Jump to content

இந்தியப் பொறியியலாளர் இனவெறிக் கொலை; அமெரிக்காவில் அதிர்ச்சி!


Recommended Posts

இந்தியப் பொறியியலாளர் இனவெறிக் கொலை; அமெரிக்காவில் அதிர்ச்சி!

 

 

அமெரிக்காவின் கன்ஸாஸ் மாகாணத்தில், மதுபான விடுதியொன்றுக்குச் சென்ற இரண்டு இந்தியர்கள் மேல் அமெரிக்கர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார்.

1_Srinivas_Shot_Dead.jpg

ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ். இவர் அமெரிக்காவில் பொறியியலாளராகப் பணியாற்றுகிறார். இவரும் இவரது நண்பர் ஆலோக்கும் நேற்று மேற்படி மதுபான விடுதிக்குச் சென்றிருந்தனர்.

அப்போது அங்கிருந்த ஒருவர், ஸ்ரீனிவாஸையும் நண்பரையும் திட்டத் தொடங்கினார். “இது எமது நாடு... நீ உடனடியாக வெளியேறு” என்று கூறிக்கொண்டே திடீரென தனது துப்பாக்கியை எடுத்து இருவர் மீதும் சுடத் தொடங்கினார். இதில் இருவர் மீதும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. துப்பாக்கிதாரியைத் தடுக்க வந்த மற்றொருவரும் காயத்துக்கு உள்ளானார்.

மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும், ஸ்ரீனிவாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தாக்குதலை நடத்தியவர் தப்பியோடியபோதும், சுமார் ஐந்து மணிநேரத்தில் பொலிஸார் அவரைக் கைது செய்தனர். தாக்குதலை நடத்தியவர் அடம் ப்யூரின்ட்டன் (51) என்பதும், இவர் அமெரிக்க கடற்படையின் முன்னாள் வீரர் என்பதும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

http://www.virakesari.lk/article/17010

Link to comment
Share on other sites

அமெரிக்காவில் இந்திய பொறியாளர் சுட்டுக் கொலை

 

 
 
துப்பாக்கி மனிதர் ஆதாம் புரிண்டன், ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா மற்றும் அலோக் மதாசனி
துப்பாக்கி மனிதர் ஆதாம் புரிண்டன், ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா மற்றும் அலோக் மதாசனி
 
 

அமெரிக்காவின் கான்சாஸ் நகரத்தில் இந்திய பொறியாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இனவெறி காரணமாக இச்சம்பவம் நடந்துள்ளது.

கடந்த புதன்கிழமையன்று, கான்சாஸ் நகரத்தின் ஒலாதே பகுதியில் உள்ள ஒரு கேளிக்கை விடுதியில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீனிவாஸை, அங்குவந்த நபர் ஒருவர் சுட்டுக் கொன்றுள்ளார்.

''என் நாட்டை விட்டு வெளியேறு'' என்று கூறிக்கொண்டே இந்தியப் பொறியாளரை அந்த நபர் சுட்டதாகக் கூறப்படுகிறது.

சுட்டுக் கொல்லப்பட்ட நபர் அமெரிக்க நிறுவனமொன்றில் விமானப் போக்குவரத்து பொறியாளராகப் பணிபுரிந்த 32 வயதான ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா எனத் தெரியவந்துள்ளது. இந்த கொலையை செய்தவர் ஆடம் பூரிண்டன் எனும் கடற்படை வீரர் என்பதும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக போலீஸ் தரப்பில், "புதன்கிழமை மாலை ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா, தன்னுடைய நண்பருடன் ஆஸ்டின் மதுபான விடுதியில் அமர்ந்தபடி, கான்சாஸ் பல்கலைக்கழக அணி விளையாடிய கூடைப் பந்தாட்டப் போட்டியைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது 51 வயது மதிக்கத்தக்க கடற்படை வீரர் ஆடம், தனது கைத்துப்பாக்கியை ஏந்தியபடி ஆவேசமாக அங்கு வந்தார். வந்து 'என்னுடைய நாட்டை விட்டு வெளியேறு' என்று இந்தியர்களைப் பார்த்துக் கூறிக்கொண்டே சரமாரியாக சுட்டுள்ளார்.

