Sign in to follow this  
அபராஜிதன்

எது மனிதம்- பட்டுக்கோட்டை பிரபாகர் 

Recommended Posts

நேற்று முதல்… நேரிலும், தொலைபேசியிலும், ஈமெயிலிலும், இன்பாக்ஸிலும் 100க்கும்  மேற்பட்ட வாசகவாசகிகள் தொடர்பு கொண்டு, எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள், ஏழைக் குழந்தைகளுக்கு உதவும் சிமிர்னா தொண்டு நிறுவனம் வெளியிட உள்ள “மனிதம்” நூலுக்காக பகிர்ந்து கொண்ட,  இந்த உன்னத நிகழ்வினை,  எளிதில் படிப்பதற்கு வசதியாக தட்டச்சு  செய்து வெளியிடச் சொல்லி கோரிக்கைகள் வைத்ததைத்  தொடர்ந்து  இதோ இங்கே அனைவரின்  விருப்பப்படியே  பதிவாகிறது : 

எது மனிதம்?

அழுகிற விழிகளைத் துடைக்க விரல்களை நீட்டுவதா? 
பசிக்கிற குழந்தைக்கு பன் வாங்கித் தருவதா?
துக்க வீட்டில் பிணம் தூக்கி பூ வீசுவதா?
கோடையில்  வாசலில் தண்ணீர் பந்தல் வைப்பதா?
கிழவி பாதை கடக்க கரம் பிடித்து போக்குவரத்தை நிறுத்துவதா?
நிற்கும் கர்ப்பிணிக்கு எழுந்து பஸ்ஸில் இடம் தருவதா?
படிப்பைத் தொடர மாணவனுக்கு ஃபீஸ் கட்டுவதா?
செல்போனில் பார்த்ததும் விரைந்து சென்று குருதி அளிப்பதா? 
வெள்ளத்தில் நீந்திச் சென்று ஆட்டுக்குட்டியை மீட்பதா?
விபத்தானவருக்கு ஆம்புலன்ஸ் வரவழைப்பதா?
சொந்த விந்தில்தான் வேண்டுமென வாதிடாமல் தத்தெடுப்பதா?
ஆறு பேர் உயிர் பிழைக்க உடல் தானம் எழுதி வைப்பதா?
சாலையில் கிடக்கும் கண்ணாடித் துண்டை அப்புறப்படுத்துவதா?
முதியோர் இல்லத்தில் விருந்தளித்து விழா கொண்டாடுவதா?
விழாக்களில் தரப்படும் மரக்கன்றை பொறுப்பாக நட்டு நீரூற்றுவதா?
திறந்த பைப்புகளை மூடி விரயமாகும் நீரை சேமிப்பதா?
பயங்கரவாதத்தில் இறந்த ஜவான்களுக்கு மலர் வளையம் வைப்பதா?
சொல்லி, திட்டி நண்பனை மது அரக்கனிடமிருந்து மீட்பதா?
கன்னத்தில் கையேந்தி கவலையுடன் மனிதம் பற்றி கவிதை எழுதுவதா?
இப்படி அனுபவங்களை புத்தகமாக்கி மனிதம் பரப்புவதா?

எது மனிதம்?

இவை எல்லாமேதான்.

குழந்தை பிறந்த அடுத்த விநாடியே அன்னை மார்பில் பால் சுரப்பது போல மனிதனாகப் பிறந்தவனுக்கு இயல்பாக இயற்கையாக துளிர்க்க வேண்டிய மனிதம் என்கிற உன்னத குணத்தை அடிக்கோடிட்டு அடையாளம் காட்ட வேண்டிய துர்பாக்கியமான அவல நிலைக்கு  முதலில் கொஞ்சம் வெட்கப்பட்டுக் கொள்வோம்.

ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு உடலால், பொருளால், பணத்தால், மனதால், அறிவால் உதவும் எல்லா உதவிகளுமே மனிதம் முத்திரை கொண்டவையே என்றாலும்… மன்னிப்பதும்கூட ஒரு மகத்தான மனிதமே என்று நான் கருதுகிறேன்.

மன்னிப்பதென்றால் எதை, எந்த அளவிற்கு? இவை மன்னிக்கக் கூடிய, மன்னிக்க முடிகிற குற்றங்கள் என்றும், இவை மன்னிக்க முடியாத, மன்னிக்கக் கூடாத குற்றங்கள் என்றும்  நாட்டுக்கு நாடு சட்டங்களை வகுத்து வைத்திருக்கின்றன. அதுபோல மனிதனும் மனதில் இப்படி இரண்டு பட்டியல்கள் வைத்திருக்கிறான்.

