Sign in to follow this  
Followers 0
நவீனன்

உயிர் மெய்

4 posts in this topic

உயிர் மெய் - புதிய தொடர் - 1

 

மருத்துவர் கு.சிவராமன்

 

டைசி நோயாளியைப் பார்த்துவிட்டு இருக்கையைவிட்டு எழும் நேரத்தில், அவர்கள் வந்தார்கள். `எங்களுக்காகப் பத்து நிமிஷம் மட்டும் சார்' என, சன்னமான குரலில் கேட்டுக்கொண்டனர். நான் மிகுந்த களைப்பில் இருந்தேன். `நாளைக்குச் சந்தித்து, நிதானமாகப் பேசலாமே!' எனக் கெஞ்சலாகச் சொன்னேன். சிறிய மௌனத்துக்குப் பிறகு, `கடைசியா உங்களைப் பார்த்துப் பேசிட்டுப் போகலாம்னு காத்திருக்கோம்' எனச் சொல்லி அதிரவைத்தார்கள். அவர்கள், குழந்தையின்மை சிகிச்சைக்காக வந்திருந்தார்கள். அன்று நாங்கள் பேசி முடித்து வெளியே வருகையில், வெறிச்சோடிப்போயிருந்த வானமும் சாலையும் விடியலுக்குத் தயாராகிக்கொண்டிருந்தன... அவர்களைப்போலவே!

இன்று, குழந்தையின்மைக்கு எனப் பிரத்யேக மருத்துவமனைகள் வந்துவிட்டன. எங்கும் குழந்தை வரம் கேட்டு ஏங்கும் தம்பதிகள். கோயில்களில்கூட, `குழந்தைப்பேறு ஸ்பெஷல்' என விளம்பரம் செய்யத் தொடங்கிவிட்டனர். ` `இன்றைக்கு 12-B பஸ் சரியான நேரத்துக்கு வருமா?' என்பது மாதிரியான அன்றாட அவசரத்தில், இந்த வாரம் புரலாக்ட்டின் அளவு கணிசமாகக் குறைந்திருக்குமா, என் கருமுட்டை வெடிக்க அது வழிவிடுமா?' என விஞ்ஞானிகள் போல தவிப்புடன் காத்திருக்கின்றனர் தம்பதிகள். அப்படியான உள்ளங்களோடும், `அப்படியான சிக்கலுக்குள் சிக்கிவிடாமல் என்னையும் என் அடுத்த தலைமுறையையும் காத்திட வேண்டும்' எனச் சிந்திக்கும் நட்பு வட்டாரத்தோடும் நடத்தும் சிநேகமான உரையாடல்தான் இந்தத் தொடர்.

p22c.jpg

பெண்ணின் சினைமுட்டைகள், பெண்ணாக அவள் தாயின் வயிற்றில் ஜனிக்கையிலேயே உருவாவதும் சரி, பிறகு பூப்படையும் பருவம் வரை ஏற்படும் வளர்ச்சியும், அந்த முட்டையின் இயக்கமும் சரி, உயிரணுவோடு பிணைந்து கருவாகி, சரேலென மூன்றேகால் கிலோ ஐஸ்வர்யாவாகவோ அய்யாசாமியாகவோ உருவாவது முற்றிலும் முழுதாகப் புரிந்திடாத இயற்கையின் விந்தை.

“அம்மா, எனக்கு மீசை வருது பாரேன்” என 14 வயதுப் பையன் அரும்புமீசையை முறுக்கிக் காட்டுகையில், ``மம்மி, இனி அவனை டவுஸர் போடச் சொல்லாதே. பேன்ட் போடச் சொல்லு. கரடி மாதிரி உடம்பெல்லாம் முடி வளருது. இந்த வயசுலேயே இவனுக்கு நெஞ்சு மயிர்” என வீட்டில் உள்ள மூத்த பெண் சொல்லும்போது, கோபத்தைக் காட்டும் பையனின் உடைந்த குரல், ஓர் ஆண்பால் கவிதை. அப்படிக் குரல் உடைகையில், விதைப்பைக்குள் `செர்டோலி' செல்கள் சிலிர்த்தெழுந்து, விந்தணுக்களைச் சேமிக்கத் தொடங்கியிருக்கும்.

ஒவ்வொரு மாதவிடாய்ச் சுழற்சியிலும், பெண்ணின் இரண்டு பக்கங்களிலும் உள்ள சினைப்பையில் சில முட்டைகள் படிப்படியாக வளர வேண்டும். 14-வது அல்லது 15-வது நாளில் அந்தக் கருமுட்டை அதன் புறத்தோலைக் கழற்றி வீசி, வெடித்துச் சினைக்குழலைப் பற்ற வேண்டும். இப்படி சினைக்குழலுக்குள் சிங்காரித்து ஓடிவரும் சினைமுட்டையை, காதலால் கசிந்துருகிக் கருப்பைக்குள் புகுந்த உயிரணுக்களில் ஒருசில ஓடிவந்து, அதில் ஒன்று முட்டையின் மதில் சுவரை உடைத்து உள்நுழைய... அவள் அம்மா!

முந்தைய பாராவின் ஒவ்வொரு நிகழ்வுக்கும், ஏதோ ஒரு துளி ஹார்மோன், சின்னதாக ஒரு கட்டமைப்பு, சிறு கவிதையாக ரசாயனங்களின் சமிக்ஞைகள் இருக்க வேண்டும் என்கிறது நவீன அறிவியல். `வாதமாய்ப் படைத்து' எனும் சித்த மருத்துவமோ,

`வாயுவோடு விந்துசென்று மலர்க்குட் சேர்ந்தால்
மலரினுள்ள இதழ்களெல்லாம் மூடிக்கொள்ளும்.
தேயுவோடு வாயு நின்று திரட்டும் பாரு...
செப்பியதாந் தினமொன்றில் கடுகு போலாம்'


- என இன்றைய அறிவியல் நுணுக்கங்கள் ஏதும் வராதபோது, முதல் நாளில் `கடுகு போலாம்' என ஆரம்பித்து, ஒவ்வொரு மாதத்துக்கும் கருவின் வளர்ச்சியைச் சொல்லியிருக்கும்.

இந்த ஹார்மோன்களின் சுரப்பு எப்படி நிகழ்கிறது? இதற்கான சமிக்ஞையை மூளைக்குள் யார் பிரசவிக்கிறார்கள்? ஏவாள் கடித்துப் போட்ட ஆப்பிளிலிருந்தோ, ஏமி ஜாக்சன் சிரிப்பிலிருந்தோ இந்தச் சுரப்பும் பிறப்பும் நுணுக்கமான பல சூட்சுமங்களுடன் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.

p22b.jpg`இனி நீதான்டா எனக்கு!' என ஏதோ ஒரு பார்வையில் புரிந்தபோது, மனசுக்குள் அடித்த மின்னலில் சில துளி ஹார்மோன் சுரக்கும். `இது நட்பு அல்ல; காதல்’ எனப் புரிந்ததும், அவசரமாகப் பரிமாறப்பட்ட முதல் முத்தம் மூளைக்குள் சில ரசாயனச் சமிக்ஞைகளை ஏற்படுத்தும். அந்த நீண்ட கடற்கரையில் அலுவல்விட்டு வந்து காதலியோடு அமர்ந்து, அவசியமே இல்லாமல் அந்தச் சுண்டுவிரலுக்கு 1,500 முறையாவது சுடக்கு எடுக்கும்போது, கருப்பையின் உள்சுவர் கணிசமாக வளரும். அவன் `நீ சூடும் பூவெல்லாம் ஒருபோதும் உதிராதே!' என, தாமரையின் கவிதை வரியில் நெகிழ, கருமுட்டை கணிசமாக உப்பிப் பருத்து வளரும்.

