Jump to content

தாய்லாந்து பயணம்


Recommended Posts

சுவர்ணபூமி விமான நிலையம் – தாய்லாந்து பயணம்

 

suvarnabhumi-airport

விடியற்காலை மூன்று முப்பது மணிக்கு பாங்காக் “சுவர்ண பூமி” விமான நிலையத்தை வந்தடைந்தோம். என்னது… “சுவர்ண பூமியா”?!!!  தமிழ் பெயர் மாதிரி இருக்கே. உங்க மைன்ட் வாய்ஸ் எனக்கு புரியுது.   “ஸ்வர்ண பூமி”  என்றால் “தாய்” மொழியில் தங்க நிலம், தங்க நாடு  என்று அர்த்தமாம்.  அது சம்ஸ்கிருத வார்த்தை எனினும், அந்த கணத்திலேயே  அந்த “தாய் மொழி”க்கும்,  நம் “தாய்” மொழிக்கும்  உள்ள ஒற்றுமைகள்  ஒவ்வொன்றாக புலப்பட ஆரமித்தது. அந்த விமான நிலையத்தில்  கீழே இறங்கி கால் வைத்ததுமே ஏதோ ஒரு புது உலகத்தில் நுழையவிருக்கிறோம் என்று அதன் பிரமாண்டம் பறைசாற்றியது.

உலகின் மிகவும் பிசியான விமான நிலையத்தில் ஒன்றான இது உண்மையிலேயே மிகவும் பிரமிக்கவைக்கும் உட்கட்டமைப்பை கொண்டிருந்தது. ஒவ்வொரு நிமிடமும் உலகின் அனைத்து மூலைகளில் இருந்தும் அங்கு விமானம் வந்து இறங்கிக்கொண்டு இருந்தது. அடுத்து இமிக்ரேஷன் பிரிவுக்கு நுழைந்தோம். இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் அங்கு சென்று இறங்கியதும் விசா வாங்கிக்கொள்ளும் “ஆன் அரைவல்” விசா வசதி இருந்தது. அது முன்னமே தெரிந்திருந்தும் நாங்கள் ஏற்கனவே இந்தியாவில் விசா ஸ்டாம்ப் செய்துவிட்டே புறப்பட்டு இருந்தோம். இதற்கே ஒவ்வொருவருக்கும்  ஐநூறு ரூபாய்க்கு மேல் அதிகம் செலவாகி இருந்தது.  இதை ஒரு முன்னெச்சரிக்கைக்காக செய்திருந்தோம்..

suvarnabumi airport immigration check

புறப்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர், நாங்கள் விமான டிக்கெட் பதிவு செய்ய முடிவெடுத்த ஒரு நாளில் திடிரென அந்த செய்தியை படிக்க நேர்ந்தது. அதாவது தாய்லாந்தில் உள்ள கிளர்ச்சியாளர்கள், பாங்காக் நகரத்தில் அன்று தொடர் குண்டு வெடிப்பு நிகழ்த்தி பெருத்த சேதத்தை, உயிர் இழப்பை ஏற்படுத்தி இருந்தனர். இன்றும் கூட தாய்லாந்து முழுவதும், அதுவும் குறிப்பாக பாங்காக் நகரம் கிளர்சியார்களின் அச்சுறுத்தலுக்கு உட்பட்டே இருக்கிறது. எப்பொழுது வேண்டுமானாலும் புரட்சி வெடிக்கலாம், அபாயமணி அடிக்கப்படலாம் என்ற சூழ்நிலை. ஒருமுறை சுவர்ணபூமி விமான நிலையத்தின் இயக்கத்தை கூட ஸ்தம்பிக்க வைத்ததாக அப்போது படித்ததாய்  நியாபகம்.

அதுவரை அமைதி நிலவரம் தெரிந்த அந்த நாட்டில், நாங்கள் செல்ல முடிவெடுத்த தருவாயில் தோன்றிய அந்த அச்சுறுத்தல் காரணமாக எங்களுடன் வரவிருந்த ஒரு நண்பன் திடீரென பின்வாங்கினான். மரணம் தான் விதியெனில் அது நம்மூரில் கூட நிகழ்ந்துவிடும், அங்கு சென்று தான் இறக்கவேண்டும் என்பதில்லை என்ற என் தத்துவம் அவன் உயிர் பயத்தின் முன் எடுபடவில்லை. கடைசியில் அவனை விட்டு விட்டே டிக்கெட் பதிவு செய்தோம். அந்த சமயம் முதல்  தாய்லாந்தில் நடைபெறும் முக்கிய விஷயங்களை கூர்ந்து கவனித்துக்கொண்டு இருந்தேன். .

praveen in suvarnabumi airport

அங்கு சென்று விசா எடுக்கும் சட்டதிட்டங்கள் மாற்றப்படுவதாக ஆலோசனை நடைபெறுகிறதென  ஒரு நாள் செய்தி வந்தது. அதுமட்டும் இல்லாமல் அங்கு சென்று விசா எடுக்கும் போது குறைந்த பட்சம் இருபதினாயிரம் தாய் பாத் (தாய்லாந்து கரன்சி) கையில் இருக்க வேண்டும் அல்லது ஐநூறு அமெரிக்க டாலர் இருப்பதாய் பாஸ்போர்ட்டில் பதிவித்திருக்க வேண்டும். அங்கு சென்று இறங்கியதும், நாங்கள் எடுத்து செல்லும் டாக்குமென்ட்டிலோ, மற்ற விஷயங்கலிலோ  ஏதேனும் குளறுபடி ஏற்பட்டால் விசா ஸ்டாம்ப் ஆகாது. உடனடியாக அடுத்த ப்ளைட்டில் திரும்ப வேண்டியது தான். அது மட்டுமல்லாமல் பிசியான நேரங்களில் இரண்டு முதல் நான்கு மணி நேரம் வரை விசாவிற்காக வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கும். எதற்கு வம்பென்று புறப்படும் முன் இந்தியாவிலே விசா குத்தியாயிற்று!

