Jump to content

இரண்டொழிய வேறில்லை


Recommended Posts

இரண்டொழிய வேறில்லை

 

 
lakshmi_short_story

“அப்பா! அத்தான் கிட்டே இருந்து கடுதாசி வந்திருக்கு.”- செம்பவளவல்லி படபடப்புடன் அந்தக் கடிதத்தைப் பிரித்தாள்.
இருளப்பன் மகள் அருகில் நெருக்கமாக நின்றபடி, “முதல்ல படி, பாப்பம். செந்தில் என்ன எழுதி இருக்கு?”
உள்ளம் மகிழ்ச்சியால் துள்ள, கடிதத்தைப் பலமுறை மனதிற்குள் படித்துப் பார்த்தாள் செம்பவளம்.
“அன்பு பவளம்!
இப்போது எனது ஐ.ஏ.எஸ் பயிற்சி முடிந்து எங்களை வேலைக்கு அனுப்பத் தீர்மாணிக்கும் சமயம், நமது ஊர் எல்லைக்காளியை மனப்பூர்வமாக வேண்டிக்கொள். விரைவில் பெரிய கலெக்டராக, நம்ம ஊரிலேயே உன் அருமை அத்தான் வருவேன்!
பிறகு கேட்க வேணுமா? நமது சபதம் நிறைவேறும்.
ஆசை அத்தான்’ செந்தில்.”
“ஏயப்பா! செந்தில் கலெக்டரா வருவானா? ஏ குட்டி, செம்பு! நல்லா காக்கி உடை எல்லாம் போட்டுக்கிட்டு வருமில்ல?” இருளப்பன் மீண்டும் பெருமையாகக் கேட்டான்.
செம்பவளம் விழுந்து விழுந்து சிரித்தாள். “அவரு போலீஸ் இல்லேப்பா, கலெக்டர் வேலை, காக்கி போட வேணாம். ஆனா நல்ல சட்டை ஜோரா போடுவாரு.” உற்சாகமாக விவரித்தபடி, அந்தக் கடிதத்தை நினைவாக மாடப்பிறையில் வைத்தாள்.
முளகுப்புறம், வெகு சிறிய கிராமம் தான் , இன்னமும் பழைய பெருமையிலும், பண்பாடு என்று சொல்லிக்கொள்ளும் சில நம்பிக்கைகளிலும் ஊறிக் கிடந்த மக்கள். விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு ஒரு சில பெரிய வீடுகள் இருந்தன. சேரிப்புறத்தில் குடிசைகள் அதிகம். அதில் வாழும் மக்களும், அறியாமை காரனமாக பெருகிப் போய்விட்டிருந்தனர்.
இருளப்பன் தாழ்த்தப்பட்டோர் இனம். அதாவது தீண்டத்தகாதவன், தொழில்முறையில், செருப்பு தைப்பது அவனது பரம்பரைத் தொழில். கிராமத்து நெடுஞ்சாலையில், பெரிய பண்ணை அல்லது மைனர் பிள்ளைவாளை நெடுந்தூரம் கண்டுவிட்டால், “சாமி! கும்புடுறேனுங்க” என்று காலில் போட்ட செருப்புகளை உதறிக் கையில் பிடித்தபடி பணிவன்போடு கூழைக் கும்பிடு போடும் ஒரு பரட்டைத் தலையன்.
அவனது மனைவி மூக்காத்தா, செம்பவளவல்லியைப் பெற்றுப் போட்டுவிட்டு, வைத்திய உதவி இல்லாது உயிர் விட்ட சமயம். குழந்தை செந்திலுடன் அக்காள் ராமக்கா, அவனது குடிசையைத் தேடி அடைக்கலம் புகுந்து விட்டாள்.
ராமக்காவின் கணவன், பக்கத்து நகரத்து முனிஸிபாலிடியில் ‘பியூன்’ வேலை பார்த்தவன். அவன் திடீரென நோய் கண்டு இறக்கும் தறுவாயில் மனைவியைக் கூப்பிட்டான்.
