Sign in to follow this  
நவீனன்

சொத்துக் குவிப்பு வழக்கு! - சங்கடத்தில் சசிகலா... என்னாகும் எதிர்காலம்?

Recommended Posts

சொத்துக் குவிப்பு வழக்கு! - சங்கடத்தில் சசிகலா... என்னாகும் எதிர்காலம்?

 

ஜெயலலிதாவின் 20 ஆண்டு காலத் துயரம், சொத்துக் குவிப்பு வழக்கு. 1996-ம் ஆண்டு ஜெயலலிதாவைத் துரத்தத் தொடங்கிய இந்த வழக்கு, அவர் மரணமடையும் இறுதி நொடி வரை கொடுங்கனவாக அவரை இறுகப் பற்றியிருந்தது. 2016 டிசம்பர் 5-ம் தேதி, ஜெயலலிதாவுக்கு நேர்ந்த மரணம் மட்டுமே, அந்தக் கொடுங்கனவில் இருந்து அவரை விடுதலை செய்தது. அதையடுத்து, தற்போது ஜெயலலிதாவின் இடத்துக்கு வந்துள்ள, சசிகலாவுக்கு அந்த வழக்கு பெருந்துயரமாக மாறி நிற்கிறது. ஜெயலலிதா இப்போது உயிரோடு இல்லாத நிலையில், அந்த வழக்கின் தீர்ப்பு சசிகலாவுக்கு உருவாக்கப்போகும் விளைவுகள் வீரியமானவை. உச்சநீதி மன்றம் அந்த வழக்கில் அளிக்கப்போகும் தீர்ப்பைப் பொறுத்துத்தான், நேரடி அரசியலில் முதல் அடி எடுத்துவைத்துள்ள ‘சசிகலாவின் பயணம் வெற்றிகரமாக இருக்குமா... அல்லது வீழ்ச்சியை நோக்கிச் செல்லுமா?’ என்பதைத் தீர்மானிக்க முடியும்.

p38.jpg

தண்டனையும்... விடுதலையும்...

தி.மு.க ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட அந்த வழக்கின் விபரீதம் ஜெயலலிதாவுக்கு நன்றாகத் தெரிந்து இருந்தது. அதனால்தான், அவர் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு முயன்று 18 ஆண்டுகளாக அந்த வழக்கை இழுத்தடித்தார். ஒருவழியாக, 18 ஆண்டுகளுக்குப் பிறகு, 2014 செப்டம்பர் 27-ம் தேதி, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கியது. நீதித்துறை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த அந்தத் தீர்ப்பை நீதிபதி மைக்கேல் டி குன்ஹா வழங்கினார். ‘தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவருடன் வேதா இல்லத்தில் ஒன்றாக வசித்த சசிகலா, இளவரசி, ஒரு காலத்தில் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக இருந்த சுதாகரன் ஆகிய நான்கு பேரும் குற்றவாளிகள்’ என்று அறிவித்தார். அவர்களுக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். இதையடுத்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட 4 பேரும், 22 நாட்கள் ஜாமீன் கிடைக்காமல் சிறைக்குள் இருந்தனர். ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிபோனது. பிறகு, ஜாமீனில் வெளிவந்த ஜெயலலிதா, தன்னைத்தானே வீட்டுச் சிறையில் மூன்று மாதங்கள் அடைத்துக்கொண்டார். இதற்கிடையில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் ஜெயலலிதா. கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, நீதித்துறை வரலாற்றில் நிரந்தர கேலியாக மாறும் அளவுக்கு ஒரு தீர்ப்பை வழங்கினார். ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரையும் விடுதலை செய்து அவர் வழங்கிய அந்தத் தீர்ப்பில், நீதிபதி குமாரசாமி அடுக்கிய காரணங்களைக்கூட ஏற்றுக்கொள்வதற்கு வழி இருக்கிறது. ஆனால், அதையொட்டி, அவர் போட்டுக் காண்பித்தக் கணக்கை ஏற்பதற்குத்தான் எப்படிக் கூட்டிப் பார்த்தாலும் வழி இல்லாமல் போனது.

உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு

நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பில் இருந்த கணிதப்பிழையைப் பிரதானக் காரணமாக்கி, கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் 2015 ஜூன் 23-ம் தேதி, மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ் (பி.சி.கோஷ்), அமிதவ் ராய் அமர்வு விசாரித்து வந்தது. கடந்த ஜூன் 7-ம் தேதி இறுதி விசாரணை முடிந்து, தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இதற்கிடையில், 2016 செப்டம்பர் இறுதி வாரத்தில் தீர்ப்பு வெளியாகலாம் என செய்திகள் பரவின.  அதையடுத்து வந்த சில தினங்களில், உடல்நிலை பாதிக்கப்பட்டு ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அட்மிட் ஆனார் (செப்டம்பர் 22-ம் தேதி). அதன்பிறகு, உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் தேதியை அறிவிக்கவே இல்லை. ஆனால், சமீபமாக உச்ச நீதிமன்ற வட்டாரங்களில் இருந்து வெளிவரும் தகவல்கள், ஜனவரி மாதத்திலேயே தீர்ப்பு வெளியாகிவிடும் என்று சொல்கின்றன. தீர்ப்பு எப்படி வெளியாகும் என்பதை யூகத்தின் மூலம் சொல்ல முடியாது; சொல்லவும் கூடாது.

p38a.jpg

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பது குற்றமா?

