• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
Athavan CH

கண்ணகி கோவில்

Recommended Posts

banner1-e1488896823207-580x385.jpg

“பூம்புகார்” படத்தின் இறுதி காட்சி தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்தது, கண்ணகியின் கோபத்தில் கொழுந்து விட்டு எரிகிறது மதுரை!

இராமர் சீதையை பெண் அடிமை மாதிரித்தானே நடத்திருக்காரு! திரும்பி வந்த சீதையை ” தீ ” குளிக்கவும் சொன்னாரு, ஆனால் கண்ணகி “அநீதி இழைத்த ஒரு மன்னனையும் ஒரு நகரத்தையுமே எரிக்கிறாள்” என்றால், அந்த வீரத்தமிழச்சிக்குத்தானே கோவில் கட்டியிருக்கணும்?. “வடநாட்டில் ” பிறந்தால் தான் சாமியா கூட ஏத்துப்பாங்க போல!. இது நான்

stock-photo-144826343-e1488896645894.jpg

கண்ணகி சிலை (drscdn.org)

நம்ம ஊரில் தான் ரோட்டு ஓரத்தில் வச்ச சிலையும் தூக்குனாங்களே!. இது என் நண்பன்

ஏன்டா! கேரளா குமுளியில் கண்ணகிக்கு கோவில் இருக்குனு கேள்விப் பட்டுருக்கேன். ஆனா உண்மையானு தெரியல!. இது எங்க உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த என்னோட அப்பா.

தமிழச்சிக்கு கேரளாவில் கோவில்! உடனே போக மனது துடித்தாலும், உறுதிப்படுத்த எங்க ஆசிரியர் பிரபு தமிழன் (எழுத்தாளரும் கூட) அவர்களை தொடர்பு கொண்டேன்.

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குமுளியில் இருந்து 14 கி.மீ தொலைவில் இருக்கிறது. தமிழ்நாட்டின் பளியங்குடி எனும் இடத்தில் இருந்தும் நாம் போகலாம் ஆனால், வாகனம் செல்லும் பாதை குமுளி வழியாக மட்டுமே உள்ளது. அதுவும் வருடத்திற்கு “ஒருநாள் ” மட்டுமே அனுமதி.

ஒருநாள் மட்டுமா ? ஆம், சித்ரா பௌர்ணமி அன்று மட்டுமே அனைவருக்கும் அனுமதி உண்டு. சில மாத காத்திருப்புக்குப் பின்னால் அந்த நாளும் வந்தது!

முதல் நாள் இரவு தேனியில் தங்கி, குமுளி போவதற்கான திட்டமிடல் முடிவாகி அதிகாலை குமுளி அடைந்தோம். கோவில் போவதற்கு பஸ், கார், வேன் எதுவும் அனுமதி கிடையாது என்றும் வெறும் ஜீப் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று சொன்னார்கள்!, அதுவும் அனுமதி பெற்ற ஜீப் மட்டும் என்று சொல்லி எங்கு போய் சீட்டு வாங்க முடியும் என்று ஒரு இடத்தை காட்டினார்கள்.

சரி என்று போய் பார்த்தால்! 1கி.மீ தூரத்திற்கு வரிசையில் நிற்கிறது கூட்டம். நிற்பவர்ளில் பெருவாரியானவர்கள் கேரள மக்கள், அவர்களின் துர்க்கை அம்மன் கோவில் அங்கு உள்ளதாம். இங்கயுமா போட்டி என்று நொந்து கொண்டே நின்றோம்.

 

IMG_6541-e1488893632586.jpg

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குமுளியில் இருந்து 14 கி.மீ தொலைவில் இருக்கிறது. தமிழ்நாட்டின் பளியங்குடி எனும் இடத்தில் இருந்தும் நாம் போகலாம் (bp.blogspot.com)

 

கடைசியாக ஒரு நண்பர் (“மலையாளி” தமிழன் என்றால் தனியாக போயிருப்பாரே!) ஒரு ஜீப் ஏற்பாடு செய்தார், நாங்களும் பணம் செலுத்தி அவருடன் கிளம்பினோம். காட்டுப்பாதையை அடைந்ததும் கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறை நம்மை சோதித்து அனுப்ப, அடுத்தக் கட்டமாக வனத்துறை நம்மிடம் இருக்கும் அனைத்து நெகிழிப் பைகளையும் அப்புறப்படுத்தியே உள்ளே அனுமதிக்கிறார்கள்.

