Jump to content

‘பிணங்களோடு வாழ்’


Recommended Posts

‘பிணங்களோடு வாழ்’
 

“பிணங்களோடு வாழ்” என்று உங்களுக்குக் கட்டளையிடப்படுகிறது. இதற்கு நீங்கள் சம்மதிப்பீர்களா? அரிச்சந்திர மகாராஜா, சுடுகாட்டில் பணிசெய்தார் என்பதற்காக, நீங்களும் அப்படிச் செய்யத் தயாரா? சிவபெருமான் சுடலைப் பொடியைப் பூசுகிறார். 

image_7d31d3746a.jpg

ஆகவே, நீங்கள் அப்படிச் சுடலைச் சாம்பரைப் பூசுவீர்களா? இப்படியெல்லாம் ஏன் கேட்க வேண்டியிருக்கிறது என்றால், புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையத்துக்கு அண்மையில் இருக்கும் மக்களை, “பிணங்களோடு கூடி வாழுங்கள். பிணங்கள் எரிக்கப்படும் புகையைச் சுவாசித்து இன்புறுங்கள். மயானமும் உங்களுடைய வீடும் ஒன்றாக இருப்பதில் என்ன பிரச்சினை? எரியும் பிணத்தைப் பார்த்துக்கொண்டே நீங்கள் தூங்கலாம், சாப்பிடலாம், பயணத்துக்குப் புறப்படலாம், வழிபடலாம், புணரலாம், குழந்தைகளுக்குப் பாலூட்டலாம், பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கலாம், விருந்தாளிகளை வரவேற்கலாம்...” என்றெல்லாம் நீங்கள் சொல்வதால்தான், அல்லது அப்படிச் சிலர் சொல்வதை நீங்கள் எல்லோரும் கேட்டுக்கொண்டு, அமைதியாக இருப்பதால்.

நீங்கள் சொல்கிறபடி அவர்கள் வாழத்தயார். ஆனால், அவர்கள் கேட்பதைப்போல நீங்கள்  செயற்படத்தயாரா? இதற்குப் பதில் சொல்லுங்கள். அதற்குப் பிறகு, ஏனைய விடயங்களைப் பற்றிப் பேசுவோம்.

யாழ்ப்பாணத்தில் அங்கங்கே நடந்து கொண்டிருக்கின்ற மயானப் பிரச்சினைகள், இப்போது மக்கள் போராட்டங்களாக மாறியிருக்கின்றன. உரும்பிராய் வடக்கு, மல்லாகம் தெற்கு, புன்னாலைக்கட்டுவன் வடக்கு திடற்புலம், உரும்பிராய் வடக்கு சரஸ்வதி, கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி முன்பாக, உரும்பிராய் செல்வபுரம், கோண்டாவில், புத்தூர் மேற்கு கிந்துசிட்டி, திருநெல்வேலி பாற்பண்ணை போன்ற  இடங்களில் “மக்கள் குடியிருப்புகளுக்கு அண்மையாக இருக்கும் மயானங்களை அப்புறப்படுத்தி, வேறு இடங்களில் அவற்றை அமையுங்கள்” என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மக்களுடைய கோரிக்கைகள் மறுக்கப்பட்டதையடுத்து, அவர்கள் யாழ்ப்பாண நகரத்திலும் தங்கள் பகுதிகளிலும் சாத்வீக அடிப்படையிலான போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறார்கள், நிர்வாக ரீதியாகவும் உரிய தரப்புகளை அணுகிப் பேசியிருக்கின்றனர். வடமாகாண முதலமைச்சர் தொடக்கம் அரசியல் தலைவர்கள் வரையிலும், தங்களுடைய கோரிக்கைகளைக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

எங்குமே உரிய பதில்கள் வழங்கப்படவில்லை. பதிலாக நீதிமன்ற நடவடிக்கைகளையே சந்திக்க வேண்டியிருக்கிறது. இதன் விளைவாக, புத்தூர் மேற்கு கிந்துசிட்டி மயான விவகாரத்தில் முன்னணிச் செயற்பாட்டாளர்களான பத்துக்கும் மேற்பட்டவர்கள், நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் சிறையில் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இது மக்கள் போராட்டத்தை அடக்கும் விதமாக மேற்கொள்ளப்பட்ட சட்ட அதிகாரத்தின் வெளிப்பாடு என்றே புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. முன்னணிச்  செயற்பாட்டினரைச் சிறைப்படுத்தித் தனிமைப்படுத்துவதன் மூலமாக, மக்கள் எழுச்சியையும் உணர்ச்சியையும் அடக்கி விடலாம் என்ற பழைய அணுகுமுறை. ஆனாலும் அங்கே அந்தப் பகுதி மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தக் கட்டுரையை எழுதும்போது, 14 நாட்களைப் போராட்டம் கடந்து விட்டது. மக்கள் சலித்து விடவோ பின்வாங்கவோ இல்லை. முழுக் கிராமமுமே, போராட்டத்தில் இணைந்திருக்கிறது. 

