Jump to content

பச்சைக் கனவு


Recommended Posts

பச்சைக் கனவு - லா.ச.ராமாமிர்தம்

முதுகு பச்சையாய்க் கன்றிப் போகக் காயும் வெய்யிலில் முற்றத்தில் உட்கார்ந்துகொண்டு நேற்றிரவு கண்ட கனவை மறுபடியும் நினைவில் எழுப்ப முயன்றான். கனவற்ற தூக்கமே என்றுமில்லை. எனினும் விடிந்ததும் அக்கனவுகள் மறந்துவிடும். ஆயினும் நேற்றிரவு கண்ட கனவு அப்படியல்ல. பச்சைக் கனவு.
LAASARAAஉடல் மேல் உரோமம் அடர்ந்தது போன்று, பசும் புற்றரை போர்த்து நின்ற நான்கு மண் குன்றுகள். அவை நடுவில் தாமரை இலைகளும் கொடிகளும் நெருங்கிப் படர்ந்த ஒரு குளம், சில்லிட்ட தண்ணீரில் காலை நனைத்துக் கொண்டு அண்ணாந்து படுத்திருந்தான். கைக்கெட்டிய தூரத்தில் பச்சைக் கத்தாழையும் அதன் பக்கத்தில் சப்பாத்திப் புதரும், மேல், ஒரு பச்சை வண்டு ரீங்காரித்துக் கொண்டே வந்து மோதிற்று... “ராமா ராமா ராமா, இன்னிக்கென்ன உங்களுக்கு? இப்போத்தான் கூடத்தில் உட்கார வைத்துவிட்டுப் போனேன். மறுபடியும் வெய்யிலிலே குந்திக் கொண்டிருக்கிறீர்களே! உங்களுக்கென்ன நிலாக்காயறதா?”
”நிலா” என்றதும் மற்றும் ஒரு நினைவு எழுந்தது. நடு நிலவில் வாசலில் கயிற்றுக் கட்டிலில் காத்துக்கொண்டு படுத்திருக்கையில், காத்திருந்த கைப்பிடி அவன் கைமேல் விழுவதும், தெருவின் திருப்பத்தில் நான்கு மண் குன்றுகளின் நடுவில் தேங்கிய குளத்திற்கு அழைத்துச் சென்ற எத்தனையோ முறைகளும், பாதத்தினடியில் தெருவின் பொடி மண் பதிவதும், பச்சையாடை காற்றில் ‘படபட’ என்று அடித்துக்கொண்டு அவன்மேல் மோதுவதும் இப்பொழுது போலிருந்தது.
“நிலவு பச்சைதானே?”
“பச்சையா? யார் சொன்னா வெண்ணிலாயில்லையோ?”
“முழு வெள்ளையா?”
“சுண்ணாம்பு வெள்ளையென்று சொல்ல முடியுமா? ஒரு தினுசான வெண்பச்சை...”
“ஆ, அப்படிச் சொல்லு...”
அது வேண்டுமானால் வெண்பச்சையாகயிருக்கட்டும். ஆனால் அவன் அதை முழுப் பச்சையாய்ப் பாவிக்கச் சற்று இடங்கொடுத்தாலும் போதும்.
கசக்கிப் பிழிந்த இலைச்சாறு போல், நிலவு குன்றுகளின் மீதும், புற்றரை மீதும், தாமரை வாவியின் மேலும் பச்சையோடு பச்சையாய் வழிவதாக நினைத்துக்கொள்வதில் ஒரு திருப்தி, அந்த நினைவில் சற்று நேரம் திளைத்துக் கொண்டிருந்துவிட்டு,
“வெய்யில் எப்படி இருக்கிறது?” என்று கேட்டான்.
“ஐயையோ, இன்னிக்கு ஏன் ஒரு தினுசாயிருக்கேள்? வெய்யில் வெளுப்பாய்த்தானிருக்கும். உள்ளே வாங்க...”
”முழு வெளுப்பா?”
“முழு வெளுப்பு....”
ஆம், அவனுக்கு நினைவு தெரிந்தவரைகூட வெய்யில் வெளுப்புத்தான். அத்துடன் தகிப்பும்கூட. வெய்யிலும் பச்சையாயிருந்தால்!
சற்று நேரம் பொறுத்து அவன் எண்ணத்தை எதிரொலிப்பது போன்று, அவன் மனைவி கண்ணைப் பலமாய்ச் சிமிட்டிக் கொண்டு,
“வெய்யில் பச்சையாயிருக்கும் வேளைகூட உண்டு....” என்றாள்.
அவனுக்கு உள்ளூர அவாத் துடித்தது. வெய்யில் பச்சையாயிருப்பதில் தன் தலையையே நம்பியிருப்பது போல்.
அவன் மனைவி கண்ணைச் சிமிட்டும் சிமிட்டலில், ரப்பைகள் எகிறிவிடும்போல் துடித்தன.