ஜீப்பை தவிர எந்த வாகனமும் பயணிக்க முடியாத பாதை என்று புரிய ஆரம்பிக்கிறது. அமைச்சர்களுக்கு தனிப் பாதை அமைக்க இது தமிழ் நாடு இல்லையே என்று பகடி செய்து கொண்டே பயணம் செய்தோம்.

உடம்பில் இருக்கும் அத்தனை எலும்புகளையும் குலுக்கி எடுத்த பின், கோவிலின் குறிப்பிட்ட தூரத்திற்க்கு முன் நின்றது வாகனம். அங்கிருந்து பார்த்த பின்தான் தெரிந்தது, தமிழ்நாட்டின் பளியங்குடி காட்டு வழிப் பாதை வழியாக சுத்தி இருக்கும் தமிழக கிராம மக்கள் நடந்து வந்து கொண்டிந்தார்கள்.

 

71635279-e1488894369835.jpg

வாகனம் செல்லும் பாதை குமுளி வழியாக மட்டுமே உள்ளது. அதுவும் வருடத்திற்கு “ஒருநாள் ” மட்டுமே அனுமதி.

ஏன் தமிழ்நாட்டில் இருந்து ஒரு பாதை போடவில்லை? என்று அங்கிருந்த ஒரு தமிழக காவலரிடம் கேட்டேன். “ரொம்ப வருஷம் முன்னாடி தமிழ்நாடு அரசும் ரோடுபோட திட்டம் போட்டு பணம் ஒதுக்கிருக்காங்க, ஆனா ஆட்சி மாறியதும் திட்டம் கிடப்பில் விழுந்துருச்சு!”

“ஓ! இந்த புது தலைமைச் செயலகம் மருத்துவமனையா ஆனதே அப்டி.” என்று நான் சொல்ல அவரும் சேர்ந்து சிரிச்சாரு.

“அது பரவால தம்பி! இப்ப கேரளாவில் இருந்து மட்டும்தான் பாதை இருக்கு அதுனால கோவில் கேரளா அரசுக்கு சொந்தம்னு சொல்றாங்க!”

“கோவில் கேரளாவில் தானே இருக்கு சார்! அப்ப அவுங்களுக்கு தானே சொந்தம்?”

“இல்லப்பா! வெள்ளைக்காரன் எடுத்த சர்வே கோவில் நமக்கு சொந்தம்னு சொல்லுது, சுதந்திரத்திற்கு பின் எடுத்த சர்வேவும் கோவில் நமக்கு தான் சொந்தம்னு சொல்லுது. ஆன நம்ம அரசு இத கண்டுக்கவே மாட்டேனுது.” (சின்னம்மா பிரச்சினையே இங்க பெருசா இருக்கு)

77312670-e1488894498787.jpg

ஒரு இனத்தோட அடையாளமாய் போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு கோவிலை இப்படி சேதமடைய விட்டுடாங்களே

இவ்வளவு சொன்னவரிடம்  கோவில் வரலாறு கேட்க்காமல் விடுவமா! அதையும் சொன்னாரு.

மதுரையை எரித்த கண்ணகி, கோபம் தணியாமல் 14 நாட்கள் நடந்து இந்த மலையை அடைந்து இங்கிருந்து கோவலன் ஆன்மாவோடு கலந்ததை பார்த்து உள்ளனர் இந்த மலைக் கிராம மக்கள். இந்த இடத்தை புனிதமாக கருத ஆரம்பித்துள்ளனர். ஒரு நாள் அந்தப் பக்கம் வந்த சேரன் செங்குட்டுவன் இதைக் கேட்டு வியந்து இமயத்தில் இருந்து கல் எடுத்துவந்து கோவில் கட்டியிருக்கிறான்.

“ஆமாம் சார்! மதுரை கல்லந்திரி கிராமம் பக்கத்தில் கண்ணகியும், கோவலனும் தங்கி இருந்தாங்க!, சிலம்பம் எடுத்துட்டு போன கோவலனோட கெதி இப்புடி ஆகுமுனு அந்த பொண்ணு நெனச்சு தான் பார்த்துருக்குமா?”, என்று பொலம்பிக்கிட்டே ஒரு  வீடு போன்ற மண் மேட்டை காட்டுனாங்க அந்த ஊர் மக்கள்.

