Sign in to follow this  
நவீனன்

முறிவு - சிறுகதை

Recommended Posts

முறிவு - சிறுகதை

எம்.கோபாலகிருஷ்ணன் - ஓவியங்கள்: கோ.ராமமூர்த்தி

 

66p1.jpg

“நான்தான் ஆஸ்பத்திரியில இருக்கும் போதே சொன்னேன்ல... `வீட்டுக்கு அழைச்சுட்டு வர்றதுக்கு முன்னாடியே பார்த்துக்க ஆள் ஏற்பாடு பண்ணிடலாம்’னு. இப்ப வந்து என்ன பண்றதுன்னு என்கிட்ட கேட்டா நான் என்ன சொல்றது? அதான் தங்கச்சிமார்க மூணுபேர் இருக்காங்கல. ஆள் மாத்தி ஆள் வந்து அவங்களே பார்த்துக்கட்டும். என்கிட்ட வந்து எதையும் கேக்காதீங்க. வேளாவேளைக்கு ஆக்கிவெக்கிறேன். வேற என்ன வேணாலும் சொல்லுங்க. செய்றேன். இதுமட்டும் என்கிட்ட கேக்காதீங்க. அவ்ளோதான்” - விஜயாவின் குரல் தணிவாக ஒலித்தது.
p66.jpg
உண்ணம்மாள் தலையைத் திருப்பி ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள். இளங்கோ அடங்கிய குரலில் பேசுவதும், விஜயா பதில் சொல்வதுமாக அடுத்த அறையில் இருந்து கொஞ்ச நேரமாகச் சத்தம் கேட்கிறது. கூடத்துக்கும் அந்த அறைக்கும் நடுவில் ஒற்றைக்கல் சுவர். எத்தனை மெதுவாகப் பேசினாலும் கேட்கத்தான் செய்யும். காதில் விழ வேண்டும் என்றே விஜயா சத்தமாகப் பேசுவாள். கயிற்றுக்கட்டிலைப் போட்டு வாசலில் கிடந்தவரைக்கும் காதில் எதுவும் விழாது. இப்போது எல்லாவற்றையும் கேட்டுத் தொலைக்க வேண்டிய சூழ்நிலை. எலும்பு ஒடிந்து கம்பிவைத்துக் கட்டிய இடது காலை வெறித்துப் பார்த்தாள். வீக்கம் தணியாததுபோலவே தெரிகிறது. அசைக்க முயலும்போது கனக்கிறது. இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி அடுத்தவர் தயவில் படுத்துக்கிடக்க வேண்டும்? நான்கு பேரைக் காவு வாங்கிய பாழாய்ப்போன அந்த விபத்து என்னையும் கொண்டுபோயிருக்கக் கூடாதா?

ஆஸ்பத்திரியில் கிடந்த வரைக்கும் சுற்றிலும் ஆள் கூட்டம். `எலெக்‌ஷன்ல நின்னா ஆத்தா எம்.எல்.ஏ ஆகிடலாம் போங்க’ என்று நர்ஸம்மா சொன்னபோது பெருமையாகத்தான் இருந்தது. அறுவைசிகிச்சை முடிந்து நான்காம் நாளில் வீட்டுக்குப் போகலாம் என்றார்கள். `உடற்பயிற்சி செய்தால் போதும். இங்கே இருக்கத் தேவையில்லை’ என்று சொன்னபோது பிடிவாதமாக மறுத்தாள்.

“வயசு எம்பது ஆச்சு. இத்தன நாளும் ஓடியாடி எல்லாத்தையும் பார்த்துட்டேன். ஒருநாளும் எதுக்கும் யார் கையையும் எதிர்பாத்து நிக்கலை. இனியும் நிக்கமாட்டேன். என்னை வீட்டுக்கு அனுப்புறதுன்னா சீக்கிரமா நல்லா நடக்கவைங்க. இந்த பெட்டோட அப்பிடியே தூக்கிட்டுப்போய் கெடையில போடறதுன்னா நான் வர மாட்டேன்.”

மேலும் இரண்டு நாட்கள்தான் வைத்திருந் தார்கள். கட்டாயமாக வீட்டுக்கு அனுப்ப ஏற்பாடு செய்தபோது, அவளால் எதுவும் செய்ய முடியவில்லை.

ஆம்புலன்ஸில் இருந்து இறக்கி, இந்தக் கட்டிலில் கொண்டுவந்து படுக்கவைத்த நொடி முதலாகவே தளர்ந்துபோனாள். கட்டிலுக்கு அருகில் ஒதுங்கிநிற்கும் வாக்கரைப் பார்க்கும் போதெல்லாம் எரிச்சல் வந்தது. அதைப் பிடித்துக்கொண்டு நடக்கப் பழகியாயிற்று என்றாலும், சுத்தமாக அவளுக்குப் பிடிக்கவில்லை. காலம் முடிந்துபோய் கட்டையில் போகிற சமயத்தில், இப்படி கால் ஒடிந்துகிடக்க வேண்டுமா?

பூண்டியில் இருந்து காலையிலேயே வந்துவிடுகிறேன் என்று சொன்ன இரண்டாவது மகள் சாந்தாவை இன்னும் காணவில்லை. நேற்று முழுக்க இருந்துவிட்டு காலையில்தான் புறப்பட்டுப் போயிருக்கிறாள் மூத்தவள் சுலோச்சனா. இவள் வந்த பிறகுதான் கக்கூஸுக்குப் போக வேண்டும். இளங்கோ துணைக்கு வருகிறேன் என்றுதான் சொன்னான். உண்ணம்மாள் கோபத்துடன் அவனைத் திட்டி விரட்டினாள். அதுதான் இப்போது அறைக்குள் பஞ்சாயத்து நடக்கிறது.


கதவைத் திறந்துகொண்டு இளங்கோ வெளியே வந்தபோது உண்ணம்மாள் அதட்டினாள்.

“அவகிட்ட எதுக்குடா போய் கெஞ்சிட்டு நிக்கிற? என் கெட்ட நேரம் அவ கையில சோறு வாங்கித் திங்கிற மாதிரி ஆகிடுச்சு. இவளுக மூணு பேர்ல ஒருத்தியாச்சும் பக்கத்துல இருந்தா, இப்படிக் கிடந்து சாக வேண்டாம் நான்.”

இளங்கோ லுங்கியை மடித்து இடுப்பில் இறுக்கியபடி அருகில் உட்கார்ந்தான்.

“அவ போக்குத்தான் உனக்குத் தெரியுமே. விடும்மா. தங்கச்சிக இங்க வந்து உக்காந்திருந்தா அவங்க பொழப்பைப் பார்க்க வேண்டாமா?”

இளங்கோவைப் பார்க்க பாவமாகத்தான் இருந்தது. அவன்தான் என்ன செய்ய முடியும்? இருபது நாட்களாக வேலைக்குப் போகாமல் சரியான அலைச்சல். ஆனாலும், விஜயா சொல்வதைத்தானே இவன் கேட்கிறான்.

“எல்லாரும் அவங்க அவங்க பொழப்பைப் பாருங்கப்பா. நான்தான் உங்க எல்லாத்துக்கும் இப்ப இடைஞ்சலா கிடக்கிறேன்.”

உண்ணம்மாளுக்கு முதுகு வலித்தது. சற்றே நிமிர்ந்தாற்போல் இருந்தால் பரவாயில்லை.

“இந்தத் தலவாணிய கொஞ்சம் சேர்த்துப் போடுறா.”

இளங்கோ இன்னொரு தலகாணியை முதுகை அணைத்தாற்போல வைத்தான்.

“சின்னவளை எங்கடா காணோம்.  ஆஸ்பத்திரிக்கு வந்துட்டுப் போனவ. அதுக்கு அப்புறம் எட்டியே பார்க்கலை. என்னன்னு கேட்டியேடா?” - மல்லிகாவைத்தான் கேட்கிறாள்.
 
பல்லடத்தை அடுத்து பெத்தாம்பாளையத்தில் இருக்கிறாள். ஒரு நாள் அவள் வரவில்லை என்றாலும் உண்ணம்மாளுக்கு விசனம்.

“சொல்லிட்டுத்தான போனாம்மா. அவங்க கொழுந்தனார் சம்சாரத்துக்குச் சோறாக்கிப் போடுறாங்க. ரெண்டு நாளைக்கு வர முடியாது.”

“ஆமாம் சாமி... அவியஅவியளுக்கு சோலி இல்லாதியாப் போகுது. என்னைமாதிரி இப்படிக் கெடையிலையா கிடக்கிறாங்க.”
 
உண்ணம்மாள் சேலைத் தலைப்பை உதறி முகத்தைத் துடைத்தாள்.

இளங்கோ தலையைக் குனிந்தபடி மெதுவாகச் சொன்னான்... “அதுக்குத்தாம்மா சொல்றேன். செலவாகுதேன்னு யோசிக்காதே. இதுக்குன்னு ஆள் இருக்காங்க. இங்கேயே பக்கத்துல இருந்து பார்த்துக்குவாங்க…”

அவன் சொல்லி முடிப்பதற்கு முன்பே உண்ணம்மாள் ஆவேசத்துடன் கத்தினாள்.

“நீ ஒரு மயித்தையும் சொல்ல வேண்டாம் எந்திரிச்சுப் போடா. இதைத்தான் உன் பொண்டாட்டி ரூமுக்குள்ள ஓதிவுட்டாளா?”

பதில் பேச முடியாது தலையைக் குனிந்தபடியே கண்ணாடியைக் கழற்றினான் இளங்கோ. உண்ணம்மாளை இனி சமாதானப்படுத்த முடியாது. கத்தித் தீர்க்கட்டும் என்று அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தான்.

“எல்லாத்துக்கும் ஆள் இருந்தா அவியளுக்கு நான் எல்லாத்தையும் காட்டிட்டுப் படுத்திருக் கணுமாடா? கருமம் புடிச்சவனே. ஏன்டா உன் புத்தி இப்படி நாசமாப்போகுது. அத்தனை காசு கிடக்குதா உன்கிட்ட. அப்படின்னா எதையாச்சும் வாங்கிட்டு வந்து ஊத்துடா. அக்கடான்னு போய்ச் சேர்ந்துடுறேன். பேசறாம்பாரு பேச்சு. ஆள்வெச்சுக் கழுவுறானாம். இதுக்குத்தான் நாலு புள்ளைகளைப் பெத்துப்போட்டனாடா நானு?”

66p2.jpg

கைகளை இறுகக் கட்டியபடியே அவள் முகத்தைப் பார்த்திருந்த இளங்கோ எழுந்தான்.

“சரிம்மா... நான் ஒண்ணும் சொல்லலை. நீ சத்தம்போடாத.”

உண்ணம்மாள் ஓய மாட்டாள் என்று அவனுக்குத் தெரியும். கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தான். செல்போனைக் காதில் ஒட்டியபடி திண்ணையில் சாய்ந்திருந்த மேகலா அவசரமாக எழுந்து நின்றாள். அவளைக் கண்டுகொள்ளாமல் கடந்து தெருவில் நின்றான். கனரக வாகனங்கள் செல்ல முடியாத குறுகிய வீதி. சின்னத்தம்பி கடை எதிரில் குட்டியானை நின்றது. எண்ணெய் டின்களை இறக்கிக் கொண்டி ருந்தார்கள். காமாட்சியம்மன் கோயிலிலிருந்து பாட்டுச் சத்தம் கேட்டது. பெட்டிக்கடை வாசலிலிருந்து கருப்பக்கா எட்டிப் பார்த்தாள்.

“என்ன இளங்கோ. ஆத்தா ரொம்பத்தான் சத்தம் போடுது. என்ன பண்டலாங்கிறா?”

இளங்கோ எதுவும் சொல்லாது கையை விரித்தான்.

“அவ பாட்டுக்கு வேஸ்ட் துணியைப் பிரிச்சிட்டு சிவனேன்னு கிடந்தா. பார்த்தா எம்பது வயசுக்காரியாட்டமா இருக்கா. யாராச்சும் கிட்டத்துல போக முடியுமா. இந்த வயசுலையும் நடுங்காத, கொள்ளாத நடந்துட்டிருந்தாளே. அந்தக் கோயில் விசேஷத்தைப் பேசின நாள்லேர்ந்தே ஏதாச்சும் நடந்துட்டேதான் இருந்தது. என்னத்தைச் சொல்றது போ. கடைசிக் காலத்துல இப்படி காலை உடைச்சுட்டு கெடையில கிடக் கோணுமின்னு அவ தலையில எழுதியிருக்கு.”

வெற்றிலைக் கட்டின் மேல் விரித்திருந்த வெள்ளைத் துணியின் மீது தண்ணீரைத் தெளித்தாள். தட்டுக்கூடை முழுக்க வெற்றிலை அடுக்குகள்.

இளங்கோ கசப்புடன் சிரித்தான்.

“இத்தனை வருஷமா பங்காளிகலாம் சேர்ந்து கோயிலுக்குப் போகவே இல்லைன்னுதான் ஏற்பாடு பண்ணிச்சு. இப்பிடி எல்லா குடும்பத்துக்குமே துக்கம் வந்துசேரும்னு யார் கண்டா பெரியாத்தா. அப்புறம் என்ன கோயில், என்ன சாமி, ஒண்ணுமே புரியலை.”

சங்கரம்பாளையம் அப்படி ஒன்றும் தொலைவில் இல்லை. இதோ இங்கிருக்கும் விஜயமங்கலத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் வடக்கில்தான். அங்கிருக்கும் அங்காளம்மன் கோயிலில் பல தலைமுறைக்கு முன்பாக, பங்காளிகள் வகையில் ஒவ்வொரு மாதமும் அமாவாசையும் பூசை இருந்துள்ளது. எப்போது தடைப்பட்டதோ தெரியவில்லை. வழிபாடு விட்டுப்போனது. இப்போது அந்த ஊரிலும் உறவுகள் யாருமில்லை. அதனால் போவதற்கான சந்தர்ப்பமும் அமையவில்லை. ஆனாலும், உண்ணம்மாள் அவ்வப்போது புலம்பிக்கொண்டே கிடப்பாள்.

“நேத்தெல்லாம் கண்ணையே மூட முடியல பார்த்துக்கோ. அத்துவானக் காட்டுல அவ அழுதுட்டே நிக்கிறா. பசிக்குதுன்னு அழுதாளா யாரும் வந்து பார்க்கலைன்னு அழுதாளா ஒண்ணும் தெரியலை எனக்கு. வவுறெல்லாம் ஒருமாதிரி பண்டுச்சு. இந்த மாசமாச்சும் கோயிலுக்குப் போய் பொங்கலைப் போட்டாத்தான் சரியாகும்.”

பங்காளிகளின் குடும்பங்களில் அக்கியானமாக அடுத்தடுத்து சம்பவங்கள் சிறிதும் பெரிதுமாக நடக்க, ஐப்பசி மாதத்தில் பொங்கல் போடுவதெனத் தீர்மானித்தார் பெரியாயி பாளையம் சண்முகம். பங்காளிகளில் வயதில் மூத்தவர் அவர்தான். உண்ணம்மாளுக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. வீட்டுக்கு வெள்ளையடிப்பதும், பரணில் கிடக்கும் பொங்கல் பானையை இறக்கி, புளிபோட்டு விளக்கிவைப்பதுமாக ஓடிக்கொண்டிருந்தாள். உள்ளூர் காமாட்சியம்மன் பொங்கலுக்குக்கூட அவள் இத்தனை பரபரத்ததில்லை. விஜயாவுக்கு எரிச்சல்.

“இத்தனை வருஷம் அந்தக் கோயில் எந்தத் திசையில இருக்குதுன்னே கண்டுக்காத கிழவி, இப்ப எதுக்கு இத்தனை ஆட்டம் போடுறா?”

குடும்ப சகிதமாக ஈரோடு பஸ்ஸில் ஏறி விஜயமங்கலத்துக்கு டிக்கெட் வாங்கிய பின்னும் உண்ணம்மாள் புலம்பினாள்.

“எத்தனையோ வருஷத்துக்கு அப்புறமா கோயிலுக்குப் போறோம். ஒரு வேன் வெச்சு எல்லாரையும் கூட்டிட்டுப் போகக் கூடாதா? நமக்கு எழுதிருக்கிறது அவ்ளோதான்.”

சின்னத்தம்பி குடும்பம் காரில் வருகிறது. காலனியில் இருந்து ஒத்தைத்தறிக்காரரின் சொந்தங்களும் வேன் வைத்துக்கொண்டு வருகிறார்கள். அவினாசி சித்தப்பா வகையறாவிலும் வேனில்தான் வருகிறார்கள். இளங்கோ கண்ணாடியைக் கழற்றித் துடைத்தபடி ஆற்றாமையுடன் வெளியே பார்த்தான். விஜயா ஓரக்கண்ணால் அவனை முறைப்பதை உணர்ந்தான்.

விஜயமங்கலத்தில் இருந்து சங்கராம் பாளையத்துக்கு மினி பஸ். கோயில் விசேஷம் என்பதால், அதிலும் ஆள் நிற்க முடியாத அளவுக்குக் கூட்டம். வியர்க்க விறுவிறுக்க வெள்ளைப் புடவையின் முந்தானையால் விசிறியபடியே கோயில் வாசலில் இறங்கிய பின்புதான் உண்ணம்மாளுக்கு முகத்தில் சிரிப்பு. சொந்தங்களைக் கண்டதும் சிரமங்களை மறந்துவிட்டு ஓடினாள்.

பெரிய ஆலமரத்துக்குக் கீழே சிமென்ட் பூச்சு உதிர்ந்துபோன பழந்திண்ணை. பொங்கலுக்கு அடுப்புக் கூட்டிய கற்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. வேனில் இருந்து சாமான்களை இறக்கிக்கொண்டிருந்தார்கள். வேம்பும் வில்வமுமாக நிழலிட்டிருக்க சின்னஞ்சிறியதாக அங்காளம்மன் கோயில். கோபுரப் பொம்மைகள் வண்ணம் இழந்து நின்றன. திட்டிவாசல்போல சின்னஞ்சிறிய நுழைவாயில். நெருஞ்சியும் தொட்டாற்சிணுங்கியுமாக அடர்ந்த மதிலோரத்தில் ஆடுகள் மேய்ந்திருந்தன. கல்பாவிய பாதையின் இருபுறங்களிலும் பூக்கள் செறிந்த ஆவாரம்புதர்கள். முகம் கழுவிய ஈரத்துடன் கோயிலுக்குள் கால்வைத்ததும் உண்ணம்மாளுக்கு தலை சுற்றியது. சுவரைப் பிடித்தபடியே தரையில் அமர்ந்து உள்ளே பார்த்தாள். பூசைக்கான ஏற்பாடுகள் தொடங்கியிருந்தன. மெல்லிய சிவப்புத் திரைக்குப் பின்னால் மங்கலாக அம்பாளின் உருவம். கண்ணீர் பெருக அப்படியே உட்கார்ந்திருந்தாள் உண்ணம்மாள். தன்னை மறந்து அவள் உதடுகள் வேண்டுதல்களைப் பிதற்றின.

பூசை முடிந்து நெற்றி நிறைய விபூதியைப் பூசியவள், நெடுஞ்சாண்கிடையாக மண்ணில் விழுந்து வணங்கினாள். கண்ணீர் வழிய நின்றாள்.

“இருக்கிற வரைக்கும் உடம்புக்கு ஒண்ணும் வராம ஒருத்தருக்கும் உபத்திரவம் தராதபடி நீதாம்மா பார்த்துக்கணும்.”

கையேந்தி வேண்டிய பின் எதுவும் பேசாது வெளியே வந்தாள். பசிக்கவில்லை. மனம் குளிர்ந்திருந்தது. திண்ணையில் புடவையை விரித்துப் படுத்துவிட்டாள். குழந்தைகளின் உற்சாகக் கூச்சலும் பந்திப் பரிமாறும் சத்தங்களையும் கேட்டபடி கண்மூடிக் கிடந்தாள்.

இளங்கோ அருகில் வந்து தொட்டு எழுப்பியபோதுதான் தூங்கிப்போனதை உணர்ந்து கண்விழித்தாள்.

“எல்லாரும் கிளம்பியாச்சும்மா... சாப்பிடாமயே தூங்கிட்டே. ஒருவாய் சாப்பிடுறியா?”

கையசைத்து `வேண்டாம்’ என்றவள் திண்ணையில் அமர்ந்தபடி நோட்டமிட்டாள். அவிநாசிக்காரர்கள் புறப்பட்டுவிட்டார்கள். சின்னதம்பியின் வேனில் பாத்திரங்களை ஏற்றிக்கொண்டிருந்தார்கள்.

“மினி பஸ் இப்ப வந்துரும். கிளம்பலாம். அதை விட்டா அப்புறமா ரெண்டு மணி நேரமாகிடுமாம். அதுலயே போயிட்டா தேவலை.”

வெற்றிலையைக் கிள்ளி வாயில் அதக்கியபடியே அருகில் வந்தாள் கருப்பக்கா. கோயில் வாசல் அருகில் நின்று கும்பிடு போட்டாள்.

“ஒவ்வொரு மாசமும் வந்துட்டுப்போற யோகத்தைக் குடு ஆத்தா.”

ஆலமரத்துக்கு அருகில் கூடியிருந்தவர்களை நோக்கி நடந்தாள்.

சின்னதம்பியின் குரல் அவளை நிறுத்தியது.

“பெரீம்மா... ரெண்டு பேருக்கும் வேன்ல இடம் கிடக்குது. ஏறிக்கங்க.”

இளங்கோ மடித்துக்கட்டிய வேட்டியுடன் வேனுக்கு அருகில் வந்தான்.

“சாமானமெல்லாம் கிடக்குது. உனக்கு இடஞ்சலா இருக்கப்போகுது தம்பி.”

உண்ணம்மாவின் வாய் சும்மா இருக்காது. ஊர்ப் போய்ச் சேர்வதற்குள் எதையாவது சொல்லிவைத்துவிடுவாள். பிறகு பொல்லாப்புதான்.

“அதெல்லாம் ஒண்ணுமில்ல இளங்கோ. காத்தால வந்தவிங்க நாலுபேர் இப்படியே சோமனூருக்குப் போயிட்டாங்கல. அதான் இடம் கிடக்குது. வெயில்ல எதுக்கு அலையோணும். நான் கூட்டியாறேன். நீங்க பஸ்ல வாங்க.”

கருப்பக்கா உள்ளே போனதும் சின்னதம்பி கைத்தாங்கலாக உண்ணம்மாவை ஏற்றி உட்காரவைத்துக் கதவை அடைத்தான்.

வேன் புறப்பட்டுப்போனதும் விஜயா பெரூமூச்சுடன் அவன் காதில் சொன்னாள்... “நல்லவேளையா மனசு வந்து போயிருக்குது. இல்லைன்னா நம்மகூட வந்து உசுரை வாங்கியிருக்கும்.”

மினி பஸ்ஸைப் பிடித்து விஜயமங்கலம் போய், அங்கிருந்து திருப்பூருக்கு பஸ் பிடித்து வீடுபோய்ச் சேர்ந்த பின்னும் வேன் வந்து சேர்ந்திருக்கவில்லை.

இளங்கோ சின்னதம்பியை செல்போனில் அழைத்தபோது, விபத்து நடந்து கொஞ்ச நேரம் ஆகியிருந்தது.

பொடாரம்பாளையத்துக்கு அருகில் வரும்போது, அசுரவேகத்தில் எதிரில் வந்த மணல் லாரியில் மோதாமல் இருப்பதற்காக வேனைத் திருப்ப, புளியமரத்தில் மோதிக் கவிழ்ந்துவிட்டது. சின்னதம்பிக்கு தலையில் அடி. கொஞ்ச நேரம் மயங்கிக் கிடந்திருக்கிறான். பக்கத்து மில்லில் இருந்து ஆட்கள் வந்து ஒவ்வொருவராக வெளியே எடுத்திருக்கிறார்கள். உண்ணம்மாளுக்கு நினைவில்லை. வலது காலில் ரத்தக் காயம். 108 சைரனுடன் வந்தபோதுதான் சின்னதம்பி விழித்திருக்கிறான். தலையில் அடிபட்டுக் கிடந்த சிவன்மலை மாமாவைத்தான் முதலில் அனுப்பியிருக்கிறான். அடுத்துவந்த இன்னொரு ஆம்புலன்ஸில் உண்ணம்மாவை ஏற்றிய சமயத்தில்தான் இளங்கோவின் அழைப்பு.

சுருக்கமாகச் சொன்னான்.

“எல்லாரையும் குமரன் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிடுறேன். அங்க வந்துருண்ணா.”

நான்கு ஆம்புலன்ஸுகளும் அடுத்தடுத்து வந்து ரத்தக் காயங்களுடன் ஆட்களை இறக்கின. உறவுகள் மொத்தமும் மருத்துவமனை வளாகத்துக்குள் புலம்பி அழுதபடி நின்றன. உண்ணம்மாவுக்கு எலும்பு முறிவு. மறுபடியும் அதே ஆம்புலன்ஸில் கோயமுத்தூர் கங்கா மருத்துவமனை. வெகுநேரம் கழித்து கண்விழித்தவள் வலியுடன் அனத்தினாள்.

“என்னவோ தப்பாகிடுச்சுடா இளங்கோ. தெய்வக்குத்தம். எல்லாரையும் இப்படி அமுக்கிடுச்சுப் பார்த்தியா. கால் வலி உசுரு போவுதுடா. என்னவாச்சும் பண்ணுடா.”

“அதான் டாக்டர் வந்து பாத்துட்டார்ல. காலையிலே ஆபரேஷன். வலி தெரியாம இருக்கிறதுக்கு ஊசி போடுவாங்க. சித்த பொறுத்துக்க.”

நீர்கோத்த கண்களுடன் இளங்கோவை உற்றுப் பார்த்தவள் கேட்டாள்... “எதுக்குடா அந்த வண்டியில போய் நான் ஏறுனேன்?”

அறுவைசிகிச்சை முடிந்து கண்விழித்தவள் வெகுநேரம் பேசவே இல்லை. எதையோ கேட்க நினைத்துத் தயங்கினாள். அடிக்கடி கண்களை மூடிக்கொண்டாள். கண்ணீர் வழிந்து தலையணையை நனைத்தது.

“என்னத்த நினைச்சு இப்படி வெசனப்படுறே? கெட்ட நேரம் காலோட போச்சேன்னு நினைச்சுக்கோ” - சுலோச்சனா சொன்னபோது மூச்சை உறிஞ்சியபடி முதுகைத் திருப்பினாள்.

“அவியல்லாம் எப்படி இருக்காங்க?” - பயமும் தயக்கமுமாக இளங்கோவின் முகம் பார்த்தாள். இந்தக் கேள்வியை எதிர் பார்த்திருந்த இளங்கோ, அவசரமாகச் சொன்னான், “யாருக்கும் பெருசா ஒண்ணுமில்ல. எல்லாரும் நல்லாருக்காங்க.”

உண்ணம்மாள் கேள்வியுடன் முறு வலித் தாள். இளங்கோ அவள் பார்வையைத் தவிர்ப்பதை உணர்ந்தவளாகக் கைவிரித்து, மேலே உயர்த்தியவள் மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள்.

66p3.jpg

வாசல் திண்ணையின் வலது மூலையிலிருந்து தாவிக் குதித்தது வெள்ளாடு. மூங்கிலில் கட்டியிருந்த மசால் தளையை எட்டிப் பிடித்தது. தலையைச் சற்றே உயர்த்தி வாய்க்குள் அதக்கியபடி தாவி ஓடியது. செருப்புகளை ஒதுக்கி ஓரமாகப் போட்டுவிட்டு இளங்கோ உட்கார்ந்ததும் மல்லிகா மெள்ளக் கேட்டாள், “ஆள் போட்டாச்சாண்ணா.”

டெட்டால் வாசனையுடன் வெள்ளைச் சேலையைக் கொடியில் உதறிப்போட்ட சுலோச்சனா திரும்பிப் பார்த்தாள். இளங்கோ ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த்தான். உண்ணம்மாள் கண் மூடிக் கிடந்தாள்.

“நாளைக்குத்தான ஒண்ணாம் தேதி. வந்துருவாங்க” - தணிந்த குரலில் சொன்னான்.

“அவிங்களும் நர்ஸ்தானே?” - புடவைத் தலைப்பில் ஈரக் கைகளைத் துடைத்தபடி அருகில் உட்கார்ந்தாள் சுலோச்சனா. முதல் பஸ்ஸைப் பிடித்து வந்திருந்தாள். அழுக்குக் கூடைக்குள் சுருட்டிக்கிடந்த உண்ணமாவின் புடவைகளையும் போர்வையையும் ஊறவைத்து அலசிப் போட்டுவிட்டாள். இரண்டு நாட்களாக மல்லிகா உடனிருந்து பார்த்துக்கொண்டதில், உண்ணம்மாளின் ஆங்காரம் சற்றே தணிந்திருந்தது.

“நர்ஸ் இல்லை. ஆனா அதுமாதிரிதான். இப்படி கெடையில விழுந்துட்டவங்களை வீட்டுல இருந்தே பார்க்கிறதுக்குன்னு இருக்காங்க. கூடவே இருப்பாங்க. நடக்கவெப்பாங்க. மருந்து குடுப்பாங்க. பாத்ரூம் போவெச்சு உடம்பு துடைச்சு, துணி மாத்திவிடுவாங்க. ஆஸ்பத்திரியில இருந்தா அங்க எப்படிப் பண்ணுவாங்களோ அதுமாரி எல்லாமே.”

மல்லிகா வளையலைப் புறங்கையில் ஏற்றியபடியே கேட்டாள்... “நம்ம வீட்டுலயேதான் இருப்பாங்களா?”

“ஆமாம் புள்ளே. இங்கதான் சாப்பாடு, படுக்கை எல்லாம். அம்மாகூடவேதான் இருப்பாங்க.”

“வர்றவங்க வயசானவிங்களா... வயசுப் புள்ளையா, எப்படிப் பொறுப்பா இருப்பாங்களா, யார் எவர்னு தெரியாம வீட்டுக்குள்ள எப்படி வெச்சுக்கிறது?”

இளங்கோ பெருமூச்சுவிட்டபடி நிமிர்ந்தான். கைகளை உயர்த்தி சடவு முறித்தான். ஆயிரம் முறை யோசித்துக் களைத்த விஷயங்கள். வெங்காயச் சருகுகள் நிறைந்த முறத்தை ஏந்திவந்து, ரோஜாத் தொட்டியில் கொட்டிய விஜயா ஒரு கணம் நின்றாள். திண்ணையில் இருந்த மூவரையும் சிரித்தபடியே பார்த்தாள்.

“மருதாணியும் கொய்யாப்பழமும் பறிச்சு வெச்சிருக்கேன். மறக்காம எடுத்துட்டுப் போங்க.”

“அதான் அப்பவே சொல்லிட்டல. எல்லாம் எடுத்துக்குவாங்க” - சலிப்புடன் சொன்னான் இளங்கோ.

“அண்ணன்கிட்ட உக்காந்தா உங்களுக்கு பொழுதுபோறதே தெரியாதே. லெமன் ஜுஸ் போட்டு எடுத்தாரேன் இருங்க.”

சிரித்தபடியே உள்ளே சென்றவளைப் பார்த்தபடியே கேட்டாள் மல்லிகா... “எல்லா வேலையையும் இழுத்துப்போட்டுட்டுச் செய்றாங்க அண்ணி. ஆனா, அம்மா சமாசாரத்துல மட்டும் ஒத்துவர மாட்டேங்கிறாங்க. இதுல மட்டும் அவங்களுக்கு என்ன சங்கடம்னே தெரியல. நீ பேசிப் பார்த்தியாண்ணா?”

இருவரையும் பார்த்துப் புன்னகைத்தான் இளங்கோ.

“அதெல்லாம் பேசியாச்சு. சரிவராது. அவ போக்குலதான் இருப்பா. விடுங்க” என்றவன் தொடர்ந்தான், ``மாசத்துக்குப் பத்தாயிரம் ரூபாய் சம்பளம்னு கேட்டாங்க. நான்தான் ஒம்பதாயிரம் ரூவாய்க்குப் பேசியிருக்கேன். மூணுவேளை சாப்பாடு போடணும். இதுபோக ஏற்பாடு பண்றவங்களுக்கு ஒம்பதாயிரம் தரணும்.”

“வீண் செலவுதாண்ணா. என்னதான் பணம் குடுத்தாலும் நம்ம அம்மாவை நாம பார்த்துக்கிற மாதிரி இருக்குமா? நாங்கதான் மூணுபேரு இருக்கோம். ஒருத்தர் மாத்தி ஒருத்தர் வந்து பார்த்துக்க மாட்டமா?” - மல்லிகா கண்களைத் துடைத்தபடியே கேட்டாள்.

“அதான்புள்ளே நானும் சொல்றேன். அண்ணன்தான் கேக்க மாட்டேங்கிறாங்க” - சாணளவு தலைமுடியைச் சுருட்டி முடிச்சிட்டாள் சுலோச்சனா.

இளங்கோ எழுந்து கைகளை உதறினான். எதிர்வீட்டு வாசலில் சைக்கிள்காரன் இளநீர் வெட்டிக்கொண்டிருந்தான். வெயில் பட்டு ஒளிர்ந்தன இளம்பச்சைக் காய்கள். கூரிய அரிவாள் ஒவ்வொரு வீச்சுக்கும் மின்னி அசைந்தது.

“அதெல்லாம் சரியா வராது புள்ளைங்களா. ஒரு நாள் மாதிரி இருக்காது. ஒவ்வொருத்தருக்கும் ஏதாச்சும் வேலை வந்து நிக்கும். வர முடியாத சூழ்நிலை அமையும். அவளும் அவசர ஆத்தரத்துக்குக்கூட கிட்ட வர மாட்டா. எல்லாம் ஒண்ணா சேர்ந்து ஆத்தா விசனப்படுவா. சத்தம் போடுவா. எதுக்கு வீணா பிரச்னை? கடனோட கடனா இதையும் பார்த்துக்கலாம்.”

செருப்பைப் போட்டபடி பந்தலுக்கு வெளியே வந்தான். பந்தற்காலில் படர்ந்திருந்த மயில்மாணிக்கத்தின் சிவந்த பூக்களைச் சுண்டினான்.

“நாள் கிழமைன்னு வந்தா முடிஞ்சதைச் செய்யுங்க. அது போதும். அவ மனசு மாறி எதுனாச்சும் செஞ்சா பார்த்துக்கலாம்.”

ஆனால், விஜயா செய்வாள் என்ற நம்பிக்கை அவனுக்கு இருக்கவில்லை.

66p4.jpg

காம்புகள் ஒடிந்து கோக்கமுடியாத மொக்குகளை ஓரமாகக் குவித்தாள் விஜயா. மொக்குகளை நெருக்கிக் கோத்திருந்த மல்லிகைச் சரம் அவள் மடியில் கிடந்தது. கைகளில் ஏந்தி அழகு பார்த்தவள் நிறைவுடன் எழுந்தாள். முகம் துடைத்தபடி உள்ளே வந்த மேகலாவிடம் உற்சாகத்துடன் சொன்னாள்... “தல சீவிட்டல. இந்தா பூ வெச்சுக்க. ஊர்லேருந்து ஆயா கொண்டு வந்தது. நம்ம வீட்டுக் கொடியில பூத்தது.”

கட்டிலில் சாய்ந்திருந்த உண்ணம்மாள் தாளித்த பொரிகளுக்கிடையில் எண்ணெய் மினுக்கத்துடன் கிடந்த பூண்டை எடுத்து வாயில் போட்டாள். கட்டிலுக்கு அடுத்து நாற்காலியில் அமர்ந்திருந்த விஜயாவின் அப்பா மெதுவாகச் சொன்னார், “கெட்ட நேரத்துலேயும் நல்லநேரம் தான். கூட வந்த நாலு பேருக்கு ஆயுசு அவ்ளோதான். என்ன பண்றது? நீங்க அதையவே நெனச்சு விசனப்படாம தெகிரியமா இருந்தா போதும்.”

கட்டிலின் ஓரத்தில் அமர்ந்திருந்த விஜயாவின் அம்மா அவர் சொல்வதற்கெல்லாம் தலையாட்டினாள்.

உண்ணம்மாள் தம்ளரை சேலைத் தலைப்பால் பற்றியபடி காபி தண்ணியை உறிஞ்சினாள். நாக்கைச் சுட்டிருக்க வேண்டும். உதடுகளைக் குவித்து ஊதிக்கொண்டாள்.

“அங்கலாப்புல சொல்றோம். `இப்படிக் கெடையில கிடக்கிறதுக்குப் பதிலா ஒரேயடியா போயிடுறது நல்லது’ன்னு.  ஆனா, அவ்ளோ சீக்கிரமா போறதுக்கு யாருக்குத்தான் மனசு வருது?”

டம்ளர்களைச் சேர்த்தெடுத்து சமையலறைக்குள் வந்த விஜயாவின் அம்மா குழாய் தண்ணீரைத் திருப்பினாள். தண்ணீர் சீறிக் கொட்டும் சத்தத்துக்கு நடுவே விஜயாவிடம் கிசுகிசுத்தாள்... “என்ன புள்ளே நீ. ஆள்வெச்சுத்தான் பார்த்துக் கணும்னு இப்படி அளும்புபண்றே? எனக்கு இப்படி ஆகிருந்தா நீ பார்க்க மாட்டியா?”

அரைபட்டிருந்த மாவை அள்ளி போசியில் போட்டவள் திரும்பிப் பார்த்தாள். முழங்கை வரைக்கும் அரிசிமாவு சாந்துபோல வழிந்தது.

“யார்னாலும் பார்ப்பேன். எல்லாத்தையும் செய்வேன். ஆனா அவங்களுக்கு என்னால செய்ய முடியாது.”

திடமாக ஒலித்த அவளது குரலைக் கேட்டுப் பதறினாள் விஜயாவின் அம்மா.

“சரி... சத்தம்போடாதடீ. செய்யாட்டியும் பரவாயில்லை. அவங்க காதுபட இப்படிப் பேசாத. பாவம் செத்துப் பிழைச்சுருக்காங்க.”

மாவின் அளவு குறைந்ததும், குழவி சுற்றும் ஓசை கடகடத்தது. எவர்சில்வர் பாத்திரத்தின் விளிம்பில் விரலைவைத்து மாவை ஒன்றுசேர்த்து அள்ளி போசியில் வழித்தாள்.

“இல்லைன்னு சொன்னேனா? என்னால செய்ய முடியாதுன்னுதான் சொல்றேன்.”

ஆட்டாங்கல்லை நிறுத்தியதும் ஓசை நின்றது.

“நீ என்னவோ கடுசா சொல்ற. எல்லாரும் என்னையத்தான் திட்டுவாங்க... `பொண்ணை எப்பிடி வளர்த்துருக்கா பார்’னு?” - குரலைத் தணித்து அங்கலாய்ப்புடன் சொன்னாள். விஜயா சன்னமாகச் சிரித்தாள்.

“உன்னைய ஒருத்தரும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்கம்மா. அப்படிச் சொன்னா நான் பதில் சொல்லிக்குவேன்.”

“எதை மனசுல வெச்சுட்டு நீ இப்படிப் பண்றேன்னு புரியுது புள்ளே.”

விஜயா பதில் சொல்லவில்லை. குழவியை வெளியில் எடுத்துவைத்துக் கழுவினாள்.

“மேகலா பிறக்கிறதுக்கு முன்னாடி என்னவோ வாய்க்குவந்தபடி பேசுனாங்கதான். கல்யாணமாகி நாலஞ்சு வருஷமா குழந்தை பிறக்கலைங்கிற விசனத்துல திட்டினாங்கதான். அதையெல்லாம் இன்னுமா மனசுல வெச்சுக்கிறது? பெரியவங்க தானே...” - ஆற்றாமையுடன் அருகில் நின்று கேட்டபோது, நிமிர்ந்து கண்களை நேருக்கு நேராகப் பார்த்துவிட்டு நகர்ந்தாள் விஜயா.

இதற்கு மேல் அவளிடம் பேச முடியாது என்று எண்ணியவளாக விஜயாவின் அம்மா வெளியே வந்தாள். உண்ணம்மாள் அவள் முகத்தையே கூர்ந்துபார்த்தாள். தொலைக்காட்சி சத்தத்தில் உள்ளே பேசியது கேட்டிருக்காது என்று நினைத்தவளாகக் கைகளைத் துடைத்தபடியே மறுபடியும் கட்டிலில் உட்கார்ந்தாள். உண்ணம் மாளின் பார்வை இப்போதும் அவளிடமே நிலைத்திருந்தது.

எங்கேயாவது நட்சத்திரம் தென்படுகிறதா என்று அண்ணாந்து பார்த்திருந்த இளங்கோ கண்ணாடியைக் கழற்றினான். தண்ணீர் சொம்புடன் திண்ணைக்கு வந்த விஜயா நைட்டி அணிந்திருந்தாள். இளங்கோவின் யோசனை கூடிய முகத்தைக் கூர்ந்து பார்த்தவள் மெதுவாகக் கேட்டாள்... “நாளைக்கு வந்துருவாங்களா?”

இளங்கோ பதில் சொல்லவில்லை. தென்னை யோலைகள் அசையாதிருந்தன. கருப்பக்கா வீட்டுக்குள் தொலைக்காட்சியின் சலனங்கள் தென்பட்டன. இந்தப் புழுக்கத்தில் உண்ணம்மாவால் தூங்கியிருக்க முடியாது என்று எண்ணியவன், அருகில் உட்கார்ந்த விஜயாவை நிமிர்ந்து பார்த்தான்.

“என்ன பதிலே வரலை?”
“எல்லாரும் உன்னையைத்தான் தப்பா பேசறாங்க புள்ளே.”

“அப்படியா?”

“கேட்கிறதுக்கு சங்கடமா இருக்கு. எல்லாத்தையும் இழுத்துப் போட்டுட்டுச் செய்யறவ இதுல மட்டும் ஏன் இவ்ளோ பிடிவாதமா இருக்கேன்னு திட்டுறாங்க.”

“ம்... திட்டுறாங்கதான். தெரியும்.”

“எனக்குப் புரியது. ஆனா, மத்தவியளுக்குத் தெரியாதுல.”

“மத்தவியளுக்கு எதுக்குத் தெரியணும்?”

காடாவிளக்குடன் பழவண்டி தெருமுனையில் திரும்பியது. வண்டி முழுக்கப் பழச் சீப்புகள். இத்தனை பழத்தை வைத்துக்கொண்டு இவன் என்ன செய்வான் என்று நினைத்தவனின் தோளைத் தட்டினாள் விஜயா.
 
“நாளைக்கு அவங்க யாராச்சும் வந்தா திருப்பி அனுப்பிருங்க. நானே பார்த்துக்கிறேன்.”

இளங்கோ பதில் சொல்லாது தலை குனிந்தான். முகத்தைத் துடைத்துவிட்டுக் கண்ணாடியை அணிந்தவன் ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த்தான். உண்ணம்மாள் தூங்கிவிட்டாளா?

கோலப்பொடியுடன் விஜயா கதவைத் திறந்தபோது விடிந்திருந்தது. காக்கைகள் தொடர்ந்து கரையும் ஓசை. சின்னதம்பி கடை வாசலில் பால் வண்டி நின்றது. நீலப்பெட்டிகளை அடுக்கும் சத்தம் கேட்கிறது.

அறைக்கதவைத் திறந்துகொண்டு கையில் செல்போனுடன் வெளியே வந்தான் இளங்கோ.

“இந்நேரத்துல யாருக்குடா போன் போடுற?” உண்ணம்மாள் தலையை உயர்த்திக் கேட்டாள்.

திண்ணைப் பேச்சு இவள் காதில் விழுந்திருக்குமோ? ஒரு கணம் தயங்கினான்.

“ `நர்ஸம்மாவை அனுப்புறேன்’னு சொன்னாங்க. அங்கதான் பேசலாம்னு…”

உண்ணம்மாள் முதுகை நிமிர்த்தினாள்.

“சித்த நிமித்தி உக்கார வைடா.”

தலையணைகளைச் சரித்து உட்கார வைத்ததும் புடவைத் தலைப்பை விசிறிப்போட்டாள். ஜன்னல் வழியாக வெளியே பார்த்தபடியே உரக்கச் சொன்னாள்.

“யார்னாலும் சீக்கிரமா புறப்பட்டு வரச் சொல்லு. ஒருத்தர் தயவும் எனக்குத் தேவையில்லை. அப்படி ஒண்ணும் நான் ரோஷம் கெட்டுப் போகலை.”

வாசற்கோலம் கச்சிதமாக விழுந்த திருப்தியுடன் தலைநிமிர்த்தினாள் விஜயா!

http://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  

 • Similar Content

  • By நவீனன்
   நாயகி - சிறுகதை
       ஜான் சுந்தர் - ஓவியங்கள்: ஸ்யாம்
    
   டிப்பியை ஸ்டீபன் அண்ணன்  ஊட்டியிலிருந்து எடுத்து வந்திருந்தார். யாரோ ‘`நல்ல குட்டி, ஜெர்மன் ஷெப்பெர்டு க்ராஸ்’’ என்றார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

   ``சாதி  நாயும் நாட்டு நாயும் சேர்ந்து போட்ட குட்டிடா’’ ஸ்டீபண்ணன் விளக்கினார். ``ஊட்டில  பூன, நாயி, மாடு அல்லாத்துக்குமே முடி அதிகமாத்தான் இருக்கும் இல்ல டீபண்ணா’’ என்றான் இளங்கோ. அவனுக்கு `ஸ்’ வரவில்லை. வேறு சிலவும் வராது.

   `பைஜாமா ஜிப்பா’வை `பைமாமா மிப்பா’ என்பான் `இங்க’ என்பதற்கு `இஞ்ச’ என்பான். `ம்ம்... சொட்டரோடவே பொறந்துட்டா குளுராதில்ல’’ டிப்பியின் நெற்றியைத் தடவிக் கொடுத்தேன். அது என் விரல்களை நக்கியது. அதன் மீசையரும்பு விரலில்படக் கூச்சமாக இருந்தது. ``புருபுரு  பண்ணுதுடா’’ என்றதும்  இளங்கோவும் டவுசரின் பின்புறம் கைகளைத் துடைத்துவிட்டு  ``இஞ்ச வா இஞ்ச வா’’ என்றவாறு கையை நீட்டினான். கறுத்த கோலிக்கண்கள் மின்ன அவனையும் நக்கியது டிப்பி. தேநீர்க்கடையில் புதுரொட்டி வந்து இறங்கும்போது வாங்கி, அதைப் பிட்டு உள்ளே பார்த்திருக்கிறீர்களா? அதுதான் டிப்பியின் நிறம். ஈரச்சந்தனம் காய்ந்து வெளுத்தாலும் அப்படித்தான் இருக்கும். ரொட்டியின் மேற்புறக்காவி சற்றே வளைந்து வெளுக்குமில்லையா? அதுதான் டிப்பியின் வயிற்றோரத்து நிறம். ஓடிவரும்போது வாழைப்பழத்தோல் காதுகள் இரண்டும் எழுந்தெழுந்து விழும். உயிரை விரித்து அணைத்துக் கொள்ளத் தூண்டும் அழகு.

   வீட்டில் என்னை `டிக்கா’ என்று கூப்பிடுவார்கள். `கிருஷ்ணமூர்த்தி’ எனப்படும் நபர் `கிட்டு’வாகி `கிட்டான்’ ஆவதுபோல என் தாய்மாமன் அவரோடு `லிப்டன் டீ’ கம்பெனியில் பணிபுரிந்த வெள்ளைக்கார தோஸ்த்தின் நினைவாக வைத்த `டிக்ரூஸ்’ என்ற பெயர் `டிக்கு’வாகி `டிக்கான்’ என்றானது. `டிக்கானும்  டிப்பியும்’ என்றால் பொருந்திப்போகிறதா இல்லையா? எனவே, நான் அதை  டிப்பி  என்று நினைத்துக் கொண்டிருக்க ஸ்டீபண்ணனோ `ட்டிப்பி’ என்றே விளித்தார். அதிலென்ன? நான் என் இஷ்டப்படி அழைத்தேன். மற்றவர்களையும் அப்படியே சொல்ல வைத்தேன்.
   ஸ்டீபண்ணனின் அம்மா, அக்காஆஞ்சி, தங்கைகளான, லல்லி, பெமிலா, சுகுணா, அப்புறம் சின்னவள் சிட்டு வரையிலுமான எல்லோரும் `ட்டிப்பி’ என்று `T’ போட்டு அழைக்க   நான் எனது வலுவான முயற்சியில் இளங்கோ, ரமேஷ், குணான், வீதிக்காரர்கள், அதைத்தாண்டி  பள்ளித் தோழர்கள், மளிகைக்கடை அண்ணாச்சி, டீக்கடை ஆறுமுகண்ணன், உப்புக்காரத் தாத்தா, கடலைக்கார பாய் , இஸ்திரிக்காரக்கா, இட்லி, ஆப்பம் விற்று வரும் அண்டாக்காரக்கா எல்லோரையும் `D’ போட்டு டிப்பி என்றழைக்க வைத்தேன்.

   அண்டாக்காரக்காவின் இட்லியை டிப்பிக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும், அந்தக்காவுக்கு டிப்பியைப் பிடித்திருந்தது குறித்து ஆச்சர்யமாக இருந்தது. டிப்பியை ஸ்டீபண்ணன்தான் வளர்க்கிறார் என்றாலும், அது எங்களுடையதும்தான். ஒட்டுச்சுவர்கொண்ட நடுத்தர வர்க்கத்தினரிடம் மிகுந்து கிடக்கும் ‘ஒண்ணுக்கொண்ணு ஆதரவு’,  `நேந்து கலந்து போறது’, `உன்னவிட்டா ஆரிருக்கா?’  போன்ற வாக்கியங்கள், தடித்த காம்பவுண்டு சுவர்களுக்குக் கிட்டாது.

   ஞாயிற்றுக்கிழமையானால் ஸ்டீபண்ணன் டிப்பியைக் குளிக்க வைப்பார். உதவிக்கு நானும் சுகுணாவும். துவைப்பதற்கான சோப்பை   நனைத்து நுரையைக் கிளப்பி அவர் தேய்க்க, நாங்கள் இருவரும் கீழே விழுகிற நுரையை அள்ளியள்ளி டிப்பியின் நெற்றி, முதுகு, தாடை, முன்னங்கால் மேலெல்லாம் ஒட்டவைத்து ரமணிக்கா வீட்டு வெள்ளை `புஸுபுஸு’ நாய் `ஷீலா’வின் தோற்றத்துக்கு மாற்றப் பார்ப்போம். அவ்வப்போது நாக்கை வெளியே தொங்கவிட்டு வாயைத் திறக்கும்  கணத்தில் டிப்பி பற்களைக்காட்டிச் சிரிப்பது போலிருக்கும். அசட்டுச் சிரிப்பு. அற்பருக்கும் ஞானிகள் வழங்கும் அதே சிரிப்பு. திறந்தே வைத்திருக்கும் வாயைத் திடுமென மூடும்போது கோபித்துக்கொள்வதுபோலவும் இருக்கும். எதிர்பாராத நேரத்தில் டிப்பி தனது மொத்த உடலையும் உதறும்.  நீரும் நுரையும் மூவர் மேலும் சிதறும். எளிய வாழ்வின் மகோன்னத அழகு பொங்கும் அந்தத் தருணத்தைப் பிடித்துவைத்துப் பார்த்தால் அரக்கு நிறத்தில் அரைக்கால் சட்டையணிந்த சிறுவன், கருநீலத்தில் வெள்ளை பூத்த பாவாடைச் சிறுமி, அவளது மடித்த சடை, அதை வெயில் கொஞ்சுவதால் கறுப்பிலிருந்து கசியும் ஓரச்செம்பட்டை, செம்மலர்ந்த ரிப்பன் பூக்கள், மௌனசாட்சியான துவைக்கிற கல், கல்லையே பிரதியெடுத்து நெஞ்சில் வைத்தாற்போல உழைப்பின் திரட்சியோடான வெற்றுமாரிளைஞன், பஞ்சும் பொன்னுமாயொரு கண்மின்னும் நாய்க்குட்டி, வெளி முழுக்கத் தெறிக்கும் நிறமிழந்த நீர்த்திசுக்கள், சோப்பு நுரை பூமியுருண்டைகள், அதிலோடும் ஏழு வண்ண நதி, இரண்டாய் பிளந்த தக்காளி தனது விதைகள் தெரியத் திறந்து மூடி திறந்து மூடி பறப்பதுபோல பறக்கும் பட்டாம்பூச்சி, இத்தனையும்  காட்சிப்படும்.

