Jump to content

பலி - அனோஜன் பாலகிருஷ்ணன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பலி

அனோஜன் பாலகிருஷ்ணன்

ரத்னசிங்க உணவுப் பொதிகளை எண்ணினான். எல்லாம் சரியாக இருந்தன. பேப்பரால் சுற்றப்பட்டுக் கட்டப்பட்ட உணவுப் பொதிகளை அகண்ட வாளிக்குள் வைத்து டிரக்டரில் ஏற்றினான். முகாமிலுள்ளவர்கள் இனிமேல்தான் சாப்பிடுவார்கள். வீதியில் காவல் பணியில் நிற்கும் சிப்பாய்களுக்கு உணவுப் பொதியை ஒவ்வொன்றாகக் கொடுத்துவிட்டு வர வேண்டும். வெயில் சுள்ளிட்டது. துவக்கை முதுகுப்பக்கம் தொங்கவிட்டவாறு டிரக்டரில் பாய்ந்து ஏறினான். தலையில் கொழுவியிருந்த இரும்புத் தொப்பி இடறியது. சரிப்படுத்திக்கொண்டு டிரக்டர் பெட்டிக் கரையில் அமர்ந்தான். இன்னும் நான்கு சிப்பாய்களும் அவனுடன் ஏறினார்கள். வரும் வழியில் தென்னம் குற்றிகளை ஏற்ற வேண்டும்.
குலுங்கிக்கொண்டு டிரக்டர் போனது. வீதிக்கரையில் கல்வீடுகள் கடந்துகொண்டிருந்தன. சைக்கிளில் பலர் விரைந்தனர். சமாந்திரமாகச் சென்றுகொண்டிருந்த வாலிபர்கள் இராணுவ டிரக்டரைக் கண்டவுடன் ஒருவர் பின் ஒருவராக அணி வகுத்தனர். சுதந்திரமாகத் திரியும் வாலிபர்களைப் பார்க்கும்போது பலசமயம் ரத்தினசிங்கவுக்கு எரிச்சல் கிளர்ந்து எழும். அதிகாலையில் ரோந்துப் பணிக்குச் செல்ல வேண்டும். மூன்று கிலோமீற்றர்கள் அவர்களுடைய முகாமின் பொறுப்பிலிருந்தது. அது முடிந்த பின்பே உடற்பயிற்சி, உணவு.

குடும்பமாகத் திருவிழா போல் வருபவர்களைக் காணும்போது, தானும் விரைவில் அவ்வாறு செல்ல வேண்டும் என்று விரும்பினான். ஒருவர் சிறிய வயது மகனை சைக்கிளில் முன் பாரில் ஏற்றி அழுத்திக் கொண்டிருந்தார். அவனது கைகள் ஹான்டிலை இறுகப் பற்றியிருந்தன. அவர்களைப் பார்த்தவுடன் ரத்னசிங்கவுக்குத் தன் மகனின் நினைவு கிளர்ந்தது. இதே வயதில்தான் அவர் மகனும் இருப்பான். ஏறக்குறைய எட்டு மாதங்கள் ஆகிவிட்டன வீடு சென்று. இனிமேல் வீடு செல்ல சந்தர்ப்பம் அவ்வளவு சீக்கிரம் கிடைக்குமோ தெரியாது. யுத்தம் வன்னிப் பக்கம் ஆரம்பமாகிவிட்டது. வாரம் ஒருமுறை வீட்டிலுள்ளவர்களுடன் தொலைபேசியில் முகாமிலிருந்து பேசலாம். அது பொதுத் தொலைபேசி. வேறு தொலைபேசிகள் உபயோகிக்கமுடியாது. குடும்ப நினைவுகள் சுழியாக உள்ளிழுத்தன.

இறுதியாக மகனுடன் பேசியதை நினைத்துப் பார்த்தான்.

“தாத்தே கவதாத கெவல் எனவா?” 

“இன்னும் ஒரு மாதத்தில் வருவேன்..”

“வரும்போது என்ன வாங்கிக்கொண்டு வருவீங்க?”

“நீ கேட்ட வெள்ளைத் தாமரைப்பூ...”

“அப்பா இந்தமுறை ஏமாற்றக் கூடாது..” அவனின் சிரிப்பு குதூகலமாகக் கேட்டது.