“தம்பி, இது உண்மையா?, பொய்யானு யோசிக்க வேண்டாம். ஆனால் ஒரு இனத்தோட அடையாளமாய் போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு கோவிலை இப்படி சேதமடைய விட்டுடாங்களே” என்று வருத்தப்பட்டார் அந்த காவலர். அவருக்கு நன்றி சொல்லி விட்டு, மிக ஆபத்தான சறுக்கும் பாதைகளை கடந்து கோவிலை அடைந்தோம்.

77312565-e1488894277231.jpg

சேரன் செய்த கண்ணகியின் சிலை உக்கிரமான வடிவத்தில் இருந்ததாம். அதை திருடி விட்டார்களாம், இப்பொழுது இருப்பது சமகாலத்தில் வைத்தது அதுவும் சாந்தமான சிலை வடிவம்

கோவிலின் புதை படிமங்கள் என்று மட்டுமே சொல்லும் நிலையில் இருந்தது கண்ணகி கோயில். 95% சேதம் ஆகிவிட்டது, அங்கு இருக்கும் மீத அமைப்பை வைத்து மலையின் உச்சியில் இதன் பிரமாண்டத்தை உணர முடிகிறது.

இதில் மிக்க கொடுமை என்னவென்றால், சேரன் செய்த  கண்ணகியின் சிலை உக்கிரமான வடிவத்தில் இருந்ததாம். அதை திருடி விட்டார்களாம், இப்பொழுது இருப்பது சமகாலத்தில் வைத்தது அதுவும் சாந்தமான சிலை வடிவம்.

அனைவருக்கும் உணவு கொடுத்தனர், இவ்வளவு சிரமங்களுக்கு மத்தியில் உணவளித்த அந்த கிராம மக்களுக்கு எப்படி நன்றி சொன்னாலும் பத்தாது.

கடல் மட்டத்தில் இருந்து 5000 அடி உயரத்தில் உள்ளது கோவில், அங்கிருந்து வன விலங்குகளை பார்த்தது புது உணர்வை கொடுத்தது.

“நம்ம தொல்பொருளியல் துறை நீ சொன்ன மதுரையில் இருக்கும் கண்ணகி இருந்த வீட்டை ஏன் ஆராய்ச்சி பண்ணவில்லை?” என்று நண்பர் கேட்டார்.

ஏற்கனவே மதுரையின் “கீழடி” கிராமத்தில் சிந்து சமவெளி நாகரிகத்திற்கு இணையான தொன்மைவாய்ந்த பொருட்கள் கிடைத்தன. ஆனால் ஆராய்ச்சி தொடராமல் அதை மண்போட்டு மூடியும் விட்டனர். (ஆனால் வட இந்தியாவில் இராமர் கால பொருள் உள்ளதா என்று ஆராய பெரும் தொகை ஒதுக்கி உள்ளனர்). அதைக் கேட்கவே இங்கு நாதி இல்லை. இந்த நிலையில் கண்ணகி, தமிழ் வரலாறு என்று வாய் திறந்தால் பைத்தியம் என்று பட்டம் தான் கொடுப்பார்கள்.

“தமிழ்நாட்டில் வழிபடும் எல்லா பெண் தெய்வங்களும் கண்ணகி” என்று எண்ணி மனசை தேத்திக்க வேண்டியதுதான்! என்று நண்பர் பெருமூச்சு விட்டார்.

இருட்ட ஆரம்பித்ததால் அனைவரையும் வெளியேற்றினார்கள், இன்னும் எத்தனை வருடத்திற்கு தமிழர்கள் தன்னுடைய கோவில் என்று வழிபட முடியும்? ஒருவேளை இந்த “ஒரு நாள் ” வழிபாடும் நிறுத்தப்பட்டால்? மதுரை எரித்த கண்ணகி இந்த வஞ்சம் எரிக்க வர வேண்டும்!. என்ற வேண்டுதலோடு  “மீண்டும் அடுத்த சித்ரா பௌர்ணமிக்கான நாட்களை எண்ணிக் கொண்டே ஊர் திரும்பினோம் “.

https://roartamil.com/travel/mangaladevi-kannaki-temple/

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

கம்பம் பள்ளத்தாக்கும் கண்ணகி கோவில் பயணமும்.....

