Jump to content

“பரீட்சை எழுத வேண்டுமா? உள்ளாடைகளைக் கழற்றுங்கள்”


Recommended Posts

“பரீட்சை எழுத வேண்டுமா? உள்ளாடைகளைக் கழற்றுங்கள்”

 

 

கேரளாவில், ‘நீட்’ எனப்படும் உயர்கல்விக்கான அனுமதிப் பரீட்சை எழுதச் சென்ற மாணவியரிடம், உள்ளாடைகளைக் கழற்றிவிட்டு வருமாறு கூறிய நான்கு ஆசிரியர்கள் தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

6_V_Neet.jpg

இந்தியாவில், ‘நீட்’ எனப்படும் தேசிய தகுதிகாண் மற்றும் அனுமதிப் பரீட்சை நடப்பது வழக்கம். இதில் சித்தியெய்துபவர்கள் அரச மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலைப் பட்டம் கற்க அனுமதிக்கப்படுவர். இதற்கான அனுமதிப் பரீட்சைகள் இன்று நடைபெற்றன.

இத்தேர்வின்போது மாணவ, மாணவியர் விடைகளைப் பார்த்து எழுத வாய்ப்புள்ளது என்பதனால் ஆடைக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது வழக்கம்.

எனினும், கேரளாவின் கன்னூர் மாவட்டத்தின் ‘நீட்’  நிலையம் ஒன்றில், பரீட்சை எழுத வந்த மாணவியர் உள்ளாடையைக் கழற்றிவிட்டு வந்து பரீட்சை மண்டபத்தில் அமருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

உள்ளாடைகளைக் கழற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்ட மாணவியர் அதிர்ச்சியடைந்தபோதும், பரீட்சைக்கு நேரமானதாலும், அடுத்து என்ன செய்வது என்று தெரியாததாலும் உள்ளாடைகளைக் கழற்றி, மண்டபத்தின் வெளியே நின்ற தங்களது பெற்றோரிடம் கொடுத்துவிட்டு வந்து பரீட்சை எழுதினர்.

இதுபற்றித் தெரியவந்த பெற்றோர், நீட் நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனினும், பரீட்சையில் விடைகளைப் பார்த்து எழுத மாணவர்கள் முயற்சிக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் கூறினர்.

எனினும், இது பற்றி அறிந்த பெண்கள் அமைப்பினரின் ஆர்ப்பாட்டத்தால், குறித்த நீட் நிலையத்தின் நான்கு ஆசிரியர்கள் தற்காலிகமாகத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்தப் பிரச்சினை குறித்து கேரள முதலமைச்சரிடம் மனு கொடுக்கப் போவதாக பாதிக்கப்பட்ட மாணவியரின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

http://www.virakesari.lk/article/19864

Link to comment
Share on other sites

'உள்ளாடைல ஹுக் இருந்தா, 'பீப்' சத்தம் கேக்கத்தான் செய்யும்!''- நீட் தேர்வில் கதறிய மாணவி

 

‘சார்... 'உள்ளாடைல ஹுக் இருந்தா, மெட்டல் டிடெக்டர்ல 'பீப்' சத்தம் கேக்கத்தான் செய்யும்!''- அந்தக் கண்காணிப்பாளருக்கு மாணவி விளக்கம் கொடுத்தும் எந்தப் பலனும் இல்லை. 'அதெல்லாம் முடியாது பீப் சத்தம் வந்தா உள்ளே விட மாட்டோம்' எனக் கறாராக பதில் கிடைத்துள்ளது. பக்கத்தில் கழிவறை கூட இல்லை. தேர்வுக்கு இன்னும் 10 நிமிடங்கள்தான் இருக்கிறன. கழிவறை இல்லாத நிலையில், மறைவிடம் சென்று, உள்ளாடையைக் கழற்றிவிட்டு தாயைத் தேடி ஓடியுள்ளார்.

 

நீட் தேர்வு

தேர்வறைக்கு வெளியே இருந்த தாயைக் கண்டுபிடித்து அவரிடம் உள்ளாடையைக் கொடுக்க, அவருக்கோ என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. மூச்சு வாங்க தேர்வறைக்குள் நுழைந்த 18 வயது மாணவியால், எப்படி தேர்வை நல்ல முறையில் எழுதியிருக்க முடியும்? பயங்கர அனுபவத்தையையும் அவஸ்தையையும் சந்தித்த அந்த மாணவி தனது பெயரைக் கூறவோ... முகத்தைக் காட்டவோ விரும்பவில்லை. சம்பவம் நடந்தது கேரளத்தின் கண்ணூரில். எதற்கெடுத்தாலும் மனிதஉரிமை பற்றி பேசும் நகரம் இது. 

