பாடலாசிரியனாக மாறினேன். என்னுடைய பாடல்களைக் கேட்டுவிட்டு அவ்வப்போது தொலைபேசியில் வாழ்த்துவார். ‘சிநேகா என்னய்யா சொல்றாங்க’ என்பார். ‘மீரா ஜாஸ்மின் மலையாளப் பெண்தானே. அதையேன் பிசாசு என்று வர்ணித்து இருக்கிறீர்’ என்பார். ‘கேரள நாட்டிளம் பெண்களுடனேன்னு அந்த பாரதி எழுதினத  நீர் படிச்சதில்லையோ’, ‘இன்னும் உயரம் போகணுமய்யா, எடுத்ததில் பின் வாங்காதே. என்ன இருக்குதுன்னு பாரு.

கம்பதாசனப் பத்தி க.நா.சு. சொல்லியிருக்கிறார் தெரியுமோ?’ என்பார். தீவிர இலக்கியத்தில் இருந்து வெகு மக்களை நோக்கி நகர்ந்துவிட்ட பிற்பாடும் அதே அன்போடுதான் அவர் என்னிடம் நடந்துகொண்டார். ‘சினிமா சினிமான்னு இலக்கியத்த விட்டுடாத ஓய்’ என்று எச்சரித்தார். அவரை எண்ணவும் சொல்லவும் எவ்வளவோ இருக்கின்றன.

அரை நூற்றாண்டு இலக்கியத்திற்காக உழைத்த அவருடைய அன்பு இலக்கியக் கருதுகோள்களுக்கு அப்பாற்பட்டது. திடீரென்று ஒருநாள் மதியம் அவரிடமிருந்து தொலைபேசி வந்தது. ‘என்னுடைய கட்டுரைகளை எல்லாம் தொகுத்து முழு புத்தகமாகப் போடவேண்டும். உனக்குத் தெரிந்த பதிப்பகம் இருந்தால் சொல்லேன்’ என்றார். ‘நிச்சயமாக சொல்கிறேன், அல்லது நாமே பதிப்பிக்கலாம்’ என்றேன்.

அதுதான் அவரும் நானும் கடைசியாக உரையாடியது. தொகுத்துவிட்டு கூப்பிடுவதாக தொலைபேசியை துண்டித்தார். அது, கடைசி உரையாடலாக, கடைசித் துண்டிப்பாக இருக்கும் என்று நான் அறிந்திருக்கவில்லை. கிராமத்திலிருந்து பஞ்சம் பிழைக்க வந்து, பல்வேறு வேலைகளைச் செய்து, கொஞ்சம் கவிதைகளையும் எழுதி, இறுதியில் பாடலாசிரியனாக அறியப்படும் நான், வயது வித்தியாசமில்லாமல் எல்லா இலக்கியவாதிகளிடமும் பழகிக் கொண்டிருக்கிறேன்.

நான் அவர்களுடன் பழகிக்கொண்டிருக்கிறேன் என்பதைவிட அவர்கள் என்னை அனுமதிக்கிறார்கள் என்பதுதான் விசேஷம். ஒருவர் மீது அன்பு செலுத்த இலக்கியத் தகுதிகளோ இன்னபிற காரணங்களோ அவசியப்படுவதில்லை. வெ.சா தன்னுடைய காலத்தில் கண்டடைந்த உண்மையாக என்னிடம் பகிர்ந்துகொண்டதும் அதுதான். சத்தியத்தை விமர்சிக்க வாய்ப்பில்லை. காரணம், விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதே சத்தியமும்.
 

(பேசலாம்...)

www.kungumam.co

Link to comment
Share on other sites

 
 

ஊஞ்சல் தேநீர்

யுகபாரதி - 18

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர்கள் யாரைத் தங்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்கிறார்களோ அவரே முதல்வராகும் தகுதியுடையவர். இதுவே, இந்திய ஜனநாயகத்தின் நடைமுறை என்று சட்டம் சொல்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்றோ, தேர்ந்தெடுக்கப்பட்டபின் அவர்களின் சுயரூபம் தெரியவந்தால் அவர்களைத் திரும்ப அழைத்துக்கொள்ளலாம் என்றோ அது சொல்லவில்லை.
2.jpg
இதன்  காரணமாக யார் யாரோ முதல்வர் ஆகும் தகுதியைப் பெற்றுவிடுகிறார்கள். யார் வேண்டுமானாலும் முதல்வராகலாம் என்பது ஜனநாயகத்தின் சிறப்பாகக் கருதப்படும் அதே வேளையில் ஜனநாயகத்தின் சிக்கலாகவும் அது அமைந்திருப்பது தவிர்க்கமுடியாதது. இதுவரை இந்திய ஜனநாயகத்தின் மீது கேள்வி எழுப்பாத தமிழர்கள் சமீபகாலங்களில் அதுகுறித்து ஆழ்ந்து சிந்தித்து விவாதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

நாங்கள் யாரை முன்நிறுத்தி வாக்களித்தோமோ அவர் மரணமடைந்துவிட்டால் உருவாக்கப்பட்ட ஆட்சியைக் கலைத்துவிடவேண்டும் என்று கூக்குரலிடுகிறார்கள். முன்னெப்போதையும்விட தற்போதைய தமிழக அரசியல் களத்தில் நிகழ்ந்துவரும் மாற்றங்கள் அவர்களுக்கு அளவில்லாத அச்சத்தையும் நிலையற்ற தன்மையையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.
2a.jpg
மக்கள் ஒருமுறை விரும்பி வாக்களித்துவிட்டால் அதன் பின் ஐந்தாண்டுகளுக்கு கேள்வியே கேட்கமுடியாது என்னும் நிலை ஜனநாயகத்தின் சாதகமா பாதகமா என்று யூகிக்க முடியவில்லை. ஏழு மாதத்தில் மூன்று முதல்வர்கள். இந்த நிலையில் தற்போது அமைக்கப்பட்டிருக்கும் அமைச்சரவை எத்தனை காலத்திற்கு தாக்குப்பிடிக்கும் எனச் சொல்வதற்கில்லை.

ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் கட்சியின் பொதுச்செயலாளர் சிறையிலிருக்கிறார். சிறையிலிருக்கும் பொதுச்செயலாளரின் ஆலோசனைப்படி ஆட்சி நடக்கிறது. அவர் சிறையில் இருப்பது தேச நலனுக்காக நடத்திய போராட்டத்திற்காக அல்ல. வருமானத்திற்கு அதிகமாக முந்தைய ஆட்சியில் சொத்து சேர்த்ததற்காக. அமைச்சரவை ஜனநாயக நடைமுறைப்படி ஆட்சிக்கட்டிலில் ஏறியிருந்தாலும் எப்போது இறங்குமோ என்னும் அச்சம் மக்களிடம் பற்றிக்கொண்டிருக்கிறது.

இந்த அச்சத்தையும்அதிருப்தியையும் போக்கக்கூடிய வழிகள் சட்டத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. கட்சியை வழிநடத்தும் பொறுப்பை வகித்த ஒருவரே ஆட்சியை வழிநடத்தும் அருகதையுடையவர் என மக்கள் நம்புகிறார்கள். நிர்வாகம் என்பது கோப்புகளில் கையெழுத்து போடுவது மட்டுமில்லை. ஒரு முதல்வர், விரைந்து முடிவெடுத்து சகல துறைகளையும் செயல்படவைக்கும் செயல் ஊக்கியாக இருக்கவேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள்.

தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களைக் கேள்விகேட்கும் அதிகாரமுடையவராக முதல்வர் இருக்கவேண்டும் என நினைக்கிறார்கள். அது சட்டத்தால் வரையறுக்கப்படவில்லை. முதல்வரின் வேலை என்ன என்பதை மக்களாக புரிந்துகொண்டதிலிருந்து உருவான சித்திரம். இந்த சித்திரத்தை ஏற்கனவே முதல்வர்களாக இருந்தவர்களே அவர்களுக்கு வடித்துக்கொடுத்தார்கள்.

ஒருவர் போல் இன்னொருவர் இல்லை என்றாலும்கூட தனித்தன்மை வாய்ந்தவர்களாக நம்முடைய முந்தைய முதல்வர்கள் இருந்திருக்கிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் நீங்கலாக நம்முடைய முதல்வர்கள் அத்தகைய ஆளுமை பொருந்தியவர்களாக இருந்திருக்கிறார்கள். அகில இந்திய அளவில் தங்கள் ஆளுமையினால் ஆதிக்கம் செலுத்தக்கூடியவர்களாக அறியப்பட்டிருக்கிறார்கள்.

சிந்தாந்த ரீதியிலும் செயல்பாட்டிலும் அவர்கள் உருவாக்கித் தந்த சித்திரத்தை இழக்க மக்களுக்கு மனமில்லை. ஏற்கனவே இருந்த தலைவர்களும் முதல்வர்களும் கட்சியாலும் கொள்கையாலும் வேறுபட்டு இருந்தாலும் அவர்கள் தங்கள் தகுதிகளை தக்க சமயத்தில் நிரூபித்துக்காட்டியிருக்கிறார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்த சி.என்.அண்ணாதுரை ஆட்சிப் பொறுப்பேற்று ஐம்பதாண்டுகள் ஆகும் இத்தருணத்தில், ஒரு முதல்வர் எப்படி இருக்கவேண்டும் என எண்ணும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தமிழர்களாகிய நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். இக்காலகட்டத்தை திராவிடக் கட்சிகளின் வீழ்ச்சி என்றும், ஊழல்வாதிகளின் கையில் ஆட்சியும் அதிகாரமும் சிக்குண்டு கிடக்கின்றன என்றும் பலரும் பலவாறாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். 

இதில் என்ன வேடிக்கை என்றால் நம்முடைய தலைவர்களிலும் முதல்வர்களிலும் முன்மாதிரிகளாக அநேகம்பேர் இருந்திருக்கிறார்கள் என்பதுதான். இவ்வளவு பெருந்தகைகள் இருந்தும்கூட நம்மால் இன்றைக்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் சர்ச்சைகளுக்கு முடிவுகட்ட இயலவில்லை. எல்லாத் தகுதிகளையும் பெற்ற ஒருவர்தான் முதல்வராக முடியும் என்று சட்டமோ மரபோ வரையறுக்கவில்லை.

ஆனால், நம்முடைய எதிர்பார்ப்புகள் சட்டத்தையும் மரபையும் மீறியதாக இருக்கின்றன. காரணம், யார் யாரெல்லாம் அமர்ந்திருந்த இருக்கை என்று சிலாகிக்கும் அளவுக்கு நம்முடைய முந்தைய முதல்வர்கள் இருந்திருக்கிறார்கள். குறிப்பாக, ஓமந்தூரார். சுதந்திர இந்தியாவின் முதல் சென்னை மாகாண முதல்வராகப் பதவி வகித்த ஓ.பி.ராமசாமி ரெட்டியார், ஓமந்தூரார் என்றே அறியப்படுகிறார்.

எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவர் முதல்வராகப் பதவியேற்ற பிற்பாடும்கூட தன்னை ஒரு விவசாயியாகக் காட்டிக்கொள்ளவே விருப்பப்பட்டிருக்கிறார். இறுதிவரை எளிமையும் நேர்மையுமாகக் காட்சியளித்த அவர், ஆட்சிபுரிந்தது வெறும் இரண்டே இரண்டு ஆண்டுகள்தான். ஆனால், அந்த இரண்டு ஆண்டுகளை விட்டுவிட்டு தமிழக அரசியலை எழுத முடியாது என்னும் நிலையை அவர் ஏற்படுத்தியிருக்கிறார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலிலதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் அவருக்கு உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றனவா எனும் ஐயம் எல்லாமட்டத்தினராலும் எழுப்பப்படுகிறது. அவர் மறைந்துவிட்டாலும்கூட அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் சிக்கல் இருப்பதாக அவரால் அடையாளங் காட்டப்பட்ட வர்களே சொல்லிவருகிறார்கள்.

உண்மையை அறிய விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட வேண்டும் என்பதுவரை அவ்விவாதம் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால், அதே முதல்வர் பதவியை வகித்த ஓமந்தூரார் உடல் சுகமில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது தனக்கு எந்தவிதமான சிறப்பு சிகிச்சையும் அளிக்கப்படக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்.

உடல் நலமில்லாமல் சென்னை பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், மருத்துவர்களுக்கு இரண்டு நிபந்தனைகளை விதித்திருக்கிறார். முதலாவது நிபந்தனை, எல்லா மக்களுக்கும் கொடுக்கப்படுகின்ற மருந்துகளும் கவனிப்பு முறைகளும்தான் தனக்கும் கொடுக்கப்பட வேண்டும். எனக்கென்று தனியாக மருந்துகளோ கவனிப்புகளோ கூடாது; வெளி நாட்டிலிருந்து மருந்துகளோ மருத்துவர்களோ வரவழைக்கக்கூடாது.

இரண்டாவது நிபந்தனை, எனக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் சிகிச்சை முடிந்தபிறகு என்னிடம் வந்து எந்த சலுகையும் கேட்கக்கூடாது. இரண்டு நிபந்தனைகளுக்கும் மருத்துவக்குழு ஒப்புதல் அளித்த பிறகே மருத்துவமனையில் சேர சம்மதித்திருக்கிறார். தான், மக்களிடமிருந்து எந்தவிதத்திலும் தனிமைப்பட்டுவிடக் கூடாது என்னும் எண்ணமுடையவராக அவர் இருந்திருக்கிறார். பொது மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறையினால்தான் தானும் கவனிக்கப்படவேண்டும் என அவர் விரும்பியிருக்கிறார்.

மக்கள் பிரதிநிதியாக தன்னை வரித்துக்கொண்ட ஒருவர், மக்களில் ஒருவராகத் தன்னையும் கருதிக்கொள்வதில் உள்ள மகோன்னதத்தை உணர்ந்தவராக அவர் இருந்திருக்கிறார். தவிர, நம்முடைய அரசு பொது மருத்துவமனைகளின் சிகிச்சைமுறைகளில் நம்பிக்கையுடையவராகவும் அவர் இருந்திருக்கிறார். அதிகாரமிருக்கிறது என்பதற்காகவோ பணமிருக்கிறது என்பதற்காகவோ தான் ஒரு விசேஷ ஜந்து என்று அவர் தன்னைக் கருதிக்கொள்ளவில்லை.

