Sign in to follow this  
நவீனன்

நன்மாறன்கோட்டை கதை

Recommended Posts

நன்மாறன்கோட்டை கதை

சிறுகதை: இமையம், ஓவியங்கள்: செந்தில்

 

``நல்ல ஊரு சார். இங்க வேலை செய்றவங்க எல்லாருமே நல்ல மாதிரியான ஆளுங்கதான். நல்லா கோஆபரேட் பண்ணுவாங்க. கட்சிக்காரங்க, அரசியல்வாதி, உள்ளூர்க்காரங்கனு யாரும் ஸ்கூலுக்குள்ள வர மாட்டாங்க. நான் இந்த ஸ்கூலுக்கு வந்து பத்து வருஷமாச்சு. எந்தத் தொந்தரவும் இல்லை. ரிட்டையர்ஆகிறவரைக்கும் நீங்களும் இந்த ஊர்லயே ஓட்டலாம் சார். நன்மாறன்கோட்டைங்கிற பேருக்கு ஏத்த மாதிரி ஊரு ஆளுங்களும் இருப்பாங்க’’ என உடற்கல்வி ஆசிரியர் தனவேல் சொன்னார்.

``அப்படியா?’’ என்று ராமன் கேட்டதோடு சரி.

மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்று, இன்று காலையில்தான் கடலூர் மாவட்டத்திலிருந்து வந்து புதிய பள்ளியில் ராமன் சேர்ந்திருக்கிறார். முதல் நாளே அதிகம் பேச வேண்டாம், கேள்விகள் கேட்க வேண்டாம், ஆசிரியர்கள் எப்படியோ ஊர் எப்படியோ என்ற யோசனையில் அதிகமாகப் பேசாமல் இருந்தார்.

காலையில் வந்ததிலிருந்து ராமனுக்கு அதிகமான வேலைகள் இருந்தன. வரிசையாக வந்து ஆசிரியர்கள் வேறு வாழ்த்து சொன்னார்கள்.

தான் பணியேற்ற விவரத்தை, உரிய அலுவலர் களுக்குத் தெரிவிப்பதற்கான கடிதங்களைத் தயார்செய்தார். மதியம் சாப்பிட்டார். உட்கார்ந்தே இருந்ததால் தூக்கம் வருவதுபோல இருந்தது. முதல் நாளே தூங்கினால் அசிங்கம் என நினைத்தார். கைக்கடிகாரத்தைப் பார்த்தார். இரண்டே கால்.

``ஒவ்வொரு க்ளாஸா பார்த்துட்டு வரலாமா சார்?’’ எனக் கேட்டார்.

p70b.jpg

எதிரே நாற்காலியில் உட்கார்ந்திருந்த தனவேல் மறுப்பு எதுவும் சொல்லாமல் ``போகலாம் சார்...’’ எனச் சொல்லிவிட்டு, போவதற்குத் தயாரான மாதிரி எழுந்து நின்றார். ராமனும் எழுந்து அறையைவிட்டு வெளியே வந்தார். அவருக்குப் பின்னாலேயே தனவேலுவும் வந்தார்.

``முதல்ல ஆறாம் வகுப்பைப் பார்த்துடலாம். எங்கே இருக்கு?’’

``வாங்க சார்’’ எனச் சொன்ன தனவேல், வராந்தாவில் ராமனுக்கு முன்னால் நடக்க ஆரம்பித்தார்.

ஆறாம் வகுப்புக்குள் தனவேல் நுழைந்தார். பின்னால் நுழைந்த ராமனைக் கண்டதும் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியை, ``வாங்க சார்’’ எனச் சொன்னார். மாணவர்களையும் பிளாக்போர்டையும் ராமன் பார்த்தார்.

பிறகு, ``நீங்க நடத்துங்க’’ எனச் சொல்லிவிட்டு வகுப்பறையைவிட்டு வெளியே வந்தார். அடுத்தது ஏழாம் வகுப்புக்குள் போனார். அடுத்தடுத்து  என பன்னிரண்டாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்புக்குள்ளும் நுழைந்து பார்த்துவிட்டு, ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டும் பேசிவிட்டு வெளியே வந்தார். எல்லா வகுப்புகளிலுமே ஆசிரியர்கள் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்கள். தனியார் பள்ளியின் அமைதியைவிட கூடுதல் அமைதியாக இருந்தது. புதிய தலைமை ஆசிரியரின் குணம் எப்படியோ, முதல் நாளே அவரிடம் கெட்டபெயர் வாங்க வேண்டாம் என எல்லா ஆசிரியர்களும் நினைத்திருக்கலாம் என எண்ணிய ராமன், பள்ளிக் கட்டடத்தைவிட்டு வெளியே வந்தார். மைதானத்தை ஒரு பார்வை பார்த்தார். என்ன தோன்றியதோ, மைதானத்தைச் சுற்றிப்பார்க்க ஆரம்பித்தார். அவருக்கு இணையாக தனவேல் நடந்துகொண்டிருந்தார். பள்ளிக் கட்டடத்துக்குச் சற்றுத் தள்ளி நேர்தெற்கே இருந்த கழிவறைக்கு வந்தார். உள்ளே நுழைந்து பார்த்தார். அது பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. மூக்கை மூடிக்கொண்டு வெளியே வந்து, ``இவ்வளவு மோசமா இருக்கே. புள்ளைங்க எங்கே போகும்?’’ எனக் கேட்டார்.

``சுவர் மறைவுலேயே போயிடும்ங்க சார்.’’

``டீச்சர்ஸுக்கு இருக்கா?’’

``ஹெச்.எம் ரூமுக்குப் பக்கத்திலேயே இருக்கு சார்.’’

``லேடி டீச்சர்ஸுக்குத் தனியா இருக்கா?’’

``இல்லை சார்.’’

``பின்ன அவங்க எங்கே போவாங்க?’’

``அந்த ஒரு ரூம்லதான் போகணும். யார் போனாலும் ரெண்டு ரெண்டு பேரா போவாங்க. ஒருத்தங்க உள்ளார இருந்தா, ஒருத்தங்க வெளியே காவலுக்கு நிப்பாங்க’’ எனச் சொன்ன தனவேல், லேசாகச் சிரித்தார்.

``நான் முன்னால வேலைபார்த்த ஸ்கூல்ல கழிவறை தனித்தனியா இருக்கும்... பெரிய ஸ்கூல்’’ என ராமன் சொன்னதற்கு, தனவேல் எந்தப் பதிலும் சொல்லவில்லை.

ராமன் பள்ளிக் கட்டடத்தையும் மைதானத்தையும் பார்த்தார். ஊருக்கு ஒதுக்குப்புறமாக, விஸ்தாரமான இடத்தில்தான் பள்ளி இருந்தது. மதில் சுவர் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் உண்டாயிற்று. மைதானம் முழுவதும் வெயில் படர்ந்திருந்தது, வெக்கையாக இருந்தது; வியர்த்தது. `ஜனவரி மாசத்துலேயே நல்ல வெயிலா இருக்கு’ எனச் சொல்ல நினைத்தார். ஆனால், சொல்லவில்லை. தனவேல் எப்படிப்பட்ட ஆளோ? முதல் நாளே அதிகமாகப் பேசி வம்பில் மாட்டிக்கொள்ள வேண்டாம் என்ற தயக்கம் ராமனுக்கு இருந்தது. அதுபோலவே தனவேலுக்கும் இருந்தது. பக்கத்திலிருந்த வேப்ப மரத்தைப் பார்த்ததும் ``வாங்க நிழலுக்குப் போவோம்’’ என ராமன் சொன்னார். இருவரும் நடந்து வேப்ப மர நிழலுக்கு வந்தனர். சுற்றும் முற்றும் பார்த்தார் ராமன். சாலையில் இருந்து பள்ளிக்கு வரும் வழியைப் பார்த்தார். பூண்டு செடிகள் மண்டிக் கிடந்தன. அவற்றைப் பிடுங்கச் சொல்ல வேண்டும் என நினைத்தார். அதே மாதிரி மைதானம் முழுவதும் ஆங்காங்கே நின்றுகொண்டிருந்த பூண்டு செடிகளையும் பிடுங்கச் சொல்ல வேண்டும் என நினைத்தார். இன்னிக்கே சொன்னால் அதிகாரம் செய்வதாக ஆகிவிடும் என்ற பயத்தில், நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தார். அப்போதுதான் மனதில் தோன்றிய மாதிரி  ``ஏ.ஹெச்.எம் எப்படி?’’ என்று கேட்டார்.

``நல்ல மாதிரியான ஆளு சார். அவரால எந்தத் தொந்தரவும் வராது.’’

``அப்படியா?’’ எனக் கேட்டதோடு சரி.

அடுத்த கேள்வியை ராமன் கேட்கவில்லை. தனவேலுவும் தானாக எதுவும் சொல்லவில்லை. இருவரும் சிறிது நேரம் பேசாமல், மைதானத்தைப் பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தனர்.

``நீங்க ட்ரெஷரிக்குப் போய் உங்க புரொமோஷன் ஆர்டர் காப்பியைக் கொடுக்கணும்; மாதிரிக் கையெழுத்தும் போடணும் சார்.’’

``இன்னைக்கு முடியாது. நாளைக்குக் காலையில போகலாம்னு இருக்கேன். இங்கே ட்ரெஷரி எங்கே இருக்கு?’’

``ஒரத்தநாடு சார்.’’

``வாங்க... போய் ட்ரெஷரிக்கான தபாலை ரெடி பண்ணலாம்’’ எனச் சொல்லிவிட்டு ராமன் நடக்க ஆரம்பித்தார். அவருடன் தனவேலுவும் நடந்தார்.

தனது அறைக்கு வந்து நாற்காலியில் உட்கார்ந்தார். ``கிளார்க்கைக் கொஞ்சம் கூப்பிடுங்க சார்’’ என ராமன் சொன்னார். எழுந்து சென்ற தனவேல், பக்கத்து அறையில் இருந்து கிளார்க்கை அழைத்துக்கொண்டு வந்தார்.

``நான் நாளைக்கு ட்ரெஷரிக்குப் போகலாம்னு இருக்கேன். அதுக்கான தபால்களை ரெடி பண்ண முடியுமா சார்?’’ என ராமன் கேட்டார்.

``ரெடி பண்ணிக் கொண்டுவர்றேன் சார்’’ எனச் சொன்ன வேகத்திலேயே கிளார்க் தனது அறைக்குச் சென்றுவிட்டார். தனவேல் நின்றுகொண்டிருந்தார். அவரிடம் ராமன் எதுவும் பேசாததால், ``நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. அப்புறமா வர்றேன் சார்’’ எனச் சொல்லிவிட்டு வெளியே போனார். வெளியேபோன சிறிது நேரத்திலேயே உள்ளே வந்து, ``உங்களை ஒரு அம்மா பார்க்கணும்னு வந்திருக்காங்க சார்’’ எனச் சொன்னார்.

``என்னையவா?’’ எனச் சந்தேகப்பட்டது மாதிரி ராமன் கேட்டார்.

``ஆமாம் சார்.’’

``பசங்க பிரச்னையா இருந்தா நீங்களே என்னா, ஏதுன்னு விசாரிச்சு அனுப்பிடுங்க.

இந்த ஸ்கூலைப் பத்தி எனக்கு ஒண்ணும் தெரியாதே’’ எனச் சொன்னார் ராமன்.

``பார்க்கிறேன் சார்’’ எனச் சொல்லிவிட்டு தனவேல் வெளியே சென்றார்.

தனவேலிடம் பள்ளி நடைமுறைகள் பற்றி, ஆசிரியர்கள் பற்றிக் கேட்கலாமா என்று ராமன் யோசித்தார். முதல் நாளே எல்லா விஷயங்களைப் பற்றியும் கேட்டால் சரியாக இருக்குமா, ஒரு வாரம் கழித்து விசாரித்துக்கொள்ளலாமா, வந்த நாளிலேயே மற்றவர்களைப் பற்றி விசாரித்தால் தவறாக நினைக்கலாம். முதலில் தனவேல் எப்படிப்பட்ட ஆள் என்று தெரிந்துகொள்வோம் என்று நினைத்தார். இன்றிரவு பள்ளியிலேயே தங்கிவிட்டு, நாளை காலையிலே ட்ரெஷரிக்குச் சென்று பதவி உயர்வு ஆணையை, மாதிரிக் கையொப்பம் போட்ட கடிதத்தைக் கொடுத்துவிட்டு, மதியமே ஊருக்குப் போய்விடலாம். சனி, ஞாயிறு கழிந்து, திங்கள்கிழமை வந்து எங்கு தங்குவது என்பதை முடிவுசெய்யலாம் என நினைத்துக்கொண்டார். சுவரில் மாட்டியிருந்த காந்தி, அம்பேத்கர், பெரியார், நேதாஜி படங்களைப் பார்த்தார். பிறகு, முக்கியமான காரியத்தைச் செய்வதுபோல கைக்கடிகாரத்தைப் பார்த்தார். நேரத்தைத் தெரிந்துகொண்டதும் அவருடைய முகம் மாறியது. பாட்டிலை எடுத்துக் கொஞ்சம்போல தண்ணீர் குடித்தார். பிறகு ஆசிரியர் வருகைப் பதிவேட்டை எடுத்து, ஒவ்வோர் ஆசிரியர் பெயராகப் படிக்க ஆரம்பித்தார். அப்போது அறைக்குள் வந்த தனவேல், ``ஒரு அம்மா வந்து டி.சி கேட்குது. இப்ப தர முடியாதுன்னு சொன்னா கேட்க மாட்டேங்குது சார்’’ எனச் சொன்னார்.

``வரச் சொல்லுங்க.’’

வெளியே சென்ற தனவேல் ஒரு பெண்ணையும் மூன்று பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு உள்ளே வந்தார். அந்தப் பெண்ணையும், அந்தப் பிள்ளைகளையும் சரியாகக்கூடப் பார்க்காமல் எடுத்த எடுப்பில், ``சொல்லுங்கம்மா’’ என்றார் ராமன்.

``இவன் பேரு தினேஷ்குமாரு, ஏழாவது படிக்கிறான். இவன் பேரு சந்தோஷ்குமாரு, ஆறாவது படிக்கிறான் சார்.’’

``எங்கே?’’

``இந்தப் பள்ளிக்கூடத்துலதான் சார்.’’

``எதுவும் பிரச்னையா, வாத்தியாருங்க யாராச்சும் அடிச்சுட்டாங்களா?’’

``இல்லை சார்.’’

``பின்ன எதுக்கு டி.சி கேட்டீங்களாம்?’’

``நாளைக்கு நாங்க ஊருக்குப் போறோம் சார்.’’

``போயிட்டு வாங்க. அதுக்கு எதுக்கு டி.சி.?’’

``திரும்பி வர மாட்டோம் சார்.’’

மாமியார், மருமகள் சண்டை நடந்திருக்கும். புருஷன் அடித்திருப்பான். அதற்காகக் கோபித்துக்கொண்டு பிள்ளைகளை அழைத்துக்கொண்டு பிறந்த வீட்டுக்குப் போகிற பெண்ணாக இருக்க வேண்டும். புருஷன்மீது இருக்கும் கோபத்தில் வந்து டி.சி கேட்கிறாளே. என்ன பெண்ணாக இருப்பாள்? `புருஷன் பெண்டாட்டிச் சண்டையில் பிள்ளைகளை எதற்காகச் சிரமப்படுத்துகிறாய்?’ எனக் கேட்க நினைத்தார். ஆனால், கேட்கவில்லை. ஊர்ப் பிரச்னை நமக்கு எதற்கு என இருந்துவிட்டார்.

``ஜூன் மாசத்துல வாங்க. வாங்கிக்கலாம்.’’

``எங்க அம்மா ஊருக்குப் போறோம் சார். இனிமே இந்த ஊருக்குத் திரும்பி வர மாட்டோம்.’’

``நான் சொல்றதைப் புரிஞ்சுக்கம்மா. ஜனவரி மாசத்துல டி.சி கொடுக்கக் கூடாது.

மீறிக் கொடுத்தா டி.இ.ஓ., சி.இ.ஓ-னு எல்லாரும் ஆயிரத்தெட்டுக் கேள்விகள் கேட்பாங்க. பதில் சொல்லி மாளாது. நீங்க போயிட்டு அப்புறமா வாங்க’’ - ராமன் நிதானமாகச் சொன்னார்.

அவர் சொன்னதை அந்தப் பெண் காதில் வாங்காத மாதிரி நின்றதுநின்றபடியே இருந்தாள். அவளுடைய பிள்ளைகளும் கைகளைக் கட்டியபடி அப்படியே நின்றுகொண்டிருந்தனர். ஆடாமல் அசையாமல், மல்லுக்கட்ட வந்ததுபோல் அவர்கள் நின்று கொண்டிருந்த விதம் ராமனுக்கு லேசாக எரிச்சலை உண்டாக்கியது. `தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்று வந்த முதல் நாளே பிரச்னையா?’ என யோசித்தார்.

ராமனுக்காக வக்காலத்து வாங்குவது மாதிரி ``ஐயா சொல்றது புரியலையா? ஜூன் மாசம் வாங்க. வந்த உடனே வாங்கிட்டுப் போயிடலாம். இப்ப கிளம்புங்க’’ என தனவேல், அந்தப் பெண்ணைப் பார்த்துச் சொன்னார். அவர் சொன்னதை அந்தப் பெண் கேட்வில்லை; அவர் பக்கம் திரும்பியும் பார்க்கவில்லை. அதனால் தனவேலுவுக்குக் கோபம் உண்டாயிற்று.

``நாங்க சொல்றது புரியுதா... இல்லையா? இப்ப டி.சி தர முடியாது. கிளம்புங்க’’ என முன்பைவிடச் சத்தமாக தனவேலு சொன்னார். அப்போதும் அந்தப் பெண் அவர் சொன்னதைக் கேட்கவில்லை; அவர் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை. தனவேலையும் அந்தப் பெண்ணையும் மாறிமாறிப் பார்த்த ராமன், ``நீங்க உட்காருங்க சார்’’ எனச் சொன்னார். தனவேல் ஒரு நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு அந்தப் பெண்ணை முறைத்துப் பார்த்தார். அவளுடைய பார்வை கடைசி வரை அவர் பக்கம் திரும்பவே இல்லை.

``போயிட்டு ஜூன் மாசம் வாங்கம்மா’’ என ராமன் சொன்னார்.

ராமனுடைய குரலிலிருந்த அலுப்பையும் சலிப்பையும் பார்க்காமல் அந்தப் பெண் உறுதியான குரலில், ``எனக்கும் என் புள்ளைங்களுக்கும் இனி இந்த ஊரே வேண்டாம்னு போறோம் சார்’’ எனச் சொன்னாள்.

``நீ சொன்னதையே சொல்லிக் கிட்டிருக்க? நான் சொல்றதைப் புரிஞ்சுக்க மாட்டேன்கிற. இந்தச் சமயத்தில நான் டி.சி கொடுக்கக் கூடாது. மீறிக் கொடுத்தாலும் அதை எடுத்துக்கிட்டுப் போய் எந்தப் பள்ளிக்கூடத்துலேயும் சேரவும் முடியாது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., நீதிபதியோட புள்ளைங்களை மட்டும்தான் சேர்ப்பாங்க... புரியுதாம்மா?’’ என ராமன் சொன்ன சமாதானத்தை, அந்தப் பெண் ஏற்றுக்கொண்ட மாதிரி தெரிய வில்லை. அதனால் `திமிர் பிடித்த பெண்ணாக இருப்பாளோ' என நினைத்தார்.

அப்போது டைப் செய்திருந்த இரண்டு காகிதங்களைக் கொண்டுவந்த கிளார்க் ராமன் முன்பாக வைத்தார். அந்த இரண்டு காகிதங்களையும் எடுத்து அவர் கவனமாகப் படித்தார். பிறகு, கையெழுத்துப் போட்டுக் காகிதங்களை எடுத்து கிளார்க்கிடம் கொடுத்து ``கவர் போட்டுடுங்க’’ எனச் சொன்னார். காகிதங்களை எடுத்துக்கொண்டு கிளார்க் வெளியே போனார்.

எதிரில் நின்றுகொண்டிருந்த பெண்ணையும் மூன்று பிள்ளைகளையும் ராமன் எரிச்சலுடன் பார்த்தார். `முதல் நாளிலேயே என்ன சனியனா இருக்கே’ என நினைத்தார். அவர்கள்மீது  கோபம் உண்டாயிற்று. கோபத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல், ``நின்னுக்கிட்டே இருந்து என்னைச் சங்கடப்படுத்தாதீங்க. போயிட்டு ஜூன் மாசம் வாங்கம்மா’’ எனச் சொன்னார். முன்னர் இருந்ததைவிட இப்போது அவருக்குப் பொறுமை குறைந்துவிட்டது என்பதை அவருடைய குரலே காட்டிக்கொடுத்தது. ராமன் சொன்னதற்குச் சம்பந்தம் இல்லாமல் அந்தப் பெண் சொன்னாள்... ``இந்த ஊர்ல இருக்க பயமா இருக்கு சார். அதனாலதான் கேட்கிறேன்.’’

``சொந்த ஊர்ல இருக்கிறதுக்கு என்னம்மா பயம்?’’ - நல்ல நகைச்சுவையைச் சொல்லிவிட்டது போல் ராமன் சிரித்தார்.

``இந்த ஊர்ல இருந்தா எங்களைக் கொன்னுடுவாங்க சார்.’’

``என்னம்மா சொல்ற?’’ எனக் கேட்ட ராமன் குழப்பத்துடன் தனவேலைப் பார்த்தார். அவர் தனக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதுபோல் உட்கார்ந்திருந்தார்.

``புருஷன் பொண்டாட்டி சண்டையா?’’ என்று ராமன் கேட்ட கேள்விக்கு, அந்தப் பெண் பதில் சொல்லவில்லை. அவளுக்கு வலது பக்கமாகக் கைகளைக் கட்டி நின்றுகொண்டிருந்த சந்தோஷ் குமார்தான் பதில் சொன்னான்...

``எங்க அப்பாவைச் சுளுக்கியால குத்திக் கொன்னுட்டாங்க சார்.’’

``என்னப்பா சொல்ற?’’ என ஆச்சர்யத்துடன் கேட்டார். அவருடைய முகமும் குரலும் மாறிவிட்டன. பையன் சொல்வது உண்மையா எனக் கேட்பது மாதிரி அந்தப் பெண்ணைப் பார்த்தார். அவளுடைய முகத்திலிருந்து எதையும் அறிந்துகொள்ள முடியவில்லை. அதிலிருந்த இறுக்கத்தை, களைப்பை அப்போதுதான் பார்த்தார். கழுத்தில் தாலி இல்லை. சாதாரண மணிகூட இல்லை. கைகளில் ரப்பர் வளையல்கூட இல்லை. பெரிய சுமையைத் தூக்கிக்
கொண்டிருப்பதுபோல நின்றுகொண்டிருந்தாள். மறுநொடியே பையனைப் பார்த்தார். பையனுக்கு மொட்டை அடிக்கப்பட்டு பத்து, இருபது நாள்கள்தான் ஆகியிருக்க வேண்டும்.

புதிதாக முளைத்த முடி முள்முள்ளாக நின்றுகொண்டிருந்தது. பக்கத்தில் நின்றுகொண்டிருந்த தினேஷ்குமாரின் தலையும் அப்படித்தான் இருந்தது. ஏழு, எட்டு வயது மதிக்கத்தக்கப் பெண் பிள்ளையைப் பார்த்தார். அந்தப்
பிள்ளை தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருப்பதை, அப்போதுதான் பார்த்தார். அந்தப் பெண்ணின் முகத்தில் மட்டும் அல்ல, அவளின் பிள்ளைகளுடைய முகங்களிலும் உயிர்ப்பு இல்லை. மீண்டும் ஒவ்வொரு முகமாகப் பார்த்தார்.

நெடுநெடுவென உயரமாக இருந்த அந்தப் பெண், நல்ல கறுப்பாக இருந்தாள். கிளிப்பச்சை நிறத்தில் சேலை கட்டியிருந்தாள். முப்பத்தைந்து வயது தாண்டி இருக்காது. ஆனால், அறுபது வயது கிழவியின் முகம்போல இருந்தது. அவளின் உடலில் சதை என எங்கேயும் இல்லை. வந்ததில் இருந்து நட்டுவைத்த இரும்புக்கம்பி மாதிரி எப்படி ஒரே இடத்தில் நின்றுகொண்டிருக்கிறாள்? அவள் மட்டும் அல்ல, மூன்று பிள்ளைகளுமே கை, கால்களை அசைக்காமல், இந்தப் பக்கம் அந்தப் பக்கம் எனப் பார்க்காமல், கால்மாற்றிக்கூட நிற்காமல், கட்டிய கைகளைக்கூடப் பிரிக்காமல், ஆடாமல் அசையாமல், கழுத்தைக்கூடத் திருப்பாமல் எப்படி ஒரே இடத்தில் நின்றுகொண்டிருக்கின்றன? அவர்களுடைய முகத்தில் குழந்தைகளுக்கான அடையாளம் என எதுவுமே இல்லை. மீண்டும் அந்தப் பெண்ணையும் பிள்ளைகளையும் பார்த்தார். ``எதுவா இருந்தாலும் இப்ப டி.சி தர முடியாது. போயிட்டு வாங்க. ஐயாவைத் தொந்தரவு பண்ணாம கிளம்புங்க. உங்க குடும்பக் கதை பள்ளிக்கு அவசியம் இல்லாதது’’ என தனவேல் கறாராகச் சொன்னார். அவர் சொன்னதைப் பொருட்படுத்தாத மாதிரி, ராமனைப் பார்த்துத் தீர்மானமான குரலில் அந்தப் பெண் சொன்னாள்...

``நாங்க உசுரோட இருக்கணும்னா டி.சி-யைத் தாங்க சார்.’’

அந்தப் பெண்ணின் பேச்சில் திமிர்த்தனம் கலந்தது மாதிரி இருந்தது. ஆனால், அவளின் தோற்றமும் நின்றுகொண்டிருந்த விதமும் வேறாக இருந்தன. அவளை எப்படிப் புரிந்து கொள்வது என்று ராமன் குழம்பினார்.

``ஆகஸ்ட் மாசம் வரவேண்டிய புரொமோஷன், கோர்ட் வழக்குனு போய் ஆர்டர் வாங்கிட்டு வந்து, இன்னிக்குத்தான் ஜாயின் பண்ணியிருக்கேன்.  இந்த ஸ்கூலோட நிலைமை எனக்குத் தெரியாது. நான் விசாரிச்சுட்டுச் சொல்றேன். நீங்க போயிட்டு வாங்கம்மா. புள்ளைங் களை அழைச்சுட்டு எதுக்கு வந்தீங்க?’’ என்று ராமன் கேட்டார். அந்தப் பெண் சீக்கிரம் வெளியே போனால் போதும் என்று நினைத்தார். ஆனால், அந்தப் பெண்ணும் பிள்ளைகளும் வெளியே போகிற மாதிரி தெரியவில்லை. அதனால் ராமன் கேட்டார்...

``எப்படி ஆச்சு?’’

``வருசாவருஷம் நடக்கிற மாதிரிதான் இந்த வருஷமும் மாட்டுப் பொங்கல் அன்னிக்கு மாட்டுக்கு ஓட்டப்பந்தயம் வெச்சாங்க. பந்தயத்துல எங்க மாடு ஜெயிச்சுடுச்சு. அதனால மாட்டையும், எம் புருஷனையும் சுளுக்கியால குத்திக் கொன்னுட்டாங்க.’’

ராமன் எதுவும் பேசவில்லை. பேச வேண்டும் என்றும் தோன்றவில்லை. அந்தப் பெண்ணையே பார்த்துக்கொண்டிருந்தார்.

``நேத்துதான் கருமகாரியம் முடிஞ்சது. இன்னைக்கு சாயங்காலம் எங்க அம்மா ஊருக்குப் போறோம்.’’

ராமனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.  அந்தப் பெண் சொல்வது உண்மையா எனக் கேட்பதுபோல தனவேலைப் பார்த்தார். ராமன் எதற்காகத் தன்னைப் பார்க்கிறார் என்பதைப் புரிந்துகொண்டது மாதிரி, ``வருசாவருஷம் நடக்கிறது தான் சார்’’ எனச் சொன்னார். முன்பைவிட இப்போதுதான் ராமனுக்குக் கூடுதல் அதிர்ச்சியும் திகிலும் ஏற்பட்டன. பிறருக்குக் கேட்டுவிடப்போகிறது என்ற பயத்தில் கேட்பதுபோல, ``ஓட்டப் பந்தயத்துல மாடு ஜெயிக்கிறதுக்கும் மனுஷனை வெட்டுறதுக்கும் என்ன சம்பந்தம்?’’ எனக் கேட்டார். அதற்கு தனவேல் பதில் சொல்லவில்லை. அந்தப் பெண்தான் சொன்னாள்.

``மாட்ட வளர்த்தது அவுருதானே, மாடு அவரோடதுதானே?’’

``ஊரே கூடித்தானே பந்தயம் வெச்சிருப்பாங்க?’’

``எங்க மாடு ஜெயிக்கும்னு யாரும் எதிர்பார்க்கலை. அதான் பிரச்னையே.’’

``பந்தயத்தில யாரு மாடு ஜெயிச்சா என்ன...அதுக்குத்தானே போட்டி நடத்தியிருப்பாங்க?’’

``நாங்க காலனிக்காரங்க. எங்க மாடு காலனி மாடு.’’

ராமனுக்கு விஷயம் புரிந்த மாதிரி இருந்தது. ஆனாலும், குழப்பமாக இருந்தது.

``பந்தயம் எங்கே நடந்தது?’’

``மேலாயியம்மன் கோயில் முன்னால.’’

``அது எங்கே இருக்கு?’’

``அவங்க தெருவுல.’’

``நீங்க அந்தத் தெருவுல இல்லையா?’’

``நாங்க காலனித் தெரு.’’

``இத்தனை வருஷமா யாரோட மாடு ஜெயிச்சது?’’

``அவங்க மாடு.’’

``இத்தனை வருஷமா உங்க மாடு போட்டியில கலந்துக்கலையா?’’

``இதான் முதல் வருஷம். அவங்கதான் கூப்பிட்டாங்க. ஜெயிக்கணும்னு போகலை. வெடிபோட்டதுல கிராச்சிக்கிட்டு ஓடிப்போய் கோட்டைத் தாண்டிப்புடுச்சு.’’

``மாட்டுக்கு ஜெயிக்கணும்னு தெரியுமா?’’ என்று யாரிடம் என்று இல்லாமல் பொதுவாகக் கேட்டார் ராமன்.

அதற்கு தனவேலும் பதில் சொல்லவில்லை; அந்தப் பெண்ணும் பதில் சொல்லவில்லை. இருவருமே பதில் சொல்லாததால் ராமன், ``எதுக்கு வெடி போடுறாங்க?’’ என்று கேட்டார்.

``போடுவாங்க சார். போட்டியில கலந்துக் கிறவங்க எல்லாம் மாடுகளை ஓட்டியாந்து கோயிலுக்கு முன்னால நிறுத்திடுவாங்க. ரெண்டு பர்லாங் தூரத்துக்கு அடப்பு மாதிரி ரெண்டு பக்கமும் படலைக் கட்டிடுவாங்க. ஒரு இடத்தில கோட்டைக் கிழிச்சிடுவாங்க. மாடுங்க கூட்டமா நிற்கிற இடத்தில பெரிய பெரிய வெடியா வெச்சு வெடிக்கவிடுவாங்க. சத்தத்தில மிரண்டு மாடுங்க ஓடும். ஓடுற மாட்டுல எது முதல்ல கோட்டைத் தாண்டுதோ, அதுக்குப் பரிசு கொடுப்பாங்க. இதுக்காகவே மாட்டைப் பழக்குறவங்களும் இருக்காங்க.’’

``மாடு... பயத்திலதானே ஓடுது?”

ராமன் கேட்ட கேள்விக்குத் தனவேல் எந்தப் பதிலும் சொல்லவில்லை. அப்போதுதான் நினைவுக்கு வந்த மாதிரி அந்தப் பெண்ணிடம் ராமன் கேட்டார்...

``போலீஸ் கேஸ் எதுவும் ஆகலையாம்மா?’’

`` `மாடு முட்டி செத்துட்டான்’னு எழுதிட்டாங்க.”

``நீங்க ஒண்ணும் செய்யலையா?”

``ஊரே கூடி எழுதிக்கொடுத்தாங்க. நானும் கையெழுத்துப் போட்டுட்டேன் சார்.’’

அப்போது அந்தப் பெண் அழுவாள் என்று ராமன் எதிர்பார்த்தார். ஆனால், அழவில்லை. சிறு விசும்பல், தேம்பல் இல்லை. நெற்றியைச் சுருக்கவில்லை; முகத்தைச் சுளிக்கவில்லை; அசைந்து நிற்கவில்லை; அதிர்ந்து பேசவில்லை. ஒவ்வொரு வார்த்தையையும் எவ்வளவு நிதானமாகப் பேச முடியுமோ அவ்வளவு நிதானமாகப் பேசினாள். மனம் உடைந்த மாதிரியோ, இரக்கத்தைக் கோரும் விதமாகவோ பேசவில்லை. அறைக்குள் நுழையும்போது அவளுடைய முகம் எப்படி இறுகிப்போயிருந்ததோ அந்த இறுக்கம் துளிகூட மாறாமல் இருந்தது.

திடீரென நினைவுக்கு வந்த மாதிரி தனவேலிடம், ``உங்க ஊர் எங்கே இருக்கு?’’ என ராமன் கேட்டார்.

``பக்கத்துலதான். பத்து கிலோமீட்டர் தூரம் வரும் சார்.’’

``அங்கேயும் மாட்டுக்கு ஓட்டப்பந்தயம் நடக்குமா?’’

``நடக்கும் சார்’’ என தனவேல் சொன்னதும், அடுத்து எதுவும் கேட்க வேண்டாம் என்று முடிவு எடுத்ததுபோல் பேசாமல் இருந்தார். ரொம்பக் களைப்படைந்த மாதிரி தண்ணீர் குடித்தார். அந்தப் பெண்ணிடமும் தனவேலிடமும் நிறையக் கேள்விகள் கேட்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. மறுநொடியே கேட்கக் கூடாது, தவறாகிவிடும் என வாயை மூடிக்கொண்டார். அந்தப் பெண்ணை வெளியே அனுப்புவதற்கான வழிகளைப் பற்றி யோசித்தார். முன்பு சொன்னதுபோல ஒரே வார்த்தையில், ‘முடியாது போ’ எனச் சொல்ல, இப்போது அவருக்கு மனம் வரவில்லை. என்ன சொல்லி அனுப்பலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது, ஓர் ஆசிரியை உள்ளே வந்தார்.

``சொல்லுங்க டீச்சர்’’ என ராமன் கேட்டார்.

``நாளைக்கு நான் சி.எல் சார்’’ எனச் சொன்னதோடு விடுமுறைக்கான விண்ணப்பத்தையும் கொடுத்தாள். விண்ணப்பத்தை வாங்கிக்கொண்டு, ``அவசர வேலையாம்மா?’’ எனக் கேட்டார்.

``நாளைக்கு என் பொண்ணுக்கு பர்த் டே சார்.’’

``ஓ... அப்படியா? என்னோட வாழ்த்துகளைச் சொல்லுங்க.’’

``தேங்க்ஸ். வர்றேன் சார்.’’

``வாங்கம்மா.’’

அந்த ஆசிரியை வெளியே போகும்போதுதான் பார்த்தார். நல்ல குள்ளமாக, குண்டாக, நல்ல நிறமாக இருந்ததை. கழுத்தில் ஒரு கைப்பிடிச் சங்கிலி கிடந்ததையும் பார்த்தார். அந்த ஆசிரியையின் பெயர் என்ன என்று விடுமுறை விண்ணப்பத்தில் பார்த்தார். பரிமளம். கைக்கடிகாரத்தைப் பார்த்தார். மணி நான்கு. நேரத்தைப் பார்த்ததும் அவசரப்பட்ட மாதிரி எதிரில் நின்றுகொண்டிருந்த பெண்ணிடம்,

``சரி... போயிட்டு வாங்கம்மா’’ எனச் சொன்னார்.

``என்னால இந்த ஊர்ல இருக்க முடியலை சார்.’’

``நான் ஒரு தப்பும் பண்ணலைம்மா’’ எனச் சொல்லிவிட்டு லேசாகச் சிரிக்க முயன்றார் ராமன். `எப்படியாவது அந்தப் பெண்ணை வெளியே அனுப்பிவிட்டால் போதும்' என நினைத்தார். ஊர்ப் பிரச்னை நமக்கு எதற்கு என நினைத்தார். மே மாதம்வரை ஓட்டிவிட்டு சொந்த மாவட்டத்துக்கு டிரான்ஸ்ஃபர் வாங்கிக்கொண்டு போய்விட வேண்டும். எத்தனை லட்ச ரூபாய் செலவானாலும் பரவாயில்லை. ஊர் ரொம்ப மோசம்போல் இருக்கிறது என நினைத்தார். அப்போது அந்தப் பெண் அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள்.

``எனக்கும் என் புள்ளைங்களுக்கும் இந்த ஊர் வேணாம் சார்.’’

``ஊரை விட்டுப்போயிட்டா சொத்துப்பத்து எல்லாம் என்னாகிறது?’’

``அப்படி ஒண்ணும் இல்லை சார். மாமனா, மாமியா செத்துட்டாங்க. மூணு நாத்தனாரும் கல்யாணம் கட்டிக்கிட்டுப் போயிட்டாங்க. வீடு ஒண்ணுதான். அதுவும் கூரை.’’

அந்தப் பெண்ணுக்கு என்ன பதில் சொல்வது என ராமனுக்குப் புரியவில்லை. சொன்னதையே சொல்கிறாள். தான் விரும்பியதையே சொல்கிறாள். அடுத்தவர்கள் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்காத பெண்ணாக இருக்கிறாளே என்று நினைத்தாலும், அவளுடைய நிலையை நினைத்ததும் அவருக்கு வருத்தமாகத்தான் இருந்தது. ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் சொல்லலாமா என்று யோசித்தார். அந்தப் பெண்ணின் முகத்தைக் கவனமாகப் பார்த்தார். பல நாள்களாகத் தூங்காத மாதிரி இருந்தது. தொடர்ந்து அந்த முகத்தை அவரால் பார்க்க முடியவில்லை. அந்தப் பெண்ணிடம் ஏதாவது பேசி அனுப்ப வேண்டும் என்று நினைத்தார். என்ன பேசுவது என்பதுதான் புரியவில்லை. அதனால், ``பேர் என்ன?” என்று கேட்டார்.

p70a.jpg

``செல்வமணி.”

``உங்க வீட்டுக்காரர் பேரா?”

``அவர் பேரு முத்து.’’

``சரிம்மா... போயிட்டு வாங்க.’’

``என் புருஷனைச் சுளுக்கியால குத்திக் கொன்னவங்களை தினம்தினம் பார்த்துக்கிட்டு இந்த ஊர்ல என்னாலயும் எம் புள்ளைங்களாலயும் இருக்க முடியாது சார். இந்த மண்ணே வேணாம்னுதான் போறேன்.’’

``உங்க விருப்பப்படி செய்யுங்க. முழு ஆண்டு பரீட்சைகூட எழுத வேணாம். ஆறாவது ஏழாவதுதானே? நானே பாஸ் போட்டு எழுதிவெச்சிருக்கேன். ஜூன் மாசம் வந்து வாங்கிட்டுப் போங்க. அதான் என்னால செய்ய முடியும்.’’

அந்தப் பெண் ஐந்நூறு ரூபாய் நோட்டு ஒன்றை ராமனின் மேஜைமீது வைத்தாள். அதைப் பார்த்ததும் அவருக்குக் கண்மண் தெரியாத அளவுக்குக் கோபம் வந்துவிட்டது.

``என்னம்மா செய்ற? பணத்துக்காகத்தான் உன்னை அலைய விடுறேன்னு நினைச்சாயா? சட்டத்தில இடம் இருந்தா ஒரு நிமிஷத்தில கொடுத்திருப்பேன். முதல்ல பணத்தை எடு. என்னோட முப்பது வருஷ சர்வீஸ்ல பசங்ககிட்டே இருந்து ஒத்த பைசா வாங்கினவன் இல்லை, தெரியுமா? நாலு வார்த்தை கூடுதலா பேசினது தப்பாபோயிடுச்சு’’ எனச் சொல்லி ராமன் கத்தியதும், அந்தப் பெண் பணத்தை எடுத்துக்கொண்டாள். முகத்தைச் சுளித்துக்கொண்டே, ``போயிட்டு வாங்க’’ என்று சொன்னார். அந்தப் பெண் வெளியே போகவில்லை. பிள்ளைகளும் அசையவில்லை. எவ்வளவு சொல்லியும் அசைய மறுக்கிறார்களே என ஆச்சர்யப்பட்டு அந்தப் பெண்ணையும், அந்தப் பிள்ளைகளையும் பார்த்தார். நான்கு பேரின் தலைகளிலும் எண்ணெய் தடவாததால், அது அவர்களுடைய தோற்றத்தை மேலும் விகாரமாக்கியது. அதனால் மனம்மாறிய ராமன், ``நானும் மனுஷன்தான். செய்ய முடிஞ்சா செய்ய மாட்டேனா?” எனத் தனக்குத்தானே சொல்லிக்கொள்வது மாதிரி சொன்னார்.

``மாட்டைச் சாவடிச்சதோட விட்டிருக்கலாம்.

‘உன் மாடு எப்படி ஜெயிக்கலாம்?’னு கேட்டுக் கேட்டு, ஊரே கூடி, சுளுக்கியால குத்தினதை என் ரெண்டு கண்ணாலயும் நான் பார்த்தேன் சார். என் மூணு புள்ளைங்களும் பார்த்துச்சு.’’

``அந்தப் பேச்சை விடும்மா. அதுக்கும் பள்ளிக்கூடத்துக்கும் சம்பந்தம் இல்லை.’’

``பிணத்தை ஒரு நாள் வீட்டுல போட்டு எடுக்கக்கூட விடலை. ஆசை தீர பிணத்தைக் கட்டிப்புடிச்சு அழுதிருப்பேன்னு நினைக்கிறீங்க? உடனே பிணத்தை எடுத்துக் கொளுத்தச் சொல்லிட்டாங்க.’’

``கேட்கிறதுக்குக் கஷ்டமா இருக்கு.

2013-லையும் தமிழ்நாட்டுல இப்படி நடக்குதுன்னு சொன்னா, உலகத்துல யாருமே நம்ப மாட்டாங்க’’ என்று ரொம்பக் களைப்படைந்த மாதிரி ராமன் சொன்னார். பிறகு, ரொம்பவும் உடைந்துபோன குரலில் கேட்டார்...

``வயசு என்னா இருக்கும்?’’

``முப்பத்தெட்டு. கறி எடுக்கிற அன்னிக்கி, மீன் எடுக்கிற அன்னிக்கி அவர்தான் குழம்பு வைப்பார். `கறி தின்னா, மீனு தின்னா கண்ணுல தண்ணி வரணும்’னு சொல்வார். அப்படித்தான் சாப்பிடுவார். புள்ளைங்களுக்கும் அப்படித்தான் தருவார்.’’

``நீ பிறந்த ஊர்லேயும் மாட்டு ஓட்டப்பந்தயம் நடக்குமா?”

``நடக்கும்.”

``சரிம்மா... நான் யோசிச்சுச் சொல்றேன். போயிட்டு வாங்க. பசங்க வேற நிற்கிறாங்க.’’

``கல்யாணமாகி வந்த பதினைஞ்சு வருஷத்துல அவர் இல்லாம நான் அந்த வீட்டுல ஒரு நாள்கூட படுத்திருந்ததில்லை சார்’’ என அந்தப் பெண் சொன்னாள். இப்போதாவது அந்தப் பெண் அழுகிறாளா என்று ராமன் பார்த்தார். அவள் அழவில்லை. ஒரு சொட்டுக் கண்ணீர்கூட இல்லை. தாயின் இரண்டு கால்களுக்கிடையே கைகளைக் கட்டியவாறு இந்தப் பக்கம் அந்தப் பக்கம் என்று தலையைக்கூட அசைக்காமல் நின்றது நின்றபடி நின்றுகொண்டிருந்த அந்தப் பெண்பிள்ளையைப் பார்த்தார். அந்தப் பிள்ளை, முகத்தில் வழிந்த வியர்வையைக்கூடத் துடைக்காமல் நின்றுகொண்டிருந்தது. மனதில் என்ன தோன்றியதோ, ``இங்கே வா” என்று கூப்பிட்டார். அந்தப் பிள்ளை ராமனுக்கு அருகில் வந்து நின்றது.

``பேரு என்ன?”

``மேலாயியம்மா.”

``எந்தச் சாமி கோயிலுக்கு முன்னால மாட்டுக்கான ஓட்டப்பந்தயம் நடந்தது?”

``மேலாயியம்மன்.”

``உங்க அப்பாவ எந்தக் கோயிலுக்கு முன்னால வெட்டுனாங்க?”

``மேலாயியம்மன் கோயிலுக்கு முன்னால சார்.’’

``ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை. போயிட்டு வாங்க” எனச் சொன்ன ராமன், சட்டென எழுந்து வெளியே போனார்.

ராமன் வெளியே போனது செல்வமணிக்கு எரிச்சலை உண்டாக்கியது. தான் வந்த காரியம் நடக்குமோ நடக்காதோ என்ற கவலை உண்டாயிற்று. என்ன சொன்னாலும் புரிந்துகொள்ள மறுக்கிறாரே என்ற வருத்தம் ஏற்பட்டது. என்ன சொன்னால் டி.சி-யைத் தருவார் என்று யோசித்தாள். எதைச் சொல்வது?

பொங்கல் அன்று பதினோரு மணிக்கு, கழுவுவதற்காக மாடுகளை ஆற்றங்கரைக்கு ஓட்டிக் கொண்டுபோகும்போது வழியில் முத்துவைப் பார்த்த ஊராட்சி மன்றத் தலைவரின் தம்பி அன்பரசன், ``பந்தயம் நடக்கப்போகுது. உன் மாட்டையும் ஓட்டிக்கிட்டுப் போய் விடு” எனச் சொன்னார்.

``ஊர் வம்பாகிடும்... வேண்டாங்க.”

``உன் மாடு ஜெயிக்கப்போகுதா? பார்க்கிறதுக்கே எலும்பும் தோலுமா அறுப்புக்கு விடுற மாடு மாதிரிதான் இருக்கு. அறுப்புக்கே எவனும் வாங்க மாட்டான்’’ எனச் சொல்லி அன்பரசன் சிரித்தார். அதற்கு முத்து எதுவும் சொல்லாமல் மாடுகளை ஓட்டிக்கொண்டு நடக்க முயன்றான்.

``கூட்டத்தோட கூட்டமாக நிற்கட்டும்... விடுடா’’ என்று சொல்லிக் கட்டாயப்படுத்தி முத்துவின் கையில் இருந்த மாட்டின் கயிறுகளைப் பிடுங்கி, பக்கத்திலிருந்த ஆளிடம் கொடுத்து ``ஓட்டிக்கிட்டு போ” எனச் சொன்னார். பக்கத்தில்தான் மாடுகளுக்கு நடக்கவிருந்த ஓட்டப்பந்தயத்துக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன.

``வேண்டாங்க... வேண்டாங்க...’’ எனக் கெஞ்சிய முத்துவின் குரல் அன்பரசனின் காதில் விழுந்த மாதிரி தெரியவில்லை. சிரித்துக்கொண்டே பந்தயம் நடக்கவிருந்த இடத்துக்குப் போனார். வேறு வழியின்றி முத்து அவருக்குப் பின்னால் போனான். உள்ளூர் ஆள்களும் சரி, வெளியூர் ஆள்களும் சரி, முத்து வந்ததற்காகவும், அவனுடைய மாடுகள் வந்ததற்காகவும் எவரும் ஒரு கேள்விகூடக் கேட்கவில்லை; விரட்டி அடிக்கவில்லை. அவனையும் அவனுடைய மாடுகளையும் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அவரவர் அவரவருடைய மாடுகளைத் தயார்செய்வதிலும், எப்படி ஜெயிக்கவைக்க வேண்டும் என்பதிலுமே கவனமாக இருந்தனர்.

மேலாயியம்மன் கோயிலிலிருந்து ஒரு பர்லாங் தூரம் வரை, இருபது அடி தூரம் இடைவெளி விட்டு இரண்டு பக்கமும் கழிகளால் தடுப்பு வேலி கட்டியிருந்தார்கள். தடுப்பு வேலியை ஒட்டி, ஆண்களும் பெண்களும் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். பல ஊர்க் கூட்டம்.

இருநூறு மாடுகளுக்கு மேல் இருக்கும். மேலாயியம்மன் கோயில் வாசலுக்கு முன் தடுப்புவேலிக்குள் ஓடும்விதமாக மாடுகளை நிறுத்திவைத்திருந்தார்கள். வெளியூர்களில் இருந்து பந்தயத்துக்கு மாடுகளை ஓட்டிவந்தவர்களும், பல ஊர் முக்கியஸ்தர்களும் எப்போது வெடிவைத்து மாடுகளை விரட்டலாம் என ஒன்றுகூடி முடிவெடுத்ததும், ஒரு கூட்டத்தினர் ஓடிப்போய் மாடுகள் நின்றுகொண்டிருந்த இடத்தில் பெரியபெரிய வெடிகளாகவும் சரம்சரமாகவும் வைத்து, வெடிக்கச் செய்ததுமே மிரண்டுபோன மாடுகள் ஓட ஆரம்பித்தன. காலில் ஏற்பட்ட வெடிக்காயத்துடன் ஓடிப்போய் முத்துவின் மாடு எல்லைக்கோட்டைத் தாண்டி ஓடிவிட்டது.

``யாரோட மாடு, யாரோட மாடு?” எனக் கேட்டு மொத்தக் கூட்டமும் கத்தியது. எந்த ஊர் மாடு? முத்துவுக்குத் தனது மாடு ஜெயித்துவிட்டது என்பதுகூடத் தெரியாமல், அதைத் தேடி அலைந்துகொண்டிருந்தான். மாடுகளைக் கண்டுபிடித்து, கயிறுகளைக் கையில் பிடித்து இழுத்தபோதுதான் ஏழு எட்டு பேர் ஓடிவந்து ``இது உன்னோட மாடா?” எனக் கேட்டனர்.

``ஆமாங்க.”

``இது எப்படிடா ஜெயிச்சது?’’ எனக் கேட்டபோதுதான் தனது மாடு ஜெயித்திருக்கிறது என்ற விஷயமே முத்துவுக்குத் தெரிந்தது. விஷயம் தெரிந்ததும் அவனுக்குக் கடுமையான கோபம் உண்டாயிற்று.

``எந்த மாடுங்க?’’ எனக் கேட்டான்.

``இந்த மாடுதான்” எனக் காலில் காயம்பட்டிருந்த மாட்டை ஒரு பையன் அடையாளம் காட்டினான். உடனே அந்த மாட்டை முத்து சாட்டையால் சக்கையாக அடிக்க ஆரம்பித்தான். தன் சினம் தீரும் மட்டும் எட்டி எட்டி உதைத்தான். கெட்டக்கெட்ட வார்த்தைகளைச் சொல்லித் திட்டினான். ``வா... உன்னை அப்புறம் வெச்சுக்கிறேன்’’ என மாடுகளை ஓட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். அவனைத் தொடர்ந்து ஏழு எட்டுப் பேர் பின்னால் வந்தனர். கோயில் பக்கம் இருந்து இன்னொரு கூட்டம் அவனை நோக்கி வந்து மறித்துக்கொண்டது. கூட்டத்தில் இருந்த பஞ்சாயத்துத் தலைவர் கேட்டார்...

``பரிசு, பணம் வாங்காம ஏன் கிளம்பிட்டே?’’

``அதெல்லாம் ஒண்ணும் வேணாங்க.’’

``நீ எப்படி இங்க வந்த, உன் மாடு எப்படி வந்துச்சு?’’ - தலைகால் புரியாத கோபத்தில் கேட்டார்.