மற்றொரு மாணவி ஜீன்ஸ் அணிந்தவாறு தேர்வுக்கு சென்றுள்ளார். ஜீன்ஸ் பேன்ட்டில்,  இரும்பு பட்டன்தானே இருக்கும். உடனே, அதனை பிடுங்க உத்தரவிட்டுள்ளனர். மாணவியின் தந்தை 3 கி.மீ தொலைவு அவசரம் அவசரமாக ஓடி சென்று புதிய உடை வாங்கி வந்துள்ளார். அதனை அணிந்து கொண்டு, மாணவி தேர்வு எழுதியுள்ளார். 'இந்த சம்பவத்தால் என் மகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி, தேர்வு கூட சரியாக எழுதவில்லை' என குற்றம் சாட்டுகிறார் மாணவியின் தந்தை.

கேரளாவில், பல மாணவிகளுக்கும் நீட் தேர்வு பயங்கர அனுபவத்தைக் கொடுத்துள்ளது. தேர்வு நடந்தது, ஞாயிற்றுக்கிழமை என்பதால், பெரும்பாலான கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. திறக்கும் கடைகள் கூட காலை 9 மணியளவில் அடைத்து கிடந்துள்ளன. இதனால், மாணவிகளும் பெற்றோர்களும் கடும் அவஸ்தைக்குள்ளாகி இருக்கின்றனர். ஆனால், எதையும் பற்றி அலட்டிக் கொள்ளாத அதிகாரிகள் மெட்டல் டிடெக்டர்' பீப்' சத்தம் கொடுத்தால் போதும் அதைக் கழற்று... இதைக் கழற்று என கட்டளையிட்டுள்ளனர்.

தேர்வு மைய கண்காணிப்பாளர்களின் அடாவடி நடவடிக்கைகள் மாணவிகள், பெற்றோரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் தந்தை ஒருவர் கண்ணூர் போலீசில் புகார் அளித்துள்ளார். பெற்றோர்கள் பலரும் புகார் அளித்துள்ள நிலையில்,  கேரள மாநில மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. ஆடைக் கட்டுப்பாடு என்ற பெயரில் நடந்த அத்துமீறல்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து மூன்று வாரங்களுக்குள் விளக்கமளிக்குமாறு சிபிஎஸ்இ தென்மண்டல இயக்குநருக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

கேரள மாநிலக் குழந்தைகள் உரிமைகள் ஆணையமும் விளக்கம் கேட்டுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன், 'ஆடைக் கட்டுப்பாடு என்கிற பெயரில் நடந்துள்ள அத்துமீறல்களை எந்த நாகரிகமான சமுதாயமும் ஏற்றுக்கொள்ளாது.  குழந்தைகளுக்கு இப்படி தொந்தரவு கொடுத்திருப்பது அவர்களை மனதளவில் பாதிப்புக்குள்ளாக்கும் செயல்'' என கண்டித்துள்ளார். 

 

மாணவியின் உள்ளாடையை  கழற்ற சொன்ன சம்பவம் நடந்த, கண்ணூர் பள்ளியின் முதல்வரோ,' மெட்டல் டிடெக்டர் 'பீப்' சத்தம் வந்தால், நிச்சயம் உள்ளே அனுமாதிக்காதீர்கள்' என எங்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. சிபி.எஸ்இ நிர்வாகம் தந்த உத்தரவை எங்களால் எப்படி மீறி முடியும்' என கேள்வி எழுப்புகிறார். மாணவ -மாணவிகள் காப்பியடிப்பதை சாத்தியமான முறையில் தடுப்பதை விட்டு விட்டு, இப்போது சாக்குபோக்கு சொல்வதாக பெற்றோர்கள் குமுறுகின்றனர். 

 

http://www.vikatan.com/news/india/88854-‛i-am-humiliated’-says-kerala-girl-who-was-forced-to-remove-her-innerwear.html

Link to comment
Share on other sites

நீட் நுழைவுத் தேர்வில் காட்டியது கடுமையா, கொடுமையா?

 

இந்தியா முழுவதும், மே 7ஆம் தேதியன்று நடைபெற்ற மருத்துவப் படிப்பில் சேருவதற்கான, நீட் எனப்படும், தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு எழுத வந்த மாணவ, மாணவியர் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதால் அவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

கோப்புப் படம்படத்தின் காப்புரிமைMANPREET ROMANA/AFP/GETTY IMAGES Image captionகோப்புப் படம்

தேர்வு எழுத வந்த மாணவர்கள் முழுக்கை சட்டை அணிய அனுமதி வழங்கப்படாததால் தேர்வு மையத்துக்குள் செல்வதற்கு முன்பாக மாணவர்கள் கத்தரிக்கோலைக் கொண்டு தங்கள் சட்டையை கத்திரித்தனர்

