Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

121 முதல்வர்கள்... 1 எம்.எல்.ஏ!


Recommended Posts

மிஸ்டர் கழுகு: 121 முதல்வர்கள்... 1 எம்.எல்.ஏ!

 

‘‘ஆறு மனமே ஆறு... அந்த ஆண்டவன் கட்டளை ஆறு...’’ என்ற பழைய சினிமா பாடலைப் பாடியபடியே அறைக்குள் நுழைந்தார் கழுகார்.

p42a.jpg‘‘புரிகிறது... எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ-க்களில், இடம் மாறத் துடிக்கும் அந்த ஆறு பேர்தானே?’’

‘‘ஆமாம். ஆறு பேர் தாவினால், அ.தி.மு.க-வின் மெஜாரிட்டி போய்விடும். எடப்பாடியின் முதல்வர் நாற்காலி தடதடக்கும். அதனால், எடப்பாடியை ஆதரிக்கும் 121 எம்.எல்.ஏ-க்களின் காட்டில் அதிர்ஷ்ட மழை கொட்டுகிறது. இந்த சீசன், அவர்களைப் பொறுத்தவரையில் ஒரு பொற்காலம் என்றே சொல்லித் திரிகிறார்கள். எடப்பாடியின் மெஜாரிட்டி ‘வீக்னஸை’ நன்றாகவே புரிந்துவைத்திருக்கும் இந்த எம்.எல்.ஏ-க்கள், காலரைத் தூக்கிவிட்டபடி உலா வர ஆரம்பித்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட இந்த 121 பேரும் முதல்வராகவே எங்கும் பவனி வருகிறார்கள். ‘முதல்வர்’ என்ற அதிகார நாற்காலியில் இருந்தாலும், ஒரு ‘எம்.எல்.ஏ’ போல தன்னை நினைத்துக்கொண்டு திருப்தி அடைய வேண்டிய நிலை எடப்பாடிக்கு! அவரை யாரும் முதல்வராக நினைக்கவில்லை. அரசின் மீதான நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற்றபிறகு, இந்த வாரம்தான் சில அமைச்சர்களும் எம்.எல்.ஏ-க்களும் சொந்தத் தொகுதிக்குப் போனார்கள். ஜெயலலிதா பிறந்த நாளுக்கு அவர்கள் தங்கள் தொகுதிகளில், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்கள். இதற்கான போஸ்டர்களில் ஜெயலலிதா, சசிகலா, தினகரன் படங்கள் மட்டுமே இருந்தன. மறந்தும்கூட யாரும் முதல்வர் எடப்பாடியின் படத்தைப் போடவில்லை. அவரை ஒரு பொருட்டாகவே யாரும் மதிக்கவில்லை!’’ 

‘‘ `கூவத்தூர்’ தட்சணை போக, மேலும் பல சலுகைகளை எதிர்பார்க்கிறார்களா?’’

‘‘சசிகலா தரப்பில் ஒரு கவனிப்பு, எடப்பாடி தரப்பில் ஒரு கவனிப்பு, ஓட்டெடுப்பு முடிந்ததும் கடைசியாக ஒரு கவனிப்பு... என்று ஏகத்துக்கும் எம்.எல்.ஏ-க்களைக் கவனித்தார்கள். வருடத்துக்கு ஒரு கவனிப்பு என்றும் சொல்லியிருக்கிறார்கள். இவை போக, தொகுதிகளில் வரும் அனைத்து கான்ட்ராக்ட் மற்றும் டெண்டர் விஷயங்களில் உங்களுக்கு உரிய பங்கு வந்துசேரும் என்றும் சொன்னார்களாம்.’’

