Jump to content

ஆசை முகம் - சிறுகதை


Recommended Posts

ஆசை முகம் - சிறுகதை

தமிழ்மகன் - ஓவியங்கள்: ஸ்யாம்

 

62p11.jpg

ஞ்சிதா எந்த நம்பிக்கையில் உறங்கிக்கொண்டிருக்கிறாள் எனத் தெரியவில்லை. அவளைத் தோளில் தாங்கியிருந்த ராஜனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. காருக்குள் ஜன்னல் காற்று ஆவேசத்தோடு வீசியது. அவள் தலைமுடி அலைந்து, ராஜனின் முகத்தில் சிறு கிளர்ச்சியை ஏற்படுத்தியவண்ணம் இருந்தது. காரின் கண்ணாடியைப் பாதி மூடி, காற்றைக் கட்டுப்படுத்தினான் ராஜன். அவனுடைய அசைவு அவளுடைய உறக்கத்தைக் கலைத்துவிடக் கூடாது என்ற யத்தனிப்பையும் மீறி, அவள் தன் கண்களை லேசாகத் திறந்து, அவனோடு மேலும் நெருங்கி அமர்ந்து புன்னகைத்தாள். துப்பட்டாவைப் போர்த்திக்கொள்ளும் சாக்கில் தோளில் மெள்ளக் கடித்தாள்.

காலையிலேயே கிளம்பியது, வழியில் சாப்பிட்ட வெண்பொங்கல் எல்லாம் சேர்ந்து ஏற்படுத்திய மயக்கநிலை. சமீபகாலங்களில் பசுமைத் தாகம் ஏற்பட்டு, இப்படி ஒரு பயணத்தை முடிவுசெய்தாள். சுயமாக முடிவெடுக்கக்கூடிய, அழகியல் சிந்தனைகொண்ட, நாகரிகமான... எனப் பல முன்னொட்டுகள் போட்டு ‘மணமகள் தேவை’ என விளம்பரம் கொடுத்து, தேடிப்பிடித்ததுபோல ராஜனுக்குக் கிடைத்தவள். சென்னையில் உள்ள வெளிநாட்டு கார் நிறுவனம் ஒன்றில் புரொடக்‌ஷன் மேனேஜர். அவளுக்கு அம்மா மட்டும்தான்; அதுவும் சேலத்தில். ராஜனுக்கு அம்மாவும் இல்லை. சொந்தக்காலில் சௌகர்யமாக நிற்கும் சாஃப்ட்வேர் வேலை. திகட்டத் திகட்டக் காதலித்து முடித்து, சமீபத்தில் காதலுக்கான இலக்கணங்களையும் மீறத் தொடங்கியிருந்தனர்.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை உறவுகள் இல்லை. எனினும், எல்லோருக்கும்போல அவனுக்கும் சொந்த ஊர் ஒன்று இருந்தது. சொந்தமாக ஓர் உறவும் இல்லாத, சொந்தமாக ஒரு வீடும் இல்லாத ஒரு சொந்த ஊரை, சொந்தம் கொண்டாடுவதில் உருவான கூச்சத்தில் குவிந்துகிடந்தது மனம்.

யாரைப் பார்க்கப் போகிறோம், அவருக்கு நம்மை நினைவிருக்குமா, அவர் இப்போது இருக்கிறாரா, அவர் நமக்கு என்ன உறவு... போன்ற கேள்விகள், புறப்பட்டு வந்த பாதி வழியில் கொக்கிகளாகக் கீறிக்கொண்டிருந்தன.

இத்தனையும் மீறி அந்த ஊரை நோக்கிப் பயணிப்பதற்கு, அவனுக்குச் சொந்தமாக ஒரு முகம் இருந்தது. அவனுடைய நினைவு சரியாக இருந்தால், அந்த முகத்துக்கு உரியவரின் பெயர் ராஜாமணி. நினைவு என்னவோ அந்தப் பெண்மணியின் விஷயத்தில் சரியாகத்தான் இருந்தது. ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே அறுந்துவிட்ட சங்கிலியை இணைக்கும் ஒரு சந்தர்ப்பமாகவும் ராஜன் அதை நினைத்தான். அவன் அந்த ஊரில் அன்பு பாராட்டும் என இன்னமும் எதிர்பார்த்தது அந்த முகத்தைத்தான்.

