Jump to content

அடையாளம் - சிறுகதை


Recommended Posts

அடையாளம் - சிறுகதை

சிறுகதை: சிவபாலன், ஓவியங்கள்: செந்தில்

`Let me explain’

அந்தக் குறுஞ்செய்தி பாரதியின் செல்போனில் வந்து விழும்போது மணி ஆறு இருக்கலாம். அந்த அரங்கத்தில் அவ்வளவு ஒன்றும் பெரிதான கூட்டம் இல்லை. அதை அந்த இளம் எழுத்தாளன் பொருட்படுத்தியதாய் தெரியவில்லை. ரசித்து ரசித்து தனது உரையை நிகழ்த்திக் கொண்டிருந்தான். பாரதி எந்த சுவாரசியமும் அற்று அமர்ந்திருந்தான். அந்த அரங்கில் இருபதிலிருந்து முப்பது பேர் வரை இருக்கலாம்; யாருக்கும் அந்த நிகழ்வில் எந்த ஓர் ஈர்ப்பும் இருப்பதாய் தெரியவில்லை. எல்லோரும் ஏதோ ஒரு நிர்பந்தத்தின் பேரில் வந்திருப்பதாய் பட்டது. பாரதி அரங்கிலிருந்து மெதுவாய் தன்னை விடுவித்துக்கொண்டு வெளியே நடந்தான்.

அந்த அரங்கத்தின் வெளியே வந்து ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டான். மழை பெய்து கொண்டிருந்தது. அந்த அரங்கத்தின் எதிரே இருந்த அகலமான சாலை மழையில் வெறுமையாய் இருந்தது. சாலையின் இருமங்கிலும் பெரும்பாலான மக்கள் மழைக்கு பயந்து ஒதுங்கியிருந்தனர். அந்த மழையில் திருச்சி நகரம் ஒருவித ரம்மியத்தோடு இருப்பதாய் அவனுக்குப் பட்டது. கிட்டத்தட்ட பதினாறு ஆண்டுகள் கழித்துத் திருச்சிக்கு வருகிறான். அவனால் அத்தனை இயல்பாய் இங்கு இருக்க முடியவில்லை. இந்த நகரத்தைச் சார்ந்து எத்தனையோ நினைவுகள் அவனுக்குள் இருக்கின்றன; அவனுக்குள் முட்டிமோதிக் கொண்டிருக்கின்றன. முடிந்தவரை அவன் கடந்தகால நினைவுகளையும் அதனைச் சார்ந்த அடையாளங்களையும் மறக்கவே நினைத்திருந்தான். ஆனால், இந்த நகரத்தைச் சார்ந்த நினைவுகள் அத்தனை சுலபமாய் மறக்கக்கூடியவை அல்ல, அதுவும் மழை பெய்யும் இந்த நகரத்தின் மையத்தில் நின்றுகொண்டு.

p66a.jpg

திருச்சி நிறைய மாறியிருந்தது. அகலமான சாலைகள், நிறைய மேம்பாலங்கள், பெரிய பெரிய கட்டடங்கள், பன்னாட்டு உணவகங்கள், கார்ப்பரேட் மருத்துவமனைகள் என இன்னும் நிறைய நிறைய. ஆனாலும் இவை அனைத்தையும் மீறி பாரதியால் இந்தத் திருச்சியின் ஆன்மாவை உணர முடிந்தது. எல்லா நேரமும், எல்லா இடங்களிலும் அவனால் இந்த நகரத்தின் அந்தரங்கத்தைக் காண முடிந்தது. அவனுக்கு இந்தப் புற மாற்றங்கள் எதுவும் தடையாய் இல்லை. ஏனென்றால், ஒரு நகரத்தின் அடையாளம் என்பது எந்தப் புறத்தோற்றங்களிலும் இல்லை; அது அந்த நகரத்தின் ஆன்மாவில் ஒரு காற்றைப்போல கலந்திருக்கிறது என அவனுக்குத் தெரியும்.

மழை கொஞ்சம் கொஞ்சமாய் குறையத் தொடங்கியது. அந்த வெறுமையான சாலை இப்போது போக்குவரத்தால் நிறையத் தொடங்கியது. இன்னும் சற்று நேரத்தில் ஒரு பெருளான ஜனத்திரளில் அந்தச் சாலை தனது அடையாளத்தை இழந்துவிடும். அது மற்றுமொரு போக்குவரத்து நெரிசலான சாலையாகப் பார்க்கப்படும். நிறைய நேரங்களில் புறச்சூழல்களும், புறக்காரணிகளும் ஓர் அடையாளத்தை நிர்ணயிப்பதாய் அமைந்துவிடுகிறது; சூழலுக்கு ஏற்ப தனது அடையாளத்தை மாற்றிக்கொள்ளும் ஒரு பச்சோந்தியைப்போல. ஆனால், மனிதன் என்பவன் தனது அகச்சூழலைப் பொறுத்தே தனது அடையாளத்தை வெளிப்படுத்துகிறான். அவனது அடையாளம்தான் அவனது மெய். அதனைச் சார்ந்துதான் அவன் அவனது வாழ்வைக் கட்டமைக்கிறான். ஒருவனது அடையாளம் என்பது எப்போதும் அவனது அகத்தைச் சார்ந்தே அமைந்துவிடுகிறது.

பாரதி தன்னளவில் ஓர் ஆண். அதுதான் அவனது அடையாளம்; அவனது அக அடையாளம். பிறக்கும்போது பாரதி பெண்ணாய் பிறந்தவள்; அவனது புற அமைப்பு ஒரு பெண்ணின் அடையாளமாய் இருந்தது. இந்த இரு வேறு அடையாளச் சிக்கல்கள் கொடுத்த எல்லா வலிகளையும் கடந்துதான் வந்திருக்கிறான். இன்று கூடுமானவரை தனது புற அடையாளங்களையும் மாற்றிக்கொண்டிருக்கிறான். இந்த அடையாளத்திற்காக, தனது அக அடையாளத்தை மீட்டெப்பதற்காக அவன் தன்னைச் சார்ந்த அத்தனையும் இழந்திருக்கிறான்.

இதோ, இதே திருச்சியில்தான் பாரதியின் வாழ்க்கைத் தொடங்கியது ஒரு பெண்ணாக, ஒரு மகளாக, நான்கு அக்காக்களுக்கு ஒரே தங்கையாக. நான்கு பெண் பிள்ளைகளுக்குப் பிறகாவது ஓர் ஆண் பிள்ளை வேண்டும் என்ற பெற்றோரின் எதிர்பார்ப்பைப் பொய்த்து பாரதி பிறந்தாள். பாரதி என்ற பெயர்கூட அவள் பிறப்பதற்கு முன்பே முடிவு செய்யப்பட்ட பெயர்தான்; ஓர் ஆண் பிள்ளைக்காக. ஆனால், அந்தப் பெயர் பாலினங்களைக் கடந்து எல்லா வகையிலும் பாரதிக்குப் பொருந்திப் போனது.

