Jump to content

முள்ளிவாய்க்கால் ஓரணியாக்குமா?


Recommended Posts

முள்ளிவாய்க்கால் ஓரணியாக்குமா?

 

வில்­லாண்ட தமி­ழினம் வீறு­கொண்டு விடு­த­லைக்காய் களம் கண்ட தரு­ணத்தில் மனி­தா­பி­மா­னத்­திற்கு எதி­ரான அதி­யுச்ச வெளிப்­பா­டுகள் சாட்­சி­ய­மின்றி அரங்­கேற்­றப்­பட்டு எட்டு ஆண்­டுகள் ஆகின்­றன. எட்டு ஆண்­டுகள் கழிந்தும், அந்த ரணம் ஆற­வில்லை. வலிகள் தீர­வில்லை. பட்ட காயங்­களில் இருந்தும், மனங்­களில் விழுந்த கீறல்­களில் இருந்தும் இன்­னமும் இரத்தம் வழிந்து கொண்டு தான் இருக்­கி­றது. இது தொடர்ந்தும் இருக்கும்.

முள்­ளி­வாய்க்கால் பேர­வலம் முடி­வில்லா ஓர் அவ­ல­மாக இன்றும் நீடித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது. கொடூர யுத்­தத்தின் விளை­வுகள் பல­வற்றை ஒன்றன் பின் ஒன்­றாக, அனு­ப­விக்கும் நிலைக்கு தமி­ழினம் தள்­ளப்­பட்டு நிற்­கி­றது. முள்­ளி­வாய்க்­காலில் யுத்தம் முடிந்­தா­க­ிவிட்­டது என்று அறி­விக்­கப்­பட்­டாலும் தற்­போது முடி­வுறா வலியைச் சுமக்கும் மக்­களின் வாழ்­வ­தற்­கான உரி­மைப்­போ­ராட்­டங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்­கின்­றன.

சொந்த இடத்தில் வாழ­மு­டி­யாது நிலத்­திற்­கான போராட்டம் தொடர்­கின்­றது. சொந்த பந்­தங்­க­ளுடன் இணைய முடி­யாது அவர்­களை தேடும் பட­லமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்­கின்­றது. ஆட்­சி­யா­ளர்கள் மாற்­றப்­பட்­டாலும் அடைவு மட்­டங்­களில் மாற்­ற­மில்­லாத நிலை­மையால் தற்­போதும் வீதி­யோ­ரங்­க­ளிலும் படை முகாம்­க­ளிற்கு முன்­னாலும் போரா­டிக்­கொண்­டி­ருக்கும் அவ­லங்கள் நடந்­தே­றிக்­கொண்­டி­ருக்­கின்­றன.

எட்டு ஆண்­டு­க­ளுக்கு முன் சாட்­சி­ய­மின்றி ஈவு இரக்­க­மின்றி நிகழ்த்­தப்­பட்ட குரூ­ரங்­க­ளுக்கு, அநீ­தி­க­ளுக்கு இன்­னமும், பொறுப்புக் கூறப்­ப­டாத நிலை, குற்­ற­மி­ழைத்­த­வர்கள் தண்­டிக்­கப்­ப­டாத நிலை, நீதியை எதிர்­பார்த்து காத்­து­நிற்கும் மக்­க­ளுக்கு மத்­தியில் காலத்தை இழுத்­த­டித்து, கடப்­பாட்டைத் தட்­டிக்­க­ழிக்கும் ஆட்­சி­யா­ளர்­களின் வழக்­க­மான தந்­தி­ரோ­பா­யங்கள் நாசூக்­காக நகர்த்­தப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றன.