மக்களின் நியாயமான கோரிக்கைகளின் முன்னே நின்று பதிலளிக்க முடியாத நிலையில், நீதிமன்றத்தின் மூலமாக - சட்டம் என்ற அதிகாரக் கட்டமைப்பின் வழியாக - இந்தப் பிரச்சினையைக்கையாண்டு விடலாம் எனப் பலரும் கருதிக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால், சட்டமும் நீதியும் நீதிமன்றமும் தலைவர்களும் ஆட்சியும் அதிகாரமும் கட்சியும் மயானமும் விதிமுறைகளும் நியாயங்களும், மக்களுக்குரியவையே தவிர,  எந்த நிலையிலும் மக்களுக்கு எதிராக இயங்க முடியாது. இவற்றுக்காக மக்கள் என்றுமில்லை. இதை, அதிகாரத்தில் இருப்போர் புரிந்து கொண்டு செயற்பட்டால் இந்த மக்கள் துயரங்களைச் சந்திக்கவோ, இப்படி நீண்டநாட்களாகப் போராட வேண்டியோ இருக்காது. குறித்த மயானங்கள், எந்தப் பிரச்சினையுமில்லாமல் வேறு இடங்களுக்கு இடமாற்றப்படும்.

“நீண்டகாலமாகவே இருந்த மயானங்களை வேறு இடங்களுக்குக் கொண்டு போக வேண்டிய அவசியம் என்ன? அது எப்படிச் சாத்தியமாகும்?” என்று சிலர் கேட்கிறார்கள். உண்மையில் மயானங்கள்தான் முதலில் அங்கே வந்தன. இதைப் போராட்டக்காரர்களே (மக்களே)  சொல்கிறார்கள். அவர்கள் மறுத்துப் பேசவில்லை. உண்மையை மறைக்கவும் இல்லை. ஆனால், அதைக் கடந்து, மயானங்களுக்கு அண்மையாகவும் அவற்றைச் சுற்றியும், மக்கள் குடியிருப்புகள் ஏன் உருவாகின என்பதை, இந்தப் பிரச்சினையின் எதிர்முனையில் நின்று பேசுவோர் விளங்கிக் கொள்வது அவசியமானது.

இதுவே இன்று இந்தப் பிரச்சினையை அணுகுவதற்குப் புரிந்து கொள்ளப்படவேண்டியதாகும். ஏனென்றால், இந்தப் பிரச்சினைக்கு, ஆழமான சமூக வரலாற்றுக் காரணங்கள் பின்னணியாக உண்டு. அந்தக் காரணங்களைச் சீர்செய்யாத வரையில், இந்தப் பிரச்சினைக்கு மட்டுமல்ல, தமிழ்ச்சமூகம் தன்னுள்ளே கொண்டிருக்கும் ஏராளமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது.

“கிந்துசிட்டி மயானம், நீண்டகாலமாக அங்கே உள்ளதால், அதை மூடமுடியாது” எனக் கோப்பாய் பிரதேச சபை நிர்வாகம் கூறுவதும், இந்த அடிப்படையிலேயே. அப்படிக் கூறியே மக்கள் குடியிருப்புகள் அமைந்திருக்கும் பகுதியில் உள்ள மயானத்தின் மதிற்சுவர்களை அது கட்டிக் கொண்டிருக்கிறது. நேரிலே சென்று இந்த மயானம் உள்ள பகுதியையும் பிரதேச சபையின் நடவடிக்கைகளையும் பார்க்கின்றவர்கள், நிச்சயமாகப் பிரதேச சபையின் கீழ்த்தரமான செயலையிட்டுக் கோபமடைவார்கள். அந்த அளவுக்கு, நாகரிகக் குறைவாகக் காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

மக்களுடைய வீடுகளின் வேலியோடு, மயானத்தின் மதிற்சுவர்கள் கட்டப்படுகின்றன. இதைப்பார்க்கும்போது, இந்தச் செயலில் உள்ள அடாத்துத் தனமும் அதிகாரத் திமிரும் நிறைந்திருப்பதைப் புரிந்து கொள்ள முடியும். பிரதேச சபையின் சட்டரீதியான விவாதத்தின்படி, இந்த மயானம் நீண்ட காலமாக அங்கே இருந்த ஒன்றுதான். அதை மறுப்பதற்கில்லை.  