ராஜாமணியோடு சேர்ந்தே நினைவுக்கு வந்தது, ஓம் சக்தி டென்ட்கொட்டாய். அது இப்போது என்னவாக மாறியிருக்கிறதோ. அங்குதான் முதன்முதலாக அந்த முகம் அறிமுகம். சினிமா கொட்டகையில் படம் பார்த்துக்கொண்டிருந்தபோது, இருட்டில் துழாவித் துழாவித் தேடிவந்து கண்டுபிடித்து, இரண்டு கஜுராவை இரண்டு கைகளிலும் திணித்துவிட்டுப் போனபோது, அந்தப் பெண்மணியின் முகம் ஏறத்தாழ இருட்டுபோலத்தான் இருந்தது. அம்மாவின் மடியில்தான் ராஜன் அமர்ந்திருந்தான்.

அம்மா, ‘‘வாங்கிக்கடா...’’ என்றார், அந்தப் பெண்மணியைப் பார்த்துப் புன்னகைத்தபடி. அந்த டென்ட்கொட்டாய், இப்போது ஓர் அடையாளமாக இருக்க முடியாது.

டென்ட்கொட்டாய்களுக்கான அனுமதி இப்போது எங்கும் இல்லை. அந்தப் பெண்மணியை இரண்டாவது முறை பார்த்தது நன்றாக நினைவிருந்தது. டென்ட்கொட்டாயில் பார்த்த அடுத்த நாள் அது. இருட்டில் பார்த்ததால் அல்லது அந்த முகத்தை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும் என்ற யத்தனிப்பு இல்லாததால், அதைவிட கஜுரா முக்கியமாக இருந்ததால், அந்த முகத்துக்குச் சொந்தமானவர் ஒரு பெண் என்பதைக்கூட, அவன் மறந்திருந்த அந்த இரண்டாவது நாளில் அவளைப் பார்த்தான்.

ர் மக்களுக்குத் தடுப்பூசி போடவந்த நர்ஸ் அக்காவுக்குத் துணையாக, அவனை ஊரில் எல்லோருடைய வீடுகளையும் காட்டச் சொல்லியிருந்தார்கள். வீடுகளைக் காட்டினான். அந்த நர்ஸ் அக்காவுக்குத் துணையாக இருந்தான் என்றெல்லாம் சொல்ல முடியாது. சாண் பிள்ளை ஆண்பிள்ளைகணக்கில் அந்த அக்காவின் முன்னால் அவன் ஓடிக்கொண்டி ருந்தான்.

‘ஆட்டுக்குட்டி முட்டை இட்டு, கோழிக் குட்டி வந்ததுன்னு யானைக் குஞ்சு சொல்லக் கேட்டு பூனைக்குஞ்சு சொன்னதுண்டு...’ - பாடலைப் பாடியபடி துள்ளல் ஓட்டம்.

அந்தக் குடிசை, டென்ட்கொட்டாயை ஒட்டி இருந்தது. ‘‘எனக்கு எதுக்கும்மா தடுப்பூசி?’’ என்றவர், ‘‘இது யார் வூட்டுப் புள்ள?’’ என்றார். அவன் அப்போதும் அந்தப் பாட்டைப் பாடிக்கொண்டிருந்தான், இடையில் நிறுத்த மனம் இல்லாமல். அறிமுகம் செய்வதற்குள் அந்தச் சரணத்தைப் பாடி முடித்துவிட வேண்டும் என்பது மட்டும்தான் அவனுக்கு முக்கியமாக இருந்தது.

62p21.jpg

‘‘கூத்துக்கட்டுவாரே தில்லை அண்ணன்... அவரோட பையன்’’ - நர்ஸ் அக்கா சொன்னார்.