“பச்சையான பச்சை! இலைப்பச்சை! நேற்று சாயங்காலந்தான் உங்கள் மச்சினன், பதினாலு ரூபாய் போட்டு வாங்கி வந்தான்; இதைப் போட்டுண்டு பாருங்கள்,”
“என்ன இது?”
“போட்டுக்கொள்ளுங்களேன் சொல்றேன் - வெய்யிலுக்கு குளுகுளுவென்று பச்சைக் கண்ணாடி. எல்லாம் பச்சையாய்த் தெரியறதோ?”
அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை. எப்பொழுதும் போல் அந்தகாரமாய்த்தானிருந்தது.
“அட! உங்களுக்கு ஜோராயிருக்கே!”
“என்ன?”
”மூக்குக் கண்ணாடி போட்டுக் கொண்டால் உங்களைக் குருடு என்று யார் சொல்லுவா?”
அவ்வார்த்தை சுருக்கென்று தைத்தது. உள்லதைச் சொன்னாலும், எவ்வளவு தூரம் தன்னைக் கேலி பண்ணுகிறாள் என்று புரியவில்லை. கண்ணாடியைக் கழற்றி வீசியெறிந்தான். அது கட்டாந்தரையில் பட்டுத் தெறித்து உடையும் சத்தம் இனிமையாய் ஒலித்தது.
“ஐயோ பதினாலு ரூபாய்! என்னத்தைச் சொல்லி விட்டேன் இவ்வளவு ஆத்திரம் பொங்க! இந்த வயசிலே உங்களுக்கு இத்தனை ஆங்காரம் வேண்டாம்!”
எந்த வயதிலே? வயதுண்டோ தனக்கு? அவள் நெறித்த சொடுக்குகள் விரல்களினின்று சொடசொடவென்று உதிர்ந்தன. “தன்னாலே ஒண்ணும் ஆகாவிட்டாலும் கோபம் மாத்திரம் மூக்கைப் பொத்துக்கொண்டு வருகிறது! காலையிலே கண்ணைத் திறந்தால் ராத்திரி கண் மூடறவரை, சகலத்துக்கும் கை பிடித்தே கொண்டு போய் விட வேண்டியிருக்கிறது. இத்தனை சிசுருஷையின் நடுவில் இத்தனையும் போறாது போல் வேளையில் பாதி நேரம் ஊமை, வாயைத் திறந்தால் நிலா பச்சையாயிருக்கா? வெயில் பச்சையாயிருக்கான்னு தத்துப்பித்தென்று கைக்குழந்தை மாதிரி கேள்வி...”
அவள் பழிப்பதெல்லாம் அவன் காதில் விழுந்ததா என்று சந்தேகம். அவன் நினைவு சட்டென்று இன்னொரு எண்ணத்தைத் தொட்டு அதில் முனைந்துவிட்டது.
ஊமையென்றதும் நினைவு, நேற்றிரவு கண்ட கனவில் ஊசிபோல் மறுபடியும் ஏறியது. மேற்கூறியவாறு, அவனாய்க் கற்பித்துக் கொண்ட பட்டை வீறும் பச்சை வெய்யிலில் பசும்புற்றரையில் நீட்டிய கால் தாமரைக் குளத்தில் சில் தண்ணீரில் நனைய அண்ணாந்து படுத்திருந்தான். அவன் பக்கத்தில் அவன் உறுப்பு உறுப்பாய்த் தொட்டு உள்ளந்திரிபு அற உணர்ந்தோர் உருவம் படுத்திருந்தது. கட்டவிழ்ந்து சரிந்த பசுங் கூந்தலிலிருந்து முகத்தில் அலைமோதும் பிரி இது.
அவனையே அள்ளி உண்ணும், பசுமை நிறைந்து, தாமரைக் குளம் போன்ற கண்கள் இவை.
நீங்காத மௌனம் நிறைந்து அம்மௌனத்திலேயே முழுகிப்போன வாய் இது.
அகன்ற மனதில் கிளர்ந்த ஆசை, வெளியும் வர இயலாது, உள்ளும் அடங்க இயலாது, முண்டிய மார்பு இது. பச்சை மேலாக்கினடியில் பட்டுப்போன்ற வயிறு இது.
அவர்களிருவரின் ஆயுளின் இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே மூச்சில் அளந்துவிட முயலுவது போன்ற ஆலிங்கனத்தின் அவஸ்தை இது...
“பச்சைக்குழந்தை? பச்சைக்குழந்தை!!...”
அவன் மனைவி அவன் கையைக் கரகரவென்று பிடித்திழுத்து, கூடத்தின் ஊஞ்சலில் உட்கார வைத்துவிட்டு உள்ளே சென்றாள். அப்படியே அவள் மெதுவாய் படுக்கையாய்ச் சாய்த்து, அவனை உட்கார வைத்து அதிர்ச்சியில் ஆடும் ஊஞ்சலுடன் மனதையும் அசையவிட்டுக்கொண்டு, பச்சையைப் பற்றி எடுத்த எண்ணத்தைத் தொடர முயன்றான்.
