• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
நவீனன்

திருவையாறு

Recommended Posts

திருவையாறு

 

-எஸ். சங்கரநாராயணன்

கண்மூடிக் கிடந்தாலும் சூட்சுமம் மெல்ல தாமரையாய் மலர்ந்தது. சூரியனை மனசு உள்வாங்கிக் கொண்டதோ. இது எந்த நாழிகை தெரியாது. ராம ராம என மனசில் துடிப்பு. கண்ணைத் திறக்கா விட்டாலும் மனம் முதலில் விழித்துவிட்டது. வெளியே எங்கோ பெயர் தெரியாத பறவை ஒன்று சிறகடித்து சிற்றொலி ஒன்றை எழுப்புவதைக் கேட்டார்.
9.jpg
ட்விட். தேன் சொட்டினாப் போல… என்ன ஸ்வரம் அது, என்று மனசு யோசித்தது. உலகின் ஒலிகள் ஸ்வரங்களால் ஆளப்படுகின்றன. வாழ்க்கை சுருதியிலும் ஸ்வரங்களிலுமாகப் பிரித்தாளப் பட்டு பிணைக்கப் பட்டுக் கிடக்கிறது. பகலைவிட இரவின் பிரத்யேக ஒலிகள் அற்புதமானவை. பிசிறற்ற அவற்றின் துல்லியம் கவிதைத் திவலைகள்.

மெல்ல எழுந்து உட்கார்ந்தார். கண்ணைத் திறக்கவில்லை. உள்ளங்கைகளைத் தேய்த்து சூடு பண்ணிக் கொண்டார். அப்படியே கண்ணில் வைத்துக் கொண்டார். உள்ளங்கைகளைப் பார்த்துவிட்டு எழுவது அவர் பழக்கம். புகைப்படப் பெட்டிகருப்புத் துணி போட்டு மூடியிருந்தது. வெளியே இருட்டு இன்னும் விலகவில்லை. சாதனங்கள் முடிக்கப் படாத ஓவியம் போல எல்லைக் கோடுகள் மாத்திரமே அடையாளப் பட்டன. மீதியை நாம் யூகிக்கிற அளவில்.

இயற்கையின் இந்த விளையாட்டை ரசித்தார் அவர். ரசனை பொக்கிஷங்களை மனசில் கொண்டுவந்து நிரப்புகிறது. சில ஆனந்த கணங்களில் இரவு தூக்கம் விலக தன்னியல்பாய் முழிப்பு வருவதும் உண்டு. பூஜையறையின் துளசியும் சாம்பிராணியும் கற்பூரமும், சுகந்த வாசனையுடன் அவரை அழைக்கும். அகல்விளக்கின் சிற்றொளியில், வில்லேந்திய ஸ்ரீராமன் விக்கிரகம். பொன் மினுங்கல். அந்த இருளிலும் அவன் புன்னகை அவருக்கு மனசில் தட்டும். ஸ்ரீராமன் ஆளும் இல்லம்.

மௌனமான தம்புரா தானே இயங்க ஆரம்பித்தது போல் அவருள் ‘ரும்ம்’ என்ற அதிர்வு. தம்புராவை எடுத்து வைத்துக்கொண்டு விக்கிரகம் முன் அமர்வார். எத்தனை நேரம் கண்மூடி அப்படியே ஆழ்ந்து கிடப்பாரோ தெரியாது. ‘ரும்ம்’ என்ற சுருதி அறையைச் சுற்றி வரும். மனம் மெல்ல வாசனைப் புகை போல ஸ்வரங்களைக் கிரணவீச்சு வீசும். ஸ்வரங்கள் அடுக்கடுக்காக அறை முழுசும் அசைந்து நெளிந்து ஆடும்.

எப்போது ஸ்வரங்கள் வார்த்தைகளாய் உருமாறின..? அவருக்கே ஆச்சர்யமாய் இருக்கும். இந்தக் கீர்த்தனைகள்… இவையெல்லாம் என்னில் இருந்தா வந்தன… ஸ்ரீராமன் அவனே அருளி என்னை இயக்கிக் கொண்டிருக்கிறான். சொல்லும் அவனே. செயலும் அவனே. கண் பனிக்கப் பனிக்க திரும்ப தம்புராவைக் கீழே வைக்கும் போதுதான் உலகம் மீண்டும் அவர் கண்ணுக்கு, புலன்களுக்கு வரும்.

