• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
கிருபன்

பள்ளத்தாக்கு - அகரமுதல்வன்

Recommended Posts

பள்ளத்தாக்கு - அகரமுதல்வன்
 


தூர்கிற பாழ்கிணற்றைப் போல இரவுத் தூசியால் பூமி கறுத்தது. சுருண்டு கிடக்கப்பழகிவிட்ட பாம்புக்குட்டியின் தோலில் நிலவு மின்னியது. தலைகீழாய்த் தொங்குவதற்காய் உயர்ந்த கிளைகளைத் தேடிப்பறக்கின்றன கோணம் பிசகிய வவ்வால்கள். முற்றத்தில் பனையின் நிழல் சரிகிறது. தெய்வீகம் போலிருக்கிறது பனை அசைவதை நிழலாய்ப் பார்க்க. இந்தப் பொழுதுகளில் கண்ணுக்குப்புலப்படாத அற்புதங்கள் பலமாகத் திரிந்தாலும் சுவடுகளை விடுவதில்லை. முழுமைக்கு ஆசைப்படாத மேகம் நிலவின் முன்னே கலைந்து அரிதாய் மிஞ்சுகிறது. வானத்திலிருந்து நிலத்திற்கு கோடிழுக்கும் நட்சத்திரங்கள் எங்கே புதைகின்றன. அமைதி! யாவும் முழுமையடையும் அமைதி. அவள் கருப்பட்டியோடு தேத்தண்ணீர் கொண்டு வந்திருந்தாள். சூடு என்றேன். உதட்டால் ஊதினாள். அவள்  உதட்டால் ஊதி சூடு குறையுமா? அவள் ஊதுவதை மூன்றாவது தடவையோடு நிறுத்திவிட்டாள். நல்லவேளை நான் சாம்பலாகியிருப்பேன். புறாக்கள் கூட்டுக்குள் இருந்து கொண்டு சத்தமிட்டன. சித்தம் எழுச்சியாகி யுகத்தின் ஓசையில் அடைகிறது. ஒன்றன் மேல் ஒன்றாய் அவள் சுடர் என்னில் துடித்து வெடித்தது. நான் நிரம்பியிருந்தேன். அவள் கனத்திருந்தாள். வானத்தின் மீதிருந்து அப்படியொரு பிரகாசம். மின்னல்? நான் அப்படி நினைக்கவில்லை. பின்னர் அங்கிருந்தே பேரோசை. முழக்கம்? நான் அப்படி நம்பவில்லை. பின்னர் பெருமிரைச்சல் துளிகள்.                   மழை? நான் நனையவில்லை. முழு இருட்டில் என்னோடு இருந்த அவளின் ஏறி இறங்கும் மூச்சில் பெருவெள்ளம். கடந்தநொடியின் உன்னதம் முளைத்துப் பூக்கிறது.
வித்தகி இந்தப் பொழுதை நீ எப்படி உணர்கிறாய்?

காணக்கிடைத்த பூமியின் விளிம்பில் நின்று விரிந்த செவ்வரத்தையின் இதழ்களை கொஞ்சுவதைப் போல.

இப்போது தாகம் பெருக்கிறது. கதிவேகத்தில் உடையுமொன்றைப் போல அமைதி. தோலுரிக்கப்பட்டு தொங்கவிடப்பட்ட உடும்பைப் போல நீண்டிருந்தோம். மீன்கள் தத்தளிக்கும் வற்றிய குளமா கூடல். ஒப்பற்ற இருளில் ஒப்பற்ற வடிவாய் இருந்தாள். வித்தகியின் பிரகாசத்தை அவளே ஒழித்துவைத்தாள். தன்னழகை ஒழித்துவைக்கும் இந்த மிதப்பு அவளுக்கு மட்டும் தானிருக்கிறது. அவளுடலில் மச்சங்கள் கண்விழித்து கோலமிட்டன.

டேய் மொக்கா, என்னடா செய்கிறாய்?

