Jump to content

பி.ஜே.பி 'மிஷன் தமிழ்நாடு' - பன்னீர்செல்வம் பாணியில் எடப்பாடி பழனிசாமி!


Recommended Posts

பி.ஜே.பி 'மிஷன் தமிழ்நாடு' - பன்னீர்செல்வம் பாணியில் எடப்பாடி பழனிசாமி!

 
 

பழனிசாமி மற்றும் மோடி

'ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்' என்பார்கள். அப்படித் தமிழ்நாட்டில் ஆளும் அ.தி.மு.க-வுக்குள் நடக்கும் களேபரங்களைவைத்து தமது அரசியல் கூத்தை அரங்கேற்றி வருகிறது பி.ஜே.பி.

அ.தி.மு.க சின்னம் பறிப்பு, அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமானவரித் துறை ரெய்டு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து என்று தொடர்ந்து யார்க்கர் பந்துகளாக வீசி டி.டி.வி.தினகரனை அலறவைத்து வருகிறது பி.ஜே.பி. அதனின் பழைய விக்கெட் பன்னீர்செல்வம் என்றால், அதன் லேட்டஸ்ட் விக்கெட் எடப்பாடி பழனிசாமி. எந்த முதல்வர் பதவிக்காக அ.தி.மு.க-வைப் பிளந்துகொண்டு பன்னீர் பிரிந்தாரோ, அதே முதல்வர் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள எடப்பாடி பழனிசாமி எடுத்துவரும் பகீரத முயற்சிகளே இன்று அவரை டி.டி.வி-க்கு எதிராகத் தள்ளிவருகிறது. முதல்வர் பதவி எனும் துருப்புச் சீட்டைக்கொண்டே பி.ஜே.பி தமது ஆட்டத்தை ஆடிவருகிறது. அதன் முழுமையான ஆட்டத்தால் டி.டி.வி.தினகரன் அலறித் துடிக்க, இதன் முழு ஸ்கேனிங் ரிப்போர்ட்டை முதல்வராவதற்காக எடப்பாடி பழனிசாமி போட்டுவந்த திட்டமும், அதைத் தக்கவைக்க எடுக்கும் மூவ்களையும் குறித்து அறிவதிலிருந்து தொடர்வோம். 

எடப்பாடியின் முதல்வர் பிளான்:

கடந்த 2011-ல் எடப்பாடி தொகுதியில் வெற்றிபெற்று நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக வளர்ந்து இறுதிவரை நால்வர் அணியில் இருந்து கழட்டிவிடப்படாதவராக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி   மட்டுமே. ஜெயலலிதாகூட சொத்துக் குவிப்பு வழக்கால் முதல்வர் பதவியை இழந்தார். ஆனால், இறுதிவரை பதவி இழக்காத மந்திரியாக கோலோச்சியவர் எடப்பாடி பழனிசாமி. இறுதியாண்டில், 'பெரிய அளவிலான நிதியைக் கட்சிக்கு அளிக்காமல் பதுக்கிவைத்தார்' என்ற புகாரின் பேரில் ஜெ - சசியின் விசாரணைப் படலத்துக்கு உட்பட்டாலும், மன்னிப்புக் கேட்டு, கணக்கு வழக்கோடு கட்சிக்கான நிதியை சசிகலாவிடம் வழங்கினார். இதனால் அவரின் குட்புக்கில் மீண்டும் இடம்பிடித்தார்.
 
