Jump to content

மனவெளி அலைவு (சாந்தி நேசக்கரம்)


Recommended Posts

Thursday, April 20, 2017

மனவெளி அலைவு (சாந்தி நேசக்கரம்)

 
vs.jpg


அவனுக்கும் அவளுக்குமான உறவு உரையாடல்கள் மூலம் உருவாகி வளர்ந்து விருட்சமாகி நிற்கிறது. எந்த விடயங்களைப் பற்றி அவர்கள் பேசிக்கொள்ளவில்லை ? அவர்களுக்கிடையே பேசாப்பொருள் என்று எதுவுமே இருந்ததில்லை.

உரையாடலில் ஒருநாள்.....,

நாங்கள் முற்பிறப்பில ஒண்டாப் பிறந்திருக்கிறம் போல....அதுதான் இந்தப் பிறப்பிலயும் தொடருது.
என்றான் அவன்.
முற்பிறப்பெல்லாம் நம்பிறியேடா ?
இது அவள்.

தெரியேல்ல...,

ஆனால் உங்களுக்கும் எனக்குமான உறவு நுற்றாண்டுகளுக்கு மேல இருந்திருக்கு.

நீங்கள் அப்பிடி உணரேல்லயோ அக்கா ?

அவனது கேள்விக்கு பதிலாய் எதைச் சொல்ல ?

அவள் யோசித்த போது அவனே பதிலையும் சொன்னான்.

அடுத்த பிறப்பில நான் உங்களுக்கு மகனாப்பிறப்பன். கனகாலம் வாழுவன்.






பணியொன்றின் தேவைக்காக எதிர்பாராத சமயமொன்றில் தான் அவன் அவளுக்கு அறிமுகமானான்.

பணிகளால் கடந்து போனவர்கள் போல அவன் போய்விடாமல் காலமெல்லாம் தொடரும் உறவாகிப்போனவன். 2009 முள்ளிவாய்க்காலோடு அடையாளமறியாமல் அவளுக்கும் சொல்லாமல் போய்விட்டான்.

அமைதியே அவனது இயல்பு. யாரோடும் இலகுவில் ஒட்டிக்கொள்ளாத சுபாவம். அவன் வகித்த பொறுப்பு , அவனுக்கான தேசப்பணிகளில் தவிர்க்க முடியாத அவசியம்.

அடிப்படைப்பயிற்சியின் பிறகு சில சமர்களில் பங்கேற்றவன். பின்னர் அதிகாரிகள் சிறப்புப் பயிற்சி முடித்து தலைவரிடமிருந்து பாராட்டுப் பெற்றவன்.

அரசியல்துறையில் அவன் பணியாற்ற அனுப்பப்பட்ட போது அரைமனதோடு தான் வழங்கப்பட்ட பொறுப்பையேற்றான். பிறகு வழங்கப்பட்ட பொறுப்பின் அவசியத்தை உணர்ந்து முழுமையான கவனத்தையும் அதிலே ஈடுபடுத்தினான்.

நெடிதுயர்ந்த அவனது தோற்றத்திற்குள் படிந்திருந்த துயரங்கள் வருடக்கணக்காய் தனியே தாங்கியவன்.

அவளோடு அறிமுகமான பிறகு அவனே மாறிப்போனதாய் சொல்வான். மணிக்கணக்காய் பேசிக்கொண்டிருப்பான். மனசில் ஒளிந்திருந்த எல்லாக் கதைகளையும் அவளுக்குச் சொல்லத் தொடங்கினான்.

அக்கா என்ற அவனது அழைப்பில் சிறிதும் நடிப்பில்லை நம்பிக்கையே இருந்தது. அவனுக்காக பதிவு செய்து அவனோடு மட்டுமே பேசப்பயன்படுத்திய ஸ்கைப்பில் நதி என்ற பெயரையும் அவளையும் முழுமையாக அறிந்தவனும் அவனே.

உங்களைப் பாக்க வேணும் போலையிருக்கு. கமராவை போடுங்கோ.

