Jump to content

தமிழ்மொழியை புறக்கணிக்கிறதா பா.ஜ.க? தி.மு.க கிளப்பும் திடீர் பிரசாரம்


Recommended Posts


தமிழ்மொழியை புறக்கணிக்கிறதா பா.ஜ.க? தி.மு.க கிளப்பும் திடீர் பிரசாரம்
 

article_1494232356-article_1480303869-kaமொழிப்போருக்கான களம் மீண்டும் தமிழகத்தில் அமைந்து விடுமோ என்ற அச்ச உணர்வு அனைவர் மத்தியிலும் எழுந்திருக்கிறது.   

ஹிந்தி திணிப்பு என்ற காரணத்தையும் ‘நீட்’ தேர்வு எழுதுவதிலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கவில்லை என்ற அடிப்படையிலும் ‘தமிழ் மொழி காப்போம்’ என்று மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகம், விழிப்புணர்வு பிரசாரத்தில் இறங்கியிருக்கிறது. ஹிந்தி எதிர்ப்புப் போர் தமிழகத்தில் 1967 இல் ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்டது என்பது வரலாற்று உண்மை.   

ஆனால், அப்போது மத்தியிலும், மாநிலத்திலும் இருந்தது காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி. இந்த முறை மத்தியில் இருப்பது பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசாங்கம். அதேநேரத்தில் தமிழகத்தில் திராவிடக் கட்சிகளில் ஒன்றான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி.  

ஆட்சியிலிருக்கும் திராவிடக் கட்சி மத்திய அரசின் ஹிந்தி திணிப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தவில்லை என்று எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் திராவிடக் கட்சியான தி.மு.க குற்றம் சாட்டியிருக்கிறது.   

தங்கள் மீது நடத்தப்படும் வருமான வரித்துறை பரிசோதனைகளுக்குப் பயந்து, மத்திய அரசின் இந்த முயற்சியைத் தட்டிக் கேட்க மறுக்கிறது என்ற குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சிகள் முன் வைக்கும் ஹிந்தி திணிப்பு நடவடிக்கை பற்றி இதுவரை கருத்துச் சொல்லவில்லை.   

ஆனால், அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டிய அவர், “மத்திய அரசை அ.தி.மு.க அமைச்சர்கள் யாரும் பொது மேடைகளில் விமர்சிக்க வேண்டாம்” என்று அறிவுறுத்தியிருக்கிறார். எந்த அமைச்சராவது பழைய நினைப்பில் ஹிந்தித் திணிப்பு பற்றி பேசிவிடப் போகிறார்கள் என்ற எண்ணத்தில் முதலமைச்சர் அப்படி அறிவுறுத்தியிருக்கலாம் என்றே இந்த நேரத்தில் கருதப்படுகிறது.   

இது மட்டுமல்ல, ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டிய தமிழக அரசின் சட்டமூலத்தைக் குடியரசுத் தலைவருக்கே மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பவில்லை என்ற தகவல் வெளிவந்தும் கூட, இதுவரை முதலமைச்சர் அது பற்றி கருத்துக் கூறவில்லை.   

ஆகவே, மாணவர்களை நேரடியாக ஈர்த்து எடுக்கும் ‘ஹிந்தி’, ‘நீட்’ ஆகிய இரு விடயங்களை தி.மு.க கையில் எடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது என்றாலும், மாணவர்கள் மத்தியில் 1965 இல் இருந்தது போன்ற “ஹிந்தி எதிர்ப்பு உணர்வு இப்போது இருப்பது போல் தெரியவில்லை.   

ஆனாலும், ஹிந்தித் திணிப்பு என்பதை ஏன் தி.மு.க கையிலெடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.  
தமிழகத்தைப் பொறுத்தவரை ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ‘ஆட்சி’ என்பதே நடக்கவில்லை என்ற எண்ணம் அடித்தட்டு மக்களிடமும் இருக்கிறது.

அது ஓ. பன்னீர்செல்வமோ, இப்போது இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியோ இருவரும் முதலமைச்சர்களாக ஒன்றும் சாதனை புரிந்து விடவில்லை என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டதோடு மட்டுமின்றி, தமிழகத்தில் ஒரு பலவீனமான மாநில அரசு இருக்கிறது என்ற ‘இமேஜ்’ மக்கள் மத்தியில் உருவாகி விட்டது.   

இந்தச் சூழ்நிலையில் மாநிலத்தின் நலன் கருதி, மத்தியில் உள்ள பா.ஜ.க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தி.மு.க கருதுகிறது. 

