Recommended Posts

ஈடுகள்

 

 
indhira_soundhirarajan_story

ஐநூறு ரூபாய்க்குப் பக்கமான தொகையை அவர் நீட்டினார். அவன் வாங்கி கொண்டான். ஒரு பரம்பரைச் சொத்தின் மிச்சம் அது! எடுத்துக் கொண்டு வீடு திரும்பிய போது அவனைப் பெற்றவள் புதியவாடகை வீட்டின் மோட்டு வளையில் பார்வையை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். 
ஒரு வகை பயம் கலந்த மௌனத்துடன் ஐநூற்றுச் சொச்சத்தை அவன் அவள் முன்னால் வைத்தான்.
அவள் அதைத் தொடவேயில்லை. மாறாக விழிகளில் கண்ணீர் கொப்பளிப்புடன் அவனைப் பார்த்தாள்.
"தயவு செஞ்சு அப்படிப் பார்க்காதம்மா... நான் இப்ப முன்ன மாதிரி இல்ல. மாறினவன்..."
- அதைக் கேட்ட அவள் வாய் விட்டுச் சிரிக்க விரும்பி பின் தோற்று மெலிய சிரித்து ஆழ ஒரு பெருமூச்சை விட்டாள்.
மனோ உக்ரம் தாளாமல் கட்டிலின் மேல் போய் விழுந்தான். கண்ணில் கண்ணீர் பெருகி விட்டது.
'உண்மையிலேயே தான் திருந்தி நல்ல மனிதனாக வாழத் துடிப்பதை எப்படிப் பெற்றவளுக்குப் புரிய வைப்பது?" - அவனது அந்தக் கண்ணீரினூடே  பிறந்த கேள்வி விசுவரூபம் எடுத்தது.
வெறும் வார்த்தைகளில் திருந்தி விட்டேன், திருந்தி விட்டேன் என்று சொல்லிச் சொல்லி ஏமாற்றி வந்த பொய்களுக்கு முற்றுப்புள்ளியிட்ட நிலையில்- செய்து விட்ட தவறுகளுக்கு ஒரு வகை ஈடு காண்பதன் மூலம் தான் தனது திருந்திய நிலையைப் புரிய வைக்க முடியும் எனும் நிஜம் அவனுள் மெலிய படர்ந்தது. 
அவனது தங்கைக்கு மாப்பிள்ளை பார்த்தாகி விட்டது. ஆயிற்று; இன்னும் ஒரு வாரத்தில் அவளுக்குத் திருமணம். திருமணச் செலவிற்காக அவனது தகப்பனார் படாத பாடுபட்டு அதை விற்று, இதை விற்று  ஐயாயிரத்தைச் சேர்த்திருந்தார்.
அவ்வளவும் பூட்டப்படாத பெட்டியில் பாந்தமாய் வைக்கப்பட்டிருந்தது. எதேச்சையாக பெட்டியைத் திறந்த அவனைப் பார்த்து அந்த 'ஐயாயிரம்' சிரித்தது.
சில வினாடி தடுமாறிப் பின் எடுத்துக் கொண்டான் அதை! பத்து நாள் கழித்து பெங்களூர் உல்லாசத்தில் கொஞ்சத்தையும், சென்னை கிண்டியில் மிச்சத்தையும் கரைத்து விட்டு வீடு திரும்பினான்.
அவனது தகப்பனார் இடிந்த நிலையில் கட்டிலில் சயனித்திருந்தார். எல்லோரும் ஆளுக்கொரு பக்கமாய் நின்று கொண்டு அவனை வார்த்தைகளால் குத்திக் கிழித்தார்கள். அவர் மட்டும் எதுவும் பேசவில்லை. இறுதியில் " கடைசி நேரத்தில் காசுக்காக என்னைக் கண்டவா வீடு வீடா ஏறிப் போய் பிச்சை எடுக்கும் படி செய்திட்டியேடா பாவி, உனக்கு நான் என்ன குறை வைத்தேன்?" - என்று மட்டும் கேட்டார். 
அப்பொழுது தான் அவனுக்கு தான் எதிர்பார்த்திருந்தபடி எப்படியோ கல்யாணம் நடந்து முடிந்து விட்டது தெரிய வந்தது. ஒரு வாரம் வரைக்கும் மௌனமாய் எதுவும் பேசாமல் யாராவது ஏதாவது பேசினாலும் பதில் பேசாமல் அசமந்தனாய் இருந்தான் அவன். மனசு மட்டும் அடுத்த அல்ப உல்லாசங்களை அனுபவிப்பதற்குண்டானவற்றிற்கு அடி போட்டுக் கொண்டிருந்தது. 
நாள் முழுக்க நாயாக அலைந்து திரிந்து பிச்சையெடுத்த காசுகளை எண்ணத் தொடங்கினான் அவன்!
ஆறு ரூபாய்க்குப் பக்கமாய் சேர்ந்திருந்தது.
திருப்தியோடு வீடு திரும்ப ஆரம்பித்தான். அடிமனதில் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருந்த, "என்னை இப்படி வீடு வீடா, ஏறி பிச்சை எடுக்கும் படி செய்திட்டியேடா பாவி!" என்னும் குரலின் ஒளி மெல்லக் குறைந்து போன நிஜம் அவனுக்கு உறைத்தது.
வீட்டுக்குள் நுழைந்தவன் செயற்கைத் தனமாய் அழுக்காக்கிக் கட்டிக் கொண்டிருந்த வேஷ்டியை கழற்றி எறிந்து விட்டு நல்ல வேஷ்டியை எடுத்துக் கட்டிக் கொண்டான். லேசாகக் குறைந்து போயிருந்த மனோபாரத்தோடு கட்டிலின் மேல் போய் விழுந்தான். அடி மனசில் இன்னொரு குரலில் அரும்பல்!
"கோபுரமாய் ஒசந்திருந்த குடும்பத்தை இப்படிக்கு குலைச்சுட்டியேடா படுபாவி... உனக்கு விமோசனமே கிடையாதுடா..."
சுழன்று சுழன்று வந்த அந்தக் குரல் ஒலியால் அவன் கண்களில் உப்பு நீர் துளிர்த்தது. சில நிமிடங்கள் வரை விழிநீர் துளிர்ப்போடு மனசுக்குள் புழுங்கியவன் மெல்ல எழுந்தான்.