இமிக்ரேஷன் பகுதியில் வரிசையில் நின்று செல்கிறேன். என்னுடைய பாஸ்போர்ட்டை ஆராய்ந்த ஒரு ஆபிசர் என்னையும் என் பாஸ்போர்ட்டில் உள்ள புகைப்படத்தையும் மாற்றி மாற்றி சில முறை பார்த்தார்.  அவர் கண்களில் ஒரு டெரர் தெரிந்தது. அடிக்கடி நான் கெட்டப் மாற்றுவதில் உள்ள சிக்கல் தான் அது என்று நினைக்கிறேன். மறுபடியும் என்னையும் அவர் கணினியையும் மாற்றி மாற்றி பார்த்தார். சரி அடுத்த ப்ளைட்டில் சென்னை கிளம்ப சொல்ல போகிறாரா,  இல்லை அவர் பார்வையே அப்படி தானா என்று நான் யோசித்துகொண்டிருக்கும் போதே அங்கிருந்த காமிரா என்னை பார்த்து கண்ணடித்தது. தாய்லாந்தில் நுழையும் ஒவ்வொருவரின் முகமும் பதிவு செய்யப்பட்ட பிறகே அங்கே அனுமதிக்கப்படுகின்றனர்.

praveen in suvarnabumi airport

ஒரு வழியாய் அனைத்தும் சரி பார்க்கப்பட்டு  போகலாம் என்று சொன்னார்.  இமிக்ரேஷன் பார்மாலிட்டி முடித்து, லக்கேஜை கலெக்ட் செய்துக்கொண்டோம். கிலோ மீட்டர் கணக்கில் நீண்டு இருப்பது போல் நடக்க நடக்க முடிவில்லாமல் போய் கொண்டிருந்தது அந்த அரைவல் டெர்மினல். அந்த விடியற்காலையில் கூட  நிறைய ஐரோப்பியர்கள் வந்து இறங்கிக்கொண்டு  இருந்தனர். எங்கு நோக்கிலும் வெள்ளைத்தோல் மனிதர்கள். சீலை, சுடிதார், தாவணிகள் முற்றிலும்  மறைந்து இப்போது வெறும் அரைக்கால் சட்டையும், அரைகுறை ஜீன்ஸ், டீ-சர்ட்டு மட்டுமே தென்பட அரமித்தது.  அதை மீறி கருப்பாய் ஏதேனும் மனிதஉருவம் தென்பட்டால் அது அவர்களுடைய நிழலாக இருக்கும் அல்லது ஏதேனும் முகம் பார்க்கும் கண்ணாடியாக இருந்திருக்கும். அந்நிய தேசத்தில் நுழைந்ததற்கான முதல் அறிகுறி அது.

முதல் வேலையாய் கையில் இருக்கும் டாலரை, தாய்லாந்து கரன்சியாக மாற்ற வேண்டும். நாங்கள் புறப்படும் போது, நம் இந்திய பணத்தை அமெரிக்க டாலராய் தான் மாற்றி எடுத்துப்போய் இருந்தோம். அங்கு இறங்கியவுடன் செலவு செய்வதற்கு போதிய அளவில் தாய்லாந்து பணம் கையில் இல்லை. தாய்லாந்து கரன்சி இந்தியாவில் சரியான ரேட்டில் கிடைப்பது போல் தெரியவில்லை. அதாவது நம் இந்திய ரூபாய்க்கு இரண்டு ரூபாய் கொடுத்தால் தான் ஒரு தாய்லாந்து ரூபாய் இங்கே கொடுக்கிறார்கள். ஆனால் 1.75 ரூபாய்க்கே (Approx) ஒரு தாய்லாந்து பாத் நமக்கு வர வேண்டும். அப்போ பல ஆயிரம் ரூபாய் இங்கேயே மாற்றினால் நமக்கு எவ்வளோ இழப்பு ஏற்படும்?

ஏர்போர்ட்டிலேயே பல வங்கிகள் கரன்சியை மாற்றும் சேவை செய்துக்கொண்டு இருந்தனர். ஒவ்வொரு முக்கிய கரன்சிக்கான விலையும் அவர்களது கவுண்டரில் டிஜிட்டல் போர்டில் காட்டிக்கொண்டு இருந்தது. ஆனால் டாலருக்கு நாங்கள் எதிர்பார்த்ததை விட  சுமார் மூன்று தாய் பாத் வரை குறைவாகவே காணப்பட்டது. நீண்ட தூரம் நடந்தோம். அனைத்து கரன்ஸி எக்ஸ்சேஞ் கவுண்டரையும் பார்வையிட்டோம். அதே விலை தான். ஒரு சிறிய தொகையை, அன்றைய ஒரு நாள் செலவிற்கு ஆகும் அளவுக்கு மட்டும் அப்போது மாற்றுவதாய் முடிவு செய்யப்பட்டது. அது உண்மையிலே அருமையான முடிவு என்று பிறகு உணர்தோம். விமான நிலையத்தில் பணம் மாற்றினால் நமக்கு பெருத்த நட்டமே. அதை பற்றி பிறகு பேசுகிறேன்.

praveen in suvarnabumi airport

அடுத்து மொபைல் கனக்சென். எனக்கு கால் கட்டணத்தை விட, 3G கவரேஜ் மற்றும் டேட்டா தான் முக்கியம். இணையத்தில் மிகக்குறைந்த கட்டணத்தில் பேச யுக்திகள் இருக்க, எதற்கு ஐ.எஸ்.டி போட்டு அதிக கட்டணத்தில் இந்தியாவிற்கு அழைக்க வேண்டும்? எந்த மொபைல் நிறுவனம் அங்கே சிறந்த சேவை வழங்குகிறது, அதுவும் குறிப்பாக நாங்கள் செல்லும் அனைத்து பகுதிகளுக்கு கவரேஜ் இருக்கிறதா, 3G இருக்கிறதா என ஏற்கனவே இணையத்தில் ஆராயப்பட்டு முடிவு செய்தாயிற்று. சிம் கார்ட் வாங்குவது மட்டும் தான் பாக்கி. நண்பர் ஒருவர் கரன்ஸி மாற்றும் வேலையை கவனிக்க, நான் A.I.S மொபைல் சேவை வழங்கும் நிறுவனத்தின் கவுண்டரை நோக்கி செல்ல ஆரம்பித்தேன். இரண்டு அழகிய இளம்பெண்கள் என்னை வரவேற்க புன்னகையுடன் தயாரானார்கள்.

