Sign in to follow this  
நவீனன்

விசிறி வீடு: காலத்தின் வாசனை

Recommended Posts

விசிறி வீடு: காலத்தின் வாசனை

தஞ்சாவூர்க் கவிராயர்

 

 
kavirayar_3128334h.jpg
 

நாட்டு மருந்துகளும் பூஜை சாமான்களும் விற்கும் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பனை ஓலை விசிறி என் கவனத்தை ஈர்த்தது. நான் அப்படியே ஐம்பது வருடங்கள் பின்னால் போய்விட்டேன். ஆசையாக அதைத் தொட்டேன். என் உடம்பு சிலிர்த்தது.

பத்திரமாக அதை வீட்டுக்கு வாங்கி வந்தேன். ஓரத்தில் முக்கோணம் முக்கோணமாகப் பூ பின்னிய விசிறி. பச்சை ஓலை வாசனை இன்னும் விசிறியில் ஒட்டிக்கொண்டிருந்தது. விசிறும்போது ஆஹா.. முகத்தில் மோதும் அந்த பச்சை வாசனை!

எங்கள் வீட்டு உறுப்பினர்கள் ஒருவர் கூட எடுத்து விசிறிப் பார்க்கவில்லை. அதற்குத் தேவையும் இல்லை அல்லவா? வீட்டில் எங்கு பார்த்தாலும் மின்விசிறிகள்!

கத்தியைப் போல் நீட்டிக்கொண்டிருந்த மின்விசிறியின் றெக்கைகள் காற்றை ஏன் இப்படி வெட்டிச் சாய்க்கின்றன? மென்மையாக நம்மைச் சுற்றி மிதந்துகொண்டிருக்கும் காற்றை இப்படித்தான் வெட்டிக் கூறுபோட்டுத் தலையில் கொட்டிக்கொள்ள வேண்டுமா?

காற்றின் துண்டுகள்

என் பேரன் கேட்டான்: ‘‘தாத்தா! இந்த விசிறியில் காத்து வருமா?’’

‘‘விசிறிப் பாரேன்!’’

விசிறியின் காம்பைப் பிடித்து எப்படி விசிறுவது என்று சொல்லிக் கொடுத்தேன்.

கண் மூடி ரசித்தான்.

‘‘எப்படி இருக்கு ராசா?’’

‘‘ஒரு துண்டு காத்தைக் கட் பண்ணி எடுத்து, அதுக்குக் காம்பு வெச்சி விசிறிக்கிறாப்ல இருக்கு!’’

ஒரு ஜப்பானியக் கவிஞரின் ‘ஹைக்கூ’ ஞாபகத்துக்கு வந்தது.

தெருவில் விசிறி விற்பவன்

‘கூடை நிறைய

காற்றின் துண்டுகளைச்

சுமந்துகொண்டு போகிறான்!’

விடைபெற்றது விசிறி

இன்று வீடுகளில் இருந்து விசிறிகள் விடைபெற்றுக்கொண்டுவிட்டன. அப்போதெல்லாம் வயதானவர்கள் விசிறியும் கையுமாகத்தான் இருப்பார்கள். விசிறிக்கொள்வது மட்டுமின்றி, வேறு விசித்திரமான பயன்பாடுகளும் விசிறிக்கு உண்டு.

விசிறியின் நீளக் காம்பால் முதுகைச் சொறிந்து கொள்வது, அடுப்புத் தணலை விசிறிவிடுவது. அடம் பிடிக்கும் குழந்தைகளை அடிப்பது. கோபம் வந்துவிட்டால் விசிறிக் காம்புதான் ஆயுதம். விசிறி அடி வைபவம் அரங்கேறாத வீடுகளே கிடையாது.

அப்பா குறுக்கிட்டுத் தடுப்பார்.

‘‘விசிறி பிஞ்சு போச்சு பார்!’’

அப்போதும் அவருக்கு விசிறி மீதுதான் அக்கறை!

விசிறி வீடு

அப்போது நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். வீட்டில் ஃபேன் கிடையாது. அம்மாவுக்குக் காற்று இல்லாவிட்டால் மூச்சுத் திணறல் வந்துவிடும். அம்மாவுக்குத் தூக்கம் வரும் வரையில் விசிறுவேன். விசிறியில் தண்ணீர் தெளித்து விசிறியபடி ‘‘இது ஊட்டிக் காத்து.. இது கொடைக்கானல் காத்து!’’ என்பேன்.

அம்மா தூங்கிவிடும். நானும் தூங்கிவிடுவேன். விசிறியும் தூங்கும்.

தஞ்சாவூர் பழைய மாரியம்மன் கோயில் ரஸ்தாவில் பாட்டி வீடு இருந்தது. பாட்டி வீட்டுக்கு எதிர் வீட்டில் விசிறிக்கு பூ பின்னுவதைத் தொழிலாகவே செய்துவந்தார்கள்.

நல்ல பெரிய திண்ணை. நடுவில் விசிறிகள் குவிந்து கிடக்கும். சுற்றிலும் பெண்கள் உட்கார்ந்திருப்பார்கள். கல்யாணமாகாத முதிர்கன்னிகள். விசிறியில் வேகமாகப் பூ வேலை செய்வார்கள். ஏ அப்பா.. அந்த விரல்களில்தான் என்ன வேகம்!

தஞ்சாவூர் கீழவாசலில் விசிறிக்காரத் தெரு என்று ஒரு தெருவே இருக்கிறது. விசிறிகளை வைத்துதான் அந்த வீதியே பிழைத்தது. எனக்கு விசிறி பின்னுவது பிடிக்கும். விசிறி பின்னும் அக்காக்களைப் பிடிக்கும். ‘‘கோபாலா… கோபாலா’’ என்று அவர்கள் என்னைக் கொஞ்சுவது பிடிக்கும்.

என்ன விசித்திரம் என்றால், எவ்வளவு புழுக்கமானாலும் புது விசிறியை எடுத்து யாரும் விசிறிக்கொள்ளவே மாட்டார்கள். விசிறினால் போச்சு. பழைய விசிறியாகிவிடுமாம்.

விசிறிப் பாட்டு

விசிறிக்குப் பூ பின்னுகிறபோதே அக்காக்கள் அழகாகப் பாடுவார்கள். எல்லாமே சினிமாப் பாட்டுகள்தான். பாட்டின் நடுவே ஒரு தேம்பல் வரும். அப்போது ஒரு நிஜமான விசும்பலும் கேட்கும். கல்யாணமாகாத சோகம், வறுமை. வறுமையால் அவர்களின் சிரிப்பை, குதூகலத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை.

சென்னையிலிருந்து தஞ்சாவூர் செல்லும் போதெல்லாம் அந்த விசிறி வீட்டைப் பார்க்க ஆசைப்படுவேன். சமீபத்தில்தான் அந்த ஆசை நிறைவேறியது.

விசிறி வீடு பாழடைந்து கிடந்தது. திண்ணை காரை பெயர்ந்து இடிந்து காட்சியளித்தது.

அங்கிருந்த அக்காக்களையும், அந்த விசிறிகளையும், அந்தப் பாடல்களையும் காலம் எங்கே அடித்துக்கொண்டு போயிருக்கும்?

- தஞ்சாவூர்க் கவிராயர்,

http://tamil.thehindu.com

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this