இன்றைக்கு செய்தித்தாளைப் பிரித்தால் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவதும் சுட்டுக்கொல்லப்படுவதும் தலைப்புச் செய்தியாக இருக்கிறது. கேள்விகேட்க நாதியற்றவர்களாக தமிழக மீனவர்கள் நிறுத்தப்படுகிறார்கள். கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் அவர்கள் வீடு திரும்புவார்களா என்பதற்கு உத்தரவாதமில்லை. மீனை அவர்கள் பிடிப்பார்களா, இல்லை இலங்கை கடற்படை அவர்களைப் பிடித்துப்போகுமா என்னும் நிலைதான் நிலவுகிறது.

மீன்வளத்துறை அதிகாரிகளோ மந்திரிகளோ இந்த அசம்பாவிதங்களை தடுக்கக்கூடியவர்களாக இல்லை. மாறாக, நம்முடைய மீனவர்கள் எல்லைதாண்டிப் போய் மீன்பிடிப்பதால்தான் இப்படியெல்லாம் நடக்கின்றன என்கிறார்கள். மீன்வர்களைக் கேட்டால் மீன் இருக்கும் இடத்தில்தானே வலையை வீசமுடியும் என பதிலளிக்கிறார்கள். ஓமந்தூரார் காலத்திலும் மீன் வளத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இப்படித்தான் இருந்திருக்கிறார்கள்.

உணவுப் பற்றாக்குறை நிலவிக்கொண்டிருந்த அச்சூழலில், கடலில் மீன் வளத்தைப் பெருக்க வேண்டும் என அதிகாரிகளை அழைத்து ஓமந்தூரார் கோரிக்கை வைக்கிறார். கடல் வளத்தை பன்மடங்காக்க, ‘ப்ளூ ரெவல்யூசனை’ உருவாக்க வேண்டும் என்பது அவர் திட்டமாயிருக்கிறது. அதுகுறித்து அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபடுகிறார்.

அப்போது மீன் வளத்துறை இயக்குநராக இருந்த அப்பாஸ் கலிலீ, ‘அது அவ்வளவு எளிதன்று. கடல் என்றால் அதில் எல்லா இடங்களிலும் மீன் கிடைத்துவிடாது’ என அலட்சியமாக மறுத்துவிடுகிறார். ‘ஆம், கடலிலும் ‘கான்டினன்டல் ஷெல்ஃப்’ என்று குறிக்கப்படும் பகுதிகள் மட்டும்தான் மீன்பிடிக்க ஏற்றன. அதற்கும் நார்வே போன்ற நாடுகளில் பல புதிய முறைகளை கையாளுகிறார்கள்’ என ஓமந்தூரார் சொல்லியதும் கலிலீ வாயடைத்துப்போயிருக்கிறார்.

சைவ உணவை மட்டுமே உட்கொண்ட ஓமந்தூரார், அசைவ உணவு மூலமாவது மக்களின் உணவுப் பற்றாக்குறையைத் தீர்க்க முயன்றிருக்கிறார். ஐ.சி.எஸ் படித்த அதிகாரிகளால் யோசிக்க முடியாதவற்றைக்கூட பட்டிக்காட்டு முதலமைச்சர் என்று சொல்லக்கூடிய ஓமந்
தூரார் யோசித்திருக்கிறார்.
 

(பேசலாம்...)

kungumam.co

Link to comment
Share on other sites

ஊஞ்சல் தேநீர்

 

யுகபாரதி - 19

அப்போதெல்லாம் பண்ணைகளில் உபயோகிக்க ஆயில் எஞ்சின்களை அரசாங்கமே வாடகைக்குக் கொடுத்து வந்தது. வேளாண்மைத் துறையிடம் பெயரைப் பதிந்துவிட்டு வந்தால் வரிசைக்கிரமமாக ஆயில் எஞ்சின்கள் வாடகைக்கு வழங்கப்படும். எண்ணிக்கையில் குறைந்த அளவே ஆயில் எஞ்சின்கள் இருந்ததால் உடனுக்குடன் கிடைக்கக்கூடிய சூழல் இல்லை. காத்திருந்துதான் ஆயில் எஞ்சின்களைப்பெற வேண்டியிருந்தது.
9.jpg
அப்படியான சூழலில், ஓமந்தூராரின் சகோதரர் லெட்சுமண ரெட்டியார் வேளாண்மைத் துறைக்கு ஆயில் எஞ்சின் வேண்டி விண்ணப்பிக்கிறார். முதல்வரின் தம்பி என்பதால் அவ்விண்ணப்பம் உடனே பரிசீலிக்கப்பட்டு, ஆயில் எஞ்சின் அனுப்பப்படுகிறது. தகவல் அறிந்த ஓமந்தூரார், தன்னுடைய தம்பி என்பதால் உடனே வழங்க அனுமதியளித்த அதிகாரிகளைக் கடிந்துகொள்கிறார்.

‘ஐந்நூறுபேர் காத்திருக்கும்போது முதலமைச்சரின் தம்பி என்பதால் நீங்கள் உடனே வழங்கியிருப்பது ஊழலுக்கு வழிவகுக்கும். யாராக இருந்தாலும் காத்திருந்து பெறுவதுதான் நடைமுறை என்றிருக்கும் பொழுது, என்னுடைய தம்பிக்கு நீங்கள் காட்டிய சலுகை அதிகாரத் துஷ்பிரயோகம்!’ என்று கூறி ஆணையை ரத்து செய்திருக்கிறார்.

ஒரு முன்னாள் முதல்வரின் உடனிருந்தேன் என்பதால் எனக்கும் முதல்வராகும் தகுதியிருக்கிறது என வாதிடும் இக்காலகட்டத்தில், சொந்த சகோதரன் தன்னுடைய பெயரைப் பயன்படுத்தி ஆயில் எஞ்சினைக்கூட வாடகைக்கு எடுக்கமுடியாதென்னும் கண்டிப்புடன் ஓமந்தூரார் வாழ்ந்திருக்கிறார். ஒருமுறை ஓமந்தூராரின் உறவினரும், இளமை முதலே அவருடன் தொடர்பு கொண்டிருந்தவருமான ரெட்டணை சுப்பராம ரெட்டியார் ஓமந்தூராரைச் சந்திக்க கூவம் மாளிகைக்கு வந்திருக்கிறார்.

அப்போது கூவம் மாளிகை சமையல்காரர் அவரிடம் சர்க்கரை தீர்த்துவிட்டது என்றிருக்கிறார். உடனே ரெட்டணை சுப்பராமன் சர்க்கரை அனுப்பும்படி ரேஷன் கடைக்கு போன் செய்திருக்கிறார். போன் செய்த சில நிமிடங்களில் லாரியில் ஒரு மூட்டை சர்க்கரை வந்து இறங்குகிறது. பணம் எதுவும் பெறவில்லை.

இது நடந்த கொஞ்ச நேரத்தில் ஓமந்தூரார் வழக்கம்போல் கோட்டையிலிருந்து கூவம் மாளிகைக்கு வருகிறார். இதுவரை இல்லாத புதுமூட்டை ஒன்று வந்திருக்கிறதே இது என்ன என்று சுப்பராமனைக் கேட்கிறார். அவர் நடந்த விஷயங்களைச் சொல்கிறார். உடனே, ஓமந்தூராருக்கு கோபம் கொப்பளிக்கிறது.

உடனே கடைக்காரருக்குப் போன் செய்து ‘என் கோட்டாவுக்கு ரேஷன் கார்டில் உள்ள பதினைந்து வீசை சர்க்கரையையும் பில்லையும் அனுப்பிவிட்டு, மூட்டையைத் தூக்கிக்கொண்டு போ!’ என கட்டளையிடுகிறார். அத்தோடு நில்லாமல் தன் இளவயதுமுதலே தனக்கு நெருக்கமாயிருந்த சுப்பராமனை ஊருக்கு அனுப்பிவிடுகிறார். ‘நீ என் உடனிருந்தால் எனக்கு மட்டுமல்ல, ஆட்சிக்கே கெட்ட பெயரை ஏற்படுத்திவிடுவாய்...’ எனச் சொல்லி ‘சர்க்கரை மூட்டையை எடுப்பதற்குள் நீ உன் மூட்டையைக் கட்டிக்கொண்டு கிளம்பு!’ என்றிருக்கிறார்.

தனி மனித ஒழுக்கமும் நேர்மையும் ஆட்சியதிகாரங்களில் இருப்பவர்களுக்கு அவசியம். அதைவிட அவசியம், அதே ஒழுக்கமும் நேர்மையும் தன்னை ஒத்தவர்களிடமும் தன்னைச் சார்ந்தவர்களிடமும் இருக்கிறதா என பரிசோதிக்க வேண்டியது. நீ எக்கேடு கெட்டிருந்தாலும் பரவாயில்லை. என்னிடம் ஒழுக்கமாகவும் நேர்மையாகவும் நடந்துகொண்டால் போதுமென்பது நல்ல தலைமைக்கு அழகல்ல.

ஆனால், கடந்த நாற்பது ஆண்டுகளாக நம்முடைய அரசியல் களத்தில் தனி மனித ஒழுக்கத்திலோ நேர்மையிலோ சந்தேகத்திற்கு இடமுள்ளவர்களே பதவிகளைப் பற்றிக்கொண்டிருக்கிறார்கள், ஓரிருவரைத் தவிர. பதவியைப் பெறுவதற்காக அவர்கள் எந்தக் கேட்டையும் செய்யத் துணிகிறார்கள்.

மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒருவரே மக்கள் பிரதிநிதியாக வலம்வரும் கேவலம்தான் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. பதவிக்கு வரக்கூடிய வாய்ப்பிருந்தால் ஒருவர் எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம் என்னும் நிலையே நீடிக்கிறது. இந்தக் கேவலங்களைக் கண்டும் காணாமல் இருக்கக்கூடிய தலைமைகளே மாறி மாறி ஆட்சியையும் அதிகாரத்தையும் கைப்பற்றும் இடத்தில் இருக்கின்றன.

கொள்கைகளையும் கோட்பாடுகளையும் விட்டுவிட்டுப் பார்த்தால்கூட எந்தத் தகுதியுமே இல்லாதவர்கள் நம்மை நிர்வகிக்கும் நிலையை ஜனநாயக நடைமுறையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். தகுதியை எதைவைத்து அளவிடுவது என்பது இன்னொரு பிரச்சனை. இனாம்களை அல்லது இலவசங்களை மக்களுக்கு வழங்குவதாக வாக்குறுதியளித்து, வெற்றிபெறக்கூடிய நிகழ்வுகளை நான் விமர்சிக்க விரும்பவில்லை.

நலத் திட்டங்களின் வாயிலாக வாவது நம்முடைய ஏழை எளிய மக்களுக்கு கால் வயிறோ அரை வயிறோ நிரம்புகிறதே என்றுதான் எண்ணுகிறேன். அதுவும் தமிழகம் போன்ற சமூக நீதியில் பின் தங்கியுள்ள பிராந்தியங்களில் அத்தகைய நலத்திட்டங்களே ஆட்சியையும் அதிகாரத்தையும் உயிர்ப்போடு வைத்திருக்கின்றன. இந்த இடத்தில்தான் ஓமந்தூரார் கொண்டுவந்த இனாம் ஒழிப்புச் சட்டத்தை நினைத்துப் பார்க்கவேண்டி வருகிறது.

அரசு மூலம் சில தனியார் நிறுவனங்களும் ஆதீனங்களும் பெற்றுவந்த சலுகைகளை ஒழிக்க வேண்டுமென ஓமந்தூரார் விரும்புகிறார். அரசின் செலவினங்களில் பெரும்பகுதி இந்த இனாம்களுக்குப் போய்விடுவதால் மக்களுக்குச் செய்ய வேண்டிய உதவிகளையும் காரியங்களையும் அரசால் செய்யமுடியாமல் போகிறது என எண்ணியதன் விளைவாக இனாம் ஒழிப்புச் சட்டத்தை கொண்டுவர முடிவெடுக்கிறார்.

அந்த சந்தர்ப்பத்தில் பிர்க்கா வளர்ச்சிப் பணிகளைக் கவனித்துவந்த வினாயகம்பிள்ளை, நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு ஒரு பயிற்சி முகாமை நடத்த திட்டமிடுகிறார். அந்த முகாமிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்து ஊழியர்களை கெளரவிக்க வரவேண்டுமென ஓமந்தூராரைக் கேட்டுக்கொள்கிறார்.

முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இடம் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த ஒரு சிற்றூர். விவரத்தை கேட்டுக்கொண்ட ஓமந்தூரார், வினாயகம்பிள்ளை மீது நன்மதிப்பு கொண்டவர் என்றபோதிலும், அம்முகாமில் கலந்துகொள்ள அவர் மறுத்துவிடுகிறார். காரணம், இனாம் ஒழிப்பு சட்டத்தினால் அதிக பாதிப்புக்கு ஆளாகப்போவது ஆதீனங்கள்தான்.

அப்படியிருக்கையில், ‘முகாமிற்கு வரும் என்னிடம் ஆதீன கர்த்தாக்களில் ஒருசிலர், இனாம் ஒழிப்பு சட்டத்தில் ஒருசில திருத்தங்களை அல்லது மாறுதல்களைக் கோர வாய்ப்பிருக்கிறது. என்னுடைய விஜயத்தினால் எதை கொண்டுவர அரசு முனைப்போடு செயல்படுகிறதோ அதை நிறைவேற்ற முடியாமல் போய்விடக்கூடும். எனவே, எனக்குப் பதிலாக அமைச்சர் டி.எஸ்.எஸ்.ராஜனை அனுப்பிவைக்கிறேன்’ என்கிறார்.