இருவர் நிழலும் எமக்கு கீழவே நெரிந்தன. குழவிகள் ஓட்டையிடும் சிர்ர்ர்ர்... சத்தம் இரவைத் துளையிட்டது. மஞ்சத்தில் வித்தகியின் முகம் மஞ்சளாகியிருந்தது. குழவியைப் போல நெஞ்சத்தில் சத்தமிட்டாள். துடித்து மின்னிய நட்சத்திரங்கள் நிலைத்தன. அலைந்த பட்சிகள் கிடைத்த மரங்களில் தங்கின. பூமிக்கு வியர்க்கிறதா? வனமிருந்து பூங்காற்று வராதா? இப்போது வராத காற்று எப்போது வந்தாலும் வேர்க்கும். வித்தகி மண்புழுவைப் போலசைந்தாள். என் கையில் முள்ளுமில்லை. தூண்டிலுமில்லை. நான் மீன். வலைவீசப்பட்ட கடலில் கரைக்கு வந்து திரும்பும் அலைகளைப் போல என்னை நுரைகளாக்கும் வித்தகி கலா சொரூபம். அவள் களையுண்டாள். பாம்புகள் இரவை நெளித்து புணர்ந்தன. பனையிலிருந்து காவோலை இரவின் மீது தொப்பென விழுந்தது. வித்தகியின் உடலில் மணல் தணலாய் ஒட்டியிருந்தது. அவள் மணலாடையில் சிற்பமாயிருந்தாள். கூடலின் பின் ஆடைகளை வேகமாய் உடுத்தும்  அவளின் வெட்கம் சுகத்தின் வித்தை. நொங்கின் நீரைப்போல அவள் கொஞ்சிய ஈரம் என்னில் சுரந்துகொண்டிருக்கையில் சொர்க்கத்தில் இருந்து மணல் உதிர்ந்தது. முற்றமாய் எழும்பி வீட்டின் கதைவைத்திறந்தாள்.

வித்தகியின் உடல்நிலைமோசமாகிக் கொண்டிருக்கிறது. அவள் நித்திரையை வெறுக்கப்பழகிவிட்டாள். கனவுகள் பயங்கரமாகிவிட்டால் நித்திரை தகர்ந்துவிடும். சிலவேளைகளில் நித்திரை கொண்டு அவள் எழும்புகிறவரைக்கும் அருகிலேயே விழித்திருக்கிறேன். கனவுகளால் அச்சுறுத்தப்பட்டு வீறிட்டுக்குழறிக் கதறும் அவளை என்னைத் தவிர யாராலும் சகிக்கமுடியாது. ஆனால் அது வெறும் பயங்கரமில்லை, பயமில்லை. காலம் சிலுப்பிய அதிர்வில் உதிர்ந்த விளைவு. புழுத்தின்னும் புண்ணின் கொதிப்பு.வாளோடு துரத்தும் சிம்மத்தின் கால்களுக்குள் சிக்கிய கதறல். நேற்றிரவு நீண்ட நாட்களுக்குப் பிறகு நித்திரைகொண்டாள். நான் பாய்விரித்து போர்த்திவிட்டேன். அவள் ஒரு கைக்குழந்தை. நான் அவளோடு அருகிலேயே படுத்திருந்தேன். அவள் கைகள் என்னைத் தேடிக்கொண்டேயிருக்கும் என்பதால் அவளின் கைகளை எனது நெஞ்சில் தூக்கிவைத்தேன். காவுகொடுக்கப்பட்ட வாழ்வின் நிஜத்தில் கரங்களுக்கு நடுக்கம் வந்துவிடுகின்றன. பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தகுழந்தை முதன்முறையாக நித்திரைகொள்வதைப் போல வித்தகி படுத்திருந்தாள். நேற்றைய இரவு நான் வெளியில் வரவில்லை. அப்படியே விழித்திருந்தேன். அவள் வீறிட்டுக் கதறுகிற போது அருகில் இருந்து அவளைக் கட்டியணைத்து  ஈரச்சீலையால் முகத்தை துடைத்தேன். அவளின் முகம் விஷம்பரவி உப்பியதைப் போன்று தோற்றமளித்தது. கொஞ்சநேரத்தில் தணிந்தது. அப்போது நேரம் நள்ளிரவு கடந்து இரண்டு மணியாகியிருந்தது.