‘‘எம்.எல்.ஏ-க்களுக்கு சந்தோஷமா?’’

p42.jpg

‘‘சந்தோஷம்தான். தலைமை, இறங்கிவரும் இந்தத் தருணத்தில், மேலும் சில கோரிக்கைகளையும் எம்.எல்.ஏ-க்கள் அடுக்குகிறார்கள். தென் மாவட்ட எம்.எல்.ஏ ஒருவர், ‘தலைமைச்செயலகத்தில் இனி நாங்கள் வந்தால், எந்த உயர் அதிகாரியும் மணிக்கணக்கில் காக்கவைக்கக்கூடாது. மாறுதல் ஆர்டர்களை அமைச்சரிடம் போய் வாங்கிக்கொள்ளும்படி எங்களிடம் யாரும் சொல்லக்கூடாது. எங்கள் கையில் தரவேண்டும்’ என்று கேட்டாராம். இன்னொரு எம்.எல்.ஏ, ‘சுழற்சி முறையில் எங்களுக்கும் அமைச்சர் பதவி தரப்படவேண்டும்’ என்று குரலை உயர்த்திக் கேட்டுக்கொண்டாராம். வட மாவட்ட எம்.எல்.ஏ ஒருவர், ‘பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை முன்னணி கான்ட்ராக்டர்கள் இதுவரை எங்களை மதிக்கவே இல்லை. எதைக்கேட்டாலும், கார்டனில் பேசட்டுமா என்று மிரட்டினார்கள். இனிமேல் தொகுதியில் ஏதாவது டெண்டர் விடுவது என்றால், அவர்களை, முதலில் எங்களைச் சந்தித்துவிட்டுப் போகச் சொல்லுங்கள்’ என்றாராம். பெரும்பாலான எம்.எல்.ஏ-க்கள், ‘இதுவரை எங்களை டம்மியாக கருதிவந்தவர்கள் யார் யார் என்று லிஸ்ட் வைத்திருக்கிறோம். கார்டனைச் சொல்லி பூச்சாண்டி காட்டிய அதிகாரிகள், கான்ட்ராக்டர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் ஓரங்கட்டப்பட வேண்டும். காலியாகும் பதவிகளில் நாங்கள் சொல்கிறவர்களைத்தான் நியமிக்கவேண்டும். இனி, எம்.எல்.ஏ ஹாஸ்டல்தான் முடிவுசெய்யும் என்பதைச் சொல்லிவிடுங்கள்’ என்று சசிகலா தரப்பினரிடமும், எடப்பாடி தரப்பினரிடமும் கோரிக்கை வைத்தார்களாம். மேற்கு மாவட்ட எம்.எல்.ஏ ஒருவர் சொன்னதுதான் டாப். ‘அரசுப் பணிகளில் ரெகுலராகப் பலருக்குக் கமிஷன் தரப்படுகிறதல்லவா? அதில், இனி எங்களுக்கு ஒரு பங்கு வீடு தேடி வரவேண்டும்’ என்று ஒரே போடாகப் போட்டாராம்.’’

‘‘அட...’’

‘‘ஓட்டெடுப்புக்கு முன்பு கூவத்தூரில் நடந்த விஷயங்கள் அவை. சசிகலாவும் இதற்கெல்லாம் ஓகே சொன்னாராம். பிறகு எம்.எல்.ஏ-க்களிடம் எடப்பாடி பேசியபோது, ‘இனி நீங்கள் தலைமைச் செயலகம் என்றில்லை... மாவட்ட அளவில் எங்கு போனாலும் அறிவிக்கப்படாத அமைச்சர்களாகவே நடத்தப்படுவீர்கள். அமைச்சர் பதவிக்கான அனைத்து மரியாதைகளும் உங்களுக்குத் தவறாமல் கிடைக்கும்’ என்று உத்தரவாதம் தந்தாராம். தலைமைச்செயலகத்தில் முதல்வர் இருக்கையில் எடப்பாடி அமர்ந்ததுமே, முக்கிய அதிகாரிகளிடம் ‘எங்கள் எம்.எல்.ஏ-க்களுடன் ரொம்பவும் அனுசரணையாக நடத்துகொள்ளவேண்டும். மாவட்ட கலெக்டர்களுக்கு இதை உடனே தெரியப்படுத்துங்கள்’ என்று சொன்னாராம். முதல்வர் பதவியில் ஜெயலலிதா இருந்தது வரையில், அதிகாரிகள் ஆட்சிதான் நடந்துவந்தது. எம்.எல்.ஏ-க்களை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். இப்போது நிலைமை தலைகீழ். எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஆட்சி ஆரம்பித்துவிட்டது.’’