சிறிது ஏமாற்றம் இருந்தாலும் அப்பாவுக்குப் பாரதியை மிக எளிதில் பிடித்துப் போனது. அப்பாவின் நடுத்தர வயதும் அதில் எழும் இயல்பான வெற்றிடமும்கூட அதற்குக் காரணமாக இருக்கலாம். பாரதி அந்த வெற்றிடத்தை இயல்பாக, முழுமையாக நிரப்பிக்கொண்டாள். அம்மாவுக்குப் பாரதி நாலோடு ஒண்ணு,  அவ்வளவுதான். பாரதியும் ஒரு முழு அப்பா பிள்ளை. பெரும்பாலான நேரங்கள் பாரதி அப்பாவுடன்தான் இருப்பாள். அப்பாவின் அருகாமையும் அப்பாவின்மேல் வீசும் அந்த வாசமும் பாரதிக்கு எப்போதும் தேவையாக இருந்தது. எல்லாவற்றுக்கும்மேல் அப்பாவின் உள்ளங்கை, அவ்வளவு மிருதுவாகவும் மென்மையாகவும் இருக்கும் ஒரு பெண்ணின் உள்ளங்கைபோல.  அப்பாவின் முன்கைகள்கூட ரோமங்கள் ஏதுமற்று மென்மையாக இருக்கும். பாரதிக்கு எப்போதும் அப்பாவின் கைகளைப் பற்றிக்கொள்ள வேண்டும்; அப்பாவின் விரல்களோடு சேர்த்துக்கொள்ள வேண்டும்; நடக்கும்போது,  தூங்கும்போது, சாப்பிடும்போது என எப்போதும் அப்பாவின் கைகளைப் பிடித்துக் கொண்டேயிருப்பாள். அப்பா மாலை நேரங்களில் இப்ராகிம் பார்க்குக்கு அழைத்துச் செல்வார். அப்போதெல்லாம் விளையாடக்கூடத் தோணாமல் அப்பாவின் கையைப்பிடித்துக்கொண்டு மணிக்கணக்கில் அமர்ந்திருப்பாள். அம்மாவுக்குதான் பிடிக்காது. “என்னடி பொம்பளைப் பிள்ளை. எப்ப பார்த்தாலும் அப்பா கைய பிடிச்சிக்கிட்டே இருக்கிற, போடி... போய் பிள்ளைங்களோட சேர்ந்து விளையாடு. போடி” என்பாள்.

ஆரம்பகாலத்தில் இருந்தே பாரதிக்குப் பெண்களோடு விளையாடப் பிடிக்காது. பக்கத்து வீட்டு ஆண் பிள்ளைகள்கூடத்தான் விளையாடிக்கொண்டிருப்பாள். உடைகள் கூட ஆண் பிள்ளைகளுக்கான உடைகளைத் தான் கேட்டு வாங்கிக்கொள்வாள்.  அப்பாவுக்கு அது ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை. ஆண் குழந்தை இல்லாததால், அவரும் அவள் கேட்கும் உடையையே வாங்கிக் கொடுப்பார். ஆனால், பள்ளிக்குப் போகும்போது யூனிஃபார்ம் போட வேண்டுமென்றால், ஒவ்வொரு நாளும் அம்மாவுக்குப் போராட்டம் தான். இறுதியில் அப்பா வந்து ஏதாவது சமாதானம் செய்து போட்டு விடுவார். பாரதிக்கு ஏனோ பெண் பிள்ளைகளுக்கான உடையில் அவ்வளவு இயல்பாய் இருக்க முடிவதில்லை. மிக அந்நியமாய் உணர்வாள். பள்ளி விட்டு வந்தவுடன் அவள் செய்யும் முதல் வேலை, அந்த உடையை மாற்றுவது தான்.

நாளாக நாளாக  பாரதியின் நடவடிக்கைகளில் நிறைய ஆண்தன்மை தெரியத் தொடங்கின. முடியமைப்பு உட்பட பாரதி அத்தனையும் ஓர் ஆண்போலவே இருக்குமாறு மெனக்கெட்டாள். பள்ளியில் இருந்து நிறைய புகார்கள் வரத் தொடங்கின. `பாரதி எப்போதும் ஆண் நண்பர்கள்கூடவே பேசிக்கொண்டிருக்கிறாள், அவர்கள் விளையாடும் விளையாட்டைத்தான் விரும்பி விளையாடுகிறாள், மதிய உணவைக்கூட அவள் ஆண் பிள்ளைகள்கூடவே அமர்ந்து சாப்பிடுகிறாள்’ என நிறைய புகார்கள். அப்பாவுக்கு ஆரம்பத்தில் இது பெரிய விஷயமாகப்படவில்லையென்றாலும் பள்ளி நிர்வாகத்தின் தொடர்ச்சியான புகார்களால், கொஞ்சம் கொஞ்சமாக அவர் வருத்தப்படத் தொடங்கினார். அம்மாவுக்குக் கோபப்படுவதைத் தவிர, வேறு எதுவும் தெரியவில்லை. அப்பா, பெண் என இரண்டுபேர்மீதும் கோபம். ``உங்களால்தான் இந்தப் பொண்ணு இப்படி இருக்கா, ஒரு பொம்பளப் புள்ளையை வளர்க்கிற மாதிரியா வளர்த்தீங்க. அதனால்தான், இவ இப்படி டவுசரைப் போட்டுக்கிட்டு சுத்திட்டு இருக்கா” என்று கத்திக் கொண்டிருப்பாள்.