இதனால்தான் மயானத்தைப் பயன்படுத்தி வரும் ஆதிக்கச் சாதியினரும் “இந்த மயானம் ஏற்கெனவே இருந்த ஒன்று. இப்போது அதைச் சுற்றிக் குடியிருந்து விட்டு, மயானத்தை அப்புறப்படுத்துங்கள் என்று எப்படிக் கேட்க முடியும்?” என்று கேட்கின்றனர்.. “மயானம் முதலில் வந்ததா, மக்கள் குடியிருப்புகள் முந்தி வந்தனவா?”, “மயானம் வேண்டுமா, மக்கள் வேண்டுமா?” என்ற பட்டிமன்றக் கேள்விகளையும் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இதெல்லாம், பிரச்சினையை அதன் சமூக வரலாற்றுப் பின்னணியில் விளங்கிக் கொள்ள மறுக்கும் ஆதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடேயாகும்.

மயானங்களைச் சுற்றி மக்கள் குடியிருப்புகள் உருவாகியிருக்கின்றன என்றால், அந்த மக்கள் வேறு இடங்களில் தங்கள் குடியிருப்புகளை அமைப்பதற்கான தெரிவுகளைச் செய்ய முடியாதிருக்கும் சமூக நிலையின் விளைவேயாகும். சாதிரீதியாக ஒடுக்கப்பட்டிருக்கும் மக்கள், யாழ்ப்பாணத்தில் தாம் விரும்பிய இடங்களில் தமக்கான காணியை வாங்க முடியாது.  இதுவே சமூக நடைமுறை. தேசவழமைச்சட்டம் வேறு, இதற்கு உத்தவாதம் அளித்திருக்கிறது. இந்த நிலையில் இந்த மக்கள், தங்களுக்கான காணியை, தாம் விரும்பும் எல்லா இடங்களிலும் வாங்கி விட முடியாதிருக்கும்போது, வேறு என்னதான் செய்ய முடியும்? நாட்டை விட்டு வெளியேறி, வேறு எங்காவது போகவேண்டும். அல்லது பிற மாவட்டங்களுக்குப் பெயர வேண்டும்.

இது சாத்தியமில்லாத ஒன்று, நியாயமற்றதும் கூட. அத்துடன், இது அந்த மக்கள் தாம் விரும்பிய இடங்களில் வாழ்வதை மறுக்கும் செயலாகும். எனவே வேறு இடங்களில் காணிகளை வாங்க முடியாதிருக்கும் மக்கள், மயானங்கள் அமைந்திருக்கும் ஒதுக்குப் புறப்பிரதேசங்களில் தங்கள் குடியிருப்புகளை விஸ்தரிக்கின்றனர். ஒதுக்குப் புற நிலம் வளமற்றாக இருந்தாலும், அவர்களுக்கு வேறு தெரிவுகளில்லை. இது, இரண்டு வகைகளில் இந்த மக்களுக்குப் பாதிப்புகளை உண்டாக்குகிறது.

ஒன்று, இவர்களுடைய இந்தக் குடியிருப்பை அங்கிகரித்து, இவர்களுக்கான வீதி, பொதுக்கட்டடங்கள், பிற வசதிகளைச் செய்வதற்குச் சட்டரீதியான வாய்ப்புகள் குறைகிறது. இரண்டாவது, ஏற்கெனவே இருந்த மயானச் சூழல், மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் வந்து விடுகிறது. இதெல்லாம் இவர்களுக்குத் தெரியாததல்ல.

தாம் மயானத்தை நெருங்கிச் செல்கிறோம் என்று தெரிந்து கொண்டே செல்கிறார்கள். ஆனால், இந்த மயானங்களுக்குப் பதிலாக, அயலில் வேறு மயானம் விஸ்தரணமான சூழலில் இருப்பதால், அங்கே இதை மாற்றலாம் என்று எண்ணுகிறார்கள். இந்த எண்ணம் தவறானதல்ல. காலமாற்றம், சமூக வளர்ச்சி போன்றவற்றுக்கு ஏற்றவாறு, சட்டங்களும் விதிமுறைகளும் மாற்றமடைவதுண்டு.