‘‘அதிகாரிகள் பயபக்தியுடன் நடந்துகொள்கிறார்களா?’’

‘‘அதுமட்டுமா? ‘ஒவ்வொரு எம்.எல்.ஏ-வுக்கும் மாவட்ட அரசு நிர்வாகத்தில் டெண்டர், கான்ட்ராக்ட்டுகள், தற்காலிக அரசுப் பணி நியமனங்கள் உள்ளிட்ட விவகாரங்களில் ராஜ மரியாதை தரப்படவேண்டும். அவர்கள் சொல்கிற காரியங்களை மின்னல் வேகத்தில் செய்துதரவேண்டும். அரசு விழாக்களை நடத்துவதாக இருந்தால், எம்.எல்.ஏ-க்களுக்கு வசதிப்பட்ட நாளை, சீனியர் அதிகாரிகள் நேரில் போய்க் கேட்டுத் தெரிந்துகொண்டு வரவேண்டும்’ என்றெல்லாம் அரசு மேலிடத்திலிருந்து உத்தரவு போயிருக்கிறதாம்.’’

‘‘ `எல்லோரும் முதல்வர்’ திட்டமாக இருக்கிறதே?’’

‘‘ஆமாம்! பெருவாரியான எம்.எல்.ஏ-க்கள் சென்னையில்தான் முகாம் போட்டிருக்கிறார்களாம். லாயிட்ஸ் ரோட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திலும் சரி... தலைமைச் செயலகத்திலும் சரி! ஒவ்வொருவருக்கும் எப்படி மரியாதை தரப்படுகிறது என்பதைப் பலரும் நேரில் போய் பரிசோதனை செய்துகொள்கிறார்கள். அதுவும், எடப்பாடியை சந்திக்கப்போகும்போது, சாதி வாரியாகக் குறைந்தபட்சம் ஆறு எம்.எல்.ஏ-க்கள் ஒரு அணியாகத் திரண்டு, அனைவரும் ஒரே காரில் போய் இறங்குகிறார்களாம். ஆறு எம்.எல்.ஏ-க்களை ஒருசேரப் பார்த்ததும் எடப்பாடி ஒருமாதிரி ஆகிவிடுகிறாராம். அவர்கள் கேட்டதெல்லாம் கிடைக்கிறதாம்.’’

‘‘இப்படி ஆறு பேராக அணி திரண்டு போகும் டெக்னிக்கை பல எம்.எல்.ஏ-க்களும் பின்பற்றுகிறார்களா?’’

‘‘அப்படித்தான் தலைமைச்செயலக அதிகாரிகள் சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் இப்படி எம்.எல்.ஏ-க்களின் உறவினர், நண்பர், பி.ஏ என்றெல்லாம் சொல்லிக்கொண்டு நிறைய பேர் கிளம்பிவிட்டார்களாம். உளவுத்துறை அதிகாரி ஒருவர், ‘தலைமைச்செயலகத்தில், பல மீடியேட்டர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். முக்கிய துறைகளில் வேலையை முடித்துத் தருவதாகச் சொல்லி பேரம் பேசுகிறார்கள்’ என்கிறார். இவர்கள் போடும் ஆட்டத்தில், எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மீது அதிகாரிகள் வெறுப்பு அடையப்போவது உறுதி. இந்து அறநிலையத்துறை உயர் அதிகாரி ஒருவரை, கார்டன் செல்வாக்கு படைத்தவர் போனில் மிரட்டி இருக்கிறார்.’’

‘‘ம்!”

