• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
கிருபன்

அற்புதம் - மஹாத்மன்

Recommended Posts

அற்புதம்

maha 5

அந்த மூன்றுநாள் கூட்டத்தை ‘குருசெட்’ கூட்டமென்று அழைப்பார்கள். தமிழில் நற்செய்திக் கூட்டமென்றும் சுவிசேஷக் கூட்டமென்றும் சுகமளிக்கும் கூட்டமென்றும் பெயர் பெற்றது. வெள்ளி, சனி, ஞாயிறு மாலையில் தொடங்கி முன்னிரவில் முடிவடையும். இந்த விசேஷக் கூட்டத்திற்காக ஒரு மாதத்திற்கு முன்பே ஆயத்த வேலைகள் செய்யப்படும்.

மூப்பர் பிரிவில் உள்ளவர்கள்தான் வேலைகளைப் பங்கிட்டுக் கொடுப்பர். சபை காரியங்களில் உற்சாகமாக ஈடுபடுத்திக் கொள்வோரிடம் விசேஷக் கூட்டத்தைக் குறித்தான கைப்பிரதிகள் கட்டுக்கட்டாக கொடுக்கப்படும். இவர்கள் சுற்று வட்டாரத்திலுள்ள எல்லாத் தோட்டங்களுக்கும் கம்பங்களுக்கும் பக்கத்துப் பட்டணங்கள் வரையிலும் வீடு வீடாகச்சென்று கொடுத்துவிட்டு வருவர். மேலும் கூட்டத்தைக் குறித்தான பத்திரிக்கை விளம்பரங்கள் ஞாயிற்றுப் பதிப்பில் வெளிவர ஆவன செய்யப்படும்.

சபையின் தூண்களாக இருக்கும் ஆத்தும ஆதாய வீரர்களும் ஜெப வீரர்களும் வீராங்கனைகளும் முழங்காலிட்டு, தொடர் சங்கிலி ஜெபத்தில் கூட்டத்திற்காக எழுப்புதல் ஆவியில் துதிமகிமையோடு மன்றாடுவர். இந்தக் கூட்டத்திற்கு பொறுப்பேற்றவனாய் நான் இருந்தேன்.

அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் ஜெப அறை திறக்கப்படும். நான்தான் முதல் ஆளாக இருக்கவேண்டும். ஆனால், எனக்கு முன்னதாக சிஸ்டர் கேரன் ஹெப்பியூச் வந்துவிடுவார். வரிசையாக சிஸ்டர் ரூத், பிரதர் சேம், பிரதர் மைக்கல், பிரதர் அன்பழகன், சிஸ்டர் ரேச்சல், சிஸ்டர் லில்லி வந்துவிடுவார்கள்.

விசேஷ கூட்டத்திற்கான அந்தக் குறிப்பிடப்பட்ட காலம் நெருங்க நெருங்க எங்களுக்குள் பதைபதைப்பு உண்டானாலும் அவ்வப்போது மூப்பர்களும் போதகரும் வந்து ஆவிக்குள் அனல்கொள்ளச் செய்தனர். ஒரு பெரிய ஆத்தும ஆதாய அறுவடையைச் செய்திட திருவிழாக் கொண்டாட்டத்தின் மலர்ச்சியோடு அந்நாளை எதிர்கொண்டோம்.

வியாழன் இரவு:

தமிழ்நாட்டிலிருந்து வருகைதரு சிறப்புப் பிரசங்கியார் ஜீவானந்தம் மூப்பர்களின் துணையோடு பலத்த பாதுகாப்பில் அறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அறைக்குள் போதகர் மட்டுமே இருக்க அனுமதி. மூப்பர்கள் ஒருவருக்கும் கூட பிரசங்கியாரிடம் பேசுவதற்கு அனுமதியில்லை.

அதிகாலை ஜெபக்குழு, மதிய ஜெபக்குழு மற்றும் மாலை ஜெபக்குழு ஆகிய மொத்த ஜெபவீரர்களும் ஒன்றுகூடி முன்னிரவு வரை ஜெபித்தனர்.