   டிப்பியின் மேலுள்ள எனதன்பை அதற்குப் புரியவைக்க நான் திட்டம் வகுத்துச் செயல்புரிந்தேன். தன்னுடைய பழைய பெல்ட்டை அறுத்து டிப்பியின் கழுத்துப் பட்டையாக்கியிருந்தார் ஸ்டீபண்ணன். நான் என் தலைமுடியிலிருந்த தேங்காயெண்ணைப் பிசுக்கை உள்ளங்கையில் தேய்த்தெடுத்துக் காய்ந்த விரிசல்களுடன் இருந்த பட்டையின் மேற்பரப்பு பளபளத்து மின்னும்வரை தேய்த்தேன். பக்கிளைத் தாண்டித் தொங்கிக் கொண்டிருந்த பெல்ட் நுனிக்கு சுகுணாவின் ஜடையிலிருந்த `லப்பர் பேண்டை’ கழற்றிப் போட்டுக் கம்பீரத்தை கனகம்பீரமாக்கினேன். கறிக்குழம்பு நாள்களில் எலும்புகளைச் சேகரித்தேன். பந்தை வீசி, அதைக் கவ்விவரப் பழக்கினேன். பத்துப் பைசாக்களை டிப்பியின் வாலைப் பிடித்து ஆட்டும் வருக்கிகளாக மாற்றினேன். கையை டிப்பியின் வாய்க்குள் மணிக்கட்டுவரை விட்டு எடுத்தேன். இளங்கோ கண்களை விரிப்பான். `‘எஞ்செ நெஜமா கடிக்கலையா?’’

   ஆள்காட்டி விரல்கொக்கியால் என் வாயோரத்தைக் காதுவரை இழுத்துக் கண்ணாடியில் பார்க்க முயன்றபோது தலையில் கொட்டு விழுந்தது. அம்மா! ``டிப்பிக்கு கடவாப்பல்லு மூணும் ஒண்ணா சேந்திருக்கும்மா! நமக்கெல்லாம் தனித்தனியா தான இருக்கு?’’ மல்லாந்தபடி டிப்பி என்னோடு விளையாடிக்கொண்டிருந்தபோது அதன் வாயின் மேலண்ணம் ஸ்டீபண்ணனின் வயிறு கணக்காக கட்டுக்கட்டாய் வரியோடித் தெரிந்தது. மைதானத்தில், மரமேறுவதில், மல்லுக்கட்டுவதில் ஆகும் என் காயங்களை நக்கி நக்கியே ஆற்றிவிடும் டிப்பி.

    ஸ்டீபண்ணன் மீது எனக்குப் பொறாமையாக இருந்தது. இன்றுவரை எனக்கு நாக்கை மடித்து சீழ்க்கையடிக்கத் தெரியவில்லை. ரமேஷ்கூட அடிக்கிறான்.  ஸ்டீபண்ணன் தனது சீழ்க்கை சப்தத்தில் டிப்பியை மயக்கி வைத்திருந்தார். பக்கத்தில் இருப்பவர் காது கிழிய `ஃபீல்ல்க்க்க்க்’கென ஸ்டீபண்ணன் சீழ்க்கையடித்தால், எங்கிருந்தாலும் புழுதியெழப் பறந்துவரும் டிப்பி. அர்ச்சுனனைப் பிடித்தபோதுதான் டிப்பி வீதியின் செல்ல நாயானது. பித்தளைப் பாத்திரங்களைத் திருடிக்கொண்டு ஓடிய அவனைக் கவ்விய அது ஸ்டீபண்ணன் வந்து ``விடுடீ பாப்பா’’ என்று சொல்லும்வரை விடவில்லை. ``ச்சே! அவன் சொல்றவரைக்கும் விடல பாருங்க, என்னா அறிவு’’ என்றார்கள். தவிர அர்ச்சுனின் கையைக் கவ்வியிருந்தபோது அவளது உறுமல் பயங்கரமாயிருந்தது. எனக்கு அவளருகில் போகவே பயமாயிருந்தது. மேலும் என்னைப் பார்த்தாளா என்பதிலும் குழப்பம். ``பட்டேல் ரோட்லருந்து இங்க வந்து திருடுற அளவுக்குப் பெரியாளாயிட்ட... ஏண்டா?’’ என்று மிரட்டிய கையோடு ஓங்கி அவனை அறைந்தார் போலீஸ்காரர்; பின்பு டிப்பியின் கழுத்தைத் தடவி ஒரு பாராட்டும். பட்டறைக்கார ராமண்ணன் ``டேஷனுக்கு வேணா கூட்டுப் போங் சார். கொலகாரனையெல்லாம் புடிச்சுக் கொதறி வெச்சுரும். பயங்கர அறிவு அதுக்கு’’ என்றார். டிப்பியின் படம் செய்தித்தாளில் வந்தது.

    வ.உ.சி மைதானத்தில் நாய்கள் கண்காட்சி. டிப்பியைக் கூட்டிக்கொண்டு அங்கே போகலாம் என்று ஸ்டீபண்ணன் சொல்ல, கிளம்பிவிட்டோம். ஹையோ! அங்கே எத்தனை வகை நாய்கள். ரமணியக்கா வீட்டிலிருந்ததுபோல வெள்ளை புஸுபுஸு நாய்கள் நிறைய இருந்தன. ரமணியக்கா வீட்டின் உள்ளேயே அந்த புஸுபுஸூ நாயைச் சங்கிலி போட்டுக் கட்டிவைத்து வளர்ப்பதால் கிட்டே போய்ப் பார்க்க முடிந்ததில்லை. அதற்கென்று தனியாக சோப்பு, பவுடரெல்லாம் உண்டாம். ஷீலா அவ்வப்போது சங்கிலியுரச ரோட்டுக்கு ஓடி வந்துவிடும். பின்னாலேயே ரமணியக்கா புருசனோ, மகனோ ஓடி வருவார்கள். ஷீலா, `பொமரேனியன்’ சாதி என்பதை  நாய்கள் கண்காட்சியில்தான் தெரிந்துகொண்டேன். அப்புறம் `லேப்ரடார்’ சாதி அழகுக்குட்டிகளையும் பார்த்தோம். சீமாட்டிகளின் கைப்பைகளைப் போலிருந்த பொடிக்குட்டி நாய்கள், சீமாட்டிகளைப் போலவே மிதப்பான பாவனையுடனான நாய்கள்,  உடலெங்கும் மை சிந்திவிட்டதுபோலிருந்த நாய்கள், சப்பை மூக்கன்கள், கிழட்டுத்தோலன்கள், மனிதத் தொடையிலிருந்து அரை கிலோ கறியைப் பிரித்தெடுக்கும் `காவல்வீரன் டாபர்மேன்’கள். `கொரவளச் சங்கயே கவ்விப்போடும்’ என்றார் `வெள்ளை வேட்டி’ தாத்தா. சில நாய்களுக்கு அவற்றின் எஜமானர்கள்போலவே முகமும் இருந்ததைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். சீனர் போலிருந்த ஒருவரது இரண்டு நாய்களுக்கும் கண்கள் இடுங்கி இருந்தது மட்டுமல்லாது, அவரைப் போலவே பின்புறத்தை ஆட்டி ஆட்டி நடந்தன.

   ``நெஜமாவே அவன் சைனாக்காரன்தான்டா... பல் டாக்டரு’’ என்றார் ஸ்டீபண்ணன்.  கறுத்துப் பெருத்த போலீஸ்காரரின் `புல்டாக்’ ஒன்று தனது ஒற்றைப் புருவத்தை மேலே உயர்த்தி முறைத்ததாகச் சுகுணா சொன்னாள். இருக்கும் என்றுதான் நானும் நினைத்தேன். கறுத்த முகத்தின்  இரண்டு புருவங்களின் மேலும் ஒவ்வொரு ஆரஞ்சு வண்ணப்புள்ளிகளைக்கொண்ட நாயைப் பார்த்தபோது ஏனோ பயமாயிருந்தது. முகம் முழுக்க முடியோடிருந்த  சடைநாய்க்குட்டிகளைப் பார்க்கப் பார்க்க ரொம்ப வேடிக்கையாக இருந்தது. சுகுணாவுக்கு ஒரே சிரிப்பு. குள்ளமான நாய்க்குட்டிகளையும் பார்த்தோம். தரையோடு ஒட்டிய நீளக்குள்ளம். உருண்டுவிடாமலிருக்க தடுப்புவைத்த மாதிரி குட்டிக் கால்கள், நீளக் காது. ``ச்சே... காசிருந்தா வாங்கலாம்... இல்ல பையா’’ என்றாள் சுகுணா. அந்தக் குட்டியின் சாதிப் பெயர் மட்டும் விளங்கவில்லை. இங்கிலீஷ் டீச்சர் ராஜேஸ்வரி `Does not’  என்று எழுதிவிட்டு அதை `டஷின்ட்’ என்று படிப்பார்கள். எனக்கு ஒரே குழப்பம். அந்த மாதிரிதான் ஏதோ சொன்னார்கள். நண்பர்களிடம் குறிப்பிட்டுச் சொல்ல `குள்ள நாய்’ என்பது போதாதா?

   ஒலிப்பெருக்கியில் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ளப்போகும்  நாய்களின் பெயர்களை உரிமையாளர்கள் பெயரோடு அறிவித்தார்கள். நான்கைந்து ஜோடிகளுக்குப் பிறகு ‘ஸ்டீபன் – ட்டிப்பி’  என்று அறிவித்தார்கள். `ட்டிப்பி’ என்று  சொன்னதும் காதுகளை விடைத்துப் பின்பு இயல்பானது டிப்பி. ஸ்டீபண்ணன் டிப்பிக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஓடுபாதையின் எண்ணைக் கேட்டுவந்தார். நான்காம் நம்பர். போட்டிக்கு நின்றிருந்த நாய்களையும் உடனிருந்த பயிற்றுநர்களையும் பார்த்தாலே நெஞ்சு நடுங்கியது. டிப்பியைத் தவிர, எல்லாமே உயர் ரக சாதிநாய்கள் என்பது மட்டுமல்ல; டிப்பி மட்டும்தான் `பொம்பளப் புள்ள’. மற்ற எல்லோருமே `தடிப்பசங்க’ளாயிருந்தான்கள்.   கொடும் வெயில். சில நாய்களின் வாயிலிருந்து நீரொழுகியது. பயிற்றுநர்கள் அனைவரும்  பந்தயத்தில் கலந்துகொள்ளும் நாய்களுக்கு எதிர்த்திசையிலிருந்து அவற்றை அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். ஸ்டீபண்ணன் என்னிடம் டிப்பியைப் பிடித்துக் கொள்ளச்சொல்லிவிட்டு எதிர்த்திசைக்குப் போய் நின்றார். எங்களுக்குப் பின்னால்  வேடிக்கை பார்க்க நின்றிருந்தவர்கள் எங்களை ``சொறி நாயையெல்லாம் எதுக்குடா தம்பி கூட்டிட்டு வர்றீங்க? போலீஸ் நாயிங்ககூட ரேஸ் விட்டு ஜெயிக்கவா?’’ என்று கிண்டல் செய்து சிரித்தார்கள். கொடியசைத்ததும் பயிற்றுநர்கள் தங்கள் நாய்களை அழைக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். நான் அரைமண்டியில் அமர்ந்து டிப்பியின் பின் பகுதியைப் பிடித்துக் கொண்டேன். அதன் காதருகில் சுகுணா ரகசியக் குரலில் ``எப்படியாச்சும் ஜெயிச்சுரு டிப்பி’’ என்றாள். மற்ற நாய்கள் எதிரிலிருந்த தங்களது எஜமானர்களையே பார்த்தபடி துள்ளலோடிருக்க, டிப்பியோ ஸ்டீபண்ணனைக் கவனித்ததாகவே தெரியவில்லை. பக்கத்து நாய்களையும் சுற்றியிருந்தவர்களையும் மிரள மிரள வேடிக்கை பார்த்தபடியிருந்தது. அதன் வாலை பின்னங்கால்களுக்கிடையே தழைத்து வைத்திருந்ததைப் பார்த்த எனக்குக் கவலையாக இருந்தது. மைதானத்தைச் சுற்றியிருந்தவர்கள் எழுப்பிய சப்தத்தில் மிரண்டிருக்கிறதோ என்னவோ?

   `ரெடி ரெடி’ என்றார்கள். `ப்ப்ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்’ரென்ற விசிலோடு சிவப்புத்துண்டை ஆட்டி சமிக்ஞையும் கொடுத்தாயிற்று. நாய்கள் திமுதிமுவென ஓட எழுந்த புழுதியிலும் மைதானத்து ஜனங்களின் `கமான்...கமான்... ரோஸி’ போன்ற கூச்சல்களிலும் ஒன்றுமே புரியவில்லை. சுகுணாதான் எகிறியெகிறிக் குதித்தவாறு ``ஏய்... ட்டிப்பி ஓடு...அட... ஓடு சனியனே’’ என்று அலறினாள். மறு முனையிலிருந்த ஸ்டீபண்ணன். ``ட்டிப்பி...ட்டிப்பி’’ என்று கத்தவும் செய்தார். கடைத்தெரு பைத்தியம்போல சாவகாசமாய் நடந்த  டிப்பி, ஓடுபாதையைவிட்டு விலகப்போன நொடியில் ஸ்டீபண்ணன் தயக்கத்தைத் துறந்து நடுவிரலையும் கட்டைவிரலையும் ஒன்றுசேர்த்து நாக்குக்கடியில் நுழைத்து மடக்கி `ஃபீல்ல்க்க்க்க்’கென சீழ்க்கையை அடித்தவுடன் டிப்பி அனிச்சையாக துள்ளித் தெறித்ததைப் பார்க்க வேண்டுமே... அது ஸ்டீபண்ணனை எப்போது அடைந்திருந்தது என்பதே தெரியவில்லை. நொடிகளில் இவையெல்லாம் நடந்து முடிந்திருக்க மைதானமே ஆர்ப்பரித்துக் கரங்களைத் தட்டியது. பலத்த கூச்சல்களுகிடையில் ‘ஸ்டீபன் – ட்டிப்பி... முதல் பரிசு ஸ்டீபன் – ட்டிப்பி’  என்ற அறிவிப்பைக் கேட்டதும் மாரியாத்தா வந்திறங்கியதுபோல் ``ஏய்....ஏய்...’’ எனத் தன்னை மறந்து வீறிட்டாள் சுகுணா. எனக்குச் சந்தோஷமும் அழுகையும் கலந்துவர என்ன செய்வதென்று புரியாமல் விழித்தேன். `டிக்கா- டிப்பி... முதல் பரிசு டிக்கா- டிப்பி’ என்று அறிவித்திருந்தால் ஆகாதா?  ஸ்டீபண்ணனின் ஒரு கை வெற்றிக்கோப்பையை ஏந்திப் பிடித்தபடியும் மறு கை டிப்பியின் தலையைத் தடவியபடியுமிருக்க நானும் சுகுணாவும் அருகில் அமர்ந்திருந்த டிப்பியின் படம் இன்னொரு முறையும் செய்தித்தாளில் வெளியானது. 

   குரங்கு பெடல்போட்டு சைக்கிளோட்டிக் கீழே விழுந்தால், முழங்கையில் நமக்கு ஆகும் சிராய்ப்பின் மேல்த்தோல் இரண்டு மூன்று நாள் கழிந்தவுடன் கறுத்துத் தடித்து எழும்பும்தானே? அதை இன்னும் இரண்டு மூன்று நாள்களுக்கு அப்புறம் அரிப்புத் தாங்காமல் பிய்த்து எடுத்தால் இளஞ்சிவப்பில் இருக்குமே, அப்படி  ஒன்றிரண்டு காயங்கள் டிப்பியின் முதுகில்  கொத்துக்கொத்தாய் முடியில்லாமல் செந்தோலாய்த் தெரிந்தன.  எல்லாம் ஈரக்காயங்கள். டிப்பி சைக்கிளா ஓட்டுகிறது? அப்படியே போனாலும் முதுகில் எப்படி? இளங்கோதான் மல்லாக்க விழுவான். டிப்பிக்கெல்லாம் ஆனாலும், வயிற்றில்தானே ஆகும்? ஆஞ்சிக்காவிடம் டிப்பியின் புண் பற்றிச் சொன்னபோது ``ஆங் அது வண்டுக்கடிதான் வேப்பெண்ண வாங்கி ஊத்தி விடுங்கடா சரியாயிடும்’’ என்றாள். அதே மாதிரி வாங்கி `நல்லா சொதம்ப’ ஊற்றிவிட்ட நான்கைந்து நாள்களில் காய்ந்து, வழித்தடத்தில் புல் முளைத்த மாதிரியிருந்தது. அப்புறம் புண்ணிருந்த இடத்தையே காணோம்.  எப்போதாவது டிப்பி தன் வாலைத் தானே கடித்தபடி வெறிகொண்டு சுற்றினாலோ, எட்டாத முதுகுக்குத் தனது கோரைப்பல்லைக் காட்டி உறுமினாலோ ஆஞ்சிக்கா வேப்பமரத்தடி நிழலில் சணல் சாக்குப்பையை விரித்துப்போட்டு உட்கார்ந்து ``வாடி ட்டிப்பி.. வந்து படு’’ என்பாள். அவள் கையில் ஹார்லிக்ஸ் பாட்டிலின் தகர மூடியில் கொஞ்சம் மண்ணெண்ணை இருக்கும். டிப்பியும் நல்லபிள்ளையாக வந்து அவளது தொடையில் தலைவைத்துப் படுத்துக்கொள்ளும். பெண்கள் நம் தலைமுடிக்குள் கையை  நுழைத்து நகத்தால் நிரவி, விரலால் தேடி ஈரையோ, பேனையோ, ஒட்டுக்குஞ்சையோ நசுக்கியபடியே பேச்சுக் கொடுக்கும்போது, கண்கள் நிலைகுத்திக் கொள்ளுமே... அது என்னவகை போதை? போதைக்கு அடிமையாகிவிட்ட டிப்பியும் ஆஞ்சிக்காவின் மடியில் மல்லாந்து படுத்துக் கொண்டு கண்களை `டோரி’யாக்கிப் பல்லிளித்தபடி தியான நிலைக்குத் தயாராகும். ஆஞ்சிக்கா அதன் காது மடல்களைப் பிடித்து உட்பக்கம் வெளிவரும்படி விரிப்பாள். உள்ளே கும்பலாய், குடும்பமாய், தனித்தீனியில் தடித்துப்பெருத்ததாய்,  விதவிதமான அளவுகளில் ஒட்டுப் பொட்டுகளைப்போல மொய்த்துக் கிடக்கும் உண்ணிப்பூச்சிகள். அழுக்குப்பழுப்பும் அழுக்குப் பச்சையும் கலந்த நிறத்தில் தடிமனான தோலைக்கொண்ட உண்ணிகள், டிப்பியின் கால்விரல்களுக்கிடையில், காதுகளில், பிடறி முடியில், முதுகில், தாடையில், வயிற்றில் அங்கிங்கெனாதபடி உடலெங்கும் நிறைந்திருக்கும்.  அவைகளைப் பிய்த்தெடுத்து  தகர மூடி மண்ணெண்ணையில் ஊறவைத்துச் சேகரித்தால் மம்மானியமாய்ச் சேரும். உண்ணி கடித்த காயத்துக்கும் ஒரு பொட்டு மண்ணெண்ணையே மருந்து.  நாயுண்ணிகளை, இளங்கோ விதவிதமாய்க் கொல்வான். அடியாட்கள் மாதிரியான `ஆள்காட்டி’, ’கட்டை’ ஆகிய இரண்டு விரல்களால் அழுத்தி `புளிச்’சென்று ரத்தம் தெறிக்க நசுக்கிக்கொல்வது, கல்லில் வைத்து சுத்தியலால் நச்சுவது, காகிதக்கப்பல் செய்து நாயுண்ணிகளை அதிலேற்றி சாக்கடையில் மிதக்கவிட்டு  மூழ்கடிப்பது, எறும்பூறும் இடங்களில் அவைகளை மல்லாக்கப்போட்டு அவற்றை இழுத்துக்கொண்டு எறும்புகள் `ஊர்வலம்’ போவதைப் பார்ப்பது போன்ற கொடூரங்களில் அவன் நிபுணன்.  நான் நல்லவன். தகரமூடியை அப்படியே பற்றவைத்து எரிப்பதோடு சரி. வேறு நுட்பங்கள் தெரியாது.

   இந்த ஒரு `வாரமாவே’ நான் ’வெளாட’ போகவில்லை. காரணம், நான் இளங்கோவிடம் `பேசறதில்ல’ காரணம், அவன்மீது பயங்கர `கடுப்புல’ இருந்தேன். அவனுடைய `கோலிகுண்டுக’, `சிகுரேட்டு அட்ட’, `டீப்ட்டி அட்ட’, `டீச்சுக்கல்லு’, ’பெத்தவாட்ஸ் பொம்பரம்’, `மசே மசே லப்பர் பந்து’ போன்ற சேகரிப்புகள் எல்லாவற்றையும் எங்கு ஒளித்து வைத்திருப்பான் என்று எனக்குத் தெரியும். `அவங்க அவ்வா’ படுத்துக்கொள்கிற கட்டிலின் கீழே மண்பானையில் கொஞ்சமும் பிரிட்டானியா பிஸ்கெட் அட்டைப்பெட்டியில் கொஞ்சமுமாக ஒளித்து வைத்திருக்கிறான். `அத்தனக்கிம் சீமண்ணய ஊத்தி பத்த வெச்சறலாமா’ என்கிற அளவுக்குக் கோபம். இத்தனைக்கும் அவன் பார்த்ததைத்தான் சொன்னான் என்றாலும், நாகரிகமில்லாமல் இப்படியா பொட்டப்புள்ள முன்னாடி பேசுவாங்க? ச்சே! கருமம்... கொஞ்சம்கூட வெட்கமில்லாமல் அவளிடமே `ஏ சுகு.. ரோட்டுக்கு ஓடிப்போயி பாருப்பா, அண்ணாச்சியோட கருப்பு நாயி உங்க டிப்பிய புடிச்சு டொக்குப் போட்டுட்டுருக்கு’ என்று சொல்லிவிட்டான். `அய்யே... ச்சீ கருமம் போ பையா’ என்றவள் வீட்டுக்குள் ஓடிவிட்டாள். நான் இவனைப் பயங்கரமாக முறைத்துப் பார்க்கத் திரும்பினேன். அவன் அங்கு இல்லை. ஓடிவிட்டான். நானும் ஓடினேன் ரோட்டுக்கு.

   குணானும்,ரமேஷும் என் பம்பரத்துக்குக் குத்து வைத்துக்கொண்டிருக்கும்போது, எங்களைத் தாண்டி இளங்கோ ‘`டேய் குணா இஞ்ச வா... இஞ்ச வா, அஞ்ச வந்து பாரு’’ என்று சொல்லியவாறே வெகு வேகமாக ஓடினான். அவனது இடக்கையில் பெத்தவாட்ஸும், வலக்கையில் சாட்டை நுனியுமிருக்க மறு நுனியில் மாட்டியிருந்த சோடாமூடித் தரையில் உரசும்போது ஒரு குரலிலும் தார்ரோட்டில் உரசும்போது இன்னொரு குரலிலும் அலறிக்கொண்டே போனது. சன்ன அலறல்.  என் பம்பரத்துக்கு இன்னும் நாலைந்து குத்துவைக்க வேண்டிய குணான் அப்படியே போட்டுவிட்டு ஓட, பின்னாலேயே ரமேஷும் ஓடினான். எனது பம்பரத்தை `தப்பிச்சடா ராஜா’ என்றபடி எடுத்துச் சாட்டையை ஓடியபடியே சுற்றி, ஓடியபடியே டவுசர் பாக்கெட்டில் வைத்தேன். அது `ச்சுஞ்சு’ மணியில் இடிக்கவும் ஓடியபடியே கையைவிட்டு இடம் மாற்றி வைத்தேன். ரோட்டோரம் கூட்டமாக இருந்தது. `அப்பிடியே நசுக்கிட்டுப் போயிட்டான் லாரிக்காரன்’ யார் யாரோ பேசிக் கொண்டார்கள். `ச்சேய்... கண்கொண்டு பாக்க முடியல, இதான் நான் எதையிம் வலத்தறது கெடயாது’ என்றார்கள். நான் கூட்டத்துக்குள் புகுந்தேன். `இப்பத்தான் குட்டி போட்டுச்சாம்’. கூட்டத்தின் கால்களுக்கிடையில் ரத்தச்சகதி தெரிய எனக்குத் தொண்டையெல்லாம் வறண்டு இருதயம் தொப்பு தொப்பென்று அடித்துக்கொள்கிற சப்தம் தலைக்குள்  கேட்கிறது.

   `எப்பூமே இந்தப் பக்கம் வராதாம்’ பூத்துவாலையை உதிரக்குழம்பில் நனைத்துப்போட்டதுபோல் ஏதோ கிடக்க நான் வேகமாக வெளியே வந்துவிட்டேன்.

   ``அப்படி ஓரமா இழுத்துப் போட்டுரு ஸ்டீபா, ஏன்னா, வர்ற வண்டியெல்லாம் திரும்ப ஏறும்’’ கடலைக்கார பாய்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார். ஸ்டீபண்ணன் இங்குதான் இருக்கிறாரா? இதை எப்படித் தாங்குவார்? எனக்கு அழுகை வந்தது. மெல்ல விசும்பினேன். ஏதோ பெண் குரல் அலறும் சத்தம் கேட்டது. சுகுணாவா? வேறு மாதிரி இருக்கிறது. சுகுணா அழுது நான் கேட்டதில்லையே... இல்லை இல்லை கேட்டிருக்கிறேன். அவளுடைய அம்மா எதற்காகவோ வாசலில் வைத்து கருநொச்சிக்குச்சியால்  அடித்தபோது அழுதாளே... ``ஷீலூ... அய்யோ ஷீலுக்குட்டீ’’ அலறல் கூடுதலாகி வீறிட்டபோது ``விடுக்கா  என்ன பண்றது. அதோட நேரம் முடிஞ்சது, போயிருச்சு’’ என்றது ஸ்டீபண்ணன்தான். பரவாயில்லை, ஸ்டீபண்ணன் கவலைப்படாமல் இருக்கிறார்.

   ``அய்யோ இன்னும் கண்ணே தொறக்கலியே, அதுங்க என்ன பாவம் பண்ணுச்சு கடவுளே’’

    யாரது? ``யார்ரா அழுகுறாங்க’’  ரமேஷிடம் கேட்டேன். ``ம்ம்... டீ.விக்காரக்கா’’ என்றான் அவன். என்னது ரமணியக்கா அழுகிறதா? ஓஹோ, அடக்கடவுளே! அப்போ அது டிப்பியில்லையா? நான் கூட்டத்துக்குள் மறுபடி நுழைந்து நின்று கவனித்தேன். ரத்தத்துவாலைதான் கிடந்தது. சந்தனமில்லை.வெள்ளை. உண்ணிப்பாகப் பார்க்கவும் புரிந்தது. அது ரமணியக்காவின் வெள்ளை புஸுபுஸு நாய் `பொமரேனியன்’ ஷீலா. ஸ்டீபண்ணன் கூட்டத்திலிருந்து வெளியே வந்து விலகி நின்று சீழ்க்கையடித்தார்.

   கொஞ்ச நேரம் கழித்து ஓட்டமும் நடையுமாக டிப்பி வந்தது. மெல்லிய தளர்வோடான நடை. ஸ்டீபண்ணன் மண்டியிட்டமர்ந்தார். ``வாடா பாப்பா’’ டிப்பியை முத்தமிட்டார். குழந்தையைக் கொஞ்சுவதுபோல் கொஞ்சிக்கொண்டே இருந்தவர் அழத்துவங்கினார். ``பாவம்டா பாப்பா’’ என்பது கேட்டது. ``விடுங்க விடுங்க அவன் பேசட்டும் விடுங்க’’ கடலைக்கார பாய் யாரும் அவர்களுக்கிடையில் போக வேண்டாம் என்பதைத்தான் அப்படிச் சொன்னார் போலிருக்கிறது. எல்லோரும் தள்ளியிருந்தே பார்த்தார்கள். டிப்பியை ஷீலாவின் உடலருகே கூட்டிப்போனார். டிப்பி முகர்ந்துவிட்டு இவரைப் பார்த்து ஊதாங்குழல் அனத்தியது போல வினோதமாகக் காற்றை வெளியே விட்டது. ஸ்டீபண்ணன் கேவிய சப்தம் கேட்டு ரமணியக்கா திரும்பவும் அழ ஆரம்பித்தது. ரமணியக்கா வீட்டுக்குள் கொஞ்சம் பேர் போனார்கள். `சின்னப்பசங்கள்ளாம் வெளிய நில்லுங்களேண்டா’ என்றார் அண்ணாச்சி.  நால்வரும் நின்றோம்.

   குணானும், ரமேஷும் `வெளாட்லாம் வாடா’ என்றதும் போனேன். எப்போது இளங்கோவை மன்னித்தேன்? எப்போது அவனும் விளையாட வந்தான்? நானும் கவனிக்கவில்லை. அவனும் மன்னிப்பைக் கேட்கவில்லை. ப்ச் பரவாயில்லை. என் பம்பரத்துக்கு இன்னும் ஐந்து குத்துகள் பாக்கி என்பதை குணான் மறக்கவில்லையா? அது மாதிரிதான் இதுவும். அரைக்கால் சட்டையின் இடது பையிலிருந்த கடலை உருண்டைகளை வெளியே எடுத்தேன்.  நான்கு. ஒன்றை வாய்க்குள் போட்டு உடனே வெளியே எடுத்து அதில் ஒட்டிக்கொண்டிருந்த காக்கி நூலைப் பிரித்து எடுத்துவிட்டு திரும்பவும் உள்ளே போட்டேன். கையிலிருந்ததில் ஒன்றை டவுசர் பைக்குள் அனுப்பி வேறு ஏதாவது நூல் இருந்தால் பிடித்துவரப் பணித்தேன். இன்னொன்று ரமேஷுக்கு. மீதமொன்றை குணானிடம் கொடுத்து இளங்கோவைக் காட்டி `அவனுக்குப் பாதி குடுத்துருடா’ என்றேன் பெரிய மனதோடு. ஆனாலும், இந்த இளங்கோ `அபீட்’ டை மெதுவாக எடுக்கிறானா? நான் அவசர அவசரமாக ‘தில்லான்’ எடுக்கும்போது என் பம்பரம் `தக்கடத்தை’யென குப்புறப்படுத்துக் கொண்டது. இந்த முறையும்  நான்தான் `மாட்டி’, என் பம்பரம்தான் `சக்கை’. அய்யோ! இந்த `கர’த்திலிருந்து அந்தக் `கரம்’வரை சாத்தி சாத்தி கட்டையையே சொறிக்கட்டையாக்கி விடுவான்கள். இளங்கோவின் `பெத்தவாட்ஸ்’ தேர் மாதிரி. அது சுற்றிக்கொண்டிருக்கிறதா? நின்று கொண்டிருக்கிறதா? என்று சந்தேகப்படும் வகையில் `ச்சும்மா’ நின்று `ரொங்’கும். பெத்தவாட்ஸும் அப்படித்தான். `பெத்தவாட்ஸ்’ என்றால் என்ன அர்த்தம்? யாருக்குத் தெரியும்? ரமேஷ்தான் அப்படிச் சொன்னான். சராசரியைவிட பெருத்த அதைப் பார்க்கும்போது தோன்றிய பெயர் `பெத்தவாட்ஸ்’! அவ்வளவுதான். மும்முரமாய் விளையாடிக்கொண்டிருந்த நாங்கள்,  சுகுணாவின் `ஹை’ என்ற கூச்சலுக்குத் திரும்பினோம். ஸ்டீபண்ணன் கைகளில்  நெளியும் பால்ப்பைகள்போல  இரண்டு மூன்று குட்டிகள். சுகுணா அவற்றைத் துள்ளிப் பிடிக்க முயன்று கொண்டிருந்தாள். அவள் குதிக்கும்போதெல்லாம் அனிச்சையாகக் கைகளை உயர்த்திய ஸ்டீபண்ணனின் கவனமெல்லாம் டிப்பியின் மீதிருந்தது. `பொதுபொது’ வெள்ளைக் குட்டிகளைப் பார்த்தவுடன் இளங்கோ, `ணா ணா  எனக்கொண்ணு தாண்ணா’ என்று  இறைஞ்சினான். குட்டிகளைப் பார்த்தால் அப்படிக் கத்தியாவது வாங்கிவிடுவதுதான் நியாயம் என்று எனக்கும் தோன்றியது.

   இடுப்பிலிருந்து இறங்கும் டவுசரை மேலே இழுத்துவிட்ட ரமேஷ் ``கண்ணு தொற ஹேய் கண்ணு தொற குட்டீ’’ என்றபடியே நடந்தான். அவைகளின் கண்களை மூடி ஊசி நூலால் தைத்து விட்ட மாதிரி பாவமாய் இருக்கிறது. அந்த இடத்தில் விரலால் நிரவி முடிச்சைத் தேடிப் பிடித்து உருவிவிட்டால், கண் முழித்துவிடும் போல் தோன்ற நான் எட்டித் தொடப் பார்த்தேன். இந்த  முறையும் அனிச்சை உயர்த்தல். ஸ்டீபண்ணன் வீட்டை நெருங்கியதும் டிப்பி கொஞ்சம் வேகமாக உள்ளே போனது. நான் இன்னும் டிப்பியின் குட்டிகளைப் பார்க்க வில்லை. ஐந்து குட்டிகளைப் போட்ட  டிப்பி அதிலொரு குட்டியைக் கடித்துத் தின்றுவிட்டது என்று சுகுணா சொன்னதிலிருந்து பயமாய் இருந்தது. அம்மாவிடம் கேட்டதற்கு ``அதுதான் அதுக்குப் பிரசவ மருந்து’’ என்றது எனக்கு சரியாகப் புரியவில்லை. பயம்தான் கூடுதலானது. அம்மா என்னைக் கடித்துத் தின்றிருந்தால்? அய்யோ... கடவுளே! டிப்பியைப் போலில்லாமல் நல்ல அம்மாவைக் கொடுத்தாயே! டிப்பியின் குட்டிகள், கறுப்பு கலந்த சாம்பல், செம்பழுப்பு, சந்தனம், கறுப்பும் சந்தனமும்  என்பதாக ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறத்தில் இருந்தன. டிப்பி  அவைகளுக்கு நடுவில் போய்ப் படுத்துக் கொண்டது. ஸ்டீபண்ணன் தயங்கியபடியே ஷீலாவின் மூன்று குட்டிகளையும் அதன் அருகே விட்டார். டிப்பியின் குட்டிகள் அதன் மார்க்காம்புகளைத்  தேடி முண்டின. ஷீலாவின் குட்டிகள் சாக்குப்பையிலிருந்து திசைக்கொன்றாய் தரைக்குத் தவழ்ந்தன. ஸ்டீபண்ணன் அவைகளை எடுத்துத் திரும்பவும் டிப்பியின் வயிற்றுக்கருகே கொண்டு போனார். டிப்பி அரை வினாடிக்கும் குறைவாய் கோரைப்பல்லைக் காட்டி `ட்ட்ர்ர்ர்ர்’ என்றது. ரமேஷ் பயந்துவிட்டான். ``பாவம்டா பாப்பா’’ கெஞ்சினார் ஸ்டீபண்ணன். பின்னாலிருந்து ``ஏய்... என்னடி திமிரா? கொழுப்புதான உனக்கு? எங்க தள்ளு ஸ்டீபா’’ என்றபடி வந்த ஆஞ்சிக்கா ஷீலாவின் குட்டிகளை எடுத்து டிப்பியின் இரண்டு குட்டிகளுக்கிடையே நுழைக்கப் பார்த்தாள். ஆஞ்சிக்காவைப் பார்த்த டிப்பி இப்போதும் ஊதாங்குழல் அனத்துவது போல வினோத சப்தமெழுப்பி புருவங்களைச்  சேர்த்து நெற்றிக்குக் கூப்பியெழுப்பி, இமைகளைத் தாழ்த்தி, கண்களை இடுக்கி மின்ன வைத்து, பின்பு விரித்து விசித்திரமாக ஏதேதோ காட்டியது. ஆஞ்சிக்கா தன் தோரணையை விடாமல் ``ஆங்ங்ங்......ஊர்ல இவ மட்டுந்தான் புள்ள பெத்துருக்கா பாவம், அவங்கம்மா செத்துப்போல? நீ பாத்ததானே, அப்புறம் அறிவு வேண்டாம். எரும. தள்ளிப்படு, கொஞ்சம் குடிச்சுக்கட்டும்’’  என்றவாறு டிப்பியின் மார்புகளுக்கடியிலிருந்த மார்புகளையும் எடுத்து வெளியே விட்டாள். டிப்பியின் எட்டு மார்களும் தெரிந்தன. டிப்பி தலையை வளைத்து ஷீலாவின் குட்டிகளை மெல்ல முகர்ந்தது. திரும்பவும் ஆஞ்சிக்காவைப் பார்த்தது. அவள் மிரட்டும் பாவனையில் `ம்ம்ம்...’ என்று உறுமினாள். வெள்ளைக்குட்டியை முகர்ந்து மெல்ல நக்கிக் கொடுத்தது. சிட்டுவும் நானும் ஒரு சேர `ஹை’ என்றோம். வெள்ளைக்குட்டிகள் ஒவ்வொன்றாய் டிப்பியின் மாரை நோக்கி முண்டின. மெல்லக்கவ்வி உறிஞ்சின. டிப்பி உடலை லேசாகத் திருப்பிக் கொடுத்த மாதிரி இருந்தது. சுருங்கியிருந்த புருவங்களை விரித்த ஆஞ்சிக்கா, இத்துணூண்டு புன்னகைத்தவளாகக் குரலைத் தாழ்த்திக் கனிந்து, `‘நம்ம பாப்பா மாரிதானே இந்தப் பாப்பாவும்.... ஏண்டித் தங்கம், நல்ல புள்ளதான நீயி? அம்மா செல்லமில்ல’’ என்றபடி டிப்பியின் நெற்றியில் குனிந்து முத்தமிட்டாள். ஆஞ்சிக்காவின் முந்தி விலகி ஒரு பக்க முழு மார்பும் தெரிந்தது. நான் அவளது மார்புக்குக் கீழே அள்ளையில், வயிற்றில் வேறு மார்புகள் ஏதும் தெரிகின்றனவா என்று பார்க்கச் சுற்றிச் சுற்றி வந்தேன்.
   http://www.vikatan.com
  • By நவீனன்
   காளி - சிறுகதை
       ச.விசயலட்சுமி - ஓவியங்கள்: செந்தில்
    
   விடியக் காத்திருக்கும் வானத்தின் ஒளிக்கீற்றுகள், மெல்லிய நிழலைப் படரவைத்தபடி எட்டிப்பார்க்கக் காத்திருக்கின்றன. இந்தப் பிரதேசத்தின் அமைதியைக் கைவிடப்போகும் மக்களில் சிலர் ஆங்காங்கே நடந்துகொண்டிருந்தனர். கடற்கரை, கூடைகளோடும் மூன்று சக்கர வண்டி வைத்திருப்பவர்களோடும் கல்யாணக்கோலம் பூண்டிருந்தது. ஏமாந்தவர்களிடமிருந்து தனக்கான உணவை அபகரிக்கக் காத்திருந்தன காகங்கள். அவை விடாமல் துரத்திக் கொண்டிருக்கும் மீன் வண்டியோடு ஓட்டமாக நடைபோட்ட காளியின் இடுப்பிலிருந்த சூர்யாவின் கிடுக்கிப்பிடி மூச்சு முட்டச்செய்தது.

   ``அட சனியனே, ஏன்டா இப்படி என் உயிர எடுக்குற?’’ பட்டென அறைந்தாள். இன்னும் வேகமாக அவள் முடியைப் பிடித்து இழுத்த சூர்யாவை, ஒரு துணிமூட்டையை விட்டெறிவதுபோல பொதுக்கென பிளாட்ஃபாரத்துக்கு விட்டெறிந்தாள்.

   ``இந்தச் சனியனைப் பெத்ததுலயிருந்து இந்தப் பாடுபடுறேனே... என் தலையெழுத்து இப்படின்னு விதிச்சுட்டான்’’ எனச் சொல்லிக்கொண்டே ஆத்திரம் தீரும்வரை அடிக்கத் தொடங்கினாள். 

   ஆவின் பால்பூத்துக்குப் பக்கத்தில் இருந்த நீலநிற பிளாஸ்டிக் கொட்டகையிலிருந்து ஓடிவந்த ஸ்டீபன், ``அக்கா, அடிக்காதக்கா. உனக்கென்ன பைத்தியம் பிடிச்சிருக்கா? சொல்லிட்டே இருக்கேன்... நிறுத்த மாட்டியா?’’ என்றான்.

   அவனது பேச்சைக் கேட்டதும் இன்னும் வெறி பிடித்தவளாக மாறிப்போன காளி, குழந்தையை யாறுமற்றுப் பராமரிக்க வேண்டியதன் ஆற்றாமையுடன் கூச்சலிட்டாள். ``உனக்கென்ன மசுரு, சொல்லிடுவ. இவனுக்கு செல்லம் குடுத்துக் கெடுக்கிறதே உனுக்கு பொழப்பாப் பூடுச்சு. த பாரு ஸ்டீபனு, காலங்காத்தால எழுந்தாதான் என் பொழப்பு ஓடும். இல்லைன்னா, இந்தப் பய `பசி’ன்னு உயிரெடுத்தா நான் என்ன எழவைக் கொடுக்க முடியும்? இங்கியே படுத்துக்கெடன்னு சொன்னாலும் பிரியாம, என் கூடவே எழுந்து மல்லு குடுக்குறான், கழுத்தை நெரிக்கிறான், தலைமுடியைப் புடிச்சு இழுத்துக் கடிக்கிறான். இப்படி வெறி பிடிச்சாப்புல கிடக்கிறதை வெச்சுக்கிட்டு, ஒரு வேலை பாக்க முடியலை’’  பொலபொலவென விடியத் தொடங்கிவிட்டதை உணர்ந்தவளின் பரபரப்பு இரட்டிப்பானது. 

   `இவனை இப்படித் திட்டிக் கொண்டிருக்கிறோமே’ எனக் காளிக்குத் தோன்றியது. இருந்தாலும் வேலைக்குப் போக வேண்டியிருக்கிறது. அங்கே இவனைக் கூடவே அழைத்துப்போகலாம்தான். ஆனால் அங்கே இவனைப் பார்க்காமல் கவனிக்காமல் தான் இருப்பதை அவனால் தாங்க முடியாமல், அவளைத் தாக்கத் தொடங்கிவிடுவான். இதெல்லாம் அவளுக்குப் புரிந்தாலும், அவசரச் செலவுகள் அவளது பொறுமையை நிலைகுலையச் செய்துவிடுகின்றன. அவள் சூர்யாவை இப்படி உடம்பு நோகுமாறு அடித்தது, ஸ்டீபனுக்குக் கோபத்தை அதிகப்படுத்தியது.

   ``யக்கோ, காத்தாலேயே ஆரம்பிச்சிட்டியா? அவன் அப்படித்தான்னு தெரிஞ்சும் பேசிக் கிட்டிருக்க பாரு... எத்தன தபா சொன்னாலும் உன்னைத் திருத்த முடியாதுக்கா. அவன உங்கூட கூட்டிப்போவாத. இங்கேயே உட்டுட்டுப் போ. பச்சமண்ணைப் போட்டு இப்படி அடிக்கிற, கத்துற. எல்லாம் போதும் நிப்பாட்டிக்க’’ என லுங்கியைத் தூக்கிச் செருகிக்கொண்டு, அவனது கொட்டாய்க்குள் சென்றான். சாலைகளில் வாகனங்கள் முளைவிடத் தொடங்கிவிட்டன.

   காளியையும் ஸ்டீபனையும் மாறி மாறிப் பார்த்தான் சூர்யா. அங்கு இருந்த ரோட்டுக்குள் இறங்கினான். தடுமாறி விழுந்துவிடுவதுபோல வேகமாக நடந்தான். ஸ்டீபனிடம் பேசிவிட்டுப் பின்னால் திரும்பிய காளி, இவன் நடந்து போவதைப் பார்த்ததும் ஆத்திரம் பிடுங்கித்தள்ள, அவனை இழுத்துவந்து அருகில் இருந்த பிளாட்ஃபார அம்மன் கோயிலுக்கு முன்னால் கட்டிப்போட்டாள். ‘‘சூர்யா, நீ இங்கியே இரு. நான் வேலைக்குப் போயிட்டு வர்றேன். வரும்போது நாஷ்டா வாங்கியாறேன். இட்லி - வடகறி வாங்கியாறட்டா?’’ இவள் கத்திப் பேசுவதைப் பார்க்காமல் ரோட்டில் வரிசையாகப் போய்க்கொண்டிருந்த வண்டிகளைப் பார்த்துக்கொண்டிருந்தான் சூர்யா. 

   அவனுக்கு எல்லாவற்றையும் புரியவைக்க முடியாது என்றாலும், தன் மகனுக்கு எல்லாம் புரியும் என்கிற ஓட்டத்தில் சொல்லி முடித்த திருப்தியோடு, எறா ஷெட் பக்கம் போனாள். அங்கு இருந்த பெட்டிகளில் ஹோட்டல்களுக்கு ஏற்ற மாதிரி எறாக்களை பார்சல் செய்து, ஐஸ் பெட்டிகளுக்குள் வைத்து அடுக்கத் தொடங்கினாள்.

   சூர்யாவுக்கு, அம்மா தன்னை விட்டுவிட்டு வேலைக்குப் போனதோ, திட்டியதோ பொருட்டாக இல்லை. அவன் கையில் கிடைத்த பொருள்களைத் தட்டி விநோதமான ஒலியெழுப்பிக்கொண்டு விளையாடினான். அவன் சட்டை, பட்டன் இல்லாமல் ஆங்காங்கே கிழிந்திருந்தது. தலைமுடி ஒட்ட வெட்டப்பட்டு, ஆங்காங்கே சில தழும்புகளோடு இருந்தான். அவனுக்குப் பிடித்தது என எதையும் சொல்ல முடியவில்லை. எப்போதாவது காரணம் தெரியாமல் கத்திக்கொண்டிருந்தால், அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் சமாதானப் படுத்தினாலும் அடங்க மாட்டான். காளி ஓடிவந்து மடியில் போட்டுத் தடவிக்கொடுத்தால் தூங்கிவிடுவான். 

   ``இவனுக்கு அம்மா வாசனை மட்டும் நல்லா தெரியுது’’ எனச் சொல்லிக்கொண்டிருக்கும் அன்னம்மா அக்கா, சூர்யாவுக்குப் பசிக்கும் என, தான் சாப்பிட வைத்திருக்கும் பொருளில் ஒரு பங்கை எடுத்துக் கொடுப்பாள். கூடையில் கொஞ்சம் கருவாட்டை வைத்துக்கொண்டு மார்க்கெட் ஓரத்தில் உட்கார்ந்திருப்பாள். காளியைப்போல அன்றாடம் வேலை பார்த்தாக வேண்டியதில்லை. நாள், கிழமைக் காலங்களில் பெரிதாக வியாபாரமிருக்காது எனக் கடை போட மாட்டாள். ஆடி மாதம் என்றால் விற்பனை அதிகம். முன்கூட்டியே சொல்லிவைத்து வாங்கிச் செல்வார்கள். அன்னம்மா, சூர்யாவைப் பார்த்துக்கொள்வது காளிக்குக் கொஞ்சம் ஆறுதலான விஷயம்.

   நடிகர் சூர்யா படம் என்றால், காளிக்கு ரொம்பப் பிடிக்கும். குழந்தை பிறப்பதற்கு முன்பே ஆண்பிள்ளை என்றால் `சூர்யா’ எனப் பெயர் சூட்டப்போவதாகச்  சொல்லிக்கொண்டிருந்தாள். சூர்யா நடித்த பட போஸ்டர்களைக் கீழே விரித்துப் படுத்துக்கொள்வாள்.

   `சூர்யாவைக் கோயிலுக்கு முன்னால் கட்டிப் போட்டுவிட்டு வந்திருக்கிறோம். சீக்கிரம் போக வேண்டும்’ என்று நினைத்துக்கொண்டே இருந்தாள். காலையில் அனுப்ப வேண்டிய லோடு ஏற்றி, வண்டி கிளம்பியதும் ``அண்ணே, பையனுக்கு நாஷ்டா குடுத்துட்டு வந்திடுறேன்’’ என்று கிளம்பினாள். வடகறியோடு இட்லி வாங்கிக்கொண்டு, பம்பிங் ஸ்டேஷன் குழாயில் பாட்டிலில் தண்ணீர் பிடித்துக்கொண்டு கோயில் பக்கம் சென்றாள். 

   கோயிலின் முன் இப்படியும் அப்படியுமாக வேகவேகமாக நடந்துகொண்டிருந்த சூர்யாவைப் பார்த்துப் பதறினாள். ``பிள்ளைக்கு வெறி வந்திருச்சுபோல. தாயி... காப்பாத்தும்மா’’ எனச் சொல்லி முடிப்பதற்குள் அவன் வேகமாக நடந்து சுவரில் பச்சக்கென மோதிக் கொண்டான். அலறத் தொடங்கிவிட்டவனின் தலையிலிருந்து சிவப்பாக வழிந்ததை உற்றுப்பார்த்துக்கொண்டே சாலையைக் கடக்க முயன்றாள்.

   காலையில் வாங்கிய இட்லிப் பொட்டலத்தைப் பத்திரமாக வைத்திருந்த ஸ்டீபன், ``அக்கா, இந்த இட்லியைத் துன்னுக்கா. அவனுக்கு சரியாப்போவும். டென்ஷன் படாத’’ என்று அவளது தோளில் கை வைத்ததும், காத்திருந்தவள்போல உடைந்து அழத் தொடங்கினாள். 

   ``யக்கா இன்னாக்கா... நீ போயி இப்பிடி இருக்கலாமா? எம்மாந்தகிரியமா இருப்ப. இப்பிடி அழுவுறியே. மன்சு கஷ்டமாக் கீது’’ எனத் துடித்தான். 