சொன்னதுபோலவே முகாமில் அமைச்சரை கலந்துகொள்ளச் செய்த அவர், ‘ஆதீன கர்த்தாக்கள் விருந்துக்கு அழைத்தால் அன்போடு தவிர்த்துவிடுங்கள்’ என்றும் எச்சரித்திருக்கிறார். பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்யக்கூடியவர்களாக இன்றைய அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். அரசியல்வாதிகள் அப்படி இருப்பதைக்கூட பொறுத்துக் கொள்ளலாம். ஆனால், அதிகாரிகளும் கல்வியாளர்களும் எழுத்தாளர்களும்கூட அதே செயலை கூச்ச நாச்சமில்லாமல் செய்யத் துணிகிறார்களே; அதுதான் வேதனையளிக்கிறது.

தம்முடைய அமைச்சரவையில் தேச பக்தரும் பத்திரிகையாசிரியருமான கல்கியை சேர்த்துக்கொள்ள ஓமந்தூரார் பிரியப்படுகிறார். ‘இருபத்தி நான்குமணி நேரத்திற்குள் தங்கள் முடிவைத் தெரிவியுங்கள்’ என்றும் கல்கிக்கு கடிதம் எழுதுகிறார். கல்கியோ ரசிகமணி டி.கே. சி.யை நாடி அறிவுரை கேட்கிறார். அவரும் ‘அமைச்சர் பதவி என்பது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே இருக்கும்.

ஆனால், நீங்கள் வகித்துவரும் பத்திரிகைஆசிரியர் பதவியோ வாழ்நாள் முழுவதும் இருக்கும். வந்துபோகிற பதவியைவிட வாழ்நாள் பதவியே முக்கியம்’ என்கிறார். அறிவுரை பெற்ற கல்கி, அமைச்சரவையில் பங்குபெற விருப்பமில்லை என தெரிவித்துவிடுகிறார். இதைக்கேட்ட ஓமந்தூரார், ‘மந்திரி வேலை கொடு என்று பலபேர் என்னை தொந்தரவு செய்கிறார்கள்.

மந்திரி உத்தியோகம் கிடைக்காவிட்டால் கடலிலே விழுந்து செத்துவிடுவேன் என்றுகூட சிலர் மிரட்டுகிறார்கள். அப்படியிருக்கையில் பதவியே வேண்டாம் என்று சொல்லும் உங்களை மதிக்கிறேன். ஏற்கெனவே உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்த நான், உங்கள் மறுப்பினால் உங்கள் மீது கூடுதலான மதிப்பையும் மரியாதையும் கொள்கிறேன்.

மந்திரியாக இல்லாவிட்டாலும் தமிழ் வளர்ச்சிக்குத் தேவையான ஆலோசனைகளை தங்களிடம் எதிர்பார்க்கிறேன்’ என்றிருக்கிறார். அதன் விளைவாக, தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் செயலாளராக கல்கி நியமிக்கப்படுகிறார். பதவிக்குத் தகுதியானவர்கள் வெளியே இருந்தாலும் தம்மோடு இணைத்துக்கொள்ள வேண்டும் என எண்ணிய ஓமந்தூரார் வாழ்ந்த தமிழகத்தில்தான் பதவிக்காகக் கூட இருந்தவர்களை வெளியே அனுப்பும் விபரீதமும் நடந்துகொண்டிருக்கிறது.

விசுவாசமில்லாதவர்களைச் சந்தேகி என்பதும் சந்தேகப்படாதவாறு விசுவாசம் காட்டுபவர்களை பதவியில் அமர்த்து என்பதும் இன்றைய அரசியலாக மாறியிருக்கிறது. எப்படியாவது பதவியைப் பெற்றுவிடுவதில் குறியாயிருப்பவர்கள், குற்றவாளிகளாக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்களிடமும் அறிய சாத்தியமில்லாத ஆன்மாக்களிடமும் தங்கள் விசுவாசத்திற்கான வெகுமதியைக் கோரிக்கொண்டிருக்கிறார்கள்.

தங்களிடமுள்ள குறைகளை மறைத்துக்கொண்டு தங்களை நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் நிறுவிக்கொள்ள முயல்கிறார்கள். ஆனால், ஓமந்தூரார் தன்னுடைய குறையை மறைத்துக்கொள்ள ஒருபோதும் எண்ணியதில்லை. குறையை திருத்திக் கொள்ளவே முயன்றிருக்கிறார்.
 

(பேசலாம்...)

www.kungumam.co.

Link to comment
Share on other sites

 

ஊஞ்சல் தேநீர்

 

யுகபாரதி - 20

ஆங்கிலத்தில் அவ்வளவு புலமையில்லாத ஓமந்தூரார், அதற்காகக் கூச்சமோ வருத்தமோ படவில்லை. ஒருமுறை மத்திய அரசு ஒரு பிரச்னை குறித்து முதலமைச்சர் ஓ.பி.ஆரிடம் கருத்து கேட்கிறது. அலுவல் தொடர்பான அவ்விஷயத்தில் கருத்துச்சொல்ல விழைந்த அவர், ‘இன் மை ஒப்பீனியன்’ என்று ஒரு கடிதத்தை எழுத முற்படுகிறார். அவர் எழுதிய அக்கடிதத்தில் எழுத்துப் பிழைகள் மிகுந்திருக்கின்றன.
11.jpg
அதைக் கண்ட அவருடைய நேர்முக உதவியாளர் பி.வி. கிருஷ்ணய்யா, ‘உங்கள் கடிதத்தில் பிழைகள் இருக்கின்றன. குறிப்பாக ஒப்பீனியன் என்ற வார்த்தையில் ஸ்பெல்லிங் தப்பாக இருக்கிறது. மாற்றிவிடட்டுமா?’ எனக் கேட்கிறார். ‘பரவாயில்லை. நான் எழுதிய படியே டைப்படித்து அனுப்பிவிடு. அவர்கள் என்னுடைய ஒப்பீனியனைத்தானே கேட்கிறார்கள். ஒப்பீனியன் என்பதற்கு எனக்கு ஸ்பெல்லிங் தெரியுமா என்று கேட்கவில்லையே?’ என்றிருக்கிறார்.

முதலமைச்சராக இருக்கக்கூடிய ஒருவர், தன்னுடைய உதவியாளர் சொல்லியும் தவறான தன்னுடைய ஆங்கிலப் பிரயோகத்தை ஏன் மாற்ற வேண்டாமெனச் சொன்னார் என்பதிலுள்ள மர்மத்தைப் புரிந்து கொள்ளமுடியவில்லை. தான் தவறாக எழுதியிருக்கிறோம் எனத்தெரிந்திருந்தும் திருத்திக்கொள்ள ஏன் ஒப்புக்கொள்ளவில்லையோ? ஒருவேளை ஆங்கிலப் புலமைமிக்க தன்னுடைய உதவியாளர், இதையே காரணமாகக் காட்டி தன்னுடைய இதர வேலைகளிலும் குறுக்கீடு செய்யக்கூடும் எனக் கருதினாரோ தெரியவில்லை.
11a.jpg
தமிழகத்தின் அடிப்படை கட்டுமானங்கள் குறித்து அதிகம் சிந்தித்தவராகக் காமராஜர் அறியப்படுகிறார். அவருக்கு முன்பாகவே ஓமந்தூரார் அவ்வழியே பயணப்பட்டிருக்கிறார். ஏரி, குளங்களை ஏற்படுத்துவதிலும் ஆறுகளை அகலப்படுத்துவதிலும் நீர்த்தேக்கங்களை உண்டாக்குவதிலும் உறுதியோடு இருந்திருக்கிறார்.

என்ன கொடுமையென்றால், காமராஜரும் ஓமந்தூராரும் ஏற்படுத்திய ஆறு குளங்களிலிருந்துதான் இன்றைய ஆட்சியாளர்கள் மணலைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள். லோடு லாரிகளில் மணலை ஏற்றிக்கொண்டிருந்தவர்கள், தற்போது அதே லாரிகளில் ஆறுகளையும் ஏற்றுமதி செய்துவிடலாமா என ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்கள். மணலை அள்ளுவதில் என்ன தவறு, மணலை அள்ளுவதால் ஆறு ஆழப்படுகிறதே, அதனால் தண்ணீரை அதிகமாகத் தேக்கமுடியுமே என்று பொதுப்பணித்துறை அமைச்சரே கேட்டதாக ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பைச் சேர்ந்த கோ.சுந்தர்ராஜன் ஒரு விழாவில் பகிர்ந்துகொண்டார்.

நம்முடைய பொதுப்பணித்துறை அமைச்சர்கள் பொது அறிவு எந்த அளவுக்கு இருக்கிறது எனப் பார்த்துக்கொள்ளுங்கள். ஓமந்தூரார் ஒருவர்தான், நீர்நிலைகள் மீது அக்கறையில்லாத அரசால் விவசாயத்தைப் பெருக்கவோ பஞ்சத்தை குறைக்கவோ முடியாதென்று திடமாக நம்பியவர்.

நீர் நிலைகளைப் பராமரிக்கவும் மராமத்து செய்யவும் பொது நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்தவர். அதே சமயத்தில் புதிய கிணறுகளை வெட்டும்படி விவசாயிகளை ஊக்குவித்தவர். ஒரு கிணறு வெட்ட இரண்டாயிரம் ரூபாய் செலவாகிறது என்றால் அரசு ஐநூறு ரூபாயை மானியமாக வழங்கும் என்றார். மீதமுள்ள ஆயிரத்தி ஐநூறு ரூபாயை பத்து ஆண்டுகளில் விவசாயிகள் கட்டினால் போதுமென்றும் அறிவித்து ஆணை பிறப்பித்தார்.

அதன் விளைவாக ஒரே ஆண்டில் ஒரு லட்சம் கிணறுகள் தமிழகமெங்கும் தோண்டப்பட்டன. ஏறக்குறைய நான்கு லட்சம் ஏக்கர் நிலங்கள் நீர் வளம் பெற்றன. ஆற்றுப் பாசனம், ஏரிப் பாசனம் இவற்றுடன் நிலத்தடி நீரையும் விவசாயத்திற்கு பயன்படுத்தும்படி விவசாயிகளைக் கேட்டுக்கொண்டார். ஆனால், இன்றைக்கோ மத்திய, மாநில அரசுகள் மீத்தேன் வாயு எடுக்கவும் ஹைட்ரோகார்பன் எடுக்கவும் தனியார் பெரு முதலாளிகளுக்கு கிணறுவெட்டும் வாய்ப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றன.

கிணறுவெட்ட பூதம் கிளம்பும் என்னும் பழமொழி வழக்கொழிந்து ஊர்தோறும் பன்னாட்டு நிறுவனங்கள் கிணறுகளை வெட்ட மக்கள் புரட்சிகள் கிளம்பிக் கொண்டிருக்கின்றன. நில வளம், நீர் வளம் இரண்டையும் சூறையாடி தங்கள் வாழ்வையும் வசதியையும் உயர்த்திக்கொள்ள எண்ணுபவர்களுக்கு ஓமந்தூரார் போன்றவர்கள் உட்கார்ந்திருந்த நாற்காலிக்குத்தான் நாமெல்லாம் அடித்துக்கொள்கிறோம் என்பதாவது தெரியுமா?

எந்தத் துறையை எடுத்தாலும் அந்தத் துறையின் ஆரம்பக்கட்ட வேலைகளை அவரே ஆரம்பித்து வைத்திருக்கிறார். ஒரு தலைவர் எனப்படுபவர் கை சுத்தம், வாய் சுத்தம், கெளபீனச் சுத்தம் கொண்டிருக்க வேண்டும் என அவர் கருதியிருக்கிறார். தன் கை மட்டுமல்ல, தன்னை நம்பியிருக்கும் மக்களின் கைகளும் சுத்தமாக இருக்கவேண்டும் எனவும் கருதியிருக்கிறார்.

இல்லையென்றால், இந்தியாவிலேயே முதல்முறையாக குஷ்ட நிவாரண நிலையத்தை அவரால் ஆரம்பித்திருக்க முடியாது. வள்ளலாரைப் பின்பற்றிய ஓமந்தூரார் ரமண மகரிஷியின் பக்தராகவும் இருந்திருக்கிறார். தனக்கு முதலமைச்சர் பதவி கிடைக்க இருக்கும் செய்தியறிந்த அவர், தொடக்கத்தில் தயங்கியிருக்கிறார். ரமணரின் ஒப்புதல் கிட்டிய பிறகே பதவியை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

பதவியை ஏற்றுக்கொள்வதில் தயங்கிய அவர், அப்பதவியை கெளரவப்படுத்தும்விதமாக செயல்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. எந்தத் துறையிலும் தயக்கத்தோடு அடியெடுத்து வைப்பவர்களே பின்னாட்களில் அத்துறையில் தனித்துத் தெரிகிறார்கள். ஓமந்தூராரை நான் வியந்தபடியே இருக்க இன்னுமொரு காரணம், அவரே பாரதியின் பாடல்களை நாட்டுடமையாக்கியவர். பாரதி விடுதலைக் கழகம் என்னும் அமைப்பு 1948ல் கவிஞர் ச.து.சு.யோகியார் தலைமையில் ஒரு மாநாட்டை நடத்தியது.

அந்த மாநாட்டின் வாயிலாகத்தான் எழுத்தாளர் வ.ரா., நாரண துரைக்கண்ணன், அ.சீனிவாசராகவன், திருலோக சீத்தாராம், வல்லிக்கண்ணன் போன்றோர் பாரதி பாடல்களை நாட்டுடமையாக்கும் கோரிக்கையை முன் வைத்தார்கள்.சுதந்திரக் கவியாகச் சுற்றிவந்த பாரதியின் பாடல்கள் அப்போது ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரிடம் சிறைப்பட்டிருந்தன. அன்று புகழ்பெற்றிருந்த நாடக நடிகர் டி.கே.சண்முகம் இவ்விஷயத்தில் முழு மூச்சுடன் ஈடுபட்டதை மறுப்பதற்கில்லை.

