Sign in to follow this  
நவீனன்

எங்கே போகும் பன்னீர் பாதை?

Recommended Posts

எங்கே போகும் பன்னீர் பாதை?

 

ழைய பன்னீர்செல்வமாக அல்ல... புது பன்னீர்செல்வமாக வந்திருக்கிறார் ஓ.பி.எஸ். ‘மாண்புமிகு சின்னம்மா’ எனச் சொல்வதற்கு இத்தனை நாட்கள் தயங்காதவர்... அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக சசிகலாவை நியமித்த தீர்மானத்தோடு சென்று, அவருடைய காலில் விழுந்து பணிந்தவர்... அவருக்காக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தவர்... எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் அந்தப் பதவிக்கு சசிகலா பெயரை முன்மொழிந்தவர்... இத்தனை நாட்கள் கழித்து ஏன் கலகம் செய்கிறார்? அவரைப் பின்னால் இருந்து இயக்குவது யார்? அவரோடு இருப்பவர்கள் எல்லோரும் அப்பழுக்கு அற்றவர்களா?

கேள்விகள் பல எழுந்தாலும், அ.தி.மு.க-வின் எதிர்காலம் பன்னீரோடு பிணைந்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

‘அ.தி.மு.க-வில் யாருக்கு எத்தனை எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு’ என்ற நம்பர் விளையாட்டு, ‘ஆட்சி யாருக்கு’ என்பதை நிர்ணயிக்க வேண்டுமானால் உதவலாம். ‘செங்குத்தான பிளவு’, ‘வட்டமான பிளவு’ என வர்ணிக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கலாம். ஆனால், பதவியில் இருப்பவர்கள் ஒரு பக்கமாகவும், தொண்டர்கள் இன்னொரு பக்கமாகவும் திரண்டிருப்பது மறுக்க முடியாத உண்மை. ஒரு கட்சியின் பெரும்பான்மைத் தொண்டர்களாலும், எல்லா தேர்தல்களிலும் அந்தக் கட்சிக்கு வாக்களிக்கும் அனுதாபிகளாலும் நிராகரிக்கப்படும் ஒருவரே அந்தக் கட்சியின் பொதுச்செயலாளராகவும், சட்டமன்றக் கட்சித் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்படுவதுதான் ஜனநாயகத்தின் விசித்திரம்.

p30.jpg

காரணம் எனக் குறிப்பிட்டு எதையும் சொல்லத் தெரியாமலேயே, நிறைய பேர் சசிகலாவை வெறுக்கிறார்கள். தமிழகத்தில் எந்த ஓர் அரசியல் கட்சித் தலைவருக்கும் இவ்வளவு எதிர்ப்பு இருந்ததில்லை என கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன.

இதற்குப் பல வகைகளில் ஜெயலலிதாவே காரணம். தோல்விகளின்போதும், பிரச்னைகள் எழும்போதும் பழி போடுவதற்கு ஜெயலலிதாவுக்குக் காரணங்கள் தேவைப்பட்டன. ‘நான் நம்பி என்னோடு வைத்திருந்தவர்கள் தவறு செய்துவிட்டார்கள்’ என்று சசிகலாவையும் மன்னார்குடி உறவுகளையும் குற்றம்சாட்டி இரண்டு முறை ஒதுக்கிவைத்தார்; வழக்குகள் பாய்ந்தன; பல கைது நடவடிக்கைகளும் நிகழ்ந்தன. ‘ஜெயலலிதா நல்லவர்தான். அவருடைய பெயரைச் சொல்லி, தவறுகளை எல்லாம் செய்தது சசிகலாவும் மன்னார்குடி குடும்பமும்தான்’ என்று ஜெயலலிதா ‘புனிதர்’ ஆக்கப்பட்டார். வில்லன் வேடத்தில் நடித்தவர் திடீரென ஹீரோ ஆவது எப்படி சாத்தியமில்லையோ, அந்தக் கதைதான் சசிகலாவுக்கும்!

பொதுவாக நிழல் அரசியல் செய்பவர்கள் நேரடியாக வெளிச்சத்துக்கு வருவதை மக்கள் விரும்புவதில்லை. மறைமுகமாக அதிகாரத்தைப் பிரயோகிப்பவர்கள், அதற்காக எந்த எல்லைக்கும் சென்று அச்சுறுத்தல் நிகழ்த்துபவர்கள், ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தால் அதன் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என மக்கள் அஞ்சுவது இயல்பு. கோடிகளில் புரள்பவர்களை, எளிய மனிதர்கள் தேர்தல்களில் தோற்கடிப்பதற்குக் காரணம் இதுதான்.