   ``இவன் இப்பிடி ஒரு மண்ணும் தெரியாம இருக்கான். இவன எப்பிடி காப்பாத்தப்போறேன்னு தெரியலியே ஸ்டீபனு. அவன் இப்பிடி ரத்தமா கிடக்கிறதைப் பாக்கத் தெம்பில்லை. இன்னா பொயப்பு, வாய் தொறந்து கேக்கத் தெரியல. எதித்தாபோல செவுரு இருக்கிறது தெரியல. போய் மோதி மண்டையை உடைச்சுக்கிறான்; கைகால்  உடைச்சுக்கிறான். இவன் வேகமா நடக்குறான்னு பாத்த உடனயே அல்லு தூக்கிப்போட்டுச்சு. ஏதோ பண்ணிக்கப் போறான்னு நினைச்சேன். அடுத்த நிமிஷமே இப்பிடி உடைச்சுக்கினு கத்துறான். பன்னண்டு தையல் போட்டிருக்கு. இது ஆறங்காட்டியும் இவன்கூட மல்லு கிடக்கணுமே… இதுக்கு எவ்ளோ வலிக்கும். இவனைப்போல புள்ளைங்க எல்லாம் பள்ளிக்கூடத்துல சேந்துட்டுது. இவன சேக்க மாட்டேங்குறாங்க. கடைசித் தெரு நெட்டச்சி மகன், மூளை கலங்கினவனா இருந்தாலும் பள்ளிக் கூடத்துல சேத்துக்கிட்டாங்களாம். யாருக்கும் தொந்தரவு குடுக்கிறதில்ல. சொன்ன இடத்துல மணிக்கணக்கா உக்காந்துக்குனு இருக்கான். ஒரு எழுத்துகூட எழுத மாட்டானாம். வெறிக்கப் பார்த்துக்கினுருப்பானாம். இவன் அப்படி வேடிக்கை பார்த்துக்கினு இருக்க மாட்டான். திடீர்னு கைல கிடைச்சதைத் தூக்கிப் போட்டு அடிச்சிடுறான். அந்தப் பையனபோல எங்கியும் சேத்துக் கிட்டா நல்லாயிருக்கும். புள்ளைங்க கூட இருந்து நல்லது கெட்டது கத்துக்கும்’’ அழுகையை விட்டுவிட்டு, அவனுக்கு அடுத்து செய்ய வேண்டியது குறித்து யோசிக்கத் தொடங்கினாள்.

   சூர்யா, தன் நெற்றியில் தையல் போடப்பட்டு முகம் வீங்கிக் கிடந்தான். அரசு மருத்துவமனையில் படுக்கைக்கு இடம் இல்லாமல் தரையில் பாய் விரித்துப் படுக்க வைத்திருந்தார்கள். அவ்வப்போது கேஸ் வருவதும், டிஸ்சார்ஜ் ஆகி வெளியேறுவதுமாகப் பரபரப்போடு இருந்த குழந்தைகள் பிரிவில், காலையில் பாலும் பிரட்டும் கொடுத்திருப்பார்கள். 

   ``இந்தப் பையன் நாஷ்டாவை வாயிலியே வாங்காம துப்புது. ஸ்டீபனு, ஒரு பன்னு வாங்கியாடா குடுத்துப் பாப்பம்’’ என்றாள். பாதி பன்னை டீயில் தொட்டு ஊட்டி, மாத்திரைகளை விழுங்கச் செய்தாள்.

   சூர்யாவுக்கு ஆர்வம் அதிகமானால், இப்படித்தான் கண் மண் தெரியாமல் இடித்துக்கொள்வான்.  தலையெங்கும் ஆங்காங்கே வெட்டுக்காயங்கள். சூர்யா, கண் திறந்து பார்த்தான்; வாய் திறந்து பேச முயன்றான். ஆனால், அவன் குரல் வெளியே எழவில்லை. வாயிலிருந்து வழிந்த ஜொள் அவனுக்குப் பிடிக்கவில்லை போல, கைவைத்துத் துடைத்துக் கொண்டவன், கையை மீண்டும் மீண்டும் உதறினான். முகத்தைச் சுளிக்க முயன்றதும் வலி அதிகமானதில் அமைதியாகிச் சுவரை வெறித்துக்கொண்டிருந்தான்.

   காளிக்குக் களைப்பு அழுத்தியது. ``பாவி மனுசன், நிம்மதியா போயிட்டியே’’ எனத் திட்டிக் கொண்டே பாயின் ஓரத்தில் பையனைப் படுக்கவைத்துவிட்டு அவனோடு படுத்துக்கொண்டாள்.

   காளி வேலைபார்த்த எறா ஷெட்டில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தான் பாலா. 

   புதுப்பேட்டையிலிருந்து வந்திருந்தான். வேலை நேரத்தில் சிரிக்கச் சிரிக்கப் பேசும் அழகு அவனைத் தவிர, யாருக்கும் வராது. அவன் ஷெட்டில் இருப்பதை, அங்கு இருக்கும் எல்லோர் முகங்களிலும் தெரியும் சந்தோஷத்தில் உணர்ந்துகொள்ள முடியும். கறுப்பாக இருந்தாலும் களையானவன். காளிக்கும் பாலாவுக்கும் எப்படிப் பற்றிக்கொண்டது எனத் தெரிய வில்லை. பாலாதான் ``கட்டிப்பமா காளி’’ என்று ஆரம்பித்தான். காளிக்கு ஆசையிருந்தாலும் தயக்கமும் பயமும் இருந்தன. பாலா, அப்பா அம்மாவோடு சொந்தக் குடிசையில் இருப்பவன். காளிக்கு என எவரும் இல்லை. இப்படியே ரோட்டோரம் படுப்பதும், அங்கே இருக்கும் அக்காக்களோடு வேலைக்குப் போவதும், சாப்பிடுவதுமாக இருப்பவள். 

   அன்னம்மா அக்கா, ``பாலாவைக் கட்டிக்கிட்டா, நல்லா இருப்படி. சீக்கிரமா கட்டிக்க. இந்த பிளாட்ஃபாரத்துல இருந்தது போதும்’’ என்று பச்சைக்கொடி காட்டினாள். பாலா வீட்டில் கடும் எதிர்ப்பு. ``எதுவும் இல்லாத பிளாட்ஃபாரத்துக்குப் பட்டுக்குஞ்சமா? இதெல்லாம் சரிப்படாதுடா. போறதுன்னா ஒரேயடியாப் போயிடு. இந்தப் பக்கம் அப்பன் ஆத்தான்னு சொல்லிக்கிட்டு வந்துடாத’’ என இறுதியாகச் சொன்ன நாளில், வீட்டைவிட்டு வந்தவன். ஆற்றோரம் குடிசை ஒன்றை வாடகைக்குப் பிடித்துவிட்டு, காளியைப் பார்க்க வந்தான். 

   அன்னம்மா அக்காவும் பாலாவும் சேர்ந்து கோயிலில் கல்யாணம் ஏற்பாடு செய்தார்கள். எறா ஷெட்டில் இருந்தவர்கள், அவர்கள் குடும்பக் கல்யாணம்போல கவனித்துக்கொண் டார்கள். காளியை ``இனி வேலைக்குப் போக வேணாம்’’ என்று நிறுத்தி விட்டான்.  குடிசைக்கு முன்னால் தடுப்புத் துணி கட்டி, லைட் போட்டு, ஸ்பீக்கரில் குத்துப் பாடலாகப் போட்டுக் களை கட்டினாலும், பாலாவின் அம்மாவும் அப்பாவும் வரவேயில்லை. அவர்கள் வராததைப் பற்றி சிலர் கேட்கவும் செய்தார்கள். ``பெத்தவங்களுக்குப் புடிக்கலைன்னு சொல்லியும் கட்டியிருக்கன்னா, இவகிட்ட அப்படி இன்னா கண்டுக்கினேன்னு தெரியலை’’ இப்படிக் கேட்டவர்களுக்கு, பிரத்யேகமாகப் பதில் சொல்லாமல், ``அப்படி ஏதும் இல்லாம இப்படி முடிவெடுப்பனா?’’ என்று பேசி நகர்ந்துவிடுவான். 

   காளிமீதான அவனது கொள்ளைப் பிரியத்துக்கு அளவில்லை. அதற்குக் காரணம் கேட்டால், அவனுக்குத் தெரியாது. `காளி... காளி’ என சதா அவள் நினைப்பு. 

   வேலை முடிந்ததும் ஆல்பர்ட் தியேட்டருக்குப் போவது, பீச்சுக்குப் போவது என அவளை அழைத்துக்கொண்டு சந்தோஷமாகக் கிளம்பிவிடுவான். அவனுடைய பெற்றோரைப் பார்க்க வேண்டும் எனக் காளி சொன்னபோது, பெரிதாக ஆர்வம் காட்டாத பாலாவை தொடர்ந்து நச்சரித்தாள். உண்மையில் அம்மா, அப்பா, குடும்பம் இவற்றின் மீது மிகுந்த விருப்பம் கொண்டவளாக இருந்தாள் காளி. `அவங்க அன்பு செலுத்தியிருந்தா, பாலா எதுக்கு `கட்டிக்கிறேன்’னு என்னாண்ட வந்திருக்கப்போவுது’ என சில சமயம் தோன்றும். `எதுவும் தெரியாம யோசிக்கக் கூடாது. நினைப்புதான் பொழப்பைக் கெடுக்கும்’ என  நினைவுகள் பல திசைகளில் போனாலும், அவர்களைப் பார்த்துவிடத் துடித்தாள். 

   ``காலையிலேயே போய் வந்திடலாம். ஷெட்டுக்குப் போணும். ஒரு கல்யாண பார்ட்டிக்கா வேண்டி எக்ஸ்ட்ரா லோடு வருதாம்’’ என அவளைத் துரிதப்படுத்தினான் பாலா. அவனது குடிசைக்கு முன் காளியை நிறுத்தி, ``இங்கயே நில்லு, பாக்கறேன்’’ என்று ``அம்மா... அம்மா...’’ என்றான். இதுவரை இவன் செத்தானா பிழைத்தானா எனத் தேடிப் பார்க்காத அம்மாமீது பீறிட்ட கோபத்தை அடக்கிக்கொண்டான். அம்மா, அப்பா இருவரும் வெளியே வந்து பார்த்து, ஒரு வார்த்தையும் பேசவில்லை.  அம்மா மட்டும் அந்தக் காலையிலும் வெற்றிலை போட்டிருந்தாள். பச்சக்கென துப்பினாள். அத்தனை கோபத்தோடு துப்பியவளை, பயத்தோடு பார்த்தாள் காளி. இவளுக்குப் பயம் என்றால் என்னவென்றே தெரியாது. சொந்தம், பாசம் என்று வந்தால் கூடவே பயமும் வந்துடும்போல... சுதாரித்துக்கொண்டு ``அத்தை’’ என்றாள் . 

   ``அடியே சிறுக்கி... யாருக்கு யாரு அத்தை? நல்லா இருந்த குடும்பத்தைப் பிரிச்சுப்புட்டு அத்தையாம் அத்தை. அவளக் கூட்டிகினு நடடா... உலகத்துல இல்லாத அழகிய கூட்டியாந்துட்டான்.’’ எனக் காறி உமிழ்ந்தாள்.

   பாலாவால் பொறுக்க முடியவில்லை. ``அம்மா, அவ மாசமா கீறா. அஞ்சு மாசம்மா. எங்களுக்கு உன்ன உட்டா யாரும்மா கீறா? பழைய கதையெல்லாம் மன்சுல வெச்சுக்காதம்மா... மன்னிச்சிடும்மா. நா உன்னக் கஷ்டப்படுத்திக்கினேன்னு தெரியுது. அவளை லவ் பண்டேன். இன்னாங்கிற...’’ பிள்ளை பேசப் பேச சமாதானமடையாமல், திட்டிய அம்மாவையும் அவளுக்குப் பணிந்ததுபோல் காலையிலேயே  மப்பிலிருந்த அப்பாவையும் மன்னிக்க முடியாதவன் ஆனான்.  

   ``இவன் குழந்தை நாசமா போவட்டும்’’ என அம்மா மண்ணை வாரித் தூற்றினாள்.  அம்மா சண்டைக்காரிதான் என்றாலும், பாலாவுக்கு எப்போதும் அன்பை மட்டுமே தந்தவள். `என் ராசா… என் மவராசன்… சக்கரவத்தி...’ இப்படிச் சொல்லிக் கூப்பிடுவதுதான் பிடிக்கும். அப்படியே மகனுக்குத் தேவையானதை `இல்லை’ எனச் சொல்லாமல் பார்த்துப் பார்த்துச் செய்தவள். `எட்டாவதுக்கு மேல பள்ளிக்கூடம் போக மாட்டேன்’ என நின்றவனை அடித்த அன்றுதான் அம்மாவின் ஆத்திரத்தைப் பார்த்தான் பாலா. 

   காளி பிளாட்ஃபாரத்தில் வளர்ந்தாலும், அம்மா-அப்பா இல்லாதபோதும் அங்கு இருப்பவர்களை `அண்ணே...’ `அக்கா...’ என அழைத்துக்கொண்டு, தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பாள். யாருக்கும் பயப்படாத ரோஷக்காரி. அம்மாவைப்போலவே வீம்பு. அதனால்தான் `இவள் தைரியமான பொண்ணு’ என முடிவெடுத்தான். காளியின் முகம் களையாக இருக்கும். மட்டான கலர் என்றாலும், கன்னம் பூப்போல மெத்தென்று இருக்கும். அதைப் பார்க்க ஆசையாயிருக்கும். 

   `வராமலேயே இருந்திருக்கலாம்’ என நினைத்தபடி இவளை வீட்டில் விட்டுவிட்டு, லோடு பின்னாலேயே கூட்டாளியோடு வண்டியின் பின்னால் உட்கார்ந்து சென்றவன், அத்தனை வருத்தத்தில் இருந்தான். எப்போதும் சந்தோஷமாக இருக்கும் இவனைத் தேற்ற முடியாமல் பேசிக்கொண்டே வந்த நண்பன், ஸ்பீட் பிரேக்கரைக் கடக்கும் சமயத்தில் குறுக்கே வந்த நாய்மீது மோதிவிடப்போகிறோம் என பிரேக்போட்டான். வண்டி ஓரத்தில் இருந்த முருங்கைமரத்தின் பின்னால் இருந்து வந்த வண்டியோடு நேருக்குநேர் மோத, வண்டி ஓட்டியவன் இடித்தவனைத் திட்டிவிட்டு பாலாவைப் பார்த்தான். கீழே விழுந்து  கிடந்த பாலா பின் மண்டையைத் தேய்த்தான். பாலாவுக்குத் தண்ணீர் வாங்கிக் கொடுத்துவிட்டு, வீட்டில் விடுவதாகச் சொன்னவனிடம் அடம்பிடித்து, `லோடு பார்த்துட்டு வந்திடலாம்’ எனச் சென்றுவிட்டுத் திரும்பியதும், குடோன் பூட்டி ஓனரிடம் சாவி கொடுத்தான். 

   வீட்டுக்குச் சென்றவனுக்கு, சாப்பிடப் பிடிக்கவில்லை. நம்மைப் போல அவனுக்கும் மனக்கஷ்டம் எனச் சாப்பிடக் கூப்பிட்டுப் பார்த்தவள், அவன் வராததால் `தூங்கி எழுந்தா, மனசு லேசாகிடும். சொந்தபந்தம் இல்லாத நமக்கே இப்படி ஃபீலிங் இருக்கும்போது, இவனுக்கு இன்னும் அதிகமிருக்கும்’ என விட்டுவிட்டாள். 

   அடுத்த நாள் எவ்வளவு கூப்பாடு போட்டும் எழாதவனை அவனின் நண்பர்களும் முதலாளியும் அள்ளிக் கொண்டு ஜி.ஹெச்சுக்குக் கூட்டிப் போனார்கள். காளிக்கு எதுவுமே புரியவில்லை...

   காளி, சூர்யாவை அமைதிப்படுத்தித் தூங்கவைத்தாள். அவன் போக்கில் அங்கு இருக்கும் நோயாளிகளுடன் நடப்பது, குதிப்பது எனப் பெரும் சேட்டைகளை நிகழ்த்திக்கொண்டிருந் தான். அவனுக்குக் கோபம் வந்து `உய்ய்’யென கத்த ஆரம்பித்தால், அந்த வார்டு முழுவதும் அவனைச் சமாதானப்படுத்தக் கூடிவிடும். அவன் அழ, காரணம் புரியாமல் திணறும் சமயங்களில், மற்ற குழந்தைக்கும் அம்மாவுக்குமான பேச்சும் சிரிப்பும் இவளுக்கு ஏக்கத்தை ஏற்படுத்தின. மனச்சோர்வு அதிகரித்துக்கொண்டேபோன இந்த நாள்களின் பிடியிலிருந்து மீண்டுவிட நினைத்து `டிஸ்சார்ஜ் செய்யச் சொல்வோமா’ என எழுந்த நினைப்பை, சில நொடிகளில் மாற்றிக்கொள்வாள். `அங்கே போலீஸ் ஸ்டேஷன் மரத்தடி நிழல்லதான் இவனை வெச்சுக்கணும். அதுக்கு இதுவே பரவாயில்லை. ரோட்டோரம் தூசி. கட்டுப்போட ஓபி-க்கு வரணும். இதுக்கு நிம்மதியா இங்கேயே பாத்துக்கலாம். முதலாளி பாவப்பட்டு வெச்சிருக்கிறதால முடியுது. இல்லாங்காட்டி பொயப்பு நாறிடும். இவனைப் பெத்ததுலேயிருந்து இப்படியே இருக்கேனே’ என, தனக்குள் பேசிக்கொண்டாள்.

   இரவு கனவில் பாலா வந்தான். இவள் வயிற்றில் இருந்த ஐந்து மாதக் குழந்தையுடன் பேசினான். குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்ற, அவனது ஆசைகளைக் கூறி, அவன் அம்மாவை நினைத்துக் கலங்கினான். கலங்கிய கண்கள் அவளைப்  பார்த்துக் கொண்டிருக்கும்போதே `அம்மா...’ என அலறிக் கொண்டே மறைந்தான். உடல் சில்லிட, திடுக்கிட்டு எழுந்தாள்.

   சில மாதங்களுக்குள் அற்புதமான வாழ்க்கை ஒன்றைக் கொடுத்துப் பறித்துக் கொண்டதன் இயலாமை, அவளை அவ்வப்போது கலங்கவைத்தது. ருசி அறியாத காலத்தில், சுய பச்சாதாபம் தோன்றியதே இல்லை. ருசித்த வாழ்க்கை அவ்வப்போது ஞாபகத்துக்கு வந்து இடையூறு செய்தது. ``பாவம் பிள்ளை’’ என சூர்யாவின் வியர்வையைத் துடைத்துவிட்டாள். ``மத்த குழந்தையெல்லாம் வளந்திடும்.  எம்புள்ள எப்பவும் எனக்குக் குழந்தையா இருக்கும். யாரு, என்ன நினச்சா நமக்கு என்ன? நம்ம புள்ளய நாமே `சீ’ன்னு சொல்லிடக் கூடாது. அது எங்க போவும்? அவனுக்கு எல்லாமே நான்தான்’’ என்றபோது மனம் பாரம் குறைந்து லேசாவதை அவளால் உணர முடிந்தது. 

   வராண்டாவுக்கு வந்தவள், நின்று இருந்த நர்ஸிடம் பையனைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, ஐ.சி.யூனிட் பக்கம் போனாள். அங்கு இரண்டாம் நம்பர் பெட்டை கண்ணாடி வழியே எட்டிப்பார்த்தாள். அதோ அந்த பெட்டில்தான் பாலா கொஞ்சநாள் படுத்துக்கிடந்து, இவளுக்கு எனப் பிரத்யேகமாக எந்த வார்த்தையும் சொல்லாமல் பிரிந்தான் .  பாலாவின் அம்மா ஆஸ்பத்திரிக்கு வந்து வண்டை வண்டையாகப் பேசினாள். அவன் இறந்தபிறகு `இவளுக்கு உரிமையில்லை’ எனச் சொல்லி,  அவன் உடலைக் கொண்டு போய் தடபுடலாகச் செலவுசெய்து, போஸ்டர் ஒட்டி வழியனுப்பினாள். `அவன் செத்ததுக்கு காளிதான் காரணம்’ என, பார்ப்பவர்களிடம் எல்லாம் சொல்லித்தீர்த்தாள். ஒருநாள், பாலா வேலை செய்த எறா ஷெட்டில்தான் இவள் வேலை செய்கிறாள் என்பது தெரிந்து, ஷெட்டின் சுவர் எங்கும் துப்பிவிட்டுப் போனாள்.

   பாலா குட்டியாகிக் கையில் தவழ்ந்து கொண்டிருந்தான். அவனைப் பார்க்கும் போதெல்லாம் குழைந்து மென்மையாக மாறிவிட்டதாக உடலும் மனசும் இருக்கும். உறவு என்று யாரையும் தெரியாமல், சுற்றியிருக்கும் சிலரை உறவுகளாக அழைக்கத் தொடங்கிய வாழ்வில் புதிதாக முளைத்திருக்கும் உறவு. `காலத்துக்கும் நீ தனியா இல்லை. உனக்கு ஒரு துணை இருக்கு’ என பாலா கொடுத்த உறவு. பிளாட்ஃபாரத்தில் பிழைக்கிற வாழ்க்கை, நெருப்பில் நிற்பதுபோல அன்றாடம் சமாளிக்க வேண்டிய வாழ்க்கை. பொம்பளைங்களை டீசன்ட்டா பார்க்கத் தெரியாதவர்களுக்கிடையில் இவ்வளவு அற்புதமான கனவாக நின்ற வாழ்க்கை. கண் கலங்கியது. 

   டிஸ்சார்ஜ் ஆகி, இவளது பிளாட்ஃபாரத்துக்கு ஆட்டோவில் வந்து இறங்கினாள். ஸ்டீபன் அவனது கொட்டகையில் படுக்கவைக்கச் சொன்னான். ``இனிமே இவனை இங்க விட்டுட்டுப் போ. வெளிய வெயில்ல போட்டுட்டுப் போவாத. இந்த வெயில்லயே பையன் மூளை கலங்கிடும்’’ என உரிமையாகச் சொல்லிவிட்டு, கையில் வைத்திருந்த ரஸ்னா பாக்கெட்டைக் கொடுத்தான். சூர்யா, அந்த பாக்கெட்டைத் தொடும் போதெல்லாம் தலையை ஆட்டி ஆட்டிச் சிரித்தான்!
   http://www.vikatan.com/
  • By நவீனன்
   எமோஜி - சிறுகதை
       நர்சிம் - ஓவியங்கள்: ஸ்யாம்
    
   வாட்ஸ்அப் சிணுங்கலில் விழித்துக்கொண்டு எழுந்தேன். மதுவைச் சந்தித்த நொடியிலிருந்து இன்றுவரை என் அத்தனை நாள்களும் அவளின் செய்தியில்தான் விடிகின்றன. இது இன்று நேற்று அல்ல... குறுஞ்செய்தி காலத்திலிருந்தே இப்படித்தான்.

   “ I am not feeling well, இன்னிக்கு லீவு, don’t call me.”

   உடனே பதில் அனுப்பினேன்.

   “You are not feeling well, OR your feelings are not well?”

   எனக்குத் தெரியும், பதில் வராது என்று. வரவில்லை. பல் துலக்கிக் குளித்து, சீருடை உடுத்தி, கிளம்பும் வரை 40, 50 முறை மொபைலைப் பார்த்திருப்பேன். பதில் வரவில்லை. ஆனால், நீல வண்ணத்தில் டிக் மார்க்குகள். உதாசீனம் செய்கிறாள் என எடுத்துக்கொண்டால் எனக்குக் கோபம் வரலாம் என்பதால், கோபத்தில் இருக்கிறாள் என்று எடுத்துக்கொண்டேன், சிரிப்பு வந்தது.

   வண்டியைக் கிளப்பும் முன்னரும் ஒருமுறை போனை அனிச்சையாக எடுத்துப் பார்த்தேன். ம்ஹூம். மொபைலில் சலனமே இல்லை என்பதுபோல் மனதில்பட்டது. ஒருவேளை நேற்று நடந்த சண்டையே இறுதி என்றாகி, இனி பேசவே போவதில்லை என்றானால், என் இதயம் இத்தியாதி எல்லாவற்றையும் விடுங்கள்,  சதாசர்வகாலமும் அவள் நிமித்தமாகவே இருக்கும் இந்த மொபைலுக்கு என்ன சொல்லிப் புரியவைப்பது? அதற்காகவாவது சமாதானம் ஆகிவிடவேண்டும் என நினைத்துக் கொண்டேன்.

   நானும் மதுவும் சென்னையின் மிகப் பிரமாண்டமான நட்சத்திர ஹோட்டலில் வேலைபார்க்கிறோம். முன் அலுவலகம் என்பதை ஆங்கிலப்படுத்திக்கொள்ளுங்கள். நட்சத்திர விடுதிகளில்  Front Office Management என்பதுதான் ஆகக் கடினம். அதுவும் ஐந்தும் அதற்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் எனில், கேட்கவே வேண்டாம். வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வது, அதுவும் வாடிக்கையாக வரும் வாடிக்கையாளர்கள் எனில் இன்னும் அதிக கவனமாக அவர்களைக் கையாள வேண்டும். கவனம் என்றால், பிறந்த குழந்தையைக் கையாளும் கவனம். சொகுசில் சிறு குறை என்றாலோ அவர்களின் ஈகோவுக்கு இழுக்கு என்றாலோ அவர்கள் நேராக வருவது முன் அலுவலகத்துக்குத்தான். வந்து ஆடிவிடுவார்கள் ஆடி. நானும் மதுவும் அப்படியாகப்பட்ட வாடிக்கையாளர்களை இன்முகத்தோடு கையாள வேண்டிய பதவியில் இருக்கிறோம்.
   என்னைவிட இரண்டு வருடங்கள் இந்தப் பதவியில் அதிக அனுபவம் உள்ளவள் மது. நான், நாய் வாய் வைப்பதுபோல் வெவ்வேறு உத்தியோகங்கள் பார்த்துவிட்டு, இறுதியில் இங்கு ஐக்கியமாகிவிட்டேன். இந்த வேலையில் நான் தொடர்ந்து இருப்பதற்கு மது மட்டுமே முழுமுதற்காரணம். ஆம், நான் வேலைக்குச் சேர்ந்து பயிற்சி நாளில் இருந்தபோது, அரசியல் பிரமுகர்கள் சிலர் தங்கியிருந்தார்கள். அவர்கள் என்னைப் படுத்தியபாட்டில் வழக்கம்போல் ஒரு ஏ-4 தாளைக் கையில் எடுத்தேன். எனக்குப் பயிற்சி அளிக்கும் பொறுப்பில் இருந்த மது மேடம்தான் என்னை ஆற்றுப்படுத்தி, அதுபோன்ற சூழ்நிலைகளை எப்படிக் கையாள வேண்டும் எனக் கற்றுக்கொடுத்தார்.

   ஆனாலும் அதில் ஒருவன் படுத்தி யெடுத்திருந்தான் என்னை.

   “எதுக்கு இந்த வெய்யில்ல இப்பிடி கோட்டு சூட்டு டை எல்லாம் தம்பி?”

   “உள்ள ஏ.சி தானே சார். இதுதான் யூனிஃபார்ம்.”

   “அது சரி, ஆமா... உங்க வேலை என்ன?”

   “உங்களுக்கு அசிஸ்ட் பண்றது. ஏதாவது பிரச்னை, சந்தேகம்னா தீர்த்துவைக்கிறது.”

   “உங்களைத்தான் தேடிக்கிட்டிருந்தேன். ஆமா, இது எத்தனை ஏக்கர்? சதுர அடி என்ன ரேட்டுன்னு வளைச்சீங்க?”

   நான் ஒரு நொடி சுற்றிலும் பார்த்துவிட்டு, “அதெல்லாம் தெரியாது சார்.”

   “அட என்னப்பா, இப்பத்தான் சந்தேகத்தைத் தீர்த்துவைக்கிறதுன்னு சொன்ன! சரி, யாராச்சும் வெவரமான ஆளா இருந்தா கூட்டிட்டு வா.”

   இது ஒருவகை எனில், க்ரீம் அப்பிய முகத்தோடும் கமகமவென வாசனை திரவம் உடையெங்கும் கமழ, அப்படியே காஷ்மீர் பனிப்பிரதேசத்திலிருந்து இறங்கி வந்த சாத்வீகமான முகத்தோடு வரவேற்பறையில் நின்று தம் விவரங்களைக் கொடுத்து, அறையை அடைந்த நொடியில் ஏதோ அறுந்த பூனைபோல் அடித்தொண்டையிலிருந்து கத்தத் தொடங்கும் மகானுபவர்கள் வேறு வகை. தண்ணீர் சூடென்றாலும் கத்துவார்கள். ஏ.சி அதிகமாக வந்தாலும் சரி, மிதமாக வந்தாலும் சரி, படுக்கை விரிப்பில் ஆரம்பித்துத் தரையில் கிடக்கும் மிதியடி வரை குற்றம் கண்டுபிடித்து, பில்லைக் கட்டும்போது இன்னும் அடிவயிற்றிலிருந்து கத்தி, சல்லிசாக டிஸ்கவுன்ட் வாங்கிக்கொண்டு, ஆனாலும் முகத்தை உர்ரென்று வைத்து, “பணமெல்லாம் பெரிய விஷயமில்லை. ஆனால், நீங்கள் உங்கள் தவறை உணர வேண்டும் அல்லவா!” என்பது போன்ற முத்துகளை உதிர்த்துப்போவார்கள். அத்தனை திட்டையும் வாங்கிக்கொண்டு, கட்டணத்தில் எவ்வளவு மங்களம் பாடியிருக்கிறார்கள் என்பதைப் பார்த்து, பொது மேலாளர் எனும் மேதகு சிம்மசொப்பனத்திடம் பாட்டு வாங்கி என நாள் ஒவ்வொன்றும் நகர்வதற்குள் நாக்குத் தள்ளிவிடும்.

   “துப்பினாலும் துடைத்துப் போட்டுப் போய்க்கொண்டே இரு” என்பதை இவருக்கு முன்னரே மது என்னிடம் பயிற்சியின்போது சொல்லித் தந்திருந்தாள். ஒருவிதத்தில் யோசித்துப்பார்த்தால், பயிற்சி என விதவிதமாக ஆங்கிலத்தில் அவர்கள் வகுப்பெடுத்த அத்தனையிலும் ஒரே தாரகமந்திரமாகச் சொன்னது, “வாடிக்கையாளர் என்ன சொன்னாலும் சரி, இன்முகத்தோடு சிரித்துக்கொண்டே இரு, அதற்குத்தான் உனக்குச் சம்பளம்.”

   அதுவும் காலையில் கோட்டு சூட் எல்லாம் போட்டு, டையைக் கட்டிக்கொண்டு கிளம்பும்போது புருவம் உயர்த்தி, `பார்த்தியா, எப்படிப் போறான் பாரு என் மகன்!’ என அப்பா எதிர்படுவோரிடம் சைகையில் கித்தாய்ப்பாகக் கேட்பதைப் பார்க்கும்போது, ஒரு சுயகழிவிரக்கம் வரும் பாருங்கள், அதைச் சொல்லில் வடிக்க முடியாது என்பதால் எழுத்தில்.

   மதுவைக் கண்ட உடனேயெல்லாம் காதல் வந்துவிடவில்லை எனக்கு. நான் உனக்குப் பயிற்சி அளிக்கும் சீனியர் எனும் திமிரில் இருந்தாள். கடைக்கண் பார்வை என்பதே கிஞ்சித்தும் கிடையாது. ஏளனப் பார்வை மட்டும்தான். அதிலும் ஏதாவது சொல்லித் தந்துவிட்டு அதைத் திரும்பிக் கேட்டு, உடனடியாகச் சரியான பதில் சொல்லவில்லை எனில், `பிக் பாஸ்’ காயத்ரியை மக்கள் பார்ப்பதுபோல் ஒரு பார்வை. அவ்வளவுதான். அசிங்கம் பிடுங்கித் திங்கும். ஆனால், அடுத்த நொடியில் ஒரு சிறு பூஞ்சிரிப்பு என்னை இலகுவாக்கிவிடும்.

   வேலைக்குச் சேர்ந்து ஓரளவுக்கு வேலை புரிந்து பழகிவிட்டது என்பதை, கீழே பேஸ்மென்ட்டில் வண்டியை நிறுத்திவிட்டு, தூண்களை அடையாளம் வைக்காமல் நடந்து சரியான பாதையில் உள்ளே நுழைந்துவிடுவதில் தீர்மானித்துவிடலாம். அப்படி எல்லா இடங்களும் மனிதர்களும் அந்தப் பிரமாண்ட நட்சத்திர விடுதியின் எந்த இடுக்கில் கேமரா நுழையாது என்பது வரை தெளிந்த மூன்றாவது மாதத்தில்தான் அந்தச் சம்பவம். அதை நாங்கள் ‘ஈவென்ட்’ என்போம். பெரிய நிறுவனங்கள் தாங்கள் அடைந்த வெற்றியைக் கொண்டாடும் பொருட்டோ அடையப்போகும் வெற்றிக்கான இலக்கைத் தீர்மானிக்கும் பொருட்டோ ஒட்டுமொத்த இந்தியாவின் கிளைகளிலிருந்தும் தம் ஊழியர்களை ஒருசேர அழைத்து வந்து எங்கள் பிரமாண்ட ஹோட்டலில் தங்கவைத்து, மூன்று வேளை சோற்றைப் போட்டு மீட்டிங் வைத்து மூளையைக் கழுவிச் சுத்தமாகச் சலவை செய்து அனுப்புவார்கள். அப்படியான ஒரு பெரிய ஈவென்ட் இன்னும் ஒரு வாரத்தில் நடைபெறப்போவதாகவும் அதற்கான வரைவுத் திட்டம் குறித்துப் பேச அந்த நிறுவனத்தின் தூதுவர்கள் வந்துள்ளதாகவும் சொல்லி, மது என்னையும் அந்த மீட்டிங்குக்கு அழைத்துப்போனாள்.
   மீட்டிங் அறையின் பிரமாண்டம் ஒரு பக்கம், அதில் கமழும் அமைதி மறுபக்கம் என நான் டென்ஷன் ஆக, ஏகக் காரணிகள். எந்தப் பிரச்னையும் இல்லாமல் என் அருகில் அமர்ந்திருந்தாள் மது. மேஜைக்கு அந்தப் பக்கம் மூன்று பேர். மூவரும் மும்பையிலிருந்து வந்திருந்தார்கள். சரமாரியாகக் கேள்விகள் தொடுத்தார்கள். அத்தனை கேள்விகளுக்கும் இன்முகத்தோடு, `அதைச் செய்ய அப்படி ஒரு வழி இருக்கிறது. இதற்கு எனத் தனியாக ஆள்கள் இருக்கிறார்கள் ‘எனச் சட் சட்டென கொஞ்சமும் யோசிக்காமல் பதில் சொல்லி அசரடித்தாள். அவர்கள் முழுமனதாக ஏற்று, ஈவென்ட்டை உறுதிசெய்துவிட்டுப் போனார்கள்.

   “நாளைக்கு சண்டே. ஆனா, நீங்க வந்திருங்க. நாம ஒரு ஒன் ஹவர் இந்த ஈவென்ட்டை எப்படி ஹேண்டில் பண்றதுனு டிஸ்கஸ் பண்ணுவோம்”

   அப்போதுகூட அரை மனதாகத்தான் தலையாட்டினேன். மறுநாள் நடக்கப்போகும் எந்த ஒன்றுக்குமான சிறு சமிக்ஞையைக்கூட என்  உள்மனம் சுட்டவில்லை.

   விடுமுறை நாள்களில் அலுவலகம் செல்வதில் ஓர் அலாதி சுகம் எனக்குண்டு. நாம் தினமும் கடக்கும் இடம், வேறு மாதிரி தோன்றும். நாம் அன்றாடம் உபயோகிக்கும் மேஜை, பொருள்கள் எல்லாம் நம்மையே ஸ்நேகமாகப் பார்ப்பதுபோல் இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, டிஷர்ட்-ஜீன்ஸ், உடலைச் சுதந்திரமாக எண்ணவைக்கும் உடை. இப்படி எல்லாமும் சேர்ந்து மனதில் ஒரு நிதானம் குடிகொள்ளும். அப்படித்தான் இருந்தது அந்த ஞாயிறு. ஆனால், எல்லாம் மதுவைப் பார்க்கும் வரைதான். அப்படியா வருவாள்? அத்தனை நாள்களும் மதுவை ஹோட்டல் சீருடையான சேலையில், அதுவும் ஒருவிதமான அந்நியத்தன்மை வாய்ந்த கட்டமைப்பில் கட்டிக்கொண்டு, பொம்மைபோல் அலங்காரம் செய்து செயற்கை புன்னகையோடுதான் பார்த்திருக்கிறேன். ஆனால், அந்த ஞாயிற்றுக்கிழமை அழகுக்கான அத்தனை தேவதைகளும் அவளை ஆசீர்வதித்து, அவளோடு வழிநெடுக உடன் வந்து, என் கண்களின் விழித்திரையை இழுத்துக் கொண்டுபோய் அவள் முன் நிறுத்திவிட்டுப் போய்விட்டார்கள் என்பதுபோல் நின்றிருந்தேன்.

   இழுத்துக் கட்டப்படாத கேசம், முகப்பூச்சு இல்லாத முகம். வெள்ளை நிறச் சட்டையும் அல்லாத டிஷர்ட்டும் அல்லாத ஒன்று, ப்ளூ ஜீன் என எளிமையாக இருந்தாள். எளிமையின் அழகுச் சுடர் நாள் முழுக்க மிளிர்ந்துகொண்டே இருக்கும் தன்மையுடையது. என் கண் முன் ஒரு சுடர் அசைந்து எரிந்துகொண்டிருந்ததுபோல் இருந்தது, மது அமர்ந்து பேசிக்கொண்டிருந்தது.

   “என்ன மேடம்... இதுல சின்னப்பொண்ணு மாதிரி தெரியுறீங்க.”

   “ஹலோ, நான் சின்னப்பொண்ணுதான். இந்த வேலையில உங்களைவிட டூ இயர்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஜாஸ்தி. ஆனா, நீங்க ரொம்ப சீனியர்தானே!”

   அவளின் அந்த `ரொம்ப சீனியர்’  வார்த்தைகள் என்னைக் காயப்படுத்திய நொடியில் அலறினேன்.

   “ரொம்பல்லாம் இருக்காது. உங்களைவிட ரெண்டு செட்” என நான் பதறுவதைப் பார்த்து,

   “யூ டூ லுக் குட் இன் திஸ்” என்றாள். ஆனால் அதில் எந்தவித காதல், காம உணர்வும் இல்லாமல்  `ஒரு டீ சொல்லு’ என்பதுபோல்தான் தட்டையாகச் சொன்னாள்.

   “லெட்ஸ் கெட் இன் டு பிசினஸ்” என்றவள், எழுந்துபோய் எங்கிருந்தோ வெள்ளைத் தாள்களையும் வண்ணப் பேனாக்களையும் எடுத்துக்கொண்டு வந்தாள்.

   “இது பெரிய ஈவென்ட். நேத்து கேட்டீங்கல்ல. அல்மோஸ்ட் 1,000 பேர நாம கவனிக்க வேண்டி இருக்கும். இந்த மாதிரி ஈவென்ட் மேனேஜ்மென்ட்ல நமக்கு என்னவெல்லாம் சேலஞ்சஸ் இருக்கும்னு லிஸ்ட் அவுட் பண்ணிட்டு, அதுக்கு நாமளே பதில் சொல்லிக்கிட்டோம்னா சிம்ப்பிளா முடிஞ்சிடும்” என அவளாகவே சொல்லிக்கொண்டு எழுதத் தொடங்கினாள்.

   எனக்கு ஏதோ விண்ணுலகில் வீற்றிருப்பது போல் இருந்தது. `ஞாயிறு போற்றுதும்’ என்ற வாக்கியம் நினைவுக்குள் வந்து போனது.

   “பெரிய சேலஞ்ச், ஏர்போர்ட்ல இருந்து இவங்களை ஹோட்டலுக்குக் கூட்டிட்டு வர்றது. அப்புறம் ரெண்டு நாள் கழிச்சு ஏர்போர்ட்ல டிராப் பண்றது. மற்றபடி ஒன்ஸ் தே ஆர் இன், எல்லா டிப்பார்மென்ட்லயும் அலெர்ட் கொடுத்து அதை ஃபாலோ பண்ணிட்டாலே போதும்.”

   அன்று அவளோடு காபி குடித்தது, சுகந்தம் சுவாசித்தது என ஒவ்வொரு விநாடியையும் மெள்ளத்தான் கடந்தேன். அவள் அதிவேகமாக வேலைகளை முடித்துக் கிளம்பிப் போய்விட்டாள்.

   அற்புதமாக நடத்தி முடித்தோம் அந்த ஈவென்ட்டை.

   “என்ன மேடம், பார்ட்டி எல்லாம் கிடையாதா?” என்ற என் தூண்டிலுக்கு என்னையே புழுவாகப் பார்ப்பதுபோல் பார்த்து, “வொர்க் பண்ணது நானு. நீங்கதானே ட்ரீட் கொடுக்கணும்?” என்றாள்.

   அப்போதுதான் ஜி.எம் எங்களை அவசரமாக அழைத்து, எங்கள் அலுவலக மொழியில் சொல்வதானால் என் பேன்ட்டைக் கழற்றினார். ஆம். எங்கள் ஹோட்டல் டிரைவர், வட இந்தியப் பெண்ணிடம் தகாத வார்த்தை பேசிவிட்டானாம். அதற்கு நான்தான் பொறுப்பு. ‘ஓட்டுநர்களைச் சரியாக க்ரூம் செய்யவில்லை’ எனத் திட்டித் தீர்த்துவிட்டார்.

   வெளியே வந்து ஆய்ந்த அறிகையில், அந்தப் பெண் பாண்டிச்சேரி போகும் வழியில் இரவில் டிரைவர் சீட்டுக்கு அருகில் அமர்ந்து உறங்கியிருக்கிறாள். நாள் முழுவதும் ஓட்டிக் களைத்த ஓட்டுநர், இரவில் இப்படி அருகில் அமர்ந்து குறட்டை விட்டுக்கொண்டு வரும் பெண்மணியிடம், “தூங்காதீர்கள், எனக்கும் தூக்கம் வரும்” என்று சொல்ல முற்பட்டு, இவ்வளவு பெரிய பிரச்னை ஆகிவிட்டது.

   மது விழுந்து விழுந்து சிரித்தாள். ஏனெனில், அந்தப் பெண்ணிடம் ஆங்கிலத்தில் இப்படிச் சொல்லியிருக்கிறார் ஓட்டுநர், “மேடம், இஃப் யூ ஸ்லீப், ஐ வில் ஸ்லீப் வித் யூ.”

   `நீங்கள் தூங்கினால், நானும் தூங்கிவிடுவேன்’ என்பதை இப்படிச் சொன்னதும், அந்தப் பெண் தாம் தூம் எனக் கத்தி பேனிக் பட்டனை எல்லாம் அழுத்திப் பாலியல் பிரச்னை வரை கொண்டுபோய்விட்டாள்.

   ``அவன் எப்படி என்னோடு படுப்பேன் என்று சொல்வான். நான் டெல்லியில் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா?” என்று கத்திக் கொண்டிருந்த பெண்ணை, நான் பரிதாபமாகப் பார்த்தேன். இன்னும் கொஞ்சம் விட்டால் மீடியாவுக்குப் போய்விடுவாள்போலிருந்தது.

   மதுதான் தக்க நேரத்தில் வந்து அந்தப் பெண்ணிடம் அது மொழிப் பிரச்னை என்றும் அவன் சொல்ல நினைத்தது இதுதான் என்றும் விளக்கி, ரூம் பில்லில் பாதியைக் குறைத்து மங்களம் பாடி அனுப்பிவைத்தாள். எனக்குப் போன உயிர் திரும்பிவந்தது.

   மது என்னிடம் சொன்னாள் “எப்பவுமே கம்யூனிகேஷன் கரெக்ட்டா இருந்துட்டா, லைஃப் ரொம்ப ஈஸி. நாம நினைக்கிறதைத் தேவையான இடத்துல சொல்லத் தெரிஞ்சுட்டா போதும்.”

   நான் ஆமோதிப்பதுபோல் தலையாட்டி “ஆனா, எல்லாரும் எல்லாத்தையும் எல்லார்கிட்டயும் கம்யூனிகேட் பண்ணிற முடியாது இல்லையா?”

   மது குழப்பமாகப் பார்க்க,

   “ஓகே, அன்னிக்குப் பேசிட்டிருக்கும்போது உங்களுக்குப் பிரெஞ்சு மொழி தெரியும்னு சொன்னீங்க ரைட்?”

   “யெஸ்.”

   “அப்போ, அதுல, ‘நான் உங்க கூடவே கடைசி வரைக்கும் இருந்தா நல்லா இருக்கும்னு இப்ப தோணுது. ஆனா, ஏன்னு தெரியலை. இந்த ஏன்னு தெரியாத காரணம்தான் எனக்குப் பிடிச்ச காரணம்’. இந்த சென்ட்டன்ஸை எப்படி அப்படியே இதே ஃபீலோடு சொல்ல முடியும்? அந்த மொழியில அதுக்கு இடம் இருக்கா?”

   சட்டென அவள் முகம் மாறியது. எழுந்து போய்விட்டாள். எனக்கு லேசாக உதறல் எடுத்தது. வழக்கம்போல் ஏ-4 தாளே துணை என ராஜினாமா கடிதம் எழுத வேண்டியதுதான்போல. எந்நேரமும் ஜி.எம்மிடம் இருந்தோ, ஹெச்.ஆரிடமிருந்தோ அழைப்பு வரக்கூடும் என மொபைலைப் பார்த்தேன்.

   வாட்ஸ்அப்பில் மதுவின் டி.பி மிளிர்ந்தது.

   `நீ ஒரு நல்ல கம்யூனிக்கேட்டர். எனக்கு சொல்லவேண்டியதைத் தீர்க்கமா சொல்லிட்ட. அதுவும் பிரெஞ்சு, அது இதுன்னு சேஃப் சைடு கம்யூனிகேஷன், ஐ லைக் இட்.’

   அப்பாடா என்று இருந்தது. கையெடுத்து கும்பிடும் எமோஜியைப் பதிலாக அனுப்பினேன். அதற்கு `பிரச்னை பண்ணாமல் விட்டதற்கு, கோடானுகோடி நன்றிகள் அம்மா தாயே’ என்று அர்த்தம் என்பது என் மனதுக்குத் தெரியும்.

   உடனே பதில் அனுப்பினாள் `சரி, அதை பிரெஞ்சுல சொல்லித்தரணுமா?’

   ஒரு நொடிதான் யோசித்தேன். `இல்லை. அந்தப் பொண்ணுக்குத் தமிழும் தெரியும். கரெக்ட்டா கம்யூனிகேட் பண்ணிட்டேன்னு அவளே சொல்லிட்டா’ கூடவே நான்கைந்து மலர்கள், சிரிப்பு, ஹார்ட்டின் என அனைத்து எமோஜிகளையும் அனுப்பிவைத்தேன். அந்த நொடியில் உயிரைப் பணயம் வைப்பதுபோல்தான் இருந்தது. ஏனெனில், வெகுநாள்களுக்குப் பிறகு அப்பாவுடன் ஸ்நேகம், அலுவலகத்தில் ஓரளவு பிடித்தமான வேலை என அன்றாடம் கச்சிதமாகப் போய்க் கொண்டிருக்கிறது. இப்போது மது ரூபத்தில், அவள் இதைத் தவறாக எடுத்துக்கொண்டு பிரச்னை செய்துவிட்டால், அவ்வளவுதான். சீட் உடனே கிழிந்துவிடும். அப்பா மீண்டும் “நீயெல்லாம்...” எனப் பல்லவி பாடுவார். பைக் டியூ கட்டுவதே பெரும்பாடு ஆகிவிடும்.

   மதுவிடமிருந்து பதில் வரவில்லை. ஆயிரம் பாம்புகள் மொபைலுக்குள்ளிருந்து நாக்கை வெளியே நீட்டி என்னைக் கொத்த வருவதுபோல் இருந்தது, ஒவ்வொரு முறையும் நான் மொபைலை எடுத்துப் பார்க்கும்போதும். அனுப்பியிருக்கக் கூடாதுதான். நல்ல நட்பு, நல்ல தோழியாக மதுவோடு காலம் முழுக்க இருந்திருக்கலாம்தான். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், அவள் புற அழகில் ஒரு நாளும் நான் ஈர்க்கப்படவில்லை (சரி சரி, அந்த ஞாயிற்றுக்கிழமை தவிர) அவளின் ஆளுமை, சிரிப்போடு சிக்கலைக் கடக்கும் முறைமை என ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன.

   பலூனை ஊதும்போது காற்றின் கொள்ளளவுக்கான பயம் பீடிக்குமே, அப்படித்தான் நகர்ந்தன நொடிகள். மனம் முழுக்க வாட்ஸ்அப் குறித்த விசனம்தான். `எல்லாம் சரி, அந்த ஹார்ட்டின் எமோஜியைத் தவிர்த்திருக்கலாம்’ என்று கடைசியாக ஒரு ஞானம் பிறந்தது. இனி பிறந்து?
   மறுநாள் என்னை ஜி.எம் அழைப்பதாகக் கட்டளை வந்தது. அடுத்த வாரம் ரிட்டையர்ட் ஆகப்போகிறவர். அதற்கான கடுகடுப்பில் இருந்தார்.

   உள்ளே நுழைந்தேன். மது இல்லை. `சரி எதுவானாலும் எதிர்கொள்வோம். அப்படிப் பெரிய தவறு ஒன்றும் செய்துவிடவில்லை. என் காதலை மிக நாகரிகமாகத் தெரிவித்தேன். ஏற்கலாம் அல்லது மறுக்கலாம். இப்படி மூன்றாவது மனிதனிடம் போய்ச் சொல்லி, வேலைக்கே உலைவைப்பது எல்லாம் எவ்வகை நியாயம் மது?’ என்று மனதுக்குள் கேள்வி.

   என்னை அமரச் சொன்னார்.

   “யெஸ் சார்.”

   “மது...” என இன்டர்காமில் அழைத்தார். நான் நாற்காலியின் நுனியில் அமர்ந்திருந்தவன் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்வதுபோல பின்வாங்கிக்கொண்டேன்.

   மது நுழையும் வரை அமைதியாக ஏதோ வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

   `என்ன இது, பள்ளிக்குழந்தைபோல் செய்துவிட்டாளே இந்த மது!’ என நினைத்துக்கொண்டிருக்கும்போதே வந்தாள்.

   “கம் கம் மது, சிட்” என என் அருகில் அமரவைத்தார். நான் அவள் பக்கம் பார்ப்பதைத் தவிர்த்தேன்.

   ஜி.எம் கணீரெனப் பேசினார், “ரகு, ஹோப் மது இன்ஃபார்ம்டு யூ. உனக்கு புரமோஷன் வந்திருக்கு. மதுதான் ஸ்ட்ராங்கா ரெக்கமண்ட் பண்ணாங்க. யூ ஹேவ் டு தேங்க் ஹெர்.”

   என் விழிகள் விரிந்தன. படக்கென அவளைத் திரும்பிப் பார்த்தேன்.

   ஜி.எம்மிடம் மது மிக நிதானமாக, “சார், ஒரே டிபார்ட்மென்ட்ல ஒரே கிரேட்ல நாங்க ரெண்டு பேரும் இருந்து கன்ட்டினியூ பண்ணலாமா, இல்ல பாலிசியில ஏதாவது அப்ஜெக்‌ஷன் இருக்கா?”

   நானும் ஜி.எம்மும் குழப்பமாக அவளைப் பார்க்க, “யெஸ் சார், நாங்க மேரேஜ் பண்ணிக்கிறதா ப்ளான் பண்ணியிருக்கோம்” என்றாள்.

   ``வாவ், கன்கிராட்ஸ்! என்கிட்ட சொல்லவேயில்லையே” என்றார்.

   “என்கிட்டயே இப்பத்தான் சார் சொல்றா” என்றேன். என் முகத்தில் அவ்வளவு சிரிப்பு இருந்திருக்க வேண்டும். ஜி.எம் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.

   “அப்போ டபுள் ஹேப்பினஸ்” எனக் கையைக் குலுக்கி விடைகொடுத்தார். மறக்காமல் “ஆல் தி பெஸ்ட் போத் ஆஃப் யூ” என்றார்.