``நான் ஆத்துக்குத்தான் போனேன். உங்க தம்பிதான் மாட்டை விடுடானு இழுத்துக்கிட்டுப் போனார். நான் முடியாதுனுதாங்க சொன்னேன்.’’

``அவனுங்க `சாவுடா’னு சொல்வானுங்க.

நீ சாவுவியா?” எனக் கேட்டபோது ஆத்திரத்தில் அவருக்கு உடல் நடுங்கியது.

``தப்பு நடந்துபோச்சுங்க” எனச் சொன்னான் முத்து. பிறகு, சாட்டையால் மாட்டை அடித்தான். அடியைத் தாங்க முடியாமல் ஓட முயன்றது மாடு. அதை ஓட்டிக்கொண்டு நடக்க முயன்றான். நடக்கவிடாமல் அவனையும் மாடுகளையும் மறித்துக்கொண்டு நின்றது கூட்டம்.

``பத்து ஊர் மாடு ஓடுற பந்தயத்துல உன்னோட மாடு ஜெயிச்சதுன்னு சொல்ல முடியுமா?

நீ ஜெயிக்கவா பந்தயம் நடத்தினோம்?’’

- ஆத்திரத்தில் கத்தினார் தலைவர்.

``தப்பு நடந்துபோச்சுங்க. வேணும்னு செய்யலை. ஊர் நடைமுறை எனக்குத் தெரியாதுங்களா? இப்பவே நேரா ஓட்டிக்கிட்டுப் போய் அறுப்புகாரன்கிட்ட தள்ளிவிட்டுட்டு வந்துடுறேன்” - பணிவுடன் சொன்னான் முத்து. அவனின் பேச்சைக் கேட்கும் நிலையில், அந்த இடத்தில் யாரும் இல்லை.

``நீ மாட்டை வித்துட்டாப்புல இன்னிக்கி பத்து ஊர்க்காரன் முன்னால பட்ட அசிங்கம் போயிடுமா?” - கோபமாகக் கேட்டார் தலைவர். நேரமாக நேரமாக அவரின் குரலிலும் முகத்திலும் வேகம் கூடிக்கொண்டிருந்தது. சுற்றியிருந்த வர்களும் கோபமாகக் கத்திக்கொண்டிருந்தனர். அதில் ஓர் ஆள், ``நாம எல்லாம் என்ன மாடுங்கடா வளர்த்தோம்? அதை எல்லாம் அறுத்துப்போட்டா என்ன?” எனக் கேட்டான். ஓட்டப்பந்தயத்தில் ஜெயிக்காத தங்களுடைய மாடுகளைக் கெட்டவார்த்தைகள் சொல்லிப் பச்சைப் பச்சையாகத் திட்ட ஆரம்பித்தனர். வேகம் வந்த மாதிரி கூட்டத்தில் இருந்த ஒரு ஆள் சாட்டைக்குச்சியுடன் தனது மாட்டை அடித்து நொறுக்குவதற்காக ஓடினான்.

p70.jpg

``உங்க தெருவுலதான் யாருகிட்டேயும் மாடு இல்லையே. உனக்கு மட்டும் எப்படி வந்துச்சு?” - ஆத்திரத்தோடு தலைவர் கேட்டார்.

``மணல் லோடு அடிக்கலாம்னு போன வாரம்தாங்க வாங்கியாந்தேன்.”

``சரிதான்... அதனாலதான் மாட்டைப் பந்தயத்துக்கு ஓட்டியாரச் சொல்லியிருப்பான்.”

``தப்பு நடந்துபோச்சுங்க.’’

செல்வமணியும் அவளுடைய பிள்ளைகளும் ஓடிவந்தனர். பெரியகூட்டத்துக்கு நடுவில் முத்துவும் மாடுகளும் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்துப் பதறினர். பதற்றத்தில் செல்வமணி அழ ஆரம்பித்தாள். கூட்டத்தில், என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை. என்ன செய்வது எனத் தெரியவில்லை. செல்வமணியால் அழ மட்டுமே முடிந்தது. அவளைப் பார்த்து அவளுடைய பிள்ளைகளும் அழ ஆரம்பித்தனர். அப்போது பேன்ட்டும் டீ சர்ட்டும் போட்டிருந்த பையன் ஒருவன், ``இந்த மாட்டாலதானே அசிங்கமாகிடுச்சு?” எனச் சொல்லி முத்துவின் மாட்டை எட்டி உதைத்தான். அவனுக்குப் பக்கத்தில் இருந்த பையனுக்கு என்ன தோன்றியதோ, ``கண்ணு இருந்ததாலதானே வழியைப் பார்த்து ஓடின, இனிமே உனக்குக் கண்ணு வேண்டியது இல்லை” எனச் சொன்ன வேகத்திலேயே கையில் வைத்திருந்த தார்க்குச்சியால் மாட்டின் இரண்டு கண்களிலும் மாறிமாறிக் குத்தினான். கண்கள் இரண்டும் வெளியே வந்துவிட்டன. வலியைத் தாங்க முடியாமல் மிரண்டு ஓட முயன்ற மாட்டின் மூக்கணாங்கயிற்றை, மூன்று நான்கு பையன்கள் கெட்டியாகப் பிடித்துக்கொண்டனர்.

வலியில் மாடு இப்படியும் அப்படியுமாக உடம்பை அசைத்தபோது ஓர் ஆளின் காலை மிதித்துவிட்டது. வலியில் அந்த ஆள் ``வெட்டுங்கடா” எனக் கத்தியதுதான், ஏற்கெனவே தயாராக இருந்ததுபோல், ஓர் ஆள் மாட்டின் வயிற்றில் சுளுக்கியால் வெறிகொண்டது போல் குத்தினான். இரண்டாவது குத்திலேயே மாட்டின் குடல் கீழே சரிந்துவிட்டது.

``பிஞ்ச செருப்பு எல்லாம் எங்களை ஜெயிக்கிறதா?”

``இல்லை சாமி... இல்லை சாமி...’’

``புறம்போக்கு இடத்தில இருக்கிறவன் எல்லாம் எங்களை ஜெயிக்கிறதா?”

``இல்லை சாமி... இல்லை சாமி.’’

``பன்னிக் கறி, மாட்டுக் கறி திங்கிறவன் எல்லாம் எங்களை ஜெயிக்கிறதா?”

``இல்லை சாமி... இல்லை சாமி...”

தலைவர் ஆக்ரோஷத்தோடு கேட்கக் கேட்க, அழுதபடியும் கும்பிட்டபடியும் முத்துவும் செல்வமணியும் பதில் சொன்னார்கள்.

``இதோடு என்னை விட்டுடுங்க” எனச் சொல்லி முத்துவும் செல்வமணியும் கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவர் காலிலும் விழுந்து விழுந்து கும்பிட்டுக் கெஞ்சினர்; அழுதனர். தலைவரின் காலில் விழுந்து கும்பிடும்போது முத்துவின் முதுகில் சுளுக்கியால் யாரோ குத்தினார்கள். அடுத்த குத்து வயிற்றில் இறங்கியது.

மாடும் முத்துவும் பிணமானது தெரிந்ததும்தான் கூட்டம் அமைதியாகி, கோபம் தணிந்த மாதிரி இருந்தது. முத்துவையும் மாட்டையும் சுளுக்கியால் குத்திய மூன்று பையன்களிடமும் தலைவர் ஏதோ சொன்னார். அடுத்த நொடியே அந்தப் பையன்கள் கூட்டத்தில் இருந்து விலகி, வேகமாக நடக்க ஆரம்பித்தனர்.

முத்து செத்துவிட்டான் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு அவனுடைய தெருவில் இருந்தவர்கள் ஓடிவந்து கத்தி அழுது ஆர்ப்பாட்டம் செய்தனர். தலைவரும் ஊர்க்காரர்களும் சேர்ந்துகொண்டு மாடு முட்டிச் செத்துவிட்டதாகச் சொன்னார்கள். மாடு முட்டி முத்து செத்ததால்தான், ஆத்திரத்தில் மாட்டைக் கொன்றதாகச் சொன்னார்.

``பொய்” எனச் சொல்லிக் கத்திய செல்வமணியின் வாயில் அன்பரசன் ஓங்கி அடித்து, ``உசுரு வேணுமா... வேணாமா?’’ எனக் கேட்டார். மொத்த ஊரும் அதே கேள்வியைத்தான் அவளிடம் கேட்டது.

``மாடு முட்டித்தான் செத்தான். பிணத்தை எடுத்துட்டுப் போங்க’’ எனத் தலைவர் சொன்னார். ``முடியாது’’ என முத்துவின் தெருக்காரர்கள் சொன்னதும், தலைவருக்கும் ஊர்க்காரர்களுக்கும் கோபம் வந்துவிட்டது.

``எப்பவும்போல ஊர் நல்லபடியா இருக்கணும்னா பிணத்தை எடுத்துட்டுப்போங்க. முடியாதுன்னா விவகாரம் பெருசாகிடும். உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன். நாங்க வேணும், ஊரு வேணும்னா நாங்க சொல்றதைச் செய்ங்க’’ எனத் தலைவர் சொன்னார். ஊரும் அதையே சொன்னது. செல்வமணியும் அவளுடைய தெருக்காரர்களும், ``முடியாதுங்க” எனச் சொன்னபோது சட்டென, ``உங்க தெரு இருக்கணுமா... வேணாமா?’’ என ஒரே வார்த்தையாகத் தலைவர் கேட்டார். அதையே அந்த இடத்தில் இருந்த கூட்டமும் கேட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைக்கட்டுக்காரர்கள் சொல்கிறார்கள், என்ன செய்வது என்று முத்துவின் தெருக்காரர்கள் யோசித்தார்கள். முத்துவுக்கு அண்ணன், தம்பி, மாமன், மச்சான், அப்பா, அம்மா என யாரும் இல்லாததால், அந்த இடத்தில் பெரிய அளவில் தகராறு செய்ய செல்வமணியால் முடியவில்லை.

``போலீஸு, கீலீஸுன்னு போகக் கூடாது. மாடு முட்டி செத்த கேஸ். நிற்காது. மாடு முட்டி பல ஊர்ல ஆளுங்க சாகிறது தெரிஞ்ச விஷயம்தான். மீறிப்போய் போலீஸை ஊருக்குள்ளார கொண்டாந்தா என்ன நடக்கும்னு உங்களுக்கே தெரியும்” எனத் தலைவர் மிரட்டியதும், முத்துவின் தெருக்காரர்கள் ராத்திரியில் வீட்டைக் கொளுத்திவிடுவார்களோ எனப் பயந்தனர். இரண்டாயிரம், மூவாயிரம் பேர் கூடி நிற்கிற இடத்தில், நூறு பேர் என்ன செய்ய முடியும்? சிலர், ``இவன் எதுக்கு மாட்டை ஓட்டப்பந்தயத்துக்கு ஓட்டிட்டுப்போனான்?” என செல்வமணியிடம் கேட்டனர். ஊர் வம்பைக் கொண்டுவந்துவிட்டானே என்று முத்துவைத் திட்டினார்கள். அவன் பொதுவாக அடாவடியான ஆள் இல்லை. ஊர் வம்புக்கு, சண்டைக்குப் போகாத ஆள். தான் உண்டு, தன் வேலை உண்டு என இருக்கிற ஆள். பந்தயத்துக்குத் தானாக மாடுகளை ஓட்டிக் கொண்டுபோயிருக்க மாட்டான் என எல்லாருக்கும் தெரியும். ஆனாலும், பந்தயத்துக்குப் போனது தவறு எனச் சொன்னார்கள். கூச்சலாக இருந்தது. ஆளாளுக்குப் பேசினார்கள்; கத்தினார்கள்; திட்டினார்கள். பதைபதைப்பில் யாருடைய பேச்சைக் கேட்பது, என்ன செய்வது எனத் தெரியாமல் செல்வமணி குழம்பிப்போனாள்.

``பிணத்தை எடுக்கிற செலவை நாங்க பார்த்துக்கிறோம். போலீஸுக்கான செலவையும் பார்த்துக்கிறோம். பிணத்தை உடனே எடுக்கணும்; புதைக்கக் கூடாது... எரிக்கணும்’’ எனத் தலைவர் சொன்னார். செல்வமணிக்கும் அவளுக்கு ஆதரவாகப் பேசியவர்களுக்கும் என்ன செய்வது எனத் தெரியவில்லை. ஓர் ஆளுக்காக ஊரை எதிர்க்கவும் பகைக்கவும் முடியுமா?

`` `ஓட்டப்பந்தயத்துல சிராச்சுக்கிட்டு ஓடும்போது மாடு முட்டிச் செத்துட்டான்’னு எழுதிக் கையெழுத்துப் போடுங்க’’ எனத் தலைவர் கேட்டார்; ஊரும் கேட்டது.

``சுளுக்கியால குத்துனதை என் ரெண்டு கண்ணாலையும் பார்த்தேன்’’ எனச் சொன்ன செல்வமணியின் கதறல் யாருடைய காதிலும் விழவில்லை. தலைவரும் ஊராரும், ``மாடு முட்டித்தான் முத்து செத்தான்’’ எனச் சொன்ன பேச்சுத்தான் எடுபட்டது. ஊர் கூடிவிட்டால், கூட்டம் கூடிவிட்டால் அதுதான் சட்டம்.

யாருக்கும் தெரியாமல் போலீஸுக்குப் போகலாமா என்ற எண்ணம் செல்வமணிக்கு உண்டானது. போலீஸுக்குப் போகலாம்; கேஸ் கொடுக்கலாம். சாட்சி சொல்ல யார் வருவார்கள் என்ற கேள்வி எழுந்தது. சாமி ஊர்வலத்தின்போது கும்பிட்டதற்காக நான்கு வருஷங்களுக்கு முன்பு ஜெயலட்சுமியின் கண்களைப் பிடுங்கிய ஊர். தேர் வடத்தைத் தொட்டுவிட்டாள் என ஒன்பது வயதுப்பிள்ளை என்றுகூடப் பார்க்காமல், இரண்டு வருஷங்களுக்கு முன்பு ரோஸியின் கையில் தீயைவைத்துக் கொளுத்திய ஊர். அப்படிப்பட்ட ஊரை எதிர்த்துக்கொண்டு போலீஸுக்குப் போக முடியுமா, போனாலும் ஜெயிக்க முடியுமா? ஊரைப் பகைத்துக்கொண்டு போலீஸுக்குப் போனதற்காக இரவில் வீட்டைக் கொளுத்தலாம்; தனியாக மாட்டிக்கொண்டால் மானபங்கம் செய்யலாம். வீட்டைக் கொளுத்தினால் நான்கு உயிர் போகும். மானபங்கம் நடக்கும். எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு போலீஸுக்குப் போகலாம் என்றால் தனக்கென்று யார் இருக்கிறார்கள்? தனக்கும் அண்ணன், தம்பிகள் இல்லை. முத்துவுக்கும் அண்ணன், தம்பிகள் என்று யாரும் இல்லை. முத்துவுக்காக யார் சண்டை போடுவார்கள்? சண்டை போட்டாலும் எத்தனை நாள் போடுவார்கள்? இரவும் பகலும் பிணத்துடன் தான் ஒருத்தி மட்டும்தானே இருக்க வேண்டும் என்று யோசித்த செல்வமணி, ``மாட்டுக்காக நடத்தப்பட்ட ஓட்டப்பந்தயத்தில் மாடு முட்டி முத்து இறந்துவிட்டான்’’ என எழுதிய பேப்பரில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தாள். கையெழுத்துப் போடும்போது அவள் அழவில்லை. அவளுடைய கைகள் நடுங்கவில்லை.  

டந்த முழுக் கதையையும் சொன்னாலாவது டி.சி தருவாரா என்று யோசித்தாள் செல்வமணி. டி.சி-யை வாங்காமல் இந்த இடத்தைவிட்டுப் போகக் கூடாது என்பது மாதிரி செல்வமணியும் அவளுடைய பிள்ளைகளும் நின்ற இடத்திலேயே நின்றுகொண்டிருந்தனர்.

ராமன் உள்ளே வந்த வேகத்திலேயே ``கிளம்புங்கம்மா... மணி ஆகிடுச்சு’’ எனக் கடுப்பாகச் சொன்னார்.

``ஒரு உசுரு போயிடுச்சு. இந்த மூணு புள்ளைங்களோட உசுராவது எனக்கு வேணும். அதுக்காகவாவது டி.சி-யைத் தாங்க சார்’’ எனச் சொல்லிவிட்டுக் கையெடுத்துக் கும்பிட்டாள். அப்போதுதான் அவளுடைய கண்களில் இருந்து சரம்சரமாகக் கண்ணீர் வழிந்தது!

http://www.vikatan.com

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  

 • Similar Content

  • By நவீனன்
   ஃபாதியா - சிறுகதை
   சிவகுமார் முத்தய்யா - ஓவியங்கள்: ஸ்யாம்
    

   பாலக்காடு ரயில்வே நிலையத்தில் இறங்கி மூர்த்தி செல்லைப் பார்த்தான். பின்னிரவு மூன்று மணியைக்  கடந்திருந்தது. பயணிகள் சிலர் அங்கங்கே இருக்கும் சிமென்ட் பெஞ்சுகளில் அமர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். சிலர் குடும்பத்துடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். ஸ்டேசனை விட்டு இறங்கி எதிரேயிருந்த டீக்கடையில் ஒரு சாயா குடித்தான். மீண்டும் ஸ்டேசன் வந்து கடைசியில் இருந்த  வடக்குப் பார்த்த இருக்கையில் அமர்ந்தான். குழப்பம், பதற்றம், பயம் மாறி மாறி ஆட்கொண்டன. முடிவு எடுக்க முடியாத ஒரு மனக் குலைவு.  இவற்றையெல்லாம்  தாண்டி ஃபாதியா ஒரு பறவையைப் போல தோளில் அமர்ந்தாள்.

   மூர்த்தி வேங்கரையில் நின்று திரும்பிப் பார்த்தான். கடந்து வந்திருந்த எட்டாவது கொண்டை ஊசி வளைவில் திரும்பியதும் ஒரு நிமிடம் நின்று மீண்டும் வெண் குன்னத்தைப் பார்க்கும் ஆர்வம் கிளர்த்தியது. 16-வது மலையின் உச்சியில் வனத்தின் மடிக்குள் மறைந்துபோய் அடர்ந்த பச்சை  நிறத்தில் அது எட்டாத தொலைவில் தொலைந்து போயிருந்தது. பொழுதுக்கும் மரவள்ளித் தோட்டத்தில் கடும் பணி, கிழங்கு பிடுங்குதல் தொடங்கி மூன்று நாள்கள் ஆகியிருந்தன. பாரணைத்து எழுந்து நிற்கும் செடியைப் பிடுங்கும்போது பீறிட்டுவரும் கிழங்கின் வாசனை அவ்வளவு மகிழ்ச்சியைத் தருவித்தது. அரிசி சாதமும் மத்தி மீன் குழம்பும் மதியம் கொடுத்தார்கள். வியர்வை சிந்திய உழைப்புக்குப் பிறகு இதுபோன்று வயிற்றுக்குச் சோறிடுவது கேரளாவின் பழக்கம். மீன் கவுச்சி இன்னும் சாப்பிட்ட கைகளில் உறைந்து போயிருந்தது.

   ஃபாதியா கைகளில் இருந்து வாங்கிய பணத்தை எண்ணிப் பார்த்தான். அதில் அவளின் குலைவான வார்த்தைகள் ஒட்டிக்கொண்டிருப்பதுபோல் ஒரு பிரமை. அவளைப் பார்த்துப் பத்து நாள்கள்தான் ஆகியிருந்தன. அதற்குள் ஒரு மனக்குலைவு ஏற்பட்டிருந்தது. அவளைக் காணும் ஒரு கணம்  அடர்ந்த தனிமையில் இருந்து மேலே கிளர்த்தி வாசனையுடன்கூடிய பொழுதுகளை மலரச் செய்து விடுகின்றன. தான் இங்கே இது போன்ற ஒரு தருணத்துக்காகவே வந்தவனாக மாறிவிட்டிருந்தான். உறக்கமற்ற இரவுகளில் தான் தங்கியிருக்கும் அறையில் இருந்து கிளம்பி அவள் உறங்கிக்கொண்டிருக்கும் வீட்டைக் கடப்பதில் அலாதியான கிளர்வு எழுந்து வதம் செய்தது. வெண்குன்னத்தின் பள்ளம் மேடான சாலைகளில் நடப்பதும் வளைவு நெளிவான ஒற்றையடிப் பாதைகளில் காரணமற்றுத் திரிவதும் அந்த நேரங்களில் பீறிட்டுக் கிளம்பும் ஒரு பாடலை முணுமுணுத்துக்கொள்வதும் அவனையறியாமலேயே நடந்து கொண்டிருந்தன. வெண்குன்னம் அவனை  வசீகரம் மிக்கவனாக மாற்றியிருந்தது. ஆனாலும், தன்னுடைய நிழலுக்கு அப்பால் வெளியேறியிருக்கும்  உறவு குறித்து எண்ணம் எழும்போது செல்போனை எடுத்து ஏதாவது பேச வேண்டும்போல் தோன்றும். சட்டென்று அப்படியே உட்கார்ந்து விடுவான்.  ஆனாலும், இன்று அளவுக்கு அதிகமாக நெருங்கிவிட்டாள் ஃபாதியா. பார்வையும் நெருக்கமும் அச்சத்தையும், பதற்றத்தையும்,  இனம் புரியாத வலியையும் தருவித்துவிட்டது. அடிக்கடி மனநோயால் பீடிக்கப்பட்டதுபோல சில வார்த்தைகள் புதிய ரூபத்தில் உருவம்கொண்டு அலைக்கழித்தன. அவளின் உயிர்ப்பான சொற்கள் ஒரு தாவரத்தைப்போல தளிர் வாசனையை அளித்துக்கொண்டிருக்கிறது. இங்கிருந்து சென்னைக்குச் சென்று நண்பர்கள் மூலமாக ஏதாவது ஒரு வேலையைத் தேடிக்கொள்ளலாம் என ஓரு நிமிடம் தோன்றும். ஆனால், அந்த எண்ணம் சில வினாடிகளில் பறவையைப்போல வெகுதொலைவுக்கு அப்பால் பறந்துபோய் விடுகிறது. நின்று திரும்பிப் பார்த்துவிட்டு நடக்கத் தொடங்கினான். மாலைப்பொழுதில் பள்ளி முடிந்து செல்லும் மாணவர்கள் கூச்சலிட்டுப் பேசி சிரித்தபடி இவனைக் கடந்து போனார்கள். 4-ம் வளைவுக்கு வந்த போது  வெண்குன்னம் தர்கா வரை செல்லும் மினிபஸ் போய்க்கொண்டிருந்தது. சாலையோரத்தில் இருந்த பலா மரத்தில் நான்கைந்து காய்கள் தொங்கிக்கொண்டிருந்தன. இன்னும் இரண்டு வாரத்தில் மழைக்காலம் தொடங்கிவிடும். அதற்குள் எப்படியாவது கிழங்குகளைப் பிடுங்கி முடித்துவிட வேண்டும் என்று  சுலைமான் காக்கா சொல்லியிருந்தார்.

   வானத்தைப் பார்த்தான். இறுக்கமான கருமேகங்கள் சூழ்ந்துகொண்டிருந்தன. மரவள்ளித் தோட்டத்தில் இருந்து கிழங்குகளுடன் திரும்பியபோது ஒரு மாதிரியாகக் கண்ணால் பார்த்து ஏதோ ஒன்றைச் சொல்லி உதட்டை மேலும் கீழுமாகக் குவித்து முணுமுணுத்தாள். அப்போது சிவந்த மூக்கின் கீழ் கறுமையான ரோமங்கள் தெரிந்தன.

   கடந்த வாரத்தில் ஒருநாள் இவனைத் தோட்ட வேலைக்கு வரச்சொல்லியிருந்தார் சுலைமான் காக்கா. இவனிடம் பணியின் விவரத்தைச் சொல்லிவிட்டு வீட்டுக்குள் எவரையோ அழைத்து, கட்டன் சாயாவும், மதியத்துக்கு சோறும் கொடுக்கச் சொல்லி விட்டுச் சென்றுவிட்டார். வீடு தனிமையில் உறைந்துபோயிருந்தது. மண்வெட்டியை எடுத்துக்கொண்டு தோட்டத்தில் இறங்கினான்.  ஆறு ஏக்கர் பரப்பளவில் இருந்த விஸ்தீரமான பாக்குத் தோட்டம். அங்கங்கே இருக்கும் வாழைக்கு அசடு எடுத்து மண் அணைக்கச் சொல்லியிருந்தார். ஒரு மாதம் முன்பு  பரப்பனங்காடியில் இவன் ஒரு நாயர் தோட்டத்தில் வேலை செய்வதை அங்கு ஏதோ வேலையாக வந்தபோது  காக்கா  பார்த்தார்.  ஐந்து ஆட்களுடன் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அதன் பிறகு நாயர் மூலமாகத்தான் இவனுக்கு மட்டும் தோட்ட வேலைக்குக் காக்காவிடமிருந்து அழைப்பு வந்தது.

   இவன் வேலையில் தீவிரம் ஆனான். வெயிலில்லை. நல்ல இதமான காற்று. தோட்டம் முழுவதும் வரிசையாகப் பாக்கு மரங்கள். பக்கத்தில் வாழை போட்டிருந்தார்கள். பறவைகளின் முணுமுணுப்பு. சற்றுத் தொலைவில் இருந்த பள்ளிவாசலில் 12 மணிக்கான பாங்கு ஒதி முடிந்த பிறகு யாரோ கூப்பிடுவது போலிருந்தது. ‘`அண்ணா... இவட வா... சாயா குடி.’’ திரும்பிப் பார்த்தான். வீட்டின் புற வாசலில் நின்று கையசைத்தபடி முகத்தை முக்காடிட்டு மறைத்திருந்தாள் ஃபாதியா.  இங்கு வந்திருந்த ஒரு மாதக் காலத்தில் ஒரு  பெண்ணிடம் முதன் முதலாகப் பேசும் வாய்ப்பு. வேலையை நிறுத்திவிட்டு அருகில் சென்றான். சராசரியான உயரம். நல்ல நிறம். ஆனால், முகம் தெரியவில்லை. கண்ணாடித் தம்ளரில் சாயாவும், ஒரு தட்டில் இரண்டு அவித்த காடை முட்டைகளும் இருந்தன. ஒரு பிளாஸ்டிக் முக்காலியில் வைத்துவிட்டு அவள் உள்ளே போய்விட்டிருந்தாள்.

   இவன் அப்படியே புற்கள் முளைத்திருந்த மண் தரையில் அமர்ந்து வீடு அமைந்திருந்த கிழக்கும் மேற்குமான திசையில் தெற்குப் பார்த்து அமர்ந்து சாயாவைக் குடித்துக் கொண்டிருந்தான். யதேச்சையாகத் திரும்பிப் பார்த்தபோது சமையலறையில் இருந்து  ஜன்னல் வழியே வெண்ணிறமான கண்கள் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவன் மீண்டும் தலையைக் கீழே தாழ்த்திக் கொண்டான். அப்போது பள்ளிவாசல் மனாராவில் முகாமிட்டு இருக்கும் புறாக்களின் முனகல் கேட்டது. குளிர்ந்த காற்றுபோய் மதிய வெயில் அனத்தியது.  சூடான சாயா குடிக்கவும் உடலில் வியர்வை திரண்டது.  மண்வெட்டியால் தரை வெட்டி மண்ணை ஒழுங்குசெய்து வாழை மரங்களைச் சுற்றி இடும்போது தெறித்துவிழும் மண் துகள்கள் உடம்பெங்கும் சிதறி உடலில் ஓட்டின. போட்டிருந்த சட்டையை மீறிக் கழுத்து வழியாக  உள்ளுக்குள் விழுந்தன. பொழுது உச்சியைத் தாண்டியிருந்தது.  ‘`சேட்டா இவட நோக்கு’’ - ஃபாதியா அழைத்தாள். குளித்துக் கூந்தலை உலர விட்டிருந்தாள். இப்போதுதான் அவள் முகத்தைக் காட்டினாள். வட்டமா சதுரமா என யூகிக்க முடியவில்லை. புதிய வடிவில் இருந்தது. முகமெங்கும் சிறிய அளவிலான பருக்கள் சிதறிக்கிடந்தன. வயதை யூகிக்க முடியவில்லை.  முப்பதுக்கும் நாற்பதுக்கும் இடையில் இருக்கலாம். இன்னும் குறைவாகக்கூட இருக்கலாம். மிக அருகில் அவள் நின்றாள். கண்கள் துலக்கமாக இவனை ஊடுருவின.

   கிணற்றில் இருந்து நீரெடுத்து முகத்தைக் கழுவிக்கொண்டு வந்தான். ஒரு வட்டமான பித்தளைப்  பாத்திரத்தில் சோறும் அதன் மேல் கிண்ணத்தில் குழம்பும் வைத்திருந்தாள்.  அதன் அருகில் ஒரு பாத்திரத்தில் சோற்றுக் கஞ்சியும் இருந்தன. அவள் ‘`ஊண் கழியிடா’’ என்று சொல்லிவிட்டு சிறிது தூரம் நடந்து திரும்பி ஒரு பார்வை பார்த்தாள். அடிவயிற்றுக்குள் பரவசம். ஆனால், பார்வைக்குள் ஆழமான சோகம் ஒன்று உறைந்திருந்தது. அது என்ன? அது  சொல்லும் செய்தி எத்தகையது? குழம்பிய கணத்தில் சற்றுத் தொலைவில் நின்று மீண்டும் பழையபடி இவன் சாப்பிடுவதைப் பார்த்தாள்.

    அரக்கப்பரக்கச் சாப்பிட்டுவிட்டுப் பணியில் இறங்கினான். எங்கோ சென்ற  காக்கா திரும்பி வந்தார். இவன் மண்ணை வெட்டி வீழ்த்திக்கொண்டிருந்தான். இவன் பணியைக் கண்டதும் அவருக்கு சிரிப்பு வந்தது. ‘`போதும்டா... நாயண்ட மோனே’’ என்று திட்டி வேலையை நிறுத்தச் சொன்னார். ஃபாதியாவை அழைத்துப் பைசா கொண்டுவரச் செய்தார்.

   அவள் பணத்தை எடுத்து வந்தாள். அவளைப் பார்ப்பதைத் தவிர்க்கக் கடுமையாக முயன்றான். காக்காவிடம் கண்ணியமாக நடந்துகொண்டால் தொடர்ந்து வேலை கிடைக்கும் என்று சொல்லியிருந்தார்கள்.  பணத்தைக் கொடுத்துவிட்டு அவள் உள்ளே போய்விட்டாள்.  இவன் அவரைப் பார்த்தான். ``நீ எங்கே தங்கியிருக்கேடா?’’

   ‘`வேங்கரையில காக்கா.’’

   ‘`நாளக்கி வரும்போது துணிய எடுத்துக்கிட்டு வந்துடு. தர்கா பக்கத்துல இருக்க நம்ம ரூம்ல தங்கிக்க. மனசிலாயில்லே?’’

   தலையாட்டினான்.

   வேலை முடிந்து வேங்கரையில் தங்கியிருக்கும் அறைக்குச் சென்றபோது பொழுது ஏறியிருந்தது. அறையில் ராமன், ரம் பாட்டில் வாங்கிவைத்துக் காத்திருந்தார். வேலை விவரங்களைக் கேட்டறிந்தார். கொஞ்சம் குடித்திருந்தார். தண்ணீர் பாட்டிலையும், பிளாஸ்டிக் குவளையும் எடுத்துவைத்தார். கரு நிறத்தில் திரவம் நுரைத்து அடங்கிக்கிடந்தது. சற்று யோசித்தான். தான் அங்கே தனியாகப் போய் வேலைசெய்வதை  இவர் ஒப்புக்கொள்வரா? என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், குடிக்க வேண்டும் என்ற எண்ணமில்லை. ஆனாலும், குடிக்கவில்லை என்றால் இங்கு கொசுக்கடியில் இரவு உறங்க முடியாது. அவர் இவனைப் பார்த்துவிட்டுக் கீழே இறங்கிப் போனார். பக்கத்தில் இருந்த பாத்ரூமில் போய்க் குளித்துவிட்டு வந்தான். அவர் கார மிக்சரை ஒரு பேப்பரில் கொட்டிவைத்துக் காத்திருந்தார். தலையைத் துவட்டிக்கொண்டு பாட்டிலைத் திறந்து திரவத்தை ஊற்றினான்.

   ரோலண்ட்ஸ் ஹோட்டல்  மூன்றாவது மாடியில் அந்த அறை இருந்தது. கதவு கிடையாது. பழைய பொருள்கள் போட்டுவைத்திருந்த இடத்தைக் காலிசெய்து மாதம் 500 ரூபாய்க்கு இவனைச் சேர்த்து மூன்று பேர் தங்கிக்கொள்ள வாடகைக்கு விட்டிருந்தார்கள். கரன்ட் கிடையாது. மாடிக்கு எதிரே இருந்த மின்கம்பத்தில் இருந்து கிடைக்கும் வெளிச்சம்தான். அவரிடம் 100 ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தான், ``எதுக்குடா’’ என்றார். ‘`சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வா.’’ விறுவிறுவென கீழிறங்கிப் போனார். இவன் பாட்டிலைக் காலி செய்திருந்தான். சிறிது நேரத்திலேயே பார்சல் பொட்டலங் களுடன் வந்தார். இடுப்பில் இருந்து மற்றொரு பாட்டிலை எடுத்து வைத்து அதனை இரண்டாகப் பிரித்து ஊற்றினார். எதிரே அமர்ந்து பார்சலைப் பிரித்து வைத்தார். அதில் பரோட்டாவும் இறைச்சியும் இருந்தன. இவன் மற்றொரு பொட்டலத்தைப் பிரித்தான். இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டார்கள். ராமனுக்கு போதை அதிகமாகியது. அப்படியே உறங்கிப்போனார். சரியாகச் சாப்பிடவில்லை.   போன் ஒலித்தது. எதிர் முனையில் இருந்து கர்ணா பேசினான். மூர்த்தி போனை கட் செய்தான். உடற்சோர்வும் கிறக்கமும் ஒன்று சேர அப்படியே படுத்தான். யாரோ தட்டி எழுப்புவது போலிருந்தது.  விழித்துப் பார்த்தான். கர்ணா நின்றிருந்தான். ‘`வாடா...எழுந்திரிடா. 200 ரூபாய் பணம் கொடுடா. அங்கே ஓர் இடத்துல சரக்கிருக்கு.வா போவம்.’’
   ‘`என்கிட்ட பணம் இல்லை. சம்பளம் இன்னும் வரல.’’

   ‘`எல்லாம் எனக்குத் தெரியும் கொடுடா...’’ சொல்லிக்கொண்டே கர்ணா நெருங்கி வந்தான். சட்டென்று உருவான ஒரு கோபத்தில் எழுந்துநின்ற மூர்த்தி, கர்ணா முகத்தில் ஒரு குத்துவிட்டான். ``பெட்ரோல் பங்க்ல வேலையிருக்குன்னு என்னை வர வெச்சிட்டுக் கூலி வேலைக்கு என்னை அனுப்பிட்டு லஞ்சமா கேட்குறே...’’

   கர்ணாவும் பதிலுக்குத் தாக்கினான். இருவரும் சரமாரியாகத் தாக்கிக் கொண்டார்கள். இவன் அடிவயிற்றில் ஒங்கி அவன் ஒரு குத்துவிட்டான். வலி பரவியது.  மூர்த்தி ஓர் உதை விட்டான். அவன் அப்படியே சரிந்து கீழே விழுந்து சிறிது நேரம் கிடந்தான். தமிழும் மலையாளமும் கலந்து கெட்டவார்த்தைகளால் திட்டிக்கொண்டே  கர்ணா எழுந்து நடக்கத் தொடங்கினான், ராமன் குறட்டையொலி அந்த நள்ளிரவில் சீரற்று ஏற்றஇறக்கங்களுடன் ஒலித்துக் கொண்டிருந்தது. வாசலில் வந்து துணி பேக்கை எடுத்துத் தலையணையாக வைத்துக்கொண்டு படுத்தான். கொசு அப்பியது. செல்லை ஆன் செய்து நேரத்தைப் பார்த்தான். நள்ளிரவு ஒன்றை நெருங்கிக்கொண்டிருந்தது. உதை வாங்கிச் சென்றவன் தான்  உறங்கும்போது  தலையில் கல்லைப்போட்டுக் கொலை செய்துவிட்டால் என்ன செய்வது... அப்படியொரு வன்மம் உள்ளவனா அவன்?ஆனால், குடிக்காத நேரங்களில் ஒரு குழந்தையைப்போல நடந்து கொள்கிறான். குடித்துவிட்டால், அவன் இயல்பு மாறிவிடுகிறது. அவன் கேட்ட பணத்தைக் கொடுத்திருந்தால் போயிருப்பான். அடித்திருக்க வேண்டாம். கல்யாண மண்டபத்தில் வேலை செய்கிறான். மாதச் சம்பளம். திருமணம் நடக்கும் நாள்களில் பிரச்னையில்லை. ஏதாவது செலவுக்குத் தேற்றிக் கொள்வான். ஒருநாள் முஸ்லிம் ஒருவரின் மகள் நிக்காஹ் அன்று ஒரு பாலிதீன் பை நிறைய பிரியாணி எடுத்து வந்தான்.  குடித்திருக்கவில்லை என்றால், அவனைப் பக்குவமாகப் பேசி அனுப்பியிருக்கலாம். நீண்டநேரம் புரண்டு கொண்டே கிடந்தான் மூர்த்தி. எப்போது உறங்கினான் என்று தெரியவில்லை. குளிர்வது போலிருந்தது. விழித்தெழுந்தான். கண்களைத் துடைத்துக்கொண்டு ராமரைப் பார்த்தான். காணவில்லை. சீக்கிரமாகவே எழுந்துபோய் கீழே யாரிடமோ அவர் பேசிக்கொண்டிருப்பது கேட்டது.  செல்லை எடுத்து நேரம் பார்த்தான்.  நாலே முக்கால் ஆகிவிட்டது. பேக்கை எடுத்துக் கொண்டு கீழிறங்கினான். அவர் அக்கம்பக்கம் அறைகளில் தங்கியிருக்கும் ஊர் ஆட்களிடம் பேசிக்கொண்டிருந்தார். இவன் பேக்கை எடுத்துக்கொண்டு வருவதை அதிர்ச்சியுடன் பார்த்தார். இரவு நடந்த சம்பவத்தைச் சொன்னான். ‘`அப்படியா... என்னை ஏன் எழுப்பவில்லை. உடம்பு வலியில் அசந்து தூங்கிவிட்டேன்’’ என்றார்.

   ‘`ரெண்டு நாளைக்கு வெண்குன்னத்துல வேலை இருக்கு. தங்கி வேலையைப் பார்த்து விட்டு வர்றேன்.’’

   ஏதோ சொல்ல வாயெடுத்து நிறுத்திக் கொண்டார். இவன் சாலையில் இறங்கி நடக்கத் தொடங்கினான். வேங்கரையில் இருந்து ஐந்து கி.மீ தூரத்தில் இருந்தது வெண்குன்னம். 

   புனிதாவுக்கும் இவனுக்கும் வாக்குவாதம் முற்றிய அந்த மார்ச் மாதத்தின் சனிக்கிழமை இரவில் மழை வருவதுபோல சற்று ஊதல் காற்று வீசியது.

   ``நான் காலையில கிளம்புறேன். என்னால இனிமே உன்கிட்ட குப்பை கொட்ட முடியாது.  உன்ன நம்பி நான் இல்ல...’’ பதற்றமில்லாது வார்த்தைகளை மிகத் தெளிவாக விட்டெறிந்தாள். கிடாரம் ஆரம்பப் பள்ளியில் சமையல் பணியாளராக வேலைக்குச் சேர்ந்து ஒரு வருடம் ஆகிவிட்டிருந்தது. அவள் அண்ணன் ஆளுங்கட்சியில் தெரிந்தவர் மூலமாக வேலை வாங்கிக் கொடுத்திருந்தார்.  ஆனால், இவன்தான் தனது புஞ்சை நிலத்தை விற்று அந்த வேலைக்கு ஒன்றே கால் லட்சம்  கொடுத்தான். அவள் பிறந்த வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று தோன்றும்போது ஏதாவது உப்புச்சப்பில்லாத காரணத்தைக்கூட பெரிதாக்கிச் சண்டைக்கு இழுப்பாள். கோபித்துக்கொண்டு படுத்துக்கிடப்பாள். இவன் அழைத்துக்கொண்டு போனால், சகஜ நிலைக்குத் திரும்பி விடுவாள். இல்லையென்றால் சொல்லாமல் கொள்ளாமல் ஊருக்குக்  கிளம்பி விடுவாள். மூன்று நாள்கள் தங்கிவிட்டு ஒன்றுமே நடக்காதுபோல் திரும்பிவிடுவாள்.  ஆறு மாதங்களுக்கு முன்பு இப்படித்தான் வேலை முடிந்து சீக்கிரமாக வந்து அழைத்துச் செல்லவில்லை என்று சண்டை பிடித்தாள். மறுநாள் இவன் பந்தல் போடும் கூலி வேலைக்கு நன்னிலம் போய்விட்டான். திரும்பிவந்து பார்த்தபோது வீடு பூட்டப்பட்டிருந்தது. சாவியைத் தேடினான். போன் செய்தான். அவள் எடுக்கவில்லை. பூட்டை உடைத்து  உள்ளே நுழைந்தான். ஒருவாரம் தனியாகச் சமைத்து சாப்பிட்டான். வேலைக்கு வந்து அப்படியே பிறந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்தாள். ஊரில் எல்லோரும் விசாரித்தார்கள். அடிக்கடி போன் செய்தான். அவள் எடுத்து ஓரு வார்த்தைகூடப் பேசவில்லை. தேடிக்கொண்டு போனான்.மச்சான் பன்னீர் இருந்தார். சரியாக முகம் கொடுத்துப் பேசவில்லை. ``ஊரில் போய்க் கிராம நிர்வாகிகளை அழைத்து வா. பேசிக்கொள்ளலாம்’’ என்று சொன்னார். புனிதா வீட்டுக்குள் இருந்தாள். இவனைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. கிளம்பிவந்து ஊர்க்காரர்களிடம் விஷயத்தைச்  சொன்னான். ஒரு வாரம் கழித்து ஒரு ஞாயிற்றுக்கிழமையில் பஞ்சாயத்துப் பேசப் போனார்கள். அது ஒரு இள மதியப்பொழுது. வீட்டுக்குள் இருந்து கொதிக்கும் கறிக் குழம்பின் வாசனை  வந்தது.

   அந்த ஊர்க்காரர்கள் நாலைந்து பேர் வந்தனர். பன்னீர் தெளிவாகப் பேசினான்.   ‘`இவரைப் பற்றி சரியா விசாரிக்காம பொண்ணு கொடுத்துட்டோம். ரெண்டு பேருக்கும் சரிவரல. அதனால இவரோட வாழ விருப்பமில்லைன்னு சொல்லுது. இங்க இன்னும் ஒரு மாசம் இருக்கட்டும். ஏதாவது மாற்றம் வருதானு பார்ப்போம். நான் ஊரை மதிக்கிறவன். கொஞ்ச நாளைக்கி இருக்கட்டும் பேசிக்கலாம்’’ சரியென்று கிளம்பி வந்தார்கள். இது மூர்த்திக்கு ஏமாற்றமாக இருந்தது.

    அவள் வீட்டுக்குள் முடங்கிக்கிடந்தாள். ஊர்க்காரர்களிடம்கூட முகம் காட்டி ஒரு வார்த்தை பேசவில்லை என்று மூர்த்திக்கு புனிதாமீது கடுங்கோபம் உருவானது.
    
   ஒரு மாதம் கடந்தது. இவன் தினந்தோறும் போன் செய்தான். சமயங்களில் ஸ்விட்ச் ஆஃபில் இருந்தது. அல்லது நீண்ட நேரம் ரிங் அடித்து கட்டாகியது.  அப்பாவோ அம்மாவோ இருந்திருந்தால், தனக்காக மல்லுக்கு நின்று இருப்பார்கள். இவனது அப்பா பிறந்த ஊர் நாகை பக்கம் இருந்தது. திருமணம் செய்து இங்கே  வந்து  மாமனார் வீட்டில் தங்கிவிட்டார். காலப்போக்கில் அப்பா வகை உறவுகள்  தொடர்பற்றுப் போய்விட்டன. அம்மா ஒரே பெண். தானும் ஒண்டிக்கட்டையாகப் போய்விட்டதில் வருத்தம் இருக்கத்தான் செய்தது. நாட்டாமை சுந்தரம் இவனிடம் வருத்தமாகப் பேசினார்.  ``கல்யாணம் ஆகி நாலு வருஷம் ஆயிட்டுங்குறே. ஒரு புள்ள குட்டின்னு பொறந்திருந்தா, உன்ன இப்படி அந்தப்  பொண்ணு அலட்சியம் பண்ணிருப்பாளா?’’ என்று அவர் சொன்னபோது இவன் கண்கள் குளமாகின.  நான்கு வருடக் காலங்களில் இருவருக்குள்ளும்  எத்தனையோ தடவை வார்த்தை முற்றியிருக்கிறது. அடிப்பதுபோல பாவனை செய்து அவளிடம் போவானே தவிர, அடித்தது இல்லை. பிறகு நான்கைந்து நாள்களில் சமாதானம் ஆகிவிடுவார்கள். ஆனால், இந்தத் தடவை அவள் இப்படி நடந்துகொண்டது ஆச்சர்யமாகவும் நம்ப முடியாமலும் இருந்தது. புனிதா தனது வாழ்க்கையில் இருந்து வெளியேறிவிட்டால் தனது எதிர்காலம் எப்படியிருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே அஞ்சினான். தினமும் ஊர்க்காரர்கள்  அவள் குறித்து விசாரிப்பதை அவமானமாகக்   கருதினான். தினம் குடித்துவிட்டுவந்து படுத்துக் கிடந்தான்.  ஒருநாள்  கமலாபுரம் மதுக்கடையில் கர்ணாவைச் சந்தித்தான். அவன் பங்காளி வகையில் உறவினன். அவன்தான், ‘`நான் கேரளா பெண்ணைக் கட்டிக்கொண்டு குழந்தைகுட்டியோட வாழ்றேன். இப்போகூட எங்க முதலாளி பெட்ரோல் பங்கில் வேலைக்கு ஆள் தேவைப்படுது. நீ வர்றியா, பதினைஞ்சு ஆயிரம் சம்பளம். தங்குற இடம் சாப்பாடு இலவசம். என்ன சொல்றே’’ என்றான். அவன் பேச்சைக் கேட்டுத்தான் கேரளா வந்திருந்தான்.

   விடிந்தும் விடியாத அந்தக் காலைப் பொழுது மனத்துயரத்தை அதிகப்படுத்தியது. அழ வேண்டும்போல் தோன்றியது. தொண்டையில் வலி இறுகியது.

   நடக்கத் தொடங்கினான். அமைதியான சாலையில் நடப்பது ஒருவிதமான துயரத்தைக் கடந்து  இலகுவான மாற்றத்தை உருவாக்கியது. இந்த மலப்புரமே மலையில் அமைந்த ஊர். மலை மேல் வாழ்க்கை. சமவெளியில் இருந்து வந்தவனுக்கு இது ஆச்சர்யமாக இருந்தது. பாலக்காட்டிலிருந்து வந்து இறங்கிய அந்த அதிகாலைப் பொழுதில் நாலாப்புறமும் எழுந்து நிற்கும் மலைமுகடுகளையும் அதன் மேல் செழித்துக்கிடக்கும் வனத்தையும் பார்த்துப் பிரமித்துப்போய் நின்றான். மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட ஏற்றம் இறக்கம் நிறைந்த குடியிருப்புகளையும், கடைவீதிகளையும் குன்றுகளைக் குடைந்து போடப்பட்ட சாலைகளையும், அதன் மேலே கட்டப்பட்ட அடுக்குமாடிக் கட்டடங்களைப் பார்த்தும் வியந்து நின்றான்.

     வேகமாக நடந்து வெண்குன்னத்தில் வந்து நின்றான். மழைக்காலம் வருவதற்கு இன்னும் சில வாரங்களே இருப்பதால், சுளீரென்று வெயில் அடித்தது. பெரிய பள்ளிவாசல் குன்றைக் கடக்க சற்று சிரமமாக இருந்தது.அதில் பைக்குகளில் சர்வசாதாரணமாகச் சென்றுகொண்டிருந்தார்கள். நேர்க் குத்துவாட்டில் இருந்தது சாலை. தவறி விழுந்தால்,  அடுத்த  50 அடி பள்ளத்தில் கிடக்க வேண்டும். காக்கா வீடு அமைதியில் சயனித்திருந்தது. காலை நேரத்துக்குரிய  எந்தப் பரபரப்பும் இல்லை. திடீரென்று உள்ளே குழந்தைகளின் சிரிப்பொலி கேட்டது. வாசலில் நின்று ``காக்கா’’ என்று குரல் கொடுத்தான்.

   ஃபாதியா வேகமாக வெளியே வந்தாள். இவனைக் கண்டதும் உதட்டை மேலும் கீழுமாக அசைத்தாள். தோட்டத்தைக் காட்டிப் பணி செய்யச் சொன்னாள். காக்கா எங்கோ வெளியே சென்று இருந்தார். இவன் பேக்கை வைத்துவிட்டு லுங்கியும் சட்டையும் அணிந்து கொண்டு பணியில் இறங்கினான். மண்வெட்டியில் மண்ணை வெட்டி  வாங்கும்போது இலை கழன்றது. அதனை எடுத்துக்கொண்டு புறவாசல் வந்தான். ``காக்கா’’ என்று குரல் கொடுத்தான். உள்ளே பெண்கள் பேசிச் சிரிக்கும் சத்தம் கேட்டது. கொஞ்ச நேரம் நின்று உள்ளே ஒரு திருடன் வீட்டை நோட்டம் விடுவதுபோல  பார்த்தான். மீண்டும் தொண்டையைக் கனைத்துக்கொண்டு ‘`காக்கா’’  என்று கத்தினான். ‘`ஒ...இவட பணிக்கார் விளிக்குந்நு’’ என்று சொல்லிக்கொண்டு ஃபாதியா வெளியே வந்தாள். சற்று உயரமான அதே நேரத்தில் கச்சிதமான உடல்வகைகொண்ட பெண் முக்காடிட்டபடி ஃபாதியாவின் பின்னால் வந்து நின்றாள். அவள் முன்னழகு வசீகரமாகத் தெரிந்தது. சட்டென்று பார்வையைத் தாழ்த்தி மண்வெட்டியைக் காட்டி ``கழண்டுவிட்டது’’ என்றான். பதிலேதும் சொல்லாமல் ஃபாதியா வீட்டினுள் நுழைந்தாள். அப்போது அந்தப் பெண் பாக்குத் தோட்டத்தில் இறங்கிப்போய் பழுத்து விழுந்துகிடக்கும் பாக்குகளைக் கொஞ்சம் எடுத்து வந்தாள்.

    ஃபாதியா புது மண்வெட்டியை எடுத்துவந்து தரையில் வைத்தாள்.`‘அருவா கொடுங்க’’என்றான். புரியாமல் இருவரும் பார்த்தார்கள். கையால் மரத்தை வெட்டுவது போல பாவனைசெய்து காட்டினான். ``ஓ...வெட்டுக்கத்தியோ’’ என்று சொல்லிக்கொண்டு உள்ளே போனாள். பாக்குப் பொறுக்கி வந்தவள், ``எவட நாடு’’ என்றாள். ``தஞ்சாவூர்’’ ``ம்...’’ முகத்தைச் சுழித்து ``எவட ஸ்தலம்’’  என்றாள் மீண்டும். அவளைக் கூர்ந்து பார்த்தான். அவள் முகத்தில் ஒரு தெளிவு. வார்த்தையில் பக்குவம்  தெரிந்தது. அவளுக்குப் புரியும்விதமாக ``நாகூர்’’ என்றான். ``ஓ...தர்கா’’ என்று சொல்லியபடித்  தலையாட்டிக்கொண்டே உள்ளே போனாள்.

