Jump to content

மீண்டுமொருமுறை சம்பியனாக மகுடம் சூடிய மகாஜனா மங்கையர்


Recommended Posts

மீண்டுமொருமுறை சம்பியனாக மகுடம் சூடிய மகாஜனா மங்கையர்
Feature-image1.jpg

மீண்டுமொருமுறை சம்பியனாக மகுடம் சூடிய மகாஜனா மங்கையர்

 
 
bradby-2017-web-banner-728.gif

இவ்வாண்டிற்கான வட மாகாண பாடசாலைகள் விளையாட்டுப் போட்டிகளில் 20 வயதின் கீழ் பெண்களுக்கான பிரிவின் சம்பியன் பட்டத்தை யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி மாணவிகள் சுவீகரித்துள்ளனர்.

2017ஆம் ஆண்டிற்கான வட மாகாண பாடசாலைகள் விளையாட்டுப் போட்டிகளின் முதற்கட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்றன. இதில் உதைபந்தாட்டப் போட்டிகள் 15ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக நான்கு தினங்கள் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கு, புனித பத்திரிசியார் கல்லூரி மைதானம், சென் ஜோன்ஸ் கல்லூரி மைதானம், அரியாலை உதைபந்தாட்டப் பயிற்சி நிலைய மைதானம் மற்றும் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய மைதானம் ஆகிய மைதானங்களில் இடம்பெற்று நிறைவிற்கு வந்துள்ளன.

20 வயதின் கீழ் பெண்கள் பிரிவு இறுதிப் போட்டி

இதில் பெண்கள் பிரிவிற்குரிய ஆட்டங்கள் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றிருந்தன. முதல் இடத்தினை தெரிவு செய்வதற்கான இறுதிப் போட்டியில் பலம் மிக்க தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி அணியை எதிர்த்து புதுமுக அணியான பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரி அணி மோதியது.

தொடரின் முதலாவது அரையிறுதியில் நடப்புச் சம்பியன் மகாஜனாக் கல்லூரி அணியை எதிர்த்து வவுனியா கனகராயன்குளம் மகா வித்தியாலய அணியினர் மோதியிருந்தனர். இதில் 5-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்ற மகாஜனாக் கல்லூரி வீராங்கனைகள் மீண்டுமொருமுறை இறுதிப் போட்டிக்குள் நுழைந்தனர். மறுமுனையில் கடந்த வருடம் இரண்டாவது இடத்தினைப் பிடித்த சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அணியினரை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரி அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

2014, 2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் மாகாஜனாக் கல்லூரி அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டவர் தற்போது பண்டத்தரிப்பு மகளிர் பாடசாலை அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்படுகின்றமையால் போட்டி பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ஆரம்பமானது.

போட்டி விறுவிறுப்பாக ஆரம்பமான போதும், அனுபவம் வாய்ந்த தேசிய வீராங்கனைகளை உள்ளடக்கிய மகாஜனாவிற்கு எதிராக பண்டத்தரிப்பு அணியினரால் நெடுநேரம் ஈடுகொடுக்க முடியாமல் போனது. கௌரி முதலாவது கோலினைப்போட்டு மாகாஜனா அணியை முன்னிலைப்படுத்தினார்.

முதல் கோல் பெறப்பட்டு சில நிமிடங்களிலேயே மத்திய கோட்டிற்கு அண்மித்த பகுதியிலிருந்து ஷானு உதைந்த பந்து நேரடியாக கோல் கம்பத்திற்குள் நுழைய, போட்டி ஆரம்பித்து 10 நிமிடங்களுக்குள்ளேயே இரண்டு கோல்களால் முன்னிலை பெற்றது மகாஜனாக் கல்லூரி.

தொடர்ந்தும் மகாஜனாவின் சுரேக, தர்மிகா ஆகியோரது முயற்சிகள் பண்டத்தரிப்பு  மகளிர் கல்லூரி அணியினரால் முறியடிக்கப்பட, 2-0 என நிறைவிற்கு வந்தது முதற்பாதி.