ஜெ. உடல்நிலை சரியில்லாமல் அப்போலோவில் இருந்தபோதே, 'அம்மாவுக்குப் பிறகு இனி எல்லாமே நம்ம சின்னம்மாதான். அவர் பின்னால் அணி திரளணும்' என்று அப்போதே தமது கொங்கு மண்டல எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்ட பலருக்கு 'கட்சி செலவுக்கு வைத்துக்கொள்ளுங்கள்' என்று வைட்டமின் 'ப' வைத் தாராளமாக இறக்கினார். அதிக அளவில் நிதி புழங்கிய துறையாக நெடுஞ்சாலைத் துறை இருந்தது கூடுதல் வசதி. இந்த நேர்மையான(!!!!!!) அணுகுமுறையால் சசி மற்றும் கொங்கு எம்.எல்.ஏ-க்களிடம் ஆதரவைப் பெற்றார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். அதேநேரம் தமது கொங்கு மண்டலத் தொழிலதிபர்கள் லாபி மூலம் மத்திய அரசின் அசைவுகளை அறிந்தார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் போக்கை முன்கூட்டியே அறிந்தவர், கூடுதலாக சசி ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார். கூவத்தூரில் தங்கியிருந்த சசி ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் குடும்பத்துக்குத் தேவையான செலவினங்கள், இவரின் சேலம் வீட்டிலிருந்தே விநியோகிக்கப்பட்டன. இடையிடையே எம்.எல்.ஏ குடும்பத்தினர் எதிர்க்குரல் எழுப்பியபோது, எடப்பாடியின் ஆதரவாளர்கள் அவர்களை நேரில் சந்தித்து 'தங்கமாக'ப் பார்த்துக்கொண்டனர். தீர்ப்பையொட்டி சசிகலா சிறைக்குச் செல்ல, நல்ல விசுவாசி அடையாளத்துக்கானப் பரிசாக முதல்வர் பதவியைப் பெற்றார். 

பி.ஜே.பி-யிடம் சுமூகம்:

எடப்பாடி பழனிசாமி

மற்றொருபுறம், திராவிட மாநிலம் ஒன்றின் கவர்னராக இருக்கும் தமது சமூகத்தைச் சார்ந்தவர் மூலம் மத்திய பி.ஜே.பி அரசிடம் பேசினார். 'உங்களின் முதல் சாய்ஸாகப் பன்னீர்செல்வத்தை ஆதரித்தீர்கள். தற்போது அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. பெரும்பான்மை பலத்தோடு இருக்கும் நான் மத்திய அரசோடு இணக்கமாக இருப்பேன்' என்று கவர்னர் மூலம் லாபி செய்தார். அது பலித்தது. அதற்கான நன்றி விசுவாசமே நெடுவாசல் முதற்கொண்டு விவசாயிகள் போராட்டம்வரை இந்தியாவைத் திரும்பிப் பார்க்கவைத்தபோதும் அதில் மேலோட்டமான நிலைப்பாடுகளையே எடப்பாடி எடுத்தார். அதாவது, பாம்பும் நோகாமல் தடியும் நோகாமல் என்பதைப்போல. அழுத்தமான எதிர்வினைகள் இல்லை. 

ஆர்.கே.நகரில் வேட்பாளரான டி.டி.வி.:

முதல்வர் பதவியைக் குறிவைத்தே டி.டி.வி களமிறங்கியதை நன்கு அறிந்துவைத்திருந்த எடப்பாடி, அவ்வப்போது பிரசாரத்துக்குச் சென்று அவருக்கு எதிரான நிலையில், தாம் இல்லை எனக் காட்டிக்கொண்டார். தமது சமூக மந்திரியும், வேண்டப்பட்டவருமான எஸ்.பி.வேலுமணியைப் பிரசாரத் திட்டங்கள் வகுக்கும் குழுவிலும் நிறுத்தினார். அவர் டி.டி.விகூடவே வலம்வந்தார். மந்திரி செங்கோட்டையனும் தொடர்ந்து பிரசார வியூகங்களை வகுத்தார். இதன்மூலம் தமது சமூகத்தினரின் வட்டத்துக்குள் டி.டி.வி இருப்பதுபோன்ற ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டது. அதேநேரம், மறுபக்கம் தமது கொங்கு ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கு தாராளம் காட்டி, டி.டி.வி-யைக் கடந்து தமக்கான தனித்த செல்வாக்கை வளர்த்தபடியே இருந்தார். தேர்தலிலோ, தமது ஆதரவாளர்கள் மூலம் ஒரு சர்வே எடுத்தார் எடப்பாடி. அதில்,' தாராள பட்டுவாடா காரணங்களால் இறுதிக்கட்டத்தில் டி.டி.வி வெற்றி பெற்றுவிடுவார்' என்று  சர்வே முடிவு தெரிவித்தது. இந்தத் தகவல்களை எடப்பாடி ஆதரவாளர்கள் தரப்பே, எதிரணியான பன்னீரின் கவனத்துக்குக் கொண்டுசென்றது. பிறகென்ன, அவர்கள் செய்யவேண்டியதைச் செய்ய தேர்தலும் நின்றது. எடப்பாடியின் முதல்வர் பதவியும் தப்பியது.

