Jump to content

ரங்கராட்டினம் - சிறுகதை


Recommended Posts

 

ரங்கராட்டினம் - சிறுகதை

நர்சிம், ஓவியங்கள்: செந்தில்

 

ந்தத் தளம் பரபரப்பில் பற்றி எரியத் தொடங்கியிருந்தது. படப்பிடிப்புத் தளம் என்ற பெயர் எல்லாம் வெளியே உள்ளவர்களுக்குத்தான். இங்குள்ள எங்களுக்கு அது ‘ஸ்பாட்.’ அதுவும் என்னைப் போன்ற புதியவனுக்குத் திகுதிகுவென உடலில் நெருப்பு எரிவது போன்ற பிரமையை ஏற்படுத்திவிடும். ஒரே நேரத்தில் பலர், பல வேலைகளைச் செய்துகொண்டிருக்கும்போது எழும் இயற்கையான சத்தம்தான். ஆனால், எல்லாமே செயற்கைக்காக.

p64a.jpg

எந்த நொடியிலும் இயக்குநர் வந்துவிடுவார். அவர் வருவதற்கு முன்னர் செட்டில் எல்லாம் பேசியது பேசியபடி இருக்க வேண்டும் என்பதைத் தாரகமாக வரித்துக்கொண்டு, ஒரு போர்ப்படைத் தளபதிபோல் சத்தம் கொடுக்கும் விக்டரைப் பார்த்துக்கொண்டிருப்பதே எனக்குப் போதுமானதாக இருந்தது. அவனுடன் பயணித்தாலே எல்லாமும் கற்றுக்கொள்ளலாம் என்பதே, இந்த ஒரு மாதத்தில் நான் கற்றுக்கொண்ட பாடம்.

``யோவ்... இதான்யா பேக்ட்ராப்பு. இது அங்க வரும்னு எவன்யா சொன்னான்?” - சொல்வது மட்டும் அல்லாமல் தானே அதை எடுத்து, ஒரு நொடியில் எங்கு வைக்கவேண்டுமோ அங்கே தள்ளிவைப்பது என்பதில் ஆரம்பித்து, எல்லோரையும் சிதறடித்து வேலை வாங்கிக்கொண்டிருந்தான் விக்டர். இறுதியாக இரண்டு உதவியாளர்களை நிற்கவைத்து அது `சரியான இடைவெளியில் இருக்கிறதா?’ என ஒளிப்பதிவாளரிடம் ஒப்புதல் வாங்கி, அங்கே நாயகனும் நாயகியும் நிற்கும் இடத்துக்கான மார்க்கிங் ஸ்டிக்கரை தரையில் ஒட்டியதும்தான், அவன் முகத்தில் நிம்மதி.

இயக்குநர் உள்ளே நுழைந்ததும், அவ்வளவு சத்தமும் ஒரு நொடி இரு மடங்காக அதிகரித்து, அடுத்த நொடி மயான நிசப்தத்துக்குச் சென்றது. இயக்குநர் இடுப்பில் கைவைத்து மூச்சை இழுத்து விட்டுக்கொண்டே, ஒருமுறை ஸ்பாட்டைப் பார்த்துவிட்டு விக்டரை நோக்கித் தலையாட்டினார்.

மாலை ஆறு மணிக்கு மேல் டபுள் கால்ஷீட் என்ற விநோத வழக்கத்தால், காசு இரட்டிப்பாகி விடக் கூடாது என, துரத்தித் துரத்தி அன்றைய நாளை முடித்து பேக்கப் சொல்வது வரை விக்டரிடம் பேசவே பயமாக இருந்தது. எல்லாம் முடித்து இயக்குநர் அவன் முதுகில் தட்டி வெல்டன் எனச் சொல்லிவிட்டு காரில் ஏறிப்போனதும், அவன் கண்கள் என்னைத் தேடின. இந்த ஒரு மாதமாக அவனை இறக்கிவிடும் பொறுப்பு என்னுடையது. குருகுலத்தின் நீர்த்துப்போன நீட்சிகள் இங்கு இன்னமும் விரவிக்கிடக்கின்றன என நினைத்துக்கொள்வேன்.

“காலையில எத்தனை மணிக்கு வரணும் விக்டர்?”

வழக்கம்போல் அவனுடைய தங்கும் இடத்தில் இறக்கிவிட்டுக் கேட்டதும், ``ஃப்ரீதானே? டெய்லி ஓடுறீங்களே. வாங்கஜி சிட்டிங்கைப் போடுவோம். இன்னிக்கு செமயா வந்துச்சுல்ல ஷாட்ஸ்.’’

உதவியாளனாகச் சேர்ந்தது குறித்த தன் பிரஸ்தாபங்களைக் கூறிக்கொண்டிருந்தான் விக்டர். அவனுக்கு எதிரில் சரிந்து அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தேன்.