   அந்த வியாழக்கிழமையின் மூன்று வயல்களில் கிழங்கு பிடுங்கி முடிவுறும் தருவாயின் மதியப் பொழுதில் திடீரென்று சூழ்கொண்ட மேகங்கள் பெருமழையாக இறங்கிக் கொட்டித் தீர்த்தன.   நல்லவேளையாகப் பிடுங்கிய கிழங்குகளை வியாபாரிகளுக்கு ஏற்றியாகிவிட்டது. அதுபோக மீதியுள்ள மரவள்ளிக் கிழங்குகளை மழையில் நனைந்து கொண்டே  டாடா ஏசி வேனில் ஏற்றிக்கொண்டு விட்டான். இவனுடன் பணியாற்றிய ஆட்கள் எல்லாம் சென்றுவிட்டிருந்தார்கள். சென்ற வருடத்தில் போதிய பருவமழை இல்லாத காரணத்தால், கிழங்குச் சாகுபடி குறைந்துபோய் மரவள்ளிக்கு செம கிராக்கி நிலவியது. கிலோ நாற்பது வரை விற்பதாகக் காக்கா சொன்னார். மூன்று வயலில் விளைந்திருந்த கிழங்குகளைப் பிடுங்கியாகிவிட்டது. வீட்டுக்குப் பின்புறம் இருந்த அறையில் கிழங்குகளைக் கொட்டிப் பரப்பிக்கொண்டிருந்தான். உடல் மழையில் நனைந்து ஜில்லிட்டுப் போயிருந்தது. சாரல் மழை பெய்ந்துகொண்டிருந்தது. அப்போது யாரோ வருவது போலிருந்தது. ஃபாதியா கையில் செம்புடன் வந்து நின்றாள். கட்டன் சாயாவைத் தம்ளரில் ஊற்றிக்கொடுத்தாள். கையைத் தாழ்த்தி அதனை வாங்கினான். ‘`இவட பணி ஒண்ணும் செரியல்ல. நின்டெ கண்ணுகள் ஞான் கண்டு’’ என்றாள். அடிவயிற்றில் பயம் படர்ந்தது.  திடீரென்று எழுந்த அச்சத்தில் ‘`சேச்சி மனசிலாயில்லா’’ என்றான். ‘`சேச்சியில்லடா  பிராந்தா... ஃபாதியான்னு விளி’’ என்றாள். இவன் தம்ளரில் சாயாவைக் குடித்துக் கொண்டிருந்தான்.  கீழே குனிந்து ஒரு கிழங்கு  எடுக்கும் சாக்கில் இடது தோள்பட்டையில்  ஓர் இடி இடித்தாள்.  நெருங்கிவந்து  `‘சாரிடா’’ என்றாள். காக்காவின் ஸ்கூட்டர் சத்தம் கேட்டது. ஒரு கொட்டு நிறைய கிழங்குகளை அள்ளிக்கொண்டு அருகில் வந்தவள், ``ஏ பிராந்தா... நின்டெ கண்ணுகள் ஞான் கண்டு’’ மிக நெருங்கிக் கன்னத்தில் மெல்லிய விரல்களால் தட்டினாள். அவள் மேனியில் இருந்து சுண்டக் காய்ச்சிய பாலின் மணம் நாசிக்குள் வந்து போனது.

   தொடர் மழை பெய்ந்துகொண்டிருந்தது. அறையில் அடங்கிக்கிடந்தான். சூழலே மாறிவிட்டிருந்தது. இரு வேளையும் காக்கா வீட்டில் சாப்பாடு. இப்போது காக்காவின் இரு மகன்கள் மற்றும் மருமகள், குழந்தைகள் வந்து விட்டிருந்தனர். ஃபாதியா ஒடியாடி வேலை பார்த்துக்கொண்டிருந்தாள். இவனைப் பார்த்துக் கண் சிமிட்டுவதும் புரியாத பாஷையில் பேசுவதுமாக வலம்வந்து கொண்டிருந்தாள். மழை வெக்களித்த அந்த வெள்ளிக்கிழமை காலையில் காக்காவின் மகன்கள் எல்லோரும் சென்றுவிட்டிருந்தனர். அந்தப் பெண்ணும் ஃபாதியாவும்தான் இருந்தனர். காக்கா, ``தரை கொஞ்சம் காயட்டும்.  பணி தொடங்கலாம்’’ என்று சொன்னார். அன்று உடம்பு சரியில்லாமல் போயிருந்தது. கடும் உடம்பு வலி. காலை ஆகாரத்துக்கு வரவில்லை. மதியம் வந்தான். அந்தப் பெண் தான் சாப்பாடு போட்டாள். அவித்த மரவள்ளிக் கிழங்கும் அதில் போட்டுச் சாப்பிட மத்தி மீன் குழம்பும் வைத்தாள். கிழங்கோடு பிசைந்து சாப்பிட்டுப் பார்த்தான். பிடிக்கவில்லை. சற்றுத் தொலைவில் அதனை வீசிவிட்டுக் கிளம்பியிருந்தான்.

    அன்றிரவு உறக்கமில்லை. மனம் இனம் பிரிக்க இயலாத பதற்றத்தில் இருந்தது. அறையில்  இருந்து எழுந்து வெளியே வந்தான். செல்லை எடுத்து நேரத்தைப் பார்த்தான். நிலவு பூசினாற்போல ஒளி வீசியது. மந்தகாசமான இருட்டு. அப்படியே  எழுந்து நடக்கத் தொடங்கினான். தர்காவின் மனாராக்களில் உறங்கிக்கொண்டிருந்தன புறாக்கள். தூரத்தில் இருந்து நரிகளின் ஊளை அவ்வப்போது கேட்டது. தூரத்தில் இருக்கும் மலைமுகடுகளில் பீறிட்டுவரும் விதவிதமான விலங்குகளின் விநோத ஒலி. புனிதாவின் ஞாபகம் வந்து சடுதியில் மறைந்து போனது. ஒரு வாரத்துக்கு முன்புதான் ஊரில் இருந்து பேசியிருந்தார்கள். விலக்குக் கேட்டுப் புனிதா நோட்டீஸ் அனுப்பி இருப்பதாகத் தெரிவித்தார்கள். விரைவில் ஊருக்கு வருவதாக மட்டும் பதில் சொல்லியிருந்தான்.
    
   இரவுப் பூச்சிகளின் ரீங்காரம். மலைச்சரிவு  மரங்கள் உராய்ந்துகொள்ளும் ஒசை.  இரவில் பூக்கும் மலர்களின் விதவிதமான நறுமணம். ஒருகணம் சிறு வயதில் கேட்ட  ஆளை மயக்கிக் கொள்ளும் மோகினிகளின் கதை நினைவில் வந்து போயிற்று.

   பள்ளிவாசலைக் கையெடுத்து வணங்கினான்.  சிறிது தூரம் கடந்து காக்காவின் வீட்டைக் கடந்து அரை பார்லாங் நடந்தால், மலப்புரம் சாலை வரும். அதில் கடைத்தெரு உண்டு.  சில கடைகள் இரவில் இருக்கும். லாரியில் செல்பவர்கள் அங்கு நிறுத்திச் சாப்பிட்டு விட்டு ஓய்வு எடுத்துச் செல்வார்கள். மணி நள்ளிரவு இரண்டை நெருங்கியிருந்தது. நடந்தான். காக்கா வீட்டைப் பார்த்தான்.  மெல்லிய இருளில் உறக்கத்தில் மூழ்கிப் போயிருந்தது. அப்படியே நின்றான். அந்தப் பின்னிரவுப் பொழுதைக் கிழித்துக்கொண்டு இரண்டு பறவைகள் சிறகடித்துப் பறந்தன. ஏன் இப்படி இங்கு நிற்க வேண்டும் என்று யோசித்த கணத்தில்  ‘`பிராந்தா. இவட வாடா’’  கிசுகிசுப்பான பெண் குரல். வேறு யார்?  ஃபாதியா நின்றுகொண்டிருந்தாள்.  இவனைக் கையைக் காட்டி அழைத்தாள். இந்நேரத்தில் இங்கு என்ன செய்கிறாள்? குழப்பமும் பதற்றமும் அதிகமாகியது. இதனைக் காக்கா பார்த்தால் என்ன நினைப்பார்? அருகில் போனான். ``வா’’ என்று சொல்லிப் பாக்குத் தோட்டம்  நோக்கி வேகமாக  நடந்தாள். ஒரு கணம் பயம் ஏற்பட்டது அவனுக்கு. அவளுக்குக் கால்கள் இருக்கின்றனவா என்று  கூர்மையாகப் பார்த்தான்.  தோட்டத்தில் அடர்ந்த மரங்களால் இருள் சூழ்ந்திருந்தது. அப்படியே ஓர்  இடத்தில் நின்றாள்.  அவள் முகத்தைப் பார்த்து நின்றான்.  ‘`இப்படி இருட்டுல எதுக்கு’’ என்றான்.
   இவனைப் பார்த்துப் பேசத் தொடங்கினாள். ‘`உன்னைத் தேடி ஞான் வரலாம்முன்னு நெனைச்சேன். நீயே வந்துட்டே. உன்னிடம் கதைக்கணும். ஞான் முன்னே நிக்காஹ் செஞ்சது. அதில என்மேல இஷ்டமில்லாம புருஷன் கஷ்டப்படுத்தி தலாக் செஞ்சிட்டு. இப்ப  இன்னுமொரு தடவ நிக்காவை அச்சன் ரெடி செய்யுது. அதில எனக்கு இஷ்டமில்லா.ஞான் நின்னை லைக் பண்ணுது. ஞான் பறயிறது மனசிலாயில்லே?’’ என்று சொல்லிக் கொண்டே நெருங்கி வந்தாள். பயத்தில் அடிவயிறு கலங்கியது.  உடல் நடுங்கியது. இரு கைகளையும் பற்றி நெஞ்சில் சாய்ந்தாள். அவள் உடல் வெதுவெதுப்பான இளம்சூட்டில் தகித்தது. அப்போது திடீரென்று  அவள் அழத் தொடங்கினாள்.  அப்படியே அவள் சிறிது நேரம் அவன் தோளில் சாய்ந்தபடி நின்றாள். இவனுக்கு உடல் நடுங்கியது. ``வா...போகலாம்’’ என்று அவளை விலக்கி நடக்கத் தொடங்கினான்.
   ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தான். திடுக்கிட்டு எழுந்தபோது மதியமாகியிருந்தது. காக்கா நான்கைந்து தடவை போன் அடித்திருந்தார். முகத்தைக் கழுவிக்கொண்டு கிளம்பினான். சிறு தூறல் விழுந்திருந்தது. திண்ணையில் உட்கார்ந்து காக்கா, செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தார். இவனைக் கண்டதும் ``ஏண்டா...’’என்றார். ``உடம்பு சுகமில்ல காக்கா. நான் நாட்டுக்குப் போயிட்டு வர்றேன்’’ என்றான். உள்ளே சென்று பணம் கொண்டுவந்து கொடுத்தார். அப்போது சில நிமிடங்களில் சமையலறையில் பாத்திரங்கள் உடையும் சப்தம் கேட்டது. அன்று அவள் முகம் பார்க்காமல் ஊருக்குக் கிளம்பிவிட்டிருந்தான்.

   அவன் நினைவுகள் எழும்போது  வெண்குன்னத்தின் மலை முகடுகளைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருப்பாள். ஒரு வார்த்தைகூட சொல்லாமல் போய்விட்டானே என்று அவன்மீது கோபம் இருந்தது. அவன் வேலை பார்த்த பாக்குத் தோட்டத்தில் காலில் மண் பதிய நடப்பாள். கிணற்றில் நின்று தண்ணீரில் முகம் பார்ப்பாள். அடிக்கடி சுவற்றை வெறித்துப் பார்த்து சிந்தனையில் மூழ்கிப் போவாள். வாப்பா போனில் யாருடன் பேசினாலும் அவனா என்று கவனிப்பாள். சாப்பிடும்போது அவனுக்கு ஒரு பிடி அள்ளி வைத்துவிட்டுச் சாப்பிடுவாள். இரவுகளில் அவனைக் கண்டபடித் திட்டித் தீர்ப்பாள்.

   அந்த வெள்ளிக்கிழமையில் பள்ளிவாசல் தொழுகைக்குச் சென்று திரும்பிய காக்கா சோகமாகக் காணப்பட்டார்.  அவர் முகத்தைப் பார்த்து `‘என்ன வாப்பா’’ என்றாள். ‘`ஃபாதியா,   மூர்த்தி மவுத் ஆயிட்டான்னு கேள்விப்பட்டேன்’’ என்றார். இரண்டு கைகளையும் குவித்து ‘அல்லா’ என்று  முணுமுணுத்தார். ஃபாதியா வேகமாகத்  தனது அறைக்குள் புகுந்து கதவைத் தாழிட்டுக்கொண்டாள்.
   http://www.vikatan.com
  • By நவீனன்
   அண்டை வீட்டு நல்லவன்! - சிறுகதை
   எழில்வரதன் - ஓவியம்: ரமணன்
    
   அசையாம பல மணி நேரமா காம்பவுண்டு சுவத்துக்கு முட்டுக்கொடுத்து உக்காந்திருக்காரே... அவர் பேரு பார்த்தசாரதி. இப்ப யார்கிட்டயும் பேச மாட்டார். அவருக்கு பொண்டாட்டியோட சண்டை. ரெண்டு நாளா வயிறும் சரியில்லை; வாழ்க்கையும் சரியில்லை. அதனால, ஒருத்தர்கிட்டயும் பேசக் கூடாதுங்கற வைராக்கியம் அவருக்கு.

   அவரைப் பார்க்க ரொம்ப நாள் கழிச்சு ஒரு ஃப்ரெண்டு வந்தாங்க. பேரு அமுதவள்ளி. பார்த்தசாரதியோட அந்தக் காலத்து டாவு. அவங்களுக்கு இப்ப ரெண்டு குழந்தைங்க. பார்த்தசாரதிகிட்ட, `கல்யாண வாழ்க்கை எப்படிடா போயிட்டிருக்கு?’னு கேட்டாங்க. பார்த்தசாரதிக்குக் கல்யாணம் முடிஞ்சி, ஆறு மாசம்தான் ஆச்சு. தாம்பத்ய வாழ்க்கையில பயங்கரத் தகராறு; டப்பா டான்ஸ் ஆடுது. ஆனா, சோத்துக்கு உப்புப் போட்டுத் திங்கறவன், பொண்டாட்டி சரியில்லைனு அடுத்தவன் பொண்டாட்டிகிட்ட புகார் பண்ண மாட்டான். பண்ணினா அது அசிங்கம். அதுவுமில்லாம, பேசக் கூடாதுங்கற வைராக்கியம். ஆனா, காலங்காத்தால இயற்கை உபாதை முட்டிட்டு நிக்குமே... அப்படி துக்கம் தொண்டைக்குழியில பீறிட்டு நிக்குது. அழாம இருக்க முடியாது. பார்த்தசாரதி வெடிச்சிட்டாரு. `ஓ...’னு ஒரே அழுகை.

   “டேய், என்னாச்சுடா? வீட்ல ஏதாவது பிரச்னையா?” ஃப்ரெண்டு கேட்டாங்க.

   “எனக்கு வீடே பிரச்னைதாண்டி. மூக்குல மொளகாப்பொடி தூவிக்கிட்டு, `ஹச்சு... ஹச்சு’னு தும்மிக்கிட்டே, ஒன்பதாயிரம் ஓட்டை இருக்கிற முண்டா பனியனைப் போட்டுக்க நீ ட்ரை பண்ணியிருக்கியா?”
   ``டேய்... லூசு... உன்னோட முண்டா பனியனை நான் எதுக்குடா போட்டுக்கணும்?”

   “ஒரு பேச்சுக்குச் சொல்றேன்... தும்மிக்கிட்டு ஓட்டை பனியனைப் போட்டுக்கறது எவ்ளோ பெரிய கஷ்டம். எதுல கை விடறது, எதுல தலை விடறது, மிச்சமிருக்கிற ஆயிரம் ஓட்டையில எத விடறதுனு ஒரே குழப்பமா இருக்குமில்ல... அப்படி இருக்குடி என் பொண்டாட்டியோட குடும்பம் நடத்துறது”

   “அப்படி என்னடா பிரச்னை?”

   பார்த்தசாரதி மானஸ்தன். அந்தக் கால டாவாக இருந்தாலும் பொண்டாட்டி பத்தி வாயைத் தொறக்க மாட்டாரு. ஆனா, மூக்குல வந்த கொப்பளத்தை எத்தனை நாளைக்கு மறைக்கறது... வலி உசிர் போகுதுல்ல?
   ``பொண்டாட்டிங்கற பேருல முள்ளம்பன்றியைக் கையில குடுத்துட்டாங்க. பார்க்கிறவன்லாம் கேக்கறான்... `என்னாச்சி பார்த்து? பிசாசுகிட்ட அறை வாங்கின பிச்சைக்காரன் மாதிரி சுத்துறே... என்ன மேட்டர்?’னு. எல்லாருக்கும் தெரிஞ்சிபோச்சு, பார்த்தசாரதி பனியன்ல ஆயிரத்தெட்டு ஓட்டைன்னு.’’

   பார்த்தசாரதி புலம்பறாரு. அதுகூடப் பரவாயில்லை. `` `ஒண்ணு உன் பனியன மாத்து... இல்ல பொண்டாட்டிய மாத்து. ஏன் இப்படி சீரியல் பார்க்குற நேரத்துல வந்து என்கிட்ட பொலம்பறே?’னு கடுப்படிச்சிட்டா சுப்புலட்சுமி.’’

   ``யாருடா அந்த சுப்புலட்சுமி?’’ - அமுதவள்ளி கேட்டாங்க.

   ``ஏய்... நீ இன்னும் கிளம்பலையாடி?”

   “அடப்பாவி... முத்திப்போச்சா உனக்கு? நீ பாட்டுக்கு தனியா புலம்பறே?’’

   பார்த்தசாரதிக்கு முத்தித்தாங்க போச்சு. இல்லைன்னா, சீரியல் பார்க்குற சுப்புலட்சுமிகிட்ட சொந்தக் கதையைச் சொல்லி அசிங்கப்பட்டு நிப்பாரா? ஆயிரம் ஓட்டைகள் உள்ள பார்த்தசாரதி பனியனைப் பத்தி ஊருக்குள்ள கசிய விட்டதே சுப்புலட்சுமிதான்.

   பார்த்தசாரதிக்கும் அவர் பொண்டாட்டிக்கும் அப்படி என்னதான் பிரச்னை? இந்தக் கேள்விக்கு விடை தெரிஞ்சிட்டா, ராஜ்யத்துல பாதி எழுதிவெச்சு, ராஜ்யத்தோட இளவரசியைக் கல்யாணமே பண்ணிக்கலாம். அது ஒரு விடை தெரியாத சண்டை. நேத்துல இருந்து புதுசா ஒரு சண்டை. புருஷனைப் பார்த்தா சிரிக்காம, பேசாம, மொகத்தைத் திருப்பிக்கிட்டுப் போற சண்டை.

   `அட கூறுகெட்ட புருஷா... இதுதான் என் பிரச்னை. அதை சரி பண்ணு’னு சொன்னா ஏதாவது செய்யலாம். பார்த்தசாரதியும், `உனக்கு என்னதாண்டி பிரச்னை?’னு நேரடியா கேட்டும் பார்த்தாச்சு. சிக்கன் சாப்பிடற நேரத்துல செத்த எலி ஞாபகத்துக்கு வந்தா ஒரு மாதிரி மூஞ்சியை வெச்சிப்பாங்கல்ல... அந்தம்மா அப்படி வெச்சிக்குது. மனுசன் என்னதான் பண்ணுவாரு. உடம்புல பிரச்னைன்னா வாய்விட்டுச் சொல்லலாம்... வாயே பிரச்னைன்னா?

   பார்த்தசாரதி பஞ்சாயத்தெல்லாம் வெக்கறதில்லை. புருஷன் பொண்டாட்டிக் குள்ள சண்டைன்னதும், அமெரிக்காக்காரன் மாதிரி, அவசியமில்லாம வெடிகுண்டெல்லாம் தூக்கிட்டு வந்து, சண்டையைப் பெரிசு பண்ணி, சொந்த நாட்டுக்கு சூனியம் வெப்பாங்க. சப்பணங்கால் போட்டு, வந்த நாட்டுல சுரண்ட ஆரம்பிப்பாங்க. பாரந்தூர் பரமேசுக்கு அப்படி நடந்திருக்கு. பஞ்சாயத் துங்குற பேர்ல புருஷன் பொண்டாட்டிக்கு நடுவுல வந்து, ஒருத்தி பாய்விரிச்சுப் படுத்துட்டா. இப்ப அவனுக்கு ரெண்டு பொண்டாட்டி. ரெண்டு சண்டை. ரெண்டு பஞ்சாயத்து. ரெண்டு ஓட்டை விழுந்த பனியன். இந்தக் கஷ்டகாலம் தேவையா?

   அது மணக்குதோ, நாறுதோ... நம்ம பல்லை நாமதான் தொலக்கியாகணும்னு முடிவு பண்ணி, பார்த்தசாரதி, தன் அருமைப் பொண்டாட்டிகிட்ட சமாதானம் பேசினாரு. `பிரச்னையைச் சொல்லு... பேசி முடிச்சிக்கலாம்’னாரு.

   இது வீடே இல்லையாம். குடும்பமே இல்லையாம். இங்கே வர்ற மனுசங்க மனுசங்களே இல்லையாம். வர்றவங்க மூஞ்செல்லாம் அவலட்சணமா இருக்காம். இப்படி இருந்தா, எப்படிக் குடும்பம் நடத்தறதுனு கேக்கறாங்க. பார்த்தசாரதி குழம்பிப் போயிட்டாரு. வீட்டுக்கு வர்ற விருந்தாளிங்க கோணல் மாணலா மூஞ்சியை வெச்சிருந்தா அவர் என்ன பண்ணுவாரு?

   `நான் சந்தைக்குப் போனேன். அங்கேருந்த பொண்ணுங்க எல்லாம் அழகாவே இல்லை. அதனால கத்திரிக்கா வாங்கலை. எனக்கு சாப்பாடே வேணாம்.’னு சொன்னா அந்தம்மா சும்மா இருப்பாங்களா? `கடைக்குப் போனா, கண்ணு கத்திரிக்கா மேல இருக்கணும். எதுக்குப் பொண்ணு மேல போச்சு?’னு குதிப்பாங் கல்ல. ஒரு வீடுன்னா பலபேர் வருவாங்க. சொந்தக்காரிங்க, விருந்துக் காரிங்க, தெரிஞ்சவ, தெரியாதவ, பொண்ணுங்க, பொம்பளைங்க, பக்கத்து வீட்டுக்காரிங்க, கல்யாண மான அழகு தேவதைங்க, கன்னிப் பொண்ணுங்க... இப்படி யார் யாரோ வருவாங்க.

   “அடேய்... பார்த்த சாரதி... உன் வீட்டுக்கு லேடீஸ் மட்டும்தான் வருவாங்களா? அதுவும் உன்னைப் பார்க்கவா?’’

   ``என்னைப் பார்க்க எவ வந்தா? எல்லாம் என் பொண்டாட்டியப் பார்க்க வருவாங்க... எனக்குனு யார் வராங்க?’’

   வந்தது யாரா இருந்தாலும், வீட்டுக்கு வந்தவங்களுக்கு விருந்து வெப்பாங்க. அவங்களும் போட்டதைத் திம்பாங்க. அதுக்கப்புறம், நல்ல அகலமா சிரிச்சு, `நல்லாருக்கு விருந்து. நீங்களும் நம்ம வீட்டுக்கு வாங்க...’னு அழைச்சிட்டுப் போவாங்க. இதுதானே நடைமுறை. அதை விட்டுட்டு, `வந்தவங்களோட மொகறை ஏன் சப்பட்டையா இருக்கு... ஏன் அழகா இல்ல... ஏன் அடிபட்ட தேவாங்கு மாதிரி முழிக்கறாங்க?’னு ஆராய்ச்சியெல்லாம் பண்ணி, அதையே ஒரு சண்டை ஆக்கினா எப்படி?

   “இந்த மனுசங்களை யார் படைச்சது?” பார்த்தசாரதி, அந்தம்மாகிட்ட அறிவுபூர்வமா ஒரு கேள்வி கேட்டாரு. அதுக்கு அவரே பதிலும் சொன்னாரு.

   “மனுசங்களை அந்த சாமியில்ல படைச்சான். சிலபேர் அழகா இருப்பாங்க. சிலபேர் கொஞ்சம் முன்னே பின்னேதான் இருப்பாங்க. சாமிக்கு மட்டும் தூக்கம் வராதா? ஏதோ தூக்கக் கலக்கத்துல, உப்பினாப்பல, இழுத்தாப்பல, துருத்தினாப்பல சில பேரைப் படைச்சிடுவான். மொகம் குரங்காட்டம் இருந்தாலும், `இருக்குறதுலயே இதுதான் அழகான குரங்கு’னு நாம மனசைத் தேத்திக்கணும். புருஷனோட சண்டை யெல்லாம் போடக் கூடாது.”

   “யோவ், பிரச்னை மூஞ்சியில இல்ல... உன் வீட்ல. ஒண்ணு வீட்டை மாத்திக்க. இல்லை உன் பொண்டாட்டிய மாத்திக்க...”

   இப்ப சொன்னது, சுப்புலட்சுமி இல்லை. பார்த்தசாரதியோட அருமைப் பொண்டாட்டி.

   பொண்டாட்டியே, `பொண்டாட்டியை மாத்திக்க’னு சொல்றான்னா பிரச்னை பெரிசாத்தான் இருக்கும். ஒண்ணில்ல... ரெண்டு பிரச்னை.

   வீட்டுக்கு விருந்தாளிங்க வர்றாங்க. அவங்க கோணல் மாணலா மூஞ்சியை வெச்சுக்கறாங்க. அவங்க வந்து போறப்பல்லாம் சண்டையும் வருது. இந்த மூணையும் கூட்டிக் கழிச்சு, கொழம்பு வெச்சுப் பார்த்தா, இதுல ஏதோ சதி இருக்குனு பார்த்தசாரதி முடிவு பண்ணிட்டாரு. பொண்டாட்டிக்கும் நமக்கும் நடுவுல கலவரத்தை உண்டாக்கி, பிரிக்கணுங்கற நோக்கத்தோட, நேருக்கு நேர் மோத முடியாம, குறுகிய நெஞ்சும் குட்டி சைஸ் உள்ளாடையும் போடற யாரோ ஒரு எதிரியோட திட்டம்தான் இதுனு பார்த்தசாரதி உறுதியா நம்பிட்டாரு. யார் அந்த எதிரி? ஆராய்ச்சி பண்ணினாரு.

   நேத்து கிரிஜா வந்தா. அவ பொறக்கறப்பவே புள்ளப்பூச்சி. சதியெல்லாம் பண்ண மாட்டா. ரெண்டு நாளைக்கு முன்னால, ரமா வந்தா. கல்யாணத்துக்கு முன்னால நல்லாதான் இருந்தா. இப்போ, ரிப்பேரான புல்டோசருக்கு அக்காவாயிட்டா. அவளும் சதி பண்ண வாய்ப்பில்லை. போன வாரம், அகஸ்டினும் அவன் பொண்டாட்டியும் வந்தாங்க. கூடவே அவளோட தங்கச்சி. வர்றப்ப சிரிச்சிட்டு வந்து, போறப்ப வாந்தி வர்றாப்பல மூஞ்சியை வெச்சிக்கிட்டுப் போனாங்க. ஒருவேளை, சதிகாரன் அகஸ்டினாக்கூட இருக்கலாம்...

   ``யோவ்... உன்னோட பிரச்னைக்கு இன்னொருத்தனோட கையைப் புடிச்சி இழுக்காதே... மொதல்ல உன் மூஞ்சியைப் பாரு. அதுவே அசிங்கமாத்தான் இருக்கு.”

   பா.சாரதியோட பொண்டாட்டி, சண்டைக்குக் கிளம்பிட்டாங்க. அதுக்கப்புறம்தான் கண்ணாடியைப் பார்த்தாரு. ஒரு மாதிரி மூக்கெல்லாம் புடைச்சிக்கிட்டு, வாய் கோணி, பார்க்கவே அருவருப்பா... கண்ணாடியில தெரிஞ்சது மூஞ்சியே இல்லை... அது ஒரு பயங்கரம்.

   “என்னாச்சுடி என் மூஞ்சிக்கு... கொரங்கு கடிச்ச இஞ்சியாட்டம் இருக்கு. எல்லார் மூஞ்சியும் கோணலாகறபடி யாராவது வெடிகுண்டு வீசிட்டாங் களா... இல்லை மருந்து, மாயம் பண்ணிட்டாங்களா?”
   “இந்த நக்கல்தானே வேண்டாங்கறது. பிரச்னை மூஞ்சியில இல்லை, வீட்ல இருக்கு. வீடுங்கற பேர்ல பெரிய குப்பைத்தொட்டியைக் காட்டி, அதுல கொண்டாந்து உக்கார வெச்சிருக்கே. நான் கல்யாணத்தப்பவே சுமாராதான் இருப்பேன். இந்த வீட்டுக்கு வந்தப்புறம், என் மூக்கைப் பாரு. ஓயாம தும்மி, தும்மி மூக்கு பிரிட்டிஷ்காரன் பீரங்கி மாதிரி பொடைச்சிப்போச்சு.”

   “ஏய்... பொடைச்சிருந்தாலும் உன் மூக்கு இருக்கே, அது ஒரு பொக்கிஷம்டி.”

   “அடச்சீ... மூக்கை விடு... இப்போ இந்தக் கொஞ்சல் ரொம்ப அவசியமா? இந்த வீட்டை நீ எப்பதான் சுத்தம் பண்ணுவே? ஒரே அடப்பாசாரமா இருக்கு.”

   “இது பழைய வீடும்மா. பரம்பரைச் சொத்து. கடந்த நூறு வருசமா தாத்தா பாட்டி காலத்துல இருந்து அப்படியே இருக்கு. அதுவுமில்லாம பரம்பரை வீட்டைச் சுத்தம் பண்ணினா அதிர்ஷ்டம் போயிடும்னு சொல்வாங்க...”

   “இதென்ன கூமுட்டைத்தனமா இருக்கு... யார் அப்படிச் சொன்னாங்க?”

   “என் பாட்டிதான் சொன்னாங்க.”

   “இருக்காங்களா, செத்துட்டாங்களா?”

   “சின்ன வயசுலேயே செத்துட்டாங்க.”

   “எப்படி இருப்பாங்க... வீட்டை இப்படி வெச்சிருந்தா அல்பாயுசுல போக வேண்டியதுதான். நூறு வருசமா ஒட்டடை கூட அடிக்காம இப்படியா வெச்சிருக்கறது? வர்றவங்க, இங்கே ஆரம்பிச்சு, வீட்டுக்குப் போற வரைக்கும் `கர்ரு... கர்ரு...’னு காறித் துப்பு றாங்க. எனக்கு அசிங்கமா இருக்கு. ஒண்ணு, வீட்டைச் சரிபண்ணு; இல்லை, என்னை மறந்துடு. நான் என் அம்மா வீட்டுக்கே போயிடறேன்.”
   மொதல்ல, `வீட்டுக்கு வர்றவங்க மொகமே சரியில்லை’னு சொன் னாங்க. இப்போ, `வீடு குப்பையா இருக்கு’னு சொல்றாங்க. வீடு குப்பையா இருக்குறதுக்கும், வர்றவங்க மொகம் கோணலா இருக்குறதுக்கும் சம்பந்தம் இருக்கா? பா.சாரதி பொண்டாட்டி, `இருக்கு’னு சாதிக்கறாங்க.

   “இப்படிப் பாழடைஞ்ச வீட்டுல இருந்தா, தெனத்துக்கும் நொச்சு நொச்சுனு தும்மி, சீக்கு வந்து, மண்டையில சளி கோத்து, மூஞ்சி வீங்காம என்ன பண்ணும்? வா, வந்து பாரு. வெளியே மத்தவங்கெல்லாம் எவ்ளோ தெளிவா இருக்காங்கன்னு.’’

   பார்த்தசாரதி சட்டையப் பிடிச்சு இழுத்துட்டு வந்து, தெருவைக் காட்றாங்க. பார்த்தசாரதியும் பார்த்தாரு. இந்த உலகத்தில் எல்லாரும் அழகாத்தான் இருக்காங்க. எதிர்வீட்டு பைஜாமா பொண்ணு, மாடிவீட்டு தாவணி, ஸ்கூட்டரில் போகும் சுடிதார், ஜீன்ஸ் போட்ட காளியம்மா,  காய்கறி வாங்கப் போகும் நேப்பாள மங்கை, வராண்டாவில் நின்று கூந்தல் உலர்த்தும் சின்ன வயசு டீச்சரம்மா, கோயிலுக்குப் போகும் மீனாட்சி... எல்லாருமே அழகாத்தான் இருக்காங்க.

   “அப்ப ஆம்பளைங்க அழகா இல்லயா?”

   “ஆம்பளைங்க அழகா இருந்தா என்ன, இல்லாட்டி எனக்கென்னடி வந்துச்சு. நம்ம வீட்டுக்கு யார் சூனியம் வெச்சது? நமக்கும் வர்றவங்களுக்கும் மூஞ்சி இப்படி ஆகறதுக்கு காரணம் என்ன... மொதல்ல அதை ஆராய்ச்சி பண்ணலாம்.”

   “மனுசனா பொறந்தவனுக்கு ஒண்ணு மூளை இருக்கணும், இல்லை மூக்காவது இருக்கணும். இப்படி மூக்கும் இல்லாத, மூளையும் இல்லாத ஆளுக்குப் பொண்டாட்டியா வந்து வாய்ச்சேன் பாரு... எனக்கு வேணும். செத்த எலியை அடைச்சுவெச்ச டப்பாவாட்டம் வீடு நாறிக் கெடக்குது. வீடு பூரா ஒரே ஒட்டடை. இந்தப் பாழடைஞ்ச வீட்டுல எத்தனை நாளைக்கு இருக்குறது?”

   “ஏய் கோவிச்சிக்காதடி... இப்ப என்ன உன் பிரச்னை... வீட்டைச் சுத்தம் செய்யணும். அவ்ளோதானே? நீயே பண்ணிக்க..”

   “ஹாங்... நல்லா சொல்வியே... வந்த புதுசுல நான் பண்ணிக்கறேன்னு சொன்னேன். விட்டியா நீ. இப்ப என்னால முடியலை. நான் பண்ணவும் மாட்டேன்.”

   வீட்டைப் பராமரிக்கவேண்டியது புருஷனா பொண்டாட்டியானு திரும்பவும் சண்டை. பார்த்தசாரதியோட பரம்பரையில வீட்டைப் பராமரிக்கறது, சுத்தம் பண்றது எல்லாமே பொண்ணுங்கதான். `அதுதான் உலகத்து நியதி’னு ஊர்ஜிதப்படுத்தி, ஊறுகாய் போடப் பார்த்தாரு. வேலைக்கு ஆகலை.

   `ஒரு பொண்ணு பொடவை கட்டிக்கிட்டு, ஏணியில ஏறி ஒட்டடை அடிக்க முடியுமா... அது பாதுகாப்பா? கீழே விழுந்து இடுப்பு எலும்பை ஒடைச்சிக்கிட்டா என்ன பண்ணுவ? காலம் முழுக்க தனியா படுக்க உனக்கு பயமாயிருக்காதா?’னு அருமைப் பொண்டாட்டி கேட்டாங்க. இது மொதலுக்கே மோசம். பார்த்தசாரதி தரையில படுத்தாலும் தனியா படுக்க மாட்டாரு. ராத்திரி ஆனா தேவைப்படற தேவலோக மதன சுந்தரிகளின் கதையனு பவங்கள் கேக்காம அவருக்குத் தூக்கம் வராது. அதுவுமில்லாம, பொண்டாட்டி கீழே விழுந்து இடுப்பெலும்பை ஒடைச்சிக்கிட்டா சமைக்கறது, துவைக்கறது, துடைப்பமெடுத்து வாசல் கூட்டிக் கோலம் போடுறதுனு மொத்த எதிர்காலமும் பொடவை கட்டிப் பொங்கல் வெக்கிற மாதிரி ஆகிடும். அதனால, வீட்டைச் சுத்தம் பண்ற பொறுப்பைப் பார்த்தசாரதியே ஏத்துக்கிட்டாரு. ``ஒரே நாள்ல, வீட்டை ஒதுங்கவெச்சு, ஒட்டடை அடிச்சு, பளபளனு ஆக்கிக் காட்டுறேன் பாருடி’’னு சவால் விட்டாரு. பொண்டாட்டியை, சுப்புலட்சுமி யோட சேர்த்து பூங்காவுக்கு அனுப்பி, ``சோளப்பொரியும், ஐஸ்க்ரீமும் சாப்பிட்டுட்டு வா. வீட்டை மாளிகை மாதிரி ஆக்கி வெக்கிறேன்’னு வீர சபதம் பண்ணிட்டாரு.

   `வீட்ல அப்படி என்னதான் குப்பை?’னு பரண்ல ஏறிப் பார்த்தப்பதான் வீட்டோட பயங்கரத்தைப் பார்த்தசாரதியால புரிஞ்சிக்க முடிஞ்சுது. அது வீடே இல்லை. `பாதாள பைரவி’ பேய்க் குகையில் வருவது மாதிரியான ஒரு பயங்கரம். ஏகப்பட்ட சிலந்திப் பூச்சிங்க  படை படையா கூடு கட்டியிருக்கு. எலி குடும்பக்கட்டுப்பாடு பண்ணிக்காம, குடும்பம் பண்ணி குட்டி போட்டிருக்கு. அதில்லாம கரப்பான்பூச்சி, மரவட்டை, கறையான், காட்டுப் பூச்சினு ஏகப்பட்ட உயிரினங்கள்.

   வீ்ட்டோட மேலே இப்படின்னா, கீழே அதைவிட பயங்கரம். குடிகாரனோட சண்டை போட்ட பைத்தியக்காரன் மாதிரி, பொருள்களெல்லாம் தாறுமாறா இறைஞ்சி கிடக்கு. `இதை ரெண்டு நாளைக்குள்ள, ரெண்டு மாசத்துக்குள்ள, ரெண்டு வருசத்துக்குள்ள, இல்லை... ரெண்டு ஜென்மம் எடுத்தாலும் சரிபண்ண முடியாது’னு மலைச்சிப் போயிட்டாரு. ஒரேயடியா ஓடிப் போயிடலாமானு யோசனை பண்ணினாரு. அப்படி ஓடினாலும், வாழ்க்கை கழுவிவெச்ச வௌக்கு மாதிரி பெரிசா ஒண்ணும் மாறிடாது. வீட்டை மொத்தமாவோ, சில்லறையாவோ சுத்தப்படுத்த முடிஞ்சா அது உலக அதிசயம். அதைப் பண்ணித்தான் ஆகணும். இல்லைன்னா, பொண்டாட்டி திரும்ப வரமாட்டாங்க. சொல்லிட்டுதான் போயிருக்காங்க.

   பார்த்தசாரதி வெளியே போய், ஆற்றலை ஏற்றிக்கொண்டு, திரும்ப வந்து களத்துல இறங்கிட்டாரு. எங்கே போனார் என்பது ரகசியம். பெரிய துணி எடுத்து, மூக்கு துவாரம், கண் துவாரம் இரண்டையும் விட்டு, உடம்பின் மற்ற பாகத்தில் துணியைச் சுற்றி, கண்ணாடியில் பார்த்தால், சவ அடக்கம் செய்யப்பட்ட பிணம் போலவும் தெரிகிறது, யுத்தத்துக்குக் கிளம்பிவிட்ட போர்வீரன் போலவும் தெரிகிறது.

   ஒட்டடை அடிப்பது, ராக்கெட் விடுவதுபோல அத்தனை கஷ்டமானதில்லை என்ற துணிச்சலோடு, விளக்குமாற்றைச் சுழற்ற ஆரம்பித்தார் பார்த்தசாரதி. முதலில், சின்னதாகப் புகை மூட்டம்போல ஆரம்பித்த தூசுப்படலம், புழுதிப் புயலாக மாறி, வீட்டைச் சூழ்ந்துகொண்டது. பட்டப்பகலில் வீடு இருண்டே போகிறது. கண் எரிகிறது; மூக்கு அரிக்கிறது; ஓயாத தும்மல். தூசு மண்டலத்துக்கு நடுவே ஒரு போர்வீரன். அந்த இடமே, நரகத்தின் இருள்போல மாறி பயமுறுத்த ஆரம்பிக்கிறது. அப்போது, அங்கே உயரமும் அகலமும் ஒரே அளவுகொண்ட உருண்டையான ஒரு ஆள் பிரசன்னமானார்.

   `பாதாள பைரவி’ குகைக்குள் தைரியமிக்க இன்னொரு மனிதனா? புகைமூட்டத்துக்கு நடுவே நின்றிருந்த அந்த அஞ்சாநெஞ்சன், பார்த்தசாரதிக்கு நன்கு அறிமுகமான மதனகோபால். அண்டைவீட்டு நல்லவன். சுப்புலட்சுமியின் புருஷன். வந்த மனிதர், பார்த்தசாரதியை அதுவரை பார்க்காத சாரதிபோல அதிசயமாகப் பார்த்தார். அதற்கு இரண்டு காரணம் இருக்கலாம். ஒன்று, `இவனெல்லாம் கடைசியில ஒட்டடை அடிச்சு வீட்டைச் சுத்தம் பண்ணக் கிளம்பிவிட்டானா?’ என்ற அதிசயமாக இருக்கலாம். `இந்த வீட்டை இந்த ஜென்மத்துல சுத்தம் பண்ணிட முடியுமா?’ங்கற ஆச்சர்யமாகவும் இருக்கலாம்.

   “என்ன... பார்த்து சார்... ஒட்டடை அடிக்கறீங்களா?”

   “ஒட்டடை அடிக்காம, வீட்டு மேற்கூரையில பெரிய சைஸ் தோசையா சுடறேன்? நானே தூசு தும்புல அவதிப்படறேன்... இது புரியாம...”

   “கோவிச்சிக்காதீங்க சார்... நீங்க இப்படி வேலை பார்க்கறதைப் பார்க்க எனக்கு சந்தோஷமா இருக்கு.”

   “உலகத்துல பாதிப்பேர் அதானே பண்றாங்க. அடுத்தவன் வேலை செய்யறதைப் பார்த்து அதுல ஒரு சந்தோஷம்... சரி, தள்ளி நில்லுங்க.”

   மதனகோபால் தள்ளிப் போய், ஒரு சேரைப் போட்டு உட்கார்ந்துவிட்டார். `இந்தாளுக்கு நம்ம வீட்டுல என்ன வேலை... அதுவும் இந்த நேரத்துல?’ பார்த்தசாரதிக்குக் குழப்பம். மதனகோபாலுக்கு எப்பவும் வேட்டிதான். வெளியே வந்தாலும் வீட்டிலிருந்தாலும் வேட்டிதான். அவரின் அரிசிமூட்டை உடம்புக்கு பேன்ட் தைக்கும் டெய்லர் இனிமேல்தான் பிறந்து வர வேண்டும். குண்டா இருந்தாலும் நல்ல மனுசன். அவருக்கு மூக்கில் வாசம் பிரித்தறிய முடியாத ஒருவகை நோய் உண்டு. அவரிடம் பார்த்தசாரதி கேட்டார்...

   “கோபால் சார், இப்போ வீட்டுக்குள்ள வௌவால் வீச்சம் வருதா பாருங்க...”

   “சேச்சே. எனக்குப் பூ வாசம்தான் வருது. நல்லா இருக்கு சார்.”

   பார்த்தசாரதி அப்போதுதான் பார்த்தார். மதனகோபாலின் முகத்தில் அப்படி ஓர் அழகு. முகம் கோணலாகவோ, சப்பட்டையாகவோ, துருத்திக்கொண்டோ இல்லை. அப்படியென்றால் வீடு தூய்மையடைந்ததாக அர்த்தமா? பார்த்தசாரதிக்குப் பரம சந்தோஷம். அதன் பிறகு, வீட்டில் இருந்த வேண்டாத குப்பைகளைத் தெருவில் கொண்டு போய்க் கொட்ட, மதனகோபால் உதவிசெய்ய, பிறகு, கோணல் மாணலாக இருந்த ஃபர்னிச்சர்களைச் சரி செய்து, துடைத்து, கழுவியானது. மதனகோபால் எல்லாவற்றுக்கும் உதவிசெய்தார். அடுத்தவர் வீடு நறுவிசாக இருக்க வேண்டும் என்று நினைத்து, வீட்டுக்கு வந்து உதவிசெய்யும் மனிதர்களும் இந்தக் காலத்தில் இருக்கிறார்கள் என்றால், அது பார்த்தசாரதி செய்த புண்ணியம். மதனகோபாலே, ஜன்னல் மற்றும் கதவில் தொங்கிய அழுக்குத் திரைச்சீலைகளை மாற்றினார். கண்கவர் பொம்மைகளைத் துடைத்து அழகாக அடுக்கிவைத்தார். இப்போது வீடு மொத்தமாக மாறிப்போனது. பக்கத்து வீட்டுக்கு வந்துவிட்டதுபோல அத்தனை எடுப்பாகவும் அடையாளம் தெரியா மலும் இருந்தது. நேற்றைக்கு மங்கலாக, அழுக்காகத் தெரிந்த அந்த வீடு இன்று புதுப்பொலிவு பெற்றிருக்கிறது.

   `வீடு தேடிவந்து உதவியவருக்கு ஒரு லெமன் ஜூஸ் தரலாமே...’ என்று பார்த்தசாரதி நினைப்பதற்குள்ளாக, மதனகோபால் டம்ளரில் ஜூஸ் போட்டு எடுத்து வந்து கொடுக்கிறார். இதுதான் உத்தமமான மனிதர்களுக்கான அடையாளம். `உன் வீடு, என் வீடு’ என்று பாரபட்சம் பாராமல், ஓடியாடி வேலைசெய்து உதவுவது.

   இருவரும் சேர்ந்து ஜூஸ் குடிக்கிறார்கள். அப்போது, மதனகோபாலின் பையன், `அப்பா...’ என்று ஓடி வருகிறான். ஐந்து வயது. அவர் மடியில் உட்கார்ந்துகொள்கிறான். அவனுக்கும் அவர் ஜூஸ் கொடுக்கிறார். குளிர்பானத்தைக் குடித்துவிட்டு, பையன், “அப்பா, சாக்லேட்...” என்கிறான்.

   மதனகோபால், ஆர அமர எழுந்து சென்று பீரோவைத் திறந்து, பணத்தை எடுத்து பையன் கையில் கொடுத்து, “உன் அம்மாகிட்ட சொல்லாதே... சத்தம் போடுவா” என்று சொல்லி வெளியே அனுப்புகிறார்.
   பார்த்தசாரதிக்குப் பொங்குகிறது; கொதிக்கிறது. அடுத்தவன் வீட்டுக்கு வந்து உதவிசெய்வதை உலகமே அனுமதிக்கும். அதற்காக, அடுத்தவன் பீரோவைத் திறந்து, உரிமையோடு பணம் எடுத்து, பையனிடம் கொடுத்து, `உன் அம்மாகிட்ட சொல்லாதே’னு சொல்றது என்ன மாதிரியான திருட்டுத்தனம். `பட்டப்பகல்ல, கண்ணைத் தொறந்துட்டு இருக்கும்போதே திருடறது’னு இதைத்தான் சொல்வார்கள்.

   “எனக்கு ஒரே பிள்ளைங்கறதால செல்லம் குடுத்து வளர்த்துட்டேன். அதான்... அவன் எது கேட்டாலும், `வாங்கிக்க’னு காசு தந்துடறது.”

   “ரொம்ப சந்தோஷம். ஆனா மதனகோபால் சார்... உங்க வீட்டுக்குப் போயி உங்க பீரோவைத் தொறந்து, உங்க காசை எடுத்து, உங்க பையனுக்குக் குடுத்திருக்கணும். இங்கே என் வீட்டுக்கு வந்து என் காசை ஏன் எடுக்கணும்?”

   “என்னது உங்க வீடு, உங்க காசா? பார்த்து சார்... பார்த்துப் பேசுங்க சார். நீங்க இருக்கிறது எங்க வீட்ல. நீங்க ஒட்டடை அடிச்சது எங்க வீட்டுக்கு. சுப்புலட்சுமி எவ்ளோ கூலி பேசினாளோ, அதை வாங்கிட்டு எடத்தைக் காலி பண்ணுங்க.”

   `அடப்பாவி பார்த்தா... சொந்த வீடுனு நெனைச்சு, அண்டை வீட்டுக்கு ஒட்டடை அடிச்சிட்டியே... பொண்டாட்டிக்குத் தெரிஞ்சா சும்மா விடுவாளா?’ பார்த்தசாரதி நொந்துபோனார். சொந்த வீடுனு நெனைச்சு அடுத்தவன் வீட்டுக்கு ஒட்டடை அடிக்கிற அளவுக்கு பார்த்தா  ஒண்ணும் பைத்தியமில்லை. இந்தத் தவறு நடந்ததற்குக் காரணமே வேறு... அதைப் புரிந்துகொள்ள ஒரு சம்பவத்தைச் சொல்ல வேண்டும்.
   பார்த்தசாரதிக்குக் கடவுள் பக்தி அதிகம். நான்கு மணி நேரம்கூட வெயிலில் மண்டியிட்டு உட்கார்ந்து அவர் சாமி கும்பிடுவது வழக்கம். ஒருநாள் கோயிலுக்குப் போகும்போது, வழி மறந்துபோனது. புதிய இடம், புதிய கோயில்.

   வழியில் இருந்த ஒரு ஆளிடம், “சார், சூரியநாராயணன் கோயிலுக்கு எப்படி சார் போறது?”

   எதிரில் இருந்த நபர், வாய் பேசப் பிடிக்காத `உர்...’ மூஞ்சிபோல. `உர்...’ என்றுதான் பதில் வருகிறது.

   “என்னங்க பேசாம நிக்கிறீங்க... நீங்க ஊருக்குப் புதுசா?’’

   அதற்கும் பதில் வெறும் ``உர்...’’

   “அட என்னங்க இது! நீங்க என்ன ஊமையா..?’’

   அதற்கும் ``உர்...’’ என்ற பதில். அந்த நபர், மேலே போகவும் முடியாதபடி வழிமறித்து நிற்கவும், பார்த்தசாரதிக்குக் கோபம் பொங்க ஆரம்பித்து விட்டது.

   “இதப் பாருங்க... எனக்குக் கெட்ட கோவம் வந்துடும். உங்களுக்கு வழி தெரியலைன்னா `தெரியலை’னு சொல்லி வழி விட்டு நில்லுங்க. நான் போய்க்கிறேன்” என்றவர், அந்த நபரின் கையைப் பிடித்து இழுத்து நகர்த்தப் பார்க்க, அதுவரை வெறும் `உர்...’ மட்டும் சொல்லிக் கொண்டிருந்த நபர், லபோதிபோவென்று கத்தியபடி, பார்த்த சாரதிமீது பாய, பார்த்த சாரதியும் அந்த நபர்மீது பாய, இருவருக்கும் தள்ளுமுள்ளு, முட்டல் மோதல். தெருவில் புரண்டு சண்டை போட்டு, நாலு சாத்து சாத்திவிட்டு, கோயிலுக்குப் போகாமலேயே திரும்பி விட்டார் பார்த்தசாரதி.

   வீட்டுக்கு வந்தால், பொண்டாட்டி லபோதிபோ.

   “என்னாச்சுய்யா... சட்டை பேன்ட்டெல்லாம் கிழிஞ்சிருக்கு... உடம்பெல்லாம் காயமா இருக்கு.’’

   “புதுசா ஒரு கோயிலுக்குப் போனேன். வழி தெரியலை. எவனோ ஒரு `உர்ரன்னா’கிட்ட வழி கேட்டேன். கை கால் எல்லாத்தையும் புடிச்சி கடிச்சிவெச்சுட்டான்.”

    “அடப் பாவி. வழி சொல்லப் பிடிக்கலைனா, பேசாமப் போகவேண்டியதுதானே... இப்படியா கடிச்சிவெப்பான் அந்தப் பாழாய்ப்போறவன்.’’

