Sign in to follow this  

Recommended Posts

சிறுகதை - விடிவெள்ளி

ப்ரியதர்ஷினி கணேசன், ஓவியம்: கார்த்திகேயன் மேடி

 

1.jpg

“யேட்டியேஏஏய்…. பாத்து சூதானமா கொத்து… நாத்துல பட்டா நஞ்சு போய்டும்” - வேகமாக ஓடிவந்த தையமுத்து மூச்சிரைக்கக் கத்தினாள்.

“யக்கோவ்… நீ வெசனப்படாத… நானு பார்த்துக்குறேன். நீ இப்டி இரைக்க இரைக்க ஓடியாந்தினா பேச்சி அய்த்தான் எங்களைத்தான் வையும். புள்ளையை மடில வச்சுக்கிட்டு நீ அடங்க மாட்றியே” - அதட்டினாள் வள்ளிக்கண்ணு.
24p2.jpg
“அடிப் போடி கூறுகெட்டவளே… பச்சையும் புள்ளையும் எனக்கு ஒண்ணுதான்… நீ ஒழுங்கா பாத்துக் கொத்து” - களைக்கொத்தியைக் கையில் எடுத்துக்கொண்டு கதிர்க் கூட்டத்துக்குள் நுழைந்தாள் தையமுத்து.
வாகாகக் கொத்தியைப் பிடித்துக் களையெடுக்கும் தையமுத்துவை அபூர்வமாகப் பார்ப்பதுபோல பார்த்தாள் வள்ளி. எட்டு ஊரிலேயே பெரிய பண்ணையக்காரரான கருப்புச்சாமி அய்யாவின் ஒரே மகள். அந்த ஊரிலேயே டவுனுக்குப் போய் பத்தாப்பு வரையில் படித்தவள். வெளியூரில் மாப்பிள்ளை பார்த்த அப்பாவிடம் சண்டை போட்டு சொந்த மாமனான பேச்சியப்பனையே ஆசை ஆசையாகக் கட்டிக் கொண்டவள்.

வள்ளிகூடக் கேட்டாள்… ``ஏக்கா, நீயோ அம்புட்டு அளகா இருக்க… பேச்சி அய்த்தானோ பேய்க் கரிசல் நெறம். நீ பட்டணம் போயி படிச்சிருக்க. அவரு நம்மூரு வயக்காட்டையே தாண்டுனதில்ல… அப்புறம் எப்படிக்கா கட்டிக்கிட்ட?”

அந்தக் கேள்விக்கு தையமுத்து சொன்ன பதில்தான் வள்ளியை பிரமிக்க வைத்தது. “வள்ளி… வாழ்க்கை எப்பவுமே ஒரு வயக்காடு மாதிரிதான்… பாத்தி கட்டிப் பயிர் போடற நாலுக்கு நாலு வயல் மாதிரி ஆத்தாவோட கர்ப்பப்பைல இருந்து ஜனிச்சு மறுபடியும் நாலு பக்க குழிக்குள்ள போறவகதான் மனுசப்பயலுக. வித போட்டு முளைச்சு வர நாத்து மாரி வந்து விழுற ஜென்மம் ஆடாத ஆட்டமில்லை… அறுத்துப் போட்ட கதிரு மாரி எல்லாமே ஒரு நா தவிடா மாறி மண்ணோட கலந்துரும். நானு அப்படி ஊருக்கே சோறு போடற மண்ணுல பொறந்தவ… எல்லாருக்கும் வயித்தை நிறைக்கற கையும், மனச நினைக்கற குணமும்தாண்டி பெருசு… நானு படிச்சவனு சொல்லிக்கறதவிட பத்துப் பேருக்குக் கஞ்சி ஊத்தர விவசாயி பொண்டாட்டினு சொல்லிக்கறதுதாண்டி இந்தப் பொறப்புல எனக்குப் பெருமை...”

இப்படிப்பட்ட தையமுத்து இப்போது எட்டு மாச கர்ப்பிணியாக நிற்கிறாள். வயிற்றுப் பாரத்தின் பூரிப்பால் பொன் மஞ்சளாக உருவெடுத்து நிற்கும் அவள் வயலுக்கு வருவதை மட்டும் விட்டுவிடவே இல்லை.

“அக்கா... உன் முகமே சரியில்லையே? ஏதும் சுகவீனமா வருதா? இல்லை, வலியெடுக்குதுனாலும் சொல்லிடுக்கா… எனக்கு ரொம்பப் பயமா இருக்கு… நீ பாட்டுக்கு அரைக் கழனிய களையெடுத்திருக்க” என்று அதிர்ச்சியோடு கேட்டாள் வள்ளி.

“இல்ல வள்ளி… பயப்படாத. அதெல்லாம் இல்ல, எம் புள்ளைக்கு கழனியோட மகத்துவத்த சொல்லிக் கிட்டே களையெடுத்தேனா எப்படி இவ்ளோ தொலவு வந்தேன்னு எனக்கே தெரியலை… ஒரு வேளை எம்புள்ளை பிற்காலத்துல பெரும் கழனிக்காரனா வருவானு நினைக்கறேன்” என்று, முகத்தில் பூத்த வியர்வையைத் துடைத்த தையமுத்து, “இருட்டி… எனக்கு வயிறு ஏதோ பிசையுது.கொஞ்சம் வரப்புல உட்கார்ந்துட்டு, பையப் போலாம்” - நடந்தவளைக் கைப்பிடித்து இழுத்தாள் உடனே துரிதமாகச் செயல்பட்ட வள்ளி, “ஏலே, இங்கன வாங்கடி… முத்துவைக் கிணத்துக் கட்டைக்குத் தூக்குங்க… பிள்ள வலிதாண்டி எடுத்துப்போச்சு…” என்று வயலே அதிரக் கத்தினாள். சத்தம் கேட்ட அண்டை வயல் பெண்கள் வேகமாக ஓடி வந்தனர் பேச்சியின் வயல் நோக்கி. உழுதுகொண்டிருந்த ஆண்களும் சூழ்நிலை உணர்ந்து விலகிப் போக ஆரம்பித்தார்கள்.

கிணத்துக் கட்டைக்குத் தூக்கிச் சென்ற தையமுத்துவைச் சுற்றி அரைவட்டமாய்ச் சூழ்ந்துகொண்ட னர் பெண்கள். சாமியைக் கும்பிட்டுக் கொண்டே அம்சவேணி, தையமுத்து வின் இடுப்பெலும்பை மெதுவாக இளக்கினாள். அவ்வளவுதான், அத்தனை நேரம் முகத்தில் வலியைக் காட்டிக்கொள்ளாத தையமுத்து, “ஆத்தாஆஆஆஆ” என்று கத்திய கத்தில் நெற்கதிர் தின்ற கரிச்சான் குருவிகள் சிறகடித்துப் பறந்தன.
“ஆத்தா… உனக்கு அப்படியே நம்ம அளகர் சாமியே மகனா வந்து பொறந்துருக்கார்டி… என்ன கள முகத்துல… நீ நினைச்ச மாரி உன் வயக்காட்டுலையே புள்ளையைப் பெத்து இறக்கிட்ட… ஏ வள்ளி, இங்கன வந்து புள்ளையப் புடிடி மசமசனு நிக்காம… அப்படியே, அந்த வரப்புத் தண்ணிய தலைல தெளிங்கடி… நம்ம கழனியக் காக்க வந்த மவராசண்டி இவன்” என்று உற்சாகமாகக் கூச்சலிட்டாள் வேணி.

குழந்தைக்கு அழகர் என்று பெயர். இதோ, பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவனை மேலே படிக்க வைக்க வேண்டும் என்று குடும்பமே உட்கார்ந்து பேசி முடிவெடுத்தது. இந்த நேரத்தில்தான் அழகரின் ஆசிரியர், “நீ எடுத்த மார்க்குக்கு மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிப்பே கிடைக்கும் அழகர். நல்ல வேலைக்கு உத்தரவாதம்…” என்றார்.

24p3.jpg

பேச்சியோ, “ஏ அழகரு, பேசாம நீ வைத்தியனுக்குப் படி… நம்ம ஊரில் வைத்தியம் பார்க்க பல மைல் தூரம் போவேண்டி இருக்கு…

நீ படிச்சுப்புட்டனா நானும் பெருமைப்பட்டுக்குவேன்.. ஊருக் கும் வைத்தியம் பார்த்தாப்பல ஆச்சு” என்றார். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு தையமுத்து மட்டும் அமைதியாக இருந்தாள்.

இரவு முழுவதும் தூங்காமல் புரண்டு கொண்டே இருந்தான் அழகர். பேச்சியோ, அழகரின் ஆசிரியர்களிடம் கேட்டு இன்ஜினீ யரிங், மருத்துவம் என்று அழகர் பெயரில் விண்ணப்பிக்க ஆரம்பித்திருந்தான்.
மறுநாள் காலையில் வீடு முழுவதும் அழ கரைத் தேடிய பேச்சி, தையமுத்துவைக் கூப்பிட்டு, “ஏ... எங்கடி அவனக் காணோம்… நாளைக்கு ஏதோ பரீட்சை எழுதணுமாம் அவன்… அவுக வாத்தியாரய்யா சொன்னாரு…கூட்டிப் போகலாமுனு பார்த்தா… இவ்வளோ வெள்ளனம் எங்கன போனான்?” என்று மகனைத் தேடிக் கிளம்பினான்.

ஊர் முழுவதும் சுற்றி அலுத்துப் போனான் பேச்சி. இதற்குள் வள்ளியும் வெரசலா தையமுத்துவைத் தேடி வந்தாள். “என்னக்கா அழகரைக் காணோம்னு அய்த்தான் சல்லடை போட்டு ஊரை சலிச்சுக்கிட்டு இருக்காரு…. ஆனா, நீ சலனப்படாம உட்கார்ந்திருக்க” என்றாள்.

அவளோ, “இல்லைடி வள்ளி, எனக்கு என்னன்னே தெரியலை. மனசுக்குள்ள ஏதோ நிரம்பி வழியுது. என் புள்ள எங்கனயும் போக மாட்டாண்டி… அவன் நல்லதையேதான் செய்வான்” என்றாள்.

அதற்குள் மூணு மணி பேருந்தும் ஊருக்குள் வந்து விட, இறங்கி ஒற்றையடிப் பாதையில் நடந்து வந்து கொண்டிருந்த அழகரை ஒருவழியாகப் பார்த்தான் பேச்சி.

“ஏ அழகரு, சொல்லிக்காம கொள்ளிக்காம எங்க போன? என்னையும் ஆத்தாளையும் இப்படி பயமுறுத்திப்புட்டியே” என்றான் பேச்சி. “நீ வேணா பயந்திருப்ப… ஆனா, ஆத்தா கண்டிப்பா பயந்திருக்காது… சரி வா, வீட்டுக்குப் போவோம்… எல்லாம் சொல்றேன்” என்றபடி வீட்டுக்கு விரைந்தான் அழகர்.

அதற்குள் வீட்டில் கூடியிருந்த உறவின் முறைகள், “ஏய்யா அழகரு... எங்கய்யா போன? ஊரு சனமே கூடி நிக்கறோம் உனக்காக…”  என்றனர். அந்த எளிய மனிதர்களின் பாசம் அழகரை உருக்கியது.

“அய்த்த… சித்தி… பெரியப்பா எல்லார் கிட்டயும் மொதல்ல நான் மன்னிப்புக் கேட்டுக்கறேன். தகவல் கூட சொல்ல முடியாத ஊருல நான் அவ்வளவு வெரசா காலையில வெளில போனது தப்புதான். ஆனா, நான் ரொம்ப நல்ல முடிவு எடுக்கத்தான் போயிருந்தேன்” என்றவனை நிமிர்ந்து பார்த்தாள் தையமுத்து.

“அப்பா... என்னை மன்னிச்சுடுங்க. ஏன்னா, நீங்க நினைச்ச மாரியோ, என் வாத்தியார் நினைச்ச மாரியோ, இல்லை தாத்தாவோட ஆசைப்படியோ எதுவும் படிக்கப் போறதில்லை”என்றவனை அதிர்ச்சியுடன் பார்த்தான் பேச்சி.

“ஆமாப்பா…. என் ஆத்தாவோட ஆசைப்படி விவசாயமும் விட்டுப் போகாம, அதே நேரத்தில் என் மேல் படிப்பும் கெடாம நான் விவசாயக் கல்வியத்தான் படிக்கப்போறேன்” சொன்னவனை பெருமிதமாகப் பார்த்தனர் பேச்சியும் ஊராரும்.

 அவ்வளவு நேரம் அசையாமல் நின்றிருந்த தையமுத்து கரகரவெனக் கண்ணீர் கொட்டிய கண்களுடன் வேகமாக மகனைக் கட்டிப் பிடித்து உச்சி மோந்தாள். “உண்மையிலேயே அம்சவேணி அக்கா சொன்னாப்புல நீ கழனியைக் காக்க வந்த என் கரைமேல் அழக ரய்யாதான்யா” என்றாள், அந்த விவசாயக் கிராமத்தின் விடிவெள்ளியாக மின்னிய அழகரைப் பார்த்து!

http://www.vikatan.com/

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

Sign in to follow this  

 • Similar Content

  • By நவீனன்
   காட்டுப்பேச்சிகள் காடுகளில் வசிப்பதில்லை! - சிறுகதை
   மாரி செல்வராஜ், ஓவியங்கள்: ஸ்யாம்
    
   பெரியவர் நிறைக்குலத்தானுக்கு இன்று நிச்சயமாகக் கடைசி நாள்தான்!
   'நிறைக்குலத்தான்’ - இந்தப் பெயரை, ஒரு முறை உங்களின் வாய் திறந்து நாக்கைக் கடித்து ஒலி எழுப்பிச் சொல்லிப் பாருங்களேன்.  பெரிய ஓர் ஆலமரம், அந்தப் பெயர் முழுவதும் தன் நிழல் பரப்பி இருப்பதுபோல உங்களுக்குத் தோன்றும். ஆனால், அந்த ஆலமரம் விழுதுகள் இல்லாத ஆலமரமாக, இலைகள் இல்லாத ஆலமரமாக, துளி பச்சைகூட இல்லாத ஆலமரமாக, பங்குனி வெயிலில் எப்போது வேண்டுமானாலும் பற்றி எரிகிற மொட்டை ஆலமரமாக இருந்தால் எப்படி இருக்கும்? நினைத்துப் பார்த்தாலே உங்கள் கண்கள் தீப்பிடித்து எரிந்து கசங்குகின்றனதானே! அப்படி ஒரு மொட்டை ஆலமரம்தான், பெரியவர் நிறைக்குலத்தான். அவரின் சரியான வயது தெரியவில்லை. நரைத்த நரையையும் சுருங்கிய உடலையும் வைத்துச் சொன்னால், பெரியவரின் பிறப்பு எப்படியும் இந்தியச் சுதந்திரத்துக்கு முன் நிகழ்ந்ததாக இருக்க வேண்டும்.
   முதலில், ஊரில் உள்ளவர்களுக்கு முடி திருத்துவதற்காகத்தான் நிறைக்குலத்தானைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார்கள். அப்புறம் எப்படியோ அவருக்கு எட்டுக் கை, நான்கு கால், ஆறு கண்கள் இருப்பதைக் கண்டுபிடித்து, அறுந்த செருப்பு தைப்பது, ஊர் துணி துவைப்பது, இறந்தவர்களுக்குத் தேர் கட்டி, சடங்கு செய்து, சங்கு ஊதுவது, புரியாத சில நோய்களுக்குப் புரியாத வைத்தியங்களைப் பார்ப்பது என, எல்லா வேலைகளையும் அவருக்கே கொடுத்துவிட்டார்கள்.
   ஆரம்பத்தில், ஊருக்கு வெளியே எல்லை பேச்சியம்மன் கோயிலுக்குப் பின் ஒரு குடிசை போட்டுக்கொடுத்து, பெரியவரைத் தங்கவைத்திருந்தார்களாம். அப்போது ஆழ்வார்தோப்பில் இருந்து ஐஸ் விற்க வந்த கிழட்டு ஐஸ்காரன் ஒருவனின் குளிர்ச்சியான மரத்துப்போன விரல்களின் வழியே ஊருக்குள் புகுந்து, சேமியா ஐஸ்களை வாங்கி நக்கிச் சொட்டாங்கி போட்டுக்கொண்டிருந்த குழந்தைகளின் உச்சி முடிக்குள் குடியேறி குழந்தைகளைப் பைத்தியம் பிடிக்கவைத்ததாம் ஒரு பிசாசு. அது 'ஆத்துரங்கால் அமலிசொக்கி’தான் என்பதைக் கண்டுபிடித்து, அரைக் கிலோ மைதா மாவில் ஓர் உலக்கை செய்து அவளை அடித்து விரட்டியதில் இருந்து பெரியவர் நிறைக்குலத்தானை பில்லி-சூன்ய வைத்தியராக்கி, ஊருக்கு நடுவிலே வாசகசாலைக்குப் பின்னாடியே ஊர் பொது ஓட்டு வீட்டில் தங்கவைத்தார்களாம். அதன் பிறகு அவ்வளவு பெரிய ஊரின் மையப்புள்ளியே நிறைகுலத்தான்தான். அவரைச் சுற்றியே ஊர் இயங்கியிருக்கிறது; வாழ்ந்திருக்கிறது.
   முடி திருத்தும் நாசுவணனான தன்னை, ஊர் துணி வெளுக்கும் வண்ணாரனான தன்னை, அறுந்த செருப்பு தைக்கும் சக்கிலியரான தன்னை, இறப்புத் தேர் கட்டும் வெட்டியானான தன்னை, ஊருக்கு மத்தியில் ஊரின் வாசகசாலைக்குப் பக்கத்திலே ஊர் பொது வீட்டுக்குள்ளே தங்கவைத்திருக்கும் அந்த ஊரின் பெருமை, சிறுமை குறித்து எந்தக் கேள்வியும் எந்தக் குற்றமும் எப்போதும் பெரியவரிடம் இருந்தது இல்லை.
   ஆனால், அவரை அப்படியே நிறை மனிதனாக, மூத்த மனிதனாக, அந்த ஊரின் முதல் மனிதனாக ஏற்றுக்கொண்ட அந்த ஊர் மனிதர்களுக்கும், பறவைகளுக்கும், ஆடு - மாடுகளுக்கும், வயல்வெளி எலிக்குஞ்சுகளுக்கும் இவ்வளவு ஏன்... அந்த ஊர் தெய்வங்களுக்குக்கூட அந்த நாளில் இருந்து இப்போது பெரியவரின் ஆகக் கடைசி நாளான இன்று வரை, ஒரு கேள்விக்கு மட்டும் பதில் இல்லாமல் இன்னும் உறுத்திக்கொண்டுதான் இருக்கிறது. எத்தனையோ முறை எவ்வளவோ பேர் கேட்டுப் பார்த்தும், கெஞ்சிப் பார்த்தும், இன்னும் சரியான பதில் கிடைக்காமல் ஊர் வாசகசாலையின் பழைய கதவு இடுக்கில் சிக்கி, அவ்வப்போது கிரீச் என்று சத்தமிட்டுக்கொண்டிருக்கும் அந்தக் கேள்வி இதுதான்.
   'எதுக்கு இந்த மனுசன் இவ்வளவு வயசாகியும் கல்யாணம் பண்ணிக்காம, குழந்தை பெத்துக்காம தனியா மொட்டையா அலையிறாரு? ஏன் இப்படிப் பொம்பளைங்களைக் கண்டா  ஓட்டமா ஓடுறாரு?’ என்பதுதான் அந்த மொத்த ஊருக்கும் பெரியவரிடம் இருந்த ஒரே கேள்வி.
   பெரியவர்கள், சிறியவர்கள், பெண்கள்... என எல்லோரும் கேட்டுக் கேட்டு அலுத்துப்போன கேள்வி. ஊர் பெண்கள் பேயாக, பிசாசாக நடித்து நாக்கைத் துருத்திக்கூடக் கேட்டுப் பார்த்துவிட்டார்கள். எல்லோருக்கும் பதிலாகக் கொடுத்த அதே பிசிறு தட்டாத, பங்கம் இல்லாத அந்தச் சிரிப்பைத்தான் பெரியவர் பேய், பிசாசுகளுக்கும் பதிலாகக் கொடுத்தார்.
   வேறு வழி இல்லாமல் கடைசி ஆயுதமாகத்தான் சிறுவன் முத்துவிடம் சொல்லி அந்தக் கேள்வியை அப்படியே பெரியவரிடம் கேட்கச் சொன்னார்கள். ஆமாம்... முத்து கேட்டால் ஒருவேளை பெரியவர் வாய்த் திறந்தாலும் திறக்கலாம். அதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கின்றன.
   ''எங்க எல்லாருக்கும் முடி வெட்டிவிடுறியே தாத்தா... உனக்கு யாரு முடிவெட்டிவிடுவா?''  - இதுவரை யாருமே கேட்காத கேள்வியை, 10 வயது இருக்கும்போது முத்துதான் நிறைக்குலத்தானைப் பார்த்துக் கேட்டான்.
   ''தாத்தனுக்குப் பேரன்தான் முடி வெட்டிவிடணும். நீ வெட்டிவிடுறியா?''
   ''எனக்குத்தான் முடி வெட்டத் தெரியாதே!''
   ''வித்தையை நான் சொல்லித்தாறேன்... கத்துக்கிறியாடே!''
   ''ம்ம்ம்... நீ சொல்லித்தந்தா கத்துக்கிறேன் தாத்தா'' என்று இருவரும் விளையாட்டாகப் பேசி முடித்த அன்றைக்கே, சிறுவன் முத்துவுக்குக் கத்தரியைப் பிடிக்கக் கற்றுக்கொடுக்கத் தொடங்கிவிட்டார் பெரியவர். பையன் முத்துவும் சளைத்தவன் இல்லை. மூன்றே வாரங்களில் முழு வித்தையையும் கற்றுக்கொண்டு ஊருக்கு மத்தியில் நிறைக்குலத்தானை உட்கார வைத்து முழு முகச்சவரம் செய்தான்.
   'இன்னும் பேய், பிசாசு ஓட்ற வித்தையை மட்டும் கத்துக்கிட்டான்னா, பெரியவரோட முழு வாரிசா முத்து மாறிடுவான்’ என்று ஊர் முழுவதும் அப்பவே பேசவைத்துவிட்டான். ஆனால், பெத்த பிள்ளை சவரக் கத்தி பிடிக்க, முத்துவின் தாய்-தகப்பன் சம்மதிக்கவில்லை. அடிச்சி விரட்டி, குளத்து வேலைக்கு அனுப்பிவிட்டார்கள். ஆனாலும், பெரியவர் தத்து எடுத்து ஒளிச்சு வளர்த்த கக்கத்துப் பிள்ளை முத்து என்பது ஊருக்கே தெரியும். அதனால்தான் அவர்கள் கடைசி நம்பிக்கையாக முத்துவைக் கேட்கச் சொன்னார்கள்.
   அன்று, சின்ன ஆலமரத்தின் நிழலில் வைத்து பெரியவருக்கு முகச்சவரம் செய்துகொண்டிருந்தான் முத்து. கன்னம் இரண்டையும் மழித்து அப்படியே தாடைக்கு வரும்போது, மேலும் கீழுமாக ஏறி இறங்கிக்கொண்டிருந்த பெரியவரின் தொண்டைக்குழியைப் பார்த்துக்கொண்டே கேட்டான்.
   ''ஏதோ ஒரு பெரிய உண்மையை இன்னும் யாருகிட்டயும் சொல்லாம ஒளிச்சு வெச்சிட்டுருக்க நீ!''
   ''என்னடே சொல்ற... என்ன உண்மை?''
   ''உன் தொண்டையைப் பார்த்தாலே தெரியுதே! விஷம் முழுசா மேல ஏறி, நீலக்கலரா மாறி, இறங்கவும் முடியாம ஏறவும் முடியாம அது தவியாய்த் தவிக்கிறது! ஊருக்கே தெரிஞ்சுபோச்சு... எனக்கு மட்டும் தெரியாம இருக்குமா என்ன?''
   பெரியவர் பதிலே சொல்லவில்லை. தன் கழுத்துக்குப் பக்கத்தில் இருந்த முத்துவின் கத்தியை மெதுவாக இடது பக்கமாக நகர்த்தி வைத்தார். பின்பு, அந்தக் கத்தியை அவன் கையில் இருந்து பிடுங்கி, தானாகவே தன் தாடையை வேகமாகச் சவரம் செய்துகொண்டு முகத்தைக் கழுவிவிட்டு எழுந்து நடக்கத் தொடங்கினார்.
   ''எப்பவும் போல, எதுவும் சொல்லாம போறல்ல. போ... போ! இனிமே உங்கிட்ட நான் வர மாட்டேன்; பேச மாட்டேன். 'நான் செத்தா நீதான் முத்து எனக்குக் கொள்ளி வைக்கணும்’னு சொல்லிட்டு, என்கிட்ட ஏதோ இன்னும் சொல்லாம ஒளிச்சுவெச்சிருக்க. நான் ஏன் உனக்குக் கொள்ளி வெக்கணும்? இனி நீ யாரோ... நான் யாரோ!'' என்ற முத்து, நிலத்தைப் பார்த்தபடி குனிந்துகொண்டான்.
   இவ்வளவு வேகமாக, படபடவெனப் பேசுவான் என்று பெரியவர் எதிர்பார்க்கவில்லை. கொஞ்சம் நிலைகுலைந்துதான் போய்விட்டார். முத்துவைப் பார்த்தார். 'இன்னைக்கு ஒரு முடிவு தெரியாமல் முகத்தை நிமிர்த்த மாட்டேன்’ என்பதுபோல குனிந்துகொண்டு நின்றான். அவனுடைய தாடையைப் பிடித்து முகத்தை உயர்த்தினார். சிறுவன் என்றாலும் விவரமானவன் என்பதால், முத்து தன் கண்களை இறுக்க மூடிக்கொண்டான்.
   ''கண்ணைத் திறடே...''
   ''நீ சொன்னாத்தான் திறப்பேன்!''
   ''என்ன சொல்லணும்... சொல்லு!''
   ''நீ எதுக்கு கல்யாணமே பண்ணிக்கல? என்னை மாதிரி ஏன் ஒரு புள்ள பெத்துக்கல?''
   ''ஓ... அதுவா! அதைச் சொன்னா எனக்கு அழுகை வரும் பரவாயில்லையா?''
   ''பரவாயில்லை. ஒரு நாள்தானே, பக்கத்துல வேற ஆளும் இல்ல. அழுக வந்தா, அழுதுட்டு போ!''
   ''அழுதுக்கிட்டு இருக்கும்போதே, செத்தாலும் செத்துப்போய்டுவேன்... என்ன செய்வ?''
   ''பரவால்ல... சொல்லிட்டுச் செத்துப்போய்டு!''
   ''அது சரி. கத்தரி பிடிச்சுப் பழகிட்டல்லா... மனுசன் மனசும் உனக்கு இனி மசுரு மாதிரிதான தெரியும். சரிடே சொல்றேன். கண்ணைத் திற!''
   முத்து, மெதுவாகக் கண்களைத் திறந்தான். இரண்டு கைகளாலும் முகத்தை ஒரு முறை அழுத்தித் துடைத்துவிட்டு, 35 வருடங்களாக ஊரே கேட்ட கேள்விக்கு, தொண்டையைச் செருமியபடி சிறுவன் முத்துவிடம் பதில் சொல்லத் தொடங்கினார் நிறைக்குலத்தான்.
   '' 'நினைப்பு’னா உனக்கு என்னன்னு தெரியுமாடே?''
   ''நினைப்புனா ஆசைதான?''
   ''முதல்ல நானும் அப்படித்தான்டே நினைச்சேன். ஆனா, அது அப்படி இல்லடே. இனிமே அப்படிச் சொல்லாத. நினைப்புனா அது ஒரு வாழ்க்கைடே. எனக்கு அப்படித்தான் சொல்லத் தோணுது. இப்போ முழுசா வாழ்ந்து பார்த்த பிறகு, நிச்சயமா அதுதான் உண்மைனும் தெரியுது.
   கடைசியாப் பார்த்த ஒரு பொண்ணு முகம்,  மாறாம, முடி நரைக்காம, சிரிச்ச பல்லு சிரிச்ச மாதிரியே, பார்த்த கண்ணு பார்த்த மாதிரியே நம்ம புத்திக்குள்ள அப்படியே குத்தவெச்சுக்கிட்டு இருந்தா... அதை வெறும் 'நினைப்பு’னா சொல்ல முடியும். நம்ம வாழ்க்கைனுதானடே சொல்லணும். பார்க்கிற பொண்ணெல்லாம் பொண்டாட்டியாத் தெரியுற வயசுல, ஒரே ஒரு பொண்ணு மட்டும் நம்மளை அள்ளிட்டுப் போற தேவதையாட்டம் தெரிஞ்சா, மனசுக்குள்ள ஒரு கிறுக்கு வருமே... அந்தக் கிறுக்குதான்டே எனக்கும் வந்துச்சு.
   அப்போலாம் கருங்குளம் வெங்கடாசலம் ஐயருக்குச் சவரம் செய்ய நான்தான் போவேன். அவங்க வீட்டுக் கொல்லைப்புறத்துல வைச்சுதான் முகச்சவரம் செய்வேன். அங்க இருந்து பார்த்தா ஐயரு வீடு, எனக்குக் குகை மாதிரி தெரியும். உள்ள அலையுறவங்க எல்லாரும் நரி மாதிரி தெரிவாங்க. அவருக்கு நிறைய நாள் சவரம் பண்ணிருக்கேன். அவரையும் அவங்க வீட்டு வேலைக்காரங்களையும் தவிர, வேற யாரையும் நான் ஒரு நாளும் பார்த்தது இல்லை.
   ஒருநாள், அந்தக் குகைக்குள்ள இருந்து ஒரு பொண்ணு சிரிக்கிற சத்தம் கேட்டுச்சு. அப்புறம் ஒரு பூனைக்குட்டி சத்தம். மறுபடியும் சிரிப்புச் சத்தம். மறுபடியும் பூனை சத்தம். இப்படியே அந்தப் பொண்ணும் பூனையும் சேர்ந்து சிரிக்கிற, அதுவரைக்கும் நான் கேட்காத ஒரு மாதிரியான மனசைப் புரட்டுற சத்தம் என் புத்தி முழுசா விஷம் மாதிரி அன்னைக்கே பரவிருச்சு.
   உடனே, அடுத்த நொடியே அந்தப் பொண்ணையும், அந்தப் பூனையையும் பார்க்கணும்னு மனசு பேதலிக்க ஆரம்பிச்சுட்டு. ஆனா, அது எப்படி ஒரு நாசுவணன், ஒரு ஐயர் பொண்ணையும் ஐயர் வீட்டுப் பூனையையும் அவ்வளவு சீக்கிரத்துல பார்க்க முடியும்? எந்த வழியும் இல்லாம ஒரு வருஷமா பூனையும் பொண்ணும் கலந்து விரவி காத்துல வர்ற சிரிப்பை மட்டுமே கேட்டுக் கேட்டு, உடம்பு முழுக்க விஷம் ஏறிப்போய்த் திரிஞ்சேன். 'எப்படா... கடவுள் கண்ணைத் திறப்பான்; அந்தப் பொண்ண கண்ல காட்டுவான்’னு வெறி பிடிச்சு அலைஞ்சேன். கடைசியா ஒருநாள் என் மேல இரக்கப்பட்டானோ என்னவோ, அந்தக் கடவுள் கொஞ்சம் கருணை காட்டி கண்ணைத் திறந்தான்.
   முதல் அதிர்ஷ்டமா, அந்தப் பூனையை மட்டும் ஐயர் ஒரு பையில போட்டு கொல்லப்புறத்துக்குத் தூக்கிட்டு வந்தார்.
   'ஏப்பா... இந்தப் பூனைக்கு எவனோ தெருவுல போற பய வாயக் கட்டிப்புட்டான்பா. எதுவும் சாப்பிடவும் மாட்டேங்குது... எந்தச் சத்தமும் போட மாட்டேங்குது. கொஞ்சம் என்னன்னு பாரேன். பூனையோட பேசாம என் மக தவிச்சுக்கிடக்கா!’ என்றார் ஐயர்.
   என் மண்டைக்குள் தொந்தரவு செய்து கொண்டிருந்த பூனை சத்தத்தை வைத்தும், கொல்லைப்புறத்தில் கிடந்த ஒரு கொத்துப் பூனை முடியை வைத்தும், நான் அந்தப் பூனையின் வாயைக் கட்ட கொல்லைப்புறத்தில் இருந்தே முணுமுணுத்த மந்திரம் பலிச்சிருந்தது. அப்போதுதான் பிறந்த ஒரு பூங்குழந்தை போல கண்ணை மூடிக்கிடந்த பூனையைக் கையில் வாங்கி, பக்கத்தில் கிடந்த ஓலை மிட்டாய்க் கொட்டான் ஒன்றுக்குள் அதன் தலையைச் செருகி, கொட்டானில் உள்ள ஓட்டை வழியாக என் ஆள்காட்டி விரலால் அதன் காதுக்குள் தண்ணீரை ஒரு சொட்டு விட்டு மந்திரத்தை முணுமுணுக்க, பூனை தலையைச் சிலுப்பி 'மியாவ்...’ என்றதும் ஐயருக்கு அவ்வளவு சந்தோசம்.
   'எம்மா காமாட்சி... உம் மவள ஓடி வரச் சொல்லு. இங்க வந்து பாருங்க... பூனைக்குச் சரியாயிடுச்சு’ என்று ஐயர் சொன்னதும், என் வாழ்வின் முழு அதிர்ஷ்டமும் அடுத்தடுத்து நிகழத் தொடங்கியது.
   என் புத்திக்குள்ள இருந்து அதுவரைக்கும் சிரிச்சுட்டே இருந்த அந்தப் பொண்ணு, அந்த வீட்டுக்குள்ள இருந்து எப்படி வந்தா தெரியுமா? ஓடி வந்தாடே! முத்து... நம்ம பழைய கத்தரி மேல சத்தியமாச் சொல்றேன். அது பொண்ணே இல்லடே. என் கையில் இருந்து அந்த மிட்டாய்க் கொட்டானோடு அந்தப் பூனையை வாங்கிட்டு என் முகத்தைப் பார்க்காம முழுசா என் ரெண்டு கண்ணை மட்டும் பார்த்து, அவ கண்ல கண்ணீர் தேங்கக் கைகூப்பி நன்றி சொல்ற மாதிரி, பாதி உதடு பல்லுல ஒட்ட, ஒரு சிரிப்புச் சிரிச்சா பாரு... உன்கிட்ட அதை எப்படிச் சொல்றது? என் உடம்பு முழுக்க அந்த நிமிசமே ஆயிரம் காடை றெக்கைகளை முளைக்க வெச்சுட்டா!