   அப்படி அதிரடியாகக் காதலைச் சொன்னவள் மது. அதன் பிறகு என்னைவிடவும் என் குடும்பத்தாரிடம் அவ்வளவு பாசமாகப் பழகியவள். குறிப்பாக, என் அப்பா அவளுக்கு நல்ல நண்பர் ஆகிவிட்டார். இப்படி இத்தனை நெருக்கம் ஆன பிறகும், அவள் குணம் அறிந்தும், இத்தனை வருடங்கள் அவளோடு இருந்தும் நேற்று நான் அந்தக் கேள்வியைக் கேட்டிருக்கக் கூடாதுதான். சரி நான் ஒன்றும் அப்படித் தப்பாகக் கேட்கவில்லையே. புதிதாக ஒருவன் வேலைக்குச் சேர்ந்திருக்கிறான். அவனுக்கு ட்ரெய்னிங் கொடுக்கும் பொறுப்பு மதுவுக்கு. அவனைப் பார்த்தவுடன் நான் எதேச்சையாகக் கேட்டேன், “இப்பிடித்தானே நானும் ட்ரெய்னிங்னு நுழைஞ்சேன்”அவ்வளவுதான்.

   இந்த “வாட் டு யூ மீன்” என்ற வாக்கியத்தைக் கண்டுபிடித்தவன் மட்டும் என் கையில் கிடைத்தால் அவ்வளவுதான். அதையே ஐம்பது முறை கேட்டிருப்பாள் விதவிதமாக. நான் ஒருகட்டத்தில், “பொசஸிவ்ல கேட்டுட்டேன். அவன் ஆள் வேற கொஞ்சம் நல்லா இருந்தான். அதான், சரி ஸாரி.” அதற்கும் வாட் டு யூ மீன்தான்!

   “அப்போ நீங்க அழகா இருக்கிறதா நினைப்பா?” அஸ்த்திவாரக்கல்லை லேசாக ஆட்டத் தொடங்கினாள்

   “சரி விடு, ஜாலியாக் கேட்டேன்”

   “இதுதான் ஜாலியா? அப்போ உங்கிட்ட பழகினமாதிரிதான் எல்லர்கிட்டயும் பேசுவேன்னு நினைச்சுட்டியா?” ஒரே நொடியில் கண்ணாம்பாவில் துவங்கி, சரோஜாதேவிக்குள் புகுந்து,இறுதியில் ஓவியாவாக முடித்தாள், “கெட் லாஸ்ட், நோ மோர் சான்ஸ் டு யூ.”

   மது இல்லாமல் அலுவலில் மனம் லயிக்கவில்லை. எல்லாவற்றையும்விட அதிகக் கோபமும் இயலாமையும் அவள் வாட்ஸ்-அப் ஆன்லைனில் தொடர்ந்து இருப்பதைப் பார்க்கும்போதுதான் ஏற்பட்டது. நான் டைப் செய்வது போல் ஆரம்பித்து அழித்துக்கொண்டே இருந்தேன். அவளுக்கு டைப்பிங் என்று வரட்டும் என. அவள் சட்டைசெய்யாமல் ஆன் லைனிலேயே இருந்தாள்.

   அன்று ஒரு நாளைக் கடப்பதே கடினமாக இருந்தது என்றால் அதனையடுத்து வந்த இரண்டு நாள்கள் அலுவலகத்தில் மது இல்லாமல் எதுவுமே ஓடவில்லை. சட்டென வற்றிப்போன குளம்போல் காட்சியளித்தது அலுவலகம். என் மேஜைக்கு வலப்பக்கமும் ஏ-4 தாள்கள்  இருந்தன; இடப்பக்கமும் இருந்தன. மது இல்லாத இந்த அலுவலகத்தில் இனி இருக்கப் போவதில்லை என முடிவெடுக்கச் சொல்லி அந்தத் தாள்கள் படபடப்பதுபோல் தோன்றின. மின்விசிறியைத் திசைமாற்றி வைத்துவிட்டு கிருத்திகாவின் உதவியை நாடினேன்.

   கிருத்திகா மதுவோடு ஒன்றாக வேலைக்குச் சேர்ந்தவள். ஃபுட் டிப்பார்ட்மென்ட். யார் என்னவென்றே தெரியாமல், ஆனால் ஒரே நாளில் வேலைக்குச் சேர்ந்துவிட்ட ஒரு தகுதியே நெருக்கமான நண்பராக ஆவதற்கான தகுதியாகிவிடும். அப்படித்தான் மதுவிற்குக் கிருத்திகா.
   கிருத்திகாவிடம் கெஞ்சிக் கூத்தாடி மதுவை அழைக்கச் சொல்லி ஸ்பீக்கரில் போடச் சொன்னேன்.

   “என்ன மது இன்னும் ஒடம்பு சரி ஆகலையா?”

   மதுவின் குரல் கம்மியிருந்தது. எல்லாம் என்னால்தான்.

   “பெட்டர் கிருத்திகா. த்ரோட்தான் சரி இல்ல, இன்ஃபெக்ட் ஆகிருச்சு, பட் நார்மல், அம்மா அப்பாகூட வெளில போயிட்டு இருக்கேன், சொல்லு”

   நான் சைகையில் என்ன பேசவேண்டும் என்பதைச் சொன்னேன்.

   “ஆமா, என்ன உன்னோட ஆளைத் திட்டிவிட்டியா? ரெண்டு நாளா ஆள் எக்ஸ்பெயரி ஆன நூடுல்ஸ் மாதிரி திரிஞ்சு போய் இருக்கான்”

   “உங்கிட்ட வந்துட்டானா, இஸ் இட் ஆன் ஸ்பீக்கர்? இஸ் ஹி அரவுண்ட்?”

   உடனே பதறி ஸ்பீக்கரை ஆஃப் செய்தவள்

   “ச்சே, ஐம் இன் லேடிஸ் ட்ரெஸ்ஸிங் ரூம்டி, பை த வே, காலைல ரொம்ப டிஸ்டர்பா இருந்தான், நார்மலா ஏதாவது சிரிச்சுப் பேசிட்டுப் போவான், அதான்”

   பேசிக்கொண்டே ஹேண்ட்ஸ் ஃப்ரியை அவள் ஒரு காதிலும் என் காதில் ஒன்றையும் வைத்தாள்.

   மதுவின் குரலை உன்னிப்பாய்க் கேட்டேன்.

   “இல்ல கிருத்திகா, அவன்னு  இல்ல, மோஸ்ட்லி எல்லா ஆம்பளைங்களுமே பொண்ணுங்கன்னா ரொம்ப ஈஸியா எல்லார்கிட்டயும் எல்லாத்தையும் பேசிருவோம்னு நினைக்கிறாங்க. யாருகிட்டயுமே பேசலன்னா பிரச்னை இல்ல, ஒருத்தன்கிட்ட பேசிட்டா, அவ எல்லார்கிட்டயும் பேசிருவா, போயிருவான்னு ஒரு ஃபீல், இரிட்டேட்டிங்கா இருக்கு, சில விஷயத்தை எக்ஸ்ப்ளைனே பண்ணக் கூடாதுன்னு நினைப்பேன். எங்க அம்மா எங்கிட்ட இவர்தான் உங்கப்பான்னு என்னிக்காவது எக்ஸ்ப்ளைன் பண்ணி இருக்காங்களா என்ன? பேசிக் ஃபீல் , பேசிக் ட்ரஸ்ட் இத எல்லாம் எக்ஸ்ப்ளைன் பண்ணித்தான் புரியவைக்கனும்னா, அப்பிடி ஒரு ரிலேசன்சிப்பே தேவை இல்லன்னு தோணுது, இப்பக் கூட அவன் கைல கெடச்சா நல்லா பளார்னு ஒரு அறை விடனும்னுதான் தோணுது. விடு, லீவ் தட்”

   “ஹலோ, சோடா இருந்தா குடிச்சக்கப்பா, இப்பிடி மூச்சு விடாம பேசுற, ஆனா பாவம்ப்பா..”

   அவர்கள் பேசிக்கொண்டே இருந்தார்கள். நான் ஹேண்ட்ஸ் ஃப்ரியை மெதுவாகக் கழட்டி கிருத்திகாவிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தேன்.

   மிகவும் காயப்படுத்திவிட்டேன் என்பது அதுவரை புரிந்திருக்கவில்லை. சில வார்த்தைகளைச் சொல்லிவிட்டு நாம் சிரித்து மழுப்பினாலும், அந்த வார்த்தைகள், ‘வீழ்த்த வேண்டும் என்பதற்காகத்தான் சொல்லப்பட்டது’ என்பதை உணர்த்திவிடும் போல. வார்த்தைகள் மிகவும் விசுவாசமானவை. அவற்றின் நோக்கத்தையும் ஆளையும் அவை சென்றடைந்துவிடும். நான் கேட்ட வார்த்தையின் அமிலத்தன்மை மதுவின் மனதைப் பொசுக்கி விட்டது என்பதை நினைக்கும்போதே வேதனையாய் இருந்தது.

   கிருத்திகாவை நிமிர்ந்து பார்க்கும் நிலையில்கூட என் மனம் இல்லை. வெளியே வந்துவிட்டேன்.

   என் மனம் இப்போது ஒரு வேண்டாத வேலையைப் பார்த்தது. ஆம், சம்பந்தமில்லாமல் ஒரு பழைய நினைவை எங்கிருந்தோ தரதரவென இழுத்துக்கொண்டு வந்தது.

   ஒருமுறை ஷாப்பிங் போகலாம் என முடிவெடுத்த நொடியில் கிளம்பிவிட்டோம். மது எப்போதும் அப்படித்தான்.

   “பிஸியா? வீட்டுக்குப் போகணுமா சீக்கிரம்?”

   “இல்லையே, ஏன்?”

   “சரி பார்க்கிங்ல வெயிட் பண்ணு, யூனிஃபார்ம் மாத்திட்டு வர்றேன், டாப்ஸ் எடுக்கணும். போலாம்”

   அவ்வளவுதான். கிளம்பிவிட்டோம்.

   வளாகத்திற்குள் நுழைந்து, அவள் எப்போதும் எடுக்கும் பிராண்ட் டிவிசனுக்குள் நுழைந்தவள், அள்ள ஆரம்பித்தாள். நான் வழக்கம்போல ட்ரையல் ரூம் இருக்கும் திசையில் தேவுடு காத்துக்கொண்டிருந்தேன்.

   வழக்கத்தைவிடவும் நேரம் அதிகமாகச் சற்று சந்தேகம் அடைந்து வளாகத்திற்குள் தேடினால், நான்கைந்து பெண்களைச் சேர்த்துக்கொண்டு, மேலாளர் என டை கட்டிக்கொண்டு நின்றவனிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள். ட்ரையல் ரூம் கண்ணாடியை ஆட்காட்டி விரலால் தொட்டுப் பார்த்திருக்கிறாள். இடைவெளி ஏதும் இல்லாமல், விரல் நுனியும் விரலின் பிம்ப முனையும் தொட்டுக்கொண்டிருக்கிறது. அப்படி இருந்தால், அந்தக் கண்ணாடியின் பின்புறம் இருந்து  ஆடை மாற்றுவதை பார்க்கலாம் எனும் சாத்தியம் இருக்கிறதாம். அதைத் தெரிந்து வைத்திருந்த மது, அங்கிருந்த மற்ற பெண்களையும் இணைத்துக்கொண்டு, விளக்கம் கேட்க, மேனேஜரின் பதில் திருப்தி அளிக்காததால், மற்ற பெண்கள் நேரம் ஆகிவிட்டது என விலகிவிட்டாலும், என்னை இழுத்துக்கொண்டு அருகாமையில் இருந்த போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் புகார் அளித்து, அந்த மேனேஜரை அங்கு வரவழைத்து, கையோடு கண்ணாடியை மாற்றிவிடுவதாக அவன் எழுதிக் கொடுத்தவுடன் தான் அந்தப் பிரச்சனையை விட்டாள்.

   “என்ன மது, அவன் சொன்ன மாதிரி, அங்க சுவர்தானே இருக்கு, கண்ணாடி வாங்கும்போது பார்க்காம வாங்கி இருக்கலாம்தானே, இந்த மாதிரி பெரிய ஷோ ரூம்ஸ்ல ஈஸியா அப்படிப் பண்ண மாட்டாங்க மது”

   “அப்படி நம்பித்தான போறோம். அந்த நம்பிக்கைய நாசப்படுத்துனதுக்குத்தான் இந்த மாதிரி செஞ்சேன். இவனுங்க பண்றதால, யாரையும் எதையும் முழுசா நம்பமுடியாம போயிரக்கூடாது இல்ல.. அதான் இந்த லெஷன்” 

   மது மிக மென்மையான குரலில்தான் அப்படிச் சொன்னாள். ஆனால் அந்த வார்த்தைகளில் அவ்வளவு  அழுத்தம் பொதிந்திருந்தது.

   அப்படிப்பட்ட மதுவா இனி மனசு மாறப்போகிறாள்? எனக்காகப் பரிந்து பேசிக்கொண்டிருக்கும் கிருத்திகாதான் பாவம். என்னால் அவளுக்கும் திட்டு விழுந்திருக்கும்.

   விளையாட்டாக ஆரம்பித்த சண்டை உண்மையிலேயே முறிவுக்கு வந்ததுபோல் தோன்றத் துவங்கியது. நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவள் டி.பி சட்டென மறைந்து போனது. ஆம், பிளாக் செய்துவிட்டிருந்தாள். அதுவரை அடக்கி வைத்திருந்த அத்தனை உணர்வையும் சேர்ப்பித்து அழைத்தேன். முதல் ரிங் போவதற்குள்ளாகவே டிஸ்கனெக்ட் செய்தாள்.

   கழிவிரக்கம் கொஞ்சம் கண்ணீரைக் கூட்டி வந்தது. அப்பாவிடம் இருந்து போன், உடனே வீட்டிற்கு வரச்சொல்லி. சில நாட்கள் இப்படித்தான் ஆகும். எல்லா கெட்டவையும் ஒரே நாளில் நடந்துவிடும். ‘அப்படியான நாள்’ என நினைத்துக்கொண்டே வீட்டை அடைந்தேன்.

   உள்ளே,

   மது, குடும்ப சகிதம் அமர்ந்திருந்தாள்.

   அப்பா என்னிடம்,

   “ஏண்டா எப்பப் பாரு சண்ட போடுறியாமே, நேத்து நைட் வீட்டுக்குப் போனதுக்கு அப்புறம் உம் மேல ஆத்திரம் வந்து ஓங்கி ஒரு அறை விடனும்னு நினைச்சாளாம், அப்படி நெனச்ச உடனே அடிக்கணும்னா கல்யாணம் பண்ணிக்கிறதுதான் ஒரே வழின்னு முடிவு பண்ணிட்டாளாம்”
   அப்பா சொல்லச் சொல்ல,மதுவைப் பார்த்து சிரித்தேன், கண்ணில் நீர் வர.

   வாட்ஸ்-அப்பில் கிருத்திகா நிறைய பூக்கள் மற்றும் வாயைப் பொத்திக்கொண்டிரு எனும் எமோஜியையும் அனுப்பி வாழ்த்தி இருந்தாள்.
   http://www.vikatan.com
  • By நவீனன்
   குணவேறுபாடு
   சிறுகதை: மேலாண்மை பொன்னுச்சாமி, ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு
    

   சுனைக்கனி, பலசரக்குக் கடைக்குள் உட்கார்ந்திருந்தான். மடியில் நோட்டும் சிட்டைத்தாளும். கடை பூராவும் நிதானமாகப் பார்வையை அனுப்பினான். ‘வேற ஏதாச்சும் கொள்முதல் பண்ணணுமா?’ என ஒவ்வொரு பொருளாக யோசித்து சிட்டையில் எழுதினான்.

   கல்லாப்பெட்டியைத் திறந்தான். ரூபாயை எடுத்தான். ‘எம்புட்டு வெச்சிட்டுப் போகணும்?’ என்ற யோசிப்பு.

   `கரிவலம்வந்தநல்லூர் மிட்டாய் வியாபாரி, வரகுணராமபுரம் புகையிலைக்காரர், மாதாங் கோவில்பட்டி முட்டை வியாபாரி, செவல்பட்டி சேவுக்காரர், நத்தம்பட்டி பொடிமட்டைக்காரர்... இவங்கதான் இன்னைக்கு வந்து சரக்கு போடுவாக. அவுகளுக்கு ரூவா கட்டணும்’ - தோராயமாக மனசுக்குள் கூட்டிப்பார்த்தான்.

   ஒரு தொகையை வைத்துவிட்டு, மீதிப் பணத்தை எடுத்துப் பிரித்து, அண்ட்ராயரின் சைடு பைக்குள்ளும் மேல்சட்டையின் உள் பைக்குள்ளும் மெத்தையாகத் திணித்தான்.

   `திருவேங்கடத்துக்கு சரக்கு வாங்கப் போகணும். கருவாட்டுக் கடை, காய்கறிக் கடை, மளிகைக் கடை, அரிசிக் கடைகளில் வேலை இருக்கு. வாழைத்தார் ரெண்டு தூக்கணும். நாட்டு வாழை நயஞ்சரக்கு தூக்கணும்னா... வெரசா போகணும். 10 மணிக்கு முன்னாடியே நல்ல அயிட்டங்களை கடைக்காரங்க தூக்கிருவாங்க...’

   மணியைப் பார்த்தான் சுனைக்கனி. 9:15. காலை ஏறுவெயில், சுள்ளெனக் காந்தியது. அவனுக்குள் பரபரப்பு. கடையோடு சேர்ந்த வீடு. சாப்பிட்டுக்கொண்டிருந்தாள் பூர்ணம்.

   ‘‘பூர்ணம்... ஏம்மா பூர்ணம்...’’

   ‘‘என்ன... இந்தா வந்துட்டேன்’’ - வாய் நிறையச் சோற்றுடன் பேசுகிற பேச்சின் சொதசொதப்பு.

   ‘‘நேரமாச்சு... வாழைத்தாரு நல்ல தாரு எடுக்க முடியாது.’’

   ‘‘நீங்க புறப்புடுங்க. நான் கடையைப் பாத்துக்கிடுதேன்.’’

   ‘‘அப்ப சரி...’’

   கடையைவிட்டு வெளியே வந்தான். எதிர்வீட்டுத் தாழ்வார நிழலில் TVS XL வண்டி நின்றது.

   ‘‘வரத்து ஏவாரிகளுக்கு ரூவா எடுத்து வெச்சாச்சா?’’

   ‘‘ம்... மாதாகோவில்பட்டி முட்டைக்காரர் வருவாரு. பெருசுலே ஆறு அட்டைக... சிறுசுலே அஞ்சு அட்டைக வாங்கு.’’

   ‘‘சிறு சைஸ் முட்டைக சரியாப் போக மாட்டேங்கு.’’

   ‘‘நாமதான் பாத்துத் தள்ளிவிடணும். கருவநல்லூர் மிட்டாய்க்கார அண்ணாச்சிகிட்டே தேன்மிட்டாய் பாக்கெட் கூடுதலா ரெண்டு வாங்கு.’’

   ‘‘திருவேங்கடத்துலே வாங்கவேண்டிய சாமான்க சிட்டையை நீயும் ஒரு பார்வை பார்த்துக்க.’’

   ‘‘பார்த்துட்டேன். சீரெட்டு ரெண்டு பண்டல் வாங்கணும். வில்ஸ் ஃபில்டர் 12 எழுதிக்கோங்க. கருவாட்டுக் கடைக்குப் போனீகன்னா... வாளைக் கருவாடு வாங்கிட்டு வாங்க.’’

   ‘‘ம்...’’

   வண்டியை எடுத்தான். மடித்த சரக்குகள், அகலமான தூக்குப் பைகள், எண்ணெய் கேன், குட்டிச்சாக்குகள் எல்லாவற்றையும் எடுத்து வைத்துக்கொண்டான்.

   இந்நேர வரைக்கும் விலகியிருந்த நினைவு வந்து அப்பிக்கொண்டது. கட்டைமுள்ளாக நெஞ்சுக்குள் நிற்கிறது.

   `எதிர்லே தட்டுப்படுவாரா... என்ன சொல்ல, எப்படிச் சொல்ல? முகத்துக்கு முகம் பாத்துச் சொல்லிர முடியுமா, வாய் வருமா, நா எழுமா, மனசு துணியுமா?’

   `பச்சைப்பிள்ளையின் கழுத்தைத் திருகி வீசி எறிகிற மாதிரியான கொடுங்காரியம் இல்லையா? குரூர நிஜம் என்னென்னா... எப்படியாச்சும் சொல்லித்தான் ஆகணும்.’

   `இன்னிக்கு என்ன கிழமை? திங்கள், செவ்வாய் கழிச்சு புதன் பிறந்தவுடன் வந்து நிப்பாரு.வண்டிக்குப் போறப்ப `ஏதாச்சும் லோடு இருக்கா?னு கேப்பாரு.’

   ` ‘கடலைமிட்டாய் இருக்கா?’னு கேட்டு வந்து நிற்கிற பாலகனின் கழுத்தை அறுத்துப் போட முடியுமா... அவருக்கு என்ன பதில் சொல்ல?’

   ‘‘வண்டிக்கார அண்ணாச்சி கடைக்கு வந்தார்னா என்னமும் சொல்லவா?’’

   ‘‘நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம்.’’

   பஸ் வந்து வட்டமடித்துத் திரும்பும் காமராஜர் பேருந்து நிலையம் விளிம்பில் இருக்கிற அருஞ்சுனை டிபன் சென்டரில் நின்றான் சுனைக்கனி. ஓர் உளுந்தவடையைப் பிய்த்து வாயில் போட்டு, டீயை அவசர அவசரமாகக் குடித்தான். கொதிக்கிற டீ குடித்து முடித்த வாயில் இருந்து புகை வந்தது.

   ஹோட்டல்காரர் துண்டை இடுப்பில் கட்டியிருந்தார்.

   ‘‘இந்த வாரம் ராசபாளையம் சந்தைக்குப் போவீகளா?’’

   ‘‘ராசபாளையம் போவேன். சந்தைக்குப் போக மாட்டேன்.’

   ‘‘ஏன்?’’

   ‘‘வியாழக்கிழமைதான் சந்தை. நான் வெள்ளி, இல்லாட்டா சனிக்கிழமை போவேன்’’

   ‘‘இது என்னது... புதுசாயிருக்கு?’’- வியப்போடு கேட்ட ஹோட்டல்காரருக்கு, சுனைக்கனி சிரிப்பால் மழுப்பினான்.

   ‘‘அது அப்படித்தான். வாழைத்தாரு தூக்கணும். வெரசா போகணும். நான் வர்றேன்’’ பரபரப்பாகத் தெறித்தோடினான்.

   எக்ஸ்.எல் வண்டியை ஸ்டார்ட் செய்து, ஸ்டாண்டை எக்கித் தள்ளினான். மடித்துக் கட்டிய கைலியும் அரைக்கைச் சட்டையும் வெயிலிலும் வியர்வைக்கசிவிலும் நசநசத்தன. சாமிநாதபுரம் வழியாக திருவேங்கடம். வண்டி, தெற்குத் தெரு தாண்டி பாலத்தில் இறங்கி ஏறி, தெற்கில் நீண்டுகிடக்கும் அகலமான தார் ரோட்டில் விரைந்தது. ஆக்ஸிலேட்டரை முழுமையாகத் திருகவில்லை. நிதானமாக முறுக்கி, ஒரே சீரான வேகத்தில் வண்டியை ஓட்டினான்.

   பரந்துவிரிந்த கரிசல்காட்டுச் சமுத்திரத்தைக் கீறிப் பிளந்துகொண்டு தெற்குப் பக்கம் நீண்டு கிடந்தது தார்ச்சாலை. புத்தம்புதியது.

   கரிசல்காட்டு வண்டிப்பாதைக்கு நடுவில் நீளும் குறுகலான ஒற்றையடிப்பாதையில், லோடு கட்டிய சைக்கிளை மிதிக்க முடியாமல் மிதித்து இவன்பட்ட அந்த நாள் சிரமங்கள் நினைவில் உரசிச் சென்றன. அதற்கும் முன்னால்... ஓலையில் கட்டிய மண்டைவெல்லம் சிப்பம் ரெண்டு கட்டிய சாக்கை தலையில் வைத்து சுமந்து, பீடி, சிகரெட் சில்லறைச் சாமான்கள் கிடக்கிற தூக்குப் பையைத் தோளில் போட்டு, கண்மாய்க் காட்டுக்கரைப்பாதையில் நடந்து சீரழிந்து, சரக்கு வாங்கிய அந்தப் பழைய நாட்கள்...

   இன்றைக்கு தார்ச்சாலையில் வழுக்கிப் போகிறது எக்ஸ்.எல் வண்டி.

   பங்குனி மாத வெயில் தீயாகச் சுட்டது. கன்னத்திலும் இடது கையிலும் வெயில் காந்தியது. கை ரோமங்கள் இடையேயும் நெஞ்சு ரோமங்கள் இடையேயும் வியர்வை நெளிவுக்கோடுகள் முத்து முகத்துடன் இறங்கின.

   கரிசல் தரிசில் ரொம்பத் தூரத்தில் செம்மறி ஆடுகள் மேய்ந்தன. எருமைகளும் வெள்ளாடுகளும் வேறோர் இடத்தில் மேய்ந்தன. கருவேலமரத்தில் உச்சியில் ரெண்டு மைனாக்கள். விரித்த சிறகுகளுடன் பறக்கும் பருந்தை விரட்டின கரிச்சான்கள்.

   இதை எதையும் கவனிக்கும் மனநிலையில் இல்லை, சுனைக்கனி. இவன் மனசெல்லாம் வேதனையான நினைவுகள், ரணகள யோசனைகள்.வண்டிக்காரத் தேவர் அண்ணாச்சியிடம் எப்படிப் பேச்சைத் தொடங்குவது, எப்படிச் சொல்ல, வருஷக்கணக்கிலான உறவை எப்படி அறுக்க? முகம் முறித்து, தாட்சண்யம் இல்லாமல் சொல்ல முடியுமா?

   கிராமத்தில் ஒன்பது கடைகளில் ஒன்றாக இருந்தது, இவன் கடையும். ஒன்பது கடைகளில் பெரிய கடை என்ற நிலைமை உண்டானது, வண்டிக்காரத் தேவர் அண்ணாச்சியால்தானே!
   சைக்கிளில் திருவேங்கடம் சென்று, சரக்கு கொள்முதல் பண்ணி, கடையில் விற்கும் வரை ஒன்பதில் ஒன்று.

   திருவேங்கடம் எட்டிப்பிடிக்கிற தூரம்தான். கடைக்காரன் போய் வாங்குகிற சரக்குகளை, அதே விலைக்கு நாம் வாங்க முடியுமே என எல்லோரையும் நினைக்கவைக்கும். வசதியுள்ள வீட்டுக்காரர்கள் திருவேங்கடம் போய்விடுகின்றனர்.

   `இதுவே... தூரந்தொலைவான ராஜபாளையம் போய் மொத்தமொத்தமாக சரக்குகள் வாங்கி, மூடைக்கணக்குகளில் வண்டி பாரம் ஏற்றிக் கொண்டுவந்தால், விலை குறைவாக சரக்கு தர முடியுமே... வியாபாரத்தைக் கூடுதலாக்கலாமே...’ என யோசித்தான். சுனைக்கனியின் வியாபார மூளை விவரமான திசையில் பயணித்தது.

   சுனைக்கனியின் முதல் பார்வை, ராக்குத்தேவர் மீதுதான் விழுந்தது. நல்ல வலுத்த திரேகம். தாட்டியமான தோற்றம். காளை மாடு இருக்கிறது; வண்டியும் இருக்கிறது. நிலம் முக்கால் குறுக்கம் (ஏக்கர்) மட்டுமே. புஞ்சை வேலை இல்லாத நாட்களில் கூலி உழவு, வண்டி பாரத்துக்குத்தான் போவார். ஊர் தவிர வேறு ஒன்றும் தெரியாது. இந்த ஊரே அவரது உலகம். அவரும் அவரது துணைவியார் முத்தக்காவும் மட்டுமே சேர்ந்து கட்டின மண் வீடு; கூரை மேய்ச்சல்.

   வீட்டு முற்றத்தில் போய் நின்றான் சுனைக்கனி.

   ‘‘ஏய் முத்து... கடையிலே பாக்கி ஏதாச்சு வெச்சிருக்கியா?’’

   ‘‘இல்லியே...’’

   ‘‘பெறவு... வீட்டு வாசல்லே கடைக்காரன் நிக்கான்?’’

   ‘‘என்னன்னு நீரே கேளும்... என்ன சுனை, என்னப்பா?’’

   ‘‘அண்ணாச்சியையும் உங்களையும்தான் பார்க்க வந்தேன். ஒரு முக்கியமான விஷயம்.’’

   அவனது அமுங்கிய குரலில் இருந்த தயக்கம், ராக்குவையும் முத்துவையும் ரொம்ப யோசிக்க வைத்தது. கவனத்தைத் தீவிரமாக்கி, இவன் மீது குவித்தார்கள்.

   ‘‘சொல்லு... என்ன விஷயம்பா?’’

   ‘‘புஞ்சை வேலை இல்லாத நாள்லே வாடகை வேலைகளுக்குத்தானே போறீக?’’

   ‘‘ஆமா...’’

   ‘‘வியாழக்கிழமை வியாழக்கிழமை ராசபாளையம் சந்தைக்கு வண்டி போடுதீகளா? நம்ம கடை, லோடு வண்டிக்கு சரியா வரும். கைக்கணிசமா வாடகை தந்துருதேன்.’’

   ‘‘ஊரைத் தாண்டுனது இல்லியே நான். அம்ம்ம்ப்ப்புட்டுத் தூரம் எப்படிப் போறது? நமக்கு முடியாதப்பா.’’

   ‘‘முன்னப்பின்னே கல்யாணம் முடிச்சு வாழ்ந்த பழக்கத்துலேயா அக்காவைக் கல்யாணம் பண்ணுனீக? ஊரைத் தாண்டாத அனுபவம் இல்லாமத்தானே இருந்தீக? முத்தக்காவைக் கைபிடிச்சு, வீடும் காரும் மாடும் தொழிலுமா ஆளாயிடலையா? அப்படித்தான் ராசபாளையமும். எம்புட்டுத் தூரமா இருந்தாலும்... நடக்க நடக்கத் தொலைவு தொலைஞ்சிரும்லே?’’

   ராக்கு அசந்துபோனார். `வயசில் சின்னவன்தான். வாய் எம்புட்டு சாதுர்யமாப் பேசுது?’

   முத்தக்கா... தயங்கிய ராக்குவை அதட்டினாள்.

   ‘‘இந்தா... ஏவாரி வயித்துலே பிறந்த ஏவாரிப்புள்ளை எம்புட்டு விவரமாப் பேசுது! அது நீட்டுன எடத்துலே கண்ணை மூடிக்கிட்டுக் குதி.’’

   ‘‘கெடங்கா இருந்துட்டா?’’

   ‘‘கெடங்கா இருந்தாலும் தண்ணியுள்ள கிணறாத்தான் இருக்கும். நீந்தத் தெரிஞ்சா குளிச்சிட்டு வந்துரலாம்.’’

   பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது.

   நீண்ட நெடிய தேக்குவாரிகள் இரண்டு, பார்க்கயிறு, வண்டி மராமத்து வேலைகள் எல்லாம் சுனைக்கனி செலவில்தான் நடந்தன.

   சிவலிங்கபுரம், வரண்டாபுரம், நத்தம்பட்டி வழியாக ராஜபாளையம் மாட்டுவண்டி நிறைய மூடை மூடைகளாக வந்து சரக்குகள் இறங்க, ஊரே வியந்து அதிசயிக்க... சுனைக்கனிக்கு வியாபாரம் சுள்ளெனச் சுதாரித்தது. சுற்றுபட்டி கிராமத்து ஆட்கள் எல்லாம் இவன் கடையை நோக்கி வந்தனர்.

   செந்தட்டி அய்யனார் கோயிலுக்கு, தேனி பக்கம் இருந்து சாமி கும்பிட வருபவர்களை நைச்சியமாகப் பேசி, ராக்கு இழுத்துக்கொண்டு வந்து சுனைக்கனி கடையில் சேர்த்துவிடுவார். கல்யாண வீடுகள், இழவு வீடுகள், பூப்புனித நீராட்டு விழாக்கள் போன்றவற்றின் சமையல் சாமான் லிஸ்ட்டுகள் சுனைக்கனி கடைக்கே வந்துசேரும்படி செய்வது ராக்குத்தேவருக்கு இயல்பாயிற்று.

   ராஜபாளையம் சரக்கு வாங்கும் இடத்திலும் அப்படித்தான் சாக்குகளை உருட்டிச் சுருட்டி, கக்கத்தில் வைத்துக்கொண்டு இவன் வாலைப் பிடித்துக்கொண்டே கடை கடைக்குக் கூடவே வருவார். சரக்குக்குச் சாக்குப் பிடித்து, சுமைகூலிச் செலவு இல்லாமல் ஒவ்வொன்றையும் சுமந்து வண்டி சேர்ப்பார்.

   இவன் வாங்கித் தரும் டீ, வடை, வெற்றிலைப்பாக்கு, காலையில் வயிறுமுட்ட தோசை, வடை, பூரி, இட்லி... மதியம் சிங்க விலாஸ் ஹோட்டலில் கறி, மீன், முட்டையுடன் மூச்சுமுட்ட சாப்பாடு... பற்றியே புகழ்பாடுவார். இவனது தாராளமானக் கருணையைச் சொல்லிச் சொல்லி நெக்குருகுவார்.

   திரேகத்தில் வியர்வை நெளிவுகள் வரிவரியாக, தார்ப்பாய்ச்சி கட்டிய வேட்டியைச் சுருட்டிச் சுருட்டி செருகியிருக்கிற அழகு. வியர்த்துக் கொட்டுகிற உடம்பில் சகல இடங்களிலும் ஒட்டியிருக்கும் சாக்குத் தூசி.

   பெரும் வியாபாரிகள், கிராமங்களில் வாங்கும் விளைபொருட்களை பாரம் ஏற்றி ராஜபாளையத்தில் இறக்குவார்கள். சுனைக்கனியுடன் ஓடி ஓடி சரக்கு வாங்கி, பாரம் ஏற்றி ஊர் கொண்டுவந்து சேர்ப்பார்.
   போகும்போதும் வருமானம்; வரும்போதும் வருமானம். கையில் பசை. பையில் நீரோட்டம். முக்கால் குறுக்கம் வைத்திருந்த ராக்கு கையில் இப்போது மூன்று குறுக்கம் புஞ்சை. பம்புசெட் கிணறு. கரிசல் காடு, கூளப்படப்பு, தொழுவம் நிறைய பசுமாடுகள். மண் வீடு, சிமென்ட் வீடாகி...ஓட்டு வீடு ஆயிற்று.

   ராக்குவை இப்போது `வண்டிக்காரத் தேவர்’ என மரியாதையோடு மகுடம் சூட்டுகிறது ஊர்.

   வண்டிக்காரத் தேவரின் பலமுனை சப்போர்ட்களால் சுனைக்கனி, ஒன்பதில் ஒன்றாக இருக்கவில்லை. ஒன்பதில் பெரியது என ஆகிவிட்டான். சுனைக்கனிக்கு, சரக்கு வியாபாரம் வெகு மும்முரம். கூட்டம் எந்நேரமும் நெரிபுரியாக நிற்கும். சள்ளை பறியும் மொத்த வியாபாரமும் நடந்தன.

   ‘எனக்கு, உனக்கு’ என ஆள் ஆளுக்கு முண்டுவார்கள். முந்திவிட முட்டுவார்கள். சுனைக்கனியும் அசாத்தியமான திறமைசாலி. அத்தனை கூட்டத்தையும் சிரித்த முகத்துடன் சுறுசுறுப்பாகச் சமாளிப்பான்.

   கூரைவீடு, காரை வீடாகி, மாடியும் வந்துவிட்டது. `கனி நாடார்’ என்று மரியாதை மகுடம் வேறு.

   ராஜபாளையத்தில் `எஸ்.ஆர்' என்ற பலசரக்கு மாளிகைக் கடை. சுனைக்கனி போன்ற கடைக் காரர்கள் கொள்முதல் பண்ணுகிற பெருங்கடை. டோர் டெலிவரி தருவது மாதிரி, லாரிகளில் கடை டெலிவரி தருகிறது.

   செவல்பட்டி, ஆலங்குளம், திருவேங்கடம், கலிங்கப்பட்டி என பல ஊர்களுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் லாரி வருகிறது.

   ஒருநாள், சுனைக்கனியை எஸ்.ஆர் மடக்கினார்.

   ‘‘என்னய்யா... ராக்கெட் விடுற காலத்துலே மாட்டு வண்டியிலே சரக்கு ஏத்திக்கிட்டு, தைதைன்னு மாட்டைப் பத்திக்கிட்டு... மழை - கிழை வந்தா என்ன பண்ணுவீக?’’

   ‘‘மழை ஒருதடவை மடக்கி நாசமாக்கிருச்சு. மறுவாரமே கூண்டு பெருசா கட்டியாச்சு. மழைக்குப் பயம் இல்லே.’’

   ‘‘நான் கேட்டது மாட்டு வண்டியானு?’’

   ‘‘என்ன செய்ய?’’

   ‘‘பருத்திவிதை மூடைக, புண்ணாக்கு, மண்டைவெல்லம் மூடைக எல்லா லோடுகளையும் நம்ம கிடங்கிலேயே கொண்டாந்து சேர்த்துருங்க. நம்ம கடையிலே வாங்குற லோடையும் சேர்த்து நம்ம லாரியிலே உம்ம கடைவாசல்லே கொண்டாந்து இறக்கிருவோம்.’’

   ‘‘நம்ம ஊர்லே நான் ஒரு கடைதானே... லோடு பத்தாதுல்லே?’’

   ‘‘நான் கொறைஞ்சபட்ச அளவு ஒண்ணு சொல்லுதேன். அந்த லோடைக் குடுத்துருங்க. லாரி வந்துரும். செலவும் பாதியாக் குறையும்; அலைச்சலும் குறையும்.’’

   ‘‘யோசனை நல்லாத்தான் இருக்கு.’’

   ‘‘அடுத்த சனிக்கிழமை வந்து சரக்குகளை வாங்கி கிட்டங்கியிலே சேர்த்துட்டு, நம்ம கடையிலேயும் சிட்டையைச் சொல்லிட்டுப் போயிருங்க. லாரியிலே சரக்கு வந்துரும். கடை லோடுமேன்கள் கச்சாத்தைக் குடுத்துட்டு சரக்கை இறக்கிப்போட்டு வந்துருவாங்க.’’

   ‘‘செவல்பட்டி வந்துட்டு எங்க ஊரா, திருவேங்கடம் வந்துட்டு எங்க ஊரா?’’

   ‘‘உங்க கடையிலே எறக்கிட்டு திருவேங்கடம் போறாப்ல வெச்சுக்கிடுவோம்.’’

   சுனைக்கனிக்குள் கற்பனை கண்டமேனிக்குச் சிறகடித்துப் பறந்தது. நாலா திசைகளிலும் சிறகடிப்புகள்... ஆகாயம் எல்லாம் சிறகுகள்... கனவுச்சிறகுகள். பெருமை பொங்குகிறது.

   சைக்கிளில் மிதித்து கடைவாசலில் ஸ்டாண்ட் போட முடியாமல் போட்டு சரக்கு இறக்கிய காலம்.

   மாட்டு வண்டி நிறையச் சரக்குகள் இறங்குவதை ஊரே பார்த்து அதிசயித்த அந்த நாட்கள்.

   லாரியில் வந்து மூடை மூடைகளாக இறங்கினால், ஊர் பிரமித்து மூச்சுத்திணறிப் போய்விடும். பிளந்த வாயை மூடாது. சுற்றிச்சுற்றி வந்து வேடிக்கை பார்த்து மாய்வார்கள்.

   வருடக்கணக்காக பல முனை சப்போர்ட்களால் பாசமும் விசுவாசமும் காட்டிய வண்டிக்காரத் தேவரை என்ன செய்ய?

   எஸ்.ஆர் அவனது தயக்கத்தை கலைக்க இப்படிச் சொன்னார்.

   ‘‘தாலியறுத்தவ தாட்சண்யம் பார்த்தா, வாயும் வவுறுமா சொமந்து சீரழியணும். ஏவாரத்துல தாட்சண்யம் பார்க்கக் கூடாது... பார்க்கிற மாதிரி பாவ்லாதான் பண்ணணும்.’’

   அவர் சுலபமாகச் சொல்லிவிட்டார். பாசத்தையும் விசுவாசத்தையும் அறுப்பது அத்தனை சுலபமா? கிராமத்து உறவுப் பண்பாட்டில் முகம் முறித்து தாட்சண்யம் பார்க்காமல் பேசிவிட முடியாதே.
   வண்டிக்காரத் தேவரைப் பார்ப்பதற்கே குலை நடுங்குகிறதே. முகத்துக்கு முகமாக, கண்ணுக்குக் கண்ணாக நேரே பார்த்து ‘நிறுத்திக்கிடுவோம்’னு எப்படிச் சொல்ல?

   எஸ்.ஆரிடம் சனிக்கிழமை வருவதாகச் சொல்லிவிட்டு வந்துவிட்டான். பணத்துக்கும் ஏற்பாடு செய்துவிட்டான். தேவரிடம் சொல்லவேண்டியதுதான் பாக்கி.

   சொல்வதுதானே மலையாக இருக்கிறது.
    
   கூரை வீட்டு முற்றத்தில் போய் இவன் நின்றது, தயங்கித் தயங்கிக் கேட்டது, அவரைச் சம்மதிக்க வைக்க சாமர்த்தியமாகப் பேசியது எல்லாம் ஞாபகத்தில் சுழன்றன.

   `இன்னைக்கு, ‘நிறுத்தும், போதும்’ என்று சொல்ல வாய் வர மாட்டேங்குதே. நன்றிகெட்ட நாச வேலையாக அல்லவா தோன்றுகிறது. கால் மாட்டில் எச்சில் வடிய நிற்கும் பச்சை மதலையின் கழுத்தை அறுத்துப்போடுகிற நம்பிக்கைத் துரோகமாக அல்லவா தோன்றுகிறது?’

   குற்றவுணர்ச்சி, கட்டை முள்ளாக நெஞ்சுக்குள் குத்தியது.

   எக்ஸ்.எல் வண்டி, திருவேங்கடம் வந்துசேர்ந்துவிட்டது. அரிசிக் கடையில் வண்டியை நிறுத்தினான். கைலியால் வியர்வையைத் துடைத்தான் சுனைக்கனி.

   அச்சத்துடன் சுற்றும்முற்றும் பார்த்தான். `வண்டிக்காரத் தேவர் எங்கேயாச்சும் எதிர்ப்பட்டுவிட்டால்?’

   ஈரக்குலை பதறியது. மனசு கிடந்து மருகித் தவித்தது. எந்த நிமிடத்திலும் எதிரிலும் வந்து நின்றுவிடுவாரோ என்ற பதற்றம்.

   அரிசிக் கடை வேலையை முடித்துவிட்டு பாலசுப்பிரமணியம் பலசரக்குக் கடைக்குப் போனான். வண்டியை நிறுத்திவிட்டு நிமிர்ந்தால்....

   சற்று தள்ளி... வந்துகொண்டிருந்தார் வண்டிக்காரத் தேவர். தீப்பட்ட நாற்றாகக் கருகினான் இவன். மனநடுக்கம், உள்ளங்கையில் வியர்வை, பயப் படபடப்பு.

   அவரும் சோர்வாக இருந்தார்.

   ‘உடம்புக்குச் சரியில்லியோ?’

   முகவாட்டம். இருண்டிருந்தது அவரது முகம்.

   ‘‘வாங்க அண்ணாச்சி... என்ன இங்கிட்டு?’’ - குரலில் உயிர்வற்றிப்போயிருந்தது சுனைக்கனிக்கு.

   ‘‘சும்மா... ஒரு சோலியா வந்தேன்’’ - சுரத்தே இல்லாமல் தடுமாறித் தணிந்தது வண்டிக்காரத் தேவர் குரல்.

   `விஷயம் அவரது காதுக்குப் போய்விட்டதா? வாய்ப்பே இல்லையே. பூர்ணத்தைத் தவிர வேறு யாரிடமும் மூச்சுவிடவில்லையே.’

   ‘‘வாங்க சாப்பிடப் போவோம்.’’

   வண்டிச் சாவியை பைக்குள் போட்டுக்கொண்டு ஹோட்டலுக்குள் நுழைந்தான் சுனைக்கனி.

   ரெண்டு பேரும் டேபிள் முன் சேர்களில் உட்கார்ந்தனர்.
    
   ‘‘அண்ணாச்சிக்கு மூணு பரோட்டாவும் ஒரு சிக்கன் ரோஸ்ட்டும்.’’

   ‘‘உனக்கு?’’

   ‘‘நான் இப்பத்தான் வீட்ல சாப்பிட்டு வர்றேன்.’’

   அவரது முகத்தை ஏறிட்டுப் பார்க்க முடியாமல் தடுமாறித் தத்தளித்தான் இவன். இவனது முகத்தையும் பார்க்க முடியாமல் தவித்தார் தேவர்.

   சால்னாவில் நனைந்த பரோட்டாவை பிசைந்து பிய்த்து, வாயில் வைத்தார்.

   ‘‘உன்கிட்டே ஒரு விஷயம் சொல்லணும். சொல்ல மாட்டாம மருகிக்கிட்டு வர்றேன்.’’

   ‘‘என்ன விஷயம் அண்ணாச்சி?’’

   ‘‘சந்தைக்கு வண்டி போட முடியாத நெருக்கடி...’’

   ‘‘ஏன் அண்ணாச்சி?’’

   ‘‘பெரிய தேயிலை கம்பெனி... கூண்டு வண்டிங்கிறதால ஏஜென்ட் என்னைக் குறிவெச்சுட்டார். திங்கள், வியாழன்னு வாரத்துல ரெண்டு நாளு... திருவேங்கடம் வரணும். தேயிலை பார்சல்களையும் பெரிய பெரிய பைகளையும் இறக்கணும். கூட ஏஜென்ட் சாரும் வருவார். வண்டியிலே நம்ம ஊர், அப்பைய நாய்க்கர்பட்டி, வலையப்பட்டி கடைகளுக்கு கூடவே போகணும். திருவேங்கடத்துலே வந்து பஸ் ஏத்திவிடணும்.’’

   ‘‘இதான் புரோகிராமா?’’

   ‘‘ஆமாப்பா... ரெண்டு நாள் சோலி. கணிசமா பணமும் தர்றாங்க. கம்பெனிச் சம்பளம்.’’

   ‘‘ `சரி’னு சொல்லிட்டீகளா?’’

   ‘‘பத்திரம் எழுதுற மாதிரி ஒப்பந்தம் எழுதி ஸ்டாம்ப் ஒட்டி கைநாட்டு கேட்டாக. என்னையே நம்பி நிக்கிற உன்கிட்டே எப்படிச் சொல்றதுனு தெரியாம மருகிக்கிட்டு நிக்கிறேன்’’

   சுனைக்கனிக்குள் விட்டு விலகிய மூச்சுமுட்டல். சுமுகமாக இயல்பான மனத்திணறல். மனசுக்குள் ஆயிரம் வாசல்களும் ஆயிரம் சாளரங்களும் திறந்துகொண்ட மாதிரி காற்றும் வெளிச்ச வெள்ளமும் பாய்ந்தன. மறித்துக்கொண்டு நின்ற மலை, மாயமான மாதிரி ஓர் ஆசுவாசம்.

   ‘‘உனக்கு மாத்து ஏற்பாடு பண்றதுலே ஏதாச்சும் சிரமம் இருக்குமா, தம்பி?’’

   ‘‘அண்ணாச்சி... காலம் ஒரு வாசலை அடைச்சா, மறுவாசலை திறந்துவிட்டுரும். அடுத்த வாரத்துல இருந்து சரக்குகளை லாரியிலே கொண்டாந்து இறக்கலாமானு யோசனை ஓடிக்கிட்டிருக்கு.’’
   தேவருக்கு முகம் கறுத்தது. சமாளித்துக் கொண்டார்.

   ‘‘நல்லவேளை... செந்தட்டி அய்யனார்சாமி நல்ல வழி காட்டிட்டார். எனக்கு இப்பத்தான் உசுரு வந்த மாதிரியிருக்கு.’’

   அவர் முகம் எல்லாம் அசலான ஒளிப்பெருக்கு. மனதின் பூரிப்பினால் முகம் எல்லாம் பரவுகிற சிரிப்பு; கண்ணோரத்தில் நீர்த்துளி.

   ‘‘உன்னாலே நான் முன்னேறியிருக்கேன். என்னாலே நீ முன்னேறியிருக்கே. விலகுறப்போ நம் பாசமும் உறவும் அந்துபோகுமோனு பயந்துகிடந்தேன். யாருக்கும் காயம் இல்லாம, ரெண்டு பேரும் விலகுறோம்.’’

   சிரித்துப் பேசிச் சமாளிக்கிறார் தேவர்.

   ‘‘ஆமா... அண்ணன் - தம்பியா என்னைக்கும் இருக்குறதுலே தடை ஒண்ணுமில்லே.’’

   சுனைக்கனி குரலில் உயிர்ச்சுனை கசிந்தது. பரோட்டாவைச் சாப்பிட்டுவிட்டு, இலையை வழிக்கிறபோது, அவருக்கு வயிறு நிறைந்திருந்தது.

   சுனைக்கனிக்கு, பாரம் இறங்கிய மனநிம்மதி.

   ‘நம்மளை நம்பி இருக்கிறவனை மோசம் பண்ணிடக் கூடாது’ என்கிற உழைப்பாளிக்கு உரிய வைராக்கியக் குணத்துடன், பாதி மறுப்பும் பாதி தயக்கமுமாகத் தலையை ஆட்டிவிட்டுத் திரும்பியிருந்தார் வண்டிக்காரத் தேவர், சுனைக்கனியின் வியாபாரி மனநிலையைப் புரிந்துகொண்ட தெளிவால்.

   `ஒப்பந்தத்தை ஒப்புக்கொண்டு கைநாட்டு வைத்துவிடவேண்டியதுதான்’ என கோவில்பட்டி பஸ்ஸை எதிர்பார்த்து திருவேங்கடம் பஜாரில் நின்ற அவரின் மனசுக்குள் நினைவுகள் ஓடின. ‘உழைக்கிறவன் குணம் சூரியனைப்போல நிரந்தரமானது; நேர்மையானது. வியாபாரி குணம், நிலவைப்போன்றது; தேயும் குறையும் நிலை இல்லாதது. என்ன இருந்தாலும் வியாபாரி...வியாபாரிதான்.’
   http://www.vikatan.com
  • By நவீனன்
   புக்கெட் - சிறுகதை
     அராத்து - ஓவியங்கள்: ரமணன்
    
   சின்னச் சின்னச் சண்டை பெரிதாகி, குளிரூட்டப்பட்ட உணவுவிடுதியில்  மன்னிப்பு கேட்டு, அவள் தங்கி இருக்கும் விடுதியின்  வாசலில் செய்வதறியாது காலில் விழுந்தான். நான்கைந்து பெண்கள் வேடிக்கை பார்த்தனர். காலை மெள்ள இழுத்துக்கொண்டு நடந்து உள்ளே சென்றுவிட்டாள். தொழப் பாதமில்லாது, சற்றுநேரம் நெடுஞ்சாண்கிடையாகக் கிடந்தான். தெருமண்ணை நக்கிப்பார்த்தான். சிறுவயதில் விபூதி சாப்பிட்டது, இப்போது இந்த நகரத்தின் நூற்றாண்டுகால மண் ஒரு விநோதமான சுவையை உணரச்செய்தது. அழுகை வந்தது. அழுகையினூடே சிரிப்பும் வந்தது. மெதுவாக எழுந்தான். வெட்கம், மானம் எல்லாம் எங்கோ போயிருந்தன. தன்னை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்களை வெறுமையாகப் பார்த்தான். அவர்கள் பார்வையைத் திருப்பிக்கொண்டார்கள். மண்டியிட்டுக் காம விளையாட்டுகளில் காதலுடன் ஈடுபட்ட ஒருத்தியின் காலில் விழுந்தும் தட்டிவிட்டுச் செல்கிறாள். ஆட்டோவை அழைத்தான்.