உரி­மை­க­ளுக்­காக மட்டும் போரா­டிய தமி­ழினம் இன்று உயிர்­வாழ்­வுக்­காக போரா­ட­ வேண்­டிய துர­திர்ஷ்­டவச­மான நிலைமை. மக்­களே மக்­க­ளுக்­காக குரல்­கொ­டுக்க வேண்­டிய ஏதி­லிய நிலைமை. மக்கள் பிர­தி­நி­திகள் ஆட்­சி­யா­ளர்­க­ளி­டத்தில் சென்­றாலும் குறை­கேட்­ப­தற்கு கூட குறைந்­த­ளவு நேரமே ஒதுக்­கப்­படும் ஏதேச்­ச­ாதி­கார நிலைமை. ஆட்­சி­யா­ளர்­களை எவ்­வாறு அணுகு­வது, அதி­கார­ம­ளித்த மக்­களை எவ்­வாறு அணு­கு­வது என்ற இரண்டும் கெட்டான் நிலையில் ஒட்­டு­மொத்த தமிழ் தலை­மைகள்.

யுத்த காலத்­திலும், யுத்­தத்தின் பின்­ன­ரான எட்டு ஆண்டுகள் தமக்கு இழைக்­கப்­பட்ட அநீ­தி­க­ளுக்கு நீதி வேண்டிப் போராடும் மக்­களின் மனங்­களில் ஆண்டுகள் ஆயி­ர­மா­னாலும் 2009 மே 18 நினை­வுகள் அழி­யுமா? ஒரு­போதும் இல்லை. அந்த நாட்­களை மறக்க முடி­யாது. அன்­றைய நாட்கள் ஒவ்­வொரு தமிழ் மக­னி­னதும் உள்­ளக்­கி­டக்­கை­களில் வடுக்­களாய் மாறி­யி­ருக்­கின்­றன.

அந்த வடுக்­களின் வெளிப்­பாட்டை கொட்­டித்­தீர்ப்­ப­தற்­காக தான் ஒவ்­வொரு ஆண்டும் மே 18அன்று தங்­களின் இன்­னுரை ஈகம் செய்த அத்­தனை ஆன்­மாக்­களின் சாந்­திக்­கான பிரார்த்­தனை நாளாக, நினை­வேந்தல் நாளாக தமிழர் தாய­கத்தில் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது.

அந்த வகையில் இந்த ஆண்டும் வட­மா­காண சபையின் ஏற்­பாட்டில் முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் திடலில் மூன்­றா­வது ஆண்­டாக எட்­டா­வது ஆண்டு நினை­வேந்தல் நிகழ்வை முன்­னெ­டுப்­ப­தற்கு ஏற்­பா­டு­க­ளா­கி­யி­ருந்­தன. இம்­முறை வழ­மைக்கு மாறாக அனைத்து தமிழ் பேசும் மக்கள் மற்றும் மக்கள் பிர­தி­நி­தி­களை இன, மத, மொழி­பே­த­மின்றி இந்­நி­கழ்வில் பங்­கேற்­கு­மாறு ஏற்­பாட்டு சபையின் முதல்வர் என்­ற­வ­கையில் விக்­கி­னேஸ்­வரன் அழைப்பு விடுத்­தி­ருந்தார்.

அதற்­க­மைய நேற்று முன்­தினம் முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் திடலில் காலை முதலே வடக்கு, கிழக்கு உட்­பட பல்­வேறு பகு­தி­க­ளி­லி­ருந்தும் மக்கள் அலை­யெனத் திரண்­டார்கள். மக்கள் பிர­தி­நி­தி­களும் திரண்­டார்கள். ஆட்சி மாற்றம் நிகழ்ந்து ஜன­நா­யக வெளி உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது என்று கூறப்­படும் தற்­போ­தைய சம­காலச் சூழ­லினை உறு­திப்­ப­டுத்தும் வகையில் இரா­ணுவம், பொலிஸ் ஆகி­யோரின் எவ்­வி­த­மான பிர­சன்­னங்­க­ளு­மற்ற சூழலில் அனை­வரும் ஒன்று கூடி­னார்கள்.

