Jump to content

விடிவெள்ளி


Recommended Posts

சிறுகதை - விடிவெள்ளி

ப்ரியதர்ஷினி கணேசன், ஓவியம்: கார்த்திகேயன் மேடி

 

1.jpg

“யேட்டியேஏஏய்…. பாத்து சூதானமா கொத்து… நாத்துல பட்டா நஞ்சு போய்டும்” - வேகமாக ஓடிவந்த தையமுத்து மூச்சிரைக்கக் கத்தினாள்.

“யக்கோவ்… நீ வெசனப்படாத… நானு பார்த்துக்குறேன். நீ இப்டி இரைக்க இரைக்க ஓடியாந்தினா பேச்சி அய்த்தான் எங்களைத்தான் வையும். புள்ளையை மடில வச்சுக்கிட்டு நீ அடங்க மாட்றியே” - அதட்டினாள் வள்ளிக்கண்ணு.
24p2.jpg
“அடிப் போடி கூறுகெட்டவளே… பச்சையும் புள்ளையும் எனக்கு ஒண்ணுதான்… நீ ஒழுங்கா பாத்துக் கொத்து” - களைக்கொத்தியைக் கையில் எடுத்துக்கொண்டு கதிர்க் கூட்டத்துக்குள் நுழைந்தாள் தையமுத்து.
வாகாகக் கொத்தியைப் பிடித்துக் களையெடுக்கும் தையமுத்துவை அபூர்வமாகப் பார்ப்பதுபோல பார்த்தாள் வள்ளி. எட்டு ஊரிலேயே பெரிய பண்ணையக்காரரான கருப்புச்சாமி அய்யாவின் ஒரே மகள். அந்த ஊரிலேயே டவுனுக்குப் போய் பத்தாப்பு வரையில் படித்தவள். வெளியூரில் மாப்பிள்ளை பார்த்த அப்பாவிடம் சண்டை போட்டு சொந்த மாமனான பேச்சியப்பனையே ஆசை ஆசையாகக் கட்டிக் கொண்டவள்.

வள்ளிகூடக் கேட்டாள்… ``ஏக்கா, நீயோ அம்புட்டு அளகா இருக்க… பேச்சி அய்த்தானோ பேய்க் கரிசல் நெறம். நீ பட்டணம் போயி படிச்சிருக்க. அவரு நம்மூரு வயக்காட்டையே தாண்டுனதில்ல… அப்புறம் எப்படிக்கா கட்டிக்கிட்ட?”

அந்தக் கேள்விக்கு தையமுத்து சொன்ன பதில்தான் வள்ளியை பிரமிக்க வைத்தது. “வள்ளி… வாழ்க்கை எப்பவுமே ஒரு வயக்காடு மாதிரிதான்… பாத்தி கட்டிப் பயிர் போடற நாலுக்கு நாலு வயல் மாதிரி ஆத்தாவோட கர்ப்பப்பைல இருந்து ஜனிச்சு மறுபடியும் நாலு பக்க குழிக்குள்ள போறவகதான் மனுசப்பயலுக. வித போட்டு முளைச்சு வர நாத்து மாரி வந்து விழுற ஜென்மம் ஆடாத ஆட்டமில்லை… அறுத்துப் போட்ட கதிரு மாரி எல்லாமே ஒரு நா தவிடா மாறி மண்ணோட கலந்துரும். நானு அப்படி ஊருக்கே சோறு போடற மண்ணுல பொறந்தவ… எல்லாருக்கும் வயித்தை நிறைக்கற கையும், மனச நினைக்கற குணமும்தாண்டி பெருசு… நானு படிச்சவனு சொல்லிக்கறதவிட பத்துப் பேருக்குக் கஞ்சி ஊத்தர விவசாயி பொண்டாட்டினு சொல்லிக்கறதுதாண்டி இந்தப் பொறப்புல எனக்குப் பெருமை...”

இப்படிப்பட்ட தையமுத்து இப்போது எட்டு மாச கர்ப்பிணியாக நிற்கிறாள். வயிற்றுப் பாரத்தின் பூரிப்பால் பொன் மஞ்சளாக உருவெடுத்து நிற்கும் அவள் வயலுக்கு வருவதை மட்டும் விட்டுவிடவே இல்லை.

“அக்கா... உன் முகமே சரியில்லையே? ஏதும் சுகவீனமா வருதா? இல்லை, வலியெடுக்குதுனாலும் சொல்லிடுக்கா… எனக்கு ரொம்பப் பயமா இருக்கு… நீ பாட்டுக்கு அரைக் கழனிய களையெடுத்திருக்க” என்று அதிர்ச்சியோடு கேட்டாள் வள்ளி.

