Sign in to follow this  
Followers 0
நவீனன்

மண்டை மாக்கான்

1 post in this topic

மண்டை மாக்கான்

சுகுணா பிறந்தது 1998-ல் மார்ச் மாதத்தில் விடிகாலையில் என்று அவளே என்னிடம் சொன்னபோது கணக்கில் தகராறு நிரம்பிய நான் விரல்களில் ஒவ்வொன்றாய்த் தொட்டு மனக்கணக்கு போட்டேன். இப்போது 2017ல் இருக்கிறோம் அல்லவா! எப்படியோ கல்யாணம் கட்டிக் கொள்ளும் வயதில் சுகுணா இருக்கிறாள். இங்கே சேலம் அம்மாபேட்டை காவல் நிலையத்திலோ அல்லது கோபி காவல் நிலையத்திலோ சுகுணாவும் முருகேசனும் மாலையும் கழுத்துமாக தஞ்சமடையும் வயதுதான்.
15.jpg
முருகேசன் என் பள்ளித் தோழன். கொளப்பளூர் நடுநிலைப்பள்ளியில் எட்டாவது வகுப்பு வரை என் பக்கத்திலேயே வகுப்பறையில் அமர்ந்து படித்தவன். மண்டை மாக்கான் என்றொரு பட்டப் பெயரும் பள்ளியில் அவனுக்கு இருந்ததாக ஞாபகம். மண்டை மாக்கான் என்ற பட்டப்பெயருக்கு காட்டுவாசி என்றுதான் அர்த்தம் வைத்திருந்தேன் அன்றிலிருந்து இன்றுவரை.

முருகேசன் இப்போது சேலம் அம்மாபேட்டையில் வாடகைக்கு அறை ஒன்றில் தங்கி மரக்கடை ஒன்றில் தச்சு வேலையில் இருக்கிறான். மாதம் பத்து ரூபாய் சம்பாதிப்பதாகவும் ஞாயிறு அன்று ஒரு நாள் விடுப்பு என்றும் அன்றுதான் தன் துணிமணிகளை அலசி துவைத்து தூக்கில் காய வைத்து விட்டு மதியமாக ஒரு திரைப்படம் பார்ப்பேன் என்றும் கூறினான்.

முருகேசன் மகிழ்ச்சியை முகத்தில் எந்த நேரமும் தாங்கியவனாகத்தான் தெரிந்தான். அது சுகுணாவின் மீது ஏற்பட்ட காதலால் கூட இருக்கலாம் என்று நினைத்தேன். எப்படியோ ஒரு விளக்கொளி அவன் முகத்தில் தெரிந்தது. முன்பாக கொஞ்சம் ஒல்லிப்பிச்சானாக இருந்தவன் இப்போது கொஞ்சமாய் சதை போட்டிருந்தான். பக்கத்தில் பார்வதி மெஸ்ஸில்தான் சாப்பாடு என்றான்.

சேம நலன்களை இருவரும் கொஞ்சமாய் விசாரித்து முடித்தவுடன், ‘வெளிய போய் டீ போட்டுட்டு வரலாமா?’ என்றவனுக்கு மறுப்பாய் தலையசைத்தேன். என்னைப்பற்றி சொல்கையில், என் மருந்துக்கம்பெனி கோபியில் இருக்கிறது என்றும், மாதம் முழுக்க ஊர் ஊராக சுற்றி வைத்தியர்களை சந்தித்து எங்கள் கம்பெனி மருந்து வகைகளின் திறன்களை அவர்களிடம் விவரித்து என்று இப்படிப் போகிறது என் கதை, என்றேன் அவனிடம்.

‘‘அது சரி, என் நெம்பரை எப்படிடா வரதா பிடிச்சே?” என்றான். “உன் அம்மாதான் குடுத்துச்சுடா. ரெண்டு வருசம் ஆச்சாமே நீ ஊருக்கு வந்து? உனக்கு பொண்ணு ஒண்ணு பார்த்து வச்சிருக்காம்டா. அவனை கைப்புடியா ஊருக்கு கூட்டிவான்னு சொல்லுச்சுடா...” முருகேசன் தன் அலைபேசியில் யாரையோ, ‘ரூம் வரைக்கும் வந்துட்டுப் போ செல்லம்’ என்று சொல்லி வைத்தான்.

அவன் சொன்ன செல்லம் சிட்டாய்ப் பறந்து வந்து அறைக்குள் நின்றது சில நிமிடங்களிலேயே! சிட்டு தன் பெயரை சுகுணா என்றது என்னிடம். இந்த வரிசையில் உள்ள பத்து பனிரெண்டு வீடுகளுக்கும் எஜமான் ராஜதுரையின் இரண்டாவது செல்லப் பெண்ணாம். எனக்கு ராஜதுரை என்கிற பெயர் கடாமீசை வைத்த முரட்டு உருவமாய் மனதில் உருப்பெற்று மிரட்டியது. பிழைக்க வந்த இடத்தில் இந்த மண்டை மாக்கானுக்கு ஏன் இந்த வேலையெல்லாம்?

ஹயர்செகண்டரியோடு படிப்பை முடித்துக்கொண்ட சுகுணா எங்கும் பணி செய்வதற்கெல்லாம் கிளம்பாமல் வீட்டில் இருப்பதாய் சொன்னாள். முருகேசன் அறையெடுத்து தங்கிய இரண்டரை வருட காலமாகவே காதலில் விழுந்து விட்டதாக சொன்னாள். வீட்டில் முருகேசனுக்கு அவன் அம்மா ஒரு பெண் பார்த்து வைத்திருப்பதாய் அவளிடம் சொன்னேன். சொன்னபோதே முசுக்கென கொஞ்சமேனும் கண்ணீர் சிந்துவாளோ என்ற எதிர்பார்ப்பை உடைத்தெறிவது போல கலகலப்பு மாறாமல் பேசிக் கொண்டிருந்தாள்.

