Jump to content

டார்கெட் தி.மு.க..! - கருப்புசிவப்புக்கும் காவிக்குமான பனிப்போர்


Recommended Posts

டார்கெட் தி.மு.க..! - கருப்புசிவப்புக்கும் காவிக்குமான பனிப்போர்

 

பொன்.ராதாகிருஷ்ணன்

 

"அ.தி.மு.க, தி.மு.க எனும் இரண்டு மிகப்பெரிய திராவிடக் கட்சிகளை தங்கள் கைப்பிடிக்குள் கொண்டுவந்து, 'கழகம் இல்லாத ஆட்சி; களங்கமில்லாத ஆட்சி” என்ற தங்களின் கோஷத்தை தமிழகத்தில் நிலைநாட்டத் துடிக்கிறது பி.ஜே.பி" என்ற புகைச்சல் திராவிடக் கட்சிகளின் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

2014-ம் ஆண்டு மத்தியில் பி.ஜே.பி அரசு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தவுடன், அந்தக் கட்சியின் அடுத்த இலக்காக குறி வைக்கப்பட்டது அனைத்து மாநிலங்களிலும் பி.ஜே.பி ஆட்சி என்பதுதான். அதில் ஓரளவு வெற்றியும் கண்டுவருகிறது அக்கட்சி. குறிப்பாக, இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் யாருமே எதிர்பார்க்காத அளவில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியதே பி.ஜே.பி.க்கு உத்வேகத்தை அளித்துள்ளது. வடமாநிலங்களில் கணிசமான அளவில் வெற்றியும் பெற்றதால், அடுத்து பி.ஜே.பியின் இலக்கு தென்மாநிலங்களை நோக்கித் திரும்பியுள்ளது. குறிப்பாக, தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்கள், பி.ஜே.பி.யின் முக்கிய இலக்காக இருக்கிறது. திராவிடக்கட்சிகளின் வலுவான களமாக இருக்கும் தமிழகத்திலும், காங்கிரஸ் மற்றும் காம்ரேட்களின் வலுவான கேந்திரமாக இருக்கும் கேரளத்திலும் பி.ஜே.பி. காலூன்றுவது குதிரைக்கொம்பான காரியம் என்பதை அந்தக்கட்சியின் தலைமையும் உணர்ந்தே உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை அ.தி.மு.க., தி.மு.க. என்ற இரண்டு கட்சிகளை மீறி ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பே இல்லை என்ற மனநிலையில் இருந்த பி.ஜே.பி-க்கு ஜெயலலிதாவின் மரணம், மிகப்பெரிய சந்தர்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. 'ஆட்சியைத்தான் பிடிக்க முடியவில்லை; ஆளுபவர்களையாவது நம் பிடியில் வைத்துக்கொண்டு ஆட்டுவிக்கலாம்' என்ற மனநிலைக்கு பி.ஜே.பி வந்ததன் விளைவுதான், ஓ.பன்னீர்செல்வம் முதல் எடப்பாடி பழனிசாமி வரை டெல்லிக்குப் பறந்து சென்று மோடியின் முன்னால் நின்றதன் பின்னணி.

அ.தி.மு.க என்ற பலமான கட்சி இன்று, மூன்று அணிகளாக சிதறுண்டு கிடந்தாலும், மூன்று அணிகளுமே பி.ஜே.பி-க்கு ஆதரவாக ஜனாதிபதி வேட்பாளரை ஆதரித்ததே அ.தி.மு.க. என்ற இயக்கத்தின் மீது பி.ஜே.பி.யின் ஆளுமையை உலகறியச் செய்துவிட்டது. அ.தி.மு.க. இனி இணைய வேண்டுமா? வேண்டாமா? என்பது உள்ளிட்ட அந்த கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை எல்லாமே டெல்லியின் கண் அசைவிற்கு உட்பட்டே நடக்கவேண்டிய பரிதாப நிலையில் அ.தி.மு.க உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியே ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு இருக்காது என்றும் சிலர் ஆரூடம் சொல்லத் தொடங்கியுள்ளனர். .ஆட்சியைக் கலைக்கும் எண்ணம் பி.ஜே.பிக்கு இப்போது இல்லை என்பதை அ.தி.மு.கவின் மூன்று அணிகளுமே நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். காரணம் ஆட்சி கலைந்தால் அது தி.மு.க-விற்கு சாதகமாக அமைந்துவிடும் என பி.ஜே.பி கருதுகிறது.