சாமி சப்பரம் பார்க்கத் தேர்வீதியிலும் தோளிலும் சுமந்த தகப்பன் சில ஆண்டுகள் கழித்து `நீ சாயும் தோள் இதுதான்' எனச் சுட்டிக் காட்டியவருடன் மணமேடையைக் கைகோத்த படி சுற்றியபோது, அத்தனை கூட்டத்துக்கு முன்னால், அப்பாஅம்மா முன்னால், அவன் கை சுண்டுவிரலை நசுக்க வழக்கமாக வரும் வலி, கோபத்தைக் கொட்டுவது மாறிப்போய், அன்றைக்கு வெட்கத்தைக் கொப்புளிக்க, அந்த வெட்கம் கொட்டிவிடாது இதழோரம் முறுவலிக்க என அத்தனையிலும் இந்தச் சுரப்புகளும் ரசாயனச் சமிக்ஞைகளும் இத்தனை காலம் இயல்பாகச் சுரந்துகொண்டேதான் இருந்தன. திருமணமாகி பத்து வருடங்கள் ஆன பிறகும் கிடைக்கும் லிஃப்ட் தனிமையில் உரசிக்கொடுக்க முனையும் முத்தத்தில், அப்போதும் சினைப்பைக்குள் வளர்ந்து நிற்கும் சினைமுட்டை உடைந்து கருவாக உருவாகும்.

இப்படியான காதலின்/காமத்தின் நெளிவு சுளிவுகளால் மட்டுமல்ல, ஆணோ பெண்ணோ பருவமடைந்து வளர்ந்துவருகையில் அன்றாடம் சாப்பிடும் பசலைக்கீரைக் கடைசலில் மாப்பிள்ளைச்சம்பா சோற்றை உருட்டி உண்பதும், செவ்வாழைப்பழத்தை முருங்கைப் பூ பாலில் சாப்பிடுவதும், வஞ்சிரம் மீன் வறுத்து நாட்டு்க்கோழிக் குழம்பு ஊற்றிச் சாப்பிடுவதும் சேர்கையில்தான் சினைமுட்டையும் உயிரணுவும் உற்சாகமாக வளர்ந்து நிற்கும்.

காதல் கனிந்து கசிந்துருகும் தருணத்தில், சாப்பிட்ட முருங்கைப் பூ பாலினாலோ, சிலாகித்த உச்சி முத்தத்தாலோ என எத்தனையோவால் அத்தனை சுரப்புகளும் படைப்புகளும் நகர்வுகளும் ஒருமித்து, கருத்தரிப்பைக் கச்சிதமாக நிறைவேற்றும். அன்றைய ஒருசெல் உயிரி க்ளாமிடா மோனஸிலிருந்து ஒவ்வொரு செல்லையும் உருக்கிய கிளியோபாட்ரா வரையிலான அத்தனையிலும் இப்படித்தான் இந்த நிகழ்வு இருந்தது.

ஆனால், இன்றைய நிலை அப்படி அல்ல. இந்த ஊதாக் கலர் மாத்திரையைச் சாப்பிட்டால் தான், `உயிரணு ஓடியாந்து முட்டையோடு பிணைய முடியும். தலைக்குக் குளிச்ச தேதியிலிருந்து ஐந்தாம் நாள் மறக்காம ஆரம்பிச்சுடுங்க' என, காதலை கலர் கலர் கேப்சூலிலும், காமத்தை இரண்டு மி.லி ஊசியிலும் அடைத்துக்கொடுக்கும் வித்தை பலமடங்கு உயர்ந்துகொண்டிருக்கிறது.

`கருத்தரிக்க, இந்த ஊசி உங்களுக்கு இனி அவசியம் வேண்டும். அப்போதுதான் ஐ.யூ.ஐ-க்குச் சரியாக இருக்கும். முட்டை அதுபாட்டுக்கு வளர்ந்துட்டே இருக்கு. இரண்டு செ.மீ-க்கு மேல் உடையணும். அப்படி உடையலைன்னா, அந்தக் கருமுட்டை பிரயோஜனம் இல்லை. இந்த ஊசியைப் போட்டுக்க' என்ற ஆலோசனை நம்மில் பலருக்கும் கிடைக்கிறது.

இரவின் உச்சத்துக்குப் பிந்தைய வாஞ்சையான அரவணைப்பில், வெட்கப்புன்னகையும் களைத்து மகிழ்ந்த காதலும் கொஞ்சநாளாகக் காணவில்லை. `சரியா... டி14. மாதவிடாயிலிருந்து 14-வது நாள். முட்டை வெடிச்சிருக்கணும்.

10-ம் தேதி மாத்திரை மட்டும் மிஸ்ஸாகிடுச்சு. ஓவுலேஷன் ஆகியிருக்குமா? இப்போ போன உயிரணு உரசி முட்டையை அடைச்சிருக்கும்ல? கோ அன்சைம் க்யூவும் முருங்கைப் பூ லேகியமும் நீங்க சாப்பிட ஆரம்பிச்சு, 75 நாள்களுக்கு மேல் இருக்கும்ல?' என, சந்திராயன் ராக்கெட்டை அனுப்பிவிட்டு, கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்திருக்கும் ஸ்ரீஹரிகோட்டா சயின்ட் டிஸ்ட்டுகள் மாதிரி பின்னிரவில் கவலையோடு பேசிக்கொண்டிருக்கும் தம்பதியர் இங்கு பெருகிவருகின்றனர்.

காமம் சுரக்க... காதல் கிறக்க, இப்போது கூடுதல் கரிசனமும் மெனக்கெடலும் தேவைப்படுகின்றன. `இந்த மாத்திரை, சினைப்பை நீர்க்கட்டிகள் குறைய. இந்த ஊசி, காமம் கொப்புளித்துக் கருமுட்டை வெடிக்க 10-வது நாள் போட்டுக்கணும்பா. இந்த மாத்திரை, டி4-லிருந்து உங்கள் முட்டையை வளர்க்க, சாப்பிட்டே ஆகணும். இந்த மாத்திரை, சோம்பியிருக்கும் உயிரணு வேகமாக ஓடிச்சென்று கருமுட்டையை உடைக்க  அவசியம் உங்களுக்குத் தேவை. இந்த கேப்சூல், குறைந்திருக்கும் உயிரணுக்களைக் கூட்ட (சாப்பாட்டுக்குப் பின்னே). அப்புறம் காதலாகிக் கசிந்துருக எனப் பட்டியல் பல புதுமணத் தம்பதிகளுக்குச் சீர்வரிசையாக நீண்டுகொண்டே இருக்கிறது.

என்ன நடந்துகொண்டிருக்கிறது இங்கே? சினைப்பை நீர்க்கட்டிகள் குறித்த பேச்சு, 20 ஆண்டுகளுக்கு முன்னால் அவ்வளவாக இல்லை. கருத்தரிப்புக்குப் பிறகு அல்ட்ராசவுண்ட் சோதனையில் குழந்தையைப் பார்த்து வரும்போது அந்தப் பக்கம் யதேச்சையாகத் தென்படும் தரவாகவே அப்போது இருந்தது.

இன்று சினைப்பை நீர்க்கட்டிகள் குறித்த பெருங்கூச்சலும், அளவுக்கு அதிகமான பயமும் பயமுறுத்தலும், அதுவே முற்றிலும் அலட்சியப்படுத்துகையில் அதையொட்டி வரும் கருத்தரிப்புத் தாமதமும் ஏராளம். உணவிலும் நடையிலும் உடற்பயிற்சியிலும் செதுக்கிச் சீராக்கவேண்டிய பிழையை, மாத்திரைகளைக் கொட்டிக் குழப்பும் சிகிச்சைகள் பெருகி வருகின்றன. அவசரம், அவமானம், அறமற்ற அறிவியல் எனும் காரணங்கள் சாலையோர சலூன்கள்போல கருத்தரிப்பு உதவி மருத்துவ மனைகளை உருவாக்கிவருகின்றன.