வீதியெங்கும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர். எனக்கும் லேசாகப் பதற்றம் தொற்றிக்கொண்டது. சமாந்திரமாகச் செல்லாமல் ஒருவர் பின் ஒருவராக சைக்கிளில் போனோம். பொக்கற்றில் அடையாள அட்டை இருக்கின்றதுதான். தொட்டு மீண்டும் உறுதிப்படுத்திக்கொண்டேன். இராணுவம் வீதிக் கரையில் ரோந்து நடவடிக்கையில் இருந்தது. நீண்ட கம்பிகளைக் கொண்ட வோக்கிடோக்கியை முதுகில் அணிந்திருந்த சிப்பாய் வாயருகே பிடித்துச் சிங்களத்தில் பதில் சொல்லிக்கொண்டிருந்தான். அதன் இரைச்சல் சத்தம் இன்னும் சூழலைப் பதற்றமாக வைத்திருந்தது. மற்றைய சிப்பாய்கள் குப்பை விறாண்டிக் கம்பிகள் சகிதம் வீதிக்கரையில் வளர்ந்துள்ள புற்களையும் சருகுகளையும் கிண்டிக்கொண்டிருந்தார்கள். வெறும் அட்டைப் பெட்டியை ஒரு இராணுவச் சிப்பாய் தயங்கித்தயங்கிப் புரட்டிக்கொண்டிருப்பதைக் காணும்போது அந்தப் பயம் வளர்ந்து இராட்சசக் கொடியாக என்னைச் சுற்றிப் பிடித்தது.

நாங்கள் குமரேசன் பேக்கரிக்கு வந்துசேர்ந்தோம். இரும்புக் கதவு இழுத்துச் சாத்தப்பட்டிருந்தது. பாண் வேகும் கருகல் வாசமும் மா நொதிக்கும் புளித்தவாசமும் கலவையாக வந்தது. ரெண்டு முறை மரக் கதவை மெல்லமாகத் தட்ட விமலா அன்ரி கதவைத் திறந்தார். அவரின் முகத்தில் எண்ணெய் வழிந்தவாறிருந்தது. ஒருகையால் தலை சீவிக்கொண்டிருந்தார். எங்களைப் பார்த்து, “என்ன டியூஷன் கட் பண்ணிட்டு சுத்துறீங்களோ...” என்று சொல்லிச் சிரித்தார். எனக்கு எரிச்சல் வந்தது. மயூரன் அண்ணா கலைந்த தலையுடன் பின்வளவில் நின்றார். அலவாங்கில் குத்திக் கனக்கத் தேங்காய் உரித்திருக்க வேண்டும். வேர்வையில் கைகால்களில் பொச்சுக்கள் ஒட்டியிருந்தன. ஒடுங்கிய முகம். மெல்லிய சிவலை உடம்பு. தென்னம் மட்டைகள்போல் நீண்ட கைகள். அவர் கதைக்கும்போது அவரின் கைகள் அவருக்கு ஏற்ற வகையில் ஆடும். அவர் குரலில் ஒலிக்கும் வசீகரம் இழுத்துக் காந்தத்தில் ஒட்டிய இரும்புத்துகள்களாக அவரோடையே ஒட்டிவைத்திருக்கும்.

கொய்யா மரத்தின் கீழ் மூன்று பிளாஸ்டிக் கதிரைகளை எடுத்துப்போட்டுவிட்டு அமர்ந்தோம். குடிக்கத் தண்ணீரை போத்தலில் தந்தார். முருங்கை மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த மசுக்குட்டியைச் செம்பகம் ஒன்று கொத்தித் தின்றவாறிருந்தது. பதினோராம் ஆண்டு வகுப்புப் பரீட்சைகள் எழுதிவிட்டுக் கிரிக்கெட் விளையாடத் தொடங்கும்போதுதான் மயூரன் அண்ணா பழக்கமானார். உற்சாகமாகப் பேசுவார். அப்போது சமாதான காலம். இயக்கக்காரரும் இராணுவத்தினரும் தங்களுக்குள் புன்னகைத்துக்கொண்டனர். அவர்மூலம் தான் மண் மீட்புப் பயிற்சிக்கும் சென்றேன். எங்கள் பாடசாலையிலிருந்து மொத்தம் பதின்மூன்று பேர் வேறுவேறு பாடசாலைகளிலிருந்து நிறையப்பேர் வந்திருந்தார்கள். மூன்று மாதம் பளை இயக்க பேசில் வைத்துப் பயிற்சிதந்து ஆயுதங்கள் சுடப் பழக்கினார்கள். தமிழீழ மக்கள் படை என்று பெயர் சூட்டினார்கள். பயிற்சி முடிந்து மறுபடியும் உயர்தரம் படிக்க வந்துவிட்டோம். எமக்குத் தகவல் வரும்போது அவர்களது ஆணையை நிறைவேற்ற வேண்டும். அவ்வளவுதான்.
பிளாஸ்டிக் கூடையை மயூரன் அண்ணா எடுத்துவந்தார். உள்ளே பேப்பரால் சுற்றி ஏதோ வைக்கப்பட்டிருந்தது. தணிந்த குரலில் எங்களுடன் கதைக்க ஆரம்பித்தார். எனக்குப் புரிய ஆரம்பித்தது. அதை நானும் கோபியுமாகச் செய்யப்போகிறோம். அவரின் வாய் உதடுகள் ஒட்டாமல் பேசின. கைகளின் தசைகள் இறுகுவதும் விலகுவதுமாக இருந்தன. இதை வலு திறமாகச் செய்ய வேண்டும். எனக்குள் உற்சாகம் அலையாக எழுந்துஎழுந்து ஆர்ப்பரித்தது.