   அப்போது, பார்த்தசாரதிக்கு வேண்டப்பட்ட ஒரு அம்மா வந்து, “நிர்மலா... உன் புருஷன் இன்னைக்கு ஒரு நாயோட வாலைப் புடிச்சி தரதரனு இழுத்து, அதோட ஒரே சண்டை. அந்த நாயும் நல்லா புடிச்சி கடிச்சிவெச்சிருச்சு. நாய் கடிச்சா பின்னால பிரச்னை ஆகும். போய் ஊசி போட்டுட்டு வா” என்றாள்.

   பார்த்தசாரதியின் அருமைப் பொண்டாட்டி, புருஷனை முறைத்தபடி கேட்டாள்... “யோவ்... குடிச்சிருக்கியா? நீ திருந்தவே மாட்டியா? எனக்கு வீடும் வௌங்கலை, கட்டின புருஷனும் வெளங்கலை. உன்னை எப்படித்தான் நான் திருத்தறது...” என்று சண்டையை ஆரம்பித் தாள்.

   பார்த்தசாரதி, உச்சி வெயிலில் நான்கு மணிநேரம் குப்புற விழுந்து ஏன் சாமி கும்பிடுகிறார்; சொந்த வீடென்று நினைத்து பக்கத்து வீட்டுக்கு ஏன் ஒட்டடை அடிக்கிறார்; மனைவி யோடு தினம் தினம் சண்டை வருவதற்கு என்ன காரணம் என்று இப்போது புரிந்திருக்கும். பூங்காவுக்குப் போன மனைவி வந்தால், அடுத்து என்ன நடக்குமோ என்ற பயத்தில் உட்கார்ந்திருந்த பார்த்தசாரதி, சாமிக்கு முன்னால் போய், `இனிமேல் குடிப்பதில்லை’ என்று சத்தியமிட்டு சபதம் செய்தார். பார்த்த சாரதியின் கெட்ட நேரம், சத்தியம் செய்த இடத்தில் கூரான குத்துவிளக்கு இருந்தது. ஐயய்யோ ரத்தம்!

   இனிமேல் பார்த்தசாரதி குடிக்க மாட்டார். அதற்கு அவரின் பொண்டாட்டியே போதும். அவளும் புதிதாக ஒரு குத்துவிளக்கை வாங்கிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தாள். இப்போது ஆயுத பூஜை முடிந்தது. அடுத்து தீபாவளி வெடி. அது முடிந்து சுமங்கலி பூஜை. அதெப்படி மூன்று பூஜை ஒரே நாளில் வரும்... அதெல்லாம் தெரியாது. புருஷன் ஆரோக்கியத்துக்கு தீபாவளி வெடியும் சுமங்கலி பூஜையும் மிக நல்லது.
   http://www.vikatan.com
  • By நவீனன்
   NH - 79 - ஐந்து கிலோ மீட்டர் - சிறுகதை
    
    
   எல்லா நாளையும்போல கார்த்திக் அதிகாலையில் தனது காக்கி நிற கிளாசிக் ராயல் என்பீல்ட்   புல்லெட்டில் நந்தனம் ஒய். எம். சி. ஏ.  மைதானத்திற்குள் நுழைந்தான். முந்தைய நாள் இரவு மழை பெய்திருந்ததால் நிலம் முழுக்கக் குளுமை அடைந்து நெகிழ்ந்திருந்தது. நவம்பர் மாத இறுதி என்பதால் கொஞ்சம் குளிரும் பனி மூட்டமுமாயிருந்தது. அந்த நேரத்திலும் பத்துக்கும்  மேற்பட்டவர்கள் தெளிவற்ற பனிமூட்டத்திற்கு நடுவிலிருந்து ஓடிக்கொண்டும் நடந்து கொண்டும் இருப்பது உத்தேசமாய் தெரிந்தது.   

   பொதுவாய் காலையில் இங்கே மூன்றுவகையான மனிதர்கள் வருகிறார்கள். பெரும்பாலும் மைதானத்தில் ஓடிக்கொண்டிருப்பவர்கள்  ஏதாவது ஒரு விளையாட்டில் விருப்பமும் , ஆர்வமும்  இருக்கும் வீர்களாய் இருப்பார்கள்.  குதிகாலைத் தரையில் ஊன்றாமல், நிறைய வேகமும் இல்லாமல் அதே நேரத்தில் விரைவாய் நடப்பவர்களைக் காட்டிலும் சற்று வேகமாய் ஷூ வின்  நுனிக்காலால் குதித்தபடியே ஜாக்கிங் செய்பவர்கள் நடுத்தர வயதினர்கள்.  நடந்துகொண்டிருப்பவர்கள் பெரும்பாலும் நாற்பத்தைந்தைக் கடந்த பெரிய பதவியில் அல்லது அந்தஸ்த்திலிருக்கும்  அரசு அதிகாரிகள் அல்லது பெரும் வணிகம் செய்பவர்களாய்  இருப்பார்கள். அரிதாய் இதில் விதிவிலக்கும் உண்டு. இங்கே வருபவர் யாராக இருந்தாலும் கார்த்திக்கை நன்றாக அறிந்து வைத்திருப்பார்கள். 

   கார்த்திக் குமாரசாமி பிரபலமான ஓட்டப்பந்தய வீரன். கடந்த ஆண்டு ஆசிய ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வாங்கி தேசத்தைப் பெருமைப்படுத்தியவன். விளையாட்டுச் சார்ந்த எல்லா இந்தியப் பத்திரிகைகளிலும், இதழ்களிலும், அவனின் முகத்தை  அநேகமாய்  மாதம் ஒருமுறையாவது நாம் பார்க்கலாம். 

   கார்த்திக் ‘ஷூ’வைக் காலில் மாட்டிய பின்னும் இன்னும் ஓடாமல் அமர்ந்திருந்தான். அன்று அவனுக்கு ஏனோ ஓட  விருப்பமில்லாமல் இருந்தது. ஈரமும், குளிரும் காரணமில்லாமல் எல்லோருக்குள்ளும் ஒரு சோம்பறித்தனத்தை உருவாக்கி விடுகிறது என்று நினைத்தான். எந்த நோக்கமுமில்லாமல் தன் விலை உயர்ந்த  நைகி  ஷூவைப் பார்த்தான் . இந்தக் கால் முதன்முதலில் அணிந்த ஷூ கிருபாகரன் சார் வாங்கிக் கொடுத்ததுதான்.   

   இதுபோன்ற ஒரு நவம்பர் மாதத்தில்தான் கார்த்திக்கின் அம்மா தன் உடலை உதறி உதறி நாவைக் கடித்து இறந்துபோனாள். கார்த்திக்கு அப்போது ஆறு வயது இருக்கும். ராமேஸ்வரம் செல்லும் வழியில் உள்ளடங்கிய கிராமம். அவனும் அவன் அண்ணன் பழனியும் அப்படி அழுதார்கள். அப்பாவின் குறைவான ஊதியம் அவரின் அதிகமான குடிக்கு ஈடு கொடுக்க முடியாமல் இருந்தது. பல பொழுதும் வீட்டில் சாப்பிட உணவிருக்காது. வழக்கமாய் இருவருக்கும் அரசுப்பள்ளியில் வழங்கும் ஒருவேளை மதிய உணவு மட்டும்தான். விடுமுறை நாள்களில் அதற்கும் வழி இல்லை. அப்படியான நாள்களில் அவனும் அவன் அண்ணன் பழனியும் அடுத்த ஐந்து கிலோமீட்டரில் இருக்கும் தனது அம்மா வழிப் பாட்டியின் வீட்டிக்குச் செல்வார்கள். காலையிலேயே பசித் தாங்காமல் சிறுவர்கள் இருவரும் கிளம்பி விடுவார்கள். வெயில் வரத் துவங்கிவிட்டால் இன்னும் சிரமம். வறட்சிப் பிடித்த அந்த ஊர்ப் பகுதியில் நிழலுக்குக்கூட கருவேலத்தைத் தவிர வேறு மரங்கள் இல்லை. ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் நடப்பட்டிருக்கும் மைல்கல்தான் அவர்களின் இலக்கு. சிறுவர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு செருப்பில்லாத வெறும் காலால் ஓடுவார்கள். துவக்கத்தில் ஒவ்வொரு முறையும் இரண்டு வயது மூத்த பழனிதான் இலக்கை விரைந்து அடைந்தான். பசி, பிஞ்சு வயிற்றைக் கடிக்கக் கடிக்கப் பொறுக்கமாட்டாமல் கார்த்திக் வெறிகொண்டு ஓடினான். ஒவ்வொரு மைல்கல்லுக்கும் ஒரு பந்தயம். ஒவ்வொரு வெற்றி அறிவிப்பு. பெரும்பாலும் ஐந்து பந்தயங்களிலும் இளையவன் கார்த்திக்தான் வென்றான்.  பின்னெல்லாம் பழனி இரண்டாம் கல்லை நெருங்கிக்கொண்டிருக்கையில்  கார்த்திக் நாலாம் கல்லைத் தாண்டி ஓடிக்கொண்டிருந்தான். ஒவ்வொரு கல்லைத் தொடும்போதும், ‘நான்தான் வென்றேன்’ என்று உரக்கக் கத்துவான்.   

   பசி அவனை ஓடத் தூண்டியது. பெரும்பாலும் அவன் அண்ணன், பாட்டி வீட்டிற்கு வந்து சேரும்போது  இவன் சாப்பிட்டு முடித்து உறங்கிக்கொண்டிருப்பான்.  உறங்கிக்கொண்டிருப்பவனை அவன் அண்ணன் பலமாய் கிள்ளிவைப்பான். கார்த்திக் வலி பொறுக்காது திடுக்கிட்டு எழுந்து அமர்வான். `வேகமா  ஓடி வந்திட்டு என் சாப்பாடெல்லாம் சேர்த்துச்  சாப்பிட்டுடியாடா’ என இருவரும் மல்லுக்கட்டுவார்கள். சுப்புத்தாயம்மாள்தான் விலக்கி விடுவாள். ``ஏலே, நிறைய இருக்குடா சண்டை போடாதீங்க.  புண்ணியவதி போய்ச் சேர்ந்துட்டா. பிள்ளைங்க பாவம் சோத்துக்குத்  தட்டழியுதுங்க’’  புலம்புவாள். நாளடைவில்  தன் அண்ணன் வருவதை நிறுத்திக்கொண்டாலும்,  அவனுக்கும் சேர்த்து உணவெடுத்து வரத் தனித்து ஓடத் துவங்கினான். இப்போது அவனுக்கு ஓடப் பிடித்திருந்தது. ஒவ்வொரு மைல்கல் வரும்போதும் அதன் மேல் அமர்ந்து இரண்டு நிமிடம் இளைப்பாறுவான். அவ்வளவுதான்; மீண்டும் வெயில் பரவத் துவங்கும்முன் ஓடுவான்.

   ஆறாவது படிக்க ராமேஸ்வரம் வந்தபோது தான் விளையாட்டு ஆசிரியர் கிருபாகரன் சார் இவன் திறமையைக்  கண்டுபிடித்தார். எல்லா பந்தயங்களிலும் உடன் படிக்கும் மாணவர்கள் இலக்கின் அரைப்பங்கைக் கடந்து கொண்டிருக்கையில் இவன் இலக்கைக் கடந்து நிற்பான். கிருபாகரன் சார் கார்த்திக்கைப் பன்னிரெண்டாவது படிக்கும் பெரிய பையன்களோடு ஓடவிட்டுப் பார்த்தார். அங்கேயும் அவன்தான் இலக்கை முதலில் அடைந்தான். அதன் பிறகு பயிற்சியின் மூலம் அவனை ஒழுங்குபடுத்தினார். அவனுக்கு ஐந்து கிலோமீட்டர் ஓடிவிட்டால், சாப்பிட வேண்டும். கிருபாகரன் சாரிடம் சொல்வான். ``சார்... நான் பரிசுக்காக ஓடலை. பசிக்காகத்தான் ஓடுறேன்’’ என்பான். அவருக்குத் தெரியும். தினமும் பயிற்சி முடிந்ததும், அவரால் இயன்ற நல்ல உணவை வாங்கி வைத்திருப்பார். பசி  இருந்தால்தான் வெறிகொண்டு ஓட முடியும் என்பதால், போட்டி நடக்கும் நேரங்களில் பட்டினியாகக் கிடப்பான். கிருபாகரன் சாரும் அவனைப் பசியோடவே விட்டுவிடுவார். வெற்றி பெற்றவனை எல்லோரும் தேடிக்கொண்டிருப்பார்கள். அவன் பரிசு வாங்கப் போகாமல் எங்காவது அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருப்பான்.  மற்ற எல்லா வீரர்களும் ஓடத் தயாராவதற்கு முன்தான் சத்தான ஆகாரங்கள் எடுத்துக் கொண்டிருப்பார்கள்.  கார்த்திக்கைப் பசிதான் இயக்கியது. இப்போதுவரை அப்படித்  தான்.   

   மாவட்ட அளவிலான பந்தயத்திற்குச் செல்லும்போது கிருபாகரன் சார் அவனுக்கு ஒரு ஜோடி நல்ல விலையுள்ள ஷூ ஒன்றை வாங்கிக் கொடுத்தார்.ஓடி ஓடி எல்லா பந்தயங்களிலும்  வென்றான்.    பன்னிரெண்டாவது முடித்ததும்  அவர்தான் சென்னையில் இங்கு வந்து சேர்த்தார். கிருபாகரன் சார் இப்போது தன் பணிக்காலம் முடிந்து ஓய்வுபெற்று விட்டார். கார்த்திக்கின் புகைப்படத்தை எப்போதாவது நாளிதழ்களில்   பார்த்துவிட்டால் போதும். உடனே போன் செய்து விடுவார். அவன் தேசிய அளவில் ஓடுவதைக் காண வேண்டுமென்பதற்காகவே தன் மகளிடம் தொணதொணத்து எல்லா ஸ்போர்ட்ஸ் சேனல் இணைப்புகளையும் வாங்கினார். அந்தப் பந்தயத்தில்தான் கார்த்திக்குக்கு வெள்ளிப் பதக்கம். அன்று இரவு கார்த்திக்கு போன் செய்து முதல் வாய்ப்பைத் தவறவிட்டதற்காய் கோபப்பட்டார். ``ஓடுவதற்கு முன் வயிற்றுக்கு ஏதும் உணவு கொடுத்தியா?’’ என்று கேட்டார். தன் ஸ்பான்சர் நிறுவனம் வழங்கும் சத்துபானம் குடித்ததாய் சொன்னான். ``நீ ரெண்டாவது இடம் வாங்கினது மத்தவங்களுக்கு வேணும்னா பெருமையா இருக்கலாம். எனக்கு இல்லை. மறந்துட்டியா. நீ பதக்கத்துக்காக ஓடுறவன்  இல்லை. பசிக்காக ஓடுறவன். பசியோடு ஓடியிருந்தால் முதலிடம் கிடைத்திருக்கும்’’ என்று பெரிதும் விசனப்பட்டார். கார்த்திக் குமாரசாமி சப்தம் கேட்டுத் திரும்பினான். வெங்கட் நின்று கொண்டிருந்தார்.

   பணக்காரத் தொப்பை,  விலை உயர்ந்த ஷூ, அதன் பாதத்தில் கொஞ்சம் சகதி அப்பியிருந்தது. நாற்பதுகளில், தன் வயதிருக்கும் பெரிய கார் நிறுவனத்தின் உற்பத்தி மேலாளர். அந்த நிறுவனம்தான் கடந்த ஆண்டு கார்த்திக்கின் ஸ்பான்ஸர் ஆக இருந்தது. வெங்கட் எப்போதும் லஜ்ஜை இல்லாமல் பேசுவார். பிதுங்கித் தொங்கு சதை நிறைந்த உடல்வாகு அவருக்கு. மெலிந்த உடலின் தேவை என்பது கலவிக்குச் சரியாய் உதவும் என்பதாக மட்டுமே இருந்தது. அதனால்தான் தினமும் இங்கே வந்து விடுவார். கிரவுண்டை  அரை வட்டம் மட்டும் நடந்துவிட்டு ``அவ்வளவு தான்’’ வந்து அமர்ந்து விடுவார். பெரும்பாலும் பேசிப் பேசி உடலைக் குறைக்க நினைப்பார். சந்திக்கும்போதெல்லாம் ‘அது மாதிரியான’ வறட்சி காமெடிகள் சொல்வார். சிரிக்கவில்லை என்றால் வேறொன்று சொல்கிறேன் என்று ஆரம்பித்துவிடுவார் என்பதால், கார்த்திக் வேறு வழியில்லாமல் சிரித்து வைப்பான். அன்றும் அப்படித்தான். கார்த்திக் பேச விஷயமில்லாமல் ``என்ன சார் மூணு நாளா வாக்கிங் வரலைபோல’’என்றான். ``ஆமா கார்த்திக், மூணு நாளா  ஃவொயிப் வீட்ல இல்லை. என் பொண்டாட்டி ஊருக்குப் போய்ட்டா ஜனகராஜ் மாதிரிதான். உங்கிட்ட ஒரு விஷயம்  சொல்லணும்னு நினைச்சேன்’’ அருகில் யாரும் இல்லை என்றாலும்  சிரிப்பும் ரகசியமும்  கலந்து தணிந்த குரலில் பேசினார்.  ``மூணு நாளா மழை பெஞ்சதுல குழந்தைக்கி சேந்த மாதிரி மூணு நாலு லீவு விட்டதால் என் மனைவி அவங்க அம்மா வீட்டுக்குத்  திருச்சிக்குப் போய்ட்டாங்க.  வீட்டுக்கு   நான் வரும்போது மழை மேகமா இருந்தது. வீட்ல யாரும் இல்லாட்டி எவ்வளவு சுதந்திரமா இருக்குது. நாலாவது மாடியில அபார்ட்மென்ட்  பால்கனியில உட்கார்ந்துக்கிட்டு  குப்பியைத் திறந்து கொஞ்சம் தீர்த்தம் விட்டுக்கலாம்னு  கண்ணாடி கிளாஸ்ல ஊத்தி நிதானமா குடிச்சேன். தூறல்போட ஆரம்பிச்சது. அப்போ தான் ஞாபகம் வந்தது. என் மனைவி ஏற்கெனவே போன் பண்ணிச் சொன்னது. `வேலைக்கி இருக்கிறவங்க உங்க துணியைத் துவைச்சு மாடியில காய வெச்சிருக்காங்க.  மழை ஏதும் வந்தா எடுத்து வெச்சிடுங்க. இல்லாட்டி விட்டுடுங்க. காலைல அவங்க வந்து எடுத்து வெச்சிடுவாங்க’னு. நான் அவசரமா மாடிக்குப் போனேன். மழை தூறல்போட ஆரம்பிச்சிடுச்சு.  அவசரஅவசரமா என் துணியெல்லாம் எடுத்துட்டு இருக்கும்போதுதான் பார்த்தேன். காயப்போட்டுக் கிடக்கும் என் உடைகளுக்கு அருகில் ஒரு பெண் அணியும் கீழ் உள்ளாடை கிடந்தது.  கவனித்துப் பார்த்தேன். வாழ்க்கையில் முதன்முதலாக  ‘விக்டோரியா சீக்ரெட்’ பிராண்ட் உள்ளாடையை இப்போதுதான் பார்க்கிறேன். அவ்வளவு வேலைப்பாடு. அதற்குள் மழை வலுக்கத் துவங்கிவிட்டது. இன்னும் நாலைந்து  சொட்டு மழை நீர் பட்டாலே முழுக்க நனைந்துவிடும் என்று தோன்றியது.  அதை அப்படியே  விட்டுவிட்டால் நனைந்து பாழாகிவிடும் என்பதால் எனது துணிகளோடு அதையும் எடுத்துக்கொண்டேன்.  யாரும் பார்த்துவிட்டால் என்னை எதிர் பாலினரின் உள்ளாடைகளைத் திருடுபவன் என்று தவறாக நினைத்துக்கொள்வார்களோ என்று அச்சம் வேறு. எனது துணிகளை வீட்டின் உள்ளேயும் பால்கனியில் கொஞ்சமுமாக உலரவிட்டேன். அந்த உள்ளாடை எனது உணவு மேசையின் நாற்காலியில் காய்ந்துகொண்டிருந்தது. ஒரு உள்ளாடையை இவ்வளவு கலைநயத்தோடு  நான் பார்த்ததே இல்லை. தயாரித்து வெளியிடும் அமெரிக்காக்காரன் ‘ராய் ரேமண்ட்’ பெரிய கலாரசிகன்தான். பாவம் யாருடைய உள்ளாடையோ இரவெல்லாம் என் வீட்டில் ஈரம் உலர்த்திக்கொண்டிருந்தது.  இதை  விரும்பி அணியும் அந்த இளம்பெண்ணும் பெரிய கலைத்தன்மை நிறைந்தவளாகத்தான் இருக்க முடியும். காலையில் பார்த்தேன். உள்ளாடை காய்ந்து வழுவழுப்பான டைல்ஸ் தரையில் கிடந்தது.முழுக்கக் காய்ந்துவிட்டதுபோல. கையில் எடுக்கையில் எடை இழந்து கிடந்தது.  நல்லவேளை யாரும் பார்ப்பதற்குள்ளாக அதனிடத்தில் போய் மீண்டும் வைத்து விடலாம் என்று எடுத்துக்கொண்டுபோய் மாடியில் நீண்ட  கோடு போலிருந்த நைலான் கொடியில் தொங்கவிட்டேன்.  

   ஆபீஸ் போகும்போது அபார்ட்மென்ட் வாட்ச்மேனிடம்  மெல்லிய குரலில்  கேட்டேன்  `புதுசா யாரும் குடி வந்திருக்காங்களா?’அவர் `அதெல்லாம் இல்லை சார்’ என்று சொல்லிவிட்டார். நான் அலுவலகம் வந்துவிட்டு வீட்டிற்குத் திரும்பினேன்.  இன்றும் அதேபோல் வீட்டிற்குள் நுழைந்ததுமே  மழை  வலுக்கத்  துவங்கிவிட்டது. நான் வீட்டிற்குள் அணியும் கால்சட்டைக்கு மாறினேன். சட்டென ‘விக்டோரியா சீக்ரெட்’ நினைப்பு வந்தது. மாடிக்கு ஓடினேன். அது அதே இடத்திலேயே நனைந்துகொண்டிருந்தது. இன்றும் அதேபோல்தான் எனது உணவு மேசை நாற்காலியில் இரவெல்லாம் ஈரத்தோடு தூங்கியது. விடிகாலையில் எழுந்து அதே போலவே மாடியில் போய்த் தொங்கவிட்டேன்.இன்று எனக்குக் கொஞ்சம் அச்சமாய் இருந்தது. நான் எடுத்துவந்த பிறகு யாராவது அதைத் தேடி வந்திருப்பார்களா என்று.

   அடுத்த நாள் நான் அலுவலகம் வந்ததும்  பகல் முழுக்க மழை பிடித்துக்கொண்டது. விக்டோரியா நனைந்துகொண்டிருப்பாள். நிச்சயம் நம்பினேன். வீட்டைத் திறக்கும் முன்பாக நேராக மாடிக்குப் போனேன். மழையில் நனைந்த சிறு செல்லப்   பிராணியை வீட்டிற்குள் தூக்கி வந்ததுபோல் அதைத் தூக்கிக்கொண்டு வந்தேன். இரவு முழுக்கக் குடித்தபடி அதைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். அழகான ஓவியத்தைப் பார்ப்பது போல் இருந்தது. அதிகாலையில் ரயில் நிலையத்திற்குக் கூப்பிட வரச்சொல்லி என் மனைவி கால் செய்தாள். நேற்று துவங்கிய மழை விடிகாலை வரையிலும் கொட்டியது. நான் முகத்தை மட்டும் கழுவிவிட்டு காரை எடுத்தேன். எனது அபார்ட்மென்ட் தாண்டும் போதுதான் விக்டோரியாவின் ஞாபகம் வந்தது. நல்லவேளை என்று நினைத்து வீட்டைத் திறந்து மீண்டும் மழையில் அதைத் தொங்கவிட்டேன். நாளையிலிருந்து இனி நாம் பார்க்க முடியாது என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டேன். காரில் போகும்போது அதன் நினைப்பே அவ்வளவு குளுமையாக இருந்தது. இந்த மூன்று நாள்களும் அறிமுகமில்லாத பேரழகான  ஓர் இளம்பெண் என்னோடு தங்கியிருந்ததைப்போல.

   அவர்களை அழைத்துக்கொண்டு வந்து வீட்டில் விட்டேன். காலை ஏழுமணி வரை   மழை  நிற்கவே இல்லை.  சகானா பள்ளியிலிருந்து ‘இன்று பள்ளி விடுமுறை’ என்ற வார்த்தைகள் வரும் குறுஞ்செய்திக்காய் எங்கள் இருவர் போனையும் வாங்கிப் படுக்கையில் வைத்துக்கொண்டு பார்த்துக்கொண்டே இருந்தாள். அதே நேரம் திரைச்சீலையை விலக்கி ஜன்னலின் வழியே மழையின் தீவிரத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். மழை கிட்டத்தட்ட நின்றுவிட்டது. ஜன்னலிலிருந்து அவள் முகம் பள்ளிக்கூடம் செல்லும் பீதிக்கு வந்தபோது சரியாய் அந்த மெசேஜ் வந்துவிட்டது. `ஹேய்ய்ய்... ஜாலி’ கத்தினாள். `இங்க நல்ல மழையாங்க ?’ மனைவி அவ்வளவு கனிவாய் கேட்டாள். `ஆமாம். நல்லவங்களா இருந்தா, அந்த ஊர்ல மழை பெய்யுமாம். நீ ஊருக்குப்போன மூணு நாளுமே இங்கே மழை பெஞ்சது’ அந்த ஜோக் அவளுக்குப் பிடிக்கலபோல. உடனே எழுந்து மாடிக்கு ஓடினாள். திரும்ப வரும்போது ஈரமான  விக்டோரியாவைக் கையில் பிடித்தபடி நின்றிருந்தாள். `கட்டுன பொண்டாட்டியோட உள்ளாடைகூட தெரியாதா? மூணு நாளா நனையுதுபோல. உங்க துணிக்குப் பக்கத்துலதானே காய்ஞ்சது’அடக்க முடியாமல் இன்று உண்மையாகவே கார்த்திக் சிரித்துவிட்டான். ``சிரிக்காதீங்க கார்த்திக்.இப்படித்தான் இந்தியாவுல முக்கால்வாசிப் பேர் குடும்பம் நடத்துறாங்க’’ கொஞ்சநேரம் பேசிவிட்டுக் கிளம்பினார். கார்த்திக்குக்கு ‘அப்பாடா’ என்று இருந்தது.

   இன்னும் குளிர் போகவில்லை.  இப்போது பெங்களூருவில் குளிர் இன்னும் அதிகமாய் இருக்கும் என்று நினைத்தான். பாவம்  மேகா  என்ன செய்வாளோ. மேகா சர்வதேச அளவில்  பிரபலமான ஸ்போர்ட்ஸ் இதழின் புகைப்படக் கலைஞர். ‘ Photo courtesy-மேகா கிருஷ்ணன்’ என்றுதான் இதழ்களில் வெளிவரும். சர்வதேச அளவிலான நீச்சல் போட்டி பெங்களூருவில் நடப்பதால், இரண்டு நாள்களாக அங்கு   முகாமிட்டிருக்கிறாள். கார்த்திக் மைதானத்தில் ஓடிக்கொண்டிருக்கிறான் என்றால்,மேகா உலகமெங்கும் எங்கெல்லாம் சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் அல்லது கிரிக்கெட் நடக்கிறதோ அங்கே பறந்துகொண்டே இருப்பாள். அவள் ஓய்வாய் இருந்து கார்த்திக் ஒரு நிமிடம்கூட பார்த்தது இல்லை. ஒருநாள் ஓய்வு கிடைத்தால்கூட ஓவியம் வரைவாள், கவிதை எழுதுவாள், புத்தகம் வாசிப்பாள். பெரும்பாலும் அவை கம்யூனிஸப் புத்தகமாக இருக்கும். மார்க்ஸ்,  பூக்கோ , சாப்ளின், ஜீசஸ், பிராண்டோ, பாம்பே ஜெயஸ்ரீ, ஜெயமோகன்,  வடிவேல் காமெடி, எண்ணெய்க் கத்திரிக்காய்  என எல்லாமும் பேசுவாள். கார்த்திக்குக்கு இதில் எதுவும் தெரியாது.

   பொதுவெளியில் மேகா நமக்கு வேறு மாதிரியும் அறிமுகமாகியிருக்கிறாள். இதைச் சொன்னால்  அவளை நிச்சயம் எல்லோரும் அடையாளம் காண முடியும்.

   ‘ஒரு விதை பெத்ததுதானே இந்தக் காடு

     ஒரு தாய் பெத்ததுதானே இந்த நாடு’

   இந்தப் பாடல் மேகா எழுதியது. புரட்சிப் பக்கம் ஒதுங்காதவர்கள் இந்தப் பாடலைக் கேட்டிருப்பது அரிதானது.

   மற்றவர்களுக்கு அவளின் இந்தப் பாடல் நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்புண்டு.

    ‘மழை பெய்கையில்

    மலர் பொய்கையில்

   நனைந்தபடி எதிரில் வருவது நீயன்றோ என் கரம் கோர்த்தபடி  உடன் வரக் கூடுமன்றோ’

   எவ்வளவு பிரபலமான ஆல்பம் இது. அவளே எழுதிப் பாடியது. அநேகருக்கு அவளை இப்படித்தான் தெரிந்திருக்க வாய்ப்புண்டு.

   கார்த்திக் தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பங்கெடுத்து 0.02 நொடி இடைவெளியில் நான்காவது இடத்திற்குப் பிந்தி தோற்று அழுதபோது அதைப் புகைப்படமாக்கி  ‘இந்தியா அழுகிறது’ என்று தலைப்பிட்டு அவள் வேலை செய்யும் பத்திரிகையில் வெளியிட்டாள். அதன் அடுத்த வாரமே `வெற்றிக்கு மிக அருகில்’ என்று தலைப்பிட்டு அவனின் எளிமையான உடை,  மலிவான ஷூ, மேலும் அவனைப் பின் தொடர்ந்து சென்று காசில்லாமல் இந்த நகரத்தில் எங்கே போனாலும் நடந்தும்,  ஓடியும் மட்டுமே செல்லும் அவனின் புகைப்படங்களைப் போட்டுக் கூடவே  கார்த்திக்கின் வாழ்க்கையில் கடந்துவந்த சிறு பகுதியையும் எழுதி இருந்தாள். நிர்வாகம் கேட்டதற்கு ``அடுத்த வருடம் நிச்சயம் வெற்றி பெற்று நம் இதழின் அட்டைப் படத்தில் வருவார்’’ என்று நம்பிக்கையுடன் சொன்னாள்.

   கார்த்திக்குக்கு அப்போது பெரிதாய் யாரும் ஸ்பான்சர் இல்லை. `நல்ல ஸ்பான்சரும், கோச்சும் இருந்தால் அடுத்த போட்டியில் கார்த்திக் நிச்சயம் தேசத்தைக் கெளரவிப்பார்’ என எழுதியிருந்தார்கள். அடுத்த நாள் காலையில் கார்த்திக் அந்த ஸ்போர்ட்ஸ் இதழைத் தொடர் ஓட்டக்காரன் கையில் வைத்துக்கொண்டு ஓடும் குச்சியைப்  போல  சுருட்டிக்கொண்டு அண்ணாசாலையின்  வழியே ஓடியே அவளின் அலுவலகத்திற்கு வந்து, ‘தனக்கு பட்சாதாபம் தேவையில்லை’என்று  கோபமாய் கத்தினான். அவள் அப்போது புனேவிற்கு அலுவலக நிமித்தமாகச் சென்றிருந்தாள். திரும்ப வந்தவளிடம் அலுவலகத்தில் இருப்பவர்கள் சொன்னார்கள். அவளே கார்த்திக்கு போன் செய்து பேசினாள். அவளைப் பேசவிடாமல் கார்த்திக் கோபமாகக் கத்தினான். அடுத்த நாள் கார்த்திக் அழும் அதே புகைப்படத்தைப் பெரிய சைஸில் பிரின்ட் போட்டு கூரியர் செய்தாள். அதோடு ‘இதை உங்கள் அறையில் ஒட்டிவைத்து தினமும் அழுங்கள்’ என்ற வாசகத்தை இணைத்திருந்தாள். மேகா தன்னைக் கேலியும், அவமானமும் செய்வதாய் உணரத் துவங்கினான். கிருபாகரன் சாருக்கு போன்செய்து பேசினான். அவர் அவனை ஆற்றுப்படுத்தினார். ‘`எனக்குத் தெரிந்து அவள் உன்னை அவமானப்படுத்தவில்லை. எனக்கென்னமோ உன்னைவிட உன் வெற்றியில் அவள்தான் முழு நம்பிக்கையும் ஈடுபாடும்கொண்டிருக்கிறாள் என்று படுகிறது’’என்று சொல்லி போனைத் துண்டித்தார்.

   அதன்பிறகுதான் பெரிய நிறுவனங்களின் கவனம் கார்த்திக்கின் பக்கம் திரும்பியது. இடைவிடாதப் பயிற்சி. ஆசியப்போட்டியில் கார்த்திக் இரண்டாமிடம். இந்த முறை நிர்வாகத்திடம் பேசி அட்டையில் புகைப்படத்தைப் போடச் சொன்னாள். கார்த்திக் இந்த முறையும் ஓடியே அவளின் அலுவலகத்திற்குச் சென்றான். சாலையில் நிறைய பேர் அவனை அடையாளம் கண்டுகொண்டார்கள். அவள் இப்போது மதுரையில் ஜல்லிக்கட்டைப் புகைப்படம் எடுக்கப் போயிருப்பதாக அலுவலகத்தில் சொன்னார்கள். அவளின் எண்ணை வாங்கிப் பேசினான். பார்க்க வேண்டுமென்று சொன்னான். சென்னைக்குத் திரும்பியதும் சந்திக்கலாம் என்று சொன்னாள். ‘வர  எத்தனை நாளாகும்?’  `நாலு நாள்’ என்றாள். கோபமாய் வைத்தான். ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்திற்கு உடனே கிளம்பிச் சென்று தேடினான். 

   அங்கே இருப்பதிலேயே உயரமான இடத்தில் ஏறிநின்று  மாடுபிடிக் களத்தைப் புகைப்படம் எடுக்க கேமராவின் 1200-1700mm ஜூமைத் திருகியபோது தூரத்தில் இவன் கூட்டத்திற்குள் யாரையோ தேடுவதைப் பார்த்து இவளே போன் செய்தாள்.

   `இங்க என்ன பண்ற?’

   `உன்னப்  பார்க்கத்தான்.’

   `அதான் வந்திடுறேன்னு சொன்னேனே... மூணு நாள் பொறுக்க மாட்டியா?’

   `இல்ல. முடியாது.’

   அந்த உயரமான கட்டடத்தின் நுனிக்கு அவனும் ஏறி வந்தான். கார்த்திக் நேரடியாகவே கேட்டான்.  ``கல்யாணம் பண்ணிக்கலாமா?’’ கொஞ்சநேரம் அமைதியாய் அவனைப் பார்த்துவிட்டு நிதானமாய் சொன்னாள்.  ``கிரவுண்டுல ஓடு... லைஃப்ல ஏன் இவ்வளவு வேகமா ஓடுறே. கொஞ்சம் காதலிக்கலாம். அப்புறம் அப்பாகிட்ட சொல்லிட்டுக் கல்யாணம் பண்ணிக்கலாம்’’ அவர்கள் அப்படியே அங்கிருந்து கிளம்பி ராமேஸ்வரம் போய் கிருபாகரன் சாரைப் பார்த்தார்கள்.  மேகா அடம் பிடித்தாள். அதிகாலையில் கிளம்பி அவனின் கிராமத்திலிருந்து அதேபோல அவனின் பாட்டி ஊருக்கு, ஐந்து கிலோமீட்டர்கள் நடந்து போனார்கள் இருவரும். அன்று தான் கார்த்திக் அந்த ஐந்து கிலோமீட்டரையும் ஓடாமல் மேகாவோடு  நடந்தே கடந்தான். கார்த்திக் இந்த ஐந்து கிலோமீட்டர் தூரத்தையும் கடக்கும்போது ஷூவைக் கழற்றி வெறும் காலால்தான் நடந்தான்.  ஒவ்வொரு மைல்கல்லையும் அடைந்ததும் மேகா அந்தக் கல்லைப்போய் தடவிப் பார்த்தாள். ``உன்னோட முதல் இலக்கு இதுதானே’’ என்று அவனிடம் கேட்டாள். கார்த்திக்கை அதன் மேல் அமரவைத்துப் புகைப்படம் எடுத்தாள். தானும் எடுத்துக் கொண்டாள். ஐந்து கிலோமீட்டர் கழிந்து ஊர் வந்ததும் எடுத்து வந்திருந்த உணவை அவனுக்குக் கொடுத்தாள். மேல்கூரை இல்லாமல்  சிதிலமடைந்த மண் சுவர் வீட்டில் அமர்ந்து இருவரும் உணவை உண்டார்கள்.  மேகா, கார்த்திக்கிடம் கேட்டாள் ``உன்கூட ஓடுன  உங்க அண்ணன் இப்போ எங்கே கார்த்திக்?’’ ``அவரு  இப்போ உட்கார்ந்திட்டாரு. இப்போ மதுரையில பெரிய அரசு அதிகாரி.’’

   அதன்பின் வந்த நாள்களில் மேகா  சென்னையில் இருந்தால்  காலையில்  கிளம்பி ஒய். எம். சி. ஏ. மைதானத்திற்கு வந்து விடுவாள்.  அதுபோல  மாலையில் அலுவலகம் முடிந்ததும் மைதானத்திற்கு வந்து விடுவாள். ஒருநாள் காலையில் மேகாவின் அப்பா மேகாவோடு ஒய்.எம்.சி.ஏ. வந்தார். குலம், கோத்திரம், சாதி என்று ஏதோ சொல்லிவிட்டு ``இதெல்லாம் நடக்காது’’ என்று அமைதியாகக்  கிளம்பினார். அவர்கள் தொடர்ந்து சந்திப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை. கார்த்திக் போட்டிக்காக இத்தாலி சென்றபோது மேகாவிற்கு மிகவும் பிடித்த புகைப்படக் கலைஞர் ‘ருபெர்டோ  குஸ்டர்லை’ ( Roberto kusterle ) சந்தித்து அவர் எடுத்த புகைப்படத்தில் அவரின் கையொப்பம் வாங்கி  வந்து அவளின் பிறந்த தினத்திற்குப் பரிசளித்தான். மேகா அவ்வளவு சந்தோஷப்பட்டாள். 

   திடீரென ஒருநாள் மாலை மேகா போன் செய்து இன்று மாலை ஏழு மணிக்குத் தனது வீட்டுக்கு வரச் சொன்னாள். கார்த்திக் கிளம்பிப் போனான். மேகாவின் அப்பா இல்லை. அவளின் அம்மா வரவேற்று காபி கொடுத்தாள். காபி குடித்து முடிந்ததும்  மேகா அவனை வீட்டின் ஒரு குறிப்பிட்ட அறைக்கு அழைத்துச் சென்றாள். அறை வெளியே பூட்டப்பட்டிருந்தது. உள்ளே தெளிவாக எழுபதுகளின் பிரபலமான கிஷோர் குமார் சோகப் பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தன.  மேகா ரகசியக் குரலில் சொன்னாள்.  ``ஆடிட்டர் அனந்த கிருஷ்ணன் உள்ளே தண்ணி அடிச்சிக்கிட்டு இருக்கார். வருசத்துல ஒருநாள் மட்டும். அவர் இப்படித்தான்’’ ``அப்படியா ஏன்? அவங்க அம்மா இல்ல அப்பா யாரும் இறந்த நாளா?’’ ``இல்ல. அவர் லவ் பண்ணின பொண்ணோட கல்யாணநாள். ரொம்பக் குடிச்சி ஏதும் ஒப்புக்காம போயிடக்கூடாதுல. அதன் வெளிய பூட்டி வெச்சிருக்கோம்’’ கதவைத் திறந்துகொண்டு கார்த்திக் நுழைந்தான். போய் பத்து நிமிடம் கழித்து அனந்த கிருஷ்ணன் குழந்தையைப் போல் அழும் குரல் கேட்டது. அரைமணி கழித்து கார்த்திக் வெளியே வந்தான். மெதுவான குரலில் கார்த்திக் இருவரிடமும் சொன்னான். ``உங்க அப்பா கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டார்’’  சந்தோஷப்பட்டார்கள்.  உள்ளே கிஷோர்குமார் பாடல் நிற்காமல் ஓடிக்கொண்டிருந்தது.

   பொழுது நன்றாக விடிந்துவிட்டது.  கார்த்திக் தன் போனை கால் சட்டைக்குள்  தேடி எடுத்தான். வாட்ஸ்அப்-பில்   மேகாவிடமிருந்து மெசேஜ் வந்திருந்தது.

   ‘குட்மார்னிங்  ஸ்போர்ட்ஸ்மேன்.’

   பதில் அனுப்பினான். ‘குட்மார்னிங் போட்டோகிராபர்.’ 
   http://www.vikatan.com
  • By நவீனன்
   சாந்தமு லேகா - சிறுகதை
    
    
   “ராத்திரி 10 மணிக்கு மேல கேட்டைப் பூட்டிருவோம். கரன்ட் பில் யூனிட்டுக்கு இவ்வளவு குடுக்கணும். வெஜிட்டேரியன்ஸ்க்கு மட்டும்தான் வீடு. சினிமாக்காரங்களுக்கு வீடு கிடையாது. அபார்ட்மென்ட்ல நாய் வளர்க்கக் கூடாது.” இதுபோன்ற எந்த கண்டிஷனும் இல்லாத வீடு சென்னையில் வாடகைக்குக் கிடப்பது கனவிலும் நடக்காத விஷயம். வீடு என்றால் ஃபிளாட். பல மாடிக் கட்டடத்தில் ஒரு ஃபிளாட். சின்மயா நகரிலுள்ள ‘சாந்தலேகா அபார்ட்மென்ட்ஸ்’க்குக் குடிவந்த புதிதில் ஷைலஜாவுக்கு இந்த சுதந்திரத்தை முதலில் நம்பவே முடியவில்லை. முகப்பில் வரையப்பட்டிருந்த வீணை ஓவியத்தைப் பார்த்ததுமே அவள் சௌந்தரிடம் சொல்லி விட்டாள். ‘எனக்கு இதைப் பார்க்கும் போதே நல்லதா தோணுது.’ நல்லதாகத்தான் நடந்தது. ஹவுஸ் ஓனர் சாந்தலேகாவுக்கு 70 வயதிருக்கும். எட்டு வீடுகள் கொண்ட அந்த அபார்ட்மென்டின் முதல் தளத்தில் தனியாக வசித்தார். மஞ்சளில் குளித்த மேனி. நெற்றியில் விபூதி, சந்தன, செந்தூர, குங்குமக் கலவை. ஆனால், எல்லாமே அப்பிக்கொள்ளாமல் அளவாக, அழகாக சிறு தீற்றல்களாகத் துலங்கின. பழைய காலத்து சுங்குடிப் புடவையில் இந்த வயதிலும் ஜொலிப்பாக இருந்தார். ‘இவளால நம்பவே முடியலியாம்மா!’ சௌந்தர் சாந்தலேகாவிடம் சொன்னான். கூச்சத்துடன் சௌந்தரின் கையைப் பிடித்து ஷைலஜா கிள்ளியதைப் பார்த்த சாந்தலேகா, ‘எதை நம்ப முடியலியாம்?’ என்றார். ‘இல்ல. நீங்க வெஜிட்டேரியன். ஆனா நான் - வெஜிடேரியன்ஸ்க்கு வீடு குடுக்கறீங்க. தாராளமா நாய் வளத்துக்கலாம்னு சொல்றீங்க. என்னை மாதிரி சினிமால இருக்கிறவங்களுக்கும் யோசிக்காம சாவியைத் தூக்கிக் குடுத்துட்டீங்க. இதெல்லாம்தான் இவளால நம்ப முடியல. என்னாலயும்தான்’.

   `‘தம்பி! அடுத்த மனுஷாளுக்குத் தொந்தரவில்லாம யாரும் எதுவும் செய்யலாம். இதைத் தவிர நான் சொல்றதுக்கு ஒண்ணும் இல்ல.’’

   சாந்தலேகாவுக்கு வாழ்க்கை குறித்த தெளிவான பார்வை இருந்தது. சக மனிதர்கள் அனைவரிடமும் அன்பு காட்டினார். தன் வீட்டில் வாடகைக்கு இருப்பவர்கள் அனைவரையும் உறவினர்கள் போலவே பாசாங்கில்லாமல் நடத்தினார். தன் ஒரே மகள் ஹைதராபாத்துக்கு வந்துவிடச் சொல்லி எவ்வளவோ வற்புறுத்தியும் சாந்தலேகா மறுத்துவிட்டார். செக்யூரிட்டி மூர்த்திக்கும், அவரது குடும்பத்துக்கும் கார் பார்க்கிங் ஏரியாவை ஒட்டி ஒரு சிறு அவுட் ஹவுஸ் கட்டிக்கொடுத்திருக்கிறார். சாந்தலேகாவுக்கு மூர்த்தி ஒரு மகன்தான். கொஞ்சம்கூட ஆடம்பரமேயில்லாமல் எளிமையாக வாழும் சாந்தலேகாவின் ஃபிளாட்டில் ஒரு புகைப்படம் கூட இருக்காது. பூஜையறையில்கூட அத்தனை அலங்காரங்கள் இல்லை. ராமரின் பட்டாபிஷேகத்தைக் குறிக்கும் ராமர், சீதை, லட்சுமணர், அனுமன் விக்கிரகங்களுடன் ஒரு தம்பூரா இருக்கும். அவ்வளவுதான்.  இவையெல்லாம் சௌந்தரும் ஷைலஜாவும் அங்கு குடிவந்ததும் தெரிந்துகொண்ட விஷயங்கள்.

   சாந்தலேகா அபார்ட்மென்ட்ஸில் குடியேறிய பிறகு சௌந்தருக்கும் ஷைலஜாவுக்கும் எல்லா விதத்திலும் நிறைவாக இருந்தது. ‘`எனக்கென்னவோ இந்த வீட்டுக்கு வந்த நேரம் உங்க படம் ஸ்டார்ட் ஆயிரும்னு தோணுது’’ என்றாள், ஷைலஜா. சௌந்தர் இயக்கிய முதல் படம் சுமாராகத்தான் போனது. இரண்டாம் படத்துக்கான முனைப்புகளில் இருக்கிறான். காதல் திருமணம் செய்த தம்பதிக்குக் குழந்தைகள் இல்லை. இல்லையென்றால் பெற்றுக்கொள்ளவில்லை. வாழ்வில் வெற்றியை ருசித்த பின்தான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென்கிற வைராக்கியம் சௌந்தருக்கு. ஷைலஜாவுக்கும் அதில் சம்மதமே. இருவருமே நாய் வளர்ப்பதில் பிரியம் உள்ளவர்கள். பைரவை யாரும் நாய் என்று சொல்வதை அனுமதிக்க மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரைக்கும் பைரவ், அவர்களின் மகன். ஒன்றரை வயதில் வாட்டசாட்டமாக வளர்ந்து நிற்கும் லாபரடார் வகை நாய். ஷைலஜாவையும்விட பைரவ் சாந்தலேகாவுக்கு நெருக்கமாகிப்போனான். ‘`நீங்க ரெண்டு பேரும் எங்கேயாவது வெளியே போறதா இருந்தா, பைரவை இங்கே விட்டுட்டுப் போங்கம்மா. நான் தனியாத்தானே இருக்கேன். பாத்துக்கறேன்’’ என்றார் சாந்தலேகா.
   குடியிருக்கும் குடும்பங்களில் யார் வீட்டில் என்ன சண்டை சச்சரவென்றாலும் யாருக்கும் வலிக்காத வண்ணம் பேசி சமாதானம் செய்து வைப்பார், சாந்தலேகா. தினமும் சௌந்தரிடம் புதிது புதிதாக சாந்தலேகாவைப் பற்றிய ஆச்சர்யங்களைச் சொல்வாள், ஷைலஜா. ‘சொன்னா நம்ப மாட்டீங்க. எட்டு வீட்டுலயும் யார் எங்கே போனாலும் அவங்க குழந்தைங்கள ஹவுஸ் ஓனர் ஆன்ட்டிகிட்டதான் விட்டுட்டுப் போறாங்க. அது பரவாயில்ல. அந்தக் கன்னியாகுமரி ஃபேமிலி ஏதோ டெத்துன்னு ஊருக்குக் கெளம்பிட்டாங்க. அவங்க வீட்டு ‘ஸ்நூஃபி’யை ஆன்ட்டிதான் பாத்துக்கறாங்க. நேத்து பருப்புப்பொடி குடுக்கறதுக்காக அவங்க ஃபிளாட்டுக்குப் போனா, ‘ஸ்நூஃபி’ அவங்ககூட சோஃபால உக்காந்து ‘பிக்பாஸ்’ பாத்துக்கிட்டிருக்கு.’

   சினிமாவில் இருப்பதால் சௌந்தருக்கு சாந்தலேகா ஒரு முன்னாள் நடிகை என்பது தெரியும். மிகக் குறைவான படங்கள் நடித்திருப்பவர் என்பதும், அவர் கணவர் ஒரு காலத்தில் தெலுங்குப் படவுலகில் கொடிகட்டிப் பறந்த இசையமைப்பாளர் என்பதையும் ஒரு தகவலாக ஷைலஜாவிடம் சொல்லி வைத்தான்.

   ‘`டிரெட்மில் வாங்குற ஐடியாவை விட்டுருங்க. நான் ஹவுஸ் ஓனரம்மா கூட டெய்லி மொட்டை மாடில வாக்கிங் போறேன். கூட பைரவும் வந்து நடக்கறான். `ஒரு கல்யாண வீட்டு விருந்தையே ஷாமியானா போட்டு இந்த மொட்டை மாடில நடத்திடலாம். இதுல நடக்கறதை விட்டுட்டு உனக்கெதுக்கு டிரெட்மில்? நாலு நாளைக்கப்புறம் எப்படியும் அதுல துணிதான் காயப் போடப் போறே’ன்னு சத்தம் போட்டுட்டாங்க’’ என்றாள் ஷைலஜா.

   வாக்கிங்கின்போது சாந்தலேகா மெல்லிய குரலில் பாடுவார். சில சமயங்களில் ஷைலஜா நடக்கும்போது, வாட்டர் டாங்குக்குக் கீழ் நிழலாக உள்ள கல்பெஞ்சின் மேல் அமர்ந்து கண்களை மூடிப் பாடுவார். அவரது காலடியில் படுத்துக் கிடப்பான் பைரவ். ‘நீங்க பாடினதுல பைரவே சொக்கிட்டான் ஆன்ட்டி’ ஷைலஜா சிரித்தபடி வேர்வையைத் துடைத்துக் கொண்டு அவரருகே உட்கார்ந்தாள்.

   ‘ஆன்ட்டி! நான் உங்களை ஒண்ணு கேக்கலாமா?’

   ‘கேளும்மா! நேரே கேக்க வேண்டியதுதானே? எதுக்கு பெர்மிஷன்?’

   ‘இல்ல. உங்க வீட்ல உங்க குணத்தைப் பாத்துட்டு சாந்தலேகான்னு பேர் வச்சாங்களா? இல்ல இந்தப் பேர் வச்சதுனால நீங்க இவ்வளவு சாந்தமா இருக்கீங்களா?’

   கொஞ்சமும் புன்னகை மாறாத முகத்துடன் சாந்தலேகா சொல்ல ஆரம்பித்தார்.