அன்று, `ஆணுக்கு சராசரியாக 40-50 மில்லியன் உயிரணுக்கள் ஒரு மில்லி விந்துவில்' என்ற நிலை இருந்தது. இன்று, `20 மில்லியன் இருந்தால் போதும்' என ஓர் ஆணின் விந்தணுக்கள் தடாலடியாக இறங்கிப்போனது ஏன்? நீர் மாசுபட்டது முதல் `நீட்' தேர்வால் மாசுபட்டுப் போன மூளை வரை நிறைய காரணங்கள்.

p22.jpg

தன் இயல்பான பாலியல் விளைவையும் விசும்பலையும் போலியான சமூக அழுத்தத்தில் மறைத்து, நடுநிசி ஊடக மருந்துக் கொள்ளையர் களிடம் காண்டாமிருகம் - குதிரை மருந்து வாங்கிச் சிக்கி, உளவியல் நோயாளிகளாகும் அப்பாவிக் கூட்டம் ஒருபக்கம்.

`நேரத்தைத் தாமதம் செய்யாதீங்க. அறிவியல் எவ்வளவோ வளர்ந்து நிற்கிறது. `இக்ஸி' பண்ணியாச்சுன்னா குழந்தை உறுதி. வெளியே பொருளாதார விஷயத்தில் உதவிட, தவணைத் திட்ட வசதியை வங்கியே கொடுப்பார்கள். எங்க ஊழியர், உங்களுக்கு உதவிடுவாங்க. பேசுங்க', என நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசி இழுக்கும் கூட்டத்தில் சிக்கும் `கூகுள் பட்டம்' பெற்ற வாலிபர் கூட்டம் இன்னொரு பக்கம்.

`நேத்து கல்யாணம் பண்ணினவ எல்லாம் இன்னிக்கு வாந்தியும் வயிறுமா இருக்காளுங்க. இவன் தம்பிப் பொண்டாட்டிக்கு என்ன குறை வெச்சமோ தெரியலை, நாலு வருஷங்களா இவ வயித்துல ஒரு புழுப் பூச்சி தங்கலை' எனும் ரொட்டியில் ஜாம் தடவுவதுபோல் நாவில் விஷம் தடவும் சில ஓநாய்க் கூட்டங்கள் மறுபக்கம் என, அன்பற்ற, அறமற்ற வணிக வன்முறைக் கூட்டங்களுக்கு நடுவே காதலும் காமமும் சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பதுதான் நிதர்சனம்.

சின்னச்சின்ன அக்கறைகள், சற்று விசாலமான புரிதல்கள், பிழைகளை விலக்கி அரவணைக்கும் வாஞ்சை, கனவோடும் காதலோடும் காத்திருக்கும் பொறுமை, மரபின் நீண்ட அனுபவத்தையும் அறிவியலின் நுணுக்கத்தையும் `அறம்' எனும் புள்ளியில் ஒருங்கிணைத்து, வாழ்வியலை நகர்த்தும் மனநிலையை இவை மட்டுமே தரும்.காதலாய்... காமமாய்... கருவாய்... உயிராய்!

- பிறப்போம்...


p22aa.jpg

காதலின் சின்னம்!

dot.png மனித இனமும் அவனின் மூத்த தலைமுறையான குரங்கினமும் அதிகம் நேசித்துச் சாப்பிட்ட உணவு வாழைப்பழம். அநேகமாக கவுண்டமணி – செந்தில் நகைச்சுவைக்குப் பிறகு, பழத்தின் வகையிலிருந்து பத்தி ஸ்டாண்டு வகையறாவுக்குக் கொஞ்சம் நகர்ந்துவிட்டது. கூடவே `வாழை வெயிட் போடும்' என்ற சங்கதியில் பல வீடுகளில் புறக்கணிக்கப்பட்ட பழம்.

dot.png வாழைப்பழம், காதலின் சின்னம்; காமத்தின் ஊற்றுக்கண் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. ஸ்ட்ராபெர்ரியைக் காதலோடு பாடும் நம் கவிஞர்கள், செவ்வாழையையும் சீக்கிரம் பாடியாக வேண்டும்.

dot.png ஆணின் விந்தணுக்களை உயர்த்திட உதவும் கனி, வாழை. குறிப்பாக செவ்வாழை. அதில் உள்ள  `bromelin' எனும் என்சைம், விந்தணுக்களின் எண்ணிக்கையை உயர்த்தும். பொட்டாசியம் மக்னீசியம் முதலான பல உப்புகளும் விந்தணுக் களைச் சீராகப் படைக்க உதவிடும்.

dot.png மூளையில் காதல் சுரக்கத் தேவையான செரட்டோனினைக் கட்டமைக்கும் பணிக்குத் தேவையான ட்ரிப்டோஃபேனையும் வாழைப்பழம் கொடுக்குமாம்.

dot.png `விந்தணுக்கள் குறைவுக்கு, உடலின் அதிக சூடான பித்தநிலையும் காரணம். அந்தப் பித்தத்தைச் சமப் படுத்த, கபத்தைத் தரும் கனி வாழை' என்கிறது சித்த மருத்துவம்.

dot.png அதிக நார்ச்சத்துள்ள நெல்லை மதுரைப் பகுதி நாட்டுவாழை, செவ்வாழை, சிறுமலைப்பழம் ஆகியவை, வாழை இனங்களில் தனிச் சிறப்புள்ளவை.

dot.png நீரிழிவுக் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள்,  வாழையை வணங்கி விடைபெறுவது நல்லது.

dot.png காலை உணவில், 30 மணித்துளிகளுக்கு முன்னதாக வாழையைச் சாப்பிடுவது சிறப்பு. மலம் கழிக்க உதவும் என இரவில் உணவுக்குப் பிறகு சாப்பிடுவது ரத்தச் சர்க்கரை அளவைக் கொஞ்சம் உயர்த்தக் கூடும்.


p22a.jpg

குளியல்

அதிகம் குளிராத, வெதுவெதுப்பான நீரில் தினமும் இரண்டு முறை குளிப்பது, கருத்தரிப்புக்கு நல்லது. குளித்தல், பித்தத்தைத் தணிக்க உதவும்.

பித்தம் அதிகரித்தால் விந்தணுக்கள் குறையும். பெண்களின் கருப்பை உள்சுவர் எண்டோமெட்ரியம் உலர்ந்து, அதனால் உயிரணு நீந்த முடியாதிருக்கும் சூழலில் ஏற்படும் கருத்தரிப்புத் தாமதத்துக்கு இருமுறை குளியல் உதவும்.

வாரம் ஒருமுறை எண்ணெய்க்குளியல் (நல்லெண்ணெயில்) எடுத்துக்கொண்டால், பித்தத்தைக் குறைத்துக் கருத்தரிப்பை விரைவாக்கும்.

கண்ணகி மதுரை வீதியில் வந்த கோலத்தை, அநேகமாக இன்றைய இளம்பெண்கள் அதிகம் விரும்புகின்றனர். ஆதலால், அடிக்கடி ஷாம்பு போட்டு செம்பட்டையான தலைமுடியுடன் முன்நெற்றியில் பறக்கவிட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.

அது அழகா எனத் தெரியவில்லை. ஆனால், ஆரோக்கியமில்லை எனச் சொல்லலாம். கொஞ்சம் இயல்பான எண்ணெய்ப்பசை தலைமுடிக்கு அவசியம். வெள்ளாவி போட்டு வெளுத்த நிலையில், அதை வெடவெடவென வைத்திருப்பது பித்தத்தைக் கூட்டி, பின்னாளில் கருவழிப் பாதையில் கஷ்டத்தைக் கொடுக்கக்கூடும்.

http://www.vikatan.com/anandavikatan

Share this post


Link to post
Share on other sites

உயிர் மெய் - 2

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

மருத்துவர் கு.சிவராமன் படம்: எம்.விஜயகுமார் - மாடல்: எஸ்.பிரனஜே

 

p94d1.jpg

ட்டாம் வகுப்பு ஆண்டு விடுமுறையில் ஊருக்குப் போய்விட்டு, ஒன்பதாம் வகுப்பின் முதல் நாள் பள்ளிக்கு வரும் அனுபவம், கடைசி வரை நினைவில் நிற்கும் அழகான ஒரு கவிதை. இணையம், அலைபேசி, தொலைபேசி எதுவும் இல்லாத அன்றைய நாளில், இரண்டு மாதங்கள் கழித்து நண்பர் கூட்டத்தைப் பார்க்கும் வைபவம் என்பது, அநேகமாக தேர் பார்ப்பதுபோல... சக்கர ராட்டினத்தின் உச்சியில் இருந்து ஊர் பார்ப்பதுபோல!