   இந்தச் சம்பவம் முடிந்ததும் அவன் மதுபான விடுதிக்கு வந்தான். இந்தச் சம்பவத்தையும், அவன் மன உணர்வையும் அப்படியே சொன்னான். ஆனால், ஒரு பியர் முடிக்கும்வரை நாங்கள் இருவரும் ஏதும் பேசிக்கொள்ளவில்லை. ஒரு பியர் முடித்ததும் முதல் பத்தியில்  இருப்பதைச்  சொன்னான். நீட்டமாகத்தான் சொன்னான். நான்தான் சுருக்கிக் கொடுத்திருக்கிறேன்.

   ஒரு பியர் முடித்ததும், அடுத்தடுத்து வரவழைத்தான். நானும் மூன்று பியர் குடித்துப் போதையாகிவிட்டேன். அதனால் அதற்குமேல் அவன் என்ன பேசினான் என்பது எனக்குத் தெரியாது. இந்தக் கதையையும் என்னால் தொடர முடியாது. மன்னித்துக்கொள்ளுங்கள். நான் விடைபெற்றுக்கொள்கிறேன்.

   சரக்கடிச்சதால் உண்டான `தலை பாரத்துடன்’ வேலைக்கு வந்தான். வேலையில் ஏதும் ஓடலை. இதை டீ குடிக்கச்சொல்லோ என்கிட்ட சொன்னான். எனக்கும் அவனுக்கும் பெருசா ஃப்ரெண்ட்ஷிப் கிடையாது. எப்பனா பேசுவான். அவனை ஹெச்.ஆரு கூப்பிட்டார். `தம்பி, இன்னியோடு நீ போயிடு’ன்னார். திக்குன்னு இருந்திச்சு அவனுக்கு. அப்டியே மூலையை முறைச்சுப் பார்த்துக்கிட்டே இன் பண்ணியிருந்த சட்டையை வெளியே எடுத்து வுட்டுகிட்டுப் போயிட்டான்.

   ஹலோ, என் பேர் கலாதரன். எனக்கு இப்போ மண்டைக்குள்ளே ஒரே குடைச்சலா இருக்கு. சாதாரணமா யாராச்சும் சிரிச்சுப் பேசிக்கிட்டாலே அவங்களைப் பார்த்து வெறியாகுது. என் ஆளும் போயிட்டா. என் வேலையும் போச்சு. ஏதாவது ஜோடியைப் பார்த்தா, உஷ்ணம் ஆகுது. இப்ப எதுக்குடா  சிரிச்சுச் சிரிச்சுக் குலவிக்கிட்டி ருக்கீங்க? இன்னும் கொஞ்சநாள்ல பிரிஞ்சு தவிக்கப்போறீங்கன்னு கறுவிக்கிறேன். ஆனாலும் அவங்களை நினைச்சும் சோகம் ஆகிடுறேன். காலையில தூங்கி எழுந்ததுமே படபடப்பு, பயம் வந்துடுது. ஆக்சுவலா இந்த பயமும் படபடப்பும்தான் என்னை எழுப்பியே விட்டுடுது. தூக்கம் வருமான்னு பயத்தோடத்தான் தூங்கப்போறேன். எந்த உண்மையான பிரச்னையும் இல்லாமலேயே பயமா இருக்கு. பயம் ஏதும் இல்லைன்னு எனக்கே தெரிஞ்சாலும் மூளை, பயத்தை உண்டுபண்ணிகிட்டே இருக்கு. அதெல்லாம் ஒண்ணுமில்லைனு மூளை மூலமா மூளைகிட்டயே சொல்லிக்கிட்டிருக்கேன். இருந்தாலும், படபடப்பா இருக்கு. இந்த ஃபீலிங்ல இருந்து வெளியே போயிடணும்னு இருக்கு. ஆக்சுவலா எனக்கு செத்துடலாம்னு இருக்கு. ஆனா, இப்படித் தோன்றறதுக்குக்  காரணம்  மூளையோட வேதியல் சமமற்றத்தன்மைன்னு எனக்குத் தெரியறதால சாகாமத் தள்ளிப்போட்டுட்டிருக்கேன். இருந்தாலும் மூளையோட இந்த வேதியல் சமமற்றத்தன்மை  எனக்குக் கொடூரமா இருக்கிறதால, `செத்தா தேவலாம்’னு தோணுது. தூங்கி எழுந்தாலே பயம். தூக்கம் வருமான்னு பயம். எல்லாத்துலயும் படபடப்பு. உலகத்துல எல்லோரும் நல்லா இருக்காங்க, எனக்கு மட்டும்தான் பிரச்னைன்னு இருக்கு.நான் முடிவு பண்ணிட்டேன். இந்த வாழ்க்கை வேணாம். செத்துடுறேன். ஆனா, ஜாலியா சாகணும். எனக்குத் தெரிஞ்சு ஆன் அரைவல் விசா வசதி உள்ள பக்கத்து நாடு தாய்லாந்து தான். சுலபமா போலாம். அங்கே போய் யாருக்கும் தெரியாம அநாதைப் பொணமா செத்துடுறேன். அங்கே போனா, மனசு மாறும்னு இல்லை. இந்த வேதனை வேணாம். என்னால தாங்க முடியலை. என் மூளை `இதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை’ன்னு சொன்னாலும், நான் சாகத்தான் போறேன். டிசைடட். மாத்திக்கவே மாட்டேன்.

   பாங்காக் விமானநிலையத்தில் எல்லோரும் ஜாலியாக இறங்கினார்கள். ஒருவன் மட்டும் எதையோ பறிகொடுத்ததுபோல இறங்கினான். என் விமானப் பணிப்பெண் சர்வீஸில் பாங்காக்கில் இப்படி ஒருவன் இறங்கிப் பார்த்தது இல்லை. அவனுக்கும் முகமன் சொல்லி வாழ்த்துத் தெரிவித்தேன். கண்டுகொள்ளாமல் தளர்வாக நடந்து சென்றுவிட்டான். அவனைப் பார்க்கையில் சுடுகாட்டுப் பிணம், தானே நடந்து போவதுபோல இருந்தது.

   பாங்காக் விமானநிலையமே கொண்டாட்ட மாக இருந்தது. ஆனால், என் மனம் தானாக உருவான கொண்டாட்ட மனநிலையையும் எதிர்த்தது. திடீரென குட்டைப்பாவாடை, நிக்கருக்குக் கீழே உள்ள வெண் தொடைகள் மூளை முழுக்க ஆக்கிரமித்தன. வெள்ளைக் கால்களுக்கும் தொடைகளுக்கும் இடையில் நான் பாம்பாக ஊர்ந்துபோவதுபோலத் தோன்றியது. கொஞ்ச நேரம்தான், வெள்ளைத் தொடைகளும் வாளிப்பான கால்களும் பார்பி பொம்மையைப் போல ஆகின. ஆன் அரைவல் விசா எடுத்துக் கொண்டு, புக்கெட் விமானத்தைப் பிடிக்க அதன் வாயிலைத் தேடிச் சென்றேன். விமானத்துக்கு இன்னும் மூன்றுமணி நேரம் இருந்தது. பசித்தது. பசியிலேயே இருக்க வேண்டும் எனத் தோன்றியது. ஆனாலும் மண்டை `ஏதேனும் செய்... ஏதேனும் செய்’ எனப் பரபரத்துக்கொண்டே இருந்ததால், ஒரு பர்கர் வாங்கிச் சாப்பிட்டேன். அடுத்த பத்தே நிமிடத்தில் அது வயிற்றை அடைத்துக்கொண்டது. நிறைய வாயுவை உருவாக்கிவிட்டது. செயற்கையான ஏப்பத்தை உருவாக்கிக்கொண்டே அமர்ந்திருந்தேன். ஏப்பத்தினூடே இருக்கும்போது கண்ணயர்ந்தேன். மூடிய இமைகளுக்குள் விழித்திருந்தேன். காது மட்டும் தூங்கிவிட்டது என நினைக்கிறேன். ``விமானம் கிளம்பும் அறிவிப்பு’’ என்று ஒருவன் எழுப்பிவிட்டான்.

   எனக்கு இந்தியர்களே பிடிக்காது. ஆஸ்திரேலியாவிலிருந்து கிளம்பி ஆசியச் சுற்றுலா அடித்துக்கொண்டிருக்கிறேன். புக்கெட் செல்வதற்கு ஜன்னலோர  இருக்கை கிடைத்தது என ஜாலியாக இருந்தால், ஓர் இந்தியன் அநாகரிகமாக  இருக்கைக் கைப்பிடியை ஆக்கிரமித்துக்கொண்டான். அவனுடைய முட்டியால் என்னை இடித்து எரிச்சல் ஊட்டிவிட்டான். அவனுடைய முகத்தைப் பார்க்கவே பிடிக்கவில்லை. வெறுமை படர்ந்திருந்தது. விமானத்தின் கூரையை உற்றுப்பார்த்தபடி அமர்ந்திருந்தான். இவன் புக்கெட்தான் செல்கிறானா? நடுவானில் குதித்து விடுவானா? விமானத்தை கடத்தப்போகிறானா? நான் அவன் பக்கமே திரும்பாமல், ஜன்னல் பக்கம் என் பார்வையைப் பதித்துக்கொண்டேன்.

   ``ஏய்! உன்னைத்தான்டா, எங்கே போகணும்னுதானே கேட்டேன். அதுக்கு ஏன்டா முறைச்சுப் பார்த்துக்கிட்டே போற? புக்கெட் ஏர்போர்ட்டிலிருந்து எங்கே போகணும் னாலும் டாக்ஸிலதான்டா போகணும்’’ எங்கே போக வேண்டும் என்று கேட்டதற்கு ஏதும் சொல்லாமல் நடந்தே விமானநிலையத்தைவிட்டு வெளியேறுகிறான். இந்தியன், இந்த இந்தியர்களே இப்படித்தான். விசித்திரமானவர்கள். இதோ எனக்கு ஆள்கள் வந்துவிட்டார்கள்; நான் பதாங்க் பீச் வரை ஓட்டிச்செல்ல வேண்டும்.

   நான்  இந்த நாட்டில் பிறந்து வளர்ந்ததிலிருந்து, இன்றுதான் ஒருவன் லிஃப்ட் கேட்கிறான். கொடுக்கலாமா, வேண்டாமா? இந்தியன்போல இருக்கிறான். `பெண்கள், இந்தியர்களிடம் ஜாக்கிரதையாக இருந்துகொள்ள வேண்டும்’ எனச் சொல்லியிருக்கிறார்கள். வேண்டாம், ஆக்ஸிலேட்டரை மிதிப்போம்.

   என் நண்பனை விமானநிலையத்தில்  விட்டுவிட்டு பைக்கில் திரும்பச் சென்று கொண்டிருந்தேன். ஒருவன் தளர்ச்சியாக நெடுஞ் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தான். வழக்கமாக, நெடுஞ்சாலையில் இங்கு யாரும் நடப்பதில்லை. `யார்ரா இவன்?’ என வேடிக்கையாக யோசித்துக்கொண்டே ரியர்வியூ மிரரில் பார்த்தேன். வாளிப்பாக இருந்தான். என் உடல் சிலிர்த்துக்கொண்டது. பைக்கை வேகமாக ஓட்டி, யூ டர்ன் அடித்துப் பறந்தேன். அவனைப் பக்கவாட்டில் பார்த்தேன். தயங்கி நிற்பதும், மெள்ள நடப்பதுமாக இருந்தான். முறுக்கி அடித்து மீண்டும் ஒரு யூ டர்ன் போட்டு, அவன் அருகில் வந்து நிறுத்தினேன்.

   “வேர் யூ வான்ட் டு கோ?”
   “பதாங்க் பீச்.’’
   “ஐ கேன் டிராப் யூ , கெட் இன்.”

   ஏறிக்கொண்டான். பின்னால் ஒரு பை மட்டும் மாட்டியிருந்தான். பைக்கில் கொண்டுபோய் பதாங்க் பீச் அருகே இறக்கிவிட்டுவிட்டு, ``எங்கே போக வேண்டும்? எங்கே தங்கப்போகிறாய்?’’ என்றேன். வறட்சியாகச் சிரித்தான்.  ``நோ ப்ளேஸ். ஐ ஸ்டே அட் பீச்’’ என்று சொல்லிச் சிரித்தான்.  எனக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது. அவன் ஏதோ சிக்கலில் இருக்கிறான் எனப் புரிந்தது. ``எனக்கு ஓர் அறை இருக்கிறது. என்னுடன் தங்கிக்கொள்கிறாயா?’’ என்று கேட்டேன். `ம்’ எனத் தலையசைத்தான். நான் அவனிடம் நேர்மையாக இருக்க விரும்பினேன். நான் “கே” என்றேன். ``ஓஹோ... ஓகே’’ என்றான். ``ஆனால், நான் `கே’ இல்லை’’ என்றான். ``சரி, உறவு எல்லாம் வேண்டாம்.  ஆனால், பெண்களால்கூட கொடுக்க முடியாத சுகம். நான் உனக்குத் தருவேன்’’ என்றேன். ``ஸாரி பிரதர், ஐ யம் நாட் இன்ட்ரஸ்டட்’’ என்று அவசரமாகக் கூறிவிட்டு, முன் நடக்க ஆரம்பித்தான். பைக்கை சைடு ஸ்டாண்ட் போட்டு விட்டு, அவனை நெருங்கி ``உனக்கு விருப்பம் இருந்தால் என்றுதான் கூறிவிட்டேனே, இதற்கும் நீ என்னுடன் தங்குவதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நீ என்னுடன் தங்கிக்கொள்ளலாம். நான் உன்னை அந்த வகையில் எந்தத் தொந்தரவும் செய்ய மாட்டேன்’’ என்றேன். தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு என்னைப் பின்தொடர்ந்தான். அவனை வீட்டில்விட்டு ரெஃப்ரெஷ் செய்துகொள்ளச் சொன்னேன். மீண்டும் அழைத்துக்கொண்டு போய் பதாங் பீச்சில் விட்டேன். நான் என்னுடைய ரெஸ்டா ரென்ட்டுக்குச் செல்வதாகச் சொன்னேன். ``இங்கேயே சுற்றிக்கொண்டிரு.  இரவு 12 மணிக்கு வந்து அழைத்துக்கொள்கிறேன்’’ என்றேன். தலையசைத்தான். ``பணம் இருக்கிறதா?’’ என்றேன். `இருக்கிறது’ என்பதாகத் தலையை ஆட்டினான். 500 பாட்டை எடுத்து அவன் கையில் திணித்தேன்.  மறுக்காமல் வாங்கிக்கொண்டான். நான் என்னுடைய சிறிய ரெஸ்டாரென்ட்டுக்குப் பறந்தேன். போய்தான் ஆள்களை ஒழுங்குபடுத்த வேண்டும். இரவுதான் எனக்கு முக்கியமான வியாபாரம். இரவு மட்டும்தான்.

   ரஷ்யாவிலிருந்து நேற்று இரவுதான் நானும் என் தோழியும் வந்து இறங்கினோம். இரவு நெடுநேரம் ஆகிவிட்டபடியால் இன்றுதான் பதாங் பீச் வர முடிந்தது. ஓர் இந்தியன் கடலை நோக்கிச் செல்வதைப் பார்த்தேன். என் தோழியை அழைத்துச் சொன்னேன். ``அவன் கடலை நோக்கிச் செல்வது எனக்கு ஏனோ விபரீதமாகப்படுகிறது’’ என்று. அவள் ``அதெல்லாம் ஒன்றுமில்லைடி’’ என்று கூறி, என்னை அங்கிருந்து விலக்கிச் சென்றாள். ஒரு மரத்தடியில் அமர்ந்தோம். இரண்டு சீன இளைஞர்கள் எங்களை நெருங்கி `ஹாய்’ சொல்லிப் பேச ஆரம்பித்தார்கள். பணம் செலவழித்து எங்களை மயக்கி, படுக்கைக்கு அழைத்துச் செல்வதுதான் நோக்கமாக இருக்க முடியும். ஆங்கிலம் தெரியாததால், மொபைல் ஆப் மூலம் மொழிபெயர்த்துக் காட்டி கம்யூனிகேட் செய்தபடி இருந்தார்கள். அப்போதுதான் கவனித்தேன், கடலை நோக்கிச் சென்றவன் எங்களுக்குச் சற்று அருகே நின்றுகொண்டு எங்களை வெறிக்கப் பார்த்தபடி இருந்தான்.

   நான் அவனிடமிருந்து கவனத்தை விலக்கி, சீனர்களின் மொபைலைப் பார்க்க ஆரம்பித்தேன். இரவு குடிப்பதற்கும் டின்னருக்கும் அழைக்கிறார்கள். நான் பேரழகி, நல்ல உடற்கட்டும்கூட. நான் விர்ஜின் இல்லைதான். ஆனால், மொழிகூட தெரியாமல் எப்படிப் பொதுவில் சந்தித்த அன்றே படுக்கைக்கு அழைக்கத் திட்டம் போட முடிகிறது? முகத்தில் ஏதும் பாவங்கள் காட்டாமல், மொபைலைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

   ஆர்ப்பரிப்பு இல்லாத கடலையும், துள்ளலாகத் திரியும் ஜோடிகளையும், ஆர்ப்பாட்டமாகக் கூத்தடிக்கும் இளைஞர்களையும் கண்டதும் என் மனம் சுருங்கத் தொடங்கியது; அழுகை வர ஆரம்பித்தது. அழுதுவிட்டேன். தனி ஆளாக நிற்கிறேன். உல்லாசமான இடத்துக்கு வந்தும் என்னால் உல்லாசமாக இருக்க முடியவில்லை. உலகமே உல்லாசமாக இருக்கிறது. `கடலில் விழுந்து உடனடியாகச் செத்துப்போ’ என, எனக்குள்ளிருந்து உத்தரவு வந்தது. இடுப்பளவு ஆழம்வரை சென்றுவிட்டேன். இன்னும் ஒரு கிலோமீட்டர் உள்ளே போக வேண்டும்போல இருந்தது. யதேச்சையாகத் திரும்பிப் பார்த்தால், இரண்டு சீனர்கள் இரண்டு ரஷ்யக்காரிகளை கரெக்ட் செய்துகொண்டிருந்தார்கள். எனக்கு உள்ளம் கொதித்தது. நாட்டுப்பற்றுக் கிளர்ந்து எழுந்தது. நாம் போய்ப் பேச வேண்டும் எனத் தோன்றியது. பிறகு, `கொஞ்சநேரம் கழித்து செத்துக் கொள்ளலாம். எங்கே போய்விடப்போகிறது உயிர்?’ என நினைத்தபடி, அவர்கள் அருகே சென்றேன். அந்த ரஷ்யக்காரி, என்னை ஒரு கணம் பார்த்துவிட்டு சீனர்களிடம் உரையாடலைத் தொடர்ந்தாள். என்னைப் பார்த்துவிட்டாள். அது போதும் எனக் காத்திருந்தேன்.

   இந்தச் சீனர்களைத் கழட்டிவிட்டு, நாங்கள் இருவரும் எழுந்துகொண்டோம். இந்தியனைத் தாண்டித்தான் இப்போது நாங்கள் போக வேண்டும். நிச்சயம் அவன் எங்களிடம் பேசுவான்.

   ரஷ்யக்காரிகள் எழுந்துகொண்டனர். என்னை நோக்கித்தான் வருகிறார்கள். நிச்சயம் இவர்களோடு பேச வேண்டும். வாழ்க்கையில் கடைசிக் கடைசியாக இவர்களையாவது கவர முடிகிறதா எனப் பார்ப்போம். குறைந்தபட்சம்  ஒரு டின்னர், கொஞ்சம் ஒத்துவந்தால் இவர்களோடு தங்க முடியுமா எனப் பார்க்க வேண்டும். கரெக்ட். ஆனால், யாருடன் இரவைக் கழிப்பது? இருவருமே அழகாக இருக்கிறார்கள். இருவருடனும் இரவைக் கழிக்கலாம். உலகம் சுற்றும் ரஷ்யக்காரிகளுக்கு இதெல்லாமா பெரிய விஷயம்? ஏதோ எல்லாம் நல்லபடியாக நடந்து முடிந்தால், நாளைக் காலைகூட செத்துக் கொள்ளலாம்.

   நான் நினைத்ததுபோலவே எங்களிடம் பேசினான். சில கேள்விகளுக்குப் பதில் அளித்தேன். இவனும் `டின்னர் சாப்பிடலாமா?’ என்றுதான் தூண்டில் போட்டான். வேறு தீவுக்குப் பயணிக்கப் போவதாகச் சொல்லி மறுத்துவிட்டேன். அடிப்பட்டவன்போல முகம் சுருங்கிவிட்டது. மிகவும் பதற்றமாகக் காணப்பட்டான். பாவமாக இருந்தது. நான் அவனுக்கு ஏதேனும் செய்ய விரும்பினேன். ``யூ ஆர் லுக்கிங் ஸ்மார்ட். வீ ரியலி மிஸ் யூ’’ என்றேன். பிறகு அவனைத் தாண்டிச் செல்ல ஆரம்பித்தேன்.

   அழகாகப் பேசினாள். அவளது இடையும், அந்த ஹெல்த்தியான தோலின் ஷைனிங்கும், அவளது செக்ஸியான வடிவமும் என்னைப் பாடாய்ப் படுத்தின. `சாவதற்குள் ஒரே ஒருமுறையாவது’ என மனம் தவித்தது. அழகாகப் பதில் அளித்துவிட்டுச் சென்றுவிட்டாள். தளர்ந்து அமர்ந்தேன். பசித்தது. வெகுவாகப் பசித்தது. பசியில் சாவதற்குத் தெம்பு இல்லை. ``முதலில் சாப்பிட லாம்’’ என நகர்ந்தேன். ஓர் உணவகத்தில் அமர்ந்து சாப்பிட்டேன். சாப்பிடச் சாப்பிட சோகத்திலும் பதற்றத்திலும் எதுக்களித்துக் கொண்டு வந்தது. தண்ணீர் குடித்துக் குடித்து ஒரு வழியாகச் சாப்பிட்டு முடித்தேன். பங்களா ஸ்ட்ரீட் வழியாக நடந்து சென்றேன். தெரு முழுக்க உற்சாகம் பொங்கி வழிந்தபடி இருந்தது. செக்ஸ் ஷோக்கள், விதவிதமான பப்கள், பார் அண்ட் ரெஸ்டாரென்ட்டுகள் எனக் களைகட்டியது. தெரு முழுக்க வண்ண விளக்குகளாலும், வண்ண வண்ண மனிதர்களாலும் நிரம்பி வழிந்தது. பல கிளப்களில் இருந்து எழுந்த வேகமான பீட்கள்கொண்ட இசை கலந்துகட்டித் தெரு முழுக்க மயக்கமூட்டியது. லேடி பாய் ஒருத்தி என் கன்னத்தைத் தடவிச் சென்றாள்.

   கன்னத்தைத் தடவுவது என் பிசினஸ் டெக்னிக். ஒருவன் ஆர்வமாக இருக்கிறானா இல்லையா என ஒரு செகண்டில் யூகித்துவிடுவேன். இந்த இந்தியன் கன்னத்தைத் தடவியதும், அவன் கண்ணீர் என் கைகளில் பட்டது. இந்த உற்சாகமான பங்களா ஸ்ட்ரீட்டில் ஒரு மனிதன் அழுதுகொண்டு நடக்கிறானா? திடுக்கிட்டு அவனைத் திரும்பிப் பார்த்தேன். வேறொருவன் என் இடையைத் தட்டி அழைத்தான். அழுபவனை மறந்து , `ஹாய்’ எனச் சொல்லியவாறு இடையைத் தடவியவனின் கன்னத்தைத் தடவினேன். ``டூ தெளஸண்ட் பாட்’’ என்றேன். ``லேடி பாய்க்கு, இரண்டாயிரம் பாட்டா’’ என்று நக்கல் அடித்தான். ``போடா’’ என அவனைத் துரத்தினேன். `கண்ணீர்விட்டவனைப் பின்தொடர்ந்திருக்கலாமே’ என ஆதங்கப்பட்டபடி, அவனைத் தேட ஆரம்பித்தேன்.

   அந்த லேடி பாயின் கை என் கன்னத்தில் பட்டதும்தான், எனக்கே தெரிந்தது நான் அழுதுகொண்டிருக்கிறேன். இந்தக் கொண்டாட்டமான தெருவில் மிகச் சோர்வாக உணர்ந்தேன். மீண்டும் தெருவழியாக நடந்து பீச்சை அடைந்து படுத்துவிட்டேன். பீச்சில் ஜோடியாக அமர்ந்து பியர் குடித்துக்கொண்டிருந்தார்கள். சிணுங்கல்கள், முத்தங்கள். கண்களையும் காதுகளையும் பொத்திக்கொண்டேன். இப்போதே செத்துவிடலாம்தான். இருட்டாக இருக்கிறதே. இருட்டில் எப்படிச் சாவது?

   ரெஸ்ட்டாரென்ட்டை உதவி ஆள்களிடம் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, இந்தியனைத் தேடி பீச்சுக்கு வந்தால் ஆளைக் காணோம். `ஓடியிருப்பான். எதற்கும் பார்க்கலாம்’ என பீச் உள்ளே நடந்தால், தூங்கிக்கொண்டிருக்கிறான். எழுப்பினேன். எழுந்தான். முதலில் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை, விழித்தான். பின் எழுந்துகொண்டான். சோர்வாகப் புன்னகைத்தான். ``ஏதேனும் கிளப்புக்குப் போகலாமா?’’ என்றேன். `வேண்டாம்’ எனத் தலையசைத்தான். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்துவந்து, ஒரு சிகரெட் கொடுத்தேன். பற்றவைத்துக்கொண்டோம். நான் பைக்கில் சாய்ந்து நின்றுகொண்டேன். அப்போது ஒரு தாய்ப்பெண் பைக்கில் சென்றாள். இவன் அவளை ஆர்வமுடன் உடனே நோக்கினான்.

   ஒரு தாய்ப்பெண் ஸ்டைலாக பைக் ஓட்டிக்கொண்டு சென்றாள். நான் என்னை மீறி அவளைப் பார்த்தேன். அவள் என்னைப் பார்த்துக் கை ஆட்டியதுபோல் இருந்தது. எனக்கான இளவரசியே என்னை நோக்கிக் கை ஆட்டியதுபோல் இருந்தது.

   பைக்கில் செல்கையில் ஒரு தாய் ஆளும் ஓர் இந்தியனும் நின்றுகொண்டிருந்தனர். நான் ``சர்வீஸ் வேண்டுமா?’’ என்று கேட்கும்விதமாகக் கையை அவர்களை நோக்கி ஆட்டினேன்.

   அவள் கையை ஆட்டியதும், ``அந்தப் பொண்ணுகூட போறியா?’’ என்றேன் என் இந்திய நண்பனிடம்.

   ஒரு கணம் இளவரசி கனவு கலைந்து, விலைமாதுவிடமா என்று எனக்கு ஏமாற்றம் ஏற்பட்டாலும், ஏனோ அவளின் கை அசைவு அவ்வளவு உற்சாகத்தைத் தந்தது. புக்கெட்டே கலர்ஃபுல்லாக மாறியதுபோலத் தோன்றியது. இரவு 12 மணியிலிருந்து பின்னோக்கிச் சுற்றி இரவு ஒன்பது மணியில் போய் நின்றார்போல இருந்தது. மீண்டும் ஒன்பது மணி முதலான படாங், பங்களா ஸ்ட்ரீட் வாழ்வை வாழலாம்போல இருந்தது. இவனது ரெஸ்ட்டாரென்ட்டிலேயே இணைந்து வேலை செய்யலாம் எனத் தோன்றியது. இன்னொரு ரெஸ்ட்டாரென்ட் போடலாம். இந்திய உணவுகளைச் சமைக்கலாம். நடமாடும் ஊர்தி உணவகங்கள் திறக்கலாம். ஹோட்டலை லீஸுக்கு எடுத்து நடத்தலாம். இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு பேக்கேஜ் டூர் போடலாம் என்றெல்லாம் எண்ணம் றெக்கை கட்டிப் பறந்தது. தாய் நண்பனிடம், ``போறேன்’’ என்றேன்.

   அவளை அழைத்து இந்திய நண்பனிடம் கைக்காட்டினேன். அவள் இயல்பாக அவனுடன் ஒட்டிக்கொண்டாள். ``லவ் யூ டார்லிங்’’ என்றாள்.

   `லவ் யூ டார்லிங்’’ என்று சொல்லி, அவனை இயல்பாக்க முயற்சித்தேன். அவன் இதயத்துடிப்பை உணர முடிந்தது. அளவுக்கு அதிகமாக இருந்தது.

   `லவ் யூ டார்லிங்’ என்று அவள் சொன்னது, எனக்கு இதமாக இருந்தது. ஓர் ஒட்டுதல் வந்தது. இவள் அழகாகவும் ஸ்டைலாகவும் இருந்தாள். கால் கேர்ள் இயல்புடன் கமர்ஷியலாக இல்லை. அன்பாக இருந்தாள். `இவள் கால் கேர்ள் இல்லை’ என்று சொல்லிக்கொண்டேன்.

   இரண்டு நண்பர்களும் ஏதோ பேசிக்கொண்டனர். எங்கள் நாட்டு ஆள் கொஞ்சம் தாய் `பாட்’டை எடுத்து இந்தியன் சட்டை பாக்கெட்டில் வைத்தான். எனக்கு எல்லாமே வித்தியாசமாக இருந்தன. இவர்களை இயல்பாக்க நான் ``முதலில் ஒரு கிளப்புக்குப் போய் பியர் குடிக்கலாமா?’’ என்றேன்.

   ``இல்லை. நீங்கள் இருவரும் செல்லுங்கள்’’ என்று சொல்லிவிட்டு, நான் என் பைக்கை நோக்கி நடந்தேன்.

   தாய் நண்பனை, கையைப்பிடித்து இழுத்து நிறுத்தினேன். மனதில் ஏதோ பொங்கியது. அவனை அணைத்து அவன் உதட்டில் ஒரு முத்தமிட்டேன். ``நீயும் வா’’ என்றேன்.

   இந்தியன் என் உதட்டில் முத்தமிட்டது, எனக்கு பேரன்பாகப்பட்டது. நாங்கள் மூவரும் ஒரு கி்ளப்புக்குச் சென்றோம்.

   தாய்ப்பெண் பைக் ஓட்ட, அவள் பின்னால் அமர்ந்து செல்வது எனக்கு சொர்க்கமாக இருந்தது. மூவரும் ஒரு கிளப்புக்குள் நுழைந்தோம். உற்சாகமான இசை எங்களை வரவேற்றது. தாய்ப்பெண், என் இடையைப் பற்றி மெள்ள ஆடியபடியே நுழைந்தாள். அந்த எனக்கான இரவு ஆரம்பமானதுபோல உணர்ந்தேன். என் தாய் நண்பன் தனியாக ஒரு மேசைக்குச் சென்றான்.

   பியர் குடித்துக்கொண்டிருக்கும்போது அவ்வப்போது இந்தியனை மென்மையாக முத்தமிட்டேன். என் இடையில் அவனது கையைச் சுற்றிவைத்துக்கொண்டேன். அவனது தலையை எனது மார்பில் சாய்த்துக்கொண்டேன். என் மொபைலைப் பார்த்தான். எடுத்துக் காட்டினேன். என் மூன்று வயது மகள் சிரித்தபடி மொபைல் ஸ்க்ரீனில் இருந்தாள். அவ்வளவு மகிழ்ச்சியுடன் இந்த இந்தியன் என் மகளை முத்தமிட்டான். அவளின் தந்தைகூட இப்படி முத்தமிட்டதில்லை.

   அவனுக்குத் திடீரென காதலியின் நினைவு வந்தது. உடனே அவளைச் சென்று பார்க்க வேண்டும்போல் இருந்தது. `இன்னொருமுறை சமாதானப்படுத்தினால்தான் என்ன?’ எனத் தோன்றியது. உடனே அவளைத் தேடி ஓட வேண்டும். அவளின் கால்களில் சரணடைய வேண்டும். `எனக்கு எல்லாமே நீதான் என அழுதுகொண்டே கட்டிப்பிடித்துக்கொள்ள வேண்டும்’ என்று மனம் அடித்துக்கொண்டது. அவன் என்னுடைய கால்களில் விழுந்தும் உதறிவிட்டு அன்று ஹாஸ்டலுக்குள் வந்துவிட்டேனேயொழிய, இப்போது அவனுக்கு இப்படியெல்லாம் தோன்ற வேண்டும் என மனதுக்குள் ஆசையுடன் ஓட்டிப்பார்த்துக் கொண்டே தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருக்கிறேன்.
   http://www.vikatan.com
  • By நவீனன்
   பொம்மை - சிறுகதை
     பாலகுமாரன் - ஓவியங்கள்: செந்தில்  
   மழை பெய்து நெகிழ்ந்திருக்கும் மண் சாலை, பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. ஓவியத்தில், புகைப்படத்தில் இன்னும் கூடுதல் அழகாக இருக்கும். ஆனால், நடப்பதற்குத் தோதாக இல்லை.

   ஸ்ரீனிவாசன், மிகுந்த கவனத்தோடு அந்தச் சாலையில் நடந்து கொண்டிருந்தான். அவனுக்கு அது பழக்கம் இல்லை.

   ``எழுத்தாளரே, இன்னும் கொஞ்சம் விரச நடக்கலாம். கேரளம், பத்து நிமிஷத்துக்கு ஒரு மழை பெய்யும். ஒரு மேகம் வந்து தழைஞ்சு, கரைஞ்சு சற்றுப் பொறுத்து இன்னொரு மேகம் தழையும். மழையாய்க் கரையும். எனவே, விரைந்து வாரும்” என்பதாக மலையாளத்தில் கூச்சலிட்டார்.
   அவர் சந்திரமோகன். எழுத்தாள ரான ஸ்ரீனிவாசனின் வாசகன். ஸ்ரீனிவாசன் எழுதிய சிறுகதைகளைப் படித்துவிட்டுப் பாராட்டி அஞ்சல் அட்டையில் எழுத, அதற்கு அதே விதமான அஞ்சல் அட்டையில் ஸ்ரீனிவாசன் நன்றி சொல்ல, `எங்கள் ஊர்ப் பக்கம் வாருங்களேன். நல்ல இயற்கைக் காட்சிகள் இருக்கின்றன’ என்று சொல்ல, `வேறு என்ன விசேஷம்?’ என்று இவன் அஞ்சல் அட்டையில் கேட்க, `அதர்வண வேதம்’ என அவர் விளக்கியிருந்தார்.

   படாரென ஒரு துள்ளலுடன் அங்கு போகத் தயாரானான். இரண்டு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டான். சனியும் ஞாயிறும் அவனுக்கு விடுப்பான நாள்கள். மொத்தம் நான்கு நாள்கள் அவன் கையிலிருக்க, தகுந்த காசு சௌகரியங்களோடு அவன் ரயில்வண்டியில் ஏறி ஓர் ஊரில் இறங்கி, அங்கிருந்து பஸ் பிடித்துச் சந்திரமோகனுடைய ஊருக்குப் போனான். அவரது வீட்டில் குளித்துச் சாப்பிட்டுவிட்டு உட்கார...

   ``என் உறவுக்காரரே அதர்வண வேதத்தில் நல்ல பயிற்சி உடையவர். மாந்திரீகர்.  இதை ஏன் கற்றுக்கொள்ள வேண்டும் என இங்கு வந்திருக் கிறீர்கள்?” என்று சந்திரமோகன் ஆவலுடன் கேட்டார்.

   ஸ்ரீனிவாசன் மௌனமாக இருந்தான்.

   ``கதை எழுத வேண்டும் எனப் பார்க்கிறீர்களா?” என்று அவர் வினவ,

   ``அதுவும் ஒரு காரணம்” என்றான்.

   ``அதுவும் என்றால்...”

   ``வேறு சில தொந்தரவுகள் இருக்கின்றன. அதற்காகவும் நான் இங்கு வந்திருக்கிறேன்.”

   ``என்ன மாதிரி?”

   ஸ்ரீனிவாசன், அவரிடம் சொல்வதா, வேண்டாமா என யோசித்தான். அவனின் தயக்கத்தை அவர் புரிந்து கொண்டார்.

   ``இந்த மாதிரி விஷயங்கள் எல்லோரிடமும் சொல்லத் தகுந்ததாக இருக்காதுதான். எனக்குப் புரிகிறது. என் உறவினரிடம் நான் அழைத்துப் போகிறேன். அவரிடம் பேசுங்கள். மனம்விட்டுப் பேசுங்கள். மிகுந்த உயர்ந்த குணம்கொண்டவர்; கம்பீர மானவர். ஐம்பத்தைந்து வயது, போன மாதம்தான் நிறைந்தது. பார்த்தால் அப்படித் தெரியாது. தன்னுடைய இளமைக்குக் காரணம் அதர்வண வேதம்தான் என்று சொல்பவர். உங்கள் குறை களை அவரிடம் சொல்லுங்கள்” என்று பெருந் தன்மையோடு அழைத்துப் போனார்.

   மலையாளிகள் அடுத்தவர் விஷயங்களில் தலையிடு வதில்லை. தானாகவே ஒதுங்கிக் கொள்கிறார்கள். `என்ன... என்ன..?’ என மூக்கு நுழைப்ப தில்லை. ஒருபோதும் தானாக நடப்பதில்லை என மனதில் நினைத்துக்கொண்டான்.

   நல்ல உணவுக்குப் பிறகு, அவருடன் மண் சாலை ஒன்றில் நடந்தான். எல்லா இடங்களுக்கும் ஸ்கூட்டரில் போய் பழக்கமான அவனுக்கு, இந்தத் தூரம் கொஞ்சம் சிரமமாக இருந்தது. தோளில் பை மாட்டி, கையில் அவருடைய குடையை எடுத்துக்கொண்டு நடக்க, திடீரென மழைத்தூறலும் பிறகு வெய்யிலுமாக வானம் ஆட்டம் காட்டிக்கொண்டிருந்தது.

   கேரளத்தில் பசுமை, மனதை நிறைத்தது. குட்டைத் தென்னையும், காட்டுச் செடிகளும் பச்சை வாசனையைப்  பெருக்கின. கேரளத்து மக்கள் அந்த மண் சாலையில் குதிகால் படாமல் வெகுவேகமாக நடந்து கொண்டிருந்தார்கள். ஸ்ரீனிவாசனுக்குத்தான் `வழுக்கிவிடுமோ’ என பயமாக இருந்தது.

   அவர் வீட்டை அடைந்ததும் குடைகளைத் திண்ணையில் சாய்த்துவைத்துவிட்டு கீழே இருந்த நார் மிதியடியில் கால்களை நன்றாகத் துடைத்துக்கொண்டு உள்ளே போய், அங்கு வேலையாள் கொடுத்த சிறிய துணி ஒன்றில் முழங்கால்களைத் துடைத்துக்கொண்டு விரித்திருந்த பெரிய பாயில் அமர்ந்து கொண்டான்.

   பெரிய கூடம், எதிரே முற்றம். முற்றத்தில் துளசிச்செடி. கூடத்தில் சின்ன மஸ்தானின் உருவம். நிர்வாணமாக நின்று ஓர் ஆணின் தலையை வெட்டி ரத்தம் குடிக்கும் சின்ன மஸ்தான். பலகையில் கட்டங்கள் எழுதப்பட்டிருக்க, ஒரு கொத்து சோழி அருகே வைக்கப்பட்டிருந்தது. கணக்குப்பிள்ளை ஸ்டூல்போல ஒன்று இருந்தது. அதன்மீது மூக்குக்கண்ணாடி இருந்தது. கொஞ்சம் முதுகு மெத்தையாய் ஓர் இடமும் கீழே தர்ப்பைப் பாயும் இருந்தன. காலையில் குங்கிலியமும் சாம்பிராணியும் போட்டிருக்க வேண்டும். அந்த வாசனை வீசிற்று. வெள்ளைத்துண்டு மடித்து வைக்கப்பட்டிருந்தது.

   உட்கார்ந்தவுடனேயே கட்டங்காபி வந்தது. சாரல் மிகுந்த அந்தச் சூழலுக்கு, அந்த காபி இதமாக இருந்தது. கொடுத்து முடித்த சிறிது நேரத்தில் சந்திரமோகன் உறவுக்காரர் வந்தார்.

   ஈஸ்வரன் ஸ்வாமி என்ற பெயர்ப் பலகை, வாசலில் தொங்கியிருந்தது அவரைப் பார்த்ததும் ஞாபகம் வந்தது. நல்ல உயரம், கொஞ்சம் கறுப்பு, முன் வழுக்கை, கூர்மையான மூக்கு, தடித்த கண்ணாடி, வெற்றிலை போட்டுச் சிவந்த இதழ்கள், அகலமான மார்பு. வெள்ளை வேட்டியும் காலர் இல்லாத சட்டையுமாகப் பெரிய வரவேற்புக் குரலோடு வந்து உட்கார்ந்தார். சந்திரமோகனோடு மிக வேகமாக மலையாளத்தில் பேசினார்.
   ஸ்ரீனிவாசனுக்குப் புரியவில்லை. தாய், தந்தை, தமக்கை, குழந்தைகள் எனச் சகலரையும் விசாரிக்கிறார் எனத் தெரிந்தது. `வேறு என்ன?’ என்றபோது, சந்திரமோகன் அவனைச் சுட்டிக் காட்டினார்.

   ``ஓ... இப்பதான் ஞாபகம் வருது. சினேகிதம் இல்லையா” என்று சொல்ல,

   ``ஆமாம்.”

   ``எழுத்து அல்லவா” என்று கேட்க, மறுபடியும் சந்திரமோகன் ``ஆமாம்’’ என்று சொல்ல,

   ``என்னிடத்தில் இவருக்கு என்ன வேணும்?” சட்டென மலையாளம் பேசப்பட்டது.

   ``இவர் மாந்திரீகம் பிரயோகம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார். அதற்காக வந்திருக்கிறார்.”

   ஈஸ்வரன் ஸ்வாமி திரும்பி இவனைப் பார்த்தார்.

   ``எதற்காக அதைக் கற்றுக்கொள்ள வேண்டும்?”

   ஸ்ரீனிவாசன்  பதில் சொல்ல சற்று தாமதித்தான்.

   ``எதிரிகள் இருக்கிறார்களோ?” ஈஸ்வரன் ஸ்வாமி ஆரம்பித்தார்.

   ``ஆமாம்.”

   ``கடுமையாக இருக்கிறார்களோ..?”

   ``ஆமாம்.”

   ``தாங்கமுடியாமல் இங்கு வந்திருக்கிறீரோ..?”

   ``ஆமாம்.”

   ``இதை என்னிடம் சொன்னால் போதுமே. நான் பரிகாரம் செய்துவிடுவேனே. துன்பங்கள் குறையுமே. நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என ஏன் வந்தீர்கள்?”

   ``வாழ்க்கை முழுவதும் எதிரிகள் இருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.”

   ``ஓ... ஒவ்வொரு முறையும் ஓர் ஆசானைத் தேடி வர முடியாது.”

   ``அதே. அதை நானே கற்றுக்கொண்டால், எனக்கே அந்த வித்தை தெரிந்தால், மனிதர்களைக் கையாள்வது எளிதாக இருக்குமல்லவா.”

   ``அப்படியா!”

   அவர் புருவங்களை உயர்த்திப் பார்த்தார். சந்திரமோகனை மெள்ளப் பார்த்துச் சிரித்தார். சந்திரமோகன் சிரிக்கவில்லை. அப்படி என்ன வேதனை என்பதுபோல ஸ்ரீனிவாசனைப் பார்த்தார். ஈஸ்வர ஸ்வாமி சற்று நேரம் அமைதியாக இருந்தார்.

   ``காபி குடிச்சுதோ?”

   ``ஆச்சு.”

   ``இன்னொரு டம்ளர்...’’ எனக் கேட்க,

   அவன் ``சரி’’ என்றான்.

   உள்ளே குரல் கொடுத்தார். காபி வரும்வரை அமைதியாக இருந்தார்கள். கண்ணாடி டம்ளர் காபியை அவன் மறுபடியும் விரும்பிக் குடித்தான்.

   அந்த இடத்தில் அவரோடு பேசும்போது தொண்டை வறண்டும், வயிறு கொஞ்சம் குழைந்தும் இருந்ததுதான் காபி விரும்பியதற்குக் காரணம். அந்த காபி, அந்த விஷயத்தைச் சரி செய்தது; உற்சாகம் கொடுத்தது. `தொண்டை வறண்டு போயிருக்கிறது எனத் தெரிந்தே இவர் காபி வரவழைத்திருக்கிறார்’ என்ற எண்ணம் ஏற்பட்டது. நன்றியுடன் அவரை நோக்கி கைக்கூப்பினான். அவர் மறுபடியும் அழகாகச் சிரித்தார்.

   ``உங்க காபி வேற... எங்க காபி வேற”

   ``ஆமாம். ஆனால், இது சுவையாக இருந்தது” என்று பதில் சொன்னான்.

   ``எத்தனை நாவல் எழுதியிருப்பீர்?”

   ``முப்பது நாவல் எழுதியிருக்கிறேன். சிறுகதை தொண்ணூறு எழுதியிருக்கிறேன்.”

   ``அடிசக்கை! அப்போ பெரிய எழுத்தாளர்தான்.”

   ``இல்லை. இது போதாது. இன்னும் அதிகம் எழுத வேண்டும். இருநூறு, இருநூற்றைம்பது நாவல்களாவது எழுத வேண்டும்.’’

   ``அடிசக்கை. சினிமா உண்டோ?”

   ``இல்லை. அதற்குள்ளும் போக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இதுவரை இல்லை.”

   ``நிச்சயம் போகலாம்.”

   அவர் சோழி எடுத்து உள்ளங்கைகளில் தேய்த்துப் பலகையில் போட்டார். மூன்று மல்லாந்தன... மற்றவை குவிந்தன. நிமிர்ந்து ஸ்ரீனிவாசனைப் பார்த்தார்.

   அவன் ``குரு’’ என்றான்.

   ``ஓ... இது தெரியுமோ?”

   ``கொஞ்சம்.”

   ``இன்னும் கத்துக்கணுமோ?”

   ``ஆமாம்.”

   ``மூன்று விழுந்தால் குரு. ஆறு விழுந்தால் சுக்கிரன். இது எளிது. அது ஜோசியம். என்னுடையது மாந்திரீகம்; மந்திரப்பிரயோகம். சாஸ்தா பூஜை, சாம்பவி பூஜை, சின்ன மஸ்தான், தூமாவதி எனப் பல்வேறுவிதமாக நான் ஈடுபடுவேன். மிகுந்த மனவடக்கமும் அமைதியும் தேவைப்படும். சென்னை போன்ற நகரங்களில் இவற்றைச் செய்ய இயலாது. நான் நகரத்திலிருந்து எவ்வளவு தள்ளி இருக்கிறேன் பார்த்தீர்களா? நகரத்திலிருந்து சந்திரமோகனே தள்ளித்தான் இருக்கிறான். சந்திரமோகன் இருக்கும் இடத்திலிருந்து இது இன்னும் உள்ளடங்க, இன்னும் சற்றுப் போனீர்கள் என்றால் காடுதான். இது ஒரு சிறிய கிராமம்.

   எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது தெய்வம். அந்த இடத்தில் வந்து உட்கார்ந்து பூஜிக்கிறேன் என்றால், அது அமைதியாக அந்த இடத்தில் வந்து அமர்ந்துகொள்கிறது. அதர்வண வேதத்தில் பாலபாடம், தெய்வத்தை அழைப்பதே. அழைப்பவன் மரியாதையாக அழைத்தால் எவரும் வந்து அமர்வார். என் வீடு சுத்தமாக இருந்தால் உங்களால் நெடுநேரம் அமர முடியும். துர்நாற்றம் வீசினால் உட்கார முடியாது. கிளம்பிப் போய்விடுவீர்கள். திரும்பக் கூப்பிட்டால் வர முடியாது. அதுபோலத்தான் தெய்வமும். இந்த இடத்தில் குங்கிலியமும் சாம்பிராணியும் காலையும் மாலையும் போட்டு மிகச் சுத்தமாக வைத்திருப்போம். துர்வாசனை வராது. மனம் சுத்தமாக இருந்தால் உடல் சுத்தமாக இருக்கும்; உடல் சுத்தமாக இருந்தால் மனம் சுத்தமாக இருக்கும். மனமும் உடலும் சுத்தமாக இருந்தால், சூழ்நிலை சுத்தமாக இருக்கும். சூழ்நிலை சுத்தமாக இருந்தால், ஒரு வீடு சுத்தமாக இருந்தால், ஒரு கிராமம் சுத்தமாக இருக்கும்.

   ஒரு கிராமம் முழுவதுமே தேவதைகள் வந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். ஏனெனில், இந்தக் கிராமத்தில் உள்ள அனைவருமே முழு நம்பிக்கையோடு தங்களையும் சுத்தப்படுத்தி, தங்கள் இல்லத்தையும் சுத்தமாக வைத்திருக்கிறார்கள். இது சென்னை போன்ற பட்டினத்தில் இயலாது. அதனால்தான் பட்டணத்துக்கார்களுக்கு இது சொல்லித்தருவதில்லை அல்லது இதைக் கற்றுக்கொள்பவர் பட்டினத்தில் இருப்பதில்லை. இந்தப் பக்கம் வந்துவிடுகிறார்கள். உங்களால் இந்தப் பக்கம் வர முடியுமா?”

   ``இயலாது.”

   ``எனக்குப் புரிகிறது. என்ன செய்கிறீர்கள்?”

   ``ஒரு கம்பெனியில் வேலை செய்கிறேன்.”

   ``பெரிய கம்பெனியோ..?”

   ``ஆமாம். மிகப்பெரிய கம்பெனி.”

   ``உங்கள் துக்கம் என்ன?”

   ``என்னை அலுவலகத்தில் ஒருவர் அவமானப்படுத்துகிறார்; தொடர்ந்து அவமானப்படுத்துகிறார். மன உளைச்சல் தருகிறார்.”

   ``வன்முறையா?”