கையில் இருக்கும் குடுவையை ஆட்டிக்கொண்டே, பியூரெட்டில் இருந்து வழியும் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசலின் நிறம் மாறும் அந்தத் துள்ளிய புள்ளியைக் கணக்கிடுவதுபோல, சரக்கு உள்ளே போய்க்கொண்டே இருக்கும்போது சட்டென சிறு உமட்டலில் அன்றைய அளவு இது என, என் தொண்டை மறுக்கத் தொடங்கும் நொடிக்கு நான் அவ்வளவு மரியாதை கொடுப்பேன். அதனால்தான் எவ்வளவு குடித்தாலும் மரியாதையை இழக்காமல் சமூகத்தின் கலாசாரக் கண்களில் இருந்து தப்பிக்கிறேன். சில நேரங்களில் அந்த உமட்டல், பார்ட்டி ஆரம்பிக்கும்போதே வந்துவிடும். சில நாட்களில் எத்தனை என்றே தெரியாத அளவுக்கு காலி பாட்டில்கள் அரைவட்டம் அடித்துக்கொண்டிருக்கும் வரை வராது. சூழலையும் எதிரில் அமர்ந்திருப்பவர் பேசும் பொருளையும், குறிப்பாக அந்த நொடியின் மனநிலையையும் பொறுத்தே என் உமட்டலின் கால அளவு அமையும்.

என் அளவுக்கான குறிப்பு தொண்டையில் இருந்து வந்துவிட்டபடியால், விக்டருக்கு சங்கடமாக இருக்கக் கூடாது என கையில் சிறுஅளவில் மீதம் வைத்துக்கொண்டு, வெகுநேரமாகக் குடிப்பது போன்ற தோற்றத்தை  ஏற்படுத்திக்கொண்டே கேட்டுக்கொண்டி ருந்தேன்.

விக்டரின் கைகள் அனிச்சையாக அவன் கிளாஸ் தீரத் தீர நிரப்பிக்கொண்டிருக்க மெள்ள ஓர் ஏகாந்தத்துக்குள் புகுந்துகொண்டிருந்தான்.

``நீங்கலாம் ஈஸியா வந்துட்டீங்கஜி. ஸாரி... இப்பலாம் `ப்ரோ’னு சொல்லணும்ல? எங்க காலத்துல `ஜி’தான்.”

நான் சிரித்துக்கொண்டே, “நாங்களும் ஊர்ல `ஜி’னுதான் கூப்புட்டுக்குவோம் விக்டர்.

எனக்கு `ஜி’ ஓ.கே-தான்.”

“ம்ம்... இப்பலாம் எவனையும் எவனும் மதிக்கிறதே இல்லைஜி. நீங்களே பாருங்க அசால்ட்டா என்னைய `விக்டர்’னு நெத்தியில அடிச்சுக் கூப்புடுறீங்க. நாங்கலாம் ‘சார்’ன்ற வார்த்தையத் தவிர வேற வார்த்தையே தெரியாம இருந்தோம். அட யார் எல்லாம் சார் தெரியுமா? செக்யூரிட்டில ஆரம்பிச்சு, ஆபீஸ் பாய் வரைக்கும்.”

ஒரு சொடுக்கலுக்குப் பின்னர், தன் ஆட்காட்டி விரல் கொஞ்சம் நடுங்கும்படி பூமியை நோக்கி ஆட்டிக்கொண்டே சொன்னான்... “இங்கே மட்டும் தோத்தவனைவிட ஜெயிச்சவனோட வலியும் இழப்பும் அதிகம்ஜி.”

“இல்ல விக்டர்... ஒரே விஷயத்துல கவனத்தைக் குவிச்சுட்டோம்னா வெற்றி அவ்ளோ கஷ்டம் இல்ல” - சிகரெட் நெடியைத் தவிர்க்கும்படி கையை மூக்குக்கு முன்பு விசிறிக்கொண்டேன்.

“ஹும்ம்... இப்ப அதுக்கு அவசியமும் இல்லைனு ஆகிப்போச்சு. அதுவும் நல்லதுதான். கதை இருந்தா நெட்ல எழுதிடுறான். படமா எடுத்து யுடியூப் போட்டு, வந்து பாருங்கடானு வீட்டுக்குள்ளேயே இருக்கான். இவனுங்களும் பணத்தை எடுத்துக்கிட்டு அவனைப் போய் பார்த்து, வெத்தலைப்பாக்கு வெச்சுக் கூட்டிட்டு வந்துடுறாங்க. அப்ப அவன் இதை மயிரு மாதிரிதான மதிப்பான்.

உடனே அதை மறுத்தேன்.

“அப்படிலாம் இல்லைஜி. இது டெக்னாலஜிக்கான காலம். முன்னாடிலாம் யாராவது நம் மேல லைட் அடிச்சுக் காட்டணும். இப்ப நாமளே `என்னையைப் பார்த்துக்கோ’னு லைட் அடிச்சுக் காட்டிக்கலாம். தேவைப்படுற வங்க பார்த்துக்குறாங்க... அவ்ளோதான்.”