இதில் ஸ்ரீனிவாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற நண்பர் அலோக் மதாசனி மற்றும் தாக்குதலைத் தடுக்க வந்த இயன் கிரில்லாட் ஆகிய இருவரும் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ian_Grillot_3137277a.jpg

தாக்குதலைத் தடுக்க முயன்றபோது காயமடைந்த இயன் கிரில்லாட்

கான்சாஸ் விரைந்தார் இந்தியத் தூதர்

இனவெறித் தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர், சம்பவம் நடைபெற்ற கான்சாஸ் நகரத்துக்கு விரைந்துள்ளார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தாக்குதலில் காயமடைந்த மற்றொரு இந்தியரான அலோக் மதாசனி, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாகத் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

''இறந்தவரின் குடும்பத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும்'' என்று இந்திய வெளியுறவு விவகாரத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் நடத்தப்பட்ட இரண்டு இந்தியர்களும் ஹெச்1 பி விசாவில் பணிபுரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/world/அமெரிக்காவில்-இந்திய-பொறியாளர்-சுட்டுக்-கொலை/article9558860.ece?homepage=true

Link to comment
Share on other sites

இனவெறி தாக்குதலை தடுக்க என்ன செய்ய போகிறார்கள்? - அமெரிக்க அரசு பதில் அளிக்க வேண்டும்: சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியரின் மனைவி கேள்வி

 
 
நிருபர்களுக்கு பேட்டியளிக்கிறார் ஸ்ரீநிவாஸின் மனைவி சுனன்யா துமாலா
நிருபர்களுக்கு பேட்டியளிக்கிறார் ஸ்ரீநிவாஸின் மனைவி சுனன்யா துமாலா
 
 

அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணம் ஒலாத்தேவில் கார்மின் என்ற நிறுவனத்தில் ஜிபிஎஸ் உருவாக்கும் பொறியாளராகப் பணியாற்றியவர் ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லா (32). இவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். தனது நண்பர் அலோக் மாதசாணியுடன் (தெலங்கானாவைச் சேர்ந்தவர்) அங்குள்ள மதுபான விடுதிக்கு கடந்த புதன்கிழமை இரவு சென்றார். அங்கு வந்த அமெரிக்க முன்னாள் கடற்படை வீரர் ஆடம் புரின்டோன் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் ஸ்ரீநிவாஸ் பரிதாபமாக இறந்தார். இந்த துப்பாக்கிச் சூட்டை தடுத்த அமெரிக்க இளைஞர் கிரில்லட் மற்றும் அலோக் மாதசாணி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய ஆடம், ‘எங்கள் நாட்டை விட்டு வெளியேறு, பயங்கரவாதிகளே’ என்று ஆவேசமாக கத்தியதாக அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர். அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு இனவெறி தாக்குதல் அதிகரித் துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், கார்மின் நிறுவனம் ஏற்பாடு செய்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நேற்று ஸ்ரீநிவாஸின் மனைவி சுனன்யா துமாலா கூறியதாவது:

இனிமேல் (அதிபராக ட்ரம்ப் பதவியேற்று வெளிநாட்டினருக்கு எதிராக பேசி வருவதால்) இங்கு இருக்க முடியுமா என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. அமெரிக்காவில் எங்கெங்கோ துப்பாக்கிச் சூடு நடந்தது குறித்த செய்திகளை செய்தித் தாள்களில் பல முறை படித்திருக்கிறோம். அதுபற்றி நான் பயந்து கொண்டேதான் இருந்தேன்.

அதை என் கணவரிடம் தெரிவித்தேன். ஆனால், அவர் அமெரிக்காவில் நல்ல விஷயங்கள் நடக்கும்’ என்று நம்பிக்கை ஏற் படுத்தினார். ஆனால், இப்போது அமெரிக்காவில் உள்ள சிறு பான்மையினத்தவர்களின் பாது காப்பு கேள்விக் குறியாக இருக்கிறது. அதனால் அமெரிக் காவில் இனிமேல் பாதுகாப்பாக இருக்க முடியுமா என்று சிறுபான்மையினர் மத்தியில் பயம் ஏற்பட்டுள்ளது.