   பக்கத்துல போய்ப் பார்த்த பிறகுதான் தெரியுது, அவ ஐயர் வீட்ல வாழ்ற நம்ம காட்டுப்பேச்சிடே. கருவிழி ரெண்டும் அப்படி இருக்கு பாத்துக்கோ. வெறிச்சிப் பார்க்கிறவனை ஓட ஓட விரட்டிக் கொல்ற கொள்ளை அழுகுடே. அப்படியே பூனையை வாங்கிட்டு உள்ளே போய் அந்தக் குகைக்குள்ள இருந்து மறுபடியும் அந்தப் பழைய சிரிப்பைச் சிரிச்சா பாரு... யாரோ தொட்டுச் சுருங்கிப்போன தொட்டாச்சிணுங்கியை கடவுள் வந்து மறுபடியும் தொட்டு விரியவைப்பாராமே! அப்படி அடுத்த நொடியே அவ்வளவு பெருசா விரிஞ்சுபோச்சு என் மனசு.
   அப்புறம் விடிஞ்சாலும் அடைஞ்சாலும் ஏதாவது காரணம் சொல்லி, ஐயர் வீட்டுக்  கொல்லைப்புறத்துக்குத்தான் போவேன். அந்தக் குகைக்குள்ள இருந்து அதே சிரிப்புச் சத்தம் கேக்கும். நின்னு தலை கிறுகிறுக்கக் கேப்பேன். நான் நிக்கிற இடம் மட்டும் என்னோட சேர்த்து சுத்துற மாதிரி இருக்கும்.
   திடீர்னு ஒருநாள், காது ரெண்டும் அடைச்ச மாதிரி அந்தச் சிரிப்புச் சத்தம் நின்னுபோச்சு. பூனை சத்தமும் கேக்கல; அவ சத்தமும் கேக்கல. இப்படி ஒரு மாசமா உலகத்துல எந்தச் சத்தமுமே கேக்காத மாதிரி ஆகிருச்சு. எட்டிப் பார்த்தா, அந்தக் குகைக்குள்ள நரிங்க நடமாட்டம் மட்டும்தான் தெரியுது. என்னோட பூனைங்க நடமாட்டம் சுத்தமா இல்லை.
   வீட்டுக்குப் பின்னாடி வேலைக்காரங்க கூட்டிப் பெருக்குன குப்பையில பூனை முடியும் இல்லை... அவ முடியும் இல்லை. தாழம்பு வாசம் இல்லாத காட்டுக்குள்ள நாகப்பாம்பு சிக்கிக்கிட்டு எப்படிக்கிடந்து ஊர்ந்து அலையும்? அப்படிக் கிறுக்குப் பிடிச்சுப்போச்சுடா எனக்கு. என்ன செய்யுறதுனு தெரியாம, ரொம்பத் தயங்கித் தயங்கி ஐயர் வீட்டு வேலைக்காரங்ககிட்ட போய் விசாரிச்சதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சது... அந்தப் பொண்ணுக்குக் கல்யாணமாகி ஒரு மாசம் ஆகிருச்சினு.
   நான் பின்னாடி அவங்க வீட்டுக் கொல்லைப்புறத்துல நின்னு, அவ சத்தம் போட்டுச் சிரிக்க மாட்டாளா, அப்படியே வெளிய பூனைக்குட்டி யோட வர மாட்டாளானு ஏங்கிட்டு இருந்த என்னைக்கோ ஒரு நாள்லதான் அவளுக்கு முன் வாசல்ல கல்யாணம் ஆகிருக்கு. கல்யாணம் ஆகிப் போனவ, சும்மா போகல... அந்தப் பூனையையும் கொண்டுபோய்ட்டா போல.
   'ஐயர் வீட்டுக்கு முன்னாடி அந்தத் தெருவுல நடந்து போய், என்ன நடக்குதுனு தெரிஞ்சுக்க முடியாத சாதியில போய்ப் பிறந்துட்டோமே!’னு அன்னைக்குத்தான்டா உடம்பும் உசுரும் நடுங்க, என்னை நானே அடிச்சிக்கிட்டு அப்படி அழுதேன். அன்னைக்கு மட்டுமா... இப்பவும் நடுராத்திரி எங்க பூனை சத்தம் கேட்டாலும், பொண்ணுங்க சிரிப்பு சத்தம் கேட்டாலும் தானா அழுகை வந்துடுது.
   அப்புறம் எப்படி அடுத்தவளை கல்யாணம் பண்ணிக் குடும்பம் நடத்த? அதுதான் அஞ்சாறு பூனைக்குட்டிகளை வீட்டுக்குள்ள புடிச்சுப் போட்டு, அதுங்ககூட வாழப் பழகிட்டேன். இதை ஊர் முழுசுக்கும் சொல்லி, 'பாருடா முடிவெட்ட வந்த நாசுவணன், ஐயர் பொண்ணு மேல ஆசை வைச்சானாம். எவ்வளவு கொழுப்பு...’னு மொத்த ஊரும் பேசணுமா? அதான் யார்கிட்டயும் சொல்லலை. நல்லா இருப்ப... நீயும் யார்கிட்டயும் சொல்லாதடே'' - ஒரு மூச்சில் தன் கண்களில் இருந்து நீர் சொட்டுவதற்குள் அத்தனையும் சொல்லி முடித்துவிட்டார் பெரியவர்.
   எல்லாவற்றையும் 'உம்’ கொட்டாமல் கேட்டுக்கொண்டிருந்த முத்து, அவர் மீது துளி இரக்கமும் இல்லாமல், இன்னொரு கேள்வியையும் அவசர அவசரமாகக் கேட்டான்.
   ''அதுக்கு அப்புறம் அந்தப் பொண்ணை நீ போய்ப் பார்க்கவே இல்லையா? உனக்குப் பார்க்கணும்னு தோணலையா?''
   ''தோணும். தினமும் வயித்துல பசியெடுக்கிறது மாதிரி மனசுல பசியெடுத்துக் கூப்பாடு போடும். பார்த்தே ஆகணும்னு தோணும். எங்க இருக்கா, யார்கூட இருக்கா எல்லாம் தெரியும். எந்திரிச்சா, ஓடிபோய்ப் பார்க்கிற தூரம்தான். ஆனா, அந்தத் தெருவுக்குள்ள நான் போக முடியுமா... விடுவாங்களா என்னை..? அந்த நேரத்துல பூனைக்குட்டியோடு பூனைக்குட்டியா மாறி 'மியாவ்... மியாவ்..!’னு கத்திக் கதவு இடுக்கிலே என் காலத்தைத்தான் கழிக்க முடிஞ்சது!''
   ''சரி... அப்போதான், அந்தத் தெருவுக்குள்ள நீ போகக் கூடாது. இப்போதான் யார் வேணும்னாலும் போலாமே. எல்லாத்தையும் அடிச்சு நொறுக்கிட்டாங்களே! வா... இப்போ போய்ப் பார்ப்போம்.''
   ''இப்போவா... போடா! சின்னப் பையன் சகவாசம்கிறது சரியாத்தான் இருக்கு!''
   ''ஏன்... அந்த அம்மா வயசாகி செத்துப் போயிருப்பாங்கனு பயப்படுறியா?''
   ''வாயை மூடுடா... தினமும் ஒவ்வொரு அடுப்புல ஒவ்வொரு சட்டியில கொதிக்கிற நானே உசுரோட இருக்கேன். அவ மாட்டு மடியில காலத்துக்கும் கசியாம உறைஞ்சுபோன ரத்தம்டா... அவளுக்கு எதுவும் ஆகிருக்காது. நிச்சயமா அப்படியே இருப்பா!''
   ''அப்படினா வா போய்ப் பார்ப்போம்.
   நீ பார்க்கிறியோ இல்லையோ... நான் அவங்களைப் பார்த்தே ஆகணும்... வா!''
   முத்து, தீர்மானமாக நிறைக்குலத்தானை சைக்கிளில் ஏற்றி மிதிக்கத் தொடங்கிவிட்டான். 35 வருடங்கள் கழித்து நிறைக்குலத்தானுக்கு ரொம்ப நெருக்கமாகக் கேட்ட அந்தச் சிரிப்புச் சத்தம், முத்துவின் புத்திக்குள்ளும் கேட்கத் தொடங்கியிருந்ததோ என்னமோ.
   அவன் சைக்கிளை திருக்களூரைப் பார்த்து வேகவேகமாக மிதித்துக்கொண்டு போனான். ஐயர் தெருவுக்குள் சைக்கிள் நுழைந்ததுமே பெரியவருக்கு உடம்பு முழுவதும் அதே ஆயிரம் காடைகளின் றெக்கைகள் முளைக்கத் தொடங்கிவிட்டன.
   'இப்போது எப்படி இருப்பாள் அந்தக் காட்டுப்பேச்சி? நிச்சயமாக என்னைப் போல அவளுக்கும் முடி நரைத்திருக்கும், கை-கால் எல்லாம் ஆட்டம் கண்டாலும் கண்டிருக்கும், எனக்குக் கடவாய் பற்கள் விழுந்தனபோல, அவளுக்கும் முன் பற்கள் விழுந்திருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. எது எப்படி இருந்தாலும் அந்தக் கண்கள் அவ்வளவாக மாறியிருக்காது என்றுதான் நினைக்கிறேன்.
   நிச்சயமாக அந்த ஒளி அப்படியேதான் இருக்கும். ஒரு பூனையைப் போல கத்தினால், அது என்னைப் பார்த்து இன்னும் பிரகாசமாக ஒளி காட்டினாலும் காட்டும். வாசலில் உட்காந்திருப்பாளா..? ஐயர் வீட்டு வயசான பெண்கள் எல்லாம் வாசலில்தான் கால் நீட்டி அமர்ந்திருப்பார்கள். இவளும் இருப்பாள்... நிச்சயம் இருப்பாள்’ - நினைக்க நினைக்க நிறைக்குலத்தானின் உடம்பு குறுகுறுத்தது. அந்தச் சைக்கிளில் இருந்து மேலெழும்பி ஒரு காடை பறப்பதுபோல் இருந்தது அவருக்கு. இந்த ஏழு கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து வருவதற்கு, 35 வருடங்கள் ஆகியிருக்கின்றன அவருக்கு.
   தெருவுக்குள் நுழைந்துவிட்டார்கள். மூன்று தெருக்களிலும் நின்று நிதானமாக வாசலில் அமர்ந்திருக்கும் மூதாட்டிகளின் முகங்களைக் கூர்ந்து பார்த்தவாறு தேடிவிட்டார்கள். எல்லா தெருக்களிலும் வாசலில் நிறைய மூதாட்டிகள் கால் நீட்டி இருந்தார்கள். ஆனால், அவர்கள் யாரும் அந்தப் பெண் இல்லை. நிச்சயமாக எந்தப் பெண்ணிடத்திலும் நிறைக்குலத்தானைச் சிலிர்க்கவைக்கிற அந்த ஒளி இல்லை. இன்னும் ஒரே ஒரு தெருதான் மிச்சம் இருக்கிறது. 'அந்தத் தெருவுக்குள் அந்தப் பூனைச் சிரிப்பு, பாட்டி’ நிச்சயம் இருக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு, முத்து சைக்கிளை மிதித்தான். பெரியவர் நிறைக்குலத்தான் சைக்கிளில் இருந்து குதித்து இறங்கி, சைக்கிளைத் தடுத்து நிறுத்தினார்.
   ''ஏன்... என்னாச்சு இந்த ஒரு தெருதான் பாக்கி இருக்கு. வா... பார்த்துரலாம்!''
   ''இல்ல... வேண்டாம்டே. ஒருவேளை இந்தத் தெருவுல இல்லண்ணா!''
   ''அதெல்லாம் இருப்பாங்க!''
   ''ஆமா, இந்தத் தெருவுலதான் அவ இருக்கானு நானும் நம்புறேன். அது உண்மையா இருக்கணும்னா, நாம தெருவுக்குள்ள போய்த் தேடக் கூடாது. ஆமாடே, அவ உயிரோட இல்லைனு தெரிஞ்சுட்டா, அதுக்கு அப்புறம் எப்படி வாழணும்னு நான் இன்னும் யோசிக்கலடே. வேணாம் வா. அவ இங்கதான் இருக்கானு நாம நம்புவோம். வா போயிடலாம் முத்து!''
   ஆரஞ்சு மிட்டாய்க்குக் கை நீட்டும் ஒரு குழந்தையைப் போல கெஞ்சிய பெரியவரின் முகத்தைப் பார்த்த முத்து, அதன் பிறகு எதுவும் பேசவில்லை.
   அவரை எப்படிக் கூட்டிக்கொண்டு போனானோ, அப்படியே கூட்டிக்கொண்டு வந்து வீட்டில் விட்டுவிட்டான். வந்தவுடன் உடல் முழுவதும் பூனைகளைப் பரப்பி, மனம் முழுவதும் அந்தச் சத்தங்களைப் பரப்பி அன்று கட்டிலில் படுத்தவர்தான்... இன்னும் எழுந்திருக்கவில்லை.
   மூன்று மாதங்கள் ஆகின்றன. ஆனால், இன்று அவருக்குக் கடைசி நாள் என்று அவருக்கே தெரிந்துவிட்டது. மூச்சுவிட முடியவில்லை. உடல் அசையவில்லை, கண்களுக்கு, காட்சிகள் புலப்படவில்லை. புத்திக்குள் மட்டும் பூனை சத்தமும், அவளின் சத்தமும் கேட்கின்றன. அது, எப்போதும் இல்லாத அளவுக்கு அவரின் கபாலத்தை உடைக்கச் செய்யும் அளவுக்குச் சத்தமாகக் கேட்கிறது. இதுக்குத்தான் நிறைக்குலத்தான் காத்திருந்தார் போல. இப்படித்தான் அவர் சாவு அமைய வேண்டும் என்று விரும்பினார் போல.
   திடீரென்று அந்தப் பெண் அந்தப் பூனையோடு இப்போது அவர் மார்பின் மீது சாய்ந்து சிரிக்கிறாள். ஆச்சர்யம்... அவளுக்கு இன்னும் வயதாகவில்லை. முடி நரைக்கவில்லை. பெரியவருக்கு வரும் கண்ணீரைத் துடைக்காமல் சிரித்துக்கொண்டே இருக்கிறாள். இன்னும் கொஞ்ச நேரத்தில் அவள் பெரியவருடைய மூக்கின் இடது குழலை தன் விரலால் அடைத்தாலும் அடைத்துவிடுவாள். பெரியவரும் அதை எதிர்பார்த்துதான் மூக்கை விடைத்துக்கொண்டு விழி இரண்டிலும் இவ்வளவு நீர் கசிய இப்படிப் படுத்திருக்கிறார் போல.
   ஆனால், முத்து வரும் வரை அவர் உயிர் பிரியக் கூடாது. அவன் வந்துதான் அவரின் கண்ணீரைத் துடைக்க முடியும். அவன் அந்தக் கண்களைத் துடைத்து அவர் கைகளை எடுத்து ஒரு பூனைக்குட்டியைக் கொஞ்ச நேரம் வருடச் செய்து, சரியான நேரத்தில் அவர் கண் சிமிட்டும்போது அவரின் கை விரல்களை அவன் இறுக்கப் பிடிக்க, கன்னியில் இருந்து விடுபட்ட காடையைப் போல அவர் பறந்து போக ஆயத்தமாகும்போது, அவசர அவசரமாக அந்தப் பூனைச் சிரிப்புச் சிரிக்கும் காட்டுப் பேச்சியின் பெயரை அவன் காதில் மட்டும் அவர் சொல்லிவிட்டுப் போகக்கூடும்.
   ஆனால், முத்துதான் இன்னும் வரவில்லையே..!
   https://www.vikatan.com/
  • By நவீனன்
   புறாப்பித்து - சிறுகதை
       சிறுகதை: எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: ஸ்யாம்
    

   தற்செயலாகத்தான் அலுவலக மாடி ஜன்னலில் சாய்ந்தபடியே அந்தப் புறாக்களை கோவர்தன் பார்த்தார். அவரது அலுவலகத்தின் எதிரில் மத்திய உணவு சேமிப்புக் கிடங்கு இருந்தது. அதன் சுற்றுச்சுவர் மிக உயரமானது. கறுத்த சுவரின்மீது புறாக்கள் வரிசையாக உட்கார்ந்திருந்தன. ஒரேயொரு சாம்பல் நிறப் புறா. மற்றவை வெள்ளை நிறப் புறாக்கள்.

   மொத்தம் எத்தனை என எண்ணிப்பார்த்தார். பதினாறு புறாக்கள். அலுவலகம், கோவர்தன் இயல்பை மாற்றியிருந்தது.  இளைஞனாக இருந்த நாள்களில் இதுபோன்ற புறாக்களைப் பார்த்திருந்தால் இப்படி எண்ணியிருக்க மாட்டார். புறா என்றாலே காதலுக்குத் தூது விடுவது என்ற கற்பனையில் அமிழ்ந்து போயிருப்பார். ஆனால், இன்னும் ஓய்வுபெறுவதற்கு மூன்று வருடங்களே இருக்கும் அரசாங்க குமாஸ்தாவால் இதுபோன்ற கற்பனைகளில் ஈடுபட முடியாது அல்லவா? ஆகவே, வெறுமனே எண்ணிக்கொண்டிருந்தார்.

   உண்மையில் 30 வருடங்களுக்குமேல் அரசுப் பணிபுரிந்தவர்களுக்கு, அரசாங்கத்தின் குணங்கள் வந்துவிடுகின்றன; அவர்களை அறியாமலேயே முகமும் உடலும் செய்கைகளும் மாறிவிடுகின்றன. அரசு அலுவலக நாற்காலி மேஜைகளைப்போல அவர்களும் உருமாறிவிடுகிறார்கள். அதுவும் காலையில் அலுவலகம் வந்தது முதல் இரவு வரை வெறும் கூட்டல் கழித்தல் டோட்டல் என எண்ணிக்கைகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிற ஒருவருக்கு, எதைப் பார்த்தாலும் எண்ணத்தானே தோன்றும்!

   கோவர்த்தனை, அவரின் பிள்ளைகள் கேலி செய்தார்கள். சாப்பிட ஹோட்டலுக்குப் போனால், சாப்பிட்டு முடிப்பதற்குள் டோட்டல் எவ்வளவு என மனக்கணக்காகச் சொல்லிவிடுவார். ``அதான் கம்ப்யூட்டர்ல பில் வருமேப்பா... நீ எதுக்குக் கணக்குச் சொல்றே?” என மகள் கேட்பாள். என்ன பதில் சொல்வது?

   ஒவ்வொரு பைசாவையும் பார்த்துப் பார்த்துச் செலவழிக்க வேண்டும். சுத்தமாகக் கணக்குத் தர வேண்டும் என்று வளர்த்த தலைமுறை அல்லவா! இப்போது யார் அப்படிக் கணக்குப் பார்க்கிறார்கள்? ஐந்து பைசா பலசரக்குக் கடையில் விடுதல் என்பதற்காக அம்மா எவ்வளவு சண்டை போட்டிருக்கிறாள். இன்று பைசாக்களும் முக்கியமில்லை; ரூபாய்களுக்கும் அப்படித்தான்.

   ஆனால், அந்தப் பழக்கத்தில் ஊறியவர்களால் கணக்குப் போடாமல் இருக்க முடியாது. ஆகவே, சமீபமாக ஹோட்டலுக்குச் சாப்பிடப் போனால் மனதுக்குள் மட்டும் கணக்குப்போட்டுக் கொள்வார்.

   `சென்னையில் வாழ்க்கையைத் தொடங்கப் போகிறோம்’ என, கல்லூரி முடித்த நாள்களில் நினைத்தபோது எவ்வளவு சந்தோஷமாக இருந்தது! ஆனால், இந்த 33 வருஷ மதராஸ் வாழ்க்கை அப்படியொன்றும் சோபிக்கவில்லை. வீடு வாங்கியதும் பிள்ளைகள் படித்து முடிக்கப் போவதும்தான் மிச்சம்.

   சிதம்பரம், கடலூர், கரூர், ராசிபுரம் என வேலைக்காக மாறிய ஊர்கள் எதுவும் மனதில் ஒட்டவேயில்லை. உண்மையில் ஒரு கோடி பேருக்கும் அதிகமாக வசிக்கும் இந்த மாநகரில், அவரும் ஒரு துளி; அடையாளமில்லாத துளி. கொட்டும் மழையில் தனித்துளிக்கு ஏதாவது அடையாளம் இருக்கிறதா என்ன? எல்லாத் துளிகளும் ஒன்றுபோல்தானே இருக்கின்றன.

   வேலை கிடைத்துச் சென்னை வந்த நாள்களில் அறை எடுத்துதான் தங்கினார். அலுவலகம் விட்டவுடன் உடனே அறைக்குப் போய்விட மாட்டார். ஊர் சுற்றிக்கொண்டே இருப்பார். கோயில், கடற்கரை.  திருவல்லிக்கேணி வீதிகள், அரசியல் பொதுக்கூட்டம், நூலகம், பிரசங்கம், இசைக் கச்சேரி, இரவுக் கடைகள் என நேரம் போவதே தெரியாது.

   மேன்ஷன் அறையில் ஒரு வசதியும் கிடையாது. ஆனால், அது எதுவும் மனதில் ஒரு குறையாகத் தோன்றவேயில்லை. ஞாயிற்றுக்கிழமைகளில் சில வேளை மூன்று திரைப்படங்கள்கூடப் பார்த்திருக்கிறார். இரவு தேடிப் போய் பிலால் பிரியாணி சாப்பிட்டுவிட்டு வருவார். எல்லாமும் திடீரென அலுத்துப்போனது. உடனே திருமணம் செய்துகொண்டார். புதுமனைவியுடன் சென்னை வந்து தனி வீடு பிடித்துக் குடியேறிய பிறகு, மதராஸ் மிகவும் சுருங்கிப்போய் விட்டது.

   கடற்கரைக்குப் போய் வருவதே கூடச் சலிப்பூட்டும் வேலையாகி விட்டது. ஒருமுறை கடற்கரையில் ஆயிரக்கணக்கான ஆள்கள் கூச்சலிட்டுக்கொண்டிருப்பதைக் கண்டதும் அவருக்கு மூச்சுத் திணறத் தொடங்கியது. ``கடல் அலைகள் காலில் படும் வரை போகலாம்’’ என மகள் அழைத்தபோது `அலைகள் தன்னை இழுத்துக்கொண்டு போய்விட்டால் என்ன ஆவது!’ என்ற பயம் மேலோங்கியது.

   அவர் போகாதது மட்டுமின்றி, மகளையும் `அருகில் போகக் கூடாது’ எனத் தடுத்தார். ``உங்களுக்கு வயதாகிவிட்டது. அதான் தேவையில்லாமல் பயப்படுகிறீர்கள்’’ என மனைவி கோபித்துக் கொண்டாள்.

   அது நிஜம்தான் என உணர்ந்தார். உண்மையில், இது தேவையில்லாத பயம்தானா, வயதானவுடன் ஏன் உலகின் சின்னஞ்சிறு விஷயங்கள்கூட இத்தனை பூதாகரமாகத் தெரிகின்றன? எதற்கெடுத்தாலும் பயம் வருகிறது. கவலையும் கோபமும் பீறிடுகின்றன. ஒருநாள் அதைப் பற்றி அவரது அலுவலகத்தில் பேச்சு வந்தபோது டைப்பிஸ்ட் சுந்தரி சொன்னாள்,

   ``உடம்பு நாம சொன்னபடி கேட்காமப் போக ஆரம்பிச்சுட்டா,   மனசு நிலையில்லாமப்போயிடும். அதுக்கப்புறம் நாள்பூரா  உடம்பைப் பற்றியேதான் நினைச்சுக்கிட்டு இருக்கணும்னு தோணும். இருபது வயசுல யாரு உடம்பைப் பற்றிக் கவலைப்பட்டா? இரும்பைக் குடுத்தாலும் கடிச்சுத் தின்னுட்டுப் போயிட்டே இருந்தோம். அது இப்போ முடியுமா? உளுந்துவடை சாப்பிட்டா ஜீரணமாக அரை நாள் ஆகுது.``

   அதை கேட்டுப் பலரும் சிரித்தார்கள். ஆனால், கோவர்தனுக்குத் துக்கமாக இருந்தது. அவள் சொல்வது உண்மை. தனது பயத்தின் ஆணிவேர் உடம்பு. உண்மையில் நாமாகத்தான் அதைக் கெடுத்துக்கொண்டோம். அதில் அரசாங்க அலுவலகத்துக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. இனி கவலைப்பட்டு என்ன ஆகப்போகிறது? மாநகரில் ஒவ்வொரு நாளையும் கடந்து போவதும் சலிப்பாக இருக்கிறது.

   சினிமா, நியூஸ்பேப்பர், கோயில், பாட்டு எதையும் பற்றிக்கொண்டுவிட முடியவில்லை. எல்லாமும் சலிப்பாக இருக்கின்றன. அலுவலகத்தில் முன்பெல்லாம் கேரம் ஆடுவார்கள். டீ குடித்தபடியே மணிக்கணக்கில் அரட்டையடிப்பார்கள். அதெல்லாமே செல்போன் வந்தவுடன் முடிந்துபோனது. அலுவலகத்தில் கூடி விளையாடுவதும் பேசிச் சிரிப்பதும் அறுந்து போய்விட்டன.

   கோவர்தனுக்கு, ஒவ்வொரு நாள் அலுவலகத்துக்கு வரும்போதும் விருப்பமே இல்லாத வேலையைச் செய்வதாகவே தோன்றும். டிபன்பாக்ஸை மேஜைக்குக் கீழே வைத்துவிட்டு மேஜை டிராயரை இழுக்கும்போது 30 வருடங்களை இழுப்பதுபோலவே தோன்றும். அலுவலகத்தில் மட்டுமல்ல, தன் மீதும் சிலந்திவலை படிந்து கொண்டேவருகிறது. அதைத் துடைத்துச் சுத்தம் செய்ய முடியாது. இனி, தான் ஒரு சிலந்திவலை படிந்த மனிதன் மட்டுமே என நினைத்துக்கொள்வார்.

   இப்படிச் சொல்ல முடியாத மனவேதனையும் இறுக்கமும் சலிப்புமான ஒரு நாளில்தான் கோவர்தன் அந்தப் புறாக்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்.

   ஐந்து நிமிடம் பார்த்தபிறகு அந்தப் புறாக்களின் வெண்மை மீது ஈர்ப்பு உருவாக ஆரம்பித்தது. எவ்வளவு வெண்மை, தூய்மை! இந்த நகரின் எந்தத் தூசியாலும் புகையாலும் அந்த வண்ணத்தை மாற்ற முடியாது.
   புறாக்கள்  வரிசையாக உட்கார்ந்திருந்தன. எதற்கோ காத்திருப்பது போன்ற அதன் பாவனை. இவற்றில் யார் பாஸ், யார் ஸ்டெனோ, யார் ஹெட்கிளார்க்? புறாக்களுக்குள் ஒரு பேதமும் இல்லை. ஒரு புறா, சிறகைக் கோதிவிட்டபடியே இருந்தது. இன்னொரு புறா, பறக்க எத்தனிப்பதுபோல் தயாராக இருந்தது. இரண்டு புறாக்கள், ஒன்றோடு ஒன்று அலகை உரசிக்கொண்டிருந்தன. இந்த வரிசையைவிட்டு ஒரு புறா தனியே விலகி உட்கார்ந்திருந்தது. தன்னைப்போல அதற்கும் இந்த நகரம் சலிப்பாகியிருக்கும்போல!

   கோவர்தன் புறாக்களையே பார்த்துக்கொண்டிருந்தார். சட்டென எல்லாப் புறாக்களும் கோட்டைச் சுவரைவிட்டு வானில் பறந்தன. எங்கே போகின்றன? இந்தப் புறாக்கள் எங்கே தங்கியிருக்கின்றன? எதற்காக இந்த அவசரம்?

   புறாக்கள் இல்லாத கோட்டைச் சுவரைக் காணும்போது, விடுமுறை நாளில் காணப்படும் அரசாங்க அலுவலகத்தின் சாயல் தெரிந்தது. அந்தச் சுவரையே நெடுநேரம் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.ஹெட்கிளார்க் அருணன் திரும்பிப் பார்த்து, ``என்ன சார்... குடோன்ல அப்படி என்ன பார்க்கிறீங்க?’’ எனக் கேட்டார்

   ``சும்மாதான். காற்று வரலை!’’ என்று சமாளித்தார்.

   அன்று கோவர்தன் வீடு திரும்பும் வரை மனதில் புறாக்களே நிரம்பியிருந்தன.  வீட்டுக்கு வந்தவுடன் வழக்கத்துக்கு மாறாகப் பழைய டைரி ஒன்றில் பென்சிலால் புறா ஒன்றை வரைய முற்பட்டார். அதையும் ஏதோ அலுவலக வேலை என்றே மனைவி நினைத்துக் கொண்டாள். கோவர்த்தனால் நினைத்ததுபோலப் புறாவை வரைய முடியவில்லை. நான்கைந்து முறை வரைந்து பார்த்துத் தோற்றுப்போனார்.

   மறுநாள் காலையில் அலுவலகம் போனவுடன் புறாக்கள் சுவருக்கு வந்துவிட்டனவா என ஆர்வமாகப் பார்த்தார். புறாக்களைக் காணவில்லை. மதியம் வரை அடிக்கடி எட்டிப்பார்த்துக் கொண்டே இருந்தார். 3 மணி அளவில் ஒவ்வொரு புறாவாக வந்து அமர ஆரம்பித்தது. சரியாக அதே 16 புறாக்கள். பிரிக்க முடியாத தோழர்களைப் போன்று ஒன்றாக அமர்ந்திருந்தன.

   தானியத்தைக் கொத்திக்கொண்டு வந்து சாப்பிடத்தான் அமர்ந்திருக்கின்றன என முதலில் நினைத்தார். ஆனால், அந்தப் புறாக்களை உன்னிப்பாகக் கவனித்தபோது அவை எதையும் உண்ணவில்லை என்பதைத் தெரிந்துகொண்டார். பிறகு என்னதான் செய்கின்றன, எதற்காக இங்கே கூடுகின்றன?

   புறாக்கள் திடீரென பறந்து ஒரு வட்டமடித்துவிட்டுத் திரும்பவும் அதே இடத்தில் வந்து அமர்ந்தன.  இந்தச் சுவர், அதன் விளையாட்டு மைதானமா... அல்லது தியான மண்டபமா?  அந்தப் புறாக்களுக்குள் எது வயதானது? இவை எந்த ஊர்ப் புறாக்கள்? எதையுமே அறிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், அவற்றைப் பார்க்கப் பார்க்கக் கிளர்ச்சியூட்டுவதாகயிருந்தது. ஜன்னலில் நீண்டநேரம் சாய்ந்தபடி புறாக்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவரது பின்னால் நின்றபடி ஹெட்கிளார்க்  சுந்தரம் சொன்னார், ``முன்னாடியெல்லாம் நிறைய புறாக்கள் வரும் சார். இப்போ குறைஞ்சிருச்சு.’’

   ``நீங்க வாட்ச் பண்ணியிருக்கீங்களோ?’’ எனக் கேட்டார் கோவர்தன்.

   ``சும்மா பார்ப்பேன். இந்த ஆபீஸ்ல பொழுதுபோக வேற என்ன இருக்கு?’’ என்றபடியே தைலத்தை எடுத்து நெற்றியில் தேய்த்துக்கொண்டார்.

   ``இந்தச் சுவர்ல மட்டும்தான் புறா வருதா, இல்லை வேற இடங்களும் இருக்கிறதா?’’ எனக் கேட்டார் கோவர்தன்

   ``மசூதி முன்னாடி நிறைய புறாக்கள் இருக்கும். பழைய சஃபையர் தியேட்டர் எதிர்லகூட நிறைய நிக்கும். இப்போ அமெரிக்காக்காரன் எம்பசிக்குப் பயந்து அதுவும் ஓடிப்போயிருச்சோ என்னவோ!’’ எனச் சொல்லிச் சிரித்தார்

   `ஒரே எண்ணிக்கையில் எதற்காக புறாக்கள் வருகின்றன,  எப்படி இந்த இணக்கம் உருவானது, இது வெறும் பழக்கம்தானா, புறாக்கள் ஏன் காட்டைத் தேடிப் போகாமல் இப்படி மாநகருக்குள் சுற்றிக் கொண்டிருக்கின்றன?’

   அலுவலகத்தைவிட்டு இறங்கிப் போய்ப் புறாக்களை அருகில் பார்க்கவேண்டும்போலிருந்தது. செருப்பை மாட்டிக்கொண்டு கீழே இறங்கிப் போனார். கேட்டில் வாட்ச்மேனைக்கூடக் காணவில்லை. உலர்ந்துபோன புற்களும் பெயர் அறியாத செடிகளும் அடர்ந்திருந்தன. உள்ளே நடக்க நடக்க நெல் வேகவைக்கும்போது வரும் வாசனைபோல அடர்ந்த மணம். மழைத்தாரை வழிந்து கறுப்பேறிய சுவரில் சினிமா போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுக் கிழிந்துகிடந்தது.

   கோவர்தன், புறாக்கள் நின்றிருந்த சுவரின் அருகில் போனார். ஆள் அரவம் கேட்டால் பறந்துவிடுமோ எனப் பதுங்கியபடியே ஓரமாக நின்றார். அந்தப் புறாக்களில் ஒன்று, அவரைக் கண்டபோதும் காணாதது போல கழுத்தைத் திருப்பிக்கொண்டது. புறாக்களின் விம்மல் சத்தம் தெளிவாகக் கேட்டு க்கொண்டிருந்தது. அது  காசநோயாளியின் இழுப்புச் சத்தம்போல இருந்தது.  புறாக்கள், தங்கள் நேரம் முடிந்துவிட்டது என்பதுபோல எழுந்து அவரைக் கடந்து பறந்தன.  விலகி நின்றிருந்த ஒற்றைப் புறா, தனியே கடந்து போனது.

   அவர் அலுவலகத்துக்குப் போவதற்காகத் திரும்பி நடந்து வந்தபோது வாட்ச்மேன் ``என்ன சார், உள்ளே யாரைப் பார்க்கப் போனீங்க?’’ என்று கேட்டார்.

   ``பக்கத்து ஆபீஸ்’’ என்று சொல்லி, பொய்யாக ஒரு சிரிப்பை வெளிப்படுத்தினார்.

   அதற்குமேல் வாட்ச்மேன் எதையும் கேட்டுக்கொள்ளவில்லை. `இது என்ன பைத்தியக்காரத்தனம்... எதற்காக இப்படிப் புறாக்களைக் காண்பதற்காக இறங்கி வந்திருக்கிறேன்?’ என, தனக்குத் தானே கேட்டுக்கொண்டார். பிறகு, ஆபீஸ் வந்தபோதும் அந்தப் புறாக்களைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தார்.

   அன்றைக்கு ஆபீஸிலிருந்து நேரடியாக வீட்டுக்குப் போகாமல் எங்கெங்கெல்லாம் புறாக்கள் தென்படுகின்றன எனப் பார்க்கத் தொடங்கினார். அது வேடிக்கையான செயலாக இருந்தது. ஆனால், அவர் நினைத்ததுக்கு மாறாக நகரின் பல்வேறு இடங்களில் புறாக்கள் தென்பட்டன. ஒவ்வொன்றாக எண்ணத் தொடங்கினார். மனது ஏனோ மிகுந்த சந்தோஷமாகயிருந்தது.

   அதன் பிறகு ஆயிரம்விளக்கு, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், தி.நகர், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், குரோம்பேட்டை, தாம்பரம் என வீட்டுக்கு வரும் வழியெங்கும் புறாக்களைத் தேடிக் காண ஆரம்பித்தார்.  எங்கே, எந்த இடத்தில் எத்தனை புறாக்கள் ஒன்றுசேருகின்றன. அவை எப்படி இருக்கின்றன என ஆராய ஆராய, மகிழ்ச்சி பெருகியது.

   புறாக்களின் எண்ணிக்கையைக் குறித்துக்கொள்வதற்காகச் சிறிய பாக்கெட் நோட் ஒன்றை வாங்கி வைத்துக்கொண்டார். திடீரென நகரம் புதிதாக உருமாறியதுபோல் இருந்தது. எத்தனையோ அறியாத ரகசியங்களுடன் நகரம் இயங்கிக்கொண்டிருக்கிறது எனத் தோன்றியது. இத்தனை ஆயிரம் புறாக்கள் இந்த நகரில் இருப்பது ஏன் மக்கள் கவனத்தை ஈர்க்கவேயில்லை?

   இந்தப் புறாக்கள் ஏன் இடிபாடுகளுக்குள்ளேயே அதிகம் வாழுகின்றன? புறாக்கள் துறவிகளா, ஏன் அவை எதற்காகவும் உரத்துச் சண்டையிடுவதில்லை? மசூதிகளில், கோயில்களில், தேவாலயங்களில் ஏன் அதிகம் புறாக்கள் காணப்படுகின்றன? ஒருவேளை, புறாக்கள்தான் வானுலகின் தூதுவர்களா!  பார்க்கப் பார்க்க, புறா விசித்திரமான பறவையாகத் தோன்ற ஆரம்பித்தது.

   வீட்டுக்கு வந்த பிறகு ஏதேனும் ஒரு சேனலில் புறாவைப் பற்றி ஏதாவது காட்ட மாட்டார்களா எனத் தேட ஆரம்பித்தார். இணையத்தில் தேடி விதவிதமான புறாக்களின் புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டே இருந்தார். வீட்டில் அவரது திடீர் மாற்றத்தை மகளோ, மகனோ, மனைவியோ புரிந்துகொள்ளவேயில்லை

   ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் புறாக்களைத் தேடிச் சுற்ற ஆரம்பித்தார். `புறாக்கள் ஒருமுறை ஜோடி சேர்ந்தால் அது பிரிந்திடாது’ என்றார்கள். அது உண்மைதான் என நினைத்துக்கொண்டார். வளர்ப்புப் புறாக்கள் எங்கே விட்டாலும் வீடு திரும்பிவிடக்கூடியவை என்பது அவருக்கு வியப்பாக இருந்தது.

   தன்னைப்போல்தான் அந்தப் புறாக்களுமா? வீடுதான் அதன் உலகமா? கூண்டை ஏன் இவ்வளவு நேசிக்கின்றன? வானம் எவ்வளவு பெரியது... அதில் பறந்து மறைந்து போய்விடலாம்தானே!

   தாங்கள் எப்போதும் அமரும் சுவரை இடித்துவிட்டால்கூட அதே இடத்துக்குப் புறாக்கள் திரும்பி வந்துகொண்டிருக்கும் என்றான் உணவு சேமிப்புக் கிடங்கு வாட்ச்மேன். இது மடமைதானா, அல்லது `அந்தச் சுவர்கள் வெறும் தங்கிச் சென்ற இடமில்லை’ என புறாக்கள் உணர்ந்துள்ளனவா!

   புறா பித்து பிடித்துக்கொண்ட பிறகு, அவர் சில நாள்கள் மின்சார ரயிலில் பயணம் செய்தார். சில வேளைகளில் நகரப் பேருந்தில் இருந்தபடியே புறாக்கள் நிற்கும் இடத்தைக் கடந்து போனார். ஒருமுறை அப்படி ராயப்பேட்டையில்  ஷேர் ஆட்டோ ஒன்றில் போய்க்கொண்டிருந்தபோது அருகில் அமர்ந்திருந்த பர்தா அணிந்த இளம்பெண் ஒருத்தி, ஆள்களை இடித்துக்கொண்டு இறங்க முற்படுவள்போல உடலை வெளியே இழுத்துத் தகரக்கூரை ஒன்றின் மீதிருந்த புறாக்களை வேடிக்கை பார்த்தாள். அது அவருக்குச் சிரிப்பாக இருந்தது.

   ஷேர் ஆட்டோவில் இருந்தவர்கள், அவளது செய்கையால் எரிச்சலடைந்து திட்டினார்கள். அதைப் பொருட்படுத்தாதவள்போலச் சிரித்துக்கொண்டாள். பிறகு அவர்  கேட்காமலே சொன்னாள்,

   ``எனக்குப் புறான்னா ரொம்பப் பிடிக்கும். எங்க வீட்ல புறா வளர்த்திருக்கோம். வாப்பா, புறா பந்தயமெல்லாம் விடுவாங்க!’’

   `அப்படியா!’ என்பதுபோலத் தலையாட்டிக் கொண்டார்

   ஷேர் ஆட்டோ போய்க்கொண்டேயிருந்தது. ஒரு வளைவை நோக்கிச் செல்லும்போது அவராகச் சொன்னார் ``உங்க லெஃப்ட்ல ஒரு மெக்கானிக் ஷாப் வரும். அதுமேல புறாக்கூட்டம் இருக்கும் பாருங்க.``

   அவர் சொன்னதுபோலவே புறாக்கள் கூட்டமாக இருந்தன. அவள் அவசரமாகப் புறாக்களை எண்ணத் தொடங்கினாள். அவள் எண்ணி முடிப்பதற்குள் அவர் எண்ணிக்கையைச் சரியாகச் சொன்னார்.
   ``உங்களுக்கு எப்படிப் புறா இங்க நிக்கும்னு தெரியும்?`` என்றாள்.

   `இருபது வயதுப் பெண் இப்படிச் சிறுமிபோல வியப்போடு கேட்கிறாளே!’ என நினைத்தபடியே ``எல்லாப் புறாக்களையும் எண்ணி, கணக்கு எடுத்து வெச்சிருக்கேன்`` என்று தனது சிறிய நோட்டை எடுத்துக் காட்டினார்.

   அவளால் நம்ப முடியவில்லை.

   சட்டைப்பையில் இருந்த பாக்கெட் நோட்டை அவளிடமே கொடுத்தார். அவள் அவசரமாக அதைப் புரட்டினாள். உள்ளே இடம்வாரியாகப் புறாக்களின் எண்ணிகை பதிவுசெய்யப்பட்டிருந்தது

   ``எதுக்குப் புறாவை கவுன்ட் பண்றீங்க?`` என்று கேட்டாள்.

   ``சும்மாதான்`` எனச் சொல்லிச் சிரித்தார்

   ``எனக்கும் இப்படிச் செய்யணும்னு ஆசையா இருக்கு. ஆனா, ஹஸ்பண்டுக்கு இதெல்லாம் பிடிக்காது`` என்றபடியே அந்த நோட்டைத் தடவிக்கொடுத்தாள்.

   பாலத்தையொட்டி ஷேர் ஆட்டோ நின்றபோது, அதிலிருந்து இறங்கும் முன்னர் அவரிடம் அந்த நோட்டைக் கொடுத்தபடியே சொன்னாள், ``புறாவை ஃபாலோ பண்ணக் கூடாது. அப்படிப் பண்ணினா, அது கனவுல வந்துடும்.``

   அப்படி அவள் சொன்னது, அவரை மிகவும் சந்தோஷப்படுத்தியது. அன்றைய கனவில் ஒரு புறாவாவது வந்துவிடாதா என ஏங்கினார். உண்மையில் அவருக்குக் கனவு வருவதேயில்லை. அலுவலகத்தில் சில வேளை பகற்கனவு வந்திருக்கிறது. ஆனால், இரவில் கனவே வருவதில்லை.

   வீட்டுக்கு வரும்போது அந்தப் பெண்ணைப் பற்றியும் புறாக்களைப் பற்றியுமே நினைத்துக்கொண்டு வந்தார். இரவு 9 மணிக்கெல்லாம் உறங்கவும் சென்றுவிட்டார். அவர் கனவில் புறாக்கள் வரவேயில்லை. ஆனால், அவரது வாழ்க்கையில் முன்பு ஒருபோதுமில்லாத புதிய சந்தோஷம் பரவத் தொடங்கியிருந்தது.

   காலையில் சவரம் செய்து கொள்ளும்போதே `அந்தப் பர்தா அணிந்த பெண்ணை மீண்டும் காண்போமா?’ என யோசித்தபடியே சவரம்  செய்தார்.  திடீரென அவரும் புறாவைப்போல வெள்ளை உடை அணிந்துகொள்ள ஆசைப்படத் தொடங்கினார்.  கோபத்தில் கத்துவதைவிட்டு, மெதுவாகப் பேச ஆரம்பித்தார். கண்ணுக்குத் தெரியாத ஒழுங்கு, புறாக்களுக்குள் இருக்கின்றன. அவை உத்தரவுக்காகக் காத்திருப்பதில்லை. ஆனால், சட்டென ஒரே நேரத்தில் ஒன்றாகப் பறக்கின்றன. காகங்களைப்போலக் கத்திச் சத்தம்போட்டுப் பசியை வெளிக்காட்டிக்கொள்வதில்லை எனப் புறாக்கள் அவருக்குப் புதிய வகை அனுபவத்தின் கதவைத் திறந்துவிட்டன.

   நகரம் என்பது மனிதர்களுக்கானது மட்டுமல்ல, ஆயிரமாயிரம் புறாக்கள், பறவைகள், நாய்கள், பூனைகள், எலிகள், நுண்ணுயிர்கள் எல்லாமும் ஒன்று சேர்ந்து வாழ்வதற்கும்தான். அதனதன் பசிக்கு அதனதன் தேடல். யாருக்கும் எதுவும் எளிதாகக் கிடைத்துவிடுவதில்லை. நகரில் எதுவும் நிரந்தரமில்லை. கிடைக்கிற சுவரில் நிற்கவேண்டியதுதான். அவருக்கு, வாழ்க்கையைப் பற்றியிருந்த பயம் கொஞ்சம் கொஞ்சமாக விலகிப் போக ஆரம்பித்தது.

   பிறகு ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று  ராயப்பேட்டை மணிக்கூண்டுப் பகுதியில் புறாக்களைத் தேடி அலைந்துகொண்டிருந்தபோது ``நான்தான் முதல்ல  பார்த்தேன்” என்ற குரல் கேட்டது.
   அதே பர்தா அணிந்த இளம்பெண். கையில் ஒரு கூடையுடன் இருந்தாள். அவளைப் பார்த்துச் சிரித்தார்.

   ``இங்கேயா சார் உங்க வீடு?`` என்று கேட்டாள்

   ``இல்லை, கிழக்குத் தாம்பரம்`` என்றார்.

   ``புறாவைத் தேடியா இங்க அலையுறீங்க?” எனக் கேலிசெய்தாள்.

   ``அதெல்லாமில்லை. இன்னிக்கு ஹாலிடே. அதான் இப்படி...” எனச் சமாளித்தார்.

   அவள் சிரித்தபடியே ``எங்க வாப்பாகூட உங்களை மாதிரிதான். எந்நேரமும் புறா புறானுதான் கிடப்பாரு. அவரு புறாகூடப் பேசுவாரு. நீங்க பேசுவீங்களா?”

   ``அதெல்லாம் தெரியாது”

   ``நாம பேசினா புறாவும் பேசும்னு வாப்பா சொல்வாரு”

   ``நீங்க சொன்னா நிஜமாத்தான் இருக்கும்” என்றார் கோவர்தன்.

   ``என்மேல அவ்வளவு நம்பிக்கையா?” எனக் கேட்டாள் அந்த இளம்பெண்.

   என்ன சொல்வது எனத் தெரியாமல் மௌனமாக நின்றார்.

   ``அந்த நோட்டை எனக்குக் குடுப்பீங்களா?”

   ``தந்தா, என்ன குடுப்பே?”

   ``ஒரு டீ வாங்கித் தர்றேன்”

   ``நிஜமாவா?”

   ``ஆமா. ஆனா, நோட்டை எனக்கே குடுத்தரணும்”

   ``நீ என்ன செய்வே?”

   ``வீட்ல அதை வெச்சுக்கிட்டு நானா கற்பனை பண்ணிக்கிட்டு இருப்பேன். அதான் எந்த இடத்துல எத்தனை புறா வருதுனு டீடெயிலா போட்டிருக்கீங்களே!”

   ``நேர்ல போய்ப் பார்க்க ஆசை வராதா?”

   ``நான் என்ன ஆம்பளையா... புறா பின்னாடி சுத்திக்கிட்டே இருக்கிறதுக்கு, பொழப்பைப் பார்க்க வேணாமா?”

   அவள் சொன்னவிதம் அவரைக் குத்திக் காட்டியதுபோல அவளுக்குத் தோன்றியிருக்கக் கூடும்.

   ``நான் உங்களைச் சொல்லலை” என்று மறுபடியும் சிரித்தாள்.

   ``உண்மையைத்தானே சொன்னே?” என்றார்.

   ``உங்களுக்குக் கோபம் வரலையா?” எனக் கேட்டாள்

   ``இல்லை” எனத் தலையாட்டினார்.

   ``அப்போ வாங்க” என அருகில் உள்ள டீக்கடைக்கு அழைத்துப்போய் ஒரு டீ வாங்கித் தந்தாள்.

   ``நீ குடிக்கலையா?” என்றதற்கு ``ஐயயோ! ரோட்ல நின்னு டீ குடிச்சேன்னு தெரிஞ்சா கொன்னுபோட்ருவாங்க” என்றாள்.

   கோவர்தன் டீயை மெதுவாக உறிஞ்சிக் குடித்தபடியே அவளையே பார்த்துக்கொண்டிருந்தார். அவள் கைகள் அந்த பாக்கெட் நோட்டுக்காக நீண்டபடியிருந்தன.

   ``நோட்டைத் தர மாட்டேன்” என்றார் கோவர்தன்.

   ``என்னை ஏமாத்திட்டீங்களா?” என வருத்தமான குரலில் கேட்டாள்.

   ``இல்லை, சும்மா சொன்னேன். இந்தா” என அந்த நோட்டை எடுத்து நீட்டினார்.

   அவள் வாங்கிப் பிரிக்கக்கூட இல்லை. கையில் இருந்த கூடையில் போட்டுக்கொண்டாள்.

   ``உன் பேரு என்ன?” என்றார் கோவர்தன்.