‘‘ஏண்டா இந்தப் பதவிக்கு வந்தோம் என்று எடப்பாடி கலங்கும் அளவுக்கு நிலைமை போய்க்கொண்டு இருக்கிறது. சசிகலா குடும்பம் கொடுக்கும் குடைச்சலைவிட இது அதிகம் என்று எடப்பாடி ஆட்கள் நொந்துகொள்கிறார்கள். அனைத்து எம்.எல்.ஏ-க்களையும் சமாதானம் செய்வது அவ்வளவு ஈஸியான விஷயம் அல்ல என்பதும் இவர்களுக்குத் தெரியும். இன்னொரு பக்கம், எடப்பாடி பழனிசாமி முதல்வராக முதல் கையெழுத்துப் போட்ட அடுத்த நாளே, ‘தினகரன் விரைவில் தமிழக முதல்வராகப் பதவி ஏற்றுக்கொள்வார்’ எனப் பேட்டி கொடுத்திருக்கிறார், அ.தி.மு.க-வின் நிலக்கோட்டை எம்.எல்.ஏ தங்கதுரை. இவர், சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து ஓட்டு போட்ட 122 பேரில் ஒருவர். இப்படித்தான் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது, ‘சசிகலா முதல்வராக வேண்டும்’ எனப் பேச்சை ஆரம்பித்தனர். கட்சி நிர்வாகிகளில் ஆரம்பித்து, அடுத்து எம்.எல்.ஏ-க்கள் பேசி, கடைசியில் உதயகுமார், செல்லூர் ராஜு போன்ற அமைச்சர்களே இப்படிப் பேசினர். இதன் க்ளைமாக்ஸாக பன்னீர்செல்வம் பதவி போனது. அந்த சந்தர்ப்பத்தில், ‘சசிகலா முதல்வராக வேண்டும்’ என முதலில் பேசிய எம்.எல்.ஏ-க்களில் ஒருவர், இந்த நிலக்கோட்டை தங்கதுரை. எனவே, ‘நாமும் இதைச் சொல்லாவிட்டால் தினகரன் கோபித்துக்கொள்வார்’ என பல எம்.எல்.ஏ-க்கள் இப்படிப் பேசலாம். எடப்பாடி இனி நிம்மதியாகத் தூங்குவது சந்தேகம்தான்.’’

p42e1.jpg

‘‘ஸ்டாலினின் டெல்லி பயணத்தில் என்ன நடந்ததாம்?’’

‘‘பிப்ரவரி 23-ம் தேதியன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்தார் ஸ்டாலின். ‘தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கை தீர்மானத்தை ரத்து செய்துவிட்டு, ரகசிய வாக்கெடுப்பு நடத்தவேண்டும்’ என்ற கோரிக்கை மனுவை அப்போது கொடுத்தார். சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வுகளை அவரிடம் விவரித்தார் ஸ்டாலின். ‘தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை வெளியேற்ற இவர்கள் எல்லோரும் சபைக்குள் வர வேண்டும்’ என ஐ.பி.எஸ் அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு சட்டமன்ற செயலாளர் ஜமாலுதீன் எழுதிய கடிதத்தின் நகலை வாங்கி அதிர்ச்சியுடன் படித்துப் பார்த்தாராம். அன்றிரவு ஸ்டாலின் அங்கேயே தங்கிவிட்டார். அடுத்தநாள் சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் சந்தித்தார்.

சில நாட்களுக்கு முன்பு, தமிழகத்துக்கு நீட் தேர்வில் விதிவிலக்கு அளிக்கக் கோரி, ஸ்டாலின் எழுதிய கடிதத்தை ராஜ்ய சபா எம்.பி-யான திருச்சி சிவா, பிரதமர் மோடியை நேரில் சந்தித்துக் கொடுத்தார். அப்போது, ஸ்டாலின் சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கேட்டிருக்கிறார் சிவா. ‘தாராளமாக எப்போது வேண்டுமானாலும் வரச் சொல்லுங்கள்’ என்று சிரித்தபடி சொன்னாராம் மோடி. இருவரும் தமிழக அரசியல் நிலவரம் பற்றி கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தார்களாம். ஆக, விரைவில் பிரதமரையும் ஸ்டாலின் சந்திக்கப்போகிறார். பிரதமரை சந்திக்க இதற்கு முன்பு அ.தி.மு.க சார்பிலும், தி.மு.க சார்பிலும் அப்பாயின்ட்மென்ட் கேட்டும் கிடைக்கவில்லை. திருச்சி சிவா கேட்டதும் உடனே கிடைத்திருக்கிறது. ஜனாதிபதியை ஸ்டாலின் சந்திக்க நேரம் வாங்கியதும் சிவா.