 
என்னுடைய முதல் பதிவு மிக நீண்ட நாட்களாக தள்ளி தள்ளி போய்கொண்டிருந்தது எழுதப்படுவதற்கு , ஏனெனில் இந்த பயண கட்டுரையை தான் எழுத வேண்டும் என்று விரும்பியதே காரணம் .

 பாண்டிய மன்னன் உண்மையை அறியாமல் கோவலனை கொன்றுவிட்டபின் அவனுடன் வாதம் புரிந்து உண்மையை எடுத்துரைத்தாள் கண்ணகி . பின்பு மதுரையில் உள்ள சான்றோர், குழந்தைகள் , மிருகங்கள் ஆகியவற்றை தவிர்த்து அனைத்தையும் எரித்து சாம்பலாகும்படி சாபம் விட்டாள் .பின் மதுரையை விட்டு வெளியேறி வைகை ஆற்றின் தென்கரை வழியாக நடந்து சென்று பதினாலு நாட்கள் கடந்து சேரநாட்டு எல்லையான விண்ணோத்திப் பாறை வந்தடைகிறாள்.

 இங்கு வசித்து வந்த குன்றக் குறவர்கள் என்று அழைக்கப்பட்ட பளியர்கள் ஆடிய குன்றக் குறவை நடனத்தினைப் பார்த்து அவளது கோபம் குறைகிறது. அவர்களிடம் தன வாழ்க்கையையும் தனக்கு நேர்ந்த துன்பத்தையும் சொல்லி வருந்துகிறாள். அப்போது விண்ணில் பிரகாசமான ஒளி தோன்ற அவ்வொளிக்கிடையே தேவர்களுடன் தோன்றிய கோவலன் கண்ணகிக்கு மாங்கல்யம் அணிவித்து அழைத்துச் சென்றதால் மங்கலதேவி என்ற பெயர் பெற்றாள்.

 இதைக் கண்டு வியப்படைந்த குன்றத்துக் குறவர்கள் முல்லைப் பெரியாறு ஆற்றங்கரையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சேரநாட்டின் மன்னன் செங்குட்டுவனிடம் தாங்கள் கண்டதையும் கேட்டதையும் கூறினர். இதை விசாரித்து அறிந்த மன்னன் சேரன் செங்குட்டுவன் அந்த இடத்தில் கண்ணகிக்கு கோயில் ஒன்றைக் கட்டினான். இந்த கண்ணகி கோயில் அமைந்துள்ள பகுதி மங்கலதேவி கண்ணகி கோட்டம் என்று அழைக்கப்படுகிறது. 

2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது இந்த கோவில் ,இங்கு சென்று வந்ததை இந்த பதிவில் எழுதுகிறேன் .

என்னுடைய பயணம் சித்திரை முழுநிலவு நாளுக்கு முன்தினம் தொடங்கியது . சித்திரை முழுநிலவுக்கு முதல் நாள் மதியம் 2மணியளவில் கம்பம் நகருக்கு வந்தடைந்தேன் . அங்கு ஜாபர் இன்டர்நேஷனல் ஹோடேலில் அறை பதிவு செய்திருந்தேன் . கம்பம் நகரில் உள்ளபடியே சிறந்த தங்கும் விடுதி. விடுதி வந்தடைந்தவுடன் சிறிது ஓய்வு எடுத்துவிட்டு சுருளி அருவிக்கு சென்றோம் நானும் என் நண்பரும் . சுருளி அருவி கம்பம் நகரில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது . ஒரு மணிக்கு ஒரு முறை மினி பஸ் கம்பம் பேருந்து நிலையத்திற்கு சிறிது தூரத்தில் இருந்து புறப்படுகிறது . பேருந்து நிலையம் சென்று ஏமாற வேண்டாம் . யாரிடமாவது விசாரித்து பஸ் புறப்படும் இடத்தை அடையலாம். 