ஆனாலும் குறிப்­பிட்ட எண்­ணிக்­கை­யிலான இளை­ஞர்கள் புதிய தொலை­பேசி தாங்­க­லாக புல­னாய்வு வேலையை செவ்­வனே நிறை­வேற்­றி­வந்­தனர். மக்கள் முதல் மக்கள் பிர­தி­நிதிகள் வருகை தரு­வது, கலந்­து­ரை­யா­டு­வது என அனைத்­தையும் ஒன்­று­வி­டாமல் பதிவு செய்யும் பணியை செவ்­வனே முன்­னெ­டுத்­தார்கள். இதில் தமிழ் சமூகத்தைச் சார்ந்த இளை­ஞர்­களும் பங்­கெ­டுத்­தி­ருந்தது தான் சாபக்­கே­டான வேத­னை­யா­கின்­றது.

இவ்­வா­றி­ருக்­கையில் எட்­டா­வது ஆண்டு நினை­வேந்தல் நிகழ்வில் முதற்­த­ட­வை­யாக தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் பங்­கேற்றார். அத்­துடன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தாய்க்­கட்­சியைச் சார்ந்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சிலரும் முதற்­த­ட­வை­யாக இந்­நி­கழ்வில் பங்­கேற்றனர்.

வழ­மை­போன்றே அக­வ­ணக்கம், முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வ­ரனின் அஞ்­சலி உரை என்­பன நடை­பெற்­றன. முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்வில் உரை­யாற்­று­வ­தற்கு எத்­த­னையோ மக்கள் பிர­தி­நி­திகள் ஏற்­பாட்­டுக்­கு­ழுவின் முக்­கி­யஸ்­த­ரான வட­மா­காண சபை உறுப்­பினர் ரவி­க­ர­னுடன் முட்­டி­மோ­தி­ய நிலையில் மூத்த தலை­வ­ரான சம்­பந்தன் அஞ்­சலி உரையைச் செய்­வ­தற்கு அழைக்­கப்­பட்டார். இவ­ரைக்­கூட வடக்கு முதல்­வ­ரிடம் உறுப்­பினர் ரவி­கரன் அந்த இடத்தில் ஒரு­வார்த்தை கேட்ட பின்­னரே அழைப்பு அறி­விப்பை ஒலி­வாங்­கியில் செய்­தி­ருக்­கின்றார்.

அதன்­பின்னர் சம்­பந்தன் உரை­யாற்­றிக்­கொண்­டி­ருக்­கும்­போதே ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் இடை­யீடு செய்­து எழுப்­பிய வினா­வை­ய­டுத்து எட்டு ஆண்­டு­க­ளுக்கு பிறகு வந்து அர­சியல் பேசு­கின்றார் என்ற குற்­றச்­சாட்­டுடன் எதிர்ப்பு கோஷங்கள் பொது­மக்­களால் முன்­வைக்­கப்­பட்­டன.

ஈற்றில் ஆத்­மாக்­களின் ஈடேற்­றத்­திற்­கான சாந்­திப்பிரார்த்தனை நிகழ்வில் குழப்பம் என்ற விடயம் மட்­டுமே காற்­றுத்­தீ­யாக எங்கும் சென்­றது. தம்மை ஈகம் செய்த உற­வு­க­ளிற்­கான அஞ்­சலி நிகழ்வின் புனிதத் தன்மை அப்­ப­டியே நந்­திக்­கடல் காற்றில் கரைந்து விட்­­டி­ருந்­தது.

தமிழ்த் தலைவர் அஞ்­சலி உரை நிகழ்த்­தி­ய­போது ஊட­க­வி­ய­லாளர் கேள்­வி­யெ­ழுப்­பி­யது சரியா தவறா என்­பது வாதப்­பி­ர­தி­வா­தத்­திற்­கு­ரி­யது. ஆனால், பொறு­மை­யாக அனைத்து விட­யங்­க­ளையும் கையா­ளு­கின்றார் என்று இந்­தி­யப்­பி­ர­தமர் மோடியே பாராட்­டு­ம­ள­விற்கு இருக்கும் அவர் இந்த விட­யத்­திலும் பொறுமை காத்­தி­ருந்தால் நன்­றா­க­வி­ருந்­தி­ருக்கும்.