ஸ்டாலினின் டெல்லி பயணத்தில் கனிமொழி இல்லை. அவர், துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியுடன் ஆப்ரிக்க நாடுகளுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் சென்றிருக்கிறார். ‘முக்கியமான இந்த நேரத்தில், தான் டெல்லியில் இருக்க முடியவில்லையே’ என ஃபீல் பண்ணினாராம் கனிமொழி’’ என்றவாறே பறந்தார் கழுகார்.

படங்கள்: பா.காளிமுத்து, கே.குணசீலன், ஜெரோம்


கட்சிக்குள் சமூகக் கசப்புகள்!

‘‘அ.தி.மு.க-வின் முதல் வரிசை லீடர்களில் அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை’’ என்கிற குற்றச்சாட்டு பலமாகக் கிளம்பியுள்ளது. தற்போது கட்சி மற்றும் ஆட்சி விவகாரங்களைக் கவனிக்கும் பொறுப்பில் எடப்பாடி, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, தங்கமணி, தினகரன் என ஆறு பேர் இருக்கிறார்கள். இவர்களில் தினகரனும் திண்டுக்கல் சீனிவாசனும் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மற்ற நால்வரும் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதையெல்லாம் பார்க்கும் பிற சமூக எம்.எல்.ஏ-க்கள் அடிக்கடி கூடி விவாதித்து வருகிறார்கள். எடப்பாடி முதல்வர் ஆனதால், ஓ.பி.எஸ் அணிக்குத் தாவினார், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் செம்மலை. நாமக்கல் மாவட்டத்தில் தங்கமணிக்கு முக்கியத்துவம் தரப்படுவதால், எம்.பி-யான சுந்தரம், பன்னீர் அணிக்குப் போய்விட்டார். ஈரோடு மாவட்டத்தில் செங்கோட்டையனுக்கு திடீரென அடுத்தடுத்து பதவிகள் தரப்பட்டுள்ளதால், அதே சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் அதிருப்தியில் இருக்கிறார். கோவை மாவட்டத்தில் வேலுமணியின் எதிர்கோஷ்டியினரில் ஒரு தரப்பினர் பன்னீருடன் ஐக்கியமாகிவிட்டனர். அமைச்சர் பதவி கிடைக்காததால் நாடார் இன எம்.எல்.ஏ-க்கள் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். இதையெல்லாம் எப்படி சரி செய்வது எனப் புரியாமல் குழம்புகிறார் எடப்பாடி.


ஜெயலலிதா இல்லை!

p42d.jpg

ஜெ. பிறந்த நாளுக்கு ஒருநாள் முன்னதாக பிப்ரவரி 23-ம் தேதி அ.தி.மு.க தலைமைக் கழகத்துக்கு வந்து டி.டி.வி.தினகரன், துணைப் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பதவியேற்றக் காட்சி, கட்சியின் சார்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தினகரன் கையெழுத்து போடும்போது டேபிளில் சசிகலா புகைப்படம் பிரதானமாக இருக்கிறது. ஆனால், ஜெயலலிதா புகைப்படம் கவனமாக மறைக்கப்பட்டுள்ளது.


p42c.jpgஅடுத்த மாற்றத்துக்கு ரெடி!

லைமைச் செயலாளர் ராம மோகன ராவ் ரெய்டில் சிக்கியபோது, புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் கிரிஜா வைத்தியநாதன். ‘எந்த சர்ச்சையும் வேண்டாம்’ என சீனியாரிட்டி அடிப்படையில் அவரை நியமித்தார் ஓ.பன்னீர்செல்வம். ஆனால், பன்னீரின் நியமனம் என்ற ஒரு காரணத்தாலேயே அவர் விரைவில் மாற்றப்படலாம் என்கிறார்கள். தலைமைச் செயலாளர் பதவிக்கான ரேஸில் இப்போது முந்துபவர், நிதித்துறை செயலாளர் சண்முகம்.

இதேபோன்ற இன்னொரு பவர்ஃபுல் பதவியான, முதல்வர் அலுவலக முதன்மைச் செயலாளர் சீட்டைப் பிடிக்கும் ஆர்வத்தில் இருக்கிறார், நிரஞ்சன் மார்டி. எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தபோது, அந்தத் துறையின் செயலாளராக அவருக்கு நெருக்கமாக இருந்தவர் நிரஞ்சன் மார்டி. புள்ளிவிவரத் துறையில் இருந்தாலும், எடப்பாடி முதல்வர் ஆன நாளிலிருந்தே, முதல்வர் அலுவலகம் பக்கம் தென்படுகிறார் நிரஞ்சன் மார்டி.