சட்டென அவன் மொத்தக் கோபமும் அடங்கி, என் கூற்றை ஆமோதிப்பதுபோல தலையை ஆட்டினான். எனக்குச் சப்பென்றாகிவிட்டது. ஆமோதிப்பதைப் போன்ற ஒரு வலிமையான எதிர்ப்பு எதுவுமே இல்லை எனத் தோன்றியது.
“ம்ம்... நானும் ரொம்பலாம் கஷ்டப்படலைஜி. சேர்ந்தா சார்கிட்டத்தான் சேரணும்னு முடிவுல வந்தேன். அப்பலாம் மொபைல் இல்லை. அதனால வீட்டு வாசல்ல நிற்கணும். அவர் கார் வெளியில வர்ற செகண்ட் பார்த்தார்னா வணக்கம் வைக்கணும்னுலாம் சொன்னாங்க.”

விக்டர் அப்படி நிற்பதை யோசித்துப் பார்க்கவே முடியாமல் இருந்தது. அவ்வளவு ஸ்டைலாகவும் நேர்த்தியாகவும் இருப்பவன் விக்டர்.

“நம்மளால அதெல்லாம் முடியாதுனு சொல்லிட்டு ரெண்டே நாள்ல திரும்பவும் ஊருக்கேபோய்ட்டேன் ஜி” - கிளாஸ் தீர்ந்திருக்க இந்த முறை சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு புகைவழியே பேசத் தொடங்கினான்.

``ஆனா, அட்ரெஸ் வாங்கிட்டுப் போயிருந்தேன். சும்மா நச்சுன்னு ஒரு நாலு பக்கத்துக்கு ஒரு சீன் எழுதி அனுப்பினேன். ஒரே வாரத்துல பதில் வந்தது... `வந்து பாருங்க’னு”

அதன்பிறகு அவன் வந்ததும், அவனுக்குக் கிடைத்த மரியாதையைக் குறித்தும், இயக்குநர் எங்கு சென்றாலும் அவனைத் தன்னோடு அழைத்துக்கொண்டுபோனது குறித்தும், தன் திறமையைக் கண்டு வியந்த மற்ற உதவியாளர்கள் குறித்தும், அவர்களின் வயிற்றெரிச்சல் குறித்தும் சொல்லி முடிக்கும்போது துப்புரவாக ஃபுல் பாட்டிலும் காலியாகியிருந்தது. அதன் கடைசிச் சொட்டை ஆவென வாய் பிளந்து நாவில் ஏந்தியவன், சட்டெனச் சுதாரித்து கழிவறைக்கு ஓடினான்.

அதன் பிறகான ஐந்து நிமிடங்கள் அவன் வாந்தி எடுக்கும் சத்தங்கள்தான் விதம்விதமாகக் கேட்டன.

முகம் கழுவித் துடைத்துக் கொண்டே வந்தான்.

“ஒருமாதிரி இருந்தா டக்குனு விரலைவிட்டு எடுத்துடணும்ஜி. அதான் ட்ரிக்கே” - சொல்லிக் கொண்டே எங்கு இருந்தோ இன்னொரு பாட்டிலை எடுத்துக் கொண்டு வந்தான். எனக்கு லேசாக எரிச்சலும் மாட்டிக்கொண்டோமே என்ற சுயகழிவிரக்கமும் ஏற்படத் தொடங்கியது.

நான் எப்படி இதற்குள் வந்தேன், இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று எல்லாம் யோசிக்கக்கூட அவகாசம் இல்லாமல், இவர்களோடு என்னையும் இணையச் செய்துவிட்டது காலம். யதேச்சையாகப் பேசிக்கொண்டிருக்கும்போது நான் சொன்ன சில வார்த்தைகள், எனக்குள் ஏதோ இருப்பதாக இவர்களுக்குப் புரியவைத்ததன் விளைவு, நானும் இவர்களில் ஒருவன்... கடந்த ஒரு மாதமாக. சுலபமாக நுழைந்துவிட்டாலும் ஏதோ ஒரு மாயை இங்கு எந்நேரமும் சதா சுழன்றுகொண்டே இருக்கிறது. இதோ இந்த இரவில் விக்டர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு செயலும்.

புத்தம்புதிதாக அந்த நாளைத் தொடக்கு பவன்போல மாற்றுடை அணிந்து மீண்டும் அமர்ந்துகொண்டான். சென்ற முறை அவனைச் சுற்றிலும் செர்ரி, ஆப்பிள் வகைகள் இருந்தன. இந்த முறை ஊறுகாய் மட்டும் வைத்துக் கொண்டான். அவனுடைய அறையில் சகல வசதிகளும் இருந்தன. நான் அவன் அறையைப் பார்ப்பது குறித்துப் புரிந்துகொண்டவனாக,

“ஜி... இங்க கஷ்டப்படுறாங்க. சோத்துக்கே வழி இல்லைனு ஒரு பக்கம் சொல்லிட்டே இருப்பாங்க. இன்னொரு பக்கம் காசு கொட்டும். அதான் சினிமா. ஒண்ணு மட்டும் தெரிஞ்சுக்கங்க, தன்னை முழுசா நம்புனவனை சினிமா எப்பவும் கைவிட்டதே இல்லை. ஏதாச்சும் பண்ணிப் பிழைச்சுக்கனு வாய்ப்பு கொடுத்துட்டே இருக்கும், அட புரொடக்‌ஷனுக்குச் சமைச்சுப் போட்டாவது சம்பாதிக்க விட்டுடும்ஜி.”