`ஏல... அங்கே பாரு, அருணாசலம், பத்மநாபன் எல்லாரும் எம்புட்டு வளர்ந்துட்டானுங்க. உன் ஹைட்டைவிட அதிகமா இருப்பானுவல்ல? ஆறுமுக அண்ணாச்சிக் கடையிலதானே அரிசி வாங்கி சோறு திங்குறானுவ. இல்லை, லீவுல ஆச்சி வீட்டுக்குப் போயி சிவப்பரிசி தின்னானுவுளானு தெரியலை’ என்ற பேச்சு இல்லாத வகுப்பறைகளே இராது. 

p94a.jpg

கூடவே, `எந்த வாத்தி நமக்கு வாறாரோ தெரியலை!’ என்பதற்கு இணையான பரபரப்பு, `யாருக்கெல்லாம் மீசை வந்திருக்கிறது?’ என்பதுதான். அருகம்புல்போல லேசாகக் குருத்துவிட்டிருக்கும் இளமீசையை, உதடு வலிப்பதை வெளிக்காட்டாமல், ஓரமாகச் சுருட்டி, ‘அருவா மீசையாக்கும்’ என வெறுப்பேற்றுவர் அந்த மாப்பிள்ளை பெஞ்ச்சினர்.

`மீசை, தாடி வளர்ச்சியும் பேணலும்' என்பது இன்று நேற்று அல்ல... பல ஆயிரம் ஆண்டுகளோடு மனிதனின் மத நம்பிக்கை, கலாசார நம்பிக்கை, பண்பாட்டுப் பழக்கம், பருவகால மாறுபாடு எனப் பல காரணங்களால் பரிணமித்த ஒன்று. `மிலிட்டரியில் மீசை வெச்சே ஆகணும்’ என 1450-களிலும் `சிரைச்சே ஆகணும்’ என 1900-களிலும் ஐரோப்பாவில் பல அரசியல் சட்டங்கள் வந்து போன வரலாறு உண்டு.

மீசை, காலகாலமாக ஆணின் அடையாளம்; கொஞ்சம் ஆணாதிக்கத்தின் ஊற்றுக்கண் என்றும் கொள்ளலாம். `நான் பாலகன் அல்ல, இளைஞன்’ என அறிவிக்கும் உடலின் வளர்ச்சியே `மீசை'. ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரான் விதைப்பையில் கணிசமாகச் சுரக்க ஆரம்பித்தவுடன் மீசையும் கிருதாவும் வளர ஆரம்பிக் கின்றன. சாதாரணமாக, 11 வயதில் மேல் உதட்டின் ஓரமாக விளிம்பில் விளைச்சலைக் காட்டும் இந்த மீசை மயிர், உண்மையில் தலைமயிரைவிட வேகமாக வளரக்கூடியது. வருடத்துக்கு ஆறு, ஏழு இன்ச் சராசரியாக வளரக்கூடிய இயல்பு மீசைக்கு உண்டு.

`அடிக்கடி ஷேவிங் பண்ணினால், முடி வளராது; ஏற்கெனவே பல பில்லியன் டாலரில் பணம் கொழிக்கும் ரேஸர் கம்பெனிகளின் வணிகம்தான் வளரும்’ என்கிறது மீசை ஆராய்ச்சி.
 
``மீசையும் கிருதாவும் ஏன் இப்படித் திடீரென வளர்கின்றன? நேற்று வரை அழகாக அக்காவின் குரலைப்போலவே மெல்லியதாகயிருந்தது. இன்று ஏன் என் குரல் பெரியப்பா மாதிரி இருக்கிறது?’’ எனத் தொடங்கி, தன் உடம்பில் நடக்கும் எந்த மாற்றத்தையும் கணிச மாகக் கலவரப்படுத்தும் உணர்வு களையும் யாரிடமும் விவாதிக்க முடியாமல் நிற்கும் `திடீர் ஆண்மகன்கள்’தாம் நம் ஊரில் அநேகம்.

ஒரு பெண் பூப்பெய்தும் பருவத்தில் அவர்களுக்காகக் கொடுக்கப்படும் அக்கறையில் சிறு சதவிகிதம்கூட ஆண் பிள்ளைகளுக்கு அவர்களது Male puberty நேரத்தில் நம் ஊரில் கொடுக்கப்படுவதில்லை. வயதுக்குவந்த பெண்ணை, அவள் பயத்தை, கலவரக் கண்ணீரை, அன்னை வாரி அரவணைத்துப் பல்வேறு நுணுக்கங் களைப் படிப்படியாகப் பேச ஆரம்பிப்பதுபோல், ஆண்மகனிடமும் பேச பல வீடுகளில் நண்பனாக அப்பா இல்லை. நண்பனோ, அப்பாவியாக இல்லை.

விளைவு? காம்பவுண்ட் சுவரிலும் டீக்கடை பெஞ்சிலும் அவர்கள் நடத்திய க்ளினிக்கில் மாத்ரூபூதத்தில் இருந்து பாத்ரூம் தம் வரை அறிமுகமாகின. தப்பும் தவறுமாக ஆண் உறுப்பின் அளவு முதல் அவன் இயல்பான உணர்வுகளும் அதன் விளைவுகளும் வரை அங்கே போதிக்கப்பட்ட விஷயங்கள்தாம், இன்று கொடிகட்டிப் பறக்கும் ஆண்மைப் பெருக்கி வியாபாரத்துக்கான வித்து.

``என்ன மாப்ளை... விளைச்சல் சரியில்லை போல?’’ என மீசை இல்லாத தோழனை நக்கலாக நகைக்கும் நண்பர் கூட்டம் இப்போதும் உண்டு. அந்த நகைப்பில் மிரண்ட பிள்ளை, நடு இரவில் கண்ணாடி முன் மைக்ராஸ்கோப் வைத்து மீசையைத் தேடும். ``பரு வருது. ஆனா, மீசையைக் காணோமே! ஐ திங்க் சம் பிராப்ளம் மாப்ளை. ஆக்ச்சுவலி இன்டர்நெட்ல என்ன போட்டிருக்கான் தெரியுமா..?’’ என வாட்ஸ் அப்பில் அவன் நண்பனின் அரைவேக்காட்டு மூளை தப்பும் தவறுமாகத் தின்று, அதை அரைகுறையாக எடுத்து அனுப்பும் வாந்தியைப் படித்து, பீதியோடு கிளம்பித் திரிவான் அந்தப் பூனைமீசை பாலகன். தவறாகப் புரிந்து கொண்டதை யாரிடமும் பகிராததன் நீட்சியாக, வீட்டிலும் விட்டத்தைப் பார்த்துக்கொண்டு யாரிடமும் பேசப் பிடிக்காமல், அம்மாவிடம் சண்டை கட்டுவதும், அப்பாவிடம் முனகி முனகிப் பேசி வாங்கும் திட்டுகளில்தான் முதல் உளவியல் சிக்கல்கள் ஊற்றெடுக்கின்றன. அன்றே மீசையின் பிரச்னைகளைப் பேச முடியாத அந்தப் பாலகன், பின்னாளில் தன் ஆசைகளின் எந்தப் பிரச்னையையும் பேசாமல் கற்பனைக்குள்ளும் கலவரத்துக்குள்ளும் புதைக்க ஆரம்பிக்கிறான்.