   ```இல்லை. பேச்சினாலும் செய்கையினாலும்.”

   ``இன்னும் கொஞ்சம் வலித்துச் சொல்ல முடியுமா?”

   ``எனக்கு மனைவியாகப்போகிறவர், எனக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். பத்து பக்கக் கடிதம்.”

   ``ஓ...”

   ``அதில் என்னோடு சந்தோஷமாக இருந்த தருணங்களை விளக்கியிருக்கிறார். `உங்கள் கை என்மீது இன்னும் இருக்கிறது’ என்று வர்ணித்திருக்கிறார்.”

   ``சொல்லுங்கள்.”

   ``அந்தக் கடிதத்தை எனக்குத் தெரியாமல் எடுத்து, என் அலுவலக நண்பர்களிடம் அதைப் படிக்கக் கொடுத்து, சகலரும் சிரிக்கச் செய்துவிட்டார்.”

   ``இவருக்குத் திருமணமாகிவிட்டது. இவருக்குக் கடிதம் எழுதியது வேறொரு பெண். அந்தப் பெண்ணையும் திருமணம் செய்ய வேண்டும் என்று இவர் விரும்புகிறார்.”

   ``சரி.”

   சந்திரமோகன் போட்டுக்கொடுக்க, அவர் நிதானமாக ``சரி’’ என்ற வார்த்தையைச் சொன்னார். `இது தேவையில்லாமல் பேசியிருக்கிறாரோ!’ என்று மெல்லிய கோபம் வந்தது. ஆனால், காட்டிக்கொள்ளவில்லை. ஈஸ்வரன் ஸ்வாமி அமைதியாக இருந்தார்.

   ``சந்திரமோகன்... முதல், இரண்டாவது, மூன்று, நான்காவது அது விஷயமில்லை. ஒரு பெண்மணி அந்தரங்கமாக ஒருவருக்கு எழுதிய கடிதத்தை எடுத்து அதை மற்ற எல்லோருக்கும் படிக்கக் கொடுப்பது என்பது அந்த ஆளுக்குச் செய்த துரோகம் அல்ல; அந்தப் பெண்ணுக்குச் செய்த துரோகம். ஒரு பெண்ணை அவமானப்படுத்தியிருக்கிறார்;   கேவலப்படுத்தி யிருக்கிறார். இவரைக் கேலிசெய்வதைவிட அதிகமாக அந்தப் பெண்மணியை அவர்கள் பேசுவார்கள். இழிவாகச் சொல்வார்கள். அது தவறு. அடுத்தவருடைய கடிதத்தைப் படிப்பதே தவறு. இந்த மாதிரிக் கடிதத்தைப் படிப்பது மிகவும் தவறு. இதைப் பல பேருக்குக் கொடுப்பது தவறு. அவர் பேர் என்ன?”

   ``வரதராகவன்.”

   ``ஓ... அவர் வேறு என்ன செய்கிறார்?”

   ``என்னை எப்படியேனும் வேறு இடத்துக்கு மாற்றிவிட வேண்டும் எனத் துடிக்கிறார்.”

   ``ஏன்?”

   ``நான் அவருக்கு அருகே இருப்பதால், லஞ்சங்களில் அவரை ஈடுபட முடியாமல் தடுக்கிறது. என்னிடம் இருக்கும் பொறுப்புகளையும் அவர் எடுத்துக்கொண்டு விட்டால், அவருக்கு அதில் மிகப்பெரிய பணவசதி இருக்கிறது.”

   ``ம்... நீங்கள் அவரைவிட்டு நகர முடியாதா?”

   ``நகரலாம். அது ஒரு தோல்வி என்பதாகப்படும். அவர் வெற்றிபெற்றதாக ஆகும்.”

   ``வேறு என்ன செய்கிறார்?’’

   ``நான் கதைகள் எழுதுகிறேன்.”

   ``சரி.”

   ``அதைச் சொல்லி `இந்தப் பொறுப்புக்கு வந்துவிட்டு  இந்தக் கதைகளெல்லாம் எழுதுவது சரியில்லை. இது பொறுப்பின் கவனத்தைக் குறைக்கும்’ என்று சொல்கிறார். நான் சிறு தவறு செய்தாலும் என் இலக்கியப் பணிதான் காரணம் எனப் பெரிதாகப் பேசுகிறார்.”

   ``இலக்கியம் அறியாதவரா?”

   ``காசுதான் முக்கியம் என்பவர்.”

   ``ஆமாம். மனிதர்கள் அப்படியும் இருக்கிறார்கள். சந்திரமோகன், ஒரு மனிதனுடைய நல்ல சக்தி இலக்கியம். உன்னதமான நிலை இலக்கியம். என்ன தொழில் செய்தாலும் இலக்கியவாதியாக ஒருவன் இருப்பாரேயானால், அவன் மனிதருள் சிறந்தவன். ஒருவேளை இவர் இலக்கியமேகூட அந்த இரண்டாவது பெண்மணியினுடைய அன்புக்குக் காரணமாக இருக்கலாம். அந்தப் பாராட்டு இவர்களுக்குள் நட்பு ஏற்படுத்தியிருக்கலாம். அது என்னவாகும் என்பது வேறு விஷயம். இந்த இரண்டையும் ஒருவர் கொச்சைப்படுத்தியிருக்கிறார் என்றால், அது மிகப்பெரிய தவறு. அவரை உங்களால் மன்னிக்க முடியாதா?” ஈஸ்வரன் ஸ்வாமி மீண்டும் கேட்டார்.

   ``இல்லை. மன்னிக்க இயலாது. என்னுடைய வாசகியும் சினேகிதியுமான அந்தப் பெண்மணியை `ஒரு கேஸ்’ எனச் சொன்னது, என்னைக் குமுறவைத்துவிட்டது. அந்தப் பெண்மணி, மிக உயர்ந்தவர்; மிகச்சிறந்த பண்பாளி; அறிவுக்கூர்மைமிக்கவர். அவரின் கால் தூசுக்கு வரதராகவன் இணையாக மாட்டார்.”

   ``புரிகிறது. மனைவியை அல்லது மனைவியைப் போன்றவரை அவமானப் படுத்துவது என்பது போர் தூண்டுகின்ற விஷயமாகவே இருக்கிறது. பல போர்களுக்குக் காரணம் இதுவாகவே இருக்கிறது. இதை ஏன் மாந்திரீகத்தால் எதிர்க்க வேண்டும் என வந்தீர்கள்? நேரே போய் அடித்து நொறுக்கலாமே!”

   ``எனக்கு வேலை போகும். என் செயல்கள் யாவும் இலக்கியப் பணிகள் முதற்கொண்டு தடைபட்டுப்போகும்.”

   ``அடிசக்கை. நல்லது. முன்னமே சொன்னதுபோல மாந்திரீகம் என்பது தேவதைகளை வரவழைப்பது. தேவதைகளை எதிரே வரவழைத்துவிட்டு, அவர்களைப் பற்றிய மந்திர உச்சாடணங்களைச் செய்துவிட்டு நாம் பிரயோகத்தைத் தொடங்க வேண்டும். நாம் பிரயோகத்தைத் தொடங்க வேண்டும். நீங்கள் அந்தணர்தானே!”

   ``ஆமாம்.”

   ``போய் கைகால்களைச் சுத்தம் செய்து வாருங்கள்.”

   அவன் முற்றத்துக்குப் போய் கைகால்களைச் சுத்தம் செய்து வந்தான். அங்கு இருந்த துண்டில் முகம் துடைத்துக்கொண்டு வந்து உட்கார்ந்தான். பையிலிருந்து பஞ்ச பாத்திரம் எடுத்துவைத்தான். தர்ப்பை பூக்களையும் தர்ப்பை மோதிரத்தையும் கீழே வைத்தான். அவர் வியந்தார்.
   ``கற்றுக்கொள்ள வேண்டும் என்ற தெளிவோடே இதை எடுத்துக்கொண்டு வந்திருக்கிறீர்களா?”

   ``ஆமாம்.”

   ``நல்லது. கற்றுத்தருகிறேன்.”

   அவர் சொம்பிலிருந்து பஞ்ச பாத்திரத்தில் போட, அவன் சட்டையைக் கழற்றிவிட்டு பையிலிருந்த மேல் துண்டை இடுப்பில் சுற்றி வேகமாக மூன்று உளுந்து அளவு ஜலம் குடித்துக் கணபதியை வேண்டி, பரமேஸ்வரரைப் பிரார்த்தித்துக் கைக்கூப்பி குரு வணக்கம் சொல்லி, ``என்ன தட்சணை?’’ என்று கேட்டான்.

   ``பிறகு பார்ப்போம். உங்கள் வேகம் உங்கள் காயத்தை எனக்குக் காட்டுகிறது. நல்லது. எப்போது தேவதைகளை வரவழைத்து விட்டோமோ, பிறகு பிரயோகம் தொடங்கும். தேவதைகளை இப்போது வரவழைப்போம்.”

   குறிப்பிட்ட ஒரு தேவதைக்கான மந்திரத்தைச் சொன்னார். ஸ்ரீனிவாசனைச் சொல்லச் சொன்னார். ஸ்ரீனிவாசனுக்கு அந்த மந்திரம் தெரிந்திருந்தது. அட்சரம் பிசகாமல் அழகாகச் சொன்னான்.

   ``ஏன் இந்த மந்திரத்தைக் கற்றுக்கொண்டீர்கள்?”

   ``இது சொன்னால் தடுக்கப்படும் என நினைத்தேன்.”

   ``தடுக்கப்படவில்லையோ?”

   ``இல்லை. கொஞ்சம் குறைந்தது, அவ்வளவுதான். அழியவில்லை. அழிக்கவே உங்களை நாடி வந்திருக்கிறேன்.”

   ``புரிகிறது. மந்திர ஜபம் செய்து தேவதைகளை இங்கு வரவழைக்கும் வித்தையை இப்படிச் செய்யலாம்.’’

   ``ஒரு கொத்து புஷ்பங்களை வைத்திருக்கிறேன். வந்து உட்காரும்படிச் சொல்கிறேன். நாம் சொன்ன நேரம் அவர் வந்து உட்கார்ந்தால் இந்தப் பூக்கள் சற்று சரியும். ஓர் ஆள் வந்து உட்கார்ந்ததற்கான விஷயம் நமக்குப் புரியும்.”

   அவர் கொத்துப்பூவை வைத்துவிட்டு, மறுபடியும் அவனோடு சேர்ந்து மந்திரம் சொன்னார். சட்டென பூக்கள் காற்றில் கலைந்ததுபோல் கலைந்தன. ஆனால், காற்று வீசவில்லை. அவர் உயர்த்தி கைகாட்டி அவனை அமைதிப்படுத்தினார்.

   ``இப்போது கோதுமை மாவில் ஒரு மனித உருவம் செய்ய வேண்டும்.”

   அவர் மரப்பெட்டியைத் திறந்து, உள்ளிருந்து ஒரு பிளாஸ்டிக் குப்பியை எடுத்து அதில் இருந்த உருண்டையை எடுத்துக் காண்பித்தார்.

   ``இது இன்று காலை செய்தது. கோதுமை மாவு உருண்டை. இதில் மனித உருவம் செய்வோம்.”

   வெகு விரைவாக இரண்டு கை, இரண்டு கால், தலை, உடம்பு என அந்தப் பலகையில் மனித உருவம் செய்தார்.

   ``இப்போது இது வெறும் மனித உடம்பு; உன் எதிரி அல்ல. அந்த எதிரியின் உடம்பை இங்கு வரவழைப்பதற்கு ஒரு மந்திரம் இருக்கிறது.”

   அவர் வேறுவிதமான சத்தங்கள் எழுப்பும் மந்திரத்தைச் சொன்னார். அவனும் சொன்னான். அது அவன் அறியாதது.

   ``மெள்ள இதில் இப்போது உங்கள் விரல்களை வைத்தீர்கள் என்றால், தொட்டுத் தொட்டு எடுத்தீர்கள் என்றால் அந்த இடத்தில் அவருடைய உருவம் தெரியும்.’’

   அந்தக் கோதுமை மாவை வலது உள்ளங்கை விரல்களால் மெள்ள மெள்ளத் தொட்டுத் தொட்டு ஐந்து முறை எடுத்தான்.

   ``போதும் உற்றுப்பாருங்கள்” என்று சொல்ல, அங்கு மூக்கு, கண், தலை, முடி, கழுத்து, சட்டை என்றெல்லாம் பதிந்திருந்தன. கொஞ்சம் தொப்பையுடன் கூடிய வரதராகவனின் உடல் இருந்தது. அவன் பெரும் வியப்போடும் சிரிப்போடும் அவரைப் பார்த்தான்.

   ``வந்துவிட்டதா.”

   ``வந்துவிட்டது.”

   ``இப்போது இந்த மனிதரைத் தண்டிக்க, ஆயுதம் எடுக்க வேண்டும். இதோ இந்த மாதிரியான குச்சி.”

   அவர் பல் குத்தும் குச்சியைப்போல சற்று நீளமான குச்சியை அவனுக்குக் காட்டினார். மிக அழகாகச் சீவப்பட்டிருந்தது. முனை கூர்மையாக இருந்தது.

   ``இது குச்சி அல்ல. இது ஓர் ஆயுதமாக வேண்டும். அந்த ஆயுதத்துக்கான மந்திரம் இருக்கிறது. அது இப்படிச் செய்யப்பட வேண்டும்.”

   அவர் ``ஹ்ரீம் ஹும்’’ என்று மந்திரம்  சொல்ல ஆரம்பித்தார். மெள்ள மெள்ள அந்தக் குச்சியைத் தடவச் சொன்னார்.

   அந்தக் குச்சியைத் தடவினான்.

   ``இது எப்போது ஆயுதமாகிறது என்பது, உங்கள் கைகளுக்குத் தெரியும். இதைச் சொல்லிக்கொண்டே தடவுங்கள்.”

   ஸ்ரீனிவாசன்  ஏழு   நிமிடங்களுக்கும் மேலாக அந்தக் குச்சியைத் தடவிக்கொண்டிருக்கும் போது, சுளீரெனக் கை வலித்தது. ரத்தம் வந்துவிட்டதோ எனப் பார்த்தான். ரத்தம் வரவில்லை. ஆனால், ஒரு பிளேடு கிழித்ததுபோல எரிச்சல் இருந்தது.

   ``கத்தி கூர்மையாகிவிட்டது என அர்த்தம். உங்கள் கையைப் பதம் பார்த்து விட்டது. இதில் ரத்தம் வராது. ஏனெனில், இது உண்மையான கத்தி அல்ல. கத்தியின் வலிமையைக் கொண்டது. இது கத்தியாகிவிட்டது என்பதை உங்கள் வலி சொல்கிறது. இப்போது இதை எடுத்து அந்த வயிற்றிலோ அல்லது காலிலோ குத்தினால், சம்பந்தப்பட்ட வரதராகவன் அடிபடுவார். குத்திவிடலாமா?”

   ``குத்திவிடலாம்.”

   ``எவ்வளவு வலிக்கும் என நினைக்கிறீர்கள்?”

   ``அதிகம் வலிக்கும் என்றுதான் தோன்றுகிறது.”

   ``ஒருவேளை அவர் இறந்துவிட்டால்...”

   ``அவ்வளவு வலிக்குமா?”

   ``ஓ... எவ்வளவு வலிக்கும் எனத் தெரியவில்லை அல்லவா. இப்போது நாம் வேறுவிதம் செய்வோம். இதே பொம்மையை மெள்ள மெள்ள அதே மந்திரம் சொல்லித் தட்டுங்கள்.”

   ``எதற்கு?”

   ``சரி, நான் தட்டுகிறேன். உங்களை நினைத்துத் தட்டுகிறேன்.”

   அவர் அழகாக மேலும் கீழுமாய் அந்தக் கோதுமை மாவைத் தட்டினார். குனிந்து பார்த்தான். அவனுடைய முகம் இருந்தது. கறுப்பு தாடி இருந்தது. பெரிய நெற்றி இருந்தது. அவன் சாயல் பலமாகத் தெரிந்தது. அவன் வியப்போடும் பயத்தோடும் அவரைப் பார்த்தான்.

   ``இந்தக் குச்சி வேண்டாம். இப்போது எதிரே இருப்பது ஸ்ரீனிவாசன். ஸ்ரீனிவாசனுக்கு வலி என்ன எனத் தெரிய வேண்டும் அல்லவா? எனவே, இந்தத் தர்ப்பைப் புல் எடுத்துக் கொள்கிறேன். இந்தப் புல்லின் தாள்களைக் கிழித்துவிடுகிறேன். இப்போது எஞ்சி இருப்பது இந்தக் குச்சி மட்டுமே. மிக மெல்லிய குச்சி. இந்த மெல்லிய குச்சியை நீவி நீவிச் செய்யலாம். நீங்களே நீவிக் கொடுங்கள்.”

   அவனிடம் குச்சியைக் கொடுத்தார். அவன் மந்திரம் சொல்லிக் குச்சியை நீவினான். ஒரு நுனியில் சுள்ளென வலித்தது. ஓர் ஊசியை க்ஷண நேரம் குத்தி எடுத்ததுபோல வலி அது. ரத்தம் வருகிறதோ எனப் பார்க்கவைத்தது. ஆனால், வலி இருந்தது.

   ``குத்துகிறது’’ என்று அறுகம்புல் தண்டை நீட்டினான். அதை அவர் வாங்கிக்கொண்டார்.

   ``உங்களுக்கு இந்த மெல்லிய குச்சியால் குத்தினால் எப்படி வலிக்கும் என்பதைக் காட்டுகிறேன்.”

   சரக்கென வயிற்றில் குத்தினார். ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து பிறகு, ஆறாவது எண்ணிக்கை வரும்போது சுள்ளென மேல் வயிறு வலித்தது.

   ``வலிக்கிறது” என்று அங்கு பொத்திக் கொண்டான். போட்டு மெள்ளத் திருகினார்.

   ``ஜாஸ்தியாகிறது” என அவன் கத்தினான். இடதுபக்கம் திருப்பினார்.

   ``நல்ல வலி”  அவன் நடுங்கினான். இன்னொரு முறை எடுத்துக் குத்தினார்.

   ``கடுமையான வலி” என்று அவன் கத்தினான். இன்னும் திருகினார்.

   ``போதும். இது வயிற்றுக்கோளாற்றை ஏற்படுத்திவிடும்” என்று அவன் அவரைத் தடுத்தான்.

   ``மெல்லிய அறுகம்புல் தண்டு. மிக அமைதியான பிரயோகம். எனக்கு உங்கள்மீது எந்தக் கோபமும் இல்லை. ஒரு பரிசோதனைக்கான கோபம்; பிரயோகம். இதுவே இவ்வளவு வலிக்கிறது அல்லவா? ஒரு கோபத்தோடு, இவ்வளவு பெரிய குச்சியை எடுத்துக் குத்தினால், வரதராகவன் செத்துப்போவான். நீங்கள் வேறு யாரையேனும் இப்படி எடுத்துக் கோபத்தோடு செய்தீர்கள் என்றால், மிக மோசமான பாதிப்பைக் கொடுத்துவிடுவீர்கள். ஒரு விளைவுக்கு எதிர் விளைவு உண்டல்லவா. நீங்கள் பிரயோகம் செய்து சாய்த்துவிட்டால் அந்தப் பக்கத்திலிருந்தும் ஒரு வினை வருமல்லவா? ஒரு செய்கை தவறென்றால், அது பாவமல்லவா? பாவத்துக்குப் பதில் உண்டல்லவா? எனவே, கோபம் உள்ளவர்கள், ஆத்திரம் உள்ளவர்கள், அசூயை உள்ளவர்கள் இதைச் செய்யக் கூடாது.`நீங்கள் செய்துகொடுங்கள்’ என்று என்னைக் கேட்டிருக்கலாம். தானே செய்வேன் என்று நீங்கள் ஆரம்பித்தீர்களே... அது தவறு.

   ஸ்ரீனிவாசன், நீங்கள் நல்ல இலக்கியவாதி. ஓர் இலக்கியம் ஓர் ஆளுக்குப் பொறுமையைத் தான் தர வேண்டுமே தவிர, கோபமும் வேகமும் கொடுத்துவிடக் கூடாது. கோபமும் வேகமும் சாதாரண மனிதர்களுக்கு உண்டான வெளிப்பாடுகள். இலக்கியவாதிகள் பொறுமையை அறிந்துகொண்டவர்கள். பொறுமை என்பது கோழைத்தனம் அல்ல ஸ்ரீனிவாசன். பொறுமை என்பது கம்பீரம். ஒரு வினைக்கு எதிர்வினை உண்டல்லவா? உங்களையும் உங்கள் துணைவியையும் இழிவுபடுத்தியவன், இழிவுபடுவான். வாழ்வு மோசமாகும். இதைத் தூண்டிவிட்டவர் ஒருவர் இருக்கிறார். அவர் குழந்தைகளும் பாதிக்கப் படும். உங்களைப் பார்த்து நகைத்தவர்கள் இரண்டு பேர் இருக்கிறார்கள். அவர் மனைவிக்கு மரணம் ஏற்படும். உங்களுக்கு இடதுபக்கம் இருப்பவரும், உங்களுக்குப் பின்பக்கம் இருப்பவரும் உங்களை அவமானப்படுத்தியதில் பெரும்பங்கு வகித்தவர்கள். அவர்கள் அத்தனை பேரும் பாதிக்கப்படுவார்கள். மிக அழகிய பெண்ணை, துணைவியாக ஏற்கப்போகிறீர்கள். இதைக் கேலிசெய்தவனுக்கு, பல்லும் பனங்காயுமாக மனைவி அமைவாள். நான் ஆரூடம் சொல்லவில்லை. ஒரு வினைக்கு எதிர்வினை நிச்சயம் உண்டு. அப்படி இருப்பின், நாம் அமைதியாக இருந்துவிட வேண்டும். உங்களைப் போன்றோரின் கண்களில் நீர் வரவழைத்தால், அது அமிலமாகும். பொறுமையைக் கைக்கொண்டு இன்னும் உயர்ந்த நிலைக்கு வாருங்கள். இந்த வித்தை உங்களுக்குத் தெரிந்துவிட்டது.

   அதைப் பிரயோகிக்கும் விதமும் தெரிந்துவிட்டது. இவை அனைத்தும் கோபமின்றியே செய்யப்பட வேண்டும். அவசியம் ஏற்பட்டாலொழிய இந்த வித்தை செய்யக் கூடாது. உங்களிடம் கத்தியை உறையிலிட்டுக் கொடுத்துவிட்டேன். கத்தியை வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், யுத்தத்துக்குப் போகாதீர்கள். உங்களுக்கு எதிரி என யாரும் இல்லை. எதிரி என்று வந்த அத்தனை பேரும் அடிபடுவார்கள்; சுருண்டு விழுவார்கள்; காலில் விழுவார்கள்.

   பெரிய இடத்துக்குப் போகிறீர்கள். அமைதி காக்க, அமைதி காக்க, நீங்கள் உச்சியைத் தொடுவீர்கள். எவன் பதற்றப்படுகிறானோ, எவன் ஆவேசப்படுகிறானோ அவர்கள் அத்தனை பேரும் தாழ்ந்து போவார்கள்.

   அவன்  வினையே அவனை அங்கஹீனமாக்கும். எனவே, ஸ்ரீனிவாசன் வித்தையைக் கற்றுக்கொண்டுவிட்டீர்கள். நீங்கள் போகலாம். விடை கொடுக்கிறேன்”  கைக் கூப்பினார்.

   அவன் பையிலிருந்து அவன் எழுதிய மூன்று புத்தகங்களை அவருக்குக் கொடுத்தான்.

   ``அட...”

   மூன்று புத்தகங்கள். அவர் வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டார்.

   ``இது ஒரு லட்சம் ரூபாய்க்குச் சமானம். எனக்குத் தமிழ் வேகமாகப் படிக்க வராது. என் மகன், மகள் இரண்டு பேரும் படிப்பார்கள். அவர்களிடம் கொடுத்து அபிப்ராயம் கேட்டுக்கொள்கிறேன். ஓர் எழுத்தாளன் புத்தகம் கொடுப்பதைவிட பெரிய பரிசு வேறு என்ன இருக்க முடியும்?”
   அவன் எழுந்து நின்றான். கைக் கூப்பினான். காது குவித்து அபிவாதயே சொன்னான். நீண்ட நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினான். மண்டியிட்டான். அவன் கண்களிலிருந்து நீர் வழிந்தது.

   ``கத்தியை மட்டும் கொடுக்கவில்லை. உள்ளே ஒரு சாத்வீகத்தைக் கொடுத்துவிட்டீர்கள். சாந்தத்தைக் கொடுத்துவிட்டீர்கள். நன்றி... நன்றி. உங்களை மறக்க மாட்டேன்’’ அவன் எழுந்து நின்று குனிந்து பாத்திரங்களை உள்ளே போட்டுக்கொண்டு பையை மாட்டிக்கொண்டு மெள்ளப் பின்னடைந்து வெளியேறினான். மழை பெய்துகொண்டிருந்தது. சந்திரமோகனோடு கவலையில்லாமல் அந்த மண் தரையில் அழுத்தி மிதித்தவாறு மழையில் சிரித்தபடி ஸ்ரீனிவாசன் நடந்து வந்தான்.

   அந்த ஸ்ரீனிவாசனுக்கு இன்று 71 வயது. அந்தக் கத்தி, உறையிலிடப்பட்டு அவர் இடுப்பில் இருக்கிறது. 41 வருடங்களாக அந்தக் கத்தியை அவர் எடுக்கவேயில்லை.
   http://www.vikatan.com
  • By நவீனன்
   ஆனைக்கிணறு தெரு - சிறுகதை
   உதயசங்கர் - ஓவியங்கள்: ரமணன்
    
   பதினைந்து வருடங்களுக்குப் பின்னால் ஊருக்குத் திரும்புகிறான் சுந்தர். ஒன்றுவிட்ட சித்தப்பா இறந்த துஷ்டி கேட்பதற்காக இந்த ஊருக்கு மீண்டும் வரவேண்டியதாயிற்று. அடையாளம் தெரியாதபடி ஊரின் முகம் மாறிவிட்டது. பேருந்திலிருந்து இறங்கி நூறுமீட்டர் தூரம் நடந்து சென்று வலது புறம் திரும்பினால் ஆனைக்கிணறு தெரு. இடிந்த கட்டைமண் சுவர்தான் தெருவைத் தொடங்கிவைக்கும். அதற்கு அடுத்தபடியாகத் தகரக்கொட்டாய் போட்ட கரீம்பாய் டீக்கடை. எப்போதும் டீயும் வடை தினுசுகளும் கலந்து தெருவே மணத்துக்கிடக்கும்.  நீண்ட தாடி வைத்த கரீம்பாய் ஒரு நொடிகூட நிற்காமல் ஆடிக்கொண்டேயிருப்பார். தலையாட்டி பொம்மை பக்கவாட்டில் ஆடுவதைப்போல லேசான ஆட்டத்துடனே டீ ஆத்துவார்; வடை போடுவார், பேசுவார், காசு வாங்கிக் கல்லாவில் போடுவார். சுந்தருக்கும் அவனுடைய சேக்காளி களான மணி, மாரியப்பன்,  இவர்களுக்கு மட்டும் எப்போதும் டீ கடன்தான். ஒரு சமயம் கூட காசு கொடுத்துக் குடித்த தில்லை. கரீம் பாய் எப்போது காசு கொடுத்தாலும் வாங்கிக்கொள்வார். கணக்குப் பார்த்த மாதிரியே தெரியாது. அவர்கள் தான் கணக்கு நோட்டில் எழுதுவார்கள். கொடுக்கும்போது கழித்து எழுதுவார்கள். கரீம் பாயின் ஏலக்காய் டீயும், செய்யது பீடியும், தகிக்கும் அந்தத் தகரக்கொட்டாயும் அருகிலேயே இருந்த கட்டைமண் சுவரும், அவர்களுடைய வாழ்க்கையில் எத்தனையெத்தனை கனவுகளை சிருஷ்டித்திருக்கும்.

   இப்போது தெருவின் துவக்கத்தில் ஆனைக்கிணறு தெரு என்று நீலநிறப் பலகை அம்புக்குறிபோல விரலை நீட்டிக்கொண்டிருந்தது. அப்போது எந்தப் பலகையும் கிடையாது. ஆனால், ஊருக்கே தெரியும்; ஆனைக்கிணறு தெரு. சுந்தர் பிறந்து வளர்ந்தது இந்தத் தெருவில்தான். இந்தத் தெருவின் ஒவ்வொரு அடியிலும் அவனுடைய பால்யகால வாழ்வின் ரேகைகள் அடர்த்தியாய் அப்பிக்கிடந்தன. வாழ்க்கையில் எப்போது என்ன நடக்கும் என்று யாராவது கணித்துச் சொல்லிவிட்டால் வாழ்க்கையில் சுவாரசியம் இருக்குமா என்ன?

   அப்பாச்சியின் மரணம்தான் சுந்தரின்மனதில் விழுந்த முதல் அடி. அதற்குப்பின் மிகக் குறுகிய காலத்துக்குள் சுந்தரின் அப்பா திடீரென இறந்து குடும்பத்துக்கு அதிர்ச்சி யளித்தார். அவர் குடும்பத்துக்காகவும், அவருக்காகவும் வாங்கி வளர்த்துவந்த கடன்கள் பெரும்பாறைகளென உருண்டுவந்து குடும்பத்தின் முன்னால் உட்கார்ந்துகொண்டன. மூச்சுவிடவும் நேரம் இல்லாமல் கடன் கொடுத்தவர்கள் கொத்திக் கொண்டிருந்தார்கள்.  சுந்தரும், அம்மாவும், கல்யாணத்துக்குக் காத்திருந்த அக்கா செம்பாவும் ஓர் ஐந்தாம்பிறை இரவில் ஆனைக் கிணறுத்தெருவைவிட்டுத் தலைமறைவானார்கள். அவர்களது குச்சுவீட்டை ஒட்டி ஓடிய வாய்க்கால் முடியும் இடத்தில் இருந்தது ஆனைக்கிணறு. அந்த ஆனைக்கிணறு சாட்சியாகத்தான் ஓடிப் போனார்கள். அதில் தான் அம்மா, அக்கா, ஏன் அப்பாச்சிகூட அவளுடைய சிறுவயதில் குடிதண்ணீர் எடுத்தார்கள்.
   நல்ல உயரமான சுற்றுச்சுவருடன் உயரமான மேடை கட்டி ஆனைக்கிணறு கம்பீரமாக இருக்கும். சுற்றிலுமிருந்த பத்துத் தெருக்களுக்கு குடிதண்ணீர் கொடுத்தது ஆனைக்கிணறுதான். எப்போதும் பெண்கள் கூட்டம் மொய்த்துக்கிடக்கும். கிணற்றின் இரண்டு பக்கமும் இரண்டு உருளிகளில் நல்ல வடக்கயிறு தகரவாளியுடன் கிடக்கும். அதுபோக ஏராளமான பேர் சொந்தமாகக் கயிறும் வாளியும் போட்டு இறைத்துக் கொண்டிருப்பார்கள். இரவும் பகலும் இறைப்பு நடந்துகொண்டேயிருக்கும். பத்துத் தெரு பெண்களையும் ஆனைக்கிணற்றில் பார்க்கலாம். அதனால் அந்தப் பத்துத் தெருவிலிருக்கும் ஆண்களையும் அங்கே பார்க்கலாம். அநேகமாக வீட்டிலிருக்கும் அத்தனை பேருமே தண்ணீர் சுமந்தார்கள். குழந்தைகள் நடைபழகியதுமே சின்னச் செப்புக்குடங்களை அல்லது சொம்புகளை அல்லது  தகரக்குடங்களை இடுப்பில் வைத்து தண்ணீர் எடுத்து விளையாடினார்கள். கொஞ்சநாள்களில் அந்தக் குடங்களோடு ஆனைக்கிணற்றுக்கு வந்துவிட்டார்கள்.  வீட்டில் இருக்கும் நாலைந்து சிமென்ட் தண்ணீர்த்தொட்டிகளில் நிறைந்திருக்கும் தண்ணீரில் குழந்தைகள் எடுத்துவரும் ஒரு சொம்புத்தண்ணீரும் தன் பங்காக விழுந்திருக்கும்.

   சுந்தர் பள்ளிக்கூடம் படிக்கும்போது அம்மாவிடம் கேட்டிருக்கிறான். “ ஏம்மா அந்தக் கிணறுக்கு ஆனைக்கிணறுன்னு பேரு வந்தது.”

   “சித்திரைத்திருளா வரும்போது தென்காசியிலிருந்து யானை வரும். அந்த யானை நம்மூருக்கு வந்தா எப்பவும் இங்கதான் தண்ணி குடிக்கும். அதனால ஆனைக்கிணறுன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க...” என்று சொன்னாள். ஆனால், தன்னுடைய பாம்படக் காதுகளை ஆட்டிக்கொண்டே வேறு ஒரு கதை சொன்னாள் அப்பாச்சி.

   ``செண்பகக்கோட்டை ராஜாவுக்கு தெய்வானை என்று ஒரு மகள் இருந்தாள். அழகும் அறிவும் நிறைந்த அவளுக்குக் கல்யாணம் முடிக்க எட்டுத்திசையும் பொருத்தமான இளவரசனைத் தேடி ஆள் அம்பு பரிவாரங்களை அனுப்பி வைத்தான் ராஜா. ஆனால், பாவி மகள் இளவரசிக்கு ராஜாவின் படையில் ஒற்றுவேலை பார்த்துக்கொண்டிருந்த வீரன் என்ற பகடைமீது ஆசை. பகடைக்கும் இது தெரியும். அவனும் அப்படியிப்படி இளவரசி கூட பழகினான். ரகசியம் வெளியாகிவிட்டது. இளவரசிதான் காட்டிக்கொடுத்துவிட்டாள். அவள் வீரனோடு பழகியதில் சூலியாகி விட்டாள். அவ்வளவுதான் ராஜாவுக்குத் தனது பரம்பரை இழிவுபட்டதாக நினைத்தான். அப்போது எல்லாம் புரோகிதர்கள் வெச்சதுதான் சட்டம். உடனே அவர்கள் பரம்பரை இழிவைப் போக்க வழி சொன்னார்கள். வீரனைப் பிடிக்க முடியவில்லை. அவன் தப்பித்துவிட்டான். இதுவரை அவன் போக்கிடம் எதுவெனத் தெரியாது. ஆனால், பாவம் இளவரசி.

   வறண்ட பொட்டலாகக் கிடந்த இந்த இடத்தில் ஒரு கிணறு தோண்டச்சொன்னான் செண்பகக்கோட்டை ராஜா. அந்தக் கிணற்றில் ஒரு சொட்டுத் தண்ணீர் ஊறவில்லை. புழுதி பறந்தது. வறண்ட அந்தக் கிணற்றில் ஒரு குடம் புனிதநீரை ஊற்றச் சொன்னார்கள் புரோகிதர்கள். இளவரசி தெய்வானையும் அவர்கள் சொன்னபடியே புனிதநீர்க் குடத்தைச் சுமந்து கொண்டு கிணற்றருகில் சென்றாள். அவள் குனிந்து ஊற்றிக்கொண்டிருக்கும்போது பின்னாலிருந்து யாரோ தள்ளிவிட்ட மாதிரி இருந்தது. அவள் `வீரா’ என்று அலறியபடி உள்ளே விழுந்தாள். அவளுடைய அலறல் சத்தம் அடங்குவதற்குள் கிணற்றின் தூரில் அடைபட்டிருந்த ஊற்றுகளின் கண்கள் திறந்தன. அருவியிலிருந்து சோவென நீர் பாய்ந்து விழுவதைப்போல ஊற்றுகளிலிருந்து நீர் மேல்நோக்கி எழுந்தது. கிணற்றின் விளிம்புவரை நீர் ததும்பியது.  ஆனால்,  உள்ளே தள்ளிவிடப்பட்ட இளவரசி தெய்வானையைக் காணவில்லை. எப்படி மாயமாய் மறைந்தாள் என்று யாருக்கும் தெரியவில்லை. அதைப் பார்த்த புரோகிதர்கள் ஊரைவிட்டே ஓடிவிட்டார்கள். முதலில் தெய்வானைக்கிணறாக இருந்தது நாளாவட்டத்தில் ஆனைக்கிணறாகி விட்டது’’ என்று சொன்ன அப்பாச்சி இடுப்பிலிருந்து பொடிமட்டையை எடுத்துப் பிரித்து ஆட்காட்டி விரலையும் கட்டைவிரலையும் சேர்த்து ஒரு சிட்டிகைப் பொடியை அள்ளியெடுத்து மூக்கில் திணித்தாள். சுந்தருக்கு அடுத்து என்ன நடக்கும் என்று தெரியும். அவன் எழுந்து பையன்களிடம் இந்தக் கதையைச் சொல்லத் தெருவுக்கு ஓடினான்.
   ஆண்டு முழுவதும் இரவும் பகலும் இறவையாகிக் கொண்டிருக்கும் ஆனைக்கிணறு. இரவும் பகலும் பெண்களின் பேச்சு, சிரிப்பு, கோபம், அழுகை, சண்டை, காதல் என்று ஒரு மனிதச்சந்தையின் அத்தனை குணாதிசயங்களையும் ஆனைக்கிணற்று மேடையில் பார்க்கலாம். ஆனால், அத்தனை சத்தமும் இல்லாமல் மயானமாக சில நாள்கள் ஆனைக்கிணறு மாறிவிடும். ஆளரவம் இல்லாமல் சின்னச்சத்தம்கூட பெருங்கூப்பாடாகக் கேட்கும் நாள் வந்தது என்றால், ஆனைக்கிணற்றில் யாரோ ஒரு பெண் மிதக்கிறாள் என்று அர்த்தம். அவன் பலதடவை பார்த்திருக்கிறான். தண்ணீரில் தலைமுடி மிதந்தலைய, புடவையின் முந்தானை விழுந்த பெண்ணின் துயரைச்சொல்வதைப்போல மேலும் கீழும் முங்கி எழுந்துகொண்டிருக்கும். அந்தக் காட்சி அவன் கண்களைவிட்டு அகல  நிறைய நாள்களாகும். அவர்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டில் இருந்த ராணியக்கா ஒருநாள் காலையில் ஆனைக்கிணற்றுக்குள் கிடந்தாள். கால்களைக் கயிற்றால் கட்டியிருந்தாள். புடவையை நன்றாகக் கழுத்துவரை இறுக்கியிருந்தாள். உடலை வெளியே எடுத்துப்போட்டிருந்தார்கள். அவளுடைய புருஷன் முகத்தில் எந்த உணர்ச்சியுமில்லை.ராணியக்கா வேலை பார்க்கிற தீப்பெட்டி கம்பெனியில், கூட வேலைபார்க்கிற ஓர் ஆணோடு தொடர்புபடுத்திப் பேசியிருக்கிறான் அவளுடைய புருஷன். அவளால் தாங்க முடியவில்லை. 

   பிள்ளையார் கோயில் தெருவில் இருந்த பேச்சியம்மாள் தன் கைகுழந்தையோடு ஆனைக்கிணற்றில் விழுந்து இறந்துபோனாள். பக்கத்து வீட்டுக்காரி தன்னுடைய பிள்ளையைத் திட்டிவிட்டாள் என்ற கோபம் அவளுக்கு. மேட்டுத்தெருவில் இரவில் தனியாக வந்த பெண்ணைப் பலவந்தப்படுத்தி, கையையும் காலையும் கட்டிக்கொண்டுவந்து ஆனைக்கிணற்றில் போட்டுவிட்டார்கள். யார் என்றே தெரியவில்லை. தெப்பக்குளத் தெருவில் இருந்துவந்து அக்கா, தங்கை இரண்டுபேரும் ஒருவரையொருவர் சேர்த்துக் கட்டிக்கொண்டு விழுந்து இறந்துபோனார்கள். ஆனைக்கிணறு மரணக்கிணறாக மாறிக்கொண்டிருந்தது. மாசம் ஒருத்தர் இறந்து போனார்கள்.  கணவனுடன் சண்டை, பக்கத்து வீட்டுக்காரியின் ஏச்சு, கள்ளக்காதல், குழந்தைகள் சண்டை, கடன் தொல்லை இப்படியே ஆயிரம் காரணங்கள் இருந்தன. எல்லா காரணங்களின் முடிவில் ஒரு பெண் ஆனைக்கிணற்றில் மிதந்தாள். ஊரில் பத்துக் கிணறுகள் இருந்தன. ஆனால், எல்லா தெருப்பெண்களும் ஆனைக்கிணற்றிலேயே தங்களது வாழ்க்கையை முடித்துக்கொண்டனர்.

   நிறைய வீடுகளில் பெண்கள் சாமியாடினார்கள். தெய்வானை வந்திருப்பதாகச் சொன்னார்கள். ராணி வந்திருப்பதாகச் சொன்னார்கள். பேச்சியம்மாள் வந்திருப்பதாகச் சொன்னார்கள். அதைச்செய் இதைச்செய் என்று ஆணையிட்டார்கள். என்ன செய்தும் ஆனைக்கிணற்றின் பசி அடங்கவில்லை. மேலும் மேலும் உடல்களைக் காவு வாங்கிக்கொண்டேயிருந்தது. அப்பாச்சிக்கும் சாமி வந்தது. தலையை விரித்துப்போட்டு உட்கார்ந்த நிலையிலேயே ஆடினாள். `ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...  ஊஊஊஊஊ... ஆஆஆஆஆ’ என்று வாயால் காற்றை ஊதினாள். அம்மா பயபக்தியுடன் அப்பாச்சி முன்னால் நின்று கும்பிடுவதை முதல்முறையாகப் பார்த்தான் சுந்தர். ஒருநாளும் அம்மா, அப்பாச்சியைத் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை. எப்போது அவளைப் பார்த்துவிட்டாலும் வெளியில் யாருக்கும் கேட்காதபடிக்கு வைவாள். அவள் வைவது அப்பாச்சிக்குத் தெரியும். ஆனால், ஏதாவது விஷேச நாட்கள் என்றால் அப்பாச்சிக்கு சாமி வந்துவிடும். அப்போது அம்மா உண்மையான பக்தியுடன் அப்பாச்சியின் காலில் விழுந்து திருநீறு பூசிக்கொள்வாள். இப்போது தெய்வானை பழிவாங்குகிறாள் என்று அப்பாச்சி சொன்னாள். நூத்தியெட்டு தேங்காயை உடைத்து சேலை எடுத்துவைத்துக் கும்பிட வேண்டும் என்று சொன்னாள். தெருக்காரர்கள் எல்லோரும் சேர்ந்து காசு பிரித்து அதையும் செய்து பார்த்தார்கள். சுந்தர் ஒருநாள் சாதாரணமாக அப்பாச்சியிடம் கேட்டான்.

   “ஏன் அப்பாச்சி பொம்பளைங்க மட்டும் ஆனைக்கிணத்துல விழுந்து சாகறாங்க. அவங்க செத்தா எல்லாம் சரியாயிருமா?”

   அதைக் கேட்டதும் அப்பாச்சி கொஞ்ச நேரத்துக்கு எதுவும் பேசவில்லை. அவளுடைய கண்கள் கலங்கின.கண்களைத் துடைத்துக் கொண்டே, “பொம்பளங்கள படைச்ச கடவுளும் ஆம்பளதானே... பிறகு என்ன செய்ய முடியும். பொம்பிளங்க தலைவிதி அவ்வளவுதான்… செத்தா எல்லாம் சரியாயிரும். பிரச்னையும்  தீந்திரும்.  திருடியும் நல்லவளாயிருவா. ஏன்... தெய்வங்கூட ஆயிருவா” என்று சொன்னாள். ஆச்சியின் தழுதழுத்த அந்தக் குரல் சுந்தரின் மனதை ஏதோ செய்தது. ஆனால், ஆனைக்கிணற்றின் துயரம் தீரவில்லை. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக ஆனைக்கிணற்றுக்குத் தண்ணீர் எடுக்க வருகிற கூட்டம் குறைந்தது.
   காலம் இருண்டது. அப்பாச்சியும் ஒருநாள் ஆனைக்கிணற்றில் மிதந்தாள். எப்போதும் அம்மாவின் அலட்சியத்தையும், சுடுசொற்களையும் கேட்டுப்பழகியவள்தான் அப்பாச்சி. அதைப்பற்றி என்றுமே கவலைப்பட்டதில்லை. ஆனால், அன்று என்னவோ தெரியவில்லை. அப்பா ஏதோ பேசியிருக்கிறார். கேவலம் மூக்குப்பொடி மட்டை விவகாரம். மூக்குப்பொடி வாங்கக் காசு கேட்ட அப்பாச்சியைப் பார்த்து அப்பா, “நீயெல்லாம் இருந்து ஏன் கழுத்தறுக்கே… இந்த வயசில மூக்குப்பொடி ஒரு கேடா? மனுசந்தன்னால கண்ணுமுழிப் பிதுங்கிக்கிட்டு வாரேன்… என்னமோ இனிமேத்தான் சாதிக்கப்போற மாதிரி…” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

   அன்று முழுவதும் மோட்டைப் பார்த்தபடியே உட்கார்ந்திருந்தாள் அப்பாச்சி. தரையில் எதையோ தேடுவதைப்போல விரல்களால் பரசிக் கொண்டேயிருந்தாள். சில சமயம் இடுங்கிய கண்களில் கசிந்த நீரை முந்தானையால் துடைத்துக்கொண்டாள். அம்மா அன்று அப்பாவைக் கடிந்தாள். அப்பாச்சியிடம் வாஞ்சையாய் பேசவும் செய்தாள். அவளே சுந்தரிடம் காசு கொடுத்து எஸ்.ஆர்.பட்டணம் பொடி மட்டையை வாங்கிவரச்சொல்லி அப்பாச்சியிடம் கொடுத்தாள். அப்பாச்சி அதைக் கையில் வாங்கி அருகில் வைத்துக்கொண்டாள். ஆனால், அன்று முழுவதும் பொடிமட்டையைப் பிரிக்கவில்லை. இதையெல்லாம் அம்மாதான் அப்பாச்சி இறந்த வீட்டில் மற்றவர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். சுந்தர் இதை எதையும் கவனிக்கவில்லை. அவன் பாப்புலர் டைப் இன்ஸ்டிடியூட்டில் டைப் முடிந்துவரும் வனஜாவின் ஞாபகமாகவே இருந்தான். மணியின் யோசனைப்படி இன்று வனஜாவிடம் எப்படியும் காதல் கடிதத்தைக் கொடுத்துவிட வேண்டும் என்ற ஒரே சிந்தனை மட்டும்தான் அன்று இருந்தது. அதனால் அப்பாச்சியை ஏறிட்டுக்கூட பார்க்கவில்லை. மறுநாள் காலையில் அம்மாவின் வார்த்தைகளற்ற அலறல்சத்தம் கேட்டபிறகு தான் சுந்தருக்கு உணர்வு வந்தது.

   சுந்தர் எதற்கும் அழுதோ கலங்கியோ பழக்கமில்லாதவன். எல்லாவற்றையும் உள்ளேயே அமுக்கிவைத்துக்கொள்வான். முகம் மட்டுமே அவன் மன அழுத்தத்தில் இருக்கிறான் என்று காட்டும். ஆனால், அப்பாச்சியின் தற்கொலை அவனை உலுக்கிவிட்டது. அவளுக்குக் குறைந்தது எழுபத்தைந்து வயதாவது இருக்கும். இந்த வயதில் ஆனைக்கிணற்றின் மேடையில் ஏறி  ஓர் ஆள் நெஞ்சுயரம் இருக்கும் சுவரில் ஏறி உள்ளே விழுவதென்றால் எவ்வளவு வைராக்கியம் இருக்க வேண்டும். அவன் உடைந்து அழுதான். கண்கள் ஈரமாகிக்கொண்டேயிருந்தன. அப்பாச்சியின் மடியில் உட்கார்ந்து புரண்டு வளர்ந்தவன் அவன். அவள் சொல்லும் கதைகளில் வரும் இளவரசிகளையும், இளவரசர்களையும், பேய்களையும், பூதங்களையும் அவன் அப்படி நேசித்தான். அப்பாச்சியின் பல்லில்லாத வழுவழுப்பான குரலில் வழுக்கி உறக்கத்தின் மௌனக்குளத்தில் மெல்ல மூழ்குவான் சுந்தர். அவளிடமிருந்து வரும் மூக்குப்பொடியின் மணம் அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். சில சமயங்களில் தடுமம் பிடித்திருக்கும்போது அம்மாவுக்குத் தெரியாமல் அவனுக்கு மூக்குப்பொடி உறிஞ்சக்கொடுப்பாள்.

   அவனைவிட அப்பாதான் நொறுங்கிப் போய்விட்டார். வெகுநாள்களுக்கு அவருடைய முகம் குராவிப்போய் இருந்தது. உள்ளுக்குள் அவருடைய ஆவி கொஞ்சம் கொஞ்சமாக ஒடுங்கிக்கொண்டிருந்தது. அப்பாச்சி இறந்த ஒரு வருடத்துக்குள் ஏகப்பட்ட காரியங்கள் சடுதியில் நடந்தேறின. வாடகை கொடுக்க முடியாமல் நான்கு வீடுகள் மாறினார்கள். அப்பா வேலை பார்த்துவந்த ராஜகுமாரி ஜவுளிக்கடை வற்றிப்போனது. இனி ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க வழியில்லை என்று முதலாளி வாசலைக் காட்டினார். விசுவாசம், நீண்டநாள் என்ற இரண்டு கயிறுகளில் கட்டிய ஊஞ்சலில் இப்பவோ பிறகோ என்று ஆடிக்கொண்டிருந்தார். ஆனால், முதலாளி சுந்தரின் அப்பாவுக்கும் வாசல் இருக்கும் திசையைக் காட்டும் முன்னாடியே அப்பா பெரிய வாசல் வழியே உலகத்தை விட்டுப்போய் விட்டார்.
   சுந்தர், கரீம்பாய் கடை இருந்த இடத்தில் புதிதாக அலங்கரிக்கப்பட்டிருந்த ஸ்ரேயா தேநீரகம் முன்னால் நின்றான். ஒரு கணம் கரீம்பாய் கண்முன்னே தோன்றினார். ஒரு டீ குடிக்கலாம் என்று நினைத்தான். டீ மாஸ்டரிடம், “ ஒரு டீ ஸ்ட்ராங்கா… மலாய் போட்டு.” என்று சொன்னான். அவர் அவனை ஊருக்குப் புதிது என்று கண்டுகொண்டார். கரீம்பாய் டீக்குத் தனிச்சுவையே மலாய்தான் என்று சுந்தர் சொல்வான். வேறு யாரும் கேட்க மாட்டார்கள். அவனைப் பார்த்ததுமே மலாய் போட்டு ஸ்டிராங் டீ கொடுத்துவிடுவார் கரீம்பாய்.

   டீக்கடை தாண்டி வலதுபுறம் திரும்பினால் ஆனைக்கிணறு இருக்கும்.  அவன் எதிர்பார்த்த மாதிரியே ஆனைக்கிணறு இல்லை. அப்படி ஒரு கிணறு இருந்ததற்கான எந்தச் சுவடும் இல்லாமல் அங்கே ஓர் அழகான அடுக்குமாடிக் குடியிருப்பு எழுந்து நின்றது. காலம் மாறிக்கொண்டிருக்கிறது.

   சித்தி சொன்ன அடையாளங்களை வைத்து வீட்டைக் கண்டுபிடித்தான். சித்தப்பா இறந்து மூன்று மாதங்களாகிவிட்டன. இப்போது எப்படி அந்தத் துக்கத்தை அனுஷ்டிப்பது என்று புரியாமல் குழம்பிப்போய்த்தான் சுந்தர் வீட்டுக்குள் நுழைந்தான். வருத்தமான முகத்தை அணியச்செய்த முயற்சி தோல்வியடைந்து கொண்டிருப்பதைச் சில நொடிகளிலேயே அவன் உணர்ந்துகொண்டான். ஆனால், சித்தி சில நிமிடங்கள்கூட அந்தச் சூழ்நிலையின் தர்மசங்கடத்தில் அவனை மாட்டிவிடவில்லை. சித்தி பெரிய பேச்சுக்காரி. அவளால் காலாவதியான அந்தச் சோகத்தைத் தொடர முடியவில்லை.

   வீட்டின் குசலங்களை விசாரித்துவிட்டு ரகசியம் பேசுகிற தொனியில், “சுந்தா... ஆனைக்கிணறு இருந்த இடத்தைப் பார்த்தியா… ஏழுமாடிக் கட்டடம்”என்றாள்.  சுந்தரும் அவளை மாதிரியே தாழ்ந்த குரலில், “ஆமா… சூப்பரா இருக்கு சித்தி... யாரு ஓனரு?” என்று கேட்டான்.
   “ யாரு... நம்ம சம்முகம் கவுன்சிலர் அவந்தான் அந்த இடத்தை வளைச்சி கட்டடம் கட்டிட்டான். ம்ஹூம்.. கட்டி என்ன பிரயோசனம்?’’

