Jump to content

காற்றில் துளிர்க்கும் யாழ் - அ. முத்துலிங்கம் அவர்களின் ‘வடக்குவீதி’ சிறுகதை தொகுப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காற்றில் துளிர்க்கும் யாழ்

அ. முத்துலிங்கம் எழுத்தில் கனவென தூரத்தில் மிதக்கும் பால்யத்தின் நிலம்

எங்கள் ஊர் கொள்ளிடக்கரையில் வானுக்குள் தலை நுழைத்து அரைநூற்றாண்டு வயதுடைய ஆலமரம் நிற்குமிடமே பிரதான நீர்த்துறை. அக்கரை கண்ணுக்கெட்டாத தூரம்வரை நீலம்பாரித்து நெடும்புனல் பாய்ந்த காலம் முதல், திசையின் தொடுப்புள்ளி வரை வெற்று மணலாகி கிடக்கும் இந்நாள் வரையிலும் அதுதான் நீர்த்துறை. எம் தகப்பனாருடைய காலத்திற்கு பிறகே இவ்விடம் துறையாக இருக்கிறது. எங்கள் தாத்தாவுக்கோ குளிக்கவும் துவைக்கவும் தோதுவான இடமென்பது இலவமரத்துத் துறைதான். பள்ளிநாட்களில் பார்வையில்லாத என் பெரியதாத்தாவை கைத்தடியைப் பிடித்துக்கொண்டு ஆற்றுக்கு கூட்டிப்போனால், இளவமரத்து துறைக்குத்தான் போகச்சொல்வார். நானறிந்து எந்த இலவமரமும் எங்கள் ஊர் எல்லைக்கருகில்கூட இல்லை. எங்கே என்று கேட்டால், அவர் நினைவில் நிற்கும் ஆலமரத்திலிருந்து ஒரு முந்நூறடி தூரம் ஆற்றுக்குள் தென்மேற்கே போகச்சொல்வார். மணல் சரசரக்க நடந்து வளைந்தோடும் நீரோட்டத்தின் ஒரு இடுப்பை மிதிப்போம். பெரும் மணற்பரப்பின் மத்தியில் ஒரு நீர்ச்சுனையின்வாயிலில் நிற்பதை போலத் தோன்றும் எனக்கு. நெடுங்காலத்திற்கு முன்பே பார்வை இழந்துவிட்ட அவரோ தன் நினைவின் நதியில் இலவமரத்துத் துறையில் நிற்பார். அவருக்கு மட்டுமே காட்சியாகும் அரூப இலவமோ என்று நினைத்ததுண்டு.

நானறிந்து கடந்த முப்பதாண்டுகளில் கொள்ளிடம் அற்று வறண்டதை இரண்டாவது முறையாக இந்த வருடம்தான் பார்க்கிறேன். விடியலுக்கு முன்பே கிழக்கிலிருந்து கசியும் மெல்லிய வெளிச்சத்தில் ஆற்றில் இறங்கி நடக்கிறேன், எங்கும் வெறும் மணல் மணல். இது தைமாதம், அறுவடைகாலம். நெல்மூட்டைகள் ஏற்றிய மாட்டுவண்டிகள் இரட்டைக்கோட்டு தடத்தில் வரிவரியாய் செல்லும் காட்சிகளும், பால்குடங்களும் தயிர்க்குடங்களும் நிரம்பி தளும்பும் பரிசல் போகும் காட்சிகளும் பெரும்வலியாக மனதில் வந்துபோகின்றன. அவை இனி எப்போதும் திரும்பிவராத காலம் எனும் கருந்துளைக்குள் போய் விழுந்துவிட்டன. நெஞ்சம் கனத்து கண்ணில் நீர்த்தளும்பும் கணத்தில் எதிலோ மோதிக்கொண்டு கால் இடறிவிட்டது. இடது கணுக்காலில் சின்னதாய் ஒரு கீற்றுச் சிராய்ப்பு, இரத்தம் கசிகிறது. குளிரில் சில்லிட்ட உடலில் சிராய்ப்பு கடுக்கிறது. குளிர்ந்த மணலுக்குள் காயத்தை வைத்து அழுத்தியதும் கொஞ்சம் இதமாக இருந்தது. அப்போதுதான் கவனித்தேன் எதன்மீது மோதிக்கொண்டேன் என்று. ஒரு உலர்ந்தமரத்தின் அடிக்கட்டை. வெள்ளம் அடித்துவந்து போட்டதோ என்று நினைத்து உலுக்கிப் பார்த்தேன், என் பலம்கொண்டமட்டும் இழுத்தும் சிறு அசைவுமின்றி கிடந்தது. நன்கு ஆழப்பதிந்திருந்தது வேர். சுற்றும்முற்றும் திரும்பி பார்த்தேன் எங்குநிற்கிறேன் என்பது மெல்ல புலப்படுகிறது. அது இலவமரத்துத் துறை. என் தாத்தனின் காலம் தரைவந்து கிடக்கிறது. ஆயிரம் கதைகளை பல்லாயிரம் நாக்குகள் நூற்றாண்டாய் பாடிய இலவம் நதிமீண்டு வந்திருக்கிறது.