பாரதி, தனது வளர் இளம் பருவத்தை நெருங்க நெருங்கத் தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்கினாள். அவள் உடலைப் புரிந்து கொள்ள முற்பட்டாள். அவளது உடல் முன்னெப்போதும்விட அவளுக்கு மிகப்பெரிய சுமையாய் இருந்தது. அவளால் சுமக்க முடியாத பாரமாய் இருந்தது. அவள் உடல்மீது அவளுக்கு இயல்பாய் வரக்கூடிய எந்த ஓர் ஈர்ப்போ,ஆசையோ,கர்வமோ அவளுக்கு ஏற்படவில்லை. மாறாக வெறுப்பாக இருந்தது. அவளது மனம் உடலுடன் இசையவில்லை. உடலும் மனமும் வேறு வேறு திசைகளில் இயங்கின. அவள் உடலில் நிகழும் பருவரீதியான மாற்றங்கள் ஒவ்வொன்றும் அவளுக்கு அருவருப்பாய் இருந்தன. ரணமாய் இருந்தன. தீர்க்க முடியாத ரணம். அவள் மட்டுமே அறிந்த ரணம். இந்த ரணத்தில் இருந்து, வலியில் இருந்து, அருவருப்பில் இருந்து மீள நினைத்தாள். இந்தப் புற அடையாளங்கள் ஒரு தடிமனான கம்பளியைப்போலத் தன்னை முழுதுமாய் போர்த்திக்கொண்டுள்ளதாய் நினைத்தாள். `எல்லோரும் இந்தக் கம்பளியைத் தான், நான் என நினைத்து விடுகிறார்கள். ஏனென்றால், அதுதான் சுலபமானது. நான் என நான் நினைப்பது இந்தக் கம்பளியை அல்ல; அதற்குள் இருக்கும் என்னைத்தான். நான் யாரென்பது எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம், அது எனது மனதைச் சார்ந்த ரகசியம். எனது மனதை, எனக்குள் நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்த அடையாளச் சிக்கல்களை, எனது கம்பளிக்குள் மறைந்திருக்கும் என்னை, எனது ரகசியத்தை அப்பாவுக்கு மட்டும் சொல்லிவிட வேண்டும்’ என்று பாரதி நினைத்தாள். அப்பா புரிந்து கொள்வார், அப்பாவிடம் ஒரு தீர்வுகூட இருக்கலாம் என நினைக்கத் தொடங்கினாள். ஆனால், அப்பா இப்போதெல்லாம் முன்பு போல பேசுவதில்லை. வீட்டுக்கு லேட்டாகத்தான் வருகிறார், வந்தவுடன் சாப்பிட்டுத் தூங்கப் போய்விடுகிறார். பாரதி, அப்பாவுடன் தூங்கி நிறைய நாள் ஆயிற்று. பாரதிக்கு அப்பாவிடம் எல்லாவற்றையும் சொல்லி அழ வேண்டும் போலிருந்தது. அப்படியே அப்பாவின்  மிருதுவான மென்மையான கைகளைப் பிடித்துக் கொண்டே அப்பாவுடன் தூங்க வேண்டும் போல் இருந்தது.

பாரதிக்கு இந்தத் துயரம் சார்ந்த அடையாளத்தைக் களைவதும், அது நிமித்தமான இந்தச் சமூகத்தின் பார்வையை எதிர்கொள்வதும் அத்தனை எளிதாக இல்லை. ஓர் இருள் சூழ்ந்த உலகத்தில் அகப்பட்டுக் கொண்டதைப் போலிருந்தது. அப்பாவைத் தவிர வேறு யாராலும் இதைப் புரிந்துகொள்ள முடியாது. அப்பாவும் இதைக் கேட்கத் தயாராக இல்லை. நாளுக்கு நாள் அவள் மீதான பார்வையும், வெற்று கேலிப் பேச்சுகளும் அதிகமாகிக்கொண்டேயிருந்தன. இந்த வயதின், இந்தப் பருவத்தைச் சார்ந்த சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் அவளால் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. எந்த ஒரு விஷயத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள முடியவில்லை. இதற்குக் காரணமோ, தீர்வோ எதுவும் பாரதியிடம் இல்லை. அவள் மனம் காற்றில் அலையும் ஒரு காற்றாடிபோல இலக்கின்றி அலைந்து கொண்டிருந்தது.

பாரதிக்கு அப்போது இருந்த ஒரே ஒரு ஆறுதல் வாசு மட்டுமே. வாசு, பாரதியைவிட இரண்டு வயது பெரியவன், ஒரே பள்ளியில்தான் இருவரும் படிக்கிறார்கள். வாசுவால், பாரதியை ஓரளவுக்குப் புரிந்துகொள்ள முடிந்தது. பாரதிக்கு வாசுவுடன் பேசும்போதெல்லாம் அப்பாவிடம் பேசுவதுபோல இயல்பாக இருக்க முடிந்தது. வாசுவின் பேச்சில் பாரதிக்கு ஒரு முதிர்ச்சி தெரியும். அந்த முதிர்ச்சியான அணுகுமுறை தான் அவளுக்குத் தேவையானதாக இருந்தது. `இதே முதிர்ச்சியுடனும், பக்குவத்துடனும்தான் இந்தப் பள்ளியும், இதன் ஆசிரியர்களும் என்னை அணுகியிருக்க வேண்டும்.ஆனால், யாரும் இதுவரை என்னை அப்படி அணுகவில்லை’ என்பது பாரதிக்கு ஏமாற்றமாக இருந்தது. அப்பாவே இதற்குத் தயாராக இல்லாதபோது இந்தப் பள்ளியையோ, இதன் ஆசிரியர்களையோ நான் எப்படிக் குறை சொல்ல முடியும் என்று நினைத்துக்கொள்வாள்.

p66b.jpg

வாசு மட்டும் அடிக்கடிச் சொல்வான். “ இங்கு யாரும் உன்னைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். அதை எப்போதும் நீ எதிர்பார்க்காமல் இரு. நீ நீயாக வாழ வேண்டும். உனது அடையாளத்தோடு வாழ வேண்டும் என்று விரும்பினால், இங்கிருந்து போய்விடு. எங்க மாமா சென்னையில் இருக்கிறார். ஒரு பத்திரிகையில் சீனியர் எடிட்டராக இருக்கிறார். அங்கு போய்விடு. அவர் உன்னைப் புரிந்துகொள்வார். நான் அவரிடம் பேசுகிறேன்” என்பான். ஆனால், பாரதிக்குதான் அப்பாவை விட்டுவிட்டு எப்படிப் போவது என்று தயக்கம். என்றாவது அப்பா தன்னை நிச்சயம் புரிந்துகொள்வார் என நம்பினாள்.

பாரதி தன்னை முழுமையாக உணர்ந்து கொண்ட நாள் ஒன்று வந்தது. தனது மனதோடு எந்தச் சமரசமும் தன்னால் செய்துகொள்ள முடியாது என்று பாரதி புரிந்துகொண்ட நாள் அது. பாரதி, தன் வாழ்க்கையை இந்த உடல் சார்ந்து தனது மனம் சார்ந்து மீள் கட்டுமானம் செய்வது அவசியமானது என்று தெரிந்து கொண்ட நாள் அது. ஆனால், அந்த நாளும் அது சார்ந்த நினைவுப் படிமங்களும் அத்தனை ஒன்றும் சந்தோஷமானதாக இல்லை.

