Sign in to follow this  
நவீனன்

ஏன் மறைக்க வேண்டும்..?! முறைப்போம் தோழிகளே? வைரல் வீடியோ!

Recommended Posts

ஏன் மறைக்க வேண்டும்..?! முறைப்போம் தோழிகளே? வைரல் வீடியோ!

பெண்-வைரல்

வ்வப்போது தன் உடையை சரிசெய்து உடலைக் காப்பாற்றியபடி இருப்பது, சுவாசம்போல பெண்களுக்கு. 'உடையைத் துளைக்கும் பார்வை பற்றி கவலை தேவையில்லை. அவள் அப்படியே இருக்கட்டும்' என்று சொல்லும், 'எல்(Elle)' நிறுவனம் 'விவால்வ்(WEvolve)' என்ற  அமைப்புடன் இணைந்து வெளியிட்டுள்ள அந்த வீடியோ இப்போது வைரல்.

ஹோட்டலில் அமர்ந்திருக்கும் பெண், வெயிட்டர் வந்ததும் கீழிறங்கிய தன் டாப்ஸை மேலேற்றிவிடுகிறார். சாலையில் நடந்து செல்லும் பெண், ஒரு டாக்ஸி கடக்கும்போது ஹேண்ட்பேக்கை அணைத்தபடி தன்னை மறைத்துக்கொள்கிறார். காரில் பின் சீட்டில் அமர்ந்திருக்கும் ஸ்லீவ்லெஸ் உடை அணிந்த பெண், இரு கைகளையும் உயர்த்தி கேசத்தைக் கோதியவர், சட்டென சுதாரித்து கைகளை இறக்கிக்கொள்கிறார். லெகிங்ஸ் அணிந்த பெண், ஒரு கையில் புத்தகத்தைப் பிடித்துக்கொண்டு படித்தபடி, மறு கையால் தன் ஸ்லிட் டாப்பின் ஓபனை மூடிக்கொள்கிறார். காரில் இருந்து மினி ஸ்கர்ட் அணிந்தபடி இறங்கும் பெண், அதை கீழே இழுத்துவிட்டபடி நடக்கிறார். வெளியில் தெரியும் தன் தோழியின் உள்ளாடையை சரிசெய்துவிடுகிறார் ஒரு பெண். உடற்பயிற்சி செய்ய உடல் வளைக்கும்போது ஒரு கையால் டாப்ஸை பிடித்துக்கொள்கிறார் ஒரு பெண். காலிங் பெல் அடித்ததும் கதவைத் திறக்கச் செல்லும் முன், துப்பட்டாவை எடுத்து அணிந்துகொள்கிறார் ஒரு பெண். அலுவல் மேசையில் இருக்கும் பெண், தன்னை நோக்கி ஓர் ஆண் வர, அவசரமாக தன் புடவையை சரிசெய்துகொள்கிறார். இந்தப் புள்ளியில் இருந்து, மீண்டும் இதே காட்சிகள் ஒளிபரப்பப்பட, அதே சூழ்நிலைகளை இப்போது அந்தப் பெண்கள், விலகிய ஆடை குறித்த பதற்றத்தைத் தூக்கியெறிந்து, தங்களின் உடலை நோக்கி வரும் ஆண்களின் பார்வைகளை, கூரான தங்களின் பார்வையால் அடக்குகிறார்கள்.  'அவள் அப்படியே இருக்கட்டும்' என்ற எழுத்துகள் தோன்ற, முடிகிறது வீடியோ.

2_18262.jpg

பெண்கள் தங்களின் விருப்பத்துக்கு, வசதிக்கு உடை அணியும் சூழல் வேண்டும். இந்த உலகில் நம் பாதுகாப்பு உணர்வை நிர்ணயிப்பது, நம் பாலினமாக இருக்கக் கூடாது. வீட்டில், அலுவலகத்தில், சாலைகளில் ஆண்களும், பெண்களும் பரிமாறிக்கொள்ளும் பார்வைகள் உடலைக் கடந்ததாக இருக்க வேண்டும். இருவரும் ஒருவரை ஒருவர் பரஸ்பர மரியாதையுடனும், பச்சாதாபத்துடனும் அணுகி ஒருவரின் விருப்பங்களை மற்றவர் ஈடேற்றிக்கொடுக்க வேண்டும். இவைதான் உலக வங்கியின் சமூக செயற்பாட்டு அமைப்பான 'WEvolve'ன் நோக்கங்கள்.  மரபுத் தடைகளை அகற்றி, ஆரோக்கியமான ஆண் - பெண் உறவுக்கான முயற்சிகளை படைப்பாக்கத் தளங்களில் எடுத்துவரும் இந்த அமைப்பு, 'எல்' உடன் இணைந்து வெளியிட்டிருக்கும் சமீபத்திய வீடியோதான் இது.