ஆகக்­கு­றைந்­தது உங்­களின் கேள்­விக்கு நான் பதி­ல­ளிக்­கின்றேன். சற்று பொறுங்கள் என்­றா­வது கூறி­யி­ருக்­கலாம். அவ்­வாறு கூறி­யி­ருந்தால் கூட அமை­தி­யான நிலை­மையே நீடித்­தி­ருக்கும். வீணான அவ­மா­னங்­களும் எழுந்­தி­ருக்­காது என்­ப­தொ­ரு­வி­டயம்.

அடுத்­த­தாக சம்­பந்தன் ஏன் எட்டு ஆண்­டுகள் கழித்து வந்தார்? அப்­ப­டி­யென்றால் தேர்தல் வரப்­போ­கின்­றதா? தமி­ழ­ர­சுக்­கட்­சியின் சரியும் செல்­வாக்கை தூக்கி நிறுத்த வந்­தாரா என்ற வினாக்­க­ளெல்லாம் பொது­மக்­களால் அந்த முள்­ளி­வாய்க்கால் திடலில் காது­படக் கேட்ட விட­யங்கள். அர­சி­யல்­வா­திகள் இந்த கேள்­வி­களை கேட்டால் அது அர­சியல் காழ்ப்­பு­ணர்ச்சி என்று இல­கு­வாக பதி­ல­ளித்து விட­மு­டியும். ஆனால் ஆணை­வ­ழங்­கிய பொது மக்கள் இந்தக் கேள்­வி­களை கேட்­கின்­ற­போது நிச்­சயம் முழு­மமையான பதி­லொன்று வழங்­க­வேண்­டி­யுள்­ளது.

இருப்­பினும் முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்­வுக்கு நான் போகத்­தீர்­மா­னித்­தி­ருக்­கின்றேன். ஆனால் அதனை வெளியிட விரும்­ப­வில்லை என்று தயக்­க­மா­கவே தனது பய­ணத்­திற்­கான அறி­விப்பை எமது பத்­தி­ரி­கைக்கு தெரி­வித்­தவர் சம்­பந்தன். அதன்­போது வன்னி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தன்னை அழைத்­துள்­ளார்கள். அத்­தோடு, தற்­போ­தைய நிலை­மையில் தென்­னி­லங்கை உட்­பட கொழும்பு அர­சியல் களத்தில் நினை­வேந்தல் நிகழ்­வுக்கு வேறு அர்த்தம் கற்­பிக்­கப்­ப­டு­வதால் தான் அங்கு செல்லும் முடிவை எடுத்­தி­ருக்­கின்றேன் என்றும் அவர் மேலும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

அதே­நேரம் வடக்கு மாகாண முத­ல­மைச்­சரும் நினை­வேந்தல் நிகழ்­விற்­கான அழைப்­புக்­கு­றிப்பில் அனை­வரும் பங்­கேற்­க­வேண்­டு­மென்றே அழைப்பு விடுத்­தி­ருக்­கின்றார். ஆகவே எதிர்க்­கட்­சித்­த­லைவர் சம்­பந்தன் அந்த நிகழ்வில் பங்­கேற்­றதில் எந்­த­வி­த­மான தவ­று­களும் இல்லை. அவர் இந்த நிகழ்வில் பங்­கேற்­கக்­கூ­டாது என்று யாரும் கூற­வில்லை. ஆனால் நெருக்­க­டி­யான சூழலில் 2015 ஆம் ஆண்டும் அதற்குப் பின்­ன­ரான நிலை­மை­யிலும் அவர் ஏன் இந்த நிகழ்வில் பங்­கேற்­க­வில்லை என்ற கேள்­விக்கு பதி­ல­ளிக்க வேண்­டிய கடப்­பாடும் அவ­ரு­டையதே.

இது­வொ­ரு­பு­ற­மி­ருக்­கையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை தமிழ் மக்கள் ஏகோ­பித்து தமிழர் தாய­க­மான வடக்கு கிழக்கில் ஆணை வழங்­கி­யி­ருக்­கின்­றார்கள். கூட்­ட­மைப்பின் தீர்­மா­னங்கள் அனைத்தையும் விரும்­பியோ விரும்­பா­மலோ மக்கள் ஆத­ரிக்­கின்­றார்கள். ஐ.நா. மனித உரிமைகள் தீர்­மானம் முதல் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் முற்­போக்­கான செயற்­பா­டு­க­ளுக்கு ஆத­ரிக்கும் முடிவு வரையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் எந்த தீர்­மா­னங்­க­ளையும் மக்கள் எதிர்த்து வீதியில் இறங்­க­வில்லை.