06.04.2009 முகம்பார்த்துக் கடைசியாகக் கதைத்தான். ஆனந்தபுரத்தில் வீழ்ந்தவர்கள் பற்றியே கதைகதையாய் சொன்னான்.

எல்லாம் முடியப்போகுது...

உங்களை இனி பாக்க கதைக்க எல்லாம் வராதக்கா.

இப்ப கதைக்கிற இந்த நிமிசம் கூட சாவு என்னைத் தின்னலாம்.

எத்தினை உயிர்கள் எத்தினை கனவுகள் நினைக்காத எல்லாம் நடக்கப்போகுது.

வெல்வோம் என்றே முன்பெல்லாம் சொல்லுவான். அன்று  தோற்றுப்போகிறோம் என்ற உண்மையை அவனது ஒவ்வொரு வார்த்தைகளும் உறுதிப்படுத்திக் கொண்டிருந்தது.

அவனது கதைகளுக்கு நடுநடுவே கேட்டுக் கொண்டிருந்த வெடியோசைகள் ஒவ்வொன்றும் அவளது மனவெளிகளில் அவனை இழந்துவிடப் போகிறாய் என எச்சரித்துக் கொண்டேயிருந்தது.

அம்மாவோடை அடிக்கடி கதையுங்கோ.

அம்மா பாவம்.

எனக்காக மட்டுமே வாழுற சீவன் அம்மாவை கைவிட்டிராதைங்கோ அக்கா.

அம்மா பற்றி அவன் சொல்லிய போது வளமையைவிட அன்றைக்கு அதிகம் கலவரப்பட்டான்.

இதுவரையில் அம்மாவுக்கு அவன் பெண்களை அறிமுகப்படுத்தியதில்லை. அவளைத்தான் முதல் முதலில் அம்மாவுக்கு அறிமுகப்படுத்தினான். அக்கா என அவளைச் சொல்லியும் அப்பாவி அம்மா அவளை அவனது காதலியென்றே கனனகாலம் நம்பினாள்.

ஒருநாள் கதையோடு கதையாக அம்மா அவள் குடும்பம் பற்றி விசாரித்த போது அவள் 2பிள்ளைகளின் அம்மா என்பதைச் சொல்லியும் அம்மா நம்பவில்லை.

அவள் சொல்வதையெல்லாம் அவன் செய்கிறான். அவள் பற்றி அதிகம்  அம்மாவோடு கதைக்கிறான். ஆக அவர்கள் காதலிக்கிறார்கள் என்பது தான் அம்மாவின் முடிவு.

எட லூசா அம்மாட்டை சொல்லடா ஒரு இழவும் இல்லையெண்டு.

மனிசிக்கு சொல்லீட்டன் மனிசி நம்பாதாம். ஆர் என்ன சொன்னாலும் எனக்கு நீங்கள் அக்கா தான்.

அன்று தான் இறுதியாக முகம்பார்த்துக் கதைத்தான். அதன் பிறகு பலதரம் கதைத்திருக்கிறான் ஆனால் முகம் காட்டியதில்லை. தனது படங்கள் நிறைய அனுப்பியிருந்தான்.

000        000      000

'நான் இல்லாட்டி எனக்காக அழுவியள்...என்னக்கா....'
என்றான் அவன்.

போடா விசரா நீ வருவாய் நான் நம்பிறன்டா.
என்றாள் அவள்.

பலரது மீள்வை எதிர்பார்த்திருந்தாலும் அவன் கட்டாயம் வருவான் என்பதை அவள் அதிகம் நம்பினாள். ஒவ்வொரு முறை கதைத்து விடைபெறும் போதும் அதுவே தன் இறுதிநாளாகவே சொல்லிச் செல்வான்.

அன்றைய நிலமை அப்படித்தானிருந்தது. உலகத்தால் கைவிடப்பட்டு குறுகிய நிலப்பரப்பில் லட்சம்பேரின் வாழ்வு முடங்கியிருந்தது.