இசையே அவரது இரத்த நாளங்களில் சலசலத்துப் பாய்கிறதோ என்னவோ? சன்ன சரீரம். உடலே வற்றி ஆனால், கண் மாத்திரம் கங்கு போல் மினுக்கங் காட்டியது. நடையிலேயே கனவுச் சாயல் வந்திருந்தது. உலகே ஆனந்த மயம். ஆனந்தம் தவிர வேறில்லை. ஒருமுறை ஸ்ரீராமர் கோயில் பிராகாரத்தில் அமர்ந்திருந்தார்.

பொழுது இருட்டி சுதாரிக்குமுன் மழை பிடித்துக் கொண்டது. வானுக்கும் பூமிக்குமான அருட் கொடை அல்லவா இது? தலைமேல் கூப்பிய கையுடன் கண்மூடி அப்படியே ஆடினார். தன்னை மறந்த நிலை அது. பிராகாரம் சுற்றி வந்தார். பகவான் ஸ்ரீராமனை மனசில் சித்திரம் போல் தீட்டியபடியே நடந்தார். பிரக்ஞை மீண்டபோது கீர்த்தனை ஒன்று பாடியிருந்தார். பகவான் நினைத்த முகூர்த்த வேளைகளில் நான் விளைகிறேன்… அவருக்கு உடல் சிலிர்த்தது.

அப்படியே சந்நிதியில் மடிந்து வணங்கினார். அதிகாலைகளோடு அவருக்கு நினைவு தெரிந்த நாள் முதலான பரிச்சயம். ஸ்ரீ ராமர் கோயிலைத் தாண்டி தோப்பு வழி இறங்கிச் செல்ல காவேரி. காவேரியில் ஸ்நானம் முடித்து உடல் நடுங்க நடுங்க வாயில் நாம சங்கீர்த்தனம் உருளும். சூரியப் பசு மடியில் இருந்து சிறிது சிறிதாகப் பால் பீய்ச்சும் வைகறை.

விடியலின் ரச்மிகள் நீள பூமியில் பரவ ஆரம்பிக்கும் நேரம் கோயிலில் இருந்து அவர் உஞ்சவிருத்திக்கு கிளம்புவார். தலையில் முண்டாசுக் கட்டு, பின்பக்கமாக, விரிந்த கூந்தலாய் அங்கவஸ்திரப் பதாகை. ஒருகையில் தம்புரா. மறுகையில் சிப்லா. வீதியே நாடகமேடை. தன்னை மறந்த ஆனந்த அசைவுகளில் இசைப்படகு.

மனம் தளும்புகிறது. நாழியாகி விட்டது, என எழுந்துகொண்டார். வாழ்க்கை நியதிப்பட்டிருந்தது. அவரது சிற்றுலகம் ஆழப்பட்டிருந்தது. ஆழப்படுத்திக் கொண்டார் அவர். ராமனைத் தவிர அவருக்குத்தான் என்ன தெரியும்? ஆனால், ஆகா ராமனைத் தெரியுமே, என தேரை நிலை நிறுத்திக் கொண்டிருந்தார். வேறு உலகம் இல்லை.

வேறு உலகம் அவருக்கு துச்சமானது. அவரது சங்கீத ஞானத்தை உணர்ந்து, பாடல் புனையும் ஆற்றலை அறிந்து தனவந்தர் ஒருவர் பெரும் நிதியம் தந்து தன்னைப் பாடச் சொல்லி செய்தி அனுப்பினார்.. மறுத்து விட்டார். அப்பனைப் பாடும் வாயால் சுப்பனைப் பாடுவதா? நிதி சுகம் அல்ல. எது சுகம்? சந்நிதியே சுகம். வெளியே இறங்க தெருவே அமைதியாய்க் கிடந்தது. புல்லில் கொட்டிய பனியை வைரமாய்ப் பொதிந்து பாதுகாத்து வைத்திருக்கிறது இருள் எனும் கம்பளிப்போர்வை.

குதிகாலைக் கூசச் செய்யும் அதிகாலைக் குளிர். வஸ்திரத்தை இழுத்துப் போர்த்திக் கொண்டார். ராமனோடு மனம் ஐக்கியப் பட்டதும் தனிமை உணர்வு இல்லாமல் ஆயிற்று. அவனுக்குப் பணிவிடை செய்கிறாப் போலவும், சிலசமயம் அவனே பணிவிடை செய்கிறாப் போலவும் மனசு விதவிதமாய் யோசிக்க ஆரம்பித்திருந்தது. 