கூட்­ட­மைப்­பிற்கும் இந்த விட­யங்கள் தொடர்பில் குழப்­பங்­களும், முரண்­பா­டு­களும் காணப்­ப­டு­கின்­றதே தவிர தமிழ் மக்கள் அதனை விரும்­பாது விட்­டாலும் எதிர்த்து நிற்­க­வில்லை. போரா­ட­வில்லை. கூட்­ட­மைப்­பு­ட­னேயே இருக்­கின்­றார்கள். அவ்­வா­றி­ருக்­கையில் அத்­த­கைய மக்கள் ஏன் இன்று அதன் தலை­மையை முக்­கிய செயற்­பா­டுகளில் பங்­கேற்­றுள்ள சுமந்­திரன் போன்­ற­வர்­களை நினை­வேந்தல் நிகழ்வில் கடிந்­தார்கள். குறை­பட்­டார்கள் என்ற நியா­ய­மான கேள்­வியை ஒரு தடவை சிந்­தித்­து­பார்க்க வேண்­டி­யுள்­ளது.

2009ஆம் ஆண்­டுக்கு பின்­ன­ரான காலத்தில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ ஆட்­சிப்­பீ­டத்தில் இருக்­கும்­போது சர்­வ­தேசம் பார்த்­துக்­கொள்ளும், சர்­வ­தேசம் கைவி­டாது என்ற வாக்­கு­று­திகள் தான் கூட்­ட­மைப்பால் மக்­க­ளுக்கு அளிக்­க­ப்பட்­டன.

2015ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலின் போது, ஆட்சி மாற்றம் அவ­சியம், ஆட்சி மாறினால் தான் எமது பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு கிட்டும் என்ற உறு­தி­மொழி கூட்­ட­மைப்­பி­னா­லேயே வழங்­கப்­பட்­டது. ஆக, ஆட்சி மாறினால் அனைத்தும் சரி­யா­கி­விடும் என்ற நிலைப்­பாட்டை தமிழ் மக்கள் எடுக்­கு­ம­ள­விற்கு அந்த வாக்­கு­று­திகள் அமைந்­தி­ருந்­தன.

ஆனால் ஆட்­சி­மாறி இரண்டு ஆண்டுகள் கடந்­தி­ருக்­கின்­ற­போதும் அந்த வாக்­கு­று­திகள் வெறும் வார்த்­தை­க­ளா­கவே இருக்­கின்­றன. அவை எவை­யுமே நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­க­வில்லை. விரக்­தியின் உச்­சத்­திற்கு சென்ற மக்கள் வீதி­யோ­ரங்­களில் போரா­டு­கின்­றார்கள். படை­யி­ன­ருடன் முரண்­ப­டு­கின்­றார்கள். மக்­களின் போராட்­டங்கள் தொடர்ச்­சி­யாக இடம்­பெ­று­வ­தற்கு மக்கள் பிர­தி­நி­திகள் ஒரு­போதும் இட­ம­ளித்­தி­ருக்கக்கூடாது.

இவ்­வாறு மாதக்­க­ணக்­காக மக்கள் வீதி­களில் போரா­டிக்­கொண்­டி­ருப்­ப­தற்கு இட­ம­ளித்­ததன் விளைவு தான் தாம் வாக்­க­ளித்­த­வர்கள் எதுவுமே செய்­ய­வில்லை, வெறு­மனே தம்மை பார்­வை­யிட்டு ஊடக விளம்­பரம் தேடிச் சென்று விடு­கின்­றார்கள் என்ற ஆதங்கம் அம்­மக்­க­ளிடத்தில் வெகு­வாக வலுத்­தி­ருக்­கின்­றது என்­பதே உண்மை நிலை.