பன்னிரண்டுகளில் இப்படியான மீசைப் பிரச்னையைப்போலவே காதல் ஹார்மோன் களோடு தொடர்புபடுத்தி இருபதுகளின் இளைஞன் கலவரப்படும் இன்னொரு விஷயம், முன்வழுக்கையும் முடி உதிர்தலும். தேதிவாரியாகப் போட்டு, ``நேற்று மட்டும் விழுந்தது மொத்தம் 43 முடி சார்’’ என ஆரம்பித்து, எண்ணிய முடிகளைத் தனித்தனியே பிளாஸ்டிக் கவரில் தேதி போட்டு வைத்துக்கொண்டு,
அதை எக்ஸல் ஷீட்டில் மெயில் அனுப்பிய `முன்வழுக்கை முத்தண்ணா’க்களை எனக்குப் பரிச்சயம் உண்டு.
 
வெளியே அழகுப் பிரச்னையாக இதை அவன் சொன்னாலும், அவன் அடிமனதில் இந்த `மயிர் உதிர்தலுக்கும் உயிரணுக் குறைவுக்கும் தொடர்பு உண்டோ?’ என காம்பவுண்ட் சுவரில் குத்தவைத்து அவன் குழாம் நடத்திய க்ளினிக்கில் உருவான அன்றைய அச்சம்தான் அதற்குக் காரணம். நானோகிராம் அளவில் டெஸ்டோஸ்டீரான் கொஞ்சம் கூடுவதில்கூட இந்த மயிர் உதிர்தல் (Androgenetic alopecia) ஏற்படும் என்பது புரியாமல் மனஅழுத்தம் பெறும் அவர்கள், அதற்காக சந்தையில் கிடைக்கும் பெட்ரோல், டீசல் தவிர அத்தனை எண்ணெய்களிலும் தலையைக் காட்டுவர். சில வெளிநாட்டு எண்ணெயில் நேரடியாக டைஹைட்ரோ-டெஸ்ட்ரோஸ்டீரோன் (Dihydrotestosterone) மாதிரி, ஆண் ஹார்மோன்களின் அண்ணன், தம்பிகள் ரசாயனங்களைச் சேர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். இப்படியான இன்டர்நெட் தைலங்கள் ஒருவேளை முடியை வளர்த்தாலும், அடியை ஆட்டம் காண வைக்கும் (கருத்தரிப்புக்கான உயிரணுக்களை ஓரங்கட்டிவிட வாய்ப்பு உண்டு).

ஆண்களாலும் ஆன்லைனிலும் அதிகம் பேசப்படும் இந்த டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன், மிகமிக முக்கியமானது. அதே சமயம், இயற்கையின் மிக சூட்சுமமான படைப்பு. ஆண்களுக்குக் குறைச்சல் என்பதால் உடனடியாக நோயையும், பெண்களுக்குக் கூடுதல் என்பதால் தடாலடியான பிரச்னையையும் தரக்கூடிய சுரப்பு அல்ல அது. அதன் ரேஞ்ச் நீளமானது. நபருக்கு நபர், மரபுக்கு மரபு, பருவத்துக்குப் பருவம், வாழும் இடத்துக்கு இடம் மாறுபடும். `இந்தக் காதல் ஹார்மோன் சற்றே குறைவாக இருப்பவர்கள், அதிகம் காதலிக்கிறார்கள்; காதலிக்கப்படவும் செய்கிறார்கள். கூடுதலாகக் கொட்டிக்கிடப்பவர்கள், பெரும்பாலும் விவாகரத்துக்கு ஓடுகிறார்கள்' எனும் ஆச்சர்யமான புதிய மருத்துவ ஆய்வுக் கணிப்பு, சத்தமாகச் சொல்கிறது.

மீசையோ தாடியோ, முன் நெற்றி மயிரோ ஆண் ஹார்மோனின் அடையாளங்களே தவிர, அதன் அளவைச் சொல்லும் அளவுகோல் அல்ல. அதன் குறைநிறைக்கு என எடுக்கும் மெனக்கெடல்களில் நிறையப் பரிச்சயமும் பாதுகாப்பும் மருந்தாக இருக்க வேண்டும். தடாலடியான சிகிச்சை, பின்னாளில் கருத்தரிப்பில் சிக்கல் தர வாய்ப்பு உண்டு. மீசை துளியூண்டா இருக்கிறது என்பதற்காக, `அடடா... ஆண்மைக் குறைவோ?’ என நடுநிசி டாக்டருக்கு முக்காடு போட்டுக்கொண்டு முந்த வேண்டாம். டெஸ்டோஸ்டீரானின் படைப்பு, விந்தணுக்களை உயர்த்தப் படைக்கப்பட்டது; அதன் பக்க விளைச்சல்தான் மீசை.

அடர்ந்து, சுருண்டு நிற்கும் மீசை உள்ளோரில் சிலர் விந்தணுக்கள் குறைவோடும், ஷாரூக் கான், சல்மான் கான் மாதிரி ஆரம்பத்திலிருந்தே இருக்கும் மொழு மொழு கன்னத்தினர், மூன்று நான்கு குழந்தைகளோடும் இருப்பது உண்டு. `மீசையும் வளரவில்லை; அக்குள் மற்றும் ஆண் உறுப்பில் முடி வளரவில்லை' என்றால் மட்டுமே மருத்துவரை அணுகி ஆலோசிப்பது அவசியம். மற்றவை `எல்லாமே’ நன்றாக இருந்து, மீசையின் வளர்ச்சி மட்டும் தற்கால நன்செய் நில வறட்சி மாதிரி இருந்தால், `அமேசான் தைலம்’, `குலேபகாவலி லேகியம்’ எனத் தேடித் தேடி அலைவது, கொஞ்ச நாளில் அவர்களை உளவியல் நோயாளியாக்கி, உளவியல் சிக்கலால் வரும் ஆண்மைக் குறைவை அழைத்துவரும். மீசையின் உற்பத்தி, அடர்த்தி, நீளம் எல்லாமே நம்மைத் தேரடிக்குக் கூட்டிச்சென்ற, தாத்தா-பாட்டியிலிருந்து சமீபத்தில் கண்டறியப்பட்ட கீழடியில் புதைந்திருக்கும் நம் முன்னோர் வரை உள்ள மரபின் நீட்சியில்தான் இருக்கும். ரன்பீர் கபூர் குடும்ப மரபில் இருந்துகொண்டு, பித்துக்குளி முருகதாஸ் மீசையை எப்போதும் எதிர்பார்க்கக் கூடாது.

`அட, மீசை வளர்ந்திருக்குபோல! பெரிய மனுஷன் ஆகிட்டு வார. இன்னும் பொறுப்பு நிறைய இருக்குடா உனக்கு. கொஞ்சம் தொப்பை விழுது; சூரியநமஸ்காரம் பண்ணப்போறியா... ஜிம்ல சேரப்போறியா? என்னைப் பொறுத்தவரைக்கும் ரெண்டும் வேணும்டா’ எனப் பேச வேண்டும்.
 