“பிளேன்ரீ போடவே மயூரன்?” விமலா அன்ரி உள்ளேயிருந்து கேட்டார். யாருமே பதில் சொல்லவில்லை. மீண்டும் கத்தினார். “ஓமோம் கொண்டாங்கோ..” என்று நான் பதிலுக்குக் கத்தினேன்.

அவர் கூடைக்குள் கையைவிட்டு எடுத்துச் சுற்றிய பேப்பரை விலத்திக் காட்டினார். பச்சை நிறத்தில் வளைவாக இருந்தது. தொட்டுப் பார்த்தேன். குளிர்ந்தது.
பிளேன்ரீயைக் குடித்துக்கொண்டு திட்டத்தில் உன்னிப்பாக இருந்தோம். வெள்ளைப் பேப்பர் ஒன்றை எடுத்து மடியில்வைத்து நீலப் பேனையால் வரைந்து மயூரன் அண்ணா பொறுமையாக விளங்கப்படுத்தினார். எல்லாம் பூரணமாக விளங்கியது. நாளும் குறிக்கப்பட்டது. கூடைக்குள் வைத்தபடியே அதைக் கோபியிடம் கொடுத்தார். எனக்கு நிம்மதியாகவிருந்தது. வேண்டிக்கொண்டு வெளிக்கிட்டோம். பிரதான வீதியால் செல்லாமல் ஒழுங்கைக்குள்ளால் நுழைந்து கலைந்தோம்.

படசாலை மணியடித்தது. தனுஜன் துள்ளிக்குதித்து வகுப்பறையால் ஓடிவந்தான். தண்ணீர் போத்தலை விட்டுவிட்டு வந்தது நினைவுக்குவர மீண்டும் வகுப்பறைக்கு ஓடினான். சுவரில் தொங்கிக்கொண்டிருந்தது. மூடியைக் கழற்றி அம்மா கரைத்துத் தந்ததில் மிச்சமிருந்த தேசிக்காய்த் தண்ணீரையும் உறிஞ்சியில் சூப்பிக் குடித்து முடித்தான். நாளைக்கும் நாளை மறுநாளும் விடுமுறை. தங்கச்சிகளுடன் விளையாடலாம் என்ற உற்சாகம் அவனை மகிழவைத்தது. ஆசிரியர் கொடுத்த வீட்டு வேலையை மறக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தான். இல்லாவிடில் அருட்செல்வன் மிஸ் முட்டுக்காலில் விட்டுப் பிரம்பால் அடிப்பார். வெள்ளை வானிஷ் பேப்பரும் பசையும் வாங்க வேண்டும். வேறு ஏதோவொன்றும் வாங்க வேண்டும்; என்ன அது மறந்து போச்சே! மூக்குக்குள் விரல்விட்டு யோசித்தான். அப்பா வெளியே வந்து நிற்பார். அவரிடம் சொல்வோம். வாசலுக்கு ஓடிப்போனான்.

கேற்றுக்கு வெளியே வந்து அப்பாவைத் தேடினான். குறுக்கும் மறுக்குமாக நிறைய மாணவர்கள் ஓடிச் சென்றவாறிருந்தனர். சிவத்த மோட்டார் சைக்கிளில் வெள்ளை ஹெல்மெட்டில் அப்பா நிற்பாரே. எங்கே அப்பா. அவன் கண்கள் பரபரப்புடன் கூட்டத்தை விலத்தித் தேடின.

அப்பா மகோகனி மரத்தடியில் நின்றார். ஓடிச்சென்று மோட்டார் சைக்கிளில் ஏறினான்.

“அப்பா... அருட்செல்வன் மிஸ் ஹோம்வோர்க் சொன்னவா..”

“என்ன ஹோம்வோர்க்?” மோட்டார் சைக்கிள் கிக்கரை உதைத்துக்கொண்டு அப்பா கேட்டார்.

“வெள்ளைத் தாமரைப்பூ செய்ய வேண்டும்..”

“தாமரைப்பூவா?”