எப்போதும்போலத்தான் அன்றும் விடிந்தது எந்த சுவாரசியங்களும் அற்று. பாரதி அன்று பள்ளிக்கு முன்னதாகவே சென்றுவிட்டாள். வகுப்பில் காவியா மட்டும்தான் இருந்தாள். பாரதியைப் பார்த்துச் சிரித்தாள். வந்து அருகில் அமரச் சொன்னாள். பாரதிக்குக் கொஞ்சம் கூச்சமாக இருந்தது. முடியாது என்று சொன்னால் ஏதாவது கேலியாகச் சொல்வாள் என்று நினைத்து அவள் அருகில் சென்று கொஞ்சம் தள்ளியே அமர்ந்தாள். காவியா நெருங்கிவந்து பாரதியின் மிக அருகில் அமர்ந்து கொண்டாள். “ ஏன் எப்போதும் பசங்ககூடவே இருக்க, உனக்கு ஒரு மாதிரி இல்லையா” என்றாள்.

“இல்லை, உன் பக்கத்தில் இப்படி உட்கார்ந்து இருக்கும்போதுதான் எனக்கு ஒரு மாதிரி இருக்கு.”

“நம்ம ரெண்டு பேரும் பொண்ணுங்கதானே, என்ன ஒரு மாதிரி இருக்கு” என்று பாரதியின் கையைப் பிடித்தாள்.

பாரதிக்குப் படபடப்பாக இருந்தது. அவளது நெருக்கம் அவளுக்குள் ஏதோ செய்தது. பசங்க கூட கட்டிப் புரண்டு எல்லாம் சண்டை போட்டு விளையாடியிருக்கிறாள். ஒருமுறைகூட அவளுக்குள் இப்படி நிகழ்ந்தது இல்லை. ஒரு பெண்ணின் நெருக்கமும் தொடுதலும் அவளுக்குள் இத்தனை கிளர்ச்சியை உண்டு பண்ணும் என அவள் எதிர்பார்க்கவே இல்லை. இன்னும் கொஞ்சம் நெருக்கமாய் அமர்ந்தாள்.

“கேட்டுக்கிட்டே இருக்கேன், என்ன அப்படி யோசிக்கிற” என்று கேட்டுக்கொண்டே காவியா, பாரதியின் கையை எடுத்துத் தனது மடிமேல் வைத்துக்கொண்டாள்.

பாரதிக்கு வார்த்தைகள் எதுவும் வரவில்லை. தனது கையைக் கொஞ்சம் அழுத்தமாக அவளின் தொடையில் பரவ விட்டாள்.

“ஏன் இப்படி பாய்ஸ் மாதிரி முடி வெட்டியிருக்க” என்று காவியா, பாரதியின் கேசத்தைக் கலைத்துவிட்டாள்.

“இது உனக்குப் பிடிச்சிருக்கா?” என்றாள் பாரதி.

“நீ பையன் மாதிரி இருக்க.”

“நான் பையன்தான்.”

“எப்படி நம்பறது? நீ சும்மா சொல்ற.”

“நிஜம்தான்.”

“அப்படின்னா, எனக்கு ஒரு முத்தம் கொடு பார்க்கலாம்.”

பாரதி காவியாவின் மிருதுவான கரங்களைப் பற்றிக்கொண்டாள், இன்னும் கொஞ்சம் நெருங்கிப்போய் அவளை முத்தமிட்டாள். மென்மையாக, பின் அழுத்தமாக, பின் மூர்க்கமாக, காவியாவும் முத்தமிட்டாள். அவர்கள் தங்களை மறந்தார்கள். பாரதியின் அடையாளத்தையும் அதன் ரகசியத்தையும் காவியா ஒரு சாவியைக் கொண்டு திறந்து விட்டாள். அது உணர்ச்சிப் பிழம்பாய் கொஞ்சம் கொஞ்சமாகப் பாரதியின் சுயம் முழுதும் நிறையத் தொடங்கியது.

வெளியே யாரோ சிரிப்பது கேட்டது. இருவரும் தங்களின் நிலையை உணர்ந்து திரும்பிப் பார்த்தபோது அந்த வகுப்பில் உள்ள எல்லோரும் வந்திருந்தார்கள். இவர்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தனர்.
அந்தச் சம்பவம் அவ்வளவு வேகமாக எல்லா இடமும் பரவியது. அதன் நீட்சியாக பாரதி பள்ளியிலிருந்து நீக்கப்பட்டாள். காவியா ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டாள். பாரதியின் அப்பா நிலைகுலைந்துபோனார். எங்கு போனாலும் இதே கேள்வி, கிண்டல், கேலிப் பேச்சு, அறிவுறை... அப்பாவால் எங்கும் போக முடியவில்லை. வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார். அம்மா எப்போதும் அழுதுகொண்டே இருந்தாள். “நாலோட நிப்பாட்டிக்கலாம்னு சொன்னேனே... இந்த மனுசன்தான் பையன் பையன்னு அலைஞ்சார், அதுக்குத்தான் இப்படி வந்து பொறந்திருக்குது, எல்லாத்தோட உயிரையும் வாங்க” என்று அழுது புலம்பித் திட்டிக் கொண்டிருந்தாள்.

பாரதியைப் பொறுத்தவரை அவளுக்கு இது பெரிதாய் தெரியவில்லை. இதைவிட மோசமான தருணங்களை எல்லாம் அவள் கடந்து வந்திருக்கிறாள். “போயும் போயும் ஒரு பொண்ணோட” என்று அம்மா அழுது கொண்டிருந்தாள். பாரதிக்கு நன்றாகத் தெரியும், இதே அவள் ஓர் ஆணுக்கு முத்தம் கொடுத்திருந்தால், அது இத்தனை அசிங்கமாய் பார்க்கப்பட்டிருக்காது.ஒரு ஹோமோசெக்ஸுவலாக, ஒரு லெஸ்பியனாக இது புரிந்துகொள்ளப்பட்டதால்தான், இத்தனை அசிங்கமாகவும் ஒழுங்கீனமாகவும் அணுகப்படுகிறது. பாரதியைப் பொறுத்தவரை இது ஹோமோசெக்ஸுவல் கிடையாது. அவளைப் பொறுத்தவரை அவள் ஓர் ஆண். ஓர் ஆணுக்கு ஒரு பெண்ணின் மீதுதான் இயல்பாக ஈர்ப்பு வரும். பாரதிக்கும் ஒரு பெண்ணின் மீதுதான் ஈர்ப்பு வந்தது. அது எப்படி ஹோமோசெக்ஸுவல் ஆகும், இந்தச் சமூகம் என்னைப் பெண்ணாய் பார்த்தால், அது என் தவறு எப்படியாகும், நான் யாரென்பது எனக்குத் தான் தெரியும். இதை யாரிடமும் நிறுவ வேண்டிய அவசியம் தனக்கில்லை என உறுதியாக நம்பினாள்.