தோப்புப் பாதையாய்க் கிடந்த இடத்தில் முழுசுமாய் இருட்டு. ஒரு குகைக்குழி போல் கண்டது. ஓரத்து மரங்கள் போர்வை போர்த்தி நின்றன. சிறு சரளைக்கற்களை பாதரட்சைகளுக்கு அடியே உறுத்தலாய் உணர்ந்தார். உதடுகள் தாமாக ராம ராம என்று ஜெபித்துக் கொண்டிருந்தன.

தன்னியல்பாகவே அது அவர் அறியாமல்கூட நிகழ்ந்து விடுகிறது. அத்தோடு அன்றைக்குத் தோன்றிய புதிய ராகம் எதோவொனறின் சிற்றலை அவரில் மோத ஆரம்பித்திருந்தது. இந்தக் கோர்வைகள் வேறொரு முகூர்த்த வேளையில் கிருதியென ஜனிக்கும். மௌனத்தையே சுருதியாய்க் கொண்ட அபூர்வ மனசு அது.

படித்துறையில் ஆளே இல்லை. தோப்பைத் தாண்டியதுமே நீரோடும் சலசல என்கிற திகட்டலான ஒலி. அந்த கிசுகிசுப்பே உள்ளங்காலில் கூச வைத்தது. நீர் உலகின் அற்புதம். பகலின் கலவை ஒலிகளில் கேட்கா ஒலிகள் இரவின் அமைதியில் தனி அழகு காட்டுகின்றன. உத்திரியத்தை அவிழ்த்தார். யாரும் இல்லாப் பெருவெளி. நீரின் முதல் ஸ்பரிசத்தை ஓர் ஆர்வத்துடன் எதிர்பார்த்து முதல் படித் தண்ணீரில் கால் வைத்தார். சிலீரென்று அது ஒரு குளிர் அலையை உள்ளே பாய்ச்சியது. அந்த இன்ப லகரியில் நீருக்குள் பாய்ந்தார்.

சரசரவென்ற வெள்ளம். என்ன வேகம். என்ன மூர்க்கம். சுதாரிக்காவிட்டால் ஆளைத் தள்ளிக் கொண்டுபோய் எங்கோ எறிந்து விடும். அதில் தொலைந்து போனவர் அநேகம். இரு கரைகளையும் தழுவி நழுவிக் கொண்டிருந்தது நதி. ஸ்ரீராமனின் கருணைப் பிரவாகம். அப்படியே அதில் மூழ்கி உள்ளேயே தம் பிடித்துக் கிடந்தார்.

தானும் நீருமான உலகு. அந்த நீருக்குள் தானும் கலந்து கரைந்துவிட விரும்பினாப் போல. உலகின் பிரம்மாண்டத்தின் சிறு துளி நான் என்று மமதை அழியும் நேரம் அது. இயற்கை எப்பவுமே எதையாவது குறிப்புணர்த்திக் கொண்டுதான் இருக்கிறது. மனக்காதுகள் தயாராய் இருக்க வேண்டியிருக்கிறது. மூழ்கி சடாரென்று அவர் மேலெழுந்தபோது அவரைச் சுற்றி ஸ்வரங்கள் சிதறினாப் போலிருந்தது.

என்ன ஆனந்தமடா இது. புதிய ஸ்வரக் கோர்வைகள் அவருள் உருண்டு திரள ஆரம்பித்தன. ஆரோகண அவரோகணமாய் அவர் நதியில் மூழ்குவதும் எழுவதுமாய் இருந்தார். நதிநீராடல், நியதிகளுக்கு நல்ல துவக்கத்தைத் தருகின்றன. எழுந்து தன்னுடையதையும், பகவான் ராமனுக்கு இடுப்பில் உடுத்திவிடும் கச்சையையும் அலசிப் பிழிந்து தோளில் போட்டுக்கொண்டார்.

நீரில் இருந்து வெளியேறிய ஜோரில் உடலில் ஒரு வெடவெடப்பு. சிறிது நேரத்தில் இதுவும் பழகி விடும். வாயில் ஸ்வரங்கள் பின்னி ஒரு மாலைபோல் உருவம் திரண்டன. சிறு நடுக்கக் குளிரில் குரல் சிறிது அலைந்தது. ஈர்க்குச்சி வைத்து நீளமாய்த் திருமண் இட்டுக்கொண்டார். ராம ராம. படியேறி மணல் புதையப் புதைய நடை. ஈரமணல் காலில் சிறிது ஒட்டியது.