எளிய பூஜை அறைக்குள் பிச்சையெடுத்த ஆறு ரூபாயோடு நுழைந்தான்.
வயதான ஒரு ஆண் மகனின் படத்திற்கு முன்பாக அணைந்து விட்டிருந்த  அகல் விளக்குக்குப் பக்கத்தில் உண்டியலைப் போன்ற ஒரு பித்தளை பாத்திரம். அதைக் கையிலெடுத்தான். அதன் வாயைத் திறந்து அதற்குள் பிச்சைக் காசுகளைக் கொட்டினான்.

 

புகைப்படத்துக்குள் உறைந்து  கிடக்கும் ஆணின் முகத்தைப் பார்க்க விழிகள் கூசின. திரும்பவும் கட்டிலில் போய் விழுந்தான். "உனக்காக கண்ணீர் விட்டது போதாதா? என்னோட ரத்தத்தையே சிந்தும் படி வெச்சுட்டியேடா... உன்னைப் பெத்தத்திற்கு இது போறாது. இன்னமும் வேணும்."
என்றோ அவனது தந்தை உதிர்த்திருந்த ஆக்ரோஷமான அவலக் குரலின் உலா அவன் மனசுக்குள் அரபுப் புரவியின் வேகத்துடன்,  நடந்து கொண்டிருந்தது.
கஷ்டப்பட்டுக் கொண்டு  கண்களை மூடினான்.
குரலுக்கு காரணமான பின்னணி கண் முன்னால் வந்து நின்றது.
'அகண்ட அவ்வீதியில் அவிழ்ந்து போன வேட்டியை அள்ளிச் சுருட்டிக் கொண்டு ஓடி வருகிறான். அவன் பின்னால் ஒரு பட்டாளமே அவனைத் துரத்தி வருகிறது.
வீட்டையடைந்து கதவைத் தாழிட்டுக் கொண்டு அரக்கப் பரக்க அவன் மூச்சு விட்ட போது, அவனது தகப்பனார் ஏதோ முக்கியமான வேலையாக இருந்தார். மகனைப் பார்த்து பதட்டப்பட்டு தாழிடப்பட்டிருக்கும் கதவைத் திறந்த போது, வெளியே காத்திருந்த அந்தக் கும்பல் வெறித்தனமாய் உள்ளே நுழைந்தது.
இடையே புகுந்த அவரையும் அந்தக் கும்பலின் வெறி பதம் பார்த்தது.ரத்தம் சொட்ட அவர் நிலத்தில் விழுந்த பிறகே அவ்வளவிற்கு காரணங்கள் அவிழ்ந்தன.  
"கள்ளச் சாராயம் குடிச்சுட்டு வந்து கன்னிப் பொண்ணையா கெடுக்கப் பார்க்கிறே? கிழிச்சுப் புடுவோம் கிழிச்சு!"
கும்பலில் ஒருவர் கருவிக் கொண்டே அகன்றார். நிலத்தில் விழுந்து கிடக்கும் அவரது செவியிலும் அந்தக் குரல் இறங்காமல் போகவில்லை.
அவனது தாய் அவரை அள்ளி மடியில் போட்டுக் கொண்டு எரிமலையாய் அவனைப் பார்த்து வெடித்து ஓய்ந்த போது அவர் மெல்லப் பேசினார்.
"உனக்காகக் கண்ணீர் விட்டது போதாதா? என்னோட ரத்தத்தையே சிந்தும் படி வச்சுட்டியேடா பாவி! உன்னைப் பெத்ததற்கு எனக்கு இது போறாது. இன்னமும் வேணும்..."
அதுவே அவர் பேசிய கடைசிப் பேச்சு. அதன் பின்பு அவர் அப்படியே முடிந்து போனார்.
- அன்று அவர் பேசிய பேச்சும் சொச்சமும் அவனது திருந்திய மனோ நிலையில் ரணமாய் எரிந்து அவிந்து முடிந்த போது ஒரு புது முடிவோடு அவன் உறங்கிப் போயிருந்தான். 
எப்படியோ உறங்கிப் போய் திரும்பவும் கண்களை மலர்த்திய போது காலை மணி ஏழு.
அவனது தாய் சோர்வுடன் வார்த்துப் போட்ட கடலை மாவு தோசைகளை அள்ளி வாயில் போட்டுக் கொண்டான். அடுத்து ஜெனரல் ஆஸ்பத்திரியில் ஸ்டாப் நர்ஸ் கொடுத்த பிரெட்டும், போர்ன்விட்டாவும் தான் உள் இறங்கின. 