அவன் கண்ணிருக்கையில் கடைசியாய்க் கண்ட நிறம் பச்சை. அக்காரணம் பற்றிய அந்த வர்ணம் அவனுக்குப் பிடித்த வர்ணமாய், மனதைக் கெட்டியாய்ப் பற்றிக் கொண்டு விட்டது. அக்குன்றுகளிடையில் குளக்கரையில் அவன் பச்சையைப் பெற்ற பார்வையிழந்ததை நினைத்தான். அப்பொழுது என்ன வயதிருக்கும்? பத்திருக்குமா? அவ்வளவுதான்.
மல்லாந்து படுத்தவண்ணம் சூரியனைச் சற்றுநேரம் நோக்கிக் கொண்டிருந்துவிட்டு பிறகு சுற்றும் முற்றும் இருப்பதைப் பச்சையாய்க் காணக் காண அவனுக்கு வியப்பாயிருக்கும். சூரிய ஜோதியில் கண்ணைத் திறந்து காண்பித்துவிட்டு புத்தகத்தை எடுத்துப் பிரித்தால் எழுத்துக்கள் பச்சைப் பச்சையாய் குதிக்கும். பொடிமணல் பச்சைப் பளீரடிக்கும். அது அப்பொழுது அவனுக்கு ஆனந்தமாயிருந்தது. யாருமறியா ஒரு புது விளையாட்டைத் தான் கண்டுபிடித்ததாய் நினைத்துக்கொண்டு விட்டான். அதைத் தானே தன்னந்தனியாய் அனுபவித்தான். அப்பொழுதுதான் ஒரு மாதத்திற்கு முன் தாயை இழந்த துக்கத்தைச் சற்றேனும் மறக்க இவ்விளையாட்டு அவனுக்கு ஆறுதலாயிருந்தது. ஆயினும் அவன் கண்டு பிடித்த மூன்றாம் நாளே, மாவிளையாட்டு தானே முடிவடைந்தது. சூர்ய கோளம் தாம்பாளம் போல் சுழன்று கொண்டே விட்டு விட்டு மின்னுவதை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருக்கையில், கண் திடீரென்று இருண்டு பார்வை இழந்தது. சப்பாத்தியிலும் கத்தாழையிலும் விழுந்து எழுந்து தட்டுத்தடுமாறி உடலெல்லாம் முள்ளாய் அழுது கொண்டே வீடு வந்து சேர்ந்தது. இன்னமும் நினைவிருக்கிறது.
தலைவாழை இலையில் விளக்கெண்ணெயைத் தடவி அவனை அதில் வளர விட்டிருக்கையில், அப்பா மண்டையிலடித்துக் கொண்டே கூடத்தில் முன்னும்பின்னுமாக உலாவுவது ஞாபகமிருக்கிறது, “மார்க்கடம் - மார்க்கடம்! உன்னைப் பெற்றாளே உன் தாயும்!”
என்னென்ன வைத்தியமோ பண்ணியும் பார்வை மீளவில்லை. ஏற்கனவே கண்ணில் கோளாறு இருந்திருக்கிறது. இனியொன்றும் இயலாது என்று பட்டணத்து வைத்தியனும் கைவிட்டுவிட்டான். செயலற்ற விழிகளைவெடுத்தவண்ணம் அவன் கூடத்துத் தூணில் சாய்ந்து கொண்டிருக்கையில், அப்பா மண்டையில் மறுபடியும் திரும்பத் திரும்ப அடித்துக் கொண்டார்.
“நன்னா வந்து சேர்ந்ததையா நமக்கென்று; என்ன பண்ணினாய்?” “சூரியனைப் பார்த்துக் கொண்டிருந்தேன்!” நாக்கைப் பழிக்கிறார் - “வரா ஆத்திரத்தில் உன்னை அப்படியே தூக்கிச் சுவரில் அறைந்துவிடலாம் போலிருக்கிறது. உனக்கென்று எல்லாம் தேடி வருகிறதே! சூரியனைப் பார்க்கிற விளையாட்டு யார் சொல்லிக் கொடுத்தா, நம்ம சம்பந்திக்காரன்தானே! பெண்ணைத் தள்ளி வைச்சோம் என்கிற வயிற்றெரிச்சலில் என்ன வேணுமானாலும் செய்வான் அவன், மாப்பிள்ளையும் சரியான பித்துக்கொள்ளி - சொல்லு - நிஜத்தைச் சொல்லு - குட்டிச்சுவரே! என்ன பாவத்தைப் பண்ணினேனோ!-”
பாபம் பச்சையாயிருக்காதே?
பார்வையிழந்து முதல் பச்சையுடன் புழுங்கிப் புழுங்கி அவனுக்கே சொந்தமான தனி அனுபவத்தில் அவன் அவ்வர்ணத்திற்கே ஒரு தனி உயிர், உரு, குணம், உயர்வு எல்லாம் நிர்மானித்துக் கொண்டு விட்டான்.