கொள்ளிடம் போலவே தன்னியல்பில் பாயும் காட்டாறுதான்போலும் வாழ்வும். உயிர்ப்பு வற்றும் பொழுதுகளிலும் சன்னதம்கொண்டு எழக்கூடுமோ நினைவின் நதியிலிருந்து கடந்தகாலம்? பால்யத்தில் நம் நினைவில் தங்கும் நிலமே நம் அகத்தின் நித்தியவாசமாய் என்றென்றைக்கும் தங்கிவிடுமோ? சட்டென்று கவனம் இடறி கனக்கும் வலியோடு எழும் கடந்தகாலத்தின் வலியை, அழகையே நான் எப்போதும் அ. முத்துலிங்கம் அவர்களது எழுத்தில் அறிகிறேன். யாழை கதைக்களமாகக்கொண்டு அவர் எழுதிய கதைகள், பிடுங்கி வீசப்பட்ட வேரின் மணம் வீசுவதே என்றென்றும் நானடையும் மனச்சித்திரம்.

Vadakku_Veedhi_A_Muttulingam.jpg?zoom=1.அ. முத்துலிங்கம் அவர்களின் ‘வடக்குவீதி’ சிறுகதை தொகுப்பினூடாகவே அவரது அகம் சஞ்சரிக்கும் நுண்ணிய அழகியல் வெளிக்கு எனது முதல்பயணம் நேர்ந்தது. ஒரு எழுத்தாளரின் பின்புலம் அறிந்திருப்பதே அவரை வாசிப்பதற்கு ஒரு தடையாக இருக்குமென்று நான் நினைத்ததில்லை. வட்டார மொழிகளில் ஏற்கனவே வாசிப்பு அனுபவம் உண்டு என்றாலும், தெளிந்த தமிழில் எழுதியிருக்கும் ஒரு வாழ்வும் நிலமும் இத்தனை அந்நியமாக இருக்குமென்று நினைத்ததில்லை. இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து அமெரிக்காவுக்கும் பின்பு கனடாவிற்கும் புலம்பெயர்ந்தவர் என்பதை அறிந்திருந்ததால் யாழில் நடக்கும் கதைகளை ஒரு புனைவாக அணுகுவதில் ஆரம்பத்தில் ஒரு மனத்தடை இருந்தது. ஒரு அனுபவக் கட்டுரையைப்போல தன்னியல்பாக தொடங்கும் கதை, புனைவின் எழுச்சியை தீவிரத்தை மனமறியாத மாயப்புள்ளியொன்றில் சென்று மீட்டுவதை கதைவெளியில் இருந்து மீண்டபின்னரே உணரமுடிகிறது.