“ஓமப்பா.. சாமான் வாங்கணும்”

நங்கள் அங்கு இருக்கும்போது யாருமேயில்லை. அதிகாலை இரண்டாக இருக்க வேண்டும். தவண்டுதவண்டு முன்னேறினோம்.  நாயுண்ணிச் செடிகள் மண்டிக்கிடந்தன. செம்மண் முழங்கால் முழுவதும் அப்பியது.  நாய் எதுவும் குலைத்துவிடக்கூடாது என்பதில்தான் எங்கள் அச்சம் இருந்தது. அது கண்டி வீதியில் ஏறும் வீதி. ஏறும் முடக்கில் வெற்றுக் காணியிருந்தது. முன்னால் வேலியடைத்திருந்தார்கள். அருகில் விளக்குக் கம்பம். அதில்தான் இதனைப் பொருத்த வேண்டும். சுற்றியிருந்த பேப்பரை விலத்தினேன். பச்சை நிறத்தில் மயூரன் அண்ணா தந்த கிளைமோர் உறங்கிக்கொண்டிருந்தது. அது அடைத்து வைத்திருக்கும் சக்தி ஒரு பெண்ணின் சீற்றம் போல. கோபி கிளைமோரை வாங்கிக்கொண்டு முன்னால் சரசரவென்று பாம்பாக நகர்ந்தான். அவசரமாக எங்களுக்குக்  கொடுக்கப்பட்ட அடிப்படையான பயிற்சிகளை வைத்துக்கொண்டு செயல்படும் அவனின்   வேகம் ஆச்சரியப்படுத்தியது. நான் மல்லாக்காக வானத்தைப் பார்த்துக்கொண்டு திரும்பிப் படுத்தேன். பெரிய தாட்சிச் சட்டியைக் கவிட்டு வைத்திருந்ததுபோல் வானம் கருமையாக இருந்தது. பென்சில் திருவல்களை ஒட்டிவைத்தது போல் நட்சத்திரங்கள் பரந்திருந்தன.
கொஞ்ச நேரத்தில் நெளிந்து நெளிந்து ஊர்ந்து கோபி வந்தான். அவன் கைகளில் இரண்டு வயர்கள் இருந்தன. நிலத்தில் அவற்றை அழுத்திஅழுத்தி இழுத்து வந்தான்.
“வச்சாச்சா?” வினவினேன்.

மூச்சை நன்றாக இழுத்துவிட்டுச் சொன்னான், “ஓம்.. சொன்ன மாதியே போஸ்ட்டின் அடியில் கட்டியாச்சு...”

“கோணம் எல்லாம் சரிதானே?”

“திருப்தி” அவன் கண்கள் ஒளிர்ந்தன.

அன்று நாங்கள் பாடசாலை செல்லவில்லை. அமைதியாக இருந்தோம். மதிலுக்கு அங்கால் சைக்கிளில் கோபி நிற்பான். வெடிக்கவைத்தவுடன் ஓசைப்படாமல் ஓடி அவன் சைக்கிளில் கரைந்துவிடுவதுதான் திட்டம். நான்தான் வெடிக்கவைக்க வேண்டும். கையிலிருக்கும் இரண்டு வயர்களையும் பொருத்த வேண்டும். பொருத்தியவுடன் வெடிக்கும். தரையில் படுத்திருந்தவாறுதான் செய்ய வேண்டும். மதியம் இரண்டு மணிபோல் இராணுவ டிரக்வண்டி செல்லும். சரியாகச் செய்ய வேண்டும். முதல் தாக்குதல். இப்போது நாம் புறப்பட்டோம்.

தரையோடு அழுத்திப் படுத்திருந்தேன். கைகள் சாதுவாக நடுங்கின. எத்தனை இராணுவம் இறங்கும்? நெற்றியின் ஒற்றைப் பக்கத்தில் வியர்வை வழிந்தது. என் மூச்சுக் காற்றினால் தரையிலிருந்த மண் மெல்லமாகப் பறந்தது. முதல் தாக்குதல். முதல் கொலைகூட. அவர்கள் உடல்கள் எல்லாம் சிதறுமா? இதுவரை சிதறிய உடல்களைப் பார்த்திருக்கிறேனா? ஒரு முறை வாகனத்தில் அடிபட்டுக் குடல் பிதுங்கிச் செத்துக்கிடந்த நாயை மிக அருகில் பார்த்திருக்கிறேன். பேசாமல் கோபியை வெடிக்கவைக்கச் சொல்லலாமா? வேண்டாம். கேட்டால் எனக்கு மரியாதையில்லை. கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். நேரம் சரிதான். தெரியும் பற்றை நீங்கலுக்கால் வீதியைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