இந்த முறை சற்றுக் குறைவாகவே ஊற்றிக்கொண்டான். என் பக்கம் பார்க்க, நான் பெருமூச்சு விட்டதும், “விடுங்கஜி...” எனத் தன் கையைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டே தொடர்ந்தான்.

“சார் சொல்லிட்டே இருப்பாரு... `என்னையைத் தாண்டிப் போய்டுவ விக்டர்... திறமைக்காரன்டா நீ’னு. இன்னிக்குக்கூட செட்டுல சொன்னார் கவனிச்சீங்களாஜி?”

இனி என் ஆமோதிப்போ பதிலோ தேவை இல்லை என்பதை உணர்ந்ததால் கேட்டுக் கொண்டிருந்தேன்.

“அடுத்து தனியா படம்தான்ஜி” - வெகுநேரம் கையைச் சொடுக்கிக்கொண்டே இருந்தான். “சும்மா இண்டஸ்ட்ரியே அலறும்” - ஒரே மடக்கில் தீர்த்துவிட்டுக் கீழே வைத்தான்.

என்னையே சற்றுநேரம் உற்றுப் பார்த்தவனின் குரல், இப்போது சற்றே பிசிறுதட்டி கம்மிப்போய் இருந்தது. 

“இது அவ்ளோ ஈஸியான இடம் எல்லாம் கிடையாதுஜி. ஏதோ நாம டக்குனு வந்துட்டோம். அதுலேயும் நான் கொஞ்சம் அதிகப்படியான திறமையோடு இருந்ததால நேரா சிவப்புக் கம்பளத்துல நடந்து வந்துட்டேன். ஆனா, நான் வந்தப்ப என்கூட ஒருத்தன் வந்தான்ஜி. `கோவிந்தன்’னு ஏதோ பேர். சும்மா கத்தி மாதிரி இருப்பான்... பாவம்.

சாரைப் பார்க்க காலையில நாலு மணிக்கு எல்லாம் வீட்டு முன்னால வந்து நிற்பான். விடிய விடிய அங்கேயே நிற்பான். கையில ஆல்பம் வெச்சுருப்பான். தன் நடிப்பால இந்த நாட்டையே உலுக்கிறணும்னு சொல்வான்.

இங்க டைரக்டர் புரொடியூஸர் எல்லாம் சாமி மாதிரி. அவங்க ரெடியாத்தான் இருக்காங்க திறமையானவங்களுக்குத் தரிசனம் தர்றதுக்கும் கூடச் சேர்த்துக்கிறதுக்கும். ஆனா நடுவுல ஒரு பூசாரியா... ரெண்டு பூசாரியா? இந்தப் பிம்ப உலகத்தையே ஆட்டிப்படைக்கிறது இந்தப் பூசாரிங்கதான்.

அதுவரை ஒரு வெளிநாட்டுக் காரன்போல் குடித்துக்கொண்டிருந்த விக்டர், சட்டென ஒரே கல்ப்பில் அந்த ரவுண்டை முடித்து வாயைத் துடைத்து, உக்கிரமாகப் பேசினான்.

இந்த மரத்தைத் தள்ளி நின்னு பார்த்தா, உச்சியும் அதுல இருக்கிற பறவைகளும்தான் பிரதானமாத் தெரியும்ஜி. ஆனா வேர், கிளைனு தாண்டிப்போறதுக்குள்ள போதும்போதும்னு ஆகிடும். ஒவ்வொரு இடத்துக்கும் ஒருத்தன். லொட்டு லொசுக்குனு கிளைக் கிளையா பிரிஞ்சு, ஒருத்தனுக்கு மேல ஒருத்தன்னு இங்க நிறையப் பேர் நடுவுல இருக்காங்க. அவங்களுக்கு கலை, தாகம் அதெல்லாம் ரெண்டாம் பட்சம்தான். சினிமான்னா காசு, கட்டிங். அப்புறம்...’’ என தன் நடுவிரலை காற்றுக்குள் இருமுறை செலுத்தி, ``இதுதான்” என்றான்

ஊறுகாயை அவன் ருசித்தது எனக்கும் உமிழ்நீரைச் சுரக்க, கொஞ்சமாக நக்கிக்கொண்டே அவனைப் பார்த்தேன்.