‘‘அப்படியா... நேத்து டென்ட்கொட்டாய்ல பார்த்தனே. இங்கே வா ராசா...’’ என்றபடி வாரி அணைத்துக்கொண்டார். வேகவைத்திருந்த வள்ளிக்கிழங்கை சூடு ஆற ஊதி ஊதி ஊட்டினார். ராஜன் அழைத்து வந்த நர்ஸ் என்பதற்காகவே கண்களை இறுக மூடி, ஊசி போட்டுக்கொள்ளவும் சம்மதித்தார். அடுத்த சந்திப்பிலும் அந்த முகத்தோடு சேர்ந்து, சில தின்பண்டங்கள்தான் நினைவுக்கு வந்தன. வெற்றிலைக் காவி ஏறிய உதடு. முப்பதின் ஏற்ற இறக்கத்தில் வயது. ஆனால், தின்பண்டங்களை வழங்குவதன் பின்னணியில் இருந்தது அவருடைய எளிய அன்பின் தாய்மை. அம்மாவும் அதைத்தான் சொன்னாள், ‘‘அவங்களும் உனக்கு அம்மா மாதிரிதான்.’’

தில்லைராஜன், ராஜபார்ட் நடிகர். ‘ராஜகுரு’, ‘பவளக்கொடி’ இரண்டும் அவருக்குத் தண்ணிப்பட்ட பாடு. சரக்குப் போட்டுவிட்டால் இரவு முழுவதும் அவருடைய வசனப் பாராயணங்களை மனப்பாடமாகச் சொல்வார். இத்தனைக்கும் எழுதப் படிக்கத் தெரியாது. டேப்ரிக்கார்டர் மாதிரிதான். என்ன சொன்னார்களோ அதை அப்படியே சொல்வார். ஒருமுறை ஊர்த் திருவிழாவுக்கு அடவுகட்டி ஆடியவர், பின்னர் அக்கம்பக்கத்தில் கூத்து போட்டால் போய் வரத் தொடங்கினார். ராஜா வேடம் கட்டிவிட்டால், அதைக் கலைத்த பிறகும் ஒரு சிற்றரசன் மிடுக்கு ஒட்டியிருக்கும்.

‘`அதாகப்பட்டது... காட்டு ஜந்துகள் ஊரை நாசம் செய்வதை அறிந்து, பொதுஜனங்களுக்கான சிரமங்களை நீக்குவதற்கு அரசனானவர் முடிவெடுத்துக் காட்டுக்குப் புறப்பட்டார். புலியும் கரடியும் சிங்கமும் யானையும் சிறுத்தையும் நரியும் பெருகியிருந்த காரணத்தாலே... அதாகப்பட்டது அவற்றின் அட்டகாசம் அதிகரித்ததாலே, அரசனானவர் அந்த முடிவை எடுத்தார். அந்த நேரத்திலே... பட்டத்துராணியானவள் எதிரே தலைப்படவே, `ராணி... நான் இப்போதே காட்டுக்குப் புறப்படுகிறேன். காட்டு விலங்குகள் நாட்டு மக்களை இம்சித்துவருவதை நீயும் கேள்விப்பட்டிருப்பாய். அவற்றைத் துவம்சம் செய்துவிட்டு விரைவாகத் திரும்பி வருகிறேன். நீ அதுவரை அந்தப்புரத்திலே அமைதியாக ஓய்வு எடு. நான் திரும்பி வந்ததும் இல்லறத்திலே ஈடுபட்டு, நம் வம்சம் தழைத்திட ஓர் ஆண்மகனை ஈன்றெடுப்போம்' என்றபடி புறப்பட்டார்.’’

அரசனே கதையையும் சொல்லி, அவருடைய வசனத்தையும் சொல்லிக்கொண்டிருப்பார். அதைக் கேட்க ஒரு கூட்டம் எப்போதும் ஆர்வமாக இருக்கும். பெண் வேஷம் போடும் அருணாசல ஆசாரியும் அதே ஊரில்தான் இருந்தார். இன்னும் பல வேஷக்காரர்கள் அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்து வருவார்கள். திருவிழாக் காலங்களில் அவர்களைக் கையில் பிடிக்க முடியாது. தில்லையிடம் ராஜாமணி சொக்கிப்போனதும் அந்தக் காலகட்டத்தில்தான்.