டிரக் வந்துகொண்டிருந்தது. கைகளைப் பிசைந்தேன். ஈரத்தில் ஒட்டின. எழும்பி ஓட வேண்டும். ஓடுவனா? செருப்பு சரியாக இருக்கின்றதா? எல்லாம் சரி. இரண்டு வயர்களையும் சரியாக இணைத்தேன். அரை வினாடியிருக்கும். “டம்..” என்று வெடித்தது. கந்தகப் புகை வாசம் சட்டென்று வீசியது. அடுத்த கணம் கோபியின் சைக்கிளில் இருந்தேன். அவன் வேகமாக மிதித்தான். இரு வருக்கும் வியர்த்தது. ஷேர்ட் கழுத்துக்கால் காற்றுப் புகுந்து வியர்வையில் தீண்டிக் குளிர்வித்தது. தூரத்தில் மேல்நோக்கிச் சுட்டுக்கேட்டது.
நான் வீட்டினுள் நுழையும்போது தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருந்தது. அம்மா பார்த்துக்கொண்டிருந்தார். மின்சாரம் வந்திருக்கின்றது போல. கதிரையிலிருந்து பார்க்கத் தொடங்கினேன். சட்டையிலிருந்து கந்தக வாசம் வந்ததுபோல் இருந்தது. திடுக்கிட்டுச் சட்டையைப் பார்த்தேன். ஆங்காங்கே மண் திட்டுகள். உடனே எழுந்து என் அறைக்குச் சென்றேன். கட்டிலில் உடைகள் கலைந்திருந்தன. உடைகளை எடுத்து அடுக்கினேன். கைவிரல்கள் மெல்லமாக அதிர்ந்துகொண்டிருந்தன. குளிக்க வேண்டுமாப்போல் தோன்றியது. மேசையிலிருந்த கொப்பியை எடுத்தேன். திரிகோண கணித டியூட் டொரியலை எடுத்து எழுந்தமானதாக ஒரு கணக்கைச் செய்ய ஆரம்பித்தேன்.

அம்மா அதனைச் சொல்லும்போது நான் நித்திரை கொண்டு எழும்பியபோதுதான், “சோமசுந்தரம் முடக்கடியில மைன்ஸ் வெடிச்சு ஒரு ஸ்கூல் பொடியன் செத்திட்டானாம்..” அம்மாவின் குரல் புகைபோக்கி வழியே நுழையும் புகைபோல் என்னைச் சூழ்ந்தது. என் நகங்களைப் பார்த்தேன். அதற்குள் இருக்கும் அழுக்குகளை அகற்ற வேண்டும். கத்தரிக்கோலை எடுத்து நகத்தை வெட்ட ஆரம்பித்தேன். கைகள் நடுங்கின. பாதி நகத்துக்கு மேல் என்னால் வெட்ட இயலவில்லை. உடனே குளியல் அறைக்குள் சென்று நீராடினேன். வாளியால் நீரை அள்ளிஅள்ளி வார்த்தேன். தேகத்தில் உரசிக்கொண்டு சென்றது.

மயூரன் அண்ணா என் தோளைத் தொட்டார். பிளாஸ்டிக் கதிரையில் அமர்ந்து இரு கைகளையும் தொடையில் தாங்கி நாடியில் முட்டுக்கொடுத்துக்கொண்டு குனிந்து அமர்ந்திருந்தேன். தரையில் அட்டையொன்று ஊர்ந்து சென்றுகொண்டிருந்தது. மீண்டும் தோளை உலுக்கினார்; நிமிர்ந்து பார்த்தேன்.

“இதுக்கேன் இப்ப அழுகிறாய்?” என்றார்.

“நான் அழவில்லை,” என் கண்களைத் துடைத்துக்கொண்டு நிமிர்ந்து பார்த்தேன்.

“தாக்குதலில் மக்கள் இறப்பது சகஜம்; அவர்களுக்காகத் தானே நாம் போராடுகிறோம்.. நீ ஒண்டும் யோசியாதை..” ஆறுதலாக மீண்டும் என் தோளைத் தடவிக்கொடுத்தார்.
“செத்த பொடியனுக்கு வயசு பத்தாம்...” என் குரலிலிருந்து அழுகை மெலிதாகக் கசிவதை உணர்ந்து திடுக்கிட்டேன். இவர்களுக்கு முன்னால் அழக்கூடாது. என்னால் இயலவில்லை. என் தொண்டை இறுகியது. இருகையால் முகத்தை மூடினேன். வாயில் உப்பு கசந்தது.