டி.டி.வி பதில் மூவ்கள்:

"பத்து ஆண்டுக்கு சசியால் தேர்தலில் நிற்க இயலாது. துணைப் பொதுச்செயலாளராக இருப்பதோடு முதல்வர் பதவியும் தமது கைக்குள் இருந்தால் எதிர்வரும் நான்கு ஆண்டுகளையும் செல்வாக்கின் கீழ்கொண்டு வந்துவிடலாம் என்பது டி.டி.வி கணக்காக இருந்தது. இடைத்தேர்தல் வெற்றிக்குப் பிறகு மக்கள் நலத்திட்டங்கள், இலவசத் திட்டங்கள் அறிவிப்பதுமூலம் தமது தனிப்பட்ட செல்வாக்கை வளர்த்துக்கொண்டால் தனித்த செல்வாக்குமிக்க தலைவராக நிற்கலாம்' என்பதை நோக்கி தமது அடிகளை எடுத்துவைத்தார். வெளியில் தமது சொல்லுக்குக் கட்டுப்பட்டவர்போல எடப்பாடி காணப்பட்டாலும், உள்ளார்ந்து அவரின் மூவ்களை அறிய தமது ஆட்கள் மூலம் தகவல்களை அறிந்துவந்தார். முதல்வராக எடப்பாடி நீடிக்கும் விருப்பத்தில் இருப்பதை அறிந்தார். இதனால் 
ஆர்.கே.நகரில் வென்றால், அடுத்து தாம் முதல்வர், இல்லையேல் தமது பேச்சை மறுக்காத ஒருவரை முதல்வராக்க வேண்டும் என்று தமது நெருக்கமானவர்களிடம் தெரிவித்துவந்தார். இந்தநிலையில் ஆர்.கே.நகர் தேர்தல் நின்றுவிட, கடும் கோபத்துக்கு உள்ளானார் டி.டி.வி. தமது ஆதரவாளர்களான தளவாய் சுந்தரம், மந்திரி நன்னிலம் காமராஜ் உள்ளிட்டவர்களிடம் டிஸ்கஷன் செய்தார். 

தமிழ்நாட்டின் புதிய முதல்வர்?

எடப்பாடி பழனிசாமி மற்றும் தினகரன்

'ஓ.பி.எஸ் தனி அணியால், அவர் சமூக ஆதரவு பிரிந்துக்கிடக்கிறது. நம்மீது அவர்களுக்குக் கோபம் இருக்கிறது. அதே சமூகத்தைச் சார்ந்த, நான் முதல்வரானால் சரிகட்டலாம் என்று இருந்தேன்.ஆனால், தேர்தல் ரத்தாகிவிட்டது. அதனால், அதே சமூகத்தைச் சார்ந்த யாரையாவது முதல்வராக நியமிக்கலாம். என்னுடைய லிஸ்ட்டில் வனத்துறை மந்திரி திண்டுக்கல் சீனிவாசன் உள்ளார். இதனால், அந்தச் சமூகத்தையும் சரிகட்டியதுபோல் ஆகும்; ஓ.பி.எஸ் ஏரியாவிலிருந்தே ஒருவரை அவருக்கு செக் வைத்ததுபோல் இருக்கும். மேலும், தனிப்பட்டளவில் தமது செல்வாக்கை வளர்த்துக்கொள்ள விரும்பாத அவர் நம் கட்டுப்பாட்டுக்குள் இருப்பார். இதன்மூலம் எடப்பாடியையும் நம் கட்டுக்குள் மீண்டும் கொண்டுவரலாம். எனவே, கூடிய விரைவில் முதல்வரை மாற்றலாமா' என ஆலோசித்துவந்தார் டி.டி.வி. 