அதிலும் ‘ஓ.பி.எஸ்’ என்றாலும் ‘இ.பி.எஸ்’ என்றாலும் அவர்களை ஆதரித்து தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பதே பா.ஜ.கவின் எண்ணவோட்டமாக இருக்கிறது என்ற கருத்து தி.மு.க தலைவர்கள் மத்தியில் ஆழமாக பதிந்து விட்டது.   

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை இரத்து செய்ததும், என்னதான் அடித்துக் கொண்டாலும் அ.தி.மு.க அரசு தொடரட்டும் என்று இருப்பதும் பா.ஜ.க தலைவர்கள் மத்தியில் உள்ள தி.மு.க எதிர்ப்பு என்று நினைக்கிறார்கள்.   

அதனால்தான், தி.மு.க எதிர்ப்பில் இருக்கும் பா.ஜ.கவுடன் நமக்கு என்ன உறவு தேவைப்படுகிறது என்ற ரீதியில் களத்தில் மத்திய அரசின் ஹிந்தி திணிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்துச் சென்று மக்கள் மத்தியில் போராட விரும்புகிறது.   

அதன் முதல் கட்டமாகத்தான் 6.5.2017 அன்று வேலூரில் நடைபெற்ற ஹிந்தி திணிப்பு மற்றும் நீட் தேர்வு குறித்த கண்டன கருத்தரங்கம் நடைபெற்றது.  

அக்கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், “ஹிந்தியை எதிர்க்கவில்லை. ஹிந்தி திணிப்பை மட்டுமே எதிர்க்கிறோம்” என்று கூறினாலும், அந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்ட மாணவர்களின் சிக்கலான கேள்விகளுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மற்றும் தி.மு.க ராஜ்ய சபை உறுப்பினர் திருச்சி சிவா ஆகியோர் இலாவகமாக பதிலளித்ததைப் பார்க்க முடிந்தது.   

அது மட்டுமல்ல, “ஹிந்தி கற்றுக் கொள்ள விடாமல் இளைஞர்களை தி.மு.க தடுத்து விட்டது” என்ற பிரசாரத்துக்கும் அந்தக் கருத்தரங்கில் பதில் கொடுத்தனர். இந்தக் கருத்தரங்கம் தமிழகமெங்கும் நடக்கப் போகிறது. தி.மு.க இதை முன்னின்று நடத்திச் செல்கிறது.   

அதில் வித்தியாசமான ஒரு வியூகம் என்பது, ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு என்று மட்டுமில்லாமல், “தமிழ் மொழியை மத்திய அரசு புறக்கணிக்கிறது” என்ற வாதத்தையும் சேர்த்தே தி.மு.க முன் வைக்கிறது.  

2011 சட்டமன்ற தேர்தலிலும் சரி, 2014 நாடாளுமன்ற தேர்தலிலும் சரி, தமிழகத்தில் உள்ள கட்சிகள் “காங்கிரஸுடன் கூட்டணி சேர” முடியாத அளவுக்கு தமிழகத்தில் ஒரு காங்கிரஸ் எதிர்ப்பை மாநிலத்தில் உள்ள கட்சிகள் ஏற்படுத்தின.   

அதில் முன்நின்றது அ.தி.மு.க; குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ‘காங்கிரஸ் எதிர்ப்பு’ என்பதைக் கையிலெடுத்து, மற்ற எந்தக் கட்சியும் தி.மு.கவுடனோ, காங்கிரஸுடனோ கூட்டணி வைத்து விடாமல் பார்த்துக் கொண்டார்.   

2011 சட்டமன்ற தேர்தலில் இருந்து அ.தி.மு.கவின் தொடர் வெற்றிக்கு இந்தப் பிரித்தாளும் வியூகம் பெரிதும் கை கொடுத்தது. ஆனால், இன்றைக்கு ஆட்சியிலிருக்கும் அ.தி.மு.க, பா.ஜ.க பற்றி வாய் திறக்க மறுக்கிறது. அதனால்தான் தி.மு.க இந்த ஹிந்தித் திணிப்பு என்ற வடிவத்தில் பா.ஜ.க எதிர்ப்பை கடுமையாகத் தமிழகத்தில் விதைக்கிறது.  

இன்றைக்கு தி.மு.க- காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகள் தலைமையில் ஒரு ‘பா.ஜ.க எதிர்ப்பு அணி’ உருவாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அ.தி.மு.க, பா.ம.க, ம.தி.மு.க, தே.மு.தி.க, போன்ற கட்சிகள் ‘பா.ஜ.க தலைமையில்’ ஓர் அணியை 2014 நாடாளுமன்ற தேர்தலில் உருவாக்கியது போல் உருவாக்க முயற்சிக்கலாம் என்று தி.மு.க கருதுகிறது.   