பள்ளியில், பாடத்தில் மனப் பாடமாகப் படித்த டெஸ்டோ ஸ்டீரானுக்கும், நீங்கள் மொட்டை மாடியில் அவனோடு பேசும் டெஸ்டோஸ்டீரானுக்கும் வித்தியாசமான புரிதல் அவனுக்கு வரும். `பாலகனிலிருந்து இளைஞனாக மாறிவருகிறாய். பாலியல்ரீதியாக இப்படியான கிளர்ச்சியான மாற்றங்களை உன்னுள் விளைவிக்கும். இட்லியைச் சாப்பிட வயிறு சுரக்கும் `அமைலேஸ்' (Amylase) மாதிரி, அடுத்த தலைமுறையை உருவாக்க உன்னுள் சுரக்கும் திரவம்தான் விந்து’ என உடற்சுரப்புகள் குறித்தும், அதனால் வரும் மனமாற்றங்கள் குறித்தும் வெளிப்படையான ஏற்ற இறக்கங்கள் இல்லாத உரையாடல் அவனுக்கு அப்பாவிடமிருந்து அவசியம் தேவை. அநேக ஏற்ற இறக்கத்துடனும், சன்னி லியோன் உதாரணங்களுடன் நண்பன் அவற்றைச் சொல்வதற்கு முன், பாலியல் புரிதலை சிறுவயதில் அவனுக்குப் பல் துலக்கக் கற்றுக் கொடுத்ததுபோல், இரண்டு வயது வரை இரவில் படுக்கையில் சிறுநீர் கழித்தவனை அவனது இரண்டே கால் வயதில் படுக்கும் முன்னர் சிறுநீர் கழிக்கக் கற்றுக்கொடுத்தது மாதிரி நிதர்சனங்களைச் சொல்லி பாலியல் புரிதல்களை அவனுக்குள் உருவாக்கவேண்டியது பெற்றோரின் கடமை.

`கற்றுக்கொள்கிறோம்’ என்ற பிரக்ஞை இல்லாமல், கற்றுக்கொள்வது என்பது சரியான வாழ்வியல் நகர்வுகளில், நேர்த்தியான உரையாடல்களில் மட்டுமே நடக்கும். அத்தகைய வாழ்வியல் உரையாடல்கள், பள்ளிப் பாடமாக நடத்தும் பாலியல் கல்வியைவிட ஒரு துளி மேலிருந்து அதைப் புரிந்திட உதவிடும்.

- பிறப்போம்...


என்ன சாப்பிடலாம்?

p94b.jpg

பெண் குழந்தைகளுக்கு உளுந்து எப்படி முக்கியமோ, அந்த அளவுக்கு 10-12 வயதை எட்டும் ஓர் ஆணுக்கு, நிறைய புரதங்கள் அடங்கிய நிலக்கடலை, மீன், முட்டை, பாசிப் பயறு, ராஜ்மா பயறு, சிவப்புக் கொண்டைக்கடலை ஆகியவை முக்கியம். பால் பற்றி பல மாறுபட்ட கருத்துகள் உள்ளன. மருத்துவர் பரிந்துரைத்தால் இன்றி, பாலை போணி போணியாகக் குடிக்கச் சொல்லி குழந்தைகளைக் கட்டாயப்படுத்த வேண்டாம்.

எல்லா கீரைகளும் ஃபோலேட் சத்துகள், கனிமச் சத்துகளுடன், விந்தணுக்களை உற்பத்திசெய்யும் செர்டோலி செல்களையும் சீராக வைத்திருக்க உதவுபவை. மீசை வளரவில்லை என்பதற்காக, தனக்குத் தெரிந்த ஆண்மைப்பெருக்கி மருந்துகளை வாங்கித் தருவது பதின்பருவத்தில் வேண்டாம். இயல்பான உடல் வளர்ச்சிக்கு, ஹார்மோன் வளர்ச்சிக்கு உதவிடும் புரதக்கூட்டான சத்து மாவு, கம்பு-கேழ்வரகு உருண்டை எனக் கொடுத்தாலே போதுமானது.


ஜீன்ஸ், பாலகனுக்குப் பாதுகாப்பு அல்ல!

p94c.jpg

10 வயதுடைய சிறுவர்கள் பலரின் வீடுகளில் ஸ்கூல் யூனிஃபார்மைத் தவிர்த்து மற்ற ஆடைகளை அவர்களின் அலமாரியில் பார்த்தால், 90 சதவிகிதம் ஜீன்ஸ்களாகத்தான் இருக்கும். ஒருகாலத்தில் `Mining' எனும் சுரங்கத் தொழிலாளிகளின் ஆடையாக இருந்துவந்த ஜீன்ஸ், தற்போது இளம்பிராயத்துப் பிள்ளைகளின் கனவு ஆடை. `உடலை இறுக்கிப் பிடிக்கும் அந்த ஜீன்ஸ், விந்தணுக்களின் வளர்ச்சியைக் கணிசமாகப் பாதிக்கிறது’ எனப் பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. நிறைய இளைஞர்களுக்கு இன்று விந்தணுக்கள் குறைவுக்கு ஜீன்ஸ் ஆடையும் ஒரு காரணமாக இருக்கக்கூடும். வரும்முன் காப்பது சிறப்பு. வீட்டில் காற்றோட்டமான பருத்தி இழையிலான உள்ளாடை மற்றும் டவுஸர்தான் சிறப்பு.

http://www.vikatan.com/

Share this post


Link to post
Share on other sites

யாராவது பெரியவர்கள் வந்து விலாவாரியாக வெளங்கப்படுத்தினால் நல்லது ஆராச்சும் இருக்கிறியளோ என்ன??:unsure::unsure:tw_blush:

Share this post


Link to post
Share on other sites

உயிர் மெய் - 3

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

மருத்துவர் கு.சிவராமன்

 

`காலையில 7.20 மணிக்கு அவ பெரியவளாகிட்டா. பஞ்சாங்கத்தைப் பார்த்து அதுக்கான பலனை சரியா குறிச்சுத் தரச் சொல்லு. `அவ ஜென்ம நட்சத்திரம் மகம்’னு மறக்காம சொல்லு...' என அம்மா அன்றைக்குச் சொல்லி பஸ் ஏற்றிவிட்டபோது, ‘என்னத்தைச் சொல்றா? எதுக்கு அவசர அவசரமா என்னை கிராமத்துக்குத் தனியா அனுப்புறா? பஞ்சாங்கம் பார்க்கிற அளவுக்கு என்ன புனிதம் இது?’ - புரியவில்லை.

காலாபாணி ஜெயிலில் இருக்கும் கைதிக்கான சாப்பாட்டுத் தட்டை ஜெயில் கதவின் கடைசிக் கம்பி வழியாக `சர்...’ என்று அனுப்புவார்களே... அப்படி அன்றைக்கு என் பள்ளித்தோழன் கிச்சான், வெளி அறையில் தனியே பசியோடு உட்கார்ந்திருக்கும் அக்காவுக்கு அவளுக்கான சாப்பாட்டை ஏன் அவள் கையில் கொடுக்காமல் தட்டைத் தரையோடு உரசியபடி அனுப்பினான்? என்ன புதிர் இது? - தெரியவில்லை.

இப்போது, ``சார், கரெக்டா தேதி வருது. அப்புறம் சாமி பார்க்க முடியாமப்போயிடும். `அந்த அம்மனே என் வயித்துல குழந்தையா பிறக்கணும்’னு மாவிளக்கு எடுக்க நேர்ந்திருக்கேன். `தள்ளிப்போக' மாத்திரை குடுங்க!’’ என ஒரு பெண்மணி கேட்டார். ``மூளை இருக்கா உங்களுக்கு? நீங்க கும்பிடுற அத்தனை பொம்பளை சாமிகளுக்கும் பீரியட் வரும்ல. எவ்ளோ கஷ்டப்பட்டு மருந்து, மாத்திரைகளைச் சாப்பிட்டு, இப்பத்தான் சைக்கிள் சரியா வருது. இந்தச் சமயத்துலதான் கருத்தரிப்பு சாத்தியமாகும்.

p30a.jpg

இந்த நேரத்துலபோய் சாமி பேரைச் சொல்லி மருந்தைச் சாப்பிட்டு, சங்கடத்தை விலை கொடுத்து வாங்குறீங்களே...’’ எனக் கத்தியது, என்ன சங்கடம் இது? எனப் பெரும்பாலானோர் யோசிப்பதில்லை.

ஆனால், இன்றும் புதிராகவோ புனிதமாகவோ, ஓய்வாகவோ சங்கடமாகவோ, உடைத்து எறியவேண்டிய சங்கிலியாகவோ, சமூகத்தின் ஒவ்வொரு விளிம்பும் ஒவ்வொருவிதமான புரிதலை, இந்த மாதவிடாய் குறித்துப் பெண் குழந்தை மனதில் ஆழமாகப் புதைத்துக்கொண்டே இருக்கிறது.