    ‘`எங்க அப்பா அம்மா எனக்கு வச்ச பேரு  பாலம்மா. அது எங்க பாட்டி பேரு. அப்ப நான் தியாகராஜ ஸ்வாமியோட தெலுங்குக் கீர்த்தனை ‘சாந்தமு லேகா’ ரொம்ப நல்லா பாடுவேன். அப்பா பாட்டு வாத்தியார். அவர்கிட்ட பாட்டு சொல்லிக்க வந்தவர்தான் என் வீட்டுக்காரர். அப்ப யாருக்கும் தெரியாம என்னை சாந்தலேகான்னு கூப்பிடுவார்’ சாந்தலேகா சொல்லிக்கொண்டிருக்கும் போதே சடசடவென மழை கொட்டத் தொடங்கியதால் அன்றைக்குப் பேச்சு தடைப்பட்டுவிட்டது. அதில் ஷைலஜாவுக்கு அத்தனை வருத்தம். ‘அன்னைக்கு ஹவுஸ் ஓனர் ஆன்ட்டி நல்ல மூடுல இருந்தாங்க. இன்னும் என்னென்னவோ சொல்லியிருப்பாங்க. மழை வந்து கெடுத்திருச்சு’’ சலிப்புடன் சொன்னாள் ஷைலஜா.

   ‘`நீங்க ஹவுஸ் ஓனர் ஆன்ட்டி ஒரு நடிகைன்னுதானே சொன்னீங்க? ஆனா அவங்க பாடுவேன்னு சொல்றாங்க!’’ சௌந்தரிடம் கேட்டாள் ஷைலஜா. ‘`அவங்க நடிகைதான். கொஞ்ச படங்கள் பண்ணிட்டு அப்புறமா அந்த மியூஸிக் டைரக்டரைக் கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆயிட்டாங்கன்னு கேள்விப்பட்டேன். அவங்க யாரா இருந்தா என்ன? நமக்கு அவங்க ஹவுஸ் ஓனர். நம்மகிட்ட பிரியமா இருக்காங்க. அவ்வளவுதான் நமக்கு வேணும். ஒரு வாரம் நான் வெளியூர் போறேன் தெரியும்ல! அவங்க இருக்கிற தைரியத்துலதான் கிளம்பறேன். அதுக்காக நீ அவங்களை சும்மா சும்மா தொந்தரவு பண்ணிக்கிட்டிருக்காதே!’’ என்றான் சௌந்தர்.

   சௌந்தர் கிளம்பிப் போன இரண்டாவது நாள் ஷைலஜா கடும் ஜுரம் வந்து நடக்க முடியாமல் படுத்துவிட்டாள். சாந்தலேகாதான் அருகில் இருந்து பார்த்துக்கொண்டார். காரில் அவரும் கூடவே வந்து டாக்டரிடம் காண்பித்தார். வேளாவேளைக்கு மருந்து, மாத்திரை சாப்பிட உதவினார். ‘உன் வீட்டுக்காரர் ஏதோ வேலையா வெளியூர்ல இருக்கார். அவர் போன் பண்ணும்போது உனக்கு உடம்பு சரியில்லேன்னு சொல்லாதே. பாவம் அவர் மனசு கஷ்டப்படும்’ என்றார். மூன்று நாள்களில் ஷைலஜாவால் ஓரளவு எழுந்து நடமாட முடிந்தது. நான்காவது நாளன்று திடீரென்று மதியம் 12 மணிவாக்கில் பவர் கட் ஆனது. சாந்தலேகா  ஃபிளாட்டின் கதவைத் தட்டினாள். நீண்ட நேரத்துக்குப் பின் வந்து கதவைத் திறந்த சாந்தலேகாவின் முகத்தில் அத்தனை எரிச்சல் தெரிந்தது. உரத்த குரலில் ‘`என்ன?’’ என்றார். ஷைலஜாவால் அந்தக் கேள்வியை கண் கொண்டு வாங்க இயலவில்லை. `‘என்ன? சொல்லித்தொலை’’ என்றார் சாந்தலேகா. இப்போது முகத்தில் அத்தனை வெறுப்பு. அதிர்ச்சியில் வாய் திறந்து பேச இயலாத ஷைலஜாவின் முகத்தில் அறைந்தாற்போல கதவை ஓங்கிச் சாத்திக் கொண்டார் சாந்தலேகா. படிக்கட்டில் கண்களைத் துடைத்தபடி கீழ்த் தளத்துக்கு வந்து செக்யூரிட்டி மூர்த்தியிடம், ‘`பவர் இல்லீங்க. என்னாச்சு?’’ என்றாள் ஷைலஜா. ‘`கரன்ட் பாக்ஸ்ல எல்லாத்தையும் புதுசா மாத்தணும். பீஸைப் புடுங்கிப் போடுன்னு அம்மா சொல்லிட்டாங்கம்மா’’ என்றார் மூர்த்தி.

   `‘ஏங்க? எங்ககிட்ட இன்வெர்ட்டர்கூட இல்லீங்க! சீக்கிரமா போட்டு விடுங்க!’’

   ‘`இன்ஜினீயர் சம்சாரம் இப்பதான் கத்திட்டுப் போகுது. என்னால ஒண்ணும் செய்ய முடியாதும்மா. என்னாச்சுன்னே தெரியல. மத்தியானத்திலிருந்தே அம்மாக்கிட்ட முகம் குடுத்துப் பேச முடியல’’ என்றார் மூர்த்தி.

   அதற்கு மேல் ஷைலஜாவுக்கு ஒன்றும் சொல்லவோ, கேட்கவோ தோன்றவில்லை. அன்றைய நாள் முழுதும் மின்சாரம் இல்லாமல் இரவு வந்தது. சௌந்தர் போன் பண்ணியபோது இதைச் சொல்லலாமா, வேண்டாமா என்று குழம்பியவாறே ஏதேதோ பேசினாள். கடைசியில் சௌந்தரே கேட்டான். ‘`ஆன்ட்டி எப்படி இருக்காங்க? நீ அவங்க வீட்லதான் இருக்கியா?’’

   அதற்கு மேல் ஷைலஜாவால் பொறுக்க முடியவில்லை. மதியம் நடந்த அத்தனையையும் கொட்டித் தீர்த்தாள். அழுகை கலந்த குரலுடன், ‘`என் மூஞ்சிக்கு நேரா அவ்வளவு கோபத்தைக் காட்டினாங்க, சௌந்தர். டப்புன்னு கதவைச் சாத்திட்டாங்க. இனிமேல் அந்தப் பொம்பள மூஞ்சில நான் முழிக்கப்போறதில்ல. தேதி ஒண்ணானா வாடகை குடுக்கப்போறோம். ஒரு ஹவுஸ் ஓனர், டெனன்ட்டைத் தாண்டி நமக்கும் அவங்களுக்கும் என்ன இருக்கு? முடிஞ்சா நீ வந்த உடனே வேற வீடு பாத்துரலாம். நமக்கென்ன வேற வீடா இல்ல? கொஞ்சமாவது ஒரு இது வேண்டாம்! நாம என்ன அவங்ககிட்ட கடனா வாங்கியிருக்கோம்! என்னமோ அவங்க வீட்டுச் சொத்தை எடுத்துட்ட மாதிரி இப்படி அவமானப்படுத்தினா என்ன அர்த்தம்? நான் உனக்காகத்தான் பாக்கறேன். இல்லேன்னா இப்பவே போயி அந்தக் கிழவியைக் கிழிச்சுத் தொங்க விட்டிருவேன்.’’

   இடையில் எங்கும் குறுக்கே பேசிவிடாமல் ஷைலஜா பொங்கிவழியும் வரைக்கும் பொறுமையாக அவள் சொல்வதையெல்லாம் கேட்டுவிட்டு சௌந்தர் சொன்னான்.

   ‘`இன்னிக்குத் தெலுங்கு சானல்ல அந்தம்மா நடிச்ச படம் வந்தது. அதுல ரொம்ப கிளாமரா நடிச்சிருந்தாங்க. அந்தக் காலத்துல தெலுங்குல ரொம்ப ஹிட் படம். இவங்களோட கிளாமருக்காகவே ஓடியிருக்கு. நீ ஒண்ணும் கேட்டுக்காதே. காலைல சரியாயிருவாங்க. படுத்துத் தூங்கு.’’
   http://www.vikatan.com/
  • By நவீனன்
   என் இடுப்பில் ஒரு கம்பளிப்பூச்சி!
    

   சிறுகதை என் இடுப்பில் ஒரு கம்பளிப்பூச்சி!   ஜ.ரா.சுந்தரேசன் உ றுத்தறதை அவர்கிட்டே சொல்லிடலாமா?
   இதுவரைக்கும் அவர்கிட்டே நான் எதையுமே மறைச்சதில்லை. ஆனா, எங்க மாமி ஒருத்தி சொல்லுவா, சிலதை மறைக்கறதிலே தப்பில்லே... சிலதை மறைச்சுத்தான் ஆகணும்னு!
   அந்த ரெண்டிலே இது எந்த ரகம்னு புரியலே!
   படவா, அவனைச் செருப்பைக் கழட்டி அடிக்கணும் போல ஆத்திரம் ஆத்திரமா வருது! அவனும் அவன் கொள்ளிக் கண்ணும்!
   ஒரே வார்த்தை... ‘அவர் வெளியிலே போயிருக்கார். எப்ப வருவார்னு தெரியாது. நீங்க அப்புறம் வேணா போன் பண்ணிக் கேட்டுட்டு வாங்க’னு பட்டுக் கத்தரிச்சாப்ல சொல்லியிருக்கலாம்.
   ஏறக்குறைய அதுமாதிரிதான் நான் சொன்னேன்.
   ஆனால், அவன் மனசிலே கள்ளத்தனம்! சில பேருடைய விஷமம் மூஞ்சியிலே தெரியறதில்லை. பரம சாது மாதிரி இருப்பார்கள். ஆனால், உடம்பெல்லாம் வக்கிரம்!
   அவன் கேட்டான்... ‘‘மொபைல் இல்லை. உள்ளே வந்து போன் பண்ணிக்கட்டுமா?’’
   ‘அவர் மறதியா மொபைலை இங்கேயே வெச்சுட்டுப் போயிட்டார்’னு எதையாவது சொல்லிச் சமாளிச்சிருக்கலாம். எனக்குத்தான் மூளையே கிடையாதே! ‘ஆஹா, தாராளமா வந்து பண்ணிக்குங்க’ன்னு வழி விட்டுட்டேன்.
   வீட்டில் தனியாக இருக்கிற ஒரு பொம்பளை ஜாக்கிரதையா இருக் கத் தெரிஞ்சு வெச்சிருக்கணும் இந்தக் காலத்திலே! அதுவும் சென்னை மாதிரி சிட்டியில் நிறையவே சோதனைகள் வரும். தனியா ஒருத்தி - கல்யாணம் ஆகாதவளோ, ஹவுஸ் வொய்ஃபோ - எப்போ... எங்கே தனியா இருப்பாள்னு சில நாய் களுக்கு நல்லாவே மோப்பம் பிடிக்கத் தெரியும்.
   ஊதுவத்தி வியாபாரம், சில்ட்ரன்ஸ் என்சைக்ளோபீடியா, கூரியர் சர்வீஸ், ரெகுலர் போஸ்ட், டிபார்ட்மென்ட் ஸ்டோர்ஸ் டோர் டெலிவரி, கோயில் நன்கொடை, எம்இஎஸ், டெலிபோன் இலாகா, கம்ப்யூட்டர் - டி.வி. சர்வீஸ் காரர்கள், பிளம்பர்... ஹப்பா! எத்தனை எத்தனை! வீடுன்னா லேசா? அதுவும் ஒரு ஆபீஸ் மாதிரி காலையிலேர்ந்து பரபரப்பா இருக்கே! எந்தப் புத்துல எந்தப் பாம்போ? என்ன வேஷத்துல எவன் வருவானோ?
   கதவு தட்டற சத்தம் கேட்டதும், லேசா திறந்து யார்னு கேட்டேன். ‘‘கோபால்ராம் ஃப்ரம் கொல்கட்டா! ரகு இருக்கானா? நான் அவனோட பெஸ்ட் ஃப்ரெண்ட்! நீல்கிரி நெஸ்ட்ல தங்கியிருக்கேன்!’’
   ‘‘அடடா! அவர் இல்லையே! டென்னிஸுக்குப் போயிருக்கார்!’’
   அப்பத்தான் அவன் உள்ளே வந்து போன் பண்ண அனுமதி கேட்டான். மொபைல் இல்லையாம். நம்பற மாதிரி இருக்கா? எங்க வீட்டு வேலைக்கார முனியம்மா கூட செல் வெச்சிருக்கா. டிப்டாப்பா பேன்ட் சட்டை போட்டிருக்கிற இவன்கிட்டே இல்லியாம். எல்லாம் ஏமாத்து. எப்படி யாவது உள்ளே வரணும். அதுக்கு வழி! நானும் அசடு. கதவைத் திறந்து வழி விட்டுட்டேன்.
   அவன் சுவாதீனமாக வந்து ஹால் சோபாவில் உட்கார்ந்துகொண்டு, அவரோட செல்லுக்கு டயல் செய்து பேசிவிட்டு வைத்தான்.
   ‘‘ரகு வெயிட் பண்ணச் சொல்றான். டென் மினிட்ஸ்ல வந்துடுவா னாம்!’’
   சோபாவில் அழுத்தமா உட்கார்ந்துட்டான்.
   வீட்டைச் சுத்து முத்தும் பார்த்துப் பிரமாதம்னு புகழ்ந்தான். போன தடவை இவர் கொல்கத்தா போனப்போ இவன் வீட்லதான் ரெண்டு நாள் தங்கினாராம்... சொன் னான். அப்போ இவன் வொய்ஃப் டெலிவரிக்காக டெல்லி போயிருந் தாளாம். ‘டெல்லிவரி’ன்னு ஜோக் அடிச்சு அவனே சிரிசிரின்னு சிரிச்சான்.
   இத்தனைக்கப்புறம் ‘காபி சாப்பிடறீங்களா?’ என்று எப்படி விசாரிக்காமல் இருக்க முடியும்?
   காபி கொண்டு போய்க் கொடுத்தபோது, ‘‘காஃபி வித் அனு!’’ன்னு சொல்லிப் பெரிசாகச் சிரிச்சான். கஷ்டம், அதுவும் ஜோக் காம்! என் பேர் அனு என்பது இவனுக்குத் தெரிஞ்சிருக்கு. இவர் சொல்லியிருப்பார். ஆனால், ‘காஃபி வித் அனு’ன்னு சொல்ற அளவுக்குச் சட்டுனு ஒரு நெருக்கத்துக்கு அவன் வந்த வேகம் சரியில் லைன்னு மனசுக்குப் பட்டுது. அதுவாவது பரவாயில்லை, முகத்துக்கு நேரே சொல்றான். ஆனா, அவன் பார்வை பதிஞ்ச இடம்... ஐயோ! அதுதான் பெரிய உறுத்தலா இருக்கு எனக்கு.
   நான் அசப்புல சிம்ரன் மாதிரி இருக்கிறதா இவர் அடிக்கடி சொல்வார். உடம்பு அந்த மாதிரி ஸ்லிம்மா இருக் கும் எனக்கு. காபி கொண்டு வரும்போது தூரத்திலேர்ந்தே கவனிச் சேன்... இந்த ராஸ்கல் என் இடுப் பையே வெச்ச கண் வாங்காம பார்த் துட்டிருந்தான். படுபாவி! அவன் பார்வை என் இடுப்புல ஒரு கம்பளிப் பூச்சி ஊர்ற மாதிரி இருந்துது எனக்கு.
   வந்தவன், காபியை வாங்கி ஒரு உறிஞ்சு உறிஞ்சுட்டுச் சொல்றான்... ‘‘அற்புதமா இருக்கு. காபி மட்டுமில்ல, உங்க ஸ்ட்ரெக்சரும்தான்! ரொம்ப சார்மிங்கா இருக்கீங்க அனு! பர்ட்டி குலர்லி யுவர் ஸ்மைல் இஸ் வெரி நைஸ்!’’
   கடுப்பை மறைச்சுக்கிட்டு, ஜோக் என்ற பேரில் அவன் உளறிக்கொட்டி னதுக்கு ஒப்புக்கு லேசா சிரிச்சு வெச்சேனே, அது மகா தப்பு!
   டெலிபோன் அடிச்சுது. எடுத்தேன். என் வீட்டுக்காரர்தான் பேசினார்.
   ‘‘நான் வர்றதுக்கு ஒரு மணி நேரம் கூட ஆகலாம். அந்தக் கொல்கத்தா வாலாகிட்டே, அவனை நான் ஓட்டல்ல வந்து பார்க்கறேன்னு சொல்லிடு. பக்கத்துல இருந்தா கொடு, நானே சொல்லிடறேன்’’ என்றார்.
   ரிசீவரை அவனிடம் கொடுத்தேன். பேசிவிட்டு, ‘‘சே!’’ என்றபடி ரிசீவரை வைத்துவிட்டுக் கிளம்பிவிட்டான்.
   அவன் ‘சே!’ சொன்ன விதம் அவன் ஒரு முழு அயோக்கியன்கிறதை எனக்குத் தெளிவாக்கிடுச்சு.
   அவன் போய்த் தொலைஞ்சான். ஆனாலும், அவன் என் ஸ்ட்ரக்சர் நல்லா இருக்குன்னு சொன்னது, என் சிரிப்பை நைஸ்னு புகழ்ந்தது, எல்லாத்துக்கும் மேலா என் இடுப்புல அவன் கொள்ளிக்கண் பட்டது... ஒரு நாள் பூரா, மறுநாளும்... அதற்கடுத்த நாளும் இவர் அவனைப் போய் ஓட்டல்லே பார்த்து ஏதோ ஷேர் விக்கிறதைப் பத்திப் பேசிட்டு வந்தப்புறமும் அந்த உறுத்தல் இருந்துக்கிட்டே இருந்தது. காதிலே ஈயத்தைக் காய்ச்சி ஊத்தற மாதிரி அவனோட குரல்...
   இவர்கிட்டே அந்த ராஸ்கலைப் பத்தி சொல்லாட்டா என் தலையே வெடிச்சுடும் போல இருந்தது. இல்லேன்னா, இந்த உறுத்தல் காலம் பூரா என்னைச் சித்ரவதை பண் ணிட்டே இருக்கும்னு தோணிச்சு.
   நாலாவது நாள் தாங்கலை. அவர்கிட்டே சொல்லிடற துன்னு தீர்மானிச்சுட்டேன். ‘‘உங்ககிட்ட சொல்ல ணும்னு நினைச்சுட்டிருந்தேன். நாலு நாளா ஒரே உறுத்தல்...’’னு சொல்ல ஆரம்பிச்சேன்.
   அதற்குள் அவர் செல் ஒலிக்க, எடுத்துப் பேசினார். ‘‘ஐயையோ! எப்போ? அடடா! த்சொ, த்சொ... நாலு நாளைக்கு முன்னே இங்க வந்திருந்து சிரிக்கச் சிரிக்கப் பேசிட்டிருந் தானே என்கூட’’ என்றெல் லாம் பேசிவிட்டு வைத் தார்.
   ‘‘யாருக்கு என்னாச்சு?’’ என்றேன்.
   ‘‘கோபால்ராம் போயிட்டானாம்டி! இங்கேகூட என்னைத் தேடி வந்திருந் தானே, அவன்! ஹார்ட் அட்டாக்காம். சின்ன வயசு... டிரிங்க், சிகரெட்னு ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது... நல்ல பையன். பாவம், ஹூம்!’’ என்று பலவாறாகப் புலம்பியவர், ஆசுவாசமான பிறகு...
   ‘‘ஆமா... உறுத்தலா இருக்குன்னு சொன்னியே! மெட்ராஸ் ஐ வரப்போகுதோ என்னவோ, ட்யூப் மருந்து போட்டுக்கறதுதானே!’’ என்றார்.
   ‘‘வேணாம். உறுத்தல் போயிருச்சு!’’ என்றேன்.
   http://www.vikatan.com/
  • By நவீனன்
   செல்லக் கிறுக்கி - சிறுகதை
     வரவணை செந்தில் - ஓவியங்கள்: ஸ்யாம்
    
   காய்கறி மூட்டைகளுடன் முன்னால் சென்றுகொண்டிருந்த `சின்ன யானை’யின் இன்ஜின் ஆயிலை மாற்றிப் பல ஆண்டுகள் ஆகியிருக்கும்போல. அதன் டிரைவர் கியர் மாற்றும்போதெல்லாம், எதிரியிடமிருந்து தப்பிக்கவென கணவாய் மீன்கள் பீய்ச்சும் கறுப்பு மையைப்போல சைலன்சரிலிருந்து குப்பென்று கரும்புகைப் பந்து வெளியாகி, ஒரு கணம் நின்று, பின் காற்றில் கலந்துகொண்டிருந்தது.

   ஒவ்வொரு முறை வீடு மாறும்போதும், `இதுதான் கடைசியாகப் போகும் வாடகை வீடு’ என்று மனம்நிறைய  நினைத்துக்கொள்ளும் நம்பிக்கை இப்போதும் இருந்தது. `விரைவில் சொந்த வீடு வாய்க்கவிருக்கிறது’ என்ற குரலை, `உங்களை ஏற்றுக்கொள்ளும் பட்டினத்தில் அவர்கள் உங்கள் முன் வைப்பதைப் புசித்து, தேவனுடைய ராஜ்யம் சமீபமாய் இருக்கிறது என்று சொல்லுங்கள்’ என்கிற வேத வாக்கியத்தின் உறுதியோடு எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.  கடவுள் நம்பிக்கையில்லாதவன் என்றாலும், நல்லதொரு எதிர்காலத்தையாவது நம்பித்தொலைய வேண்டித்தானே இருக்கிறது.

   `உழைக்க மறுக்கும் நீ ஒரு உட்டோப்பியன். கனவுலகவாசி’ என்று ஆட்காட்டி விரலால் என்னை நோக்கிக் கைநீட்டிக் குற்றஞ்சாட்டி, மது மேஜையை விட்டு எழுந்து போன உற்ற நண்பன்தான் நான் அமர்ந்திருக்கும் வீட்டுச் சாமான்கள் ஏற்றப்பட்ட மினி லாரியை ஓட்டிக்கொண்டு வருகிறான். ஒவ்வொரு முறையும் முகத்தில் எள்ளல் தொனிக்க, அவன்தான் வீடு காலி செய்ய உதவிக்கு வருகிறான் என்பது உபகதை.

   அம்மா, கோமதி, பிள்ளைகள் எல்லோரும் பொதிகையில் வந்துகொண்டிருக்கிறார்கள். நான் சென்னைக்குப் போய்ச் சேரும் நேரத்தில் ரயிலும் வந்துவிடும். சாமான்களை இறக்கச் சொல்லிவிட்டு, நான் போய் அவர்களை அழைத்து வந்துவிட வேண்டும். நாளையே பள்ளி தொடங்குகிறது. வீடும் பள்ளியும் அருகருகே கிடைத்துவிட்டன. ஆனால், வீட்டுச் சாவியைக் கொடுக்கத்தான் நாள்கணக்கில் இழுத்தடித்துவிட்டார் ஹவுஸ் ஓனர்.

   ``இந்தத் தெருவில், `ஈ.பி பில்லை நீங்களே கட்டிக்கிடுங்க’னு சொல்ற ஒரே ஓனர் நாந்தான்... பார்த்துக்கிடுங்க. எல்லாப் பக்கமும் யூனிட்டுக்கு ஏழு ரூபா வாங்குறாங்க’’ என்று, அட்வான்ஸ் வாங்கும்போது சொன்னார். ஆனால், டிஸ்டெம்பர் அடித்துத் தருவதற்கு இழு இழு என இழுத்துவிட்டார். அதனால்தான் நாளைக்குப் பள்ளியை வைத்துக்கொண்டு, நெருக்கடியான நேரக் கெடுவில் குடிவரும்படி ஆகிவிட்டது.

   ஒருவழியாக எழும்பூரிலிருந்து எல்லோரையும் வீட்டுக்கு அழைத்து வந்து, சாமான்களை இறக்கத் தொடங்கிக் கொஞ்ச நேரம்தான் ஆகியிருக்கும். ``ஏம்ப்பா... வேலை செய்றவங் களுக்கும் ,எங்களுக்கும் காபி வாங்கிட்டு வந்துரு...’’ என்றபடியே என் கையில் ஃப்ளாஸ்க்கைத் திணித்தார் அம்மா.

   பார்த்துக்கொண்டிருக்கும் வேலையைப் பாதியோடு விட்டுவிட்டு, ஃப்ளாஸ்க்கோடு கிளம்பியவனைப் பார்வை யாலேயே எரித்து அனுப்பினாள் மனைவி. மாமியாருக்கும் மருமகளுக்கும் நான் கைக்கு இசைவாக இருக்கும் வரை ஒத்தே போகாது. ஆனால், நான் வெளியூருக்குப் போய்விட்டால் பாம்பைக் கண்டு பயப்படும் குரங்குகள், ஒன்றையொன்று கெட்டியாகக் கட்டிக்கொண்டு உட்கார்ந்துவிடுவதைப்போல அப்படி ஒற்றுமையாகி விடுவார்கள். இருந்தாலும், அம்மைக்கு தம்பி வீட்டிலதான் ஜாகை. ``தெரியாத ஊருக்குப் போறோம்... பெரியவங்க வேணும்ல?’’ என்று அத்தையை அவள்தான் போய்க் கூட்டி வந்தாள். `நானா வரச்சொல்லிக் கூட்டிட்டு வந்தேன்... இங்கே வந்து நம்மை முறைக்கிறா...’ என்கிற விசனத்துடன் காபிக் கடைக்குப் போனேன்.

   ``இப்படியெல்லாம் பிள்ளையை புழுக்கை மண்டி போட விடாதேம்மா... அப்புறம் காலெல்லாம் சூம்பிப் போயிரும். வளர்ந்து நடக்கையில ரெண்டு முட்டியும் இடிச்சிக்கும்.’’

   படியேறும்போது அம்மா யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தது கேட்டது. இதுதான் அவரின் ஸ்பெஷாலிட்டி. எப்படித்தான் என்று தெரியவில்லை... யாரையும் ஐந்து நிமிடங்களில் நட்பாக்கி, தன்னைச் சுற்றிக் கூட்டம் சேர்த்துவிடுவார். இப்போதுதான் குடிவந்திருக்கும் இந்த வீட்டின் நீள அகலம்கூட இன்னும் பழகியிருக்காது. அதற்குள் கொலு பார்க்க வந்த கூட்டம்போல் பலரையும் சுற்றி அமரவைத்துப் பேசிக்கொண்டிருந்தார்.

   இதுதான் மருமகள்களுக்குக் கடுப்பான கடுப்பு. ``தெனம் எவளாவது ரெண்டு பேரு தேடி வந்துர்றாளுக... `இட்லி மாவு பொங்க மாட்டேங்குது’, `தூரம் தள்ளி தள்ளிப் போகுதுனு.’ இருக்குற பால் பூரா ஓசி காபி குடுத்தே தீர்ந்துபோகுது’’ என்கிற கோபமான புலம்பலுடன் விழும் குத்தை, நானும் தம்பியும் முறையே அவரவர் மனைவிகளிடம் குமட்டில் வாங்கிக்கொண்டுதான் இருந்தோம்.

   சாமான்கள் பரவலாக அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த வீட்டுக்குள் தேடித்தேடிக் கால்வைத்து, நான் நுழைந்தபோது அம்மாவின் காலடியில் ஒரு பெண், பிள்ளையுடன் உட்கார்ந்திருந்தாள். வீட்டுக்குள்ளும் புதிய பெண் குரல்கள் கேட்டன.

   ``அய்... அம்மா இங்கே பாரேன்... இந்த அண்ணா வச்சிருக்குற ஃப்ளாஸ்க் நம்ம வீட்டுல இருக்குறது மாதிரியே இருக்கு...’’ என்று ‘சோப்பு சீப்பு கண்ணாடி’ விஜய நிர்மலாவின் பரவசத்தோடு ஒரு வளர்ந்த பெண் அதைப் பிடுங்கிக்கொண்டு என் வீட்டுக்குள் போனாள்.

   நான் ’என்ன நடக்குது இங்கே’ என்பதைப்போல் பார்த்துக்கொண்டிருந்தேன். ஆட்களின் கசகசப்பினூடே என்னை எரித்துவிடும் செங்கதிர்ப் பார்வையை சுவருக்கு அந்தப் பக்கம் இருந்தே கோமதி என்மீது வீசுவதை உணர்ந்தேன். 

   அத்தனைபேரும் அந்த ஃப்ளாட்டில் குடியிருப்பவர்கள்தான். சென்னை ஃப்ளாட் குடித்தனக்காரர்கள், அடுத்த வீட்டுக்காரர்களுடன் பேணும் உறவுமுறைகளின் அங்கலாய்ப்புகளை நிறைய கேட்டும் படித்துமிருந்த எனக்கு, அரை மணி நேர காபி கேப்பில் பக்கத்து ஃப்ளாட்காரர்கள் என் நடுவீட்டில் வந்து உட்கார்ந்திருந்ததை நம்புவதற்குக் கடினமாகத்தான் இருந்தது. அதிலும் அந்தப் பெண் பிள்ளை என்னிடமிருந்து ஃப்ளாஸ்க்கைப் பிடுங்கியது கொஞ்சம் கடுப்பைக் கிளப்பித்தானிருந்தது.

   ``உங்களுக்குனு எப்படிம்மா வந்து வாய்க்கிறாங்க... கண்டிப்பா இந்த ஊர்க்காரய்ங்களா இருக்க மாட்டாங்க. அப்படித்தானே...’’ என்றேன் லேசான எரிச்சலுடன். சாமான்களை எல்லாம் இறக்கி வைத்து, அடுக்கி முடித்து, குளித்துவிட்டு வெளியே வந்திருந்தேன். பக்கத்து ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு, எங்களுக்கும் பார்சல் வாங்கி வந்து கொடுத்துவிட்டு, மினி லாரி நண்பனும் உடன் வந்த ஹெல்ப்பர்களும் கிளம்பிப் போனார்கள்.

   என் குரலில் இருந்த எரிச்சலை நாடி பிடித்து, ``அது என்ன பழக்கம்... முன்னப்பின்ன தெரியாத ஆளுகிட்ட கையில இருக்கிறதைப் பிடுங்குறது...’’ என்றபடி என்னுடன் `ஆமடி தங்கத்துக்கு’ ஆட்டைக்குச் சேர்ந்தாள் பாரியாள். கோமதி இருக்கும்போது அம்மாமீது வரும் எந்த வகைக் கோபம் என்றாலும், உடனடியாகவோ, அதைப் பெரிய விஷயம் என்றோ காட்டுவதில்லை. இதுதான் சாக்கு என அவளும் ஒரு ரவுண்டு களத்தில் இறங்கிவிடுவாள். உடனே கோவித்துக் கொண்டு கிளம்பிவிடுவார் அம்மா. ஆனால், அது இரண்டு நாள்தான். மூன்றாம் நாளில் அவளின் நம்பருக்கே கூப்பிட்டு ``என்ன சோறு ஆக்கினே... கொழம்பு என்ன... வெஞ்சனத்துக்கு என்ன செஞ்சே...’’ என மருமகளை மேய்க்கத் தொடங்கிவிடுவார்கள். 

   ``ஃப்ளாஸ்க்கை உன் கையில இருந்து புடுங்கினவளைப் பத்திக் கேக்குறியா... அவ ஒரு செல்லக்கிறுக்கிடா. அவளைப்போய் திட்டிக்கிட்டிருக்கே. ஒத்தப் புள்ளையாம்... செல்லமா வளர்த்திருக்காங்க. இந்த வருஷம்தான் காலேஜ் முடிச்சிருக்காளாம். செங்கல்பட்டுக்காரவுகளாம். அப்பாவும் அம்மாவும் கவர்மென்ட் வேலை பார்க்குறாங்க. அன்னிக்குக் கூட வந்தது அவங்க அம்மா. கோர்ட்டுல வேலை செய்யுதாம்...’’ என்று டீட்டெயில் கொடுத்தார் அம்மா.

   கல்லூரி முடித்தவளா அப்படி வெடுக்கென முன்பின் தெரியாத ஆளின் கையில் இருந்ததைப் பிடுங்கினாள்? கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் குரல்வேறு. அந்தக் கொஞ்சல் ஸ்லாங்கே கடும் வெறுப்பைத் தந்தது. வளர்ந்த பின்னரும் ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ பட ஜெனிலியாத்தனமாகப் பேசிக்கொண்டு திரிபவர்களைப் பார்த்தாலே எனக்கு செம எரிச்சல் ஏற்படும். இவள் அப்படியே ஜெனிலியாவை உரித்துவைத்திருந்தாள்.

   இந்த இடத்தில் காலண்டர் தாள்களைப் பறக்கவிடலாம். 

   அந்த ஃப்ளாட்டில் இருந்த 15 நாள்களில் என் வீடு நீங்கலாக, ஐந்து வீட்டுப் பெண்களுடன் பார்க்கும்போதெல்லாம் `ஹை ஃபைவ்’ அடித்துக்கொள்ளும் அளவுக்கு நட்பை வளர்த்துக் கொண்டுவிட்டார் அம்மா. வெள்ளைப்படுதல் தொடங்கி சுடிதார் லைனிங் துணி எவ்வளவு வாங்குவது என்பது வரையிலான அனைத்துக்கும் யோசனை கேட்டு எந்நேரமும் பெண்கள் கூட்டமாக இருந்தது வீடு. ``இது பெருசா இருக்கசொல்ல உரிச்சது... அதே கோழி சின்னதா இருக்கசொல்ல உரிச்சது’’ என `மகராசன்’ கமல்ஹாசன் விளக்கம்போல அம்மா ப்ளஸ் செல்லக்கிறுக்கி என்கிற கொடூர காம்போ அமைந்து ரணகளமாகவே இருந்தது வீடு. என்னையும் கோமதியையும் தவிர எல்லோரும் மகிழ்ச்சியாகவே இருந்தனர்.

   வெயிட் தடதடத்து, விசில்விடத் தயாராகும் குக்கரைப்போல் என்னைப் பார்க்கும்போதெல்லாம் கோமதி துடித்துக் காட்டினாள். `தம்பி பிள்ளைக்கு உடம்பு சரியில்லை’ என்று வந்த செல்போன் அழைப்பை சாக்காக வைத்துக்கொண்டு அதே பொதிகையில் தட்கல் டிக்கெட் போட்டு, மீண்டும் அம்மாவை ஏற்றிவிட்டேன். இருந்தாலும், அலுவலகம் முடிந்து வீட்டுக்குள் நுழையும்போதெல்லாம் அம்மா அந்த சோபாவில் இல்லாதது ‘வெறிச்’ என்றுதான் நாலைந்து நாள்களுக்கு இருந்தது.

   இதற்கிடையே பிள்ளைகளுடன் செமத்தியாக ஜெல்லைப்போல் ஒட்டிக் கொண்டாள் செல்லக்கிறுக்கி. ஆரம்பத்தில் ‘சிப்பிப்பாறை நாயின்’ கூர்மத்துடன் புருவத்தைத் தூக்கிய முறைப்போடு அவளை டீல் செய்த கோமதியும் ஒருகட்டத்தில் அவளுடன் ஒட்டிக்கொண்டாள். பெற்றோர்களின் மனதிடத்துக்கு சோதனைவைக்கும் நோக்கில், சிபிஎஸ்சி பள்ளிகள் அளிக்கும் நாளொரு ப்ராஜெக்ட்களை அன்றே முடித்துக்கொண்டு போன என் பிள்ளைகளை அசுரக் குஞ்சுகளைப்போல் மிரட்சியுடன் ஆசிரியர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். அதையெல்லாம் செய்துகொடுத்தது செல்லக்கிறுக்கிதான். ஆனால், எனக்கு மட்டும்தான் அந்தச் செல்லக்கிறுக்கியின் அண்மையை உணர்வதே வெறுப்பாக இருந்தது.

   ``அவளைப் பார்த்தா மூஞ்சி ஏன் அப்படிப் போகுது. பாவத்த...’’ என்று கோமதி என்னை சிடுசிடுக்க ஆரம்பித்தாள். பொதுவாக பெண்கள் நட்பு என்பது அமாவாசை, பௌர்ணமிபோல வளரவும் தேயவும்தான் இருக்கும். காரணம் இல்லாமலோ அல்லது அபத்தமான காரணத்துடனோ முகத்தைத் தூக்கிவைத்துக்கொள்வார்கள். அப்படியான ஒன்று செல்லக்கிறுக்கிக்கும் கோமதிக்கும் ஏற்பட்டு இருவரும் பேசாமலிருந்தார்கள். என் அளவீட்டில் எந்த மாற்றமும் இல்லாமல்தான் அந்தச் செல்லக்கிறுக்கியை வைத்திருந்தேன். மடியில் இருக்கும் நாய்க்குட்டி குஷி மிகுதியில் முகத்தை நக்கிவிடக் கூடாது என ஒருவித எச்சரிக்கையுடன் இருப்போமே... அப்படி.  

   ``என் மாமியாக்கெழவி இவளை மாதிரியேதான் செஞ்சிருக்கும் வயசுல...’’ என்று எதற்கோ இவளின் கிறுக்குத்தனங்களைச் சொல்லிக் கொண்டிருக்கும்போது ஒருநாள் கோமதி சொன்னாள். எனக்கு சுறுக்கென்று கோபம் வந்துவிட ``அவங்களை இழுக்கலைனா தூக்கம் வராதே...’’ என்பதுபோல ஏதோ திட்டிவிட்டேன். அவள் விளையாட்டாகத்தான் சொல்லியிருக்கிறாள். 

   அவர்கள் இருவரும் பேசாவிட்டாலும், மாடிப்படி வளைவுகளில் பிள்ளைகளை எதிர்கொண்டால் ஜாடை பேசுவது... அவர்களுக்குப் பிடிக்கும் பாட்டு டி.வி-யில் வந்தால், என் வீட்டுக்குக் கேட்கும் அளவுக்கு சத்தமாக வைத்துவிடுவது... மாடியில் ஹெட்போனுடன் யாருடனாவது கடலை போட்டபடி உலாத்தும்போது மழை தூறத் தொடங்கினால், கொடியில் காயும் பிள்ளைகள் உடுப்புகளை மட்டும் நனையாமல் படியில் மடித்து வைத்துவிடுவது எனச் செய்யும்  செல்லக்கிறுக்கியின் செயல்கள், `இவளிடம் பேசித் தொலையலாம்’ என்கிற எல்லைக்கு கோமதியைக் கொண்டு சென்றுவிட்டது. மீண்டும் `சின்ட்ரெல்லா’ படம் போட்ட அவளின் ப்ளிப்-ப்ளாப்கள் என் வீட்டு வாசலில் கிடக்கத் தொடங்கின.

   சென்னையின் மால்களையும், மயிலை சாய்பாபாவையும் என் குடும்பத்துக்கு சாதாரணமாக்கிவிட்டாள்... `ஞாயிறு இரவு கட்டாயம் ஓட்டல் உணவுதான்’ என்கிற பெருநகர நடுத்தரக் குடும்பங்களில்கூட உள்ள நடைமுறை... என இப்படி எனக்குப் பிடிக்காத எல்லாமே என் வீட்டுக்குள் நுழையக் காரணம் அவள்தான். என்னிடம் அவள் குறித்த க்ரைம் ரேட் ஏறிக்கொண்டே போனது. எல்லா அறிவும்கொண்ட வளர்ந்த பெண்ணாக இருந்துகொண்டு குழந்தைமையைக் கைவிட மறுத்து அவள் திரிவதே என் எரிச்சலுக்குக் காரணம்.

   அன்று கோட்டூர்புரம் போகவேண்டிய வேலை. அலுவலகத்தில் இரவு நேரம், மழைவேறு பெய்வதுபோல இருப்பதால், டாக்ஸி எடுத்துக்கொள்ளச் சொல்லிவிட்டார்கள். ஓலா புக் செய்திருந்தேன். என் தெருவுக்குள் வண்டி வந்தால் திருப்புவது கடினம் என்பதால், தெருவின் முனையில் சர்ச் வாசலுக்கு வரச் சொல்லியிருந்தேன். வரச் சொல்லியிருந்த நேரத்துக்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னதாகவே போய், சர்ச் வடமேற்கு காம்பவுண்டு சுவரில் கண்ணாடி அறையில் இருந்த மாதாவின் சொரூபத்தின் அருகில் நின்றேன். அப்போதுதான் கவனித்தேன்; தெருவின் மற்றொரு முனையில் எனக்கு எதிரே செல்லக்கிறுக்கி அவளின் மொபைலை இரு கைகளாலும் ஏந்திக்கொண்டு ஷார்ட்ஸும் டீஷர்ட்டுமாக நின்றிருந்தாள். வழக்கமாக அவள் அம்மா தாமதமாகி வீட்டுக்கு வரும் நேரத்தில், இப்படி வந்து நின்று கூட்டிச் செல்வாள். கராத்தே, சிலம்பம் சிலா வரிசையெல்லாம் சொல்லிக் கொடுத்திருந்தார்கள். அதனால் அவர்களுக்கு இவள் குறித்த பயமில்லை. கராத்தேவும் கற்றுக்கொண்டு இப்படிக் `கொஞ்சிக் கொஞ்சி மதிமயக்கும்’ லூசாகத் திரிவது இவளாகத்தான் இருக்கும்.

   கார் வந்தது. நான் நின்றது தெரு மெயின் ரோட்டில் சேரும் இடம் என்பதால், நிறுத்த வந்த டிரைவர் யோசித்து, கொஞ்சம் தள்ளிக் கொண்டுபோய் நிறுத்தினார். நான் காரை நோக்கித் திரும்பி நடக்கத் தொடங்கினேன். செல்லக்கிறுக்கிக்கு முன்னால் வந்து நின்ற பல்சரில் இருவர் இருந்தனர். பின்னால் இருந்த ஹெல்மெட் போடாத ஒருவன் அவள் இரு கைகளில் ஏந்தி நின்ற மொபைலை, வங்கியில் பணம் செலுத்தும் சலானை எடுக்கும் லாகவத்தோடு தன் இரு விரல்களால் உருவினான். என்ன நடக்கிறது என்று அவள் புரிந்துகொள்வதற்கு முன் பல்சர் ஜிவ்வென்று துள்ளியது. சட்டென்று ஓடினால், அவர்களைக் கீழேயாவது தள்ளிவிட முடியும் எனத் தாவினேன். அதற்குள் துள்ளிக் கிளம்பிய பல்சர், ஆக்ஸிலேட்டரை முறுக்கிய நிலையில் அப்படியே பிடித்துக்கொண்டுவிட்டது. வண்டி ஓட்டியவனின் கட்டுப்பாட்டில் இல்லாமல் `ரோடியோ’ காளைபோல அங்கும் இங்குமாகத் துள்ளி சர்ச்சுக்குள் புகுந்தது. அந்த இருவரும் மெழுகுவத்தி ஸ்டாண்டில் மோதி, தரையில் உராய்ந்தபடியே போய் தென்மேற்கில் பெரிய உருவமாக நின்றுகொண்டிருந்த அந்தோணியார் சிலையின் காலடியில் மோதிக் கிடந்தார்கள். உள்ளே ஓடினேன்... அந்தப் பிள்ளையும் ஓடிவந்தாள்.

   பல்சரின் டூம் உடைந்து பாழ் என்று கிடக்க, ஹெல்மெட்காரன் கையை உதறியபடி நின்றான். ஆட்கள் நெருங்கி வருகிறார்கள் என்றதும் பளிச்சென்று காம்பவுண்டில் ஏறிக் குதித்து ஓடினான். பின்னால் உட்கார்ந்து செல்போனைப் பிடுங்கியவன், இன்னும் பைக்கின் அடியில்தான் கிடந்தான். வண்டியின் இண்டிகேட்டர் விளக்கு ஒவ்வொரு முறையும் அணைந்து எரியும்போதும் `அந்தோணியாரே... எமக்காக வேண்டிக்கொள்ளும்’ என்று சிலையின் மேல் எழுதியிருந்த வாசகம் இருட்டில் தோன்றித் தோன்றி மறைந்தது.

   நடந்ததைப் பார்த்த படபடப்பும் நடுக்கமும் மேலிட அவன் சட்டையைப் பிடித்துத் தூக்கினேன். செதில்களை நீக்க சாம்பலைக் கொட்டித் தரையில் உரசிய குரவை மீனைப்போல் இடது பக்கம் கன்னம் தொடங்கி தோள்பட்டை, கை... என முழுவதும் சிராய்ந்துபோய் நின்றான். மூங்கில்தப்பை உடலும் மாட்டிக்கொண்ட ஆற்றாமையுமாக இருந்த அவனின் கைகளில் மொபைல் இன்னும் இருந்தது.

   சர்ச்சுக்குள் வந்து, எங்கள் எதிரே இடுப்பில் கைவைத்து அவனை முறைத்தபடியே நின்றாள். அவன் கீழே பார்த்தபடி அந்த மொபைலை அவளிடம் நீட்டினான். ``ஏன்டா லூஸு... இந்த போன் நாலு தடவை தண்ணியில விழந்தது. ரொம்பப் பழைய மாடல். பிடுங்கினதோட போய்த் தொலையலாம்ல... ஏன்டா கண்ணு முன்னாடியே விழுகுறீங்க...’’ என்றபடி அவனை இழுத்து அந்தோணியாரின் சிலையின் பின்னால் சுவரில் இருந்த கண்ணாடியில் காட்டினாள். தன் கோலத்தைக் கண்டு நிலைகுலைந்துபோனான் அவன்.  

   ``நீங்க போங்க அங்கிள்... ஐ ஹாஸ்பிடல்ல நான்ஸி அத்தையம்மா நைட் டியூட்டி... அங்கே போய் ஃபர்ஸ்ட் எய்டு கொடுத்துட்டு, நான் வீட்டுக்குப் போறேன்...’’ என்று சொல்லிவிட்டு, அவனைக் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு போனாள். நடந்தவை குறித்தும் அடுத்தடுத்து என்ன செய்வது என்கிற தீர்க்கமும் கொண்டவளாக அவனுடன் அவள் போய்க்கொண்டிருந்தாள். நான் காருக்குப் போனேன்.

   ``ஏன்யா... அங்கே அவ்வளவு பிரச்னை நடக்குது... வண்டியை விட்டு இறங்கி வர மாட்டியா?’’ என்று டாக்சி டிரைவரிடம் சினந்துகொண்டேன்.

   ``சார், நான் வண்டி மாத்தியே ரெண்டு நாள்தான் ஆச்சு. ஊருக்குப் புதுசு.. சாரி சார். பயந்துட்டேன்...’’ என்ற டிரைவர், ``சார்... அது உங்க பொண்ணா சார்?’’ என்று கேட்டார்.

   எந்தப் பதிலும் சொல்லாமல் இடது பக்கம் பார்த்துக்கொண்டிருந்தேன்.

   கார் எழும்பூர் அரசு கண் ஆஸ்பத்திரியைக் கடந்து சென்றது. அவளின் குறும்பு தொனிக்கும் குணங்கள் எதுவுமின்றி, முதிர்ந்த ஒரு பெண்ணாக, அவனை ஒரு செவிலியின் கருணையோடு ஆஸ்பத்திரிக்குள் நடத்திப் போய்க்கொண்டிருந்தாள்.

   கோமதி, எப்போதாவது நான் ஆமோதிக்கும் ஒன்றைச் சொல்லித்தான்விடுகிறாள் என்றுபட்டது.
   http://www.vikatan.com/
  • By நவீனன்
   நாயகி - சிறுகதை
       ஜான் சுந்தர் - ஓவியங்கள்: ஸ்யாம்
    
   டிப்பியை ஸ்டீபன் அண்ணன்  ஊட்டியிலிருந்து எடுத்து வந்திருந்தார். யாரோ ‘`நல்ல குட்டி, ஜெர்மன் ஷெப்பெர்டு க்ராஸ்’’ என்றார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

   ``சாதி  நாயும் நாட்டு நாயும் சேர்ந்து போட்ட குட்டிடா’’ ஸ்டீபண்ணன் விளக்கினார். ``ஊட்டில  பூன, நாயி, மாடு அல்லாத்துக்குமே முடி அதிகமாத்தான் இருக்கும் இல்ல டீபண்ணா’’ என்றான் இளங்கோ. அவனுக்கு `ஸ்’ வரவில்லை. வேறு சிலவும் வராது.

   `பைஜாமா ஜிப்பா’வை `பைமாமா மிப்பா’ என்பான் `இங்க’ என்பதற்கு `இஞ்ச’ என்பான். `ம்ம்... சொட்டரோடவே பொறந்துட்டா குளுராதில்ல’’ டிப்பியின் நெற்றியைத் தடவிக் கொடுத்தேன். அது என் விரல்களை நக்கியது. அதன் மீசையரும்பு விரலில்படக் கூச்சமாக இருந்தது. ``புருபுரு  பண்ணுதுடா’’ என்றதும்  இளங்கோவும் டவுசரின் பின்புறம் கைகளைத் துடைத்துவிட்டு  ``இஞ்ச வா இஞ்ச வா’’ என்றவாறு கையை நீட்டினான். கறுத்த கோலிக்கண்கள் மின்ன அவனையும் நக்கியது டிப்பி. தேநீர்க்கடையில் புதுரொட்டி வந்து இறங்கும்போது வாங்கி, அதைப் பிட்டு உள்ளே பார்த்திருக்கிறீர்களா? அதுதான் டிப்பியின் நிறம். ஈரச்சந்தனம் காய்ந்து வெளுத்தாலும் அப்படித்தான் இருக்கும். ரொட்டியின் மேற்புறக்காவி சற்றே வளைந்து வெளுக்குமில்லையா? அதுதான் டிப்பியின் வயிற்றோரத்து நிறம். ஓடிவரும்போது வாழைப்பழத்தோல் காதுகள் இரண்டும் எழுந்தெழுந்து விழும். உயிரை விரித்து அணைத்துக் கொள்ளத் தூண்டும் அழகு.

   வீட்டில் என்னை `டிக்கா’ என்று கூப்பிடுவார்கள். `கிருஷ்ணமூர்த்தி’ எனப்படும் நபர் `கிட்டு’வாகி `கிட்டான்’ ஆவதுபோல என் தாய்மாமன் அவரோடு `லிப்டன் டீ’ கம்பெனியில் பணிபுரிந்த வெள்ளைக்கார தோஸ்த்தின் நினைவாக வைத்த `டிக்ரூஸ்’ என்ற பெயர் `டிக்கு’வாகி `டிக்கான்’ என்றானது. `டிக்கானும்  டிப்பியும்’ என்றால் பொருந்திப்போகிறதா இல்லையா? எனவே, நான் அதை  டிப்பி  என்று நினைத்துக் கொண்டிருக்க ஸ்டீபண்ணனோ `ட்டிப்பி’ என்றே விளித்தார். அதிலென்ன? நான் என் இஷ்டப்படி அழைத்தேன். மற்றவர்களையும் அப்படியே சொல்ல வைத்தேன்.
   ஸ்டீபண்ணனின் அம்மா, அக்காஆஞ்சி, தங்கைகளான, லல்லி, பெமிலா, சுகுணா, அப்புறம் சின்னவள் சிட்டு வரையிலுமான எல்லோரும் `ட்டிப்பி’ என்று `T’ போட்டு அழைக்க   நான் எனது வலுவான முயற்சியில் இளங்கோ, ரமேஷ், குணான், வீதிக்காரர்கள், அதைத்தாண்டி  பள்ளித் தோழர்கள், மளிகைக்கடை அண்ணாச்சி, டீக்கடை ஆறுமுகண்ணன், உப்புக்காரத் தாத்தா, கடலைக்கார பாய் , இஸ்திரிக்காரக்கா, இட்லி, ஆப்பம் விற்று வரும் அண்டாக்காரக்கா எல்லோரையும் `D’ போட்டு டிப்பி என்றழைக்க வைத்தேன்.

   அண்டாக்காரக்காவின் இட்லியை டிப்பிக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும், அந்தக்காவுக்கு டிப்பியைப் பிடித்திருந்தது குறித்து ஆச்சர்யமாக இருந்தது. டிப்பியை ஸ்டீபண்ணன்தான் வளர்க்கிறார் என்றாலும், அது எங்களுடையதும்தான். ஒட்டுச்சுவர்கொண்ட நடுத்தர வர்க்கத்தினரிடம் மிகுந்து கிடக்கும் ‘ஒண்ணுக்கொண்ணு ஆதரவு’,  `நேந்து கலந்து போறது’, `உன்னவிட்டா ஆரிருக்கா?’  போன்ற வாக்கியங்கள், தடித்த காம்பவுண்டு சுவர்களுக்குக் கிட்டாது.