என் கணவருக்கு நேர்ந்தது போல, சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுக்க அமெரிக்க அரசு என்ன செய்ய போகிறது? என் கணவர் ஸ்ரீநிவாஸ் கடந்த 2005-ம் ஆண்டு முதுநிலை பட்டப்படிப்புக்காக டெக்சாஸ் வந்தார். அதன்பிறகு கன்சாஸ் மாகாணத்துக்கு வருவதற்கு முன்னர் 6 ஆண்டுகள் லோவா பகுதியில் வேலை செய்தார். அவ ருக்கு இதுபோன்ற மரணம் ஏற் பட்டிருக்க கூடாது. எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

இவ்வாறு சுனன்யா கூறினார்.

துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த ஸ்ரீநிவாஸின் நண்பர் மாதசாணி சிகிச்சைக்குப் பிறகு நேற்று மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். காயம் அடைந்த அமெரிக்க இளைஞர் கிரில்லட்டும் தற்போது உடல்நலம் தேறிவருவதாக கன்சாஸ் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

விசாரணையை தீவிரப்படுத்த இந்திய தூதரகம் வலியுறுத்தல்

ந்திய தூதரக செய்தித் தொடர்பாளர் பிரதிக் மாத்தூர் நேற்று கூறும்போது, ‘‘இந்திய பொறியாளர் ஸ்ரீநிவாஸ் கொலை தொடர்பான விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறையை வலியுறுத்தி உள்ளோம். அத்துடன் விசாரணையின் விவரங்களை அவ்வப்போது தெரியப்படுத்தவும் கேட்டுக் கொண்டுள்ளோம். இந்திய அரசும் அமெரிக்காவின் கவனத்துக்கு இந்தப் பிரச்சினையைக் கொண்டு சென்று இந்தியர்களுக்குப் பாதுகாப்பு மற்றும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

ஸ்ரீநிவாஸ் கொலைக்கு கண்டனம் தெரிவித்ததுடன், விசாரணையை விரைந்து நடத்த வேண்டும் என்று இந்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது’’ என்றார்.

-பிடிஐ

கன்சாஸ் கலாச்சார ஆசிரியர் வருத்தம்

ன்சாஸ் நகரத்தில் இந்திய கலாச்சாரம் பற்றி கற்றுத் தரும் அஜய் சூட் (50) என்பவர் கூறும்போது, “துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் மத்திய கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 2 பேரை சுட்டுவிட்டதாக கூறியுள்ளார். இங்குள்ள இந்திய அமெரிக்கர்களின் பின்புலம் பற்றி அமெ ரிக்காவில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு தெரியவில்லை. பெரும்பாலான அமெரிக்கர்கள் தங்கள் நாட்டை விட்டு வேறு இடங்களுக்கு செல் வதில்லை. அதனால் யார் பாகிஸ்தானி, யார் இந்தியர், யார் ஆப்கானிஸ் தானியர், சீக்கியர்கள் யார் என்பதெல்லாம் தெரிவதில்லை” என்றார்.

“கன்சாஸ் நகரில் 20 லட்சம் பேர் வசிக்கின்றனர். 2001-ம் ஆண்டுக்குப் பிறகு இங்கு இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களில் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை இந்திய அமெரிக்கர்கள் என்று கன்சாஸ் நகர இந்திய சங்கத்தின் முன்னாள் தலைவர் விஜய் அனபூரப்பா கூறினார்.

-ராய்ட்டர்ஸ்

அமெரிக்காவுக்கு அழுத்தம் தர வேண்டும்: சீதாராம் யெச்சூரி வலியுறுத்தல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று கூறியதாவது: அமெரிக்காவில் பணியாற்றி வந்த ஸ்ரீநி வாஸ் குச்சிபோட்லா என்ற இந்திய பொறியாளரை, அந்நாட்டு கடற்படை வீரர் ஆடம் பூரிண்டன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.

குறிப்பாக, சம்பவத்தின்போது ‘நாட்டை விட்டு வெளியேறு’ என கொலையாளி கூறியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நாட்டுப்பற்று என்ற பெயரில், சிறுபான்மையினர் மீது நிறவெறியுடன் தாக்குதல் நடத்துவதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

கொலைக் குற்றவாளி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகத்துக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். மேலும் வரும் காலத்தில் இதுபோன்ற சம்பவம் நிகழாமல் தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியர்கள், அமெரிக்கர்களின் உதவியால் ஸ்ரீநிவாஸ் குடும்பத்துக்கு குவிகிறது நிதி

சுட்டுக் கொல்லப்பட்ட ஸ்ரீநிவாஸுக்கு இந்தியர்களும் அமெரிக்கர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அத்துடன் ஏராளமானோர் தாராளமாக நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்தியர்கள் பலருக்கு அமெரிக்கா ஒரு கனவு தேசம். கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு வந்த இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் ஆந்திரா மற்றும் தெலங்கானாவைச் சேர்ந்தவர்கள்.