தன்னுடைய நாடகங்களில் பாரதியின் பாடல்களை பயன்படுத்த முடியாமலிருந்த துக்கத்தை ‘எனது நாடக வாழ்க்கை’ என்னும் நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அதுவரை பாரதியின் பாடல்களை ஒலிபரப்புவதற்கும் அச்சிடுவதற்குமான உரிமையை ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரே வைத்திருந்தார். அவர் அவ்வுரிமையை ரூபாய் இருபத்தைந்தாயிரத்துக்கு பாரதியின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து
பெற்றிருந்தார்.

என்றாலும், அரசு ஆர்வம் காட்டியதை அடுத்து தனக்கு எந்தத் தொகையும் திருப்பித்தரத் தேவையில்லை என்று ஏவி.எம். செட்டியார் காமராஜர் மூலம் அரசுக்குத் தெரிவிக்கிறார். உரிய தஸ்தாவேஜுகள் நாரண துரைக்கண்ணன் மூலம் அரசுக்கு அனுப்பப்பட்டன. அதன்பின்பு எல்லா இடத்திலும் பற்றிப்பரவும் தீயாக பாரதியின் பாடல்கள் பெருகின. இன்றைக்கு பாரதியின் பாடல்கள் உலகமயமாகக் காரணம் ஓமந்தூராரே என்பதுதான் வரலாறு.

பாரதி தன் பாடல்களால் வாழ்கிறார் என்றால் அப்பாடல்களை நாட்டுடமையாக்கியதால் ஓமந்தூராரும் அப்பாடல்களில் வாழ்கிறார் என்று விளங்கிக்கொள்ளலாம். அதேபோல அரசவைக் கவிஞர் என்னும் பதவியும் அவர் காலத்தில்தான் ஏற்படுத்தப்பட்டது. தமிழ் வளர்ச்சிக் கழகத்தினரால் முன்மொழியப்பட்ட நாமக்கல் ராமலிங்கம்பிள்ளை அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டார்.

அன்றைக்கு சென்னை மாகாணத்தோடு இணைந்திருந்த பகுதிகளில் பல்வேறு மொழிகள் பேசப்பட்டு வந்தன. எனவே, சட்ட ஆலோசகர்களின் கருத்துக்களுக்கு இணங்க, அந்தந்த மொழிகளில் யார் யாரை அரசவைக் கவிஞராக நியமிப்பது என்னும் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் ரெட்டியார் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர் என்றே விமர்சிக்கப்பட்டார்.

அவர் தமிழரில்லை, தமிழ் மொழியைக் காக்கக் கூடியவரில்லை என்னும் கருத்துக்கள் தமிழ்த் தேசியவாதிகளால் பரப்பப்பட்டன. அதையெல்லாம் அவர் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. சமயம் வரும்பொழுது பதில் சொல்லலாம் என்று காத்திருந்தார். அதற்கேற்ப ஒருமுறை திருப்பதிமலைக்குச் சென்ற ஓமந்தூரார் பிரார்த்தனை முடித்து திருமலையிலிருந்து கீழே இறங்குகிறார். இவ்வளவு தூரம் வந்த நாம், நகரிலுள்ள ஓலைச்சுவடி நிலையத்தைப் பார்வையிடலாமே எனச் செல்கிறார்.

போனால், கூடியிருந்தவர்கள் ஓமந்தூராரைச் சொற்பொழிவாற்றச் சொல்கிறார்கள். சரியென்று அவர் தமிழில் பேச ஆரம்பிக்கிறார். உடனே கூடியிருந்தவர்கள் தெலுங்கில் பேசுங்கள் எனக் கத்துகிறார்கள். ‘நான் தமிழன். தமிழில் மட்டுமே என்னால் பேசமுடியும். தெலுங்கில் ஏதோ சில வார்த்தைகள் தெரியும் என்பதற்காக நான் தெலுங்கனாகிவிட மாட்டேன்.

என் அம்மாவுக்கு முந்நூறு அல்லது நானூறு கொச்சையான தெலுங்கு சொற்கள் தெரியும். அதனால், அவர் பெற்ற பிள்ளையான நான், என்னுடைய தாய்மொழி தெலுங்கென்று சொல்லிக்கொள்ள மாட்டேன். என் மொழி தமிழ் என்பதையும், நான் தமிழன் என்பதையும் தெளிவாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்’ என்று அக்கூட்டத்தில் பேசி, தன்மீது பரப்பப்பட்டு வந்த அவதூறுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

பதவியில் இருக்கும் பொழுது மட்டுமில்லை, பதவியிலிருந்து விலகி ஊருக்குக் கிளம்பும் கடைசி நொடிவரை ஓமந்தூரார் நேர்மைக்கு இலக்கணமாகத் திகழ்ந்திருக்கிறார். பதவியை இழந்தவுடனேயே, தான் தங்கியிருந்த கூவம் மாளிகையை அவர் பிற்பகலுக்குள் காலி செய்து கொடுக்கிறார். வங்கியில் சேர்த்துவைத்திருந்த தன் சொந்தப் பணமான ஆயிரத்தி நூறு ரூபாயை எடுத்துவரச் சொல்லி, தமக்கு கார் ஓட்டியவருக்கும் சமைத்தவருக்கும் மற்ற பணியாளர்களுக்கும் திரிபுரா முதல்வராக இருந்த மாணிக் சர்க்காரைப் போல பிரித்துக் கொடுக்கிறார்.

கலங்கிய கண்களோடு ஊழியர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஓமந்தூரார் சிரித்துக்கொண்டே விடைபெறுகிறார். அதுவரை தான் பயன்படுத்தி வந்த பொருட்களை எல்லாம் சொந்த ஊருக்கு எடுத்துப்போக அவருக்குக் கார் தேவைப்படுகிறது. அரசாங்கக் காரை இனியும் பயன்படுத்தக்கூடாது என எண்ணிய அவர், தன்னுடைய நண்பரான முலசூர் மாதவ ரெட்டியார் மூலம் புதிதாக பதவியேற்றிருக்கும் முதல்வர் குமாரசாமிராஜாவைச் சந்தித்து, ஊர்வரை காரை எடுத்துச்செல்ல அனுமதி கேட்கச் சொல்கிறார். நண்பரும் புதிய முதல்வரிடம் உதவி கேட்கிறார்.

புதிய முதல்வரோ பதறிப்போய் ‘இதென்ன பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. அவர் அரசாங்கக் காரை ஒருமாத காலம் வரை வைத்துக்கொண்டு திரும்பித் தரலாம். எந்தத் தடையுமில்லை’ என்கிறார். கார் கிளம்புகிறது. அப்படி கிளம்பிய கார் மறுநாளே உரிய வாடகையுடன் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படுகிறது. இப்படியான முதல்வரைக் கொண்டிருந்த தமிழ்நாடுதான் நம்முடையது என்று சொன்னால், இப்போதைய நிலைமையை யோசித்து நீங்களும் நானும் சிரித்துக்கொள்ள வேண்டியிருக்கும்.
 

(பேசலாம்...)

www.kungumam.co

Link to comment
Share on other sites

 

ஊஞ்சல் தேநீர்

யுகபாரதி - 21

நாட்டுப்புற இசையை மக்கள் மேடைகளில் பிரபலப்படுத்திய பெருமை பாவலர் வரதராஜனுக்குரியது. அவர், இசைஞானி இளையராஜாவின் சகோதரர் என்பதிலும் பார்க்க, இடதுசாரி மேடைகளில் எளிய மக்களின் குரலை இசையினால் பிரபலப்படுத்தியவர் என்றே அறியப்படுகிறார். இடதுசாரி அமைப்புகள் தன்னையும் தன்னுடைய இசை முயற்சியையும் எவ்விதத்தில் எதிர்கொண்டன என்பதைப் பற்றியெல்லாம் அக்கறை கொள்ளாமல், தனக்கிருந்த இசையறிவை மக்கள்மயப்படுத்துவதிலேயே அவர் குறியாயிருந்தார்.
8.jpg
இன்றைக்கு பாவலர் வரதராஜனின் இன்னொரு சகோதரரான கங்கை அமரன் சொல்வது போல இடதுசாரிகள் வரதராஜனை கெளரவிக்கத் தவறிவிட்டார்கள் என்ற அருவருக்கத்தக்க அபத்தக் குற்றச்சாட்டை எந்த சந்தர்ப்பத்திலும் பாவலர் வரதராஜன் வைக்கவில்லை. மேலும், கௌரவங்களுக்காகவோ பணத்தையும் பொருளையும் ஈட்டுவதற்காகவோ அவர் மக்கள் மேடைகளில் பாடவில்லை.

மேற்கூறிய பணமோ கெளரவமோ விளம்பரமோ முக்கியமென கருதியிருந்தால் அவரும் இளையராஜாவைப் போலவோ கங்கை அமரனைப் போலவோ திரைத்துறைக்கு வந்திருப்பார். திரை அரங்குகளைவிட திறந்தவெளி அரங்குகளே தனக்குரியதென அவர் தேர்ந்தெடுத்திருக்கமாட்டார். பாவலர் வரதராஜன் மட்டுமல்ல; மக்கள் கலைஞர்களாக அறியப்படுபவர்கள் அத்தனை பேருமே அப்படித்தான் இருந்திருக்கிறார்கள்.
8a.jpg
சொந்த துக்கங்கள் சுழற்றி வீசினாலும் அவர்கள் மக்கள் முன் வந்து விழுவதையே மாண்பாகவும் கடமையாகவும் கருதியிருக்கிறார்கள். அந்த ஒற்றைப் பண்பை முன்வைத்துதான் காலம் அவர்களை ஞாபகத்தில் வைத்திருக்கிறது. தேர்தலில் நிற்க வாய்ப்பு  தருகிறார்கள் என்பதற்காக அது என்ன கட்சி, என்ன மாதிரியான கொள்கைகளை உடைய கட்சி என்பதையெல்லாம் யோசிக்காமல், கருத்து என்கிற பெயரில் உயிரனைய உடன்பிறப்புகள் மீதே அவதூறுகளைப் பரப்ப அவர்கள் ஒருபோதும் துணிவதில்லை.

பாவலர் வரதராஜனை ஒருமாதிரியும் இளையராஜாவை இன்னொரு மாதிரியும் விமர்சனத்திற்கு உட்படுத்திக்கொண்டிருக்கும் கங்கை அமரனின் தற்போதைய செயல்பாட்டை ஆரோக்கிய மனமுடைய யாரும் அங்கீகரிக்க மாட்டார்கள். அவர், பேசுவது இன்னதென்று தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார். பாப்புலாரிட்டி பித்தில் முன்னுக்குப்பின் முரணான கருத்துகளை முன்வைத்துக் கொண்டிருக்கிறார்.

தனது சகோதரர் காப்புரிமை சட்டத்தின் வாயிலாக எடுத்து வரும் நியாயமான காரியங்களைக்கூட அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. அரசியல் அறிவை விடுங்கள், பொதுவெளியில் யார் ஒருவரையும் நாகரிகமாக விமர்சிக்கும் பண்பை அவர் பெற்றிருக்கவில்லை என்பதுதான் வேதனைக்குரியது.

அப்படிப்பட்ட ஒருவரைத்தான் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக நிறுத்தத் தகுதியுடையவராக அக்கட்சி கருதியது. ஊடகங்களில் அக்கட்சியைச் சேர்ந்த பலரும் தாழ்த்தப்பட்ட ஒருவருக்கு பொதுத் தொகுதியில் வாய்ப்பளித்திருக்கிறோம் என பீற்றிக்கொண்டார்கள். அவர் வேட்பாளராகப் பார்க்கப்படுவதைவிட தாழ்த்தப்பட்டவராக மட்டுமே பார்க்கப்படுகிறார் என்பதை எப்படி எடுத்துக்கொள்வது?

கலை, இலக்கியமாயிருந்தாலும் அரசியலாயிருந்தாலும் முழுக்க முழுக்க நம்முடைய சமூகம் சாதியால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. கலையிலும் இலக்கியத்திலும் உச்சநிலையை அடைந்தாலுமே கூட தாழ்த்தப்பட்டவர்கள் தங்களுடைய சாதி அடையாளத்தை அழித்துக்கொள்ளும் நிலையில்லை.

எல்லையே இல்லை என்று தங்கள் படைப்பாற்றலால் விரிந்து வியாபிக்க அவர்களால் முடிவதில்லை. கண்ணுக்குத் தெரியாத சாதீய கிருமிகளால் எத்தனையோ சாதனையாளர்கள் தங்கள் பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொள்ளும் விபரீதம் விளைந்திருக்கிறது. கலை, இலக்கியம், சினிமா, அரசியல் எதுவாக இருந்தாலும், அதில் சம்பந்தப்படும் ஒருவர், விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்ல. ஆனாலும், அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் சாதி என்னும் சின்னத்தனத்தை வெளிப்படுத்துவது சகிக்கக்கூடியதல்ல.

சமூகநீதி காப்பாற்றப்படுவதாக சொல்லப்படும் இதே தமிழ் நிலத்தில்தான், தலித்துகளாகத் தங்களை உணர்ந்தவர்கள் தங்களையும் பொதுப்பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள் எனக் கேவுகிறார்கள். இந்தக் கேவலுக்குப் பின்னுள்ள கேள்விகள் புறந்தள்ள முடியாதவை. துயரமும் நியாயமும் அடங்கிய இந்தக்கேள்விகளை தம்முடைய இறுதிநாள்வரை எழுப்பிக்கொண்டிருந்தவர் மக்கள் கலைஞர் கே.ஏ.குணசேகரன்.

கல்விப் புலத்தில் மிக உயரிய பதவிகளை வகித்துவந்த போதிலும் அவர் தன்னை எளிய மக்களின் பிரதிநிதியாகவே கருதினார். மக்கள் மேடைகளில் பாவலர் வரதராஜனுக்குப் பிறகு அதிக அளவு அறியப்பட்டவராகவும் ஆராதிக்கப்பட்டவராகவும் அவரிருந்தார். ‘தன்னான்னே’ கலைக்குழு மூலம் தமிழக மேடையெங்கும் அவர் ஆற்றிய இசைப்பணிகள் கடந்த நாற்பது ஆண்டுகளில் வேறு யாரும் ஆற்றாதவை.

