நவீனன் 9,259 Report post Posted June 17, 2017 கிழவியும் அவள் புருஷனும் - கவிதை கவிதை: கார்த்திக் நேத்தா, ஓவியம்: ஹாசிப்கான் மலை மாடு சாய்வதாய் வெளியில் சரிகிறது இரவு. முதுகில் ஒட்டிய மணல் உதிர்வது போல மழை விழுந்து கொண்டிருந்தது. அந்தி பத்திக் கொண்டு போகும் வெள்ளாட்டங்குட்டியாய் நிலவு. தூரத்துக் குடிசையில் விளக்கு விடும் எச்சில் முட்டையாக சுடர். சுடரின் விரிந்த கூந்தலாக சுற்றிலும் அலையும் இருள். பரதேசம் போன புருசனுக்காக பணியாரம் சுட்டு வைத்து வாசலில் செத்தக் குந்துகிறாள் கம்பூணிக் கிழவி. குளிரில் நடுங்கும் ஆட்டு வால் போல அவள் உதடு எதையோ முணுமுணுத்தது. சாராய கவிச்சியோடு வந்து சேர்கிறான் அவளின் புருஷன். கிண்ணியில் பணியாரம் அடுக்கித் தந்து விட்டு அவனையே பார்த்துக் கிடக்கிறாள் கிழவி. உண்டு முடித்தவுடன் வசவு உரிக்கத் தொடங்குகிறாள். பொறுமையாக கேட்டிருந்து விட்டு அடுப்பந்திட்டில் கிழவிக்கென எடுத்து வைக்கிறான் சுருட்டுகளை அவள் புருஷன் . கொல்லப்பக்கம் சென்று வெளிக்கி இருந்து விட்டு உறங்கிவிட்ட புருஷனை கொஞ்ச நேரம் அசையாது பார்க்கிறாள். துப்பட்டி எடுத்து போத்தி விடுகிறாள். அவன் கால் மாட்டில் அமர்ந்து சுருட்டு வழிக்கத் தொடங்குகிறாள் அமைதியாக. வெடித்து காப்புக் காய்ச்சிய அவன் பாதங்களை புகை விட்டபடி நீவிக் கொடுக்கிறாள். சுருட்டு தீர்வதற்குள் வாழ்ந்து விட்டு வந்து விடுகிறாள் புருஷனுடனான எழுபது வருஷ வாழ்வை கம்பூணிக் கிழவி. http://www.vikatan.com/anandavikatan/ 2 Share this post Link to post Share on other sites