பாரதியின் கவலையெல்லாம் அப்பாவைப் பற்றியதுதான். அப்பா ஒரு வார்த்தைகூட இதைப் பற்றிக் கேட்கவில்லை.அவர் கேட்டிருந்தி ருக்கலாம். அவருக்குத் தன்னால் புரிய வைக்க முடியும். அப்பா தன்னைப் புரிந்து கொள்வார் என்று நம்பினாள். ஆனால், அப்பாவின் மெளனம் கவலையூட்டக் கூடியதாய் இருந்தது. ஒருவேளை அப்பா புரிந்துகொள்ளத் தயாராய் இல்லையோ என்று நினைத்தாள்.  நடந்த செயலுக்கு நான் ஒருபோதும் வருந்தப் போவதில்லை. இத்தனை காலம் எனக்குள் அவிழ்க்கப்படாமல் கிடந்த ஏராளமான புதிர்களை அந்தத் தருணம்தான் விடுவித்தது. உடல்ரீதியாக எனது அத்தனை குழப்பங்களுக்கும் அந்தத் தருணத்தில்தான் விடையிருந்தது. நான் என்னைத் தெரிந்து கொண்டேன். நான் யாரென தெரிந்துகொண்டேன். எனது உடல் அத்தனை இயல்பாய் எனது மனதோடு இசைந்துபோனது அந்தத் தருணத்தில்தான். அதற்காக நான் ஒரு போதும் வருந்தப்போவதில்லை. அப்பா பேசினால் புரியவைக்க முயல்வேன். அப்பாவால் அது முடியாது, அவர் இந்தச் சமூகம் வரையறை செய்த நியாயங்களின் பின்னால் மறைந்துகொள்வார். அப்பாவால் அதனை அவ்வளவு எளிதாக உதறிவிட முடியாது. ஏனென்றால், அவர் அப்பா. நான்கு பெண்களுக்கு அப்பா.

பாரதி கிளம்புவது என முடிவு செய்து விட்டாள். வாசு அதற்கான அனைத்து ஏற்பாட்டையும் செய்துவிட்டான். யாரிடமும் சொல்ல வேண்டும் என்று தோன்றவில்லை. அப்பாவின் அந்த மென்மையான கைகளுக்குள் தனது கைகளை இறுதியாய் ஒருமுறை கோத்துக் கொள்ள நினைத்தாள். அப்பாவின் அறைக்குச் சென்றாள். அப்பா உறங்கிக் கொண்டிருந்தார். அருகில் உட்கார்ந்து கொண்டாள். அப்பாவின் கைகளைப் பற்றிக்கொண்டாள். அந்தத் தொடுதலின் வழியாக எல்லாமும் பேசிவிட முடிந்தால், எத்தனை சுலபமாக இருக்கும் என்று நினைத்தாள். இந்த ஸ்பரிசமும் அதன் வழியே கடத்தப்படும் இந்த அன்பும் இதுவே கடைசியாக இருக்கக் கூடாது என்று நினைத்தாள். கண்களில் கண்ணீர் திரண்டு வந்தது. அது அப்பாவின் பஞ்சு போன்ற கைகளில் பட்டுத் தெறித்தது. அப்பா ஒருவேளை விழித்துக்கொள்ளலாம் இல்லை விழித்துக்கொண்டுதான் இருக்கலாம் என்று நினைத்தவளாய் அங்கிருந்து கிளம்பினாள்.

பதினாறு வயதில் இந்த நகரத்தைவிட்டுக் கொட்டும் மழையில் கிளம்பிய பாரதி என்பவள், பதினாறு வருடம் கழித்து அதே மழை பெய்யும் ஒருநாளில் இந்த நகரத்துக்குப் பாரதி என்பவனாய் திரும்பி வந்திருக்கிறான். தனது அடையாளத்தை அகம் சார்ந்த அடையாளத்தை இத்தனை வருடங்களில் மீட்டெடுத்திருக்கிறான். அதன் வலிகளும் ரணமும் இன்னும் பாரதியின் மன அடுக்குகளில் ஒளிந்திருக்கிறது என்பதற்கு இந்த நகரத்தைத் தவிர வேறு எதுவும் சாட்சியாக இருக்க முடியாது.

“என்னடா பாதியில் வந்துட்ட, உன் பொறுமைய ரொம்பவே சோதிச்சிட்டாங்களா?” வாசுவின் குரல் கேட்டு பழைய நினைவோட்டங்களில் இருந்து மீண்டு பாரதி வெளியே வந்தான்.

“நான் கிளம்புறேன், நீ எல்லாத்தையும் முடிச்சிட்டு ஏர்போர்ட் வந்துடு” என்று சொல்லிவிட்டு இன்னொரு சிகரட்டைப் பற்றவைத்தான் பாரதி.

“என்னடா அதுக்குள்ள? நாளைக்குப் போகலாம் இரு. உனக்குக் கொஞ்சம் மாறுதலா இருக்கும்னுதான் இங்க வரச் சொன்னேன். ரெண்டுநாள் இருடா, கோபம்லாம் முதலில் குறையட்டும். மீதியெல்லாம் நிதானமாகப் பேசிக்கலாம்.”

“என்ன பேசுறது? பேசறதுக்கு எதுவும் இல்லை.”

“அப்படியெல்லாம் இல்லடா, காவியா இல்லாம நீயே இல்லை, உன்னைவிட உனக்காக அதிக இழப்புகளையும் அதிக வலிகளையும் அவள்தான் கடந்து வந்திருகிறாள். ஒரு சீனியர் ரிப்போர்ட்டராக உனது இந்த அபரிதமான வளர்ச்சிக்குக் காவியாவைத் தவிர வேறு எந்தக் காரணமும் இருக்க முடியாது. நீ காவியாகிட்ட பேசு. அவளுக்கு ஒரு வாய்ப்புக் கொடுடா. நீயே எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டா எப்படி?காலையிலிருந்து நிறைய மெசேஜ் அனுப்பியிருக்காளாமே... நீ பேசுடா எல்லாம் சரியாகிடும்.”