அருகே சென்றதும், “சுவாதி காம்” என்று என்று நீட்டி முழக்கி அவர்கள் என்னை நோக்கி கூறியது ஏதோ ராகத்தில் பாடுவது போல் இருந்தது. அவர்கள் மொழியில் அதற்கு அர்த்தம்  “காலை வணக்கம்”. தாய் மொழியின் முக்கிய வார்த்தைகளை உச்சரித்துக்காட்டி, கூடவே  அதன் ஆங்கில அர்த்தத்தை விளக்கும் சில ஆன்டிராயிட் மென்பொருள்களை என் மொபைல் போனில் தரவிறக்கி வைத்திருந்தேன். சிலது ஞாபகமும் இருந்தது. இசையை கேட்பது போல் மிகவும் லயமான மொழி அது. அவர்கள் பேசக்கேட்க மிகவும் இனிமையாக இருந்தது. ஒரு பாஸ்போர்ட் நகல், கொஞ்சம் பணம், நிறைய மொழி பரிவர்த்தனைகள்  – ப்ரீ ஆக்டிவேட்டட்  சிம் கார்ட் ரெடி.

இப்போது பாங்காக் வானம் விடிந்துக்கொண்டிருந்தது. ஆனால் நாங்கள் வெளியே செல்லப்போவதில்லை. அடுத்த ஒரு மணிநேரத்தில், சுமார் ஏழு மணிக்கு அங்கிருந்து இன்னொரு விமானத்தின் மூலம் புக்கெட் தீவு செல்லவிருக்கிறோம். நான் மிகவும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த அந்த கணங்கள். இயற்கை அன்னையின் மடியில் தவழக்கூடிய அந்த நொடிகள். அங்குதான் நிகழப்போகிறது. புக்கட் தீவே.. இதோ வருகிறேன்… உன்னை தேடி ஆயிரம் மயில்களுக்கு அப்பால் இருந்து வருகிறேன். இப்படி கண்களை மூடி கனவு கண்டுகொண்டிருக்கையில், திடிரென நான் படித்த அந்த எச்சரிக்கை செய்தி என் மனதில் பளிச்சென்று வந்து போனது.  உள்ளுக்குள் மெல்ல பயம் படர ஆரம்பித்தது. கிளர்சியார்களின் பிரச்சனை போல்  எங்களுக்கு இன்னொரு பிரச்சனைக்கான அறிகுறி அங்கு காத்திருந்தது. அது ஏற்கனவே இதற்கு முன்னர் பல உயிர்களை அந்த தீவுகளில்  காவு வாங்கியுள்ளது .அதுதான் சுனாமி.

– பயணம் தொடரும்

http://www.cpraveen.com/suvadugal/suvarnabhumi-airport-bangkok-thailand-trip-2/

 

 

புக்கெட் தீவு – தாய்லாந்து பயணம்

Phuket Airport Landing

விமானம் பாங்காக்கை விட்டு கிளம்பிய சில நிமிடங்களில் கடலும், தீவுகளும் தென்பட ஆரம்பித்தது. நான் புகைப்படங்கள் எடுப்பதற்காகவே ஜன்னல் இருக்கையை தேர்வு செய்திருந்தேன். பெரிய  பெரிய கப்பல்களும், ஸ்பீட் போட்டுகளும், மீன் பிடி படகுகளும்  கொத்துக்கொத்தாய் நகர்ந்துக்கொண்டு இருந்ததை மேலே இருந்து காண முடிந்தது. அவைகள் நீலக்கடலை கிழித்துக்கொண்டு ஒரு வெண்ணிற கோட்டை தன் பின்னால் வால் போல் ஏற்படுத்தி நகர்ந்துக்கொண்டிருந்தது. கடலில் மிதக்கும் மிகப்பெரிய மலை  போன்ற தீவுகள் தாய்லாந்தின் தென்பகுதிகளில் அதுவும் குறிப்பாக புக்கட் பகுதிகளில் அதிகம்.  புக்கெட்டும் ஒரு தீவு தான். ஆனால் கொஞ்சம் பெரிய தீவு. கிட்டத்தட்ட சிங்கப்பூர் அளவு.  இரு பாலத்தின் மூலமாக அது தாய்லாந்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

மிகவும் பச்சை பசேலென்ற குட்டி குட்டி தீவுகள் மெல்ல தென்பட ஆரம்பித்ததும் புக்கெட்டை நெருங்கி விட்டோம் என்று உணர முடிந்தது. புக்கெட் விமான நிலையமானது புக்கெட் தீவின் வட பகுதியில் கடற்கரையை ஒட்டி இருக்கிறது. விமானம் கீழே நெருங்க நெருங்க அனைத்தும் கண்கொள்ளாகாட்சி. அப்படி ஒரு ரம்யமான சூழ்நிலைகளை ரசித்தவாறு  லேண்டிங் ஆகும் பாக்கியம் உலகில் புக்கெட் விமான நிலையத்தை தவிர வேறெங்கும் காணக்கிடைக்காதென நினைக்கிறேன்.

Phuket Island

Phuket Island

Phuket Island

முதலில் தாய் மொழியில் தொடங்கி பிறகு  ஆங்கிலத்தில் அறிவிப்பு ஆரம்பம் ஆக விமானத்தை விட்டு இறங்கினோம். அப்படி ஒன்றும் பெரிய அளவிலான விமானம் நிலையம் அல்ல அது. இருப்பினும் தாய்லாந்தில் பிசியாக இருக்கும் விமானநிலையங்களில் இரண்டாம் இடம் இதற்கு உண்டு. தாய்லாந்தின் சீதோஷ்ணநிலை அப்படியே நம்முடைய தென்இந்தியாவைப் போல் தான். அதே காலக்கட்டங்கள் தான். ஆகவே அதை எதிர்கொள்வதற்கு  நமக்கு எதுவும் பிரத்தோயோக ஏற்பாடு ஏதும் தேவையில்லை. தாய்லாந்தில் இறங்கியவுடன்  நாங்கள் செய்த முதல் வேலை எங்களுடைய மொபைல், வாட்ச் போன்றவைகளில் ஒன்னரை மணி நேரம் கூடுதலாக்கிகொண்டோம்.