“டேய் என்னத்துக்கு இப்ப அழுகிறாய்?” கோபி எழுந்து வந்து ஆதரவாக என்னைப் பற்றினான். அவனின் கைகளைத் தட்டிவிட்டேன்.
“ஒரு ஆமிகூட சாகல... செத்தது பொதுசனம்... நாம வச்ச இடம் பிழை,”
“அதுவெல்லாம் சரிதான். டைமிங்தான் பிழை,”
“நீ சரியான ஆங்கிள் வைக்கவில்லை.. உன்னால் என் கைகளில் எல்லாம் ரத்தம்..” இதைச் சொன்னவுடன் கோபி 
என்னை முறைத்துப் பார்த்தான். உள்ளூர நடுங்கினேன்.

மயூரன் அண்ணா எழுந்துவந்து இருவரையும் சமாதானப்படுத்தினார். அதைத்தான் எதிர்பார்த்திருந்தேன். இதில் நான் வெறும் கருவி. மயூரன் செய்த கொலைதான் இது. இதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. இதை அவர் தன் வாயால் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்தேன். என் கைகளில் எந்தப் பாவமும் இல்லை.
“முதல் தரம் தவறிவிட்டது... விடு. அடுத்தமுறை செய்யலாம்..” என்றார் மயூரன்.

இருபுறமும் தோரணங்கள் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்தன. பேன்ட் ஒலிச்சத்தம் அதிகமாக இருந்தது. சுவர்கள் எங்கும் தொடர்ச்சியாகக் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள் ஓட்டப்பட்டிருந்தன. ஒருவர் என் கையில் ஒரு கண்ணீர் அஞ்சலித் துண்டைத் திணித்துவிட்டுச் சென்றார். விரித்துப்பார்த்தேன். வெள்ளைப் பேப்பரில் நீல மையில் அச்சாகியிருந்தது. சிறிய வட்ட முகம். அடர்த்தியான தலைமுடி. இமைகள் மெல்லிய கோடாக வளைந்திருந்தன. இவனையா நான் கொன்றேன்? பெயரைப் பார்த்தேன் தனுஜன். கண்ணீர் அஞ்சலித் துண்டைச் சீராக நான்காக மடித்து ரவுசர் பொக்கற்றில் வைத்தேன்.

சீருடையில் பாடசாலை மாணவர்கள் நிறையப்பேர் குழுமியிருந்தனர். உள்ளே நுழைந்து பிரேதத்தைப் பார்க்க வேண்டும். அதுதான் அவர்கள் வீடு. சனத் திரளில் என்னை யார் என்று யாரும் கேட்கப் போவதில்லை என்ற நம்பிக்கை என்னைச் செலுத்தியது. நிறையப்பேர் செறிந்திருந்தார்கள். அனைத்துக்கும் காரணம் நான்தான். பட்டத்தின் விண்போல் என் நெஞ்சு அதிர்ந்தவாறிருந்தது. வெற்றிலைத் தட்டங்களும் போயிலையும் உலாவிக்கொண்டிருந்தன.

பிரேதப்பெட்டி நடுவில் வைக்கப்பட்டிருந்தது. அருகில் தலைவிரி கோலமாகப் பெண்கள். அவர்களின் கண்கள் சிவந்திருந்தன. அழுதுஅழுது வறண்டு ஓய்ந்த கண்கள். இரண்டு சிறுமிகளும் விக்கிவிக்கி அழுதனர். பாடசாலை முடிந்துவர விளையாடலாம் என்று காத்திருந்த சகோதரிகளாக இருக்க வேண்டும். வருபவர்கள் சுற்றிப்பார்த்து விட்டு அஞ்சலியைச் செலுத்திவிட்டுச் சென்றவாறிருந்தார்கள். இறந்த பொடியனின் அப்பா அருகில் கைகள் எல்லாம் பண்டேஜால் சுற்றப்பட்டுக் கதிரையில் இருந்தார். அவர் முகம் தொய்ந்திருந்தது. கொஞ்சமாக அவர் முகம் நிமிர்ந்தது. அவசரமாக என் கண்களைத் திருப்பினேன். அவர் பாடசாலை முடிய மகனை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வரும்போதுதான் இது நிகழ்ந்தது.

தயங்கித்தயங்கிப் பிரேதம் அருகில் சென்றேன். என்னை முந்திக்கொண்டு ஒரு பெண்மணி சென்றார். உடனே அழுதுகொண்டிருந்த பெண்மணி உரத்த குரலில் அவரைக் கட்டிப்பிடித்துக் கதறி அழுதார்.

“என் மகனைப் பாருங்க... என்ன பாவம் செய்தான் இவன். இப்படி ஆக்கிவிட்டார்களே, இப்படி கண்மண் தெரியாமல் சாக்கொல்கிறார்களே, உயிரின் மதிப்புத் தெரியுமா இவர்களுக்கு.. எல்லா இளம் குருத்துக்களையும் சாகடிச்சுட்டு யாருக்காக மண் மீட்கிறார்கள்...” மயில் அகவும் சத்தம் போல் அந்த அழுகை மிக நீளமாக இருந்தது.

