Jump to content

இரட்டை இலையின் மூச்சு மூவர் கையில்!


Recommended Posts

இரட்டை இலையின் மூச்சு மூவர் கையில்!

 

‘சின்ன அம்மன்’ எனப் பாராட்டிப் போற்றப்பட்ட சசிகலா, பரப்பன அக்ரஹாராவில் சிறை வைக்கப்பட்டுள்ளார். `ஆர்.கே.நகரில் வென்று, தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகிவிட வேண்டும்' என்ற கனவில் இருந்த ‘திடீர் தலைவர்’ தினகரன், அனைத்தும் சிதைந்து மனச்சிறையில் p8b.jpgமாட்டிக்கொண்டுவிட்டார். யாரோ ஒரு ஜெயலலிதாவின் வளர்ச்சிக்கு 28 ஆண்டுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிய நடராசனால், சொந்த மனைவிக்கு  28 நாள்கள்கூட உதவ முடியாத நிலையில் உடல்நலம் பாதிக்கப் பட்டுள்ளது. `வளர்ப்பு மகன்' என ஆராதிக்கப்பட்டு, ‘சின்ன எம்.ஜி.ஆர்’ எனத் தன்னைத்தானே உருவகப்படுத்திக் கொண்டு, கோயில் கோயிலாகச் சென்று, யாகம் யாகமாக நடத்திவந்த வி.என்.சுதாகரன் சிறையில் சிக்கிக் கொண்டார்.

தினகரன் திடீரென வீட்டுக்கு அனுப்பப்பட்டதால் அடுத்து அதிகாரத்துக்கு வந்த மகாதேவன், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ராஜாஜி அரங்கிலிருந்து சைரன்வைத்த காரில் பறந்த மகாதேவன், திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்துவிட்டார். ‘மேடம்’ என்று ஜெயலலிதா அழைக்கப்பட்டபோது, ‘பாஸ்’ என்று அழைக்கப் பட்ட திவாகரன் இன்னமும் தஞ்சாவூரையே தாண்ட முடியாத அளவுக்குத் தடைக்கற்கள் சூழ வாழ்க்கையைத் தொடர்கிறார். ‘இது உன் கட்சியா?’ எனப் பன்னீர் செல்வத்தின் சட்டையைப் பிடித்த டாக்டர் வெங்கடேஷால், அ.தி.மு.க வேட்டியைக் கட்டிக்கொண்டு வெளியே வர முடியவில்லை. மச்சான் தொல்லை!

p8a.jpg

இப்படி... `அண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்ப காலியாகும்?’ எனக் காத்திருந்தார்கள். அண்ணனும் செத்தான்;ஆனால், துக்கம் கேட்க வந்தவர்கள் எல்லாரும் மொத்தத் திண்ணையையும் ஆக்கிரமித்துக்கொண்டால் எப்படி இருக்கும்? அந்த நிலைதான் சசிகலா குடும்பத்துக்கு.

எந்த ஜெயலலிதாவை யார் கண்ணிலும் படாமல் வைத்திருந்தால், கட்சியும் ஆட்சியும் நம் கையிலேயே நின்றுநிலைக்கும் என நினைத்தி ருந்தார்களோ, அந்தக் கட்சியும் ஆட்சியும் இன்று அவர்கள் கையிலிருந்து மெள்ள மெள்ள நழுவிக்கொண்டிருப்பதுதான் இனிவரும் நாள்களின் அரசியலாக இருக்கும்.

ஜெயலலிதா கொடுத்துவிட்டுப்போன ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம்’ என்ற உயிரெழுத்து இப்போது இல்லை. ஜெயலலிதா வைத்துவிட்டுப்போன ‘இரட்டை இலை’ என்ற மெய்யெழுத்து இப்போது இல்லை. ஜெயலலிதா காலி செய்துவிட்டுப்போன ‘முதலமைச்சர்’ என்ற உயிர்மெய் எழுத்தும் சசிகலா குடும்பத்துக்குக் கிடைக்குமா என்பது சந்தேகமே. மொத்தத் தலையெழுத்தும் சுத்தமாகக் கேள்விக்குறி ஆனது. கட்சி செல்வாக்காக இருந்தால் தான் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பது அரசியல் அரிச்சுவடி. ஆட்சி நிலைத்தால்தான் கட்சியைக் காப்பாற்ற முடியும் என்பது இப்போதைக்கு அ.தி.மு.க அரிச்சுவடி.