என்னுடைய தாய்லாந்து எண்ணில் இருந்து எங்களுடைய டூர் இன்சார்ஜிற்கு போன் செய்தோம். வெளியே டிரைவர் என்னுடைய பெயர் பலகையை பிடித்தவாறு நின்று கொண்டிருப்பதாய் சொன்னார். அவர் சொன்னபடியே ஒருவர் நின்றுக்கொண்டிருந்தார். என்னை அறிமுகம் செய்துக்கொண்டேன். ஆனால் அவருக்கு ஆங்கிலம் தெரியவில்லை. நான் என்ன சொன்னாலும் அவருக்கு புரியவில்லை. போச்சுடா எப்படி இன்னும் ஒருவாரம் இந்த தாய்லாந்தில் சமாளிக்கபோகிறோம் என்று தோன்றியது.
ஆனால் நடந்தது வேறு. அவரிடம் என்ன பேசினாலும், கேட்டாலும் டூர் இன்சார்ஜிற்கு போன் செய்து நம்மிடம் கொடுத்து விடுவார். நான் அவரிடம் ஆங்கிலத்தில் பேச அவர் மீண்டும் இவரிடம் அவர்களின் தாய் மொழியில் விவரித்து விடுவார்.

தாய்லாந்தில் இந்த டூர் ஏஜெண்டுகளின் நெட்வொர்க் மிகவும் ஆச்சர்யமானது.  ஆரம்பத்தில் எங்களுக்கு ஒரு பயம் இருந்தது.  நாங்கள் தங்கும் எழு நாட்களிலும் ஏதாவது ஒரு கட்டத்தில் அவர்கள் சொதப்பினாலும் அது எங்களுக்கு பெரிய சிக்கல் ஆகிவிடும். உதாரணத்திற்கு இரவு எட்டு மணிக்கு எங்களை ஹோட்டலில் இருந்து ஏர் போர்ட் கூட்டிச்செல்ல வேண்டும். எழு மணிக்கு தான் அன்றைய சுற்றுலாவை முடித்துவிட்டு ஹோட்டலுக்கு வருவோம் . ஒருவேளை எட்டு மணிக்கு எங்களை கூட்டிப்போக யாரும் வரவில்லையென்றால் விமானத்தை மிஸ் பண்ணிவிடுவோம். பிளான் மொத்தமாய் சொதப்பல் ஆகிவிடும். அவ்வளவு சுகுராக இருந்தது எங்கள் நேரக் கணக்குகள்.  அதன் பிறகு  யாரை போய் கேட்பது?

ஆனால் அங்கிருந்த ஒருவாரமும் சொன்ன நேரத்திற்கு, சொன்ன இடத்திற்கு எங்களை கூடிச்செல்ல வாகனம் வரும். யார் வருவார்கள், என்ன வாகனம், எதுவும் தெரியாது. ஆனால் அதுபாட்டுக்கும் தானாகவே நடந்துக்கொண்டு இருந்தது.  அப்போ அப்போ புதுப்புது நம்பர்களில் இருந்து கால் வரும். பிளான் கன்பார்ம் செய்வார்கள். நாங்கள் மறந்துவிட்டாலும், எத்தனை மணிக்கு  நாங்கள் எங்கிருக்க வேண்டும், என்ன செய்யவேண்டும் என்று அவர்கள் தெளிவாக இருந்தார்கள்.  ஏதும் மாற்றம் என்றால் டூர் இன்சார்ஜ் நம்பர் ஒன்று இருக்கும். அவருக்கு தெரிவித்துவிட்டால் போதும். அதனால் தான்  சுற்றுலா தொழிலில் அவர்கள் மிகவும் கொலோச்சுகிறார்கள். தாய்லாந்தின்  முக்கிய வருமானமாக திகழ்வதே சுற்றுலா தான்.

நாங்கள் மொத்தம் மூன்று நாட்கள் புக்கட்டில் தங்குவதாக திட்டம்.. புக்கெட் தீவின் தென்மேற்கில் உள்ள “பட்டாங்” (Patong) என்ற கடற்கரை நகரத்தை தங்குவதற்கு தேர்வு செய்திருந்தோம். புக்கெட் விமான நிலையத்தில் இருந்து சரியாக 35 கிலோமீட்டர்.  தாய்லாந்தில் அனைத்து இடங்களிலும் எங்களை பிக்கப் செய்துக்கொள்ளும் வாகனங்கள் அநேகமாக டோயடோ (Toyato) வேனாகவே இருந்தது.  இப்போதும் அதில் தான் பயணித்தோம். தாய்லாந்தில் இறங்கி முதன் முதலாக அந்நாட்டின் உள்ளே நுழைகிறோம். அந்த தீவை பற்றி, உணவை பற்றி, சுற்றுலா தளங்கள் பற்றி இப்படி நிறைய விஷயங்கள் அந்த ஊர்காரனிடம் பேச ஆர்வம். ஆனால் எங்களுடன் பயணித்த ட்ரைவருக்கு  ஆங்கிலம் புரியவில்லை. அதனால் வெறுமனே ஜன்னலில் வேடிக்கை பார்த்தவாறே பயணித்தோம்.