“இது தெரியாம கோவிந்தன் அலைஞ்ச அலைச்சல் இருக்கே... கடைசியில தட்டுக் கழுவுறது, ஆர்ட் டைரக்டருக்குக் கீழே உட்கார்ந்து கட்டையில ஆணி அடிக்கிறதுனு... பாவம் தெரியாத தொழில். கையில கால்ல எல்லாம் ஆணி கிழிச்சுப்பான். பச்... கொண்டுவந்த காசு தீர்ந்து பிச்சை எடுக்காத குறை. ஒருநாள் யார் கண்ணுலையும் படாம ஊருக்குப் போய்ட்டான்.”

மதுவை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, கால்களைப் பரப்பி ஒருவிதமான செளகர்யத்தில் படுத்துக்கொண்டு தொடர்ந்தான். அவன் சொல்லச் சொல்லக் காட்சிகள் விரிந்துகொண்டே போயின.

 ``ஏன்டா கோயிந்தா... செவசெவனு தக்காளியாட்டம் இருப்ப. இப்படிக் கருத்துப்போயி வந்து நிற்கிறியே தங்கம். அய்யோ என்னடா இது கையில காயம். என்னது ஆணி இறங்குச்சா. போதும் சாமி... அந்த நாசமாப்போன சினிமா நடிப்பு.”

அம்மாவும் அப்பாவும் அவன் இருபுறமும் நின்றதே அவனுக்குள் அழுகையை வெடிக்கச்செய்தது. போனது எல்லாம் போகட்டும் எனத் தலைக்கு எண்ணெய் வைத்துக் குளிக்கச் சொன்னாள். ``சாப்பிட கறிசோறு வேணுமா?’’ என அப்பா கேட்டதும், உடனே மறுத்துவிட்டு அம்மாவிடம் ஆசையாக, ``கல்லுசோறும்மா’’ என்றான் குளியறையில் இருந்தே.

கல்சோறு என்பது அவன் அம்மா பிரத்யேகமாகச் செய்துதருவது. அவள் அதைச் செய்வதை வேடிக்கை பார்ப்பதே பாதி வயிறு நிறைந்ததுபோல் இருக்கும்.

மிஞ்சிய பழைய சோற்றை எடுத்து, இறுக்கமாகப் பிழிவாள். ஒரு பொட்டுத் தண்ணீர்கூட சோற்றுப்பருக்கையில் இருக்காது. எல்லா சோற்றையும் பிழிந்து தனியாகப் பிரித்து எடுத்த பின்னர், அதில் உப்பைப் போட்டுப் பிசைவாள். கல் உப்பு மட்டுமே போட வேண்டும் அதுதான் ருசி. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக நல்லெண்ணையைச் சேர்த்துக்கொண்டே பிசைவாள். பிசைவது எனில், விரல் இடுக்குகளில் இருந்து `பிஸ்க்... பிஸ்க்...’ எனச் சத்தம் வரும். அப்படி வெகு இறுக்கமான பிசைவு. எண்ணெயும் உப்பும் கலந்து பிடித்துப் பிடித்து உருண்டைகளாக எடுத்துவைப்பாள். அந்த உருண்டையை எவர் மீதேனும் எறிந்தால் அவ்வளவு வலிக்கும். அப்படி ஒரு திடத்தன்மையில் இருக்கும். எண்ணெய் வாசமும் உப்பின் நெருடலும், தொட்டுக்கொள்ள வெங்காயம், பச்சை மிளகாய்க் கலவையும் என உமிழ் நீர் சுரக்கச் சுரக்கச் சாப்பிட்டு முடித்து, நீச்சத் தண்ணீரைக் கொஞ்சமாக குடித்தால், இரண்டு நாட்களுக்குப் பசியே எட்டிப்பார்க்காது.

சாப்பிட்டு முடித்து, தெருவில் இறங்கி நடக்கக் கூச்சமாக இருந்தது கோவிந்தனுக்கு. இன்னும் யாருக்கும் அவன் தோல்வி அறிவிக்கப்படவில்லை. என்றாலும், `என்ன திடீர்னு வந்துருக்க?’ என்ற கேள்வியை எதிர்கொள்வது என்பது, வேலையை விட்டு வந்தவனைப் பொறுத்தவரை அடர்அமிலம்; பொசுக்கிவிடும்.

எல்லா கெட்டவையும் ஒரே நேரத்தில் நடந்தால்தானே, இயற்கை எனும் ஒன்றை நோக்கி மனிதன் அச்சமுறுவான். அப்படித்தான் ஆனது. பக்கத்து ஊரில் நிகழவிருந்த கல்யாணத்துக்கு டிராக்டரில் கூட்டமாகப் போனது, இவனது சொந்தபந்தம். கோவிந்தனும் அவன் அப்பாவும் மட்டும் வீட்டில் இருக்க, சேதி வந்து சேர்ந்தது. டிராக்டர் கவிழ்ந்து ஓரிருவரைத் தவிர எல்லோரும் பலி.