“இல்ல வள்ளி… பயப்படாத. அதெல்லாம் இல்ல, எம் புள்ளைக்கு கழனியோட மகத்துவத்த சொல்லிக் கிட்டே களையெடுத்தேனா எப்படி இவ்ளோ தொலவு வந்தேன்னு எனக்கே தெரியலை… ஒரு வேளை எம்புள்ளை பிற்காலத்துல பெரும் கழனிக்காரனா வருவானு நினைக்கறேன்” என்று, முகத்தில் பூத்த வியர்வையைத் துடைத்த தையமுத்து, “இருட்டி… எனக்கு வயிறு ஏதோ பிசையுது.கொஞ்சம் வரப்புல உட்கார்ந்துட்டு, பையப் போலாம்” - நடந்தவளைக் கைப்பிடித்து இழுத்தாள் உடனே துரிதமாகச் செயல்பட்ட வள்ளி, “ஏலே, இங்கன வாங்கடி… முத்துவைக் கிணத்துக் கட்டைக்குத் தூக்குங்க… பிள்ள வலிதாண்டி எடுத்துப்போச்சு…” என்று வயலே அதிரக் கத்தினாள். சத்தம் கேட்ட அண்டை வயல் பெண்கள் வேகமாக ஓடி வந்தனர் பேச்சியின் வயல் நோக்கி. உழுதுகொண்டிருந்த ஆண்களும் சூழ்நிலை உணர்ந்து விலகிப் போக ஆரம்பித்தார்கள்.

கிணத்துக் கட்டைக்குத் தூக்கிச் சென்ற தையமுத்துவைச் சுற்றி அரைவட்டமாய்ச் சூழ்ந்துகொண்ட னர் பெண்கள். சாமியைக் கும்பிட்டுக் கொண்டே அம்சவேணி, தையமுத்து வின் இடுப்பெலும்பை மெதுவாக இளக்கினாள். அவ்வளவுதான், அத்தனை நேரம் முகத்தில் வலியைக் காட்டிக்கொள்ளாத தையமுத்து, “ஆத்தாஆஆஆஆ” என்று கத்திய கத்தில் நெற்கதிர் தின்ற கரிச்சான் குருவிகள் சிறகடித்துப் பறந்தன.
“ஆத்தா… உனக்கு அப்படியே நம்ம அளகர் சாமியே மகனா வந்து பொறந்துருக்கார்டி… என்ன கள முகத்துல… நீ நினைச்ச மாரி உன் வயக்காட்டுலையே புள்ளையைப் பெத்து இறக்கிட்ட… ஏ வள்ளி, இங்கன வந்து புள்ளையப் புடிடி மசமசனு நிக்காம… அப்படியே, அந்த வரப்புத் தண்ணிய தலைல தெளிங்கடி… நம்ம கழனியக் காக்க வந்த மவராசண்டி இவன்” என்று உற்சாகமாகக் கூச்சலிட்டாள் வேணி.

குழந்தைக்கு அழகர் என்று பெயர். இதோ, பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவனை மேலே படிக்க வைக்க வேண்டும் என்று குடும்பமே உட்கார்ந்து பேசி முடிவெடுத்தது. இந்த நேரத்தில்தான் அழகரின் ஆசிரியர், “நீ எடுத்த மார்க்குக்கு மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிப்பே கிடைக்கும் அழகர். நல்ல வேலைக்கு உத்தரவாதம்…” என்றார்.

24p3.jpg

பேச்சியோ, “ஏ அழகரு, பேசாம நீ வைத்தியனுக்குப் படி… நம்ம ஊரில் வைத்தியம் பார்க்க பல மைல் தூரம் போவேண்டி இருக்கு…

நீ படிச்சுப்புட்டனா நானும் பெருமைப்பட்டுக்குவேன்.. ஊருக் கும் வைத்தியம் பார்த்தாப்பல ஆச்சு” என்றார். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு தையமுத்து மட்டும் அமைதியாக இருந்தாள்.