அடுத்த சில நாட்களில் வீடியோ பிரபலமாகிவிட, புதுப்புது சினிமா டேப்களை வாடகைக்கு எடுத்துவந்து, திருவிழாவைச் சிக்கனமாக முடித்துக்கொள்ள ஆரம்பித்தனர். வீடியோக்களில் ரஜினியும் கமலும் ஸ்ரீதேவியும் ஸ்ரீப்ரியாவும் கூத்துக்கட்டுகிறவர்களைவிட அதிகமாகவே ஜொலித்தார்கள். தில்லையின் நடிப்பாசை, டென்ட்கொட்டாய் வாசலில் தன் கம்பி மீசையைத் தடவிக்கொண்டு நிற்பதில் வந்து நின்றது. அங்கே அவருக்கு என்ன வேலை என்பதை, கோடு கிழித்தாற்போல் சொல்ல முடியாது. கவுன்ட்டர், டிக்கெட் கிழிக்கும் இடம், மசால்வடை விற்கும் இடம், புரொஜெக்டர் இருக்கும் இடம் என எல்லா இடங்களிலும் சுழல்வார். எடுபிடியா, மேனேஜரா என உறுதிபடச் சொல்ல முடியாது. பெரிய வருமானம் இல்லை. அரை ஏக்கர் நிலம் அவர் பெயரில் இருந்தது. ஈடாகக் கடனும் இருந்ததால், நல்ல முகூர்த்தத்தில் அதை பைசல் செய்துவிட்டார்.

டென்ட்கொட்டாயில் மட்டும் அவருக்கு ஒரு ‘பவர்’ இருந்தது எனச் சொல்லலாம். ராஜாமணி அங்குதான் பலகாரக் கடையில் வேலை பார்த்தார். இடைவேளைத் தருணங்களில் டீ, வடை, பிஸ்கட்கள் விற்கும் சின்னக் கூரை ஒன்று டென்ட்கொட்டாய்க்குள் இருக்கும். ஒண்ணுக்குப் போன கையோடு ஆளுக்கு ஒரு மசால்வடையைச் சுவைத்துவிட்டு பீடியோ, சிகரெட்டோ பிடிப்பார்கள்.

விருத்தாசலம் மார்க்கெட்டில் அம்மாவும் அப்பாவும் லாரியில் அடிபட்டு இறந்தபோது, ராஜனுக்கு ஒரே துணை அவனுடைய படிப்பு மட்டும்தான். வீட்டுமனை, நஷ்டஈடு என கையில் ஒவ்வொன்றாக வந்தபோது, அவை அவனுக்கு அத்தனை பயனுள்ளவையாக இல்லை. அதற்குள் அவன் ஹெச்.சி.எல் சாஃப்ட்வேரில் டீம் ஹெட்டாகி இருந்தான்.

62p3.jpg

ஞ்சிதாவுக்கு ஜன்னல் வெயில் சற்றே அதிகப்படியாகத் தெரிந்திருக்க வேண்டும். துப்பட்டாவால் முகத்தை மூடிக்கொண்டாள். இமை திறவாமல், ‘`இன்னும் எவ்ளோ தூரம்?’’ எனக் கேட்டபோது, ராஜனும் ஏதாவது கிலோமீட்டர் பலகை கண்ணில் படுகிறதா எனத் தேடினான்.

‘`வந்துடுச்சு.’’

‘கர்ணாவூர்' என்ற பலகை, கண்ணில்பட்டது. ராஜன், `இதுவா கர்ணாவூர்?' என, காரின் எல்லா ஜன்னல்கள் வழியாகவும் ஒருமுறை சொந்த ஊரைத் தேடினான். காரை ஓரங்கட்டி நிறுத்திவிட்டு, மாபெரும் குழப்பத்தோடு அந்தக் கூட்டுரோட்டில் இருந்து, தன் ஊருக்குத் திரும்பும் பாதையைத் தேடினான்.

