Sign in to follow this  
நவீனன்

54 ஆண்டுகளாக சீன வீரரை சீனாவுக்கு அனுப்பாத இந்திய அரசு!

Recommended Posts

54 ஆண்டுகளாக சீன வீரரை சீனாவுக்கு அனுப்பாத இந்திய அரசு!

வாங் க்யூ

'தமிழக மீனவர்கள் எல்லை தாண்டியதால் சிறைப்பிடிப்பு' என்பது நமக்கு ரொம்பவே பழக்கப்பட்ட சர்வ சாதாரணமான செய்தியாகிவிட்டது. சில நேரங்களில் சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர் என்ற விஷயத்தையும் சின்னப் பெட்டிச் செய்தியாக கடந்துசெல்கிறோம். ஆனால், எல்லை தாண்டிய குற்றத்துக்கு விடுதலை, அவ்வளவு எளிதாக அனைவருக்கும் கிடைத்துவிடுவதில்லை. வழிதவறி இந்திய எல்லைக்குள் வந்த சீனாவைச் சேர்ந்த வாங் க்யூ என்பவர், கிட்டத்தட்ட 54 ஆண்டுகளை இங்கேயே கழித்துள்ளார். அதுபற்றிய சுவையான சம்பவம் இதோ...

சீனாவைச் சேர்ந்த இந்த ராணுவ வீரர், 1963-ம் ஆண்டு இந்தோ - சீனப் போரின் பணியில் இருந்த சமயத்தில்... வழிதவறி நம் எல்லைக்குள் நுழைந்ததால் நம் நாட்டு ராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டு 7 ஆண்டுகள் சிறைவைக்கப்பட்டார். அந்தத் தண்டனை முடிந்ததும் தன் நாட்டுக்குச் சென்றுவிடலாம் என்ற நம்பிக்கையுடன் இருந்தவரை ராணுவத்தினர் மத்தியப் பிரதேசத்தில் உள்ள டிரோடி என்னும் கிராமத்தில் கொண்டு போய்விட்டனர். பாஸ்போர்ட், விசா போன்ற எந்த ஆவணங்களும் இல்லாத நிலையில் அவர் அங்கேயே வாழ ஆரம்பித்தார். அந்த ஊரைச் சேர்ந்த பெண்மணியையே திருமணம் செய்துகொண்டார். காலச்சக்கரம் சுழன்றோடியது, வாங் க்யூ 4 பிள்ளைகளுக்கு தந்தையானார். கொஞ்ச காலம் சென்றதும்... பேரப்பிள்ளைகளுக்குத் தாத்தாவும் ஆனார். தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்தாலும், அவர் உள்ளத்தின் ஓரத்தில் ஓர் ஆசை அவரைத் தூங்கவிடாமல் செய்தது. தான் பிறந்த மண்ணையும், தன் ரத்த சொந்தங்களையும் காண வேண்டும் என்று அவர் ஏங்க ஆரம்பித்தார். 1980-களில் சீனாவில் உள்ள தன் சொந்தங்களுடன் கடிதப் போக்குவரத்தை அமைத்துக்கொண்டார். இது, அவரது சொந்தங்களைக் காண வேண்டும் என்ற ஆசையை இன்னும் தூண்டியது. பல மனுக்கள் கொடுத்தும் இந்திய அரசுக்கு இந்தச் சீன வீரனின் கதறல் கேட்கவே இல்லை.

2009-ல் வாங் க்யூவின் மைத்துனர் இந்தியா வந்து அவரைச் சந்தித்துச் சென்றுள்ளார். 2013-ல் சீன அரசு, வாங் க்யூவுக்கு பாஸ்போர்ட் வழங்கி அனுமதித்தது. ஆனால், இந்திய தரப்பில் அவருக்கு விசா வழங்கப்படவில்லை. தன்னால் சீனா போய் தான் பிறந்த ஊரின் காற்றைச் சுவாசிக்க முடியவில்லையே என்ற பரிதவிப்புடன் இருந்த வாங் க்யூவை, பிரபல செய்தி நிறுவனம் ஒன்று அடையாளம் கண்டு அவரின் 54 ஆண்டுக் கால போராட்டத்தைச் செய்தியாக வெளியிட்டது. இந்தச் செய்தி, இரண்டு நாடுகளிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. சீனாவில் செய்தி ஊடகங்கள் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் வாங் க்யூவுக்கு ஆதரவுக் குரல்கள் கூடின. இதனையுணர்ந்த இந்திய வெளியுறவுத் துறை, மத்திய உள்துறை அமைச்சகத்தை அணுகி... வாங் க்யூவை, சீனாவுக்கு அனுப்புவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுத்தது.