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகத் தொடரத் தகுதியானவரா என்பது இருக்கட்டும்; பன்னீர்செல்வம் எப்போது ‘ஒப்புக்குச் சப்பாணியாக’ உட்காரவைக்கப்பட்டாரோ, அப்போதே தமிழ்நாட்டின் முதலமைச்சர் நாற்காலிக்கு மவுசு போய்விட்டது. எல்லா நாற்காலிகளும் மரத்தை உடைத்துச் செய்யப் படுபவை அல்ல... அவற்றில் சில, உளுத்து விழுந்த மரத்திலிருந்தும் செய்யப்படும் என்பது அப்போது புரிந்தது. இது, எடப்பாடி பழனிசாமி வரை தொடர்கிறது. ஆனால், `எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி தொடருமா?' என்பதுதான் கேள்வி. அதற்கான சூத்திரம் டி.டி.வி.தினகரனே!

எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கு, இந்த நிமிடம் வரை எந்தச் சிக்கலும் இல்லை. 122 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது. ஆனால், அப்படித் தொடரும் அளவுக்கு வலிமையான தலைமை அந்தக் கட்சிக்கு இல்லை. இன்று அமைச்சர்களாகவும் எம்.எல்.ஏ-க்களாகவும் இருப்பவர்களில் பெரும் பாலானவர்கள் தினகரனால் வந்தவர்கள் அல்ல. அவர்களுக்கு தினகரனையே தெரியாது. 10 ஆண்டுக்காலம் ஜெயலலிதாவால் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்ட தினகரன், அ.தி.மு.க-வுக்கு உதவிக்கு வந்து காலப்போக்கில் மெதுவாகத் தலைமை அடைய நினைத்திருக்க வேண்டும். மாறாக, போயஸ்கார்டன் போர்ட்டிகோவில் நிற்பதால் தன்னையே ஜெயலலிதாவாகவும், தொப்பியைப் போட்டுக் கொண்டதால் தன்னையே எம்.ஜி.ஆராகவும் நினைத்துக் கொள்கிறார் தினகரன். அவரை அப்படி யாரும் மதிக்கவில்லை.

ஆர்.கே.நகர் தேர்தல் நடந்திருந்து தினகரன் வெற்றிபெற்றிருந்தால், உடனடியாக அவர் அ.தி.மு.க அம்மா கட்சி சட்டமன்ற உறுப்பினர் களால் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பார். சசிகலா முதலமைச்சர் ஆவதை விரும்பாத பன்னீர், கட்சியை உடைத்து தனி அணி கண்டதைப்போல, தினகரன் முதலமைச்சர் ஆவதை விரும்பாத எடப்பாடி பழனிசாமி தனிக் கட்சி காணலாம். அந்த அளவுக்கு தனது அணியை மறைமுகமாக எடப்பாடி கட்டிவருகிறார். இதில் எடப்பாடியைவிட வேறு சில அமைச்சர்கள் தீவிரமாக இருக்கிறார்கள். குறிப்பாக, கொங்கு மண்டலம் வேகமாக இருக்கிறது. அ.தி.மு.க-வுக்கு ஆக்ஸிஜனே கொங்கு மண்டலம்தான். தி.மு.க படுதோல்வி கண்ட மண்டலம் அது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடக்காததால், தினகரன் அடக்கிவாசிக்கலாம். ஆனால், ‘ஆர்.கே.நகருக்கு எப்போது தேர்தல் நடந்தாலும் நான்தான் வேட்பாளர்’ என அவராகவே ஆட்சிமன்றக் குழுவாக மாறி அறிவித்திருக்கிறார். ஆறு மாதங்களில் மீண்டும் ஆர்.கே.நகருக்குத் தேர்தல் வரும். அப்போதும் தினகரன் போட்டியிடுவார். ‘அடுத்த 89 கோடி ரூபாய்’ பங்கு பிரிக்கப்படலாம்; வெற்றிபெறலாம்; எடப்பாடி நீக்கப்படலாம். எனவே, எப்போது வேண்டுமானாலும் எடப்பாடி பழனிசாமியின் பதவி பறிக்கப்பட்டு, தினகரன் முதலமைச்சர் ஆகலாம். அதற்கு முன்னதாக தினகரனையே முடக்கிவைக்க சில முயற்சிகள் நடக்கின்றன.