அங்கிருந்து சுருளி அருவி க்கு சென்றால் அருவிக்கு அரை கிலோமீட்டர் முன்பே நமது வாகனங்களை நிறுத்திவிடவேண்டும் . பின்பு வனத்துறை சாலை வழியாக அருவிக்கு செல்ல வேண்டும்.வாகனங்கள் நிறுத்தும் இடம் அருகில் சிறிய கடைகள் இருக்கின்றன தேவையான சோப்பு ,ஷாம்பூ ஆகியவற்றை இங்கு வாங்கிகொள்ளலாம். இங்கு இளநீர் , கொய்யாபழம் போன்றவைகளும் கிடைகின்றன. சுருளி அருவியில் நாங்கள் சென்றிருந்த நேரத்தில் மிக சிறிதளவு தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருந்தது .இருந்தாலும் குளிப்பதற்கு போதுமானதாகவே இருந்தது .
001a.JPG

 
002a.JPG
 
003a.JPG
 
004a.JPG

சுருளி அருவியில் கவனிக்கப்பட வேண்டியவை .
 # ஆண்களுக்கு தனி இடம் மற்றும் பெண்களுக்கு தனி இடம் குளிப்பதற்கு இட வசதி உள்ளது .உடை மாற்றும் அறை பெண்களுக்கு தனியாக உள்ளது.அறைக்கு போகும் பாதை முழுவதும் ஈரமாக இருக்கும் என்பதால் கவனமாக நடக்க வேண்டும்.

 # இந்த மாதிரி ஏகாந்தமாக இருக்கும் அருவியை கண்டவுடன் இளைஞர்களுக்கு ஆர்வம் ஏற்படுவது என்பது இயல்பு என்றாலும் , இயற்கைக்கு முன்பு மனிதசக்தி ஈடு கொடுக்க ஒன்றுமே இல்லை என்பதை அறிந்து அருவிக்கு செல்வது ,முறையான இடத்தில குளித்து வருவது மட்டுமே உன்னதமான அனுபவத்தை கொடுக்கும்.

 # அருவிக்கு மேலே செல்லுவது போன்ற அபாயகரமான செயல்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் . காலம் காலமாக நீர் ஓடி ஓடி வழுக்கும் பாறையாக அனைத்தும் மாறி இருக்கிறது . எனவே முறையற்ற செயல்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.குழுவாக செல்பவர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டியது இது. பொது மக்கள் செல்லும் இடங்களுக்கு மட்டுமே செல்லுங்கள்.குழுவின் உறுப்பினர்கள் எவராவது வீர தீர செயல்களில் இறங்கும் நடவடிகையை கண்டால் கண்டிப்புடன் அதை தவிர்க்கசொல்லுங்கள் , இதை மீண்டும் மீண்டும் வலியுறுத்த காரணம் இது போன்ற அருவிகளில் நடக்கும் மரணங்கள் மட்டுமே. அப்படி ஒரு மரணத்தை கண்டதால் தான் இந்த அறிவுரை.

தயவு செய்து இன்ப சுற்றுலா செல்பவர்கள் அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர வேறு எங்கும் சென்று தங்களது ஆர்வத்தை காட்டுவதுஎன்பது சிறிது கவனம் பிசகினாலும் உங்களுடன் வந்திருக்கும் அனைவருக்கும் தீராத மனக்கவலையை தரும் .எனவே எச்சரிக்கை .

#வனத்துறை சோதனைசாவடியில் இருந்து அருவிக்கு போகும் பாதையில் நிறைய குரங்குகள் இருக்கின்றன . உணவு பொட்டலங்களை பாதுகாப்பாக எடுத்து செல்லவும். 

# சுருளிப்பட்டியில் இருபுறமும் திராட்சை தோட்டங்கள் உள்ளன .சில தோட்டங்களில் அங்கேயே திராட்சை விற்பனை நடைபெறுகிறது. தோட்டங்களில் வாங்குவதால் விலை கொஞ்சம் குறைவு.
  