‘`கர்ணாவூர்னுதான் போட்டிருக்கே?’’

`அப்புறம் ஏன் முழிக்கிறே?' என்பதைத்தான் ரஞ்சிதா அப்படிக் கேட்டாள். புழுதியைப் பறக்கவிட்டுக் கிளம்பிப் போனது பேருந்து ஒன்று. நிறுத்தத்தில் நின்றிருந்த யாரோ ஒருவரும் அந்தப் பேருந்தில் ஏறிப் போய்விட்டார். சாலை மிகவும் அகலப்படுத்தப்பட்டு, ஊரின் அடையாள மரங்கள் நீக்கப்பட்டிருந்தன. பேருந்து நிறுத்தத்திலேயே பூவரசம் மரம் ஒன்று இருக்கும். சாலையின் இரண்டு பக்கங்களிலும் ஆலமரம், அரசமரம், புளியமரம் என வரிசைகட்டி நிற்கும். அங்கிருந்து சென்னைக்கு பஸ் ஏறிய காட்சி நினைவுக்கு வந்தது. கூட்டுரோட்டில் டென்ட்கொட்டாய். அதை ஒட்டி ஒரு பஞ்சர் கடை. அடையாளத்துக்கு, ஒரு டயரை மரத்தில் கட்டித் தொங்கவிட்டிருப்பார்கள். ஓர் அடையாளமும் இல்லை. ஜார் ஆட்சி முடிந்து, கம்யூனிஸ ஆட்சி வந்ததுபோல் வேரடி மண்ணோடு புரட்டிப்போட்டிருந்தார்கள்.

‘`டிரெஸ்ஸர் ஐலண்ட்’’ என்றாள் ரஞ்சிதா. பள்ளிப் பழக்கம். ஒன் பாத்ரூம் போக அப்படித்தான் சங்கேத பாஷை வைத்திருந்தார்களாம்.

‘`யாரும் இல்லை. அந்த மரத்துக்குப் பின்னாடி போயிட்டு வா’’ - அவன் காட்டிய மரத்துக்கு ஒரு வயசுகூட இருக்காது.

‘`அது ஒரு மரமா?’’

‘`கண்டுக்காதம்மா... நான்தான் நிக்கிறேன்ல!’’

அவள் தன் கடமையை முடிக்க, அரண்போல சாலையில் காரை நிறுத்தி நின்றான்.

டென்ட்கொட்டாய், அதை ஒட்டிய சின்னச் சந்தில் ராஜாமணி வீடு என்றுதான் நினைவுக்குறிப்பில் இருந்தது. அந்த அடையாளங்களைக் கண்டுபிடிக்க இயலவில்லை. ‘இங்கேதான் பக்கத்துல எங்க சொந்த ஊர்.
150 கிலோமீட்டர்கூட இல்லை’ எனச் சொல்லியிருந்தான்.

ரஞ்சிதா, ``போய்ப் பார்த்துவிட்டு வரலாம்'' என்றாள்.

அவளுக்குப் பண்ணைவீடு அமைக்கும் கனவு இருந்தது. `விவசாயத்தில் ஜெயிப்பது அவ்வளவு சாதாரணம் அல்ல. அது கிரிக்கெட்டில் ஜெயிப்பது மாதிரி இல்லை. பல ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்களே விற்றுவிட்டு நகரத்துப் பக்கம் நடையைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவளுடைய பண்ணைவீட்டுக் கனவு... அழகான தோட்டம், காய்கறி, பூக்கள், பம்ப் செட், சுற்றி மரங்கள், நடுவே வீடு என இருந்தது. இவ்வளவையும் உருவாக்கவே பல ஆண்டுகளும் லட்சங்களும் ஆகும். கூலி ஆள் கிடைப்பது, கரன்ட் கிடைப்பது, இன்டர்நெட் இல்லாமல் தவிப்பது, தண்ணீர்ப் பற்றாக்குறை எல்லாவற்றுடனும் இயற்கை அழகை ரசித்துக்கொண்டு வாழ்வது சிரமம்' என்பன எல்லாம் அவளை அச்சுறுத்தவில்லை. எனினும், புதிதாக ஒரு விவசாயி உருவாவது மிகவும் காஸ்ட்லியான சமாசாரமாகிவிட்டது  என்பதையும் அவளுக்குப் புரியவைக்க முடியவில்லை. பசுமை விகடனுக்கு ஆண்டு சந்தா செலுத்திவிட்டதாலேயே, அவள் தன்னை ஒரு விவசாயியாக நினைக்கத் தொடங்கிவிட்டாள்.