வெங்கய்யா நாயுடு

“குடியரசுத் தலைவர் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி கலைக்கப்படும் என்று சொல்லப்படுவதில் துளியளவும் உண்மையில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட ஒரு அரசு தமிழகத்தில் செயல்பட்டு வருவதால் இந்த ஆட்சியை மத்திய அரசு ஒருபோதும் கலைக்காது” என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு சென்னையில் செய்தியாளர்களிடம் சொன்னதன் பின்னணி, ஆட்சியைக் கலைப்பதால் பி.ஜே.பி.க்கு எந்த லாபமும் இப்போது இல்லை என்பதுதான். வலுவான தலைவர் இல்லாத கட்சியாக அ.தி.மு.க-வை வைத்திருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறது பி.ஜே.பி. வலிமையான தலைமை இல்லாமல் இருந்தால் அந்தக்கட்சியை வைத்து தமிழகத்தில் நினைத்ததை சாதித்து விடலாம் என்று கணக்கு போடுகிறது பி.ஜே.பி. ஆனால், தி.மு.க. இருக்கும்வரை பி.ஜே.பி.க்கு தமிழகத்தில் எதிர்காலம் இருக்காது என்ற எண்ணமும் பி.ஜே.பிக்கு வந்துவிட்டது. இந்தியாவில் மாநில கட்சிகளின் கையில் ஆட்சி இருப்பது ஒரு சில மாநிலங்களில்தான். அதேநேரம் தமிழகத்தில் மாநிலகட்சி மட்டுமே ஆட்சியில் இருந்துவருகிறது. அதனால்தான், தமிழகத்தில் பி.ஜே.பி.யை வளர்க்க வேண்டும் என்றால், மாநில கட்சியின் செல்வாக்கை உடைக்க வேண்டும் அல்லது கட்சியை செயலிழக்கச் செய்யவேண்டும் என்ற அஜண்டாவோடு செயல்படுகிறது பி.ஜே.பி. அதனால்தான் அ.தி.மு.க-வை கட்டுக்குள் கொண்டுவந்த கையோடு, தி.மு.க மீதும் கண்வைக்கத் தொடங்கியுள்ளது அக்கட்சி. அதை வெளிப்படையாகவே அறிவித்தும் விட்டார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். 

“தமிழகத்தில் பி.ஜே.பி. வளர்ந்து வருவதால் அனைத்துக் கட்சிகளின் இலக்காக பி.ஜே.பி மாறியுள்ளது. அரசியல்ரீதியாக தி.மு.க-வை பி.ஜே.பி இனி ஆட்டுவிக்கும். ஆனால் ஆட்சி ரீதியாக அந்தக் கட்சியை ஒன்றும் செய்யமாட்டோம்” என்று கூலாக கோவையில் பேட்டி கொடுத்துள்ளார். பொன்னாரின் பேச்சு தி.மு.க.வினரையும் கொஞ்சம் உஷாரடையச் செய்துள்ளது. தலைவர் கலைஞர் செயல்பட முடியாத நிலையில், ஸ்டாலின் தோளில்தான் கட்சி இப்போது உள்ளது. அரசியல் சாணக்கியராக விளங்கிய கருணாநிதி இல்லாத இந்த சந்தர்ப்பத்தை நழுவவிடக்கூடாது என்ற கணக்கில், பி.ஜே.பி இருப்பதாகச் சொல்கிறார்கள் பி.ஜே.பிக்கு நெருக்கமானவர்கள். கருணாநிதி என்றால் டெல்லியில் ஒரு லாபி, தமிழகத்திற்கு ஒரு லாபி என அரசியல் காய்களை நகர்த்தியிருப்பார். தேசிய அரசியலின்  போக்கு அவருக்கு அத்துப்படி என்பதால், பி்.ஜே.பி.யின் திட்டத்தை முன்கூட்டியே அறிந்து டெல்லியில் லாபி செய்திருப்பார். ஆனால், ஸ்டாலினுக்கு இப்போது டெல்லியில் லாபி செய்வதற்கு சரியான நபர் இல்லை. இதுவே தி.மு.க-விற்கு பின்னடைவாகவும் உள்ளது. மத்திய அரசின் மூவ்களை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியாத நிலை தி.மு.கவிற்கு இப்போது உள்ளது.
 ஸ்டாலினும் தேசிய அரசியலில் தனக்கான முக்கியத்துவத்தை உணரச்செய்ய வேண்டும் என்ற திட்டத்தில்தான் கருணாநிதியின் வைர விழாவிற்கு பி.ஜே.பி-க்கு எதிராக உள்ள தேசிய தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஒரே மேடையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஜனதாதளம் என பி.ஜே.பி.யின் எதிர்முகாம் தலைவர்கள் எல்லாம் வரிசைகட்டி அமரவைத்தார். ஸ்டாலினுக்கு வெற்றியாக இந்த விழா பார்க்கப்பட்டாலும், தி.மு.க. மீது பி.ஜே.பி. கண்வைக்கவும் இந்த விழாவே காரணமாக அமைந்து விட்டது. அப்பாவைப்போல மகனும், மதச்சார்பற்ற அணியை கட்டமைத்து விடுவாரோ என்ற சந்தேகம் பி.ஜே.பி தலைமைக்கு ஏற்பட்டதால்தான், இனி தி.மு.க-விற்கு எதிராக தங்கள் அரசியல் நெருக்கடிகளை ஆரம்பிக்க முடிவு செய்துவிட்டது பி.ஜே.பி. 