டி.டி.வி. - திவாகரன் முட்டல் :

டி.டி.வி துணைப் பொதுச்செயலாளர் ஆனபின் தமக்கான முக்கியத்துவம் குறைகிறது, தமது ஆதரவு மந்திரி ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட, பலரை டி.டி.வி கண்டுகொள்ளாமல் இருப்பது போன்ற காரணங்களால் திவாகரன் அதிருப்தியில் இருந்தார். இந்தநிலையில் புதிய முதல்வர் யோசனையை அறிந்து, 'எடப்பாடியை பதவி விலகச் செய்தால் கட்சிக்கு எதிராகப் போகும். அவர் கட்டுப்பாட்டில் நாற்பது எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் உள்ளனர். அதை நாம் இழக்க வேண்டிவரும். தவறான முடிவு. எடப்பாடியே நீடிப்பதுதான் சரி' என்று தமது ஆதரவாளர்கள் மூலம் டி.டி.வி-க்கு புத்திமதி கூறியுள்ளார் திவாகரன்.

மந்திரிகள் சந்திப்பு: - டி.டி.வி-யின் பி.ஜே.பி எதிர்ப்பு:

இதையெல்லாம் எடப்பாடி நன்கு அறிந்திருந்த சமயத்தில்தான் மந்திரி விஜயபாஸ்கர் மீதான ரெய்டின் பிடி மேலும் இறுகத் தொடங்கியது. இதையொட்டி மந்திரிகள் டி.டி.வி-யைச் சந்தித்தனர். இதை எடப்பாடி ஆதரவாளர்கள் பயன்படுத்திக்கொண்டனர். 'தமக்கு அனைத்துத் தரப்பில் இருந்து தொடர்ந்து நெருக்கடி கொடுக்கும் பி.ஜே.பி-யை எதிர்ப்பதுதான் சரி என்று திவாகரன், நடராசன் (தொடக்கத்தில் இருந்தே இதை வலியுறுத்தி வந்தார். தற்போது உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் உள்ளார்) ஆகியோர் முடிவெடுத்தனர். ஆனால் எடப்பாடி தரப்போ, அன்று தஞ்சாவூரில், பி.ஜே.பி-க்கு எதிராக நடராசன் பேசியதன் விளைவுதான் அ.தி.மு.க-வுக்குள் நடக்கும் அத்தனை பிரச்னைகளுக்கும் அடிப்படையாக அமைந்தது. பி.ஜே.பி-யின் கோபம் இன்று ரெய்டுவரை கொண்டுவந்துள்ளது என்று எடப்பாடி ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இதையே, டி.டி.வி-யை... மந்திரிகள் சந்தித்தபோதும் பி.ஜே.பி-க்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. எடப்பாடி பக்கம்  தங்கமணி, செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, கரூர் விஜயபாஸ்கர், கருப்பண்ணன், பெஞ்சமின் போன்றவர்கள் இருக்கிறார்கள். கொங்கு வட்டார எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு கணிசமாக உள்ளது. தமிழ்நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்புக்கு, பெரும்பாலானளவில் அடிப்படையாக இருப்பது கொங்கு சமூகத் தொழிலதிபர்கள் ஆவார்கள். இங்கே உள்ள அ.தி.மு.க அரசு தமது தொழில்களுக்குச் சாதமாக இருக்கிறது. அது, தொடர வேண்டுமென்றால் மத்திய அரசிடம் சுமுக உறவு அவசியம். எனவே, பெரிதாக எதிர்த்துக்கொள்ள வேண்டாம் என்று தொழிலதிபர்களின் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர் எடப்பாடி ஆதரவாளர்கள்" என்று அ.தி.மு.க-வுக்குள் கடந்த சில வாரங்களாக நடக்கும் முட்டல், முனகல்களை மிக விரிவாக நம்முன் விளக்கினர் அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள்.இதை க்ராஸ் செக் செய்ய நாம் தேசிய அளவிலான அரசியல் ஆய்வாளர்கள் சிலரிடம் பேசினோம். ''மேற்கண்ட அனைத்தும் ஐ.பி புலனாய்வு ரிப்போர்ட் மூலம் பி.ஜே.பி அறிந்துவைத்திருந்தது. எடப்பாடியைப் பொறுத்தவரை தமது முதல்வர் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள அனைத்துவகையிலும் வேலை செய்கிறார். டி.டி.வி-க்கள் பக்கம் நின்றாலும் அவருடன் முரண்படுபவர்களிடம் தொடர்ந்து உறவைப் பேணி வருகிறார். டி.டி.வி குடும்பத்திடம் கட்சி ஆதிக்கம் சென்றால், அது கூடுதல் சிக்கலாக அமையும் எனக் கருதும் பி.ஜே.பி-யிடம் கூடுதல் விசுவாசத்தைக் காட்டவும் தயங்குவதில்லை. முதல்வர் பதவி மீது விருப்போடு இருக்கும் எடப்பாடி பழனிசாமியைத் தமது ட்ரம்ப் கார்டாகப் பயன்படுத்தத் தொடங்கியது பி.ஜே.பி. அதைக் கொண்டு பி.ஜே.பி வகுத்த மாஸ்டர் பிளான் என்ன தெரியுமா?