நாட்டுப்புறப் பாடலை கலை இலக்கிய வடிவங்களில் ஒன்றாக மாற்றிய அரும்பணி அவருடையது. திரையிசையில் நாட்டார் பாடல்களை லாவகமாகக் கையாண்டவர் இளையராஜா என்றால் மக்கள் மேடைகளில் அப்பாடல்களை விடாமல் பயன்படுத்தியவர் கே.ஏ.குணசேகரன். மக்கள் இசையை வெறும் கேளிக்கைக்காக மேடைகளில் நிகழ்த்தாமல் அதை புரட்சிகர செயல்பாடாக ஆக்கிக்காட்டியவரும் அவரே.

தலித் கலை, தலித் இலக்கியம், தலித் பண்பாடு என்பன போன்ற கருத்தாக்கங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு அதற்காகவே சுற்றிச் சுழன்றவர் அவர். நாட்டுப்புறவியலில் முனைவர் பட்டம் பெற்ற அவர், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் நாடகவியல் துறைத் தலைவராக இருந்தவர். நிகழ்த்துக்கலை மீதும் நாட்டுப்புறவியல் மீதும் அதீத ஈடுபாடு கொண்ட கே.ஏ.குணசேகரனை, நான் பாடல் கேட்க ஆரம்பித்த வயதிலிருந்து அறிவேன்.

அப்போது என்னுடைய அப்பா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை நகரச் செயலாளராக இருந்துவந்தார். அக்கம் பக்கத்து வீடுகளில் இருப்பதுபோல நம்முடைய வீட்டிலும் டேப் ரெக்கார்டர் வேண்டும் என நானும் அக்காவும் அடம்பிடிக்கப் போக, எங்கள் தொல்லை தாளாமல் சிவப்பு நிறத்தில் ஒரு டேப் ரெக்கார்டரை மாதத் தவணைக்கு வாங்கித் தரும் முடிவுக்கு அப்பா தள்ளப்பட்டார்.

நீள வடிவத்திலான அந்த டேப் ரெக்கார்டரில் கேட்பதற்கு கே.ஏ.குணசேகரன் இசையமைத்துப் பாடிய ‘தன்னானே’ பாடல்கள் அடங்கிய ஒலி நாடாவை சிபாரிசு செய்தவரும் அவர்தான். தமிழ்க் கலை இலக்கியப் பெருமன்றத்தின் முயற்சியால் வெளியிடப்பட்ட அந்த ஒலிநாடாவைத் தவிர வேறு ஒலிநாடாக்களை வாங்கித்தர அப்பாவுக்கு வெகுகாலம் பிடித்தது.

அந்த ஒரேயொரு ஒலி நாடாவை மாதக் கணக்கில் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருந்தோம். இளையராஜா திரை இசையில் கோலோச்சிக் கொண்டிருந்த அந்தக் காலத்தில் ஒரே ஒலிநாடாவைக் கேட்டுவந்த எங்களை, பக்கத்து வீட்டுக்காரர்கள் பரிகாசத்தோடு பார்த்தது குறிப்பிடத்தக்கது. என்றாலும், அதை ஒரு பொருட்டாகவே கருதாத நாங்கள் ‘தன்னானே’ பாடல்களை உணர்வு உந்த கேட்டு வந்தோம்.

‘அம்மா பாவாட சட்ட கிழிஞ்சு போச்சுதே, முக்காமொழம் தண்ணிக்கெணறு, என்னம்மா தேவி ஜக்கம்மா...’ போன்ற பாடல்கள் இப்பொழுதும் என் நினைவில் இருப்பதற்கு அதுவே காரணம். கன்னிவாடி பச்சைநிலாவால் எழுதப்பட்ட அப்பாடல்களை கே.ஏ.குணசேகரன், தனக்கே உரிய கம்பீரத்தோடு பாடியிருப்பார்.

அவர் குரல் ஆரோகணத்தையும் அவரோகணத்தையும் எட்டிப்பிடித்து வெளிப்படுத்தும் உணர்வுகள் கண்ணீரை வரவழைத்துவிடும். மெல்லிய சோகத்தின் ஊடே பற்றிப் பரவும் அவரது ஒவ்வொரு பாடலும் தொல்லிசையின் தாக்கங்களை ஏற்படுத்தும். எஸ்.பி.பாலசுப்ரமணியனும், மலேசியா வாசுதேவனும் ஏற்படுத்தாத எதார்த்த இசையின் நெளிவு சுளிவுகளை அவர் கற்றிருந்தார்.

நேர்ப்பேச்சில் ஒருவர் ஏற்படுத்தக்கூடிய நெருக்கத்தை அப்பாடல்களும் எங்களுக்குள் ஏற்படுத்தின. ஆண்குரலில் என்னையும் பெண்குரலில் அக்காவையும் பாடச்சொல்லி, மாறி மாறி அப்பாடல்களை அப்பாவும் அம்மாவும் கேட்டுக்கொண்டிருப்பார்கள். இந்தப் பாட்டெல்லாம் சினிமாவில் வராதா? என நானோ அக்காவோ கேட்கவில்லை.

ஏனெனில், அந்தப் பாடல்களில் விரவியிருந்த கருத்துகள் சினிமாவுக்கு அப்பாற்பட்டதெனப் புரிந்துகொள்ளும் நிலையிலேயே நாங்கள் வளர்க்கப்பட்டிருந்தோம். எத்தனைமுறை கேட்டாலும் அப்பாடல்கள் எங்களுக்கு அலுப்பையோ சலிப்பையோ தரவில்லை. மாறாக, ஒருவித உணர்வு பாவத்தை உண்டு பண்ணின. நாமும் அதுபோல பாடவேண்டும் என்னும் உத்வேகத்தைக் கொடுத்தன.

மிகக் குறைந்த வாத்தியக் கருவிகளை வைத்துக்கொண்டு, குரலை மட்டுமே பிரதானப்படுத்தும் அப்பாடல்களுக்கு ஈடான ஒரு திரைப்பாடலைக்கூட கேட்கும் வாய்ப்பை அப்போது நாங்கள் பெற்றிருக்கவில்லை. இதெல்லாம் பாட்டா? என உதாசீனப்படுத்தாமல், இதுதான் பாட்டு என நம்ப வைக்கப்பட்டிருந்தோம். ‘ரோட்டோரம் வீட்டுக்காரி, சோராப்பூ சேலைக்காரி...’ என்னும் பாடலைக்கூட கே.ஏ.குணசேகரன், ஓர் ஏழையின் நைந்த காதல் குரலாகவே எதிரொலிப்பார்.

உள்ளடங்கிய கிராமத்தின் அசலான மொழியை அவருடைய குரல் பிரதிபலிக்கும். இயல்பிலேயே அவரிடமிருந்த மக்கள் நேசம், அலங்கார ஆலாபனைகளைப் புறந்தள்ளிவிடும். பறையும் தவிலும் ரெட்டை மேளமும் வேகமெடுத்து இசைக்கப்பட்டாலும் அவருடைய கம்பீரக் குரல் அதையெல்லாம் கடந்து கேட்கும்.

ஏழு ஸ்வரங்களுக்குள்தான் இசை என்று சொல்லப்பட்டாலும் அவருடைய அக்னி ஸ்வரங்கள் ஒலிநாடாவுக்குப்பின், இசையின் ஸ்வரங்கள் ஏழல்ல, இன்னும் இருக்கின்றன என தமிழ்ச் சமூகம் புரிந்துகொண்டது. ‘மனுசங்கடா நாங்க மனுசங்கடா...’ என்ற இன்குலாப்பின் பாடலை அவர் பாடக் கேட்டவர்களுக்கு என் சொற்களிலுள்ள உண்மை விளங்கும்.
 

(பேசலாம்...)

www.kungumam.co.

Link to comment
Share on other sites

 
 

ஊஞ்சல் தேநீர்

 

யுகபாரதி - 22

இந்த பாட்டையெல்லாம் பாடிய மாமாவை இன்றைக்குச் சந்திக்கப் போகிறோம் என ஒரு மதிய வேளையில் அப்பா சொன்னபோது, அதை நாங்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. ‘‘உண்மையாகவா, உண்மையாகவா...’’ என்றுதான் கேட்டோம். அவருடைய பாடல்கள் எங்களுக்குள் ஏற்படுத்தியிருந்த பிரமிப்பில், அவரைச் சந்திக்கப் போகிறோம் என்னும் செய்தி களிகொள்ள வைத்தது.
11.jpg
மாலையில் நடக்கவிருந்த முற்போக்கு எழுத்தாளர் சங்க கூட்டத்திற்குப் போகும்வரைகூட ‘‘உண்மையாகவா...’’ என அப்பாவிடம் கேட்டுக்கொண்டிருந்தோம். பெத்தனன் கலையரங்கமோ பெசன்ட் அரங்கமோ சரியாக நினைவில்லை. அங்குதான் முதல்முதலில் கே.ஏ.குணசேகரனை அப்பா எங்களுக்கு அறிமுகப்படுத்திவைத்தார்.

அறிமுகப்படுத்தியதுமே “என்ன மருமகனே என்ன படிக்கிறீங்க, நல்லா படிக்கணும்...” என்றார். “எம் மருமக ஜாடையிலதான் நடிகை சரிதா இருக்கிறாங்க...” என்றதும் அக்காவுக்கு தலைகால் புரியவில்லை. சரிதாவைப் போல் கண்களை அகல விரித்து ஆமோதித்தாள். அதன்பின் பல்வேறு மேடைகளில் அவர் பாடக் கேட்டிருக்கிறோம்.
11a.jpg
நாடக ஆக்கங்களில் அவர் கவனம் செலுத்தத் தொடங்கிய பிறகும்கூட அவருடைய இசைப்பாடல் ஆர்வம் குறையவே இல்லை. நாட்டுப்புற இசையை முற்போக்கு மேடைகளில் முழங்கிக் கொண்டே இருந்தார். தலித் இசை அடையாளமாக நாட்டுப்புற இசையை நிறுவியதில் அவர் ஒருவருக்கே முதன்மை பங்குண்டு. அவருக்கு முன்னாலும் பின்னாலும் பலர் இருக்கிறார்கள். என்றாலும், அவருடைய பங்களிப்புகள் தனித்துவமானவை.

நாட்டுப்புற இசையிலிருந்தே சாஸ்திரீய இசை பிறந்ததாக இன்றைக்கு முன்வைக்கப்படும் பல ஆய்வுகளுக்கு அவரே முன்னோடி. 1990களில் அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டி தமிழகத்தில் எழுந்த தலித் பேரலைதான், கே.ஏ.குணசேகரனை உலகிற்கு யாரென்று அடையாளங்காட்டியது. அதற்கு முன்புவரை அவருமே தன்னை தலித்தாக எங்கேயும் அறிவித்துக்கொள்ளவில்லை. அவர் அறிவித்துக் கொள்ளவில்லை என்றாலும், அவரை இந்த சமூகம் அப்படித்தான் பார்த்தது என்பது வேறு விஷயம்.

தன்னுடைய இருப்பு சார்ந்தும் அடையாளம் சார்ந்தும் தனக்குள் எழுந்த கேள்விகளை ‘வடு’ என்னும் சுயசரிதையில் எழுப்பினார். 125 பக்கங்களைக் கொண்ட அச்சுயசரிதையில், தான் கடந்துவந்த பாதைகள் குறித்து எழுதியிருக்கிறார். முழுக்கவும் பேச்சுமொழியில் எழுதப்பட்ட அச்சுயசரிதை நூல் 2005இல் வெளிவந்தது.

தலித் சுயசரிதை என்னும் அளவில் தமிழில் எழுதப்பட்ட மிக முக்கியமான நூல்களில் அதுவும் ஒன்று. 1936ல் வெளிவந்த இரட்டைமலை சீனிவாசனின் ‘ஜீவிய சரித்திர சுருக்கம்’ என்னும் நூலையடுத்து பெருங் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நூல் ‘வடு’. பாமாவின் ‘கருக்கு’, ராஜ் கவுதமனின் ‘சிலுவைராஜ் சரித்திரம்’, ஸ்ரீதர கணேசனின் ‘சந்தி’, சிவகாமியின் ‘உண்மைக்கு முன்னும் பின்னும்’ ஆகியவை தலித் தன்வரலாற்று நூல் முயற்சியில் குறிப்பிடத்தக்கவை.

கன்னடத்திலும் மராட்டியத்திலும் வெளிவந்த தன் வரலாற்று நூல்களை கணக்கிட்டால், தமிழில் மிகமிக குறைவாகவே தலித் சுயசரிதைகள் வெளிவந்துள்ளன. தன்னுடைய வலியையும் வேதனையையும் அடுத்தவர்க்குச் சொல்லி, அதன் மூலம் எந்த சகாயங்களையும் கோர கே.ஏ.குணசேகரன் ‘வடு’வை எழுதவில்லை. தலித் அரங்கியல், தலித் அரசியல் என்னும் தளத்தில் தனக்குப் பின்னால் வரக்கூடியவர்களுக்கான நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாகவே அந்நூலை எழுதியிருக்கிறார்.

அதுமட்டுமல்ல, அந்நூலில் அவர் இந்த சமூகத்தில், தான் கால் ஊன்றிக்கொள்ள பயன்பட்ட அத்தனைபேரையும் குறிப்பிட்டிருக்கிறார். இளவயதிலிருந்து ஒவ்வொரு கட்டத்திலும் தலித் என்பதற்காக ஒரு கலைஞன் எங்கெல்லாம் எப்படியெல்லாம் புறக்கணிக்கப்படுகிறான் என்னும் உண்மையை அந்நூல் பேசுகிறது. மீண்டும் மீண்டும், தான் ஒரு தலித்தாகவே நடத்தப்படுவோம் என்ற தயக்கத்தை அவர் அந்நூலில் எங்கேயும் காட்டவில்லை. பட்டதை பட்டவர்த்தனமாகச் சொல்லும் மொழிநடை விசேஷமானது.