 சுருளி அருவியில் இருந்து அறைக்கு திரும்பி சிறிது ஓய்விற்கு பின் அருகில் இருந்த கம்பராயர் பெருமாள் கோவிலுக்கு சென்றோம்.கம்பம் செல்பவர்கள் தவறவிடகூடாத கோவில் இது . இந்த கோவிலால்தான் கம்பம் என்ற பெயரே வந்ததாக வரலாறு. கோவிலுக்கு சென்று வந்தபின் இரவு உணவுக்கு அருகில் இருந்த உணவு விடுதிக்கு சென்றோம். ஹோட்டலில் உணவு வசதிகள் உண்டு , அறைக்கே வந்து தருகிறார்கள் . இருந்தாலும் கம்பம் நகரின் உணவின் சுவையை அறிய வெளியில் சென்றோம், நிறைய உணவு விடுதிகள் அருகிலயே இருக்கின்றன. நாங்கள் சென்ற உணவு விடுதி மிக சிறியது விறகு அடுப்பில் இட்லி சூடாக கிடைத்தது , அயிரை மீன் குழம்பு தனியாக விற்கிறார்கள். மிக அருமையான சுவையில் இருந்தது.

பின் அறைக்கு திரும்பினோம். சித்திரை முழுநிலவு நாளில் மட்டுமே தரிசிக்க அனுமதி உள்ள கண்ணகி தெய்வத்தை பார்க்கும் ஆவல் எழுந்தது ,அதிகாலை 4 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு விடுதியின் முன் நெடுஞ்சாலையில் நின்றிருந்தோம் .கம்பம் நகரில் இருந்து நிறைய ஜீப்புகள் செல்கின்றது. சிறந்த ஏற்பாடுகளை கம்பம் நகரின் கண்ணகி கோயில் வழிபட்டு குழுவினர் செய்திருந்தனர் . புதிதாக செல்பவர்கள் கம்பம் நகரிலேயே ஜீப் மூலமாக செல்வது மிக வசதியானது . குமுளி சென்றால் வாகன ஏற்பாட்டுக்கு மிகுந்த நேரம் ஆகும் . கம்பம் நகரிலேயே ஜீப்பில் செல்வது புத்திசாலித்தனம் . 

 சில குறிப்புகள் :-
 # கண்ணகி கோவில் ஒரு ஆண்டில் சித்திரை முழுநிலவு நாளுக்கு மட்டுமே பொதுமக்கள் வழிபட அனுமதி.ஏன் என்றால் பாதுகாக்கபட்ட வனத்தில் அமைந்துள்ளது. 

#தமிழகத்திற்கு சொந்தமான கோவில் இது, ஆனால் சாலை வசதி குமுளி ,கேரளா வழியாக மட்டுமே வாகனம் செல்லும் சாலை உள்ளது. 

#தமிழகத்திற்கு சொந்தமான கோவிலை அதன் உரிமையை கேரளா சமீப காலமாக மறுத்து வருகிறது .கோவிலின் பட்டா இந்த கோவில் தமிழகத்தில் உள்ளதை காட்டுகிறது. 

#கோவிலில் தமிழ் கல்வெட்டுகளை துணி கொண்டு கேரளா வனத்துறை மூடி மூடி வைத்துள்ளதை கவனித்தோம், இதை வருடம் வருடம் வந்து கொண்டிருக்கும் கம்பத்தை சேர்ந்த சிலர் எங்களுக்கு அந்த கல்வெட்டுகளை காட்டினார்கள்.

 #தமிழகத்தின் கற்பு தெய்வமான கண்ணகியை கேரள அரசு மங்கல தேவி என்று மட்டுமே பெயர் மாற்றம் செய்து அழைகிறார்கள் . தமிழகத்தின் வரலாற்றை சிறிது சிறிதாக மாற்றும் முயற்சி .இதை கம்பம் கண்ணகி வழிபாட்டு குழுவினர் முறியடிக்க முயற்சி எடுத்து வழிபாட்டிற்கு நிறைய தமிழர்களை திரட்ட பெரு முயற்சி எடுத்துக்கொண்டு இருகின்றனர் . அவர்களின் முயற்சி கண்டிப்பாக பாராட்ட பட வேண்டிய ஒன்றாகும் .

பகுதி இரண்டில் சித்திரை முழுநிலவின் பகல் பொழுதில் சென்ற பயணத்தை தொடர்கிறேன் ....உங்களின் கருத்துகளை ஆவலுடன் எதிர்பார்கிறேன்...

http://kaalapettagam.blogspot.ch/2013/06/blog-post.html

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this