62p4.jpg

இதோ, இடம் தேடி வந்தாகிவிட்டது.

யாரும் இல்லாத குறுக்குச்சாலையில் சைக்கிளில் பெல் அடித்தபடி வந்துகொண்டிருந்த சிறுவனை அணுகி, ‘`இங்கே ராஜாமணின்னு ஒரு அம்மா...’’ என்றான்.
அவனும், ‘`ராஜாமணின்னு ஒரு அம்மா...’’ என யோசித்தான்.

‘`இங்கே ஒரு டென்ட்கொட்டாய் இருந்துச்சே, அதுல வேலைபார்த்தாங்க.’’

‘`டென்ட்கொட்டாயா..?’’

இன்னொருவர் பைக்கில் வந்தார். முகவரி விசாரிப்பது அறிந்து நிறுத்தினார். அவருக்கு டென்ட்கொட்டாய் தெரிந்திருந்தது. ஆனால், ராஜாமணியைத் தெரியவில்லை. ‘`இந்தப் பக்கம் குடியிருந்தவர்கள் எல்லாரும் காட்டில் குடிசை போட்டுக் குடி இருக்காங்க’’ என்றார்.

ராஜாமணி அம்மா இப்போது போட்டிருந்த குடிசை, முன்னர் பார்த்ததைவிட நன்றாக இருப்பதாக ராஜன் நினைத்தான். மறுபடியும் மடியில் உட்காரவைத்து, கைமுறுக்கு ஏதாவது தின்னக் கொடுப்பாரோ என்றபடிதான் இருந்தது, அவள் காட்டிய பரவசம். 23 வருடங்கள் கழித்துப் பார்த்தபோதும் அவரை அடையாளம் காண முடிந்தது. அறுபதை நெருங்கியிருப்பார் எனக் கணக்குப்போட்டான்.

‘`இது நான் கட்டிக்கப்போற பொண்ணு’’ என அவர்களுக்கான மொழியில் சொல்லிவிட்டு, ரஞ்சிதாவும் அதைப் புரிந்துகொண்டாளா என்பதாகப் பார்த்தான்.

ராஜாமணி நெருங்கி வந்து பார்த்து, ‘`பவளக்கொடியில் பார்த்த ராஜா ராணி கணக்கா இருக்கீங்க. எத்தினி வருஷம் ஆச்சு! இங்கே ஒருத்தி இருக்கானு தேடி வந்தியே அது போதும். ராஜபார்ட் பெத்த புள்ளையாச்சே. ராஜா மாதிரிதான் இருக்கும்’’ - அழுகையும் ஆச்சர்யமும் விசாரிப்புமாகப் பேசிக்கொண்டே இருந்தார் ராஜாமணி.

`‘குழந்தைக்குட்டி எல்லாம் இல்லை. தனிக்கட்டை'’ - பேச்சின் நடுவே ரஞ்சிதாவுக்குச் சொன்னார்.

``எங்க அப்பன் ஒரு குடிகாரன். என்னையும் என் அம்மாவையும் அறுவடைக்கு ஆள் வேணும்னு இந்த ஊருக்குக் கூட்டியாந்தாங்க. இங்கேயே தங்கிட்டோம்'’ என்ற தகவல் ராஜனுக்கே புதிதுதான்.
ரஞ்சிதாவின் விவசாய ஆசையைச் சொல்லி, ‘`இங்கே ஏதாவது இடம் வாங்க முடியுமா?'’ என விசாரித்தான்.
 