Phuket Island, Thailand

Phuket Island, Thailand

சாலை அகலமாக, சீராக, சுத்தமாக இருந்தது. வீடுகள், மனிதர்கள், கடைகள், கட்டடங்கள் என்று  அந்நிய தேசத்தில் இருப்பதற்கான அறிகுறிகள் மெல்ல தென்பட ஆரம்பித்தன.  யோசித்து பாருங்கள். சென்னையில் விமானத்தில் ஏறினோம். வெறும் மூன்று மணி நேர பயணம். இப்போது  இருப்பதோ நம்மில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு உலகத்தில். சுவாரசியங்கள் ஆரம்பம் ஆயின. இங்கே பல இருசக்கர  வாகனங்கள் இன்னொரு உட்கார்ந்து செல்லும் ஒரு எக்ஸ்ட்ரா இருசக்கரம் போன்ற ஒன்றுடன் (!) இணைக்கப்பட்டுள்ளது. அதன் மேலே நிழலிற்கு குடை போன்ற ஒரு செட்டப் செய்து கிட்டத்தட்ட அதை நான்கு சக்கர வாகனமாகவே மாற்றி இருந்தனர்.  நான் பார்த்த வரையில்  இருசக்கர வாகனத்தில் பின்னால் உட்கார்ந்து வருபவர் கூட கட்டாயம் ஹெல்மட் அணிந்து இருந்தனர். நம்ம ஊரில் ஓட்டுபவர் ஹெல்மெட் அணிந்திருந்தால் போதும். பின்னால் உட்கார்ந்து இருப்பவர் எக்கேடு கெட்டுப்போனாலும் இங்கே சட்டத்திற்கு கவலை இல்லை.

இப்படி காண்பதை மட்டுமே வைத்து யோசித்துக்கொண்டும், பேசிக்கொண்டும் போய்க்கொண்டு இருந்தோம்.  திடீரென வழியில் ஒரு அழகிய பெண் டூரிஸ்ட் கைட் எங்கள் வண்டியில் முன்பக்கத்தில் ஏறிக்கொண்டார்.  சிறு அறிமுகத்தில் அவர் ஆங்கிலம் நன்றாக பேசக்கூடியவர் என்று தெரிந்தது. ஆனால் அவருடைய உச்சரிப்பில் அவர்களுடைய தாய் மொழியின் பாதிப்பு இருந்தது. நல்ல வேலை இவராவது பேச்சுதுணைக்கு வந்தார் என்று எங்களில் அனைவரும் அவருடன் பேச ஆரம்பித்தோம்.  எங்களுடைய பல கேள்விகளுக்கு அவர் பொறுமையாய் பதில் அளித்தார்.  எங்கள் கேள்விகள் நின்றபாடில்லை. மாற்றி மாற்றி  கேள்விகள் கேட்க்க. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த  அவர் எங்களுக்கு டூரிஸ்ட்  கைடாய் வருபவர் நிச்சயம் பாவம் என்று சொல்லி, நொந்துக்கொண்டு வழியிலேயே இறங்கினார். பிறகு தான் எங்களுக்கு விஷயம் புரிந்தது. அன்று பணி முடிந்து வீட்டிற்கு அவர் திரும்பியிருக்கிறார் போலும். நாங்கள் சென்ற அந்த வாகனம் அவர் வேலை செய்யும் சுற்றுலா கம்பனியின வண்டி என்பதால்  தன்னுடைய வீடு வரை செல்வதற்காக ஏறி இருக்கிறார். அது தெரியாமல் அவர் தான் எங்கள் டூரிஸ்ட் கைட் என்று நினைத்துவிட்டோம்.

ஹோட்டல் ரூமிற்கு சென்று குளித்து ரெடியாகிக்கொண்டிருந்தோம். மதியம் இருக்கும். இன்டர்காமில் போன். ட்ரைவர் இப்போது ஹோட்டல் ரிசப்சனிஸ்டை தன் மொழி பெயர்ப்பாளர் ஆக்கி இருந்தார். சொன்ன நேரத்திற்கு கீழே வேன் வந்து நின்று இருந்தது.  அரை நாள் தான் அன்று மீதம் இருந்ததால் முன்பே  “அரை நாள் புக்கெட் டூர் “ஏற்பாடு செய்து இருந்தோம்.

Karon View Point, Phuket

Karon View Point, Phuket

முதலில் கரோன் வியூ பாய்ன்ட் (Karon View Point ) சென்றோம். புக்கெட் சுற்றுலாவாசிகள் அனைவரும் கண்டிப்பாக வந்து பார்க்கும் இடம் இது. அங்கிருந்து தூரத்தில் தெரியும் மூன்று கடற்கரைகளும், தீவுகளும்  பார்க்க அருமையாக இருக்கும். புக்கெட் தீவில் அதிகம் புகைப்படம் எடுக்கபட்ட பகுதி இது. என்னுடய டிஜிட்டல் காமாராவில் அந்த கடற்கரையை ஜூம் செய்து வீடியோ எடுத்தேன். கண்ணுக்கு தெரியாத தொலைவில் ஒரு இளம் ஜோடி தங்கள் குழந்தையை கைப்பிடித்து கடற்கரை மணலில் நடந்துசென்றது அதில் தெளிவாக பதிவானது.

புக்கட் ஷூட்டிங் ரேஞ்ச் (Phuket Shooting Range) சென்றோம். அங்கே வெளியே ஒரு விநாயகர் சிலையும் இருந்தது. இதை கேட்டதும் ஊட்டி ஷூட்டிங் ஸ்பாட் போல் எதோ சினிமா படம் ஷூட்டிங் எடுக்கும் இடம் என்று கற்பனை செய்ய வேண்டாம். விதவிதமான துப்பாக்கிகள், பல வகையான தோட்டாக்கள் இங்கு கிடைக்கும். அனைத்தும் நிஜத்துப்பாக்கிகள், நிஜத்தோட்டக்கள்.  வேண்டிய துப்பாக்கியை வாடகைக்கு எடுத்து, ஒரு பயிற்சியாளரை வைத்து தூரத்தில் இருக்கும் ஒரு வட்ட  கலர் பலகையை சுட்டுப்பழகலாம். நிறைய போலிஸ் தமிழ் படங்களில் இதை பார்த்து இருப்போம். (இதை துப்பாக்கி சுடும் நிலையம் என்று சொல்லலாமா?) எனக்கு அதில் சுத்தமாய் ஈடுபாடில்லை. ஒரு வேலை, இன்னும் கொஞ்சம் சிறிய வயதில் அங்கு சென்றிருந்தால் அதை வாங்கி சுடுவதில் எனக்கு ஆர்வம்  இருந்திருக்கலாம். இருப்பினும் வேறு யாரேனும் பணம் கட்டி சுட்டால் பார்த்துக்கொள்ளலாம், புகைப்படமும் எடுக்கலாம் என்று காத்திருந்தேன்.  ஆனால் என்னை போலவே அங்கிருந்த சுற்றுலா பயணிகள் யாருக்கும் அதில் ஈடுபாடு இல்லை போலும். கடைசிவரை ஒரு துப்பாக்கி சப்தத்தை கூட கேட்கவில்லை.