அப்படி, சட்டங்களும் நடைமுறைகளும் விதிமுறைகளும் மாற்றமடைந்திருக்க வேண்டும். அப்படி மாற்றமடைந்திருந்தால், சாதி ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் அடையாளப்படுத்தப்பட்டு, வரையறைப்படுத்தப்பட்டிருக்கும் மயானங்கள் பொதுவாக்கப்பட்டு, அனைவருக்கும் உரியதாக்கப்படும்.

அப்படிச் செய்யும்போது, இந்த மாதிரி மக்கள் குடியிருப்புகளாக மாறியிருக்கும் மயானங்களை மூடி, பொது மயானங்களோடு அவற்றை இணைத்து விடலாம். பிரச்சினையும் தீர்ந்து விடும்.   

கிந்துசிட்டி மயானத்தை மூடி, அருகே ஒரு கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் மயானத்துடன் அதை இணைத்து விடுவதில், பெரிய பிரச்சினை ஒன்றுமே இல்லை. ஆனால், இதை மறுத்துரைப்போர், தங்களுடைய பரம்பரை அடையாளத்தையே முன்னிறுத்துகின்றனர். தங்களுடைய முன்னோர் எரியூட்டப்பட்ட இடத்திலேயே தங்கள் சந்ததியும் எரியுட்டப்பட வேண்டும். இது எங்கள் மரபுரிமை என்கிறார்கள். இன்றைய வாழ்க்கையில், பரம்பரைகளை ஒரு மையத்தில் கட்டி வைத்திருக்க முடியாது.

உலகமெங்கும் சிதறிப் பரந்திருக்கும் ஈழத்தமிழர்கள், ஒரு கொடியின் கீழும் ஒரு மயானத்திலும் தங்களை மையப்படுத்திப் பேசுவது, நகை முரணன்றி வேறென்ன? ஆகவே, கால மாற்றத்தையும் சமூக வளர்ச்சியையும் கருத்திற் கொண்டு, அருகிலிருக்கும் மயானத்துடன் இந்த மயானத்தையும் இணைப்பதே, பொருத்தமான செயலாகும்.

கிந்துசிட்டி மயானச் சூழலில் குடியிருக்கும் மக்கள், வறியவர்கள், கூலித்தொழிலாளர்கள், கல்வியிலும் சமூக அமைப்பிலும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள். 

வெளிப்படையாகவே சொன்னால், சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்டவர்கள். இவர்கள், ஆதிக்கத்தரப்பினரால், கடந்த கால வரலாற்றில் நடத்தப்பட்ட விதம் மோசமானது. சிறிய உதாரணமொன்று: மயானங்களும் மக்கள் குடியிருப்புகளும் ஆதிக்கத்தரப்பினர் என்ற உயர் குழாத்தினரால் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும் விதமாகும்.

இந்த மக்கள் குடியிருக்கும் கலைமதி சனசமூக நிலையச் சுற்றாடலே, சரியான முறையில் அபிவிருத்தி செய்யப்படவில்லை: சீரான தெருக்களில்லை, நல்ல பாடசாலை இல்லை, பொதுநோக்கு மண்டபம், தண்ணீர் விநியோக வசதிகள் என எதுவுமே இல்லை. இப்படித்தான், யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான கிராமங்களும் உள்ளன. சமூக ரீதியாக அடையாளம் காணப்பட்டே, அபிவிருத்தி வேலைகள் நடத்தப்படுகின்றன.

இந்த மாதிரியான மனப்பாங்கின் விளைவாகவே, “நல்ல நிலங்களும் நல்ல நீர்க்கிணறுகளும் எங்களுக்கு; ஒதுக்குப் புறங்களும் மயானப் பகுதிகளும் உங்களுக்கு” என்ற அடிப்படையில், மயானங்களும் மக்கள் குடியிருப்புகளும் ஒழுங்கமைக்கப்பட்டன.