கடந்த ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலிருந்தே பல துறைகளின் செயலாளர்கள் மாற்றப்படாமல் இருக்கிறார்கள். சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகவே ஒரே பதவியில் இருக்கிறார்கள். இவர்களில் பலரும், நடராசனுக்கு நெருக்கமானவரான, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பன்னீர்செல்வத்தின் உதவியோடு முக்கியமான பதவிகளைப் பிடிக்க போட்டிபோடுகிறார்கள்.


p42b.jpgடேவிட்சனும் 11 நாட்களும்!

ளும்கட்சியின் கோஷ்டி அரசியலுக்கு ஈடு கொடுக்கமுடியாமல், உளவுத்துறை ஐ.ஜி-யாக இருந்த சத்தியமூர்த்தி நீண்ட விடுப்பில் சென்றுவிட்டார். இந்த நிலையில், கடந்த 11 நாட்களுக்கு முன்பு, உளவுப்பிரிவின் புதிய ஐ.ஜி-யாக டேவிட்சனை நியமித்தார் அப்போதைய முதல்வர் பன்னீர்செல்வம். பொதுவாகவே, எந்த அரசியல் நிகழ்வானாலும், நியாயமில்லை என்று மனசுக்குப்பட்டால், ஆட்சி மேலிடத்திடம் நேரடியாகச் சொல்லிவிடுகிற டைப் இவர். இதனாலேயே ஐ.ஜி. பதவியை இவர் மறுத்தார். உயர் அதிகாரிகள் வற்புறுத்தியதால், வேறு வழியில்லாமல், பதவியேற்றார். 11 நாட்களே ஆன நிலையில், ‘முந்தைய முதல்வர் பன்னீர்செல்வம் நியமித்த யாரும் வேண்டாம். அவர்களை மாற்றிவிடுங்கள்’ என்கிற முடிவை எடுத்தாராம் முதல்வர் எடப்பாடி. எனவே, டேவிட்சன் மாற்றப்பட்டு, பழைய இடமான போலீஸ் வெல்ஃபர் பிரிவுக்குப் போயிருக்கிறார். புதிய உளவுத்துறை ஐ.ஜி. லிஸ்ட்டில் சத்தியமூர்த்தி, பொன்.மாணிக்கவேல், ஸ்ரீதர், தாமரைக்கண்ணன், செந்தாமரைக்கண்ணன் ஆகியோர் பெயர்கள் இருக்கின்றன. இவர்களில் யாருக்கு சான்ஸ் கிடைக்கும் என்று தெரியவில்லை.


p42f.jpg

ஜெ... ஜேஜே!

ஜெயலலிதா இருந்தபோது அவர் பிறந்தநாள் பிரமாண்டமாக, ஆடம்பரமாக நடத்தப்படும். அவர் இறந்தபிறகு வந்த முதல் பிறந்தநாள் என்பதால், அ.தி.மு.க-வினர் அமைதியாக, சோகமாகக் கொண்டாடினார்கள். அ.தி.மு.க-வில் பல்வேறு அணிகள் தலைதூக்கிவிட்டதால், ஜெ. பிறந்த நாளை அனைவரும் போட்டிபோட்டு கொண்டாடினார்கள். துணைப் பொதுச்செயலாளர் ஆன சந்தோஷத்தில் இருந்தார் தினகரன். நாடு முழுவதும் நீதி கேட்டு நெடும்பயணம் போகும் உற்சாகத்துடன் இருந்தார் பன்னீர்செல்வம். புதுக்கட்சி தொடங்கும் வேகத்தில் இருந்தார் தீபா. தனது வாழ்க்கையில் முதன்முதலாக ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து கலங்கிய மனதுடன், கையெடுத்துக் கும்பிட்டார் நடராசன். இது நான்கும் தனித்தனி இடங்களில் நடந்தவை.

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.