அந்நூலில் காமராஜரும், எம்.ஜி.ஆரும் நாட்டுப்புறப் பாடல்கள் மீது கொண்டிருந்த பார்வை என்ன என்பதைப் பதிவு செய்திருக்கிறார். தன்னுடைய  பாடலைக் கேட்ட காமராஜர் தனக்கு வழங்கப்பட்ட காளி மார்க் கலர் பாட்டிலைக் கொடுத்து கெளரவித்தார் என்கிறார். தம்முடைய மைத்துனரான முனியாண்டியின் பாடலைக் கேட்ட எம்.ஜி.ஆர். பத்தாயிரம் ரூபாய் பரிசளித்ததை பெரும் உற்சாகத்தோடு பதிவு செய்கிறார்.

நூல் குறித்து எழுத்தாளர் சுந்தர ராமசாமி, ‘திராவிட முன்னேற்றக் கழகமும் திராவிடக் கழகமும் தன் வாழ்வில் கொண்டிருந்த பங்கு குறித்து குணசேகரன் எழுதவில்லை’ என குறிப்பிட்டிருக்கிறார். ‘பராசக்தி’யில் நடிகர் சிவாஜி கணேசனின் பெயர் குணசேகரன் என்பது ஏனோ இந்த நேரத்தில் நினைவுக்கு வருகிறது.

‘வடு’ என்னும் சுயசரிதை நூலில் தன் வாழ்வில் நிகழ்ந்த எத்தனையோ சம்பவங்களை எந்த பூச்சும் இல்லாமல் மக்கள் மொழியில் எழுதியிருக்கும் கே.ஏ.குணசேகரன், தன்னை இந்த சமூகம் தலித்தாகப் பார்த்து ஒதுக்கியதற்கான காரணங்களைத் தேட முயன்றிருக்கிறார். அந்தத் தேடலில் ஓர் இடத்திலும் அவர் தன்னைத் தொலைக்கவில்லை.

கல்லூரிக் கால நிகழ்வுகளைக் குறிப்படுகையில், ஒரு வாரத்திற்குத் தேவையான புளியோதரையை ஓலைப்பெட்டியில் கட்டிக்கொடுத்த அம்மாவை நினைவுபடுத்துகிறார். தனியார் விடுதியில் தங்கி தேர்வு எழுதும் வசதியில்லாததால் ஆறு நாளைக்கு முன் தயாரித்த புளியோதரையை உண்டதாகக் குறிப்பிடுகிறார். பூசணம் பூத்த அந்தப் புளியோதரையை உண்டதால் ரத்த பேதி ஏற்பட்டு, உள்ளாடைக்கு மேல் வேட்டியணிந்து அதன்மேல் கால்சிராயைப் போட்டுக்கொண்டு தேர்வு எழுதியதைக் கதைபோல் அவர் சொல்லிச்செல்வது கண்ணீரை வரவழைக்கிறது.

‘வறுமையும் தீண்டாமையும் சுழற்றிச் சுழற்றி அடித்ததால்தான் நான் மக்கள் முன் வந்து விழுந்தேன்’ என்கிறார். தன்னை தலித்தாக உணர்ந்தபொழுது அதிலிருந்து தன்னை மட்டும் விடுவித்துக்கொள்ள முயலாமல் ஒட்டுமொத்த தலித்துகளின் விடுதலைக்காகப் போராடும் இடத்தை வந்தடைந்திருக்கிறார். “தலித் இசைக்கருவிகளை திரையில் பயன்படுத்திய முன்னோடி” என்று இசைஞானி இளையராஜாவைப் பற்றி அவர் எழுதியதுகூட அந்தப் புரிதலில் இருந்துதான்.

ஆனால், இளையராஜாவோ அந்த வாசகத்தை மட்டுமல்ல, யார் ஒருவரும் தன்னை தலித் என்று அடையாளப்படுத்துவதை விரும்பாததால் கே.ஏ.குணசேகரன் மீது மான நஷ்ட வழக்குத் தொடுத்தார். அத்துடன் அந்த நூல் வெளிவரவே கூடாதென்றும் நீதிமன்றத்தில் ஆணைபெற்றார். கே.ஏ.குணசேகரனின் நோக்கம் இளையராஜாவை சிறுமைப் படுத்துவதல்ல.

அவர் எழுதிய அந்த நூல் இசையின் ஊடாக இளையராஜாவின் சாதனைகளைப் பேசுவதே. ஆனாலும், இளையராஜா அதை நல்லவிதமாகப் புரிந்துகொள்ளவில்லை என்ற  வருத்தம் அவருக்கு இருந்தது. இளையராஜா இவ்விஷயத்தில் நடந்துகொண்ட விதத்தை தலித் செயல்பாட்டாளர்கள் விமர்சித்தாலும் இளையராஜாவின் உள்ளக் கிடக்கையை அறியும் சந்தர்ப்பம் யாருக்கும் வாய்க்கவில்லை.

தன் பார்வையிலிருந்து இன்னொருவரைப் பார்ப்பதிலுள்ள அரசியலைப் புரிந்துகொள்வது எளிதல்ல. அடையாளத்திலிருந்து விடுபடுவதும், அடையாளத்தைத் தக்கவைப்பதும் அவரவர் உணர்வு சம்பந்தப்பட்டது. மதுரை தலித் ஆதார மையத்தின் உதவியோடு கே.ஏ.குணசேகரனும் தலித் சுப்பையாவும் இணைந்து உருவாக்கிய ஒலிநாடாக்கள் இன்றும் பாராட்டத்தக்க எழுச்சியை மக்களிடம் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

நாடகவியலிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவராக அவர் அறியப்படுகிறார். அவருடைய ‘பலி ஆடுகள்’, ‘அறிகுறி’, ‘சத்திய சோதனை’, ‘வெகுமதி’, ‘மாற்றம்’, ‘மழி’, ‘தொடு’, ‘பவளக்கொடி அல்லது குடும்ப வழக்கு’ முதலான நாடகப் பிரதிகள் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கன.

‘பலி ஆடுகள்’ நாடகப் பிரதியில், ‘இந்துக்கள் தங்களுக்கு அதிகாரம் வேண்டும் என்பதற்காக சாமிகளுக்கு ஆடுகளைத்தான் பலியிடுகிறார்கள். சிங்கங்களை அல்ல’ என்ற அம்பேத்கரின் கூற்றை முன்வைத்திருக்கிறார். தலித்திலும் கீழானவர்களாக நடத்தப்படும் பெண்களையும் அவர்களின் விடுதலையையும் நேர்மையாக வெளிப்படுத்திய நாடகம் அது.

அரசியலின் வேர்க்காலில் இருந்தே அவருடைய படைப்புகள் அரும்பியிருக்கின்றன. ‘புதுத்தடம்’ எனும் தலைப்பில் வெளிவந்துள்ள அவருடைய கவிதைகள், வாய்மொழி இலக்கிய வடிவத்தை ஒத்து எழுதப்பட்டுள்ளன. படிமமோ, உருவகமோ அற்ற அக்கவிதைகள் வெடித்துக் கிளம்பும் கோபத்தின் வெளிப்பாடுகள். சொல்லப்போனால் அவருடைய கவிதைகளே தலித் கவிதைகளுக்கான ஊற்றுக் கண்களைத் திறந்தன.

பல கலை, இலக்கிய வடிவங்களில் தலித் குரலை முன்னெடுத்த கே.ஏ.குணசேகரன், சினிமாவிலும் தலைகாட்டினார் என்பது கவனத்துக்குரியது. சினிமா அவரை பேராசிரியராகவோ, கவிஞராகவோ, பாடகராகவோ, நிகழ்த்துக்கலை நிபுணராகவோ நடத்தவில்லை. ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட்டாகவே நடத்தியது. தங்கர் பச்சானின் ஒருசில படங்களில் அவர் தலைகாட்டும் போதெல்லாம் தன் உயரம் அறியாமல் இப்படியான காட்சிகளில் எல்லாம் அவர் நடிக்கவேண்டுமா என்றிருக்கும்.

என் போன்றவர்கள் அப்படிக் கருதினாலும் அவர் அதை மகிழ்ச்சியாகவே எடுத்துக்கொண்டார். உதிரி பாத்திரங்களில் வந்துபோவதை தகுதிக் குறைவாக எண்ணவில்லை. கரு.பழனியப்பன் இயக்கிய ‘சிவப்பதிகாரம்’ திரைப்படத்தில் கொஞ்சம் கூடுதலான கவனத்தைப் பெற்றார். காரணம், கதாநாயகன் நாட்டுப்புற பாடல்களை சேகரிப்பவன். நாட்டுப்புற பாடல்களில் உள்ள அத்தனை வகைகளையும் அவர் உதவியோடு இசையமைப்பாளர் வித்யாசாகர் மிக நேர்த்தியாக உருவாக்கியிருப்பார். 

பல ஆண்டுகள் கழித்து கே.ஏ.ஜியை சந்தித்தேன். என் வளர்ச்சிகண்டு மெய்சிலிர்த்துப் போன அவர், என்னை ஆரத்தழுவிக்கொண்டு “அப்பாவை, மாமா கேட்டதாகச் சொல்...” என்றார். அவர் அப்படிச் சொன்னதும் உடனிருந்த படக்குழுவினருக்கு ஒரே ஆச்சர்யம். அப்போது வித்யாசாகர் “ஏற்கனவே உங்களுக்கு அய்யாவைத் தெரியுமா?” என்றார். “அவரால்தான் நானே உங்களுக்குத் தெரியும்படி உருவானேன்!” என்றதும் வித்யாசாகரின் கண்கள் பனித்தன.
 

(பேசலாம்...)

www.kungumam.co

Link to comment
Share on other sites

ஊஞ்சல் தேநீர்

யுகபாரதி - 23

பாடல் பதிவுக்கு குணசேகரன் தன் மகள் குணவதியை அழைத்து வந்திருந்தார். ‘என் பெயரில் உள்ள குணவையும் என் மனைவி பெயரான ரேவதியில் உள்ள வதியையும் எடுத்தே என் மகளுக்கு குணவதியென்று பெயர் சூட்டியிருக்கிறேன்’ என பெருமிதப்பட்டுக் கொண்டார்.
4.jpg
கே.ஏ.குணசேகரனின் ஆர்வத்தையும் குழந்தைமையையும் வித்யாசாகர் அதன்பின்னும் பலநாள் வியந்து கொண்டிருந்தார். அவர் மரணத்திற்குச் சில மாதங்களே இருந்த சமயத்தில் புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு நானும் நடிகர் நாசரும் சிறப்பு விருத்தினர்களாக மாணவர்களால் அழைக்கப்பட்டிருந்தோம். 

பெரிய மைதானத்தில் நிகழ்ந்த அந்த விழாவில் என் அருகில் வந்து அமர்ந்த கே.ஏ.குணசேகரன், ‘‘ரம்மி’ படத்தில நீங்க எழுதின ‘அடியே என்ன ராகம்...’ ரொம்ப நல்லாயிருந்துச்சி.முழுசா தமிழாவும் இயல்பாவும் இருந்த பாட்டுல குட்டிக்கூராங்கிற வார்த்தைய போட்டிருக்க வேணாம்...’ என்றார்.
4a.jpg
எங்கே இருந்தாலும் அவர் என்னுடைய பாடல்களைக் கவனித்து திருத்தம் செய்து கொண்டிருக்கிறார் என்பதை அறிய பெருமிதமாயிருந்தது. ‘நீங்க திருத்துற அளவுக்குத்தான் நாங்க இருக்கிறோம் மாமா. தப்பு பெருசா வராம பாத்துக்குறேன்...’ என்றேன். ‘ஆமாம், அதோட பெருசா வர்றது தப்பா இருக்கக்கூடாது’ என்றார். 

அந்த சந்திப்பில் அவர் சொன்ன அந்த வாக்கியம் திரும்பத் திரும்ப என்னை என்னவோ செய்தது. பெரிதாக வருவதற்கு எந்தத் தப்பையும் செய்யக்கூடாது என்று அதை எடுத்துக்கொள்வதா, இல்லை, தப்பைப் பெரிதாக செய்யக்கூடாது என்று புரிந்துகொள்வதா என யோசித்துக்கொண்டே சென்னை திரும்பினேன். 

‘நிறைவாகும்வரை மறைவாயிரு’ என்பதைத்தான் வேறுமாதிரி சொன்னாரா எனவும் விளங்கவில்லை. பெரிதோ சிறிதோ, தப்பே செய்யக்கூடாது என்றுதான் இப்போது தோன்றுகிறது. நாட்டார் பாடல் ஆய்வில் தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்ட கே.ஏ.குணசேகரன், தம்முடைய தமிழ் அறிவு வளம் எத்தகையன என்பதைக் காட்டும் விதமாக பழம்பெரும் நூலான ‘பதிற்றுப்பத்தி’ற்கு உரை எழுதியிருக்கிறார். அதை உரை என்று சொல்வதைவிட புத்துரை என்றுதான் சொல்ல வேண்டும். 

புலமைசார் தளங்களில் அவர் இயங்கினாலும் ‘பதிற்றுப்பத்தி’ற்கும், ‘பட்டினப்பாலை’க்குமான உரையை சமூகவியல் நோக்கில்தான் எழுதியிருக்கிறார். ‘பதிற்றுப்பத்து’ உரையின் வாயிலாக சங்க காலத்தவரான கூத்தர், பாணர், விறலியர், கோடியர், வைரியர் முதலான கலைஞர்கள் அக்காலத்து அரச குடும்பத்தினருடன் கொண்டிருந்த நெருக்கத்தைக் காட்டியிருக்கிறார். 

ஆய்வியல் அறிஞர்கள் பலரும் பாராட்டத்தக்க அந்நூலின் முகப்பில், மூலமும் ஆராய்ச்சிப் புத்துரையும் என அச்சிடப்பட்டிருக்கும். தமிழறிஞர் கா.சிவத்தம்பியின் ஆலோசனைகளோடு செய்யப்பட்ட அவ்வாய்வு, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராக அவர் பணிபுரிந்த போதுதான் பதிப்பிக்கப்பட்டது. 