வெள்ளி மாலை:

மாலை நான்குக்கெல்லாம் ஜெபக்குழுக்களை ஏற்றிச்செல்ல மூடுந்து வந்தது. பிரிவு பிரிவாக ஏறிக்கொண்டோம். முதலில் நாங்கள் பயணப்பட்டோம். பாதி வழியிலேயே கனமழை பாதையை மறைத்தது. உற்சாகத்தோடு பாடல்களைப் பாடினோம். கைகள் தட்டி ஓசை எழுப்பினோம். “. . . யோர்தானைக் கடந்து வந்தோம் எங்கள் யேசுவின் பெலனடைந்தோம்.”

நெடுஞ்சாலையை விட்டுக் கீழிறங்கும் சாலையில் போகும்போது வாகனம் சறுக்கியது. ஓட்டுநரையும் மீறி வாகனத்தின் முன்னம்பகுதி சிறுகால்வாயில் மாட்டிக்கொண்டது. என்ன முறுக்கிப் பார்த்தும் முடியவில்லை, வாகனத்தின் பின்பகுதி மேலெழுந்து ஆட்டங்கண்டது. பெண்கள் அலறிக் கத்தினர். கொஞ்சம் வாட்டசாட்டமான உடலைக் கொண்ட பிரதர் சேம் மூடுந்தின் கதவைத்திறந்து ஆண்களை வெளியேறுமாறு பணிக்க, எது எதுவோ பிடித்து வெளியேறினோம்.

கனமழையில் புயலடித்தது.

வாகனத்தின் முன்புறத்தை ஆண்கள் சேர்ந்து தூக்கினோம். முடியவில்லை. ஓட்டுநரையும் வெளியேற்றி, ஓட்டத்தெரிந்த சிஸ்டர் லில்லியை உட்காரச் சொன்னோம். மற்ற பெண்களும் தங்கள் கைப்பைகளை பத்திரப்படுத்தி வெளியே குதித்து வாகனத்தைத் தூக்கியெடுக்க உதவினர். லில்லியைத் தவிர மற்ற யாவரும் தொப்பலாய் நனைந்த உடலோடு வாகனத்தில் பயணப்பட்டோம்.

பத்தே நிமிடத்தில் ஸ்டேடியத்தை அடைந்தோம். பின்வாசல் வழியாக நுழைந்து கழிப்பறையில் எங்கள் உடைகளைக் கழற்றிப் பிழிந்து மறுபடி உடுத்திக்கொண்டோம்.

எங்களுக்காக ஒதுக்கப்பட்ட மேடையின் வலதுபுற மூலைத் திரைமறைவில் தொடர் சங்கிலியாக கைகோர்த்து சத்தமின்றி ஜெபித்தோம். மேடையில் துதி ஆராதனைக் குழுவினர், வருகையாளர்களின் இருக்கைகள் பல காலியாகக் கிடந்தன.

மணி ஆறரைக்கெல்லாம் மழை நின்று போயிற்று. ஏழரைக்கெல்லாம் இருக்கைகளில் மனித உருவங்கள். வாத்திய இசைக்கருவிகளின் முழக்கங்கள். வெவ்வேறான எக்காளங்களின் தொனி. அதிர்ந்தது இடம்.

வருகையாளர்களில் பெரும்பாலானோர் பூவும் பொட்டுமாக விதவிதமான சேலைகளில் வண்ணமயமாக, குடும்பம் சகிதமாக அமர்ந்திருந்தனர்.

பிரசங்கியாரின் நேரம் வந்தது. கையில் விவிலியத்தைப் பிடித்துக்கொண்டு பிரசங்க பீடத்தில் நின்றார். ஜெபித்துவிட்டு பிரசங்கித்தார். கணீரென்ற குரல். தடையில்லாத ஆற்று வெள்ளம் போல வார்த்தைகள் சாரை சாரையாக வெளிப்பட்டன. இருபது நிமிடத்திற்குள் முடித்துக்கொண்டு திடீரென அதட்டும் குரலில் கட்டளைகளைப் பிறப்பித்தார்.

“இங்குள்ள அத்தனை அசுத்த ஆவிகளுக்கும் ஆண்டவரின் நாமத்தில் கட்டளையிடுகிறேன். இங்கே இந்தச் சிலுவைக்கு முன்பாக வரிசையாக நின்று மண்டியிட வேண்டும்.”