   அவள் பெயரைச் சொல்லாமலேயே ரோட்டைக் கடந்து போனாள். டீக்கடை முன்பாகவே நெடுநேரம் நின்றுகொண்டிருந்தார் கோவர்தன். சந்தோஷமும் வருத்தமும்  ஒன்றுகலந்து  மனதில் பீறிட்டுக்கொண்டிருந்தன.
   அன்று இரவு, கடைசிப் பேருந்தைப் பிடித்துதான் வீடு திரும்பினார். வீடு வந்த பிறகும் உறக்கம் கூடவில்லை. எழுந்து சாய்வு நாற்காலியில் படுத்தபடியே அந்தப் பெண்ணைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தார். `அந்தப் பெண் இந்நேரம் வீட்டில் தன் பாக்கெட் நோட்டை வைத்துக்கொண்டு புறாக்களைக் கற்பனையில் பார்த்துக் கொண்டிருப்பாள்’ எனத் தோன்றியது

   திடீரென, தான் 25 வயதுக்குத் திரும்பிவிட்டதுபோல் இருந்தது. தனது பழைய கறுப்பு-வெள்ளைப் புகைப்படங்களை பீரோவிலிருந்து எடுத்துப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். அந்தப் பையன் நான் அல்ல. அந்தப் புகைப்படங்களிலிருந்து வெகுதூரம் விலகி வந்துவிட்டேன். இப்போதைய தன் முகம் தனக்கே பிடிக்க வில்லை. அன்று அவளது நினைவாகவே சாய்வு நாற்காலியில் உறங்கிப்போனார். கனவில் புறா வந்திருந்தது.
   அதன் பிறகு அவர் ஒவ்வொரு முறை புறாவைக் காணும்போது அவருக்கு அந்த இளம்பெண் நினைவு வரத் தொடங்கியது. புறாக்களை எண்ணத் தொடங்கியபோது அவரை அறியாமல் ஒரு குற்றவுணர்ச்சி எழுந்தது. `இதைத் தன் மனைவி கண்டுபிடித்துவிடுவாளா!’ எனச் சந்தேகம்கொண்டார். பிறகு, தனக்குத்தானே `இது வெறும் சந்திப்புதான்.  அதற்குமேல் ஒன்றுமில்லை’ எனச் சொல்லிக் கொண்டார்.

   பர்தா அணிந்த இளம்பெண்ணைப் பற்றி நினைக்க நினைக்க, தன் மீது ஒரு புறா வந்து அமர்ந்துவிட்டுப் பறந்து போய்விட்டதுபோல் இருந்தது.

   `தான் ஒரு கற்சுவர். சுவர்கள் விரும்பினால் புறாக்கள் வந்து விடுவ தில்லை. புறாக்கள் அமர்வ தாலேதான் சுவர் அழகுபெறுகிறது. சுவர்கள், புறாக்களை நினைத்து வருந்திக்கொண்டே இருக்க வேண்டியதுதான்போலும்’ என நினைத்துக்கொண்டார்

   ஹெட்கிளார்க், அவர் காதில் விழும்படி யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தார்...

   ``திங்கறதும் தூங்குறதும் மட்டுமா சார் மனுஷன்... அவனுக்குனு ஒரு சந்தோஷம் வேணாமா? என்ன சார் இருக்கு இந்த ஊர்ல? எல்லாத்துக்கும் காசு காசுனு புடுங்கிருறாங்க. வீடும் அப்படித்தான் இருக்கு... ஊரும் அப்படித்தான் இருக்கு.’’

   ``சரிதான்’’ என்று சத்தமாகச் சொன்னார் கோவர்தன்.

   ஏன் இவ்வளவு சத்தமாகச் சொன்னார் என, குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் ஹெட்கிளார்க்.

   அவர் பார்வையில் படாமல் தலையைக் குனிந்துகொண்டார் கோவர்தன். அந்த நிமிடம் இருக்கையையொட்டிய ஜன்னல் திறந்திருப்பது தொந்தரவாகத் தோன்றியது.
   https://www.vikatan.com/
  • By நவீனன்
   அவை ஊளையிடுகின்றன - கலைச்செல்வி
   ஓவியங்கள் : ரமணன்
    
   சுவரின் மறுபக்கம் அவை உறுமத் தொடங்கியிருந்தன. ஆரம்பக்கட்ட உறுமல்தான். ஆனால், அந்த ஒலியே அவளை மருளவைத்தது. கைகள் இரண்டையும் மடித்து, உடலைக் குறுக்கிச் சுவரோரமாகப் பம்மிக்கொண்டு அமர்ந்திருந்தாள். சில சமயங்களில் உறுமலோடு நின்றுவிடலாம். ஆனால், அது வெகுசில நேரங்களில் மட்டுமே. பெரும்பாலும் அவை பெருங்குரைப்புகளாக மாறிவிடும். தொடர்ந்து உறுமல் ஒலி கேட்பதுபோலிருந்தாலும் சாளரத்தின் வழியே எட்டிப் பார்க்கும்போது, ஏதும் தட்டுப்படுவதில்லை. ஆனால், அதுகூட வெகுசில நேரங்களில் மட்டுமே. ஒருவேளை இப்போதும் அப்படித்தானோ... சுவரோடு காதை நெருக்கிவைத்துக்கொண்டாள். இல்லை... அவை நடமாடுகின்றன. அவளைக் கண்காணிப்பதற்குத் தோதான இடத்தைத் தேடி அங்குமிங்கும் அலைகின்றன. விறுக்கென்று அடிவயிறு குழைந்து பயம் கவ்வி இழுத்தது அவளை.

   அவளைக் கண்காணிக்கவே அவை வருகின்றன. அவளுடையவை அத்தனையும் இப்படித்தான் உருவப்பட்டன. தொடர்ந்து தான் கண்காணிப்பில் இருப்பதை அவள் உணர்ந்தேயிருந்தாள். முதலில் உறுமல்கள் சன்னமாக எழும். பிறகு, குரைப்பாக மாறும். குரைப்பு முதலில் ஒன்றிலிருந்துதான் தொடங்கும். பிறகு, நாலைந்து இல்லையில்லை... ஏழெட்டு இருக்கலாம். குரைப்பு அடக்க முடியாததாகிவிடும். அடர்க் கருப்பில், அல்லது திட்டுத்திட்டான கருப்பில், வெளிர் செம்மண் நிறத்தில்... நிறம் வெவ்வேறாக இருந்தாலும் எல்லாமே வளர்த்தியாகவும் தாட்டியமாகவும் இடைவிடாது குரைக்கும் சுபாவத்துடன் இருந்தன. கலவரத்தோடு கதவை ஏறிட்டாள். தாழிடப்பட்டுத்தானிருந்தது. ஆனாலும், உளுத்துப்போன தாழ்ப்பாள். எப்படியாக இருந்தாலும் தாழ்ப்பாள் வீட்டுக்குப் பாதுகாப்பு; வீடு அவளுக்குப் பாதுகாப்பு. வீடு என்றாலே பாதுகாப்புதானே... அதுவும் நிறைந்த வீடென்றால்... கணவன், மூன்று மகன்கள் என நிறைந்த வீடு. பூர்விக வீட்டை இடித்துவிட்டு, புதிதாகக் கட்டத் தொடங்கியபோது அகலக்கால் வைக்கிறோமோ என அவளுக்குப் பயம் வந்தது. கணவன் சொன்னான், “வருசம் ஒருக்காவா கட்றோம்..?” பிறகு கணவனுக்குப் பயம் வந்தது. ‘‘மூணு பயலுவன்னு ஆயிடுச்சு. சின்னதுன்னாலும் ஆளுக்கொரு ரூமா தடுத்துட்டா நல்லாருக்கும்.” அவள் சொன்னாள், “நல்லாதான் இருக்கும்.” ஆமோதித்தான். இரட்டைக்கட்டு வீடோ முற்றம்வைத்த பெரிய பரப்போ இல்லையென்றாலும், முன்கூடம், சமையலுக்கு ஒன்று, பத்தாயம் வைக்க ஒன்று, படுக்க ஒன்றுமாக இருந்த அறைகளைப் புதிதாக்கினார்கள். மிஞ்சிய மணலில் பயல்கள் ஏறி விளையாடுவதும், விளையாடிய களைப்பில் அதிலேயே உறங்குவதுமாக நாள்கள் கடந்தபோது, அந்தத் தொழிற்சாலை அங்கு வரப்போவது யாருக்கும் தெரியவில்லை அல்லது யாரும் உணரவில்லை.

   அவை நடமாடத் தொடங்கிவிட்டன. உக்கிரமான நடமாட்டம். பெருங்குரைப்பை உள்ளே அழுத்திக்கொண்டு உறுமலை உயர்த்தியிருந்தன. சன்னல்களை அடைக்க முடியாது. கதவுகள் உளுத்து உதிர்ந்துவிட்டன. வெறும் கம்பிகள் மட்டுமே... அதுவும் துருவேறி... ஒருமுறை கம்பியை இறுகப் பிடித்தபோது அது கையோடு பிடுங்கிக்கொண்டு வந்தது. நல்லவேளை, அந்த இடைவெளியில் அவற்றின் உடல் நுழைய முடியாது. ஆனால், புழுதிக்குத் தடையில்லை. தெருப்புழுதி... ஓட்டமும் நடமாட்டமுமாக அவை கிளர்ந்தெழுப்பும் புழுதி. வெயிலும் சேர்ந்துகொண்டதால் உக்கிரமாக இருந்தது. மகன்கள் விளையாடும்போதும் இப்படித்தான் புழுதி கிளம்பும். ஒருவேளை விளையாடச் சென்ற பயல்கள்தான் புழுதியைக் கிளப்பிவிடுகிறான்களோ? அய்யய்யோ... இத்தனை சனியன்களை ஒண்ணா பாத்தா சின்னப்பய பயந்துக்குவானே. தாழ்ப்பாளை நீக்க எழுந்தபோது, அவை ஒருசேர பெருவொலியில் குரைக்கக் தொடங்கின. பேரொலி... குடலை உருவி இழுப்பதுபோன்று காதில் அறையும் ஒலி. காதுகளை இறுகப் பொத்திக்கொண்டு குத்துக்காலிட்டு அமர்ந்தாள். சுவர் பலவீனத்தில் அதிர்ந்துகொண்டிருந்தது. எந்நேரமும் விழுந்துவிடலாம். உடலை நகர்த்தி நகர்த்தி நடுக்கூடத்துக்கு வந்தாள்.

   நடுக்கூடத்தில்தான் அவள் கணவன் படுத்திருப்பான். இறுதியாகவும் இங்குதான் கிடத்திவைக்கப்பட்டிருந்தான். முடிந்துவிட்டது, எல்லாமும் முடிந்துவிட்டது. அந்தத் தொழிற்சாலை இங்கு ஆரம்பிக்கப்பட்டபோது, எல்லோருக்கும் எல்லாமும் முடிந்துவிடும் என்று யாருக்கும் தெரியவில்லை. “மண்ணுந்தண்ணியும் வெஷமாப் போச்சு”னு இப்போ சொல்வதுபோல அப்போ ஒருவர்கூடச் சொல்லவில்லை. சொன்னால் மட்டும் என்ன செய்ய முடியும். சொற்களை அம்பலம் ஏற்றப் பணம் வேண்டுமே. அது சில்லறையாகக்கூட இல்லாததால் எல்லோரும் சிதறிப்போனார்கள். சிலர் அதே தொழிற்சாலையில் கூலிகளாகச் சேர்ந்தார்கள். இவளின் பிள்ளைகள் அதற்கும் லாயக்கற்ற வயதில் இருந்தனர். ஆனாலும், பெரியவன் பத்து முடித்திருந்ததில், ‘‘கம்பெனியில் வேலை இருக்கும்’’ என்றான் குமார், வேலைக்கு ஆள் பிடிக்கும் ஏஜென்ட். நான்குவழிச் சாலைப் பணிக்குச் சிலர் சென்றுவிட்டனர். வயதானவர்கள் பிடிவாதமாக நகர மறுத்துவிட்தைப்போல இவள் கணவனுக்கும் பிடிவாதம் இருந்தது.

   காதைப் பிளக்கும் சத்தம். குரைப்புக்கும் ஓட்டத்துக்கும் ஈடுகொடுக்க முடியாமல் வறண்ட பூமி புழுதியாக எழுந்தாடியது. முன்பெல்லாம் மண்ணுக்கு இத்தனை வறட்சியில்லை. பொட்டல்தன்மை இல்லை. ஆற்றை ஒட்டிய மண் இப்படியா வறண்டுவிடும்? ஆனால், அதில் ஆச்சர்யம் இல்லையாம். “கம்பெனிக்காரன் பொழுதன்னைக்கும் மிசினு போட்டு உறிஞ்சுறான். அப்றம் வெள்ளாமைக்குத் தண்ணி எப்டிக் கெடைக்கும்?” இவளுக்கு மட்டுமல்ல... எல்லாருக்குமே புரியத் தொடங்கியது. அதிகாரி அதிகாரியாக, அலுவலகம் அலுவலகமாக எறி இறங்கியாயிற்று. கையூட்டு பெற்றுக்கொண்டு, கள்ளச் சிரிப்பை மறைத்துக்கொண்டு, “ஆவன செய்கிறோம்” என்றார்கள். “எப்போங்க...” என்றபோது, கோபப்பட்டார்கள். எப்போ இதுக்கெல்லாம் விடிவுகாலம். மனசு முழுக்க அரிப்பு. பிறகுதான் உடலிலும் அரிப்பு. ஆலைக்கழிவு கலந்த நீரால் ஏற்பட்ட அரிப்பாம். யாராரோ வந்தார்கள். ஆவேசப்பட்டார்கள். ஆதரவாகப் பேசினார்கள். ஒவ்வொரு முனையிலும் நம்பிக்கை எழும். பிறகு, அதிகாரத்தில் அமிழ்ந்துபோகும். பிறகுதான் ஊரை விட்டுட்டு ஊரே கிளம்பியது.

   இவளும் கேட்டாள்.. “ஏங்க நாமளும் போயிரலாமா..?”

   “எப்டிறீ போறது... கடனை வாங்கி வீட்ட வேற இடிச்சுக் கட்டித் தொலச்சிட்டோம். எங்கன்னு போறது..?” ஆனாலும், போய்விட்டான் ஒரேடியாக.

   “தண்ணியில கனிமம் கலந்துபோச்சு. அதைக் குடிச்சதனாலதான் இந்தச் சீக்கு”. ஆனால், பெரியாஸ்பத்திரியில் அதைக்கூடச் சொல்லவில்லை. வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள்.

   அன்றிரவும் அவை கூடின. ஏழெட்டுக்கு மேலிருக்கும் எண்ணிக்கையில். ஆனால், குரைக்கவில்லை. இரண்டு கால்களைக் குத்துவசத்திலும் இரண்டு கால்களை நீள்வசத்திலும் வைத்தப்படி தரையிலமர்ந்து தலையை உயர்த்தி ஊளையிட்டன. நீண்ட நெடிய ஊளை. சாளரத்தின் கதவை இழுத்து மூடினாள். அப்போது சாளரத்துக்குக் கதவிருந்தது. அவளுக்கும் கணவன் இருந்தான். ஆனால், அவன் அவளுக்குத் தெம்பு சொல்ல முடியாமல் அல்லது அன்றே இறந்துபோக வேண்டிய கட்டாயத்தில் படுக்கையில் முடங்கிக் கிடந்தான். இதே கூடம்தான். இதே முன்கூடம்தான். அன்று மகன்கள் சுற்றிலும் நின்றிருந்தது, அவளுக்கு ஆதரவாக இருந்தது.

   ‘‘குடுக்கக் கூடாதத தூக்கிக் குடுத்துட்ட... பேசாமப் புள்ளங்கள அழச்சுக்கிட்டு நீயும் கௌம்பி வந்துருடீ...” புருஷன இழக்கக் கூடாதுதான். இந்தப் பூமியும் நிலமும்கூட அப்படித்தான். ஏன், இந்த வீடுகூட இழக்க முடியாத ஒன்றுதான்.

   “புடிவாதம்டீ ஒனக்கு...” பிடிவாதம் என்று ஏதுமில்லை. கணவன் இருந்தபோது கிளம்புவதற்கு மனம் ஒப்பவில்லை. கணவன் போன பிறகு தைரியம் வரவில்லை.

   வெளியில் சத்தம் அடங்கியிருந்தது. குரைத்து அடங்கி எங்கோ ஓடியிருக்கலாம். இதுதான் அவள் வெளியே கிளம்பும் தருணம். கம்பெனி ஷிப்ட் முடியும் நேரம். நெடுக நடந்து பெரிய சாலையைக் கடந்து செல்வாள். தொழிலாளிகளுக்கு இவளைத் தெரியும். பைத்தியக்காரியாக, பிச்சைக்காரக் கிழவியாக. ஆனால், ஒருகாலத்தில் இங்கே பூரிப்பாக வாழ்ந்தவளாக, பிறகு, எல்லாவற்றையும் தொலைத்தவளாக அறிந்தாரில்லை. எல்லோருமே எல்லாமே புதுசு. அவளுக்குக் காசு வாங்கும் பழக்கமுமில்லை. அப்படியே கிடைத்தாலும் அதை என்ன செய்வதென்றும் புரியவில்லை. மீந்த உணவு போதாதா?

   ஆனால், தன் கையில் விழும் அந்த உணவுக்காக நாய்கள் சண்டையிட்டால், அவளால் தாங்க முடியாது. ஓலமிட்டு அழுவாள். பயந்து வரும். கணவன் இருந்தால் சாய்ந்துகொள்ளலாம். மகன்கள் இருந்தால் சாய்த்துக்கொள்ளலாம். அவர்களோ இவளின் கதறலைக் கண்டும் காணாமலுமாகத் தள்ளி நின்றுவிடுகிறார்கள். ஓடி ஓடிப் பிடித்தாலும் கைக்கு அகப்படுவதில்லை. இவளின் பரட்டைத் தலையும் அரைகுறையான நைந்த ஆடைகளும் சிறுவர்களுக்குச் சிரிப்பை வரவழைக்கும். இவள் மீது கற்களை, குச்சிகளை விட்டெறிவார்கள். சிறுவர்கள்தான் ஆனால், அவர்கள் இவளின் மகன்கள் அல்ல... விளையாடப் போன மகன்கள் இன்னும் திரும்பவில்லை. திரும்பிவரும்போது, வெந்நீர் காயவைத்துப் புழுதிபோகக் குளிக்க ஊற்ற வேண்டும். ஆனால், குளித்த பிறகும் உடலே பிய்ந்துவிடும்போல அரிப்பு, அரிப்பு.

   ஒருமுறை இவளின் பரிதாப நிலையைப் பார்த்துக் கணவன் இவளை நோக்கிக் கைகளை நீட்ட, விம்மியெழுந்த உவகையோடு அருகே ஓடியபோது, அவன் கறிவேப்பிலைக் குச்சியால் அடித்தான். கிழிசலான ஆடையில் சுண்டி விழுந்த அடிகள் அவளைத் துள்ளவைத்தன. ஆனாலும் திரும்பிப் பார்த்துக்கொண்டுதான் ஓடினாள். அது கணவனல்ல... கணவனல்ல... யாரோ ஒருவன். குச்சியோடு துரத்துகிறான். மூச்சிரைக்க வீட்டுக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டுக்கொண்டாள்.

    அவையும் அவளைத் துரத்தியிருக்கின்றன. மூச்சிரைக்க ஓடியிருக்கிறாள். கூடவே மகன்களும். தாயும் மகன்களுமாகக் கதவை மூடிக்கொண்டு ஆசுவாசிக்க நினைத்த தருணத்தில், திடீரென மகன்களைக் காணவில்லை. தொண்டை வறள வறள அழுதாள். இத்தனை சத்தமாகக் குரைக்கும் அவற்றுக்குத் தொண்டை வறளாதா? வறண்டிருந்தது. ஒருநாள், பின்னும் ஒருநாள், பின்னும் ஒருநாள். இரண்டு கால்களைக் குத்துவசத்திலும் இரண்டு கால்களை நீள்வசத்திலும் வைத்தபடி தரையிலமர்ந்து தலையை உயர்த்தி ஊளையிட்டன. மகன்கள் ஒவ்வொருவராகக் கை நழுவிய தினங்கள் அவை.

   கனிந்த இரவின் பின்னணியில் தொழிற்சாலை மின்னியது. கழிவு நீரின் துர்நாற்றம் காற்றில் கலந்து குளிராக வீசியது. சிமென்ட்டும் மணலுமாகக் காரை பெயர்ந்திருந்த தரையில் படுத்துக்கிடந்த அவளை எதுவோ கடித்தது. செவ்வெறும்புகளாக இருக்கலாம். வெற்று மரச்சட்டங்களாகத் தொங்கும் கதவை மூடியிருப்பதும் மூடாமலிருப்பதும் ஒன்றுதான். பூரான், தேள், பாம்பு என எது வேண்டுமானாலும் வரலாம். நாய், நரிகள், ஏன் தொழிற்சாலை ஆட்கள்கூட வரலாம். வீட்டைப் பிடுங்கிக்கொள்ளலாம்.

    திடீரென்று அவளுக்கு உதறலெடுத்தது. அந்தச் சனியன் பிடித்த கண்காணிப்பு நாய்கள் ஒட்டுமொத்தமாகக் கூடி இவளைப் பிடுங்கிக் கடித்து, கடித்துப் பிடுங்கி... எழுந்து உட்கார்ந்துகொண்டாள். நடுங்கும் கைகளால் சேலையைக் கால்கள் வரை இழுத்து விட்டுக்கொண்டபோது கிழிசல்கள் பெரிதாகி விரிந்தன. இரத்தம் வடிந்த புண்களில் ஈக்கள் உட்கார்ந்து உட்கார்ந்து எழுந்தன. துணியை இழுத்து உதறியதில் யாரோ போட்டுவிட்டுப்போன ப்ரெட் பாக்கெட் பொத்தென்று நழுவி விழுந்தது. சாப்பிட்டு நாலைந்து நாள்களாகி இருக்கலாம். ஆனாலும், சாப்பிடும் உத்தேசமில்லை. கொஞ்சம் முன்புதான் கருஞ்சாந்தாய் பொங்கி வழிந்த ஆலைக்கழிவு நீரைக் குடித்திருந்தாள்.

   அவள் கனவிலும் இதே கூடத்தில்தான் உறங்கிக்கொண்டிருக்கிறாள். அவள் அருகில் படுத்துக்கொள்ள கணவன் உள்பட நான்கு பேருக்கும் கடும்போட்டி. அவர்களிடமிருந்து விடுபட்டு விளையாட்டாகப் பத்தாய அறைக்குள் ஒளிகிறாள். மூன்றாவது மகன் முந்தானையைப் பிடித்தபடி தூக்கிக்கோ என்று கைகளை உயர்த்துகிறான். வீடு முழுக்க அலையலையாய்ச் சிரிப்பு, பேச்சு, சத்தம், விழிப்பு, தூக்கம், விழிப்பு, குரைப்பொலி. இதோ வரும் நேரம்தான்... ஒன்றா இரண்டா நான்கைந்தா இல்லை ஆறேழா? அத்தனையும் இதோ உறுமத் தொடங்கும். பிறகு, ஒலி, ஒலி குரைப்பொலி. ஆனால், நிசப்தம்... எங்கும் நிசப்தம்! அப்படியானால் அவை வரவேயில்லையா. சாளரத்தின் திட்டில் வலதுகையை வைத்து எவ்விப் பார்க்க முயன்றாள். எவ்வி எவ்வி எவ்வ முடியாமல் துவண்டாலும், காதுகள் அவற்றின் வருகையை, காலடியோசையைச் சொன்னது. நடுக்கூடத்தில் பம்மிக்கொண்டாள். பிடிப்பில்லாமல் உட்காரவியலாத தேகம் அவளைக் குப்புறக் கவிழ்த்தியது.

   அந்நேரம் அவை வந்திருந்தன. இரண்டு கால்களைக் குத்துவசத்திலும் இரண்டு கால்களை நீள்வசத்திலும் வைத்தப்படி அமர்ந்து தலையை உயர்த்தி ஊளையிட்டன.
   https://www.vikatan.com
  • By நவீனன்
   ஆகாசத்தின் உத்தரவு - சிறுகதை
   நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... இமையம், ஓவியங்கள்: பாலு
    
   சிமென்ட் மேடையில் ஒரு குதிரையின் மீது கிழக்கு பார்த்த நிலையில் முனியசாமி மாதிரி கொடூரத் தோற்றத்தில் ஒரு சாமி உட்கார்ந்து இருந்தது. சாமி சிலைக்கு முன் எந்த அவசரமும் இல்லாமல் கருத்த நிறமுடைய ஓர் ஆள் கும்பிட்டுக் கொண்டிருந்தான். நடந்து வந்த களைப்பால் வழிந்த வியர்வை யைக்கூடத் துடைக்க வில்லை.
   கீழே வைத்திருந்த பையில் இருந்து செய்தித்தாள் ஒன்றை எடுத்து, தரையில் விரித்துப்போட்டான். பையில் இருந்த பொரிகடலை பொட்டலத்தை எடுத்துப் பிரித்துவைத்தான். ஒரு சீப்பு வாழைப்பழத்தை எடுத்துவைத்து அதில் ஊதுவத்தியைச் செருகினான். குவாட்டர் பிராந்தி பாட்டில் இரண்டு, சிகரெட் டப்பி ஒன்றை எடுத்து அடுக்கினான். எலுமிச்சைப்பழம், கற்பூரம், தேங்காய், பூ, வெற்றிலைபாக்கு... என்று படையலுக்கு உரிய பொருள்களை எடுத்துவைத்தான். கற்பூரத்தை எடுத்து, சாமி குதிரையின் காலடியில் வைத்து ஏற்றினான். கற்பூர தீபத்தில் மூன்று முறை காட்டிவிட்டு தேங்காயை உடைத்தான்; ஊதுவத்தியைக் கொளுத்தினான். எலுமிச்சைப்பழத்தை எடுத்து, அருகில் இருந்த சூலத்தில் செருகி இரண்டு இரண்டாக நான்கு பழங்களைப் பிளந்தான். அதில் திருநீறு, குங்குமத்தைத் தடவிவைத்துவிட்டு நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கும்பிட்டான். எழுந்து எலுமிச்சைப்பழத் துண்டுகளை எடுத்துக் கும்பிட்டு, கண்களில் ஒற்றிக்கொண்டு நான்கு திசைகளிலும் விட்டெறிந்தான்.
   பொரிகடலையை ஒரு பிடி அள்ளி, குதிரை மீது இருந்த சாமியின் பக்கம் விசிறினான். எஞ்சியதை நான்கு திசைகளிலும் தூவினான். பிராந்தி பாட்டிலில் ஒன்றைத் திறந்து தண்ணீர் தெளிப்பது மாதிரி சாமி மேடையைச் சுற்றிவந்து தெளித்தான். குதிரையின் மீதும் கொஞ்சம் தெளித்தான். நான்கு வாழைப்பழங்களை எடுத்து தோலை உரித்துவிட்டு, மாவு பிசைவது மாதிரி பிசைந்தான். நான்கு உருண்டைகளாக்கி நான்கு திசைகளிலும் விட்டெறிந்தான். குதிரையின் காலடியில் கொட்டிக்கிடந்த திருநீறு, குங்குமத்தை அள்ளி நெற்றி நிறையப் பூசிக்கொண்டு விழுந்து கும்பிட்டுவிட்டு எழுந்தான்.