“இத பாரு ராமக்கா! நான் ரொம்ப நாள் இருக்கமாட்டேன். அதனால ஒண்ணு மட்டும் நல்லா கவனம் வச்சுக்க. நம்ம செந்திலை நல்லாப் படிக்க வை. இப்ப அரசாங்கத்தில் நம்மளுக்கு சலுகைகள் தராங்க. புத்தி சாமர்த்தியமா பிழைச்சுக்க. அவனை எப்பாடு பட்டாவது பெரிய படிப்பு படிக்க வச்சிடு.”
ராமக்கா அழுது முடித்த கையோடு, தம்பி வீடு திரும்பியவள், செந்திலை அருகிலிருந்த பள்ளியில் சேர்த்தாள். குழந்தை முதல் பழகிய மிக நெருங்கிய நண்பர்களாகத்தான் செந்திலும், பவளமும் வளர்ந்தார்கள்.
”பவளமும் படிக்கணும், அப்பத்தான் பள்ளிக்கூடம் போவேன்” என்று அடம் பிடித்தான் செந்தில்.
தாழ்த்தப்பட்டவர்களை முன்னேறச் செய்ய அரசாங்கம் வசதி செய்துள்ள நிலையில் செம்பவளவல்லியும் அத்தானுடன் போட்டி போட்டுக் கொண்டு படித்தாள்.
“பொட்டச்சிக்கு எதுக்கு படிப்பு? நாளைக்கு உனக்குத் தானே அவளைக் கட்டிக்குடுக்கப் போகுது.” இருளப்பன் மறுத்துப் பார்த்தான்.
பெரிய பண்ணை பரமசிவம் கூட, “என்னலே! மவளைப் படிக்க வைக்கறியாமில்லே. பேசாம உன் அக்கச்சி மவனுக்குக் கட்டிவைடா” என்று மீசையைத் தடவியபடி உபதேசித்தார்.
“வயசு வந்த பொண்ணுகளை வீட்டோட வக்கறது தான் மருவாதை. காலம் கெட்டுக் கிடக்குது தம்பி ஏதோ ரெண்டு எழுத்துப் படிச்சிட்டுது போதும்.” அத்தை ராமக்கா கூட ஒரு நிலையில் தடுக்கப் பார்த்தாள்.
ஆனால் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் கல்யாணராமன் பெரிய காந்தியவாதி, செம்பவளமும், செந்திலும் அவர்களது பள்ளிக்குப் பெருமை தேடித் தரும் மானவச் செல்வங்கள் என்று அவர்களை ஊக்குவித்தார்.
ஒருமுறை பணிவுடன் இருளப்பன் அவரை அணுகினான். ‘ஐயா! செம்புக்குப் படிப்பு போதுங்க. அவன் படிக்கட்டும். இனிமே எங்க சாதியில இதுக்கு மேல படிக்க வச்சா ரொம்பப் பாடுங்க.” என்றான் வாயைப் பொத்தியபடி.
“இருளா! நீ ஏன் கவலைபடறே? உங்க சாதி சனமெல்லாம் படிச்சு முன்னுக்கு வரனும்னு தானே இவ்வளவு முயற்சிகள் நடக்குது. பேசாம படிக்கவை” என்றார் கல்யாணராமன்.
“இல்லிங்க! செந்திலைத் தானே செம்பு கட்டிக்கப் போவுது. போதுங்க.” பிடிவாதமாகக் கூறினான்.
“இதோ பாரு இருளா! நல்லா படிக்கற குழந்தையோட அறிவை வீணாக்காதே. நீ பேசாம போ.” அதட்டி அனுப்பினார் அவர்.
செந்தில் பத்தாவதில் முதலாவதாகத் தேர்வு பெற்றான். அருகிலிருந்த நகரத்துத் கல்லூரியில் சேர்ந்து உபகாரச் சம்பளத்தில் பட்டப்படிப்பு கடைசி வருடம் படித்த சமயம்.
செம்பவள வல்லி பத்தாவதில் பள்ளி இறுதிப் பரீட்சையில் மாகாணத்திலேயே முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றிருந்தாள்.
செந்திலுக்கும், கல்யாணராமனுக்கும் ஏகப் பெருமை. “ ஏய் பவளம்! நீ கட்டாயம் காலேஜ் படிக்கணும். நாம நல்லா படிச்சிட்டு, பிறகு இதே ஊருக்கு வந்து படிச்ச தம்பதிகளாய் வேலை செய்யணும். தாழ்த்தப்பட்டவங்களை முன்னேத்தனும். என்றான் செந்தில்.