மேடை நடுவே இருந்த சிலுவைக்கு முன்பாக வருகையாளர் பகுதியிலிருந்து ஆணும் பெண்ணுமாக அரற்றிக்கொண்டும் கத்திக்கொண்டும் வீரிட்டுக்கொண்டும் நடந்தோடி வந்து வரிசையில் நின்றனர். ஒருவர் குரங்குத் தாவலாக தாவித்தாவி வந்து யாரிடமோ எதனையோ கேட்டுவிட்டு வரிசையில் நின்றார். அவருடைய கைகள் மட்டும் எதையோ கேட்டுக்கொண்டே இருந்தன.

வரிசையில் நின்ற பெண்கள் ஆடிக்கொண்டே தங்கள் கூந்தலைக் கலைத்து பூச்சரத்தை பிய்த்துக் கொண்டிருந்தனர். ஆண் ஒருவர் சுருட்டு இல்லாமலேயே அந்த பாவனையில் ஊதிக்கொண்டிருந்தார். வரிசையில் குத்துமதிப்பாக முப்பது பேர் இருந்தார்கள்.

maha 4

“இதோ தேவனுடைய மகிமையைக் காண்கிறீர்கள்…” என்று சொல்லிக்கொண்டே ஒலிப்பெருக்கியைக் கழற்றிக் கையில் பிடித்துக்கொண்டே கீழிறங்கி வந்து வரிசையில் நின்றவர்களில் முதலாமவரின் நெற்றி நடுப்பகுதியில் தன் விரல்களை வைத்து “இந்த உடலை விட்டு வெளியேறு என்று ஆண்டவரின் நாமத்தினால் கட்டளையிடுகிறேன்,” என்று சொன்னதும் அவர் பொத்தெனத் தரையில் விழ, அடுத்த நபரிடம் செல்கிறார். இப்படியே வரிசையாய் யாவரும் பொத்துப் பொத்தென விழுந்தார்கள். ஆயத்தமாய் இருந்த ஊழியக்காரிகளான சபையின் பெண் பிரிவினர் விழுந்த பெண்ணுடல்களின் இடுப்புக்குக் கீழே போர்வையைப் போர்த்தினர். விழுந்தவர்கள் மயக்கமடைந்திருந்தனர்.

வரிசை முடிந்ததும் நான்குபேர் சூழ பிரசங்கியார் அழைத்துச் செல்லப்பட்டார். மயக்கத்திலிருந்து தெளிந்தவர்களிடம் மூப்பர்கள் ஆண் என்றால் ஆணும் பெண் என்றால் பெண்ணுமாகச் சென்று சமாதானப்படுத்தி ஆண்டவரைக் குறித்து அறிவித்தனர். இன்றைய கடமை முடிந்ததென நாங்கள் மூடுந்தில் வீடு வந்து சேர்ந்தோம்.

சனி மாலை:

மாலைநேரத்து மஞ்சள் வெயில் அதிகமானோரைக் கூட்டத்திற்கு வரவழைத்தது. காலியில்லாத இருக்கைகள். இருக்கைகளைத் தேடித்தேடி அமர்ந்திடப் பரபரத்தனர்.

பிரசங்கியாரின் நேரம் வந்தது. பிரசங்கம் முடிந்ததும், “நேற்று இங்கே வரிசையாய் நின்ற அத்தனை பேரும் வாருங்கள்,” என்றார். சிலர் தாமாக முன்வந்தனர். தயங்கிய சிலரை சபை மூப்பர்கள் புன்முறுவலோடு அணுகி அழைத்து வந்து நிறுத்தினர்.

“நேற்று ஒன்றுபோன்று நேர்க்கோட்டில் நின்றீர்கள், இப்போது அப்படியல்ல. இடமிருந்து வலமாக நில்லுங்கள். உங்கள் ஒவ்வொருவருக்கும் பின்னால் சபை விசுவாசிகள் நிற்பார்கள். . .” என்றதும் வரிசை அவர் சொற்படி ஆனது.

வரிசையில் நின்றவர்களைப் பார்த்துக் கேட்டார்:

“உங்களில் யாருக்காவது பரிசுத்தாவி அபிஷேகத்தைப் பற்றித் தெரியுமா. . .?” தெரியாதெனத் தலையசைத்தனர் வரிசையில் நின்றோர்.