   நான்கு திசைகளிலும் பார்த்தான். ஏழு, எட்டு வன்னிமரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நின்றுகொண்டிருந்தன. ஒரு வேப்பமரம், கால் மைல், அரை மைல் தூரம் தள்ளி சவுக்குத் தோப்புகள், மக்காச்சோளக் காடுகள் இருந்தன. கோயிலைச் சுற்றி எதுவும் இல்லை. வெறும் கட்டாந்தரை, களர் நிலமாக இருந்தது. ஆடு-மாடுகள்கூடக் கண்ணில் படவில்லை. சாமியின் பக்கம் திரும்பிக் கும்பிட்டான். ரகசியம் மாதிரி முணுமுணுத்தான்.
   ''இன்னிக்கி மாசி மகம். தெப்பத் திருநா நடக்கிற எடத்துக்குத் தொழிலுக்குப் போவப்போறேன். அதான் ஒங்கிட்ட உத்தரவு கேக்க வந்தேன். நீ உத்தரவு குடுத்தாப் போறேன். இல்லைன்னா, திரும்பி வூட்டுக்குப் போறேன்!'' என்றபடி அவன் கோயிலைச் சுற்றிலும் பார்த்தான். ஆட்கள் நடமாட்டம் இல்லை. காக்கா-குருவிகள்கூட இல்லை.
   காற்றின் அசைவு மட்டும்தான் இருந்தது என்பதைக் கவனித்தவன்... சாமியிடம் ரகசியம் மாதிரி சொன்னான், ''இன்னிக்குத் தொழிலுக்குப் போகவா... வாணாமா? உத்தரவு குடு. பல்லி வந்து எனக்குச் சகுனம் சொன்னாத்தான் போவேன். அதுவும் பீச்ச கை பக்கம் தாங்கல்ல சொல்லக் கூடாது. போற காரியம் விடியாது. சோத்து கை பக்கம் ஏவல்ல சொல்லணும். அப்பத்தான் போற காரியம் ஜெயிக்கும். புரியுதா? இன்னம் செத்தயில இருட்டிப்புடும். சட்டுனு உத்தரவு குடு'' என்று சொல்லிவிட்டு அந்த ஆள் தரையில் உட்கார்ந்தான்.
   அவனுடைய பார்வை சிமென்ட் மேடை, குதிரை, சாமி சிலை... என்று அங்குலம் அங்குலமாக ஆராய்ந்தது. அதோடு தன்னைச் சுற்றிலும் பார்த்தான். பல்லியின் சத்தம் கேட்கிறதா என்று காதுகளைக் கூர்மையாகத் தீட்டி வைத்துக்கொண்டிருந்தான்.
   ஐந்து, பத்து நிமிடங்கள் வரை உட்கார்ந்திருந்தான். தட்டான் பறக்கிற சத்தம்கூடக் கேட்கவில்லை. மேற்கில் பார்த்தான், சூரியன் சீக்கிரத்தில் மறைந்துவிடும் போல் இருந்தது. அவனுடைய முகம் கடுகடுவென்று மாறியது. சாமியிடம் கோபித்துக்கொண்டவன் மாதிரி சொன்னான், ''இங்கிருந்து நடந்து ரெண்டு மைலு தாண்டிப் போயித்தான் காரப் புடிக்கணும். அப்பறம் அங்க இருந்து அரை மணி நேரம். கார வுட்டு எறங்குனா தெப்பத் திருநா நடக்கிற எடத்துக்கு நடந்து போவணும். இங்கியே லேட்டாப் போனா, காரியம் ஆவுமா? கூட்டம் கலஞ்சிப்புடாதா? கூட்டம் கலஞ்சிப் புட்டா? நான் போயி அலஞ்சி, திரிஞ்சி வெறும் ஆளா திரும்பணுமா? ஏன் எதுக்கும் பதிலு சொல்லாம குந்தியிருக்க? 'காயா... பழமா?’னு சொல்லிடு. முடியாதுனா அப்பறம் எதுக்கு ஒம் மூஞ்சியில முழிக்கப்போறன்!'' - தரையில் இருந்து அந்த ஆள் எழுந்தான்.
   சாமி மேடையைச் சுற்றி வந்தான். சுற்றும் முற்றும் பார்த்தான். தரை, சிமென்ட் மேடை, குதிரை, சாமி என்று எல்லா இடத்திலும் பார்த்தான். பல்லி இருக்கிற மாதிரியே தெரியவில்லை. சத்தம் வருகிறதா என்று கவனித்தான். சாமி கோயிலுக்கு வரும் வழியைப் பார்த்தான். ஆட்கள் யாரும் வரவில்லை. மேற்கில் பார்த்தான். இன்னும் சற்றைக்கெல்லாம் சூரியன் மறைந்துவிடும்போல் இருந்தது.
   நேராக சாமியின் முன் வந்து கோபமாகக் கேட்டான், ''குவாட்டரு பாட்லு, சிகரெட், எலுமிச்சங்கா, பூ, பழம்னு ஒனக்கு வேண்டிய எல்லாத்தையும் கொண்டாந்து படையல் போட்டுட்டேன். எல்லா கருமாதியும் செஞ்சப் பின்னாலயும் எனக்கு ஏன் உத்தரவு குடுக்க மாட்டேங்கிற? கை நெறயப் பொருளு கெடைக்கணும்; கெடைக்கிறதுலதான் பாதியக் கொண்டாந்து ஒனக்கு சூலம், மணி, அங்கவஸ்திரம், கோழி காவு, குவாட்டரு பாட்லுனு கல்லு கருமாந்தரம் எடுக்கிறனே அப்பறம் என்ன? எனக்கு ஏன் உத்தரவு குடுக்காம லேட்டாக்கிற?
   போன வெள்ளிக்கிழமை வேப்பூர் சந்தைக்குப் போனேன். பாவப்பட்ட சனியந்தான் மாட்டுச்சி. பாவப்பட்டதுனு நெனச்சா, நான் எப்புடிச் சோறு திங்கிறது? என் வவுறு மண்ணையாத் திங்கும்? மறுநாளு ஒனக்குப் படையல் போட்டனா... இல்லியா? நேரமாவறது ஒனக்குத் தெரியலியா?'' என்று கேட்ட அந்த ஆள், பல்லியின் சத்தம் கேட்கிறதா என்று கவனமாகக் கேட்டான்.
   சலிப்பு மேலிட, ''சகுனத் தடங்கலோட போவக் கூடாதுனு ஒனக்குத் தெரியாதா?'' என்று கேட்டான்.
   வேப்பமரத்துக்குப் போனான். சிறிது நேரம் நின்றுகொண்டிருந்தான். சகுனம் கிடைக்கவில்லை. வேப்பமரத்துக்கு வடக்கில் இருந்த வன்னிமரத்துக்குக் கீழே போய் நின்றுகொண்டிருந்தான். நேரம் போனது. ஆனால், அவன் நினைத்த காரியம் நடக்கவில்லை. வெறுப்போடு திரும்பி வந்து சாமிக்கு நேரெதிராக நின்றுகொண்டு கோபத்தோடு கேட்டான்.
   ''உத்தரவு குடுக்காட்டி போ. போனவாட்டிக்கும் மொதவாட்டி என்னா செஞ்ச? ஒரே ஒரு செயினுதான் அம்புட்டுச்சி. வெரலு மொத்தத்துல இருக்கேனு பார்த்தா, கடைசியில அது கவரிங். அதுக்குத்தான் அம்மாம் அடி... ஒதை. மயிரான்... நீயா அம்மாம் அடியும் ஒதையும் வாங்குன? கவரிங் நகைக்குத்தான் பெரிய கூட்டமாக் கூடி அடிச்சானுவ. நகைக்காரி வந்து 'கவரிங்’னு சொன்னதாலதான் உசுரோட உட்டானுவ. இல்லைன்னா போலீஸ், கோர்ட்டுனு ஒரு மாசம் ஜெயிலுக்குப் போயிருக்கணும்.
   பெரிய கோயிலுக்கு உள்ளாரப் போவயிலதான் குண்டா இருக்கா, கிழவியா இருக்கானுதான் செயினை அறுத்தேன். அறியாப்புள்ளைவுளவிட அந்தக் கிழட்டு முண்டதான் அதிகமாச் சத்தம் போட்டா. 'செயினை அறுத்திட்டான். புடி... புடி’னு அவ போட்ட சத்தத்துலதான் வழியில இருந்த தேங்காக் கடைக்காரன் வளைச்சிப் புடிச்சிட்டான். 'ஓடியாங்க... ஓடியாங்க’னு கிழவி போட்ட சத்தத்துல கூட்டம் கூடிப்போச்சி. கதறக் கதற அடிச்சானுவ. பாவ-புண்ணியம் பார்க்கலை. சாமி கும்புட வந்த மொத்தக் கூட்டமும் கூடிப்போச்சி. ஆம்பள, பொம்பள எல்லாருந்தான் அடிச்சாங்க. காறி எம் மூஞ்சியிலயே துப்புனாங்க. தரும ஞாயம் பார்க்கலை!'' - அந்த ஆளுடைய கண்களில் இருந்து நீர் வழிந்தது.
   கண்ணீரை, புறங்கையால் துடைத்துவிட்டு உள்ளடங்கின குரலில் சொன்னான், ''அன்னிக்கி வாங்கின அடியை நெனச்சா, இப்பியும் வலிக்குது. கூட்டத்தில் இருந்து என்னைக் காப்பாத்திவுட ஒன்னால முடியல. எங் காலுக்கு ஓடுறதுக்குத் தெம்பக் குடுக்க ஒன்னால முடியல. ஒண்ணும் செய்யாததுக்கு நீ எதுக்கு 'குலசாமி’னு இருக்கே? 'ஆகாச வீரன்’னு ஒனக்கு எந்த மயிராண்டி பேரு வெச்சான்? என்னைவிட ஓக்கியன் ஒலகத்துல யாருங்கிறமாரிதான் எல்லாரும் அடிச்சாங்க.
   ஒலகத்துல எவன் ஓக்கியம்? 'பொய் சொன்னது இல்லை; பித்தலாட்டம் செஞ்சது இல்லை; அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்பட்டது இல்லை; தொட்டதும் இல்லை’னு சொல்ற ஓக்கியன் எவனும் இன்னும் பூமியில பொறக்கலை. நேரம் சரியில்லை. ஒன்னோட துணை எனக்கு இல்லை; ஒன்னோட அருளு இல்லை. அதான் அன்னிக்கி மாட்டிக்கிட்டேன்.
   20 வயசுல காத்து மாரி ஓடுனேன். அப்ப முயலுகூட எங்கூடப் போட்டிபோட முடியாது. இப்ப ஓட முடியலை. வயசாயிடிச்சு. எங் காலுக்கு மின்னலா ஓடி மறையுற தெம்ப நீ குடுத்திருந்தா, நான் எதுக்கு மாட்டிக்கப்போறேன்? அம்மாம் அடியையும் ஒதையையும் வாங்கிக்கிட்டு ஒங்கிட்டத்தான் வந்து நிக்கிறேன். நீ உத்தரவு குடுக்க மாட்டேங்கிற. படையல வாங்கித் தின்னுப்புட்டு, எத்தனை தடவை என்னை அலையவெச்சி வெறுங்கையோட அனுப்பியிருக்க? அப்பல்லாம் ஒன்னையைத் திட்டுனனா? அன்னிக்கி பெரிய கோயில்ல நீதான் என்னை மாட்டிவுட்டுட்ட, மின்ன மாரி ஊராங்க அடியை என்னால தாங்க முடியுதா? நீ என்ன எனக்குப் பிறத்தியாளா... அந்நியமா? நீ எனக்குக் குலசாமி.
   என்னை ஒனக்கே நல்லாத் தெரியும். திருநாவுக்குத் திருநா வந்து படையல் போடுற ஆளில்லை நானு. என்னோட மூணு புள்ளைங்களுக்கும் ஒன்னோட சந்நதியிலதான், மொட்டை போட்டேன்; காது குத்துனேன்; பேரும் வெச்சேன். எல்லாத்துக்கும் மேல எங்கம்மா ஒன்னோட பேரைத்தான எனக்கு 'ஆகாசம்’னு வெச்சா. பேரைச் சொன்னா ஊருல மட்டும் இல்லை, போலீஸ் ஸ்டேசன்ல, கோர்ட்டுல எல்லாரும் சிரிக்கிறாங்க. ஆனா, ஒன்னைப் பத்தி நான் எல்லார்கிட்டயும் பெருமையாத்தான் சொல்றேன். குத்தம் சொன்னனா? அதுக்கும் மேல எம் பெரிய மவனுக்கு ஒம் பேரைத்தான் 'ஆகாஷ்’னு வெச்சிருக்கேன். 'பிரமாதமான பேரு’னு சொல்றாங்க. அதுக்காச்சும் உத்தரவு குடுடா திருட்டுப்பயலே'' என்று சொன்ன அந்த ஆள், மடியில் இருந்த ஒரு பீடியை எடுத்துப் பற்றவைத்துக் குடித்துக்கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தான். சகுனம் கிடைக்கிறதா என்று கூர்மையாகக் கவனித்தான். அவன் கேட்டது கிடைக்காததால் வெறுப்புற்று எஞ்சியிருந்த ஒரு பாட்டில் பிராந்தியைத் திறந்து கையில் ஊற்றி குதிரையின் மீதும், சாமியின் மீதும் சுள்ளென்று தெளித்தான்.
   கோபம் மேலிட, ''இப்பயாச்சும் ஒன் ஆக்ரோசம் அடங்கி உத்தரவக் குடுடா'' என்று கேட்டான். சுற்றும் முற்றும் பார்த்தான். பல்லி, கண்ணில் படவில்லை. வெறுப்படைந்துபோய் சொன்னான், ''இப்பத்தான் எல்லாம் பயலுவலும் ஒரம், பூச்சிமருந்துனு தெளிச்சி காட்டுல இருக்கிற பூச்சி, பொடுவ எல்லாத்தையும் கொன்னுப்புட்டானுவ. அப்பறம் எங்க இருந்து வரும் பல்லி?''
   மேற்கில் பார்த்தான். சூரியன் மறைந்துவிட்டிருந்தது. லேசாக இருள் படர ஆரம்பித்திருந்தது தெரிந்தது. எப்போதையும்விட இப்போது அவனுக்குக் கோபம் கூடுதலாக வந்தது. வேகமாகக் கேட்டான், ''நேரமாவுறது ஒனக்குத் தெரியலியாடா?'' - கோபத்தில் மேடையைச் சுற்றிச் சுற்றி வந்தான். வெறுத்துப்போய் தரையில் உட்கார்ந்தான்.
   சிறிது நேரம் தலையைக் கவிழ்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தவனுக்கு என்ன தோன்றியதோ வெடுக்கென்று தலையைத் தூக்கி 'நீயெல்லாம் சாமியா?’ என்பது மாதிரி பார்த்தான். பிறகு, சண்டைக்காரனிடம் கேட்பது மாதிரி சாமியிடம் கேட்டான், ''எனக்குச் சோதனை வெக்கிறியா? இத்தினி வருசமா இல்லாம இன்னிக்கி ஏன் எனக்கு உத்தரவு குடுக்க மாட்டேங்கிற? ஒன்னோட உத்தரவு இல்லாம என்னிக்காச்சும் திருடப் போயிருக்கனா? நீ திருட்டுக்குப் பேர்போன சாமிதானே? திடுதிப்புனு நீ திருந்திப்புட்டா, நான் என்னா செய்யுறது? கருமாதி... எனக்கு வேற தொழிலும் தெரியாதே. ஒங்கிட்ட நான் என்னா கேக்கிறேன்? என்னை எம்.எல்.ஏ. ஆக்கு, எம்.பி. ஆக்கு, மந்திரியாக்கு, பணக்காரனாக்குன்னா கேட்கிறேன்? திருடப்போற எடத்துல மாட்டக் கூடாதுனுதானே கேட்கிறேன். அது பெரிய குத்தமா?
   நான் திருடப்போறது மாடி வூடு கட்டவா? காரு, பங்களா வாங்கவா? நெலம் நீச்சு வாங்கவா? எம் பொண்டாட்டிக்கி வைரத்துல ஒட்டியாணம் செஞ்சி போடவா? கருமாதி... சோத்துக்குத்தானே செயினை அறுக்கப்போறேன். ஒரு நாளு போனா, ஒரு மாசம், ரெண்டு மாசம் பொழப்பு ஓடிப்புடும். கையில காசு இருக்கிறப்ப நான் திருடப் போறனா? எங்கப்பா, எங்கம்மா சம்பாரிச்சி வெச்சிருந்தா, நான் எதுக்கு சாமி சாட்சியா கட்டுன தாலியை அறுக்கப்போறேன்? பால் குடிக்கிற புள்ள இடுப்புல கெடக்கிற கொடிய அறுக்கப்போறேன்?''.
   அப்போது, பல்லி கத்தியது மாதிரி அவனுக்குத் தோன்றியது. பேச்சை நிறுத்திவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தான். ஒரே நேரத்தில் பல்லி சகுனம் சொன்ன மாதிரியும் இருந்தது. சொல்லாத மாதிரியும் இருந்தது. சந்தேகத்தில் அசைவின்றி உட்கார்ந்திருந்து சத்தம் கேட்கிறதா என்று கவனித்தான். காற்றின் அசைவுகூட இல்லை. அவன் கடுப்பாகிவிட்டான். சாமியிடம் முறைப்பது மாதிரி சொன்னான், ''உத்தரவைக் குடு. முடியாதுனா வுடு. இங்க நிக்கிற சூலத்தை எல்லாம் புடுங்கிக்கிட்டுப் போயி பழைய இரும்புக் கடையில போட்டுட்டு அரிசி, பருப்பு வாங்கிப்புடுவேன். குலசாமியுமாச்சி... மசுருமாச்சினு போற ஆளு நானு... தெரியுமில்ல!'' என்று சொன்னவனின் குரலின் வேகம் குறைந்தது.
   தனக்குத்தானே சொல்லிக்கொள்வது மாதிரி சொன்னான், ''இதென்ன பழைய காலமா? சோளக் கதிரை அறுக்கிறது, நெல்லு கதிரை அறுக்கிறது, பூசணிக்காய், பரங்கிக்காய் அறுக்கிறதுன்னு அறுத்தாந்து சோறு திங்கிறதுக்கு. இப்பத்தான் எல்லாப் பயளுவுலும் பருத்திய ஊணுறான். சவுக்க நட்டுப்புடுறான். மிஞ்சினா கருப்பங்கயி. அதுவும் இல்லன்னா பிளாட்டா போட்டுடுறான். அப்பறம் எங்கேயிருந்து கதிரை அறுத்தாந்து சோறு திங்கறது? கோழி திருடுறது, ஆடு-மாடு திருடுறது, மோட்டார் கொட்டாயில் கரண்டு கம்பியைத் திருடுறதுனு எல்லாம் செஞ்சி பாத்தாச்சு. அதெல்லாம் ஒரு வார சோத்துக்குக்கூடத் தேற மாட்டேங்கிது. அதோடவும் உள்ளூர் பயலுவோ அடையாளம் கண்டுபுடிச்சி வந்துடுறானுவ. திருடன்கிற பேரோட உள்ளூர்ல குடும்பம் நடத்த முடியுமா?
   இப்பல்லாம் எவன் ஆடு-மாடு வளக்குறான்? திருடறதுக்கு. ஊர்நாட்டுல கோழிகூட இல்லை. ஊருக்கு ஊரு பிராய்லர் கோழிக் கடையைப் போட்டுட்டானுவோ. காலம் மாறி, ஊரு நாடெல்லாம் மாறிப்போச்சுன்னு ஒனக்குத் தெரிய மாட்டேங்குது. அதனாலதான் ஒண்ணுத்துக்கும் ஒதவாத களர் நெலத்துல ஒன்னைக் கொண்டாந்து குடிவெச்சியிருக்கானுவ. ஒனக்கு ஒரு கூரைகூட போடல தெரியுமில்ல.
   இப்பல்லாம் மோட்டார் வண்டி, காரு எடுத்துக்கிட்டுப் போயி திருடுறாங்க. ஊர் ஊராப் போயி ரூம் போட்டுத் தங்கித் திருடுறாங்க. சொல்லப்போனா கோயில்லயே திருடுறாங்க. உண்டியலை ஒடைக்கிறாங்க. கொஞ்சம் துணிஞ்சவங்க, சாமி சிலையவே திருடி விக்கிறாங்க. நான் அந்த மாரியா செய்யுறேன்? விருத்தாசலம், நெய்வேலி, திட்டக்குடி, பெண்ணாடம், உளுந்தூர்பேட்டைனு சுத்திச் சுத்தி வரேன். பட்டப்பாட்டுல பாதிக்குப் பாதி வீணாப்போவுது. பாதிக்குப் பாதி கவரிங்கா இருக்கு. ஒனக்கு படையல் போடுற செலவு தண்ட கருமாதியாப் போவுது.
   தங்கம், வைரம்னு போட்டுக்கிட்டு இருக்கிற நாயிவோ எல்லாம் எந்த எடத்துக்கு வந்தாலும் காருலியே வருதுவோ, எந்த எடத்துக்குப் போனாலும் காருலியே போவுதுவோ. கவரிங் மாட்டியிருக்கிற நாயிவோதான், சந்தைக்குச் சந்தை மஞ்சப்பையத் தூக்கிக்கிட்டு நடக்குதுவோ. காயி வாங்க வர்ற கிராக்கிவோ கவரிங்கத்தான் மாட்டியிருக்கும். பகலா இருந்தா, பார்த்து அறுக்கலாம். இருட்டுல எப்புடிப் பார்த்து அறுக்கிறது? முட்டுச்சந்துல, இருட்டுல வரும்போதுதானே செயினைப் புடிச்சி இழுக்க முடியும்? கவரிங் அம்புட்டுதுனு ஒனக்குப் படையல் போடாம இருந்திருக்கிறேனா? எப்ப கொற வெச்சேன்?''
   சத்தம் கேட்டது மாதிரி இருக்கவே திரும்பிப் பார்த்தான் அந்த ஆள். ஆட்கள் யாரும் கோயிலுக்கு வரவில்லை என்பது தெரிந்தது. ஆடு, மாடு எதுவும் இல்லை. காக்கை, குருவி, பருந்து எதுவும் பறக்கவில்லை. மரங்கள்கூட அசையவில்லை. பிறகு எப்படி ஆள் வருவது மாதிரி சத்தம் கேட்டது? மீண்டும் சுற்றும் முற்றும் பார்த்தான். ஆள் யாரும் இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டதும் மீண்டும் சாமியிடம் சொன்னான், ''நெய்வேலியில் கைநெறயா பொருளு அம்புட்டப்ப ஒனக்கு ஒரு சூலம் வாங்கியாந்து நட்டுவெச்சேன். ஒரு கல்யாண ஊட்டுல செயின் அடிச்சப்ப, அதே விருத்தாசலம் ரெட்டைத் தெருவுல இருக்கிற கொசவன்கிட்ட சொல்லி ஒனக்கு வேட்டைக்கிப் போறதுக்கு ஒரு மங்குதிர வாங்கியாந்து வெச்சேன். ரெண்டு, மூணு முறை அங்கவஸ்திரம் வாங்கியாந்து போட்டேன்.
   ஒருமுறை வெங்கல மணி வாங்கியாந்து கட்டினேன். வருசா வருசம் கோழி காவு கொடுத்து முப்பூசை போட்டிருக்கேன். எல்லாத்தையும் வாங்கித் தின்னுப்புட்டு இப்ப உத்தரவு குடுக்க மாட்டேங்கிற. குடுக்காட்டிப் போ. எம் மசுருக்கென்ன, நீதான் பட்டினி கெடப்ப!''
   அந்த ஆள், பீடி ஒன்றைப் பற்றவைத்தான். புகையை ஊதிக்கொண்டே பல்லியைத் தேடினான். அது கண்ணில் படும் என்பதற்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை. வாயில் இருந்து பீடியை எடுத்து தரையில் தேய்த்து அணைத்துவிட்டு சலிப்புடன் சொன்னான், ''என்னிக்கும் இல்லாம இன்னிக்கென்ன எங்கிட்ட ஒனக்கு வெளயாட்டு? எதுக்காக சகுனத்தைக் குடுக்காம சோதனை வெக்கிற? இப்பல்லாம் நான் செல்போனு எடுக்கிறதையும் உட்டுட்டேன். இப்ப அதுக்கு கிராக்கி இல்லை. ஆயிரத்துக்கே போனு வந்துடுச்சி. கஷ்டப்பட்டு அடி, மிதிபட்டு திருடிக்கிட்டுப் போயி கொடுத்தா 100, 50-தான் தரேன்ங்கிறானுவோ'' - லேசாகச் சிரித்தான்.
   பிறகு, ''திருட்டுப் பொருளுக்கு அதுக்கு மேல எவன் தருவான்? திருட்டுப் பொருளுனாலே அடிமாட்டு விலைதானே! அதனால இப்ப நான் செல்போன தொடுறதில்லைனு ஒனக்குத்தான் தெரியுமே!'' - சட்டென்று வேகம் வந்துவிட்ட மாதிரி அடுத்து ஒரு பீடியைப் பற்றவைத்தான்.
   மேற்கில் பார்த்தான். மறுநொடியே அவனுடைய முகம் கருத்துவிட்டது. வார்த்தைகளும் தடித்துவிட்டன. ''ஒன்னைச் சொல்லிக் குத்தமில்லடா. என்னைப் பெத்தவளைச் சொல்லணும். எல்லா கருமாதியும் அவதான் கத்துக்கொடுத்தா. இருட்டுனதும் பக்கத்து ஊட்டுல நின்ன முருங்கை மரத்துல இருந்து யாருக்கும் தெரியாம முருங்கக் கீரயை அவதான் ஒடிச்சியாரச் சொன்னா. நடைபாதையில நின்னுக்கிட்டு வயக்காட்டுல போயி புளிச்சக் கீரையைப் புடுங்கியாரச் சொன்னா. கம்பு கதிரை ஒடிச்சியாரச் சொன்னா. பரங்கிக்காயை, பூசணிக்காயை அறுத்துத் தூக்கியாரச் சொன்னா. எவன் ஊட்டு காட்டுலியோ கல்லச்செடியைப் புடுங்கியா. கத்திரிக்காயை, வெண்டக்காயைப் பறிச்சிக்கிட்டு வா. ஊரான் ஊட்டு புளியமரத்துல புளியாம்பழம் பறிச்சி வானு அவதான் சொன்னா. பஸ்ஸுல போவயில வயசைக் கொறச்சிச் சொல்லுனு சொல்லி, டிக்கெட் வாங்காம சண்டை போட்டா. கூலி வேலைக்குப் போனா வயசைக் கூட்டிச் சொல்லி சம்பளம் கேட்டு சண்டை போட்டா. தட்டு மாத்திப் பேச அவதான் கத்துக்குடுத்தா. எல்லா கருமாதியும் அந்தச் சண்டாளிதான் கத்துக்கொடுத்தா.
   காலுல போட்டுக்கிட்டுப் போனா செருப்போட வாரு அறுந்துபோவும்னு நாளெல்லாம் கையிலயே செருப்பைத் தூக்கிக்கிட்டுப் போன உண்ணாமலை பெத்த புள்ளதான நானு? எல்லாத்துக்கும் அவ ஒங்கிட்டதான் வந்தா. நானும் ஒன்னத்தான் சுத்திச் சுத்தி வரேன். மத்தவங்கள மாரி மாசத்துக்கு ஒரு சாமிக்கிட்டியா போறேன்? மாசத்துக்கு ஒரு கோயிலுன்னா போறேன்? ஒரே சாமி நீதான்னு ஒங்கிட்டியே வரேன். நீ என்னடான்னா, சகுனம் சொல்ல மாட்டேங்கிற; உத்தரவு குடுக்க மாட்டேங்கிற!'' என்று சொல்லிவிட்டு, வேகம் வந்தவன் மாதிரி தரையில் விழுந்து கும்பிட்டபடியே கிடந்தான்.
   முனகுவது மாதிரி சொன்னான், ''என்னமோ ஒலக அதிசயமா நான் மட்டுந்தான் அடுத்தவனைக் கெடுக்கிறதுக்கு வேண்டுறேன்னு நெனக்காத. எவன் வந்து எனக்கு அடுத்தவனைக் கெடுக்காத மனசைக் குடு, அடுத்தவன் பொருளு மேல ஆசப்படாத மனசைக் குடு, அடுத்தவனைப் பார்த்துப் பொறாமைப்படாத, அடுத்தவன் பொண்டாட்டியைப் பார்த்து ஆசைப்படாத மனசைக் குடு. என்னிக்கும் என்னை ஏழையாவே, பிச்சைக்காரனாவே வெச்சிருனு வேண்டுறவன் யாரு? கூரை வூட்டுலியே என்ன வெச்சிருனு சொல்றவன் யாரு?'' என்று கேட்டபோது, பல்லி கத்தியது மாதிரியும், அதுவும் வலது கை பக்கம் கத்துவது மாதிரியும் இருந்தது. வெடுக்கென்று தலையைத் தூக்கி வலது கை பக்கம் பார்த்தான். பல்லி சகுனம் சொல்லிவிட்டதாகவே நம்பி உற்சாகத்தோடு எழுந்தான். சாமி கும்பிட்டான். சிரித்துக்கொண்டே, ''போதும்டா!'' என்று சொன்னான்.
   ''இரு 'பூவா, தலையா?’னு ஒரு தடவை பார்க்கிறேன். 'காயா... பழமா?’னு தெரிஞ்சிட்டா துணிஞ்சி போயிடுவேன்'' என்று சொல்லிக்கொண்டே பாக்கு தடிமனில் சிறு சிறு கற்களாக ஒரு பிடி பொறுக்கி எடுத்தான். இரண்டு கைகளுக்கு உள்ளும் கற்களை வைத்துக்கொண்டே சாமி கும்பிட்டான். மூன்று, நான்கு முறை குலுக்கிவிட்டு தரையில் போட்டான். உட்கார்ந்துகொண்டு பதற்றம் கூடக் கூட இரண்டு இரண்டு கற்களாக ஜோடி சேர்த்து பக்கத்தில் வைத்தான். கற்கள் குறைய குறைய அவனுடைய பதற்றம் கூடிக்கொண்டே இருந்தது. விரல்கள் நடுங்கின. லேசாக வியர்த்தது. கடைசி ஜோடி கற்களை எடுத்த பிறகு ஒரே ஒரு கல் மட்டும் எஞ்சிக்கிடப்பதைக் கண்டதும் அவனுடைய முகம் மலர்ந்தது; சிரித்தான். தங்கம் மாதிரி அந்தச் சிறு கல்லை எடுத்து மடியில் பத்திரப்படுத்தினான். ''ஒனக்கு அப்பப்ப கிறுக்குப் புடிச்சிப்போவும். என்னை வீணா அலையவுடுவ; காத்திருக்க வைப்ப. சில நேரம் புடிச்சிக் குடுத்திடுவ. ஆனா, இந்த முறை சகுனம் சொல்லிடிச்சு. இப்ப கல்லுலயும் பூ குடுத்திட்ட. ஒன்னோட தொண இல்லாம, ஒம் பேச்சைக் கேக்காம ஒரு எடத்துக்கும் அடி எடுத்துவைக்க மாட்டேன் தெரியுமில்ல!'' என்று சொல்லிக்கொண்டே எழுந்தான்.
   ''நீ சக்தி உள்ள தெய்வம்டா. காரணம் இல்லாமியா ஒன்ன நான் கும்புடுவன்?'' என்று கேட்டான். கும்பிட்டுக்கொண்டே சிமென்ட் மேடையை மூன்று சுற்றுச் சுற்றி வந்தான். குதிரையின் காலடியில் கிடந்த திருநீற்றை அள்ளி நெற்றி நிறையப் பூசிக்கொண்டு, 'போற காரியம் நல்லபடியா முடிஞ்சதும் நாளக் காலையில வரேன்'' - சொல்லிவிட்டு, நடைபாதையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
   இருட்டாக இருந்தாலும் அவனுடைய கால்களுக்குப் பாதை தெளிவாகத் தெரிந்தது!
   https://www.vikatan.com
  • By நவீனன்
   வெளிச்சக்கொடி - சிறுகதை
   சிறுகதை: சந்திரா, ஓவியங்கள்: செந்தில்
    
   திருச்சி தாண்டி இரு பக்கங்களும் கருவேலங்காடு அடர்ந்திருந்த  நெடுஞ்சாலையில் கார் போய்க் கொண்டிருந்தபோது, அம்மாவும் நானும் விழித்துக்கொண்டோம். அந்தக் கருவேலங்காட்டைப் பார்க்கும்போதெல்லாம் தோகை விரித்துப் பறந்து வரும் மயில்தான் எனக்கு ஞாபகம் வரும். குழந்தைகள் கற்பனை செய்துகொள்ளும் தேவதைக் கதைகளில் வருவதைப்போல, அப்பாவின் முகத்தோடு மயில் பறந்துபோகும் காட்சி சில சமயங்களில் என் நினைவில் வந்துபோகும்.  கடவுள் நம்பிக்கை இல்லாத எனக்கு, இப்படிக் கிறுக்குத்தனமான அல்லது பகுத்தறிவற்ற சில வி‌ஷயங்களில் ஆழமான நம்பிக்கை உண்டு.

   புற்றுநோயால் பாதிக்கப்பட்ட என் அப்பா அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில், முள்கீரிடம் தரித்த  இயேசுவின் பெரிய உருவச்சிலை மருத்துவமனையின் நட்டநடுவில் வைக்கப் பட்டிருந்தது. மரணப்படுக்கையில் அப்பா இருந்த போது `அப்பா எப்படியாவது  பிழைத்துக்கொள்ள வேண்டும்’ என்று நான் கடவுளிடம் மன்றாடவில்லை. மாறாக, அங்கு இருந்த நாள்களில் எல்லாம் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் வலியையும் நோயுற்றிருந்த என் அப்பாவின் வலியையும் ஒப்பிட்டு, இயேசுவின் சிலையைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக்கொண்டிருப்பேன். ஒரு நாளும் `பிதாவே, என் தந்தையைக் காப்பாற்றும்’ என உருகிப் பிரார்த்தனை செய்யவில்லை.  மருத்துவத்தை மட்டுமே நம்பினேன். நோய் முற்றி `அப்பா பிழைக்க முடியாது’ என்று மருத்துவர் அறிவித்ததும், அவரை ஆம்புலன்ஸில் ஊருக்கு எடுத்துச் சென்றோம்.

   மூடப்பட்ட கதவுகளுக்கு நடுவே அப்பா கிடத்தப்பட்டிருந்த அந்த ஆம்புலன்ஸ் பயணம், ஒருபோதும் முடிவுக்கு வராமல் அப்படியே தொடர வேண்டும் என நினைத்தேன். ஆக்ஸிஜன் மூலம் சுவாசித்துக்கொண்டிருந்த அப்பாவின் மூச்சு ஊரைச் சென்றடைந்தால் முடிவுக்கு வந்துவிடும் என்ற பயம், என் மனதைச் சிதைத்துக்கொண்டிருந்தது. அதுவரை சிறு சிறு வார்த்தைகளை முனகிக்கொண்டிருந்த அப்பா, மூக்கில் பொருத்தப்பட்டிருந்த ஆக்ஸிஜன் கவசத்தைத் தூக்கி எறிந்துவிட்டு அம்மாவின் மடியில் தலைவைத்துப் படுத்துக்கொண்டார். அதன் பிறகு அவர் கண்களைத்  திறக்கவில்லை. நெஞ்சுக்குழியில் மட்டும் உயிர் இழுத்துக்கொண்டிருந்தது. நாங்கள் மூவரும் அப்பாவையே பார்த்துக் கொண்டிருந்தோம். அக்காதான் `அப்பா இறந்துவிட்டார்’ என்று சொல்லி, பெரும் குரலெடுத்து அழுதார். அப்பாவின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாத நான், பைத்தியம் பிடித்தவளைப்போல வண்டியிலிருந்து குதிக்க, ஆம்புலன்ஸ் கதவைத் திறக்க முயன்றேன். அக்காவும் அம்மாவும் அப்பாவைக் கீழே கிடத்திவிட்டு, என்னைப் பிடித்திழுத்து வண்டிக்குள் தள்ளிவிட்டார்கள். நான் அப்பாவின் தலைமாட்டில் விழுந்தேன்.

   எங்கள் ஓலத்தைக் கேட்டு டிரைவர் வண்டியை ஓரமாக நிறுத்தினார். யார் என்று தெரியாத அந்த மனிதன் “இப்படி பொம்பளைங்களா வந்திருக்கீங்களே” என்று சொல்லி வருத்தப்பட்டு ஆறுதல் சொன்னார். அவர் பல மரணங்களைப் பார்த்திருந்தாலும் எங்களுடைய துயர் அவரிடம் எதிரொலிக்கத்தான் செய்தது.  `எழுந்துபோனால் அப்பா இறந்துவிடுவாரோ’ என பயந்தே அதுவரை சிறுநீரை அடக்கி வைத்திருந்தேன். அக்கா என்னைப் புரிந்தவர்போல ``வா, முதல்ல ஒண்ணுக்குப் போகலாம். ஊருக்குப் போய்ப் போக முடியாது” என்று சொல்லி, சாலையில் இரு பக்கங்களும் அடர்ந்திருந்த கருவேலங்காட்டுக்குள் அழைத்துப்போனாள்.
   ஒண்ணுக்குப் போய்விட்டுத் திரும்பி வந்து, `இதுதான் அப்பா மரணித்த இடம்’ என்று அந்த இடத்தை மனதில் அழுத்தமாகப் பதிவுசெய்துகொண்டேன்.

   ஒரு வருடம் சென்றபிறகு, அப்பாவின் திவசத்துக்காக ஊருக்கு காரில் சென்றுகொண்டிருந்தபோது, அந்த இடத்தை அடையாளம் கண்டு வண்டியின் வேகத்தைக் குறைத்து மெதுவாகச் செல்லும்படி டிரைவரிடம் சொன்னேன். காரின் வேகம் குறைத்து நிறுத்த முயன்றபோது கருவேலங்காட்டுக்குள்ளிருந்து தோகை விரித்த மயில் ஒன்று பறந்து வந்து காரின் முன் பகுதியில் அமர்ந்து சாலையின் மறுபக்கத்தில் இருந்த கருவேலங்காட்டுக்குள் சென்று மறைந்தது. `மயில் உருவில் வந்த அப்பாவின் ஆன்மாதான் அது!’ என்று அம்மா உறுதியாக நம்பினாள். அந்த நம்பிக்கை எனக்கும் ஆறுதலாக இருந்ததால், நானும் அப்படியே நம்பினேன். அன்றிலிருந்து கருவேலங்காட்டைப் பார்க்கும்போதெல்லாம் மயிலும் அப்பாவும்தான் ஞாபகம் வருவார்கள்.

   ஆசைகளை நிராசைகளாக்கி, காலம் என்னை வெளித்துப்பிக்கொண்டிருந்த நாளில், ஒரு பயணம் மட்டுமே என்னைச் சீர்செய்யும் எனத் தோன்றியது. பகலெல்லாம் புறா ஓங்கரித்துத் துயரமான சத்தத்தை எழுப்பிக்கொண்டிருக்கும் நகரத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பு வாழ்க்கை, அம்மாவையும் மிகவும் தனிமைப்படுத்தியிருந்தது. அப்பா இருந்தவரை ‘நகரமும் கிராமமும் ஒன்றே’ என்பதுபோலத்தான் அம்மாவும் இருந்தாள். அப்பாவின் இல்லாமை எங்களைத் துயரப்படுத்திக் கொண்டிருந்தது.

   அப்பாவின் மரணத்துக்குப் பிறகு இப்போது மூன்றாவது வீட்டுக்கு இடம் மாறிவிட்டோம். அதற்குக் காரணம் புறாக்கள்தான். கிராமத்தில் வாழ்ந்தபோது வானத்தில் தூரமாய்ப் பறந்துபோகும் புறாக்களை எப்படியாவது தரை இறக்கி எங்கள் வீட்டுவாசலுக்கு வரவழைத்துவிட வேண்டும் என்று வாசலில் தானியங் களைத் தூவிக் காத்துக் கொண்டிருப்பேன். வெகுகாத்திருப்புக்குப் பிறகு தரை இறங்கி தானியங்களைக் கொத்தும் புறாக்கள், தானியங்கள்மீதும் தன்னைப் பிடிக்கக் காத்திருக்கும் வேடனின் புற அசைவுகளின் மீதும் ஒரே மாதிரியான கவனத்தை வைத்திருப்பதைக் கூர்ந்து கவனித்திருக்கிறேன். மெல்லிய சத்தத்துக்கும் வீரியமான சிறகு அசைவை நிகழ்த்திவிட்டுப் பறந்தோடி மறைந்துவிடும். அதன் அடுத்த தரை இறங்கிப் பறத்தலுக்காகக் காத்திருந்த எனக்கு, இன்று புறாக்களைக் கண்டாலே வயிற்றில் பயம் கவ்வ, அப்பாவின் இல்லாமை பூதாகாரமாகித் துன்புறுத்துகிறது.

   அப்பா படுக்கையில் வலியோடு இருந்த நாள்களில்தான் புறாக்களை வெறுக்கத் தொடங்கினேன். படுக்கையறையின் ஓரமாக இருந்த ஜன்னலில் வந்தமரும் புறாக்கள், ஓயாமல் துயர சத்தத்தை ஏற்படுத்திக்கொண்டே இருந்தன. விடாது ஒலித்த அந்தச் சத்தம், அப்பாவைப் பிரிவின் அகன்ற வாய்க்குள் மூழ்கடித்துக்கொண்டிருந்தது. அப்பாவின் மறைவுக்குப் பிறகும் புறாக்களின் சத்தம் தொடர்ந்துகொண்டிருந்தது. அந்த வீட்டிலிருந்து இடம் மாறினோம். அதற்குப் பிறகு குடிபோன வீட்டிலும் புறாக்கள் ஜன்னலில் வந்தமர்ந்து சத்தத்தை எழுப்ப, இப்படி வீடு மாறிக்கொண்டே இருக்கிறோம். இன்னும் சத்தம் ஓய்ந்தபாடில்லை. அம்மாவும் நானும் பழைய கதைகளைப் பேசிக்கொண்டிருக்கும் போது, அப்பாவின் கடந்தகாலங்களைப் பற்றி அம்மா நினைவுபடுத்திக்கொண்டி ருந்தாள். எங்கள் இருவரின் தனிமையும் ஒன்றுபோலவே இருந்தது. அதிலிருந்து விடுபட, அப்பா மிகவும் மகிழ்வாக வாழ்ந்த ஊருக்குப் பயணப்படுவது என இருவரும் தீர்மானித்தோம்.

   கரட்டு மலையில் இருந்த பண்டாரவூத்து என்கிற அந்த ஊர், அப்பாவுக்கு மகிழ்வைத் தந்திருக்கும் என்பதில், எனக்குச் சிறிதும் மாற்றுக்கருத்தில்லை. என் சிறுவயதில் அந்த ஊருக்குப் போனபோதெல்லாம் அப்பாவைப்போல எனக்கும் அந்த ஊர் மகிழ்ச்சியைத் தந்தது.

   பண்டாரவூத்துக் கரட்டு மலையில் கார் ஏறாது என்பதால், வருசநாடு வரை காரில் செல்வது என்றும் அதன் பிறகு அங்கிருந்து ஆட்டோவில் செல்வது என்றும் முடிவுசெய்தோம். வருசநாட்டைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சுற்றிவிட்டு, கடைசியாக பண்டாரவூத்துக்குச் சென்று தங்கலாம் எனத் திட்டமிட்டோம். அங்கே என் பெரியப்பா மகள் குடியிருந்ததால், தங்குவதில் பிரச்னை இல்லை என்று அம்மா சொல்லியிருந்தாள்.  

   கருவேலமரங்கள் மறையத் தொடங்கி வருசநாட்டு ஆறு தென்படத் தொடங்கியது.

   காரை நிறுத்தச் சொல்லிப் பாலத்தில் நின்று ஆற்றைப் பார்த்தேன். ஒரு பெரிய கண்ணீர்த் துளியைப்போன்று, அகலமான மணற்பரப்பில் ஒரு கோடாக ஆற்றில் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. ஆனால், ஆற்றுக்குப் பின்புலத்தில் வெகுதூரத்தில் படர்ந்திருந்த மலைகள், ஆற்றுக்கு என்றும் வற்றாத அழகை அளித்துக்கொண்டிருந்தன. என்றும் மறையாத அந்த இயற்கை ஒன்றே நம்பிக்கையின் ஊற்றாக என் மனதில் புனலாய்ப் பாய்ந்தோடியது. வறண்டிருந்த ஆற்றைக் கடந்து வண்டி முந்திரிக்காடுகள் நிறைந்த சாலையில் பயணிக்கத் தொடங்கியதும், மனம் கோடைமழையில் துளிர்த்த செடியைப்போல ஆசுவாசமடைந்தது. முந்திரியின் நறுமணம் பரவசமாக மூளையில் இனிப்பும் புளிப்புமாய் சுவை கூட்டியது. நறுமணத்துக்கு நாக்கின் ருசி இருப்பதை அப்போதுதான் உணர்ந்தேன்.

   ``இந்தப் பக்கமெல்லாம் வந்து பல வருசமாச்சுடி. வெறும் முள்ளா, மழை இல்லாம பொட்டல்காடா கெடந்துச்சு. இப்ப எல்லாத்தையும் முந்திரிக்காடாக்கிப்புட்டாங்களே. காட்டுக்குள்ள கஞ்சா வெதச்சு, எல்லார் கையிலும் பணம் செழிப்பாச்சுனு சொன்னாங்க. அதான் தண்ணி இல்லைன்னாலும் பணத்தை வெச்சு எங்கிட்டிருந்தோ தண்ணியக் கொண்டுவந்து முந்திரிக்காடாக்கிப்புட்டாங்க” என்று சொல்லி அம்மாவும் பரவசமாக வேடிக்கை பார்த்தபடி வந்தாள்.
    
   கொஞ்ச தூரம் போனதும் முந்திரிக்காடு மறையத் தொடங்கி, இலவம்பஞ்சு மரங்கள் தென்படத் தொடங்கின. ஆங்காங்கே வறண்ட முள்மரங்களும் வெட்டவெளியில் காய்ந்த புல்லுமாய் மாறிய நிலக்காட்சிகள். ஆனால், அவை எனக்குள் மந்தத்தன்மையை அளிக்காமல்  இயற்கையின் அற்புத அழகாய்ப் பரிணமித்தது. அது வெயில் மிகுந்த கோடை. இருந்தும் சூரியன், தன் இளஞ்சிவப்பு மஞ்சளாலும் பட்டு போன்ற வெண்மை ஒளியாலும் அந்த நிலத்தை சொர்க்கமாக்கியிருந்தது. சமதளப் பகுதியிலிருந்து கரட்டில் ஏற ஏற வானம் தலைக்கு மேல் ஒளிபடர்ந்து என் ஆன்மாவை நிறைத்தது.

   நான் மண்பாதைக் கட்டாப்பில் வயலெட் நிற ரேடியோப் பூக்கள் தென்படுகின்றனவா எனத் தேடத் தொடங்கினேன். சிறு குழந்தையாய் இருந்தபோது அந்தக் கரட்டில் ஒற்றைவழிப் பாதையில் என் அப்பாவோடு நடந்து செல்லும்போது வழியெங்கும் பூத்திருந்த ரேடியோப் பூக்கள், எனக்குப் பேரதிசயமாகத் தோன்றும். எப்போதும் ரேடியோப் பூக்களைப் பிடுங்கித் தலையில் வைத்துக்கொண்டு ஒய்யாரமாக நடந்து செல்வேன். அப்படிப் போகும்போது அப்பா கரட்டில் வளர்ந்திருக்கும் கற்றாழைப் பழத்தைப் பிடுங்கி, பழத்தின் நடுவில் இருக்கும் முள்களை நீக்கிவிட்டுக் கொடுப்பார். கற்றாழைப் பழத்துக்கு இருக்கும் ருசி, உலகில் வேறெந்தப் பழத்துக்கும் இல்லை எனத் தோன்றும். அப்பா எப்போதும் சின்னச் சின்ன விஷயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பவராகவும், மகிழ்வுடன் ஏற்றுக்கொள்பவராகவும் இருந்தார்.

   நம் வாழ்வின் மிகப்பெரிய அவலம், வயது கூடக்கூட நாம் அதிசயப்படுவதை நிறுத்திக்கொள்வதுதான். `இவ்வளவுதான், இதிலென்ன இருக்கு?’ என்று எல்லாவற்றின் மீதும் ஓர் அலட்சியம் வந்துவிடுகிறது. பெரிய பெரிய விஷயங்கள் எனத் தேடத் தொடங்கி, குட்டிக் குட்டி அதிசயங்களை, சிறு சிறு மகிழ்வைத் துறக்கிறோம். கடைசியில் பெரிய விஷயங்கள் எதுவும் கிடைக்காமல்போக, வெறுமையில் எரிகிறோம். அந்த எளிமையின் பயணம் என் நினைவைக் கிளர்த்தி அப்பாவின் வழியே என் குழந்தைமையின் அதிசயத்துக்குள் கொண்டுசென்றது.

   பண்டாரவூத்து ஊர் முழுவதும் பாறைகளால் நிறைந்திருக்கும். எழுபது வருடங்களுக்கு முன்புதான் உருவாக்கப்பட்ட ஊர் அது. அது நாடோடிகளின் ஊர். `விவசாயம் செய்ய நிலம் தேடி அலைந்த என் தாத்தா-பாட்டி, அவர்களின் உறவினர்கள் இன்னும் நிலமற்றவர்கள் சேர்ந்து உருவாக்கிய ஊர்’ என்று அப்பா அந்த ஊர் உருவான விதத்தை, அங்கு நிலத்தை உருவாக்கக் கடுமையாகப் போராடியதை, கதையாகச் சொல்லியிருக்கிறார்.

   வறண்ட கரட்டு மலையில் விவசாயம் செய்யலாம் என்ற அவர்களின் முடிவு என்பது நிச்சயம் அசாத்தியமானதுதான். பசி, பாறையையும் பூக்கச்செய்யும் என்று அவர்கள் நம்பியிருக்கிறார்கள் அல்லது அவர்களுக்கு அதைவிடுத்து வேறு வழி இருந்திருக்கவில்லை. முன்பு அப்பாவோடு வருகையில், கரட்டின் உச்சிக்கு வந்ததும் அப்பாவின் கையை உதறிவிட்டு, ஊர் ஆரம்பிக்கும் முன்னே படர்ந்திருக்கும் பெரிய நீளமான பாறையில் குரங்கைப்போல தாவித் தாவிக் குதித்து ஓடுவேன். பிறகு, மண்வீடுகளும் குடிசைகளும் தென்படத் தொடங்கும். அப்போது அந்த ஊரில் குறைந்தது நூற்றைம்பது வீடுகளாவது இருக்கும். இப்போது ஊருக்கு முன்னே இருந்த பெரும்பாறை சுருங்கிக் குறைந்து போய் இருந்தது. ஆனாலும் பாறையின் அழகு குறையவில்லை. பாறைகளின் நடுவே ஒரு பள்ளம் உருவாகி, நீர் ஊறி, சிறு குளத்தைப் போல சூரிய ஒளியில் ஜொலித்துக் கொண்டிருந்தது. பிறகு, மாலை தொடங்குவதற்கு முன்னான இளம்வெயில் பாறையில் மெல்லிய கதிர்வீச்சாக இறங்கி மினுங்கிக் கொண்டிருந்தது.

   வீடுகள் எதுவும் கண்ணுக்குப் புலப்படவில்லை. வீடு இருந்த இடங்களில் எல்லாம், உலவ மரங்கள் மட்டுமே ஊரை நிரப்பி இருந்தன. முன்னே செல்லச் செல்ல ஒரே ஒரு தெரு மட்டுமே தென்பட்டது. அவ்வளவுதான், ஊர் முடிந்திருந்தது. ஒரே தெரு, இருபது வீடுகள்கூடக் கிடையாது. அதிலும் ஐந்தாறு மண்வீடுகள் இடிந்துகிடந்தன. தகரம் போட்ட மண்வீடுகளுக்கு அருகில் இருந்த ஆட்டுத்தொழுவம், அந்த வீடுகளுக்கு அழகைக் கொடுத்தது. அப்போதுதான் மேய்ச்சலிலிருந்து திரும்பியிருந்த ஆடுகள், தெரு முழுக்க நின்று கத்திக்கொண்டிருந்தன. அதுவும் எங்கள் ஆட்டோவின் சத்தம் அவற்றை மிரளச்செய்து தெருவின் ஓரத்துக்குத் துரத்தியது. சில ஆடுகள் நடுத்தெருவில் நகராமல் நின்றபடி கத்திக்கொண்டிருந்தன. ஆட்டோவின் ஹாரன் சத்தம் அவற்றை நகரச் செய்யவில்லை. இன்னும் பேரதிசயங்களைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் மனிதர்கள், ஊருக்குள் ஆட்டோ வந்ததை  அறிந்து `யாருடா அது?’ என்று விநோதமாகப் பார்த்தார்கள். நானும் அம்மாவும் ஆட்டோவிலிருந்து இறங்க, அம்மாவை உடனடியாக அடையாளம் கண்டுகொண்டு நலம் விசாரிக்க ஆரம்பித்தார்கள்.

   ``என்னம்மா, இம்புட்டு தூரம் வந்திருக்கீங்க?’’ என்று சிவந்த கிழவி ஒருத்தி கேட்க, அவர்களிடம் ``சும்மா, என் மச்சான் மகளப் பார்க்க வந்தோம்’’ என்று அம்மா சொல்லி ஒவ்வொருவரையும் விசாரித்தபடி அந்தத் தெருவின் கடைசியில் இருந்த வீட்டுக்கு அழைத்துப்போனாள். இலவம்பஞ்சை வீட்டுவாசலில் போட்டு உடைத்துக்கொண்டிருந்த என் பெரியப்பா மகள் லட்சுமி அக்கா, என்னைப் பார்த்ததும் நம்ப முடியாதவளாய் ``ஆத்தே, என்னைக்கும் வராதவ வந்திருக்காத்தே’’ என்று சொல்லி மகிழ்வுடன் எங்களை வரவேற்று என்னைக் கட்டிக்கொண்டாள்.

   நான்கு இளம்வயது குடும்பத்தைத் தவிர, கிழவன் கிழவிகள் மட்டுமே அந்த ஊரில் இருந்தனர். ஆட்டுக்குட்டிகளைத் துரத்திக்கொண்டு நான்கைந்து குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர். அவர்கள் அங்கே நிரந்தரமாக வசிப்பவர்கள் அல்லர். ஊரைக் காலி பண்ணிப்போனவர்களின் குழந்தைகள். விடுமுறைக்காகத் தங்கள் தாத்தா-பாட்டி வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் தவிர்த்து, அந்த ஊர் வயதானவர்களாலும் ஆடுகளாலும் மட்டுமே நிரம்பியிருந்தது. என் பெரியப்பா மகளும் அந்த ஊரில் நிரந்தரமாகக் குடியிருக்கவில்லை. வேறு ஊருக்கு இடம்பெயர்ந்துவிட்டார். அவர்கள் காட்டில் இருந்த இலவம்பஞ்சுகளைச் சேகரிக்கத்தான் அங்கு வந்திருக்கிறார்கள்.

   என் அக்கா வீட்டுக்காரரின் தம்பி குடும்பம் மட்டும் அங்கு நிரந்தரமாகக் குடியிருந்தது. அவர்களின் குழந்தைகள் வெளியூரில் படித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் மட்டும் ஊரைக் காலிபண்ணாமல் ஐம்பது ஆடுகளை வளர்த்துக்கொண்டு, இலவம்பஞ்சுக் காட்டைக் கவனித்துக்கொண்டு அங்கேயே வாழ்ந்துவந்தனர். மாமாவின் தம்பிக்கு ஓரளவு வசதி இருந்தாலும் அந்தக் கரட்டை விட்டுக் கீழிறங்க மனமில்லை. அவர் மனைவி எவ்வளவு கெஞ்சிப்பார்த்தும் அந்த ஊர் கிழவிகளைப்போல,  ``இந்த ஊரே காலியானாலும் நான் பிறந்த இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன்” என்று பிடிவாதமாக இருக்கிறார்.

   அப்பாவும் இவரைப்போலவே பிடிவாதமாக அந்த ஊரில் இருந்திருக்க வேண்டியவர்தான். தன்னைப்போல் தன் பிள்ளைகள் படிக்காமல் போய்விடக் கூடாது என்று, அக்காவும் அண்ணனும் பிறந்தபிறகு பிள்ளைகளைப் படிக்கவைக்க வேண்டும் என்று கூடலூருக்குக் குடிபோய் விட்டதாகச் சொல்லியிருந்தார். அப்பாவின் வீட்டில் ஏழு பிள்ளைகள். வண்டி மாடு வைத்து, கூடலூரில் சிறிய அளவில் விவசாயம் செய்துவந்திருக்கிறது தாத்தாவின் குடும்பம். எல்லோரின் பசியையும் அந்தச் சிறு நிலத்தால் பூர்த்திசெய்ய முடியவில்லை. நிலம் தேடி அலைந்த தாத்தா மற்றும் அவரின் உறவினர்கள், வருசநாட்டுப் பக்கம் காடு தேடி அலைந்து இந்த இடத்துக்கு வந்துசேர்ந்திருக்கிறார்கள். கரட்டுக்காட்டை விவசாய நிலமாக்கி, இந்த ஊரை உருவாக்கியிருக்கிறார்கள்.