   ``ஏன் சித்தி?’’

   “இப்பயும் அந்த மாடிக்கட்டடத்திலே திடீர் திடீர்னு பொம்பிளக செத்துப்போறாளுக… போனமாசம் அஞ்சாவது மாடியில ஒரு பொம்பிள தீக்குளிச்சி செத்தா…நேத்திக்கிக்கூட மூணாவது மாடியிலேர்ந்து ஒரு பொண்ணு கீழே குதிச்சிட்டா… புருசங்கூட சண்டையாம். அந்தத் தெய்வானை சாமியான இடமாச்சே… சும்மா விடுவாளா?’’ என்று மிக முக்கியமான ரகசியத்தைச் சொல்வதைப்போல சொல்லிக் கொண்டிருந்தாள் சித்தி. சுந்தர் சில நொடிகள் எதுவும் பேசவில்லை. மனம் கசந்தது. பின்னர் ஒருவித வெறுப்பு கவிய மெல்ல வாயைத்திறந்து, “இது ஆண்களின் உலகம் சித்தி” என்றான்.அவனை மலங்க மலங்க பார்த்தபடியே  ``என்ன சொல்றே நீ...” என்றாள் சித்தி.
   http://www.vikatan.com
  • By நவீனன்
   அடையாளம் - சிறுகதை
   சிறுகதை: சிவபாலன், ஓவியங்கள்: செந்தில்
   `Let me explain’

   அந்தக் குறுஞ்செய்தி பாரதியின் செல்போனில் வந்து விழும்போது மணி ஆறு இருக்கலாம். அந்த அரங்கத்தில் அவ்வளவு ஒன்றும் பெரிதான கூட்டம் இல்லை. அதை அந்த இளம் எழுத்தாளன் பொருட்படுத்தியதாய் தெரியவில்லை. ரசித்து ரசித்து தனது உரையை நிகழ்த்திக் கொண்டிருந்தான். பாரதி எந்த சுவாரசியமும் அற்று அமர்ந்திருந்தான். அந்த அரங்கில் இருபதிலிருந்து முப்பது பேர் வரை இருக்கலாம்; யாருக்கும் அந்த நிகழ்வில் எந்த ஓர் ஈர்ப்பும் இருப்பதாய் தெரியவில்லை. எல்லோரும் ஏதோ ஒரு நிர்பந்தத்தின் பேரில் வந்திருப்பதாய் பட்டது. பாரதி அரங்கிலிருந்து மெதுவாய் தன்னை விடுவித்துக்கொண்டு வெளியே நடந்தான்.

   அந்த அரங்கத்தின் வெளியே வந்து ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டான். மழை பெய்து கொண்டிருந்தது. அந்த அரங்கத்தின் எதிரே இருந்த அகலமான சாலை மழையில் வெறுமையாய் இருந்தது. சாலையின் இருமங்கிலும் பெரும்பாலான மக்கள் மழைக்கு பயந்து ஒதுங்கியிருந்தனர். அந்த மழையில் திருச்சி நகரம் ஒருவித ரம்மியத்தோடு இருப்பதாய் அவனுக்குப் பட்டது. கிட்டத்தட்ட பதினாறு ஆண்டுகள் கழித்துத் திருச்சிக்கு வருகிறான். அவனால் அத்தனை இயல்பாய் இங்கு இருக்க முடியவில்லை. இந்த நகரத்தைச் சார்ந்து எத்தனையோ நினைவுகள் அவனுக்குள் இருக்கின்றன; அவனுக்குள் முட்டிமோதிக் கொண்டிருக்கின்றன. முடிந்தவரை அவன் கடந்தகால நினைவுகளையும் அதனைச் சார்ந்த அடையாளங்களையும் மறக்கவே நினைத்திருந்தான். ஆனால், இந்த நகரத்தைச் சார்ந்த நினைவுகள் அத்தனை சுலபமாய் மறக்கக்கூடியவை அல்ல, அதுவும் மழை பெய்யும் இந்த நகரத்தின் மையத்தில் நின்றுகொண்டு.

   திருச்சி நிறைய மாறியிருந்தது. அகலமான சாலைகள், நிறைய மேம்பாலங்கள், பெரிய பெரிய கட்டடங்கள், பன்னாட்டு உணவகங்கள், கார்ப்பரேட் மருத்துவமனைகள் என இன்னும் நிறைய நிறைய. ஆனாலும் இவை அனைத்தையும் மீறி பாரதியால் இந்தத் திருச்சியின் ஆன்மாவை உணர முடிந்தது. எல்லா நேரமும், எல்லா இடங்களிலும் அவனால் இந்த நகரத்தின் அந்தரங்கத்தைக் காண முடிந்தது. அவனுக்கு இந்தப் புற மாற்றங்கள் எதுவும் தடையாய் இல்லை. ஏனென்றால், ஒரு நகரத்தின் அடையாளம் என்பது எந்தப் புறத்தோற்றங்களிலும் இல்லை; அது அந்த நகரத்தின் ஆன்மாவில் ஒரு காற்றைப்போல கலந்திருக்கிறது என அவனுக்குத் தெரியும்.

   மழை கொஞ்சம் கொஞ்சமாய் குறையத் தொடங்கியது. அந்த வெறுமையான சாலை இப்போது போக்குவரத்தால் நிறையத் தொடங்கியது. இன்னும் சற்று நேரத்தில் ஒரு பெருளான ஜனத்திரளில் அந்தச் சாலை தனது அடையாளத்தை இழந்துவிடும். அது மற்றுமொரு போக்குவரத்து நெரிசலான சாலையாகப் பார்க்கப்படும். நிறைய நேரங்களில் புறச்சூழல்களும், புறக்காரணிகளும் ஓர் அடையாளத்தை நிர்ணயிப்பதாய் அமைந்துவிடுகிறது; சூழலுக்கு ஏற்ப தனது அடையாளத்தை மாற்றிக்கொள்ளும் ஒரு பச்சோந்தியைப்போல. ஆனால், மனிதன் என்பவன் தனது அகச்சூழலைப் பொறுத்தே தனது அடையாளத்தை வெளிப்படுத்துகிறான். அவனது அடையாளம்தான் அவனது மெய். அதனைச் சார்ந்துதான் அவன் அவனது வாழ்வைக் கட்டமைக்கிறான். ஒருவனது அடையாளம் என்பது எப்போதும் அவனது அகத்தைச் சார்ந்தே அமைந்துவிடுகிறது.

   பாரதி தன்னளவில் ஓர் ஆண். அதுதான் அவனது அடையாளம்; அவனது அக அடையாளம். பிறக்கும்போது பாரதி பெண்ணாய் பிறந்தவள்; அவனது புற அமைப்பு ஒரு பெண்ணின் அடையாளமாய் இருந்தது. இந்த இரு வேறு அடையாளச் சிக்கல்கள் கொடுத்த எல்லா வலிகளையும் கடந்துதான் வந்திருக்கிறான். இன்று கூடுமானவரை தனது புற அடையாளங்களையும் மாற்றிக்கொண்டிருக்கிறான். இந்த அடையாளத்திற்காக, தனது அக அடையாளத்தை மீட்டெப்பதற்காக அவன் தன்னைச் சார்ந்த அத்தனையும் இழந்திருக்கிறான்.

   இதோ, இதே திருச்சியில்தான் பாரதியின் வாழ்க்கைத் தொடங்கியது ஒரு பெண்ணாக, ஒரு மகளாக, நான்கு அக்காக்களுக்கு ஒரே தங்கையாக. நான்கு பெண் பிள்ளைகளுக்குப் பிறகாவது ஓர் ஆண் பிள்ளை வேண்டும் என்ற பெற்றோரின் எதிர்பார்ப்பைப் பொய்த்து பாரதி பிறந்தாள். பாரதி என்ற பெயர்கூட அவள் பிறப்பதற்கு முன்பே முடிவு செய்யப்பட்ட பெயர்தான்; ஓர் ஆண் பிள்ளைக்காக. ஆனால், அந்தப் பெயர் பாலினங்களைக் கடந்து எல்லா வகையிலும் பாரதிக்குப் பொருந்திப் போனது.

   சிறிது ஏமாற்றம் இருந்தாலும் அப்பாவுக்குப் பாரதியை மிக எளிதில் பிடித்துப் போனது. அப்பாவின் நடுத்தர வயதும் அதில் எழும் இயல்பான வெற்றிடமும்கூட அதற்குக் காரணமாக இருக்கலாம். பாரதி அந்த வெற்றிடத்தை இயல்பாக, முழுமையாக நிரப்பிக்கொண்டாள். அம்மாவுக்குப் பாரதி நாலோடு ஒண்ணு,  அவ்வளவுதான். பாரதியும் ஒரு முழு அப்பா பிள்ளை. பெரும்பாலான நேரங்கள் பாரதி அப்பாவுடன்தான் இருப்பாள். அப்பாவின் அருகாமையும் அப்பாவின்மேல் வீசும் அந்த வாசமும் பாரதிக்கு எப்போதும் தேவையாக இருந்தது. எல்லாவற்றுக்கும்மேல் அப்பாவின் உள்ளங்கை, அவ்வளவு மிருதுவாகவும் மென்மையாகவும் இருக்கும் ஒரு பெண்ணின் உள்ளங்கைபோல.  அப்பாவின் முன்கைகள்கூட ரோமங்கள் ஏதுமற்று மென்மையாக இருக்கும். பாரதிக்கு எப்போதும் அப்பாவின் கைகளைப் பற்றிக்கொள்ள வேண்டும்; அப்பாவின் விரல்களோடு சேர்த்துக்கொள்ள வேண்டும்; நடக்கும்போது,  தூங்கும்போது, சாப்பிடும்போது என எப்போதும் அப்பாவின் கைகளைப் பிடித்துக் கொண்டேயிருப்பாள். அப்பா மாலை நேரங்களில் இப்ராகிம் பார்க்குக்கு அழைத்துச் செல்வார். அப்போதெல்லாம் விளையாடக்கூடத் தோணாமல் அப்பாவின் கையைப்பிடித்துக்கொண்டு மணிக்கணக்கில் அமர்ந்திருப்பாள். அம்மாவுக்குதான் பிடிக்காது. “என்னடி பொம்பளைப் பிள்ளை. எப்ப பார்த்தாலும் அப்பா கைய பிடிச்சிக்கிட்டே இருக்கிற, போடி... போய் பிள்ளைங்களோட சேர்ந்து விளையாடு. போடி” என்பாள்.

   ஆரம்பகாலத்தில் இருந்தே பாரதிக்குப் பெண்களோடு விளையாடப் பிடிக்காது. பக்கத்து வீட்டு ஆண் பிள்ளைகள்கூடத்தான் விளையாடிக்கொண்டிருப்பாள். உடைகள் கூட ஆண் பிள்ளைகளுக்கான உடைகளைத் தான் கேட்டு வாங்கிக்கொள்வாள்.  அப்பாவுக்கு அது ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை. ஆண் குழந்தை இல்லாததால், அவரும் அவள் கேட்கும் உடையையே வாங்கிக் கொடுப்பார். ஆனால், பள்ளிக்குப் போகும்போது யூனிஃபார்ம் போட வேண்டுமென்றால், ஒவ்வொரு நாளும் அம்மாவுக்குப் போராட்டம் தான். இறுதியில் அப்பா வந்து ஏதாவது சமாதானம் செய்து போட்டு விடுவார். பாரதிக்கு ஏனோ பெண் பிள்ளைகளுக்கான உடையில் அவ்வளவு இயல்பாய் இருக்க முடிவதில்லை. மிக அந்நியமாய் உணர்வாள். பள்ளி விட்டு வந்தவுடன் அவள் செய்யும் முதல் வேலை, அந்த உடையை மாற்றுவது தான்.

   நாளாக நாளாக  பாரதியின் நடவடிக்கைகளில் நிறைய ஆண்தன்மை தெரியத் தொடங்கின. முடியமைப்பு உட்பட பாரதி அத்தனையும் ஓர் ஆண்போலவே இருக்குமாறு மெனக்கெட்டாள். பள்ளியில் இருந்து நிறைய புகார்கள் வரத் தொடங்கின. `பாரதி எப்போதும் ஆண் நண்பர்கள்கூடவே பேசிக்கொண்டிருக்கிறாள், அவர்கள் விளையாடும் விளையாட்டைத்தான் விரும்பி விளையாடுகிறாள், மதிய உணவைக்கூட அவள் ஆண் பிள்ளைகள்கூடவே அமர்ந்து சாப்பிடுகிறாள்’ என நிறைய புகார்கள். அப்பாவுக்கு ஆரம்பத்தில் இது பெரிய விஷயமாகப்படவில்லையென்றாலும் பள்ளி நிர்வாகத்தின் தொடர்ச்சியான புகார்களால், கொஞ்சம் கொஞ்சமாக அவர் வருத்தப்படத் தொடங்கினார். அம்மாவுக்குக் கோபப்படுவதைத் தவிர, வேறு எதுவும் தெரியவில்லை. அப்பா, பெண் என இரண்டுபேர்மீதும் கோபம். ``உங்களால்தான் இந்தப் பொண்ணு இப்படி இருக்கா, ஒரு பொம்பளப் புள்ளையை வளர்க்கிற மாதிரியா வளர்த்தீங்க. அதனால்தான், இவ இப்படி டவுசரைப் போட்டுக்கிட்டு சுத்திட்டு இருக்கா” என்று கத்திக் கொண்டிருப்பாள்.

   பாரதி, தனது வளர் இளம் பருவத்தை நெருங்க நெருங்கத் தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்கினாள். அவள் உடலைப் புரிந்து கொள்ள முற்பட்டாள். அவளது உடல் முன்னெப்போதும்விட அவளுக்கு மிகப்பெரிய சுமையாய் இருந்தது. அவளால் சுமக்க முடியாத பாரமாய் இருந்தது. அவள் உடல்மீது அவளுக்கு இயல்பாய் வரக்கூடிய எந்த ஓர் ஈர்ப்போ,ஆசையோ,கர்வமோ அவளுக்கு ஏற்படவில்லை. மாறாக வெறுப்பாக இருந்தது. அவளது மனம் உடலுடன் இசையவில்லை. உடலும் மனமும் வேறு வேறு திசைகளில் இயங்கின. அவள் உடலில் நிகழும் பருவரீதியான மாற்றங்கள் ஒவ்வொன்றும் அவளுக்கு அருவருப்பாய் இருந்தன. ரணமாய் இருந்தன. தீர்க்க முடியாத ரணம். அவள் மட்டுமே அறிந்த ரணம். இந்த ரணத்தில் இருந்து, வலியில் இருந்து, அருவருப்பில் இருந்து மீள நினைத்தாள். இந்தப் புற அடையாளங்கள் ஒரு தடிமனான கம்பளியைப்போலத் தன்னை முழுதுமாய் போர்த்திக்கொண்டுள்ளதாய் நினைத்தாள். `எல்லோரும் இந்தக் கம்பளியைத் தான், நான் என நினைத்து விடுகிறார்கள். ஏனென்றால், அதுதான் சுலபமானது. நான் என நான் நினைப்பது இந்தக் கம்பளியை அல்ல; அதற்குள் இருக்கும் என்னைத்தான். நான் யாரென்பது எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம், அது எனது மனதைச் சார்ந்த ரகசியம். எனது மனதை, எனக்குள் நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்த அடையாளச் சிக்கல்களை, எனது கம்பளிக்குள் மறைந்திருக்கும் என்னை, எனது ரகசியத்தை அப்பாவுக்கு மட்டும் சொல்லிவிட வேண்டும்’ என்று பாரதி நினைத்தாள். அப்பா புரிந்து கொள்வார், அப்பாவிடம் ஒரு தீர்வுகூட இருக்கலாம் என நினைக்கத் தொடங்கினாள். ஆனால், அப்பா இப்போதெல்லாம் முன்பு போல பேசுவதில்லை. வீட்டுக்கு லேட்டாகத்தான் வருகிறார், வந்தவுடன் சாப்பிட்டுத் தூங்கப் போய்விடுகிறார். பாரதி, அப்பாவுடன் தூங்கி நிறைய நாள் ஆயிற்று. பாரதிக்கு அப்பாவிடம் எல்லாவற்றையும் சொல்லி அழ வேண்டும் போலிருந்தது. அப்படியே அப்பாவின்  மிருதுவான மென்மையான கைகளைப் பிடித்துக் கொண்டே அப்பாவுடன் தூங்க வேண்டும் போல் இருந்தது.

   பாரதிக்கு இந்தத் துயரம் சார்ந்த அடையாளத்தைக் களைவதும், அது நிமித்தமான இந்தச் சமூகத்தின் பார்வையை எதிர்கொள்வதும் அத்தனை எளிதாக இல்லை. ஓர் இருள் சூழ்ந்த உலகத்தில் அகப்பட்டுக் கொண்டதைப் போலிருந்தது. அப்பாவைத் தவிர வேறு யாராலும் இதைப் புரிந்துகொள்ள முடியாது. அப்பாவும் இதைக் கேட்கத் தயாராக இல்லை. நாளுக்கு நாள் அவள் மீதான பார்வையும், வெற்று கேலிப் பேச்சுகளும் அதிகமாகிக்கொண்டேயிருந்தன. இந்த வயதின், இந்தப் பருவத்தைச் சார்ந்த சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் அவளால் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. எந்த ஒரு விஷயத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள முடியவில்லை. இதற்குக் காரணமோ, தீர்வோ எதுவும் பாரதியிடம் இல்லை. அவள் மனம் காற்றில் அலையும் ஒரு காற்றாடிபோல இலக்கின்றி அலைந்து கொண்டிருந்தது.

   பாரதிக்கு அப்போது இருந்த ஒரே ஒரு ஆறுதல் வாசு மட்டுமே. வாசு, பாரதியைவிட இரண்டு வயது பெரியவன், ஒரே பள்ளியில்தான் இருவரும் படிக்கிறார்கள். வாசுவால், பாரதியை ஓரளவுக்குப் புரிந்துகொள்ள முடிந்தது. பாரதிக்கு வாசுவுடன் பேசும்போதெல்லாம் அப்பாவிடம் பேசுவதுபோல இயல்பாக இருக்க முடிந்தது. வாசுவின் பேச்சில் பாரதிக்கு ஒரு முதிர்ச்சி தெரியும். அந்த முதிர்ச்சியான அணுகுமுறை தான் அவளுக்குத் தேவையானதாக இருந்தது. `இதே முதிர்ச்சியுடனும், பக்குவத்துடனும்தான் இந்தப் பள்ளியும், இதன் ஆசிரியர்களும் என்னை அணுகியிருக்க வேண்டும்.ஆனால், யாரும் இதுவரை என்னை அப்படி அணுகவில்லை’ என்பது பாரதிக்கு ஏமாற்றமாக இருந்தது. அப்பாவே இதற்குத் தயாராக இல்லாதபோது இந்தப் பள்ளியையோ, இதன் ஆசிரியர்களையோ நான் எப்படிக் குறை சொல்ல முடியும் என்று நினைத்துக்கொள்வாள்.

   வாசு மட்டும் அடிக்கடிச் சொல்வான். “ இங்கு யாரும் உன்னைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். அதை எப்போதும் நீ எதிர்பார்க்காமல் இரு. நீ நீயாக வாழ வேண்டும். உனது அடையாளத்தோடு வாழ வேண்டும் என்று விரும்பினால், இங்கிருந்து போய்விடு. எங்க மாமா சென்னையில் இருக்கிறார். ஒரு பத்திரிகையில் சீனியர் எடிட்டராக இருக்கிறார். அங்கு போய்விடு. அவர் உன்னைப் புரிந்துகொள்வார். நான் அவரிடம் பேசுகிறேன்” என்பான். ஆனால், பாரதிக்குதான் அப்பாவை விட்டுவிட்டு எப்படிப் போவது என்று தயக்கம். என்றாவது அப்பா தன்னை நிச்சயம் புரிந்துகொள்வார் என நம்பினாள்.

   பாரதி தன்னை முழுமையாக உணர்ந்து கொண்ட நாள் ஒன்று வந்தது. தனது மனதோடு எந்தச் சமரசமும் தன்னால் செய்துகொள்ள முடியாது என்று பாரதி புரிந்துகொண்ட நாள் அது. பாரதி, தன் வாழ்க்கையை இந்த உடல் சார்ந்து தனது மனம் சார்ந்து மீள் கட்டுமானம் செய்வது அவசியமானது என்று தெரிந்து கொண்ட நாள் அது. ஆனால், அந்த நாளும் அது சார்ந்த நினைவுப் படிமங்களும் அத்தனை ஒன்றும் சந்தோஷமானதாக இல்லை.

   எப்போதும்போலத்தான் அன்றும் விடிந்தது எந்த சுவாரசியங்களும் அற்று. பாரதி அன்று பள்ளிக்கு முன்னதாகவே சென்றுவிட்டாள். வகுப்பில் காவியா மட்டும்தான் இருந்தாள். பாரதியைப் பார்த்துச் சிரித்தாள். வந்து அருகில் அமரச் சொன்னாள். பாரதிக்குக் கொஞ்சம் கூச்சமாக இருந்தது. முடியாது என்று சொன்னால் ஏதாவது கேலியாகச் சொல்வாள் என்று நினைத்து அவள் அருகில் சென்று கொஞ்சம் தள்ளியே அமர்ந்தாள். காவியா நெருங்கிவந்து பாரதியின் மிக அருகில் அமர்ந்து கொண்டாள். “ ஏன் எப்போதும் பசங்ககூடவே இருக்க, உனக்கு ஒரு மாதிரி இல்லையா” என்றாள்.

   “இல்லை, உன் பக்கத்தில் இப்படி உட்கார்ந்து இருக்கும்போதுதான் எனக்கு ஒரு மாதிரி இருக்கு.”

   “நம்ம ரெண்டு பேரும் பொண்ணுங்கதானே, என்ன ஒரு மாதிரி இருக்கு” என்று பாரதியின் கையைப் பிடித்தாள்.

   பாரதிக்குப் படபடப்பாக இருந்தது. அவளது நெருக்கம் அவளுக்குள் ஏதோ செய்தது. பசங்க கூட கட்டிப் புரண்டு எல்லாம் சண்டை போட்டு விளையாடியிருக்கிறாள். ஒருமுறைகூட அவளுக்குள் இப்படி நிகழ்ந்தது இல்லை. ஒரு பெண்ணின் நெருக்கமும் தொடுதலும் அவளுக்குள் இத்தனை கிளர்ச்சியை உண்டு பண்ணும் என அவள் எதிர்பார்க்கவே இல்லை. இன்னும் கொஞ்சம் நெருக்கமாய் அமர்ந்தாள்.

   “கேட்டுக்கிட்டே இருக்கேன், என்ன அப்படி யோசிக்கிற” என்று கேட்டுக்கொண்டே காவியா, பாரதியின் கையை எடுத்துத் தனது மடிமேல் வைத்துக்கொண்டாள்.

   பாரதிக்கு வார்த்தைகள் எதுவும் வரவில்லை. தனது கையைக் கொஞ்சம் அழுத்தமாக அவளின் தொடையில் பரவ விட்டாள்.

   “ஏன் இப்படி பாய்ஸ் மாதிரி முடி வெட்டியிருக்க” என்று காவியா, பாரதியின் கேசத்தைக் கலைத்துவிட்டாள்.

   “இது உனக்குப் பிடிச்சிருக்கா?” என்றாள் பாரதி.

   “நீ பையன் மாதிரி இருக்க.”

   “நான் பையன்தான்.”

   “எப்படி நம்பறது? நீ சும்மா சொல்ற.”

   “நிஜம்தான்.”

   “அப்படின்னா, எனக்கு ஒரு முத்தம் கொடு பார்க்கலாம்.”

   பாரதி காவியாவின் மிருதுவான கரங்களைப் பற்றிக்கொண்டாள், இன்னும் கொஞ்சம் நெருங்கிப்போய் அவளை முத்தமிட்டாள். மென்மையாக, பின் அழுத்தமாக, பின் மூர்க்கமாக, காவியாவும் முத்தமிட்டாள். அவர்கள் தங்களை மறந்தார்கள். பாரதியின் அடையாளத்தையும் அதன் ரகசியத்தையும் காவியா ஒரு சாவியைக் கொண்டு திறந்து விட்டாள். அது உணர்ச்சிப் பிழம்பாய் கொஞ்சம் கொஞ்சமாகப் பாரதியின் சுயம் முழுதும் நிறையத் தொடங்கியது.

   வெளியே யாரோ சிரிப்பது கேட்டது. இருவரும் தங்களின் நிலையை உணர்ந்து திரும்பிப் பார்த்தபோது அந்த வகுப்பில் உள்ள எல்லோரும் வந்திருந்தார்கள். இவர்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தனர்.
   அந்தச் சம்பவம் அவ்வளவு வேகமாக எல்லா இடமும் பரவியது. அதன் நீட்சியாக பாரதி பள்ளியிலிருந்து நீக்கப்பட்டாள். காவியா ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டாள். பாரதியின் அப்பா நிலைகுலைந்துபோனார். எங்கு போனாலும் இதே கேள்வி, கிண்டல், கேலிப் பேச்சு, அறிவுறை... அப்பாவால் எங்கும் போக முடியவில்லை. வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார். அம்மா எப்போதும் அழுதுகொண்டே இருந்தாள். “நாலோட நிப்பாட்டிக்கலாம்னு சொன்னேனே... இந்த மனுசன்தான் பையன் பையன்னு அலைஞ்சார், அதுக்குத்தான் இப்படி வந்து பொறந்திருக்குது, எல்லாத்தோட உயிரையும் வாங்க” என்று அழுது புலம்பித் திட்டிக் கொண்டிருந்தாள்.

   பாரதியைப் பொறுத்தவரை அவளுக்கு இது பெரிதாய் தெரியவில்லை. இதைவிட மோசமான தருணங்களை எல்லாம் அவள் கடந்து வந்திருக்கிறாள். “போயும் போயும் ஒரு பொண்ணோட” என்று அம்மா அழுது கொண்டிருந்தாள். பாரதிக்கு நன்றாகத் தெரியும், இதே அவள் ஓர் ஆணுக்கு முத்தம் கொடுத்திருந்தால், அது இத்தனை அசிங்கமாய் பார்க்கப்பட்டிருக்காது.ஒரு ஹோமோசெக்ஸுவலாக, ஒரு லெஸ்பியனாக இது புரிந்துகொள்ளப்பட்டதால்தான், இத்தனை அசிங்கமாகவும் ஒழுங்கீனமாகவும் அணுகப்படுகிறது. பாரதியைப் பொறுத்தவரை இது ஹோமோசெக்ஸுவல் கிடையாது. அவளைப் பொறுத்தவரை அவள் ஓர் ஆண். ஓர் ஆணுக்கு ஒரு பெண்ணின் மீதுதான் இயல்பாக ஈர்ப்பு வரும். பாரதிக்கும் ஒரு பெண்ணின் மீதுதான் ஈர்ப்பு வந்தது. அது எப்படி ஹோமோசெக்ஸுவல் ஆகும், இந்தச் சமூகம் என்னைப் பெண்ணாய் பார்த்தால், அது என் தவறு எப்படியாகும், நான் யாரென்பது எனக்குத் தான் தெரியும். இதை யாரிடமும் நிறுவ வேண்டிய அவசியம் தனக்கில்லை என உறுதியாக நம்பினாள்.

   பாரதியின் கவலையெல்லாம் அப்பாவைப் பற்றியதுதான். அப்பா ஒரு வார்த்தைகூட இதைப் பற்றிக் கேட்கவில்லை.அவர் கேட்டிருந்தி ருக்கலாம். அவருக்குத் தன்னால் புரிய வைக்க முடியும். அப்பா தன்னைப் புரிந்து கொள்வார் என்று நம்பினாள். ஆனால், அப்பாவின் மெளனம் கவலையூட்டக் கூடியதாய் இருந்தது. ஒருவேளை அப்பா புரிந்துகொள்ளத் தயாராய் இல்லையோ என்று நினைத்தாள்.  நடந்த செயலுக்கு நான் ஒருபோதும் வருந்தப் போவதில்லை. இத்தனை காலம் எனக்குள் அவிழ்க்கப்படாமல் கிடந்த ஏராளமான புதிர்களை அந்தத் தருணம்தான் விடுவித்தது. உடல்ரீதியாக எனது அத்தனை குழப்பங்களுக்கும் அந்தத் தருணத்தில்தான் விடையிருந்தது. நான் என்னைத் தெரிந்து கொண்டேன். நான் யாரென தெரிந்துகொண்டேன். எனது உடல் அத்தனை இயல்பாய் எனது மனதோடு இசைந்துபோனது அந்தத் தருணத்தில்தான். அதற்காக நான் ஒரு போதும் வருந்தப்போவதில்லை. அப்பா பேசினால் புரியவைக்க முயல்வேன். அப்பாவால் அது முடியாது, அவர் இந்தச் சமூகம் வரையறை செய்த நியாயங்களின் பின்னால் மறைந்துகொள்வார். அப்பாவால் அதனை அவ்வளவு எளிதாக உதறிவிட முடியாது. ஏனென்றால், அவர் அப்பா. நான்கு பெண்களுக்கு அப்பா.

   பாரதி கிளம்புவது என முடிவு செய்து விட்டாள். வாசு அதற்கான அனைத்து ஏற்பாட்டையும் செய்துவிட்டான். யாரிடமும் சொல்ல வேண்டும் என்று தோன்றவில்லை. அப்பாவின் அந்த மென்மையான கைகளுக்குள் தனது கைகளை இறுதியாய் ஒருமுறை கோத்துக் கொள்ள நினைத்தாள். அப்பாவின் அறைக்குச் சென்றாள். அப்பா உறங்கிக் கொண்டிருந்தார். அருகில் உட்கார்ந்து கொண்டாள். அப்பாவின் கைகளைப் பற்றிக்கொண்டாள். அந்தத் தொடுதலின் வழியாக எல்லாமும் பேசிவிட முடிந்தால், எத்தனை சுலபமாக இருக்கும் என்று நினைத்தாள். இந்த ஸ்பரிசமும் அதன் வழியே கடத்தப்படும் இந்த அன்பும் இதுவே கடைசியாக இருக்கக் கூடாது என்று நினைத்தாள். கண்களில் கண்ணீர் திரண்டு வந்தது. அது அப்பாவின் பஞ்சு போன்ற கைகளில் பட்டுத் தெறித்தது. அப்பா ஒருவேளை விழித்துக்கொள்ளலாம் இல்லை விழித்துக்கொண்டுதான் இருக்கலாம் என்று நினைத்தவளாய் அங்கிருந்து கிளம்பினாள்.

   பதினாறு வயதில் இந்த நகரத்தைவிட்டுக் கொட்டும் மழையில் கிளம்பிய பாரதி என்பவள், பதினாறு வருடம் கழித்து அதே மழை பெய்யும் ஒருநாளில் இந்த நகரத்துக்குப் பாரதி என்பவனாய் திரும்பி வந்திருக்கிறான். தனது அடையாளத்தை அகம் சார்ந்த அடையாளத்தை இத்தனை வருடங்களில் மீட்டெடுத்திருக்கிறான். அதன் வலிகளும் ரணமும் இன்னும் பாரதியின் மன அடுக்குகளில் ஒளிந்திருக்கிறது என்பதற்கு இந்த நகரத்தைத் தவிர வேறு எதுவும் சாட்சியாக இருக்க முடியாது.

   “என்னடா பாதியில் வந்துட்ட, உன் பொறுமைய ரொம்பவே சோதிச்சிட்டாங்களா?” வாசுவின் குரல் கேட்டு பழைய நினைவோட்டங்களில் இருந்து மீண்டு பாரதி வெளியே வந்தான்.

   “நான் கிளம்புறேன், நீ எல்லாத்தையும் முடிச்சிட்டு ஏர்போர்ட் வந்துடு” என்று சொல்லிவிட்டு இன்னொரு சிகரட்டைப் பற்றவைத்தான் பாரதி.

   “என்னடா அதுக்குள்ள? நாளைக்குப் போகலாம் இரு. உனக்குக் கொஞ்சம் மாறுதலா இருக்கும்னுதான் இங்க வரச் சொன்னேன். ரெண்டுநாள் இருடா, கோபம்லாம் முதலில் குறையட்டும். மீதியெல்லாம் நிதானமாகப் பேசிக்கலாம்.”

   “என்ன பேசுறது? பேசறதுக்கு எதுவும் இல்லை.”

   “அப்படியெல்லாம் இல்லடா, காவியா இல்லாம நீயே இல்லை, உன்னைவிட உனக்காக அதிக இழப்புகளையும் அதிக வலிகளையும் அவள்தான் கடந்து வந்திருகிறாள். ஒரு சீனியர் ரிப்போர்ட்டராக உனது இந்த அபரிதமான வளர்ச்சிக்குக் காவியாவைத் தவிர வேறு எந்தக் காரணமும் இருக்க முடியாது. நீ காவியாகிட்ட பேசு. அவளுக்கு ஒரு வாய்ப்புக் கொடுடா. நீயே எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டா எப்படி?காலையிலிருந்து நிறைய மெசேஜ் அனுப்பியிருக்காளாமே... நீ பேசுடா எல்லாம் சரியாகிடும்.”

   “ஒவ்வொருத்தருக்கும் அவங்க செயலுக்குப் பின்னாடி ஒரு நியாயம் இருக்கும். அவளுக்கும் ஒரு நியாயம் இருக்கும். அது எனக்கு முக்கியம் இல்லை. காதலுக்கும் அன்புக்கும் எந்த நியாயமோ அநியாயமோ கிடையாது. இதைக் காவியாவே நிறைய முறை சொல்லியிருக்கா. ‘love does not need explanation, you just understand’ னு எத்தனையோ முறை சொல்லியிருக்கா. இன்னைக்கு ‘let me explain’ னு மெசேஜ் அனுப்பிட்டு இருக்கா. இது முடிஞ்சு போச்சுடா. இழப்பு எனக்கு ஒண்ணும் புதுசு இல்லை. எல்லா இழப்பையும் கடந்துதான் இங்க வந்திருக்கேன்.”

   “பாரதி, நீயா இப்படிப் பேசுற. காவியாவை உன்னால் எப்போதும் இழக்க முடியாது. அவள்தாண்டா நீ, நீதான் அவள். காவியா எங்கிட்ட பேசுனா, எல்லாத்தையும் சொன்னா, என்ன பெரிசா நடந்துடுச்சு... அந்தக் கணநேரத்தில் நிகழ்ந்த அவள் உடல் சார்ந்த ஒரு பலவீனம், சூழ்நிலையும் சந்தர்ப்பங்களும் எல்லோருடைய பலவீனங்களையும் வெளியே கொண்டு வரும். குறைந்தபட்சம் அது உடல். அவ்வளவுதான், உடலுக்குத் தேவையானதெல்லாம் உணர்ச்சிகளைக் கொட்ட ஒரு வடிகால், ஒரு சந்தர்ப்பம் அவ்வளவுதான். உடல் சார்ந்து இந்தச் சமூகம் நிர்ணயித்திருக்கிற ஒழுக்கவியல் விழுமியங்கள் எல்லாம் எவ்வளவு முட்டாள்தனமானது என்று உன்னைவிட யாருக்குத் தெரியும். ஒருவரின் அடையாளம் அவரது உடல் அல்ல மனம். உடல்ரீதியான வாதைகளும் ஆசைகளும் உணர்ச்சிகளும் ஒருவரின் ஆளுமையை நிர்மாணிக்க முடியாது என்று சொல்லித்தான் நீ இன்று நீயாய் இருக்கிறாய். காவியாவின் உடல்தான் காவியாவின் அந்தக் கணத்தைக் கட்டமைத்திருக்கும். அவள் மனம் கிடையாது. அது எப்போதும் உன்னைச் சுற்றியேதான் இருக்கும். அதனால்தான், நடந்த சம்பவத்தை அவளால் உடனடியாக உன்னிடம் சொல்ல முடிந்தது. இதை அவள் எப்போதும் மறைத்திருக்கலாம். ஆனால், அவள் மனம் அதற்கு ஒப்பாது. இதையெல்லாம் நீயே புரிந்துகொள்வாய் என்றுகூட அவள் எதிர்பார்த்திருக்கலாம்.”

   “சரி, நான் கிளம்புறேன், நீ நேராக ஏர்போர்ட் வந்துடு” எனச் சொல்லிவிட்டு விறுவிறுவென காரை நோக்கிக் கிளம்பினான் பாரதி.

   வாசுவுக்குத் தெரியும். இதற்குமேல் பாரதியிடம் பேச முடியாது. அவன் பேசுவதையோ மற்றவர்களின் தர்க்க ரீதியான விளக்கங்களையோ எப்போதுமே ஒரு பொருட்டாய் எடுத்துக்கொள்ள மாட்டான். அவனைப் பொறுத்தவரை அவனது நியாயம்தான். தனி மனித உணர்வையும் அது சார்ந்த மதிப்பீடுகளையும் பற்றி எப்போதும் பாரதிக்கு எந்த ஒரு கரிசனமும் இருந்தது இல்லை. அது இயல்பாகவே அவனுக்கு வந்ததா இல்லை இந்தக் கடினமான வாழ்க்கை அவனை இப்படி மாற்றியதா என்பது வாசுவுக்குக்கூடத் தெரியாது. வாசு, பாரதியிடம் அப்பாவைப் பார்க்கப் போகலாமா என்றுகூட கேட்க நினைத்தான். ஆனால், பாரதி அதற்கு ஒத்துக்கொள்ள மாட்டான் என்று நினைத்தான்.

   “ஹோட்டல் போயிட்டு ஏர்போர்ட் போகணும்” என்று டிரைவரிடம் சொல்லிவிட்டு இன்னுமொரு சிகரட்டை எடுத்துப் பற்றவைத்தான் பாரதி. தனது செல்போனை எடுத்து உயிர்ப்பித்தான். அடுக்கடுக்காய் மெசேஜ் வந்து கொண்டேயிருந்தன. எல்லாமே காவியா அனுப்பியது தான். `Let me explain’ என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. திரும்பவும் செல்லை அணைத்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டான். காரின் அந்தச் செவ்வகக் கண்ணாடி வழியே இன்னும் தூறல். கார் இப்ராஹிம் பார்க்கைக் கடந்து சென்று கொண்டிருந்தது. ஒரு நிமிடம் மழையில் நனைந்த அந்த பார்க்கைப் பார்த்தான். ஒன்றும் பெரிய மாற்றமில்லை. பதினாறு வருடங்களுக்கு முன்பு பார்த்த மாதிரியேதான் இருக்கிறது. அதன் சுவர்கள் மட்டும் வண்ணம் பூசப்பட்டிருக்கிறது, அதில் சில ஒவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன. மற்றபடி இது அவன் நடை பயின்ற அப்பாவின் விரல் பிடித்து நடந்த அதே இப்ராஹிம் பார்க்தான். கடந்த காலத்தில் தான் சந்தோஷமாகக்கூட இருந்திருக்கிறேன் என்பதற்கு இந்த பார்க் மட்டும்தான் சாட்சி என நினைத்துக் கொண்டான்.

   பாரதிக்கு அப்பாவைப் பார்க்க வேண்டும் எனத் தோன்றியது. அப்பா இப்போது எப்படி இருப்பார் என மனசுக்குள் நினைத்துக் கொண்டான். அப்பா என்னைக் கண்டிப்பாகத் தொலைக்காட்சியில் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் பார்த்திருப்பார். அது நான்தான் எனத் தெரியுமா? இத்தனை வருடத்தில் என்னைப் பார்க்க வேண்டும் என ஒருமுறைகூடவா நினைத்திருக்க மாட்டார்,  அப்படி நினைத்திருந்தால் கட்டாயம் தேடிவந்து என்னைப் பார்த்திருப்பாரே, ஒரு வேளை காவியா விஷயம் தெரிந்து இன்னும் அதிகமாகக் கோபப்பட்டிருப்பாரோ, ஒரு வேளை அப்பாவுக்கு ஏதாவது ஆகியிருக்குமோ, அப்பா இன்னும் உயிரோடுதான் இருக்கிறாரா? வரிசையான கேள்விகளுக்குப் பின் பாரதிக்குக் கொஞ்சம் படபடப்பாய் இருந்தது. காரை நிறுத்தச்சொல்லி இறங்கிக் கொண்டான். ஓர் ஓரமாகச் சென்று இன்னுமொரு சிகரட்டை எடுத்துப் பற்றவைத்துக்கொண்டான். இனி அப்பாவைப் பார்க்காமல் இங்கிருந்து போகக் கூடாது என முடிவெடுத்தவனாய், உடனடியாக வாசுவுக்கு போனைப் போட்டு, “அப்பாவைப் பார்க்கலாம். நேரா கல்லுக்குழி ரயில்வே கிரவுண்ட் வந்துடு. அங்கிருந்து ரெண்டுபேரும் ஒண்ணாப் போகலாம்’’ எனச் சொல்லி வைத்துவிட்டான். வாசுவுக்கு இது ஒரு பெரிய ஆச்சர்யமாக இருந்தது. அவனால் முதலில் அதனை நம்ப முடியவில்லை. ஆனால், எதிர்பார்த்திருந்தான். ஏனென்றால், பாரதியின் அப்போதைய மனநிலை நம்ப முடியாத முடிவுகளை எடுக்கக் கூடியதாய் இருந்தது.

   கல்லுக்குழி ரயில்வே காலனியில் அந்த வீடு பூட்டியிருந்தது. இந்தப் பதினாறு வருடங்களுக்கான மாற்றம் என ஒன்றும் அங்கு இல்லை. பழமை மாறாத அதே ரயில்வே குவாட்டர்ஸ், பாரதியின் வீடு மட்டும் கொஞ்சம் மாறியிருந்தது. பராமரிக்காமல் விட்ட குரோட்டன்ஸ் செடிகள்,சிதிலமடைந்த சுவர்கள், கரையான் அரித்த மரச்சட்டங்கள் எனச் சில மாற்றங்கள். மொத்தத்தில் அந்த வீடு பொலிவற்றதாய் இருந்தது.
   “என்னடா வீடு பூட்டியிருக்கு. இரு... நான் பக்கத்து வீட்டில் போய் விசாரித்துவிட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றான் வாசு. பாரதி அங்கு கிரிக்கெட் விளையாடும் சிறுவர்களையே பார்த்துக்கொண்டிருந்தான். வாசு கொஞ்சம் பதட்டமாக வந்தான். அவன் நடையில் வேகத்தைக் கவனித்தான் பாரதி.

   “பாரதி, சீக்கிரம் கிளம்பு. ரயில்வே ஆஸ்பத்திரிக்குப் போகணும்.”

   “என்னடா, என்னாச்சு?”

   “அப்பாவுக்கு நேத்து நைட் திடீர்னு நெஞ்சு வலியாம். எல்லோரும் ஆஸ்பத்திரியில்தான் இருக்காங்களாம்.”

   பாரதியின் கண்களில் இருந்து கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. அவன் அழுது பல வருடங்கள் ஆயிற்று. கண்ணீர் எல்லாம் வற்றிப் போய் விட்டது என நினைத்துக் கொண்டிருந்தான். கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, “வாசு அப்பாவைப் பார்க்கணும்டா, பேசக்கூட வேண்டாம். பார்த்தால் போதும்டா” என்றான்.

   “சீக்கிரம் வா பாரதி. ரயில்வே ஆஸ்பத்திரிக்கு தான் முதலில் கூட்டிட்டுப் போனாங்களாம். ஆனால், இன்னும் அங்குதான் இருப்பார்களா என்று தெரியவில்லையாம், நம்ம போய்தான்  விசரிக்கணும். வா.”
   ரயில்வே ஆஸ்பத்திரியில் விசாரித்ததில் நேற்று இரவே கே.எம்.சி-க்குக் கூட்டிக்கொண்டு போய் விட்டதாகச் சொன்னார்கள்.

   பாரதிக்கு இன்னும் படபடப்பாய் இருந்தது. இத்தனை வருடங்களில் ஒருமுறைகூட அப்பாவைப் பற்றியோ அவரது உடல் நிலையைப் பற்றியோ தோன்றியது இல்லை. இப்போது மட்டும் ஏன் தோன்ற வேண்டும், திருச்சி வந்ததுதான் காரணமா? அப்படியென்றால் இந்த பதினாறு வருடங்களில் திடீரென எப்படி இன்று  வந்தேன், இது எல்லாம் யாருடைய கணிப்பு? இவை அனைத்தும் ஒரு தற்செயல் நிகழ்வு என்பதை பாரதியால் அவ்வளவு சுலபமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.

   கார் கே.எம்.சி வந்து சேர்ந்தது. பாரதி வேக வேகமாக உள்ளே சென்றான். மருத்துவமனை வெளியே நாலைந்து பேர் அழுதுகொண்டிருந்தார்கள். அதில் யாரும் தனக்குத் தெரிந்தவர்கள் இருக்கக் கூடாது என்று பார்த்தான். யாரையும் தெரியவில்லை. தெரிந்தவர் யாரேனும் இருந்தால்கூட அவனுக்கு அடையாளம் தெரியப்போவதில்லை. வாசு அதற்குள் விசாரித்துக்கொண்டு வந்தான். “ஐ.சி.யூ-வில இருக்காராம். வா போகலாம்.”

   இரண்டு பேரும் லிப்ட்டுக்குக்கூடக் காத்திருக்க முடியாமல், அத்தனை விரைவாகப் படியேறினர். ஐ.சி.யூ-விற்கு வெளியே பத்து பதினைந்து பேர் நின்றிருந்தனர். பாரதி எல்லோரையும் பார்த்தான். அந்தக் காத்திருக்கும் இடம் அவ்வளவு அமைதியாக இருந்தது.எல்லோரும் ஏதோ யோசனையில் இருப்பதுபோல் பட்டது. வாழ்வுக்கும் இறப்புக்கும் மத்தியில் இந்த ஐ.சி.யூ- வின் கதவுதான் இருப்பதைப்போல, எல்லோரும் அந்தக் கதவையே பார்த்துக்கொண்டிருந்தனர். ஒவ்வொருவருக்கும் சொல்ல அந்தக் கதவின் உள்ளே ஒரு செய்தி இருக்கிறது. ஒவ்வொரு முறையும் அந்தக் கதவு திறக்கும் முறை ஒன்றுதான். ஆனால், அதன் வழியாக எல்லோருக்கும் ஒரே விதமான செய்தி அனுப்பப்படுவதில்லை.

   அந்தக் கூட்டத்தில் பாரதி, அம்மாவைக் கண்டுகொண்டான். அம்மா சோர்ந்துபோய் உட்கார்ந்திருந்தாள். அம்மாவைச் சுற்றிலும் குழந்தைகள் உட்பட நிறைய பேர் நின்றிருந்தார்கள். அவர்கள் எல்லாம் பாரதியின் அக்கா மற்றும் அவர்களது குழந்தைகளாக இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டான். அம்மா இவனைப் பார்த்தாள். பிறகு, தலையைக் குனிந்து கொண்டாள். அவளுக்கு அடையாளம் தெரிந்திருக்காது. திரும்பவும் ஒருமுறை நிமிர்ந்து வாசுவைப் பார்த்தாள். அவள் கண்கள் கலங்கத் தொடங்கின. தனது கண்ணை அசைத்து அவள்தானா என்று கேட்பதுபோல வாசுவைப் பார்த்து ஜாடை செய்தாள். வாசு ஆம் என்பது போல மெள்ளத் தனது தலையை ஆட்டினான். அம்மா சத்தமாகக் குரலெடுத்து அழத் தொடங்கினாள். அதன் அர்த்தம் என்னவென்று பாரதிக்குப் புரியவில்லை. இத்தனை வருடம் கழித்து என்னைப் பார்ப்பதால் அழுகிறாளா,  எப்படி மாறி வந்திருக்கா பாரு என்று அழுகிறாளா, ஏன் வந்தாள் என அழுகிறாளா? பாரதிக்கு ஒன்றும் புரியவில்லை. அங்கு உள்ள யாருக்கும் கூட இவள் ஏன் இப்படித் திடீரென அழுகிறாள் எனப் புரியவில்லை. எல்லோரும் திரும்பி பாரதியைப் பார்த்தார்கள். பாரதி யாரையும் பார்ப்பதைத் தவிர்த்து விறுவிறுவென ஐ.சி.யு-வின் உள்ளே நுழைந்தான்.

    உள்ளே டாக்டரிடம் பேசிவிட்டு அப்பாவின் பெட் முன்னே சென்று நின்றான். அப்பா உறங்கிக்கொண்டிருந்தார். அவரது உடல் கழுத்து வரை போர்த்தப்பட்டிருந்தது. ஆக்ஸிஜன் மாஸ்க் முகத்தில் பொருத்தப்பட்டிருந்தது. போர்வைக்குள் இருந்து நிறைய வொயர்கள் இங்கும் அங்குமாக இணைக்கப்பட்டிருந்தது. அப்பாவின் இடது கையில் உள்ள நரம்பில் ஊசி செருகப்பட்டு  கலர்கலராய் மருந்து சென்று கொண்டிருந்தது. பாரதி, அப்பாவின் வலது கையைத் தொட்டான். அவரது உள்ளங்கையில் தனது கையை இணைத்துக்கொண்டான். அதே மென்மை, அதே பெண்மை தோய்ந்த மென்மை, பஞ்சு போன்ற மிருதுவான உள்ளங்கை, இதுதான் அப்பாவின் அடையாளம். இதுதான் எனக்கும் அப்பாவிற்கும் இடையே உள்ள சொல்லப்படாத அன்பின் அடையாளம். இந்த மென்மையும் கொஞ்சம் பெண்மை கலந்த பாவனையும்தான் என் அப்பா. நான் அப்பாவிடம் விரும்புவது இதைத்தான். ஏனென்றால், இதுதான் என் அப்பா.

   பாரதி அழத் தொடங்கினான். அப்பாவின் கண்களிலும் கண்ணீர் கசியத் தொடங்கியது. அவர் பாரதியை உணர்ந்துகொண்டார். அவன் வருகையைத் தெரிந்துகொண்டார். வெறும் தொடுதலை வைத்தே அவர் பாரதியை அடையாளம் கண்டுகொண்டார். பாரதியை உணர்ந்துகொள்ள அவருக்கு இந்தத் தொடுதல் போதுமானதாக இருந்தது. எந்தப் புறத்தோற்றமும் அவருக்குத் தேவைப்படவில்லை. பாரதிக்கும் அப்பாவுக்கும் இடையே இந்தத் தொடுதலையும் அதற்கு இடைப்பட்ட காலத்தையும் தவிர வேறு எதுவும் இல்லை. மெதுவாக அப்பா கண்ணைத் திறந்து பாரதியைப் பார்த்தார். பாரதியின் புற மாறுதல்கள் அவருக்கு எந்த அதிர்ச்சியையும் கொடுக்கவில்லை. மாறாக பாரதியைப் பார்த்து நிதானமாகச் சிரித்தார். அதன்பின் எத்தனை அர்த்தங்கள், எத்தனை உண்மைகள், எத்தனை சொல்லப்படாத வார்த்தைகள் இருக்கின்றன என்பதை பாரதி சுலபமாகப் புரிந்து கொண்டான். அவனுக்கு எந்த வார்த்தையும் ஆறுதலும் அழுகையும் கதறலும் தேவைப்படவில்லை. பாரதி ஐ.சி.யு-வைவிட்டு அத்தனை நிம்மதியுடன் வெளியே வந்தான். யாரையும் பார்க்காமல் யாருடனும் பேசாமல் வேகமாக வந்து காரில் ஏறிக்கொண்டான். வாசு பின்னாடியே ஓடிவந்து ஏறிக்கொண்டான்.