ஊருக்கு ஊர் ‘தீபா பேரவை’ என பலர் ஆரம்பித்தார்கள். ஜெயலலிதாவின் படத்தோடு தீபா படத்தைப் போட்டு ஃபிளக்ஸ் வைத்தார்கள். இவர்களில் பலரும் தீபாவைப் பார்த்தவர்கள் கிடையாது. தீபா அரசியலுக்கு வருவாரா என்பதும் இவர்களுக்குத் தெரியாது. சொல்லப் போனால், தீபாவுக்கே ‘இவ்வளவு பெரிய வரவேற்பு நமக்குக் கிடைக்கும்’ என்ற எதிர்பார்ப்பு இருந்திருக்காது. ஆனால், இதெல்லாம் தீபாவுக்குக் கிடைக்கும் ஆதரவு இல்லை; சசிகலாவை எதிர்ப்பவர்கள் தங்களுக்கு ஒரு தலைமை வேண்டும் என தீபாவை அந்த இடத்தில் வைத்துக்கொள்கிறார்கள்.  

இப்படி சசிகலாவுக்கு எதிரான மனநிலையோடு உதிரி உதிரியாக இருந்தவர்களை இணைக்கும் ஒரு மையப்புள்ளியாக பன்னீர்செல்வம் ஆகியிருப்பதும், அதற்கு ஜெயலலிதாவை அவர் துணைக்கு அழைப்பதும்தான் இந்த ஆட்டத்தை மேலும் சுவாரஸ்யம் ஆக்கியிருக்கிறது. ‘‘யாருடன் இருக்க வேண்டும், யாருடன் இருக்கக்கூடாது என்பதை அம்மா நமக்கு உணர்த்தியிருக்கிறார்’’ என்கிறார். ‘சசிகலாவோடு இணைந்து இருப்பது என்பது, ஜெயலலிதாவின் விருப்பத்துக்கு எதிரானச் செயல்’ என்பதை அவர் உணர்த்துகிறார். ‘சசிகலாவோடு இருப்பவர்கள் அனைவரும் அ.தி.மு.க-வினராலும், மக்களாலும் நிராகரிக்கப்பட வேண்டியவர்கள்’ என்பதுதான் அவர் சொல்ல வருவது! அநேகமாக அ.தி.மு.க-வினருக்கு இனி தீபாவின் தேவை இருக்காது.

இன்றைக்கு சந்தேகம் இல்லாமல், தமிழகத்தின் மிகப்பெரிய கட்சி அ.தி.மு.க.தான். இதை, அடுத்தடுத்து இரண்டு தேர்தல்களில் தனித்து நின்று, அசாதாரணமான வெற்றிகளைப் பெற்று அந்தக் கட்சி நிரூபித்து இருக்கிறது. ஊழலையும் குடும்ப அரசியலையும் எதிர்த்து எம்.ஜி.ஆர் கட்டமைத்த கட்சி இது. ஏழைகள் மீது அக்கறையுள்ள அரசாக எம்.ஜி.ஆர் தன்னுடைய ஆட்சியை உணர்த்தியதால், பெரும்பாலும் கிராமப்புற மக்களும் நகர்ப்புற அடித்தட்டு மக்களுமே அ.தி.மு.க-வின் வாக்கு வங்கியாக இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் மந்திரமும் ஜெயலலிதாவின் வசீகரமுமே அ.தி.மு.க-வின் ஆதாரங்களாக இருக்கின்றன.

p30a.jpg

ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.க என்ன ஆகும்? ‘இதைச் சிதறாமல் காப்பாற்றும் சக்தி, சசிகலாவைவிட பன்னீர்செல்வத்துக்குக் கூடுதலாக இருக்கிறது’ என்பது மறுக்க முடியாத உண்மை. தீவிர அரசியலில் இறங்கிய நாளிலிருந்து, ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தளபதிகள் காலங்கள்தோறும் மாறிக்கொண்டே இருந்தார்கள். திருநாவுக்கரசர், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், எஸ்.டி.சோமசுந்தரம், செல்வகணபதி, அழகு திருநாவுக்கரசு, கண்ணப்பன், செங்கோட்டையன், நத்தம் விசுவநாதன், தம்பிதுரை, கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் என பலரும் மாறினாலும் ஒதுங்கினாலும், மாறாத விசுவாசியாகத் தொடர்ந்தார் பன்னீர். இரண்டு முறை ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்தபோதும், அந்தப் பதவி மீண்டும் அவர் கைக்கே வந்தது. முதல்முறை ஒரு ஜூனியர் அமைச்சராக இருந்து, முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்தபோது ‘‘பன்னீர்செல்வம் இனிஷியலாக இருப்பது ‘ஓ’வா? ‘ஜீரோ’வா?’’ என பலரும் கிண்டல் செய்தார்கள். ஆனால், சீக்கிரமே பல சீனியர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு நம்பர் 2 இடத்தை அடைந்தார். ஜெயலலிதாவின் மரணம் வரையில் இந்த இடத்தைவிட்டு அவர் இறங்கியதில்லை. மாறாத விசுவாசத்தின் அடையாளமாகவே அவர் கருதப்படுகிறார். 