வெளிநாடுகளில் தெருவில் இறங்கித் தமிழர்கள் போராடினர். எந்த நாடும்  கவனிக்கவில்லை. வல்லவன் வகுத்த விதி மே 17 2009 அன்றோடு தமிழர்களின் பெரும் சாம்ராஜ்ஜியம் கலைந்தது.

நந்திக்கடலில் கலந்த தமிழ் இரத்தம் வங்கக்கடலின் பேர(ய)லைகளோடு சேர்ந்து கரையொதுங்கிய உயிர்களை வெற்றுடல்களாக கடந்து போனது.

அவன் கட்டாயம் வருவான். எங்கோ உயிரோடு வாழ்கிறான் என நம்பும் அவன் அம்மாவின் நம்பிக்கையின் முன்னால் அவள் மௌனமாகிவிட்டாள்.

தன் மருமக்கள் என ஆசையாய் அவள் பிள்ளைகளுக்காக அவன் எழுதிய கடிதங்கள் அனுப்பிய பரிசுப் பொருட்கள் வடிவில் அவன் நினைவுகள் அடிக்கடி வந்து போகும்.

அழுகை வரும் ஆறுதல் தர யாருமற்று பொழுதெல்லாம் அவன் நினைவுகளும் கதையும் மனவெளியெங்கும் துயர் கனத்து சோர்ந்து போவாள்.

இரவில் வானத்தை பாருங்கள் அக்கா. வானத்தில் கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்கள் பெரும் நம்பிக்கை தரும்.

மனம் கனத்த ஒருபொழுதொன்றில் அவனுக்குத் தன் துயர் சொல்லி அழுத போது சொன்னான்.

கனத்த இருளில் வானத்தில் ஒளிரும் நட்சத்திரங்களில் அவன் நம்பிக்கையின் ஒளிப்பொட்டுக்களாய் ஒளிர்கிறான். இன்றைக்கும் அவன் ஞாபகத்தில் அடிக்கடி நிறைகிறான்.

ஏன் ? எதற்காக ?

துயர் படிந்த மாதத்தின் துயரமா ? இல்லை அவன் சொன்னது போல முற்பிறப்பின் உறவுத் தொடரா ? தெரியவில்லை. ஆனால் அவனைப் பார்க்க வேண்டுமென்ற உணர்வு மேலிடுகிறது.

உடல் நடுங்குகிறது. சுவாசத்துடிப்பு அதிகமாகிறது. அவன் நிழற்படத்தைக் கணணித் திரையில் பார்த்துக் கொண்டிருக்கிறாள். காணாமற்போன அவன் வந்துவிட வேண்டும். கண்ணீரோடு கடவுளை மன்றாடுகிறாள்.

சாந்தி நேசக்கரம்
19.04.2017

http://mullaimann.blogspot.de/2017/04/blog-post.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்றும் நீங்காத நினைவுகள்  சிலருக்கு இது போலவே  வருவானா (ளா ) மாட்டாளா  தொடரட்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 பல போராளிகளுக்கும் மரணித்த போராளிகளின் உறவுகளுக்கும் மனவெளி அலைவு இப்படித்தான் இருக்கின்றது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி சகோதரி.... என்னத்தை சொல்ல....!!

Link to comment
Share on other sites

16 hours ago, முனிவர் ஜீ said:

என்றும் நீங்காத நினைவுகள்  சிலருக்கு இது போலவே  வருவானா (ளா ) மாட்டாளா  தொடரட்டும் 

இருக்கா இல்லையா ? இந்தத் துயர் தான் கொடுமை.tw_cry:

6 hours ago, putthan said:

 பல போராளிகளுக்கும் மரணித்த போராளிகளின் உறவுகளுக்கும் மனவெளி அலைவு இப்படித்தான் இருக்கின்றது...

மன அலைவு மனவழுத்தமாகி உயிர்களை வாங்குகிற கொடுமை தான் இப்போ அதிகம்.கருத்துக்கு நன்றி புத்தா.

5 hours ago, suvy said:

பகிர்வுக்கு நன்றி சகோதரி.... என்னத்தை சொல்ல....!!

கருத்துக்கு நன்றி சுவியண்ணா.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.