சீக்கிய மதம் தவிர, அநேகமாக அனைத்து மதங்களும் இந்த மாதவிடாயைத் தீட்டாக, விலக்காக, கட்டாய ஓய்வாகப் பார்ப்பதுதான் இந்த `நானோ’ உலகிலும் உலக வழக்கு. `கோயிலுக்குள் வராதே; சர்ச்சில் கம்யூனியன் கிடையாது; தொழுகை வேண்டாம்’ என அத்தனை மதங்களும் ஒன்றாக நிற்கும் ஒரே விஷயம் இதுதான். ஒருவேளை இந்த மாதவிடாய் இல்லை என்றால், இந்த மானுடப் பிறப்பு என்ற ஒன்று இல்லை என்பது மட்டும் எல்லா சாமிகளுக்கும் தெரியும்.

மாதவிடாய்த் தொடக்கத்தை ஊரெல்லாம் ஃப்ளெக்ஸ் அடித்துக் கொண்டாடும் இந்தக் கூட்டம்தான், அந்தச் சமயத்தில் `சாமியைக் கும்பிட வராதே’ `சடங்கு, சாங்கியத்தில் எதையும் தொடாதே’ எனப் பயப்படவும் செய்கிறது. இன்னொரு பக்கம், `என்னது ஓய்வா... ஓரமா?

எங்க கம்பெனி சானிட்டரி நாப்கின்ஸைப் பயன்படுத்தினா, நீ லாங் ஜம்ப், ஹை ஜம்ப் மட்டுமல்ல... சர்க்கஸ்கூட செய்யலாம்’ என எல்லா நிறுவனங்களும் சங்கடம் நீக்குவது மாதிரி சந்தையைப் பிடிக்க அத்தனை ஊடகங்களிலும் சொல்லிவருகின்றன.

உண்மையில் மாதவிடாய் என்பது, கன்னிப்பெண்ணின் இதழோரத்து ஈரம் மாதிரியான ஹைக்கூ கவிதை; அவள் அலுவலகத்திலோ அடுப்பங்கரையிலோ நெற்றிப்பொட்டில் துளிர்க்கும் வியர்வை மாதிரி ஒரு மாபெரும் உழைப்பு; அகம் மகிழ்ந்து அவள் மனம்விட்டு சத்தமாகச் சிரிக்கும்போது இமையோரத்தில் பனிக்கும் நீர் மாதிரியான ஒரு பெருமிதம். சில நேரங்களில் மட்டும், `இந்த மாசமும் வந்திடுச்சா?’ எனப் பின்னிரவில் ஏக்கத்துடன் கவிழ்ந்து படுத்து அழுகையில், தலையணையை மட்டுமே ஆதரவாக அணைத்து உறிஞ்சும் கண்ணீர். மாதவிடாயின்போது வரும் குருதியோட்டம், மானுடம் முதலான அத்தனை பாலூட்டிகளின் அடையாளம். சினைமுட்டையை வந்து சேர விந்துவுக்கு விரித்துவைக்கும் சிவப்புக் கம்பளம் அது. கருவாகக் கருத்தரிக்காதபோது முட்டையோடு பெருமிதமாக வெளியேறும் வைபவமே தவிர, ஒதுக்கியது, ஓரங்கட்டியது, ஓய்வாக இருக்கச் சொன்னது எல்லாம் ஆணாதிக்க மத(ன)த்தின் வெளிப்பாடே.

``பயங்கரமா வலிக்குது மம்மி. வாந்தி வருது, தலைவலிக்குது. ஸ்கூலுக்கு நான் போகலை’’ என அழும் 11 வயதுக் குழந்தைகளை, ``லீவா! நாளைக்கு எக்ஸாம். இந்த மாத்திரையைப் போட்டுகிட்டு போ’’ என விரட்டும் கூட்டம் ஒருபக்கம். ``ஒரு எம்.ஆர்.ஐ பார்த்துடலாமா?’’ என டாக்டர் கேட்க, ``வரும்போதே எதுக்கும் இருக்கட்டும்னு ஒரு அல்ட்ரா சவுண்ட் எடுத்துட்டு வந்துட்டோம்’’ எனச் சொல்லும் அம்மாக்கள் இன்னொரு பக்கம். ``அதெல்லாம் ஒண்ணும் ஆகாது வா..! வந்து லைன்ல நில்லு’’ என்ற தாவணித் தோழியின் பேச்சைக் கேட்டு, கொளுத்தும் வெயிலில் நின்று `நீராரும் கடலுடுத்த...’ பாடலின் பாதியிலேயே `சொய்ங்...’ என சோகையால் மயங்கி விழும் கிராமத்துப் பெண்கள் மற்றொரு பக்கம்... என மாதவிடாயில், 11 - 12 வயதில் இன்றும் கசங்கிக் கண்ணீர்விடும் குழந்தைகளே அதிகம்.

நெடுங்காலமாக இந்தியப் பெண்ணுக்கு 14 - 15 வயதில் நடந்த இந்த மாதவிடாய் தொடக்கம், இன்றைக்கு பெரும்பாலும் 12 வயதைச் சுற்றியே நிகழ்கிறது. குழந்தைப் பருவ கவனிப்புகளும், அக்கறைகளும், மருத்துவமும், ஊட்டச்சத்து உணவும் கணிசமாகக்கூடியதுதான் இந்த மாற்றத்துக்கான முக்கியக் காரணம். அதே சமயம், இன்னும் கத்திரிப்பூ பாவாடையைக் கையில் தூக்கி, தன் ஒல்லிக்குச்சிக் கால்களால் பாண்டி ஆடும் கோதை 13 - 14 வயதில் பூப்பெய்த, போக்மேனும் டூமும் விளையாடும் குண்டு ஷ்ரேயாவோ 6-ம் வகுப்பின் ஆரம்பத்திலேயே பூப்பெய்துகிறாள். அதற்குக் காரணம், சிப்ஸையும் சிக்கன் லெக்பீஸையும் அடிக்கடி கொறிக்க ஷ்ரேயாவுக்கு வாய்ப்பு இருக்கிறது. கல்கோனா மிட்டாயைத் தம்பிக்குத் தெரியாமல் வாய்க்குள் ஒதுக்கி ரசிப்பவள்தான் கிராமத்துக் கோதை. ``ஃப்ரைடு ரைஸுக்கு உருளைக்கிழங்குப் பொரியல் மட்டும்தான் அவளுக்கு வேணும். சிக்கனைத் தவிர, வேறு எதுவும் தொட்டுச் சாப்பிட மாட்டேங்கிறா’’ எனச் சற்று உருண்டு, பருத்து உட்கார்ந்திருக்கும் தன் பெண் குழந்தையைக் கூட்டிவரும் அவளின் செல்ல அம்மாவுக்குத் தெரியாது... இந்த போஷாக்குத் தரப்போகும் பின்னாள் பிணக்கு.

p30b.jpg

குண்டான பெண் குழந்தையும், உடற்பயிற்சி இல்லாத குழந்தையும் அநேகமாக சீக்கிரத்தில் பூப்பெய்துவிடும். மாதவிடாய் தொடங்கும் வயது குறையக் குறைய, அவர்களுக்குப் பின்னாளில் சினைப்பை நீர்க்கட்டி (PCOD - Polycystic Ovarian Disease) முதல் மார்பகப் புற்றுநோய் வரை வரும் வாய்ப்பு அதிகம். இந்தச் சினைப்பை நீர்க்கட்டிகள் அதிகரிக்க அதிகரிக்க, மாதவிடாய் சுழற்சி சீரற்றுப்போகும் வாய்ப்பும் உண்டு. 28 நாள்களுக்கு ஒருமுறை வரவேண்டிய இந்த நிகழ்வு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை என நிகழும். அப்படித் தள்ளிப்போகும் மாதவிடாயால் சிலருக்குப் பிற்காலத்தில் கருமுட்டை வளர்ச்சி பாதிப்பும், வெடிப்பில் தாமதமும்கூட நிகழலாம். அழுது அடம் பிடித்தாலும் கூடுதலாகச் சாப்பிடும் தயிர்ச்சோற்றுக்கும் சிக்கனுக்கும் விதிக்கும் சின்ன தடைதான், பின்னாளில் அவள் கருத்தரிப்பு கம்பெனிகளில் காத்திருக்காமல் வைத்திருக்க உதவிடும். உடனே தடாலடியாக, `அய்யய்யோ... நீர்க்கட்டியா?’ எனச் சினைப்பை நீர்க்கட்டிக்கான மருத்துவத்தை 13 வயதில் ஆரம்பிப்பது அபத்தம்.