ஸ்ரீநிவாஸ் மற்றும் அவரது நண்பர் அலோக் மதாசாணி ஆகியோர் இந்தியாவில் பொறியியல் படிப்பை முடித்த பின் முதுநிலை பட்டப்படிப்புக்காக அமெரிக்கா வந்தனர். படித்து முடித்து ஓபிடி எனப்படும் பயிற்சியில் சேர்ந்து பின்னர் எச்1பி விசாவும் பெற்று அமெரிக்காவில் வேலை செய்து வந்தனர்.

இந்நிலையில்தான் ஸ்ரீநிவாஸ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள கன்சாஸ் நகர இந்தியர்கள் மற்றும் அமெரிக்கர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும் ஸ்ரீநிவாஸ் குடும்பத்துக்காக ஆன்லைனில் திரட்டப்படும் நிதிக்கு தாராளமாக பணம் அளித்து வருகின்றனர். நிதி திரட்டும் அறிவிப்பு வெளியிட்ட 24 மணி நேரத்துக்குள் இந்தியர்கள் மட்டுமன்றி அமெரிக்கர்கள் பலரும் நிதி அளித்துள்ளனர். அதனால் எதிர்பார்த்ததைவிட 3 லட்சம் டாலர் அளவுக்கு நிதி சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://tamil.thehindu.com/world/இனவெறி-தாக்குதலை-தடுக்க-என்ன-செய்ய-போகிறார்கள்-அமெரிக்க-அரசு-பதில்-அளிக்க-வேண்டும்-சுட்டுக்-கொல்லப்பட்ட-இந்தியரின்-மனைவி-கேள்வி/article9560068.ece?homepage=true

Link to comment
Share on other sites

”நமக்கு ஒரு குழந்தையாவது இருந்திருக்கலாம்!” - அமெரிக்காவில் கொல்லப்பட்ட ஶ்ரீநிவாஸ் மனைவியின் உருக்கமான பதிவு #KansasShooting

ஶ்ரீநிவாஸ் மனைவி

மெரிக்காவில்  கடந்த வாரம் சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியர்  ஸ்ரீநிவாஸ் குச்சிபொட்லாவின்  உடல் கடந்த செவ்வாய்கிழமை, அவரது சொந்த ஊரான  தெலுங்கானாவிற்கு கொண்டுவரப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, அவரது மனைவி  சூனாயானா துமாலா (Sunayana Dumala)  செவ்வாய் கிழமையன்று, தனது கணவரைப் பற்றி ஃபேஸ்புக்கில் உருக்கமான பதிவை பதிந்திருந்தார். அவற்றின் தமிழாக்கம்...  

“முகநூலில், நான் முதன்முதலில் எழுதும் பதிவு இது; மிகவும் கனத்த இதயத்துடன்  இந்த வார்த்தைகளை  எழுதுகிறேன். 2017 பிப்ரவரி 22ஆம் தேதி - புதன்கிழமையன்று இரவில், என் நண்பன், என் நம்பிக்கை, என் உயிர்தோழன், என் கணவரை இழந்தேன். அவர் எனக்கு மிகப்பெரிய வழிகாட்டி, எனக்கு உறுதுணையானவர். எனக்கு மட்டுமல்ல, அவரை சுற்றியுள்ள அனைவருக்குமே!
அவர் முகத்தில்  எப்போதுமே புன்னகை ஒட்டிக்கொண்டு இருக்கும். அனைவரையும் மதிப்பவர்; குறிப்பாக பெரியவர்களை! நாங்கள் 2006ஆம் ஆண்டு, எங்களுக்கு நெருக்கமான நண்பர்கள் மூலம் முதன்முறையாக சந்தித்தோம். பிறகு ‘ஆர்குட்’ வலைதளத்தின் நட்பாகி சாட்டிங் மூலம் பேச துவங்கினோம். பார்த்தவுடனே, இருவருக்கும் பிடித்திருந்தது; அவர் மிகவும் வசீகரமாக இருந்தார்.
இரண்டு சகோதரிகளுடன் பிறந்த நான், என் வீட்டிற்கு கடைக்குட்டி; சுதந்திரமாக வளர்க்கப்பட்டவள். நான் அமெரிக்காவிற்கு சென்று படிக்கவேண்டும் என்று நினைத்த கனவை  நனவாக்கியது, ஸ்ரீநிவாஸ்தான்! ஒரு சுதந்திர, உறுதியான பெண்ணாக  இன்று நான் இருப்பதற்கு முழுகாரணம் அவர்! திருமணத்துக்கு பிறகு நானும் அவரும் அமெரிக்காவில் உள்ள கன்சாஸில் குடியேறினோம். கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்துதான், நான் பணிக்கு செல்ல துவங்கினேன். நான்கு ஆண்டுகள் வேலைக்கு செல்லாமல், மீண்டும் பணிக்கு செல்ல வேண்டும் என எண்ணியபோது, எனக்கு தொடர்ந்து ஊக்கமளித்து, நான்  வேலைக்கு செல்ல முழுகாரணமாக இருந்தது அவர்தான்!ஸ்ரீநிவாஸ் மனைவி