“இன்றிரவு தெரிந்துகொள்ளப் போகிறீர்கள். அனுபவிக்கப் போகிறீர்கள். தேவனுக்கு முன்பாக maha 3

இன்று நீங்களே அழகாய் நிற்பவர்கள். . .” என்று சொல்லியவாறே தம் கரங்கள் இரண்டையும் ஏறெடுத்து ஜெபிக்க இடி இடித்தது போல மின்னல் அடித்தது போல விழுந்து புரண்டு, கத்திக் கதறி அறியாத மொழியில், புரியாத மொழியில் பட்டாசு வெடித்தது போல சடசடவென்று அவர்களிடமிருந்து வெளிப்பட்டன வார்த்தைகள். சில உடல்கள் அனல் தகிப்பும் சில உடல்கள் குளிர்மிகு நடுக்கமும் கொண்டவையாகக் காட்டிக்கொண்டன. ஊழியக்காரிகள் போர்வைக்காக விரைந்தோடினர்.

நடுப்பகுதியில் இருக்கைகளில் அமர்ந்திருந்த சிலருக்கு இதேபோன்று நடந்தது. உடனே மூப்பர்களில் சிலர் அவர்களை மேடை முன்புறத்திற்குக் கொண்டுவந்தனர். பேரிரைச்சல் ஏற்பட்டது. அது ஓய்ந்து அமைதியடைய இரண்டு மணி நேரத்திற்கும் மேலானது.

அதி உற்சாகத்திலிருந்த பிரசங்கியார் ஒலிபெருக்கியில், “நாளை அற்புதமான நாள். தேவன் அற்புதங்களைச் செய்கிற நாள். ஆகவே படுத்த படுக்கையாய் இருக்கும் நோயாளிகளை, கண் தெரியாதவர்களை, கைகால் இல்லாதவர்களைக் கொண்டுவாருங்கள். இதைவிட அதிகமாய் நம்முடைய ஆண்டவர் செய்வார்,” என்றதும் பலத்த கரவொலி எழுந்தது.

போதகரும் பிரசங்கியாரும் புறப்பட்ட பிறகு மூப்பர்கள் எங்கள் எல்லோரையும் ஒன்றுகூட்டி உரையாடினார்கள்.

“சொல்லுங்க, பேரலைஸ் பேஷண்ட்டை எங்கிருந்து எப்படிக் கூட்டி வரப்போறீங்க?”

“தேடுவதற்கே நேரம் போயிருமய்யா.”

“ஃபேஸ்புக்ல போட்டுருவோமா?”

“ஆ… அதைச்செய்யுங்க. இப்பவே இங்கயே. . .”மூப்பர்கள் உட்பட அனைவரும் முகநூலில் பதிந்தார்கள். பத்து நிமிடங்களுக்குப் பிறகு பதில்கள் வந்துகொண்டேயிருந்தன.

“அந்தந்த வீட்ல உள்ளவங்களே அழைத்துவர முடியுமான்னு கேளுங்க. எத்தனை பேருக்கு டிரான்ஸ்போர்ட் வேணுமுன்னு கேட்டு வைச்சு லிஸ்ட் கொடுங்க.”

நேரம் தேவைப்பட்டது. இதற்கிடையில் மூப்பர்களில் ஒருவர் வெளியே சென்று எல்லோருக்குமாக சூடாக நெஸ்கேஃபி வாங்கி வந்து கொடுத்தார். மெதுவாய் பருகியபடி வேலை பார்த்தோம்.

பட்டியல் ஆயத்தமானதும் சமர்ப்பித்தோம். கண் தெரியாதவர்களை அழைத்துவர ஒரு பேருந்து தேவைப்பட்டது. உடற்பேறு குறைந்தோருக்கு நான்கு மூடுந்துகள். மற்றோருக்கு எட்டு வாகனங்கள். மூப்பர்கள் யாவரும் ஓட்டுநர் வேலையைப் பகிர்ந்து கொண்டார்கள். ஒவ்வொரு மூப்பருக்கும் எங்களிலிருந்து இரண்டு உதவியாளர்களைத் தேர்வு செய்தார்கள். எல்லாம் ஆயிற்று. ஐந்து மணிநேரத் தூக்கத்திற்குப் பிறகு குளித்து வந்துவிட உத்தரவு பெற்றோம்.