அதில் உச்சபட்சமாக கேரளாவின் கன்னூர் பள்ளி ஒன்றில், தேர்வு எழுத வந்த மாணவி ஒருவரின் உள்ளாடையை அகற்றச் சொன்னதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அச்சம்பவத்தில் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர்கள் நான்கு பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி கேரளத்தைச் சேர்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் பி.கே. ஸ்ரீமதி, "மாணவியின் மேல் உள்ளாடையை அகற்றுமாறு கூறியது, மனிதாபிமானமற்ற, வெட்கக்கேடான செயல்" என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

"உள்ளாடையில், மெட்டல் கொக்கி இருந்த காரணத்தால், அதை அகற்றுமாறு கோரப்பட்டிருக்கிறார். அதனால், ஒரு நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு உணர்வுடன் அவரால் தேர்வை எழுதியிருக்க முடியாது. இது அந்தப் பெண்ணின் மனித உரிமையை மீறும் செயல்" என்று கூறிய ஸ்ரீமதி, ஆடை கட்டுப்பாட்டு விதிமுறைகளை மறு ஆய்வு செய்யுமாறு தேர்வை நடத்தும் சிபிஎஸ்இ நிர்வாகத்தைக் கேட்டுக் கொள்ளப் போவதாகத் தெரிவித்தார்.

போராட்டம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

கேரள முதல்வர் இந்தப் பிரச்சனையில் நேரடியாகத் தலையிட வேண்டும் என்றும் அவர் கோரினார்.

மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்?

இதற்கிடையில், இந்தச் சம்பவம் குறித்து கேரள மனித உரிமை ஆணையம் உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இது மாணவியின் மனித உரிமையை மீறும் நடவடிக்கை என்றும், தேசிய மனித உரிமை ஆணையம் இதில் தலையிட வேண்டும் என்றும் கோரியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து, மூன்று வாரங்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ பிராந்திய இயக்குநருக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், கன்னூர் மாவட்ட காவல்துறை தலைவர் மற்றும் கேரள பல்கலைக்கழக பதிவாளர் ஆகியோரும் தனித்தனியாக அறிக்கைகள் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளி முதல்வர் விளக்கம்

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அப்பள்ளியின் முதல்வர் கே. ஜமாலுதீன், ஆசிரியர்கள் மாணவியின் உள்ளாடையை கழற்ற வற்புறுத்தவில்லை என்று குறிப்பிட்டார். ''தேர்வு எழுதவந்த அனைவரும் சோதனை செய்யப்பட்டனர். குறிப்பிட்ட அந்த மாணவி சோதனை கருவி (metal detector) வழியாக நடந்து வந்தபோது சத்தம் கேட்டது. நான்கு ஆசிரியர்கள் அந்த மாணவியிடம் ஏதாவது தேவையற்ற பொருள் இருந்தால் அதை வெளியே எடுத்துவிட்டு தேர்வுக்கு போகுமாறு கூறினார். ஆனால் இந்த கருத்து தவறாக பரவிவிட்டது,'' என்றார்.

நான்கு ஆசிரியர்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது பற்றி கேட்டபோது, ''விசாரணைக்கு பின்னர் அவர்கள் மீண்டும் பணியில் இணைவார்கள்,'' என்றார் ஜமாலுதீன்.

கல்லூரி மாணவிகள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

மாணவிகள் தங்கள் அணிருந்திருந்த நகைகளை அகற்றுமாறு கோரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

மாணவர்கள் தேர்வில் முறைகேடு செய்வதைத் தடுக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து, சென்னையில் தேர்வு எழுதிய மாணவி ஒருவரிடம் பேசிய போது, பத்து மணி தேர்விற்கு, காலை 7.30 மணிக்கு அவருக்கு நுழைவு அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவித்தார். தனது தேர்வு மையத்தில் சுடிதார் அணிந்திருந்தால் துப்பாட்டா அணிய தடை விதிக்கப்பட்டதாகவும், கம்மல், வளையல், கொலுசு போன்ற அணிகலன்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும் தான் அணிந்திருந்த கொலுசையும் தனது பெற்றோரிடம் கொடுத்துச் சென்றதாகவும், தெரிவித்தார்.

மாணவ, மாணவியர்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

மேலும் தேர்வு எழுத வந்த மாணவர்களின் காதுகளில் டார்ச் லைட்டை அடித்துப் பார்த்ததாகவும் அம்மாதிரியான சோதனை நடவடிக்கைகள் ஏன் நடத்தப்பட்டது என்று தனக்கு புரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

 

பெண்கள் ஹீல்ஸ் வைத்த செருப்புகள் அணியவும் தடை விதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் மற்றொருமொரு மாணவர் தான் தேர்விற்கு செல்லும் முன் தேர்வு எழுதுவதற்கான அட்டையில் குறிப்பிடப்பட்டிருந்த விதிமுறைகளை படித்து, அவ்வாறு நடந்து கொண்டதால் தனக்கு எந்த ஒரு பிரச்சனையும் வரவில்லை என பிபிசியிடம் தெரிவித்தார்.