பத்தாண்டுகளுக்கு முன்பு இன்னும் இளவயதில் வாசித்தபோது புன்னகைக்க வைத்த இடங்கள் இப்போது பரவசமடையச் செய்கின்றன. அன்று உணரத் தவறிய இடங்கள் இன்று ஆழத்தில் வரித்துத் தள்ளுகின்றன. எத்தனை புன்னகையோ அத்தனை செறிந்து மிகுந்த கண்ணீரும். அவரது எழுத்தின் நுண்மையும் செறிவும் வடிவ நேர்த்தியும் பலராலும் வியக்கப்படுவதுதான். நான் பெரிதும் ரசிப்பதும் வியப்பதும் எப்போதுமே துருத்தித் தெரியாத கதைசொல்லியின் குரல்தான். கதைகளுக்கு முன்னுரை அறிவுரை எழுதுவது தனக்குப் பிடிக்காது என்று வடக்குவீதி தொகுப்பின் “எலுமிச்சை” கதையில் சொல்லியிருப்பார். பிரக்ஞையின் தளத்திலிருந்து மெல்ல மெல்ல நழுவி கதைசொல்லியின் குரலிலிருந்தும் நழுவி புனைவென்னும் கனவுக்குள் நுழையும் கணத்தில், கதாசிரியனுடைய கருத்துசொல்லும்குரல் தலையைப்பிடித்து உலுக்கிவிடுவதை எத்தனையோமுறை எதிர்க்கொண்டிருக்கிறேன். தமிழ் சிறுகதையுலகின் மாமேதைகள் என்று அறியப்படுபவர்களிடம்கூட சமயத்தில் அது தென்படுவதுண்டு. கதைநிகழும் இடமும் மாந்தர்களும் அந்நியமாக தோன்றிய ஆரம்பத்தில் அப்படி ஒரு சிறு தடை இருந்ததுண்டு. பின் எப்போதும் அ. முத்துலிங்கம் அவர்களது எழுத்தில் கதையின் குரலன்றி வேறெதையும் நான் கேட்டதில்லை.

பால்யத்தில் நாம் பழகியறிந்த நிலத்தைவிட்டு பிரிவதென்பது, பாலை வெடித்த தென்னையை வேரோடுப் பிடுங்கி வேறோரிடத்தில் நாற்றாக நடுவதைப் போலத்தான். ஒருவேளை அது பிழைக்கவும் செழிக்கவும் கூடும், ஆனாலும் வேரறுந்த நாட்களின் வலி என்றென்றைக்கும் மறையாது. சொந்தஊரில் ஒரு முப்பதுநாட்கள் தொடர்ச்சியாகத் தங்கி பதினைந்தாண்டுகள் ஆகிவிட்டன. நீருக்குள் விழும் ஓவியம் போல என் நிலத்தின் முகம் மெல்ல மெல்ல மங்களாகிக்கொண்டே வருகிறது. இந்த புலம்பெயர்தலின் வலியின் தீவிரத்தை இயல்பான வாழ்க்கைத் தருணங்களே கீறிக் கொந்தளிக்கச் செய்யுமெனக் காட்டுகின்றன இந்த கதைகள். அவர் யாழை நினைவுகூர்ந்து எழுதுமிடங்களில் நிலத்தின் நினைவு ஒரு பெருமூச்சின் வெப்பமென தகித்துக்கொண்டே இருக்கிறது.

ஒரு வாசகனாக ‘வடக்குவீதி’ கதைத் தொகுப்பிலிருந்து நான் சேர்த்து வைத்திருக்கும் கனவின் விதைகளும் மாயமென உணர்ந்த அலைகளும் பல. அவற்றில் இன்றும் இனிக்கும்படி நினைவில் நிற்பவை நிலம், நுட்பம் மற்றும் நெகிழ்ச்சி பூத்துநிற்கும் இடங்களே.