நான், மைக்கேல், ரேச்சல், ஓரிடக் குடிவாசிகள். கேரன் – ரூத் வீட்டைத் தாண்டித்தான் எங்கள் இருப்பிடத்தை அடைய முடியும். மைக்கேலின் வாகனத்தில் அனைவரையும் இறக்கிவிட்டு எங்கள் இடத்திற்குச் சேர்ந்த நேரம் எங்கள் மூவருக்கும் குறுஞ்செய்தி வந்தது. கேரன் – ரூத்தின் அம்மம்மா இறந்து விட்டார்களாம். மருத்துவமனையின் பிணவறையில் உள்ளதாம் பிரேதம். குறுஞ்செய்தி அனுப்பினோம்: ‘கர்த்தருக்கு ஸ்தோத்திரம். முதல்நாளே சோதனைக்காரன் சோதிக்கத் தொடங்கிவிட்டான் என்பதை அறிவீர்கள். கவனம்.’

வெள்ளிக்கிழமை காலை எட்டு மணிக்கெல்லாம் யாவரும் கூடினோம். ஒவ்வொருவருக்கும் சொல்ல ஒரு கதை இருந்தது. விரும்பத்தகாத கதை. கேரன் – ரூத் வந்திருந்தார்கள். ஆண்டவர்தான் முக்கியம் என்றார்கள். ஆனால் முகத்தில் சோகம் அப்பியிருந்தது. பலபேருடைய முகங்களிலும் மெய்மலர்ச்சி இல்லை. போலித்தன்மையான மலர்ச்சி, அவர்களுக்கே தெரியாமல் முகங்கள் காட்டிக்கொடுத்தன.

மூப்பர்களின் தலைவர் பேனட் ராஜ், “நீங்க பண்ற எல்லா செலவுக்கும் பில் வைச்சிருங்க. அவுங்கவுங்க மூப்பர்கிட்ட பணத்தை வாங்கிக்கலாம். ஒவ்வொரு மூப்பர்கிட்டேயும் முந்நூறு வெள்ளி ஒப்படைக்கிறேன்,” என்று சொல்லி பாக்கெட்டிலிருந்து பணக்கட்டுகளை எடுத்துத் தந்து வழியனுப்பினார்.

maha 2

ஜேம்ஸ் நவரத்தினத்தின் வெண்தாடி எங்களிடையே பிரசித்தம். அதைவிட அவரின் இயல்பான நகைச்சுவையானது அவரைச்சுற்றி எப்போதுமே ஒரு கூட்டத்தை இருக்கச் செய்யும். மூப்பர்களிடையே இவர் வித்தியாசமானவர். தனித்துவமானவர். மூப்பர் என்றாலே இறுகிய முகம், ஒழுக்கசீலர், அறிவுரையாளர், கண்டிப்பாளர் என்ற எதுவுமே இல்லாதவர். எல்லோருக்கும் இவரைப் பிடிக்கும். பாதிக்கும் மேற்பட்ட மூப்பர்களுக்கு இவர் என்றால் ஆகாது, தேறாது, திருந்தா ஜென்மம். இவருடைய சொந்த வாகனத்தில் நானும் லில்லியும் பயணித்தோம். வழிநெடுக அமைதியாய் இருந்தார். இறுகிய முகம். வாகனத்தை ஓட்டுவதில் முழுக் கவனம்

நாங்களும் பேசவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அடி விழுந்திருக்கிறது. இவருக்கே இந்த இறுக்கமென்றால் அடி பலமாகத்தான் விழுந்திருக்க வேண்டும். கேட்காமல் இருப்பதே உத்தமம் என்றிருந்தேன். லில்லியின் முகம் தொய்ந்து போயிருந்தது.

பசியாறுதலும் பிற்பகல் உணவும் மாலை சிற்றுண்டியும் ஒப்புக்குச் சப்பாக இருந்தது. எங்களுக்குக் குறிக்கப்பட்ட பிணியாளர்களை ஏற்றிக்கொண்டு வரும்போதும் யாரும் ஒரு வார்த்தையும் பேசவில்லை. வாகன கேசட்டில் ஜோன் ரபீந்தரநாத் பாடிக் கொண்டிருந்தார். “பரலோகமே என் சொந்தமே என்று காண்பேனோ. . .”