செம்பவளவல்லி முகமெல்லாம் சிவக்க, உச்சி குளிர்ந்து போனாள்.
எனக்குத் தெரிஞ்சவா ஒரு பெரிய மனுஷர் இருக்கார். அவருக்கு லெட்டர் எழுதிப் போடறேன். கட்டாயம் செம்பவளம் படிக்க உதவி செய்வார்.” கல்யாணராமன் ஆசி கூறினார்.
ஆனால், அந்தச் சம்பவம் மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் செம்பவளம், இப்படி வீட்டில் இருந்திருக்க மாட்டாள். மனதில் சிறு வேதனையுடன் அவள் மீண்டும் நினைவு கூர்ந்தாள்.
ஊர்ப்பொதுக் கிணற்றில் சேரி ஜனங்கள் சாதாரனமாக நீர் எடுக்க அனுமதி கிடையாது. ஜாதி இல்லை. சமம் என்றெல்லாம் பேசும் இந்தக் காலத்திலும், முளகுப்புறம் கிராமம் போன்ற மிகச் சிறிய கிராமங்களில் இந்த நியதி இருக்கத்தான் செய்தது.
கோடை நாட்களில் குடி தண்ணீருக்கான சேரி கிணறு வற்றிக்கிடந்தது. அதை விட்டால் மூன்று மைல்கள் நடந்து சென்று மலைச்சுனையிலிருந்து நீர் சுமந்து வர வேண்டும், படித்த பெண்ணான செம்பவளத்திற்கு இந்த நியதி. அநீதி என்ற ஆத்திரம் ஏற்பட்டது இயற்கை.
“ஏன்? நாமெல்லாம் மனுஷங்க இல்லியா? நமக்குப் பசி தாகம் இல்லியா?” வெகுண்டாள்.
“வேணாம் குட்டி செம்பு! பழக்கத்தில இல்லாததை நீ விபரீதமா செய்யாதே! பஞ்சாயத்துக் கூடி ஏதாச்சும் தகராறு செய்வாங்க.” இருளப்பன் பயந்தபடி மகளைக்க் எஞினான்.
அத்தை ராமக்காளுக்குக் கடும் காய்ச்சல். ஊர்ச்சுனை வரை போய் நீர் எடுத்து வர இயலாத நிலை. துணிச்சலாக, பொதுக்கிணற்றிலிருந்து செம்பவளம் நீர் எடுத்து வந்து விட்டாள்.
“என்னலே! இருளா! படிச்ச திமிரு உம்மவளுக்கு?” பெரிய பண்ணை பரமசிவம் மீசையை முறுக்கினார்.
கிழவன் இருளப்பன் அவர் காலில் விழுந்து கெஞ்சி மன்னிப்பு பெற்றான். மகளின் அடாத செயலுக்காக அபராதம் செலுத்தினான்.
அன்று தான் செம்பவளத்தின் மனதில் ஒரு ஆவேசம் பிறந்தது. விடுமுறைக்காகவும், காய்ச்சலில் அவதியுறும் தாயைப் பார்க்கவும் வந்த செந்திலிடம் சபதம் விட்டாள்.
“அத்தான்! இதே ஓர்ல நாம, பெரிய ஆபீஸரா வரணும். இதே பொதுக்கிணறுல நம்ம மக்களும் தண்ணீர் எடுக்க உத்தரவு போடனும்.”
“னீ ஏன் கவலைப்படறே பவளம்! நாம் பெரிய மாவட்ட கலெக்டரா வருவோம். வந்து நீ சொன்னதை நிறைவேத்துவோம். ஜாதி இரண்டொழிய வேறில்லை. ஆண், பெண் இரண்டே ஜாதி தான்னு நிரூபிப்போம்: என்றான் ஆங்காரமாக.
அத்தை காய்ச்சல் அதிகமாகி இறந்து போனாள். செந்தில் முதலாவதாகத் தேறிப் பட்டம் வாங்கி ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி விட்டு வந்திருந்தான்.
கல்யாணரானம் அவனைப் பாராட்ட வந்திருந்தவர் செம்பவளவல்லியைப் பார்த்து புன்னகைத்தார். “ஏம்மா! நீ ஏன் மேல படிக்கக் கூடாது?”