தார் ரோடு எல்லாம் ரத்தம் தோய்ந்து, கை கால் எனப் பிய்ந்து கிடந்தது அந்த இடத்தில். கரப்பான்பூச்சியைப்போல் கவிழ்ந்து கிடந்தது டிராக்டர். பிழைத்த ஓரிருவரில் இவன் அம்மாவும் ஒருவர் என்ற எண்ணத்தின்மீது அவளின் உடலே விழுந்தது. அவள் கல்சோறு பிசைந்து கொடுத்த விரல்கள் எல்லாம் உதிர்ந்துகிடந்தன. கோவிந்தனின் அழுகை எல்லாம் வற்றிப்போன பொழுதில் யதேச்சையாகத் திரும்பிப் பார்த்தபோதுதான், தென்றல் அவன் கண்ணில் பட்டாள். அதற்கு மேல் அழ முடியாது என்பது போன்ற ஒரு நிலையில், அவள் முகம் அவ்வளவு தெளிந்திருந்தது.

அவளைப் பார்த்ததும் கோவிந்தனுக்கு ஒரு நொடி, சூழல் எல்லாம் மறந்து, அங்கு ஏதோ சினிமா ஷூட்டிங் நடப்பது போலவும், கதாநாயகி தன் அடுத்த டேக்குக்குக் காத்திருப்பது போலவும் தோன்றியது. அந்த ஊருக்கும் சூழலுக்கும் பொருந்தாத அப்படி ஓர் அழகி தென்றல். இவனுக்குத் தூரத்துச் சொந்தம். நெருங்கினான். “என்னைய மட்டும் விட்டுட்டு எல்லாரும் போய்ட்டாங்க” - அவன் அருகில் வந்ததும் வெடித்து அழுதாள்.

“இவங்க அப்பனும் நானும் ஒரு காலத்துல சேர்ந்தே சுத்துவோம்டா கோயிந்து. புள்ளக்குட்டினு ஆனதும் அப்படியே பழக்கம் விட்டுப்போச்சு. கோயில் சிலை மாதிரி ஒரு பெண்ணை விட்டுட்டுப் போய் சேர்ந்துட்டாங்க”
- சொல்லிக்கொண்டே வாசல் பக்கம் போனார் கோவிந்தன் அப்பா.

தூணில் சாய்ந்து நின்றிருந்த தென்றலை தலைமுதல் பாதம் வரை பார்த்தான் கோவிந்தன். இடுப்பில் இருந்து அவன் கண்கள் இறங்கி வர வெகுநேரமானது. மிக மெல்லிய மடிப்பு கொடுத்த கோடு அந்திநேர அடிவானத் தீற்றல்போல் மிளிறியது.
 “தென்றல்.”

p64b.jpg

“ம்...”

   “நடிக்கிற ஆசை இருக்கா?”

      “அட நீ வேற.”

        “சொல்ல்ல்லு.”

``ஆமாண்ணே, ஊர்ல பெரிய ஆக்ஸிடன்ட்டு. அதான் பேப்பர்ல வந்துச்சே. நம்மூருதான். இன்னிக்குக் காலையிலதான் சென்னைக்கு வந்தேன்.”

இரவு எல்லாம் பஸ்ஸில் வரும்போது, எப்படிப் பேச வேண்டும் என மனதுக்குள் ஒத்திகை பார்த்திருந்தான். அதன்படி பேசிக்கொண்டிருந்தான்.

“சரி... வர்றதுதான் வர்றோம்... சொந்தக்காரப் பொண்ணு, ஹீரோயின் சான்ஸ் தேடிக்கிட்டு இருக்கேன்னு கூட்டியாந்தேன். சரிண்ணே... பக்கா, பக்காவா வந்துருவேன். அவளையும்தான். வந்துர்றோம்.”

மொபைலையே சில நொடிகள் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு அவளை நோக்கித் திரும்பி,

“ `வந்துருவேன்’னு சொன்னதும் பதறிட்டான். எங்கே நான் மட்டும் வந்துருவேனோனு” - சொல்லிவிட்டுச் சிரித்தான். அவளுக்குப் புரியவில்லை; ஆனாலும் புன்முறுவல்.

அவனை அவமானப்படுத்திய, விரட்டிய கதவுகள் இப்போது திறந்தே கிடந்தன.