“ஒவ்வொருத்தருக்கும் அவங்க செயலுக்குப் பின்னாடி ஒரு நியாயம் இருக்கும். அவளுக்கும் ஒரு நியாயம் இருக்கும். அது எனக்கு முக்கியம் இல்லை. காதலுக்கும் அன்புக்கும் எந்த நியாயமோ அநியாயமோ கிடையாது. இதைக் காவியாவே நிறைய முறை சொல்லியிருக்கா. ‘love does not need explanation, you just understand’ னு எத்தனையோ முறை சொல்லியிருக்கா. இன்னைக்கு ‘let me explain’ னு மெசேஜ் அனுப்பிட்டு இருக்கா. இது முடிஞ்சு போச்சுடா. இழப்பு எனக்கு ஒண்ணும் புதுசு இல்லை. எல்லா இழப்பையும் கடந்துதான் இங்க வந்திருக்கேன்.”

“பாரதி, நீயா இப்படிப் பேசுற. காவியாவை உன்னால் எப்போதும் இழக்க முடியாது. அவள்தாண்டா நீ, நீதான் அவள். காவியா எங்கிட்ட பேசுனா, எல்லாத்தையும் சொன்னா, என்ன பெரிசா நடந்துடுச்சு... அந்தக் கணநேரத்தில் நிகழ்ந்த அவள் உடல் சார்ந்த ஒரு பலவீனம், சூழ்நிலையும் சந்தர்ப்பங்களும் எல்லோருடைய பலவீனங்களையும் வெளியே கொண்டு வரும். குறைந்தபட்சம் அது உடல். அவ்வளவுதான், உடலுக்குத் தேவையானதெல்லாம் உணர்ச்சிகளைக் கொட்ட ஒரு வடிகால், ஒரு சந்தர்ப்பம் அவ்வளவுதான். உடல் சார்ந்து இந்தச் சமூகம் நிர்ணயித்திருக்கிற ஒழுக்கவியல் விழுமியங்கள் எல்லாம் எவ்வளவு முட்டாள்தனமானது என்று உன்னைவிட யாருக்குத் தெரியும். ஒருவரின் அடையாளம் அவரது உடல் அல்ல மனம். உடல்ரீதியான வாதைகளும் ஆசைகளும் உணர்ச்சிகளும் ஒருவரின் ஆளுமையை நிர்மாணிக்க முடியாது என்று சொல்லித்தான் நீ இன்று நீயாய் இருக்கிறாய். காவியாவின் உடல்தான் காவியாவின் அந்தக் கணத்தைக் கட்டமைத்திருக்கும். அவள் மனம் கிடையாது. அது எப்போதும் உன்னைச் சுற்றியேதான் இருக்கும். அதனால்தான், நடந்த சம்பவத்தை அவளால் உடனடியாக உன்னிடம் சொல்ல முடிந்தது. இதை அவள் எப்போதும் மறைத்திருக்கலாம். ஆனால், அவள் மனம் அதற்கு ஒப்பாது. இதையெல்லாம் நீயே புரிந்துகொள்வாய் என்றுகூட அவள் எதிர்பார்த்திருக்கலாம்.”

“சரி, நான் கிளம்புறேன், நீ நேராக ஏர்போர்ட் வந்துடு” எனச் சொல்லிவிட்டு விறுவிறுவென காரை நோக்கிக் கிளம்பினான் பாரதி.

வாசுவுக்குத் தெரியும். இதற்குமேல் பாரதியிடம் பேச முடியாது. அவன் பேசுவதையோ மற்றவர்களின் தர்க்க ரீதியான விளக்கங்களையோ எப்போதுமே ஒரு பொருட்டாய் எடுத்துக்கொள்ள மாட்டான். அவனைப் பொறுத்தவரை அவனது நியாயம்தான். தனி மனித உணர்வையும் அது சார்ந்த மதிப்பீடுகளையும் பற்றி எப்போதும் பாரதிக்கு எந்த ஒரு கரிசனமும் இருந்தது இல்லை. அது இயல்பாகவே அவனுக்கு வந்ததா இல்லை இந்தக் கடினமான வாழ்க்கை அவனை இப்படி மாற்றியதா என்பது வாசுவுக்குக்கூடத் தெரியாது. வாசு, பாரதியிடம் அப்பாவைப் பார்க்கப் போகலாமா என்றுகூட கேட்க நினைத்தான். ஆனால், பாரதி அதற்கு ஒத்துக்கொள்ள மாட்டான் என்று நினைத்தான்.

p66c.jpg

“ஹோட்டல் போயிட்டு ஏர்போர்ட் போகணும்” என்று டிரைவரிடம் சொல்லிவிட்டு இன்னுமொரு சிகரட்டை எடுத்துப் பற்றவைத்தான் பாரதி. தனது செல்போனை எடுத்து உயிர்ப்பித்தான். அடுக்கடுக்காய் மெசேஜ் வந்து கொண்டேயிருந்தன. எல்லாமே காவியா அனுப்பியது தான். `Let me explain’ என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. திரும்பவும் செல்லை அணைத்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டான். காரின் அந்தச் செவ்வகக் கண்ணாடி வழியே இன்னும் தூறல். கார் இப்ராஹிம் பார்க்கைக் கடந்து சென்று கொண்டிருந்தது. ஒரு நிமிடம் மழையில் நனைந்த அந்த பார்க்கைப் பார்த்தான். ஒன்றும் பெரிய மாற்றமில்லை. பதினாறு வருடங்களுக்கு முன்பு பார்த்த மாதிரியேதான் இருக்கிறது. அதன் சுவர்கள் மட்டும் வண்ணம் பூசப்பட்டிருக்கிறது, அதில் சில ஒவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன. மற்றபடி இது அவன் நடை பயின்ற அப்பாவின் விரல் பிடித்து நடந்த அதே இப்ராஹிம் பார்க்தான். கடந்த காலத்தில் தான் சந்தோஷமாகக்கூட இருந்திருக்கிறேன் என்பதற்கு இந்த பார்க் மட்டும்தான் சாட்சி என நினைத்துக் கொண்டான்.