அவர்  விமான போக்குவரத்து துறையில் புதுமை செய்யவேண்டும் என எப்போதும் ஆர்வமாக  இருந்தார்.  அவருக்கு  ’ராக்வெல் கொல்லின்ஸ்’ (Rockwell Collins)  என்ற நிறுவனத்தில்தான் முதல் வேலை கிடைத்தது.  பல நாட்கள், அவர்  இரவு சாப்பாட்டிற்கு மட்டுமே வீட்டுக்கு வருவார்; பிறகு, அதிகாலையில்  கிளம்பிவிடுவார். அதன்பிறகு, மறுநாள் அதிகாலை 2 அல்லது 3 மணிக்குதான் வீடு திரும்புவார்.  நாங்கள் முன்பு இருந்த, லொவா நகரத்திலுள்ள  ‘சிடர்  ரபிட்ஸ்’  என்ற அழகிய சிறிய பகுதி அவருக்கு  மிகவும் பிடிக்கும். ஆனால்,  நாங்கள் பெரிய நகரத்திற்கு இடமாற நினைத்தோம். ஏனென்றால், எனக்கு  வேலை கிடைத்து, என் கனவை தொடர வேண்டும் என நாங்கள் விரும்பினோம். இதற்கு  சிறந்த  இடமாக ’கன்சாஸ்’ இருக்கும் என்று நினைத்தோம்.  நிறைய கனவுகளுடன்  இங்கு வந்தோம். எங்களுடைய கனவு இல்லத்தை கட்டினோம்; அதில் ஒரு கதவிற்கு, அவரே  சாயம் பூசினார். அவருக்கு வீட்டில்  வேலை  செய்வது  மிகவும் பிடிக்கும். இந்த வீட்டு அவர் கட்டியது; எங்கள் குழந்தைகளுடன் ஒரு குடும்பமாக நாங்கள் வாழ, அவர் எடுத்துவைத்த முதல் அடி. ஆனால்,  எங்கள்  கனவில் ஒரு பேரிடி வந்து விழும் என எதிர்பார்க்கவில்லை. 

அன்றிரவு காவல்துறையினர் எங்கள் வீட்டிற்கு வந்து, என் கணவரை யாரோ ஒருவர் சுட்டுக்கொன்றார் என தெரிவித்தபோது, என்னால் நம்பவே முடியவில்லை. 'கண்டிப்பாக தெரியுமா', 'உண்மையைத்தான் சொல்கிறீர்களா?', 'நீங்கள் யாரைப் பற்றி பேசுகிறீர்கள் என்று தெளிவாக தெரிந்துதான் பேசுகிறீர்களா?', 'நான் அடையாளம் காண்பதற்கு ஏதேனும் படங்களை காட்டுங்கள்', 'அவர்  6’ 2” உயரத்தில் இருந்தாரா?', என  காவல்துறையினரை திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டு இருந்தேன். அவர்கள் எல்லாவற்றுக்கும் ‘ஆமாம்’ என்றே பதிலளித்துக்கொண்டு இருந்தார்கள். கன்சாஸில் வேறு யாரையும் தெரியாது என்பதால்,  டல்லாஸில்  உள்ள அவரின்  சகோதரரை அலைபேசியில் அழைத்தேன்.  காவல்துறையினர் கூறியதை அவர் சகோதரரிடம் நான்  கூறியபோது, நான்  ‘ஜோக்’ செய்வதாக அவர் நினைத்தார்.  என் நண்பர்கள் என்னுடன் இருந்தார்கள்; அவர்கள் என்னை  விட்டு ஒரு நொடிக்கூட செல்லவில்லை. எப்போதும் அன்பாக இருக்கும்  அவருக்கு கடைசியாக பிரியாவிடை சொல்ல, அவரின்  நண்பர்கள்  கலிஃபோர்னியா, நியூ ஜெர்ஸி, டென்வர், லொவா, மின்னேசோடா ஆகிய இடங்களில் இருந்து வந்திருந்தார்கள். 