மாணவர்கள் இவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதற்கு, திமுக செயல் தலைவர் ஸ்டாலின், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷணன், உட்பட தமிழக அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

http://www.bbc.com/tamil/india-39858264

Link to comment
Share on other sites

சோதனை ஏன்?
'நீட்' தேர்வுக்கு உள்ளாடை வரை சோதனை ஏன்?
 
 
 

'நீட்' மருத்துவ நுழைவுத் தேர்வில் முறைகேடு களை தடுக்க, உள்ளாடைகளை சோதனை யிடும் அளவுக்கு,கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வர, 2015ல் நடந்த தில்லு முல்லுகளே காரணம் என, கூறப்படுகிறது.

 

Tamil_News_large_1767577_318_219.jpg

இரண்டு ஆண்டுகளுக்கு முன் வரை, நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில், மத்திய அரசின், ௧௫ சதவீத எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., இடங்களுக்கு மட்டுமே, ஏ.ஐ. பி.எம்.டி., என்ற, அகில இந்தியபொது மருத் துவ நுழைவுத்தேர்வான - 'நீட்' நடத்தப்பட்டது.

கடந்த, 2015 மே மாதம், இந்த பொது நுழைவுத் தேர்வு நடந்த போது, வினாத்தாள், 'லீக்' ஆனது. 'வாட்ஸ் ஆப்' மூலம், 90 கேள்விகள் வெளியா கின. அதற்கான பதில்களும், மாணவர்களுக்கு கிடைத்தன.ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த, உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் மூலம், நான்கு பேர் கும்பல், இந்த தில்லு முல்லுவில்

ஈடுபட் டது. இதற்காக, பணம் கொடுத்த மாணவ, மாணவி யர் பலர், தங்கள் பனியன், 'பிரா, இன்ஸ் கர்ட்' போன்றஉள்ளாடைகளில், 'மைக்ரோ ப்ளூடூத் டிவைசர்' பொருத்தி, அதற்கான மைக்குகளை, சிறிய பொத்தான் வடிவில், காதுகளில் கம்மல் போன்று அணிந்து கொண்டனர். இதில், ப்ளூடூத் டிவைசர், ஆடையின் கொக்கியில் பொருத் தப்பட்டது. இந்த டிவைசரில், 'சிம் கார்டு' பொருத் தப்பட்டு, அது மினி மொபைல் போன் போல் இயங்கியது.

கம்மல் போன்று பொருத்தப்பட்ட, 'மைக்கில்' மொபைல் போனில்பேசுவது கேட்கும்.வெளியே கேள்வித்தாளையும், பதில்களையும் தயாராக வைத்திருந்த தரகர்கள், தேர்வு அறையில் இருந்த வர்களிடம், மொபைல் ப்ளூடூத்டிவைசரில் அழைத்து, எந்த கேள்விக்கு, எந்த பதில் என்பதை கூறினர். இந்த முறைகேடுக்கு, ஒவ்வொரு மாண வரும்,15 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்திருந்தனர்.

நாட்டையே அதிர வைத்த, இந்த வினாத்தாள் லீக் விவகாரம், உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனத் துக்கு உள்ளானது. ஹரியானா, உ.பி., பீஹார்,டில்லி என, பல மாநிலங்களில், ஆயிரக்கணக்கான மாணவர்கள், இந்த முறைகேட்டில் ஈடு பட்டனர். நிலைமை மோசமானதால், தேர்வை ரத்து செய்து, மறு தேர்வுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அப்போது, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மற்றும் வழிமுறைகளின் படியே, தற்போதைய, 'நீட்' தேர்வில், கட்டுப்பாடுகளை, சி.பி.எஸ்.இ.,

 

என்ற, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அமல்படுத்தியது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கடுமையான எச்சரிக்கை காரணமாகவே, இத்தகைய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்ட தாக, சி.பி.எஸ்.இ., அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த, 2015 ஜூலையில் நடந்த மறு தேர்வு; 2016 நீட் தேர்வு ஆகியவற்றில், இதே கட்டுப் பாடுகள் அமலாகியுள்ளன. அப்போது, தமிழக மாணவர்கள், இந்த தேர்வில் அதிக அக்கறை காட்டாத தால், கட்டுப்பாடுகள் தெரியவில்லை.

இந்த ஆண்டு, அனைத்து மாநில மாணவர் களுக்கும், நீட் தேர்வு கட்டாயம் என்றதால், கட்டுப்பாடுகளை கடைசி நேரத்தில் தெரிந்து கொண்டனர் என்றும், அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1767577

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதே மாதிரி பாராளுமன்றிலும் மணி அடிச்சா எல்லாவற்றையும் கழட்ட சொல்ல வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.