பி.ஜே.பி-யின் நாடாளுமன்ற பிளான்: 

மோடி ]

மக்களிடம் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு இருந்தாலும் எம்.எல்.ஏ-க்கள் பலமில்லை. அதே நேரம், எடப்பாடி பழனிசாமியிடம் தனித்த எம்.எல்.ஏ-க்கள் பலமுண்டு. ஒருபக்கம் பன்னீர் மூலம் டி.டி.வி-க்கு நெருக்கடி கொடுக்கும். அதேநேரம், மறுபக்கம் எடப்பாடி பழனிசாமியைத் தமது கட்டுப்பாட்டுக்குள் பி.ஜே.பி வைத்துள்ளது. எடப்பாடிக்கு எதிரான சில மூவ்களை டி.டி.வி எடுப்பதை அறிந்த பி.ஜே.பி ரெய்டு உள்ளிட்ட பிடிகளை இறுக்குகிறது. காரணம், தற்போதைய சூழலில் தேர்தல் வந்து அதில் தனித்து பி.ஜே.பி-யால் செல்வாக்கு செலுத்த இயலாது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இரண்டாண்டுகள் உண்டு. அதுவரை கட்சியை வளர்க்க வேண்டிய அவசியமுண்டு. அப்போது தமது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பன்னீருடன் கூட்டணிவைத்துக் கணிசமான எம்.பி-க்களை வெல்வதும், தொடர்ந்து அ.தி.மு.க-வைத் தமது பிடிக்குள் வைத்திருக்கவும் திட்டமிடுகிறது. டி.டி.வி., கட்சியையும் ஆட்சியையும் தமது முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதைத் தடுக்கவே, அவர்கள் அணிக்குள் இருக்கும் எடப்பாடி பழனிசாமியைப் பயன்படுத்திக்கொள்கிறது. அதேநேரம் எடப்பாடிக்கும் கொடுக்கும் எச்சரிக்கைதான் இந்த ரெய்டுகளும் ஆகும்" என்றார்கள். தமக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில். இதற்கு, எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி ஆதரவாளர்களோ, 'முட்டல், மோதல் எனப் பல்வேறு வதந்திகள் பரவுகின்றன. முதல்வராகும் எண்ணமில்லை என்று  டி.டி.வி பலமுறை தெரிவித்துவிட்டார். அதேபோல எடப்பாடி பழனிசாமியும் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி-யை ஏற்றுக்கொண்டுள்ளார். இருவருக்கும் எந்தப் பிரிவுமில்லை. எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தவரை மத்திய ஆளும் அரசு என்ற அடிப்படையில் மக்கள் நலத்திட்டங்களுக்காக பி.ஜே.பியை அணுகுகிறார். அவ்வளவே' என்கின்றனர்.
அரசியலில் நிரந்தர நண்பருமில்லை, எதிரியுமில்லை. அதற்குத் தெரிந்ததெல்லாம் பதவி, அந்தஸ்து, அதிகாரம்தானோ?
 
இப்போதைக்குத் தமிழ்நாட்டின் அரசியல் ஐ.பி.எல்  ஆட்டம் பி.ஜே.பி-யின் கையிலேயே உள்ளது. 

http://www.vikatan.com/news/politics/86579-bjp’s-mission-tamil-nadu-plan.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.