Jump to content

திரை விமர்சனம்: காஸி


Recommended Posts

திரை விமர்சனம்: காஸி

 
ghazi_3134758f.jpg
 
 
 

நான்கு போர்களைச் சந்தித்துள்ள இந்தியாவில் போர் குறித்த படங்கள் மிகவும் குறைவு. இந்தப் பின்னணியில் பார்க்கும்போது சங்கல்ப் ரெட்டி இயக்கியுள்ள ‘காஸி’ முக்கியத்துவம் பெறுகிறது.

1971-ம் ஆண்டு நடந்த போருக்கு முந்தைய காலகட்டம். கிழக்கு பாகிஸ் தானில் நடக்கும் மக்கள் போராட்டத்தின் மீது பாகிஸ்தான் அரசு கடுமையான ஒடுக்குதலை நிகழ்த்துகிறது. எந்த நேரமும் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழல். இந்தச் சமயத்தில் இந்தியாவின் கிழக்குக் கடலோரப் பகுதியில் பாகிஸ்தான் அதிரடித் தாக்குதல் நடத்தவிருக்கிறது என்னும் செய்தி கடலோரக் காவல் படைக்குக் கிடைக்கிறது.

பாகிஸ்தானின் திட்டத்தைக் கண்டறிந்து அதை முறியடிக்க வேண்டும் என்பதற்காக கேப்டன் ரன்விஜய் சிங் (கே கே மேனன்) தலைமையில் எஸ் 21 என்னும் நீர்மூழ்கிக் கப்பல் அனுப்பப்படுகிறது. கேப்டன் ரன்விஜய் சிங் மிகுந்த திறமைசாலி. ஆனால், எதிரியை அழிக்கும் விஷயத்தில் விதிமுறைகளைப் பற்றிக் கவலைப்படாமல் செயலில் இறங்கிவிடக்கூடியவர். இவ ரைக் கட்டுப்படுத்தி வைக்கவேண்டும் என் பதற்காக அர்ஜுன் வர்மா (ராணா டகுபதி) என்னும் அதிகாரியையும் உடன் அனுப்பு கிறது காவல் படையின் தலைமை. கூடவே தேவராஜ் (அதுல் குல்கர்னி) என்னும் சீனியர் அதிகாரியும் இருக்கிறார்.

வங்காள விரிகுடாவில் பாகிஸ்தானின் காஸி என்னும் நீர்மூழ்கிக் கப்பல் இருப்பதைக் கண்டுபிடிக்கும் கேப்டன், அந்தக் கப்பலைத் தாக்கத் திட்டமிடுகிறார். அதற்காக அபாயகரமான ஆட்டத்தில் இறங்கவும் தயாராகிவிடுகிறார். ராணா அதைத் தடுக்கிறார். மேலிடத்திலிருந்து உத்தரவு வரும்வரை காத்திருக்க வேண்டும் என்கிறார். கேப்டன் அதைக் கேட்பதாக இல்லை.

இதற்கிடையே காஸி கப்பல் பொருத்திய கண்ணி வெடியில் எஸ் 21 சிக்கிக்கொள்கிறது. இதனால் கப்பலின் நடமாட்டம் பாதிக்கப்படுகிறது. கப்பலுக்குள் உயிர்ச் சேதமும் நிகழ்கிறது. காஸி அடுத்தடுத்து குண்டுகளைப் பொழிகிறது. ஒரு கட்டத்தில் கப்பலின் பொறுப்பு ராணாவிடம் வருகிறது. போரைத் தவிர்க்க நினைக்கும் அவர் அந்தச் சந்தர்ப்பத்தில் எப்படி நடந்துகொள்கிறார்? எஸ் 21 தப்பித்ததா? காஸி என்னவாயிற்று?

2 நீர்மூழ்கிக் கப்பல்களை வைத்துக் கொண்டு பார்வையாளர்களை 2 மணிநேரத்துக்கு முழுமையாகக் கட்டிப் போடுகிறார் சங்கல்ப் ரெட்டி. திரைக்கதையும் படமாக்கப்பட்டுள்ள விதமும் போர்க்களத்தை அருகில் இருந்து பார்ப்பதுபோன்ற உணர்வை ஏற்படுத்திவிடுகின்றன. குண்டுகள் ஏவப் படும்போது கப்பலுக்குள் ஏற்படும் பதற்றம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது. யுத்த வியூகங்கள் பார்வையாளர்களின் மனங்களையும் ஆக்கிரமிக்கின்றன.