“நான் படிக்கத் தயார், ஆனா முதல்ல அத்தானோட படிப்பு முடியட்டுங்க, அவர் கலெக்டரா வந்து இங்க தன்கிட்ட பிறகு தாங்க நான் படிக்கப் போறேன். அதுவரைக்கும் எனக்காக நீங்க செய்யப்போற சிபாரிசு உதவி எல்லாம் அத்தானுக்கே செய்யுங்க ஸார்” என்றால் குழைவுடன்.
“ஏன்? உங்கத்தானைக் கட்டிக்கப் போறதுக்காக சொல்றியாம்மா.” அவர் வேடிக்கையாகச் சிரித்தார்.
“இல்லே ஸார்! ஒரு ஆண் முன்னுக்கு வந்தா ஒரு சமூகத்தையே காப்பாத்துவான். நான் பெண் தானே? ஒரு குடும்பத்திலே அடங்கிப் போறவ” என்றால் முறுவலித்த படி.
“தப்பும்மா! ஒரு பெண் படிச்சிருந்தா ஒரு பல்கலைக் கழகமே அங்கே உருவாகி விடும் தெரியுமா?”
“நான் அவ்வளவு படிச்சவ இல்லே சார்! எதுக்கும் அத்தான் முதல்ல ஏணி மேலே ஏறி மேல போகட்டும், பிறகு நான்...” முடித்து விட்டாள் அவள்.
இப்போது செந்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகி விடுவான். நெஞ்சு கொள்ளா மகழ்ச்சி. நேராக ஆசிரியரிடம் இந்தச் சந்தோச சமாசாரத்தைச் சொல்ல வேண்டும். பரபரத்தாள்.
“அத்தானுக்கு கடிதம் எழுத வேணுமே!” அவளே தபால் ஆபீஸிற்கு ஓடிச் சென்று கடிதம் எழுதிப் போட்ட பிறகு தான் ஓய்ந்தாள்.
மாதங்கள் பறந்தன. முளகுப்புறம் கிராமம் முழுதும் செந்தில் டெபுடி கலெக்ட்டராகி விட்ட செய்தி பரவியது.
இருளப்பன் மாரை நிமிர்த்தி கொண்டு ராஜ நடை போட்டான்.
“பயமகன் புத்துசாலி. பாவம்! எங்கக்கா பார்க்கக் குடுப்பினை இல்லாம போய்ச் சேர்ந்தா.” அங்கலாய்த்தான். நாட்கள் பறந்தன. செந்தில் மிகவும் வேலை இருப்பதாக எழுத ஆரம்பித்தான்.
”ஏன்லே இருளா! உன் செந்தில் ஐ.ஏ.எஸ் ஆபீஸராமே! நம்ம ஊருக்கு ‘ டெபுடி கலெக்ட்டராக’ வரப் போறாராமே!’ பரமசிவம் மீசையை முறுக்காமல் வியந்தார்.
“ராமே!” தனக்குள் ‘ குப்பெனச் சிரித்த செம்பவளம் “பதவி வந்ததும் மனுஷங்க மரியாதையும் சேத்துக்கறாங்க...” என்று நினைத்தாள்.
அன்று செந்தில் ஊருக்கு வரப்போகும் செய்தி வந்திருந்தது. மாவிலைத் தோரணங்கள் சகிதம், வரவேற்பு வளையங்கள்!
“செந்தமிழ்ச்செல்வனே வருக!”
“ஊரின் தவப்புதல்வா வருக!”
என்ற எழுத்துக்கள் காரில் வந்து இறங்கப் போகும் டெபுடி கலெக்டரைக் கொண்டாட மலர் மாலையுடன் பரமசிவம் முன்னால் நின்று கொண்டார். இருளப்பனும், செம்பவளமும் ஒரு ஓரமாக நின்றனர். கல்யாணராமனும் அருகாக நின்றார்.
கார், சாலை மண்ணை வாரி இறைத்தபடி வந்து நின்றது. செம்பவளம், கன்னம் சிவக்க, கண்களைக் கொட்டியபடி ஆசை அத்தானை நிமிர்ந்து பார்த்தாள்.