Phuket Shooting Range

Phuket Shooting Range

சில வருடங்களுக்கு முன்னர் அதே இடத்தில் ஒருவன் துப்பாக்கியை வாடகைக்கு எடுத்து தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்திருக்கிறான். அதைத்தொடர்ந்து இவ்வகையா நிலையங்களையும் மூடிவிடவும்   தாய்லாந்தில் நிர்பந்தம் எழுந்திருக்கிறது. ஆனால் இன்னமும் அது அங்கு இயங்கிக்கொண்டு தான் இருக்கிறது. இதை போல் நம் நாட்டிலும் இருக்கிறதா எனத்தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் அவ்வளவு சுலபத்தில் இங்கிருப்பது போல் பொதுமக்கள் அதில் நுழைந்து விட வாய்ப்பில்லை.

அடுத்து நாங்கள் சென்றது வாட் ச்சலாங்( Wat Chalong ). wat என்றால் தாய் மொழியில் கோவில் என்று அர்த்தம். புக்கெட் தீவில் உள்ள மிகப்பெரிய புத்தர் கோவில் அது. உள்ளூர் மக்களும், புத்தத்துறவிகளின் அங்கு வழிபடுவதைக் காணமுடியும்.  ஒரு கட்டடத்தில் பல வகையான புத்தர் சிலை இருந்தது. நின்றுக்கொண்டு, படுத்துக்கொண்டு என பல கோணங்கள் அவை இருந்தன. மிகவும் அமைதியாக, முட்டிப்போட்டு, குனிந்து அவர்கள் புத்தரை வழிபடுகின்றனர். இவ்வாறான புத்தகோவில்களுக்கு செல்லும்போது அவர்களை நாம் நம் அறியாமையால் சங்கடபடுத்திவிடக்கூடாது. உதாரணாமாக இருபாலரும் முட்டி தெரியுமாறு கால் சட்டையும், கைவைக்காத பணியன் போன்ற அரைகுறை ஆடை அணிந்து செல்லக்கூடாது. புத்தர் சிலை அருகே  புகைப்படம் எடுக்கிறோம் என்று நம் பின் புறத்தை சிலையிடம் காட்டி நிற்கக்கூடாது. எக்காரணம் கொண்டும் புத்ததுறவிகளின் தலையை தொட்டுவிடக்கூடாது. இப்படி நிறைய சங்கதிகள் இருக்கிறது.

Wat Chalong, Phuket

இன்னொரு கட்டடத்தின் வாயிலில் ஒரு கண்ணாடி கூண்டிற்குள் விளக்கு ஏற்றப்பட்டு இருந்தது. அதில் ஊதுபத்தியை கொளுத்தி உள்ளே வைக்கப்பட்டுள்ள ஒரு மணல் நிரப்பிய பானையில் சொறுகிவிடுகின்றனர். உள்ளே இருக்கும் மூன்று புத்த பிட்சுக்களின் சிலையில் ஏதோ ஒன்றை ஒட்டி, அதை மடியில் காவித்துணியை வைத்து, தரையில் மண்டியிட்டு, கையில் வெண்தாமரையை ஏந்தி வழிபடுகின்றனர்.  வெளியே ஒரு மரத்தில் துணிகளையும் கட்டிவிட்டு செல்கின்றனர். அவர்களின் வழிபாட்டு முறை ஆச்சர்யமாக இருந்தாலும் நம்முடைய வழிபாட்டு முறையுடன் சில ஒற்றுமையும், அதில் நெறிப்படுதலும் இருப்பதை உணரமுடிந்தது.   தரிசனத்திற்கு வரிசையில்லை, சிறப்பு தரிசனம் என்று தனிக்கட்டணம் இல்லை. கூச்சல் இல்லை. குழப்பம் இல்லை. செங்கல் சூழை போல் சுவறேழுப்பி  அதற்குள் பட்டாசு சரத்தினை வெடிக்கின்றனர். மொத்தத்தில் யாருக்கும் இடையூறு விளைவிக்காத ஒரு வழிபாட்டுமுறை அவர்களுடையது என்பது மட்டும் மறுக்கமுடியாதது.

Wat Chalong, Phuket

Wat Chalong, Phuket

 

Wat Chalong, Phuket

Wat Chalong, Phuket

அடுத்து கடைசியாக “ஜெம் காலேரி”. அதாவது நவரத்தின கற்கள் விற்கப்படும் கடைகளுக்கு அழைத்து சென்றனர். உங்களுக்கு இதில் விருப்பமோ இல்லையோ எல்லா லோக்கல் டூர் பாக்கேஜில் நிச்சயம் இது இருக்கும். நான் எவ்வளவோ முயன்றும் இதை எங்கள் டூரில் இருந்து தவிர்க்க முடியவில்லை. எங்கே மக்களின் நாட்டம் இருக்கிறதோ. எங்கே பணம் அதிகம் புலங்குகிறதோ அங்கெல்லாம் ஏதோ தவறும் இருக்கும். தாய்லாந்தின் முக்கிய வருமானம் சுற்றுலாவசிகளிடம் இருந்துதான். அதனால் தாய்லாந்து டூர் ஏஜெண்டுகளிடமும் தவறுகள் நிறைய நடக்கின்றன. எல்லாவற்றிக்கும் மேலாக வெளிநாட்டு சுற்றுலாவசிகளை குறிவைக்கும் மாப்பியாக்கள் கூட அந்நாட்டில்  இருக்கிறார்கள். அவர்களிடம் கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்தால்  பணம், பாஸ்போர்ட் மட்டுமில்லாமல்  உயிரையும் அங்கு இழக்க நேரிடும். அதெல்லாம் விலாவரியாக பிறகு பார்ப்போம்.