கொஞ்சமாய் சாப்பிடுமென்

வேண்டாம்,

நீங்கள் சாப்பிட்டிங்களா பொறி?

இல்லை, நாளைக்கு காலையில சாப்பிடுவம்

உங்களுக்கு என்ன விசரா? இருங்கோ சாப்பட்டை போட்டுக்கொண்டு வாரன். பொறி நீங்கள் சாப்பிடாமல் இருந்து வருத்தம் வரப்போகுது.

உமக்கும் வரும் வித்தகி, நீர் சாப்பிடுகிறது எண்டால் நானும் சாப்பிடுவன்.

சரி வாங்கோ பொறிக்குன்றன். வித்தகியும் சாப்பிடுகிறாள். நக்கலாய் சொன்னாள்.
இடியப்பத்தை அவளே குழைத்தாள். கைகளால் தீத்திவிட்டாள்.
மனிதன் ஏன் கைகளால் சாப்பிடப்பழகினான் என்று கோபத்தோடு அவளிடம் கேட்டேன்.

அதில என்ன பிரச்சனை உங்களுக்கு.?

பறவைகள் போல இருந்திருந்தால் இந்தத் தருணத்தில் நாம் கதைத்துக்கொண்டிருப்போமா? அல்லது இடியப்பதைத் தான் சாப்பிட்டுமுடித்திருப்போமா? கைகளை விட வாய் மேல்.                  
டேய் புருஷா என்ற அவளின் கிறக்கத்தில் அலையத்தொடங்கிற்று இரவு.

img925.jpgபொறிக்குன்றன் உடலில் விழுப்புண்களும் குண்டுச்சிதறல்களும் நிறைந்து கிடக்கின்றது. அவரை போனகிழமை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றேன். அடிக்கடி வலிப்புவந்து மயங்கிவிடுகிறார். மூளையின் அருகில், பிடரியில் என கழுத்துக்கு மேலேயே நான்கு குண்டுச்சிதறல்கள் இன்னுமிருக்கின்றன. அதுதான் காரணமென மருத்துவர் சொல்லிவிட்டார். பொறியின்றி நான் யார்? ஊமைக்காயங்களும் சிலுவைகளும் சுமக்கும் கும்மிருட்டு. புதைந்த துவக்குகளும் நொறுக்கப்பட்ட சயனைட் குப்பிகளும் அப்பிக்கிடக்கும்             மனம் என்னுடையது. குருதியின் அந்தகாரத்தில் கண்ணீராய் மிஞ்சிய துரதிஸ்டம் நாமிருவரும். துரதிஸ்டமாய் மிஞ்சவும் அதிஸ்டம் வேண்டும். இராட்சத தோல்வியில் திசைமூடப்பட்ட பயணிகள் என்று நாமிருவரும் கதைத்துக்கொள்வோம். எங்கே கைவிடப்பட்டிருக்கிறோம்? இதுவே விடையற்ற கேள்வி. இருளும் நிலவும் கூடலும் களைப்பும் நித்திரையும் கனவும் குண்டுச்சிதறலும் வலிப்பும் ஆயுளின் நிரந்தரம். அவனுக்கு வலிப்பு வருகிற போதெல்லாம் நான் விழித்துக்கொண்டே பயங்கரக்கனவைக் காண்கிறேன். நான் யாரை அழைப்பது. அழைத்தால் யார் வருவார்? இன்று காலையில் கிணற்றடிக்கு குளிக்கப்போன பொறிக்குன்றன் வலிப்பு வந்து துடித்தபோது நான் தேய்ந்துபோய்விட்டேன். அந்த வலிப்பை எப்படி   அடக்குவது. கொஞ்சம் முன்னுக்கு சறுக்கி விழுந்திருந்தால் கிணற்றுக்குள் வீழ்ந்து போயிருப்பார். பின்னர் எல்லாம் இருளாகி இருளாகி என்னை இடுகாட்டில் மூடியிருக்கும். நான் மரணத்தில் மூழ்கியிருப்பேன் என்று சொன்னேன். பொறி கோபப்பட்டார். அப்படிச் சொல்லாதே என்று சொல்லி என் நெஞ்சில் முத்தமிட்டார். பொறியின் முத்தத்தை நான் மார்பில்  சுமக்கிற போதெல்லாம் என் மாதவம் சில்லிடுவதும் உயிரின் உச்சியில் இரத்தம் விளக்கேற்றுவதும் உடற்பூமியின் அபூர்வ திருப்திகள். பொறிக்குன்றனை மூடியிருக்கும் உடைபட்ட சந்தம் நான். என்னை மூடியிருக்கும் மழை பொழியும் பாலை அவன்.
என் வியர்வை அடங்கியிருந்தது. அவள் உடுப்பு மாத்திவிட்டு என்னை உள்ளிருந்து கூப்பிட்டாள். இரவு தீர்ந்துபோவதைப் போல பூமி வெளிச்சத்திற்கு வந்திருந்தது.
உள்ள வாடா புருஷா என்று மீண்டும் அழைத்தாள்.