   அப்பாவுக்குப் படிக்க வேண்டும் என்று நிறைய ஆசை. இரண்டாம் வகுப்புகூட முடிக்காத நிலையில் அப்பாவின் குடும்பம் இடம் மாறி கரட்டுக்குக் குடிவந்துவிட்டது. ஆறு வயதிலிருந்து மண்வெட்டியைப் பிடித்து உழைத்த வாழ்வை, அப்பா கதையாகச் சொல்வார். இளம்வயது வந்த பிறகு, தான் படிக்கவில்லை என்று அப்பாவுக்குக் கவலை வர, கம்யூனிஸ்ட் ஆள்கள் நடத்திய மாலை வகுப்பில் சேர்ந்து படிக்கக் கற்றுக்கொண்டிருக்கிறார். தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சி ஆள்களின் தொடர்பு, நிலப்போராட்டம் என்று அவர் வாழ்வு அந்தக் காலங்களில் அர்த்தம் மிகுந்து விளங்கியதாகச் சொல்லியிருக்கிறார்.

   ஆளற்ற அந்த ஊரின் பொலிவு, என்னை வியக்கவைத்தது. அப்பழுக்கற்ற வானின் ஒளிதான் மனிதர்கள் நடமாட்டம் இல்லாத அந்த ஊரின் இன்றைய தனிமையை, இருண்மையை முற்றாகத் துடைத்தெறிந்துகொண்டிருந்தது. அந்த ஊரில் ஒரு கிணறு இருந்தது. தெரு ஓரத்தில் இருந்த லட்சுமி அக்கா வீட்டின் அருகில் பாறைகளுக்கு நடுவே இருந்த அந்தக் கிணறு அழகின் உச்சம். கிணற்றைச் சுற்றி ஒரு கொடி படர்ந்திருந்தது. கிணற்றடியில் இருக்கும் பாறைகளில் விழும் சூரிய ஒளி தெறித்து, அங்கு இருக்கும் செடிகொடியெல்லாம் மின்னிக்கொண்டிருந்தன. ஊரே ஒளிக்கோலமாய் இருப்பதைப்போல எனக்குத் தோன்றியது. நான் இதுவரை பார்த்ததிலேயே ஒளி மிகுந்த ஊர் பண்டாரவூத்துதான்.

   இரவில் அந்த ஊர் இன்னும் மாயவித்தையோடு இருந்தது. தூரத்துக் காட்டிலிருந்து முந்திரிவாசம், காற்றில் பரவிக் கமழ்ந்தது. இயற்கை அந்த ஊருக்கென பிரத்யேகமான அழகை வழங்கியிருந்ததோ என்னவோ, வானின் இரவொளி நேராக இறங்கி வெளிச்சமும் இருளுமற்ற காலைப் பனியைப் போன்ற மிதமான ஒளியோடு இருந்தது.  சிறுவயதில் பாட்டி வீட்டில் அப்பாவுடன் தங்கிய நினைவுகளோடு அக்காவின் வீட்டில் கயிற்றுக்கட்டிலில் படுத்துக்கொண்டேன்.

   இங்கே எப்போது வந்தாலும் பாதி நாள்கள் கோழிக்குழம்பும் சோறும்தான் பாட்டி சமைக்கும். இதெல்லாம் விருந்தாளிகள் வந்தால்தான். இல்லையென்றால், கூழும் வெல்லமும் இரவில் களியும்தான் பாட்டியின் உணவு. ஊரில் வசிக்கும் எல்லோர் வீட்டிலும் இதே நிலைதான். சோறு என்பது அரிதாகத்தான் இருக்கும். வீட்டுக்கு முன்னால் எப்போதும் சேவல்களும் கோழிகளும் கூவிக்கொண்டும் கொக்கரித்துக்கொண்டும் இருக்கும். தினை, சோளம், சாமை என எதையாவது பெண்கள் உரலில் போட்டு இடித்துக்கொண்டிருப்பார்கள். அது இனிமையான சங்கீதமாய் விட்டுவிட்டு சத்தம் எழுப்பும்.

   தூக்கத்தில் கிணறு மட்டும் நினைவில் வந்துகொண்டே இருந்தது. கிணற்றடியில் விழுந்த ஒளிக்கற்றைகள்தான் கண்ணில் அகலாது நின்று ஞாபகத்தைத் தூண்டின.  முதலில் அந்தக் கிணறு பற்றிய இருளான வி‌ஷயங்கள்தான் நினைவுக்கு வந்தன. விருப்பப்பட்ட காதலனைக் கல்யாணம் செய்ய முடியாமல்போக, கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட பெண், தண்ணீர் எடுக்கும்போது கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண், தண்ணீர் மொண்டு குடிக்கப்போய் சாராய மயக்கத்தில் விழுந்து இறந்த நடுத்தர வயது ஆண் என, பல கதைகள் ஞாபகத்துக்கு வந்தன. ஆனால், அந்த ஊரின் நீராகாரம் அந்தக் கிணற்றின்மூலம்தான் என்பதால், யாராவது கிணற்றில் விழுந்து செத்துப்போனாலும் தண்ணீரை இறைத்துக் கீழே விட்டுவிட்டு மறுபடியும் கிணற்றில் ஊறும் தண்ணீரை சாதாரணமாகக் குடிக்கப் பழகிவிடுவார்களாம். என்ன ஆனாலும் அந்தக் கிணற்றடியில் அமர்ந்துதான் பெண்கள் தங்கள் கதைகளைப் பேசித் திரிந்திருக்கிறார்கள்.  

   ஆனால், அப்பா சொன்ன கிணற்றுக் கதை இதற்கு முற்றிலும் மாறானது. நிலம் திருத்திய அந்தக் காலத்தில் தண்ணீருக்காக வெகுதூரம் பெண்கள் ஊற்றைத் தேடி அலைந்து கொண்டிருப்பார்களாம். ஒரு மடக்கு தண்ணீருக்காக ஒரு நாள்கூடக் காத்திருந்தி ருக்கிறார்கள். காட்டை உருவாக்கிய பிறகு முதல் வேலையாக, கிணறு வெட்டுவதைப் பற்றித்தான் பெரியவர்கள் யோசித்திருக்கிறார்கள். பொட்டல்காட்டில் தண்ணீர் இருக்கும் பகுதியை அவ்வளவு எளிதில் கண்டடைய முடியவில்லை. அப்போது அந்த வழியாகச் சென்ற வெள்ளிமலைப் பழங்குடியினர் இப்போது இருக்கும் இந்தப் பண்டாரவூத்தைக் காட்டி, ``பாறை இருக்கும் இடத்துல நிச்சயம் தண்ணீர் இருக்கும்’’ என்று சொல்லி ஓர் இடத்தைக் கைகாட்டி கிணறு வெட்டச் சொல்லியிருக்கிறார்கள். அந்தப் பாறையைத் தோண்டி எடுக்கவே ஆறு மாதங்கள் பிடித்ததாம். பெண்கள் விவசாய வேலைகளைக் கவனிக்க, சிறுவனாக இருந்த என் அப்பா முதல் அத்தனை ஆண்களும் கிணறு தோண்டும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அப்பாவின் கைகளில் அப்போது தோன்றிய கைக்காப்பு பெரிய பெரிய கட்டியாகக் கடைசி வரை இருந்தது. கிணறு உருவாகி, தண்ணீர் வந்த பிறகு அந்தப் பகுதியில் வீடு அமைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதன் பிறகு பழங்குடியினர் வணங்கிய தெய்வமான பண்டாரப்பனையே அவர்களும் வணங்கி, அந்த ஊருக்கு `பண்டாரவூத்து’ என்று கிணற்றின் பெயராலேயே பெயர் வைத்திருக்கிறார்கள். காலம் மாற மாற, `பஸ் போகாத, பள்ளிக்கூடம் இல்லாத ஊரில் யார் வாழ்வார்கள்?’ என்று கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் ஊரைக் காலிசெய்துவிட்டார்கள். கடைசியில் பத்துக் குடும்பங்கள் மட்டுமே மிஞ்சியிருக்கின்றன.

   காலையில் எழுந்து, சாப்பிட்டு முடித்த பிறகு முதல் வேலையாகக் கிணற்றடிக்குப் போனேன். அம்மாவை அழைத்து, நான் கிணற்றுமேட்டில் உட்கார்ந்திருக்கும்படி பல புகைப்படங்களை எடுத்துக்கொண்டேன். கிணற்றுக்குள் ஒன்றிரண்டு காய்ந்த இலைகள் மிதந்துகொண்டிருந்தன. அவை பேரழகோடு காட்சியளித்தன. தண்ணீரில் மரங்களின் எதிரொளிப்புகள் நிழலோவியங்களாகக் கிணற்றுக்குள் படர்ந்திருந்தன. தண்ணீர் மிகத் தூய்மையாக இருந்தாலும் இப்போது யாரும் கிணற்றுத் தண்ணீரைக் குடிக்கப் பயன்படுத்துவதில்லை. அரசாங்கம், போர் போட்டு அங்கே குழாயில் தண்ணீர் பிடிக்க ஏற்பாடு செய்திருந்தது. இப்போது பெண்களின் நடமாட்டம் இல்லாத கிணறு தனித்திருந்தது. கிணற்றைச் சுற்றி எத்தகைய ஒளி நிரம்பிக் கிடந்தாலும் அந்த இடம் சென்று கதைகள் பேசும் பெண்கள்தான் அந்த ஊரில் இல்லை. 

   நானும் அம்மாவும் அங்கிருந்து கிளம்பி, பக்கத்தில் இருக்கும் மீதி ஊர்களைச் சுற்றிப்பார்க்கச் சென்றோம். வழியெங்கும் அந்த ஊரில் அப்பாவோடு வாழ்ந்த நினைவுகளை அம்மா சொல்லிக்கொண்டு வந்தாள். மீண்டும் இரவுத் தங்கலுக்கு பண்டாரவூத்துக்கு வந்துவிட்டோம். அதுவரை எடுத்த புகைப்படங்களை எல்லாம் லேப்டாப்பில் இறக்கிப் பார்த்துக்கொண்டிருந்தேன். நான் அந்த நிலத்தில் பார்த்த ஒளியின் பாதியளவாவது புகைப்படத்தில் விழுந்திருந்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது. கிணற்றடியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பார்த்ததும் அதிர்ந்து நின்றேன். நான் கிணற்றுமேட்டில் உட்கார்ந்திருந்த எல்லாப் புகைப்படங்களிலும் என் முகத்துக்கு முன்னே நெளிந்த பாம்பு போன்ற வெளிச்சக் கொடி படர்ந்து என் தலைக்கு மேலே சென்று அங்கு இருந்த சிறு செடியின் கிளைகளோடு பிணைந்திருந்தது. நான் இருக்கும் எல்லாப் புகைப்படங்களிலும் அந்த வெளிச்சக்கொடியைப் பார்த்து மிரண்டுபோனேன். வயிற்றில் இனம்புரியா பயம் இறங்கியோடியது. கூடவே நெஞ்சடக்க முடியாத துயரமும். நான் இல்லாத கிணற்றுப் புகைப்படங்களில் அந்த வெளிச்சக்கொடி இல்லாதது எனக்குப் பெரும் அச்சத்தைத் தந்தது. படங்களைப் பெரிதாக்கி மீண்டும் மீண்டும் பார்த்தேன். அந்த வெளிச்சக்கொடி வருவதற்கான சாத்தியக்கூறுகள் அந்த இடத்தில் இல்லை. ஊர் இப்போது அதே ஒளியோடு இருப்பதாகவே தோன்றியது. அக்கா வீட்டிலிருந்து எழுந்து கிணற்றடியைப் பார்த்தேன். என் கண்கள் பளபளக்க, கிணற்றைச் சுற்றிலும் ஒளிர்ந்த பல வெளிச்சக்கொடிகள் மின்னிக்கொண்டிருந்தன. என்னால் உணர்வெழுச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கண்களில் நீர், தானே வழிந்தது. ஏதோ ஒன்று, கிணற்றை நோக்கி என்னை இழுத்தது. பயத்தை மீறிய புதிதான உணர்வு ஒன்று எழுந்தது.

   சீராக வடிவமைக்கப்பட்ட இசை வடிவத்தைப் போன்று பல்வேறு குரல்களும் சத்தங்களும் காற்றில் பரவியிருந்தன. சிறு குழந்தையைப்போல அந்தச் சத்தங்களைக் கையில் பிடிக்க முற்பட்டேன். கோழிகளின் சத்தம், ஆடுகளின் சத்தம், உரல் இடிபடும் சத்தம், பல்வேறு மனிதர்களின் பேச்சு சத்தம்.  அதில் அப்பாவின் குரலைத் தனித்தறிய முயன்றுகொண்டிருந்தேன். அந்த ஊரில் அதுவரை வாழ்ந்து இறந்துபோனவர்களின் ஆன்மாவின் குரல்கள் கிணற்றைச் சுற்றியும், அந்த ஊரிலும் ஒளியாகப் பரவிக்கிடந்தன. பாறைகளின் வழியே நடந்து கிணற்றடிக்குப் போனேன். மெள்ள மெள்ள எல்லா ஒளிக்கொடிகளும் காற்றில் நகர்ந்து என் அருகே வந்துகொண்டிருந்தன. என் கால்கள் தரையை உணரவில்லை. ஏகாந்தமாக என் உடல் காற்றில் தளர்ந்து நின்றது. மனம் அதுவரை அடையாத பரவசநிலைக்குப் போனது. நகர்ந்து வந்த ஒவ்வொரு கொடியும், என் உடல் முழுவதும் ஒன்றன் பின் ஒன்றாகச் சுற்றத் தொடங்கின. என் உடல் ஐந்தடி ஒளிக்கொடியாக மாறி நிலவெளியெங்கும் பறந்து சென்றதை நான் பாறையில் நின்றபடி பார்த்துக்கொண்டிருந்தேன்.
   https://www.vikatan.com/
  • By நவீனன்
   பாகீரதி... பாகீரதி... - சிறுகதை
   நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... இந்திரா சௌந்தர்ராஜன், ஓவியங்கள்: அரஸ்
    
   'சரணாகதி’ முதியோர் இல்லத்தின் முன்னால் ஆட்டோ தேங்கி நின்றது. அதில் இருந்து உதிர்ந்தாள் வித்யா.
   'அடுத்த இஷ்யூ... முதியோர் சிறப்பிதழ். அதுல உன் கட்டுரைதான் சிகரமா இருக்கணும்’ என்று 'மலர்கள்’ பத்திரிகையின் ஆசிரியர் மலரவன் சொன்னது அவள் காதுகளில் எதிரொலித்தது.
   சரணாகதி, முதியோர்களுக்கான இல்லம் மட்டும் அல்ல; ஆசிரமம்கூட! இலவச சேவை, பணத்துக்கான சேவை என இரண்டுவிதமான சேவைகள் அங்கு வழங்கப்பட்டாலும், பெரிதாகக் குற்றம் காண இடம் இல்லாதபடி இருந்தது. மேனேஜர் ராகவன், வித்யாவை வரவேற்று உதவியாளர் சீனிவாசனிடம் அறிமுகப்படுத்தி, அங்கு வாழ்வின் எஞ்சிய பாகத்தைக் கழிக்க முடியாமல் கழித்தபடி இருக்கும் முதியோர்களிடம் அழைத்துச் செல்லும்படி கூறினார்.
   வித்யாவும் ரெக்கார்டரைக் கையில் எடுத்துக்கொண்டாள். ஆரம்பமாயிற்று சந்திப்பு!
   முதல் சந்திப்பு, பஞ்சாட்சரம்-பத்மாவதி  தம்பதிகளிடம்...
   ''நமஸ்காரம்... என் பேர் வித்யா. முதியோர் சிறப்பிதழுக்காக உங்களைப் பேட்டி காண வந்திருக்கேன். உங்களுக்குப் பிள்ளைகள் இல்லையா?''
   ''ஏன் இல்லாம... மூணு பசங்க.''
   ''மூணு பசங்க இருந்துமா நீங்க முதியோர் இல்லத்துல இருக்கீங்க?''
   ''அது, எங்க தலையெழுத்து. மத்தபடி எங்க பிள்ளைகள் மேல தப்பு ஒண்ணுமில்லை.''
   ''ஆச்சரியமான பதிலா இருக்கே!''

   ''ஆமாம்மா... வீடு வாசலை வித்து நல்லாத்தான் படிக்கவெச்சோம். பசங்களும் படிச்சாங்க. அமெரிக்கா, ஆஸ்திரேலியானு வேலை கிடைச்சது, அனுப்பிவெச்சோம். மாசம் அஞ்சாறு லட்சம் சம்பளம். ஆனா, எங்களால அங்க போய் அவங்களோட இருக்க முடியல.''
   ''எதனால?''
   ''எங்க வரைல இங்க ஊருக்குள்ள ஒரு பக்கமா ஜெயில் இருக்கு. அங்க ஊரே ஜெயிலாதாம்மா இருக்கு. காலாற நாலு தெருப்பக்கம் நடந்தோம்னு நடக்க முடியாது. காபி பொடி வாங்கக்கூட 30, 40 மைல் கார்ல போகணும். அக்கம்பக்கத்து வெள்ளக்காரர், 'ஹவ் ஆர் யூ?’ம்பா... 'ஹேவ் எ நைஸ் டே!’ம்பா அதுக்கு மேல அவா பேசறது எங்களுக்குப் புரியாது.
   பசங்க வேலைக்குப் போய்ட்டா, வீட்டுல கிடக்குற ஃபர்னிச்சரோட ஃபர்னிச்சராத்தான் நாங்களும் உட்காந்திருக்கணும். ஒரு கொரியர் வந்தாகூட எழுந்துபோய் வாங்க, காலுக்குத் திராணி கிடையாது. மூட்டு வலி. மொத்தத்துல நாங்க, அவங்க வரையில பாசமான பாரம்தானே ஒழிய, துளி ஒத்தாசை கிடையாது. அதான் 'சரணாகதி’க்கு வந்துட்டோம்'' - பத்மாவதி பாட்டி, பத்திரிகையாளர் போல எடிட் செய்து பேசி முடித்தாள்.
   ''நல்லபடியா படிக்கவெச்சதுதான் நாங்க செய்த தப்போனு தோண்றது'' என்றார் பஞ்சாட்சரம்.
   நிஜமாகவே நெஞ்சில் கூர்மையான வேலால் குத்தியது போல்தான் இருந்தது வித்யாவுக்கு.
   அடுத்த செட் அகல்யா - ராமநாதன் தம்பதி!
   அழகாக உட்கார்ந்து செஸ் விளையாடிக்கொண்டிருந்தனர்.
   ''எங்களுக்குக் குழந்தைங்க இல்லை; காதல் திருமணம் வேற. அதனால உறவுகளோட பெரிய இணக்கமும் இல்லை. நல்லவேளை... எனக்கு அரசாங்க உத்தியோகம்; பென்ஷன் வருது. சொந்தமா வீடு இருந்தது. அதை வித்துட்டு பணத்தை பேங்க்ல போட்டுட்டு இங்க வந்துட்டோம். எங்களுக்கு எது நடந்தாலும் பயம் இல்லை. இங்கேயே எல்லா ஈமக்கிரியையும் செய்துடுவாங்க. நாங்க எங்க சாம்பலை காசியில கரைக்கணும்னு விரும்பினோம். அக்ரிமென்ட்லயே அதை எழுதி ஓ.கே-னுட்டாங்க'' -ராமநாதன் செஸ் விளையாடியபடியே மிகச் சகஜமாகப் பேசினார்.
   அவர் தோரணையே... 'வாழ்க்கை என்ன பெரிய வாழ்க்கை. அது ஒரு விளையாட்டுதானே! பதிலுக்கு அதோடு நாமும் விளையாடினால் தீர்ந்தது’ என்பதுபோல் இருந்தது.
   இந்த இரண்டு ஜோடிகளே, வித்யா மனத்தைக் கனப்படுத்திவிட்டார்கள். முதல் தடவையாக, 'தனக்கு வயதானால்..?’ என்ற கேள்வி அவளுக்குள் எழும்பியது.
   மூன்றாவது ஜோடியில் ஒருவர் படுத்தபடுக்கையாக. அதாவது, சுப்புலட்சுமி பாட்டி படுத்தபடுக்கையாக. கணவர் ராமபத்ரனுக்கு 96 வயது. டி.வி. ரிமோட்டைத் தலைகீழாகப் பிடித்துக்கொண்டு அழுத்தி அழுத்திப் பார்த்தபடி இருக்க, டி.வி. ஒளிரவே இல்லை.
   ''அத இப்படித் தாங்க. ரிமோட்டை அழுத்தத் துப்பில்லை. இதுல சீரியல் பார்க்கலேனா தலை வெடிச்சிடும்'' என்று சுப்புலட்சுமி பாட்டி அங்கலாய்க்க,
   ''இந்தாடி... நீதான் போடு பார்ப்போம். இந்த ரிமோட்டுக்கும் என்னை மாதிரியே எல்லாம் போச்சு போல'' என்றார்.
   பாட்டி, ரிமோட்டை நேராகப் பிடித்து நொடியில் டி.வி-யை ஒளிரவைத்தார்.
   ''சுப்பி... உனக்கு மந்திர விரல்டி!''
   ''மண்ணாங்கட்டி... ரிமோட்டை நேரா பிடிக்கத் தெரியலையே உங்களுக்கு. நான் போய்ட்டா அவ்ளோதான் உங்க கதி. கோமணத்தைக்கூட கோணலாக் கட்டிண்டு... கர்மம்... கர்மம்'' - சுப்புலட்சுமி பாட்டி தலையில் அடித்துக்கொள்ள, கச்சிதமாக உள்ளே நுழைந்தாள் வித்யா.
   ராமபத்ரன் அவளைப் பார்த்து, ''அடடே... பாகீரதியா... வா... வா'' என்றார்.
   வித்யாவுக்கு ஆச்சரியம்.
   ''சார்... நான் பாகீரதி இல்லை, வித்யா.''
   ''வித்யாவா... நீ பாகீரதி இல்லே?''
   ''அதான் 'வித்யா’ங்கிறாளே... அப்புறம் 'பாகீரதி’னா. பார்க்கிறவால்லாம் உங்க பேத்தி 'பாகீரதி’தானா?'' - சுப்புலட்சுமியின் இடையீடு, வித்யாவுக்கு எல்லாவற்றையும் புரியவைத்தது.
   ''அதனாலென்ன... நீங்க என்னை 'பாகீரதி’யாக்கூட நினைச்சுக்கலாம். எனக்கு ஆட்சேபணை இல்லை'' என்றாள்.
   ''எதுக்கும்மா வந்துருக்கே..?'' - படுத்த நிலையில் இருந்தே சுப்புவிடம் இருந்து கேள்வி.
   அப்போது, சுப்புவிடம் இருந்த ரிமோட்டை வாங்கி, டி.வி-யில் தனக்குப் பிடித்த சீரியலை வைக்கத் தொடங்கினார் ராமபத்ரன்.
   ''நான் ஒரு ஜர்னலிஸ்ட். முதியோர் சிறப்பிதழுக்காக ஒரு கட்டுரை எழுதணும். அதான் உங்க எல்லோரையும் பார்க்க வந்தேன்.''
   ''எங்களுக்குனு சிறப்பிதழா... விளக்குமாத்துக்குப் பட்டுக்குஞ்சமா?'' - பாட்டி படுத்துக்கொண்டே ஆகாசத்துக்கு நிமிர்ந்த மாதிரி கேட்டது, வித்யாவை ஓர் உலுக்கு உலுக்கியது.
   ''உங்களை நீங்க அப்படிச் சொல்லிக்கக் கூடாது. உங்க அனுபவங்கள் எல்லாம் லேசுப்பட்டதா என்ன?''
   ''உண்மைதான்... அது லேசுப்பட்டது இல்லை. அதே சமயம், ஆனந்தமாப் பகிர்ந்துக்கக்கூடியதும் இல்லை. பாரு... கால் போய் படுத்துண்டு கிடக்கேன். சாப்பிடவே பிடிக்கலைம்மா. நாக்கு ஒண்ணும் செத்துப்போயிடலை. இப்பவும் உப்பு, ஒரப்பு தேவைப்படறது. ஆனா, சாப்பிட்டா வெளியேத்தணுமே..? என் கழிவை இங்க ஒரு பொண்ணு வந்துதான் சுத்தம் பண்ணுவா. அவளைப் போல பாவி இருக்க முடியுமா..? சொல்லு பார்ப்போம்'' என்றாள் சுப்புலட்சுமி பாட்டி.
   இதென்ன... எல்லா வயதானவர்களுமே இப்படிக் கேட்கிறார்கள்? வித்யாவுக்கு விதிர்விதிர்ப்புத் தட்டியது. சுப்புலட்சுமி பாட்டியை மலங்க மலங்கப் பார்த்தாள். பாட்டியும் தொடர்ந்தாள்.
   ''எங்க கல்யாணத்துக்குச் சரியான கூட்டம். 2,000 பேர் வந்ததா சொன்னாங்க. எல்லாருமே எங்களை 100 வருஷம் உசுரோட இருக்கணும்னே வாழ்த்தினாங்க. அது இப்படியா பலிக்கணும்?
   பாரு... இந்த டி.வி. ரிமோட்டைக்கூட இவருக்கு ஒழுங்காப் போடத் தெரியலை. இவரோட 75 வருஷம் வாழ்ந்துட்டேன். ஒரு பொண்ணு இருந்தா. ஆனா, அவ கொடுத்து வெச்சவ. அவளுக்கு 60 வயசு நடக்கிறப்பவே ஹார்ட் அட்டாக்ல போய்ச் சேர்ந்துட்டா. பேரன் - பேத்திகள் வெளிநாட்டுல இருக்காங்க. 'கிராண்ட் ஃபாதர்ஸ் டே’க்கு போன் பண்ணி விஷ் பண்ணுவாங்க. மாசமானா எங்க செலவுக்கு அவங்கதான் பணம் கட்டுறாங்க. என்ன பண்ணி என்ன புண்ணியம்... எங்க உசுர் போவேனாங்குது'' - சுப்புலட்சுமி பாட்டியின் அடுத்த கட்ட விளக்கத்தில், அவர்களின் நிலை வித்யாவுக்கு விளங்கிவிட்டது. பிள்ளைகள் இல்லாததால் முதுமை அல்லாடுகிறது; அப்படியே இருந்தாலும் வெளிநாட்டு மோகத்தால் அல்லாடுகிறது.
   'சரணாகதி’ மாதிரி அமைப்புகள் மட்டும் இல்லாவிட்டால், இவர்கள் நிலையைக் கற்பனை செய்வதுகூட சிரமம்தான்.
   ''இப்ப உங்களோட ஆசை..?'' - வித்யா கேட்டாள்.
   ''ஒரே ஆசைதான். உயிர் போனா போதும்.''
   ''ஐயோ... அப்படில்லாம் சொல்லாதீங்கம்மா.''
   ''வேண்டாம் குழந்தை. எங்களுக்கான சாவை நீ துக்கமாவே நினைக்காதே. அதிகபட்சம் 70, 75 வயசுக்கு மேலே யாருமே வாழக் கூடாது. வாழ்ந்தா அது நரகம். நீ உன் காலை ஜாக்கிரதையாப் பார்த்துக்கோ. அதுக்கு ஒரே வழி... பகவான் கால், பெரியவா கால்னு எல்லார் காலையும் பிடி. ஆரோக்கியமா இருக்க ஆசீர்வாதம் வாங்கிக்கோ. கண் இல்லாமக்கூட கௌரவமா வாழ்ந்துடலாம்; கால் போனா அவ்வளவுதான்.
   நீ எழுதப்போற கட்டுரையில இதையும் எழுது.
   கால்களால நடந்து கோயில், குளத்துக்குப் போங்கோ... பாதயாத்திரை பண்ணுங்கோ. அதைச் சொகுசா வெச்சுண்டு அடுத்த தெருவுக்குப் போகக்கூட ஆட்டோவைக் கூப்பிட்டா என் நிலைமைதான். நடக்கலாம்... அதனால ஒரு கௌரவக் குறைச்சலும் வந்துடாது. நாம வறட்டுக் கௌரவம் பார்க்கப் போய் ஆரோக்கியமும் போயிடறது; ஆட்டோக்காரனும் அதுக்குத் தண்டனையா 50, 100-னு புடுங்கிப்பிடுறான்'' - சுப்புலட்சுமி பாட்டி எங்கோ ஆரம்பித்து எங்கோ வந்து முடித்தாலும் அவ்வளவும் அசைக்க முடியாத கருத்துகள்.
   வித்யாவுக்கு தான் ஒரு ஞான பூமிக்குள் பிரவேசித்துவிட்டது போலத்தான் தோன்றியது.
   ''கட்டாயம் எழுதறேம்மா... உங்களுக்கு எதாவது உதவி வேணுமா?'' - வித்யா கேட்கவும், சுப்புலட்சுமி பாட்டி கப்பென்று பிடித்துக்கொண்டாள்.
   ''நீ கோயிலுக்குப் போவியா?''
   ''ஓ... போவேனே...''
   ''எனக்காக ஒரு பிரார்த்தனை பண்ணிப்பியா?''
   ''தாராளமா...''
   ''எந்தக் காரணத்தைக்கொண்டும் என் உயிர் முதல்ல போயிடக் கூடாது. இவரை அனுப்பிட்டுத்தான் நான் போகணும். ஒருவேளை நான் முந்திண்டா, இவர் அவ்வளவுதான். தவிச்சுப்போய்டுவார். இன்னைக்குக்கூட ஜட்டியைத் திருப்பித்தான் போட்டுண்டிருக்கார். நான் இருந்தாத்தான் எல்லாத்தையும் சொல்லி சரிசெய்ய முடியும்'' என்றதும், வித்யாவுக்குக் கண்களில் இருந்து நீர் புற்றுப் பாம்பாக எட்டிப் பார்த்தது.
   அதோடு சுப்புலட்சுமி பாட்டியின் கைகளைக் கண்களில் ஒற்றியபடி அவள் புறப்பட்டபோது ''நிஜமா சொல்லு... நீ பாகீரதி இல்லை?'' என ராம்பத்ரன் கேட்டவிதம் அவளை வெடிக்க வைத்துவிட்டது.
   வித்யாவின் கட்டுரைக்கு நல்ல வரவேற்பு.
   தமிழக முதலமைச்சர்கூட படித்துவிட்டு தலைமைச் செயலர் மூலம் பாராட்டு வந்து சேர்ந்தது.
   வித்யாவுக்கு அதெல்லாம் பெரிதாகத் தெரியவில்லை. சுப்புலட்சுமி பாட்டியைப் பார்த்து, கட்டுரையைப் படித்துக்காட்டி அவளின் முகப் பிரகாசத்தைப் பார்க்க வேண்டும் என்று மனம் துடித்தது.
   புறப்பட்டுவிட்டாள்.
   'சரணாகதி’க்குள் நுழைந்து மேனேஜர் ராகவன் முன் புன்னகையோடு நின்றாள்.
   ''சார்... கட்டுரை படிச்சீங்களா?''
   ''ம்... பிரமாதம்!''
   ''சி.எம்-கிட்ட இருந்துகூட பாராட்டு சார். அனேகமா உங்களுக்கு நிறைய உதவிகள் கிடைக்கலாம்.''
   ''சந்தோஷம்மா...''
   ''சுப்புலட்சுமி பாட்டியைப் பார்க்கணும். அவங்க ஒரு பிரார்த்தனை செய்ய சொல்லியிருந்தாங்க. பண்ணியிருக்கேன். குங்குமப் பிரசாதமும் கொடுக்கணும்.''
   வித்யாவின் அந்த விருப்பத்தின் முன்னால் சற்று மௌனம் சாதித்தார் ராகவன்.
   ''சார்ர்ர்...''
   ''சாரிம்மா... அவங்க பிராப்தி அடைஞ்சுட்டாங்க. ரெண்டு நாளாச்சு?''
   ''மை காட்..! அவங்க கணவர்?''
   ''அவர் இருக்கார். அவருக்கு பாட்டியம்மா போனதே தெரியாது. இங்க இருக்கிறவங்க துக்கத்தோட சாகறதை நாங்க விரும்பறது இல்லை. அதனால பாட்டியை ஆஸ்பத்திரில வெச்சு வைத்தியம் பார்க்கறதா சொல்லியிருக்கோம்...''
   ''அப்ப காரியங்களை..?''
   ''அவர் கையால பில்லும் எள்ளும் வாங்கித்தான் செஞ்சோம்.''
   ''அப்ப அவருக்குத் தெரிஞ்சிருக்குமே..?''
   ''சாதுர்யமா செஞ்சோம்மா. எப்படியும் அவரும் இன்னும் சில மாசங்கள்ல பிராப்தி அடைஞ்சுடுவார். இதை நான் சொல்லலை. டாக்டர் சொன்னதைச் சொல்றேன். அதுவரை அவர் துக்கவயப்படாம, தான் ஓர் அநாதைனு ஃபீல் பண்ணாம சந்தோஷமா இருக்கட்டுமே...'' - ராகவன் சொன்னதன் நியாயம் வித்யாவுக்கும் புரிந்தது.
   வாழ்க்கையில்தான் இப்படி எத்தனை வண்ணங்கள்? - கனத்த மனத்தோடு புறப்பட்டாள்.
   வாசல் தாண்டும்போது, ''பாகீரதி... பாகீரதி...'' என்று ஒரு குரல்.
   திரும்பிப் பார்த்தாள்.
   ராமபத்ரனேதான். தள்ளாடியபடி நெருங்கி வந்தார். ''என்னம்மா இவ்வளவு தூரம் வந்துட்டு தாத்தாவைப் பார்க்காமலே போறே..?'' - கேட்டார்.
   வித்யாவின் கண்களில் மீண்டும் நீர் முயல்களின் குதிப்பு. துடைத்துக் கொண்டாள். ''உங்களைத்தான் தாத்தா தேடிண்டிருக்கேன். வாங்க போகலாம்'' என்றாள் அவர் அறை நோக்கி.
   ''அது சரி... நீ சுப்பியைப் பார்த்தியா? என்கிட்ட சொல்லாமக்கொள்ளாம அவ பாட்டுக்குப் போயிட்டா.''
   அவர் தவறாகப் பேசுவது போல சரியாகப் பேசினார்.
   ''பார்த்தேன் தாத்தா. உங்களைப் 'பத்திரமாப் பார்த்துக்க’னு என்கிட்ட சொன்னா. அதான் வந்தேன். இனி நான்தான் உங்களைப் பார்த்துக்கப் போறேன்'' என்றாள்.
   ''எனக்குத் தெரியும். சுப்பி, அப்படியெல்லாம் என்னைத் தவிக்கவிட மாட்டானு...'' - அதைக் கேட்ட வித்யா ஒதுங்கிச் சென்று ஓவென அழ ஆரம்பித்தாள்.
   https://www.vikatan.com
  • By நவீனன்
   தேவதையின் கதை - சிறுகதை
   சிறுகதை: குமாரநந்தன், ஓவியங்கள்: ஸ்யாம்
    
   மாதம்மாள் ரக ரகமான அரிசிகளை மாட்டு வண்டிகளில் ஏற்றிக் கொண்டு, சந்தைகளுக்குப் போவாள். ஒவ்வொரு சந்தையிலும் பிரதான இடத்தில் அவள் கடை இருக்கும். மூட்டைகளை இறக்கி அடுக்கும்போதே வியாபாரம் ஆரம்பித்துவிடும். வேலைப்பாடு மிக்க வெள்ளிக்காப்பு அணிந்த கைகளால் படியில் அரிசியை அளக்க ஆரம்பித்தால், இரவு சந்தை கலையும் வரை ஓய்வே இருக்காது. காசுக்குக்  கொண்டு வந்து தருகிறவர்களிடம் தண்ணீர் வாங்கிக் குடித்துக்கொள்வாள். மதிய நேரம் வண்டிக்கார முத்துவிடம் “சித்தநேரம் கடைய பாத்துக்குங்க, சாப்பிட்டு வந்துடறேன்” என, அதிகாலையில் ருக்மணி அம்மாள் ஆக்கித் தந்த சோற்றைச் சாப்பிட்டுவிட்டு, மீண்டும் அதே களையுடன் வந்து கடையில் நிற்பாள். முகத்தில் களைப்பின் அறிகுறியோ, வெயிலின்  கொடுமையோ தென்படாது. அரிசி வாங்காவிட்டாலும் அவளின் சிரித்த முகத்தைப் பார்த்தாலே போதும் என எத்தனையோ பேர் அவள் முகத்தைப்  பார்த்துவிட்டுப் போவார்கள்.  பிச்சைக்காரர்கள் முதலில் வந்து அவள் கையில் வாங்கிக்கொண்டுதான் அடுத்த இடத்துக்குப் போவார்கள். அவர்களையும் அதே சிரித்த முகத்துடன்தான் பார்ப்பாள். முகம் அசூயையோ கர்வமோ  பெருமையோ இல்லாமல் நிர்மலமாக இருக்கும்.

   அவளால்தான் அவள் கணவன் ஜம்புவுக்கு மதிப்பு. ஜம்புவும் குஸ்தி பயில்வான்போல இருப்பான். கணவனும் மனைவியும் சேர்ந்து நடந்தால், கிழவிகள் முறிக்கும் நெட்டி ஒலியால் அவர்கள் பாதை நிறைந்திருக்கும்.

   ஜம்புவுக்குக் கல்யாணத்துக்கு முன் இரண்டு ஏக்கர் நிலமிருந்தது. அதில் கீரை வகைகளைத்தான் எப்போதும் பயிர் செய்வான். நடு ஜாமத்தில் எழுந்து அரைக்கீரை, முளைக்கீரை, தண்டுக் கீரைகளை அறுத்துக் கட்டு கட்டி சூரியன் உதிக்கும் முன்பே சந்தைகளுக்கு வண்டியில் கொண்டு போவான்.

   மாதம்மாள் வந்த பின் கீரை விதைப்பதை நிறுத்திவிட்டு நெல் போட்டார்கள். சிறு பச்சைக் கடலென அவர்கள் காட்டில் நெற்கதிர்களில் காற்றின் அலை அடித்தது. சட்டென அவர்கள் அந்தஸ்து வேறு தளத்துக்கு உயர்ந்தது. அதுவரை கூலிக்கார பாவனையில் இருந்த அவர்களுக்கு முதலாளி பாவம் வந்தது.

   வற்றாத  கிணற்றால், களத்தில் பொற்குவியலாய்க் குவிந்த நெல்லை வியாபாரிகளுக்கு விற்காமல், கோட்டை அடுப்பில் கொப்பரை வைத்து மாதம்மாளே அவித்தாள். புழுக்கிய நெல்லை வண்டிகட்டிக் கொண்டு போய் மில்லில் அரைத்து, மூட்டை பிடித்து, மல்லூர்ச் சந்தையில் கடை போட்டாள். வீட்டு உபயோகத்துக்குப் போக, வைத்திருந்த அத்தனை அரிசியும் ஒரே வாரத்தில் விற்றுத் தீர்ந்தது. சேலம் அரிசி மண்டியில் அரிசி வாங்கி வந்து கடையைத் தொடர்ந்தாள். பனமரத்துப்பட்டி, வெண்ணந்தூர், ஆட்டையாம்பட்டி, குமாரபாளையம் எனச் சந்தை சந்தையாய் அவள் அரிசிக்கடை ராஜ்ஜியம் விரிந்தது. காலங்காலமாய் அரிசி வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்த செட்டியார்களை ஆறே மாதத்தில் ஓரங் கட்டினாள். அப்போதிருந்தே அவர்களுக்கு ராஜயோகம்தான். நான்கைந்து வருடங்களிலேயே வியாபாரம் பிரமாண்டமாய் வளர்ந்தது. அரிசி மூட்டைகளோடு மூட்டையாய் பணத்தையும் கட்டிக்கொண்டு மாதம்மாள் வீட்டுக்குப் போனாள்.

   ஏக்கரா ஏக்கராவாய் நிலம் வாங்கினார்கள். நெல் விளைவித்தார்கள்.

   பழைய வீட்டை இடித்து, நடுவில் பத்து மூட்டை நெல் காய வைக்கும் அளவுக்குக் களம் போட்டு, இரட்டை மாடியுடன் தொட்டிக் கட்டு வீடு கட்டினார்கள். வாசலில் ஐம்பது மூட்டை நெல் காய வைக்கலாம். பால் மாடுகள் பத்து கொட்டிலுக்கு வந்தன. வீட்டு வேலை செய்ய, சமைக்க ருக்மணி அம்மாள் வந்தார். பால் கறக்க ஆள், பண்ணையம் பார்க்க ஆள், காட்டு வேலைகளை மேற்பார்வை செய்து, கூலியாட்களைத் தயார் செய்ய கனகரத்தினம் எல்லாம் வந்தார்கள்.

   ஜனங்கள் ஏதோ மாயாஜாலப் படத்தைப் பார்ப்பதைப்போல வாயைப் பிளந்துகொண்டு இவர்களைப் பார்த்தார்கள். ஊர் ஊராய் இவர்களைப் பற்றிப் பேச்சாய் இருந்தது.

   இவ்வளவு செல்வாக்கு வந்தபிறகுதான் அவர்களுக்குக் குழந்தை இல்லாத குறை நிவர்த்தியானது. பவித்ரா பிறந்தாள். பெயர் சூட்டு விழாவில் ஐந்நூறு பேருக்குச் சாப்பாடு போட்டார்கள். கவிழ்ந்து விழும்போது, குழந்தையின் எடைக்கு நிகராக, அம்மனுக்குக் வெள்ளிக் காசு துலாபாரம் கொடுத்தார்கள். ஏழு மாதத்தில் தங்கக்கிண்ணத்தில் மகளுக்குச் சோறூட்டினார்கள். அவள் நடந்தது, பள்ளிக்கூடம் போனது எல்லாம் திருவிழாவானது.