‘தினகரன் இல்லாத அ.தி.மு.க’ என்பதுதான் இந்த முயற்சிகளின் தொடக்கம். பன்னீரின் எதிரி தினகரன். எடப்பாடிக்கும் எதிரி ஆகப்போகிறவர் தினகரன். இப்போது `பன்னீரும் எடப்பாடியும் இணைந்தால் என்ன தவறு?' என்பதுதான் இவர்களின் முழக்கம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் என்ற பெயரை மீட்டெடுக்க, இரட்டை இலைச் சின்னம் முடக்கப்படாமல் தடுக்கப்பட இரண்டு அணிகளும் ஒன்றிணைவது என்றரீதியில் பேச்சு வார்த்தைகள் தொடங்கியுள்ளன. இவர்களின் உள்நோக்கம், தினகரனை நீக்க வேண்டும் என்பதுதான். ஆனால், பரந்த நோக்கம் இருப்பதாகப் பறைசாற்றிக் கொள்வார்கள்.

இப்படி ஓர் இணைப்பை, தினகரன் விரும்ப மாட்டார்; தனது தலைமையில் கட்சியும் ஆட்சியும் இருக்க வேண்டும் என நினைப்பவர் அவர். தினகரன் முதலமைச்சராக இருக்க, பன்னீரும் எடப்பாடியும் அமைச்சர்களாக இருக்க மாட்டார்கள். பன்னீர் முதலமைச்சராக இருக்க, தினகரன் அமைச்சராக இருக்க மாட்டார். இப்படி ஒரு முக்கோண முட்டுச்சந்தில் ஆட்சி இருக்கிறது.

தினகரன் முதலமைச்சரானால், எடப்பாடி ஆள்கள் அந்த ஆட்சியைக் கவிழ்க்கலாம். பன்னீர் - எடப்பாடி இணைந்து ஆட்சி அமைக்கும்போது, தினகரன் ஆள்கள் பிரிந்து அந்த ஆட்சியைக் கவிழ்க்கலாம். இப்படிக் கவிழத் தயார்நிலையில்தான் ஆட்சி இருக்கிறது. அ.தி.மு.க என்ற கட்சி, இரட்டை இலைச் சின்னம், இன்றைய ஆட்சி மூன்றும் நின்று நிலைக்கவேண்டுமானால், மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

முதலமைச்சர் பதவியை ஓ.பன்னீர் செல்வத்துக்குத் தருவது.

எடப்பாடி பழனிசாமியைத் துணை முதலமைச்சராக வைத்துக்கொள்வது.

கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருந்து கட்சிப் பணிகளை மட்டும் தினகரன் கவனித்துக்கொள்வது. ஆட்சிக்கு வர நினைக்காமல், ஆட்சியில் தலையிடாமல் இருப்பது.

இந்த மூன்றும் நடந்தால் மட்டுமே ஆட்சி நிலைக்கும்; இரட்டை இலை மீட்கப்படும்; `அ.இ.அ.தி.மு.க' என்ற பெயர் நிலைக்கும்.  எம்.ஜி.ஆருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடும் நேரத்தில் அவரது மூன்று சொத்துகளையும் சிதைத்த பாவம், இந்த மூவரையும் சும்மா விடாது. ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்...’ என எம்.ஜி.ஆர் பாடியது, தி.மு.க-வில் இருந்த காலத்தில். இன்று அவரது மூச்சு ‘தி-ப-எ’ என்ற மூன்றெழுத்தில் இருக்கிறது. ஆனால், இவர்கள் இதைக் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கை இல்லை. ஏனென்றால், இவர்கள் மூவருமே எந்தத் தகுதியும் இல்லாதவர்கள் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்!

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.