இருவர் நிழல்கள் நெரிந்த இடத்தில் தடயமாய் உருவங்கள் குழம்பியிருந்தன. என் கால்களை கவ்விப்பிடிப்பதைப் போல மணலில் சந்தோசம் படர்ந்திருந்தது. இந்த மணலில் மின்னுவதெல்லாம் என் மூதாதையரின் களிப்பா? உள்ளே போனேன். எனக்கு நித்திரை வருகிறது என்ற அவள் ஏற்கனவே பாய்விரித்து படுத்துமிருந்தாள். நான் அருகிலேயே இருந்தேன். வீட்டுக் கூரையிலிருந்து கோழிகள் இறங்குகின்றன. கோவில் மணி ஒலித்தது.  அதன் ஒலியில் எந்த இருளும் ஓடவில்லை. அவள் நித்திரை. ஆவென வாயைப்பிளந்து நித்திரையாகினால் கனவு வராதென அவளே நம்பத்தொடங்கி இன்றைக்கு மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. சித்திரத்தையலைப் போல அவளுக்கான பணிவிடைகளை ஆனந்தித்து செய்வேன். அவளின் கனவற்ற நித்திரைக்காய் எந்தக் கடவுளுக்கும் பலியாகும் கிடாயாவேன். எந்தக் கடவுள் உதவுவர். அவள் கனவில் அடிக்கடிவரும் பள்ளத்தாக்கில் நிறைந்து கிடக்கும் உடலங்களை கடவுளர்கள் பார்த்திருக்கிறார்களா? நிர்வாணமாய் மூர்ச்சை அடைக்க அடைக்க வன்புணரப்படும் இருதயங்களின் பலி ஊளையை கடவுளர்கள் கேட்கிறார்களா? அவள் நித்திரையிலிருந்து கனவுக்குள்  உழலும் முன் விடிந்துவிடும். 
அவள் இன்றைக்கும் கதறுவாள். அவளை துரத்தும் கனவிலிருந்து பயங்கரமாய்த் தப்பி அலறுவாள். கனவை இருண்ட தாழ்வாரத்தில் சிந்தும் இரத்தவெள்ளமாய் நினைக்கிறாள். நான் ஈரச்சீலையோடு அவளருகே காத்திருக்கிறேன். சுற்றிலும் பயங்கரம். பாதாளத்தின் பாளயத்தில் தன் வாயைத்திறந்து வைத்திருக்கும்  கோரத்தின் முதலைக்கு நம் கண்ணீரும் கதறலும் தண்ணீர். கழுகைப் போல் பறந்து வரும் அந்தக் கனவுகளை நீங்கள் கண்டிருக்கிறீர்களா? கழுகுகளையாவது? இளைப்பாறும் நீதியை எது வேட்டையாடுகிறது? நித்திரையிலிருந்து தெறித்து முறிந்தாள். கதறினாள். கண்கள் சிவத்து கைகள் நடுங்கி முகங்குப்புற விழுந்து சத்தமிட்டாள். அவளை இறுகக்கட்டியணைத்தேன். உடலில் நெருப்பு போல வெப்பம். அவளின் ஆடைகளைக் களைந்து ஈரச்சீலையால் உடலைத் துடைத்தேன். கண்களில் அரைச்சிவப்பு இருந்தது. உடல் குளிர்ந்தது.