   ஞாயிற்றுக்கிழமையானால் ஸ்டீபண்ணன் டிப்பியைக் குளிக்க வைப்பார். உதவிக்கு நானும் சுகுணாவும். துவைப்பதற்கான சோப்பை   நனைத்து நுரையைக் கிளப்பி அவர் தேய்க்க, நாங்கள் இருவரும் கீழே விழுகிற நுரையை அள்ளியள்ளி டிப்பியின் நெற்றி, முதுகு, தாடை, முன்னங்கால் மேலெல்லாம் ஒட்டவைத்து ரமணிக்கா வீட்டு வெள்ளை `புஸுபுஸு’ நாய் `ஷீலா’வின் தோற்றத்துக்கு மாற்றப் பார்ப்போம். அவ்வப்போது நாக்கை வெளியே தொங்கவிட்டு வாயைத் திறக்கும்  கணத்தில் டிப்பி பற்களைக்காட்டிச் சிரிப்பது போலிருக்கும். அசட்டுச் சிரிப்பு. அற்பருக்கும் ஞானிகள் வழங்கும் அதே சிரிப்பு. திறந்தே வைத்திருக்கும் வாயைத் திடுமென மூடும்போது கோபித்துக்கொள்வதுபோலவும் இருக்கும். எதிர்பாராத நேரத்தில் டிப்பி தனது மொத்த உடலையும் உதறும்.  நீரும் நுரையும் மூவர் மேலும் சிதறும். எளிய வாழ்வின் மகோன்னத அழகு பொங்கும் அந்தத் தருணத்தைப் பிடித்துவைத்துப் பார்த்தால் அரக்கு நிறத்தில் அரைக்கால் சட்டையணிந்த சிறுவன், கருநீலத்தில் வெள்ளை பூத்த பாவாடைச் சிறுமி, அவளது மடித்த சடை, அதை வெயில் கொஞ்சுவதால் கறுப்பிலிருந்து கசியும் ஓரச்செம்பட்டை, செம்மலர்ந்த ரிப்பன் பூக்கள், மௌனசாட்சியான துவைக்கிற கல், கல்லையே பிரதியெடுத்து நெஞ்சில் வைத்தாற்போல உழைப்பின் திரட்சியோடான வெற்றுமாரிளைஞன், பஞ்சும் பொன்னுமாயொரு கண்மின்னும் நாய்க்குட்டி, வெளி முழுக்கத் தெறிக்கும் நிறமிழந்த நீர்த்திசுக்கள், சோப்பு நுரை பூமியுருண்டைகள், அதிலோடும் ஏழு வண்ண நதி, இரண்டாய் பிளந்த தக்காளி தனது விதைகள் தெரியத் திறந்து மூடி திறந்து மூடி பறப்பதுபோல பறக்கும் பட்டாம்பூச்சி, இத்தனையும்  காட்சிப்படும்.

   டிப்பியின் மேலுள்ள எனதன்பை அதற்குப் புரியவைக்க நான் திட்டம் வகுத்துச் செயல்புரிந்தேன். தன்னுடைய பழைய பெல்ட்டை அறுத்து டிப்பியின் கழுத்துப் பட்டையாக்கியிருந்தார் ஸ்டீபண்ணன். நான் என் தலைமுடியிலிருந்த தேங்காயெண்ணைப் பிசுக்கை உள்ளங்கையில் தேய்த்தெடுத்துக் காய்ந்த விரிசல்களுடன் இருந்த பட்டையின் மேற்பரப்பு பளபளத்து மின்னும்வரை தேய்த்தேன். பக்கிளைத் தாண்டித் தொங்கிக் கொண்டிருந்த பெல்ட் நுனிக்கு சுகுணாவின் ஜடையிலிருந்த `லப்பர் பேண்டை’ கழற்றிப் போட்டுக் கம்பீரத்தை கனகம்பீரமாக்கினேன். கறிக்குழம்பு நாள்களில் எலும்புகளைச் சேகரித்தேன். பந்தை வீசி, அதைக் கவ்விவரப் பழக்கினேன். பத்துப் பைசாக்களை டிப்பியின் வாலைப் பிடித்து ஆட்டும் வருக்கிகளாக மாற்றினேன். கையை டிப்பியின் வாய்க்குள் மணிக்கட்டுவரை விட்டு எடுத்தேன். இளங்கோ கண்களை விரிப்பான். `‘எஞ்செ நெஜமா கடிக்கலையா?’’

   ஆள்காட்டி விரல்கொக்கியால் என் வாயோரத்தைக் காதுவரை இழுத்துக் கண்ணாடியில் பார்க்க முயன்றபோது தலையில் கொட்டு விழுந்தது. அம்மா! ``டிப்பிக்கு கடவாப்பல்லு மூணும் ஒண்ணா சேந்திருக்கும்மா! நமக்கெல்லாம் தனித்தனியா தான இருக்கு?’’ மல்லாந்தபடி டிப்பி என்னோடு விளையாடிக்கொண்டிருந்தபோது அதன் வாயின் மேலண்ணம் ஸ்டீபண்ணனின் வயிறு கணக்காக கட்டுக்கட்டாய் வரியோடித் தெரிந்தது. மைதானத்தில், மரமேறுவதில், மல்லுக்கட்டுவதில் ஆகும் என் காயங்களை நக்கி நக்கியே ஆற்றிவிடும் டிப்பி.

    ஸ்டீபண்ணன் மீது எனக்குப் பொறாமையாக இருந்தது. இன்றுவரை எனக்கு நாக்கை மடித்து சீழ்க்கையடிக்கத் தெரியவில்லை. ரமேஷ்கூட அடிக்கிறான்.  ஸ்டீபண்ணன் தனது சீழ்க்கை சப்தத்தில் டிப்பியை மயக்கி வைத்திருந்தார். பக்கத்தில் இருப்பவர் காது கிழிய `ஃபீல்ல்க்க்க்க்’கென ஸ்டீபண்ணன் சீழ்க்கையடித்தால், எங்கிருந்தாலும் புழுதியெழப் பறந்துவரும் டிப்பி. அர்ச்சுனனைப் பிடித்தபோதுதான் டிப்பி வீதியின் செல்ல நாயானது. பித்தளைப் பாத்திரங்களைத் திருடிக்கொண்டு ஓடிய அவனைக் கவ்விய அது ஸ்டீபண்ணன் வந்து ``விடுடீ பாப்பா’’ என்று சொல்லும்வரை விடவில்லை. ``ச்சே! அவன் சொல்றவரைக்கும் விடல பாருங்க, என்னா அறிவு’’ என்றார்கள். தவிர அர்ச்சுனின் கையைக் கவ்வியிருந்தபோது அவளது உறுமல் பயங்கரமாயிருந்தது. எனக்கு அவளருகில் போகவே பயமாயிருந்தது. மேலும் என்னைப் பார்த்தாளா என்பதிலும் குழப்பம். ``பட்டேல் ரோட்லருந்து இங்க வந்து திருடுற அளவுக்குப் பெரியாளாயிட்ட... ஏண்டா?’’ என்று மிரட்டிய கையோடு ஓங்கி அவனை அறைந்தார் போலீஸ்காரர்; பின்பு டிப்பியின் கழுத்தைத் தடவி ஒரு பாராட்டும். பட்டறைக்கார ராமண்ணன் ``டேஷனுக்கு வேணா கூட்டுப் போங் சார். கொலகாரனையெல்லாம் புடிச்சுக் கொதறி வெச்சுரும். பயங்கர அறிவு அதுக்கு’’ என்றார். டிப்பியின் படம் செய்தித்தாளில் வந்தது.

    வ.உ.சி மைதானத்தில் நாய்கள் கண்காட்சி. டிப்பியைக் கூட்டிக்கொண்டு அங்கே போகலாம் என்று ஸ்டீபண்ணன் சொல்ல, கிளம்பிவிட்டோம். ஹையோ! அங்கே எத்தனை வகை நாய்கள். ரமணியக்கா வீட்டிலிருந்ததுபோல வெள்ளை புஸுபுஸு நாய்கள் நிறைய இருந்தன. ரமணியக்கா வீட்டின் உள்ளேயே அந்த புஸுபுஸூ நாயைச் சங்கிலி போட்டுக் கட்டிவைத்து வளர்ப்பதால் கிட்டே போய்ப் பார்க்க முடிந்ததில்லை. அதற்கென்று தனியாக சோப்பு, பவுடரெல்லாம் உண்டாம். ஷீலா அவ்வப்போது சங்கிலியுரச ரோட்டுக்கு ஓடி வந்துவிடும். பின்னாலேயே ரமணியக்கா புருசனோ, மகனோ ஓடி வருவார்கள். ஷீலா, `பொமரேனியன்’ சாதி என்பதை  நாய்கள் கண்காட்சியில்தான் தெரிந்துகொண்டேன். அப்புறம் `லேப்ரடார்’ சாதி அழகுக்குட்டிகளையும் பார்த்தோம். சீமாட்டிகளின் கைப்பைகளைப் போலிருந்த பொடிக்குட்டி நாய்கள், சீமாட்டிகளைப் போலவே மிதப்பான பாவனையுடனான நாய்கள்,  உடலெங்கும் மை சிந்திவிட்டதுபோலிருந்த நாய்கள், சப்பை மூக்கன்கள், கிழட்டுத்தோலன்கள், மனிதத் தொடையிலிருந்து அரை கிலோ கறியைப் பிரித்தெடுக்கும் `காவல்வீரன் டாபர்மேன்’கள். `கொரவளச் சங்கயே கவ்விப்போடும்’ என்றார் `வெள்ளை வேட்டி’ தாத்தா. சில நாய்களுக்கு அவற்றின் எஜமானர்கள்போலவே முகமும் இருந்ததைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். சீனர் போலிருந்த ஒருவரது இரண்டு நாய்களுக்கும் கண்கள் இடுங்கி இருந்தது மட்டுமல்லாது, அவரைப் போலவே பின்புறத்தை ஆட்டி ஆட்டி நடந்தன.

   ``நெஜமாவே அவன் சைனாக்காரன்தான்டா... பல் டாக்டரு’’ என்றார் ஸ்டீபண்ணன்.  கறுத்துப் பெருத்த போலீஸ்காரரின் `புல்டாக்’ ஒன்று தனது ஒற்றைப் புருவத்தை மேலே உயர்த்தி முறைத்ததாகச் சுகுணா சொன்னாள். இருக்கும் என்றுதான் நானும் நினைத்தேன். கறுத்த முகத்தின்  இரண்டு புருவங்களின் மேலும் ஒவ்வொரு ஆரஞ்சு வண்ணப்புள்ளிகளைக்கொண்ட நாயைப் பார்த்தபோது ஏனோ பயமாயிருந்தது. முகம் முழுக்க முடியோடிருந்த  சடைநாய்க்குட்டிகளைப் பார்க்கப் பார்க்க ரொம்ப வேடிக்கையாக இருந்தது. சுகுணாவுக்கு ஒரே சிரிப்பு. குள்ளமான நாய்க்குட்டிகளையும் பார்த்தோம். தரையோடு ஒட்டிய நீளக்குள்ளம். உருண்டுவிடாமலிருக்க தடுப்புவைத்த மாதிரி குட்டிக் கால்கள், நீளக் காது. ``ச்சே... காசிருந்தா வாங்கலாம்... இல்ல பையா’’ என்றாள் சுகுணா. அந்தக் குட்டியின் சாதிப் பெயர் மட்டும் விளங்கவில்லை. இங்கிலீஷ் டீச்சர் ராஜேஸ்வரி `Does not’  என்று எழுதிவிட்டு அதை `டஷின்ட்’ என்று படிப்பார்கள். எனக்கு ஒரே குழப்பம். அந்த மாதிரிதான் ஏதோ சொன்னார்கள். நண்பர்களிடம் குறிப்பிட்டுச் சொல்ல `குள்ள நாய்’ என்பது போதாதா?

   ஒலிப்பெருக்கியில் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ளப்போகும்  நாய்களின் பெயர்களை உரிமையாளர்கள் பெயரோடு அறிவித்தார்கள். நான்கைந்து ஜோடிகளுக்குப் பிறகு ‘ஸ்டீபன் – ட்டிப்பி’  என்று அறிவித்தார்கள். `ட்டிப்பி’ என்று  சொன்னதும் காதுகளை விடைத்துப் பின்பு இயல்பானது டிப்பி. ஸ்டீபண்ணன் டிப்பிக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஓடுபாதையின் எண்ணைக் கேட்டுவந்தார். நான்காம் நம்பர். போட்டிக்கு நின்றிருந்த நாய்களையும் உடனிருந்த பயிற்றுநர்களையும் பார்த்தாலே நெஞ்சு நடுங்கியது. டிப்பியைத் தவிர, எல்லாமே உயர் ரக சாதிநாய்கள் என்பது மட்டுமல்ல; டிப்பி மட்டும்தான் `பொம்பளப் புள்ள’. மற்ற எல்லோருமே `தடிப்பசங்க’ளாயிருந்தான்கள்.   கொடும் வெயில். சில நாய்களின் வாயிலிருந்து நீரொழுகியது. பயிற்றுநர்கள் அனைவரும்  பந்தயத்தில் கலந்துகொள்ளும் நாய்களுக்கு எதிர்த்திசையிலிருந்து அவற்றை அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். ஸ்டீபண்ணன் என்னிடம் டிப்பியைப் பிடித்துக் கொள்ளச்சொல்லிவிட்டு எதிர்த்திசைக்குப் போய் நின்றார். எங்களுக்குப் பின்னால்  வேடிக்கை பார்க்க நின்றிருந்தவர்கள் எங்களை ``சொறி நாயையெல்லாம் எதுக்குடா தம்பி கூட்டிட்டு வர்றீங்க? போலீஸ் நாயிங்ககூட ரேஸ் விட்டு ஜெயிக்கவா?’’ என்று கிண்டல் செய்து சிரித்தார்கள். கொடியசைத்ததும் பயிற்றுநர்கள் தங்கள் நாய்களை அழைக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். நான் அரைமண்டியில் அமர்ந்து டிப்பியின் பின் பகுதியைப் பிடித்துக் கொண்டேன். அதன் காதருகில் சுகுணா ரகசியக் குரலில் ``எப்படியாச்சும் ஜெயிச்சுரு டிப்பி’’ என்றாள். மற்ற நாய்கள் எதிரிலிருந்த தங்களது எஜமானர்களையே பார்த்தபடி துள்ளலோடிருக்க, டிப்பியோ ஸ்டீபண்ணனைக் கவனித்ததாகவே தெரியவில்லை. பக்கத்து நாய்களையும் சுற்றியிருந்தவர்களையும் மிரள மிரள வேடிக்கை பார்த்தபடியிருந்தது. அதன் வாலை பின்னங்கால்களுக்கிடையே தழைத்து வைத்திருந்ததைப் பார்த்த எனக்குக் கவலையாக இருந்தது. மைதானத்தைச் சுற்றியிருந்தவர்கள் எழுப்பிய சப்தத்தில் மிரண்டிருக்கிறதோ என்னவோ?

   `ரெடி ரெடி’ என்றார்கள். `ப்ப்ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்’ரென்ற விசிலோடு சிவப்புத்துண்டை ஆட்டி சமிக்ஞையும் கொடுத்தாயிற்று. நாய்கள் திமுதிமுவென ஓட எழுந்த புழுதியிலும் மைதானத்து ஜனங்களின் `கமான்...கமான்... ரோஸி’ போன்ற கூச்சல்களிலும் ஒன்றுமே புரியவில்லை. சுகுணாதான் எகிறியெகிறிக் குதித்தவாறு ``ஏய்... ட்டிப்பி ஓடு...அட... ஓடு சனியனே’’ என்று அலறினாள். மறு முனையிலிருந்த ஸ்டீபண்ணன். ``ட்டிப்பி...ட்டிப்பி’’ என்று கத்தவும் செய்தார். கடைத்தெரு பைத்தியம்போல சாவகாசமாய் நடந்த  டிப்பி, ஓடுபாதையைவிட்டு விலகப்போன நொடியில் ஸ்டீபண்ணன் தயக்கத்தைத் துறந்து நடுவிரலையும் கட்டைவிரலையும் ஒன்றுசேர்த்து நாக்குக்கடியில் நுழைத்து மடக்கி `ஃபீல்ல்க்க்க்க்’கென சீழ்க்கையை அடித்தவுடன் டிப்பி அனிச்சையாக துள்ளித் தெறித்ததைப் பார்க்க வேண்டுமே... அது ஸ்டீபண்ணனை எப்போது அடைந்திருந்தது என்பதே தெரியவில்லை. நொடிகளில் இவையெல்லாம் நடந்து முடிந்திருக்க மைதானமே ஆர்ப்பரித்துக் கரங்களைத் தட்டியது. பலத்த கூச்சல்களுகிடையில் ‘ஸ்டீபன் – ட்டிப்பி... முதல் பரிசு ஸ்டீபன் – ட்டிப்பி’  என்ற அறிவிப்பைக் கேட்டதும் மாரியாத்தா வந்திறங்கியதுபோல் ``ஏய்....ஏய்...’’ எனத் தன்னை மறந்து வீறிட்டாள் சுகுணா. எனக்குச் சந்தோஷமும் அழுகையும் கலந்துவர என்ன செய்வதென்று புரியாமல் விழித்தேன். `டிக்கா- டிப்பி... முதல் பரிசு டிக்கா- டிப்பி’ என்று அறிவித்திருந்தால் ஆகாதா?  ஸ்டீபண்ணனின் ஒரு கை வெற்றிக்கோப்பையை ஏந்திப் பிடித்தபடியும் மறு கை டிப்பியின் தலையைத் தடவியபடியுமிருக்க நானும் சுகுணாவும் அருகில் அமர்ந்திருந்த டிப்பியின் படம் இன்னொரு முறையும் செய்தித்தாளில் வெளியானது. 

   குரங்கு பெடல்போட்டு சைக்கிளோட்டிக் கீழே விழுந்தால், முழங்கையில் நமக்கு ஆகும் சிராய்ப்பின் மேல்த்தோல் இரண்டு மூன்று நாள் கழிந்தவுடன் கறுத்துத் தடித்து எழும்பும்தானே? அதை இன்னும் இரண்டு மூன்று நாள்களுக்கு அப்புறம் அரிப்புத் தாங்காமல் பிய்த்து எடுத்தால் இளஞ்சிவப்பில் இருக்குமே, அப்படி  ஒன்றிரண்டு காயங்கள் டிப்பியின் முதுகில்  கொத்துக்கொத்தாய் முடியில்லாமல் செந்தோலாய்த் தெரிந்தன.  எல்லாம் ஈரக்காயங்கள். டிப்பி சைக்கிளா ஓட்டுகிறது? அப்படியே போனாலும் முதுகில் எப்படி? இளங்கோதான் மல்லாக்க விழுவான். டிப்பிக்கெல்லாம் ஆனாலும், வயிற்றில்தானே ஆகும்? ஆஞ்சிக்காவிடம் டிப்பியின் புண் பற்றிச் சொன்னபோது ``ஆங் அது வண்டுக்கடிதான் வேப்பெண்ண வாங்கி ஊத்தி விடுங்கடா சரியாயிடும்’’ என்றாள். அதே மாதிரி வாங்கி `நல்லா சொதம்ப’ ஊற்றிவிட்ட நான்கைந்து நாள்களில் காய்ந்து, வழித்தடத்தில் புல் முளைத்த மாதிரியிருந்தது. அப்புறம் புண்ணிருந்த இடத்தையே காணோம்.  எப்போதாவது டிப்பி தன் வாலைத் தானே கடித்தபடி வெறிகொண்டு சுற்றினாலோ, எட்டாத முதுகுக்குத் தனது கோரைப்பல்லைக் காட்டி உறுமினாலோ ஆஞ்சிக்கா வேப்பமரத்தடி நிழலில் சணல் சாக்குப்பையை விரித்துப்போட்டு உட்கார்ந்து ``வாடி ட்டிப்பி.. வந்து படு’’ என்பாள். அவள் கையில் ஹார்லிக்ஸ் பாட்டிலின் தகர மூடியில் கொஞ்சம் மண்ணெண்ணை இருக்கும். டிப்பியும் நல்லபிள்ளையாக வந்து அவளது தொடையில் தலைவைத்துப் படுத்துக்கொள்ளும். பெண்கள் நம் தலைமுடிக்குள் கையை  நுழைத்து நகத்தால் நிரவி, விரலால் தேடி ஈரையோ, பேனையோ, ஒட்டுக்குஞ்சையோ நசுக்கியபடியே பேச்சுக் கொடுக்கும்போது, கண்கள் நிலைகுத்திக் கொள்ளுமே... அது என்னவகை போதை? போதைக்கு அடிமையாகிவிட்ட டிப்பியும் ஆஞ்சிக்காவின் மடியில் மல்லாந்து படுத்துக் கொண்டு கண்களை `டோரி’யாக்கிப் பல்லிளித்தபடி தியான நிலைக்குத் தயாராகும். ஆஞ்சிக்கா அதன் காது மடல்களைப் பிடித்து உட்பக்கம் வெளிவரும்படி விரிப்பாள். உள்ளே கும்பலாய், குடும்பமாய், தனித்தீனியில் தடித்துப்பெருத்ததாய்,  விதவிதமான அளவுகளில் ஒட்டுப் பொட்டுகளைப்போல மொய்த்துக் கிடக்கும் உண்ணிப்பூச்சிகள். அழுக்குப்பழுப்பும் அழுக்குப் பச்சையும் கலந்த நிறத்தில் தடிமனான தோலைக்கொண்ட உண்ணிகள், டிப்பியின் கால்விரல்களுக்கிடையில், காதுகளில், பிடறி முடியில், முதுகில், தாடையில், வயிற்றில் அங்கிங்கெனாதபடி உடலெங்கும் நிறைந்திருக்கும்.  அவைகளைப் பிய்த்தெடுத்து  தகர மூடி மண்ணெண்ணையில் ஊறவைத்துச் சேகரித்தால் மம்மானியமாய்ச் சேரும். உண்ணி கடித்த காயத்துக்கும் ஒரு பொட்டு மண்ணெண்ணையே மருந்து.  நாயுண்ணிகளை, இளங்கோ விதவிதமாய்க் கொல்வான். அடியாட்கள் மாதிரியான `ஆள்காட்டி’, ’கட்டை’ ஆகிய இரண்டு விரல்களால் அழுத்தி `புளிச்’சென்று ரத்தம் தெறிக்க நசுக்கிக்கொல்வது, கல்லில் வைத்து சுத்தியலால் நச்சுவது, காகிதக்கப்பல் செய்து நாயுண்ணிகளை அதிலேற்றி சாக்கடையில் மிதக்கவிட்டு  மூழ்கடிப்பது, எறும்பூறும் இடங்களில் அவைகளை மல்லாக்கப்போட்டு அவற்றை இழுத்துக்கொண்டு எறும்புகள் `ஊர்வலம்’ போவதைப் பார்ப்பது போன்ற கொடூரங்களில் அவன் நிபுணன்.  நான் நல்லவன். தகரமூடியை அப்படியே பற்றவைத்து எரிப்பதோடு சரி. வேறு நுட்பங்கள் தெரியாது.

   இந்த ஒரு `வாரமாவே’ நான் ’வெளாட’ போகவில்லை. காரணம், நான் இளங்கோவிடம் `பேசறதில்ல’ காரணம், அவன்மீது பயங்கர `கடுப்புல’ இருந்தேன். அவனுடைய `கோலிகுண்டுக’, `சிகுரேட்டு அட்ட’, `டீப்ட்டி அட்ட’, `டீச்சுக்கல்லு’, ’பெத்தவாட்ஸ் பொம்பரம்’, `மசே மசே லப்பர் பந்து’ போன்ற சேகரிப்புகள் எல்லாவற்றையும் எங்கு ஒளித்து வைத்திருப்பான் என்று எனக்குத் தெரியும். `அவங்க அவ்வா’ படுத்துக்கொள்கிற கட்டிலின் கீழே மண்பானையில் கொஞ்சமும் பிரிட்டானியா பிஸ்கெட் அட்டைப்பெட்டியில் கொஞ்சமுமாக ஒளித்து வைத்திருக்கிறான். `அத்தனக்கிம் சீமண்ணய ஊத்தி பத்த வெச்சறலாமா’ என்கிற அளவுக்குக் கோபம். இத்தனைக்கும் அவன் பார்த்ததைத்தான் சொன்னான் என்றாலும், நாகரிகமில்லாமல் இப்படியா பொட்டப்புள்ள முன்னாடி பேசுவாங்க? ச்சே! கருமம்... கொஞ்சம்கூட வெட்கமில்லாமல் அவளிடமே `ஏ சுகு.. ரோட்டுக்கு ஓடிப்போயி பாருப்பா, அண்ணாச்சியோட கருப்பு நாயி உங்க டிப்பிய புடிச்சு டொக்குப் போட்டுட்டுருக்கு’ என்று சொல்லிவிட்டான். `அய்யே... ச்சீ கருமம் போ பையா’ என்றவள் வீட்டுக்குள் ஓடிவிட்டாள். நான் இவனைப் பயங்கரமாக முறைத்துப் பார்க்கத் திரும்பினேன். அவன் அங்கு இல்லை. ஓடிவிட்டான். நானும் ஓடினேன் ரோட்டுக்கு.

   குணானும்,ரமேஷும் என் பம்பரத்துக்குக் குத்து வைத்துக்கொண்டிருக்கும்போது, எங்களைத் தாண்டி இளங்கோ ‘`டேய் குணா இஞ்ச வா... இஞ்ச வா, அஞ்ச வந்து பாரு’’ என்று சொல்லியவாறே வெகு வேகமாக ஓடினான். அவனது இடக்கையில் பெத்தவாட்ஸும், வலக்கையில் சாட்டை நுனியுமிருக்க மறு நுனியில் மாட்டியிருந்த சோடாமூடித் தரையில் உரசும்போது ஒரு குரலிலும் தார்ரோட்டில் உரசும்போது இன்னொரு குரலிலும் அலறிக்கொண்டே போனது. சன்ன அலறல்.  என் பம்பரத்துக்கு இன்னும் நாலைந்து குத்துவைக்க வேண்டிய குணான் அப்படியே போட்டுவிட்டு ஓட, பின்னாலேயே ரமேஷும் ஓடினான். எனது பம்பரத்தை `தப்பிச்சடா ராஜா’ என்றபடி எடுத்துச் சாட்டையை ஓடியபடியே சுற்றி, ஓடியபடியே டவுசர் பாக்கெட்டில் வைத்தேன். அது `ச்சுஞ்சு’ மணியில் இடிக்கவும் ஓடியபடியே கையைவிட்டு இடம் மாற்றி வைத்தேன். ரோட்டோரம் கூட்டமாக இருந்தது. `அப்பிடியே நசுக்கிட்டுப் போயிட்டான் லாரிக்காரன்’ யார் யாரோ பேசிக் கொண்டார்கள். `ச்சேய்... கண்கொண்டு பாக்க முடியல, இதான் நான் எதையிம் வலத்தறது கெடயாது’ என்றார்கள். நான் கூட்டத்துக்குள் புகுந்தேன். `இப்பத்தான் குட்டி போட்டுச்சாம்’. கூட்டத்தின் கால்களுக்கிடையில் ரத்தச்சகதி தெரிய எனக்குத் தொண்டையெல்லாம் வறண்டு இருதயம் தொப்பு தொப்பென்று அடித்துக்கொள்கிற சப்தம் தலைக்குள்  கேட்கிறது.

   `எப்பூமே இந்தப் பக்கம் வராதாம்’ பூத்துவாலையை உதிரக்குழம்பில் நனைத்துப்போட்டதுபோல் ஏதோ கிடக்க நான் வேகமாக வெளியே வந்துவிட்டேன்.

   ``அப்படி ஓரமா இழுத்துப் போட்டுரு ஸ்டீபா, ஏன்னா, வர்ற வண்டியெல்லாம் திரும்ப ஏறும்’’ கடலைக்கார பாய்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார். ஸ்டீபண்ணன் இங்குதான் இருக்கிறாரா? இதை எப்படித் தாங்குவார்? எனக்கு அழுகை வந்தது. மெல்ல விசும்பினேன். ஏதோ பெண் குரல் அலறும் சத்தம் கேட்டது. சுகுணாவா? வேறு மாதிரி இருக்கிறது. சுகுணா அழுது நான் கேட்டதில்லையே... இல்லை இல்லை கேட்டிருக்கிறேன். அவளுடைய அம்மா எதற்காகவோ வாசலில் வைத்து கருநொச்சிக்குச்சியால்  அடித்தபோது அழுதாளே... ``ஷீலூ... அய்யோ ஷீலுக்குட்டீ’’ அலறல் கூடுதலாகி வீறிட்டபோது ``விடுக்கா  என்ன பண்றது. அதோட நேரம் முடிஞ்சது, போயிருச்சு’’ என்றது ஸ்டீபண்ணன்தான். பரவாயில்லை, ஸ்டீபண்ணன் கவலைப்படாமல் இருக்கிறார்.

   ``அய்யோ இன்னும் கண்ணே தொறக்கலியே, அதுங்க என்ன பாவம் பண்ணுச்சு கடவுளே’’

    யாரது? ``யார்ரா அழுகுறாங்க’’  ரமேஷிடம் கேட்டேன். ``ம்ம்... டீ.விக்காரக்கா’’ என்றான் அவன். என்னது ரமணியக்கா அழுகிறதா? ஓஹோ, அடக்கடவுளே! அப்போ அது டிப்பியில்லையா? நான் கூட்டத்துக்குள் மறுபடி நுழைந்து நின்று கவனித்தேன். ரத்தத்துவாலைதான் கிடந்தது. சந்தனமில்லை.வெள்ளை. உண்ணிப்பாகப் பார்க்கவும் புரிந்தது. அது ரமணியக்காவின் வெள்ளை புஸுபுஸு நாய் `பொமரேனியன்’ ஷீலா. ஸ்டீபண்ணன் கூட்டத்திலிருந்து வெளியே வந்து விலகி நின்று சீழ்க்கையடித்தார்.

   கொஞ்ச நேரம் கழித்து ஓட்டமும் நடையுமாக டிப்பி வந்தது. மெல்லிய தளர்வோடான நடை. ஸ்டீபண்ணன் மண்டியிட்டமர்ந்தார். ``வாடா பாப்பா’’ டிப்பியை முத்தமிட்டார். குழந்தையைக் கொஞ்சுவதுபோல் கொஞ்சிக்கொண்டே இருந்தவர் அழத்துவங்கினார். ``பாவம்டா பாப்பா’’ என்பது கேட்டது. ``விடுங்க விடுங்க அவன் பேசட்டும் விடுங்க’’ கடலைக்கார பாய் யாரும் அவர்களுக்கிடையில் போக வேண்டாம் என்பதைத்தான் அப்படிச் சொன்னார் போலிருக்கிறது. எல்லோரும் தள்ளியிருந்தே பார்த்தார்கள். டிப்பியை ஷீலாவின் உடலருகே கூட்டிப்போனார். டிப்பி முகர்ந்துவிட்டு இவரைப் பார்த்து ஊதாங்குழல் அனத்தியது போல வினோதமாகக் காற்றை வெளியே விட்டது. ஸ்டீபண்ணன் கேவிய சப்தம் கேட்டு ரமணியக்கா திரும்பவும் அழ ஆரம்பித்தது. ரமணியக்கா வீட்டுக்குள் கொஞ்சம் பேர் போனார்கள். `சின்னப்பசங்கள்ளாம் வெளிய நில்லுங்களேண்டா’ என்றார் அண்ணாச்சி.  நால்வரும் நின்றோம்.

   குணானும், ரமேஷும் `வெளாட்லாம் வாடா’ என்றதும் போனேன். எப்போது இளங்கோவை மன்னித்தேன்? எப்போது அவனும் விளையாட வந்தான்? நானும் கவனிக்கவில்லை. அவனும் மன்னிப்பைக் கேட்கவில்லை. ப்ச் பரவாயில்லை. என் பம்பரத்துக்கு இன்னும் ஐந்து குத்துகள் பாக்கி என்பதை குணான் மறக்கவில்லையா? அது மாதிரிதான் இதுவும். அரைக்கால் சட்டையின் இடது பையிலிருந்த கடலை உருண்டைகளை வெளியே எடுத்தேன்.  நான்கு. ஒன்றை வாய்க்குள் போட்டு உடனே வெளியே எடுத்து அதில் ஒட்டிக்கொண்டிருந்த காக்கி நூலைப் பிரித்து எடுத்துவிட்டு திரும்பவும் உள்ளே போட்டேன். கையிலிருந்ததில் ஒன்றை டவுசர் பைக்குள் அனுப்பி வேறு ஏதாவது நூல் இருந்தால் பிடித்துவரப் பணித்தேன். இன்னொன்று ரமேஷுக்கு. மீதமொன்றை குணானிடம் கொடுத்து இளங்கோவைக் காட்டி `அவனுக்குப் பாதி குடுத்துருடா’ என்றேன் பெரிய மனதோடு. ஆனாலும், இந்த இளங்கோ `அபீட்’ டை மெதுவாக எடுக்கிறானா? நான் அவசர அவசரமாக ‘தில்லான்’ எடுக்கும்போது என் பம்பரம் `தக்கடத்தை’யென குப்புறப்படுத்துக் கொண்டது. இந்த முறையும்  நான்தான் `மாட்டி’, என் பம்பரம்தான் `சக்கை’. அய்யோ! இந்த `கர’த்திலிருந்து அந்தக் `கரம்’வரை சாத்தி சாத்தி கட்டையையே சொறிக்கட்டையாக்கி விடுவான்கள். இளங்கோவின் `பெத்தவாட்ஸ்’ தேர் மாதிரி. அது சுற்றிக்கொண்டிருக்கிறதா? நின்று கொண்டிருக்கிறதா? என்று சந்தேகப்படும் வகையில் `ச்சும்மா’ நின்று `ரொங்’கும். பெத்தவாட்ஸும் அப்படித்தான். `பெத்தவாட்ஸ்’ என்றால் என்ன அர்த்தம்? யாருக்குத் தெரியும்? ரமேஷ்தான் அப்படிச் சொன்னான். சராசரியைவிட பெருத்த அதைப் பார்க்கும்போது தோன்றிய பெயர் `பெத்தவாட்ஸ்’! அவ்வளவுதான். மும்முரமாய் விளையாடிக்கொண்டிருந்த நாங்கள்,  சுகுணாவின் `ஹை’ என்ற கூச்சலுக்குத் திரும்பினோம். ஸ்டீபண்ணன் கைகளில்  நெளியும் பால்ப்பைகள்போல  இரண்டு மூன்று குட்டிகள். சுகுணா அவற்றைத் துள்ளிப் பிடிக்க முயன்று கொண்டிருந்தாள். அவள் குதிக்கும்போதெல்லாம் அனிச்சையாகக் கைகளை உயர்த்திய ஸ்டீபண்ணனின் கவனமெல்லாம் டிப்பியின் மீதிருந்தது. `பொதுபொது’ வெள்ளைக் குட்டிகளைப் பார்த்தவுடன் இளங்கோ, `ணா ணா  எனக்கொண்ணு தாண்ணா’ என்று  இறைஞ்சினான். குட்டிகளைப் பார்த்தால் அப்படிக் கத்தியாவது வாங்கிவிடுவதுதான் நியாயம் என்று எனக்கும் தோன்றியது.

   இடுப்பிலிருந்து இறங்கும் டவுசரை மேலே இழுத்துவிட்ட ரமேஷ் ``கண்ணு தொற ஹேய் கண்ணு தொற குட்டீ’’ என்றபடியே நடந்தான். அவைகளின் கண்களை மூடி ஊசி நூலால் தைத்து விட்ட மாதிரி பாவமாய் இருக்கிறது. அந்த இடத்தில் விரலால் நிரவி முடிச்சைத் தேடிப் பிடித்து உருவிவிட்டால், கண் முழித்துவிடும் போல் தோன்ற நான் எட்டித் தொடப் பார்த்தேன். இந்த  முறையும் அனிச்சை உயர்த்தல். ஸ்டீபண்ணன் வீட்டை நெருங்கியதும் டிப்பி கொஞ்சம் வேகமாக உள்ளே போனது. நான் இன்னும் டிப்பியின் குட்டிகளைப் பார்க்க வில்லை. ஐந்து குட்டிகளைப் போட்ட  டிப்பி அதிலொரு குட்டியைக் கடித்துத் தின்றுவிட்டது என்று சுகுணா சொன்னதிலிருந்து பயமாய் இருந்தது. அம்மாவிடம் கேட்டதற்கு ``அதுதான் அதுக்குப் பிரசவ மருந்து’’ என்றது எனக்கு சரியாகப் புரியவில்லை. பயம்தான் கூடுதலானது. அம்மா என்னைக் கடித்துத் தின்றிருந்தால்? அய்யோ... கடவுளே! டிப்பியைப் போலில்லாமல் நல்ல அம்மாவைக் கொடுத்தாயே! டிப்பியின் குட்டிகள், கறுப்பு கலந்த சாம்பல், செம்பழுப்பு, சந்தனம், கறுப்பும் சந்தனமும்  என்பதாக ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறத்தில் இருந்தன. டிப்பி  அவைகளுக்கு நடுவில் போய்ப் படுத்துக் கொண்டது. ஸ்டீபண்ணன் தயங்கியபடியே ஷீலாவின் மூன்று குட்டிகளையும் அதன் அருகே விட்டார். டிப்பியின் குட்டிகள் அதன் மார்க்காம்புகளைத்  தேடி முண்டின. ஷீலாவின் குட்டிகள் சாக்குப்பையிலிருந்து திசைக்கொன்றாய் தரைக்குத் தவழ்ந்தன. ஸ்டீபண்ணன் அவைகளை எடுத்துத் திரும்பவும் டிப்பியின் வயிற்றுக்கருகே கொண்டு போனார். டிப்பி அரை வினாடிக்கும் குறைவாய் கோரைப்பல்லைக் காட்டி `ட்ட்ர்ர்ர்ர்’ என்றது. ரமேஷ் பயந்துவிட்டான். ``பாவம்டா பாப்பா’’ கெஞ்சினார் ஸ்டீபண்ணன். பின்னாலிருந்து ``ஏய்... என்னடி திமிரா? கொழுப்புதான உனக்கு? எங்க தள்ளு ஸ்டீபா’’ என்றபடி வந்த ஆஞ்சிக்கா ஷீலாவின் குட்டிகளை எடுத்து டிப்பியின் இரண்டு குட்டிகளுக்கிடையே நுழைக்கப் பார்த்தாள். ஆஞ்சிக்காவைப் பார்த்த டிப்பி இப்போதும் ஊதாங்குழல் அனத்துவது போல வினோத சப்தமெழுப்பி புருவங்களைச்  சேர்த்து நெற்றிக்குக் கூப்பியெழுப்பி, இமைகளைத் தாழ்த்தி, கண்களை இடுக்கி மின்ன வைத்து, பின்பு விரித்து விசித்திரமாக ஏதேதோ காட்டியது. ஆஞ்சிக்கா தன் தோரணையை விடாமல் ``ஆங்ங்ங்......ஊர்ல இவ மட்டுந்தான் புள்ள பெத்துருக்கா பாவம், அவங்கம்மா செத்துப்போல? நீ பாத்ததானே, அப்புறம் அறிவு வேண்டாம். எரும. தள்ளிப்படு, கொஞ்சம் குடிச்சுக்கட்டும்’’  என்றவாறு டிப்பியின் மார்புகளுக்கடியிலிருந்த மார்புகளையும் எடுத்து வெளியே விட்டாள். டிப்பியின் எட்டு மார்களும் தெரிந்தன. டிப்பி தலையை வளைத்து ஷீலாவின் குட்டிகளை மெல்ல முகர்ந்தது. திரும்பவும் ஆஞ்சிக்காவைப் பார்த்தது. அவள் மிரட்டும் பாவனையில் `ம்ம்ம்...’ என்று உறுமினாள். வெள்ளைக்குட்டியை முகர்ந்து மெல்ல நக்கிக் கொடுத்தது. சிட்டுவும் நானும் ஒரு சேர `ஹை’ என்றோம். வெள்ளைக்குட்டிகள் ஒவ்வொன்றாய் டிப்பியின் மாரை நோக்கி முண்டின. மெல்லக்கவ்வி உறிஞ்சின. டிப்பி உடலை லேசாகத் திருப்பிக் கொடுத்த மாதிரி இருந்தது. சுருங்கியிருந்த புருவங்களை விரித்த ஆஞ்சிக்கா, இத்துணூண்டு புன்னகைத்தவளாகக் குரலைத் தாழ்த்திக் கனிந்து, `‘நம்ம பாப்பா மாரிதானே இந்தப் பாப்பாவும்.... ஏண்டித் தங்கம், நல்ல புள்ளதான நீயி? அம்மா செல்லமில்ல’’ என்றபடி டிப்பியின் நெற்றியில் குனிந்து முத்தமிட்டாள். ஆஞ்சிக்காவின் முந்தி விலகி ஒரு பக்க முழு மார்பும் தெரிந்தது. நான் அவளது மார்புக்குக் கீழே அள்ளையில், வயிற்றில் வேறு மார்புகள் ஏதும் தெரிகின்றனவா என்று பார்க்கச் சுற்றிச் சுற்றி வந்தேன்.
   http://www.vikatan.com
  • By நவீனன்
   காளி - சிறுகதை
       ச.விசயலட்சுமி - ஓவியங்கள்: செந்தில்
    
   விடியக் காத்திருக்கும் வானத்தின் ஒளிக்கீற்றுகள், மெல்லிய நிழலைப் படரவைத்தபடி எட்டிப்பார்க்கக் காத்திருக்கின்றன. இந்தப் பிரதேசத்தின் அமைதியைக் கைவிடப்போகும் மக்களில் சிலர் ஆங்காங்கே நடந்துகொண்டிருந்தனர். கடற்கரை, கூடைகளோடும் மூன்று சக்கர வண்டி வைத்திருப்பவர்களோடும் கல்யாணக்கோலம் பூண்டிருந்தது. ஏமாந்தவர்களிடமிருந்து தனக்கான உணவை அபகரிக்கக் காத்திருந்தன காகங்கள். அவை விடாமல் துரத்திக் கொண்டிருக்கும் மீன் வண்டியோடு ஓட்டமாக நடைபோட்ட காளியின் இடுப்பிலிருந்த சூர்யாவின் கிடுக்கிப்பிடி மூச்சு முட்டச்செய்தது.

   ``அட சனியனே, ஏன்டா இப்படி என் உயிர எடுக்குற?’’ பட்டென அறைந்தாள். இன்னும் வேகமாக அவள் முடியைப் பிடித்து இழுத்த சூர்யாவை, ஒரு துணிமூட்டையை விட்டெறிவதுபோல பொதுக்கென பிளாட்ஃபாரத்துக்கு விட்டெறிந்தாள்.

   ``இந்தச் சனியனைப் பெத்ததுலயிருந்து இந்தப் பாடுபடுறேனே... என் தலையெழுத்து இப்படின்னு விதிச்சுட்டான்’’ எனச் சொல்லிக்கொண்டே ஆத்திரம் தீரும்வரை அடிக்கத் தொடங்கினாள். 

   ஆவின் பால்பூத்துக்குப் பக்கத்தில் இருந்த நீலநிற பிளாஸ்டிக் கொட்டகையிலிருந்து ஓடிவந்த ஸ்டீபன், ``அக்கா, அடிக்காதக்கா. உனக்கென்ன பைத்தியம் பிடிச்சிருக்கா? சொல்லிட்டே இருக்கேன்... நிறுத்த மாட்டியா?’’ என்றான்.

   அவனது பேச்சைக் கேட்டதும் இன்னும் வெறி பிடித்தவளாக மாறிப்போன காளி, குழந்தையை யாறுமற்றுப் பராமரிக்க வேண்டியதன் ஆற்றாமையுடன் கூச்சலிட்டாள். ``உனக்கென்ன மசுரு, சொல்லிடுவ. இவனுக்கு செல்லம் குடுத்துக் கெடுக்கிறதே உனுக்கு பொழப்பாப் பூடுச்சு. த பாரு ஸ்டீபனு, காலங்காத்தால எழுந்தாதான் என் பொழப்பு ஓடும். இல்லைன்னா, இந்தப் பய `பசி’ன்னு உயிரெடுத்தா நான் என்ன எழவைக் கொடுக்க முடியும்? இங்கியே படுத்துக்கெடன்னு சொன்னாலும் பிரியாம, என் கூடவே எழுந்து மல்லு குடுக்குறான், கழுத்தை நெரிக்கிறான், தலைமுடியைப் புடிச்சு இழுத்துக் கடிக்கிறான். இப்படி வெறி பிடிச்சாப்புல கிடக்கிறதை வெச்சுக்கிட்டு, ஒரு வேலை பாக்க முடியலை’’  பொலபொலவென விடியத் தொடங்கிவிட்டதை உணர்ந்தவளின் பரபரப்பு இரட்டிப்பானது. 

   `இவனை இப்படித் திட்டிக் கொண்டிருக்கிறோமே’ எனக் காளிக்குத் தோன்றியது. இருந்தாலும் வேலைக்குப் போக வேண்டியிருக்கிறது. அங்கே இவனைக் கூடவே அழைத்துப்போகலாம்தான். ஆனால் அங்கே இவனைப் பார்க்காமல் கவனிக்காமல் தான் இருப்பதை அவனால் தாங்க முடியாமல், அவளைத் தாக்கத் தொடங்கிவிடுவான். இதெல்லாம் அவளுக்குப் புரிந்தாலும், அவசரச் செலவுகள் அவளது பொறுமையை நிலைகுலையச் செய்துவிடுகின்றன. அவள் சூர்யாவை இப்படி உடம்பு நோகுமாறு அடித்தது, ஸ்டீபனுக்குக் கோபத்தை அதிகப்படுத்தியது.

   ``யக்கோ, காத்தாலேயே ஆரம்பிச்சிட்டியா? அவன் அப்படித்தான்னு தெரிஞ்சும் பேசிக் கிட்டிருக்க பாரு... எத்தன தபா சொன்னாலும் உன்னைத் திருத்த முடியாதுக்கா. அவன உங்கூட கூட்டிப்போவாத. இங்கேயே உட்டுட்டுப் போ. பச்சமண்ணைப் போட்டு இப்படி அடிக்கிற, கத்துற. எல்லாம் போதும் நிப்பாட்டிக்க’’ என லுங்கியைத் தூக்கிச் செருகிக்கொண்டு, அவனது கொட்டாய்க்குள் சென்றான். சாலைகளில் வாகனங்கள் முளைவிடத் தொடங்கிவிட்டன.

   காளியையும் ஸ்டீபனையும் மாறி மாறிப் பார்த்தான் சூர்யா. அங்கு இருந்த ரோட்டுக்குள் இறங்கினான். தடுமாறி விழுந்துவிடுவதுபோல வேகமாக நடந்தான். ஸ்டீபனிடம் பேசிவிட்டுப் பின்னால் திரும்பிய காளி, இவன் நடந்து போவதைப் பார்த்ததும் ஆத்திரம் பிடுங்கித்தள்ள, அவனை இழுத்துவந்து அருகில் இருந்த பிளாட்ஃபார அம்மன் கோயிலுக்கு முன்னால் கட்டிப்போட்டாள். ‘‘சூர்யா, நீ இங்கியே இரு. நான் வேலைக்குப் போயிட்டு வர்றேன். வரும்போது நாஷ்டா வாங்கியாறேன். இட்லி - வடகறி வாங்கியாறட்டா?’’ இவள் கத்திப் பேசுவதைப் பார்க்காமல் ரோட்டில் வரிசையாகப் போய்க்கொண்டிருந்த வண்டிகளைப் பார்த்துக்கொண்டிருந்தான் சூர்யா. 

   அவனுக்கு எல்லாவற்றையும் புரியவைக்க முடியாது என்றாலும், தன் மகனுக்கு எல்லாம் புரியும் என்கிற ஓட்டத்தில் சொல்லி முடித்த திருப்தியோடு, எறா ஷெட் பக்கம் போனாள். அங்கு இருந்த பெட்டிகளில் ஹோட்டல்களுக்கு ஏற்ற மாதிரி எறாக்களை பார்சல் செய்து, ஐஸ் பெட்டிகளுக்குள் வைத்து அடுக்கத் தொடங்கினாள்.

   சூர்யாவுக்கு, அம்மா தன்னை விட்டுவிட்டு வேலைக்குப் போனதோ, திட்டியதோ பொருட்டாக இல்லை. அவன் கையில் கிடைத்த பொருள்களைத் தட்டி விநோதமான ஒலியெழுப்பிக்கொண்டு விளையாடினான். அவன் சட்டை, பட்டன் இல்லாமல் ஆங்காங்கே கிழிந்திருந்தது. தலைமுடி ஒட்ட வெட்டப்பட்டு, ஆங்காங்கே சில தழும்புகளோடு இருந்தான். அவனுக்குப் பிடித்தது என எதையும் சொல்ல முடியவில்லை. எப்போதாவது காரணம் தெரியாமல் கத்திக்கொண்டிருந்தால், அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் சமாதானப் படுத்தினாலும் அடங்க மாட்டான். காளி ஓடிவந்து மடியில் போட்டுத் தடவிக்கொடுத்தால் தூங்கிவிடுவான். 

   ``இவனுக்கு அம்மா வாசனை மட்டும் நல்லா தெரியுது’’ எனச் சொல்லிக்கொண்டிருக்கும் அன்னம்மா அக்கா, சூர்யாவுக்குப் பசிக்கும் என, தான் சாப்பிட வைத்திருக்கும் பொருளில் ஒரு பங்கை எடுத்துக் கொடுப்பாள். கூடையில் கொஞ்சம் கருவாட்டை வைத்துக்கொண்டு மார்க்கெட் ஓரத்தில் உட்கார்ந்திருப்பாள். காளியைப்போல அன்றாடம் வேலை பார்த்தாக வேண்டியதில்லை. நாள், கிழமைக் காலங்களில் பெரிதாக வியாபாரமிருக்காது எனக் கடை போட மாட்டாள். ஆடி மாதம் என்றால் விற்பனை அதிகம். முன்கூட்டியே சொல்லிவைத்து வாங்கிச் செல்வார்கள். அன்னம்மா, சூர்யாவைப் பார்த்துக்கொள்வது காளிக்குக் கொஞ்சம் ஆறுதலான விஷயம்.

   நடிகர் சூர்யா படம் என்றால், காளிக்கு ரொம்பப் பிடிக்கும். குழந்தை பிறப்பதற்கு முன்பே ஆண்பிள்ளை என்றால் `சூர்யா’ எனப் பெயர் சூட்டப்போவதாகச்  சொல்லிக்கொண்டிருந்தாள். சூர்யா நடித்த பட போஸ்டர்களைக் கீழே விரித்துப் படுத்துக்கொள்வாள்.

   `சூர்யாவைக் கோயிலுக்கு முன்னால் கட்டிப் போட்டுவிட்டு வந்திருக்கிறோம். சீக்கிரம் போக வேண்டும்’ என்று நினைத்துக்கொண்டே இருந்தாள். காலையில் அனுப்ப வேண்டிய லோடு ஏற்றி, வண்டி கிளம்பியதும் ``அண்ணே, பையனுக்கு நாஷ்டா குடுத்துட்டு வந்திடுறேன்’’ என்று கிளம்பினாள். வடகறியோடு இட்லி வாங்கிக்கொண்டு, பம்பிங் ஸ்டேஷன் குழாயில் பாட்டிலில் தண்ணீர் பிடித்துக்கொண்டு கோயில் பக்கம் சென்றாள். 

   கோயிலின் முன் இப்படியும் அப்படியுமாக வேகவேகமாக நடந்துகொண்டிருந்த சூர்யாவைப் பார்த்துப் பதறினாள். ``பிள்ளைக்கு வெறி வந்திருச்சுபோல. தாயி... காப்பாத்தும்மா’’ எனச் சொல்லி முடிப்பதற்குள் அவன் வேகமாக நடந்து சுவரில் பச்சக்கென மோதிக் கொண்டான். அலறத் தொடங்கிவிட்டவனின் தலையிலிருந்து சிவப்பாக வழிந்ததை உற்றுப்பார்த்துக்கொண்டே சாலையைக் கடக்க முயன்றாள்.