இப்போது ஜெம் காலேரிக்கு வருவோம். அசத்தலான பெண்கள் கடை வாயிலில் அணிவகுத்து வரவேற்பார்கள். உள்ளே சென்றால் விதவிதமான நவரத்தின கற்களை காண்பித்து வசீகரிக்கும் வார்த்தைகளில் மனதை மயக்குவர். விலையோ பல ஆயிரம் டாலர்கள். “வெள்ளையா இருக்கவ பொய் சொல்ல மாட்டா” என்ற பழமொழி ஐரோப்பியா, அமெரிக்க மக்களிடையே கூட நல்ல பிரபலம். பேராசை பட்டு சில ஆயிரம் டாலர் நோட்டுக்களை கொடுத்து அதை வாங்கிச்செல்வர். சிலரோ பத்திரமாக தங்கள் நாட்டிற்க்கு அனுப்பி வைக்குமாறு பணம் செலுத்தி செல்வர். ஊருக்கு போனால் கல்லும் வராது, வாங்கிபோனவனும் நொந்து நூடுல்சாகி இருப்பான். அனைத்தும் ஏமாற்று வேலை. ஏமாற்றப்படும் பணத்திற்கு அவர்களை அங்கு அழைத்துப்போன அந்த டூர் ஏஜென்ட்டிற்கு நல்ல கமிஷனும் உண்டு.

Gem Gallery, Patong

இந்தியர்கள் இதில் சற்று புத்திசாலிகள். உள்ளே சென்று சுற்றி பார்த்துவிட்டு, கொஞ்சம் நேரம் தாய் பெண்களிடம் தாய் பாசத்தில் பேசிவிட்டு, வெறும் கையில் முலம் போட்டுவிட்டு வந்து விடுவர். சிலரோ அனைவரும் கடைக்கு செல்லும் வேலையில் வாகனத்திலேயே உட்கார்ந்து ரெஸ்ட் எடுப்பர். எங்களைப்போல!
இந்தியர்கள் என்றாலே  சில இடங்களில் சற்று ஏளனமாகத்தான் அங்கு பார்க்கப்படுவர்.  அதற்கு இதுவும் ஒரு காரணம் எனினும் இந்தியர்கள் அங்கு சென்று செய்யும் அட்டூழியங்களும் மிகப்பெரிய காரணம். (ஆம் நிறைய) மற்றபடி பணம் காய்ச்சி மரங்களான ஐரோப்பியர்களும், அமெரிக்கர்களும் அங்கு செல்லும் இடமெல்லாம்  எப்போதும் ராஜ  மரியாதை தான்.

Phuket Island Food

புக்கெட் தீவில் இன்னொரு சிறப்பம்சம்  யாதெனில் அது கடலுணவு. நாங்கள் இருந்த “பட்டாங்” , கடற்கரை பகுதி என்பதாலும், முக்கிய நகரம் என்பதாலும் பார்க்கும் இடமெல்லாம், போகும் இடமெல்லாம் தெருவெங்கும் உணவகங்கள்.  இங்கு கிடைக்காத கடல் உயிரினங்களே இல்லை. மீன், நண்டு, இறால் என்று எல்லா வஸ்துக்களும் பல வகைகளில் கிடைக்கும். நம் நாட்டில்  பார்த்திராத, கேட்டிராத வகைகள் அவை. அங்கு சென்று  முதன் முறை  சீ புட் ப்ரைட் ரைஸ் (Sea Food Fried Rice) ஆர்டர் செய்து சாப்பிட்டேன். இறால், மீன், நண்டு என்று அதில் இருந்த ஒவ்வொன்றாக  ருசித்து சாப்பிட்டபோது அடுத்து வந்தது வேகவைத்த ஆக்டோபஸ் குட்டி. முதலில் யோசித்தபோது  கொஞ்சம் தயக்கமாய் இருந்தது. டக்கென  வாயில் போட்டு மென்றால் கரக் மொறுக்கென்று ஒரு வித்யாசனமா சுவை. அதன் பிறகு ஸ்க்விட் மீன் வகையையும் சாப்பிட பழகிக்கொண்டேன். அற்புதமான சுவை. நம் நாட்டில் இதெல்லாம் கிடைக்க வாய்ப்பே இல்லை. ஆனால் கடைசி வரை உடன் வந்த அனைவரும் சாப்பிட்டும் பன்றி இறைச்சி மட்டும் உண்ண ஏனோ எனக்கு மனம் இடம் அளிக்கவில்லை.

அங்கு சாலையோரத்தில்  இருக்கும் உணவகங்களில் சமைக்கப்படாமல் வைக்கப்பட்டிருந்த கடல் வாழ் உயிரினங்களை புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தேன். எடுக்கும் வரை விட்டு விட்டு க்ளிக்கியவுடன் “பிப்டி பாத்” (ஐம்பது தாய் பணம்) ப்ளீஸ் என கையை நீட்டி காசு கேட்கிறார்கள். அனைத்து கடைகளிலும் இதே தான். சிரித்துக்கொண்டே ஒவ்வொரு இடத்தில் இருந்தும் நழுவ வேண்டி இருந்தது. ஒருமுறை நாங்கள் உணவருந்திய கடையில் ஒரு ப்ளேட் இறால் ஆர்டர் செய்தோம். என்ன இறால் என்று சைகையில் கேட்டான். எனக்கு புரியவில்லை. பிறகு கையை பிடித்து அழைத்துப்போனான். அங்கே வைக்ப்கபட்டிருந்த பெரிய பிளாஸ்டிக் டப்பாக்களில் விதவிதமான மீன்ககள், நண்டுகள், இறால்கள் என அத்தனையும் உயிருடன் இருந்தன. டைகர் ப்ராவ்ன் என்ற இறால் வகை  ஒன்று நம் முழங்கையை விட நீட்டமாக இருக்கிறது.