ஜெயலலிதா இல்லாத கடந்த இரண்டு மாதங்களில் அவர் எதையும் தலைகீழாக மாற்றி சாதித்து விடவில்லை. ஆனால், பிரச்னைகளைக் காது கொடுத்துக் கேட்டார். சில தீர்வுகளை வாங்கித் தந்தார். இதையே பெரிய சாதனையாகக் கருதும் சூழலில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதனால்தான் அவரை இளைய தலைமுறை புகழ்ந்தது. நகரத்துப் படித்தவர்கள் மத்தியில் அவர் ஆராதிக்கப்பட்டார். அவரை கிண்டல் செய்து மீம்ஸ் போட்டவர்கள்கூட, சசிகலாவை அவர் ஆதரிப்பதால் எழுந்த கோபத்தில்தான் அதைச் செய்தார்கள். சசிகலாவை அவர் எதிர்த்ததும், ‘ஜல்லிக்கட்டுக்காக திரண்டது போல ஓ.பி.எஸ்-ஸை ஆதரித்து திரள்வோம்‘ என்பதுபோன்ற ஃபார்வேர்டு மெசேஜ்கள் வாட்ஸ்அப்-பில் தறிகெட்டுப் பறந்தன. வழக்கமாக சீரியல் பார்க்கும் பெண்கள் திடீரென செய்தி சேனல்களைப் பார்க்கிறார்கள். தங்கள் எம்.எல்.ஏ-க்களுக்குத் தயங்காமல் வாக்காளர்கள் போன் செய்து, ஓ.பி.எஸ்-ஸை ஆதரிக்கச் சொல்லிக் கேட்கிறார்கள்.

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு ஜானகி அணி, ஜெயலலிதா அணி எனக் கட்சி உடைந்தபோது, செல்வாக்கான தலைவர்கள் பலரும் ஜானகி அணியில் இருந்தார்கள்; ஆனால், தொண்டர்கள் ஜெயலலிதா பக்கம் இருந்தார்கள். ஒரே தேர்தலில் இதைப் புரிந்துகொண்டு ஜானகி ஒதுங்கினார். அவரை நம்பிப் போன தலைவர்கள் பலரும் செல்வாக்கு இழந்து செல்லாக்காசு ஆனதுதான் மிச்சம். இப்போது ஜெயலலிதா இல்லாத சூழலில், அ.தி.மு.க-வின் வாக்கு வங்கி அனைவரையும் சபலம் கொள்ளச் செய்யலாம். ஆனால், சிறுசிறு கட்சிகள் பலவும் சோர்ந்து செயலிழந்து இருக்கும் நிலையில், வரும் உள்ளாட்சித் தேர்தல் வரையிலாவது இது களவுபோகாமல் இருக்கும் என்பது நிச்சயம்.

ஆனால், அதை வாங்கும் நபராக யார் இருப்பார்கள்? ஆட்சியும், கட்சியும் சசிகலாவின் கைக்குப் போனால், இரட்டை இலையும் அவரிடம்தான் இருக்கும். அதை மீறி பன்னீர் என்ன செய்ய முடியும்? காங்கிரஸ் கட்சிக்கு ‘நுகத்தடியில் பூட்டிய காளைகள்’தான் சின்னம். இந்தியா முழுக்க மக்கள் மனதில் ஆழப் பதிந்திருந்தது அது. கட்சி முதல்முறை உடைந்தபோது அதற்குப் பதிலாக ‘பசுவும் கன்றும்’ சின்னம் கிடைத்தது. தகவல்தொடர்பு வசதிகள் ஏதுமில்லாத 1971-ம் ஆண்டில் இந்தச் சின்னத்தை அறிமுகம் செய்து இந்திரா காந்தி ஜெயித்தார். அடுத்த முறை கட்சியில் குழப்பம் வந்தபோது, அதற்குப் பதிலாக ‘கை’ சின்னம் வந்தது. அதையும் வைத்து ஜெயித்தார் இந்திரா. சின்னம் பெரிதில்லை; மக்கள் எண்ணத்தில் இடம் பிடிப்பது முக்கியம். இந்தியாவிலேயே தேர்தலில் அதிகம் பணம் புழங்கும் மாநிலமாக தமிழகம் இருந்தாலும், அதையும் மீறி சில அதிசயங்கள் இங்கு நிகழவே செய்கின்றன. பன்னீர் தாக்குப் பிடித்தால்... சசிகலாவை வைக்கும் அதே தூரத்தில் தி.மு.க-வையும் வைத்து அரசியல் செய்தால்... அவருக்கு எல்லாம் வசமாகக்கூடும்.

பன்னீருக்கும் அ.தி.மு.க தேவை; அ.தி.மு.க-வுக்கும் பன்னீர் தேவை.

http://www.vikatan.com/juniorvikatan

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

Sign in to follow this