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டபோது, கர்நாடக அரசு சார்பில் மூத்த வழக் கறிஞர் ஆச்சார்யா வாதாடினார். அவருடைய வாதத்தைக் கேட்ட நீதிபதிகளில் ஒருவரான பி.சி.கோஷ், “வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பது குற்றமா? ஒருவர் ஒரு லட்சம் ரூபாய் ஊதியம் பெறுகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள்; அந்த நபர் அவருடைய உறவினரிடம் இருந்து கொஞ்சம் கடன் வாங்கி, வேறு தொழிலில் அதை முதலீடு செய்து, அதன் மூலம் சொத்துக்கள் வாங்கினால், அது குற்றமா? அதைக் குற்றமாகக் கருத முடியாது. கடனாக வாங்கிய பணத்தை, முதலீடு செய்யும் தொழிலும், அதன்மூலம் அவர்கள் ஈட்டும் வருமானமும் தவறான வழியில் இருந்தால் மட்டுமே அதைக் குற்றமாகக் கருத முடியும்” என்றார். அது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆனால், நீதிபதியின் இந்தக் கருத்துக்கு ஆச்சார்யா அப்போதே தக்க விளக்கமும் அளித்தார்.

பணம் வந்த வழியே தெரியவில்லை

நீதிபதி பி.சி.கோஷ் சொன்ன உதாரணத்தை ஏற்றுக்கொண்ட மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா, “இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து வைத்துள்ளனர். அது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கு, வருமானவரியை மட்டும் செலுத்திவிட்டால், அந்த வருமானம் நல்ல வருமானம் என்றாகாது. வருமானவரித் துறை, நீங்கள் செலுத்தும் வரியை வாங்கி வைத்துக்கொள்ளும். ஆனால், ‘அது எந்த வழியில் வந்தது? வந்த வழி முறையானதா, முறையற்றதா?’ என்பது பற்றி எந்தக் கேள்வியும் எழுப்பாது. அந்தக் கேள்விகளை அரசுத்தரப்புதான் எழுப்பும். அதற்கான பதிலை நீதிமன்றங்கள் முடிவு செய்யும். அந்த வகையில் விசாரணை நீதிமன்றம், அது தவறான வழியில் வந்த பணம் என்று தீர்ப்பளித்துள்ளது. குற்றம் சாட்டப் பட்டவர்களால், அது சரியான வழியில்தான் வந்தது என்பதை நிரூபிக்க முடியவில்லை” என்றார்.

p38b.jpg

மூன்று வழிகளில் தீர்ப்பு!

தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை கர்நாடக அரசின் சிறப்பு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே சுட்டிக்காட்டி உள்ளார். ‘‘இந்த வழக்கில் மூன்று வழிகளில் தீர்ப்புச் சொல்ல லாம். அவை, 1. கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிசெய்து, குற்றம் சுமத்தப்பட்டவர்கள் நான்கு பேரையும் விடுதலை செய்யலாம். 2. கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்துசெய்து, விசாரணை நீதிமன்றத்தின் (குன்ஹா வழங்கிய தீர்ப்பை) தீர்ப்பை உறுதி செய்யலாம் 3. மீண்டும் இந்த வழக்கை கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி, விசாரணை நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்ட ஆவணங்கள், ஆதாரங்கள், சாட்சிகளை மறுவிசாரணைக்கு உட் படுத்தலாம்’’ என்று அவர் கூறியுள்ளார்.

4-வது வழி இருக்கிறதா?

இதைக்கேட்ட நீதிபதிகள், ‘‘நான்காவது வழி ஏதாவது இருக்கிறதா?’’ என்று கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, ‘‘இந்த வழக்கு, விசாரணை நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீடு அல்ல. மாறாக, கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீடு. அதை மட்டும் கருத்தில்கொண்டால் இந்த மூன்று வழிகள்தான் உள்ளன’’ என்று பதிலளித்தார்.

அதைக் கேட்ட நீதிபதிகள், உங்களின் எதிர்பார்ப்பு என்ன? என்று கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, “லஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்துக்கு நேர் எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத் தீர்ப்பு அமைந்துள்ளது. எனவே, அந்தத் தீர்ப்பை ரத்துசெய்து, விசாரணை நீதிமன்றத்தின் (குன்ஹா வழங்கிய) தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்ய வேண்டும்’’ என்றார்.

மூன்றில் எது என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.
 

http://www.vikatan.com/juniorvikatan

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this