அழகுப் பச்சையழகு!
எல்லோருக்கும் தெளியச் சொல்ல வரவில்லை. சொன்னாலும் யாரும் சிரிப்பார்கள், இப்பொழுது இவள் சிரிப்பது போல்.
அவள் அடுப்பில் கொள்ளிக் கட்டையைச் சரியாய்த் தள்ளிவிட்டுக் கொண்டிருந்தாள். கட்டையினின்றும் சிதறும் தணல் போல் அவள் மனம் கொதித்துக்கொண்டிருந்தது. ஊஞ்சலில் அவள் கணவன் அனாதைபோல் ஒடுங்கிப் படுத்திருக்கும் நிலைமை கண்டு ஒரு பக்கம் பரிதவித்தது. வாய் மூடியவண்ணம் அவரைச் சூழ்ந்த அந்தகாரத்தில் உறைந்து போய் விடுகிறார். தூங்குகிறாரா அல்லது யோசனை பண்ணிக் கொண்டிருக்கிறாரா? அப்படி என்ன ஒரு யோசனையோ?
ஏதோ, ஒரு சமயமில்லாவிட்டால் ஒரு சமயம் எரிச்சல் வந்தாலும் அவரால் ஒரு சமயமும் ஒரு விதமான துன்பமுமில்லை. கண் அவிந்தது முதல் ஒரு விதத்தில் வளர்ச்சி நின்று விட்டது போலும். எல்லோரைப் போல, கண்ணால் உலகைக் கண்டு அதனுடன் மூப்படையும் அநுபவம் அவருக்கில்லை. அதனாலேயே அவர் கேள்விகளும் செயல்களும் சில சமயங்களில், சமயமற்று சலிப்பை விளைவித்தன.
தாழ்வாரத்திலிட்ட பிரம்பு நாற்காலியில் சாய்ந்து கொண்டு குனிந்த தலை நிமிராது யோகத்தில் ஆழ்ந்தது போல் உட்கார்ந்திருந்தார். என்ன இருக்கிறது இவ்வளவு யோசனை பண்ண? கண்ணிருந்தாலே பொழுது போக மாட்டேன்கிறது. இவருக்குப் பார்வையில்லாமல், பேச்சுமில்லாமல் எப்படிப் பொழுது போகிறது?
மாலை முதிர்ந்து இருள், தோட்டத்தில் வாழை மரங்களிலும் வைக்கோற்போரிலும் கிணற்றடியிலும்  வழிய ஆரம்பித்தது. வானம் அப்பொழுதுதான் தூக்கம் கலைந்ததுபோல், அதன் பல்லாயிரம் கண்கள் ஒவ்வொன்றாயும், ஒருங்கொருங்காயும் விழித்துச் சிமிட்ட ஆரம்பித்தன.
“கலத்தில் சாதம் போட்டிருக்கிறேன்; சாப்பிட வாங்கோ.”
”ஊஹூம்.”
”சாப்பிடாதபடி என்ன நடந்துவிட்டது? கண்ணாடி போனால் பீடை தொலைஞ்சது - நீங்க வாங்கோ.”
“இல்லை எனக்கு வேண்டியில்லை. வற்புறுத்தாதே; நான் மாடிக்குப் போகிறேன்.”
அவன் படிப்படியாய்த் தொட்டு மாடியேறுவதைப் பார்த்துகொண்டிருந்தாள். ஏதேது, இந்தத் தடவை கோபம் மீறிவிட்டாப்போல் இருக்கு! சமாதானப்படுத்த வேண்டியதுதான்.
மாடிக்குப் போய் ஜன்னலண்டை போட்டிருக்கும் குறிச்சியில் சாய்ந்தான். தென்றல் நெற்றி வியர்வை ஒற்றியது.
“கீச் - கீச் -”
இரவில் கண்ணிழந்து அவனைப்போலவே தன்னந்தனியான பறவை இடந்தேடியலைகிறது.
“கீச் - கீச் - கீச்”
கிளி, ‘பச்சைக்’கிளி.
அவள்  மாடியேறி வரும் சத்தம் கேட்டது.
எதிரே மேஜை மீது டம்ளரை வைத்தாள்.
என்னது? பால். பசும்பால், பச்சைப்பால், அவன் குறிச்சி கையைப் பிடித்தவாறு மண்டியிட்டாற்போல் அவன் காலடியில் உட்கார்ந்தாள். அவள் விரல்கள் அவன் கைமேல் பட்டன.
மெதுவாய், “கோபமா?”
“இல்லையே!” நிஜமாகவே இல்லைதான். நேற்றிரவு கண்ட கனவு எழுப்பிய நினைவுகளுக்கு அவள் என்ன செய்வாள்?
“பின்னே ஏன் ஒரு மாதிரியிருக்கேள்?”