சாலையோரம் ஒருவர் சிறுநீர்  கழிக்கிறார்.  இது எச்சரித்து மன்னிக்க வேண்டிய குற்றம்.  சாலையோரம் ஒருவர் பத்து வயது சிறுமியை (கதறக் கதற) கற்பழிக்கிறார்.  இது? ரயில் நிலையத்தில் குண்டு வைத்து 500 பேர் இறக்க ஒருவர் காரணமாயிருக்கிறார்.  இது?

இவை சமூகத்தில் நிகழும் குற்றங்கள், தனி மனித வாழ்வில் பார்த்தால்… ஒருவர் பத்தாயிரம் பணத்தைத் திருடுகிறார்.  இதுகூட  எச்சரித்து சிறு தண்டனையுடன் மன்னிக்கலாம்.  வீட்டின் போலிப் பத்திரம் தயாரித்து வழக்கு போட்டு அவரை வீதியில் நிறுத்துகிறார் ஒருவர்.  இது? நீங்கள் செய்யாத குற்றத்தை செய்ததாக சாட்சி சொல்லி உங்களை சிறைக்கு அனுப்புகிறார் ஒருவர்.  இது?

கூட்டிக் கழித்தால் துரோகம் மன்னிக்க முடியாத குற்றப்பட்டியலில் இருக்கும்.  அதிலும்… ஒரு மனிதனால் தாங்க முடியாத, மரணம் வரை ஜீரணிக்க முடியாத துரோகம் எதுவென்று பார்த்தால்… ஒரு கணவன் மனைவிக்கும்,மனைவி கணவனுக்கும் செய்யும் நம்பிக்கை துரோகம் எனலாம்.  பாலியல் சுதந்திரம்  மிக்க அமெரிக்காவில்கூட இந்த நம்பிக்கை துரோகம் சகிக்க முடியாமல் உடனடியாக கோர்ட்டுக்கு சென்று பிரிகிறார்கள்.  நாட்டின் அதிபருக்கும் இதுதான் கதி.

இங்கே இந்த விஷயத்திற்குள் இருக்கும் மனிதத்தை நமது தமிழ்த் திரைப் படங்களில் எப்படிக் காட்டியிருக்கிறார்கள் என்று யோசித்துப் பார்க்கிறேன்.

திரு. கே. பாக்யராஜ் இயக்கிய மெளன கீதங்கள் படத்தை வெறும் பொழுதுபோக்கு திரைப்படங்களில் ஒன்றாக சேர்க்க முடியாது.  அதற்குள் இந்த துரோகம் தொடர்பான உளவியல் கண்ணோட்டம் அழகாக சித்தரிக்கப்பட்டிருக்கும்.  துரோகம் செய்த கணவனை மன்னிக்கும் மனைவியிடம் தென்படுவது மகத்தான மனிதம்.

திரு. பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் திரைப்படத்தில் ஒரு கணவன் தன் மனைவியின் முன்னாள் காதலனை பைத்திய நிலையில் சந்திக்கிறான்.  அவனை தன் குழந்தையாக ஏற்பதில் அற்புதமான மனிதம் இருக்கிறது.

திரு.  பாலுமகேந்திரா இயக்கிய சதி லீலாவதி ஒரு நகைச்சுவை படம் என்றாலும்… திருமணமான ஒருவனின் ஆசை நாயகியாக வாழ்ந்துவிட்டு தன் தவறை உணர்ந்து தவித்து நிற்கும் தன் முன்னாள் காதலியை மன்னித்து ஏற்கும் மனப்பக்குவத்துடன் சித்தரிக்கப்பட்டிருக்கும் அந்தக் காதலனிடம் நான் காண்பதும் மனிதமே!

இதெல்லாம் திரையில் காட்டப்படும் கற்பனைப் பாத்திரங்கள்.  இப்போது நான் அடையாளம் காட்ட விரும்புவது ஒரு நிஜமான, மன்னிப்பின் மகத்துவம் உணர்ந்த ஒரு மகத்தான மனிதரை!