இடுப்புக்குக் கீழ் எல்லாம் சிதைந்துவிட்டதாம்; யாரோ யாருக்குச் சொல்லியவாறிருந்தார்கள். இப்போது ஏன் இங்கே வந்தேன். என்னால் நிக்க முடியவில்லை. பிரேதம் பார்க்காமலே வெளியேவந்தேன். சூரியனின் ஒளிகள் ஈட்டிக் கம்பிகளாகக் குத்தின. என் இரண்டு கைகளையும் தூக்கி என் முன்னால் விரித்துப் பார்த்தேன். ச்சே கொஞ்சம் முந்திப்பிந்தி வயரை இணைத்து இருந்தால் எதுவும் ஆகியிருக்காது.

காபி என்னைப் பலமுறை அழைத்தும் நான் மீண்டும் மயூரன் அண்ணாவைச் சந்திக்கச் செல்லவில்லை. அவர்கள் அழைக்கும்போது கையடக்கத் தொலைபேசி அதிர்ந்தவாறிருந்தது; எடுக்கவேயில்லை. வகுப்புகளுக்கும் செல்வதைத் தவிர்த்தேன். சரியாக ஏழு நாட்கள் கழித்து அவர்களைச் சந்தித்தேன். மீண்டும் அவர்களைச் சந்தித்துத்தான் ஆக வேண்டும் என்று நினைத்து இருந்தேன். ஆனால் இத்தனை வேகமாக நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
மயூரன் அண்ணா என்னை உற்றுப் பார்த்தார். அவர் பார்வைகள் ஊடுருவுவதை அறிந்து என் தேகம் புல்லரித்தது. அவர் கண்களை என் கண்கள் சந்திக்கவிடவில்லை; பார்த்தால் விழுந்துவிடுவேன். மீண்டும் பேக்கரிக்குக் கூட்டிச் சென்றார்கள்; பலமுறை பேசினார்கள். எனக்குள் கொந்தளித்துக்கொண்டிருக்கும் இராட்சத அலைகள் மெல்லமெல்ல அமைதியடைந்துகொண்டிருந்தன.

“அடுத்த முறை நான் செய்கிறேன்.. நீ என்கூட இருந்து வேடிக்கை பார்,” என்றார்.வெளிவர முடியாத முடிவிலி விளையாட்டாகத் தோன்றியது.நாங்கள் மூவரும் சென்றபோது பொழுது படர்ந்து கொண்டிருந்தது. இந்த முறை மோட்டார் சைக்கிள். பல்வேறு இடங்களில் கிளைமோர் தாக்குதல்கள் நிகழ்ந்துகொண்டிருந்தன. இராணுவம் சுடுவதும் தீவிரமான தேடுதல்களில் ஈடுபடுவதும் வழமையாகியிருந்தது. அதிகாலையில் பிரதான வீதியெங்கும் அங்குலம் அங்குலமாகச் சோதனையிடுவார்கள். கிளைமோர் பொருத்துவது மிகவும் சிக்கலாக இருந்தது.

மயூரன் அண்ணா இந்தமுறை நேரடியாகக் களத்தில் இறங்கியிருந்தார். நான் வெறுமனே சப்போர்ட்தான். இருநூறு மீற்றருக்கு ஒருவராக நாள் 
பகலாக வீதியெங்கும் இராணுவச் சிப்பாய்கள் நிறுத் தப்பட்டிருந்தனர். அவர்களின் கண்களுக்கு மண்ணைத் தூவி கிளைமோரைப் பொருத்த வேண்டும்.
இங்குதான் மயூரன் அண்ணா தனது யுத்தியைக் கையாண்டார். பிரதான வீதியில் மூடிய கடையின் பெயர்ப் பலகை பின்னே கிளைமோரைப் பொருத்துவதாக உத்தேசித்தார். இந்தமுறை வயர்களை உபயோகிக்காமல் செல்லிடத் தொலைபேசி மூலம் வெடிக்கவைக்கவிருந்தார்.

கோபியும் மயூரன் அண்ணாவும் என்னிடம் வந்து சொல்லும்போது பிரமிப்பாக இருந்தது. கிளைமோரைப் பொருத்திவிட்டார்கள். இராணுவ வாகனம் செல்லும்போது அழைப்பை எடுக்க வேண்டும். ரிங்க் அடிக்கும்போது வெடிக்கும். நேரக் கணிப்பு எல்லாம் நுட்பமாகக் கணித்துவைத்திருந்தார்கள்.