”நான் நேற்றிரவு ஒரு கனாக்கண்டேன். உன் மேல் கோபமில்லையென்றால் நம்பு, தப்பு என் மேல்.”
”இல்லை என் மேல்தான். உங்களுக்கே தெரியும்.”
“இல்லை, ஒருத்தருக்கொருத்தர் இப்படிப் பரிமாறிக் கொள்வதற்காக நான் சொல்லவில்லை. என்னைச் சமாளிப்பது கொஞ்சம் கஷ்டம்தான். நீயும் உன் தம்பியும் இப்படிக் கொஞ்சம் இடமாற்றலாய் எங்கேயாவது போய் இருந்துவிட்டு வாருங்களேன்.”
“அடேயப்பா, ரொம்ப ரொம்பக் கோவம் போல இருக்கு! எனக்குப் புகலிடம் ஏது? உங்களுக்கே தெரியும். நானும் தம்பியும் அனாதையென்று.”
“அந்த ஒரே காரணத்தால் உன்னை நான் கலியாணம் பண்ணிக்கொண்டது தப்புத்தானே! எனக்கு ஆதரவை முக்கியமாய் நினைத்து உன்னை மணந்தது உன்னை ஏமாற்றியது போல் தானே! உனக்குத் திக்கில்லாததை என் சௌகரியத்திற்காக உபயோகித்துக் கொண்டுவிட்டேன். ஆனால் நானும் திக்கில்லாதவன்தான், அதனால் என் காரியம் எனக்கே தெரியவில்லை.”
”அதெல்லாம் ஒண்ணுமில்லை,” என்றாள். குருடனைக் கலியாணம் பண்ணிக்கொள்ள திக்கென்றுதானிருந்தது. ஆயினும் அவளும் அவள் தம்பியும் மானமாய்க் காலம் தள்ளுவதே தவிப்பாயிருந்த சமயத்தில் தனக்கு இடம் அந்தஸ்து எல்லாம் கொடுத்துதவியதை மறக்க முடியுமா? எவ்வளவு நல்லவர்! கண்ணொன்றில்லை தவிர மற்றெதில் அவரிடம் குறை?
ஆயினும் அவள் மனதில் தோன்றியது நன்றியா அல்லது ஆசையா?
சே, என்ன சங்கடமான கேள்வியெல்லாம் கேட்கிறது இந்தக் குழந்தை!
கொஞ்ச நாழி ஜன்னலுக்கு வெளிப்பக்கமாய் முகத்தைத் திருப்பிக்கொண்டிருந்தாள்.
“உனக்கு ஒரு மூத்தாள் இருந்தாள் என்று உனக்குத் தெரியுமோ?”
அவளுக்குத் தூக்கிவாரிப்போட்டது. தனக்கு மூத்தாளிருக்கும்படி அவருக்கு அவ்வளவு வயதாகிவிடவில்லையே! இன்னமும் இருக்கிறாளா? அவரைப் பற்றி அவளுக்கென்ன தெரியும்?
“எங்கள் கலியாணம் கிராமாந்தரக் கலியாணம். அவள் பிறந்த வீடு அடுத்த தெருவுதான். எனக்குக் கண் போவதற்கு முன்னாலேயே கலியாணம் நடந்துவிட்டது. என் தகப்பனார் வைதீகம். சாரதா சட்டம் அமுலுக்கு வரு முன்னர் அதைச் சபித்துக்கொண்டு நடந்த அவசரக் கலியாணம். எனக்கு அவளை என் கண்ணிருக்கையிலேயே சரியாய்க் கண்ட நினைவில்லை. எல்லாவற்றையும் மறைத்த ஓமப்புகையும் வைதீகக் கூட்டமும்தான் ஞாபகமிருக்கிறது.
ஆனால் கலியாணமான பிறகுதான் குட்டு வெளியாயிற்று. பெண்ணுக்குப் பேச்சுக் கொச்சையாய்க்கூட வரவில்லை. படு ஊமை. அத்துடன் படு செவிடு. குண்டு போட்டாலும் காது கேட்காது. அவள் பண்ணின பாவம், ஏக பாப ஜன்மங்கள்!
அப்பாவுக்கு சம்பந்திமேல் குரோதம் பிறந்துவிட்டது. தன் அவசரத்துக்குத் தகுந்தாப்போல், தன்னைச் சம்பந்தி ஏமாற்றிவிட்டதாக எண்ணிக்கொண்டு விட்டார். சீர்வரிசையெல்லாம் அப்படியே திருப்பினார். பெண்ணோ, பெண் வீட்டாரோ தன் வாசல் படி மிதிக்கக்கூடாது என்று தீர்த்துச் சொல்லிவிட்டார். எங்கப்பா முரடு, கிராமத்துக்குப் பெரிய மனுஷன் என்றும் பெயர். அப்புறம் கேட்பானேன்!