அவர் என் நெடுநாள் வாசகர்.  முன்பு நிறைய கடிதங்கள் எழுதுவார்.  இப்போது நிறைய குறுஞ்செய்திகள் அனுப்புகிறார்.  அவரின் பெயரை கண்டிப்பாக வெளியிட முடியாது.   அவர் எனக்கு பத்து வருடங்கள் முன்பு எழுதிய ஒரு கடிதத்தை என் வாழ்நாள் முழுவதும் மறக்கவே முடியாது.  அவரின் அனுமதியுடன் இங்கே தந்திருக்கிறேன்.  (அவர் கொச்சையாக வாக்கியப் பிழையுடன் எழுதியிருந்ததை சீராகப் படிக்கும் வசதிக்காக செப்பணிட்டிருக்கிறேன்)

என் அபிமானத்துக்குரிய பி.கே.பி. சார்…

நீங்க சுகமா இருக்கணும்னு எப்பவும்போல என் பிரார்த்தனை.  போன வாரம் குலதெய்வம்  கோயிலுக்குப் போனப்போ உங்களுக்கும் சேர்த்து வேண்டிக்கிட்டேன்.  இத்தோட பிரசாதம் வெச்சிருக்கேன்.

எனக்கு ரெண்டு குழந்தைங்க.  உங்களுக்கே தெரியும்.  பெரியவன் ஏழாவது படிக்கிறான், பொண்ணு மூணாவது படிக்குது.  ரெண்டும் சுமாராதான் படிக்குதுங்க… டியூஷன் வெச்சா நிறைய மார்க் வாங்குவாங்க.  எங்க சார்… வாங்கற சம்பளம்தான் இழுத்துக்கோ பறிச்சிக்கோன்னு இருக்குதே, கூட்டிக் கேட்டா வேலையை விட்டு நின்னுக்கோன்னு சொல்றாங்க. அதெல்லாம் விடுங்க சார்.

ரொம்ப நாளா என் மனசுல அரிச்சிட்டிருக்கிற ஒரு விஷயத்தை இன்னிக்கு மனசு தொறந்து உங்ககிட்ட கொட்டணும்னு தோணுது.  படிச்சிட்டு நீங்க என்னைப் பத்தி என்ன நினைச்சிக்கிடாலும் சரி.. இதுவரைக்கும் என் மனசுக்கு மட்டும்தான் இது தெரியும்.  இப்ப உங்களுக்கு தெரியும்.  சாமி சத்தியமா நீங்க இதை யார்கிட்டயும் சொல்ல மாட்டிங்கன்னு எனக்கு தெரியும்.  நான் நல்லா இருக்கணும்னு ஆசைப்படறவராச்சே நீங்க…

வெக்கத்தை விட்டுச் சொல்றேன்.  கொஞ்ச நாளைக்கு முன்னாடி என் மனைவி எனக்கு துரோகம் செஞ்சதை என் கண்ணால பாத்துத் தொலைச்சுட்டேன்.  அவன் எனக்கு சொந்தக்காரப் பையன்தான்.  நான் பாத்தது அவங்களுக்குத் தெரியாது.  எனக்கு உடம்பெல்லாம் பதறிடுச்சி.  சினிமால காட்ற மாதிரி கைல கிடைச்சதை எடுத்து சாத்தணும்னெல்லாம் எனக்கு தோணலை.  அமைதியாப் போயி சரக்கடிச்சேன்.  ஆத்தங்கரை போய் விழுந்துட்டேன்.

அழுகை அழுகையா வருது.  ஆத்திரம்  ஆத்திரமா வருது. என்னை நல்லா கவனிச்சிப்பா சார்.  புள்ளைங்க மேல உசுரு..  குடுக்கற காசுல முகம் சுளிக்காம ஒரு வார்த்தை குத்திக் காட்டாம குடித்தனம் நடத்துவா சார்.  என் பக்கத்து சொந்தம் வந்தம் அப்படி கவனிப்பா.  எனக்கு காச்சல், தலைவலின்னா சாமிக்கிட்ட சண்டை போடுவா.  என்னை மரியாதைக் குறைவா பேசிட்டாருன்னு அவங்கப்பாக்கிட ரெண்டு வருஷம் பேசாம இருந்தவ சார்.  யார்கிட்டயும் கத்திப் பேச மாட்டா.  லேசா நான் முகம் மாறுனாலே பொசுக்குன்னு அழுதுடுவா. பூனைக் குட்டிக்கிட்டகூட பிரியமா இருப்பா.  அப்படிப்பட்டவ எப்படி எனக்கு இப்படி செஞ்சா?

இது எத்தனை நாளா நடக்குது? நான் என்ன குறை வெச்சேன்? இனிமே நான் என்ன செய்யணும்? இதைப் பத்தி கேக்கறதா, கேக்கறதில்லையா?  எப்பவும் மாதிரி எப்படி சகஜமா பேசறது? இப்படி கேள்வி மேல கேள்வி என்னை தூங்கவே விடலை.  நடு ராத்திரிக்கு மேல என்னைத் தேடிக்கிட்டு ஆத்தங்கரைக்கே வந்துட்டா அவ.  போதை தெளிஞ்சி வரலாம்னு உக்காந்திருந்தேன்னு பொய் சொன்னேன்.  வயிறு சரியில்லைன்னு சாப்புடாம படுத்துட்டேன்.  ஒண்ணும் பேசலை.