   ஊரில், மாதம்மாளுக்கு ராணியின் மதிப்பு இயல்பாக வந்து சேர்ந்தது. ‘அவங்க போன ஜென்மத்தில மங்கம்மாவா இருந்திருப்பாங்க’, ‘ஜமீன்தாரினி குமுதவல்லியா இருந்திருப்பாங்க’ என, ஊரில் கதை கதையாய்ப் பேச்சு எழுந்தது.

   பவித்ரா சிறுமியாய் இருக்கும்போதே, தாயின் அழகைத் தூக்கிச் சாப்பிட்டுவிடும் பேரழகியாய் வரப்போவதற்கான அறிகுறிகள் தெரிந்தன. அவள் விழிக்கோளங்களில் அப்படி ஒரு வெண்மை. வட்ட முகம். கன்னங்களும் வாயும் சிற்பக் கலை.

   வெள்ளைக் குதிரை பூட்டிய வில் வண்டியில் பள்ளிக்கூடம் போனாள். ஆனால், பவித்ராவுக்குப் படிப்பு சுமாராகத்தான் வந்தது. மாதம்மாளுக்கு ஏமாற்றமாய் இருந்தது. பெண் ஒருவேளை சூட்டிகை இல்லாமல் போய் விடுவாளோ எனக் கவலைப்பட்டாள். ஆனால், அவளுக்குப் படிப்புதான் சரியாய் வரவில்லையே தவிர புத்தி அபாரமாக வேலை செய்தது.

   ‘நீ மட்டும் சினிமாவில நடிக்கப் போனியனா டி.ஆர்.ராஜகுமாரி, அஞ்சலிதேவியெல்லாம் கண்காணாத தேசம் போயிடுவாங்க’ என ருக்மணி வாய்க்கு வாய் சொல்லிக் கொண்டிருந்தாள். மாதம்மாளுக்கு அதைக் கேட்கும்போது அவ்வளவு பெருமையாய் இருந்தது. அந்த வார்த்தைகள் அவள் ஆழ்மனதில் சென்று செய்த வேலையோ என்னவோ பவித்ராவுக்கு சினிமா பாவனை சின்ன வயதிலேயே வந்துவிட்டது.

    நறுவிசான அழகு, உணர்வுகளை எழிலாய் வெளிப்படுத்தும் முகம், செல்வச் செழிப்பில் ஒளிவீசும் உடல்...இதெல்லாம் சினிமாவில் நடிப்பதற்கென்றே தனக்கு இறைவன் வழங்கியதாக பவித்ரா நினைத்துக் கொண்டாள்.

   அவளுக்கு சினிமா என்றால் உயிர். வாரம் ஒருமுறை கணபதி டாக்கீசுக்குக் கூட்டிப் போய்விட வேண்டும். ருக்மணி அம்மாளின் வேலைகளில் இதுவும் ஒன்று. அப்படி கூட்டிப் போக மறுத்தால், அவள் சாப்பிட மாட்டாள். ஒரு கவளம் அவள் வாயில் இறங்காது. படம் பார்த்துவிட்டு வந்ததும், படத்தின் முழு வசனத்தையும் அதே ஏற்ற இறக்கத்தோடு அதைவிடப் பலமடங்கு வசீகரத்தோடு பேசிக் காட்டிவிடுவாள். மாதம்மாளுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. இதென்ன இப்படி ஒரு திறமை. பவித்ராவின் சினிமா மோகமும், நடிப்புத் திறமையும் ஊராரிடமிருந்து மறைத்து வைக்க முடியாததாய் இருந்தது. எங்கே போனாலும் `கண்ணு, அந்தப் படத்துல ராணி பேசின மாதிரி பேசு’, `இந்தப் படத்துல அந்தப் பாட்டை ஒரு தரம் பாடு’ என்ற வேண்டுகோள்களுக்கு அவள் உற்சாகமாய் நடித்துக்காட்டினாள். பள்ளிக்கூடத்தில் வாத்தியாரினிகள் கூட அவளை நடித்துக்காட்டச் சொல்லி மெய்மறந்து பார்த்தனர்.

   ‘போகப் போக எல்லாம் சரியாகிடும். விவரம் தெரிந்த பின்னால் பெண் சரியாகிவிடுவாள்’ என மாதம்மாள் நம்பியிருந்தாள்.

    வருடத்துக்கு வருடம் அவள் அழகு காட்டாற்று வெள்ளமாய்ப் பெருகியது. உடல் காம அஸ்திரங்களால் நிரம்பியது. மாதம்மாளிடம் இருந்த தெய்விக அமைதி அவளிடம் இல்லை. பவித்ரா மோகினி அவதாரம்போல இருந்தாள். இளமை அவளை வசீகரத்தின் எல்லை வரை கொண்டு செல்லப்போகிறது என்பதே எல்லோரின் கணிப்பாய் இருந்தது.

   பன்னிரண்டு வயதில் பவித்ரா பெரியவளானாள். அப்போதே எங்கெங்கிருந்தோ அவளைப் பெண் கேட்டு வர ஆரம்பித்துவிட்டார்கள்.

   தான் இனி பள்ளிக்கூடம் போகப்போவதில்லை என பவித்ரா அறிவித்துவிட்டாள். ஆனால், அவள் சினிமா மோகம் இம்மியும் குறையவில்லை. வயதுக்கு வந்தபின் சினிமாவுக்குப் போகக் கூடாது என மாதம்மாள் தடை போட்டாள். பவித்ரா அதை ஒப்புக்கொள்ளவில்லை. ஜம்பு புளிய விளாரால் அவள் கால்களுக்குக் கீழே வீறினான். மாதம்மாள் கணவனைத் தடுத்தாள். “வேண்டாம், அவள் இஷ்டப்படி விடுங்க” என்றாள்.
   மகளை மடியில் சாய்த்துக்கொண்டு ரத்தம் கன்றிய கால்களை நீவி விட்டாள்.  “பவித்ரா, நமக்கு எதுக்கும்மா இந்த ஆசையெல்லாம்? குல நாசம் வந்து சேரும். மானம் மரியாதை போயிரும். கடவுள் கொடுத்த இந்த அழகெல்லாம் விகாரமாப்போயிடும். சொன்னா கேளு. சினிமாங்கறது வெறும் காமக் கூத்து. அதிலே வேற ஒண்ணும் கிடையாது. அதுக்கு நீ பலியாகணுமா?”

   பவித்ரா எதுவும் பேசவில்லை. அவளின் அழகான கண்களில் இருந்து பரிசுத்தமான கண்ணீர்த் துளிகள் உருண்டு விழுந்தன.

   “சரி இனிமே முதலாட்டத்துக்குப் போக வேண்டாம். படம் முடிஞ்சி வர நேரமாயிடும். என்னால வயித்தில நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்க முடியாது. பகல் காட்சிக்குப் போ” என அனுமதியளித்தாள்.
   மாரியம்மன் கோவிலுக்குப் போய் `மகளை இந்தப் பைத்தியக் காரத்தனத்தில இருந்து மீட்டுக் கொடம்மா தேவி. நான் கன்ன அலகு குத்தி உன் கோயிலை வலம் வர்றேன்’ என மாதம்மாள் வேண்டிக்கொண்டாள்.
   பட்டுப் பாவாடை தாவணி கட்டி பவித்ரா ருக்மணியுடன் கணபதி டாக்கீசுக்குப் படம் பார்க்கப் போனால், தியேட்டரின் வண்ணமே மாறியது. அந்தப் படத்தில் நடித்த நடிகையே படம் பார்க்க வந்ததுபோல் காட்சிக்குக் காட்சி விசில் சத்தத்தால் திமிலோகப்பட்டது கொட்டகை.

   அந்த வருடம் கோயில் விழாவில், நீண்ட நாள்களுக்குப் பிறகு, வாணியம்பாடி சுலோசனாவின் `வள்ளி திருமணம்’ நாடகத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சுலோசனா தங்குவதற்கு ஜம்பு வீட்டில்தான் ஏற்பாடு ஆகியிருந்தது. சுலோசனாவின் நடிப்பில் மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஜம்பு, மாதம்மாள் இருவருக்கும் சுலோசனாவை மிகவும் பிடிக்கும். அவள் தங்கள் வீட்டில் வந்து தங்குவதைப் பெரும்பேறாய் நினைத்தார்கள்.

   பண்டிகை இரவு சுலோசனா கோஷ்டிக்கு என, விசேஷமாய் விருந்து தயாரானது. கூட்டும் பொரியலும் வடை பாயசமும் வீடே மணத்தது. சாயந்திரம் நாடகக்காரர்களின் குதிரை வண்டிகள் வீட்டு வாசலில் வந்து நின்றன. சுலோசனா வண்டியிலிருந்து இறங்கினாள். கணவன் மனைவி இருவரும் கைகூப்பி வரவேற்றார்கள்.

   மாதம்மாள் அவளையே வைத்த கண் வாங்காது பார்த்தாள். சுலோசனாவும் எதிர்பாராத ஏதோ ஒன்றைக் கண்டது போல மாதம்மாளைப் பிரமிப்புடன் பார்த்தாள். மாதம்மாளின் பார்வையைப் பார்த்து அவளுக்கு வெக்கமாய் இருந்தது. “அக்கா என்னை ஏன் அப்படிப் பாக்கறீங்க, நான் அல்லவா உங்களை அப்படிப் பார்க்க வேணும்?” எனக் கூச்சத்துடன் அவள் கைகளைப் பற்றிக்கொண்டாள். அப்போது அங்கு வந்த பவித்ராவைப் பார்த்து சுலோசனாவுக்கு உலகம் கீழ்மேலாய்ச் சுழன்றது. “அக்கா இது உங்க மகளா?” என்றாள். ஏனோ அவள் கண்களில் நீர் எட்டிப் பார்த்தது.  பவித்ரா ஜென்ம ஜென்மமாய்ப் பழகியவளைப் போல சுலோசனாவின் கைகளைப் பற்றிக் கொண்டாள்.

   வீட்டில் வறுத்து அரைத்த காபிக்கொட்டைத் தூளைப் போட்டு, கறந்த பாலில் எல்லோருக்கும் முதலில் காபி வைத்துக் கொடுத்தார்கள். மேளக்காரர் பிரபுலிங்கம் “அம்மா இந்தக் காபி போதும், சம்பளமே வேணாம்” என்றார்.

   பவித்ரா மான்குட்டியைப்போல சுலோசனாவிடமே உட்கார்ந்துகொண்டாள். வந்ததிலிருந்தே கேட்டுவிட வேண்டும் என வாய்க்குள்ளேயே சுழன்றுகொண்டிருந்த கேள்வியைக் கேட்டாள். “அக்கா, நீங்க ஏன் சினிமாவுல நடிக்கப் போகலை?”

   சுலோசனா வசீகரமாய்ச் சிரித்தாள்.  “சினிமாவுல நடிக்கலாம் வான்னு என்னை எப்பவோ கூப்பிட்டாங்க. எனக்கு என்னவோ அது பிடிக்கலை. ஆயிரம் ஜனங்களுக்கு முன்னால நடிக்கறதுக்கு ஈடாகுமா அது?” என்றாள். அப்போ “அக்கா, உங்களுக்கு சினிமா எடுக்கறவங்களை யெல்லாம் தெரியுமா?” எனக் கேட்டாள். அவள் கண்களிலிருந்து ஒளிமிகுந்த பட்டாம்பூச்சிகள் பறந்தன. சுலோசனா அந்த ஒளியைக் கண்டு பிரமித்தாள். “ஏன் தெரியாம, ‘மேனகையின் காதல்’ படம் எடுத்த பூபதி ராஜா, ‘நீ எப்போ சினிமாவுல நடிக்க வர்றே. உனக்காகவே நான் ஒரு கதை பண்ணி வச்சிருக்கேன்’னு பாக்கும்போதெல்லாம் சொல்லிக்கிட்டே இருப்பார். மெட்ராஸ்ல நாடகம் போட்டா ஒரு நாலு டைரக்டர்ங்களாவது வந்து சினிமாவுல நடிக்க வான்னு கூப்பிடுவாங்க. ஆனா, எனக்குதான் அதுல இன்னும் ஆசையே வரலை’’ என்றாள்.
    நடிப்பு, சினிமா என இருவரும் மெய்மறந்து பேசுவதைக் கேட்க மாதம்மாளுக்கு சங்கடமாய் இருந்தது.  மகளை இந்தப் பக்கம் வரும்படி கூப்பிட்டாள்.

    உணவு எல்லோரும் அளவாகத்தான் சாப்பிட்டார்கள். இரவு விடிய விடிய கண் விழிக்க வேண்டும். நன்றாகச் சாப்பிட்டால் தூக்கம் வந்துவிடும் என்றார்கள்.

   சாப்பிட்டு முடித்து, கூடத்தில் உட்கார்ந்த சுலோசனா திடீரெனக் கேட்டாள்.  “பவித்ரா, எங்கூட மேடையில தோழியாய் நிக்கிறியா? வசனம் எல்லாம் பெரிசா இல்லை” என்றாள்.

   அதைக் கேட்டதும் மாதம்மாளுக்கு நெருப்பை வாரிக் கொட்டினாற்போல இருந்தது.  ‘என்ன காரியம் செய்துவிட்டோம். ராஜநாகத்துக்கு அல்லவா பால் வார்த்துவிட்டோம்’ என நினைத்தவளாய், ‘`சுலோசனா, என்ன சொன்னே?’’ எனக் கத்திவிட்டாள்.

   சுலோசனா அவளை ஆச்சர்யமாய்ப் பார்த்தாள். மெள்ள  அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. “அக்கா எம்மேல கோவிச்சிக்கிட்டியா? தப்பு, கேட்டது தப்பு, மன்னிச்சிக்க” என்றாள். ஆனால் பவித்ரா, “அக்கா கூடதானே நிக்கப்போறேன். நானும் வர்றேன்” என்றாள்.

   மாதம்மாளின் உடல் நடுங்கியது. யோசிக்காமல் சுலோசனாவின் காலில் விழுந்தாள். சுலோசனா தீயில் விழுந்ததைப்போலப் பதறிப் போனாள். “அக்கா, என்ன காரியம் செஞ்சீங்க. ஐயோ நான் பாவி” என அழ ஆரம்பித்துவிட்டாள்.

   சட்டெனத் தன்னைத் தேற்றிக்கொண்டு, “அக்கா, நீங்க கவலைப் படாதீங்க. பவித்ரா என்னைக்கும் உங்க மகளா மகாராணியா இருப்பா” என்றாள்.

    பவித்ராவின் தலையை ஆதுரமாய்த் தடவி, “வேண்டாம் கண்ணே, என் வாயில தெரியாத்தனமா அந்த வார்த்தை வந்திடுச்சு. போம்மா, உனக்கு அதெல்லாம் வேண்டாம்” என்றாள்.

    அன்றிரவு நாடகம் பார்க்க மாரியம்மன் கோயில் மைதானம் முழுவதும் ஜனக்கூட்டமாய் நிறைந்திருந்தது.  சுலோசனாவின் ஒவ்வொரு வார்த்தைக்கும் சிரிப்புக்கும் இளவட்டங்களின் விசில் சத்தம் காதைப் பிளந்தது. பவித்ராவின் மனம் எங்கெங்கோ மிதந்தது. அவளுக்குள் புதிய புதிய சிந்தனைகள் உயிர் பெற்றன. எதிர்காலத்தைப் பற்றிய சித்திரம் வலிமையாய் உருக்கொண்டது. மறுநாள் நாடக கோஷ்டி கிளம்பும்போது, பவித்ரா சுலோசனாவின் கையைப் பிடித்துக்கொண்டு, “அக்கா நானும் உன்னை மாதிரி நடிகையாகப்போறேன், சினிமாவில் நடிக்கப்போறேன். என்னைக் கூட்டிக்கிட்டுப் போ” என்றாள்.

   சுலோசனா அவள் கைகளை ஆதுரமாய்ப் பற்றிக்கொண்டு, “இதெல்லாம் கனவு கண்ணே, ஒருநாள் எல்லாம் மாறிடும். தீயில் விழும் விட்டில் பூச்சியாய் இதிலே விழுந்திடாதே. அம்மா சொல்றதைக் கேள். அம்மாவின் மனம் நோகும்படி நடந்துகொள்ளாதே” என்றாள்.

   மாதம்மாளுக்கு உயிரே போய்விட்டதைப்போல இருந்தது. மகளை எந்த அளவுக்கு விட்டுவிட்டோம். இனியும் இவள் போக்குக்கு விடக்கூடாது என நினைத்துக்கொண்டாள். பவித்ரா எக்காரணம் கொண்டும் இனி சினிமாவுக்குப் போகக் கூடாது என, வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டாள்.

   ஒரு வாரம் போனது. அன்று வெள்ளிக் கிழமை காரிப்பட்டியில் சந்தை வியாபாரத்தை முடித்துக்கொண்டு இரவு எட்டு மணிக்குமேல் மாதம்மாள் வீட்டுக்கு வந்தாள். ஜம்பு எரு ஓட்ட வண்டி கட்டிக்கொண்டு ஒடுவன்குறிச்சி போனவன் இன்னும் வரவில்லை. ருக்மணியும் வீட்டில் இல்லை.

   மாதம்மாளுக்கு என்னவோ வித்தியாசமாய்த் தெரிந்தது. அடிவயிற்றில் பயம் உருண்டது. ‘பவித்ரா’ எனச் சத்தம் போட்டுக்கொண்டே வீட்டுக்குள் போனாள். வீடு ஆள் அரவமின்றிக் கிடந்தது.

   பவித்ராவைக் காணவில்லை. ‘இதென்ன மோசம். பாவிப் பெண் இப்படிப் பழி கொண்டு வந்தாளே’ என உடைந்துபோய் உட்கார்ந்துவிட்டாள். ‘பவித்ரா எங்கே போனே? உன்னை எங்கே தேடுவேன்?’ எனப் பைத்தியம் பிடித்தது மாதிரி பிதற்றிக்கொண்டி ருந்தாள். ஜம்பு உரக்குழியில் சாணத்தை இறக்கிவிட்டு வீட்டுக்கு வந்தான். மாதம்மாள் தலை தலையாய் அடித்துக் கொண்டு, பவித்ரா காணாமல் போன செய்தியைச் சொன்னாள்.

   ஜம்பு இடிந்து விழுந்தான். “அடிப்பாவி, பிள்ளைய ஒழுங்கா வளக்காம இப்படி நாசம் பண்ணிட்டியேடி” என இடுப்பில் கட்டியிருந்த தோல் பெல்ட்டைக் கழற்றி வீறினான். மாதம்மாள் கூப்பிய கைகளோடு அடிகளை வாங்கிக்கொண்டாள்.  “என்னை அடிச்சுக் கொன்னுடுங்க” எனக் கண்களை மூடிக் கொண்டாள்.

   அன்றிரவு எப்படிப் போனதோ எங்கே போனதோ தெரியவில்லை. ஜம்பு விடியற்காலையில் வண்டி கட்டச் சொன்னான். “ஊர் ஊராய் போய்த் தேடுவோம், போலீசில சொல்லுவோம்” என்றான்.

   ஆனால், பொழுது புலரும் முன்பே சுலோசனாவின் குதிரை வண்டி வீட்டு வாசலில் வந்து நின்றது. பவித்ரா அதிலிருந்து இறங்கினாள். பின்னாலேயே சுலோசனா இறங்கினாள். மாதம்மாள் ஓடிப்போய் மகளைக் கட்டிக் கொண்டாள்.

   சுலோசனா சங்கடம் தோய்ந்த குரலில் மெள்ளச் சொன்னாள். “அக்கா, இந்தப் பிறவிய மாத்த முடியாது. அவளை அவ இஷ்டத்துக்கு விட்டுடு”. “அவ இஷ்டத்துக்கா விட? நான் உயிரோட இருக்கிறவரைக்கும் நடக்காது. இவளைக் கண்டந்துண்டமாய் வெட்டிப் போட்டாலும் போடுவேன். சினிமாவுல நடிக்க விட மாட்டேன்” என்றாள்.

   “ஏய் பவித்ரா, என்னடி சொல்ற, ஒழுங்க இருக்கிறியா இல்லை செத்துப் போறியா?” என்று மகளைப் பார்த்துக் கேட்டாள். மாதம்மாளின் கண்களில் தீக்கங்குகள் காந்துவதை அப்போதுதான் பவித்ரா முதன் முதலாகப் பார்த்தாள். பயமாய் இருந்தது. “அம்மா, இனிமே நான் உன் பேச்சைக் கேட்டு ஒழுங்கா இருக்கேம்மா” என்றாள். பிறகுதான் அந்த வீட்டில் நிம்மதியின் இளம்காற்று வீசியது. தன்னுடைய வேண்டுதலை அம்மன் நிறைவேற்றிவிட்டாள். ‘அடுத்த ஆண்டு பண்டிகையில் சொன்னபடி கன்ன அலகு குத்திக் கொள்கிறேன் தாயே பராசக்தி’ என, மாரியம்மன் கோயில் இருந்த திசையில் கையடுத்துக் கும்பிட்டாள். எல்லாம் ஒரு வாரம்தான். அடுத்த வாரமே பவித்ரா மீண்டும் காணாமல் போய்விட்டாள். இந்த முறை அவள் சுலோசனா வீட்டுக்குப் போகவில்லை. மெட்ராஸ் போகும் சாயந்திர ரயிலில் அவள் ஏறியதைப் பார்த்ததாகச் சிலர் சொன்னார்கள்.

   இருவரும் பைத்தியம் பிடித்ததுபோல் ஆனார்கள். மாதம்மாள் சந்தைக்குப் போகவில்லை. அரிசி மூட்டைகள் விற்காமல் அடுக்கியபடியே கிடந்தன. மாதம்மாளின் கண்கள் ஒளி குறைந்து சூனியம் குடிகொண்டது. வெறுமையும் ஏக்கமும் பீடித்தவளானாள். அவளை அப்படிப் பார்க்க ஊருக்கே சகிக்கவில்லை.

   ஒரு வாரம் கழித்து பவித்ரா வந்தாள். தான் மெட்ராஸ் போயிருந்ததாகவும், அம்மன் கருணையினால் தனக்குத் துன்பம் எதுவும் நேரவில்லை என்றும் சொன்னாள். மாதம்மாளுக்கும் ஜம்புவுக்கும் மகள்மீது இருந்த பற்று விட்டுப்போனது. யாரோ எவரோ போல் அவளைப் பார்த்தார்கள். அவள் சொன்னதை மௌனமாகக் கேட்டார்கள். பவித்ரா சென்னையில் ஒரு நாடக ஆசிரியரிடம் சேர்ந்துவிட்டதாகச் சொன்னாள். அவர் அவளுக்கு முறையாகப் பயிற்சி கொடுத்து, சினிமாவில் சேர்த்துவிடுவார் என்றாள்.

   ஆக, பவித்ரா திரும்பவும் போய்விடுவாள் என்பது உறுதியாகத் தெரிந்த பின், “இதைச் சொல்லத்தான் இங்கே வந்தியா? நீ அங்கேயே போயிரு. திரும்ப வந்து எங்க முகத்தில விழிக்காதே” எனக் கையெடுத்துக் கும்பிட்டாள் மாதம்மாள். பவித்ரா அன்றிரவே மீண்டும் மெட்ராஸுக்குக் கிளம்பிவிட்டாள். அதற்குப் பின் அவளைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை.

   மாதம்மாள், ஜம்பு இருவரும் மெள்ள மெள்ள தங்களைத் தேற்றிக்கொண்டார்கள். கடவுளின் சித்தத்தைத் தாங்கள் எப்படி மாற்ற முடியும் என்றார்கள். தங்களுக்கு வாரிசு எதுவும் இல்லை என்றும் சொத்துகளைக் கோயிலுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் எழுதி வைக்கப்போவதாகச் சொன்னார்கள்.

   மாட்டு வண்டிகள் மீண்டும் அதிகாலையில் சந்தைகளுக்குக் கிளம்பின. பழையபடியே நெளிநெளியான கூந்தலை எண்ணெய் வைத்துப் படியச் சீவி ஜடை போட்டு, தலைநிறைய மல்லிகைப் பூவைச் சூடிக் கொண்டு மாதம்மாள் வியாபாரத்துக்குக் கிளம்பிவிட்டாள். ஆனாலும், அவள் இப்போது வேறொரு மாதம்மாளாய் இருந்தாள். அவள் நடவடிக்கைகளுக்குப் பின்னால் மெல்லிய சோகத்தின் நிழல், விலக்க முடியாமல் படிந்திருந்தது.

   அந்த ஆண்டு புரட்டாசியில் நல்ல மழைக்காலமாய் இருந்தது. எல்லாக் கிணறுகளும் தரை மட்டத்துக்கு நிரம்பின. வயல்களில் எல்லாம் வெள்ளாமை செழித்துக் கிடந்தது. மக்கள் வேலை வேலை எனப் பறந்தார்கள். புரட்டாசியைத் தொடர்ந்து வந்த ஐப்பசியிலும் மழை தொடர்ந்தது என்றாலும், அந்த ஆண்டு தீபாவளி சிறப்பாய் இருந்தது.

    தீபாவளிக்கு வந்த `மின்னல் மோகினி’ படத்தில் பவித்ரா நடித்திருப்பதாய் ஊரெல்லாம் ஒரே பேச்சாய்க் கிடந்தது. ‘மின்னல் மோகினி’ படம் சேலத்தில்தான் ஓடியது.

   மாதம்மாளைப் பார்த்தவர்கள் எல்லாம் ‘உங்க பொண்ணு நடிச்ச படம் வந்திருக்குதே, நீங்க பாத்தீங்களா?’ என்று கேட்டார்கள். அவள் புன்னகை ஒன்றையே பதிலாகச் சொன்னாள்.

   சேலம் ஓரியண்டல் தியேட்டரில் நூறு நாள்களுக்கும் மேல் ஓடி, அதற்குப் பின் தான் கணபதி டாக்கீசுக்கு ‘மின்னல் மோகினி’ வந்தது. ஊரெல்லாம் போஸ்டர் ஒட்டியிருந்தது. மாதம்மாள் அதில் பவித்ராவின் படம் இருக்கிறதா எனப் பார்த்தாள். அப்படி எதுவும் இல்லை.

   குதிரை வண்டியில் ரேடியோ கட்டிக் கொண்டு, ‘நம்ம ஊர்ப் பொண்ணு நடிச்ச மின்னல் மோகினி படம் பார்க்க, மக்களே வாரீர்! வாரீர்!’ எனக் கூவினார்கள்.

   கணபதி டாக்கீசில் அன்று எம்.ஜி.ஆர். படத்துக்கு வரும் கூட்டத்தைவிட அதிகமான கூட்டம் வந்திருந்தது. உட்கார்ந்து பார்த்தவர்கள் அளவுக்கே நின்றுகொண்டு படம் பார்த்தவர்களின் கூட்டமும் இருந்தது.

   திரையில் தெரிந்த முகங்களை எல்லாம் மக்கள் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு பார்த்தார்கள். வெகு நேரமாக அந்தப் பெண்ணைக் காணவில்லை. ஒருவேளை பொய்யோ என மக்கள் யோசிக்க ஆரம்பித்தபோது, திரையில் ராணிக்கு அருகே, அந்தத் தெரிந்த முகம், உள்ளூர் முகம் பவித்ரா தோன்றினாள். தியேட்டரே இடிந்து விழும் அளவுக்கு விசிலும் கைத்தட்டலும் பறந்தது. அவ்வளவுதான்! அதற்குப் பின் எந்த சீனிலும் அவள் வரவில்லை. கணபதி டாக்கீசிலேயே அந்தப் படம் முப்பது நாள் ஓடியது. அதற்குப் பிறகு வந்த படங்களில் எல்லாம் மக்கள் பவித்ராவைத் தேடினார்கள். கூட்டத்தில் ஒருத்தியாய் தோழிகளில் ஒருத்தியாய் அவள் தென்படக்கூடும் என எதிர்பார்த்தார்கள்..

   இரண்டு மூன்று ஆண்டுகள் இப்படியே ஓடிவிட்டன. மக்கள் மெள்ள மெள்ள பவித்ராவை மறந்துபோனார்கள்.

   ஒருநாள் திடீரென்று பவித்ரா ஊருக்கு வந்தாள். அவள் உடல் நோயினால் பீடிக்கப்பட்டதைப் போல இருந்தது. சரியான உணவில்லாதவளைப்போல போஷாக்கின்றி, மகிழ்ச்சியற்று இருந்தாள். ஆனாலும் உற்சாகமாகப் பேசினாள்.

   மாதம்மாளின் கால்களைக் கட்டிக்கொண்டு அழுதாள். “அம்மா, என்னை ஏத்துக்க” என்று கதறினாள். மாதம்மாள் காதில் அது ஏறவே இல்லை. ஜம்பு மகளைப் பார்த்துக் கண்கலங்கினார். அருகில் அழைத்து நெற்றியில் முத்தமிட்டு,  “இப்படிச் செய்யலாமா அம்மா, எங்களுக்கு ஏன் இவ்வளவு பெரிய தண்டனை?” என அழுதார்.

   அன்றிரவே அவள் கிளம்பிவிட்டாள்.

   மேலும் இரண்டு வருடங்கள் கழித்து  பவித்ரா கதாநாயகியாய் நடித்த `மாமியார் மருமகள்’ என்ற படம் திரைக்கு வந்தது.

   போஸ்டர்களிலேயே பவித்ரா அவ்வளவு அழகாய் இருந்தாள்.

   காதலித்துத் திருமணம் செய்துகொண்ட பெண், மாமியார் கொடுமைக்கு ஆளாகி, பின் தெளிவு பெற்று, திட்டமிட்டு மாமியாரின் கர்வத்தை அடக்கி அவளை வழிக்குக்கொண்டு வருவதுதான் படத்தின் கதை.
   அதில் பவித்ரா அவ்வளவு அற்புதமாய் நடித்திருந்தாள். உண்மையான கிராமத்து மருமகளைக் கண் முன் நிறுத்தினாள். படம் வெளியான தியேட்டர்களில் எல்லாம் சக்கைப்போடு போட்டது. பெண்களின் கூட்டம் தியேட்டர்களில் குவிந்தது.

   கணபதி டாக்கீசுக்கும் ‘மாமியார் மருமகள்’ படம் வந்தது. குதிரை வண்டி விளம்பரம் மக்களைக் குதூகலமடையச் செய்தது. `நம் ஊர்ப் பெண், பெண் குலம் போற்றும் ஒப்பற்ற பாத்திரத்தில் நடித்த மாமியார் மருமகள் படத்தைக் காண இன்றே வாருங்கள்.’

   மாதம்மாளையும் ஜம்புவையும் பார்க்க எங்கெங்கிருந்தோ யார்யாரெல்லாமோ வண்டி கட்டிக் கொண்டு வந்தார்கள். ஜம்புவின் முகத்தில் பழைய சிரிப்பு வந்தது. மாதம்மாள் முகத்திலும் சிரிப்பு இருந்தது. ஆனால் இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. ‘மகளை ஊருக்குக் கூட்டிக்கொண்டு வாருங்கள்’ என வந்தவர்கள் எல்லாம் கேட்டுக்கொண்டார்கள். ஜம்புவுக்கு ‘ஆகட்டும், பார்க்கலாம்’ என்று சொல்லிச் சொல்லி வாய் வலித்தது.

   மாதம்மாள் வழக்கம்போல விடியற்காலையில் வண்டி கட்டிக்கொண்டு அரிசி மூட்டைகளோடு சந்தைக்குப் போனாள். வழியில்தான் ‘கணபதி டாக்கீஸ்’ இருந்தது. தியேட்டருக்கு முன்னால் ஒட்டியிருந்த போஸ்டர் வெகுதூரத்திலிருந்தே தெரிந்தது.

   வண்டியோட்டி முத்து, தியேட்டருக்கு முன்னால் வண்டியை நிறுத்தி போஸ்டரைப் பார்த்தான். மலர்ந்த முகத்தோடு மாதம்மாளைப் பார்த்தான். மாதம்மாள் `வண்டியை வேகமா விடப்பா, சந்தைக்கு நேரமாகுது’ என்றாள். அவள் கண்களில் எந்தச் சலனமும் இல்லை.

   போஸ்டரில் மாமியாரின் கொடுமை தாங்காமல் பவித்ரா அழுதுகொண்டிருந்தாள். அது மாதம்மாளைப் பார்த்து அழுவதைப் போலவே முத்துவின் கண்களுக்குத் தெரிந்தது.
   https://www.vikatan.com
  • By நவீனன்
   கண்ணாடி
   ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி
    

   பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றின் தலைமை உதவி ஆசிரியரும், சினிமா ஆர்வலருமான `கே.கே.எம்’ என்று அழைக்கப்படும் கவுண்டனூர் கே.மூர்த்தி (55), முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை இன்று காலை உடைத்துவிட்டார். ஆனால், அவரோ இதை மறுக்கிறார். அதை அவர் உடைக்கவில்லை என்றும், கண்ணாடியே தானாகக் கீழே விழுந்து உடைந்துவிட்டதாகவும் சொல்கிறார்.

   வீட்டில் யாரும் இல்லாதபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளதால் உறுதியாக எதையும் சொல்ல முடியவில்லை. அவர் பத்திரிகையாளர் என்றாலும் இந்தச் சின்ன விஷயத்தில் பொய் சொல்ல மாட்டார் என்றே நம்பப்படுகிறது.

   சென்னை கோயம்பேட்டை அடுத்த நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன். இவரது மனைவி சுதா. இவர்களது உறவினர்தான் மூர்த்தி. இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், சம்பளமற்ற விடுப்பில் - பரோலில் அல்ல - வெளியே வந்து, இங்கு தங்கி கடந்த சில நாட்களாகச் சிகிச்சை பெற்றுவருகிறார். அப்போதுதான் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

   இந்தச் சம்பவத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்போல காணப்பட்ட அவர் நம் செய்தியாளரிடம் கூறியது: “கண்ணாடி கீழே விழுந்து நொறுங்கியதும், நான் கால்களை அசைக்காமல் அதே நிலையில் அமர்ந்திருந்தேன். கண்ணாடிச் சில்லுகள் பாதங்களைப் பதம் பார்த்துவிடும் என்பதால் மட்டுமல்ல, கண்ணாடி விழுந்த விதம் என்னை வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியிருந்தது. என் கண்ணெதிரிலேயே மாடியிலிருந்து விழுந்து ஒருவன் தற்கொலை செய்துகொண்டதுபோல அது இருந்தது. அதன் சட்டகம்கூட அப்படித்தான் கவிழ்ந்திருந்தது. அதைச் சுற்றி ரத்தம் தெறித்துக்கிடந்ததுபோல ரசம் பூசப்பட்ட கண்ணாடிகள் சிதறி இருந்தன.

   தகரத்தால் ஆன அந்தச் சட்டகத்தை எடுத்துப் பார்த்தேன். அதில் இரண்டு சில்லுகள் மட்டும் ஒட்டிக்கொண்டிருந்தன. சட்டகத்தை தரையில் தட்டி அவற்றையும் உதிர்த்துவிட்டு சுவரில் சாய்த்து வைத்தேன். பாதத்தை அசைக்காமல் எழுந்து நின்று நாற்காலியைப் பின் பக்கமாக இழுத்துப் போட்டு உட்கார்ந்துகொண்டேன். வெறுமையுடன் இருந்த சட்டகத்தையும், சிதறிக்கிடந்த கண்ணாடிச் சில்லுகளையும் பார்த்துக்கொண்டு சங்கடமான மனநிலையில் அமர்ந்திருந்தேன். இந்தச் சம்பவம் என்னுடைய சிறு வயதில் நடந்த ஒரு சம்பவத்தை ஞாபகப்படுத்திவிட்டது” என்றார். அந்தச் சம்பவத்தை பின்வருமாறு அவர் விவரித்தார்...

   “சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சம்பவம் அது. அப்போது எனக்கு பதினோரு வயது. ஆறாம் வகுப்பு பரீட்சை எழுதிவிட்டு கோடை விடுமுறையைக் கழிக்க சென்னைக்கு அருகே உள்ள பெரிய
   பாளையத்துக்கு வந்திருந்தேன். என் தாய் மாமா வீட்டில் தங்கியிருந்தேன். என் நச்சரிப்பு தாங்காமல் அம்மாதான் கொண்டு வந்து விட்டுப் போயிருந்தார்கள். ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும் நான் மாமா வீட்டுக்கு வருவது வழக்கம்தான். கிராமத்திலேயே, அதுவும் நிலத்தில் தனித்திருந்த வீட்டில் பிறந்து வளர்ந்தவன் என்பதால், இந்த ஊர் எனக்கு ஆச்சர்யங்களை அளித்தது. அதுவும் இல்லாமல் இங்கு உடன் விளையாடுவதற்கு நிறையச் சிறுவர்கள் இருந்தார்கள். அவர்களுடைய பழக்கவழக்கங்களும், விளையாட்டுகளும், அவர்கள் சேகரித்துவைத்திருந்த பொருள்களும் வினோதமாக இருந்தன.

   அதே தெருவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் ஒரு சின்ன சினிமா புரொஜெக்டரையும், நிறைய படச்சுருள்களையும் வைத்திருந்தான். அவனுடைய அப்பாவும் அம்மாவும் வேலைக்குப் போன பிறகு - அவர்கள் ஆசிரியர்களாக இருந்தார்கள் - அவன் வீட்டுச் சுவரில் படம் காண்பிப்பான். கையில் இயக்கும் அந்த புரொஜெக்டரில் ஒரு மின்விளக்கு இருக்கும். அன்று மின்சாரம் தடைபட்டிருந்ததால் வெளிச்சத்துக்கு சூரிய ஒளியைப் பயன்படுத்த முடிவு செய்தோம். வெளியே பொழியும் சூரிய ஒளியை திசை திருப்பி ஜன்னல் வழியாக உள்ளே அனுப்ப வேண்டும். அதற்கு முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்று தேவைப்பட்டது. அதுபோல் கையில் எடுக்கும்விதமாக சிறு கண்ணாடி எதுவும் அவன் வீட்டில் இல்லை. என்னைக் கொண்டுவரச் சொன்னான். நானும் மாமாவின் மனைவியிடம் கெஞ்சிக் கேட்டு வாங்கிக்கொண்டு போனேன். அந்தப் பையனின் உத்தரவுப்படி, ஜன்னலுக்கு வெளியே இருந்து உகந்த கோணத்தில் கண்ணாடியைத் திருப்பிக்கொண்டிருந்தேன். அப்போது அது என் கையிலிருந்து கீழே விழுந்து நொறுங்கியது.

   இந்தச் சம்பவம் மாமா வீட்டில் பெரிய பிரளயத்தையே உண்டு பண்ணிவிட்டது. மாமாவின் மனைவி கொதித்தெழுந்துவிட்டாள். என் மீதான வெறுப்பையெல்லாம் கொட்டித் தீர்த்துவிட்டாள். நான் வந்து அங்கே தங்கியிருப்பது அவளுக்குப் பிடிக்கவில்லை என்பதை உணர்த்தும்விதமாக அது இருந்தது. மாமா அலுவலகத்திலிருந்து வந்ததும் இந்தப் பெரிய அநியாயத்தை அவரிடம் முறையிட்டாள். அவளைப் பற்றி தெரியுமென்பதால் அவர் இதைப் பெரிதுபடுத்தவில்லை. ஆனால், அந்த ஞாயிற்றுக்கிழமையே என்னை கிராமத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டார். இந்தச் சம்பவத்தை அம்மாவிடம் சொன்னதும், பகை முற்றி அம்மாவுக்கும் அந்தப் பெண்மணிக்கும் பேச்சுவார்த்தையே முறிந்துபோனது. மாமாதான் வீட்டுக்கு வந்து போய்க்கொண்டிருந்தார். மாமா இப்போது உயிருடன் இல்லை. சங்கடம் என்னவென்றால் இப்போது நான் தங்கியிருப்பது அந்த மாமா மகன் ஜெகனுடைய வீடு.”

   மேலும் அவர் சொன்னார், “ஜெகனும் அவனுடைய மனைவியும் இப்போது அலுவலகம் போயிருக்கிறார்கள். அவர்கள் இருக்கும்போது உடைந்திருந்தால்கூட இவ்வளவு சங்கடம் ஏற்பட்டிருக்காது. அவர்கள் வந்ததும் இதைச் சொல்லாமல் இருக்க முடியாது. என்ன நடந்தது என்பதை அவர்களுக்கு விளக்க வேண்டும். அவர்களுக்கு என் மீது பிரியம் உண்டு. இந்தச் சின்னக் கண்ணாடி உடைந்ததற்காக அவர்கள் வருந்தப்போவதில்லை. வயதான ஒருவன், அதுவும் நோய்மையுற்ற நிலையில் தன் தவறுக்காக விளக்கம் அளிப்பது அவர்களுக்கு என் மீது அனுதாபத்தையே ஏற்படுத்தும். அதுவும் ஜெகனின் மனைவி ரொம்ப வருத்தப்படுவாள். காரணம் இரண்டு நாட்களுக்கு முன்புதான் இது போன்ற வேறொரு சம்பவம் நிகழ்ந்தது” என்றார் அவர்.