முதல் பாதி: மகாஜனாக் கல்லூரி 2 – 0 பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரி

இரண்டாம் பாதியின் ஆரம்பம் முதல் பண்டத்தரிப்பு மகளிர் அணியின் கிருஷாந்தினி, அணித் தலைவி நிறோசிகா ஆகியோரது முயற்சிகள் மதூசாவினால் தடுக்கப்பட்டு பந்து மத்திய களத்திற்கு பரிமாறப்பட்டவாறு இருந்தது.

தொடர்ந்தும் மாகாஜனாவின் ஷானுவிற்குக் கிடைத்த வாய்ப்புக்கள் அவர்களுக்கு சாதகமான முடிவெதனையும் கொடுக்கவில்லை. மறுமுனையில் நிறோசிகாவின் முயற்சிகள் தொடர்ந்தும் தடுக்கப்பட்டன.

இதன் காரணமாக கோல் ஏதுமின்றி இரண்டாம் பாதி நிறைவிற்கு வர 2-0 என இறுதிப் போட்டியில் வெற்றியீட்டிய மகாஜனாக் கல்லூரி அணி, தொடர்ச்சியாக நான்காவது வருடமாக (2014, 2015, 2016, 2017) வடக்கு மாகாண பெண்கள் உதைபந்தாட்டக் கிண்ணத்தினைத் தமதாக்கியது.

முழு நேரம்: மகாஜனாக் கல்லூரி 2 – 0 பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரி

Thepapare.comஇன் ஆட்ட நாயகி – பாஸ்கரன் ஷானு (தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி)

கோல் பெற்றோர்

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி – சுரேந்திரன் கௌரி, பாஸ்கரன் ஷானு

இரண்டாம் இடம் பெற்ற பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரி அணி இரண்டாம் இடம் பெற்ற பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரி அணி

மூன்றாம் இடத்திற்கான போட்டி

அரையிறுதியில் தோல்வியுற்ற சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அணியினர் மற்றும் கனகராயன்குளம் மாகா வித்தியால அணியினர் இப்போட்டியில் மோதினர்.

இதில் ஆதிக்கம் செலுத்திய சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அணியினர் தமக்குக் கிடைத்த வாய்ப்புக்களை நழுவவிட்டதுடன், அவர்கள் நிறைவு செய்த மூன்று வாய்ப்புக்களும் ஓஃப் சைட்டாக அமைந்தன. கனகராயன்குளம் அணியிரும் தமக்குக் கிடைத்த ஓரிரு வாய்ப்புக்களையும் நழுவவிட்டனர். இவற்றின் காரணமாக போட்டி ஆட்ட நேரம் கோல் ஏதுமின்றி நிறைவிற்கு வந்தது.

அதனைத் தொடர்ந்து வெற்றியாளரைத் தீர்மானிப்பதற்கான பெனால்ட்டி உதையில் 3-2 என வெற்றிபெற்ற சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அணியினர் மூன்றாவது இடத்தினை தமதாக்கினர்.

இப்பெண்கள் தொடரானது, வடக்கிலே ஆண்கள் உதைப்பந்தாட்டம் மட்டுமே தரமானது, பெண்கள் உதைப்பந்தாட்டம் வலுவற்றது எனும் கருத்தினை பொய்யாக்கி நிற்கின்றது. பெண்கள் அணியினரின் விளையாட்டில் ஒரு சிறந்த தரத்தையும், சிறந்த வீராங்கனைகளையும் காண முடியுமாக இருந்தது.

பொறுப்புடைய தரப்பினர், பெற்றோர், ஆசிரியர்கள், பயிற்றுவிப்பாளர்கள் ஆகியோர் வீராங்கனைகளை தொடர்ந்தும் ஊக்குவிக்கும் பட்சத்தில் வடக்கிலிருந்து பல வீராங்கனைகள் தேசிய அணியில் களங்காண்பர் என்பதற்கு இத்தொடர் சிறந்த உதாரணமாக இருந்தது.

3rd-Place மூன்றாம் இடம் பெற்ற சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அணி

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.