“என்ன கோயிந்தா கண்டுக்கவே மாட்டேங்கிற?” என வலிய வழிந்தார்கள் மேனேஜர்கள். எல்லா படங்களிலும், ஏதேனும் ஒரு மூலையில், தென்றல் பாஸிங்கில் நடந்தோ, கடைசி வரிசையில் ஆடிக்கொண்டோ இருந்தாள்.
கோவிந்தன் சளைக்காமல் தன்னைப் பற்றிய விவரங்களைச் சொல்லிக் கொண்டே இருந்தான். கேட்பவர்கள், “அதெல்லாம் தெரியுமே கோயிந்தா. ஆனா நம்ம படத்துல உனக்கு ஏத்த ரோல் இல்லையே. தென்றலுக்குத் தைச்ச மாதிரி ஹீரோயின் ஃப்ரெண்டு கேரக்டர் இருக்கு. அதுக்குப் பேசவந்தா, இந்த ராத்திரி நேரத்துல இப்படிப் போட்டு அறுக்குறியே. அப்புறம் நான் என்னத்த, யார்கிட்ட ரெக்கமென்ட் பண்றதாம்” - சொல்லிக்கொண்டே சிரித்த அந்தப் பூசாரியின் பல்லைத் தாண்டிய ஈறுகளும், உடலைத் தாண்டிய வயிறும் துருத்திக்கொண்டு நின்றன. அவன் பேசியதைக் கேட்டு, மெள்ள விலகி, அவள் அறைக்குள் செல்ல வழிவிட்டு, அவன் முதுகை வெறித்தான் கோவிந்தன்.

கோவிந்தன், எந்த இயக்குநரின் பார்வையில் விழ வேண்டும் என ஊரில் இருந்து வந்த புதிதில், இரவு பகலாக அவர் வீட்டு முன்பு தவம்கிடந்தானோ, அந்த இயக்குநரின் அலுவலகத்தில் இருந்த பூசாரிகள், இப்போது தென்றலின் புகழில் மையம்கொண்டு, அவனைப் புகைப்படத்தோடு வரச் சொல்லியிருந்தார்கள்.

அவனுடைய கனவுகள் எல்லாம் நிறைவேறிவிட்ட திருப்தி அவனுக்கு அந்த அழைப்பிலேயே கிடைத்துவிட்டது. தென்றலின் வருகையால் கிடைத்த பணத்தில் நேர்த்தியான உடைகள் எடுத்து அணிந்துகொண்டு அவருடைய அலுவலகத்தில் நின்றான்.

அவரைப் பார்ப்பது அவ்வளவு எளிது இல்லை. கால்குலேட்டரும் கையுமாக அமர்ந்திருப்பவரும் சத்தமாகப் பேசிக்கொண்டே உள்ளே நுழைந்து, இயக்குநர் இல்லை என்றதும் மேலும் சத்தமாகச் சிரித்துப்பேசும் பூப்போட்ட சட்டைக்காரர்களும், இவனிடம் தொடர்ந்து பேச்சுக் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். அவர்களில் ஒருவன், ``சார்கிட்ட சொல்லியாச்சு. ஆனா இப்போதைக்கு இந்த ஷெட்யூல்ல ஒரு நல்லப்பொண்ணு தேவைப்படுது” - சொடக்குப் போட்டுக்கொண்டே, “தீபச்சுடர் மாதிரி இருக்கணும். நாலு நாள் ஷூட்னா உனக்கே தெரியும். ஸ்கிரீன்ல எவ்ளோ லென்த்தா வரும்னு. பசங்க சொன்னாங்க... என்ன பேர்?” எனப் பின்னால் திரும்பிக்கேட்க, கோவிந்தனே சொன்னான், “தென்றல் சார்.”

“ஆங்... நான் சார்கிட்ட சொல்றேன். உங்க போட்டோவையும் அவர்கிட்ட குடுத்துவைக்கிறேன்.”

விக்டர் சொன்ன நிகழ்வுகள் நெஞ்சை அரிக்கத் தொடங்கின. அவன் கொஞ்சம் கொஞ்சமாகத் தூங்கிக்கொண்டிருந்தான். அவனை உலுக்கினேன். `ழ’கரம் சிறப்புப் பெறத் தொடங்கியிருந்தது அவனிடம்.
 
“ஜிழி... விழுங்க ஜிழி...”

அப்படியே வாந்தி எடுத்தான். எனக்கு உமட்டிக்கொண்டு வந்தது. கழிவறைக்கு ஓடி, வாளி நீரை எடுத்துக்கொண்டு வந்து, சுத்தம்செய்து விக்டரைக் கிட்டத்தட்ட குளிப்பாட்டிவிட்டேன். என்மீது வாந்தியின் நாற்றம் மிதந்தது.
தடுமாறி ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தான். அதிகாலை மூன்று மணி.

“அப்புறம் என்னாச்சுஜி?”

“எ...து...ஜிழி?”

“தென்றல்... கோவிந்தன்..?”

``ஓ... அதுவா. சொன்னேன்னா அப்படியே ஆடிப்போயிருவீங்கஜி.”

சிகரெட்டின் சாம்பலைத் தட்டிக்கொண்டே சொன்னான். நெருப்பு, பஞ்சை நெருங்கிக்கொண்டிருந்தது.

“அஞ்சாறு வருஷத்துக்கு முன்னால, சும்மா புயல்மாதிரி ஒரு ஹூரோயின் நாட்டையே கலக்குச்சே அதான்” எனச் சொல்லி பெயர் சொன்னதும், ஒரு கணம் அதிர்ந்துவிட்டேன். இன்றும் மிகப் பிரபலமாக எல்லாப் படங்களிலும் ஏதேனும் ஒரு ரோலில் வருபவள்.