அடுத்த நோயாளியை அழைத்துவர ஒருவரே போதுமென நினைத்து லில்லியை மூன்றாவது மாடிக்கு அனுப்பி வைத்தேன். பதினைந்து நிமிடங்களுக்கு மேல் ஆகியும் லில்லியும் நோயாளியும் திரும்பவில்லை. மூப்பர் என்னைப் பார்க்க நான் கண்களால் ஆமோதித்து துர்போ வாகனத்தின் கதவைத் திறந்து மாடிக்கு ஏறினேன். மூன்றாவது மாடிப் படிக்கட்டில் லில்லி உட்கார்ந்திருந்தாள். கால்களுக்கு நடுவே முகத்தைப் புதைத்துக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுவது தெரிந்தது.

“சிஸ்டர் என்ன இது? என்ன ஆச்சு சிஸ்டர்…?” என்றவாறே பக்கத்தில் அமர்ந்தேன்.

“பிரதர், அம்மாவுக்கு ஓப்பரேஷன்.”

“சரி. அதுக்கு?”

“பிரீஸ்ட் கேன்ஸர் கொன்ஃபோம் பண்ணிட்டாங்க பிரதர். ரெண்டு பகுதியையும் வெட்டி எடுக்கப் போறாங்களாம். என்னாலயே தாங்க முடியலயே. அம்மா எப்படி தாங்கிக்குவாங்க… அம்மா செஞ்ச ஊழியத்துக்கு இதுதா பரிசா… ஆண்டவரோட கருணை, இரக்கம், அற்புதம் எங்கே பிரதர்…?”

மனம் மருகியது. சங்கடத்துக்குள்ளானேன். லில்லியின் தாயாரை நான் அறிவேன். ஊழியத்திற்காகத் தன் நேரத்தையும் பணத்தையும் உழைப்பையும் செலவு செய்பவள்.

“யோபுவை சோதிக்கறதுக்காக சாத்தான் தேவன்கிட்டப் போய் ஸ்பெஷல் அனுமதி வாங்குனா இல்லையா… இப்ப நம்ம சபையை ஒட்டுமொத்தமா சோதிக்கறதுக்கு ஸ்பெஷல் அனுமதி வாங்கிட்டான் போல. ஆண்டவர் மேல பாரத்தைப் போடுவோம். அவர் பார்த்துக்குவார். கண்ணைத் தொடச்சிட்டு வாங்க சிஸ்டர்.”

நான் மட்டும் மேலே ஏறி நோயாளியையும் அவர் தகப்பனையும் அழைத்துக் கீழே வர, லில்லி எங்களுக்காக வாகனக் கதவைத் திறந்து வைத்துக் காத்திருந்தாள்.

அவரவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த அழைத்துவரும் வேலைகளை எவ்விதத் தடையுமின்றி கனகச்சிதமாகச் செய்து முடித்திருந்தோம். மழை இல்லை. வாகனச் சக்கர வெடிப்பு இல்லை. நோயாளி தாமதமில்லை. வாகன நெரிசல் இல்லை. விபத்து ஏதுமில்லை என்பது ஒருபக்கம் ஆச்சரியத்தைத் தந்தாலும் அது முக்கியத்துவம் பெறவில்லை.

ஸ்டேடியத்திற்குள்ளேயே குளித்துவிட்டு உடைகளை மாற்றிக்கொண்டோம். சிலர் தங்களை அலங்கரித்துக் கொண்டார்கள். கீத ஆராதனை ஆரம்பம். பொங்கோ, தபேலா, மிருதங்கம், கீ போர்டு, பியானோ, இரண்டு வகையான கீத்தார், இரண்டுவிதமான புல்லாங்குழல், டிரம், டெம்பரின் மூன்று வகை மற்றும் சில வாத்தியக் கருவிகளை அபாரமாக இசைத்தனர் எங்களது சபை இசைக்குழுவினர். ஒரு அபத்தமும் ஏற்படவில்லை. ஆடல் குழுவினரும் அழகாகவே ஆடினர். கண்கொள்ளாக்காட்சி என்பார்களே, அப்படி இருந்தது.