எங்கும் என்றுமென தொடரும் நிலம்

‘பதினாயிரம் நூல்களை வாசிப்பதைக்காட்டிலும் சிறந்தது பதினாயிரம் மைல்கள் நடப்பது’ என்கிறது ஒரு சீனப் பழமொழி. நிலம் எனும் நீண்டதொரு புத்தகமே நினைவாக கலையாக மனிதமனத்தின் பக்கங்களில் சேகரமாகி கிடக்கிறது. அந்த நிலத்தின் முகமே நூலாக கிடைப்பது ஒரு பரிசு. நூறு மைல்களுக்குள் பலவாறாய் நிறம்மாறும் இந்தியாவையே முழுதும் காண்பதற்கு ஒரு ஆயுள் போதாதென்றாலும், இன்னும் ஆயிரமாயிரம் முகங்களை வனப்புகளை கொண்ட தேசங்கள் உலகமெங்கும் இருக்கத்தான் செய்கின்றன. நேர்சென்று அத்தனை வித நிலங்களை காண்பதென்பது எத்தனைபேருக்கு எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை. ஆனால் அந்த நிலங்களை நினைவில் ஏற்றி கதைகளாய் பூத்துக்கிடக்கும் ஒரு வரம் இந்த ‘வடக்குவீதி’.

யாழ்ப்பாணத்தின் ஒரு வடக்குவீதியில் தொடங்கும் இந்த “நிலம் தன் கதைகூறும் படலம்”, அமெரிக்க நெடுஞ்சாலைகளிலும், ஆப்கன் பனிச்சிகரங்களிலும் படர்ந்து கனடாவின் பனிப்பொழிவினூடே சென்று சோமாலிய பாலைவனத்தின் அடர்ந்த வெறுமையை காட்டுகிறது. ஆனாலும் அதன் கண்கள் யாழின் கண்களே. காலத்தில் ஈரம் உலராமல் கிடந்து காற்றில் துளிர்த்தபடியே இருப்பதும் அவரது பால்யத்தின் யாழ்தான்.

இணையமும் தொலைக்காட்சியும் இத்தனை வளர்ந்துவிட்ட காலத்தில், எழுத்தில் நிலம் அத்தனை வசீகரத்தை அளிக்குமா? என்று கேட்டால், ‘நிச்சயமாக’ என்றுதான் சொல்வேன். நிலங்களைப் பற்றிய கனவுகளே நம்மை நிலைகொள்ளாமல் செய்கின்றன. எப்போதும் அழைத்தபடி இருக்கும் சாலைகளுக்கு அவையே நம்மை இட்டுச்செல்கின்றன. புது நிலம் என்னும் புதுக்கனவே புலம்பெயர்தலின் தொடக்கப்புள்ளி அல்லவா? செல்மா லேகர்லாவ் எழுதிய ‘கோஸ்டா பெர்லிங் சாகா’ நாவல்தான் ஸ்காண்டிநேவிய நாடுகளின் பரந்த ஏரிகளை அவற்றின் இருள்கவிழும் மாலை நேரங்களின் முகத்தோடு காணவேண்டும் என்ற தீராத ஆவலை எனக்குள் விதைத்தது. ஆப்பிரிக்காவுக்கு பயணிக்க வேண்டும் என்கின்ற எனது எரியும் கனவுக்குள் எண்ணையை ஊற்றியது இந்த தொகுப்பின் கடைசி கதையான ‘ஒட்டகம்’ தான். எந்த இளம் வாசகனுக்கும் அல்லது பயணங்களே வாழ்வின் தருணங்கள் என்று நினைப்பவருக்கும் பல்வகை நிலத்தின் முகத்தை, உணர்வை, கதையை ஒரு இனிக்கும் பரிசாக இந்த கதைத்தொகுப்பு அளிக்க முடியும்.