இரவு முழுவதும் தூங்காமல் புரண்டு கொண்டே இருந்தான் அழகர். பேச்சியோ, அழகரின் ஆசிரியர்களிடம் கேட்டு இன்ஜினீ யரிங், மருத்துவம் என்று அழகர் பெயரில் விண்ணப்பிக்க ஆரம்பித்திருந்தான்.
மறுநாள் காலையில் வீடு முழுவதும் அழ கரைத் தேடிய பேச்சி, தையமுத்துவைக் கூப்பிட்டு, “ஏ... எங்கடி அவனக் காணோம்… நாளைக்கு ஏதோ பரீட்சை எழுதணுமாம் அவன்… அவுக வாத்தியாரய்யா சொன்னாரு…கூட்டிப் போகலாமுனு பார்த்தா… இவ்வளோ வெள்ளனம் எங்கன போனான்?” என்று மகனைத் தேடிக் கிளம்பினான்.

ஊர் முழுவதும் சுற்றி அலுத்துப் போனான் பேச்சி. இதற்குள் வள்ளியும் வெரசலா தையமுத்துவைத் தேடி வந்தாள். “என்னக்கா அழகரைக் காணோம்னு அய்த்தான் சல்லடை போட்டு ஊரை சலிச்சுக்கிட்டு இருக்காரு…. ஆனா, நீ சலனப்படாம உட்கார்ந்திருக்க” என்றாள்.

அவளோ, “இல்லைடி வள்ளி, எனக்கு என்னன்னே தெரியலை. மனசுக்குள்ள ஏதோ நிரம்பி வழியுது. என் புள்ள எங்கனயும் போக மாட்டாண்டி… அவன் நல்லதையேதான் செய்வான்” என்றாள்.

அதற்குள் மூணு மணி பேருந்தும் ஊருக்குள் வந்து விட, இறங்கி ஒற்றையடிப் பாதையில் நடந்து வந்து கொண்டிருந்த அழகரை ஒருவழியாகப் பார்த்தான் பேச்சி.

“ஏ அழகரு, சொல்லிக்காம கொள்ளிக்காம எங்க போன? என்னையும் ஆத்தாளையும் இப்படி பயமுறுத்திப்புட்டியே” என்றான் பேச்சி. “நீ வேணா பயந்திருப்ப… ஆனா, ஆத்தா கண்டிப்பா பயந்திருக்காது… சரி வா, வீட்டுக்குப் போவோம்… எல்லாம் சொல்றேன்” என்றபடி வீட்டுக்கு விரைந்தான் அழகர்.

அதற்குள் வீட்டில் கூடியிருந்த உறவின் முறைகள், “ஏய்யா அழகரு... எங்கய்யா போன? ஊரு சனமே கூடி நிக்கறோம் உனக்காக…”  என்றனர். அந்த எளிய மனிதர்களின் பாசம் அழகரை உருக்கியது.

“அய்த்த… சித்தி… பெரியப்பா எல்லார் கிட்டயும் மொதல்ல நான் மன்னிப்புக் கேட்டுக்கறேன். தகவல் கூட சொல்ல முடியாத ஊருல நான் அவ்வளவு வெரசா காலையில வெளில போனது தப்புதான். ஆனா, நான் ரொம்ப நல்ல முடிவு எடுக்கத்தான் போயிருந்தேன்” என்றவனை நிமிர்ந்து பார்த்தாள் தையமுத்து.

“அப்பா... என்னை மன்னிச்சுடுங்க. ஏன்னா, நீங்க நினைச்ச மாரியோ, என் வாத்தியார் நினைச்ச மாரியோ, இல்லை தாத்தாவோட ஆசைப்படியோ எதுவும் படிக்கப் போறதில்லை”என்றவனை அதிர்ச்சியுடன் பார்த்தான் பேச்சி.

“ஆமாப்பா…. என் ஆத்தாவோட ஆசைப்படி விவசாயமும் விட்டுப் போகாம, அதே நேரத்தில் என் மேல் படிப்பும் கெடாம நான் விவசாயக் கல்வியத்தான் படிக்கப்போறேன்” சொன்னவனை பெருமிதமாகப் பார்த்தனர் பேச்சியும் ஊராரும்.

 அவ்வளவு நேரம் அசையாமல் நின்றிருந்த தையமுத்து கரகரவெனக் கண்ணீர் கொட்டிய கண்களுடன் வேகமாக மகனைக் கட்டிப் பிடித்து உச்சி மோந்தாள். “உண்மையிலேயே அம்சவேணி அக்கா சொன்னாப்புல நீ கழனியைக் காக்க வந்த என் கரைமேல் அழக ரய்யாதான்யா” என்றாள், அந்த விவசாயக் கிராமத்தின் விடிவெள்ளியாக மின்னிய அழகரைப் பார்த்து!

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.