Phuket Island - Thailand Food

Phuket Island - Thailand Food

Phuket Island - Thailand Food

Phuket Island - Thailand Food

Phuket Island - Thailand Food

அனைத்தையும் போட்டோ எடுத்து விட்டு இந்த இறால் எவ்வளோ என்றேன்?  ஒன் ப்ளேட் ஐநூறு தாய்பணம்… அப்புறம் போட்டோ எடுத்ததுக்கு நூறு தாய் பணம் என்றான். அட இதென்ன வில்லங்கம் புடிச்சவனா இருப்பான் போல என்று இறாலே வேண்டாம் என்று என்னுடைய டேபிள் வந்து அமர்தேன். பின்னாடியே வந்து. ஒன் ப்ளேட் நானுறு தாய் பணம் மட்டும் போதும்.. போட்டோ ப்ரீ என்று வியாபார புன்னகையை வீசினான்..  வேண்டாம் என்றேன். கடைசியாக முந்நூறு என்றான். அப்போதான் புரிந்தது அவன் பேரம் பேசுகிறான் என்று. பேரம் பேசுவதில் இந்தியர்களுக்கு போட்டி யாரு இருக்கா? உடன் வந்தவர்கள் களத்தில் இறங்க, கடைசியில் ஒரு ப்ளேட் நூறு ரூபாய்க்கு கிடைத்தது. கொஞ்சம் ஏமாந்தாலும் அங்கு பல இடங்களில் நம் தலையில் மிளாகாய்  அரைத்து விடுவார்கள் என்று மட்டும் புரிந்தது.

Phuket Island - Tiger Prawn

அங்கே  டூர் ஏஜென்சியும், கரன்ஸி எக்ஸ்சேஞ் கடைகளும் நம்ம ஊர் பெட்டிகடை போல் தெருவெங்கும் வரிசையாக பார்க்கும் இடமெல்லாம் இருக்கிறது. பல வகையான சுற்றுலா பேக்கேஜுகள்  மிக்ககுறைந்த கட்டணத்தில் கிடைக்கிறது. நம்மூரில் புக் பண்ணும்போது பல டூர் ஏஜென்ட் நெட்வொர்கிற்கு  கமிஷன் சேர்ந்துகொள்கிறது. நம்ம திருப்திக்கு செல்லும்போது எந்த கடையில் மொட்டை அடிப்பது என்ற முன்னேற்பாடில்லாமல்  செல்வது போல் அங்கு சென்றால் போதுமானது.  அங்கு சென்றதும் பிளான் செய்துக்கொள்ளலாம். அதுமட்டும் இல்லாமல் இங்கு தெருக்களில் உள்ள கரன்ஸி எக்ஸ்சேஞ் கடைகளில் சுவர்ணபூமி விமான நிலையத்தில் இருப்பதை  விட உண்மையிலேயே நல்ல விலைக்கு கரன்ஸிக்களை வாங்கிக்கொள்கின்றனர். கிட்ட தட்ட டாலருக்கு மூன்று தாய் பணம் நமக்கு அதிகம் கிடைக்கிறது. நாங்கள் இங்கே தான் எங்களுடைய பெஞ்சமின் ப்ராங்க்ளின் புகைப்படத்தாளை கொஞ்சம் கொஞ்சமாக தேவைப்படும்போது மாற்றிக்கொண்டோம்.

புக்கட் தீவின் முக்கால் வாசி பகுதி  மலைகளால் சூழப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் தான் இங்கு அதிகம். முன்னொருகாலத்தில் மீன்பிடி தொழில்,  ரப்பர் மர வளங்களுக்கு பெயர் போன புக்கெட் இப்போது முழுக்க முழுக்க சுற்றுலாவை பிரதானமாகக்கொண்டுள்ளது. மனதை மயக்கும் இயற்கையான பகுதிகள், பிரமிக்கவைக்கும் கடற்கரை சூரிய அஸ்தமனக் காட்சிகள், ஆச்சர்யமூட்டும் தீவுப்பயணங்கள், இரவு விடுதிகள், விதவிதமான கடல் உணவுகள், இவைதான் புக்கெட்டில் மக்கள் கூட்டம் வந்து குவிவதற்கான முக்கிய காரணங்கள். நாங்கள் புக்கெட் தீவிற்கு சென்றதற்கான காரணங்கள் இரண்டு. அதில் ஒன்று பி.பி. தீவு  (Phi Phi Island). எல்லாருக்கும் புரியும்படி சொல்லவேண்டுமெனில் “ஏழாம் அறிவு” படத்தில் “முன்ஜென்ம சாரல் நீ” பாடலில் சூர்யாவும், ஸ்ருதி ஹாசனும் ஜோடியாக ஒரு கடற்கரை தீவில் வருவார்களே. அதே தீவுப்பகுதிதான். எங்களின் இரண்டாம் நாள் முழுவதும் அங்குதான் கழியப்போகிறது என்ற கனவிலேயே  நிம்மதியாக உறங்கத்தொடங்கினோம்.

– பயணம் தொடரும்.

http://www.cpraveen.com/suvadugal/phuket-island-thailand-trip-3/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ஆதவன்....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாய்லாந்து  நாட்டிற்கும், தமிழ் மன்னன் ராஜாதி ராஜனுக்கும் (தஞ்சையை ஆண்ட ராஜ ராஜ சோழனின் மகன்) நெருங்கிய தொடர்பு உள்ளது.  அரச நிகழ்வுகளில் இன்றும்... தமிழ்  தேவாரம் பாடும் நடை முறை உள்ளதாக அறிந்தேன். அதனையும்... உங்கள் பதிவில், ஆவலுடன்.... எதிர் பார்க்கின்றேன் ஆதவன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.