எனக்கென்ன அப்போ தெரியும்? அப்பா எனக்கு மறுமணம் செய்வதாக்கூட யோசித்துவிட்டார். ஆனால் அதற்குள் நான் என் கண்ணை அவித்துக்கொண்டது அவர் மூக்கை அறுத்தாற்போலாயிற்று.
என் மாமனாரும் சந்தோஷந்தானோ என்னவோ, “வேணும் அந்தப் பயலுக்கு, குருட்டு மாப்பிள்ளைக்கு ஊமைப் பெண் குறைந்து போயிற்றா?” என்று பதட்டமாய்ப் பேசிவிட்டார். இரு குடும்பங்களுக்குமிடையே வைரம் முற்றிற்று.
நான் -
குருடர்களின் உலகம் குறுகிவிடுகிறது. நினைத்தவிடம் போகமுடியுமா, வரமுடியுமா, நாலு பேருடன் இஷ்டப்பிரகாரம் சேர முடியுமா? எல்லோரும் எவ்வளவோ பிரியமாய் இருந்த போதிலும் அவர்களின் இரக்கம் ஏளனமாய்த்தான் படுகிறது. அவளுக்கிருப்பது எனக்கிருக்கிறதா?
ஆகவே, எப்பவும் நான் தன்னந்தனியன்தான். நான் வீட்டிலில்லாத வேளையில், வேலையில்லாத வேளையிலும், குளக்கரையில் உட்கார்ந்துகொண்டு கல்லை ஜலத்தில் விட்டெறிந்து கொண்டிருப்பேன். அதுதான் என் வீட்டுக்குக் கிட்ட; அங்கு ஒருவரும் வருவதில்லை. அந்த ஜலம் ஸ்னானத்திற்கு உபயோகமில்லை. நான் எதற்கும் பயனற்றுப் போன பிறகு பதுங்குமிடம் அப்பயனற்ற குளக்கரைதான்.
நான் அங்கே உட்கார்ந்துகொண்டு என்னென்ன  நினைத்திருப்பேன் என்று கேட்டால் எனக்கு நிச்சயமாய்ச் சொல்லத் தெரியாது. வயது ஏற ஏற கூடவே ஊறும் வேதனை இன்னதென்று நிச்சயமாய் எங்கே தெரிகிறது?
ஒருநாள் பகல் பன்னிரண்டு மணிக்கு மண்டையைப் பிளக்கும் வெய்யிலில் அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தேன்.
பின்னால் யாரோ நிற்பதுபோல் திடீரென்று தோன்றிற்று.
”யாரது?” பதில் இல்லை. பகீரென்றது. ஆனால் பயத்தால் இல்லை.
யாரது? என் மேல் ஒரு கை பட்டது. முரட்டுத்தனமாய் அக்கையைப் பற்றி இழுத்தேன். அவள் சாயும் கனம் தாங்காது அப்படியே நான் சாய்ந்தேன். பிடித்திழுத்த வேகத்தில் நிலையிழந்து அவள் என் மேல் விழுந்தாள். ஒரு பெரும் மூர்ச்சை எங்களிருவர் நினைவையும் அடித்துச் சென்றது. எனக்கு அப்பொழுது வயது பதினெட்டா?
யாரது? என்ன அர்த்தமற்ற கேள்வி என் கேள்வி?
அன்று முதல் நாங்கள் என்னென்ன பேசினோம்? என்ன பேச முடியும்? பேச என்ன இருக்கிறது? எங்கள் பச்சை நரம்பில் துடிக்கும் ரத்தத்தின் படபடப்புத்தான் எங்கள் பாஷை. நான்தான் பச்சை பச்சையாய் சொல்கிறேனே! எனக்கு இஷ்டமானதெல்லாம் பச்சையாய்க் காண விரும்பும் ஒரு இஷ்டத்தில், அன்று முதல் அவளுடன் கழித்த வேளைகளெல்லாம் பச்சையாயின. பச்சைப் பகல், பச்சையிரவுகள்.
நான் இப்பவும் யோசிக்கிறேன், நாங்கள் புல்லிய வேகத்திலேயே எங்கள் எலும்புகள் நொறுங்கி - இருவருக்கும் ஒரே சமயத்தில் ஏன் சாவு சிந்திக்கவில்லை? அச்சாவே புதுப்பிறப்பாயிருக்கும். அல்லது இரவிலோ பகலிலோ குறைவிலாது நடமாடும் பூச்சி பொட்டுக்கள் ஏன் பிடுங்கிக் கொல்லவில்லை? அல்லது துர்த்தேவதைகள், வாயிலும் மூக்கிலும் செவியிலும் ரத்தம் குபுகுபுக்க அறைந்து ஏன் எங்கள் உயிர் குடிக்கவில்லை?
விதி! விதி!! விதி!!!
இதெல்லாம் நிஜமாக நடந்திருக்க முடியுமா? ஒரு ஒரு சமயம் என்னையே கேட்டுக் கொள்கிறேன்.