தொடர்ந்து ஆய்வுப்புலத்தில் இயங்கியவர் என்பதால் அவ்வப்போது கருத்தரங்குகளில் வாசித்த கட்டுரைகளை ‘சங்க இலக்கியச் சிந்தனைகள்’ எனும் தலைப்பில் தொகுத்திருக்கிறார். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள், ஆயிரக்கணக்கான மேடைகள், பத்துக்கும் மேற்பட்ட ஒலிநாடாக்கள் என கே.ஏ.குணசேகரன் இடையறாமல் தன்னை நிரூபித்துக்கொண்டே இருந்தவர்.

சேரன் இயக்கிய ‘தவமாய் தவமிருந்து’ திரைப்படத்தில் ‘ஆக்காட்டி ஆக்காட்டி...’ என்னும் பாடல் இடம்பெற இருந்தது. நாட்டுப்புற கள ஆய்வில் எஸ்.ஏ.பெருமாள் மூலம் கிடைத்த அப்பாடலை தனது ஒலிநாடாவில் இணைத்து அதை பெரும் பிரபலமாக்கியவர் கே.ஏ.குணசேகரன். 

ஆய்வில் கிடைத்த பாடலுக்கு புதுமெருகையும் புது தொனியையும் ஏற்படுத்திய தன்னைத் தவிர்த்துவிட்டு, தன்னுடைய மாணவர் ஜெயமூர்த்தியின் குரலில் அப்பாடல் பதிவு செய்யப்பட்டு வெளிவந்ததை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஒரு பாடலை உருவாக்கி அப்பாடலை பட்டிதொட்டியெல்லாம் கொண்டு சேர்த்த பிறகு, சினிமாக்காரர்கள் தனக்கு தரவேண்டிய நியாயமான உரிமையை வழங்க மறுக்கிறார்களே என வெதும்பினார். 

அதற்காக பாடலைப் பெற உதவிய எஸ்.ஏ.பெருமாள் மீதும் வழக்கு தொடர்ந்தது வருத்தத்திற்குரியது. புறக்கணிப்பின் உச்சத்தை வழக்கால் வென்றார். என்றாலும், சினிமா இசை ரசிகர்களின் காதுகளில் அப்பாடல் அவர் குரலால் எட்டவில்லை. படைப்பாளனுக்கு இழைக்கப்படும் அநீதிகளில் ஒன்று, அவனே அவன் படைப்புக்கான உரிமையைக் கோரிக்கொண்டிருப்பதுதான்.

‘என்னுடைய மேடைகளில் இறை வணக்கம் இல்லை. பறை வணக்கம்தான்’ என்று, மேடையேறி அவர் கச்சேரியைத் தொடங்கினால் அதுவரை நாம் காணாத அற்புதங்கள் அம்மேடையில் அரங்கேறும். மேடையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டே பாடலின் கருப்பொருளை விளக்கிவிட்டு, அவர் பாடத் தொடங்குவார். குள்ளமான உருவம். 

என்றாலும், குரலின் குழைவு ஸ்வரங்களின் சகல உயரங்களையும் அனாயாசமாகத் தொட்டுவிடும். கர்நாடக சங்கீதம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லிக்கொண்டே அதன் நுட்பங்களை வெளிப்படுத்துபவராக அவர் இருந்தார். அவரிடம் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்ட பேராசிரியர் கோவிந்தராஜன், ஆய்வியல் நெறியாளராக அவர் நடந்துகொண்ட விதத்தை ஒரு கட்டுரையில் சிலாகித்திருக்கிறார். 

அதேபோல நாடகப்பள்ளி பயிற்சிப் பட்டறையில் கே.ஏ.குணசேகரன் ஆர்வத்தோடு பங்குகொண்டு பணியாற்றியதை எழுத்தாளர் ராஜேந்திரசோழன் என்னும் அஸ்வகோஷ் சொல்வதைக் கேட்க வேண்டும். எதையும் எப்பவும் கற்றுக்கொள்ளவும், கற்றதை பிறருக்குக் கற்பிக்கவும் அவர் தவறியதில்லை.

தன்னுடைய மகன் அகமனை சினிமாவில் பாட வைப்பது குறித்து என்னிடம் அவ்வப்போது தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். அதுகூட தன்னுடைய மகன் என்பதற்காக அல்ல. நாட்டுப்புறப் பாடலின் தொடர்ச்சியை சினிமா விட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான். அவரால் அடையாளங் காட்டப்பட்டவர்களே இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி நாட்டுப்புறக் கலைஞர்களாக வலம் வருகிறார்கள்.

சின்னப்பொண்ணுவும் ஜெயமூர்த்தியும் அவர்களில் முக்கியமானவர்கள். தனக்குப் பின்னாலும் நாட்டுப்புறப் பாடலின் தொடர்ச்சியைத் திரையிலும் பொதுவெளியிலும் உண்டாக்க அவரால் முடிந்திருக்கிறது. முதன்முதலில் நாட்டுப்புறக் குரலுடைய கொல்லங்குடி கருப்பாயியைக் கண்டுபிடித்தவர்கள் இருவர். ஒருவர், தமிழாசிரியர் ரூஸ்வெல்ட். 

மற்றொருவர், கே.ஏ.குணசேகரன். அதுவரை உலகறியாத கொல்லங்குடி கருப்பாயியை வானொலியில் பாடவைத்ததிலும் பல மேடைகள் உருவாக்கிக்கொடுத்து அவரை உலகறியச் செய்ததிலும் அவர்கள் இருவருக்கும் பெரும் பங்குண்டு. அதன்பின் ஊர்ப்புறங்களில் பாடிக்கொண்டிருந்த கொல்லங்குடி கருப்பாயி, பாண்டியராஜன் இயக்கி நடித்த ‘ஆண்பாவம்’ திரைப்படத்தில் பெற்ற கவனத்தை நாமறிவோம்.

பேராசிரியர் நா.வானமாமலை, அடித்தள உழைக்கும் மக்களின் நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுத்து, அதை இலக்கியப் பரப்புக்குக் கொண்டுவந்தார். அதுவரை விளிம்பிலிருந்த அப்பாடல்கள் அவரால் மையத்திற்கு வந்தன. அந்தக் காரியத்தின் அடுத்த கட்டத்தை மேற்கொண்ட கே.ஏ.குணசேகரன் அப்பாடல்களை உச்சத்திற்குக் கொண்டுவந்தவர். அதனால்தான் என் போற்றுதலுக்குரிய எஸ்.ஏ.பெருமாள் போன்றவர்கள், ‘மக்கள் இசையை ஆயுதமாக்கிய கலைஞன்’ என்று குணசேகரனைக் கொண்டாடுகிறார்கள்.

‘தமிழர் நாட்டார் பாடல்கள்’ என்னும் தலைப்பில் வானமாமலை தொகுத்த நூலும், ‘மலையருவி’ என்னும் தலைப்பில் கி.வா.ஜகந்நாதன் தொகுத்த நூலும் நாட்டார் பாடல் தொகுப்புகளில் முக்கியமானவை. “என் அப்பாவுடன் படித்தவர்கள் சிங்கப்பூர், மலேசியா சென்று வேலை பார்த்துவிட்டு எப்போதாவது ஊருக்குத் திரும்புவார்கள். 

அப்படி திரும்புகிறவர்கள் இனாமாக விலை உயர்ந்த சட்டை, பனியன்களைத் தருவார்கள். ஆனால், அதை அப்பா அணிந்துகொள்ளாமல் அத்துணிகளை புல்லப்பன் கடையில் பதினைந்து ரூபாய்க்கு விற்றுவிட்டு அந்தக் காசில் வீட்டுக்கு அரிசியும் பருப்பும் வாங்கி வருவார்...’’ என்று ‘வடு’ சுயசரிதையில் எழுதிய அதே கே.ஏ.குணசேகரன், பல வெளிநாடுகளுக்கு இசைப்பயணம் மேற்கொண்டார் என்பதுதான் வாழ்வின் சுழற்சி. 

இன்று இந்தப் பாடல்களைப் பாடிய மாமாவை சந்திக்கப் போகிறோம் என்று என்னையும் அக்காவையும் கே.ஏ.குணசேகரனுக்கு அறிமுகப்படுத்திய அப்பாவிடம், “இனிமே நாம சந்திக்கவே முடியாத இடத்திற்கு குணசேகரன் மாமா போய்ட்டாருப்பா...” என்ற நொடியில் வாழ்வின் மறு சுழற்சியையும் அவர்மூலமே உணர நேர்ந்தது கவலையளிக்கிறது. 

அறிவின் விசையால் தன்னுடைய சிறகுகள் அகில உலகத்தையும் அடைந்துவிட்டபின்னாலும் கால்களை மண்ணில் ஊன்றிக்கொள்ளவே மக்கள் கலைஞர்கள் விரும்புகிறார்கள். ஒருமுறை அறந்தாங்கியில் கலை இரவு. பெருந்திரளான கூட்டத்தில் ‘அம்மா, பாவாடை சட்டை கிழிஞ்சு போச்சுதே’ என்னும் பாடலை கே.ஏ.குணசேகரன் பாடுகிறார். 

கலை இரவு என்றால் கண்ணீரை வரவழைக்கும் இரவென்று அதுவரை அம்மக்கள் அறிந்திருக்கவில்லை. பாடலைக் கேட்டவர்களின் கண்களெல்லாம் மடைதிறந்து ஒழுகுகின்றன. பாடலின் பொருளா, பாடும் முறையா என்றெல்லாம் யோசிக்காமல் மக்கள் தாரை தாரையாகக் கண்ணீரை வடிக்கிறார்கள். மறுநாள் காலை ‘எங்கள் கடையில் மலிவான விலைக்கு பாவாடை சட்டைகள் தருகிறோம். 

வாங்கி அணிந்து செல்லுங்கள்’ என்று ஒரு ஜவுளிக் கடையில் விளம்பரப்படுத்துகிறார்கள். இதுதான் அவர் இசையாலும் குரலாலும் அடைந்த பேறு. வியாபார மனங்களையும் கனிந்துருக வைக்கும் அவருடைய குரலைக் கேட்டு அழுததுபோக, அவருக்காகவும் அழ வைத்த காலத்தைக் கடந்துதான் ஆகவேண்டும். காலம் கடந்து நிற்கக் கூடியவர்கள், கடந்துபோன காலங்களையும் தங்கள் படைப்புகளால் மீட்கிறார்கள். பொதுவாக மக்கள் கலைஞர்களின் வாழ்க்கை, கண்ணீரில் தொடங்கி கண்ணீரிலேயே முடிந்துவிடுகிறது.
 

(பேசலாம்...)  

www.kungumam.co.

Link to comment
Share on other sites

 

ஊஞ்சல் தேநீர்

 

யுகபாரதி - 24

தன் வாழ்நாள் முழுவதையும் கலை இலக்கிய ரசனைக்கு ஒப்புக்கொடுத்தவர் தேனுகா. ஆனால், அவரைப்பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? இலக்கிய விமர்சனத்தைவிட கலை விமர்சனமே தகுதிவாய்ந்த ஒன்றென்பது என் எண்ணம். காரணம், காகிதத்தில் எழுதப்படும் இலக்கியத்தை, ஓரளவு எழுதவும் படிக்கவும் தெரிந்தவர்கள்கூட கொஞ்சம் முயன்றால் உணர்ந்து கொள்ளலாம்.
12.jpg
கலை விமர்சனம் என்பது அப்படியல்ல. கலை என்றால் சிற்பம், ஓவியம், இசை. சிற்பத்தையோ ஓவியத்தையோ பார்க்கக்கூடிய ஒருவர், அதன் உட்பொருளை போதிய பயிற்சியில்லாமல் கிரகித்துக் கொள்ள முடிவதில்லை. கண்ணிருப்பதால் பார்க்கிறோம் என்பதோடு ஓவியத்தையும் சிற்பத்தையும் நாம் கடந்துவிடுகிறோம். உண்மையில், அதன் வரையறைகள் பற்றியோ, வார்ப்புமுறைகள் பற்றியோ யாரும் நமக்குச் சொல்லித் தரவில்லை.

அல்லது நாமுமே அப்படியான அக்கறைகளை அக்கலைகளின் மீது கொண்டிருக்கவில்லை. ஓவியம் என்றால் வரையப்படுவது, சிற்பம் என்றால் செதுக்கப்படுவது என்பதோடு நிறுத்திக்கொள்கிறோம். எது சிறந்த ஓவியம்? எது சிறந்த சிற்பம்? என்பதை அறிந்துகொள்ளவும் அறிவுறுத்தவும் முனைந்தவர்களில் தேனுகா முக்கியமானவர். எதன் அடிப்படையில் ஒரு சிற்பம் வடிக்கப்படுகிறது என்பதையும், எந்த வரையறைக்குள் ஓர் ஓவியம் தீட்டப்படுகிறது என்பதையும் அவர் போல இன்னொருவர் சொல்ல நான் கேட்டதில்லை.
12a.jpg
தமிழ்ச் சூழலில் நிலவிவந்த கலை இலக்கிய விமர்சன வெறுமையைப் போக்கியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. இன்றைக்குக் கலை இலக்கியப் பாரம்பரியமிக்கவர்களாகத் தமிழர்கள் தங்களைக் காட்டிக்கொள்ள போதிய தரவுகளை ஏற்படுத்திக்கொடுத்தவர் அவரே. தேனுகா, கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலையைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

‘வண்ணங்கள் வடிவங்கள்’ என்னும் நூல் வாயிலாக கலை இலக்கிய விமர்சனத்துறைக்கு அறிமுகமானவர். தன்னுடைய செயற்கரிய ஆய்வுகளால் தமிழ்க் கலைகளுக்கும் முதுகெலும்பு உண்டென்று நிரூபித்தவர். சோழர் காலத்திலேயே அதிக அளவு சிற்பிகள் வாழ்ந்த ஊராக கருதப்படும் சுவாமிமலை, முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்று.