பொறி நான் செத்துப்போகட்டுமா?

விசர்க்கதை கதைக்கவேண்டாம். இப்ப என்னத்துக்கு இப்பிடிக் கதைக்கிறீர் என்றேன்.
இந்தக் கனவுகளுக்கு இரக்கமில்லை. அந்தப் பள்ளத்தாக்கும் கழுகுகளும் நீண்டுகொண்டே போகிறது. நான் செத்துப்போய்விடுவேன் என்னை அங்குள்ள கழுகுகள் துரத்துகின்றன. என் பெயர் எழுதப்பட்ட சவக்குழியில் இப்படியொரு வாசகமிருந்தது பொறி.
“பலியிடப்படும் பிறரின் மாமிசத்தாலும் கொழுப்புக்களாலும் எரியூட்டப்படவிருக்கும் இன்னொருத்திக்கு”


வித்தகிக்கு கனவில் வரும்பள்ளத்தாக்கு இல்லாத ஒன்றல்ல, ஒரு காட்டின் நடுவிலிருக்கும் வதைமுகாமின் ஆழமான பள்ளம். இங்கு தான் பூமிக்கு இரத்தம் பாரமாயிருந்தது. மேலும் பள்ளத்தாக்கில் சடலங்கள் நிரம்பி மலைகளாய் ஆனது. உடலங்களின் உச்சியில் கிடந்த பெண்ணுடலின் உறுப்பில் சிங்கக்கொடியின் கம்பத்தை நட்ட சிப்பாய் பூரண வயதுள்ள கடவுளாய் துன்மார்க்கத்தின் பூமிக்கு தோன்றியவன். ஓநாய்கள் அலைந்து திரிந்து உடலங்களை பிய்த்து உண்ணும் இரவுகளில் எரிந்து சாவதற்கு நெருப்பைத் தேடிய உயிர்களை புகைமூட்டம் மூடியிருந்தது. உடம்பில் கொப்பளங்கள் வெடித்து பிளாஸ்டிக் போல உருகும் போது பொஸ்பரஸ் குண்டுகள் என சத்தம் கேட்டது. அந்தச் சத்தம் பள்ளத்தாக்கில் கேட்டு எதிரொலிக்கும் போது நிறைய உடல்கள் தாரைப்போல இறுகிவிட்டன. கருவில் குழந்தைகளை சுமந்திருக்கும் பெண்களின் இரத்தத்தை உண்ணிகள் உறிஞ்சிக்கொண்டிருந்தன. கருவில் குழந்தைகள் இரத்தச்சோகைப் பிடித்தவர்களாய் இறந்துகொண்டிருந்தார்கள். உண்ணிகள் கீழிறங்கி இரத்தக்குண்டுகள் போல ஊர்ந்து போயின. முகம் தெரியாமல் இறந்த பிள்ளைகளின் பிணவாடையை தாய்மார்கள் ஏப்பம் விடுகையில் உணர்ந்தார்கள். ஒரு நள்ளிரவில் கர்ப்பிணித்தாய்களின் வயிறுகளைக் கிழித்து இறந்து போன குழந்தைகளை வெள்ளரசு மரங்களுக்கு கீழே சிப்பாய்கள் புதைத்தார்கள்.  அந்த மரங்களின் கீழே புத்தர்கள் தோன்றியிருந்த  அடுத்தநாள் காலையில் இன்னும் அதிகமானவர்கள் பள்ளத்தாக்கிற்கு கொண்டுவரப்பட்டார்கள். வந்தவுடன் குடிப்பதற்கு தண்ணீர் என்று கதறினார்கள். தண்ணீர் கேட்டவர்களின் கண்களில் கத்திகளிறங்கியது. வழியும் இரத்தத்தை அருந்தும்படி கட்டளை வந்தது. பள்ளத்தாக்கு முழுதும் இரத்தம் கடலாகி காய்ந்திருந்தது. கண்ணீர் அலையாகி ஓய்ந்திருந்தது.  அந்தப் பள்ளத்தாக்கிலும் எம் எலும்புகள் உலர்ந்துபோயிற்று. வித்தகி பள்ளத்தாக்கிலிருந்து எதைப்பற்றி மேலே ஏறினாள்?
இறந்த பெண்களின் சேலைகளும் குழந்தைகளின் கைகளும் என்னை மேலே தூக்கின. என்  உடலில் இரத்தவெடில் வந்துகொண்டேயிருந்தது. நான் மேலே நின்று பள்ளத்தாக்கை பார்க்கின்ற போது இறந்த பெண்ணை இருசிப்பாய்கள் புணர்ந்துகொண்டிருந்தார்கள். இரவில் அசைந்து அசைந்து காடுகளுக்குள் அலைந்து நடந்த பொழுது விடிந்திருந்தது.
வித்தகியின் கனவுகளில் விழிக்கும் பயங்கரங்கள்.