நடக்கிறதே, என்ன சொல்கிறாய்? என்று அவள் உருவம் என் மனதில் பச்சையாய் எழுந்து அவள் ஊமை வாய் என்னைக் கேட்கிறது.
குளக்கரையில் பசும் புற்றரையில் நாள் தவறாது உட்கார்ந்து உட்கார்ந்து என்னுள் ஊறிய பச்சைத்தாபமே என்னையுமறியாது மாறி மாறித் தோன்றும் குருட்டுக்கனவாயிருந்ததாலோ? “ஓஹோ, நீ கண்டது குருட்டுக்கனவானால் நான் கண்டது ஊமைக் கனவா?” என அவள் உரு, என் காணாத கண்கள் காண, பேசாத வாயால் என்னைக் கேட்கிறது. எல்லாமே கனவாயின் பிற நேர்ந்தனவும் கனவா?
பின் நேர்ந்த நனவின் முந்தைய இரவு இப்பொழுது என் முன் எழுகிறது. சித்திரையின் சந்திரிகையாம் - ரொம்ப உசத்தியாமே? அப்படித்தானா?
நிலவின் ஒளி கூட கண்ணு உறுத்துமோ? ஏனெனில் என் மைமேல் இரண்டு சொட்டுக்கள் கண்ணீர் உதிர்ந்தன. என் கைகள் அவள் கண்களைத் தேடின. அவள் என் கைகளைப் பற்றித் தன் வயிற்றில் வைத்துக் கொண்டாள். அவள் பச்சை வயிறு ஏன் கொதித்ததோ? என் மேல் சாய்ந்திருந்த அவளுடல் விம்மிக் குலுங்கிற்று. அவளைவிட நான் துர்ப்பாக்கியசாலியா? என்னைவிட அவளா? யாரு அறிவார்? ஏனோ?
இன்றில்லாவிடினும் என்றேனும் நீ எனக்குச் சொல்ல வேண்டும். தூங்குவதற்கும் விழித்திருப்பதற்கும் என்ன வித்தியாசம்?
எனக்கு இரண்டும் ஒன்றாயிருந்தது. எப்பவும் இருள்தான். வெய்யில் உடலில் உறைத்தால் அது பகலா? அப்புறம் வெய்யிலாகாது. தெருக்குறட்டில் நான் கட்டிலில் படுத்துவிட்டால் அது இரவா? இப்பொழுது நான் தூங்குவதாக அர்த்தமா? தூக்கம் நிஜமா? விழிப்பு நிஜமா? தூங்குகிற சமயத்திலாவது உருவமற்ற உருக்கள் என் கண்ணுள் தோன்றி மறைகின்றன. என் பெண்டாட்டி ஏன் இன்று அழுதாள் என்ற கேள்வியே உருவமற்ற உருவாய் எனக்குத் தோன்றுகிறாற் போலிருக்கிறது. ஆகையால் நான் தூங்குகிறேனா விழித்துக் கொண்டிருக்கிறேனா என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கும் அரை நினைவு நிலையில் வாசல் கதவை யாரோ தடதடவென்று அவசரமாய்த் தட்டினார்கள்.
“என்ன:-” என் தகப்பனார் அலறியடித்துக்கொண்டு உள்ளிருந்து ஓடிவந்தார்.
”சமாசாரம் கேட்டியோ? உன் நாட்டுப் பெண் திடீர்னு செத்துப்போயிட்டாளாம்” அப்பா மேல்துண்டு போட்டுக்கொள்ளவும் மறந்து அவசரமாய் அவர்களுடன் ஓடினார்.
நான் தெரியாத கண்ணைத் திறந்த வண்ணம், கட்டிலில் அசைவற்றுப் படுத்துக் கொண்டிருந்தேன். ஒரு விஷயம் நன்றாகப் புலனாயிற்று. விடிந்து விட்டது. ஆகையால் நான் விழித்துக் கொண்டுதானிருந்தேன். என் கண்ணில் பொட்டு ஜலம் கூட இல்லை. சற்று நேரம் பொறுத்து யாரோ இருவர் என்னைப் பிடித்து மாமனார் வீட்டுக்குக் கூட்டிச் சென்றனர். எப்படிப்பட்ட மாப்பிள்ளை வருகை! கூடத்தில் பிணத்தைக் கிடத்தி இருந்தது. கையில் மண் செப்பில் அவள் குடித்தது போக பாக்கிச் சாறு எஞ்சியிருந்தது. அந்தச் செப்பைத் தொட்டேன். பிறகு அவள் உதட்டைத் தொட்டேன். பச்சையாய்த்தானிருக்க வேண்டும். வீட்டுக் கொல்லைப் புறத்தில் வைத்தியத்திற்காக வேண்டிய விஷப்பூண்டு ஏதோ பயிரிட்டிருக்கிறது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.