எல்லோரும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த பிரசங்கியாரின் நேரம் வந்தது. மிகுந்த கம்பீரத்தோடும் மிடுக்கோடும் அப்போஸ்தலர்களாகிய பவுலும் சீலாவும் சிறையில் சங்கிலிகளால் கட்டப்பட்ட சம்பவத்தைக் குறித்துப் பேசினார். துதி மகிமையால் சங்கிலிகள் அறுபட்டதையும் நிலநடுக்கத்தினால் சுவர்க்கதவுகள் அகண்டதைக் குறித்தும் கூறி வார்த்தைகளால் அதிரவைத்தார். கேட்டவர்கள் பலத்த கரவொலியை எழுப்பினர்.

ஜனக்கூட்டத்தின் கரங்கள் வானத்தை நோக்கியபடி மேலெழுந்தவாறு இருந்தன. சரணடைகிறோம் என்றும் உமது அற்புதங்களைப் பெற்றுக்கொள்ள இதோ ஆயத்தமாயிருக்கிறோம் என்றும் அர்த்தமாகும். ஒருவர் விடாமல் எல்லோருமே கைதூக்கி நின்றனர்.

இதோ இந்த நேரமே தேவனுடைய ஆசிர்வாதங்களையும் அற்புதங்களையும் பெற்றுக் கொள்ளுங்கள். ஒவ்வொருவரும் பெற்றுக்கொள்வீர்களாக,” என்று சொல்லிவிட்டுப் புரியாத மொழியில் கட்டளையிட்டவாறே ஜெபித்தார். நேரம் கடந்தது.

நோயாளிகள் மத்தியிலிருந்து எந்தவொரு ஆனந்தக் கூத்தாடலுமில்லை, கத்தலுமில்லை.

பிரசங்கியார் மேடையிலேயே முழங்காலிட்டு ஜெபிக்கத் தொடங்கினார். மூப்பர்களும் சபை விசுவாசிகளும் நாங்களும் அப்படியே செய்தோம். முன்னிரவு நெருங்கியது.

அற்புதம் வேண்டி நின்றவர்களுக்கு ஒன்றும் ஆகவில்லை.

பிரசங்கியார் கண்ணீரோடே மன்றாடினார். எங்கள் கண்களிலிருந்தும் கண்ணீர் வந்தது.

கண்ணீருக்கான பலன் கிடைத்தபாடில்லை.

முடிவாக பிரசங்கியார் பீடத்தில் நின்று, “தேவனுடைய சித்தம் என்று ஒன்று இருக்கிறது. அது யாதெனில் கூட்டம் முடிந்து நீங்கள் வீடுபோய்ச் சேரும்போது அற்புதம் நிகழலாம். அல்லது ஒருநாள் கழித்து, ஒருவாரம் கழித்து, ஒருமாதம் கழித்துக்கூட அற்புதம் நடக்கலாம். இந்த நாளை உங்களுக்கு ஆண்டவர்வை அறிந்துகொண்ட வாய்ப்பாகக் கருதிக்கொள்ளுங்கள். . .”

செருப்பு ஒன்று பறந்துபோய் பீடத்தை அடித்து விழுந்தது. பின், வரிசையாகப் பல செருப்புகள் சரமாரியாக வீசப்பட்டன.

மூப்பர்கள் சிலர் உடனே விரைந்து பிரசங்கியாரைச் சூழ்ந்து அங்கிருந்து வெளியேற்றினர்.
செருப்புகள் மட்டுமின்றி கையில் கிடைத்ததையெல்லாம் மேடையை நோக்கி வீசினர்.

ஏராளமான கைபேசிகள் மின்னின.

அப்போது, மத்தியிலிருந்த நீள் இருக்கையிலிருந்து நடுத்தர வயதுடைய மாது ஒருத்தி திடுமென எழுந்து மேடையருகே போனாள். அவளிடம் ஒருவித பரபரப்பு இருந்தது. மேடையின் ஓரத்தில் இருந்த காணிக்கைப் பெட்டியினருகே சென்று சட்டெனக் கழுத்திலிருந்த சங்கிலியையும் கைகளிலிருந்த  தங்க வளையல்களையும் கழற்றிப் போட்டுவிட்டு மலர்ந்த முகத்துடன் வெளியேறினாள்.

 

http://vallinam.com.my/version2/?p=4020

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this