இந்த நிலையில், கடந்த 9-ம் தேதி  தன் மகன், மருமகள் மற்றும் பேத்தியுடன் சீனாவுக்குப் பறந்தார் வாங் க்யூ. சீன விமான நிலையத்தில் அவரின் உறவினர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பலர் காத்திருந்தனர். அன்றைய தினம் சீனர்களின் முக்கியப் பண்டிகையான lantern festival என்றழைக்கப்படும் விளக்குத் திருவிழா நடைபெற்றது. விமான நிலையம் சென்ற வாங் க்யூவை அவரின் உறவினர்கள், சகோதரர்கள் கட்டித் தழுவிக்கொண்டனர். 54 வருட ஏக்கங்கள், ஆசைகள் அங்கே சிறு கண்ணீர்த் துளிகளால் கரைக்கப்பட்டது. 

பத்திரிகைக்கு பேட்டி அளித்த வாங் க்யூ, "இந்த நாள் என் வாழ்வில் சந்தோஷமான நாள். என் பால்ய நண்பர்களை, என்னுடன் ராணுவத்தில் பணியாற்றிய சகவீரர்களை நான் தேடிப்போய்  சந்திக்கப் போகிறேன்" என்றார். அவருக்கு சீன அரசாங்கம் அவரின் சொந்த ஊரில் வாழ்வதற்கு இலவசமாக நிலம் வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.

வாங் க்யூ சீனாவுக்குத் திரும்பியதை, சீன - இந்திய நல்லுறவை வலுப்படுத்தும் ஒரு நிகழ்வாக இரு நாடுகளும் நினைக்கின்றன. ஆனால், பரவலாக எழுப்பப்படும் கேள்வி என்னவென்றால், 40 வருடங்களுக்கு மேலாக வாங் க்யூவின் போராட்டம் சமூக வலைதளங்களை எட்டியதும், அரசு நடவடிக்கை எடுத்து 10 நாட்களில் அவரின் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளது. சாமான்ய மக்கள் போடும் மனுக்கள் அனைத்தும் சாமான்யமான ஒன்று என்ற எண்ணப்போக்கை அரசு அலுவலகங்கள் விட்டொழித்து இருந்தால் வாங் க்யூ, அரை நூற்றாண்டுகள் தன் தாய்மண்ணையும், தன் உறவினர்களையும் பிரிந்து இருக்க நேர்ந்திருக்காது. வாங் க்யூவின் தாயும் மரணப்படுக்கையின் கடைசி நிமிடம்வரை தன் செல்ல மகனின் வருகையை நோக்கிக் காத்திருந்து உயிர் விட்டிருக்க மாட்டார். ஆம், வாங் க்யூவின் தாய் தன் மகனை 43 ஆண்டுகளாகப் பார்க்காமலேயே இறந்துபோனார்.

மத்தியப் பிரதேச நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், 'டிரோடி கிராமத்தில் மேலும் ஒரு சீன ராணுவ அகதியான லியு ஸுரோங், சீனாவில் உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில் இங்கே திருமணம் செய்துகொண்டு பெரிய குடும்பத்துடன் வாழ்ந்து வருவதாகக் கூறியுள்ளது. இவரைப் பற்றி இன்றுவரை எந்த அரசு அமைப்புகளுக்கும் தெரியவில்லை. இன்னும் எத்தனை வாங் க்யூக்களும், லியு ஸுரோங்க்களும் தன் வாழ்நாள் முழுக்க அரசின் இரும்புக் கதவுகளுக்குள் அடைபட்டிருக்கிறார்களோ?

http://www.vikatan.com/news/india/81123-chinese-military-man-goes-home-after-50-years-trapped-in-india.html

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

Sign in to follow this