நுண்மாண் நுழைபுலத்து நுட்பம்

பிற கலைகளின் நுட்பத்தை அறிந்த கலைஞனின் படைப்பே செறிவும் அழகும் நுட்பமும் நிறைந்ததாக இருக்குமென்பதற்கு ‘ ரி ’ கதை ஒரு சிறந்த உதாரணம். இந்த தொகுப்பில், கதையின் நுட்பத்தை, வடிவ நேர்த்தியை, அழகை இன்னும் உள்ள எந்த மாறிலிகளைக்கொண்டு அளந்தாலும், எனக்கு ஆகச்சிறந்த படைப்பாக தோன்றுவது ‘ ரி ’ தான். அடுக்குகளும் பரிமாணங்களும் ஒன்றன்மீது ஒன்று சத்தமில்லாமல் அமர்ந்திருக்கும் இந்த கதையில், குறைந்தபட்சம் இரண்டு சரடுகள் ஒன்றையொன்று புணரும் நாகங்கள் போல் தழுவிக்கொள்கின்றன. சிவக்கொழுந்து மாமாவின் மார்க ஹிந்தோள ராகத்து ரிஷபமும், வத்ஸலாவின் ரிஷபம் ஒரு சரடாக கோர்க்கும் பதின்பருவத்து இனக்கவர்ச்சிக்கே உண்டான துள்ளலோடு அமைந்த கதைச்சொல்லி சிறுவனின் மனமும் ஒன்றையொன்று நிரப்பும் விசைகள்.

கதையின் மொழிவடிவம் ஒரு பெரும்சாதனை என்றே சொல்வேன். தன்னைத்தானே மெல்லிய படபடக்கும் உணர்வால் சூழ்ந்துகொள்ளும் கதை, ஒரு வடிவ குறியீடாகவும் சேர்த்து ஹிந்தோள ராகத்தை பின்னிக்கொள்கிறது. இந்த ராகத்தின் வடிவத்தை விளக்கும் கதையில் வரும் குறிப்பு இந்த கதையின் வடிவத்திற்கும் அப்படியே பொருந்தும்.

“… அது மெதுவாகத்தான் ஆரம்பமாகும். ஒரு கையகலத்து அருவிபோல கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றெடுக்கும் பிறகு விரிந்து விரிந்து கிளைவிட்டு பெருகும்; எதிர்பாராத விதமாக வளையும், குதிக்கும், பிரவகிக்கும். ராகம் வடிந்து சமநிலைக்கு வரும்போது மூச்செடுக்க வெளியே வரும் திமிங்கிலம் போல நாங்களும் எங்களை ஆசுவாசப் படுத்திக்கொள்வோம்.”

“… தன் ஆரோகணத்தில் ஏழு சுரங்கள், இப்படி போகும். ‘ஸ ரி க ம ப த நி ஸ’. இதன் அவரோகணத்தில் இப்படி திரும்பும், ‘ஸ நி த ப ம க ஸ’. கவனித்தால், திரும்பி வரும்போது ‘ரி’ கிடையாது. அதுதான் விஷேசம். மோனலிசா சித்திரத்தை யார் எங்கிருந்து பார்த்தாலும் அது அவர்களையே பார்ப்பதுபோலவே இருக்கும். மனோரஞ்சிதப் பூ, நினைத்த வாசத்தை கொடுக்கும். அதுபோலத்தான் இந்த ராகமும். குதூகலமான நேரங்களில் பாடும்போது சந்தோஷமாக இருக்கும். வேறு சமயங்களில் சாந்தமாக இருக்கும். சில நேரங்களில் சோகமாக இருக்கும்.”

கிட்டத்தட்ட கதையின் வடிவமும் அப்படித்தான். உச்சகட்ட அங்கதத்தில் துள்ளலில் தொடங்கும் கதையில் சங்கதிகள் சேரச்சேர ஒரு அழுத்தமும், சோகமும், நிறைவின் வலியும் சேர்ந்தபடியே வருகிறது.

“ரிஷபம் மட்டும் திரும்பவில்லை.”

என்று முடியும்போது மனதில் ஏறும் சோகம் ஒருவித பித்துநிலைக்கு நம்மைத் தள்ளுகிறது. தன்னுடைய வாலை தானேத்தீண்டி விஷமேறும் பாம்புபோல், கதை ஒரு கசப்பின் சுவையை இறுதியில் செலுத்திவிடுகிறது. எத்தனைமுறை மீண்டும் வாசித்தாலும் கதையின் ஓட்டத்தை அத்தனை மகிழ்ச்சியாய் முதல் வாசிப்புபோல தொடங்க முடியவில்லை.

http://solvanam.com/?p=48534

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.