தி.மு,க.-விழா

தி.மு.க-வை நெருக்கடிக்கு உள்ளாக்க பி.ஜே.பி-க்கு வாய்ப்பாக 2-ஜி வழக்கு உள்ளது. இந்த மாதமே தீர்ப்பு வந்துவிடும் என்று எதிர்பார்த்த நிலையில், ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகே வழக்கின் தீர்ப்பை தள்ளி வைத்திருப்பது தி.மு.க-விற்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக இந்தத் தீர்ப்பு வருமானால், தங்களுக்கு எதிராக தீர்ப்பு இருக்காது என்ற நம்பிக்கையில் இருந்தது தி.மு.க. ஆனால், தீர்ப்பை தள்ளிவைத்திருப்பதன் மூலம், தீர்ப்பு தி.மு.க-விற்கு எதிராகவே வரும் என்ற அச்சத்தில் தி.மு.க. உள்ளது. தங்கள் கட்சிக்கு கறையாக அமைந்த 2-ஜி வழக்கினை இப்போதுதான் மக்களும் மறந்துள்ளனர். 'அ.தி.மு.க.வை விட தி.மு.க பரவாயில்லை' என்ற பேச்சும் மக்கள் மத்தியில் எழுந்துள்ள தற்போதைய சூழ்நி்லையில், இந்தவழக்கின் தீர்ப்பு எதிராக வரும்பட்சத்தில், மீண்டும் ஊழல் கட்சி என்ற பெயரை சுமக்க வேண்டிவருமே என்று அஞ்சுகிறது தி.மு.க. அந்தக்கட்சி மீது அப்படி ஒரு இமேஜ் வரவேண்டும் என்பதுதான் பி.ஜே.பி-யின் எதிர்பார்ப்பாகும்.

அ.தி.மு.க, தி.மு.க ஆகிய இரண்டு திராவிடக் கட்சிகளைப் பற்றி மக்களிடம் எதிர்மறையான சிந்தனைகளை உருவாக்கிவிட்டால், 'புதிய பாரதம் படைப்போம்' என்று பி.ஜே.பி. தமிழகத்தில் களத்தில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளது. "தமிழகத்தில் பி.ஜே.பி. வளர்ச்சியடைய வாய்ப்பில்லை" என்கிறார்கள் அரசியல்நோக்கர்கள். ஆனால், "நாங்கள் வாய்ப்புக்காக காத்திருக்கப் போவதில்லை; வாய்ப்பை நாங்கள் ஏற்படுத்தப் போகிறோம், பாருங்கள்" என்று சொல்கிறார்கள் பி.ஜே.பி. நிர்வாகிகள். 
கருப்பு சிவப்பிற்கும், காவிக்குமான பனிப்போரை தமிழகம் இனி காணப்போகிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/95111-target-dmk-cold-war-between-dravidian-and-saffron-parties.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.