மூன்று மணிபோல் நெல்லைக் குளம் வைரவர் கோயிலடியில் சந்தித்தோம். கோபி எங்களிடம் இருந்து அரைக் கிலோமீற்றர் தள்ளி நிற்பான். டிரக்டர் வரும்போது அறிவிப்பான். டிரக்டர் வண்டியில் இராணுவம் கடந்து செல்லும்போது மயூரன் அண்ணா வெடிக்கவைப்பார். நான் அவரின் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் இருப்பேன்.

ஒழுங்கையில் காத்திருந்தோம். பெரிதாக ஆள் நடமாட்டம் இல்லை. ஆறுதலாக இருந்தது. இராணுவத்தில் யாரும் சாகாவிட்டாலும் பரவாயில்லை. எங்கட சனங்கள் எவருக்கும் எதுவும் ஆகிவிடக்கூடாது.

“இந்தா பிடி..” செல்பேசியை மயூரன் என்னிடம் நீட்டினார். நான் அதிர்ந்தேன்.

“என்ன இது..?”

“நீ கோல் எடு..”

“நானா.. எ..எ எனக்கு டைமிங் தெரியா.. அண்ணா நீங்களே செய்யுங்க..”

“விசரா... உனக்கு பைக் ஓட்டத் தெரியாது.. நான் ரெண்டையும் செய்யக் கஷ்டம்..” இது அவர் வேணும் என்று செய்வதுபோல் இருந்தது. நன்கு திட்டமிட்டுச் செய்கிறார்கள்போல். என் கையை இழுத்துத் திணித்தார். என் பயத்தைப் போக்கவா இது?

“அண்ணே.. சரியாச் செய்ய மாட்டேன்..”

“நான் சொல்லும்போது கோல் எடு... சரியா நடக்கும்..”

இது இவர் செய்யும் செயல்தான். எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. உள்ளங்கை பிசுபிசுப்பில் இருந்தது. கோபியின் அழைப்பு வந்தது. மனதார அதனை வெறுத்தேன். டிரக்டர் வருகிறது, ஆறு சிப்பாய்கள் இருப்பதாகச் சொன்னான். டிரக்டர் சத்தம் தூரத்தில் கேட்டது. ஒருமுறை என் கைகளை விரித்துப் பார்த்தேன். சூடாக இரத்தம் காதுமடல்களில் பாய்ந்தவாறிருந்தது.

“எடு..”
அழுத்தினேன்; ரிங்போக ஆரம்பித்தது. மயூரன் அண்ணா மோட்டார் சைக்கிளை ஒழுங்கைக்கால் வேகமாகச் செலுத்தினார். தூரத்தில் எதிர்பார்த்த “டமார்..” என்ற சத்தம் அதிர்ந்து ஒலித்தது. குமரேசன் பேக்கரி வரும்வரை இருவரும் பேசவேயில்லை. விமலா அன்ரி குரோட்டனுக்குத் தண்ணீர் வார்த்துக்கொண்டிருந்தார். அங்கிருந்துவிட்டுப் பின்னேரம் வீடு வந்து நித்திரை கொண்டேன்.

சிவந்த அலைகள் எழுந்து ஆர்ப்பரித்தன. அலைகள் மேலே மயில் பறந்துவந்து அலையின் உச்சியில் அமர்ந்தது. அதன் தோகைகள் ஒவ்வொன்றாக உதிர்ந்தன. அதன் அகவல் சத்தம் பூனையின் சோகச் சத்தம்போல் நெஞ்சை அலைக்கழித்தது. படுக்கையிலிருந்து எழுந்தபோது கால் நரம்புகள் நொந்தன.

மறுநாள் வெளியாகிய பேப்பரில் தலைப்புச் செய்தியில் ஆறு இராணுவத்தினர் கிளைமோர் தாக்குதலில் பலி. கோபத்தில் இராணுவம் அட்டகாசம். பொதுமக்கள் பலர் தாக்கப்பட்டனர். பதின்மூன்று பேர் சந்தேகத்தின்பேரில் கைது என்ற செய்தி புகைப்படத்துடன் வெளியாகியிருந்தது. இறந்த இராணுவ உடல்களைப் புகைப்படத்தில் காணவில்லை. மெலிதான நடுக்கம் உள்ளிருந்து எழுந்து வெளியேறியது. என் கைகளை விரித்துப் பார்த்தேன். இதை நானா செய்தேன். இறந்த பொடியனின் உடலை நினைத்துப் பார்த்தேன். 
கைத்தொலைபேசி அதிர்ந்தது. மயூரன் அண்ணாவிடம் இருந்துதான், ஆனால் இந்த முறை அழைப்பை உடனே எடுத்தேன்.

http://www.kalachuvadu.com/current/issue-210/பலி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.