பெண்களை வெறிக்கும் ஆண்களின் கண்களை, அவள் பார்வையாலேயே எதிர்க்கச் சொல்லும் இந்த வீடியோ, பலரையும் அதில் வரும் பெண்களோடு தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள வைக்கிறது. என்றாலும், வீடியோவில் வரும் பெண்கள் அனைவரும் மேல்தட்டுப் பெண்களாகவும், பொதுபுத்தி கொண்டாடும் 'ஸ்லிம்' உடல் அமைப்புடன் இருப்பவர்களாகவும் இருப்பது உறுத்தல். அவர்களாவது தங்கள் உடைகளை சரிசெய்துகொள்ளும் அவகாசமோ, அதைத் தவிர்க்கும் உரிமை, தைரியமோ கிடைக்கப்பெறுகிறார்கள்.

ஆனால், தலைச்சுமையாக இருக்கும் சிமென்ட் சட்டியில் இருந்து உயர்த்திய கைகளை எடுக்க முடியாத பெண்கள். பேருந்துக் கூட்ட நெரிசலில் விலகிய புடவை, துப்பட்டாவில் விழுந்து மொய்க்கும் கண்களில் இருந்து விடுதலை பெற முடியாமல் நெளியும் பெண்கள். வியர்வை நனைத்த ஆடை போர்த்திய உடலின் மேல் அதிகாரமாகப் பாயும் பார்வைகளால் தவிக்கும் பூ, பழம், மீன் விற்கும் பெண்கள். குழந்தைக்குப் பசியாற்றப் பாலூட்டும்போதுகூட பாலியல் பண்டமாகவே பார்க்கப்படும் பெண்கள். இப்படி எப்போதும், எங்கேயும் 'இழுத்துப் போர்த்திக்கொள்ளும்' போராட்டத்தைச் சந்தித்தபடியே இருக்கும் இந்தப் பெண்களையும் காட்சிகளாகப் பதிவு செய்திருக்கலாம். வீடியோவுக்கான கமென்ட் பாக்ஸில், 'உங்களை யார் ஸ்லீவ்லெஸ், மினி ஸ்கர்ட்னு டிரெஸ் பண்ணச் சொன்னா?' என்று எப்போதுபோல பெண்களைக் கேள்வி கேட்டிருக்கும் ஆண்களின் கீபேட் கொந்தளிப்புகளையும், அது அடக்கும் விதமாக அமைந்திருக்கும். 'ஸ்லீவ்லெஸ் பெண்களை மட்டுமல்ல, சரசு அக்காவின் தையல் நைந்த ஜாக்கெட்டும் தப்புவதில்லை உங்கள் கண்களுக்கு' என்று அவர்களுக்கு அறைந்து பதில் சொல்லியிருக்கலாம்.

அடுத்ததாக, வீடியோவில் சுட்டிக்காட்டப்பட வேண்டிய, குட்டிக்காட்டப் பட வேண்டிய ஒரு விஷயம்... இதில் வரும் பெண்கள் மீது பாயும் பார்வைகள் அனைத்தும், கடைநிலை வேலை செய்யும் ஆண்களின் பார்வைகளாகக் காட்டப்பட்டிருப்பது. டிரைவர், வெயிட்டர், ப்யூன், கொரியர் பையன் என பதிவுபெற்றிருப்பது வருத்தம். குனிந்து காய் பொறுக்கும்போதும் முகம் பார்த்து விலை சொல்லும்  காய்கறிக்காரர்களும் இருக்கிறார்கள். பெரிய நிறுவனங்களின் நேர்காணல்களில் கேள்விகளுக்கு இடையில் முகம் தாண்டிப் பார்க்கும் பிக் பாஸ்களும் இருக்கிறார்கள்.

என்றாலும், உடையை கவசமாக்கிக் கொள்ளச்சொல்லி பெண்களிடம் திணிக்கப்படும் அழுத்தத்தின் மீது உளியாக இறங்கியிருக்கும் இந்த வீடியோவுக்கு வெல்கம். வீட்டில், வெளியில், அலுவலகத்தில், வங்கியில், மருத்துவமனையில்  என அது எந்த இடமாக இருந்தாலும், எல்லா இடங்களிலும் யாரோ ஒருவர் பெண்களை வெறிக்க இருந்துகொண்டேதான் இருக்கிறார். அப்படி யாரும் இல்லை என்றாலும் கூட, யாருமற்ற தனிமையிலும்கூட, கலைந்த தன் ஆடைகளை அவசரமாக சரிசெய்தபடி, எப்போதும் தன் உடல் ஒரு ஜோடிக் கண்களால் கவனிக்கப்பட்டுக்கொண்டே இருப்பது போன்ற பிரச்னையை பெண் அனிச்சையாக சுமந்துகொண்டே இருப்பது துயரம்.

இந்தத் துயரத்தில் இருந்து அவளுக்கு விடுதலையை ஆண்கள் எப்போதும் கொடுக்கப்போவதே இல்லை. ஆம்... அதை அவளாகத்தான் நிறுவிக்கொள்ள வேண்டும். அந்த தீர்வைத்தான் 'ஆடை கிடக்கட்டும்... அவள் அப்படியே இருக்கட்டும்' என்கிறது இந்த வீடியோ!

ஆம்... Let her be!

http://www.vikatan.com/news/womens/79672-let-her-be---says-elles-video.art

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this