விஷத்தை அப்படியே பொசுக்க முடியவில்லை. புது மணியக்காரர் ஊருக்குப் புதிசு. கொஞ்சம் பயந்த பேர்வழி, யாருக்கும் தெரியாமல் அவரே பக்கத்தூரிலிருந்து போலீஸ், டாக்டர் எல்லாம் அழைத்துக் கொண்டு வந்துவிட்டார். ரண வைத்தியர் பிணத்தின் வயிற்றைக் கிழித்தார்.
வயிற்றில் மூன்று மாதத்து சிசு.
ஊரே பற்றி எரிந்தது. அப்பா நடுங்கிப் போனார். இதைத்தான் தெரிவிக்க முயன்றாளோ? இதுதான் அவள் தெரிவிக்க முயன்றபோது எனக்குத் தெரியவில்லையோ? ஒருவேளை தெரியாமலிருப்பதே மேலென்று உயிரை மாய்த்துக் கொண்டாளோ? தெரிந்துதான் நான் என்ன செய்யமுடியும்? ஏற்கனவே குருடு. இத்துடன் பெரியவர்களின் ஆசி பெறாத குழந்தை பிறந்த அவமானத்தையும் சுமத்துவானேன் என்ற எண்ணமோ? இத்தனைப் பகை நடுவில் பயிரான உறவைப் பாதுகாப்பதில் சட்டென்று சலிப்பேற்பட்டுவிட்டதோ? நாங்கள் பாபத்தையிழைத்து விட்டோம் என்ற பயமா? இல்லை எங்கள் ரகசியம் எங்களிருவரோடு மட்டும்தான் இருக்கவேண்டுமென்று, அது பஹிரங்கமாகுமுன் அவள் இவ்வுலகை விட்டுப் புறப்படத் தீர்மானித்துவிட்டாளோ? இந்த உறவு உருப்படப் பிறக்கவில்லை என்று உணர்ந்தாளோ?
‘அந்தக் குழந்தை என்னுடையது’ என்று நான் சொல்லியிருந்தாலோ கதை முடிந்துவிடும் புதிர் போல், எல்லாம் வெளியாயிருக்கும். இந்த மூன்று மாதங்களும் ஊரின் பொது சொத்தாயிருக்கும். அவள் நினைவு எனக்கே சொந்தமாயிருத்தல்தான் எனக்கிஷ்டம். என் சுயநலத்தால், நான் பயந்தாங்கொள்ளியாயிருந்து விட்டுப் போகிறேன். அவள் பெயருக்கு விழுந்த களங்கம் நீங்காவிட்டாலும் பரவாயில்லை. உயிருடனிருந்த சமயத்தில் எங்கள் பாரத்தைக் குறைக்க யார் என்ன செய்துவிட்டார்கள்? செத்த பிறகு அவள் தலையில் பூச்சூடா விட்டால் பரவாயில்லை. உயிர் நிலையின் ஒரே மூச்சுப்போன்ற அம்மூன்று மாதப் பச்சைக் கனவின் மிச்சம் - நான்தான்.
இருந்தும் ஓரொரு சமயம் என் மனம் அக்கொலையுண்ட குழந்தைக்கு ஏங்குகிறது. அது உயிருடன் இருந்தால் எனக்கு ஆறுதலாயிருக்குமோ?
இது எவ்வளவு அசட்டுத்தனமான யோசனை? எனக்கு உடனே தெரிகிறது. அது உயிருடனிருந்தால் அவளும் உயிருடனிருக்க மாட்டாளா? ஒன்றினின்று மற்றொன்றைப் பிரித்துச் சிந்திப்பது எவ்வளவு அர்த்தமற்று இருக்கின்றது? அவள் போனால் அக்குழந்தையும் போக வேண்டியதுதான். இம்மனத்தின் நிலையை என்னென்று சொல்வது?
அவள் மனதில் முடங்கிக் கிடந்த பாசம் எழுந்த ஆவேசத்தில் தொண்டையை முண்டியது. குறிச்சியில் சாய்ந்தபடியே அவனை அப்படியே அணைத்துக் கொண்டாள்.
“நான் - நான் -”
திடீரென்று மனம் குழந்தை கனிவில், அது மானவெட்கத்தை விட்டது.
“இதுக்கென்ன நமக்கு வர வருஷம் குழந்தை பிறக்காதா?” என்றாள். அந்த யோசனை  அவள் மனதில் உறுத்தும் குறைக்கு ஆறுதலளித்தது.
“ஆம். வாஸ்தவம்தான். ஆனால் பெண்ணாய்ப் பிறக்க வேண்டும். பெண்ணுக்கு நல்ல பேர் வைக்க வேண்டும்.-”
“என்ன பேர் வைப்போம்?” என்று ஆசையின் அதிசயிப்புடன் கேட்டாள்.
அவன் கண்கள் ஒளியைப் பெற்றlன போல் விரிந்தன.
”பச்சை.”
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கதை. மனம் கனத்துவிட்டது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.