அது­மட்டு­மன்றி இந்த முள்­ளி­வாய்க் கால் நினை­வேந்தல் நிகழ்வில் கூட ஒன்­றல்ல இரண்­டல்ல ஒன்­பது பிள்­ளை­களை உரி­மைப்­போ­ராட்­டத்­திற்­காக ஈன்று கொடுத்த தாயார் வறு­மையின் கோரத்தால் வாக்­கு­போட்ட அர­சி­யல்­வா­தி­யி­டம்­சென்­ற­போது கருத்­தி­லெ­டுக்­காத நிலை­மையும் அலைக்­க­ழிக்­கின்ற நிலை­மையும் தான் தலை­மை­களை எதிர்த்து கருத்­து­பி­ர­யோகம் செய்யும் நிலை­மையை உரு­வாக்­கி­யி­ருக்­கின்­றது.

இத­னை­வி­டவும் குறித்த நிகழ்­விற்கு வந்த சில காண­ாம­லாக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வுகள் அஞ்­சலி செய்­வதா, இல்­லையா? என்ன மன­நி­லையில் இருந்­தார்கள். தனது மகன், கணவன், தந்தை, சர­ண­டைந்­த­போது அவர்­க­ளுடன் சென்ற எவ­ரா­வது இந்த நிகழ்வுக்கு வரு­கின்­றார்­களா? அவர்­க­ளிடத்தில் விப­ரங்­களை சேக­ரிக்க முடி­யுமா? என்ற எதிர்­பார்ப்­பிலும் வந்­தார்கள். இப்­படி கடி­ன­மான மன­நி­லையில் உணர்ச்­சி­களால் கட்­டுண்ட நிலை­யிலே உள்­ள­வர்­க­ளா­லேயே அந்த திடல் நிறைந்­தி­ருந்­தது என்­பதே யதார்த்தம்.

அவ்­வா­றி­ருக்­கையில் சம்­பந்­த­னுக்கு ஆத­ரவு இருக்­கின்­றதா? இல்லை மாற்­றுத்­த­லை­மை­யா­க­வி­ருக்கும் விக்­கி­னேஸ்­வ­ர­னுக்கு ஆத­ரவு இருக்­கின்­றதா என்று மதிப்­பீடு செய்யும் களம் அது­வல்ல. மாவை.சேனா­தி­ராஜாவா, சுமந்­திர­னா? சுரேஷ்­பி­ரே­மச்­சந்­தி­ரனா?, செல்வம் அடைக்­க­ல­நா­தனா? சித்­தார்த்­தனா? அதி­க­ளவில் மக்­களைக் கொண்­டு­வந்து நிறுத்­தி­னார்கள். என்­றெல்லாம் மதிப்­பெண்கள் வழங்கும் இட­மு­மல்ல.

உயிர்­நீத்த மக்­களின் பால் ஒன்­றி­ணைந்து அவர்­க­ளுக்­காக அஞ்­சலி செலுத்தி எதற்­காக அந்த மக்கள் மடிந்­தார்கள் என்­பதை மீட்­டிப்­பார்த்து அதற்­கு­ரிய நியா­ய­மான பாதையில் செல்­வ­தற்­கான திட­சங்­கற்­பத்தை ஒன்­றி­ணைந்து பூணும் நாள். ஆனால் அவ்­வா­றான நிலை­மை­யொன்றை முள்­ளி­வாய்க்கால் திடலில் காண­மு­டிந்­தி­ருக்­க­வில்லை.

விக்­கி­னேஸ்­வரனும் அவ­ரது அணி­யி­னரும், சம்­பந்­தனும் அவ­ரது அணி­யி­னரும் அதற்கு மேலாக கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் ஒவ்­வொரு கட்­சியின் தலை­வர்­களும் ஆங்­காங்கே குழுக்­க­ளாக இருந்­தனர். அக்­கட்­சி­களைச் சார்ந்த மாகாண சபை உறுப்­பி­னர்­களும் ஆத­ர­வா­ளர்­களும் ஆங்­காங்கே இருந்­தனர். வட­மா­காண அமைச்­சர்கள் தலை­மையில் ஒவ்வொரு குழு­வினர். சிவா­ஜி­லிங்­கமும், அனந்தி சசி­த­ரனும் அதே­தி­டலில் சற்று தாம­த­மாக மற்­றொரு நினை­வேந்தல் என்றே நிலை­மைகள் இருந்­தன.