உணவுக் கட்டுப்பாட்டையும் உடல் உழைப்பையும் அந்தக் குழந்தைக்கு அதிகபட்சம் கற்பிப்பது மட்டுமே இந்த நீர்க்கட்டியை வராமல் விரட்டும். ``ஸோ... நீ டாக்டர் அங்கிள் சொன்ன மாதிரி 5 மணிக்கு கிரவுண்டுல போய் ஓடுறே. இனி உனக்கு சிக்கன் கிடையாது’’ எனச் சொல்லி அலாரம் வைத்துக் கொடுத்துவிட்டு பெற்றோர் அவர்கள் அறையில் போய்ப் படுத்துக்கொண்டால், எந்தக் குழந்தையும் 5 மணிக்குப் புரண்டுகூடப் படுக்காது.  `இறுதிச்சுற்று’ மாதவன் மாதிரி எழுப்பி விட்டுவிட்டு, கூடவே ஓட வேண்டும். முதலில் கொலைவெறியோடு அந்தக் குழந்தை உங்களைப் பார்த்தாலும், பின்னாளில் நிச்சயம் கொஞ்சும்; பெருமையுடன் அரவணைத்துக்கொள்ளும்.

ஏனென்றால், பூனை மீசையை முறுக்கிக்கொண்டு சைக்கிளில் சுற்றும் பாலக(இளைஞ)னுக்குக் கிடைக்கும் வாய்ப்பு, நகர்ப்புறத்தில்கூட நம் பெண் குழந்தைகள் பலருக்குக் கிடைப்பதில்லை. ``இவ்ளோ நாள் போனது இருக்கட்டும். நீ இப்போ பெரிய மனுஷிங்கிறதை நினைவுல வெச்சுக்கோ. பசங்க கண்ணு, அவங்க அங்கிள் கண்ணு எல்லாம் சரி கிடையாது’’ எனப் பயமுறுத்தி, தன் ஜன்னலுக்கு வெளியே மட்டும் தெரியும் உலகத்தை ஊறுகாய் போட்டுக்காட்டுவது தொடங்கும். `அப்படின்னா, உன் செல்போனைத் தா... நான் கேண்டி க்ரஷ் விளையாடுறேன்’ என ஆரம்பிக்கும் பெண் குழந்தைக்கு, அன்று முதல் சிறகுகள் சிறுத்துப்போய் உடல் பருக்கும்... பிராய்லர் கோழிபோல! பருத்த உடல் மாதவிடாய்ச் சீர்கேட்டுக்கான முதல் நுழைவாயில்.

குழந்தையின் பருத்த உடலைக் குறைப்பது எப்படி என்பது, கிட்டத்தட்ட `ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு யார்?’ என்கிற மாதிரி லேசில் கண்டறிய முடியாத சிக்கல். மரபால் வந்ததா... உடன் உட்கார்ந்து அதிகம் சாப்பிட்டதால் வந்ததா... வேலையே செய்யாததாலா... எது காரணம் என்பதைத் தெரிந்துகொண்டால்தான் தீர்வு கிடைக்கும். நீர்க்கட்டிகளைக் குறைக்க/நீக்க, முதலில் உணவிலிருந்துதான் அதைத் தொடங்க வேண்டும். மாதவிடாயைச் சீர்ப்படுத்த, முதலில் உணவில் ஹை கிளைசிமிக் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

p30d.jpg

நவீன மருத்துவ அறிவியல், ரத்தத்தில் சர்க்கரையைக் கட்டுப்படுத்தி ஆளுமைசெய்யும் இன்சுலின் சுரப்பானது, 12 - 13 வயதில் கொஞ்சம் கட்டுப்பாடற்றுச் சுழல்வதால், அகோரப்பசியும் (Hyperinsulinimic), அதையொட்டி சினைப்பையில் நீர்க்கட்டியும் வருகின்றன. அதனால்தான், நிறைய நீர்க்கட்டி இருந்தால் அலோபதி, ரத்த சர்க்கரைக்கான மாத்திரையைப் பரிந்துரைக்கிறது. `வெள்ளை மாத்திரை ஒண்ணு, பெரிய மாத்திரை ரெண்டு, பச்சை மாத்திரை ஒண்ணு, சரியா?’ என, தான் சாப்பிடும் இந்த ரசாயனக் குமிழ்கள் எதற்கு... ஏன்... உள்ளே போய் என்ன செய்யும் என எந்தப் புரிதலுமே பெருவாரியான மக்களுக்கு இல்லை. அதைப் புரியவைக்கும் அளவுக்கான நேரமும் மருத்துவ உலகில் சிலருக்கு இல்லை; மனசோ பலருக்கு இல்லை. விளைவு? `நீர்க்கட்டி போய் மாதவிடாய் சீராகணும்’ என அன்று அவளுக்கு ஆரம்பிக்கும் இந்த மருத்துவம், அவளின் பேரன், பேத்தி காலம் வரை தொடர்கிறது... இன்னும் கூடுதல் நோயுடன் கூடுதல் வேதனைகளுடன் அதைவிடக் கூடுதல் மாத்திரைகளுடன்!

- பிறப்போம்...


p30c.jpg

சினைப்பையில் நிறைய நீர்க்கட்டிகள்... பூப்பெய்திய பிறகு மாதவிடாய் சரியே இல்லை... என்ன சாப்பிடலாம்?

* காலை பானம்: பால் வேண்டாம். கருப்பட்டி காபி அல்லது எலுமிச்சை/ஆரஞ்சு பழச்சாறு 200 மி.லி (10 மி.லி பழச்சாறு. மீதி 190 மி.லி இளஞ்சூட்டு நீர் - சிறிது தேன்).

காலை உணவு: பழத்துண்டுகளுடன் கம்பு-சோள தோசை (கம்பு இரும்பு டானிக்; சோளம் புரத டானிக்).

காலை பள்ளிச் சிற்றுண்டி: கொய்யாப் பழத்துண்டு அல்லது எள் உருண்டை.

மதியம்: காய்கறி சாலட், கீரைக்கூட்டு அல்லது மீனுடன் சிவப்பரிசி, கறுப்பரிசி அல்லது பழுப்பரிசிச் சோறு.

மாலை: பால் சேர்க்காத தேநீர், சுண்டல்.

இரவு: முழுத்தோலுடன்கூடிய கோதுமை ரொட்டி, காய்கறி சிறுதானிய உப்புமா.

மிக முக்கியமாக : கணக்கு, உயிரியல் பாடம் மட்டுமல்லாமல் நீதிபோதனை மற்றும் விளையாட்டுப் பாடங்களுக்கெல்லாம் ட்யூஷன் வைக்கும் பெற்றோரின் `வியாதி'யையும் குணப்படுத்த வேண்டும். மாலை நேரத்தில் பெண்களை விளையாட, நடனம் கற்றுக்கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும். தினசரி ஓட்டமும் நடையுமான பயிற்சியுடன் ஏதேனும் விளையாட்டு – மொத்தமாக 1-2 மணி நேரத்துக்கு.

http://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  
Followers 0