ஆகவே, காங்கிரஸ் எதிர்ப்பு, என்பதை கையிலெடுத்து அன்றைக்கு தி.மு.கவின் கூட்டணி வாய்ப்பை முறியடித்த ஜெயலலிதாவின் வியூகத்தை இப்போது, பா.ஜ.க எதிர்ப்பு என்ற போர்வையில் தி.மு.க கையிலெடுக்கிறது.   

நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் பிரச்சினை, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், ஹிந்தி திணிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி தமிழகத்தில் பா.ஜ.கவை தனிமைப்படுத்தும் முயற்சியாகவே இன்றைக்கு தி.மு.க மட்டுமல்ல - பா.ஜ.க எதிர்ப்பில் உள்ள மற்ற கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன.  

இந்த பா.ஜ.க எதிர்ப்பு உருவானால் அக்கட்சியுடன் வேறு கட்சிகள் கூட்டணி வைக்க முன் வராது என்பது கணிப்பு. இதை பா.ஜ.க தலைமையும் உணர்ந்து இருப்பது போல்தான் தெரிகிறது.  

 ஹிந்தி திணிப்பை எதிர்த்துக் கருத்தரங்கம் என்று தி.மு.க அறிவித்தவுடன், “ஹிந்தியில் பேசலாம் என்று அமைச்சர்களுக்கு வேண்டுகோள் மட்டுமே விடப்பட்டுள்ளது. அது கட்டாயமான உத்தரவு அல்ல” என்று உள்துறை அமைச்சகத்தின் சார்பில் விளக்க அறிக்கை வெளியிடப்பட்டது.   

“தமிழ் மொழியில் அனைத்து வளங்களும் இருக்கிறது. அந்த மொழியை படியுங்கள்” என்று பிரதமே ஒரு நிகழ்ச்சியில் பேசி, அந்த பேச்சுக்கு தமிழக பத்திரிக்கைகளில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தற்போது இலங்கையில் நடக்கும் ‘வெசாக்’ விழாவில் பங்கேற்க வரும் இந்தியப் பிரதமர் இலங்கை தமிழர் பிரச்சினையிலோ அல்லது சிறை பிடிக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களின் படகுகள் பிரச்சினையிலோ ஒரு தீர்வு காண முற்பட்டு, “பிரதமர் தமிழர் நலன் காக்க விரும்புவர்” என்ற பிரசாரம் தமிழகத்தில் முடுக்கி விடப்படலாம்.   

ஆகவே, பா.ஜ.க எதிர்ப்பை தமிழகத்தில் முகட்டுக்குக் கொண்டு போய் விட வேண்டும் என்று தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், அதை எப்படியும் முறியடிப்போம் என்று பா.ஜ.க தலைவர்களும் பந்தயம் கட்டிக் கொண்டு தமிழக அரசியல் களத்தில் நிற்கிறார்கள்.  

ஆனால், பா.ஜ.க எதிர்ப்பைக் கொண்டு சேர்க்கும் கட்சிகளுக்கு உள்ள உட்கட்டமைப்பு வசதி கட்சி ரீதியாக பா.ஜ.கவுக்கு தமிழகத்தில் இல்லை. அதேபோல் பா.ஜ.கவுக்கு தமிழக மக்களை வசீகரப்படுத்தும் தலைவரும் தமிழகத்தில் இல்லை.  

 பிரதமர் நரேந்திரமோடிக்கு ஓர் இமேஜ் தமிழகத்தில் இருக்கிறது என்றாலும், தமிழகம் சார்ந்த காவிரிப் பிரச்சினை, ஹைட்ரோ கார்பன் பிரச்சினை, தமிழக மீனவர்கள் பிரச்சினை போன்றவற்றில் பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசால் தமிழக மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு செயல்பட முடியவில்லை என்பது பெருத்த பலவீனமாக இருக்கிறது.  

அதைச் சமாளிக்க ‘தமிழ், மத்திய ஆட்சி மொழி’, அப்படியில்லையென்றால் ‘தமிழ் சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழி’ என்று ஏதாவது ஒரு விடயத்தில் மத்திய அரசு தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் முடிவு எடுக்க வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது.   

“தமிழ் மொழியை புறக்கணிக்கிறது பா.ஜ.க” என்ற தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் பிரசாரத்தை எப்படி சமாளிக்கப் போகிறது பா.ஜ.க என்பதை வைத்தே அந்தக் கட்சிக்கு தமிழகத்தில் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் எப்படிப்பட்ட எதிர்காலம் இருக்கிறது என்பது முடிவு செய்யப்படும்.  

- See more at: http://www.tamilmirror.lk/196247/தம-ழ-ம-ழ-ய-ப-றக-கண-க-க-றத-ப-ஜ-க-த-ம-க-க-ளப-ப-ம-த-ட-ர-ப-ரச-ரம-#sthash.0Z9dWeiT.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.