கூட்­ட­மைப்பு என்ற குடைக்குள் இத்­தனை பிரி­வுகள் ஏன்? சுய­கட்சி பலம் தேடும் அர­சி­யலை செய்ய விரும்­பினால் கூட்­ட­மைப்பை கலைத்­து­விட்டு தனித்­த­னி­யாக கட்சி அர­சி­யலை முன்­னெ­டுத்­தி­ருக்­க­வேண்டும். அதிலும் ஒரு அஞ்­சலி நிகழ்வில் கூட இந்த நிலைமை என்றால் தமிழ் மக்­களின் எதிர்­காலம் என்ன? என்ற வினாவே மேலெ­ழு­கின்­றது.

ஆனால் தமிழ் மக்­களின் நேர்­மறை அர­சியல் கொள்­கை­கொண்­ட­தாக கரு­தப்­ப­டு­கின்ற ஈழ­மக்கள் ஜன­நா­யக கட்­சியின் மூத்த உறுப்­பி­னரும் வட­மா­காண எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான தவ­ராஜா இந்­நி­கழ்வில் கட்­சி­பே­தங்­களை துறந்து பங்­கேற்­றமை ஒரு முன்­மா­தி­ரி­யான விடயம் என்­ப­தையும் கவ­னத்தில் கொள்ள வேண்­டி­யி­ருக்­கின்­றது.

அது­மட்­டு­மன்றி தமிழ்த் தேசிய சிந்­த­னையில் இருக்­கின்ற அர­சியல் கட்­சி­யான தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி தனி­யா­க­வொரு நினை­வேந்தல் நிகழ்வை செய்­தி­ருக்­கின்­றது. தமிழ் மக்கள் பேர­வையின் இணைத்­த­லை­வ­ராக விக்­கி­னேஸ்­வ­ரனை ஏற்­றுக்­கொண்­டுள்ள அக்­கட்சி மாகாண சபை­களை கொள்­கை­ய­ளவில் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை என்ற கார­ணத்தால் வடக்கு மாகா­ண­சபை ஏற்­பாடு செய்த நிகழ்வில் பங்­கேற்­க­வில்­லையாம். இது என்ன நியாயம்?

உயிர்­நீத்த எம்­ம­வர்­க­ளுக்­காக உங்­க­ளது தனிப்­பட்ட அர­சி­ய­லை­வைத்து இத்­தனை பிரி­வுகள் அவ­சியம் தானா?. ஒரு சோகத்தில் கூட அர­சியல் கட்சி பேதங்­களை மறந்து இணை­ய­மு­டி­யாது விட்டால் எதிர்­கா­லத்தில் தமிழ் மக்­க­ளுக்­கான நியா­ய­மான தீர்வு, நீதி என்­பவற்றையெல்லாம் எப்­படி பெற்­றுக்­கொ­டுக்­கப்­போ­கின்­றீர்கள்? ஏனென்றால் அத­னைப்­பெற்றுக் கொடுத்து விட்டோம் என்று கூறி அர­சியல் ஆதா­யத்தை அதி­க­ரிக்­க­வல்­லவா முயல்­வீர்கள் என்ற எண்­ணத்தையே இந்த நிகழ்வு படிப்­பி­னை­யாக வழங்­கு­கின்­றது.