கட்டினால் முருகேசனைத்தான்; இல்லையென்றால் சாவது தவிர வேறு வழியில்லை என்பதை நாசுக்காய் எனக்கு தெரியப்படுத்தி விட்டாள் சுகுணா. முருகேசன் கொடுத்து வைத்த மகராஜன் என்று அப்போதுதான் தெரிந்தது. இறுதியாக நான் முருகேசனின் அம்மாவிடம் இதுபற்றி பேசி சுமுகமான தீர்வை சீக்கிரம் சொல்வதாகச் சொல்லி சுகுணாவின் அலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டேன்.

“சரி, இந்த விசயத்தை நான் பார்த்துக்கறேன் முருகேசா...” என்று சொல்லிவிட்டு கிளம்பினேன். முருகேசன் என்னை முழுதாக நம்புவது ஒருபக்கமாய் இருக்கட்டும். ராஜதுரை ஒரு பக்கமாய் நின்று கொந்தளித்தால் இவன் நிலைமை கவலைக்கிடமாக மாறிவிடுமே என்பதுதான் என் கவலையெல்லாம். அடுத்தவாரம் மதியம் முருகேசன் அறையில்தான் இருந்தேன்.

பேசுவதற்கு எதுவுமில்லை என்பதால் அலைபேசியில் செய்திருந்த பதிவை அவனுக்கு வெளி ஒலிப்பானில் போட்டேன். “சொல்லுங்க வரது... உங்களை வரதுன்னு நான் சுருக்கமா கூப்பிடலாம்ல?” “வரது வரதுன்னுதான் எங்கம்மாவே கூப்புடுது! சரி, நான் சொன்ன விசயத்தை யோசிச்சு பார்த்தியா சுகுணா? எனக்கு மாசம் இருபது ரூபா சம்பளம்!”

“நிறுத்துங்க வரது, நீங்க இடையில நுழைஞ்சு என் மனசை கெடுக்கப் பார்க்கறீங்க...” “நீ எவ்ளோ அழகு தெரியுமா சுகுணா? உன்னைப் பார்த்ததும் அப்பிடியே தூக்கிட்டு கொளப்பளூருக்கு பறந்துடணும்னு நினைச்சேன். நீ என்னடான்னா முருகேசனை கட்டிக்குவேன்னு என்கிட்ட பேசிட்டு இருக்கப்ப அப்படியே செத்துடலாம்னு இருந்துச்சு தெரியுமா!

ஒண்ணு தெரிஞ்சுக்கோ சுகுணா, நீ விரும்புற ஆளை விட உன்னை விரும்புற ஆளை கட்டிக்கோ. அப்பதான் வாழ்க்கை உனக்கு இனிப்பா இருக்கும்...” “உண்மையாவே என்னை தூக்கிட்டுப் போயிடணும்னு நினைச்சீங்களா வரது?” “சத்தியமா சுகுணா! உன் நெம்பரை நான் ஏன் உன்கிட்டயே கேட்டு வாங்கினேன்? அவன் கிட்ட வாங்கிக்க எனக்குத் தெரியாதா? ஐ லவ் யூ சுகுணா?”

“அதெல்லாம் நீங்க போன்ல வழியுறப்பவே தெரியுது வரது. இருந்தாலும் முருகேசனை நான் ஏமாத்திட்டதா ஆயிடாதா? காசைக் கண்டதும் போயிட்டா பாருன்னு அவரு சொல்ல மாட்டாரா?” “அவன் என் நண்பன் சுகுணா. எனக்கு சுகுணாவை ரொம்ப பிடிச்சிருக்குடான்னு சொன்னா சரி எடுத்துக்கோன்னு சொல்லிடுவான். நாங்க ஒரே ஊர்க்காரங்க...” “ஐ லவ் யூ வரது!” அவ்வளவுதான்.

உரையாடல் முடிந்ததும் நான் அலைபேசியை அணைத்துவிட்டு முருகேசனின் முகம் பார்த்தேன். சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்தவனின் முகம் இருள் அடைந்திருந்தது. “இப்படி ஒருத்திதான் உனக்கு மனைவியா வரணுமா முருகேசா? நாளைக்கி இன்னொருத்தன் போன்ல பேசினால் கூட மாற மாட்டாள்னு என்ன நிச்சயம் இருக்குடா? பேசாம அம்மா சொல்ற பொண்ணை கட்டிக்க...” என்றேன்.

அவன் எதுவும் சொல்லாமல் என்னைப் பார்த்தான். ‘சொல்லுங்க வரது. உங்களை வரதுன்னு நான் சுருக்கமா கூப்பிடலாமா?’ முருகேசனின் அலைபேசியிலும் சுகுணா பேச ஆரம்பித்தாள். இதென்ன, நான் ஒன்று நினைக்க வேறு ஒன்று நடக்கிறதே? “வரதா, நேத்தே நீ பேசுனதா சொல்லி என் போன்ல இதை இறக்கி விட்டா.

அப்புறம் அவ சொன்னா பாரு… ‘இவனெல்லாம் உனக்கு ஒரு நண்பனா? இவன்தான் உன் அம்மாட்ட போயி நம்ம காதல் விசயத்தை எடுத்துச் சொல்றவனா? நமக்கிடையில எந்த மண்டை மாக்கானும் வேண்டாம் முருகு’ன்னு...” நான் தலையைக் குனிந்து கொண்டே எழுந்து வெளியேறினேன்.

www.kungumam.co

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  
Followers 0