அங்கிருந்துதான் நடராஜர், விநாயகர், ரிஷபதேவர், அர்த்தநாரீஸ்வரர், மாரியம்மன் என விதவிதமான விக்கிரகங்கள் ஏனைய ஊர்களுக்கு வருவிக்கப்பட்டன. சிற்பக்கலையில் புகழ்வாய்ந்த அண்ணாசாமி ஸ்தபதி, தேவசேனா ஸ்தபதி, மூர்த்தி ஸ்தபதி, வைத்தியநாத ஸ்தபதி என தேசிய விருது பெற்ற எத்தனையோ ஸ்தபதிகள் அவ்வூரிலிருந்துதான் தங்கள் ஆளுமைமிக்க படைப்புகளை உலகுக்கு ஆக்கியளித்தார்கள்.

அவர்கள் வாழ்ந்துவந்த அதே ராஜவீதியில்தான் தேனுகாவின் பூர்வீக வீடும் அமைந்திருந்தது. எனவே, சதா விக்கிரகங்களை வார்ப்பதும் செதுக்குவதுமான ஒலிகள் அவர் காதில் கேட்டுக்கொண்டே இருந்திருக்கின்றன. அதன்மூலம் அவர் தெய்வச் சிலைகளை வடிப்பதற்கான இலக்கணங்களை மிக இளவயதிலேயே கற்றிருக்கிறார்.

உத்தம தாளம், மத்திம தாளம் என்ற அளவுகளோடு வடிக்கப்பட்ட கோயில் சிற்பங்களை நாள்தோறும் பார்த்துப் பழகிய அவர், அது குறித்துப் பேசவும், எழுதவும் தொடங்கியிருக்கிறார். சிவபெருமானை தச தாளத்திலும் அம்பாளை நவ தாளத்திலும் விநாயகரைப் பஞ்ச தாளத்திலும் வடிப்பார்கள் என்னும் தகவலே அவர் எழுதும்வரை என் போன்றோருக்குத் தெரியாது.

சீனிவாசன் என்னும் இயற்பெயரை உடைய தேனுகா, ‘வித்யாஷங்கரின் சிற்பமொழி’, ‘மைக்கேலேஞ்சலோ’, ‘லியனார்டோ டாவின்சி’, ‘பியாத் மோந்திரியானின் நியோபிளாஸ்டிசம், ‘ஓவியர் வான்கோ’, ‘பழகத் தெரியவேணும்’, ‘ஆல்பர் காம்யூவிற்கு என் அஞ்சலி’ ஆகிய நூல்களை எழுதியிருக்கிறார்.

விமர்சனத்துறையில் மிகத் தீவிரமாக இயங்கிய அவருடைய படைப்புகள் அவருடைய பெயரைப் போலவே தனித்த கவனத்தைப் பெறுபவை. கும்பகோணத்தில் வங்கி ஊழியராக இருந்துவந்த அவர், அவ்வப்போது எழுத்தாளர் ப்ரகாஷைப் பார்க்க தஞ்சாவூருக்கு வருவார். அவர் தஞ்சைக்கு விஜயம் செய்யும் போதெல்லாம், அதைப் பயன்படுத்திக்கொள்ளும் விதமாகக் கலை இலக்கியத் தோழர்கள் அவரை முன்வைத்து கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வார்கள்.

மேடையோ ஒலிபெருக்கியோ இல்லாமல் அக்கூட்டம் சோழன் சிலைக்கு அருகே அமைந்துள்ள அகலமான நடைபாதையில் நடைபெறும். நாங்கள் எல்லோரும் வட்டமாக அமர்ந்துகொண்டு அவரை நடுநாயகமாக இருத்தி, அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருப்போம். மெல்லிய குரலில் அவர் பேசத் தொடங்குவார். முதல் கால்மணிநேரம் மிதமாகவும் அடுத்த அரைமணி நேரம் அடர்த்தியாகவும் அவருடைய பேச்சுகள் அமையும்.

உலகத்தின் பல பகுதிகளிலும் நிலவி வந்த கலை இலக்கியப் போக்குகளை விரல்நுனியில் வைத்திருப்பார். அலெக்சாண்டர் கால்டரின் நகரும் சிற்பங்கள் பற்றியும், ஓவியர் தியோவான் தஸ்பர்க்கின் எளிமெண்டரிசம் பற்றியும் அப்படித்தான் எங்களுக்குத் தெரிய வந்தன. நடைபாதையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல் உலகளாவிய விஷயங்களை வெகு சாதாரணமாகச் சொல்லிச் செல்வார்.

அவருடைய ஒவ்வொரு பேச்சின் இறுதியிலும் அதுவரை திறக்கப்படாதிருந்த கலை இலக்கியக் கதவுகள் தங்களைத் தாங்களே திறந்து கொள்ளும். ஓர் அதிசயத்தைக் கண்ணுற்றதைப்போல அவரை நாங்கள் பார்த்துக் கொண்டிருப்போம். ஒரே தாளத்தில் இசைக்கப்படும் மெல்லிய இசையைப் போல அவர் பேச்சின் அடவுகள் அமைந்திருக்கும். எதிரே அமர்ந்திருப்பவர்களின் முகபாவத்திற்கு ஏற்ப அவருடைய உடல்மொழிகள் உணர்ச்சிகளைக் கொப்பளிக்கும்.

தத்துவ விசாரங்களில் அவருக்கிருந்த ஈடுபாட்டில் சற்றும் குறைவில்லாத ஈடுபாட்டை இசையிலும் அவர் கொண்டிருந்தார். அதிலும் எம். எஸ். சுப்புலட்சுமியைப் பற்றியோ நாதஸ்வரச் சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்தினத்தைப் பற்றியோ கேட்டுவிட்டால் அவ்வளவுதான். அன்றைய பொழுது முழுக்க அவர்களின் சிறப்புகளைப் பாடிப்பாடி உற்சாகப்படுத்துவார்.

சுப்ரபாதம் ரெக்கார்டுகள் மூலம் கிடைத்த அளப்பரிய செல்வத்தையெல்லாம் திருப்பதி தேவஸ்தானத்துக்கும் தொண்டு நிறுவனங்களுக்கும் வழங்கிய எம். எஸ். எஸ்.ஸை தபஸ்வி என்றுதான் குறிப்பிடுவார். நான் சொல்வது சற்றேறக் குறைய இருபது ஆண்டுகளுக்கு முன். அப்போது இசங்கள் குறித்தும் இசை குறித்தும் கலை இலக்கிய விமர்சனம் குறித்தும் இப்போது போல யாருமே எழுதியிருக்கவில்லை.

அன்றைக்கு யாருமே இல்லாத அல்லது யாருமே முன்வராத விமர்சனக் காட்டுக்குள் ஒற்றைச் சிங்கமாக அவர் உலவி வந்த கம்பீரம் அசாத்தியமானது. க.நா.சு., வெங்கட்சாமிநாதன் ஆகியோருக்குப்பிறகு தேனுகாவின் பங்களிப்புகளே ஸ்திரமானவை. உதிரிகளாக ஒருசிலர் அத்துறையில் இயங்கியிருந்தாலும் தேனுகா அளவுக்குத் தொடர்ச்சியாக அத்துறையில் யாருமே பங்களிப்புச் செய்யவில்லை.

மேற்கில் மட்டுமே இருந்துவந்த கலை இலக்கியக் கோட்பாடுகளையெல்லாம் தமிழில் பிரபல்யப்படுத்த அவர் இடையறாமல் உழைத்துக் கொண்டிருந்தார். என்னுடைய பதின்ம வயதில்தான் தேனுகா என்னும் பெயரை முதன்முதலில் கேட்டேன். பெயரைக் கேட்ட மாத்திரத்தில் அப்பெயருக்கு உரிய நபர் பெண்ணாக இருக்கக்கூடும் என்றே நானும் எண்ணினேன்.

ரேணுகா மாதிரி தேனுகா என எண்ணி அவர்மீது காதல் மீதூறிய காலம் அது. என்போலவே தேனுகாவை பெண்ணென்று நம்பிப் பிரியம் வைத்த இன்னொருவர் கவிஞர் புத்தகன். அவ்வப்போது நானும் புத்தகனும் “இந்த தேனுகா பெரிய அறிவாளியா இருப்பா போலிருக்கே” என பேசிக்கொள்வதை எழுத்தாளர் தஞ்சை ப்ரகாஷ் நமட்டுச் சிரிப்போடு கேட்டுக் கொண்டிருப்பார்.

சுஜாதா மாதிரியே தேனுகாவும் பெண் பெயரில் எழுதிவரும் ஆண்தான் என்று அவர் சொல்லவே இல்லை. பல நாட்களாக இந்தக் கூத்து நடந்துகொண்டிருந்தது. ஒருகட்டத்தில் தேனுகாவுக்கு என்ன வயதிருக்கும் என்று நானும், கல்யாணமானவளா? கல்யாணமாகாதவளா? என்று புத்தகனும் விவாதிக்கும் அளவுக்குப் போனோம்.

அப்போதுதான் தஞ்சை ப்ரகாஷ், “அவ நாளைக்கி சாயந்தரம் வர்றா...மறக்காம வந்திடுங்க, அறிமுகப்படுத்துறேன்” என்றார். “தனியாவே கும்பகோணத்திலிருந்து வந்திடுவாங்களா..இல்ல கூட யாராச்சும் வருவாங்களா?’’ என்று புத்தகன் கேட்கும்வரைகூட அவர் அந்தப் புதிர்மூட்டையை அவிழ்க்கவில்லை. தேனுகா கும்பகோணத்துக்காரி என்பதுவரை விசாரித்த நாங்கள் அந்த பெயருக்குரிய நபர் ஆணா, பெண்ணா என விசாரித்திருக்கவில்லை என்பதுதான் அதிலுள்ள விநோதம்.

தஞ்சை ப்ரகாஷ் சொன்ன அந்த சாயந்திரமும் வந்தது. ஒருநாளுமில்லாத திருநாளாக அன்று ஏனோ முகத்தில் தூக்கலாகப் பவுடரைப் பூசிக்கொண்டு நானும் புத்தகனும் தேனுகாவுக்காகக் காத்திருந்தோம். எங்களைப் பொறுத்தவரை அவள் தேனுகா அல்ல, தேவதை. வாராதிருந்த அந்த தேவதைக்காக தஞ்சை ப்ரகாஷ் வைத்திருந்த ரப்பர் ஸ்டாம்ப் கடை வாசலிலேயே நின்றிருந்தோம்.

வெகுநேரமாக எங்கள் கற்பனைகளில் அந்த தேவதை வெண்சாமர சிறகுகொண்டு எங்களைப் பறக்கவைத்தாள். அப்போதுதான் அந்தப் பெரியவர் கடைக்கு உள்ளே வந்தார். “வாங்க தேனுகா, எப்படியிருக்கீங்க” என்று ப்ரகாஷ் அந்தப் பெரியவரை ஆரத் தழுவினார். எனக்கும் புத்தகனுக்கும் முகத்தில் ஈயாடவில்லை.

உங்களைச் சந்திக்கத்தான் இவர்களும் வெகுநேரமாகக் காத்திருக்கிறார்கள் என்று எங்களை நையாண்டியாக அறிமுகப்படுத்தினார். அவரும் வழக்கத்திற்கு மாறான புன்னகையோடு எங்களை எதிர்கொண்டார். தேவதை ஆணாக இருந்ததையும் அதைவிட அது வயதான தேவதையாக இருந்ததையும் எங்களால் ஜீரணிக்கவே முடியவில்லை.

என்ன செய்ய? அன்றிலிருந்து பெண் பெயரிலுள்ள போதையிலிருந்து வெளியேறி, பெண்ணே ஆயினும் அன்பு செலுத்த முடியாத அவலத்திற்கு ஆளானோம். இப்போது நினைத்தாலும் நானும் புத்தகனும் சேர்ந்து செலவழித்த ஐம்பது கிராம் கோகுல் சாண்டலில் தேனுகாவின் வாசனைதான் வீசுகிறது. இதன் தொடர்ச்சியாக தேனுகாவிடமே, “நீங்கள் ஏன் சார் இப்படியொரு பெயரைத் தேர்ந்தெடுத்தீர்கள்?” என்றேன்.

ஓ...அதுவா, அது ஒருராகத்தின் பெயர். அந்த ராகத்தில் எனக்கொரு மயக்கமுண்டு. முடியுமானால் நீங்களும் ‘தெளியலேது ராமா’ என்று ஆரம்பிக்கும் தியாகராஜர் கீர்த்தனையைக் கேட்டுப்பாருங்கள். அக்கீர்த்தனை அமைந்திருக்கும் ராகத்தின் பெயர்தான் என்னுடையது” எனவும் பெருமிதப்பட்டுக்கொண்டார்.

“உங்களுக்கு ஏற்பட்ட அதே மயக்கம் இங்கேயும் சிலருக்கு ஏற்பட்டு, பவுடரைக் காலி செய்தவர்கள்தான் இந்த இருவரும்” என்று கொணஷ்டையாக ஒரு சந்தர்ப்பத்தில் தேனுகாவிடம் தஞ்சை ப்ரகாஷ் எங்களைப் போட்டுக்கொடுத்தார். கர்நாடக இசையின் ஒன்பதாவது மேளகர்த்தா ராகமே தேனுகாஎன்பது.

இதன் மத்திமத்தை பிரதி மத்திமமாக மாற்றினால் நாற்பத்தி ஐந்தாவது மேளகர்த்தா ராகமான சுபபந்துவராளி வரும் என கவிஞரும் நண்பருமான ரவிசுப்ரமணியன் ‘ஆளுமைகள் தருணங்கள்’ நூலில் எழுதியிருக்கிறார். ராகங்களைப் பற்றி தெரியாதவர்களுக்கும் தேனுகாவைப் பிடிக்கும். புன்னகை நிரம்பிய அந்த முகத்திலிருந்து ராகங்கள் தங்களை ஆலாபனை செய்து கொண்டன.
 

(பேசலாம்...)

www.kungumam.co

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.