   “வழக்கமாக ஜெகன்தான் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வான். அன்று அவன் அலுவலகத்திலிருந்து வரத் தாமதமானதால், அவன் மனைவி என்னை அவளது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றாள். மருத்துவரைப் பார்ப்பதற்கு முன்னால் ரத்த அழுத்தமும் எடையும் பரிசோதிக்க வேண்டும். ரத்த அழுத்தச் சோதனை முடிந்ததும் எடை எந்திரத்தைக் காண்பித்தாள் செவிலி. பகட்டான அந்த நவீன மருத்துவமனைக்கு ஏற்ற நவீன எடை எந்திரமாக அது காணப்பட்டது. அதில் எடையைக் காட்டுவதற்கு முள்ளுக்குப் பதில் எண்கள் ஒளிர்ந்தன. அதில் எப்படி நிற்பதென்று எனக்குத் தெரியவில்லை. அதனால் நான் தயங்கினேன். இதற்கு முன் யாராவது அதில் எடை பரிசோதிக்கும் போது கவனித்திருக்க வேண்டும். ஆனால் நான் கவனிக்கத் தவறிவிட்டேன். ‘ஏறி நில்லுங்கள், ஒன்றும் ஆகாது’ என்று தைரியம் சொன்னாள் செவிலி. ஒரு பாதத்தை எடுத்து அதன் மேல் வைத்தேன். இன்னொரு பாதத்தை எடுத்துவைக்கும் போது அது ஒரு பக்கமாக மேலெழுந்தது. நான் அச்சத்துடன் பின்வாங்கி, வைத்திருந்த பாதத்தையும் அதிலிருந்து எடுத்துவிட்டேன். அப்போது ‘டப்’பென்று ஒரு சத்தம். அந்த எடை எந்திரம் சிறுசிறு துண்டுகளாக உடைந்து நொறுங்கிவிட்டது. நான் செய்வதறியாது கொஞ்சம் நேரம் திகைத்து நின்றுவிட்டேன். எனக்கு முன் எவ்வளவோ பேர் அதில் எடையைப் பரிசோதித்திருப்பார்கள், அதில் ஸ்தூல சரீரிகளும் இருந்திருப்பார்கள். அப்போதெல்லாம் உடையாத அந்த எந்திரம் - சுமார் 60 கிலோ எடை மட்டுமே உள்ள - நான் ஏறி நிற்கும்போது - நிற்கக்கூட இல்லை - ஏன் உடைந்தது? ராமனின் பாதங்களுக்காகக் காத்திருந்த அகலிகையைப்போல அது சாபவிமோசனம் பெற்றுவிட்டதா என்ன? ஏதோ துடுக்குத்தனம் செய்துவிட்டு மாட்டிக்கொண்ட ஒரு சிறுவன்போல நான் நின்றிருந்தேன். மருத்துவக் கட்டணத்துடன் அன்று எண்ணூறு ரூபாய் கூடுதலாக அழ வேண்டியிருந்தது” என்றார் மூர்த்தி.

   சிந்தனைவயப்பட்டவராகச் சிறிது நேரம் கண்களை மூடியிருந்துவிட்டுப் பிறகு கேட்டார், “கண்ணாடிக்கும் எனக்கும் அப்படி என்னதான் பகை?” அவரே பதிலும் சொன்னார், “ஏதோ இருக்கிறது. இல்லையென்றால், தொடர்ச்சியாக இப்படிச் சம்பவங்கள் நடக்காது. இப்போது மட்டுமல்ல, சில மாதங்களுக்கு முன்புகூட நடந்திருக்கிறது.”

   மேலும் இரண்டு சம்பவங்களை அவர் சொன்னார். அவையும் கேட்கச் சற்று வினோதமாகத்தான் இருந்தன.

   அவர் சொன்னார், “ஆரணி பேருந்து நிலையத்தில் நான் திருவண்ணாமலை செல்லும் அரசுப் பேருந்துக்காகக் காத்திருந்தேன். அது கோடைக்காலத்தின் ஒரு மதிய நேரம். வர வேண்டிய நேரத்தைக் கடந்தும் பேருந்து வரவில்லை. வருமா என்பதும் தெரியவில்லை. அதனால் சோர்வடைந்த நான், அப்போது புறப்பட்டுக்கொண்டிருந்த, போளூர் வரை செல்லும் ஒரு தனியார் பேருந்தில் ஏறி, பின் இருக்கையில் இடம்பிடித்து உட்கார்ந்தேன். உடனே பயணச்சீட்டைக் கிழித்துக் கொடுத்து என் வருகையை உறுதி செய்துகொண்டான் அதன் நடத்துனன். இருந்தும் என்னுடைய கவனமெல்லாம் அந்த அரசுப் பேருந்தின் மீதே இருந்தது. நான் பின்னால் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தேன். போளூர் போனால் திருவண்ணாமலை செல்லும் எந்தப் பேருந்திலும் உட்காருவதற்கு இடம் கிடைக்காது என்பது உறுதி. அன்று ஏனோ அவ்வளவு கூட்டம். பேருந்தில் ஏறி நேர்த்திக்கடன் செலுத்த வந்தவர்கள்போல எல்லோரும் கிளம்பி வந்திருந்தார்கள். பேருந்து புறப்பட்டு, மெல்ல நகர்ந்தது; நிலையத்தைவிட்டு யோசனையுடன் வெளியே வந்தது. அப்போது கடைசியாக ஒருமுறை பின்னால் திரும்பிப் பார்த்த போது அந்த அரசுப் பேருந்து வருவது தெரிந்தது. என் மனம் துணுக்குற்றது. அதே நேரம், வெடிச் சத்தம்போல ஒன்று கேட்டது. நான் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அந்த அரசுப் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி சிலந்தி வலை போல விரிசலுற்று உடைந்து நொறுங்கியது” என்றார் அவர். அந்தச் சம்பவத்தால் ஏற்பட்ட வியப்பு இன்னும் அவரிடம் அடங்கியிருக்கவில்லை என்பது அவரது முகத்தில் தெரிந்தது.

   சிறு அமைதிக்குப் பிறகு அடுத்த சம்பவத்தையும் அவர் சொன்னார், “விடுப்பில் வருவதற்கு ஒரு மாதத்துக்கு முன்புதான் அது நடந்தது. எங்கள் பத்திரிகை அலுவலகம் மூன்றாவது மாடியில் இருந்தது. அந்தக் கட்டடத்தின் முதல் மாடியில் ஒரு தனியார் வங்கி இயங்கி வருகிறது. அதன் நுழைவாயிலுக்கும், மேலே செல்லும் படிக்கும் மத்தியில், அந்த வங்கியின் ஏடிஎம் மையம் இருந்தது. வங்கிக்கும் அதற்கும் தனித்தனி காவலாளிகள். மாலையில் நான் அலுவலகம் செல்ல படி ஏறும்போது ஏடிஎம் மையக் காவலாளி வணக்கம் சொல்வான். அந்த நகரத்தில் அவ்வப்போது சாதிக் கலவரம் நடக்கும். குறிப்பாக எங்கள் அலுவலகம் இயங்கி வந்த பகுதியில்தான் அது தீவிரம் கொள்ளும். அதனால் அப்பகுதி எப்போதும் அரசாங்கத்தால் அறிவிக்கப்படாத பதற்றமான பகுதியாக இருந்தது. அப்படி கலவரம் நடந்த ஒருநாள் இரவு, எங்கிருந்தோ பறந்துவந்த ஒரு கல் அந்த ஏடிஎம் மையத்தின் கண்ணாடியைக் கச்சிதமாக உடைத்து நொறுக்கியது. இதனால் அந்தக் காவலாளி வருத்தத்தில் இருந்தான். ஒருநாள் என்னிடம் குறைபட்டுக்கொண்டான், “எந்த நாதேறுன்னுத் தெரியல, கண்ணாடிய ஒடைச்சிடுச்சி. ஒடைஞ்சி பத்து நாளு ஆவப்போவது இன்னும் கண்ணாடி போட்டுக்குடுக்க மாட்டேன்றாங்க” என்றான். அதற்குப் பிறகு ஒருநாள் பார்த்தபோது ஆட்கள் இரண்டு பேர் அதற்குப் புதுக்கண்ணாடியை பொருத்திக்கொண்டிருந்தார்கள். எனக்கு வணக்கம் சொன்ன காவலாளியின் முகத்தில் சந்தோஷக் களை தெரிந்தது. அதற்கு மறுநாள் இரவு அது. பணி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காகப் படி இறங்கி வந்தேன். அப்போது பணம் எடுக்கும் யோசனை வந்தது. ஏடிஎம் மையத்தின் கதவைத் திறந்துகொண்டு உள்ளே போனேன். அந்தக் காவலாளி உள்ளே ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தான். என்னைப் பார்த்ததும் “வெளிய ஊர்ப்பட்ட கொசு சார்” என்றான். அப்போதுதான் விளங்கியது கண்ணாடிக்காக அவன் ஏங்கியதன் ரகசியம். நான் பணம் எடுத்துக்கொண்டு திரும்பினேன். கதவை இழுத்துத் திறந்தபோது ஒரு சத்தம். கண்ணாடி நொறுங்கிக் கீழே கொட்டியது. எதன் மீதும் மோத வாய்ப்புஇல்லை. ஆனால் அப்படி நடந்தது. நான் திகைத்து நின்றுவிட்டேன். காவலாளி உடைந்த கண்ணாடியையும் என்னையும் பரிதாபத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். மறுநாள் அதற்காக மூவாயிரத்து ஐநூறு ரூபாயைத் தண்டமாகக் கொடுத்தேன்” என்றார்.

   சற்று யோசனையுடன் காணப்பட்ட அவர் சொன்னார், “இந்தக் கண்ணாடிகளைப் பார்த்தாலே இப்போது அச்சம் தட்டுகிறது. அதற்கும் எனக்கும் ஏதோ உறவிருப்பது போலத் தோன்றத் தொடங்கிவிட்டது. அது பகை உறவா, நல்லுறவா... தெரியவில்லை. ‘டின் டிரம்’ படத்தில் வரும் சிறுவனைப் போல என்னை உணரத் தொடங்கிவிட்டேன். உடல் வளர்ச்சி தடைபட்டுள்ள சிறுவன் அவன். புறக்கணிப்பையும், துரோகத்தின் வலியையும் சுமந்த அவன் எப்போதும் தன்னுடன் ஒரு டின் டிரம்மை வைத்திருக்கிறான். அவனுடைய ஒரே சந்தோஷம் அதை இசைப்பதுதான். அதை யாராவது அவனிடமிருந்து பிடுங்கும்போது அவனுக்கு ஆத்திரம் வரும். ஆவேசத்தில் அவன் வீரிடும்போது அவன் பார்வையில்படும் கண்ணாடிகள் எல்லாம் உடைந்து நொறுங்கும்... ‘ரன் லோலா ரன்’ படத்தில் கூட இதுபோன்ற சம்பவம் ஒன்று வருகிறது...”

   ஏதோ சித்தம் கலங்கியவர்போல அவர் காணப்பட்டார். பேச்சுக்கூட அப்படித்தான் இருந்தது. அவர் கேட்டார், “மனிதர்களின் ஆன்மாக்களுக்கும் கண்ணாடிகளின் ஆன்மாக்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? நாம்தான் அதை உணரத் தவறிவிட்டோமா?”

   “சமீபகாலமாக என் கனவுகளில்கூட கண்ணாடிகள் வருகின்றன. கண்ணாடியால் ஆன வீடு, கண்ணாடியால் ஆன அலுவலகம், கண்ணாடி பொம்மைகளாலும் பாட்டில்களாலும் நிறைந்த படுக்கையறைகள், கண்ணாடிச் சிதிலங்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் தெருக்கள், பனியாக உறைந்த நீர் நிலைகள், விரைத்த நிலையிலான மனித உடல்கள்... செய்தியாளர்களாகிய நாம் நடந்த சம்பவங்களை எழுதுகிறோம், ஏன் நடக்காத சம்பவங்களையும்கூட எழுதுகிறோம். ஆனால் கனவுகளை எழுதுவதுஇல்லை. அதற்கான மொழி நம்மிடம் இல்லை...”

   நம்பிக்கை வற்றிய ஏளனப் புன்னகை ஒன்று அவரிடம் வெளிப்பட்டது. அவர் கேட்டார், “இன்று காலையில் நடந்த சம்பவம், அதை நீங்கள் நம்பவில்லை இல்லையா? என்னுடைய தவறால்தான் அது உடைந்திருக்க வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள். அப்படிஇல்லை, என் தவறு எதுவும் இல்லை. ஜெகன் இன்று மாலை என்னை வேறு ஒரு மருத்துவரிடம் அழைத்துச் செல்வதாகச் சொல்லியிருந்தான். ஒரு வாரமாகச் சவரம் செய்யாததால், நரை தாடி அதிகம் வளர்ந்துவிட்டிருந்தது. முகத்தைப் பார்க்கவே சகிக்க முடியவில்லை. அது இன்னும் என்னைத் தீவிர நோயாளியாகக் காண்பித்தது. கணவன் மனைவி இருவரும் அலுவலகம் போன பிறகு சவரம் செய்துகொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தேன். வரவேற்பறையில் கைகழுவும் தொட்டிக்கு மேல் இருந்த கண்ணாடி அதற்கு உகந்ததாக இல்லை. ஜன்னல் வெளிச்சம் அதில் பிரதிபலித்ததால், முகம் சரியாகத் தெரியவில்லை. மேலும், அங்கு நின்றபடிதான் சவரம் செய்துகொள்ள முடியும். என்னால் அது இயலாது. அதனால் சின்னக் கண்ணாடி ஒன்றை அலமாரியிலிருந்து எடுத்து வந்து ஜன்னலில் மாட்ட முயன்றேன். அது நிற்கவில்லை. ஒரு வொயரைத் தேடி எடுத்துவந்து கண்ணாடியை ஜன்னல் கம்பியில் கட்டினேன். பிறகு பிளாஸ்டிக் நாற்காலி ஒன்றைக் கொண்டு வந்து ஜன்னலுக்கு எதிரே போட்டு உட்கார்ந்தேன். முகம் கண்ணாடியில் கச்சிதமாகத் தெரிந்தது. ஒரு மக்கில் தண்ணீரைக் கொண்டுவந்து வைத்துக் கொண்டு ரெடிமேட் ரேஸரால் சவரம் செய்யத் தொடங்கினேன். அந்த நிலை சௌகரியமாக இருந்தது. முகம் நரை நீங்கி பொலிவு பெற்றது. எல்லாம் முடியும் தருவாயில்தான் அது நடந்தது, கண்ணாடி மெல்ல இறங்கத் தொடங்கியது. நான் பார்த்துக் கொண்டிருக்கவே இறுகக் கட்டிய அந்த வொயரை அவிழ்த்துக்கொண்டு கண்ணாடி கீழே விழுந்தது; பல சில்லுகளாக உடைந்து நொறுங்கியது. நான் அதைத் தடுக்கவோ, கைகளை நீட்டி ஏந்திக்கொள்ளவோ செய்யாமல் உறைந்த நிலையில் அமர்ந்திருந்தேன். அது ஒரு குழந்தையின் விளையாட்டுப்போல இருந்தது. விழும்போது அதில் ஒரு சிரிப்புத் தோன்றி மறைந்ததையும் நான் பார்த்தேன்” என்றார் அவர்.  
   https://www.vikatan.com
  • By நவீனன்
   கனா கண்டேனடி..! - சிறுகதை
   ஜி.ஆர்.சுரேந்தர்நாத், ஓவியங்கள்: ஹாசிப்கான்
    
   அது, வித்தியாசமான ஒரு விடியற்காலை கனவு. கனவிலும் விடியற்காலைதான். மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயில் தெப்பக் குளத்துப் படிக்கட்டில் நான் அமர்ந்திருக்கிறேன். எனக்கு அருகில் 'பாட்டுப் பாடவா..?’ ஜெமினி கணேசன் உட்கார்ந்து, பொரி உருண்டையை உடைத்து, தெப்பக்குளத்து மீன்களுக்குப் போட்டுக்கொண்டிருக்கிறார். மீன்கள், கூட்டம் கூட்டமாக வந்து பொரிகளைத் தின்னும் காட்சி அற்புதமாக இருந்தது.
   'உன் பேர் என்ன?' என்றபடி ஜெமினி பொரி உருண்டை ஒன்றை என்னிடம் நீட்டுகிறார்.
   நான், ''ஸ்ரீராம்' என்றபடி வேகமாகப் பொரி உருண்டையை வாங்கி வாயில் வைத்துக் கடிக்கிறேன்.
   ''நீ திங்கிறதுக்கு இல்லை. மீனுக்குப் போடு. பறக்காவெட்டி...' என்று ஜெமினி கடுமையான குரலில் கூற... நான், ''ஸாரி...' என்றபடி பொரி உருண்டையை உடைத்து மீன்களுக்குப் போடுகிறேன்.
   ''உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சா?' என்கிறார் ஜெமினி.
   ''ஆயிடுச்சு சார்.'
   ''எத்தனை பொண்டாட்டி?' என்று ஜெமினி கேட்ட கேள்வியை நான் சரியாக உள்வாங்காமல், ''ஒரு பையன், ஒரு பொண்ணு. பையன் ப்ளஸ் ஒன் படிக்கிறான்; பொண்ணு நைன்த்...' என்கிறேன்.
   ''முட்டாள்... நான் 'உனக்கு எத்தனை பொண்டாட்டி?’னு கேட்டேன்' என்று ஜெமினி தன் குரலை உயர்த்த, நான் அதிர்ச்சியுடன், ''ஒரு பொண்டாட்டிதான்...' என்கிறேன்.
   ''ம்ஹ்ம்...' என்று என்னைக் கேவலமாகப் பார்த்த ஜெமினி, ''வாழ்நாளெல்லாம் ஒரே பொண்டாட்டிகூட வாழ்றது போரடிக்கலையா?' என்கிறார்.

   அவ்வளவுதான். சட்டென்று விழிப்புத் தட்ட, எழுந்தேன். 'இதென்ன கனவு?’ என்று யோசித்தபடி என் மொட்டைமாடி அறையை விட்டு வெளியே வந்தேன். மாடியில் என் மனைவி மாலதி, சரக்சரக் என்று துணிகளை உதறிக் காயவைத்துக்கொண்டிருந்தாள். என்னைப் பார்த்தவுடன், ''என்ன... இன்னைக்கு இவ்ளோ சீக்கிரம் முழிச்சிட்டீங்க?'  
   ''வித்தியாசமா ஒரு கனவு கண்டேன். முழிப்பு வந்துருச்சு' என்று நான் கனவைச் சொல்ல ஆரம்பித்தேன்.
   இந்த சமயத்தில் என் மனைவியைப் பற்றி கொஞ்சம் சொல்லவேண்டியிருக்கிறது. மாலதி, ஒரு கிராமத்து வாத்தியாரின் மகள். இந்தக் காலத்திலும் அவளுக்குத் தீர்க்கமான சில நம்பிக்கைகள் இருக்கின்றன. எந்த நவீன விஞ்ஞானமும் கேள்விக்குட்படுத்த முடியாத நம்பிக்கைகள் அவை.
   கதவில் சட்டையை மாட்டினால், கடன்காரனாவோம், நகத்தைக் கடித்துத் துப்பினால், வீட்டில் சண்டை வரும், சாப்பிடும்போது தும்மினால், சுண்டுவிரலைக் கழுவிவிட்டுச் சாப்பிட வேண்டும், இரவில் தெருநாய் ஊளையிட்டுக்கொண்டே இருந்தால், அருகில் எங்கோ சாவு கன்ஃபர்ம், விக்கல் எடுத்தால் உடனே ஊரில் இருக்கும் அவள் அம்மாவுக்கு போனைப் போட்டு, 'என்னம்மா... என்னை நினைச்சிட்டிருந்தியா? காலைலேர்ந்து ஒரே விக்கல்’ என்பாள்.
   எந்தத் தாய் தன் மகளிடம் நான் உன்னை நினைக்கவில்லை என்று கூறுவாள். 'ஆமாம்மா... இப்பத்தான் உன்னைப்பத்தி நினைச்சேன். நீ போன் பண்ணிட்ட’ என்பார். உடனே என்னிடம், 'நான் சொன்னேன்ல?’ என்பாள்.
   என்னைத் திருமணம் செய்துகொண்டு வந்த பிறகு, என் அம்மாவோடு பழகி ஜோதிட நம்பிக்கையும் சேர்ந்துகொண்டது. வருடத்துக்கு ஒரு முறை அம்மாவும் மாலதியும் வீட்டிலுள்ள அனைவரின் ஜாதகங்களையும் எடுத்துச் சென்று ஜோசியரிடம் காண்பித்து, ஜோசியர் சொல்லும் பரிகாரப் பூஜைகளைச் செய்து வக்கிரக் கிரகங்களுக்கு கவுன்டர் அட்டாக் கொடுப்பார்கள்.
   இவ்வளவு நம்பிக்கைகள் உள்ள என் மனைவியிடம், நான் அந்தக் கனவைச் சொல்லியிருக்கக் கூடாது. சட்டென்று துணி காயவைப்பதை நிறுத்திய மாலதி என்னைத் திகிலுடன் பார்த்தபடி, ''ஏங்க இப்படிக் காலங்காத்தால தலையில் கல்லைத் தூக்கிப் போடுறீங்க?' என்றாள்.
   ''நான் எங்கடி கல்லைப் போட்டேன்? கனவைத்தானே சொன்னேன்.'
   ''எப்ப கனவு கண்டீங்க?'
   ''இப்பத்தான் விடியக்காத்தால. அதுல பியூட்டி என்னன்னா... கனவுலயும் விடியக்காத்தாலதான்.'
   ''விடியக்காத்தாலயே விடியக்காத்தால கனவா? கட்டாயம் பலிச்சிடும். கற்பகாம்பா தாயே... ஏம்மா என்னை இப்படிச் சோதிக்கிறே?' என்றபடி கபாலீஸ்வரர் கோயில் கோபுரத்தை நோக்கி நியாயம் கேட்டாள்.
   ''ஏய்... சும்மா பைத்தியம் மாதிரிப் பேசாதே!'
   ''போன வருஷம், இப்படித்தானே உங்களுக்குக் கனவுல அடிக்கடி நாய் வந்துக்கிட்டேயிருந்துச்சு..?'
   ''ஆமாம்... அதுக்கு என்ன இப்ப?'
   ''அப்ப ஜோசியருகிட்ட கேட்டதுக்கு, தேய்பிறை, அஷ்டமி அன்னைக்கி பைரவருக்கு உங்களை நெய் விளக்கு போடச் சொன்னாரு. நீங்க, 'அதுல எல்லாம் நம்பிக்கை இல்லை... முடியாது’னு சொல்லிட்டிங்க. நான் போய்ப் போட்டுட்டு வந்தேன். ஆனாலும், நீங்க வந்து விளக்கு ஏத்தாததால உங்களை நாய் கடிச்சதுல்ல?'
   ''ஆமாம்...'
   ''அப்புறம்... ஆறு மாசத்துக்கு முன்னாடி உங்க கனவுல அடிக்கடி பாம்பு வந்துக்கிட்டேயிருந்துச்சு. அதே மாதிரி நம்ப தோட்டத்துல பாம்பு வந்துச்சுல்ல?'
   ''ஆமா...'
   ''ஜெமினி கணேசனுக்குப் பல தாரம். அவரு உங்க கனவுல வந்து, 'ஒரே பொண்ணோட வாழ்றது போரடிக்கலையா?’னு கேட்டா என்ன அர்த்தம்? கட்டாயம் இன்னொருத்தி உங்க வாழ்க்கையில வரப்போறா...' என்று கூறியபோது மாலதியின் தொண்டை அடைத்துக்கொண்டது.
   ''ஏய்... லூஸு' என்று கூறிய என்னைக் கண் கலங்கப் பார்த்த மாலதி, ''அத்தை...' என்று என் அம்மாவை அழைத்தவாறு படிக்கட்டுகளில் இறங்கினாள்.
   நான் பல் விலக்கி, முகம் கழுவிவிட்டு கீழே இறங்குவதற்குள், மாலதி என் அம்மாவிடம் எனது கனவைச் சொல்லி முடித்திருந்தாள். வீட்டினுள் நுழைந்த என்னை, என் அம்மாவும் பிள்ளைகளும் இரண்டாம் மனைவியுடன் வீட்டுக்கு வந்தவனைப் பார்ப்பதுபோல முறைத்தார்கள்.
   என்னை நெருங்கிய அம்மா, ''இந்த வயசுல ஏன்டா உனக்குப் புத்தி இப்படிப் போவுது? ஜெமினி கணேசன் உன் கனவுல வந்து உன்னை ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கச் சொன்னாராமே...' என்றவுடன் நான் அதிர்ந்துபோய் மாலதியைப் பார்த்தேன்.
   சத்தம் கேட்டு, தூக்கம் கலைந்து அறையில் இருந்து வந்த அப்பா, ''என்ன இங்க காலையிலயே சத்தம்?' என்றார்.
   ''உங்க பையன் ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கிற மாதிரி கனவு கண்டானாம்' என்று அம்மா சொல்ல... எனக்குத் தூக்கிவாரிப்போட்டது.
   அப்பா சிரிப்புடன், ''பொண்ணு யாருடா?' என்றார்.
   ''நீங்க வேறப்பா. கனவுல ஜெமினி கணேசன் வந்து, 'ஒரே பொண்டாட்டிகூட வாழ்றது உனக்கு போரடிக்கலையா?’னு கேட்டாருப்பா. அவ்ளோதான். இவங்க ஏத்தி, ஏத்தி சொல்றாங்க...'
   ''அது எனக்குத் தெரியும்டா. எப்பவும் பொம்பளைங்க சொல்றதுல 50 பர்சென்ட்தான் உண்மை இருக்கும்.'
   ''என்ன மாமா நீங்க? ஜெமினி கணேசன் கேட்டதுக்குக் கிட்டத்தட்ட அதானே அர்த்தம்' என்றாள் மாலதி.
   ''கனவுல அவன் ரெண்டாம் கல்யாணம் கட்டிக்கிட்டானா?'
   ''இல்லை. ஆனா, போன வருஷம் அவரு கனவுல அடிக்கடி நாய் வந்துச்சு. கனவுல நாய் அவரைக் கடிக்கலை. ஆனா, நிஜத்துல கடிச்சிருச்சு. அந்த மாதிரி இதுவும் நடக்கும். இவரு வேற உயரமா, சிவப்பா, அழகா இருக்காரு...'
   ''உயரமா, சிவப்பாத்தான்டி இருக்கேன். நான் எங்கடி அழகா இருக்கேன்?' என்றேன் நான்.
   ''சரி... இப்ப என்ன பண்ணணுங்கிற?' என்றார் அப்பா.
   ''நம்ம ஜோசியரைப் போய்ப் பாப்போம். அவரு ஏதாச்சும் பரிகாரம் சொல்வாரு...' என்றாள் அம்மா.
   ''ஒரு நாள்தானே கனவு வந்துச்சு. மறுபடி வந்தா பார்ப்போம். எல்லாரும் போய் வேலையைப் பாருங்க...' என்ற அப்பா, அம்மாவிடம் ''நான் 'வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தை ஏழெட்டுத் தடவை பார்த்திருக்கேன். என் கனவுல ஜெமினி கணேசன் வரல. இவன் கனவுல வந்துருக்காரு பாரேன். ம்ஹ்ம்... எல்லாத்துக்கும் ஒரு யோகம் வேணும்...' என்றபடி அப்பா என்னைப் பொறாமையாகப் பார்த்தார்.

   ''காலம்போன காலத்துல ஆசையைப் பாரு...' என்றபடி மாலதியுடன் சமையலறைக்குச் சென்றாள் அம்மா.
   அன்றிரவு மாடி அறைக்கு தலையணையுடன் மாலதி வர... நான் ஆச்சரியத்துடன், ''என்னடி... எப்பவும் கீழதானே படுப்ப..?' என்றேன்.
   ''உங்கம்மா இனிமே என்னைக் கீழே படுக்க வேண்டாம்னு சொல்லிட்டாங்க. 'மேல தனியாப் படுத்திருக்கான்ல... அதான் கண்ட கண்ட கனவெல்லாம் வருது. இனிமே நீயும் மேல் ரூம்லயே படுத்துக்க’னு சொல்லிட்டாங்க' என்ற மாலதி என் தோளில் சாய்ந்துகொண்டு, ''என்னங்க... நான் உங்களுக்குப் போரடிச்சிட்டேனா?' என்றாள்.
   ''ச்சீ... பைத்தியம்...' என்றேன் அவள் தலைமுடியைக் கோதியபடி.
   ''40 வயசுக்கு மேல ஆம்பளைங்களை ஷார்ப்பா வாட்ச் பண்ணணுமாம். அப்ப ஆம்பளைங்களுக்குப் புதுசா ஒரு லைஃப் ஸ்டார்ட் ஆவுதாமே. ஏதோ புக்குல போட்டிருந்ததா அத்தை சொன்னாங்க.'
   ''இங்கே பாரு... என் மேல உனக்குச் சந்தேகம் ஏதாச்சும் இருக்கா?'
   ''இல்ல... ஆனா, கொஞ்ச நாளா உங்க நடவடிக்கையே சரியில்லை...'
   ''என்ன சரியில்லை?'
   ''ஏழெட்டு மாசமா நீங்க ஸ்லிம் ஃபிட் சட்டை, ஜீன்ஸ் எல்லாம் போட்டுக்கிட்டு சின்னப்பையன் மாதிரி ஆபீஸ் போறீங்க. முன்னாடி எல்லாம் வாரத்துக்கு ஒரு நாள்தான் ஷேவ் பண்ணுவீங்க. இப்பெல்லாம் ஒரு நாள்விட்டு ஒரு நாள் ஷேவ் பண்றீங்க. 'திடீரென்று உங்கள் கணவர் தங்கள் தோற்றத்தில் மிகுந்த அக்கறை காட்டினால், நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்’னு ஒரு புக்ல போட்டிருந்தான்.'
   ''மாலு... தோற்றத்துல திடீர்னு அக்கறை காட்டுறேன்தான். அதுக்குக் காரணம்... வயசாகிறதை நம்ப மனசு ஏத்துக்கிறது இல்லை. அதனால சின்னப்பையன் மாதிரி காமிச்சிக்கிறதுக்காக இந்த மாதிரி டிரெஸ் பண்றேன். நரைமுடி எல்லாம் தெரியுது. அதனால ஒரு நாள்விட்டு ஒரு நாள் ஷேவ் பண்ணிக்கிறேன். எல்லாத்தையும் சந்தேகக் கண்ணோடப் பார்க்காத மாலு.'
   சமாதானமாகாமலே திரும்பிப் படுத்துக்கொண்டாள்!
   விடியற்காலையில் மீண்டும் அந்தக் கனவு. இந்த முறை ஜெமினி கணேசன் மாமி மெஸ்ஸில் என்னோடு பொடி தோசை சாப்பிட்டுக்கொண்டே பேசினார். இப்போது 'பாட்டுப் பாட வா...’ ஜெமினி கணேசன் இல்லை; 'உன்னால் முடியும் தம்பி’ ஜெமினி. தெப்பக்குளத்தில் விட்ட இடத்தில் இருந்து பேச ஆரம்பித்தார்.
   ''மிஸ்டர் ஸ்ரீராம்... ஒரே பொண்ணுகூட வாழ்க்கை நடத்திக்கிட்டு, ஒரே பொண்ணுக்குப் புடவை வாங்கிக் கொடுத்துக்கிட்டு, ஒரே சாம்பாரைச் சாப்பிட்டுக்கிட்டு... ச்சே... அதெல்லாம் ஒரு லைஃபா?' என்றார்.
   ''எனக்குப் புரியுது சார். ஆனா, இப்பெல்லாம் பெண்களைப் பாதுகாக்க நிறையப் புதுப் புதுச் சட்டம் வந்திருச்சு. ஒரு பெண்ணோட மனசுல நெருடல் ஏற்படுற மாதிரி உத்து உத்துப் பார்த்தாக்கூட அவனை ஜெயில்ல தூக்கிப் போடலாம்னு சட்டம் சொல்லுது. அப்புறம்... குடும்ப வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்னு ஒண்ணு இருக்கு. அதுப்படி, மனைவி மனம் புண்படும்படி நடந்துக்கிட்டா, கணவனை உள்ளே தூக்கிப் போடலாம்.'
   ''ஆத்தாடியோவ்... இருந்தாலும் சொல்றேன் கேளு. 40 வயசுக்கு அப்புறம் நமக்கு வயசான மாதிரியே ஃபீலிங் வரும். நீ மட்டும் இன்னொரு கல்யாணம் பண்ணிப் பாரு. சின்னப் பையனாட்டம் ஆயிடுவ...' என்று கூறியபோது கனவு கலைந்து திடுக்கிட்டு எழுந்தேன். என் உடல் அசைவில் என் தோளில் சாய்ந்திருந்த மனைவியும் விழித்துக்கொண்டாள்.
   ''ஏன் உங்களுக்கு இப்படி வேர்க்குது? ஜெமினி மறுபடியும் கனவுல வந்தாரா?'
   ''ஆமாம்...'
   ''என்ன சொன்னாரு?'
   சொன்னேன்.
   ''இந்த ஜெமினி கணேசனுக்கு வேற ஆளே கிடைக்கலியா? கடவுளே... ஏன்டாப்பா இப்படி என்னைச் சோதிக்கிற? இந்தத் தடவை இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோனே சொல்லிட்டாரா?'
   ''ஆமா...'
   ''அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?'
   ''நான் ஒண்ணும் சொல்லல.'
   ''ஏன்... வாயைத் திறந்து அதுல்லாம் முடியாது. தப்புனு சொல்ல வேண்டியதுதானே. வாயை மூடிக்கிட்டு அமுக்குணி மாதிரி கேட்டுட்டு இருந்தீங்களா? உங்க மனசுக்குள்ள அந்த ஆசை இருக்கு. அதான் திரும்பத் திரும்ப ஜெமினி கணேசன் கனவா வருது. உள்மன ஆசைகள்தான் கனவா வரும்னு ஒரு புக்ல போட்டிருந்தான்.'
   ''ஏய்... புக்கு, புக்குனு சொல்லி ஏன்டி என் உயிரை எடுக்குற..? அறிவுகெட்ட முண்டம்...' என்றேன் கோபத்துடன்.
   ''ஐயோ..! முன்னாடி எல்லாம் நான் என்ன சொன்னாலும் பிடிச்சுவெச்ச பிள்ளையார் மாதிரி கம்முனு உட்கார்ந்திருப்பீங்க. இப்ப திட்ட ஆரம்பிச்சிட்டீங்க. அத்தை...' என்று சத்தமாக அழைத்தபடி மாலதி எழுந்து வேகமாகக் கதவைத் திறந்துகொண்டு சென்றாள்.
   இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் படைத் தளபதிகள் தீவிரமாக மேப்பைப் பார்ப்பது போல், ஜோசியர் எனது ஜாதகக் கட்டங்களை நெடுநேரமாகப் பார்த்துக்கொண்டிருந்தார். பின்னர், என் முகத்தையும் ஜாதகத்தையும் மாறி மாறி உற்றுப் பார்த்தார்.
   நான் மனதுக்குள், 'இந்தாளு என்ன குண்டைத் தூக்கிப் போடப்போறானோ...’ என்றபடி திகிலுடன் அவரைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
   இறுதியில் ஒரு முடிவுக்கு வந்த ஜோசியர், ''உங்களுக்கு எத்தனை நாளா இந்த மாதிரி கனவு வருது?' என்றார்.
   ''இப்பதான் சார்... ரெண்டு நாளா...'
   ''ம்... ரெண்டு நாளைக்கு முன்னாடி, கல்யாணம் ஆகாத பொண்ணு யாராச்சும் உங்க ஆபீஸ்ல புதுசா வேலைக்குச் சேர்ந்துருக்காங்களா?'
   ''ஆமா சார்...'
   ஜோசியர் 'எப்பூடி...’ என்பது போல் என் அம்மாவையும் மனைவியையும் பார்த்துக்கொண்டே, ''அந்தப் பொண்ணு பேரு என்ன?' என்றார்.
   நான் வெள்ளந்தியாக, ''சாவித்திரி...' என்று கூற, ''சாவித்திரியா?' என்று ஜோசியர், அம்மா, மாலதி மூவரும் கத்திய கத்தலில் எனக்கு வெலவெலத்துப் போய்விட்டது. அப்புறம்தான் சாவித்திரியும் ஜெமினி கணேசனின் மனைவி என்பது நினைவுக்கு வந்தது.
   ஜோசியர், ''அந்தப் பொண்ணு அழகா இருக்குமா?' என்றார்.
   நான் தயக்கத்துடன் மாலதியைப் பார்த்தேன்.
   ''பரவாயில்ல சொல்லுங்க. டாக்டர்கிட்டயும் ஜோசியர்கிட்டயும் உண்மையை மறைக்கக் கூடாது.'
   ''அட்டகாசமா இருப்பா சார்... அதுலயும் மூக்குல ஒரு மச்சம் இருக்கும் பாருங்க... சான்ஸே இல்ல சார். அந்த மச்சத்தைப் பார்த்த அத்தனை பேரும் ஆளுக்கொரு கவிதை எழுதி சட்டை பாக்கெட்ல வெச்சுக்கிட்டுத் திரியுறாங்க.'
   அப்போது என் மனைவி பார்த்த பார்வையில், என்னை உயிரோடு எரிப்பதற்குப் போதுமான அளவு நெருப்பு இருந்தது.
   ''ஸோ... இதான் பிரச்னை' என்றபடி என் ஜாதகத்தை உற்றுப் பார்த்தவர், ''ஐ காட் இட்...' என்று என் அதன் மீது நங் என்று குத்தினார்.
   ''என்ன ஜோசியரே?' என்றாள் மாலதி பதற்றத்துடன்.
   ''உங்க கணவர் சிம்ம லக்னம். உத்திராடம் நட்சத்திரம். ஜெமினி கணேசனும் அதே சிம்ம லக்னம், உத்திராடம் நட்சத்திரம்தான்' என்று ஜோசியர் கூறியவுடன் நாங்கள் மூவரும் ''வாட்?'' என்று அதிர்ச்சியில் எழுந்து நின்றுவிட்டோம்.
   சில விநாடிகள் என்னைக் கண்கலங்கப் பார்த்த மாலதி, ''நான் உங்களுக்கு என்னங்க குறை வெச்சேன்?' என்றாள்.
   ''ஒண்ணுமே நடக்கலையேடி. நீ ஏன்டி நான் ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்த மாதிரியே பேசற?' என்றேன்.
   ''அதான் ஜாதகம் சொல்லுதே...'
   ''ஒருத்தர் ஜாதகத்தைப் பார்த்து, அவருக்கு ரெண்டாம் கல்யாணம் இருக்குமானு சொல்ல முடியுமா ஜோசியரே?' என்றாள் அம்மா.
   ''பேஷா சொல்லலாம். 'சுக்கிர நாடி’ங்கிற புத்தகத்துல இதைப் பத்தி டீட்டெய்லா சொல்லியிருக்காங்க. ஒருத்தரோட ஜாதகத்துல ஏழாவது இடம்தான் லைஃப் பார்ட்னருக்கான இடம். ஏழுக்குரிய கிரகம் எத்தனை கிரகங்களுடன் சேர்ந்திருக்குமோ, அவனுக்கு அத்தனை தாரம்னு சொல்வாங்க.'
   நான் ஆர்வத்துடன், ''என் ஏழாம் கிரகம், எத்தனை கிரகங்களோட சேர்ந்திருக்கு சார்?' என்று கேட்க... ஜோசியர் என்னை முறைத்தார். மாலதி, என் தொடையில் கிள்ள, நான் வலியோடு ஜோசியரைப் பார்த்து அசடு வழிய சிரித்தேன்.
   ஜோசியர், ''கோச்சாரரீதியாப் பார்த்தா...' என்று ஐந்து நிமிடங்கள் ஜாதகத்தின் டெக்னிக்கல் டீட்டெய்ல்ஸைச் சொல்லி இறுதியாக, ''உங்க புருஷன் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிறதுக்கான அறிகுறி எல்லாம் தெரியுது' என்றார்.
   ''இதுக்குப் பரிகாரம் இருக்கா?'
   ''நிச்சயமா இருக்கு. கைல என்ன மோதிரம் போட்ருக்கீங்க?' என்றார்.
   நான் கையை நீட்டினேன். மோதிரத்தைப் பார்த்து முகம் மாறிய ஜோசியர், ''ரெண்டு கல்லு மோதிரம் போட்டிருக்காரு. அதான் பிரச்னை. ஒரு கல்லு மோதிரம் போடுங்க. எல்லாம் சரியாயிடும். ஆனா, வெளியில வாங்கி விக்கிற கல்லுல தோஷம் இருக்கும். தோஷ நிவர்த்தி பண்ணின கல்லுல நானே மோதிரம் செஞ்சி ரெடிமேடா வெச்சிருக்கேன். அதைப் போடுங்க. 5,000 ரூபாய் செலவாகும்...' என்று கூற, நான் அதிர்ச்சியுடன் மாலதியை நோக்கினேன்.
   ''அது பரவாயில்ல. கனவுல ஜெமினி கணேசன் வராம இருக்கிற மாதிரி நல்லா பூஜை பண்ணித் தாங்க' என்றாள் அவள்.
   அன்றிரவு மாலதி அந்த மோதிரத்தை என் விரலில் மாட்டிவிட்டு வானை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டு, ''கடவுளே... இனிமே இவரு கனவுல ஜெமினி கணேசன் வரக் கூடாது' என்று வேண்டிக்கொண்டாள்.
   மறுநாள் காலையில் நான் எழுந்தபோது, ஏற்கெனவே விழித்திருந்த மாலதி ஆர்வத்துடன், ''கனவுல ஜெமினி கணேசன் வந்தாரா?' என்றாள்.
   ''வரல...' என்றேன்.
   ''அப்பாடா... கடவுளே...' என்று கன்னத்தில் போட்டுக்கொண்டாள்.
   ''நல்ல மோதிரம் மாலு. ஜெமினி கணேசன் வராதது மட்டுமில்ல, கடவுளே கனவுல வந்துட்டாரு...'
   ''அப்படியா?' என்றாள் மாலதி முகம் மலர.
   ''வள்ளி, தெய்வயானையோட சாட்சாத் முருகப்பெருமானே வந்துட்டாரு. என்னா ஒரு தரிசனம்...' என்றேன் நான்.
   அடுத்த விநாடியே என் மனைவி மயக்கம் போட்டு பொத்தென்று கீழே விழுந்தாள்.
   https://www.vikatan.com
  • By நவீனன்
   மீசைக்காரர் - சிறுகதை
       சிறுகதை: ம.காமுத்துரை, ஓவியங்கள்: ஸ்யாம்
    
   மீசைக்காரரின் பிரேதத்தை முதன்முதலில் நான்தான் பார்க்க நேர்ந்தது. அவ்வளவு பெரிய உருவம், மரத்தி லிருந்து  உதிரவிருக்கும் பழுத்த இலைபோலக் காற்றில்  முன்னும் பின்னுமாய் ஆடிக்கொண்டிருந்தது. வாசலின் விட்டத்தில் தொங்கியதால் கூடுதல் அதிர்ச்சி. அப்படியே காம்பவுண்டு இரும்புக்கதவில் மோதிக்கொண்டேன்.