·         அவள் தான் எப்படியேனும் இராணுவத்தால் அடையாளம் காணப்பட்டு கொல்லப்படலாம் என அச்சமடைகிறாள். பள்ளத்தாக்கு பற்றிய ரகசியம் தெரிந்தவள் இவளொருத்தியே. புத்தனுக்கு தெரியுமென்றாலும் அவன் பேசுவதில்லை.


·         தன்னை பலாத்காரம் செய்த சிப்பாயின் முகம் கனவின் தொடக்கத்திலேயே தோன்றி தன்னை சீர்குலைப்பதாகவும் கண்களை விழிக்க விடுவதில்லைஎனவும் நடுக்கமாக சொல்கிறாள்.


·         பள்ளத்தாக்கின் சுவரைப்போலவே கனவுகளும் இரத்தநிறத்தில் மனித உடல்களை இறாத்தலாக அளந்து வெட்டுகிறது. மேலும் கனவு தன்னையொரு அடிமையாக்கி கொண்டுவிட்டதென உறுதியாக நம்புகிறாள்.


·         கனவு காணும் அன்றைய பொழுதுகளை அவள் பள்ளத்தாக்குகளிலேயே இறக்குகிறாள். அங்கிருந்து தப்பியவளால் அதிலிருந்து தப்பமுடியவில்லை. அதுவொரு துர்விதியின் வாடைபட்ட மிருகத்தனம் போலிருக்கிறது அவளுக்கு.


·         பிறகு இந்தக்கனவு தன்னை உருகுலைப்பதாக நானற்ற பொழுதுகளில் வெறுமையின் மீது முறையிடுகிறாள். உலகம் எத்தனையோ பள்ளத்தாக்குகள் பற்றி அறிந்திருப்பினும் இதனை அறிய வாய்ப்பில்லை என்று தன்னிடமே நொந்துகொள்கிறாள். பின்னர் இந்தப் பள்ளத்தாக்குகளை தோண்டியதில் உலக்குக்கும் பங்குண்டு என்றறிகிறாள்.


·அடிக்கடி இப்படி வேறுகேட்கிறாள். பொறி நான் செத்துப்போகவா? இந்தக் கனவுகள் உண்ணியைப் போல் என்னில் ஏறி உன்னையும் உறிஞ்சுகிறது. இந்த மண்ணில் போராளிகளாக இருந்தவர்களுக்கு இப்படிக் கனவுகள் வந்து அச்சுறுத்துமென போராட்டம் மவுனிக்கும் போது நினைத்திருக்குமா?


வித்தகி பள்ளத்தாக்குகளின் கனவில் கதறிக்கொண்டிருக்கிறாள். நான் வலிப்பேறி துடிக்கிறேன். விடுதலையின் பலிபீடத்தில் எம்மைத் துயரம்  சுட்டெரிக்கட்டும். எல்லாம் இருட்டித் தணியட்டும்.


-தளம் 
2017

http://akaramuthalvan.blogspot.co.uk/2017/03/blog-post_31.html

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this