‘`மகேஷை வரச் சொல்றேன். கார்லயே வந்து போற மாதிரி ரோட்டு மேலேயே நல்ல இடமா காட்டுவான்.’’

ரஞ்சிதா, ராஜனும் ராஜாமணியும் பேசுவதை செல்போனில் படம் எடுத்து இருவருக்கும் காட்டினாள். ராஜாமணிக்கு, ஆச்சர்யம் தாளவில்லை. ‘`போட்டா நல்லா இருக்கும்மா. எனக்கு ஒரு போட்டா போட்டுத் தர்றியா?’’ என்றார்.
 
அப்படியே, செல்போனில் இருக்கும் வேறு சில போட்டோக்களையும் ரஞ்சிதா காட்டினாள். ‘‘நீங்க ரெண்டு பேர் இருக்கிறமாரி ஒரு போட்டோவும் குடும்மா. அதுக்கு என்னா செலவோ அதைக் குடுத்துடுறேன். அப்பல்லாம் போட்டோ ஏது?’’

‘‘அதெல்லாம் ஒண்ணும் இல்லம்மா. அடுத்த முறை வரும்போது கொண்டுவர்றேன்.’’ ராஜாமணியுடன் செல்ஃபி எடுத்தபோது, புகையிலை மணத்தது.

மகேஷ், பம்புசெட்டோடு நான்கு ஏக்கர் நிலம் இருப்பதாகச் சொல்லி அழைத்துச் சென்று காட்டினான். கொஞ்சம் உள்ளே இருந்தது. மெயின் ரோட்டில் இருந்து மூன்று கிலோமீட்டர் செம்மண் சாலை. ‘25 ரூபாய்’ சொல்வதாகச் சொன்னான்.

‘`ரெண்டோ மூணோ குறைக்கலாம்.'’

ரஞ்சிதாவுக்கு இடம் பிடித்திருந்தது. பம்புசெட் அருகே நாவல் மரங்கள் இரண்டும் தென்னை மரங்கள் நான்கும் ஒரு மாமரமும் இருந்தன.

மாமரத்தின் அருகே ஒதுங்கி வந்து, ``இந்த அம்மா உங்களுக்கு என்ன வேணும்?'' என்று ராஜனிடம் ரகசியமாக விசாரித்தாள் ரஞ்சிதா.

ஒத்தையடிப்பாதையில் கிடந்த முள்ளை எடுத்து ஓரமாகப் போட்டு, அப்போதே அந்த இடத்தைப் பராமரிக்க ஆரம்பித்திருந்த ராஜாமணியைப் பார்த்தான். ``அம்மா... அம்மா போல!'' என்றான்.

கிளம்பும்போது, சொல்லச் சொல்லக் கேட்காமல் ஒரு கைப்பையில் முந்திரிப்பருப்பைப் போட்டுக் கொடுத்தார். ‘‘நல்ல இடம்மா... வாங்கிப் போடு. நான் இருந்து பார்த்துக்கிறேன். போட்டா மறந்துடாதே.’’

ராஜன், ‘`செலவுக்கு வெச்சுக்கங்க’' என ஐந்நூறு ரூபாயைக் கொடுத்தபோது, அது பத்து ரூபாயா, நூறு ரூபாயா என்றுகூடப் பார்க்காமல் கையில் சுருக்கி அவன் பாக்கெட்டிலேயே செருகினார்.

காரில் ஏற இருந்த நேரத்தில் ராஜனின் கன்னத்தை வருடி, ‘‘அப்பாகூட ஒரு போட்டா எடுத்துக்காமப் போயிட்டேன். ராஜா வேஷம் கட்டினா, அப்பிடி இருப்பாரு. முகமே மறந்துபோச்சு’’ என்றாள்.

கலங்கிய கண்களில் இருந்து நீர் கன்னத்தில் இறங்காமல் மினுமினுத்தது. ஆசையாகப் பார்த்து மகிழ்ந்த முகத்தை நினைவுகளால் கோக்க முடியாத துயரம் அதில் பிரகாசித்தது!

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

ம்கதை அருமை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏.............................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.