பாரதிக்கு அப்பாவைப் பார்க்க வேண்டும் எனத் தோன்றியது. அப்பா இப்போது எப்படி இருப்பார் என மனசுக்குள் நினைத்துக் கொண்டான். அப்பா என்னைக் கண்டிப்பாகத் தொலைக்காட்சியில் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் பார்த்திருப்பார். அது நான்தான் எனத் தெரியுமா? இத்தனை வருடத்தில் என்னைப் பார்க்க வேண்டும் என ஒருமுறைகூடவா நினைத்திருக்க மாட்டார்,  அப்படி நினைத்திருந்தால் கட்டாயம் தேடிவந்து என்னைப் பார்த்திருப்பாரே, ஒரு வேளை காவியா விஷயம் தெரிந்து இன்னும் அதிகமாகக் கோபப்பட்டிருப்பாரோ, ஒரு வேளை அப்பாவுக்கு ஏதாவது ஆகியிருக்குமோ, அப்பா இன்னும் உயிரோடுதான் இருக்கிறாரா? வரிசையான கேள்விகளுக்குப் பின் பாரதிக்குக் கொஞ்சம் படபடப்பாய் இருந்தது. காரை நிறுத்தச்சொல்லி இறங்கிக் கொண்டான். ஓர் ஓரமாகச் சென்று இன்னுமொரு சிகரட்டை எடுத்துப் பற்றவைத்துக்கொண்டான். இனி அப்பாவைப் பார்க்காமல் இங்கிருந்து போகக் கூடாது என முடிவெடுத்தவனாய், உடனடியாக வாசுவுக்கு போனைப் போட்டு, “அப்பாவைப் பார்க்கலாம். நேரா கல்லுக்குழி ரயில்வே கிரவுண்ட் வந்துடு. அங்கிருந்து ரெண்டுபேரும் ஒண்ணாப் போகலாம்’’ எனச் சொல்லி வைத்துவிட்டான். வாசுவுக்கு இது ஒரு பெரிய ஆச்சர்யமாக இருந்தது. அவனால் முதலில் அதனை நம்ப முடியவில்லை. ஆனால், எதிர்பார்த்திருந்தான். ஏனென்றால், பாரதியின் அப்போதைய மனநிலை நம்ப முடியாத முடிவுகளை எடுக்கக் கூடியதாய் இருந்தது.

கல்லுக்குழி ரயில்வே காலனியில் அந்த வீடு பூட்டியிருந்தது. இந்தப் பதினாறு வருடங்களுக்கான மாற்றம் என ஒன்றும் அங்கு இல்லை. பழமை மாறாத அதே ரயில்வே குவாட்டர்ஸ், பாரதியின் வீடு மட்டும் கொஞ்சம் மாறியிருந்தது. பராமரிக்காமல் விட்ட குரோட்டன்ஸ் செடிகள்,சிதிலமடைந்த சுவர்கள், கரையான் அரித்த மரச்சட்டங்கள் எனச் சில மாற்றங்கள். மொத்தத்தில் அந்த வீடு பொலிவற்றதாய் இருந்தது.
“என்னடா வீடு பூட்டியிருக்கு. இரு... நான் பக்கத்து வீட்டில் போய் விசாரித்துவிட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றான் வாசு. பாரதி அங்கு கிரிக்கெட் விளையாடும் சிறுவர்களையே பார்த்துக்கொண்டிருந்தான். வாசு கொஞ்சம் பதட்டமாக வந்தான். அவன் நடையில் வேகத்தைக் கவனித்தான் பாரதி.

“பாரதி, சீக்கிரம் கிளம்பு. ரயில்வே ஆஸ்பத்திரிக்குப் போகணும்.”

“என்னடா, என்னாச்சு?”

“அப்பாவுக்கு நேத்து நைட் திடீர்னு நெஞ்சு வலியாம். எல்லோரும் ஆஸ்பத்திரியில்தான் இருக்காங்களாம்.”

பாரதியின் கண்களில் இருந்து கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. அவன் அழுது பல வருடங்கள் ஆயிற்று. கண்ணீர் எல்லாம் வற்றிப் போய் விட்டது என நினைத்துக் கொண்டிருந்தான். கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, “வாசு அப்பாவைப் பார்க்கணும்டா, பேசக்கூட வேண்டாம். பார்த்தால் போதும்டா” என்றான்.

“சீக்கிரம் வா பாரதி. ரயில்வே ஆஸ்பத்திரிக்கு தான் முதலில் கூட்டிட்டுப் போனாங்களாம். ஆனால், இன்னும் அங்குதான் இருப்பார்களா என்று தெரியவில்லையாம், நம்ம போய்தான்  விசரிக்கணும். வா.”
ரயில்வே ஆஸ்பத்திரியில் விசாரித்ததில் நேற்று இரவே கே.எம்.சி-க்குக் கூட்டிக்கொண்டு போய் விட்டதாகச் சொன்னார்கள்.

பாரதிக்கு இன்னும் படபடப்பாய் இருந்தது. இத்தனை வருடங்களில் ஒருமுறைகூட அப்பாவைப் பற்றியோ அவரது உடல் நிலையைப் பற்றியோ தோன்றியது இல்லை. இப்போது மட்டும் ஏன் தோன்ற வேண்டும், திருச்சி வந்ததுதான் காரணமா? அப்படியென்றால் இந்த பதினாறு வருடங்களில் திடீரென எப்படி இன்று  வந்தேன், இது எல்லாம் யாருடைய கணிப்பு? இவை அனைத்தும் ஒரு தற்செயல் நிகழ்வு என்பதை பாரதியால் அவ்வளவு சுலபமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.

கார் கே.எம்.சி வந்து சேர்ந்தது. பாரதி வேக வேகமாக உள்ளே சென்றான். மருத்துவமனை வெளியே நாலைந்து பேர் அழுதுகொண்டிருந்தார்கள். அதில் யாரும் தனக்குத் தெரிந்தவர்கள் இருக்கக் கூடாது என்று பார்த்தான். யாரையும் தெரியவில்லை. தெரிந்தவர் யாரேனும் இருந்தால்கூட அவனுக்கு அடையாளம் தெரியப்போவதில்லை. வாசு அதற்குள் விசாரித்துக்கொண்டு வந்தான். “ஐ.சி.யூ-வில இருக்காராம். வா போகலாம்.”

இரண்டு பேரும் லிப்ட்டுக்குக்கூடக் காத்திருக்க முடியாமல், அத்தனை விரைவாகப் படியேறினர். ஐ.சி.யூ-விற்கு வெளியே பத்து பதினைந்து பேர் நின்றிருந்தனர். பாரதி எல்லோரையும் பார்த்தான். அந்தக் காத்திருக்கும் இடம் அவ்வளவு அமைதியாக இருந்தது.எல்லோரும் ஏதோ யோசனையில் இருப்பதுபோல் பட்டது. வாழ்வுக்கும் இறப்புக்கும் மத்தியில் இந்த ஐ.சி.யூ- வின் கதவுதான் இருப்பதைப்போல, எல்லோரும் அந்தக் கதவையே பார்த்துக்கொண்டிருந்தனர். ஒவ்வொருவருக்கும் சொல்ல அந்தக் கதவின் உள்ளே ஒரு செய்தி இருக்கிறது. ஒவ்வொரு முறையும் அந்தக் கதவு திறக்கும் முறை ஒன்றுதான். ஆனால், அதன் வழியாக எல்லோருக்கும் ஒரே விதமான செய்தி அனுப்பப்படுவதில்லை.