   காலையில் வாங்கிய இட்லிப் பொட்டலத்தைப் பத்திரமாக வைத்திருந்த ஸ்டீபன், ``அக்கா, இந்த இட்லியைத் துன்னுக்கா. அவனுக்கு சரியாப்போவும். டென்ஷன் படாத’’ என்று அவளது தோளில் கை வைத்ததும், காத்திருந்தவள்போல உடைந்து அழத் தொடங்கினாள். 

   ``யக்கா இன்னாக்கா... நீ போயி இப்பிடி இருக்கலாமா? எம்மாந்தகிரியமா இருப்ப. இப்பிடி அழுவுறியே. மன்சு கஷ்டமாக் கீது’’ எனத் துடித்தான். 

   ``இவன் இப்பிடி ஒரு மண்ணும் தெரியாம இருக்கான். இவன எப்பிடி காப்பாத்தப்போறேன்னு தெரியலியே ஸ்டீபனு. அவன் இப்பிடி ரத்தமா கிடக்கிறதைப் பாக்கத் தெம்பில்லை. இன்னா பொயப்பு, வாய் தொறந்து கேக்கத் தெரியல. எதித்தாபோல செவுரு இருக்கிறது தெரியல. போய் மோதி மண்டையை உடைச்சுக்கிறான்; கைகால்  உடைச்சுக்கிறான். இவன் வேகமா நடக்குறான்னு பாத்த உடனயே அல்லு தூக்கிப்போட்டுச்சு. ஏதோ பண்ணிக்கப் போறான்னு நினைச்சேன். அடுத்த நிமிஷமே இப்பிடி உடைச்சுக்கினு கத்துறான். பன்னண்டு தையல் போட்டிருக்கு. இது ஆறங்காட்டியும் இவன்கூட மல்லு கிடக்கணுமே… இதுக்கு எவ்ளோ வலிக்கும். இவனைப்போல புள்ளைங்க எல்லாம் பள்ளிக்கூடத்துல சேந்துட்டுது. இவன சேக்க மாட்டேங்குறாங்க. கடைசித் தெரு நெட்டச்சி மகன், மூளை கலங்கினவனா இருந்தாலும் பள்ளிக் கூடத்துல சேத்துக்கிட்டாங்களாம். யாருக்கும் தொந்தரவு குடுக்கிறதில்ல. சொன்ன இடத்துல மணிக்கணக்கா உக்காந்துக்குனு இருக்கான். ஒரு எழுத்துகூட எழுத மாட்டானாம். வெறிக்கப் பார்த்துக்கினுருப்பானாம். இவன் அப்படி வேடிக்கை பார்த்துக்கினு இருக்க மாட்டான். திடீர்னு கைல கிடைச்சதைத் தூக்கிப் போட்டு அடிச்சிடுறான். அந்தப் பையனபோல எங்கியும் சேத்துக் கிட்டா நல்லாயிருக்கும். புள்ளைங்க கூட இருந்து நல்லது கெட்டது கத்துக்கும்’’ அழுகையை விட்டுவிட்டு, அவனுக்கு அடுத்து செய்ய வேண்டியது குறித்து யோசிக்கத் தொடங்கினாள்.

   சூர்யா, தன் நெற்றியில் தையல் போடப்பட்டு முகம் வீங்கிக் கிடந்தான். அரசு மருத்துவமனையில் படுக்கைக்கு இடம் இல்லாமல் தரையில் பாய் விரித்துப் படுக்க வைத்திருந்தார்கள். அவ்வப்போது கேஸ் வருவதும், டிஸ்சார்ஜ் ஆகி வெளியேறுவதுமாகப் பரபரப்போடு இருந்த குழந்தைகள் பிரிவில், காலையில் பாலும் பிரட்டும் கொடுத்திருப்பார்கள். 

   ``இந்தப் பையன் நாஷ்டாவை வாயிலியே வாங்காம துப்புது. ஸ்டீபனு, ஒரு பன்னு வாங்கியாடா குடுத்துப் பாப்பம்’’ என்றாள். பாதி பன்னை டீயில் தொட்டு ஊட்டி, மாத்திரைகளை விழுங்கச் செய்தாள்.

   சூர்யாவுக்கு ஆர்வம் அதிகமானால், இப்படித்தான் கண் மண் தெரியாமல் இடித்துக்கொள்வான்.  தலையெங்கும் ஆங்காங்கே வெட்டுக்காயங்கள். சூர்யா, கண் திறந்து பார்த்தான்; வாய் திறந்து பேச முயன்றான். ஆனால், அவன் குரல் வெளியே எழவில்லை. வாயிலிருந்து வழிந்த ஜொள் அவனுக்குப் பிடிக்கவில்லை போல, கைவைத்துத் துடைத்துக் கொண்டவன், கையை மீண்டும் மீண்டும் உதறினான். முகத்தைச் சுளிக்க முயன்றதும் வலி அதிகமானதில் அமைதியாகிச் சுவரை வெறித்துக்கொண்டிருந்தான்.

   காளிக்குக் களைப்பு அழுத்தியது. ``பாவி மனுசன், நிம்மதியா போயிட்டியே’’ எனத் திட்டிக் கொண்டே பாயின் ஓரத்தில் பையனைப் படுக்கவைத்துவிட்டு அவனோடு படுத்துக்கொண்டாள்.

   காளி வேலைபார்த்த எறா ஷெட்டில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தான் பாலா. 

   புதுப்பேட்டையிலிருந்து வந்திருந்தான். வேலை நேரத்தில் சிரிக்கச் சிரிக்கப் பேசும் அழகு அவனைத் தவிர, யாருக்கும் வராது. அவன் ஷெட்டில் இருப்பதை, அங்கு இருக்கும் எல்லோர் முகங்களிலும் தெரியும் சந்தோஷத்தில் உணர்ந்துகொள்ள முடியும். கறுப்பாக இருந்தாலும் களையானவன். காளிக்கும் பாலாவுக்கும் எப்படிப் பற்றிக்கொண்டது எனத் தெரிய வில்லை. பாலாதான் ``கட்டிப்பமா காளி’’ என்று ஆரம்பித்தான். காளிக்கு ஆசையிருந்தாலும் தயக்கமும் பயமும் இருந்தன. பாலா, அப்பா அம்மாவோடு சொந்தக் குடிசையில் இருப்பவன். காளிக்கு என எவரும் இல்லை. இப்படியே ரோட்டோரம் படுப்பதும், அங்கே இருக்கும் அக்காக்களோடு வேலைக்குப் போவதும், சாப்பிடுவதுமாக இருப்பவள். 

   அன்னம்மா அக்கா, ``பாலாவைக் கட்டிக்கிட்டா, நல்லா இருப்படி. சீக்கிரமா கட்டிக்க. இந்த பிளாட்ஃபாரத்துல இருந்தது போதும்’’ என்று பச்சைக்கொடி காட்டினாள். பாலா வீட்டில் கடும் எதிர்ப்பு. ``எதுவும் இல்லாத பிளாட்ஃபாரத்துக்குப் பட்டுக்குஞ்சமா? இதெல்லாம் சரிப்படாதுடா. போறதுன்னா ஒரேயடியாப் போயிடு. இந்தப் பக்கம் அப்பன் ஆத்தான்னு சொல்லிக்கிட்டு வந்துடாத’’ என இறுதியாகச் சொன்ன நாளில், வீட்டைவிட்டு வந்தவன். ஆற்றோரம் குடிசை ஒன்றை வாடகைக்குப் பிடித்துவிட்டு, காளியைப் பார்க்க வந்தான். 

   அன்னம்மா அக்காவும் பாலாவும் சேர்ந்து கோயிலில் கல்யாணம் ஏற்பாடு செய்தார்கள். எறா ஷெட்டில் இருந்தவர்கள், அவர்கள் குடும்பக் கல்யாணம்போல கவனித்துக்கொண் டார்கள். காளியை ``இனி வேலைக்குப் போக வேணாம்’’ என்று நிறுத்தி விட்டான்.  குடிசைக்கு முன்னால் தடுப்புத் துணி கட்டி, லைட் போட்டு, ஸ்பீக்கரில் குத்துப் பாடலாகப் போட்டுக் களை கட்டினாலும், பாலாவின் அம்மாவும் அப்பாவும் வரவேயில்லை. அவர்கள் வராததைப் பற்றி சிலர் கேட்கவும் செய்தார்கள். ``பெத்தவங்களுக்குப் புடிக்கலைன்னு சொல்லியும் கட்டியிருக்கன்னா, இவகிட்ட அப்படி இன்னா கண்டுக்கினேன்னு தெரியலை’’ இப்படிக் கேட்டவர்களுக்கு, பிரத்யேகமாகப் பதில் சொல்லாமல், ``அப்படி ஏதும் இல்லாம இப்படி முடிவெடுப்பனா?’’ என்று பேசி நகர்ந்துவிடுவான். 

   காளிமீதான அவனது கொள்ளைப் பிரியத்துக்கு அளவில்லை. அதற்குக் காரணம் கேட்டால், அவனுக்குத் தெரியாது. `காளி... காளி’ என சதா அவள் நினைப்பு. 

   வேலை முடிந்ததும் ஆல்பர்ட் தியேட்டருக்குப் போவது, பீச்சுக்குப் போவது என அவளை அழைத்துக்கொண்டு சந்தோஷமாகக் கிளம்பிவிடுவான். அவனுடைய பெற்றோரைப் பார்க்க வேண்டும் எனக் காளி சொன்னபோது, பெரிதாக ஆர்வம் காட்டாத பாலாவை தொடர்ந்து நச்சரித்தாள். உண்மையில் அம்மா, அப்பா, குடும்பம் இவற்றின் மீது மிகுந்த விருப்பம் கொண்டவளாக இருந்தாள் காளி. `அவங்க அன்பு செலுத்தியிருந்தா, பாலா எதுக்கு `கட்டிக்கிறேன்’னு என்னாண்ட வந்திருக்கப்போவுது’ என சில சமயம் தோன்றும். `எதுவும் தெரியாம யோசிக்கக் கூடாது. நினைப்புதான் பொழப்பைக் கெடுக்கும்’ என  நினைவுகள் பல திசைகளில் போனாலும், அவர்களைப் பார்த்துவிடத் துடித்தாள். 

   ``காலையிலேயே போய் வந்திடலாம். ஷெட்டுக்குப் போணும். ஒரு கல்யாண பார்ட்டிக்கா வேண்டி எக்ஸ்ட்ரா லோடு வருதாம்’’ என அவளைத் துரிதப்படுத்தினான் பாலா. அவனது குடிசைக்கு முன் காளியை நிறுத்தி, ``இங்கயே நில்லு, பாக்கறேன்’’ என்று ``அம்மா... அம்மா...’’ என்றான். இதுவரை இவன் செத்தானா பிழைத்தானா எனத் தேடிப் பார்க்காத அம்மாமீது பீறிட்ட கோபத்தை அடக்கிக்கொண்டான். அம்மா, அப்பா இருவரும் வெளியே வந்து பார்த்து, ஒரு வார்த்தையும் பேசவில்லை.  அம்மா மட்டும் அந்தக் காலையிலும் வெற்றிலை போட்டிருந்தாள். பச்சக்கென துப்பினாள். அத்தனை கோபத்தோடு துப்பியவளை, பயத்தோடு பார்த்தாள் காளி. இவளுக்குப் பயம் என்றால் என்னவென்றே தெரியாது. சொந்தம், பாசம் என்று வந்தால் கூடவே பயமும் வந்துடும்போல... சுதாரித்துக்கொண்டு ``அத்தை’’ என்றாள் . 

   ``அடியே சிறுக்கி... யாருக்கு யாரு அத்தை? நல்லா இருந்த குடும்பத்தைப் பிரிச்சுப்புட்டு அத்தையாம் அத்தை. அவளக் கூட்டிகினு நடடா... உலகத்துல இல்லாத அழகிய கூட்டியாந்துட்டான்.’’ எனக் காறி உமிழ்ந்தாள்.

   பாலாவால் பொறுக்க முடியவில்லை. ``அம்மா, அவ மாசமா கீறா. அஞ்சு மாசம்மா. எங்களுக்கு உன்ன உட்டா யாரும்மா கீறா? பழைய கதையெல்லாம் மன்சுல வெச்சுக்காதம்மா... மன்னிச்சிடும்மா. நா உன்னக் கஷ்டப்படுத்திக்கினேன்னு தெரியுது. அவளை லவ் பண்டேன். இன்னாங்கிற...’’ பிள்ளை பேசப் பேச சமாதானமடையாமல், திட்டிய அம்மாவையும் அவளுக்குப் பணிந்ததுபோல் காலையிலேயே  மப்பிலிருந்த அப்பாவையும் மன்னிக்க முடியாதவன் ஆனான்.  

   ``இவன் குழந்தை நாசமா போவட்டும்’’ என அம்மா மண்ணை வாரித் தூற்றினாள்.  அம்மா சண்டைக்காரிதான் என்றாலும், பாலாவுக்கு எப்போதும் அன்பை மட்டுமே தந்தவள். `என் ராசா… என் மவராசன்… சக்கரவத்தி...’ இப்படிச் சொல்லிக் கூப்பிடுவதுதான் பிடிக்கும். அப்படியே மகனுக்குத் தேவையானதை `இல்லை’ எனச் சொல்லாமல் பார்த்துப் பார்த்துச் செய்தவள். `எட்டாவதுக்கு மேல பள்ளிக்கூடம் போக மாட்டேன்’ என நின்றவனை அடித்த அன்றுதான் அம்மாவின் ஆத்திரத்தைப் பார்த்தான் பாலா. 

   காளி பிளாட்ஃபாரத்தில் வளர்ந்தாலும், அம்மா-அப்பா இல்லாதபோதும் அங்கு இருப்பவர்களை `அண்ணே...’ `அக்கா...’ என அழைத்துக்கொண்டு, தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பாள். யாருக்கும் பயப்படாத ரோஷக்காரி. அம்மாவைப்போலவே வீம்பு. அதனால்தான் `இவள் தைரியமான பொண்ணு’ என முடிவெடுத்தான். காளியின் முகம் களையாக இருக்கும். மட்டான கலர் என்றாலும், கன்னம் பூப்போல மெத்தென்று இருக்கும். அதைப் பார்க்க ஆசையாயிருக்கும். 

   `வராமலேயே இருந்திருக்கலாம்’ என நினைத்தபடி இவளை வீட்டில் விட்டுவிட்டு, லோடு பின்னாலேயே கூட்டாளியோடு வண்டியின் பின்னால் உட்கார்ந்து சென்றவன், அத்தனை வருத்தத்தில் இருந்தான். எப்போதும் சந்தோஷமாக இருக்கும் இவனைத் தேற்ற முடியாமல் பேசிக்கொண்டே வந்த நண்பன், ஸ்பீட் பிரேக்கரைக் கடக்கும் சமயத்தில் குறுக்கே வந்த நாய்மீது மோதிவிடப்போகிறோம் என பிரேக்போட்டான். வண்டி ஓரத்தில் இருந்த முருங்கைமரத்தின் பின்னால் இருந்து வந்த வண்டியோடு நேருக்குநேர் மோத, வண்டி ஓட்டியவன் இடித்தவனைத் திட்டிவிட்டு பாலாவைப் பார்த்தான். கீழே விழுந்து  கிடந்த பாலா பின் மண்டையைத் தேய்த்தான். பாலாவுக்குத் தண்ணீர் வாங்கிக் கொடுத்துவிட்டு, வீட்டில் விடுவதாகச் சொன்னவனிடம் அடம்பிடித்து, `லோடு பார்த்துட்டு வந்திடலாம்’ எனச் சென்றுவிட்டுத் திரும்பியதும், குடோன் பூட்டி ஓனரிடம் சாவி கொடுத்தான். 

   வீட்டுக்குச் சென்றவனுக்கு, சாப்பிடப் பிடிக்கவில்லை. நம்மைப் போல அவனுக்கும் மனக்கஷ்டம் எனச் சாப்பிடக் கூப்பிட்டுப் பார்த்தவள், அவன் வராததால் `தூங்கி எழுந்தா, மனசு லேசாகிடும். சொந்தபந்தம் இல்லாத நமக்கே இப்படி ஃபீலிங் இருக்கும்போது, இவனுக்கு இன்னும் அதிகமிருக்கும்’ என விட்டுவிட்டாள். 

   அடுத்த நாள் எவ்வளவு கூப்பாடு போட்டும் எழாதவனை அவனின் நண்பர்களும் முதலாளியும் அள்ளிக் கொண்டு ஜி.ஹெச்சுக்குக் கூட்டிப் போனார்கள். காளிக்கு எதுவுமே புரியவில்லை...

   காளி, சூர்யாவை அமைதிப்படுத்தித் தூங்கவைத்தாள். அவன் போக்கில் அங்கு இருக்கும் நோயாளிகளுடன் நடப்பது, குதிப்பது எனப் பெரும் சேட்டைகளை நிகழ்த்திக்கொண்டிருந் தான். அவனுக்குக் கோபம் வந்து `உய்ய்’யென கத்த ஆரம்பித்தால், அந்த வார்டு முழுவதும் அவனைச் சமாதானப்படுத்தக் கூடிவிடும். அவன் அழ, காரணம் புரியாமல் திணறும் சமயங்களில், மற்ற குழந்தைக்கும் அம்மாவுக்குமான பேச்சும் சிரிப்பும் இவளுக்கு ஏக்கத்தை ஏற்படுத்தின. மனச்சோர்வு அதிகரித்துக்கொண்டேபோன இந்த நாள்களின் பிடியிலிருந்து மீண்டுவிட நினைத்து `டிஸ்சார்ஜ் செய்யச் சொல்வோமா’ என எழுந்த நினைப்பை, சில நொடிகளில் மாற்றிக்கொள்வாள். `அங்கே போலீஸ் ஸ்டேஷன் மரத்தடி நிழல்லதான் இவனை வெச்சுக்கணும். அதுக்கு இதுவே பரவாயில்லை. ரோட்டோரம் தூசி. கட்டுப்போட ஓபி-க்கு வரணும். இதுக்கு நிம்மதியா இங்கேயே பாத்துக்கலாம். முதலாளி பாவப்பட்டு வெச்சிருக்கிறதால முடியுது. இல்லாங்காட்டி பொயப்பு நாறிடும். இவனைப் பெத்ததுலேயிருந்து இப்படியே இருக்கேனே’ என, தனக்குள் பேசிக்கொண்டாள்.

   இரவு கனவில் பாலா வந்தான். இவள் வயிற்றில் இருந்த ஐந்து மாதக் குழந்தையுடன் பேசினான். குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்ற, அவனது ஆசைகளைக் கூறி, அவன் அம்மாவை நினைத்துக் கலங்கினான். கலங்கிய கண்கள் அவளைப்  பார்த்துக் கொண்டிருக்கும்போதே `அம்மா...’ என அலறிக் கொண்டே மறைந்தான். உடல் சில்லிட, திடுக்கிட்டு எழுந்தாள்.

   சில மாதங்களுக்குள் அற்புதமான வாழ்க்கை ஒன்றைக் கொடுத்துப் பறித்துக் கொண்டதன் இயலாமை, அவளை அவ்வப்போது கலங்கவைத்தது. ருசி அறியாத காலத்தில், சுய பச்சாதாபம் தோன்றியதே இல்லை. ருசித்த வாழ்க்கை அவ்வப்போது ஞாபகத்துக்கு வந்து இடையூறு செய்தது. ``பாவம் பிள்ளை’’ என சூர்யாவின் வியர்வையைத் துடைத்துவிட்டாள். ``மத்த குழந்தையெல்லாம் வளந்திடும்.  எம்புள்ள எப்பவும் எனக்குக் குழந்தையா இருக்கும். யாரு, என்ன நினச்சா நமக்கு என்ன? நம்ம புள்ளய நாமே `சீ’ன்னு சொல்லிடக் கூடாது. அது எங்க போவும்? அவனுக்கு எல்லாமே நான்தான்’’ என்றபோது மனம் பாரம் குறைந்து லேசாவதை அவளால் உணர முடிந்தது. 

   வராண்டாவுக்கு வந்தவள், நின்று இருந்த நர்ஸிடம் பையனைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, ஐ.சி.யூனிட் பக்கம் போனாள். அங்கு இரண்டாம் நம்பர் பெட்டை கண்ணாடி வழியே எட்டிப்பார்த்தாள். அதோ அந்த பெட்டில்தான் பாலா கொஞ்சநாள் படுத்துக்கிடந்து, இவளுக்கு எனப் பிரத்யேகமாக எந்த வார்த்தையும் சொல்லாமல் பிரிந்தான் .  பாலாவின் அம்மா ஆஸ்பத்திரிக்கு வந்து வண்டை வண்டையாகப் பேசினாள். அவன் இறந்தபிறகு `இவளுக்கு உரிமையில்லை’ எனச் சொல்லி,  அவன் உடலைக் கொண்டு போய் தடபுடலாகச் செலவுசெய்து, போஸ்டர் ஒட்டி வழியனுப்பினாள். `அவன் செத்ததுக்கு காளிதான் காரணம்’ என, பார்ப்பவர்களிடம் எல்லாம் சொல்லித்தீர்த்தாள். ஒருநாள், பாலா வேலை செய்த எறா ஷெட்டில்தான் இவள் வேலை செய்கிறாள் என்பது தெரிந்து, ஷெட்டின் சுவர் எங்கும் துப்பிவிட்டுப் போனாள்.

   பாலா குட்டியாகிக் கையில் தவழ்ந்து கொண்டிருந்தான். அவனைப் பார்க்கும் போதெல்லாம் குழைந்து மென்மையாக மாறிவிட்டதாக உடலும் மனசும் இருக்கும். உறவு என்று யாரையும் தெரியாமல், சுற்றியிருக்கும் சிலரை உறவுகளாக அழைக்கத் தொடங்கிய வாழ்வில் புதிதாக முளைத்திருக்கும் உறவு. `காலத்துக்கும் நீ தனியா இல்லை. உனக்கு ஒரு துணை இருக்கு’ என பாலா கொடுத்த உறவு. பிளாட்ஃபாரத்தில் பிழைக்கிற வாழ்க்கை, நெருப்பில் நிற்பதுபோல அன்றாடம் சமாளிக்க வேண்டிய வாழ்க்கை. பொம்பளைங்களை டீசன்ட்டா பார்க்கத் தெரியாதவர்களுக்கிடையில் இவ்வளவு அற்புதமான கனவாக நின்ற வாழ்க்கை. கண் கலங்கியது. 

   டிஸ்சார்ஜ் ஆகி, இவளது பிளாட்ஃபாரத்துக்கு ஆட்டோவில் வந்து இறங்கினாள். ஸ்டீபன் அவனது கொட்டகையில் படுக்கவைக்கச் சொன்னான். ``இனிமே இவனை இங்க விட்டுட்டுப் போ. வெளிய வெயில்ல போட்டுட்டுப் போவாத. இந்த வெயில்லயே பையன் மூளை கலங்கிடும்’’ என உரிமையாகச் சொல்லிவிட்டு, கையில் வைத்திருந்த ரஸ்னா பாக்கெட்டைக் கொடுத்தான். சூர்யா, அந்த பாக்கெட்டைத் தொடும் போதெல்லாம் தலையை ஆட்டி ஆட்டிச் சிரித்தான்!
   http://www.vikatan.com/
  • By நவீனன்
   எமோஜி - சிறுகதை
       நர்சிம் - ஓவியங்கள்: ஸ்யாம்
    
   வாட்ஸ்அப் சிணுங்கலில் விழித்துக்கொண்டு எழுந்தேன். மதுவைச் சந்தித்த நொடியிலிருந்து இன்றுவரை என் அத்தனை நாள்களும் அவளின் செய்தியில்தான் விடிகின்றன. இது இன்று நேற்று அல்ல... குறுஞ்செய்தி காலத்திலிருந்தே இப்படித்தான்.

   “ I am not feeling well, இன்னிக்கு லீவு, don’t call me.”

   உடனே பதில் அனுப்பினேன்.

   “You are not feeling well, OR your feelings are not well?”

   எனக்குத் தெரியும், பதில் வராது என்று. வரவில்லை. பல் துலக்கிக் குளித்து, சீருடை உடுத்தி, கிளம்பும் வரை 40, 50 முறை மொபைலைப் பார்த்திருப்பேன். பதில் வரவில்லை. ஆனால், நீல வண்ணத்தில் டிக் மார்க்குகள். உதாசீனம் செய்கிறாள் என எடுத்துக்கொண்டால் எனக்குக் கோபம் வரலாம் என்பதால், கோபத்தில் இருக்கிறாள் என்று எடுத்துக்கொண்டேன், சிரிப்பு வந்தது.

   வண்டியைக் கிளப்பும் முன்னரும் ஒருமுறை போனை அனிச்சையாக எடுத்துப் பார்த்தேன். ம்ஹூம். மொபைலில் சலனமே இல்லை என்பதுபோல் மனதில்பட்டது. ஒருவேளை நேற்று நடந்த சண்டையே இறுதி என்றாகி, இனி பேசவே போவதில்லை என்றானால், என் இதயம் இத்தியாதி எல்லாவற்றையும் விடுங்கள்,  சதாசர்வகாலமும் அவள் நிமித்தமாகவே இருக்கும் இந்த மொபைலுக்கு என்ன சொல்லிப் புரியவைப்பது? அதற்காகவாவது சமாதானம் ஆகிவிடவேண்டும் என நினைத்துக் கொண்டேன்.

   நானும் மதுவும் சென்னையின் மிகப் பிரமாண்டமான நட்சத்திர ஹோட்டலில் வேலைபார்க்கிறோம். முன் அலுவலகம் என்பதை ஆங்கிலப்படுத்திக்கொள்ளுங்கள். நட்சத்திர விடுதிகளில்  Front Office Management என்பதுதான் ஆகக் கடினம். அதுவும் ஐந்தும் அதற்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் எனில், கேட்கவே வேண்டாம். வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வது, அதுவும் வாடிக்கையாக வரும் வாடிக்கையாளர்கள் எனில் இன்னும் அதிக கவனமாக அவர்களைக் கையாள வேண்டும். கவனம் என்றால், பிறந்த குழந்தையைக் கையாளும் கவனம். சொகுசில் சிறு குறை என்றாலோ அவர்களின் ஈகோவுக்கு இழுக்கு என்றாலோ அவர்கள் நேராக வருவது முன் அலுவலகத்துக்குத்தான். வந்து ஆடிவிடுவார்கள் ஆடி. நானும் மதுவும் அப்படியாகப்பட்ட வாடிக்கையாளர்களை இன்முகத்தோடு கையாள வேண்டிய பதவியில் இருக்கிறோம்.
   என்னைவிட இரண்டு வருடங்கள் இந்தப் பதவியில் அதிக அனுபவம் உள்ளவள் மது. நான், நாய் வாய் வைப்பதுபோல் வெவ்வேறு உத்தியோகங்கள் பார்த்துவிட்டு, இறுதியில் இங்கு ஐக்கியமாகிவிட்டேன். இந்த வேலையில் நான் தொடர்ந்து இருப்பதற்கு மது மட்டுமே முழுமுதற்காரணம். ஆம், நான் வேலைக்குச் சேர்ந்து பயிற்சி நாளில் இருந்தபோது, அரசியல் பிரமுகர்கள் சிலர் தங்கியிருந்தார்கள். அவர்கள் என்னைப் படுத்தியபாட்டில் வழக்கம்போல் ஒரு ஏ-4 தாளைக் கையில் எடுத்தேன். எனக்குப் பயிற்சி அளிக்கும் பொறுப்பில் இருந்த மது மேடம்தான் என்னை ஆற்றுப்படுத்தி, அதுபோன்ற சூழ்நிலைகளை எப்படிக் கையாள வேண்டும் எனக் கற்றுக்கொடுத்தார்.

   ஆனாலும் அதில் ஒருவன் படுத்தி யெடுத்திருந்தான் என்னை.

   “எதுக்கு இந்த வெய்யில்ல இப்பிடி கோட்டு சூட்டு டை எல்லாம் தம்பி?”

   “உள்ள ஏ.சி தானே சார். இதுதான் யூனிஃபார்ம்.”

   “அது சரி, ஆமா... உங்க வேலை என்ன?”

   “உங்களுக்கு அசிஸ்ட் பண்றது. ஏதாவது பிரச்னை, சந்தேகம்னா தீர்த்துவைக்கிறது.”

   “உங்களைத்தான் தேடிக்கிட்டிருந்தேன். ஆமா, இது எத்தனை ஏக்கர்? சதுர அடி என்ன ரேட்டுன்னு வளைச்சீங்க?”

   நான் ஒரு நொடி சுற்றிலும் பார்த்துவிட்டு, “அதெல்லாம் தெரியாது சார்.”

   “அட என்னப்பா, இப்பத்தான் சந்தேகத்தைத் தீர்த்துவைக்கிறதுன்னு சொன்ன! சரி, யாராச்சும் வெவரமான ஆளா இருந்தா கூட்டிட்டு வா.”

   இது ஒருவகை எனில், க்ரீம் அப்பிய முகத்தோடும் கமகமவென வாசனை திரவம் உடையெங்கும் கமழ, அப்படியே காஷ்மீர் பனிப்பிரதேசத்திலிருந்து இறங்கி வந்த சாத்வீகமான முகத்தோடு வரவேற்பறையில் நின்று தம் விவரங்களைக் கொடுத்து, அறையை அடைந்த நொடியில் ஏதோ அறுந்த பூனைபோல் அடித்தொண்டையிலிருந்து கத்தத் தொடங்கும் மகானுபவர்கள் வேறு வகை. தண்ணீர் சூடென்றாலும் கத்துவார்கள். ஏ.சி அதிகமாக வந்தாலும் சரி, மிதமாக வந்தாலும் சரி, படுக்கை விரிப்பில் ஆரம்பித்துத் தரையில் கிடக்கும் மிதியடி வரை குற்றம் கண்டுபிடித்து, பில்லைக் கட்டும்போது இன்னும் அடிவயிற்றிலிருந்து கத்தி, சல்லிசாக டிஸ்கவுன்ட் வாங்கிக்கொண்டு, ஆனாலும் முகத்தை உர்ரென்று வைத்து, “பணமெல்லாம் பெரிய விஷயமில்லை. ஆனால், நீங்கள் உங்கள் தவறை உணர வேண்டும் அல்லவா!” என்பது போன்ற முத்துகளை உதிர்த்துப்போவார்கள். அத்தனை திட்டையும் வாங்கிக்கொண்டு, கட்டணத்தில் எவ்வளவு மங்களம் பாடியிருக்கிறார்கள் என்பதைப் பார்த்து, பொது மேலாளர் எனும் மேதகு சிம்மசொப்பனத்திடம் பாட்டு வாங்கி என நாள் ஒவ்வொன்றும் நகர்வதற்குள் நாக்குத் தள்ளிவிடும்.

   “துப்பினாலும் துடைத்துப் போட்டுப் போய்க்கொண்டே இரு” என்பதை இவருக்கு முன்னரே மது என்னிடம் பயிற்சியின்போது சொல்லித் தந்திருந்தாள். ஒருவிதத்தில் யோசித்துப்பார்த்தால், பயிற்சி என விதவிதமாக ஆங்கிலத்தில் அவர்கள் வகுப்பெடுத்த அத்தனையிலும் ஒரே தாரகமந்திரமாகச் சொன்னது, “வாடிக்கையாளர் என்ன சொன்னாலும் சரி, இன்முகத்தோடு சிரித்துக்கொண்டே இரு, அதற்குத்தான் உனக்குச் சம்பளம்.”

   அதுவும் காலையில் கோட்டு சூட் எல்லாம் போட்டு, டையைக் கட்டிக்கொண்டு கிளம்பும்போது புருவம் உயர்த்தி, `பார்த்தியா, எப்படிப் போறான் பாரு என் மகன்!’ என அப்பா எதிர்படுவோரிடம் சைகையில் கித்தாய்ப்பாகக் கேட்பதைப் பார்க்கும்போது, ஒரு சுயகழிவிரக்கம் வரும் பாருங்கள், அதைச் சொல்லில் வடிக்க முடியாது என்பதால் எழுத்தில்.

   மதுவைக் கண்ட உடனேயெல்லாம் காதல் வந்துவிடவில்லை எனக்கு. நான் உனக்குப் பயிற்சி அளிக்கும் சீனியர் எனும் திமிரில் இருந்தாள். கடைக்கண் பார்வை என்பதே கிஞ்சித்தும் கிடையாது. ஏளனப் பார்வை மட்டும்தான். அதிலும் ஏதாவது சொல்லித் தந்துவிட்டு அதைத் திரும்பிக் கேட்டு, உடனடியாகச் சரியான பதில் சொல்லவில்லை எனில், `பிக் பாஸ்’ காயத்ரியை மக்கள் பார்ப்பதுபோல் ஒரு பார்வை. அவ்வளவுதான். அசிங்கம் பிடுங்கித் திங்கும். ஆனால், அடுத்த நொடியில் ஒரு சிறு பூஞ்சிரிப்பு என்னை இலகுவாக்கிவிடும்.

   வேலைக்குச் சேர்ந்து ஓரளவுக்கு வேலை புரிந்து பழகிவிட்டது என்பதை, கீழே பேஸ்மென்ட்டில் வண்டியை நிறுத்திவிட்டு, தூண்களை அடையாளம் வைக்காமல் நடந்து சரியான பாதையில் உள்ளே நுழைந்துவிடுவதில் தீர்மானித்துவிடலாம். அப்படி எல்லா இடங்களும் மனிதர்களும் அந்தப் பிரமாண்ட நட்சத்திர விடுதியின் எந்த இடுக்கில் கேமரா நுழையாது என்பது வரை தெளிந்த மூன்றாவது மாதத்தில்தான் அந்தச் சம்பவம். அதை நாங்கள் ‘ஈவென்ட்’ என்போம். பெரிய நிறுவனங்கள் தாங்கள் அடைந்த வெற்றியைக் கொண்டாடும் பொருட்டோ அடையப்போகும் வெற்றிக்கான இலக்கைத் தீர்மானிக்கும் பொருட்டோ ஒட்டுமொத்த இந்தியாவின் கிளைகளிலிருந்தும் தம் ஊழியர்களை ஒருசேர அழைத்து வந்து எங்கள் பிரமாண்ட ஹோட்டலில் தங்கவைத்து, மூன்று வேளை சோற்றைப் போட்டு மீட்டிங் வைத்து மூளையைக் கழுவிச் சுத்தமாகச் சலவை செய்து அனுப்புவார்கள். அப்படியான ஒரு பெரிய ஈவென்ட் இன்னும் ஒரு வாரத்தில் நடைபெறப்போவதாகவும் அதற்கான வரைவுத் திட்டம் குறித்துப் பேச அந்த நிறுவனத்தின் தூதுவர்கள் வந்துள்ளதாகவும் சொல்லி, மது என்னையும் அந்த மீட்டிங்குக்கு அழைத்துப்போனாள்.
   மீட்டிங் அறையின் பிரமாண்டம் ஒரு பக்கம், அதில் கமழும் அமைதி மறுபக்கம் என நான் டென்ஷன் ஆக, ஏகக் காரணிகள். எந்தப் பிரச்னையும் இல்லாமல் என் அருகில் அமர்ந்திருந்தாள் மது. மேஜைக்கு அந்தப் பக்கம் மூன்று பேர். மூவரும் மும்பையிலிருந்து வந்திருந்தார்கள். சரமாரியாகக் கேள்விகள் தொடுத்தார்கள். அத்தனை கேள்விகளுக்கும் இன்முகத்தோடு, `அதைச் செய்ய அப்படி ஒரு வழி இருக்கிறது. இதற்கு எனத் தனியாக ஆள்கள் இருக்கிறார்கள் ‘எனச் சட் சட்டென கொஞ்சமும் யோசிக்காமல் பதில் சொல்லி அசரடித்தாள். அவர்கள் முழுமனதாக ஏற்று, ஈவென்ட்டை உறுதிசெய்துவிட்டுப் போனார்கள்.

   “நாளைக்கு சண்டே. ஆனா, நீங்க வந்திருங்க. நாம ஒரு ஒன் ஹவர் இந்த ஈவென்ட்டை எப்படி ஹேண்டில் பண்றதுனு டிஸ்கஸ் பண்ணுவோம்”

   அப்போதுகூட அரை மனதாகத்தான் தலையாட்டினேன். மறுநாள் நடக்கப்போகும் எந்த ஒன்றுக்குமான சிறு சமிக்ஞையைக்கூட என்  உள்மனம் சுட்டவில்லை.

   விடுமுறை நாள்களில் அலுவலகம் செல்வதில் ஓர் அலாதி சுகம் எனக்குண்டு. நாம் தினமும் கடக்கும் இடம், வேறு மாதிரி தோன்றும். நாம் அன்றாடம் உபயோகிக்கும் மேஜை, பொருள்கள் எல்லாம் நம்மையே ஸ்நேகமாகப் பார்ப்பதுபோல் இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, டிஷர்ட்-ஜீன்ஸ், உடலைச் சுதந்திரமாக எண்ணவைக்கும் உடை. இப்படி எல்லாமும் சேர்ந்து மனதில் ஒரு நிதானம் குடிகொள்ளும். அப்படித்தான் இருந்தது அந்த ஞாயிறு. ஆனால், எல்லாம் மதுவைப் பார்க்கும் வரைதான். அப்படியா வருவாள்? அத்தனை நாள்களும் மதுவை ஹோட்டல் சீருடையான சேலையில், அதுவும் ஒருவிதமான அந்நியத்தன்மை வாய்ந்த கட்டமைப்பில் கட்டிக்கொண்டு, பொம்மைபோல் அலங்காரம் செய்து செயற்கை புன்னகையோடுதான் பார்த்திருக்கிறேன். ஆனால், அந்த ஞாயிற்றுக்கிழமை அழகுக்கான அத்தனை தேவதைகளும் அவளை ஆசீர்வதித்து, அவளோடு வழிநெடுக உடன் வந்து, என் கண்களின் விழித்திரையை இழுத்துக் கொண்டுபோய் அவள் முன் நிறுத்திவிட்டுப் போய்விட்டார்கள் என்பதுபோல் நின்றிருந்தேன்.

   இழுத்துக் கட்டப்படாத கேசம், முகப்பூச்சு இல்லாத முகம். வெள்ளை நிறச் சட்டையும் அல்லாத டிஷர்ட்டும் அல்லாத ஒன்று, ப்ளூ ஜீன் என எளிமையாக இருந்தாள். எளிமையின் அழகுச் சுடர் நாள் முழுக்க மிளிர்ந்துகொண்டே இருக்கும் தன்மையுடையது. என் கண் முன் ஒரு சுடர் அசைந்து எரிந்துகொண்டிருந்ததுபோல் இருந்தது, மது அமர்ந்து பேசிக்கொண்டிருந்தது.

   “என்ன மேடம்... இதுல சின்னப்பொண்ணு மாதிரி தெரியுறீங்க.”

   “ஹலோ, நான் சின்னப்பொண்ணுதான். இந்த வேலையில உங்களைவிட டூ இயர்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஜாஸ்தி. ஆனா, நீங்க ரொம்ப சீனியர்தானே!”

   அவளின் அந்த `ரொம்ப சீனியர்’  வார்த்தைகள் என்னைக் காயப்படுத்திய நொடியில் அலறினேன்.

   “ரொம்பல்லாம் இருக்காது. உங்களைவிட ரெண்டு செட்” என நான் பதறுவதைப் பார்த்து,

   “யூ டூ லுக் குட் இன் திஸ்” என்றாள். ஆனால் அதில் எந்தவித காதல், காம உணர்வும் இல்லாமல்  `ஒரு டீ சொல்லு’ என்பதுபோல்தான் தட்டையாகச் சொன்னாள்.

   “லெட்ஸ் கெட் இன் டு பிசினஸ்” என்றவள், எழுந்துபோய் எங்கிருந்தோ வெள்ளைத் தாள்களையும் வண்ணப் பேனாக்களையும் எடுத்துக்கொண்டு வந்தாள்.

   “இது பெரிய ஈவென்ட். நேத்து கேட்டீங்கல்ல. அல்மோஸ்ட் 1,000 பேர நாம கவனிக்க வேண்டி இருக்கும். இந்த மாதிரி ஈவென்ட் மேனேஜ்மென்ட்ல நமக்கு என்னவெல்லாம் சேலஞ்சஸ் இருக்கும்னு லிஸ்ட் அவுட் பண்ணிட்டு, அதுக்கு நாமளே பதில் சொல்லிக்கிட்டோம்னா சிம்ப்பிளா முடிஞ்சிடும்” என அவளாகவே சொல்லிக்கொண்டு எழுதத் தொடங்கினாள்.

   எனக்கு ஏதோ விண்ணுலகில் வீற்றிருப்பது போல் இருந்தது. `ஞாயிறு போற்றுதும்’ என்ற வாக்கியம் நினைவுக்குள் வந்து போனது.

   “பெரிய சேலஞ்ச், ஏர்போர்ட்ல இருந்து இவங்களை ஹோட்டலுக்குக் கூட்டிட்டு வர்றது. அப்புறம் ரெண்டு நாள் கழிச்சு ஏர்போர்ட்ல டிராப் பண்றது. மற்றபடி ஒன்ஸ் தே ஆர் இன், எல்லா டிப்பார்மென்ட்லயும் அலெர்ட் கொடுத்து அதை ஃபாலோ பண்ணிட்டாலே போதும்.”

   அன்று அவளோடு காபி குடித்தது, சுகந்தம் சுவாசித்தது என ஒவ்வொரு விநாடியையும் மெள்ளத்தான் கடந்தேன். அவள் அதிவேகமாக வேலைகளை முடித்துக் கிளம்பிப் போய்விட்டாள்.

   அற்புதமாக நடத்தி முடித்தோம் அந்த ஈவென்ட்டை.

   “என்ன மேடம், பார்ட்டி எல்லாம் கிடையாதா?” என்ற என் தூண்டிலுக்கு என்னையே புழுவாகப் பார்ப்பதுபோல் பார்த்து, “வொர்க் பண்ணது நானு. நீங்கதானே ட்ரீட் கொடுக்கணும்?” என்றாள்.

   அப்போதுதான் ஜி.எம் எங்களை அவசரமாக அழைத்து, எங்கள் அலுவலக மொழியில் சொல்வதானால் என் பேன்ட்டைக் கழற்றினார். ஆம். எங்கள் ஹோட்டல் டிரைவர், வட இந்தியப் பெண்ணிடம் தகாத வார்த்தை பேசிவிட்டானாம். அதற்கு நான்தான் பொறுப்பு. ‘ஓட்டுநர்களைச் சரியாக க்ரூம் செய்யவில்லை’ எனத் திட்டித் தீர்த்துவிட்டார்.

   வெளியே வந்து ஆய்ந்த அறிகையில், அந்தப் பெண் பாண்டிச்சேரி போகும் வழியில் இரவில் டிரைவர் சீட்டுக்கு அருகில் அமர்ந்து உறங்கியிருக்கிறாள். நாள் முழுவதும் ஓட்டிக் களைத்த ஓட்டுநர், இரவில் இப்படி அருகில் அமர்ந்து குறட்டை விட்டுக்கொண்டு வரும் பெண்மணியிடம், “தூங்காதீர்கள், எனக்கும் தூக்கம் வரும்” என்று சொல்ல முற்பட்டு, இவ்வளவு பெரிய பிரச்னை ஆகிவிட்டது.

   மது விழுந்து விழுந்து சிரித்தாள். ஏனெனில், அந்தப் பெண்ணிடம் ஆங்கிலத்தில் இப்படிச் சொல்லியிருக்கிறார் ஓட்டுநர், “மேடம், இஃப் யூ ஸ்லீப், ஐ வில் ஸ்லீப் வித் யூ.”

   `நீங்கள் தூங்கினால், நானும் தூங்கிவிடுவேன்’ என்பதை இப்படிச் சொன்னதும், அந்தப் பெண் தாம் தூம் எனக் கத்தி பேனிக் பட்டனை எல்லாம் அழுத்திப் பாலியல் பிரச்னை வரை கொண்டுபோய்விட்டாள்.

   ``அவன் எப்படி என்னோடு படுப்பேன் என்று சொல்வான். நான் டெல்லியில் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா?” என்று கத்திக் கொண்டிருந்த பெண்ணை, நான் பரிதாபமாகப் பார்த்தேன். இன்னும் கொஞ்சம் விட்டால் மீடியாவுக்குப் போய்விடுவாள்போலிருந்தது.

   மதுதான் தக்க நேரத்தில் வந்து அந்தப் பெண்ணிடம் அது மொழிப் பிரச்னை என்றும் அவன் சொல்ல நினைத்தது இதுதான் என்றும் விளக்கி, ரூம் பில்லில் பாதியைக் குறைத்து மங்களம் பாடி அனுப்பிவைத்தாள். எனக்குப் போன உயிர் திரும்பிவந்தது.

   மது என்னிடம் சொன்னாள் “எப்பவுமே கம்யூனிகேஷன் கரெக்ட்டா இருந்துட்டா, லைஃப் ரொம்ப ஈஸி. நாம நினைக்கிறதைத் தேவையான இடத்துல சொல்லத் தெரிஞ்சுட்டா போதும்.”

   நான் ஆமோதிப்பதுபோல் தலையாட்டி “ஆனா, எல்லாரும் எல்லாத்தையும் எல்லார்கிட்டயும் கம்யூனிகேட் பண்ணிற முடியாது இல்லையா?”

   மது குழப்பமாகப் பார்க்க,

   “ஓகே, அன்னிக்குப் பேசிட்டிருக்கும்போது உங்களுக்குப் பிரெஞ்சு மொழி தெரியும்னு சொன்னீங்க ரைட்?”

   “யெஸ்.”

   “அப்போ, அதுல, ‘நான் உங்க கூடவே கடைசி வரைக்கும் இருந்தா நல்லா இருக்கும்னு இப்ப தோணுது. ஆனா, ஏன்னு தெரியலை. இந்த ஏன்னு தெரியாத காரணம்தான் எனக்குப் பிடிச்ச காரணம்’. இந்த சென்ட்டன்ஸை எப்படி அப்படியே இதே ஃபீலோடு சொல்ல முடியும்? அந்த மொழியில அதுக்கு இடம் இருக்கா?”

   சட்டென அவள் முகம் மாறியது. எழுந்து போய்விட்டாள். எனக்கு லேசாக உதறல் எடுத்தது. வழக்கம்போல் ஏ-4 தாளே துணை என ராஜினாமா கடிதம் எழுத வேண்டியதுதான்போல. எந்நேரமும் ஜி.எம்மிடம் இருந்தோ, ஹெச்.ஆரிடமிருந்தோ அழைப்பு வரக்கூடும் என மொபைலைப் பார்த்தேன்.

   வாட்ஸ்அப்பில் மதுவின் டி.பி மிளிர்ந்தது.

   `நீ ஒரு நல்ல கம்யூனிக்கேட்டர். எனக்கு சொல்லவேண்டியதைத் தீர்க்கமா சொல்லிட்ட. அதுவும் பிரெஞ்சு, அது இதுன்னு சேஃப் சைடு கம்யூனிகேஷன், ஐ லைக் இட்.’

   அப்பாடா என்று இருந்தது. கையெடுத்து கும்பிடும் எமோஜியைப் பதிலாக அனுப்பினேன். அதற்கு `பிரச்னை பண்ணாமல் விட்டதற்கு, கோடானுகோடி நன்றிகள் அம்மா தாயே’ என்று அர்த்தம் என்பது என் மனதுக்குத் தெரியும்.

   உடனே பதில் அனுப்பினாள் `சரி, அதை பிரெஞ்சுல சொல்லித்தரணுமா?’

   ஒரு நொடிதான் யோசித்தேன். `இல்லை. அந்தப் பொண்ணுக்குத் தமிழும் தெரியும். கரெக்ட்டா கம்யூனிகேட் பண்ணிட்டேன்னு அவளே சொல்லிட்டா’ கூடவே நான்கைந்து மலர்கள், சிரிப்பு, ஹார்ட்டின் என அனைத்து எமோஜிகளையும் அனுப்பிவைத்தேன். அந்த நொடியில் உயிரைப் பணயம் வைப்பதுபோல்தான் இருந்தது. ஏனெனில், வெகுநாள்களுக்குப் பிறகு அப்பாவுடன் ஸ்நேகம், அலுவலகத்தில் ஓரளவு பிடித்தமான வேலை என அன்றாடம் கச்சிதமாகப் போய்க் கொண்டிருக்கிறது. இப்போது மது ரூபத்தில், அவள் இதைத் தவறாக எடுத்துக்கொண்டு பிரச்னை செய்துவிட்டால், அவ்வளவுதான். சீட் உடனே கிழிந்துவிடும். அப்பா மீண்டும் “நீயெல்லாம்...” எனப் பல்லவி பாடுவார். பைக் டியூ கட்டுவதே பெரும்பாடு ஆகிவிடும்.

   மதுவிடமிருந்து பதில் வரவில்லை. ஆயிரம் பாம்புகள் மொபைலுக்குள்ளிருந்து நாக்கை வெளியே நீட்டி என்னைக் கொத்த வருவதுபோல் இருந்தது, ஒவ்வொரு முறையும் நான் மொபைலை எடுத்துப் பார்க்கும்போதும். அனுப்பியிருக்கக் கூடாதுதான். நல்ல நட்பு, நல்ல தோழியாக மதுவோடு காலம் முழுக்க இருந்திருக்கலாம்தான். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், அவள் புற அழகில் ஒரு நாளும் நான் ஈர்க்கப்படவில்லை (சரி சரி, அந்த ஞாயிற்றுக்கிழமை தவிர) அவளின் ஆளுமை, சிரிப்போடு சிக்கலைக் கடக்கும் முறைமை என ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன.

   பலூனை ஊதும்போது காற்றின் கொள்ளளவுக்கான பயம் பீடிக்குமே, அப்படித்தான் நகர்ந்தன நொடிகள். மனம் முழுக்க வாட்ஸ்அப் குறித்த விசனம்தான். `எல்லாம் சரி, அந்த ஹார்ட்டின் எமோஜியைத் தவிர்த்திருக்கலாம்’ என்று கடைசியாக ஒரு ஞானம் பிறந்தது. இனி பிறந்து?
   மறுநாள் என்னை ஜி.எம் அழைப்பதாகக் கட்டளை வந்தது. அடுத்த வாரம் ரிட்டையர்ட் ஆகப்போகிறவர். அதற்கான கடுகடுப்பில் இருந்தார்.

   உள்ளே நுழைந்தேன். மது இல்லை. `சரி எதுவானாலும் எதிர்கொள்வோம். அப்படிப் பெரிய தவறு ஒன்றும் செய்துவிடவில்லை. என் காதலை மிக நாகரிகமாகத் தெரிவித்தேன். ஏற்கலாம் அல்லது மறுக்கலாம். இப்படி மூன்றாவது மனிதனிடம் போய்ச் சொல்லி, வேலைக்கே உலைவைப்பது எல்லாம் எவ்வகை நியாயம் மது?’ என்று மனதுக்குள் கேள்வி.

   என்னை அமரச் சொன்னார்.

   “யெஸ் சார்.”

   “மது...” என இன்டர்காமில் அழைத்தார். நான் நாற்காலியின் நுனியில் அமர்ந்திருந்தவன் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்வதுபோல பின்வாங்கிக்கொண்டேன்.

   மது நுழையும் வரை அமைதியாக ஏதோ வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

   `என்ன இது, பள்ளிக்குழந்தைபோல் செய்துவிட்டாளே இந்த மது!’ என நினைத்துக்கொண்டிருக்கும்போதே வந்தாள்.

   “கம் கம் மது, சிட்” என என் அருகில் அமரவைத்தார். நான் அவள் பக்கம் பார்ப்பதைத் தவிர்த்தேன்.

   ஜி.எம் கணீரெனப் பேசினார், “ரகு, ஹோப் மது இன்ஃபார்ம்டு யூ. உனக்கு புரமோஷன் வந்திருக்கு. மதுதான் ஸ்ட்ராங்கா ரெக்கமண்ட் பண்ணாங்க. யூ ஹேவ் டு தேங்க் ஹெர்.”