மறுநாள்  அந்தப் பயலை சந்தையிலே பார்த்தேன்.  அருவா  எடுத்து ஒரு சீவு சீவலாமான்னு கோபம் வந்துச்சி.  அடக்கிக்கிட்டேன்.  நானாப் போயி பேசி வம்பிழுத்தேன்.  அவன் கோபத்தைத் தூண்டி விட்டு கையை ஓங்க வெச்சி அப்பறம் வெச்சேன் நாலு முதுகுல.  கட்டிப் பொரண்டோம்.  என் சட்டை கிழிஞ்சிடுச்சி.  அவனுக்கு உதடு கிழிஞ்சிடுச்சு.  எங்களை விலக்கி விடதுக்குள்ள புரட்டி எடுத்துட்டேன்.  வீட்டு வந்து சந்தையில நடந்ததை சொன்னேன். என் காயத்துக்கு மருந்து போட்டா.

மறுநாளே அவன் வேற பொழைப்பைப் பாக்கறதுக்காக வெளியூருக்குப் போயிட்டான்.  நான் அடிச்சதுக்கான உண்மையான காரணம் அவன் மனசுக்கு தெரிஞ்சிருக்கணும்.

அன்னிக்கு கோயிலுக்குப் போயிருந்தோம்.  திடீர்னு பொங்கி பொங்கி அழுதா.  அங்க இருந்த விளக்குல கையைக் காட்டி பொசுக்கிக்கிட்டா.  இழுத்து வெச்சி ஏன் இப்படி பண்றேன்னேன்.  குழந்தைகளை அடிச்சிட்டேன், அதுக்குதான்னு சொன்னா.  ஆனா அவ உள்ளுக்குள்ள உணர்ந்துட்டான்னு எனக்கு  புரிஞ்சது.

அந்த நிமிஷமே அவ மேல மனசுக்குள்ள இருந்த கசப்பு காணாமப் போயிருச்சி.  பழையபடிக்கு பாசமா பேச ஆரம்பிச்சேன்.  அதான் தப்பை உணர்ந்துட்டாளே… அப்பறம் என்ன வேணும்? அதுக்கப்பறம் அப்படி ஒண்ணை நான் பாக்கவே இல்லை,  அதெல்லாம் பிரமை, இல்லைன்னா கனவுன்னு நினைக்க ஆரம்பிச்சிட்டேன். எனக்குப் பிடிச்சவ சார்… அவளை நான் மன்னிக்கலைன்னா யாரு மன்னிப்பாங்க?

நல்ல வேளை… நான் பாட்டுக்கு ஆத்திரப்பட்டு அவளை வெட்டிருந்தா? இல்ல ஆத்திரமா கேள்வி கேட்டு… விஷயம் தெரிஞ்சி போச்சேன்னு அவ அவமானம் தாங்காம சேலையில தூக்கு மாட்டிக்கிட்டு தொங்கியிருந்தா?  என் குடும்பமே சிதறியிருக்குமுல்ல?  என் ரெண்டு குழந்தைங்களும் தாயில்லாம தவிச்சிருக்குமே.

என்ன சார்… என்னைப் பாத்தா கேலியா இருக்கா?  பொண்டாட்டியை கண்டிக்க வக்கில்லாதவன்னு தோணுதா? யார்கிட்ட சொன்னாலும் அப்படித்தான் தோணும்.  பரவால்ல.  என் மனசுல ஒரு நிம்மதி இருக்கு.  எப்பவாச்சும் நினைச்சா கொஞ்சம் வலிக்கும். டிவி பாத்து, பாட்டு கீட்டு கேட்டா கொஞ்ச நேரத்துல சரியாப் போயிடும்.

இப்படிக்கு..
உங்கள் அன்பு வாசகன்..
…………..

உங்களை கேலியாக நினைக்கவில்லை என்றும், அவரின் மனிதத்தை நான் மதிக்கிறேன் என்றும் மூன்று பக்கங்களுக்கு பதில் எழுதினேன்.  எனவேதான் சொல்கிறேன்.. உதவுவது மட்டும் மனிதமல்ல, மன்னிக்க முடியாததையும்  மன்னிப்பதும் மகத்தான மனிதமே!

 

பட்டுக்கோட்டை பிரபாகர் 

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this