அந்தக் கூட்டத்தில் பாரதி, அம்மாவைக் கண்டுகொண்டான். அம்மா சோர்ந்துபோய் உட்கார்ந்திருந்தாள். அம்மாவைச் சுற்றிலும் குழந்தைகள் உட்பட நிறைய பேர் நின்றிருந்தார்கள். அவர்கள் எல்லாம் பாரதியின் அக்கா மற்றும் அவர்களது குழந்தைகளாக இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டான். அம்மா இவனைப் பார்த்தாள். பிறகு, தலையைக் குனிந்து கொண்டாள். அவளுக்கு அடையாளம் தெரிந்திருக்காது. திரும்பவும் ஒருமுறை நிமிர்ந்து வாசுவைப் பார்த்தாள். அவள் கண்கள் கலங்கத் தொடங்கின. தனது கண்ணை அசைத்து அவள்தானா என்று கேட்பதுபோல வாசுவைப் பார்த்து ஜாடை செய்தாள். வாசு ஆம் என்பது போல மெள்ளத் தனது தலையை ஆட்டினான். அம்மா சத்தமாகக் குரலெடுத்து அழத் தொடங்கினாள். அதன் அர்த்தம் என்னவென்று பாரதிக்குப் புரியவில்லை. இத்தனை வருடம் கழித்து என்னைப் பார்ப்பதால் அழுகிறாளா,  எப்படி மாறி வந்திருக்கா பாரு என்று அழுகிறாளா, ஏன் வந்தாள் என அழுகிறாளா? பாரதிக்கு ஒன்றும் புரியவில்லை. அங்கு உள்ள யாருக்கும் கூட இவள் ஏன் இப்படித் திடீரென அழுகிறாள் எனப் புரியவில்லை. எல்லோரும் திரும்பி பாரதியைப் பார்த்தார்கள். பாரதி யாரையும் பார்ப்பதைத் தவிர்த்து விறுவிறுவென ஐ.சி.யு-வின் உள்ளே நுழைந்தான்.

 உள்ளே டாக்டரிடம் பேசிவிட்டு அப்பாவின் பெட் முன்னே சென்று நின்றான். அப்பா உறங்கிக்கொண்டிருந்தார். அவரது உடல் கழுத்து வரை போர்த்தப்பட்டிருந்தது. ஆக்ஸிஜன் மாஸ்க் முகத்தில் பொருத்தப்பட்டிருந்தது. போர்வைக்குள் இருந்து நிறைய வொயர்கள் இங்கும் அங்குமாக இணைக்கப்பட்டிருந்தது. அப்பாவின் இடது கையில் உள்ள நரம்பில் ஊசி செருகப்பட்டு  கலர்கலராய் மருந்து சென்று கொண்டிருந்தது. பாரதி, அப்பாவின் வலது கையைத் தொட்டான். அவரது உள்ளங்கையில் தனது கையை இணைத்துக்கொண்டான். அதே மென்மை, அதே பெண்மை தோய்ந்த மென்மை, பஞ்சு போன்ற மிருதுவான உள்ளங்கை, இதுதான் அப்பாவின் அடையாளம். இதுதான் எனக்கும் அப்பாவிற்கும் இடையே உள்ள சொல்லப்படாத அன்பின் அடையாளம். இந்த மென்மையும் கொஞ்சம் பெண்மை கலந்த பாவனையும்தான் என் அப்பா. நான் அப்பாவிடம் விரும்புவது இதைத்தான். ஏனென்றால், இதுதான் என் அப்பா.

பாரதி அழத் தொடங்கினான். அப்பாவின் கண்களிலும் கண்ணீர் கசியத் தொடங்கியது. அவர் பாரதியை உணர்ந்துகொண்டார். அவன் வருகையைத் தெரிந்துகொண்டார். வெறும் தொடுதலை வைத்தே அவர் பாரதியை அடையாளம் கண்டுகொண்டார். பாரதியை உணர்ந்துகொள்ள அவருக்கு இந்தத் தொடுதல் போதுமானதாக இருந்தது. எந்தப் புறத்தோற்றமும் அவருக்குத் தேவைப்படவில்லை. பாரதிக்கும் அப்பாவுக்கும் இடையே இந்தத் தொடுதலையும் அதற்கு இடைப்பட்ட காலத்தையும் தவிர வேறு எதுவும் இல்லை. மெதுவாக அப்பா கண்ணைத் திறந்து பாரதியைப் பார்த்தார். பாரதியின் புற மாறுதல்கள் அவருக்கு எந்த அதிர்ச்சியையும் கொடுக்கவில்லை. மாறாக பாரதியைப் பார்த்து நிதானமாகச் சிரித்தார். அதன்பின் எத்தனை அர்த்தங்கள், எத்தனை உண்மைகள், எத்தனை சொல்லப்படாத வார்த்தைகள் இருக்கின்றன என்பதை பாரதி சுலபமாகப் புரிந்து கொண்டான். அவனுக்கு எந்த வார்த்தையும் ஆறுதலும் அழுகையும் கதறலும் தேவைப்படவில்லை. பாரதி ஐ.சி.யு-வைவிட்டு அத்தனை நிம்மதியுடன் வெளியே வந்தான். யாரையும் பார்க்காமல் யாருடனும் பேசாமல் வேகமாக வந்து காரில் ஏறிக்கொண்டான். வாசு பின்னாடியே ஓடிவந்து ஏறிக்கொண்டான்.

p66d.jpg

“என்ன பாரதி, யார்கிட்டவும் சொல்லாம வந்துட்ட? அப்பா என்ன சொன்னார்டா?”

“அப்பா என்னைப் புரிஞ்சுக்கிட்டார்டா” என்று சொல்லிவிட்டு தனது செல்போனை ஆன் செய்தான். காவியா ஏராளமான மெசேஜ்களை அனுப்பியிருந்தாள். அதே `Let me explain’. பாரதி நிதானமாக ரிப்ளை செய்யத் தொடங்கினான்.  “Love doesn’t need explanation, it needs understanding. I understand”.

கார் அந்த அகலமான சாலையில் அவ்வளவு நிதானமாக சென்று கொண்டிருந்தது, மழை இப்போது விட்டிருந்தது, திருச்சி மழையில் நனைந்து போய் அத்தனை ரம்மியமாய் இருந்தது.

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.