   என் விழிகள் விரிந்தன. படக்கென அவளைத் திரும்பிப் பார்த்தேன்.

   ஜி.எம்மிடம் மது மிக நிதானமாக, “சார், ஒரே டிபார்ட்மென்ட்ல ஒரே கிரேட்ல நாங்க ரெண்டு பேரும் இருந்து கன்ட்டினியூ பண்ணலாமா, இல்ல பாலிசியில ஏதாவது அப்ஜெக்‌ஷன் இருக்கா?”

   நானும் ஜி.எம்மும் குழப்பமாக அவளைப் பார்க்க, “யெஸ் சார், நாங்க மேரேஜ் பண்ணிக்கிறதா ப்ளான் பண்ணியிருக்கோம்” என்றாள்.

   ``வாவ், கன்கிராட்ஸ்! என்கிட்ட சொல்லவேயில்லையே” என்றார்.

   “என்கிட்டயே இப்பத்தான் சார் சொல்றா” என்றேன். என் முகத்தில் அவ்வளவு சிரிப்பு இருந்திருக்க வேண்டும். ஜி.எம் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.

   “அப்போ டபுள் ஹேப்பினஸ்” எனக் கையைக் குலுக்கி விடைகொடுத்தார். மறக்காமல் “ஆல் தி பெஸ்ட் போத் ஆஃப் யூ” என்றார்.

   அப்படி அதிரடியாகக் காதலைச் சொன்னவள் மது. அதன் பிறகு என்னைவிடவும் என் குடும்பத்தாரிடம் அவ்வளவு பாசமாகப் பழகியவள். குறிப்பாக, என் அப்பா அவளுக்கு நல்ல நண்பர் ஆகிவிட்டார். இப்படி இத்தனை நெருக்கம் ஆன பிறகும், அவள் குணம் அறிந்தும், இத்தனை வருடங்கள் அவளோடு இருந்தும் நேற்று நான் அந்தக் கேள்வியைக் கேட்டிருக்கக் கூடாதுதான். சரி நான் ஒன்றும் அப்படித் தப்பாகக் கேட்கவில்லையே. புதிதாக ஒருவன் வேலைக்குச் சேர்ந்திருக்கிறான். அவனுக்கு ட்ரெய்னிங் கொடுக்கும் பொறுப்பு மதுவுக்கு. அவனைப் பார்த்தவுடன் நான் எதேச்சையாகக் கேட்டேன், “இப்பிடித்தானே நானும் ட்ரெய்னிங்னு நுழைஞ்சேன்”அவ்வளவுதான்.

   இந்த “வாட் டு யூ மீன்” என்ற வாக்கியத்தைக் கண்டுபிடித்தவன் மட்டும் என் கையில் கிடைத்தால் அவ்வளவுதான். அதையே ஐம்பது முறை கேட்டிருப்பாள் விதவிதமாக. நான் ஒருகட்டத்தில், “பொசஸிவ்ல கேட்டுட்டேன். அவன் ஆள் வேற கொஞ்சம் நல்லா இருந்தான். அதான், சரி ஸாரி.” அதற்கும் வாட் டு யூ மீன்தான்!

   “அப்போ நீங்க அழகா இருக்கிறதா நினைப்பா?” அஸ்த்திவாரக்கல்லை லேசாக ஆட்டத் தொடங்கினாள்

   “சரி விடு, ஜாலியாக் கேட்டேன்”

   “இதுதான் ஜாலியா? அப்போ உங்கிட்ட பழகினமாதிரிதான் எல்லர்கிட்டயும் பேசுவேன்னு நினைச்சுட்டியா?” ஒரே நொடியில் கண்ணாம்பாவில் துவங்கி, சரோஜாதேவிக்குள் புகுந்து,இறுதியில் ஓவியாவாக முடித்தாள், “கெட் லாஸ்ட், நோ மோர் சான்ஸ் டு யூ.”

   மது இல்லாமல் அலுவலில் மனம் லயிக்கவில்லை. எல்லாவற்றையும்விட அதிகக் கோபமும் இயலாமையும் அவள் வாட்ஸ்-அப் ஆன்லைனில் தொடர்ந்து இருப்பதைப் பார்க்கும்போதுதான் ஏற்பட்டது. நான் டைப் செய்வது போல் ஆரம்பித்து அழித்துக்கொண்டே இருந்தேன். அவளுக்கு டைப்பிங் என்று வரட்டும் என. அவள் சட்டைசெய்யாமல் ஆன் லைனிலேயே இருந்தாள்.

   அன்று ஒரு நாளைக் கடப்பதே கடினமாக இருந்தது என்றால் அதனையடுத்து வந்த இரண்டு நாள்கள் அலுவலகத்தில் மது இல்லாமல் எதுவுமே ஓடவில்லை. சட்டென வற்றிப்போன குளம்போல் காட்சியளித்தது அலுவலகம். என் மேஜைக்கு வலப்பக்கமும் ஏ-4 தாள்கள்  இருந்தன; இடப்பக்கமும் இருந்தன. மது இல்லாத இந்த அலுவலகத்தில் இனி இருக்கப் போவதில்லை என முடிவெடுக்கச் சொல்லி அந்தத் தாள்கள் படபடப்பதுபோல் தோன்றின. மின்விசிறியைத் திசைமாற்றி வைத்துவிட்டு கிருத்திகாவின் உதவியை நாடினேன்.

   கிருத்திகா மதுவோடு ஒன்றாக வேலைக்குச் சேர்ந்தவள். ஃபுட் டிப்பார்ட்மென்ட். யார் என்னவென்றே தெரியாமல், ஆனால் ஒரே நாளில் வேலைக்குச் சேர்ந்துவிட்ட ஒரு தகுதியே நெருக்கமான நண்பராக ஆவதற்கான தகுதியாகிவிடும். அப்படித்தான் மதுவிற்குக் கிருத்திகா.
   கிருத்திகாவிடம் கெஞ்சிக் கூத்தாடி மதுவை அழைக்கச் சொல்லி ஸ்பீக்கரில் போடச் சொன்னேன்.

   “என்ன மது இன்னும் ஒடம்பு சரி ஆகலையா?”

   மதுவின் குரல் கம்மியிருந்தது. எல்லாம் என்னால்தான்.

   “பெட்டர் கிருத்திகா. த்ரோட்தான் சரி இல்ல, இன்ஃபெக்ட் ஆகிருச்சு, பட் நார்மல், அம்மா அப்பாகூட வெளில போயிட்டு இருக்கேன், சொல்லு”

   நான் சைகையில் என்ன பேசவேண்டும் என்பதைச் சொன்னேன்.

   “ஆமா, என்ன உன்னோட ஆளைத் திட்டிவிட்டியா? ரெண்டு நாளா ஆள் எக்ஸ்பெயரி ஆன நூடுல்ஸ் மாதிரி திரிஞ்சு போய் இருக்கான்”

   “உங்கிட்ட வந்துட்டானா, இஸ் இட் ஆன் ஸ்பீக்கர்? இஸ் ஹி அரவுண்ட்?”

   உடனே பதறி ஸ்பீக்கரை ஆஃப் செய்தவள்

   “ச்சே, ஐம் இன் லேடிஸ் ட்ரெஸ்ஸிங் ரூம்டி, பை த வே, காலைல ரொம்ப டிஸ்டர்பா இருந்தான், நார்மலா ஏதாவது சிரிச்சுப் பேசிட்டுப் போவான், அதான்”

   பேசிக்கொண்டே ஹேண்ட்ஸ் ஃப்ரியை அவள் ஒரு காதிலும் என் காதில் ஒன்றையும் வைத்தாள்.

   மதுவின் குரலை உன்னிப்பாய்க் கேட்டேன்.

   “இல்ல கிருத்திகா, அவன்னு  இல்ல, மோஸ்ட்லி எல்லா ஆம்பளைங்களுமே பொண்ணுங்கன்னா ரொம்ப ஈஸியா எல்லார்கிட்டயும் எல்லாத்தையும் பேசிருவோம்னு நினைக்கிறாங்க. யாருகிட்டயுமே பேசலன்னா பிரச்னை இல்ல, ஒருத்தன்கிட்ட பேசிட்டா, அவ எல்லார்கிட்டயும் பேசிருவா, போயிருவான்னு ஒரு ஃபீல், இரிட்டேட்டிங்கா இருக்கு, சில விஷயத்தை எக்ஸ்ப்ளைனே பண்ணக் கூடாதுன்னு நினைப்பேன். எங்க அம்மா எங்கிட்ட இவர்தான் உங்கப்பான்னு என்னிக்காவது எக்ஸ்ப்ளைன் பண்ணி இருக்காங்களா என்ன? பேசிக் ஃபீல் , பேசிக் ட்ரஸ்ட் இத எல்லாம் எக்ஸ்ப்ளைன் பண்ணித்தான் புரியவைக்கனும்னா, அப்பிடி ஒரு ரிலேசன்சிப்பே தேவை இல்லன்னு தோணுது, இப்பக் கூட அவன் கைல கெடச்சா நல்லா பளார்னு ஒரு அறை விடனும்னுதான் தோணுது. விடு, லீவ் தட்”

   “ஹலோ, சோடா இருந்தா குடிச்சக்கப்பா, இப்பிடி மூச்சு விடாம பேசுற, ஆனா பாவம்ப்பா..”

   அவர்கள் பேசிக்கொண்டே இருந்தார்கள். நான் ஹேண்ட்ஸ் ஃப்ரியை மெதுவாகக் கழட்டி கிருத்திகாவிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தேன்.

   மிகவும் காயப்படுத்திவிட்டேன் என்பது அதுவரை புரிந்திருக்கவில்லை. சில வார்த்தைகளைச் சொல்லிவிட்டு நாம் சிரித்து மழுப்பினாலும், அந்த வார்த்தைகள், ‘வீழ்த்த வேண்டும் என்பதற்காகத்தான் சொல்லப்பட்டது’ என்பதை உணர்த்திவிடும் போல. வார்த்தைகள் மிகவும் விசுவாசமானவை. அவற்றின் நோக்கத்தையும் ஆளையும் அவை சென்றடைந்துவிடும். நான் கேட்ட வார்த்தையின் அமிலத்தன்மை மதுவின் மனதைப் பொசுக்கி விட்டது என்பதை நினைக்கும்போதே வேதனையாய் இருந்தது.

   கிருத்திகாவை நிமிர்ந்து பார்க்கும் நிலையில்கூட என் மனம் இல்லை. வெளியே வந்துவிட்டேன்.

   என் மனம் இப்போது ஒரு வேண்டாத வேலையைப் பார்த்தது. ஆம், சம்பந்தமில்லாமல் ஒரு பழைய நினைவை எங்கிருந்தோ தரதரவென இழுத்துக்கொண்டு வந்தது.

   ஒருமுறை ஷாப்பிங் போகலாம் என முடிவெடுத்த நொடியில் கிளம்பிவிட்டோம். மது எப்போதும் அப்படித்தான்.

   “பிஸியா? வீட்டுக்குப் போகணுமா சீக்கிரம்?”

   “இல்லையே, ஏன்?”

   “சரி பார்க்கிங்ல வெயிட் பண்ணு, யூனிஃபார்ம் மாத்திட்டு வர்றேன், டாப்ஸ் எடுக்கணும். போலாம்”

   அவ்வளவுதான். கிளம்பிவிட்டோம்.

   வளாகத்திற்குள் நுழைந்து, அவள் எப்போதும் எடுக்கும் பிராண்ட் டிவிசனுக்குள் நுழைந்தவள், அள்ள ஆரம்பித்தாள். நான் வழக்கம்போல ட்ரையல் ரூம் இருக்கும் திசையில் தேவுடு காத்துக்கொண்டிருந்தேன்.

   வழக்கத்தைவிடவும் நேரம் அதிகமாகச் சற்று சந்தேகம் அடைந்து வளாகத்திற்குள் தேடினால், நான்கைந்து பெண்களைச் சேர்த்துக்கொண்டு, மேலாளர் என டை கட்டிக்கொண்டு நின்றவனிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள். ட்ரையல் ரூம் கண்ணாடியை ஆட்காட்டி விரலால் தொட்டுப் பார்த்திருக்கிறாள். இடைவெளி ஏதும் இல்லாமல், விரல் நுனியும் விரலின் பிம்ப முனையும் தொட்டுக்கொண்டிருக்கிறது. அப்படி இருந்தால், அந்தக் கண்ணாடியின் பின்புறம் இருந்து  ஆடை மாற்றுவதை பார்க்கலாம் எனும் சாத்தியம் இருக்கிறதாம். அதைத் தெரிந்து வைத்திருந்த மது, அங்கிருந்த மற்ற பெண்களையும் இணைத்துக்கொண்டு, விளக்கம் கேட்க, மேனேஜரின் பதில் திருப்தி அளிக்காததால், மற்ற பெண்கள் நேரம் ஆகிவிட்டது என விலகிவிட்டாலும், என்னை இழுத்துக்கொண்டு அருகாமையில் இருந்த போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் புகார் அளித்து, அந்த மேனேஜரை அங்கு வரவழைத்து, கையோடு கண்ணாடியை மாற்றிவிடுவதாக அவன் எழுதிக் கொடுத்தவுடன் தான் அந்தப் பிரச்சனையை விட்டாள்.

   “என்ன மது, அவன் சொன்ன மாதிரி, அங்க சுவர்தானே இருக்கு, கண்ணாடி வாங்கும்போது பார்க்காம வாங்கி இருக்கலாம்தானே, இந்த மாதிரி பெரிய ஷோ ரூம்ஸ்ல ஈஸியா அப்படிப் பண்ண மாட்டாங்க மது”

   “அப்படி நம்பித்தான போறோம். அந்த நம்பிக்கைய நாசப்படுத்துனதுக்குத்தான் இந்த மாதிரி செஞ்சேன். இவனுங்க பண்றதால, யாரையும் எதையும் முழுசா நம்பமுடியாம போயிரக்கூடாது இல்ல.. அதான் இந்த லெஷன்” 

   மது மிக மென்மையான குரலில்தான் அப்படிச் சொன்னாள். ஆனால் அந்த வார்த்தைகளில் அவ்வளவு  அழுத்தம் பொதிந்திருந்தது.

   அப்படிப்பட்ட மதுவா இனி மனசு மாறப்போகிறாள்? எனக்காகப் பரிந்து பேசிக்கொண்டிருக்கும் கிருத்திகாதான் பாவம். என்னால் அவளுக்கும் திட்டு விழுந்திருக்கும்.

   விளையாட்டாக ஆரம்பித்த சண்டை உண்மையிலேயே முறிவுக்கு வந்ததுபோல் தோன்றத் துவங்கியது. நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவள் டி.பி சட்டென மறைந்து போனது. ஆம், பிளாக் செய்துவிட்டிருந்தாள். அதுவரை அடக்கி வைத்திருந்த அத்தனை உணர்வையும் சேர்ப்பித்து அழைத்தேன். முதல் ரிங் போவதற்குள்ளாகவே டிஸ்கனெக்ட் செய்தாள்.

   கழிவிரக்கம் கொஞ்சம் கண்ணீரைக் கூட்டி வந்தது. அப்பாவிடம் இருந்து போன், உடனே வீட்டிற்கு வரச்சொல்லி. சில நாட்கள் இப்படித்தான் ஆகும். எல்லா கெட்டவையும் ஒரே நாளில் நடந்துவிடும். ‘அப்படியான நாள்’ என நினைத்துக்கொண்டே வீட்டை அடைந்தேன்.

   உள்ளே,

   மது, குடும்ப சகிதம் அமர்ந்திருந்தாள்.

   அப்பா என்னிடம்,

   “ஏண்டா எப்பப் பாரு சண்ட போடுறியாமே, நேத்து நைட் வீட்டுக்குப் போனதுக்கு அப்புறம் உம் மேல ஆத்திரம் வந்து ஓங்கி ஒரு அறை விடனும்னு நினைச்சாளாம், அப்படி நெனச்ச உடனே அடிக்கணும்னா கல்யாணம் பண்ணிக்கிறதுதான் ஒரே வழின்னு முடிவு பண்ணிட்டாளாம்”
   அப்பா சொல்லச் சொல்ல,மதுவைப் பார்த்து சிரித்தேன், கண்ணில் நீர் வர.

   வாட்ஸ்-அப்பில் கிருத்திகா நிறைய பூக்கள் மற்றும் வாயைப் பொத்திக்கொண்டிரு எனும் எமோஜியையும் அனுப்பி வாழ்த்தி இருந்தாள்.
   http://www.vikatan.com
  • By நவீனன்
   குணவேறுபாடு
   சிறுகதை: மேலாண்மை பொன்னுச்சாமி, ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு
    

   சுனைக்கனி, பலசரக்குக் கடைக்குள் உட்கார்ந்திருந்தான். மடியில் நோட்டும் சிட்டைத்தாளும். கடை பூராவும் நிதானமாகப் பார்வையை அனுப்பினான். ‘வேற ஏதாச்சும் கொள்முதல் பண்ணணுமா?’ என ஒவ்வொரு பொருளாக யோசித்து சிட்டையில் எழுதினான்.

   கல்லாப்பெட்டியைத் திறந்தான். ரூபாயை எடுத்தான். ‘எம்புட்டு வெச்சிட்டுப் போகணும்?’ என்ற யோசிப்பு.

   `கரிவலம்வந்தநல்லூர் மிட்டாய் வியாபாரி, வரகுணராமபுரம் புகையிலைக்காரர், மாதாங் கோவில்பட்டி முட்டை வியாபாரி, செவல்பட்டி சேவுக்காரர், நத்தம்பட்டி பொடிமட்டைக்காரர்... இவங்கதான் இன்னைக்கு வந்து சரக்கு போடுவாக. அவுகளுக்கு ரூவா கட்டணும்’ - தோராயமாக மனசுக்குள் கூட்டிப்பார்த்தான்.

   ஒரு தொகையை வைத்துவிட்டு, மீதிப் பணத்தை எடுத்துப் பிரித்து, அண்ட்ராயரின் சைடு பைக்குள்ளும் மேல்சட்டையின் உள் பைக்குள்ளும் மெத்தையாகத் திணித்தான்.

   `திருவேங்கடத்துக்கு சரக்கு வாங்கப் போகணும். கருவாட்டுக் கடை, காய்கறிக் கடை, மளிகைக் கடை, அரிசிக் கடைகளில் வேலை இருக்கு. வாழைத்தார் ரெண்டு தூக்கணும். நாட்டு வாழை நயஞ்சரக்கு தூக்கணும்னா... வெரசா போகணும். 10 மணிக்கு முன்னாடியே நல்ல அயிட்டங்களை கடைக்காரங்க தூக்கிருவாங்க...’

   மணியைப் பார்த்தான் சுனைக்கனி. 9:15. காலை ஏறுவெயில், சுள்ளெனக் காந்தியது. அவனுக்குள் பரபரப்பு. கடையோடு சேர்ந்த வீடு. சாப்பிட்டுக்கொண்டிருந்தாள் பூர்ணம்.

   ‘‘பூர்ணம்... ஏம்மா பூர்ணம்...’’

   ‘‘என்ன... இந்தா வந்துட்டேன்’’ - வாய் நிறையச் சோற்றுடன் பேசுகிற பேச்சின் சொதசொதப்பு.

   ‘‘நேரமாச்சு... வாழைத்தாரு நல்ல தாரு எடுக்க முடியாது.’’

   ‘‘நீங்க புறப்புடுங்க. நான் கடையைப் பாத்துக்கிடுதேன்.’’

   ‘‘அப்ப சரி...’’

   கடையைவிட்டு வெளியே வந்தான். எதிர்வீட்டுத் தாழ்வார நிழலில் TVS XL வண்டி நின்றது.

   ‘‘வரத்து ஏவாரிகளுக்கு ரூவா எடுத்து வெச்சாச்சா?’’

   ‘‘ம்... மாதாகோவில்பட்டி முட்டைக்காரர் வருவாரு. பெருசுலே ஆறு அட்டைக... சிறுசுலே அஞ்சு அட்டைக வாங்கு.’’

   ‘‘சிறு சைஸ் முட்டைக சரியாப் போக மாட்டேங்கு.’’

   ‘‘நாமதான் பாத்துத் தள்ளிவிடணும். கருவநல்லூர் மிட்டாய்க்கார அண்ணாச்சிகிட்டே தேன்மிட்டாய் பாக்கெட் கூடுதலா ரெண்டு வாங்கு.’’

   ‘‘திருவேங்கடத்துலே வாங்கவேண்டிய சாமான்க சிட்டையை நீயும் ஒரு பார்வை பார்த்துக்க.’’

   ‘‘பார்த்துட்டேன். சீரெட்டு ரெண்டு பண்டல் வாங்கணும். வில்ஸ் ஃபில்டர் 12 எழுதிக்கோங்க. கருவாட்டுக் கடைக்குப் போனீகன்னா... வாளைக் கருவாடு வாங்கிட்டு வாங்க.’’

   ‘‘ம்...’’

   வண்டியை எடுத்தான். மடித்த சரக்குகள், அகலமான தூக்குப் பைகள், எண்ணெய் கேன், குட்டிச்சாக்குகள் எல்லாவற்றையும் எடுத்து வைத்துக்கொண்டான்.

   இந்நேர வரைக்கும் விலகியிருந்த நினைவு வந்து அப்பிக்கொண்டது. கட்டைமுள்ளாக நெஞ்சுக்குள் நிற்கிறது.

   `எதிர்லே தட்டுப்படுவாரா... என்ன சொல்ல, எப்படிச் சொல்ல? முகத்துக்கு முகம் பாத்துச் சொல்லிர முடியுமா, வாய் வருமா, நா எழுமா, மனசு துணியுமா?’

   `பச்சைப்பிள்ளையின் கழுத்தைத் திருகி வீசி எறிகிற மாதிரியான கொடுங்காரியம் இல்லையா? குரூர நிஜம் என்னென்னா... எப்படியாச்சும் சொல்லித்தான் ஆகணும்.’

   `இன்னிக்கு என்ன கிழமை? திங்கள், செவ்வாய் கழிச்சு புதன் பிறந்தவுடன் வந்து நிப்பாரு.வண்டிக்குப் போறப்ப `ஏதாச்சும் லோடு இருக்கா?னு கேப்பாரு.’

   ` ‘கடலைமிட்டாய் இருக்கா?’னு கேட்டு வந்து நிற்கிற பாலகனின் கழுத்தை அறுத்துப் போட முடியுமா... அவருக்கு என்ன பதில் சொல்ல?’

   ‘‘வண்டிக்கார அண்ணாச்சி கடைக்கு வந்தார்னா என்னமும் சொல்லவா?’’

   ‘‘நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம்.’’

   பஸ் வந்து வட்டமடித்துத் திரும்பும் காமராஜர் பேருந்து நிலையம் விளிம்பில் இருக்கிற அருஞ்சுனை டிபன் சென்டரில் நின்றான் சுனைக்கனி. ஓர் உளுந்தவடையைப் பிய்த்து வாயில் போட்டு, டீயை அவசர அவசரமாகக் குடித்தான். கொதிக்கிற டீ குடித்து முடித்த வாயில் இருந்து புகை வந்தது.

   ஹோட்டல்காரர் துண்டை இடுப்பில் கட்டியிருந்தார்.

   ‘‘இந்த வாரம் ராசபாளையம் சந்தைக்குப் போவீகளா?’’

   ‘‘ராசபாளையம் போவேன். சந்தைக்குப் போக மாட்டேன்.’

   ‘‘ஏன்?’’

   ‘‘வியாழக்கிழமைதான் சந்தை. நான் வெள்ளி, இல்லாட்டா சனிக்கிழமை போவேன்’’

   ‘‘இது என்னது... புதுசாயிருக்கு?’’- வியப்போடு கேட்ட ஹோட்டல்காரருக்கு, சுனைக்கனி சிரிப்பால் மழுப்பினான்.

   ‘‘அது அப்படித்தான். வாழைத்தாரு தூக்கணும். வெரசா போகணும். நான் வர்றேன்’’ பரபரப்பாகத் தெறித்தோடினான்.

   எக்ஸ்.எல் வண்டியை ஸ்டார்ட் செய்து, ஸ்டாண்டை எக்கித் தள்ளினான். மடித்துக் கட்டிய கைலியும் அரைக்கைச் சட்டையும் வெயிலிலும் வியர்வைக்கசிவிலும் நசநசத்தன. சாமிநாதபுரம் வழியாக திருவேங்கடம். வண்டி, தெற்குத் தெரு தாண்டி பாலத்தில் இறங்கி ஏறி, தெற்கில் நீண்டுகிடக்கும் அகலமான தார் ரோட்டில் விரைந்தது. ஆக்ஸிலேட்டரை முழுமையாகத் திருகவில்லை. நிதானமாக முறுக்கி, ஒரே சீரான வேகத்தில் வண்டியை ஓட்டினான்.

   பரந்துவிரிந்த கரிசல்காட்டுச் சமுத்திரத்தைக் கீறிப் பிளந்துகொண்டு தெற்குப் பக்கம் நீண்டு கிடந்தது தார்ச்சாலை. புத்தம்புதியது.

   கரிசல்காட்டு வண்டிப்பாதைக்கு நடுவில் நீளும் குறுகலான ஒற்றையடிப்பாதையில், லோடு கட்டிய சைக்கிளை மிதிக்க முடியாமல் மிதித்து இவன்பட்ட அந்த நாள் சிரமங்கள் நினைவில் உரசிச் சென்றன. அதற்கும் முன்னால்... ஓலையில் கட்டிய மண்டைவெல்லம் சிப்பம் ரெண்டு கட்டிய சாக்கை தலையில் வைத்து சுமந்து, பீடி, சிகரெட் சில்லறைச் சாமான்கள் கிடக்கிற தூக்குப் பையைத் தோளில் போட்டு, கண்மாய்க் காட்டுக்கரைப்பாதையில் நடந்து சீரழிந்து, சரக்கு வாங்கிய அந்தப் பழைய நாட்கள்...

   இன்றைக்கு தார்ச்சாலையில் வழுக்கிப் போகிறது எக்ஸ்.எல் வண்டி.

   பங்குனி மாத வெயில் தீயாகச் சுட்டது. கன்னத்திலும் இடது கையிலும் வெயில் காந்தியது. கை ரோமங்கள் இடையேயும் நெஞ்சு ரோமங்கள் இடையேயும் வியர்வை நெளிவுக்கோடுகள் முத்து முகத்துடன் இறங்கின.

   கரிசல் தரிசில் ரொம்பத் தூரத்தில் செம்மறி ஆடுகள் மேய்ந்தன. எருமைகளும் வெள்ளாடுகளும் வேறோர் இடத்தில் மேய்ந்தன. கருவேலமரத்தில் உச்சியில் ரெண்டு மைனாக்கள். விரித்த சிறகுகளுடன் பறக்கும் பருந்தை விரட்டின கரிச்சான்கள்.

   இதை எதையும் கவனிக்கும் மனநிலையில் இல்லை, சுனைக்கனி. இவன் மனசெல்லாம் வேதனையான நினைவுகள், ரணகள யோசனைகள்.வண்டிக்காரத் தேவர் அண்ணாச்சியிடம் எப்படிப் பேச்சைத் தொடங்குவது, எப்படிச் சொல்ல, வருஷக்கணக்கிலான உறவை எப்படி அறுக்க? முகம் முறித்து, தாட்சண்யம் இல்லாமல் சொல்ல முடியுமா?

   கிராமத்தில் ஒன்பது கடைகளில் ஒன்றாக இருந்தது, இவன் கடையும். ஒன்பது கடைகளில் பெரிய கடை என்ற நிலைமை உண்டானது, வண்டிக்காரத் தேவர் அண்ணாச்சியால்தானே!
   சைக்கிளில் திருவேங்கடம் சென்று, சரக்கு கொள்முதல் பண்ணி, கடையில் விற்கும் வரை ஒன்பதில் ஒன்று.

   திருவேங்கடம் எட்டிப்பிடிக்கிற தூரம்தான். கடைக்காரன் போய் வாங்குகிற சரக்குகளை, அதே விலைக்கு நாம் வாங்க முடியுமே என எல்லோரையும் நினைக்கவைக்கும். வசதியுள்ள வீட்டுக்காரர்கள் திருவேங்கடம் போய்விடுகின்றனர்.

   `இதுவே... தூரந்தொலைவான ராஜபாளையம் போய் மொத்தமொத்தமாக சரக்குகள் வாங்கி, மூடைக்கணக்குகளில் வண்டி பாரம் ஏற்றிக் கொண்டுவந்தால், விலை குறைவாக சரக்கு தர முடியுமே... வியாபாரத்தைக் கூடுதலாக்கலாமே...’ என யோசித்தான். சுனைக்கனியின் வியாபார மூளை விவரமான திசையில் பயணித்தது.

   சுனைக்கனியின் முதல் பார்வை, ராக்குத்தேவர் மீதுதான் விழுந்தது. நல்ல வலுத்த திரேகம். தாட்டியமான தோற்றம். காளை மாடு இருக்கிறது; வண்டியும் இருக்கிறது. நிலம் முக்கால் குறுக்கம் (ஏக்கர்) மட்டுமே. புஞ்சை வேலை இல்லாத நாட்களில் கூலி உழவு, வண்டி பாரத்துக்குத்தான் போவார். ஊர் தவிர வேறு ஒன்றும் தெரியாது. இந்த ஊரே அவரது உலகம். அவரும் அவரது துணைவியார் முத்தக்காவும் மட்டுமே சேர்ந்து கட்டின மண் வீடு; கூரை மேய்ச்சல்.

   வீட்டு முற்றத்தில் போய் நின்றான் சுனைக்கனி.

   ‘‘ஏய் முத்து... கடையிலே பாக்கி ஏதாச்சு வெச்சிருக்கியா?’’

   ‘‘இல்லியே...’’

   ‘‘பெறவு... வீட்டு வாசல்லே கடைக்காரன் நிக்கான்?’’

   ‘‘என்னன்னு நீரே கேளும்... என்ன சுனை, என்னப்பா?’’

   ‘‘அண்ணாச்சியையும் உங்களையும்தான் பார்க்க வந்தேன். ஒரு முக்கியமான விஷயம்.’’

   அவனது அமுங்கிய குரலில் இருந்த தயக்கம், ராக்குவையும் முத்துவையும் ரொம்ப யோசிக்க வைத்தது. கவனத்தைத் தீவிரமாக்கி, இவன் மீது குவித்தார்கள்.

   ‘‘சொல்லு... என்ன விஷயம்பா?’’

   ‘‘புஞ்சை வேலை இல்லாத நாள்லே வாடகை வேலைகளுக்குத்தானே போறீக?’’

   ‘‘ஆமா...’’

   ‘‘வியாழக்கிழமை வியாழக்கிழமை ராசபாளையம் சந்தைக்கு வண்டி போடுதீகளா? நம்ம கடை, லோடு வண்டிக்கு சரியா வரும். கைக்கணிசமா வாடகை தந்துருதேன்.’’

   ‘‘ஊரைத் தாண்டுனது இல்லியே நான். அம்ம்ம்ப்ப்புட்டுத் தூரம் எப்படிப் போறது? நமக்கு முடியாதப்பா.’’

   ‘‘முன்னப்பின்னே கல்யாணம் முடிச்சு வாழ்ந்த பழக்கத்துலேயா அக்காவைக் கல்யாணம் பண்ணுனீக? ஊரைத் தாண்டாத அனுபவம் இல்லாமத்தானே இருந்தீக? முத்தக்காவைக் கைபிடிச்சு, வீடும் காரும் மாடும் தொழிலுமா ஆளாயிடலையா? அப்படித்தான் ராசபாளையமும். எம்புட்டுத் தூரமா இருந்தாலும்... நடக்க நடக்கத் தொலைவு தொலைஞ்சிரும்லே?’’

   ராக்கு அசந்துபோனார். `வயசில் சின்னவன்தான். வாய் எம்புட்டு சாதுர்யமாப் பேசுது?’

   முத்தக்கா... தயங்கிய ராக்குவை அதட்டினாள்.

   ‘‘இந்தா... ஏவாரி வயித்துலே பிறந்த ஏவாரிப்புள்ளை எம்புட்டு விவரமாப் பேசுது! அது நீட்டுன எடத்துலே கண்ணை மூடிக்கிட்டுக் குதி.’’

   ‘‘கெடங்கா இருந்துட்டா?’’

   ‘‘கெடங்கா இருந்தாலும் தண்ணியுள்ள கிணறாத்தான் இருக்கும். நீந்தத் தெரிஞ்சா குளிச்சிட்டு வந்துரலாம்.’’

   பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது.

   நீண்ட நெடிய தேக்குவாரிகள் இரண்டு, பார்க்கயிறு, வண்டி மராமத்து வேலைகள் எல்லாம் சுனைக்கனி செலவில்தான் நடந்தன.

   சிவலிங்கபுரம், வரண்டாபுரம், நத்தம்பட்டி வழியாக ராஜபாளையம் மாட்டுவண்டி நிறைய மூடை மூடைகளாக வந்து சரக்குகள் இறங்க, ஊரே வியந்து அதிசயிக்க... சுனைக்கனிக்கு வியாபாரம் சுள்ளெனச் சுதாரித்தது. சுற்றுபட்டி கிராமத்து ஆட்கள் எல்லாம் இவன் கடையை நோக்கி வந்தனர்.

   செந்தட்டி அய்யனார் கோயிலுக்கு, தேனி பக்கம் இருந்து சாமி கும்பிட வருபவர்களை நைச்சியமாகப் பேசி, ராக்கு இழுத்துக்கொண்டு வந்து சுனைக்கனி கடையில் சேர்த்துவிடுவார். கல்யாண வீடுகள், இழவு வீடுகள், பூப்புனித நீராட்டு விழாக்கள் போன்றவற்றின் சமையல் சாமான் லிஸ்ட்டுகள் சுனைக்கனி கடைக்கே வந்துசேரும்படி செய்வது ராக்குத்தேவருக்கு இயல்பாயிற்று.

   ராஜபாளையம் சரக்கு வாங்கும் இடத்திலும் அப்படித்தான் சாக்குகளை உருட்டிச் சுருட்டி, கக்கத்தில் வைத்துக்கொண்டு இவன் வாலைப் பிடித்துக்கொண்டே கடை கடைக்குக் கூடவே வருவார். சரக்குக்குச் சாக்குப் பிடித்து, சுமைகூலிச் செலவு இல்லாமல் ஒவ்வொன்றையும் சுமந்து வண்டி சேர்ப்பார்.

   இவன் வாங்கித் தரும் டீ, வடை, வெற்றிலைப்பாக்கு, காலையில் வயிறுமுட்ட தோசை, வடை, பூரி, இட்லி... மதியம் சிங்க விலாஸ் ஹோட்டலில் கறி, மீன், முட்டையுடன் மூச்சுமுட்ட சாப்பாடு... பற்றியே புகழ்பாடுவார். இவனது தாராளமானக் கருணையைச் சொல்லிச் சொல்லி நெக்குருகுவார்.

   திரேகத்தில் வியர்வை நெளிவுகள் வரிவரியாக, தார்ப்பாய்ச்சி கட்டிய வேட்டியைச் சுருட்டிச் சுருட்டி செருகியிருக்கிற அழகு. வியர்த்துக் கொட்டுகிற உடம்பில் சகல இடங்களிலும் ஒட்டியிருக்கும் சாக்குத் தூசி.

   பெரும் வியாபாரிகள், கிராமங்களில் வாங்கும் விளைபொருட்களை பாரம் ஏற்றி ராஜபாளையத்தில் இறக்குவார்கள். சுனைக்கனியுடன் ஓடி ஓடி சரக்கு வாங்கி, பாரம் ஏற்றி ஊர் கொண்டுவந்து சேர்ப்பார்.
   போகும்போதும் வருமானம்; வரும்போதும் வருமானம். கையில் பசை. பையில் நீரோட்டம். முக்கால் குறுக்கம் வைத்திருந்த ராக்கு கையில் இப்போது மூன்று குறுக்கம் புஞ்சை. பம்புசெட் கிணறு. கரிசல் காடு, கூளப்படப்பு, தொழுவம் நிறைய பசுமாடுகள். மண் வீடு, சிமென்ட் வீடாகி...ஓட்டு வீடு ஆயிற்று.

   ராக்குவை இப்போது `வண்டிக்காரத் தேவர்’ என மரியாதையோடு மகுடம் சூட்டுகிறது ஊர்.

   வண்டிக்காரத் தேவரின் பலமுனை சப்போர்ட்களால் சுனைக்கனி, ஒன்பதில் ஒன்றாக இருக்கவில்லை. ஒன்பதில் பெரியது என ஆகிவிட்டான். சுனைக்கனிக்கு, சரக்கு வியாபாரம் வெகு மும்முரம். கூட்டம் எந்நேரமும் நெரிபுரியாக நிற்கும். சள்ளை பறியும் மொத்த வியாபாரமும் நடந்தன.

   ‘எனக்கு, உனக்கு’ என ஆள் ஆளுக்கு முண்டுவார்கள். முந்திவிட முட்டுவார்கள். சுனைக்கனியும் அசாத்தியமான திறமைசாலி. அத்தனை கூட்டத்தையும் சிரித்த முகத்துடன் சுறுசுறுப்பாகச் சமாளிப்பான்.

   கூரைவீடு, காரை வீடாகி, மாடியும் வந்துவிட்டது. `கனி நாடார்’ என்று மரியாதை மகுடம் வேறு.

   ராஜபாளையத்தில் `எஸ்.ஆர்' என்ற பலசரக்கு மாளிகைக் கடை. சுனைக்கனி போன்ற கடைக் காரர்கள் கொள்முதல் பண்ணுகிற பெருங்கடை. டோர் டெலிவரி தருவது மாதிரி, லாரிகளில் கடை டெலிவரி தருகிறது.

   செவல்பட்டி, ஆலங்குளம், திருவேங்கடம், கலிங்கப்பட்டி என பல ஊர்களுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் லாரி வருகிறது.

   ஒருநாள், சுனைக்கனியை எஸ்.ஆர் மடக்கினார்.

   ‘‘என்னய்யா... ராக்கெட் விடுற காலத்துலே மாட்டு வண்டியிலே சரக்கு ஏத்திக்கிட்டு, தைதைன்னு மாட்டைப் பத்திக்கிட்டு... மழை - கிழை வந்தா என்ன பண்ணுவீக?’’

   ‘‘மழை ஒருதடவை மடக்கி நாசமாக்கிருச்சு. மறுவாரமே கூண்டு பெருசா கட்டியாச்சு. மழைக்குப் பயம் இல்லே.’’

   ‘‘நான் கேட்டது மாட்டு வண்டியானு?’’

   ‘‘என்ன செய்ய?’’

   ‘‘பருத்திவிதை மூடைக, புண்ணாக்கு, மண்டைவெல்லம் மூடைக எல்லா லோடுகளையும் நம்ம கிடங்கிலேயே கொண்டாந்து சேர்த்துருங்க. நம்ம கடையிலே வாங்குற லோடையும் சேர்த்து நம்ம லாரியிலே உம்ம கடைவாசல்லே கொண்டாந்து இறக்கிருவோம்.’’

   ‘‘நம்ம ஊர்லே நான் ஒரு கடைதானே... லோடு பத்தாதுல்லே?’’

   ‘‘நான் கொறைஞ்சபட்ச அளவு ஒண்ணு சொல்லுதேன். அந்த லோடைக் குடுத்துருங்க. லாரி வந்துரும். செலவும் பாதியாக் குறையும்; அலைச்சலும் குறையும்.’’

   ‘‘யோசனை நல்லாத்தான் இருக்கு.’’

   ‘‘அடுத்த சனிக்கிழமை வந்து சரக்குகளை வாங்கி கிட்டங்கியிலே சேர்த்துட்டு, நம்ம கடையிலேயும் சிட்டையைச் சொல்லிட்டுப் போயிருங்க. லாரியிலே சரக்கு வந்துரும். கடை லோடுமேன்கள் கச்சாத்தைக் குடுத்துட்டு சரக்கை இறக்கிப்போட்டு வந்துருவாங்க.’’

   ‘‘செவல்பட்டி வந்துட்டு எங்க ஊரா, திருவேங்கடம் வந்துட்டு எங்க ஊரா?’’

   ‘‘உங்க கடையிலே எறக்கிட்டு திருவேங்கடம் போறாப்ல வெச்சுக்கிடுவோம்.’’

   சுனைக்கனிக்குள் கற்பனை கண்டமேனிக்குச் சிறகடித்துப் பறந்தது. நாலா திசைகளிலும் சிறகடிப்புகள்... ஆகாயம் எல்லாம் சிறகுகள்... கனவுச்சிறகுகள். பெருமை பொங்குகிறது.

   சைக்கிளில் மிதித்து கடைவாசலில் ஸ்டாண்ட் போட முடியாமல் போட்டு சரக்கு இறக்கிய காலம்.

   மாட்டு வண்டி நிறையச் சரக்குகள் இறங்குவதை ஊரே பார்த்து அதிசயித்த அந்த நாட்கள்.

   லாரியில் வந்து மூடை மூடைகளாக இறங்கினால், ஊர் பிரமித்து மூச்சுத்திணறிப் போய்விடும். பிளந்த வாயை மூடாது. சுற்றிச்சுற்றி வந்து வேடிக்கை பார்த்து மாய்வார்கள்.

   வருடக்கணக்காக பல முனை சப்போர்ட்களால் பாசமும் விசுவாசமும் காட்டிய வண்டிக்காரத் தேவரை என்ன செய்ய?

   எஸ்.ஆர் அவனது தயக்கத்தை கலைக்க இப்படிச் சொன்னார்.

   ‘‘தாலியறுத்தவ தாட்சண்யம் பார்த்தா, வாயும் வவுறுமா சொமந்து சீரழியணும். ஏவாரத்துல தாட்சண்யம் பார்க்கக் கூடாது... பார்க்கிற மாதிரி பாவ்லாதான் பண்ணணும்.’’

   அவர் சுலபமாகச் சொல்லிவிட்டார். பாசத்தையும் விசுவாசத்தையும் அறுப்பது அத்தனை சுலபமா? கிராமத்து உறவுப் பண்பாட்டில் முகம் முறித்து தாட்சண்யம் பார்க்காமல் பேசிவிட முடியாதே.
   வண்டிக்காரத் தேவரைப் பார்ப்பதற்கே குலை நடுங்குகிறதே. முகத்துக்கு முகமாக, கண்ணுக்குக் கண்ணாக நேரே பார்த்து ‘நிறுத்திக்கிடுவோம்’னு எப்படிச் சொல்ல?

   எஸ்.ஆரிடம் சனிக்கிழமை வருவதாகச் சொல்லிவிட்டு வந்துவிட்டான். பணத்துக்கும் ஏற்பாடு செய்துவிட்டான். தேவரிடம் சொல்லவேண்டியதுதான் பாக்கி.

   சொல்வதுதானே மலையாக இருக்கிறது.
    
   கூரை வீட்டு முற்றத்தில் போய் இவன் நின்றது, தயங்கித் தயங்கிக் கேட்டது, அவரைச் சம்மதிக்க வைக்க சாமர்த்தியமாகப் பேசியது எல்லாம் ஞாபகத்தில் சுழன்றன.

   `இன்னைக்கு, ‘நிறுத்தும், போதும்’ என்று சொல்ல வாய் வர மாட்டேங்குதே. நன்றிகெட்ட நாச வேலையாக அல்லவா தோன்றுகிறது. கால் மாட்டில் எச்சில் வடிய நிற்கும் பச்சை மதலையின் கழுத்தை அறுத்துப்போடுகிற நம்பிக்கைத் துரோகமாக அல்லவா தோன்றுகிறது?’

   குற்றவுணர்ச்சி, கட்டை முள்ளாக நெஞ்சுக்குள் குத்தியது.

   எக்ஸ்.எல் வண்டி, திருவேங்கடம் வந்துசேர்ந்துவிட்டது. அரிசிக் கடையில் வண்டியை நிறுத்தினான். கைலியால் வியர்வையைத் துடைத்தான் சுனைக்கனி.

   அச்சத்துடன் சுற்றும்முற்றும் பார்த்தான். `வண்டிக்காரத் தேவர் எங்கேயாச்சும் எதிர்ப்பட்டுவிட்டால்?’

   ஈரக்குலை பதறியது. மனசு கிடந்து மருகித் தவித்தது. எந்த நிமிடத்திலும் எதிரிலும் வந்து நின்றுவிடுவாரோ என்ற பதற்றம்.

   அரிசிக் கடை வேலையை முடித்துவிட்டு பாலசுப்பிரமணியம் பலசரக்குக் கடைக்குப் போனான். வண்டியை நிறுத்திவிட்டு நிமிர்ந்தால்....

   சற்று தள்ளி... வந்துகொண்டிருந்தார் வண்டிக்காரத் தேவர். தீப்பட்ட நாற்றாகக் கருகினான் இவன். மனநடுக்கம், உள்ளங்கையில் வியர்வை, பயப் படபடப்பு.

   அவரும் சோர்வாக இருந்தார்.

   ‘உடம்புக்குச் சரியில்லியோ?’

   முகவாட்டம். இருண்டிருந்தது அவரது முகம்.

   ‘‘வாங்க அண்ணாச்சி... என்ன இங்கிட்டு?’’ - குரலில் உயிர்வற்றிப்போயிருந்தது சுனைக்கனிக்கு.

   ‘‘சும்மா... ஒரு சோலியா வந்தேன்’’ - சுரத்தே இல்லாமல் தடுமாறித் தணிந்தது வண்டிக்காரத் தேவர் குரல்.

   `விஷயம் அவரது காதுக்குப் போய்விட்டதா? வாய்ப்பே இல்லையே. பூர்ணத்தைத் தவிர வேறு யாரிடமும் மூச்சுவிடவில்லையே.’

   ‘‘வாங்க சாப்பிடப் போவோம்.’’

   வண்டிச் சாவியை பைக்குள் போட்டுக்கொண்டு ஹோட்டலுக்குள் நுழைந்தான் சுனைக்கனி.

   ரெண்டு பேரும் டேபிள் முன் சேர்களில் உட்கார்ந்தனர்.
    
   ‘‘அண்ணாச்சிக்கு மூணு பரோட்டாவும் ஒரு சிக்கன் ரோஸ்ட்டும்.’’

   ‘‘உனக்கு?’’

   ‘‘நான் இப்பத்தான் வீட்ல சாப்பிட்டு வர்றேன்.’’

   அவரது முகத்தை ஏறிட்டுப் பார்க்க முடியாமல் தடுமாறித் தத்தளித்தான் இவன். இவனது முகத்தையும் பார்க்க முடியாமல் தவித்தார் தேவர்.

   சால்னாவில் நனைந்த பரோட்டாவை பிசைந்து பிய்த்து, வாயில் வைத்தார்.

   ‘‘உன்கிட்டே ஒரு விஷயம் சொல்லணும். சொல்ல மாட்டாம மருகிக்கிட்டு வர்றேன்.’’

   ‘‘என்ன விஷயம் அண்ணாச்சி?’’

   ‘‘சந்தைக்கு வண்டி போட முடியாத நெருக்கடி...’’

   ‘‘ஏன் அண்ணாச்சி?’’

   ‘‘பெரிய தேயிலை கம்பெனி... கூண்டு வண்டிங்கிறதால ஏஜென்ட் என்னைக் குறிவெச்சுட்டார். திங்கள், வியாழன்னு வாரத்துல ரெண்டு நாளு... திருவேங்கடம் வரணும். தேயிலை பார்சல்களையும் பெரிய பெரிய பைகளையும் இறக்கணும். கூட ஏஜென்ட் சாரும் வருவார். வண்டியிலே நம்ம ஊர், அப்பைய நாய்க்கர்பட்டி, வலையப்பட்டி கடைகளுக்கு கூடவே போகணும். திருவேங்கடத்துலே வந்து பஸ் ஏத்திவிடணும்.’’

   ‘‘இதான் புரோகிராமா?’’

   ‘‘ஆமாப்பா... ரெண்டு நாள் சோலி. கணிசமா பணமும் தர்றாங்க. கம்பெனிச் சம்பளம்.’’

   ‘‘ `சரி’னு சொல்லிட்டீகளா?’’

   ‘‘பத்திரம் எழுதுற மாதிரி ஒப்பந்தம் எழுதி ஸ்டாம்ப் ஒட்டி கைநாட்டு கேட்டாக. என்னையே நம்பி நிக்கிற உன்கிட்டே எப்படிச் சொல்றதுனு தெரியாம மருகிக்கிட்டு நிக்கிறேன்’’

   சுனைக்கனிக்குள் விட்டு விலகிய மூச்சுமுட்டல். சுமுகமாக இயல்பான மனத்திணறல். மனசுக்குள் ஆயிரம் வாசல்களும் ஆயிரம் சாளரங்களும் திறந்துகொண்ட மாதிரி காற்றும் வெளிச்ச வெள்ளமும் பாய்ந்தன. மறித்துக்கொண்டு நின்ற மலை, மாயமான மாதிரி ஓர் ஆசுவாசம்.

   ‘‘உனக்கு மாத்து ஏற்பாடு பண்றதுலே ஏதாச்சும் சிரமம் இருக்குமா, தம்பி?’’

   ‘‘அண்ணாச்சி... காலம் ஒரு வாசலை அடைச்சா, மறுவாசலை திறந்துவிட்டுரும். அடுத்த வாரத்துல இருந்து சரக்குகளை லாரியிலே கொண்டாந்து இறக்கலாமானு யோசனை ஓடிக்கிட்டிருக்கு.’’
   தேவருக்கு முகம் கறுத்தது. சமாளித்துக் கொண்டார்.

   ‘‘நல்லவேளை... செந்தட்டி அய்யனார்சாமி நல்ல வழி காட்டிட்டார். எனக்கு இப்பத்தான் உசுரு வந்த மாதிரியிருக்கு.’’

   அவர் முகம் எல்லாம் அசலான ஒளிப்பெருக்கு. மனதின் பூரிப்பினால் முகம் எல்லாம் பரவுகிற சிரிப்பு; கண்ணோரத்தில் நீர்த்துளி.

   ‘‘உன்னாலே நான் முன்னேறியிருக்கேன். என்னாலே நீ முன்னேறியிருக்கே. விலகுறப்போ நம் பாசமும் உறவும் அந்துபோகுமோனு பயந்துகிடந்தேன். யாருக்கும் காயம் இல்லாம, ரெண்டு பேரும் விலகுறோம்.’’

   சிரித்துப் பேசிச் சமாளிக்கிறார் தேவர்.

   ‘‘ஆமா... அண்ணன் - தம்பியா என்னைக்கும் இருக்குறதுலே தடை ஒண்ணுமில்லே.’’

   சுனைக்கனி குரலில் உயிர்ச்சுனை கசிந்தது. பரோட்டாவைச் சாப்பிட்டுவிட்டு, இலையை வழிக்கிறபோது, அவருக்கு வயிறு நிறைந்திருந்தது.

   சுனைக்கனிக்கு, பாரம் இறங்கிய மனநிம்மதி.

   ‘நம்மளை நம்பி இருக்கிறவனை மோசம் பண்ணிடக் கூடாது’ என்கிற உழைப்பாளிக்கு உரிய வைராக்கியக் குணத்துடன், பாதி மறுப்பும் பாதி தயக்கமுமாகத் தலையை ஆட்டிவிட்டுத் திரும்பியிருந்தார் வண்டிக்காரத் தேவர், சுனைக்கனியின் வியாபாரி மனநிலையைப் புரிந்துகொண்ட தெளிவால்.

   `ஒப்பந்தத்தை ஒப்புக்கொண்டு கைநாட்டு வைத்துவிடவேண்டியதுதான்’ என கோவில்பட்டி பஸ்ஸை எதிர்பார்த்து திருவேங்கடம் பஜாரில் நின்ற அவரின் மனசுக்குள் நினைவுகள் ஓடின. ‘உழைக்கிறவன் குணம் சூரியனைப்போல நிரந்தரமானது; நேர்மையானது. வியாபாரி குணம், நிலவைப்போன்றது; தேயும் குறையும் நிலை இல்லாதது. என்ன இருந்தாலும் வியாபாரி...வியாபாரிதான்.’
   http://www.vikatan.com