இதன் விளைவுகளே, இன்று பிரச்சினைகளாக உருமாறியிருக்கின்றன. இந்தப் பாதகமான ஒழுங்கமைப்பை, யாழ்ப்பாணத்தின் ஆதிக்க சமூகமும் அது நிர்வகித்த நிர்வாகப் பிரிவுகளுமே செய்திருந்தன. காலாகாலமாக, இந்த நடைமுறை ஒழுங்கிலேயே எல்லாம் பின்பற்றப்பட்டு வந்தன. அப்போது குடிப்பெருக்கம் குறைந்திருந்த காரணத்தினாலும் சமூக வளர்ச்சி குன்றியிருந்தமையினாலும், மயானங்களைக் குறித்த பிரச்சினைகள் பெரிதாக மேலெழவில்லை. அப்படி மேலெழுந்தாலும், அவை இரகசியமாக அடக்கப்பட்டன. இப்பொழுது நிலைமை அப்படியல்ல. 

மக்கள் குடியிருப்புகள் விரிவடைந்து, மயானங்களை அண்மித்த நிலப்பகுதி வரையில் வளர்ந்துள்ளன. வீடுகளுக்கு அண்மையாக மயானங்கள் இருப்பதால், அங்கே பிணங்களை எரியூட்டும்போது, அந்தப் புகை நாற்றம், அயலில் இருப்போருக்குப் பாதிப்பை உண்டாக்குகிறது. எரியூட்டப்பட்ட பிணங்களின் சிதைவுகளை, நாய்கள் இழுத்து வந்து வீடுகளுக்குள்ளும் வளவுகளுக்குள்ளும் போடுகின்றன. “பிணங்கள் எரிந்து கொண்டிருக்கும் காட்சியைப் பார்த்துக்கொண்டே, குழந்தைக்கு எப்படிப் பாலூட்ட முடியும்?” என்று கேட்கிறாள் இளம் தாயொருத்தி. “பிணம் எரியும் மணத்தோடு, எப்படிச் சாப்பிட முடியும்?” என்கிறாள், ஒரு சிறுமி. இப்படி ஆயிரம் கேள்விகள்.  

உண்மையில், சமூக வளர்ச்சிக்கும் கால மாற்றத்துக்கும் உரியவாறு, அதிகாரத் தரப்பின் அணுகுமுறையிலும் சிந்தனையிலும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்க வேண்டும். 

மயானங்களை நோக்கிக் குடியிருப்புகள் வந்தது தவறு என்று வாதிட்டுக் கொண்டிருப்பதை விட, இதற்கான தீர்வைக் காண்பதே இன்றைய தேவையானது. சட்டங்களும் விதிகளும், மாறாத அளவுக்கு இறுதிய பாறைகள் அல்ல. இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, அரசமைப்பைத் திருத்தம் செய்யும் காலத்திலிருக்கிறோம். கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் செயற்பட வேண்டியவர்களாக இருக்கிறோம். இது எல்லாவற்றிலும், நல்லிணக்கத்தைக் காண வேண்டிய சூழல். எனவே, இந்தப் பிரச்சினைக்கும் காலம் மற்றும் சமூக வளர்ச்சி என்பவற்றைக் கணக்கில் கொண்டு, பொருத்தமான, புதிய அணுகுமுறைகளைப் பின்பற்ற வேண்டும். யதார்த்த நிலைமைகளுக்கூடாக, உண்மைகளைக் கண்டறிய முற்பட வேண்டும்.

இறந்தவர்களை எரியூட்டுவதற்கு, ஒழுங்கான ஓர் இடம் தேவை என்பது, அவசியமான ஒன்றுதான்.  ஆனால், உயிரோடு இருப்பவர்களைக் குறித்துச் சிந்திப்பதும், அவர்களுடைய பாதுகாப்பான எதிர்காலமும், அதையும் விட முக்கியமானது. மக்கள் அத்தனை பேரையும் வேறு இடங்களுக்கு நகர்த்துவதென்பது, மிகச் சிரமமான காரியமாகும். பதிலாக, மயானத்தை இடம்மாற்றுவதே சுலபமானது. மயானம் இயங்கிய நிலத்தை, பொதுப் பூங்காவாகவோ வேறு பொது மையமாகவோ ஆக்கி விடலாம். அது, மக்களுக்கும் பயன்படும்.  

எனவே, இதற்கான தீர்வைக் காண்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். இதற்கு, மக்களின் குடியிருப்புகளுக்கு அண்மையாக உள்ள அல்லது மக்களின் குடியிருப்புகளுக்கு மத்தியில் இருக்கின்ற மயானங்களை அகற்றுமாறு கேட்கும் குரல்களுக்கு, மாகாணசபையும் தமிழ்ச்சமூகமுமே பொறுப்புச் சொல்ல வேண்டும்.

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பிணங்களோடு-வாழ்/91-201309

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.