முன்னைவிட அழகாக, கம்பீரமாக, அலங்காரமாக வரிசைப் பற்கள் தெரிய செந்தில் காரை விட்டு இறங்கினான். பரமசிவம் பாய்ந்து சென்று மாலையைப் போட்டு பெரிய கும்பிடு போட்டார்.
அருகில் இறங்குவது... செம்பவளம் கண்களைக் குறுக்கினாள். மிக அழகாக, ஒய்யாரமாக ஒரு பெண்.
வேகமாக, செம்பவளத்தருகே வந்தான், “ஹலோ, நிஷா! இது தான் என் மாமன் மகள் செம்பவளம், மிகவும் அறிவுள்ள பெண் என்று கூறுவேனே அவள்... செம்பவளம்! இது தான் நிஷா ஐ.ஏ.எஸ் எனது மனைவி” என்றான் செந்தில் நிதானமாக.
காலடியில் பூமி பிளந்து ‘படார்’ என்ற ஓசையுடன் அவளை விழுங்கியது போல் நிலைகுலைந்து போனாள் செம்பவளம். நெஞ்சில் ஓங்கி யாரோ அறைந்து அவளது கனவுகளை சுக்குகூறாகச் சின்னாபின்னமாக்கியதைப் போன்ற பயங்கர உணர்வால் ஆடிப்போனாள், வாயில் வார்த்தைகள் இறைந்து போயின.
இருளப்பன் உதடுகள் கோபத்தால் துடித்தன. “னீ செய்தது நல்லா இருக்கா?”
“ஸ்! கலெக்ட்டர்! பேசாதே. போ அப்பால” பரமசிவம் அதட்டினார்.
“மாமா! நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து பயிற்சிக்குப் போனோம். அவங்கப்பா, மந்திரி சபையிலே பெரிய அதிகாரி. நிஷா ரொம்ப நல்லவ.” செந்தில் முடிக்கு முன் “ ஹாய்!” நிஷா கையை உயர்த்தினாள். விரலில் வைர மோதிரம் மின்னியது.
“வாங்க மாமா! கார்லே ஏறுங்க...ம்! செம்பவளம். எங்கூட வாங்க. உபசரித்தான் அவன்.
செம்பவள வல்லி கண்களைத் துடைத்துக் கொண்டாள். அருகில் நின்ற கல்யாணராமனிடம் கூறினாள். ஸார் அவங்க எல்லாம் மேல் சாதிங்க, கார்ல போகட்டும். நாங்க கீழ்சாதி. கீழயே இருக்கோம். வாங்க. நாம போகலாம்.”
“பவளம்!” செந்தில் குற்ற உணர்வுடன் நின்றான்.
“கூப்பிடாதீங்க, நீங்க ஏணி மேல ஏறிப் போயிட்டீங்க. நான் இனிமேத்தான் ஸார் உதவியால ஏணி மேல ஏறி வரணும். கட்டாயமா நானும் ஒரு கலெக்ட்டரா வருவென். ஏன்னா, சாதி இரண்டொழிய வேறில்லைன்னு அன்னிக்கு சொன்னீங்களே. அந்த சாதி இரண்டு தான்னு இப்ப எனக்கு நல்லாப் புரிஞ்சு போயிட்டுது. உயர்வு, தாழ்வுங்கறது கூட, நமக்குள்ள ஏற்படும்னு விளங்கிட்டுது.” தழ தழத்தது அவளது குரல்.
கல்யாணராமன் ஆதரவாக அவளைப் பார்த்தார். “அழாதே அம்மா. நான் சிபாரிசு செய்து உன்னை மேலே படிக்க வைக்கிறேன்.”
”நிச்சயமா படிப்பேன். ஏன் ஸார்? இப்ப சாதியில இரண்டு தான் இருக்குதுன்னு தெரியுமா உங்களுக்கு?” கரகரத்தாள் அவள்.
“என்னம்மா சொல்றே?”
“ஆமாம் ஸார்! இப்பல்லாம் பணக்காரன், ஏழைன்னு ரெண்டே சாதி தான் இருக்குது தெரியுமா?” அவள் விம்மினாள்
செந்தில் தலையைக் குனிந்தபடி ஊருக்குள் நுழைந்தான்.

 

http://www.dinamani.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.