   “என்ன பாரதி, யார்கிட்டவும் சொல்லாம வந்துட்ட? அப்பா என்ன சொன்னார்டா?”

   “அப்பா என்னைப் புரிஞ்சுக்கிட்டார்டா” என்று சொல்லிவிட்டு தனது செல்போனை ஆன் செய்தான். காவியா ஏராளமான மெசேஜ்களை அனுப்பியிருந்தாள். அதே `Let me explain’. பாரதி நிதானமாக ரிப்ளை செய்யத் தொடங்கினான்.  “Love doesn’t need explanation, it needs understanding. I understand”.

   கார் அந்த அகலமான சாலையில் அவ்வளவு நிதானமாக சென்று கொண்டிருந்தது, மழை இப்போது விட்டிருந்தது, திருச்சி மழையில் நனைந்து போய் அத்தனை ரம்மியமாய் இருந்தது.
   http://www.vikatan.com/
  • By நவீனன்
   ஷினுகாமி - சிறுகதை
     சிறுகதை: லதாமகன், ஓவியங்கள்: ஸ்யாம்
    
   ``ஹிரோஷிமானி இக்கோ தெசுகா?’’ கொஞ்சல் ஜப்பானிய மொழியில் அந்தப் பெண் புன்னகைத்துக் கேட்டபோது புரியவில்லை.
   ``மன்னிக்கவும், ஜப்பானிய மொழி தெரியாது’’ என்றேன். ``ஹிரோஷிமா போறீங்களா?’’ நல்லதொரு நுனி நாக்கு ஆங்கிலம். சிகரெட் சாம்பலை அதற்காக வைக்கப்பட்டிருந்த நீண்ட தொட்டியில் முடிந்தவரை நளினமாகத்  தட்டிவிட்டு ‘`ஆம்’’ என்றேன். `‘தனியாகவா’’ ஜப்பானியப் பெண்கள் எல்லாவற்றிலும் ஆச்சர்யம் கொண்ட கீச்சுக்குரலை நுழைத்துவிடுகிறார்கள் என்று தோன்றியது. மீண்டும் `‘ஆம்’’ .
   ‘`ஏன் ஹிரோஷிமா?’’ 

    இந்த இரண்டு ஆண்டுகளில் சுற்றும் பாதைகளெல்லாம் இந்தக் கேள்வியைச் சந்தித்திருக்கிறேன். பெரும்பாலும் ஒரு விருந்தினன். வேடிக்கை பார்க்க வந்தவன். ஊர் சுற்ற வந்தவன். நம் ஊரில் எது இவனை ஈர்த்துக்கொண்டு வந்திருக்கும் என்றொரு ஆர்வம் அவர்களின் கேள்விகளில் இருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் ஒவ்வொரு பதிலுக்கும் ஓர் ஆச்சர்ய முகபாவனை. பெரும்பாலானவர்கள் நான் இங்கே வேலை செய்கிறேன் என்பதை அறிந்தபின் அடங்கிவிடுவார்கள். வேலை செய்கிறவன் இடைவெளிகளில் எங்கு வேண்டுமானாலும் போகலாம். நாடுவிட்டு நாடு கடந்து சுற்றுகிறவன் மீதுதான் கரிசனம். இதுவரை என் நாட்டில் நான் காணாத எதைத் தேடி வந்திருக்கிறான் என்னும் ஆச்சர்யம்.
   “ஜப்பான் பயணம் என்று முடிவான கணத்தில் தோன்றிய உணர்வு. அங்கே ஒருநாள் அமர்ந்திருக்க வேண்டுமென்று.’’
   “எங்கே?”
   “அணுகுண்டு விழுந்த இடத்தில்.  உடலெல்லாம் எரிய பல ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் இறந்து போன இடத்தில்” என்றேன். கொஞ்சம் அதிகமாகச் சென்றுவிட்டோம் என்று தோன்றியது. அவளிடம் அப்போதும் அதே புன்னகை.
   “ஏன்?”
   “மரணம் என்னை வசீகரிக்கிறது.”
   “கொலைகள். இல்லையா?’’
   நேரடியான கேள்வி. உண்மையானதும்கூட. அதை மறைக்க முயற்சிசெய்தேன். நடுங்கி விழவிருந்த சிகரெட்டை லாவகமாக மறைப்பவன் போலத் தொட்டியில் அமிழ்த்தி அடுத்த சிகரெட்டை எடுத்துப்  பற்றவைத்துக்கொண்டேன்.
   “ இருக்கலாம். உள்ளூர் சுடுகாட்டில், காசியில், எரியும் பிணங்களைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்கிறேன்.மரணம் வசீகீரமானதுதானே?” மெல்லப் பந்தை அவள் பக்கம் உருட்டிவிட்டேன். புன்னகை மாறாமல் பார்த்துக் கொண்டிருந்தவள், இழுத்து மூச்சு விட்டாள்.
   “இல்லை. மரணம்,  வெறும் சோம்பலான நாய்.கொலை, ஒரு வேட்டை நாய். சோம்பலில் எந்த வேடிக்கையும் இல்லை. வேட்டையில்தான் வேடிக்கை இருக்கிறது. வேட்டை நாய் சோம்பலாக இருக்கும்போது பார்த்திருக்கிறாயா? அது அழகுதான். ஆனால், உண்மையில்லை.”
   பேச்சை மாற்றலாம் என்று தோன்றியது. நடு முதுகில் பூச்சி ஊரும் எண்ணம். தலையசைத்து அதைக் கலைத்தேன். “நீங்கள் தனியாகச் செல்கிறீர்களா?” என்றேன். “ஆம். ஆனால், அங்கே எனது நண்பர் இணைந்து கொள்வார். எனது பிறப்பிடம் அதன் அருகேதான். அங்கிருந்து வருவார்” என்றாள். தொடர்ந்து, “உங்களுக்கு பிரச்னை இல்லை யெனில், எங்களுடன் இணைந்து கொள்ளலாம்” எளிமையான வார்த்தைதான். ஆனாலும், ஏதோ ஒன்று இயல்பான வெளியூர் பயம் உள்ளே உருட்டியது.
    “ இல்லை. அங்கே தனியே அமரவேண்டுமென விரும்புகிறேன். அந்த இடத்தில்” சொல்லிவிட்டு அவள் முகத்தில் ஏமாற்றம் தெரிகிறதா என்று பார்த்தேன். எந்தச் சலனமும் இல்லை. “சரி. பரவாயில்லை. இந்த ட்ரெயினிலும் அடுத்த  நான்குமணி நேரம் தனியாகச் செல்வதாக எந்த வேண்டுதலும் இல்லாவிட்டால், என்னுடன் இணைந்துகொள்ளலாம். பயப்படாதீர்கள், தின்றுவிட மாட்டேன். ஜப்பானியர்களில் உங்கள் ஊரின் பிஸ்கட் கொள்ளையர்கள் இருக்க சாத்தியம் குறைவுதான்” என்றாள். இந்தியாவைப்பற்றி எங்கோ படித்திருக்கிறாள். குறிப்பாக ரயில்பயணத்தின் பிஸ்கட் கொள்ளையர்களைப் பற்றி. இவளிடம் எ ன் நாட்டுப்பெருமையை எதைச் சொல்லி உருவாக்குவேன் என்ற எண்ணம் ஓடியது. இரண்டாவது சிகரெட்டை அணைத்தேன். புகையறைவிட்டுக் கதவைத் தள்ளி அவளுக்கு வழிவிட்டேன்.புன்னகைத்தபடியே வெளியேறினாள்.தொடர்ந்து பின்னாலே வந்தேன். சிறுபிள்ளை போன்ற உடல். அதிகமும் பதினந்து வயதைத் தாண்டாதென மதிக்கலாம். ஆனால், இந்த ஊரில் குமரிகள் முதல் கிழவிகள் வரை இதே உருவம் என்பதால், சற்று இடறியது. என் இருக்கையைத் தாண்டி நடந்தாள்.
   “என் இருக்கை இங்கே இருக்கிறது” குரல் பலவீனமாக ஒலித்தது. “பையை எடுத்துக்கொண்டு இங்கே வாருங்கள். ஜன்னலை ஒட்டி இடம் தருகிறேன்’’ என்றாள். நாங்கள் இருந்த பெட்டி, முன்பதிவு செய்யத் தேவையில்லாதது. யாரும் எங்கும் அமர்ந்துகொள்ளும்படியிலானது. பையை எடுத்துக்கொண்டு நாய்க்குட்டிபோல அவள் இருக்கையின் அருகில் சென்று அமர்ந்தேன். திடீரென ஞாபகம் வந்தது. “உங்கள் பெயர் சொல்லவில்லையே’’ என்றேன்.
   “ஷினு. ஷினு காமி. உங்களுக்கு?” என்று கை நீட்டினாள். “நந்து’’ என்றேன். கைகொடுக்கும் முன்னதாகச் சட்டையில் துடைக்கும் உணர்வெழுந்ததைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டேன். அதற்கும் இந்தியாவை அவள் இழுக்கக்கூடும் என்று தோன்றியது.
   “கிட்டத்தட்ட உங்கள் பெயரைப்போலவே எங்கள் ஊரில் ஒரு கடவுள் பெயர் உண்டு. சிவகாமி.”
   “ஓ.”

   ”தெரிந்திருக்கும் என நினைத்தேன். எங்கள் ஊர் ரயில் திருட்டையெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.”
   பெரிதாகச் சிரித்தாள். “மனதைப் புண்படுத்தி விட்டேனா. மன்னிக்கவும். நிஜமாகவே சிவகாமி தெரியாது. ஆனால், இந்தியாவில் ஒரு பயணியாகச் சுற்றித் திரியவேண்டும் என நினைத்திருக்கிறேன். அதைப்பற்றிப் படிக்கும்போதுதான் ரயில் திருட்டு பற்றியும் படித்தேன். புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.”
   “புண்பட்டாலும் அது உண்மைதானே” சங்கடத்தை மறைத்துப் புன்னகைத்தேன்.
   “மரணம்போல.”
   “என்ன?”
   “மரணத்தைப்போல. எல்லோரையும் புண்படுத்தும். எல்லோருக்கும் வரும். சாஸ்வதமான உண்மை. சரிதானே.”
   “சரிதான்.”
   சாய்ந்து அமர்ந்துகொண்டேன். ஊர்கள் ஜன்னலில் பின்னோக்கி ஓடிக்கொண்டிருந்தன.  அதிவேகத் தொடர்வண்டிகள்மீது ஆரம்ப நாள்களில் இருந்த ஆச்சர்யம் குறைந்து மற்றுமொரு பயணம் என்ற அளவில் மாறியிருந்தது. ஆனாலும், மரங்களுக்குப் பதிலாக ஊர்களே வருவதும் மறைவதுமாக இருப்பது இன்னும் ஆச்சர்யமூட்டு வதாகவே இருந்தது. “உறங்கப்போகிறீர்களா?” அருகிலிருந்தவள் கேட்டாள். திரும்பி அமர்ந்தேன். “அப்படியெல்லாம் இல்லை. சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். நீங்கள் ஏன் ஹிரோஷிமா போகிறீர்கள்?” நானும் பேசத் தயார் என்பதைப்போல மெல்ல சொற்களை நீட்டினேன்.
    “புத்தாண்டு கொண்டாட்டம். ஒவ்வொரு புத்தாண்டும் ஊருக்குப்போய் ஊர் நண்பர்களுடன் கொண்டாடுவது வழக்கம். இப்போது அங்கே யாருமில்லை. எல்லோரும் டோக்கியோ வந்துவிட்டார்கள். அல்லது வெகு தொலைவில் ஏதாவது வேலையை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஒருவன் மட்டும் அங்கே இருக்கிறான்.அவனை வரச்சொல்லியிருக்கிறேன், புத்தாண்டு நள்ளிரவுக்காக. இரவெல்லாம் ஆட்டம் போட்டுவிட்டு, புத்தாண்டு பகல் முழுவதும் உறங்குவோம்.  மீண்டும்  எழுந்து டோக்கியோவிற்குத் திரும்பி வரவேண்டும்.’’
   சென்னையிலிருந்து திருச்சிக்கு வாராவாரம் துவைக்கவேண்டிய துணிகளுடன் போய்வந்துகொண்டிருந்த பழைய அறை நண்பன் ஞாபகம் வந்தது. அவள் பெட்டியில் அவளது ஆடைகள் ஒரு வார அழுக்குடன் சுருட்டி வைக்கப்பட்டிருப்பதாகத் தோன்றியது. சிரிப்பு வந்தது.
   “ஏன் சிரிக்கிறீர்கள்?’’
   “இல்லை. எங்கள் நாட்டிலும் இப்படித்தான். வாராவாரம் பெட்டிகட்டி ஊருக்குப்போகும் பழக்கம் உண்டு. ஊரில் குளத்தில் துவைப்பதற்காக ஆடைகள் சுருட்டிக் கொண்டுபோவோம். அது ஞாபகம் வந்தது.”
   ``நிச்சயமாக என் பெட்டியில் அழுக்குத் துணியில்லை. ஒரு நாய்க்குட்டி மட்டும் வைத்திருக்கிறேன். நேற்று இறந்தது.”

   தூக்கிவாரிப்போட்டது.  இறந்த நாய்க்குட்டியை பெட்டியில் வைத்துக்கொண்டு சிரித்தபடிவரும் ஒரு பெண்.

   அவள் வெடித்துச் சிரித்தாள். ``பதறாதீர்கள். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. பெண்களின் வழக்கமான ஆடைகள்தான்” அவள் கண்ணடித்தாள். சிறிய கோடுபோன்ற கண்கள். தூண் சிற்பங்களில் இருக்கும் மூடிய கண்களைப்போல. டைல்ஸில் குறுக்கே ஓடும் கறுப்பு நாய்க்குட்டிபோன்ற கருவிழிகள். மஞ்சள்துணி போட்டு மூடிய, துணியை விடுவிப்பதற்காகப் பதறி ஓடும் கறுப்பு நாய்க்குட்டிகள்.

   ``ஆனால், உண்மையில் எனது குடியிருப்பில் மாடியில் ஒரு நாய்க்குட்டி இறந்துவிட்டது. அந்தப் பெண் இரவெல்லாம் அழுதுகொண்டே யிருந்தார். விளக்கு எரிந்துகொண்டேயிருந்தது. அவள் கணவர் சமாதானம் செய்ய முயற்சி செய்துகொண்டேயிருந்தார். என்னவோ திடீரென நினைவு வந்தது. அதைச் சொன்னேன். சிறிது நிமிடத்தில் முகமெல்லாம் வெளிறிவிட்டது பார்.”

   உண்மையிலேயே உள்ளூர நடுங்கிக் கொண்டிருந்தேன். இன்னும் அதிவேக ரயிலிலில் ஆள் குறைவாக இருக்கும் பெட்டியில், கைப்பையில் இறந்த நாயை வைத்திருக்கும் பெண் என்பதாகவே அவள் சித்திரம் உள்ளே மின்னிக்கொண்டிருந்தது. அவளது ஒவ்வொரு தலையசைவுக்கும் ஒளி விடுபடப் பார்த்தேன். பிறகு, மீண்டும் மின்னலென வெட்டும் அந்தச் சித்திரம். இடையே அந்த டைல்ஸில் ஓடும் நாய்க்குட்டிகள். ஈரம் பொதிந்த திசுத்தாள்களைப் பையிலிருந்து எடுத்து முகத்தை அழுந்தத் துடைத்தேன். டைல்ஸில் ஓடும் நாய்க்குட்டிகளை. பெட்டியில் இருக்கும் நாய்க்குட்டிகளை. இதுவரை பார்த்த அத்தனை நாய்க்குட்டிகளையும் அழுந்தத் துடைத்து எடுத்தேன். அவள் எந்தச் சலனமும் இன்றி எதிர்ப்புற ஜன்னல்களுக்கு வெளியே ஓடும் மரங்களைப் பார்த்துக்கொண்டேவந்தாள். இடையில் புகைவண்டி நிலையம் ஏதோ ஒன்று வேகமாக கடந்து சென்றது. நடைமேடையிலிருந்து ஒரு நாய்க்குட்டி ஓடிவந்து ஓடும் ரயிலின் கண்ணாடியில் பளீரென அறைந்ததுபோல இருந்தது. முகத்தை மீண்டும் அழுந்தத் துடைத்தேன். அவள் இயல்பாகத் திரும்பினாள்.
   “என்ன செய்யப்போகிறாய் குடித்தபின்?”

   “என்ன?”

   ``இல்லை. அந்த இடத்தில் அமர்ந்து இரவில் குடிக்கவேண்டும். பிறகு என்ன செய்வதாக உத்தேசம்?”

   “எதுவும் இல்லை. அவர்களில் யாராவது ஆவியாக வந்து காட்சி தந்தால், கொஞ்சம் பேசிக்கொண்டி ருக்கலாம் என்று நினைக்கிறேன்.”

   அதே சிறிய விலக்கமான புன்னகை. வெடித்துச் சிரிப்பாள் என்று எதிர்பார்த்தேன். அல்லது சீண்டப்பட்டிருக்க வேண்டுமென்று. ஏதோ கதை கேட்பவள் பாவனையில், கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக்கொண்டாள். என்னை நோக்கிச் சாய்ந்து அமர்ந்தாள்.

   “என்ன பேசப்போகிறாய்? அவர்களிடம் ஏதாவது கேட்க வேண்டுமா?”

   “ஆம். மனிதர்களைப்பற்றி. அவர்களைக் கொல்வதாக முடிவெடுத்தவர்கள் பற்றி. அரசியல் காரணங்களுக்காக எங்கோ அமர்ந்து ஒரு பொத்தானை அழுத்தி அத்தனை பேரைக் கொன்ற ஒரு விரலைப்பற்றி.”
   “ஒருவேளை நீ அங்கு இறந்திருந்தால், உன்னிடம் யாராவது வந்து இதே கேள்வியைக் கேட்டால், உன் பதில் என்ன?”

   உண்மையில் இதை எதிர்பார்த்திருக்கவில்லை. அவளைச் சீண்டுவதற்காக, தூண்டிவிட்டு வாயைப் பிடுங்குவதற்காக எண்ணி எடுத்த ஒவ்வொரு சொல்லையும் அவள் எளிதாகக் கடந்து சென்றாள்; அதைவிட கூரிய ஆயுதங்களை என்னை நோக்கி எறிந்துவிட்டு.

   ”தெரியவில்லை. பெரும்பாலும் ஏற்கெனவே எதோ ஒரு விதத்தில் பழிவாங்கிவிட்டேன். அல்லது இறந்தபிறகு இது ஒரு விஷயமாகத் தெரியவில்லை. இரண்டில் ஒன்றுதான் பதிலாக இருந்திருக்கும். உன் பதில் என்ன?”

   “என்னிடம் பதில் இல்லை” வெடுக்கென சொன்னாள். கையில் வைத்து அழகு பார்த்த அழகிய பூந்தொட்டி விழுந்து நொறுங்கியதைப்போல என்னில் திடுக்கிடல் எழுந்தது. “என்னை மன்னித்துவிடு” என்றேன்.

   அவள் என் கண்களை ஊடுருவிப் பார்த்தாள். பதில் சொல்லாமல் மறுபுறம் முகந்திருப்பி மீண்டும் ஓடும் மரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

   இலகுத்தன்மை ஏதோ ஒன்று உடைந்ததுபோல் இருந்தது. இழுத்துப் பெருமூச்சுவிட்டு ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டு வந்தேன். மரங்கள். சூரிய மின்சாரத்திற்கென புறம்போக்கு நிலங்களில் அரசாங்கத்தால் பதிக்கப்பட்ட தகடுகள். பழைய ஜப்பானிய பாணியிலான ஓட்டுவீடுகள். கடந்துசெல்லும் ரயில் நிலையங்கள். அங்கே அந்த நிறுத்தத்தில் நிற்கப்போகும் புகைவண்டிகளுக்காகக் காத்திருப்பவர்கள். தள்ளுவண்டிகளில் அமரவைக்கப்பட்டு உறங்கிவிட்டிருந்த குழந்தைகள். அவள் உறங்கியிருக்கக்கூடும் என்று தோன்றியது. பின்கழுத்தில் உறுத்தத் திரும்பினேன்.கூர்மையாகப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

   ``பெரியவர்கள் இறந்ததைவிட குழந்தைகள் தான் அதில் அதிகம். பேச முடியாத குழந்தைகள். உடல் எரிய,  நா வறண்டு, தண்ணீர் என வாய் திறந்து கேட்கத் தெரியாத குழந்தைகள். அவர்களிடம் பதில் கிடையாது. கேள்விகள் இருந்திருக்கலாம். யாருக்கும் தெரியாது. ஆனாலும், இறந்தார்கள். சிறிய பொத்தான். எங்கோ யாரோ அழுத்திய ஒரு பொத்தான். யாரோ யாரிடமோ சொல்லிய ஒரு வார்த்தை. மெல்ல ஊர்ந்து எழுந்து பறக்கிறவர்களிடம் வந்து சேர்ந்து, அவர்கள் திறந்த சிறிய கதவு. அங்கிருந்து விழுந்த ஓர் உலோகத்துண்டு. மொத்த பேரையும்  நா திறக்கவிடாமல் சாகடித்துவிட்டது. அத்தனை பேரையும் கொல்லவேண்டும்.

   அதற்குக் காரணமான அத்தனை பேரையும் ஒருத்தர் விடாமல்...” அவள் ஜப்பானிய வாசம் வீசும் ஓர் ஆங்கில உச்சரிப்பில் தடதடவென பொரிந்தாள். குரல் தழுதழுத்ததுபோல் இருந்தது. ஆனால், கண்களில் கோபம் இருந்தது. எச்சில் விழுங்கி எதுவும் சொல்ல முடியாமல் விழித்தேன். ``இன்னொரு சிகரெட்?” அவளது பதிலுக்குக் காத்திராமல் இருக்கையிலிருந்து எழுந்தேன். அவளைக் கடந்து போகவேண்டும். அவளை மீறிப் போக முடியாது. அவளும் அமர்ந்திருந்தாள். சில நொடிகளுக்குப் பிறகு, பெருமூச்சுவிட்டு கைப்பையிலிருந்து சிகரெட் பெட்டியையும்  நெருப்புக்குச்சியையும் எடுத்துக்கொண்டு எழுந்து வெளியேவந்து வழிவிட்டாள். நான் முன்னால் நடந்தேன். பின்கழுத்தில் அவள் பார்வை குறுகுறுத்து.

   பெட்டியோடு இணைந்திருந்த புகையறைக்குள் நுழைந்தேன். ஒதுங்கி அவளுக்கு வழிவிட்டேன்.  நுழைந்து கதவை அடைத்தாள். “மன்னித்துவிடு. உன்னைக் காயப்படுத்தும் நோக்கமில்லை. தோன்றியது, சொன்னேன்” என்றாள்.

   இலகுவானேன். சிகரெட்டைப் பற்றவைத்து அவளிடம் நீட்டினேன். பழைய உதட்டோரப் புன்னகையுடன் அதை வாங்கி தன் சிகரெட்டைப் பற்றவைத்து என்னிடம் தந்தாள். நான் கொடுத்த சிகரெட்டை வாயில் பொருத்திக்கொண்டாள்.

   “பிணங்கள் எரியும் ஊர் ஒன்று சொன்னாயே. காஜி. அதுவும் இப்படித்தானா? படித்ததில்லையே’’

   “இல்லை. இப்படியில்லை. அது மதம் சார்ந்த ஒரு நம்பிக்கை. அங்கே இறந்தால், இறந்தவர்களை எரித்தால், கடவுளை அடைவதாக ஒரு நம்பிக்கை.”

   “அதற்காக எரிப்பார்களா... உயிரோடா?” அவள் கண்களில் பதற்றத்துடன் கூடிய ஆச்சர்யம்.

   “அய்யோ அப்படி இல்லை. இறந்தவர்களை; பிணங்களை. சிலர் வயதான காலத்தில் இறப்பதற்காக அங்கே போய்த் தங்கிக் காத்திருப்பார்கள். இறந்தபிறகு, யாராவது எரித்தால் நல்லது என்று. சில சமயங்களில் பாதி எரிந்த  பிணங்களை அந்த ஆற்றில் இழுத்து விட்டுவிடுவார்கள். அதைப்பற்றி நிறைய காணொளி இணையத்தில் கிடைக்கும்.’’

   “ஆக எதுவுமே அரசியலோ கொலையோ இல்லை.”

   “இல்லை.”

   “நீ பார்த்த மற்ற சுடுகாடுகள்?”

   ``எதுவுமே கொலையல்ல. எல்லாமே மரணங்கள்.”

   “நீ உயிர்களுக்காக அலையவில்லை. வெறும் நெருப்பிற்காக அலைகிறாய். இல்லையா?”

   “ஆம்” காற்று நீக்கிய பலூன்போல உள்ளுக்குள் சுருங்கினேன். தலையைக் குனிந்துகொண்டேன். ஏனென்று தெரியாத ஒரு சங்கடம் அடிவயிற்றில் குமிழென எழுந்தது.

   ``அதுதான் கையிலேயே வைத்திருக்கிறாயே” மிகச் சாதாரணமாகக் கேட்டாள். திடுக்கிட்டேன். சிகரெட்டைச் சுண்டினேன். மிகச் சரியாக அதற்கான தொட்டியில் போய் விழுந்தது.

   “நெருப்பு எல்லாபுறமும் இருப்பதுதான். அதைத் தேடும் உனது வேட்கையைப்போல. ஆனால், மரணம் என்று நீ சொல்லிக்கொள்வதில் ஒரு  நெருப்பு கிடைக்கிறது. அதைப் பற்றிக்கொண்டிருக்கிறாய். உன் தனிமைப் பயத்தைப் போக்க, என்னுடன் இணைந்து கொண்டதுபோல.  இல்லையா...” சீண்டுவதற்கான வார்த்தைகளைப் பொறுக்கி அளிக்கிறாளா அல்லது அவள் சாதாரணமாகப் பேசுவதே சீண்டுகிறதா என்ற குழப்பம் வந்தது.

   “மன்னிக்கவும். நீதான் என்னுடன் இணைந்துகொண்டாய் என நினைத்தேன் ‘‘ முதலில் அவள்தான் வந்து பேசினாள் என்பதை சுட்டிக்காட்ட விரும்பினேன். “ஹா ஹா. நான் சிகரெட்டுக்காக வரும்போது நீ தனியே அமர்ந்திருந்ததைக் கவனித்தேன். பதற்றமாக இருந்தாய். நாங்கள் ஆறு வயதிலிருந்து தனியே நகரத்து ரயில்களில் குறுக்கும் நெடுக்குமாகப் போய் பழகியவர்கள். சந்திக்கும் முகத்தில் அவர்கள் தனியாக வந்தவரா, குடிபோதையில் இருக்கிறாரா, பதற்றத்தில் இருக்கிறாரா என்பதை எங்களால் உணர முடியும். நான் ஹிரோஷிமாவின் தெருக்களில் வளர்ந்தவள். சுற்றுலாப் பயணிகளின் முகக் குறிப்புகள் எனக்கு தலைப்பாடம்” என்றாள்.

   “நான் சுற்றுலாப் பயணியல்ல.”

   “வேலை செய்கிறாயா?”

   “ஆம். டோக்கியோவில். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக.”

   “ஆனால், ஹிரோஷிமா இதுதான் முதல்முறை.”

   “ஆம். ஆனால்...”

   “இதுவரை ஏன் வரவில்லை”

   “நேரம் வாய்க்கவில்லை” என் குரல் உள்ளடங்கியதுபோல் எனக்கே ஒலித்தது “என் வேலை அப்படி.”

   ``ஆனால், மற்ற இடங்களெல்லாம் சுற்றியிருக்கிறாய்.”

   “கொஞ்சம். பெரும்பாலும் டோக்கியோ. சில நேரங்களில் அருகிருக்கும் சிறப்புத்தீவுகள்.”

   “ஆனால், ஹிரோஷிமா இல்லை.”

   “ஆம். ஆனால்…”

   “நான் சொல்கிறேன். உனக்கு பயம். ஹிரோஷிமாமீது பயம். மரணத்தின்மீது பயம். இன்னும் சொல்லப்போனால் உன் ஊர்மீது பயம். அதற்கான சாக்கு ஜப்பான். ஹிரோஷிமா கொலைகள்மீது பயம். அதற்குச் சாக்கு வேலை. தனியாகப் போக முடிவெடுத்தாலும், இடம் நெருங்க நெருங்க அங்கே இறந்தவர்கள் நினைவுக்கு வந்து மீண்டும் பயம். அதற்குச் சாக்கு மரணம் வசீகரிக்கிறது. போய் அமர்ந்து குடிக்கப்போகிறாயா?”

   ஆழத்தைப் பிளந்து பிளந்து நுழைந்துகொண்டேயிருந்தாள். தொண்டைக் கமறியது. இருமினால் அல்லது அசைந்தால் அழப்போகிறேன் என்று முடிவெடுத்துவிடக்கூடும்.

   “ஊரில் என்ன பிரச்னை?ஏன் காசிக்குப் போனாய்?”

   திடுமென அந்தப் புள்ளியையும் தொட்டாள். “சும்மாதான். அந்த நதிக்கரையில் கோயில் இருக்கிறது. அங்கே பெளர்ணமி அழகாக இருக்குமென்றதால், பார்க்கப் போனேன்.”

   “பார்த்தாயா? பார்த்திருக்க மாட்டாயே?”

   “ஆம். நதியில் ஒரு பிணத்தைப் பார்த்தேன். ஒரு குழந்தை. திறந்திருந்த கண்கள். நீர்ப்பரப்பின் மீது, ஈயாடிக்கொண்டிருந்தது. அதற்குமேல் அந்த ஊரில்  இருக்க முடியவில்லை. திரும்பிவிட்டேன் வந்த வேகத்திலேயே.”

   “சரி. உண்மையைச் சொல். எதற்காக ஹிரோஷிமா போகிறாய்?”

   “தற்கொலை செய்துகொள்ள” என்றேன். ஏன் அவளிடம் இதைத் திறந்தேன் எனத் தயக்கம் எழுந்தது. ஒருவேளை அதுவும் தெரியும் என்று சொல்லிவிடுவாள் என்று பயந்தேன்.

   “ஏன்... ஏன் ஓடுகிறாய்?” என்றாள்.

   “ஒரு பெண்.”

   ``ஆண்கள்’’ முணுமுணுத்தாள். மறுபுறம் திரும்பிக்கொண்டாள். “விலக விரும்பியவளைத் திரும்பிப்பார்க்க வைக்கவேண்டும். குற்ற உணர்ச்சியைத் தூண்டவேண்டும். அவ்வளவுதானே? அதற்காகத்தானே இந்த நாடகம்?”

   “அப்படியில்லை. ஒருவேளை இது அவளுக்குத் தெரியாமலேகூட போகலாம் இல்லையா. இதில் என்ன குற்ற உணர்ச்சி? இது எனக்கு ஒரு தப்பித்தல்.”
   ``என் இனிய நண்பா...” அவள் வார்த்தையை இழுத்த வேகத்தில் கிண்டல் தொனியிருந்தது.

   “நீ எங்கும் இறக்கப்போவதில்லை. இறக்க விரும்புகிறவனுக்கு நாடு, ஊர் வித்தியாசங்கள் தேவையில்லை. நீ அதைச் சொல்லிச்சொல்லி ஊதிப்பெருக்கிப்பிறகு, காற்றுபோன பலூனைப்போல தென்றலில் அசைந்தாடி இறங்கப்போகிறாய். எதுவும் நிகழப்போவதில்லை. ஏன் உன்னையே ஏமாற்றிக்கொள்கிறாய்.”

   “நான்...வந்து…” எனக்கு வார்த்தைகள் குழறியது. அவள் சொல்வது உண்மைதான் என்று தோன்றியது.

   “அங்கே அருகருகே அருமையான ஜப்பானிய பாணிக் கோயில்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று உங்களூர் பெண் தெய்வம் சாயல் என்றும் இந்தியக் கலாசார பாணியென்றும் சொல்கிறார்கள். சுற்றிப்பார். சில புகைப்படங்கள் எடுத்துக்கொள். திரும்பிப்போ. வேலையைக் கவனி. எண்ணம்வரும்போதெல்லாம் ஒரு முறை இந்த நாளை நினைத்துக்கொள். புரிகிறதா” என்றாள். அவள் குரலில் உத்தரவிடும் தோரணைக்கு எந்தக் கணத்தில் மாறினாள் என்று ஆச்சர்யமாக இருந்தது. எந்தத் தருணத்தில் நான் அவளிடம் அடங்கியவனாக மாறினேன் என்றும்.

   ரயில் நிலையத்தில் நாங்கள் இறங்கியபோது அதிகக் கூட்டமில்லை. மெல்ல குதிகால்களை உயர்த்தி விரல்களில் நின்றபடி நெற்றியில் முத்தமிட்டாள். பெட்டியைத் தள்ளிக்கொண்டு விறுவிறுவென இறங்கிப்போனாள். சக்கரங்கள் பொருத்தப்பட்ட அந்தப் பெட்டி சிவப்பு நிற நாய்க்குட்டி அவள் பின்னால் துள்ளி ஓடுவது போல் தோன்றியது.

   இந்தச் சம்பவம் நடந்து ஒன்றரை வருடங்கள் இருக்கும். சமீபத்தில் ஜப்பானிய மொழி கற்பதற்காக சிறப்பு வகுப்பில் இணைந்திருக்கிறேன். எழுத்துகளைத் தாண்டி வார்த்தைகள் வரை வந்திருக்கிறேன். ஷினு என்ற வார்த்தைக்கு மரணம் என்று அர்த்தம் என்றபோதுதான் இந்த நிகழ்வும் மொத்தமாக நினைவுக்கு வந்தது. வீட்டிற்கு வந்து காமி என்பதற்கான அர்த்தங்களைத் தேடினேன். கமி,காமி, பல எழுத்து வகைகள். மாற்றி மாற்றித் தேடி இறுதியாகத் தேடியதை அடைந்தேன். காமி என்றால் கடவுள். ஷினு காமி என்றால் மரணத்தின் கடவுள்.
   http://www.vikatan.com
  • By நவீனன்
   ஒரு நண்பன் - சிறுகதை
     நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... அசோகமித்திரன், ஓவியங்கள்: அனில் கே.எஸ்.
    
     ஹரிகோபால் என்னை எச்சரித்தான்: ''இதோ பார், நீ ரொம்ப 'ரெட்’ ஆகுற. போலீஸ் பிடிச்சா என்ன ஆகும் தெரியாது!''
   அவன் சொன்னதில் தவறு கிடையாது. ஆனால் இவன் யார், எப்போது பார்த்தாலும் என்னை இதைச் செய்யாதே அதைச் செய்யாதே என்று சொல்வது? விவிலியத்தில் கெய்ன், கர்த்தரிடம் சொல்வான்: 'நான் என்ன, என் சகோதரனைக் காவல் காப்பவனா?’ இதை அவன் சகோதரன் ஏபல்லைக் கொன்ற பிறகு சொல்கிறான். என்ன நெஞ்சழுத்தம்!
   ஹரிகோபால், இந்த மாதிரி என் விஷயங்களில் தலையிடுவது இது முதல்முறை அல்ல. நான் இன்ஸ்பெக்டர் செண்பகராமனுடன் சினிமாவுக்குப் போனது, அவர் ஒரு மாடி வீட்டுக்குப் போனபோது நான் அவருடன் இருந்தது எல்லாம் எப்படியோ தெரிந்துகொண்டு, 'இதோ பார், நீ அந்தப் போலீஸ்காரனுடன் சுத்தினே, உனக்கும் சீக்கு வந்து அவன் மாதிரி ஆஸ்பத்திரில சாவே' என்று சொன்னான்.
   செண்பகராமன், என் மீது எவ்வளவு அன்பு கொண் டிருந்தார் என்று அவனுக்கு எப்படித் தெரியும்? எப்படிப் புரியவைப்பது? அவர் அந்த மாடி வீட்டுப் பெண்ணிடம் கொண் டிருந்த அன்பும், அவள் அவர்மீது கொண்டிருந்த அன்பும் அவனுக்கு என்ன தெரியும்? இப்போது ஹோமி ஃபிரம்ரோஸுடன் நான் ஒருமுறை பேசியதை எப்படியெல்லாம் விமர்சிக்கிறான்?
   எனக்கு முதல் நாளிலிருந்தே ஹோமி பற்றி வியப்பு. நான், இன்டர்மீடியேட் முதல் வருடம். அவன், இரண்டாம் வருடம். என் உயரம்தான் இருப்பான். முகத்தில் லட்சிய வேகம் பளிச்சென்று தெரியும். அவனை நான் எந்த அசட்டுத்தனமான சூழ்நிலையிலும் பார்க்கவில்லை. அவனாக என்னிடம் பேச வந்தபோது, ஹரிகோபால் குறுக்கிடுகிறான்!

   இந்தியா, சுதந்திரம் அடைந்துவிடும் என்று தெரிந்துவிட்டது. ஆனால், மிகவும் கொண்டாடிவிட முடியாது. நாடெல்லாம் கலவரம். சாவுகள் ஆயிரக்கணக்கில். கொள்ளை, தீயிடுதல், பெண்களை நிர்மூலமாக்குதல். எங்கள் ஊரில் ஓரளவுக்குத்தான். ஆனால், வட இந்தியாவில், பஞ்சாபில், வங்காளத்தில், டெல்லியில் சொல்லி முடியாது. இதில் காந்தி வேறு உண்ணாவிரதம் இருக்கிறார்.
   எங்கள் ஊரில் வெளியூர் செய்திப் பத்திரிகைகளுக்குத் தடை. ஆனால் வானொலியைத் தடைசெய்ய முடியாதே? எங்கள் நிஜாம் அரசின் ரேடியோவைக் கேட்கக் கூடாதா? யார் என்ன சொன்னாலும் நிஜாம் ரேடியோவில் 'ஃபர்மாயிஷ்’ ஒலிபரப்பு மிகவும் நன்றாக இருக்கும். நூர்ஜஹான், சுரைய்யா, ஜோரா பேகம் பாட்டுகளாக ஒலிபரப்பும். எனக்கு அந்தப் பாடகர்களைப் பிடிக்கும். எங்கள் வீட்டில் ரேடியோ கிடையாது. ஆனால், பக்கத்தில் காஸிம் வீட்டில் நான்கு தெருக்களுக்குக் கேட்கும்படி ரேடியோ வைப்பார்கள். எனக்கு ஒரு சந்தேகம். அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வதை யாரும் கேட்கக் கூடாது என்றுதான் ரேடியோவை உரக்கவைக்கிறார்களோ?
   சுதந்திரம் வந்துவிட்டது, எங்களுக்குத் தவிர. ஹோமி, இப்போது இன்னும் பரபரப்பானான். எவ்வளவு கூர்மையான புத்தி? எங்கள் கல்லூரியில் மிகச் சிறப்பாகப் பேசக்கூடிய நான்கைந்து பேர்களில் அவன்தான் முதல் இடம். எங்கள் கல்லூரியில் நல்ல பேராசிரியர்கள், ஆங்கிலத் துக்கும் ஐரோப்பிய வரலாற்றுப் பாடங்களுக்கும்தான். இந்தக் காரணத்தினால் நிறைய விவாதங்கள், நிழல் பாராளுமன்றம், நிழல்
   ஐ.நா. சபை என வருடத்தில் ஐந்தாறு பெரிய நிகழ்ச்சிகள் நடக்கும். நானும் பங்குபெறுவேன். என்றாலும், ஹோமி அளவுக்கு நான் பங்காற்ற முடியாது. அவன் எப்படி இவ்வளவு பொதுவுடைமை நூல்களைப் படித்தான் என்று நான் வியப்பேன். எனக்கு காந்தி, அகிம்சை, சத்தியாகிரகம் இதற்கு மேல் ஒன்றும் தெரியாது.
   அன்று ஹரிகோபால் கல்லூரிக்கு வரவில்லை. நான் ஹோமியிடம், ''நீ படிக்கும் புத்தகங்களில் ஏதாவது எனக்குப் படிக்கக் கொடுப்பாயா? இரண்டே நாட்களில் படித்துவிட்டுத் தருகிறேன்'' என்றேன்.
   'உனக்குப் புரியாதே...' என்றான்.
   'நான் படிப்பேன்' என்றேன்.
   அவன் புன்முறுவல் செய்தான். அவனுக்குக் களையான முகம். அதில், அன்றுதான் முதல் முறை அவன் சிரித்து நான் பார்த்தேன். அவன் தணிந்த குரலில், 'அவற்றை இங்கு கொண்டுவர முடியாது' என்றான்.
   என் முகம் வாடிவிட்டது. 'நீ இதற்கெல்லாம் அழுதுவிடுகிறாயே... இன்னும் எவ்வளவு போராட்டங்களைச் சந்திக்க வேண்டிவரும், தெரியுமா?' என்று கேட்டான்.
   நாங்கள் எங்கள் வகுப்புகளுக்குப் போய்விட்டோம்.
   மறுநாள் மாலை பஸ் ஸ்டாப்பில் அவன் என்னைத் தனியாக அழைத்து, 'என் வீட்டுக்கு வருகிறாயா?' என்று கேட்டான்.
   'ராணி கஞ்ச்தானே?'
   'உனக்கு எப்படித் தெரியும்?'
   'எனக்குத் தெரியும்.'
   'நாளை காலை வருகிறாயா? இது ரொம்ப ரகசியம்.'
   'நான் யாருக்கும் தெரியாமல் படிக்கிறேன்.'
   இதைச் சொல்லித் திரும்பிப் பார்த்தேன். ஹரிகோபால் எங்களையே கவனித்துக் கொண்டிருந்தான்.
   ஹோமி ஃபிரம்ரோஸ் வீட்டுக்கு நேர் வழி, ஆக்ஸ்போர்டு தெரு வழியாகச் சென்று ஜேம்ஸ் தெருவில் திரும்பி நேராக ராணி கஞ்ச் அடைவது. நான் அன்று செகண்ட் பஜார் வழியாகச் சென்றேன். அது மிகவும் குறுகலான கடைத் தெரு. அது செகண்ட் பஜார் என்றால், எது முதல் பஜார்? தெரியாது. எனக்கு மட்டும் இல்லை, நான் விசாரித்த யாருக்குமே தெரியவில்லை.
   அது ஒரு பழைய மாடிக் கட்டடம். எப்போதோ பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிச் சுவருக்கு நீல நிறம் அடித்திருந்தார்கள். அது மிகவும் மங்கிப்போயிருந்தது. கீழே ஏதோ மோட்டார் உதிரிப் பாகங்கள் கடை. அதை ஒன்பது, ஒன்பதரை மணிக்குத்தான் திறப்பார்கள். கட்டடத்தின் பக்கத்தில் ஒரு சிறு சந்து. அதன் வழியாகப் போனால், ஒரு சின்னக் கதவு. அங்கு மாடிப்படிகள் இருந்தன. காலையிலும் அங்கு இருட்டு. நான் தட்டுத்தடுமாறி மாடியை அடைந்தேன். கதவு மூடியிருந்தது. நான் மூன்று, நான்கு முறை ஹோமி பெயரைச் சொல்லிக் கூப்பிட்டேன். வயதான அம்மாள் கதவைத் திறந்தாள்.
   'ஹோமி ஃபிரம்ரோஸ் இருக்கிறானா?'
   ''நீ யார்?'
   'ஹோமியோடு நிஜாம் காலேஜில் படிப்பவன்.'
   'நீ சின்னப் பையனாக இருக்கிறாயே?'
   'அவனுக்கு ஒரு வருஷம் ஜூனியர்.'
   அந்த அம்மாள் உள்ளே போனாள். நான் கதவருகே நின்றுகொண்டிருந்தேன்.
   ஹோமி வந்தான். அவன் வெள்ளைச் சட்டை பைஜாமா அணிந்திருந்தான். என்னைப் பார்த்துவிட்டு உள்ளே போனான். தடிப் புத்தகம் ஒன்றைக் கொண்டுவந்தான்.
   'பை ஏதாவது கொண்டுவந்திருக்கிறாயா?' என்று கேட்டான். அவன் மீண்டும் உள்ளே சென்று தடியானத் துணிப்பை ஒன்றைக் கொண்டுவந்தான். புத்தகத்தைப் பையில் போட்டு, தணிந்த குரலில், 'இதை யாரிடமும் காட்டாதே. உன் வீட்டில் யார் யார் இருக்கிறார்கள்?' என்றான்
   'எனக்கு இரண்டு அக்கா. அப்புறம் தம்பி தங்கை...'
   'ஒரு அக்கா பி.ஏ. மேத்ஸ்., சரியா?'
   'ஆமாம். உனக்கு எப்படித் தெரியும்?'
   'இதை யாரிடமும் காட்டாதே. திரும்பக் கொண்டுவரும்போதும் பையில் போட்டுக் கொண்டுவா.'
   'உன் வீட்டில் யார் யார்?'
   'அம்மா, அப்பா. அண்ணன் பம்பாயில் இருக்கிறான். அவன் எங்களோடு சண்டை.'
   'அம்மா, நல்லவங்களாக இருக்கிறாளே?'
   'அவன் 'வீட்டை விற்று பணம் கொடு’ என்கிறான். என் அப்பாவுக்கு பராலிசிஸ். இந்த வீடு மாதிரி எங்களுக்கு வேறே கிடைக்காது. சரி, நீ போ. புத்தகம் ஜாக்கிரதை. யாரிடமும் காட்டாதே.'
   நான் அன்று கல்லூரிக்குப் போகவில்லை. ஹோமி கொடுத்த புத்தகத்தைப் படிக்க முயற்சிசெய்தேன். அவன்   சொன்னது சரி. அதன் நடை, சொற்கள் புரியவில்லை. சியாங் கே ஷேக்கைத் திட்டுவது தெரிந்தது.
   நான் அடுத்த நாள் கல்லூரி போனபோது ஹரிகோபால் என்னை வெற்றிக் களிப்போடு பார்த்தான். 'நான் சொன்னேன்ல, உன் சிவப்பு நண்பனை போலீஸ் இழுத்துண்டுப் போயிட்டாங்க.'
   'ஐயய்யோ!'
   'இப்போ ஐயோ சொல்லி என்ன? அனந்தகிருஷ்ண ரெட்டி தெரியும்ல, அதான் மேட்ச்சல் ஜமீன்தார். அவன் மர்டர்லே இவனும் இருக்கான்.'
   'இவனுக்கு அவனைத் தெரியவே தெரியாதே!'
   'ஏன் தெரியணும்? இவன்தான் எல்லா ஜமீன்தாரையும் கொல்லணும்னு சொல்றானே...'
   எனக்கு அழுகை அழுகையாக வந்தது. ஹோமி ஃபிரம்ரோஸ் கொலை செய்கிறவன் இல்லை. ஆனால், இதை யாரிடம் சொல்வது?
   நான் ஹோமி வீட்டுக்குப் போனேன். அவன் அம்மா என்னைக் கட்டிக்கொண்டு அழுதாள். அப்புறம் ரகசியமாக 'நீ இங்கே வராதே. உன்னையும் போலீஸ் பிடிச்சுண்டுப் போயிடும்' என்றாள்.
   நான் நேராக ஜேம்ஸ் ஸ்ட்ரீட் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனேன். செண்பகராமன் உயிரோடு இருந்தபோது அங்கு நிறையப் போயிருக்கிறேன். அவர் கீழ் வேலைசெய்த ஒரு சப்-இன்ஸ்பெக்டரைப் பார்த்தேன்.
   'ஏமி பாபு?' என்று கேட்டார்.
   'என் நண்பனை போலீஸ் கொண்டுபோய்விட்டார்கள்.'
   'பேரு ஏமி?'
   நான் சொன்னேன்.
   'இங்கே யாரும் அப்படி இல்லையே? அது ஹைடராபாட் போலீஸாக இருக்கும்.'
   'உங்களுக்குத் தெரிந்தவங்க அங்கே இருக்காங்களா?'
   'ஹைடராபாட் போலீஸ், நாங்க இருக்கவே கூடாதுங்கிறாங்க. நான் சொன்னா கேட்பாங்களா?'
   நான் கல்லூரிக்குப் போனேன். ஆங்கில வகுப்பில் என் பக்கத்தில் உட்கார்ந்து 'பீம்! பீம்!’ என்று சத்தம் எழுப்பி என்னை வம்பில் மாட்டிவிடும் மஸ¨த்தின் அப்பா, ஒரு பெரிய அதிகாரி. நான் ஒருமுறை போலீஸ் தடியடியில் மாட்டிக்கொண்டபோது அந்த மனிதன்தான் தடியடி ஆர்டர் கொடுத்தார்.
   நான் மஸூத்திடம் 'ஹோமி ஃபிரம்ரோஸை போலீஸ் கொண்டுபோயிடுத்தாம்' என்றேன்.
   'யார்... அந்த கம்யூனிஸ்ட்தானே?'
   'அது தெரியாது. அவன் என் தோஸ்த்.'
   'நான் உன் தோஸ்த் இல்லையா?'
   'நீயும் தோஸ்த்தான். அதனால்தான் உன் உதவியைக் கேட்கிறேன்.'
   மஸ¨த் யோசித்தான். 'உனக்கு மஷீராபாத் ஜெயில் தெரியுமா?'
   'தெரியும்.'
   'உனக்கு எப்படித் தெரியும்?'
   'அதன் பக்கத்தில் இருக்கும் ஒரு தர்ஜிதான் எனக்கு பேன்ட் தைப்பார். அவர் என் அப்பாவுக்கு ரொம்பத் தெரியும்.'
   மஸ¨த், அவன் நோட்டுப்புத்தகத்திலிருந்து ஒரு சிறு துண்டு கிழித்தான். அதில் உருதுவில் இரு சொற்கள் எழுதினான். 'இதைக் கொண்டுபோய்க் காண்பி. முடியுமானால் ஏற்பாடு செய்வார்கள்.'
   நான் கல்லூரியிலிருந்து நேராக மஷீராபாத் போனேன். அது ஒரு கோட்டை. மிகப் பெரிய கதவில் ஒரு சிறு கதவு. அதுவே பெரிதாக இருக்கும். அங்கு இருந்த காவலாளியிடம் அந்தச் சிறு துண்டுக் காகிதத்தைக் கொடுத்தேன்.
   அரை மணி கழித்து நீல நிற உடை அணிந்த ஒரு போலீஸ்காரன் என்னை உள்ளே அழைத்துப் போனான். அது மிகப் பெரிய சிறை. இருட்டில் ஓர் அறையில் ஹோமி கிடந்தான். நான் 'ஹோமி' என்று மெதுவாகக் கூப்பிட்டேன். அவன் திடுக்கிட்டுத் திரும்பினான்.
   'போ போ! இங்கே வராதே!' என்றான். அவனால் நிற்க முடியவில்லை. முகம், உடல் எல்லாம் காயம்.
   'போ! வராதே இங்கே!' என்று மீண்டும் கத்தினான். நான் அழுதுகொண்டே திரும்பினேன். அவன் மெதுவாக 'உஸ்' என்றான். நான் திரும்பினேன்.
   அவன் மிகவும் மெதுவாக, 'நான் கொடுத்ததை எங்கேயாவது புதைத்துவை' என்றான்.
   நான் வீடு திரும்பி வீட்டுப் பப்பாளி மரத்தடியில் ஒரு பெரிய குழி தோண்டினேன்.
   'என்னடா?' என்று அம்மா கேட்டாள்.
   'ஒரு செடிக்காக...' என்றேன்.
   அன்று இரவு ஹோமி கொடுத்த புத்தகத்தைப் புதைத்துவைத்தேன்.
   ஹோமி, திரும்பி வரவே இல்லை. போலீஸ்காரர்கள் 'அவன் தப்பித்து ஓடிவிட்டான்’ என்றார்கள். அது இல்லை என்று எனக்குத் தெரியும். அவன் இரு கால்களையும் உடைத்துவிட்டிருந்தார்கள். அங்கே மஷீராபாத்திலேயே கொன்று புதைத்திருப்பார்கள். திடீரென்று எங்கள் அப்பா இறந்துவிட்டார். இரு மாதங்களில் நாங்கள் சென்னை வந்துவிட்டோம்.
   இது எல்லாம் நடந்து 65 ஆண்டுகள் சென்றுவிட்டன. ஹோமி ஃபிரம்ரோஸ் மஷீராபாத்தில் மண்ணோடு மண்ணாக மக்கிப்போயிருப்பான். அவன் கொடுத்த புத்தகம், பப்பாளி மரத்தடியில் மக்கிப்போயிருக்கும். நான் மக்கிப்போகக் காத்திருக்கிறேன்!
   http://www.vikatan.com