``ஓ... சூப்பர்ஜி. அப்ப கோவிந்தன்?”

“செத்துட்டான்... செத்தேபோய்ட்டான்ஜி” - சிகரெட்டை ஆழ்ந்து இழுத்த பிறகு, ஆஷ்ட்ரேயில் நசுக்கிக்கொண்டே, ப்ச்... நடிக்கிறதுக்கு எவ்வளவு கனவோடு வந்தான் தெரியுமா? அநியாயமா தற்கொலை பண்ணிக்கிட்டான்.”

மெள்ளத் திரும்பி, சூழலைக் கலகலப்பாக்கும் விதமாக, “ராஜபோதைஜி... இந்தச் சரக்கு” - எதிர்பாராதவிதமாக மீண்டும் ஒரு பெக் ஊற்றிக்கொண்டுவிட்டு, காலையில பேசுவோம்ஜி” என சோபாவுக்குள் பொதிந்துகொண்டான் விக்டர்.

முதல் முறையாக பயம் கவ்வத் தொடங்கியது எனக்கு. ஏதோ ஒரு மாய உலகில் மிகப்பெரிய அரக்கனின் கோரப்பற்களுக்கு இடையே இருக்கும் ஓட்டைகளுக்குள் புகுந்து ஓடுவதுபோல தோன்றியது.

முகம் தெரியாத கோவிந்தனும் கல்சோறும் எண்ணெய் வாசமும் அதைப் பிசைந்து கொடுத்த அவன் அம்மாவின் சிதறிய விரல்களும் என்மீது படர்ந்திருக்கும் வாந்தியின் துர்நாற்றமும்... கலவையாக என்னைச் சுழலடித்தது. பார்வை விக்டரின் மேல் விழுந்தது.

தூக்கத்திலும் ஒருமுறை கையைச் சொடுக்கிய விக்டர் புரண்டு படுத்தான். எப்படியும் இந்த வருடம் இயக்குநர் ஆகிவிடுவான். அப்படி ஆகிவிட்டால் வெற்றி உறுதி. இந்த ஒரு மாதத்தில் ஸ்பாட்டில் இயக்குநரைவிட விக்டர்தான் பம்பரமாகச் சுழன்றுகொண்டிருந்தான். அவனைத் தவிர பழைய ஆட்கள் யாரும் இப்போது அங்கு இல்லை என்பதால், அவன் சொல்லுக்குக் கட்டுப்படாத ஆட்களே யூனிட்டில் இல்லை. சீன் பிரிப்பது, ஆங்கிள் என சகலத்தையும் கை சொடுக்கலில் முடித்துவிடுகிறான்.

அவனிடம் இருந்து வந்த வாந்தி வாடையையும் மீறித் தூக்கம் அசத்த, அப்படியே சாயத் தொடங்கினேன்.

என் தலைமாட்டில் கிர்ர்ர்ர் என அதிர தூக்கிவாரிப்போட்டது. எழுந்து பார்த்தால் விக்டரின் மொபைல், வைப்ரேட் ஆனது. மணி காலை ஆறு. விக்டர் குடித்த குடிக்கு இன்று முழுவதும் எழ மாட்டான். அவனிடம் இருந்து துர்நாற்றம் காற்றில் சுழன்றுகொண்டிருந்தது. சற்று வெறுப்பு மேலிட போனைக் கட் செய்தேன். உடனே மீண்டும் கதறியது. கண்களை நெகிழ்த்தி போனைப் பார்த்தேன்.

` APPA Calling’ என குளத்தில் எறிந்த வட்டக்கல் சுழன்றது.

எடுத்தேன்.

“கோவிந்தன் இருக்காரா?”

 “ இல்லைங்க... ராங் நம்பர்’’ - துண்டித்தேன்.

ஒரு நொடிதான். சட்டெனச்  சுதாரித்து, அந்த எண்ணை அழைத்தேன்.

`Dialing APPA’ எனச் சுழன்ற நொடியில் எடுத்தார்.

 “அவரு தூங்குறாருங்க.”

“..........”

“இல்ல இல்ல... கரெக்ட் நம்பர்தான். அவர் எந்திருச்சதும் அப்பா கூப்புட்டீங்கனு சொல்லிடுறேன்.”

“.......”

டயல்டு மற்றும் ரிஸீவ்டு கால் லிஸ்ட்டில் இருந்த `APPA’-வை அழித்துவிட்டு, திரும்பி மென்மையாகச் சிரித்தவாறு தூங்கிக்கொண்டி ருக்கும் விக்டர் சாரைப் பார்த்தேன். இப்போது அவரிடம் இருந்து பழவாசனை மிதந்துவந்து கொண்டிருந்தது!

 

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சினிமாவின் வெளிச்சமற்ற பக்கத்தை துல்லியமாக படம் பிடித்துள்ளது இந்தக் கதை.....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.