இந்த மார்ச்  9-ஆம் தேதியுடன், அவருக்கு 33 வயதாகி இருக்கும். அன்று நாங்கள்  நியூஜெர்ஸியில், அவரின் உறவினருக்கு நடக்கவிருந்த நிச்சயதார்த்ததிற்கு  செல்லவிருந்தோம். அதற்காக, கடந்த வாரயிறுதியில்  ஷாப்பிங் செய்ய திட்டமிட்டிருந்தோம். ஆனால், தற்போது எல்லாமே தலைகீழானது. அவரின் சவபெட்டியுடன் நான் இந்தியா  திரும்பிக்கொண்டு இருந்தேன். ஒரே மாலையில்,  நான் ‘மனைவி’ என்ற அங்கீகாரத்திலிருந்து  ‘விதவை’யானதை என்னால் இன்னும் ஜீரணித்துக்கொள்ளமுடியவில்லை. 

அவருக்கு  குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும்.  எங்கள் குடும்பத்தை விரிவுப்படுத்த வேண்டும் என  சில வாரங்களுக்கு முன் தான், மருத்தவரை  சந்தித்தோம். 'நாம் ‘இன்-விட்ரோ’ முறைப்படி குழந்தைப்பெற்றுக்கொள்ள வேண்டுமானால், பணத்தை சேமிக்க வேண்டும்' - இதுதான் அவர் என்னிடம்  கடைசியாக பகிர்ந்துக்கொண்ட வார்த்தைகள்! உண்மையிலேயே, நமக்கு ஒரு குழந்தை இருந்திருக்க வேண்டும் உன்னைப் போல் அவன் இருந்திருக்க வேண்டும். அவனைப் பார்த்துக்கொண்டு, உன்னைப் போலவே வளர்த்திருப்பேன். ஸ்ரீனு, என் காதலே, நீ இல்லாத அந்த வெற்றிடத்தை எப்படி  நிரப்பப்போகிறேன் என்று தெரியவில்லை. ஆனால், நிச்சயம் உன் பெருமையை தாழ்த்தும்படி நடந்து கொள்ள மாட்டேன். என்னுடைய முக்கியமான  மின்னஞ்சல்கள் அனைத்தையும் நீதான்  திருத்தம் செய்வாய். ஆனால், இன்று முதல் முறையாக, அதனை  நானே செய்கிறேன். வேடிக்கையாக இருக்கிறது. 

நான் உன்னை  காதலிக்கிறேன்... நீ  எப்பொழுதும் எனக்கு சொந்தமானவன்! கடைசியாக ஒரு கேள்வி - அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டவர்கள்  அனைவரிடமும் இருக்கும் கேள்வி இது. நாங்கள் இந்த மண்ணைச் சேர்ந்தவர்களா? நாங்கள் கனவு கண்டுக்கொண்டிருக்கும் அதே  நாடா இது? எங்கள் குடும்பத்தை, குழந்தைகளை வளர்ப்பதற்கு இது இன்னும்  பாதுகாப்பான இடமாகத்தான் இருக்கிறதா?”, என்று கேட்டு அந்த பதிவை முடித்திருந்தார். 

மேலும், அவர் பிரதமர் நரேந்திர மோடி,  வெளியுறவுத்துறை அமைச்சர்  சுஷ்மா ஸ்வராஜ், ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார். அவர் மீண்டும் அமெரிக்கா செல்வார் எனவும் அந்த பதிவில்  எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

மனம் ஆறட்டும் சூனாயானா துமாலா...

http://www.vikatan.com/news/tamilnadu/82588-atleast-we-would-have-had-a-child----srinivass-wife-writes-an-emotional-fb-post.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.