Sign in to follow this  
நவீனன்

கூடுதலாக இரண்டு சப்பாத்தியை உள்ளே தள்ள வைக்கும் ‘கிரீன் தால் கார்லிக் பனீர் கிரேவி’!

Recommended Posts

கூடுதலாக இரண்டு சப்பாத்தியை உள்ளே தள்ள வைக்கும் ‘கிரீன் தால் கார்லிக் பனீர் கிரேவி’!

green_dhal_garlic_paneer

 

இல்லத்தரசிகளின் அன்றாடக் கவலைகளில் தலையாயது... இன்று என்ன சமையல் என்பதில் இருந்து  தொடங்குகிறது. காலையில் இட்லி, தோசை, மதியம் மீல்ஸ்,  இரவுக்குச் சப்பாத்தி என்பது பல வீடுகளில் இன்றைக்கு ரொட்டீன் மெனு.  இவற்றில் ஐட்டங்கள் மாறுமே தவிர மெனு அப்படியே தான் இருக்கும். இந்த மெனுவிலும் கூட இட்லி, தோசை, சப்பாத்தி, மீல்ஸ் வரை எந்தக் குழப்பமும் இல்லை. ஆனால் அவற்றுக்கு தொட்டுக் கொள்ள என்ன சமைப்பது என்பது தான் பல நேரங்களில்  மிகப்பெரிய குழப்பமாகி விடும். 

பெரும்பாலும் நமது தென்னிந்திய வீடுகளில் இட்லி, தோசை என்றால் சாம்பார், சட்னி வகைகள், சப்பாத்தி என்றால் உருளைக் கிழங்கு குருமா, நவரத்ன குருமா, காளான் கிரேவி, பனீர் கிரேவி என்று வழக்கமாக ஒரே விதமான கிரேவிகளை மட்டுமே செய்து கொண்டிருப்போம். சில நேரங்களில் அந்த மெனுவை நினைக்கும் போது நமக்கு போர் அடிக்கத் தொடங்கி விடும். இதைத் தவிர்க்க நாமே புதிதாகவும், சத்தாகவும் ஏதாவது புது ரெசிப்பி கண்டுபிடித்தால் என்ன என்று தோன்றியதின் பலன் தான் இந்த ரெசிப்பி. குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள் என்பதோடு இது மிக மிக சத்தான கிரேவியும் கூட! இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி, பூரி எனப் பல ஐட்டங்களை இதைத் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்:

 • பாசிப் பயறு: 1 கப்
 • தக்காளி- 2 (பெரியது)
 • சின்ன வெங்காயம்: 8 (பொடியாக நறுக்கவும்)
 • பனீர்: 1/2 பாக்கெட் (கியூப்களாக நறுக்கிக் கொள்ளவும்)
 • சோம்பு: 1/2 டீஸ்பூன்
 • மிளகு: 1 டீஸ்பூன்
 • முந்திரிப்பருப்பு: 4
 • புதினா: 1 கைப்பிடி
 • இஞ்சி: 1 சி. துண்டு
 • பூண்டு: 6 பல்
 • கொத்தமல்லி தளை: கொஞ்சம்
 • மஞ்சள் தூள்: 1/2 டீஸ்பூன்
 • கரம் மசாலத்தூள்: 1 டீஸ்பூன்
 • உப்பு: தேவையான அளவு
 • கடுகு, உளுந்தம் பருப்பு: 1/2 டீஸ்பூன்
 • நெய்: 2 டீஸ்பூன்
 • கறிவேப்பிலை: 1 ஆர்க்

அரைக்க:

மேலே சொன்னவற்றில் இஞ்சி, 4 பூண்டுப் பற்கள், ஒரு கைப்பிடி புதினா, மிளகு, சோம்பு, தக்காளி, எல்லாவற்றையும் போட்டு நன்கு அரைத்து எடுத்து தனியாக வைக்கவும்.

செய்முறை: 

ஒரு கப் பாசிப்பயிறை எடுத்துக் கொண்டு அதை நீரில் நன்கு கழுவவும். கழுவிய பாசிப்பயிறை குக்கருக்கு மாற்றி விட்டு, ஒரு கப் பாசிப்பயிறுக்கு 2 கப் தண்ணீர் ஊற்றி 5 விசில் வரும் வரை வேக விடவும். வேக வைக்கும் போது உப்பு சேர்க்கத்தேவை இல்லை. பாசிப்பயிறு வெந்து இறக்கியதும் அதில் உள்ள தண்ணீரைக் கீழே கொட்டி வீணாக்கத் தேவையில்லை. அதை அப்படியே தேவையான அளவுக்கு கடைசியில் கிரேவியில் கலந்து கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ளலாம். பயிறு வெந்த தண்ணீர் என்பதால் இதனால் கிரேவிக்குக் கூடுதல் சுவை கிடைக்கும்.

வெந்த பாசிப்பயிறை இறக்கி வைத்து விட்டு, இப்போது அடுப்பில் வாணலியை ஏற்றி 1 ஸ்பூன் நெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளித்து விட்டு பொடியாக நறுக்கிய  சின்னவெங்காயத்தைப் போட்டு வதக்கவும்,  வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதனுடன் மேலே அரைத்து வைத்த கலவையைச் சேர்த்து கொஞ்சமாக பயிறு வடித்த தண்ணீரையும் ஊற்றி நன்றாகக் கிளறி விடவும். இந்தக் கலவை ஒரு கொதி வந்ததும் அதனுடன் வெந்த பாசிப்பயிறைச் சேர்த்து நாசூக்காக கிளறவும் ஏனெனில் பாசிப்பயிறு குழைந்து விடக் கூடாது. அரைத்த மசாலாக் கலவை பாசிப்யிறுடன் கலந்ததும் எடுத்து வைத்துள்ள மஞ்சள் தூள், கரம் மசாலாத் தூள் உள்ளிட்ட ஐட்டங்களைச் சேர்க்கலாம். மசாலாக் கலவை, பாசிப்பயிறுடன் நன்றாகக் கலந்ததும், இப்போது தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு பனீர் கியூப்களை கிரேவியின் மேற்பகுதியில் ஒவ்வொன்றாக உடைந்து விடாமல் கவனமாகச் சேர்க்கவும். கியூப்களுடன் மசாலா ஒட்டும் அளவுக்கு மிக நாசூக்காக கரண்டியால் கிரேவியை அடியிலிருந்து மேலாக  ஓரிரு முறை மெல்லப் புரட்டி விட்டால் உப்பும், மசாலாக்கலவையில் பனீரில் நன்கு கலந்து விடும். பனீரைப் போட்டுக் கிளறி ஓரிரு கொதி வந்ததும் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து அப்படியே அடுப்பை அணைத்து  வாணலியை கீழிறக்கி கொத்தமல்லித் தளை கிள்ளிப் போட்டு அலங்கரித்து பரிமாறலாம்.  சுவையும், மணமுமாக இந்தக் கிரேவி கூடுதலாக இரண்டு சப்பாத்திகளை உண்ணும் ஆசையைத் தூண்டக் கூடியது.

நிஜமா? இல்லையா? என்பதை சமைத்து சாப்பிட்டு விட்டுச் சொல்லலாம்.

http://www.dinamani.com

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this