   பலரும் சொல்வதுபோல, கண்கள் பிதுங்கி, நாக்கு வெளியே தள்ளி. . . போன்ற கோரமெல்லாம் இல்லை. ஏதோ கண்ணா மூச்சி விளையாட்டு காட்டுவதுபோல இமைகளை மூடித்தான் தொங்கிக் கொண்டிருந்தார். அவரது இடுப்பு வேட்டி பாதம் வரை இறக்கிவிடப்பட்டிருந்தது. அதன் நுனி, அறுபட்ட பல்லியின் வாலாய், வீசும் காற்றின் வேகத்திற்கேற்ப படபடத்துக் கொண்டிருந்தது. கற்றையாய் ஒதுக்கியிருந்த மீசை, கம்பீரம் மாறாதிருந்தது.  

   மதிய சாப்பாட்டுக்காக வீட்டுக்கு வந்திருந்தேன். மனைவி, சமையலை முடித்துவிட்டுக் குளித்துக்கொண்டிருந்தாள். அதனால் கை கால் அலம்ப, காம்பவுண்டு உள்ளிருக்கும் பொதுக்குழாய்க்கு வந்தேன். வார்டு கவுன்சிலர் உபயத்தால் எங்கள் தெருவுக்கும் ஓர் ஆழ்குழாய் தண்ணீர்த்தொட்டி கிடைத்திருந்தது. எங்கள் வீதி `ப’ வடிவில் உட்குழிந்திருந்ததால் அடுத்த தெருக்காரர்களுக்கு இந்தக் குழாயை அறியும் வாய்ப்பு ரொம்பவும் குறைச்சல். ஆகவே, இங்கே இருக்கும் எட்டு வீட்டுக் காரர்கள் மட்டும் ஏக சுதந்திர மாய்க் கொண்டாடுவோம்.

   குழாயடியை ஒட்டினாற் போல்தான் மீசைக்காரர் வீடு.

   அதை முழுமையான வீடு எனச் சொல்லிவிட முடியாது. எட்டுக்குப் பத்து அளவில் மேலே தகரம் வேய்ந்து அளவான வாசலும் கதவும் சின்ன அளவில் ஜன்னலும் பொருத்தி இருக்கும் ஓர் அமைப்பை ‘வீடு’ எனச் சொல்லாமலும் இருக்க முடியுமா? ஆனால், அந்த இடத்தின் விஸ்தீரணத்தில் ஆறில் ஒரு பங்கே அந்த அறை என்ற உண்மை தெரியும்போது மனசு ஏற்கத்தான் மறுக்கும்.

   அந்த அறையில் அவர் தனியாகவே இருந்தார். மனைவி இல்லை, மகன்கள் இருவர். வேலைக்காக வெளியூர் போய் அங்கே குடும்பமாகிவிட்டனர். உள்ளூரில் ஏதாவது முக்கியமான கல்யாணம் காட்சி என்றால், அதற்கு வருகிற சாக்கில் தந்தையை விசாரித்துவிட்டுப் போவார்கள்.

   மீசைக்காரர், ‘மணியன்பிள்ளை பேக்கரி அண்டு டீ ஸ்டாலி’ன் ஆஸ்தான வடை மாஸ்டர். அவரது தவளை வடைக்கு ரசிகர்கள் ஜாஸ்தி. ஒருநாள்கூட அவரை லீவெடுக்க அனுமதிக்க மாட்டார்  மணியன்பிள்ளை. ``ஒமக்கென்னயா லீவு! ஒண்ணு, நான் மண்டயப் போடணும்... இல்ல, நீ கட்டையில போவோணும். அதுக்கெடையில ஒனக்கும் லீவு கெடையாது, கடைக்கும் லீவு கெடையாது. ஆமா..!” என அவரது மீசையைத் திருகிவிட்டபடியே சொல்வார்.

   ``என்னத்த வடையில பெரிய ருசியக் கண்டாக! என்னா, எல்லாரும் சேக்குற சரக்குதே, கடலமாவுல கூடுதலா நாலு தேங்காச்சில்ல சீவிப் போடுறான். சோடாப்பு சேத்து எண்ணெயக் குடிக்கவிடுறான். எண்ணெய்க்கினு ஒரு ருசி உண்டில்ல!”

   எகடாசி பேசுகிற நபர்களால் எத்தனை தேங்காயை உடைத்துப் போட்டாலும், வகைவகையாய்ப் பருப்புகளை வறுத்துப் போட்டாலும், தாராளமாக எண்ணெய் குடிக்க விட்டாலும் உமட்டல் வந்ததேயொழிய, ஏவாரம் நடக்கவில்லை. ``கைப்பக்குவம், கைராசி’’ என்றார்கள்.

   காலையில் சுள்ளென விடிவதற்குள் போய் எண்ணெய்ச் சட்டிகளைக் கழுவச் செய்துவிட்டு சாவகாசமாய் காலை காபியைக் கையில் பிடித்துக்கொண்டு வேலையைத் தொடங்கினார் என்றால், ரவா கேசரியில் ஆரம்பித்து உளுந்துவடை, சுசியாப்பம், ஆட்டுபோண்டா, தவளைவடை போட்டு பால்பன்னில் முடித்து  மதியம் சாப்பாடு உண்டுவிட்டு அறைக்குத் திரும்புவார். அங்கே நல்லதோர் உறக்கத்தைப் போட்டு விட்டு 4 மணிக்கு எழுந்திருப்பார். குளிரக் குளித்துவிட்டு மறுபடி கடைக்குப் போனால் மிக்ஸர், காரசேவு, பழையபடி தவளை வடை மட்டும். தேவைக்குப் போடுவார். கடையில் விளக்கு பொருத்திவிட்டால் மீசைக் காரருக்கு வேலை இருக்காது.  கடைக்கு வெளியே வந்து அமர்ந்து 8 மணி வரை அரசியல், சினிமா, ஊர்ப்பொரணி என இலக்கில்லாமல் போகும். சரியாக 8 மணிக்கு மணியன்பிள்ளை செலவுக்குப் பணம் தருவார். வெளிக்குப் போய்விட்டு வரும்போது ஒரு கோட்டரும் இரண்டு வயல்காட்டுப் பழங்களுமாய் வீடு திரும்புவார்.

   தெருவாசிகள் யாராவது எதிர்ப்பட்டால் கொஞ்சநேரம் அளவளாவிவிட்டு அறைக்குள் போவார். வாங்கிய சரக்கைக் குடித்துவிட்டு, வாழைப் பழத்தைக் கடித்து விழுங்கிவிட்டு பிளாஸ்டிக் வொயர் பின்னிய கட்டிலில் சாய்ந்துவிடுவார்.

   மூன்றாம் சாமத்தைப்போல இந்த மதியவேளையும் நிசப்த மானது.  அதுவும் இதுபோன்ற ஒரு வீதி அபூர்வம். உதிரிப்பூ விற்பவர்கள், `கொய்யா...ப்  பழம்’ எனக் கூவுபவர்கள் வரலாம். அவர்களும்கூட எதிர்க்குரல் எழும்பாவிட்டால் தெரு முனையிலேயே நின்று திரும்பி விடுவார்கள்.

   கை கால் அலம்பிய நீர், துணிகொண்டு துடைக்காமலேயே காய்ந்துபோனது. பின்வாக்கிலேயே நடந்து குழாயடியைத் தொட்டேன். மறுமுறை முகம் அலம்பத் தோணவில்லை. 

   மாடிப்படி ஏறிய வீட்டில் தம்பியும், கடைசி வீட்டில் சரசு சித்தியும்தான் குடியிருக்கிறார்கள். யாரையாவது கூப்பிட்டுச் சொன்னால் நல்லது. ஏனோ எதையுமே செய்யத் தோன்றாமல், கால்கள் வீட்டுக்குள் நுழைந்தன.

   ``எங்க போய் வாய் பாத்துக் கிட்டிருந்தீங்க இம்புட்டு நேரம்? வீட்டுக்கு வந்தா ஒரு நிமுசம் நெலயா நிக்க முடியாதா?” மனைவி பாட்டு படித்தாள்.

   ``நீ குளிச்சிக்கிட்டிருந்த...”

   ``அது எந்நேரம்? குளிச்சி முடிச்சு சிக்கெடுத்து சீவி முடிச்சிட்டேன்.”

   நான் என் தம்பி வீட்டுக்குப் போயிருப்பேன் எனக் குமைகிறாள். ``நீ நெனைக்கிறாப்ல சின்னவெ வீட்டுக்கெல்லாம் போகலத்தா.”

   ``நா இப்பக் கேட்டனா? நீங்களா சொல்றதப் பாத்தா எங்காத்தாவ நா குளுதாணிக்குள்ள அமுத்தலன்னு ஒப்புச்சொன்ன மாதிரில்ல இருக்கு. நீங்க சின்னவெ வீட்டுக்குப் போனா எனக்கென்ன... பெரியாள் வீட்டுக்குப் போனா எனக்கென்ன! வீசப்போவுதா, நாறப்போவுதா?” பேசிக்கொண்டே சோற்றுச் சட்டியின் மூடியைத் திறந்து வியர்வைநீரை வடித்து விட்டாள்.

   ``சாப்பிடலாம்ல. . . ‘’

   ``ஒங்களத்தே, சோறு சாப்பிடலாம்ல..!”

   மீசைக்காரரின் கோலம் இன்னமும் கண்ணுக்குள் ஆடிக்கொண்டே இருந்தது. நிலைவாசலில் தொங்கும் நெடிய உருவம்... காற்றில் படபடக்கும் அவரது வேஷ்டியின் நுனி. . .  அது அழிந்தால்தானே சோற்றில் கை வைக்க முடியும்.

   சோறு வேணாம் எனச் சொல்லலாம். மனைவியோ, பெரும் யுத்தம் ஒன்றுக்குத் தயாராய் நிற்கிறாள். அவளிடம் கண்டதைச் சொல்லிவிடலாமா?

   ஒரு காலை நீட்டி, இன்னொரு காலை சம்மணமிட்டு உட்கார்ந்து சோறு, குழம்பு, காய், ரசம், ஊறுகாய் இன்னபிற வகைகளை முன்னால் நிறுத்தி, தட்டில் சோற்றைப் பரிமாறியபடி என்னைப் பார்த்தாள்.

   தலைகுளித்து முடித்த அவளின் முகம் பூரணச்சந்திரன்போலப் பொலிவு மிகுந்திருந்தது. எண்ணெய் தடவாத அவளின் கூந்தலிலிருந்து விலகிய நீளமான ஒரு முடி, தன்னுடன் நான்கைந்தை இணைத்துக்கொண்டு அவளின் முகத்தில் விழுந்து, பவுடர் பூசிக் குங்குமம் இட்ட அவளது வதனத்தில் கீறல் விழுந்த கண்ணாடியைப்போல ஒரு தோற்றத்தை உருவாக்கியிருந்தது.

   `பக்கத்துவீட்ல, மீசைக்காரர் பொணமா தொங்குறார் நாகு!’ - சொன்னால் தாங்குவாளா? நொடிப்பொழுதில் முகம் கலவர பூமியாகிவிடும். சிங்காரித்த முடிக்கற்றைகள் சிலிர்த்துப்போய் நட்டமாய் நிற்கும். முகத்தில் பொலிவு முற்றிலுமாய் மாறி  வெளிறிப்போய் சவக்களை தாண்டவமாடும். ஏற்கெனவே பயந்தாங்குளி. நான்கைந்து நாளைக்கு யாரையும் வீட்டை விட்டு வெளியேற விட மாட்டாள். அவளே மனநோயாளிபோலப் புலம்ப ஆரம்பித்துவிடுவாள். ஆனாலும், எப்படியும் தெரியத்தானேபோகிறது. . .  தெரியும்போது தெரியட்டும்! இப்போது வேண்டாம். சொல்வதற்கு நாக்கு எழும்பவில்லை.

   ``என்னா... ஐயாவுக்கு யோசன பலமா இருக்கு? தம்பி வீட்ல பலமான விருந்தோ?” சோற்றைப் பிசைந்து முதல் கவளத்தை வாயில் வைத்தாள். தொங்கிய மயிர்க்கொத்து சோற்றோடு சேர்ந்து வாய்க்குள் நுழைய அதை லாகவமாய் இடதுகையால் ஒதுக்கி காதுமடலில் கோத்துவிட்டாள்.

   நானாக ஒரு தட்டை எடுத்து சாதம் போட்டுக் கொண்டேன். வயிற்றுக்குள் சோறு இறங்க மறுத்தது.

   `என்னடா மகனே..!’ மீசைக்காரர், நெற்றியில் ஏறி நின்று பேசினார். ஒருவகையில் அவர் எனக்குச் சித்தப்பா. எந்த வகையில் எனக் கேட்டால் நானும் குழம்பி நீங்களும் குழம்பவேண்டிவரும்.

   தெருவில் எந்த ஒரு வீட்டு நிகழ்விலும் அவருக்கென்று பிரதான பங்கு இருக்காது. ஆனாலும், நடைபெறும் அத்தனை விசேஷங்களிலும் முன்னணியில் வந்து நிற்பார். அந்த நாளில் கடைக்கு டிமிக்கிதான். மணியன்பிள்ளை எல்லோரிடமும் ஒரு தாழ்மையான வேண்டுகோள் விடுத்திருப்பார். `முன்னக்கூட்டியே அந்தாளுக்கு எந்தத் தாக்கலும் சொல்லாதீங்கப்பா, ஆவியா கெளம்பீடுவான்.’  என்ன செய்ய, மீசைக்காரர் அமைதியாய் இருந்தாலும் தெருக்காரர்கள் அப்படியிருக்க மாட்டார்கள். அத்தனை உறுத்தாக உறவுக்காரர்போல முன்னுக்கு நின்று வேலைசெய்ய இந்நாளில் வேறு யார் இருக்கிறார்கள்? அப்படியே இருந்தாலும் அவர்களுக்கு உரிய மரியாதையும் செலவும் செய்தாகவேண்டும். அதில் கொஞ்சம் குறைந்தாலும் ஏசிக்காட்டிவிடுவார்கள்.

   ``மீசய நம்பித்தே காரியத்த நடத்துறேன்” என வெறும் வாய்ச்சொல் ஒன்று போதும், உதிக்கிற சூரியனையும் உசுப்பி இழுத்துக்கொண்டு வந்துவிடுவார் மீசைக்காரர்.

   அப்படித்தான் மணியன் பிள்ளையின் கடைக்கு வாடிக்கையாய் கறிவேப்பிலை கொத்தமல்லித்தழை கொண்டு வரும் ஒரு பெண்மணி, தன் மகளுக்குச் சடங்கு வைக்க மண்டபம் பேசவேண்டும் என மீசைக்காரரிடம் பேச்சுவாக்கில் ஒருநாள் சொல்லியிருந்தாள். `ஆம்பளை இல்லாத வீடு. ஓடியாடிச் செய்ய நாதியில்லண்ணே!’ அவ்வளவுதான், வாழைமரம் வெட்டுவதிலிருந்து சமையல் ஆள் முதற்கொண்டு நானென்று நின்றுபார்த்தார். கடைசியில் எதிர் பார்த்த மொய் வரவில்லையாம். வாழை மரத்துக்கும் இலைக் கட்டுக்கும் மீசைக்காரர்தான் சொந்தக்காசில் கணக்கு முடிக்க வேண்டிவந்தது. ``என்னைக் கிருந்தாலும் ஒங்க கடனத் தீக்காம எங்கட்ட அடங்காதுண்ணே’’ என கறிவேப்பிலைக்காரப் பெண்மணி வாக்குக் கொடுத்திருந்தார்.

   தெருவில் ஏதோ சத்தம் கேட்டது. இரண்டாவது சோறு போட்டுக்கொள்ளாமல் கை கழுவினேன். மனைவி தண்ணீர் குடித்தபடி ஓரக்கண்ணால் பார்த்தாள். ``என்னாச்சு?”

   ``ப்ச், வவுறு சரியில்ல!”

   கை கழுவி, தட்டை எடுத்து கழுவுதொட்டியில் போட்டுவிட்டு வாசலுக்கு வந்தேன். தம்பி வீட்டுத் திண்ணையில் அமர்ந்து இரண்டு பள்ளிச் சிறுவர்கள் கால்களைத் தொங்கலாட்டம் போட்டபடி பேசிக்கொண்டிருந்தனர். இன்னமும் சில பேர் வந்ததும் தங்களின் ஆட்டத்தைத் தொடக்கிவிடுவார்கள். கபடி, செதுக்குமுத்து, கால்தாண்டி இப்படி எதுவுமாக இருக்கலாம். நண்பர்களுக்காகக் காத்திருக்கிறார்கள்போலும்.

   கொஞ்சம் பதைபதைப்பாய் இருந்தது. என்ன இருந்தாலும் சிறுவர்கள். திடீரென யாராவது ஒருத்தன் மீசைக்காரர் வீட்டுக்குள் நுழைந்து தொங்கிக்கொண்டிருக்கிற பிரேதத்தைப் பார்க்க நேர்ந்தால்... அலறுவது மட்டுமா? பயத்தில் ஏதாவது நடந்துவிட்டால். . . நம்ம பிள்ளை வேறு, அடுத்த வீட்டுப் பிள்ளை வேறா? விரட்டிவிடத் தோன்றியது. என்ன சொல்லி விரட்டுவது? இதுவரையிலும் யாரையும் அப்படி ஒரு நாளும் விரட்டியது கிடையாது. யாராவது அவர்களை விரட்டினாலும், `விடுங்க, பசங்க இந்த வயசில ஓடியாடி விளையாடாட்டி எப்ப விளையாடுவாங்க?’ என ஆதரவுக் குரல் கொடுப்பதே எனது வழக்கம். `வேலவெட்டி பாத்த அலுப்பில சித்தநேரம் கண்ணசர விட மாட்டேங்கிதுக பக்கிக. அமைதியா சத்தம் போடாம விளையாடலாம்ல’ என நாகுவே சில சமயம் எனக்கு எதிராய்ப் பேசுவாள். `ஆளோடி வீதிய உசிர்கொடுத்து நிறுத்துறவனுக இந்தப் பசங்கதான். இல்லாட்டா பகல்லயே தெருவுக்கு செக்யூரிட்டி ஒராள் போடணும்’  என மனைவியின் கூக்குரலை நிறுத்திய பொழுதுகள் நிறைய.

   பள்ளிவிடுமுறை நாளாக இருந்தால், இந்நேரம் பள்ளிச் சிறுவர்களே மீசைக்காரரைக் குளிப்பாட்டி பாடையில் ஏற்றியிருப் பார்கள். அவர்களின் உறைவிடம் குழாயடியும் மீசைக்காரரின் குடியிருப்பும்தான். தெருவுக்குள் வந்தால் அவரை உறங்கவிட மாட்டார்கள். அவரும் தான் உறங்க வேண்டுமென அவர்களை விரட்டவும் மாட்டார்.

   சரசு சித்தி வெளியில் வந்தார். கையில் பெரிய எவர்சில்வர் தாம்பாளத்தட்டும் தோளில் பழைய துணியும் வைத்திருந்தார். சித்தியைக் கண்டால் பசங்களுக்குக் கொஞ்சம் பயம். எந்நேரமும் பிள்ளைகளைக் கடிந்துகொண்டே இருப்பார். அப்படி ஒரு சுபாவம் அவருக்கு. இப்பவும் திண்ணையில் அமர்ந்திருக்கும் பசங்களைப் பார்த்துக்கொண்டேதான் வந்தார்.

   ``என்னங்கடா இந்நேரத்துல... பள்ளியுடத்துக்குப் போகலியா?’’

   ``இல்ல பாட்டி, எங்களுக்கு மட்டும் மத்தியானத்துக்குமேல லீவு விட்டுட்டாங்க.”

   ``உடனே இங்க வந்து ஆஜர் ஆயிட்டீங்களாக்கும். போங்க போங்க, வெயில்ல வீட்ல சித்த நேரம் கண்ணசர ஒறங்கி எந்திரிச்சு வெயில் தாழ சாய்ங்காலமா வாங்க” விரட்ட ஆரம்பித்தார்.

   ``சின்னப்பிள்ளையெல்லா பகல் தூக்கம் தூங்கக் கூடாதுன்னு வீட்ல வெரட்டிவிட்டாக பாட்டி.”

   ``ம், ஒங்கள இங்கிட்டு ஓட்டிவிட்டு ஒங்க ஆத்தாலும் அப்பனும் சாலியா ஒறக்கம் போடுறாகளாக்கும்? ஒறக்கம் பிடிக்காட்டி வீட்டுப் பாடத்த ஒக்காந்து எழுதலாம்ல, இங்கன வந்து கும்மர்ச்சம் போடாம!”
   ``வீட்டுப்பாடமெல்லா இன்னிக்கி ஸ்கூலயே முடிச்சிட்டோம் பாட்டி” சரிக்குச் சரியாக விகல்ப மில்லாமல் பேசினர். அது என்னவோ சரசு சித்திக்கு தன்னை அவமதிப்பதாகப் பட்டது மேலும் குரல் உயர்த்திப் பேசலானார்.

   ``போயிட்டு அப்பறமா வாங்கடான்னா, உத்திக்கி உத்தி பேசுறீக! ஒங்க வயசு என்னா, வாலிவம் என்னா... போங்கடா எந்திரிச்சு!”

   சிறுவர் இருவரும் எழுந்து  என்னைக் கடந்து சென்றனர்.

   தாம்பாளத்தையும் பழைய துணியையும் வெளியில் வைத்துவிட்டு உள்ளே சென்ற சரசு சித்தி, வடகம் வார்ப்பதற்கான கூழுடன் மறுபடியும் வந்தார். துணியை விரித்து வடகத்தைப் பிழிந்தார்.
   எனக்கு உள்ளேயும் போக முடியாமல் வெளியிலும் செல்ல முடியாத இக்கட்டான சூழல். வீட்டுக்குள் மனைவி பாயை விரித்து தலையணையைப் போடும் டமால் எனும் பேரோசை கேட்டது. நாலு நாலரை மணி வரை தலை சாய்ப்பாள். பள்ளிவாசலில் வாங்கு சொல்லும் நேரத்தில் எழுந்து அடுத்த வேலைகளைக் கவனிப்பாள். எனக்கும் தலை சாய்க்கவேணும்போலிருந்தது. உள்ளே சென்று அவளது பாயில் அணைத்துப்படுத்து சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக்கொண்டால் படபடப்பு அடங்கலாம். பகலில் தொட்டால் சும்மாவே அலறுவாள்.

   ``என்னங்யா மதிய சாப்பாடு ஆச்சா ?” சரசு சித்திதான் கேட்டார்.

   ``சாப்ட்டாச்சு சித்தி.”

   ``அம்மாபிள்ள என்னா செய்து?”

   ``இப்பதே படுக்கையப் போட்ருக்கா சித்தி” என்றவன் தொடர்ந்து, ``சோத்து வடகமா சித்தி” எனக் கேட்டேன்.

   ``ஆமாங்யா, நேத்து வெரதம்னு ஆரும் சரியா சோறு திங்கல. வீணாப் போக்காட்டி என்னான்னு தோணுச்சு. மொளகாப்பொடி, உப்பு சேத்து பிழிஞ்சிவிட்டா வெஞ்சனத்துக்கு ஆகும்ல.”

   ``மொட்டமாடில போட்டா நல்லா காஞ்சிடும்ல சித்தி.” பேச்சு பேச்சாக இருந்தாலும் சித்தியின் பார்வை அவரது வீட்டுக்கு எதிர்ப்புறம் இருக்கும் மீசைக்காரரின் அறைப்பக்கம் போகவேண்டும் எனப் பிரார்த்தித்தேன்.

   ``மாடில காக்காச் சனியே வந்து துணியோட தூக்கிட்டுப் போய்த் தொலையிது.”

   ``மச்சி... என்னாவாம், இன்னியாரத்துல. . . வெயில் போன பெறகு வடகம் போடுற?” முதல் வீட்டு நாயகம் அத்தை, கொசுவ சேலையை இழுத்துச் செருகியபடி சரசு சித்தியின் முன்னால் வந்து நின்றது.

   இனி இருவரும் திண்ணையில் உட்கார்ந்து பேச்சில் கூடிவிடுவார்கள். மீசைக்காரர் முழித்துக்கொண்டிருந்தால் சில நாள்கள் அவரும் வந்து கலந்துகொள்வார்.

   எதுவும் தோன்றாமல் நானும் அப்படியே வீட்டுவாசலில் அமரலானேன். 4 மணிக்குக் கடையைத் திறக்க வேண்டும். இங்கே நடுவீட்டில் ஒரு பிணத்தைத் தொங்கவிட்டுக்கொண்டு இப்படிக் கையாலாகாமல் இருப்பது கேவலமாய் இருந்தது.

   இவர்கள் இருவரையும் பயன்படுத்தி விஷயத்தைத் தெரியப்படுத்திவிடலாமா? அப்படிச் செய்தால் காரியம் சுலபமாய் இருக்கும். எப்படிச் சொல்வது? `நீ எப்போ பார்த்தாய்? உனக்கு எப்படித் தெரியும்? ஏன் இவ்வளவு நேரம் சொல்லவில்லை?’ இத்தனைக் கேள்விகள் வரும்.

   ஒருவேளை யாரும் பார்க்காமல்போனாலும் சிக்கல்தான். இரவெல்லாம் பிரேதம் ஊசலாடிக்கொண்டிருக்கும். நடுசாமத்துக்குப் பின் நடமாடும் நாய்கள் ஏதும் செய்தால்தான் பயங்கரம்.

   `ஊரெல்லாம் போய் ஒப்பாரி வைக்கிற கிழடுகள், எதிர்க்கத் தொங்கும் பிணத்தைப் பார்க்க மாட்டேங்குதுகளே!’

   கடைக்குப் போவதே உசிதம் எனப் பட்டது.

   வீட்டுக்குள் சென்று தலையை வாரிக்கொண்டு கிளம்பலானேன். மனைவி மல்லாக்கப் படுத்து வலக்கையை நெற்றியின் குறுக்கே கிடத்தியபடி உறக்கத்தில் இருந்தாள். ஒருகால் குத்திட்டு நிற்க இடதுகால் சற்று வளைத்து நீட்டி இருந்தது.

   வாசலை விட்டு இறங்கியதும் கால் செருப்பை மாட்டிக்கொண்டு, மறுபடியும் சரசு சித்தி இருந்த இடம் சென்றேன். ஓரப்பார்வையில், மீசைக்காரரின் வெள்ளை வேட்டி கொடியில் காயப்போடப்பட்ட துணிபோலக் காற்றில் அசைந்துகொண்டிருந்தது.

   பிழியப்பட்ட வடகத்தின் அருகே நீளமான கழை ஒன்றைக் காவலுக்கு வைத்துவிட்டு, சரசு சித்தியும் நாயகம் அத்தையும் தம்பி வீட்டின் திண்ணையில் ஜோடியாய் அமர்ந்திருந்தனர். தம்பி வீட்டுக் கதவு இன்னும் திறக்கப்படாதிருந்தது. இது பின்வாசல். தம்பியின் பிள்ளைகள் பள்ளிகூடம் விட்டு வந்த பிறகுதான் அது திறக்கப்படும் அல்லது காலை மாலை என, குளிர்ந்த பொழுதில் திறந்துவைத்து உட்காரு வார்கள். மற்றபடி அத்தனை உபயோகமும் முன்புறம் உள்ள பிரதான வாசல்தான்.

   ``கடைக்குக் கெளம்பியாச்சாங்கய்யா?”

   ``ஆமா சித்தி.”

   ``தம்பிக்கு மத்தியான உறக்கம் பழக்கமில்லியா?”

   ``நெனச்சா ஒறங்குவேன்த்த”  நாயகம் அத்தைக்குப் பதில் சொன்னவன், ``இன்னிக்கி என்னமோ தண்ணி பிடிக்கக்கூட ஒர்த்தரையுங் காணோம்?” எனச் சொல்லியபடியே சுற்றிலும் பார்வையை அலைய விடுவதுபோல மீசைக்காரர் வீட்டில் நிறுத்தினேன்.

   ``ஒருத்தியும் வரக்குடாதுன்னு கண்டிசன் போட்டுட்டேன்ல. வேணும்னா காலைலயும் சாயங்காலமும் மட்டும்தா வரணும். கண்டநேரம் வந்து கரச்சல் குடுக்கக்குடாது. மோட்டாரப் பூட்டி சாவிய வச்சுக்கிட்டேன்ல” - சரசு சித்தி.

   ``சர்க்காரு கொழாயப் பூட்டி சாவியக் கைல வச்சுக்கறது . . . தைரியந்தே!”

   ``இல்ல நாயகம்!  அதேன் தெருவுக்கு ஒரு மோட்டாரு இருக்குல்ல. அவ அவ தெருவுல நின்னு பிடிக்கவேண்டிதான. இங்க வந்தா ஒழுக்கமாப் பிடிக்கணும்ல. ஆளில்லன்ன ஒடனே சோப்புபோட்டு நொட்டுநொட்டுன்னு துணியத் தொவைக்க ஆரம்பிச்சிடுறாளுக. ஊர்ல இருக்க ஊத்தையெல்லா நம்ம தலவாசல்ல வந்து சேருது.”

   ``ஆனா, இப்ப பாருங்க. இத்தம்பெரிய தெருவுல பேச்சுத் தொணைக்குக்கூட ஆருமில்லாம ஒத்தையா ஒக்காந்து இருக்கீங்கள்ல” என்றேன்.

   ``ரெண்டுபேரையும் பேயா தூக்கிட்டுப் போவப்போவுது. என்னா மச்சி? வேணும்னா மீசக்காரரக் கூப்புட்டுக்குவம். வெட்டியா குப்புற அடிச்சுப் படுத்துக் கெடப்பாப்ல. யே மீசக்கார்ரே ... மாமா... மீச மாமா...” சரசு சித்தி உட்கார்ந்த வாக்கில் சத்தம்போட்டுக் கூப்பிட ஆரம்பித்ததும், எனக்கு குப்பென வியர்த்தது. கால்கள் வலுவிழப்பதுபோல உணர்ந்தேன்.

   ``ச்சும்மாதே இரு மச்சி. பாவம். அவர் பாட்டுக்கு ஒறங்குனா ஒறங்கீட்டுப்போறாரு.”

   அப்படியே ஏதும் பேசாமல் கிளம்பி, கடையை நோக்கி நடக்கலானேன். கால்கள் பின்னிக்கொண்டது மாதிரி நடக்கவே சிரமமாயிருந்தது. இழுத்து நடக்க முடியவில்லை. மீசைக்காரர் அழைப்பதுபோலவும், அவர் பின்தொடர்ந்து வருவது போலவுமான ஒரு பிரமை.

   இதே வீதியில்தான் ஒருமுறை அவர் சொன்ன ஞாபகம். `எனக்கு இனி சொந்தபந்தமெல்லா இங்கதே. யாரும் என்னத் தேடி அங்கிருந்து வர வேணாம். ஐயா, புள்ள, பேரெம்பேத்தின்ன பாசமெல்லாம் போதும். காச்ச, மண்டவலின்னா ஒரு சீரகத் தண்ணி வச்சுத்தர தம்பாபிள்ள தெருவுல ஆளிருக்கு. ஒருவேளை நா செத்துப் போனாலும் நீங்கள்லாம் அரக்கப் பரக்க வரணும்ன அவசியமில்ல. கைப்பிடி மண்ணள்ளிப்போட இதோ எம்மகெ இருக்கான். என்னடா மகனே! நீங்க ஒங்க சோலி தொந்தரவப் பாத்து முடிச்சு சாவகாசமா வரலாம்’ எனச் சொந்த மக்களிடம் சொன்னது இப்பவும் கணீரென ஒலித்தது.

   மணியன்பிள்ளை கடையில் வேலைபார்த்துக்கொண்டிருந்த போது ஒருநாள் எண்ணெய்ச் சட்டி தடுமாறி காலில் கவிழ்ந்து விட்டது. நல்லவேளையாய் பாதத்தில் மட்டும் எண்ணெய் சிதறியிருந்தது. காலை இழுத்து ஒதுக்கிக்கொண்டார். சுதாரிக் காமல் இருந்தால் அடிவயிற்றில் கொட்டியிருக்கும். ஆஸ்பத்திரிக்கு வேண்டாம் எனச் சொல்லி விட்டார். ``கைப்பக்குவம் நாம் பாத்துக்கறேன்’’ என அறைக்கு வந்துவிட்டார். தெரு ஜனங்கள் கூடிவிட்டனர். சரசு சித்தி, என் மனைவியைத் துணைக்கு வைத்துக்கொண்டு சிஷ்ருசைகள் செய்தார். மனைவியின் தலையீட்டால் நானும் போக வேண்டிவந்தது. நான் போனதால் கூச்சமற்று அவரால் வைத்தியத்தைத் தொடர முடிந்தது. குதறிப்போன புண்கள் ஓரளவு வாடிய சமயம் மீசைக்காரரின் மருமகளும் மகனும் பார்க்க வந்திருந்தனர். அன்றைக்குத் தான் அப்படி ஒரு முடிவைச் சொன்னார். அது என்னவோ ரத்தபந்தம்போல நெஞ்சில் ரீங்காரமிட்டுக் கொண்டேயிருக்கிறது. மீசைக்காரர் `என்னடா மகனே..?’ எனும் போதெல்லாம் அவரது அந்தப் பேச்சு மறுபடி மறுபடி புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது.

   `மணியன்பிள்ளை கடையில் போய்ச் சொல்லிவிட வேண்டியதுதான்’ எனத் தீர்மானித்தேன். ஒருவேளை மீசைக்காரரின் துர்மரணத்தின் காரணம் அவர்களுக்குத் தெரியலாம். இல்லாவிட்டாலும் அவர்களது பாதுகாப்பில் இருப்பதால் மேற்கொண்டு என்ன செய்வது என அவர்கள் முடிவுசெய்வார்கள். விஷயத்தைச் சொன்னால் போதும். கடை ஆள்களைக்கொண்டு இறக்கி, ஆகவேண்டியதைச் செய்வார்கள். ஒருவேளை போலீஸுக்குப் போனாலும் அவர்கள் பாடு.

   போலீஸ் என்றவுடன் மறுபடியும் மனம் பின்னுக்கு ஒளிந்தது. `மொதல்ல பாத்தது யாரு? எப்ப பாத்தீங்க? எதுக்காகப் போனீங்க? அவரா தொங்குனாரா... இல்ல நீங்க தொங்கவிட்டீங்களா? கைரேகையக் குடுத்துட்டுப் போங்க. எப்பக் கூப்பிட்டாலும் வரணும்!’ தலை கிறுகிறுத்தது.

   மணியன்பிள்ளை காபிக் கடையை நோக்கி வேகமாய் எட்டுவைத்து நடந்தேன். கண்களை மூடிக்கொண்டு நடந்தவற்றை ஒப்பித்துவிட்டு வந்து விடவேண்டும். என்ன நடந்தாலும் நடக்கட்டும். தூரத்தில் இருந்தபடியே பார்க்க அதன் பழைமை மாறாத தோற்றம் மீசைக் காரரையே நினைவு படுத்தியது. கான்கிரீட் கட்டட மென்றாலும் பார்வைக்காக முன்புறம் கிடுகுக்கூரை வேய்ந்து மூங்கில் தப்பைகளால் தட்டுக்கதவு போட்டிருந்தார் மணியன்பிள்ளை.

   கடையை நெருங்கியபோது விசுக்கென்றது.

   `இன்று விடுமுறை.’

   சிவப்பு ஸ்கெட்ச் பேனாவால் எழுதப்பட்ட காலண்டர் அட்டை, மூங்கில் தட்டில் தொங்கவிடப்பட்டிருந்தது.

   வேறு வழியின்றி எனது கடைக்குச் சென்றேன். கடையில் உட்கார்ந்து நிம்மதியாய் வியாபாரம் பார்க்க முடியும் எனத் தோன்றவில்லை. கடையைத் திறக்காமலேயே சிறிது நேரம் உலாத்தினேன்.

   ``என்ன மொதலாளி... கட லீவா?” பக்கத்துக் கடைக்காரர் கேட்டார். கண்ணில் படுவோரெல்லாம் அவருக்கு முதலாளிதான்.

   ``ஆமா ராமரு, ஒடம்பு சரியில்ல. அதேன் தெறக்கலாமா, வேணாமான்னு நிக்கிறேன்.” வயசில் இளையவன்.

   ``கடை என்னா மொதலாளி கடை, அத எப்பவேணா தெறக்கலாம். ஒடம்பு முக்கியம். அதப்பாருங்க. ரெஸ்ட்டப் போடணும்னு தோணுச்சுன்னா போட்ருங்க. வாரதப் பாப்பம்.”

   அங்கேயே கொஞ்ச நேரம் நின்றேன். ஒவ்வொரு விநாடியும் மணிக்கணக்கில் நகர்ந்தது. ராமர் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தான். எதுவும் புத்தியில் ஏறவில்லை. தம்பாபிள்ளை தெருவிலேயே மையம்கொண்டிருந்தது. என்ன பொழப்பு... ச்சே! இத்தனை வயசுக்கு வாழ்ந்து என்ன பிரயோசனம்? எத்தனை பேருடன் பழகி, என்னென்ன அனுபவங்கள் அத்தனையும் அடைந்து என்ன பலன்? சின்னஞ்சிறு பிரச்னையை எதிர்கொள்ள முடியவில்லை. அப்பா, அண்ணன், தம்பி, புருஷன், முதலாளி எத்தனை பெயர்? ‘மலட்டு ராசாவுக்கு மண்டபம்கொள்ளாத மனைவிமார்களாம்!’ சரசு சித்தி பேசுகிற சொலவடை காதில் ஒலித்தது.

   வீதியில் யாரோ காறித் துப்பினார்கள்.

   ``டீ குடிக்கலாமா மொதலாளி?”

   ``கடைல போய்க் குடிக்கலாமா?”

   ஒரே இடத்தில் நிற்பது நரகம்போலிருந்தது. எங்கேயாவது இடம்பெயர்ந்துகொண்டே இருக்க வேண்டும்.

   பொதுவாக, கடைக்காரர்கள் பார்சல் வாங்கிப் பகிர்ந்துகொள்வது வாடிக்கை. ராமரின் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. சட்டென அதை மறைத்து, ``எங்க வேணாலும் போலாம் வாங்க. காரியமா முக்கியம்? வீரியம்தான முக்கியம்.”

   டீயைக் குடித்துவிட்டு நிமிடப்பொழுதையும் வீணடிக்காமல் மீசைக்காரரைப் போய்ப் பார்க்க வேண்டும். நல்லவேளையாய் டீக்கடையில் கூட்டமில்லை. ``வடையெல்லாம் வேணாம்’’ என்றேன். டீ கைக்கு வந்தது.
   ``என்னாய்யா, ஒங்க சித்தப்பா செத்துப் போய்ட்டாராம்ல?” என்ற கேள்வி ஒன்று பின்னாலிருந்து வர, டீ டம்ளர் கை நழுவிக் கீழே விழுந்தது.

   தெருவுக்குள் நுழைய அந்தி சாய்ந்திருந்தது. மஞ்சள் வெளிச்சம் மட்டும் தன் மிச்சத்தை அங்கங்கே தெருக்களில் தெளித்திருந்தது. தெருமுனையில் காலெடுத்து வைக்கும்போதே மனதில் பயம் ஒன்று ஏறி உட்கார்ந்து அடைகாத்தது. எப்போது அது அவிழும்? தெருவில் அத்தனை வீட்டிலும் வாசல்கதவுகள் விரியத்திறந்து கிடந்தன. யாரும் வீடுகளுக்குள் இல்லை. குழாயடியில் மொத்தக் கூட்டமும் நின்றிருந்தது.

   யார் பார்த்தது? பிரேதத்தை யார் தைரியமாய் இறக்கியது?

   இடத்தை நெருங்க நெருங்க கால்கள் வேகமெடுத்தன. எனது காலடி ஓசை கேட்டு கூட்டம் கொஞ்சம் விலகியது. பூராமும் பெண்கள், குழந்தைகள். ஆண்கள் யாருமே இல்லை.

   குழாயடியில் மீசைக்காரரின் கட்டில் கிடந்தது. அதன் மேல் மீசைக்காரரின் பிரேதம் கிடத்தியிருந்தது. பக்கத்தில் சரசு சித்தி, மீசைக்காரரின் தலையைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்தார்.

   ``வாங்கய்யா. சரியான நேரத்துக்கு வந்துட்ட, குளுப்பாட்ட ஆள் இல்லியேனு தேடிட்டிருந்தம். நீதே வந்து குளுப்பாட்டணும்னு இருந்துருக்கு பாரு!”

   ``தம்பியும் அப்ப இருந்துச்சுல்ல, நாங்க எல்லாமுந்தான நிண்டு பேசிட்டிருந்தம். நீங்க கடைக்குக் கெளம்புனப்பறம் நானும் போயிட்டென்யா. அதுக்குப் பெறவு மச்சி உள்ள போய்ப் பாத்துருக்கு. அண்ணே கட்டுல்ல நீச்சு நெனவுல்லாம கெடந்திருக்காரு. எந்நேரம் உசிர் பிரிஞ்சதுன்னு தெரியல” நாயகம் அத்தை, சத்தமாய் வாக்குமூலம் தந்தார்.

   நான் சரசு சித்தியையே பார்த்துக்கொண்டிருந்தேன். ``வாங்கய்யா, பொழுது விழும் நேரம் சீக்கிரமா குளுப்பாட்டி சாமியக் கும்பிடணும்” என்றவர், என்னைத் தனியே அழைத்தார், ``பாவப்பட்ட மனுசன்யா. என்னா விதியோ தொங்கீட்டாரு. பதறுனம்னா அறுத்து கூறுபோட்ருவாங்க. அதனால அம்மாபிள்ளயத் தொணைக்கு வெச்சுக்கிட்டு எறக்கிட்டோம். ஊரு விட்டு, ஒறவு விட்டு வந்த மனுசெ... நாமதே ஒறவு! வாரதப் பாப்பம்யா. வாங்க, பெத்த தகப்பனா நெனச்சி குளிப்பாட்டுங்க’’ என்றார்.  சித்தியை அப்படியே இறுகக் கட்டிக்கொண்டு கதறலானேன்.

   நாகு, குழாயடியிலிருந்து தண்ணீர்க்குடம் தூக்கி வந்து என் முன்னே வைத்தாள். கைகளில் படிந்திருந்த ஈரத்தைத் தன் முந்தானையால் ஒற்றிக்கொண்டு என்னைப் பார்த்தாள்.

   அவள் முகத்தில் மீசை ஒட்டியிருப்பதுபோலத் தெரிந்தது எனக்கு.
   https://www.vikatan.com