மண் இறுகிய சரளை மேடு. வீட்டைப் பார்க்க நடந்தார். மனம் பூத்த நேரம் அது... அந்த ஸ்வர அடுக்குகளை மணக்க மணக்க உச்சாடனம் செய்தபடியே வந்தார். வழியில் நந்தவனம் ஒன்றில் நுழைந்து கிடைத்த புஷ்பங்களைக் குடலை ஒன்றில் பறித்துப் போட்டுக் கொண்டபடியே வந்தார். வீட்டின் புழக்கடைத் தோட்டத்தில் துளசி மண்டிக் கிடக்கிறது. போய் அதையும் பறித்துக் கொள்வார்.

துளசியும் புஷ்பங்களுமாய்த் தானே மாலை கட்டி ஸ்ரீராமனுக்கு அணிவிப்பதில் தனி ஆனந்தம். வாயில் புரளும் ஸ்வர ஆவர்த்தனம். அந்த இருளில் சிறு கிளை ஒன்று மரத்தில் இருந்து அட, என தலையாட்டுவதாய்க் கண்டார். புன்னகை செய்து கொண்டார். சில சமயம் ராமனும் கூட அவரது பாடலைக் கேட்டுக்கொண்டே வருகிறாப் போலவெல்லாம் இருக்கும். ‘நனுபாலிம்ப… நடசி வச்சி…’ எனக்காக நடந்து வந்தாயா ராமா… என நெகிழ்வார்.

உலகே மறந்து பசியே மறந்து உஞ்சவிருத்தியில், இதே ஆனந்தத்தில் திளைத்து, ஸ்ரீராம ஸ்மரணையில் இப்படியே காலம் முடிந்து விடாதா என்றிருந்தது அவருக்கு. மௌனத்தை நிரப்பிக் கொள்ளும் மனசு. ஸ்வரங்கள் மௌனத்தை நோக்கி நகர வைக்கின்றன. தூரத்தில் எங்கோ பாட்டுச் சத்தம் கேட்டது.

இந்த இருளில் என்ன இது, என்பது முதல் வியப்பு. இது காலையா இளம் இரவா? கால்கள் தன்னியல்பாக அந்த திசைக்கு நடைபோட்டன. அவர் அறியாத, அவர் கற்பனையே செய்யாத வேறு சாயலில் ஏதோ பாடல். தூரத்தில் கேட்கும் நதியின் ஓசை போல…  அவருக்குப் பரிச்சயமே இல்லாத இடம். பரிச்சயமே இல்லாத மனிதர்கள். நம்ப முடியாமல் எல்லாவற்றையும் அவர் பார்த்து விக்கித்து நின்றார்.

மகா வெளிச்சமாய்க் கிடந்தது அரங்கம். கண்ணே கூசும் வெளிச்சம். செயற்கை சூரியன்கள். திடல் கூட அல்ல. அரங்கம். இத்தனை வெளிச்சத்தை அவர் பார்த்ததே கிடையாது. மேடையில் யாரோ பெண்மணி. மகாராணி போல வீற்றிருந்தாள். மூக்கிலும் காதிலும் கழுத்திலும் ஜ்வலித்தன நகைகள். அலங்காரமும் பாவனைகளும் எடுப்புகளும் அரிதாரப் பூச்சும் அவரை மூச்சுத் திணற வைத்தன.

கீழே ஏராளமான நாற்காலிகளில் ரசிகர்கள். எல்லாருமே மேட்டுக்குடி பெருமக்கள். பட்டும் பகட்டும் பீதம்பரமும் சீரழிந்தன. கச்சேரி நடக்கிறது… இசைக்கு இத்தனை வெளி அலங்காரங்கள் தேவையா, ஸ்வர அலங்காரம் அதுவே போதாதா என்றிருந்தது அவருக்கு. என்ன பாடல், புது மோஸ்தரில் இவள் பாடுகிறாள்… ‘நனு பா லிம்ப… நட சி வச்சி…’ அவர் பாடல்தான்.

இரக்கமும் உருக்கமுமாய் அவர் பகவான் ஸ்ரீராமன் முன்னால் அமர்ந்தபடி, எளிய வஸ்திரம் ஒன்றை விக்கிரகத்துக்குச் சாத்தியபடி நெகிழ்ந்துருகி கசிந்து அளித்த பாடல். இந்த மேடை. இந்த படாடோபம். இந்த வெளிச்சம். இப்படியான பெரிய அரங்கம்… அதற்கானதா இது? திரும்ப இருளில் நடக்க ஆரம்பித்தார். பூக்குடலை கனத்தது. ‘நனுபாலிம்ப…’ அவர் பாடிப் பார்த்தார். அவர் பாடலே அவருக்கு என்னவோ போலிருந்தது.
 

http://kungumam.co.in/

Share this post


Link to post
Share on other sites

May 18 Banner

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this  

May 18 Banner