நெருக்கடி, ஆவேசங்கள், மனிதர்களின் மாறுபட்ட இயல்புகளால் எழும் மோதல்கள், தேசப்பற்றும் உயிர்ப் பற்றும் முரண்படும் தருணங்கள் ஆகியவற்றை அபாரமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். கேப்டனுக்கும் அவரது சகாவுக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் பொருத்தமாக உள்ளன.

போர்க் கப்பல் இயங்கும் விதம், நெருக்கடிகளின்போது அது செயல்படும் விதம், அதற்கான தொழில்நுட்ப அம்சங்கள், கப்பலில் இருக்கும் போர் வீரர்களின் மனநிலை ஆகியவை துல்லியமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. இயக்குநரின் களப் பணி பிரமிக்கவைக்கிறது. பாத்திர வார்ப்புகளும் நடிகர்களின் தேர்வும் கச்சிதம். நட்சத்திரங்களுக்கேற்ப கதை யைச் சிதைக்காமல் போர்ச் சூழலை விவரிப்பது பக்குவமான அணுகுமுறை.

காஸி நீர்மூழ்கிக் கப்பலுக்கு என்ன ஆனது என்பது வரலாற்றில் மர்மமா கவே உள்ளது. மோதலுக்கான சாத்தியக் கூறுகளையும் 1971 போரின் பிற தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டு அந்த மர்மத்தைக் கட்டுடைத் திருக்கும் இயக்குநரின் கற்பனைத் திறன் பாராட்டத்தக்கது.

படம் 2 மணிநேரத்துக்குள் முடிந்து விடுகிறது. எனினும் படத்தின் நீளத்தை இன்னும் குறைத்திருக்கலாம். குறிப்பாக, இரண்டாம் பாதியில் சில இடங்களை மேலும் இறுக்கமாக அமைத்திருக்கலாம். கிழக்கு பாகிஸ்தானிலிருந்து அகதியாக வரும் தப்ஸிக்கும் அவர் குழந்தைக்கும் கதையில் எந்த முக்கியத்துவமும் இல்லை. கடைசிக் காட்சியில் ராணா மேற்கொள்ளும் சாகசம் படத்துடன் ஒட்டவில்லை. ஆனால் படத்தின் ஒட்டுமொத்த நேர்த்தியுடன் ஒப்பிட்டால் இவை மிகவும் சிறிய குறைகள் என்பதையும் சொல்ல வேண்டும்.

மதியின் ஒளிப்பதிவும் கே-யின் பின்னணி இசையும் போர்ச் சூழலை உருவாக்குவதில் செவ்வனே செயல் பட்டிருக்கின்றன. ராணா டகுபதி, கே கே மேனன், அதுல் குல்கர்னி, பாகிஸ்தான் கமாண்டராக வரும் ரஸாக் ஆகியோர் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கே கே மேனனின் உடல்மொழியும் அலட்சியமான முகபாவனைகளும் தனித்து நிற்கின்றன. நாசர், ஓம் பூரி ஆகியோர் மிகச் சிறிய வேடங்களில் சிறப்பாக நடித்துப் படத்தின் நம்பகத்தன்மைக்கு வலு சேர்க்கிறார்கள்.

தொடக்கக் காட்சிகளில் பின்னணியில் கம்பீரமாக ஒலிக்கும் நடிகர் சூர்யாவின் குரல் படத்துக்குக் கூடுதல் மதிப்பை அளிக்கிறது. தெலுங்கு, இந்தி, தமிழ் மொழிகளில் வெளியாகியிருக்கும் இந்தப் படத்தில் டப்பிங் பெரிதாக உறுத்தாமல் இருப்பது ஆறுதல்.

நேர்த்தியும் துல்லியமான சித்தரிப்பும் கொண்ட ‘காஸி’, இரண்டு மணிநேரம் கப்பலுக்குள் இருந்த உணர்வை ஏற் படுத்துகிறது. மிகைப்படுத்தலோ செயற்கை யான நாடகத்தன்மையோ இல்லாமல் சிறந்த காட்சியனுபவத்தை வழங்குகிறது.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/திரை-விமர்சனம்-காஸி/article9549688.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.