உடம்பை விட்டுக் குருதி வெளியேறிய களைப்பு லேசாய் அவனுள் நெளிந்து கொண்டிருந்தது. தொடர்ந்து ஸ்டாப் நர்ஸ் ஒரு கையெழுத்தை வாங்கி கொண்டு, ஒரு தொகையை அவனிடம் கொடுத்தாள்.
போலியான புன்னகையோடு வாங்கி கொண்டு திரும்பினான்.
"உனக்காகக் கண்ணீர் விட்டது போதாதா? என்னோட ரத்தத்தையே சிந்தும் படி..."
- அடி மனதில் அடிக்கடி எம்பிக் குதித்த குரல் இப்பொழுது செத்துப் போயிருந்தது!
வீடு திரும்பியவன் ரத்தத்தை விற்றுப் பெற்ற தொகையையும் பித்தளை பாத்திர உண்டியலில் போட்டான். போட்ட கையோடு பாத்திரத்தைத் தலை கீழாக கவிழ்த்து மொத்தத்தையும் எண்ணினான்.
ஆறு நூறைத் தாண்டியிருந்தது தொகை! அதை மறுபடியும் பாத்திரத்திற்குள் அள்ளிப் போட்டு அந்தப் பாத்திரத்தோடு வெளியே வந்த போது வானம் மோடம் போட்டுக் கொண்டிருந்தது. அதனூடே அவனது பார்வைக்கு அந்த ஊரின் எழிலான உயர்ந்த கோபுரங்கள் தெரிகின்றன. தொலைவில் பல கோபுரங்களுக்கு அப்பால் ஊரின் நுழைவாயிலில் ஒரே ஒரு கோபுரம் மட்டும் சிதிலப்பட்டு உடைந்து சிதைந்து...
திரும்பவும் வீட்டுக்குள் நுழைந்தான்.
அவனைப் பெற்றவள் வழக்கம் போல் விரக்தியும், வெறுப்புமாய், மோட்டு வளையில் பதிந்த பார்வையுமாய், இந்த உலகத் தொடர்பு என்று அறுபடும் என்னும் கேள்வியுமாய் ஒரு சிலை போல் அமர்ந்து கொண்டிருந்தாள்.
"அம்மா" - அழைக்கிறான்.
மெல்லப் பார்வையால் அவனை வர்ஷித்தாள் அவள். 
"கடனில் மூழ்கிப் போன நம்ம சொந்த வீட்டோட சொச்சப் பணமும், நான் பிச்சையெடுத்தும், ரத்தத்தை வித்தும் சேர்த்த பணமும் இதுல இருக்கு. இதை நம்ம ஊர் ராஜகோபுர வளர்ச்சிக்கு நன்கொடையா கொடுத்துடலாம்னு..."
- அவள் நிதானிக்கும் அவனை முதன் முறையாக கம்பீரத்துடன் ஏறிட்டாள்.
"அப்பத்தான் என் தெளிஞ்ச மனசுல ஒட்டியிருக்கிற 'கோபுரமா ஒசந்திருந்த குடும்பத்தைக் கொலைச்சுட்டியே பாவி!' - ங்கிற வார்த்தை அழியும். அது அழிஞ்சாத்தான் திரும்பவும் இந்தக் குடும்பத்தை ஒரு கோபுரமே உயர்த்த என்னால் முடியும்! அது மட்டுமல்ல; நான் திருந்தி உன் மன்னிப்புக்காகக் காத்திருப்பதும் உனக்குப் புரியும்...! அதனாலதான்..."
-அவன் பேசி முடித்தான்.
அவள் அவனை நெகிழ்ச்சியோடு பார்த்தாள்.
அவளது பார்வையில் விரக்தி விலகியிருந்தது.
பரவசம் பரவியிருந்தது.  

http://www.dinamani.com/

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
suvy    3,175

தப்பு செய்தல் இயல்பு , அதையே தொடர்ந்து செய்வதுதான் தவறு.....!

தெரிந்தே கெடுப்பது பகையாகும். தெரியாமல் கெடுப்பது உறவாகும்....!

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this