தமி­ழி­னத்தை அழிக்­கத்­து­டித்­துக்­கொண்­டி­ருக்கும் பெரும்­பான்மை இனத்தை ஒரு­நொடி பாருங்கள். ஆட்­சிக்­காக முட்­டி­மோ­திக்­கொண்­டி­ருந்­த­வர்கள் ஆட்­சியில் பெரும்­பான்­மைக்­காக ஒன்­றி­ணை­கின்­றார்கள். அர­சியல் ரீதி­யாக வெட்­டிக்­கொ­டுத்தால் உண்­ணு­ம­ள­விற்கு கோபம் இருந்­தாலும் சுதந்­திர தினத்­திலும், யுத்த வெற்றி விழாக்­க­ளிலும், சிங்­கள, பௌத்த நிகழ்­வு­களிலும் ஓர­ணியில் அதுவும் அரு­க­ருகே ஆச­னங்­களில் கூட அமர்­கின்­றார்கள். அண்­மையில் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரி­காவை தூற்­றித்­தள்ளி ஒதுக்­கிய முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ சர்­வ­தேச வெசாக் தின வைப­வத்தில் அரு­க­ருகே அமர்ந்­தி­ருக்­கின்­றார்கள் என்றால் அவர்­களின் சிந்­தனை எங்­கி­ருக்­கின்­றது.

ஆகவே பாதிக்­கப்­பட்­ட­வர்கள் தமிழ் மக்கள். வெற்றி விழா­கொண்­டா­டு­ப­வர்­க­ளி­டத்தில் நீதி கேட்­கின்­றார்கள். நியாயம் கேட்கின்றார்கள்.உரிமைகோருகின்றார்கள். அப்படியென்றால் தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக இருக்கும் உங்களிடம் எத்தனை வலிமையான ஒற்றுமை அவசியம் வேண்டும்? ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளுடன் கொள்கை ரீதியான பிரச்சினைகள் காணப்பட்டாலும் ஆகக்குறைந்தது கூட்டமைப்பினுள் ஒரு கட்டமைப்பு அவசியமாகின்றது.

அவ்வாறு கட்டமைப்பாக அமைக்கப்படாது விட்டால் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் சிதைந்து கிடக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் போன்றும் அதற்கு நேரொத்த அரசியல்செய்தும் அதிகாரத்தை கைப்பற்ற முடியாது போய் இருக்கும் திராவிட முன்னேற்றக்கழகத்தின் நிலைமையே நாளை தமிழ் தேசத்திலும் ஏற்படும் என்பதை தற்போது தமிழர்களின் பிரச்சினையை கொண்டு இருவேறு பாதையில் பயணித்துக்கொண்டிருக்கும் சம்பந்தனும், விக்கினேஸ்வரனும் உணர்ந்துகொள்வதே அடுத்த கட்ட சாணக்கியமான நகர்வுக்கு உரமாக அமையும்.

அதேபோன்று அடுத்த நினைவேந்தலுக்கு முன்னராவது உயிர்நீத்தவர்கள் மீது நின்று நன்மை தேடாது உணர்வான நிகழ்வாக அமைவதற்காக தமிழ் பேசும் தலைமைகளிடையே பொதுவான வேலைத்திட்டம் அவசியம். குறிப்பாக அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய அரசியல் சாராத ஏற்பாட்டுக்குழு ஸ்தாபிக்கப்படவேண்டும். வருடத்தில் ஒருநாள் வரும் தேர்த்திருவிழாவைப்போன்று போனோம் விளக்கை ஏற்றினோம். புகைப்படம் எடுத்தோம். ஊடக அறிவிப்பைச் செய்தோம். புகைப்படமும் செய்தியும் அடுத்த நாள் நாளிதழில் வந்தது என்பதற்கு அப்பால் நினைவேந்தலுக்கு பொருத்தமான திட்டமிடலும் அவசியம்.

எனவே எட்டாவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு பல படிப்பினைகளை கற்றுக்கொடுத்திருக்கின்றது. அதனை மையமாக வைத்து தமிழ் தலைமைகள் அடுத்துவரும் காலப்பகுதியில் நடவடிக்கைகளை எடுப்பார்களா? இல்லை மீண்டும் இதேநிலைமை நீடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டியுள்ளது. காலங்கள் ஓடினாலும் காவுகொடுத்த உயிர்களுக்கான கனத்த நெஞ்சமும் கண்ணீரும் என்றுமே மாறாது.

ஆர்.ராம்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-05-20#page-5

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.