Sign in to follow this  
நவீனன்

கோஹ்லிக்காக தோனி கேப்டன்சியைப் பறித்ததா பி.சி.சி.ஐ.!? குபீர் பின்னணி

Recommended Posts

கோஹ்லிக்காக தோனி கேப்டன்சியைப் பறித்ததா பி.சி.சி.ஐ.!? குபீர் பின்னணி

கடந்த ஜனவரி நான்காம் தேதி இரவு, கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகினார் என பி.சி.சி.ஐ  அறிவிக்க, நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.

தோனி  உடன் விராட் கோஹ்லி மற்றும் இந்திய வீரர்கள்

இந்தியாவின்  தலைசிறந்த கேப்டன்களில்  ஒருவர் தோனி. ஐ.சி.சி நடத்திய கோப்பைகள் அனைத்தையும் இந்தியா ஜெயிப்பதற்கு காரணமான முக்கியமான நபர் மகேந்திர சிங் தோனி. உலகிலேயே ஐ.சி.சி கோப்பைகள் அனைத்தையும் வைத்திருக்கும் ஒரே கிரிக்கெட் வீரரும் சரி, கேப்டனும் சரி தோனி மட்டும் தான். 

இந்தச் சூழ்நிலையில் தோனி ஏன் விலகினார் என்பது மர்மமாகவே இருந்தது. தோனி இதுவரை வெளிப்படையாக கடிதம் மூலமோ, பேட்டி மூலமோ, சமூக வலைதளங்கள் மூலமோ அதிகாரப்பூர்வமான விளக்கம் ஏதும் சொல்லாத நிலையில் விராட் கோஹ்லிக்காக  வழி விட்டிருக்கிறார்  என்ற பொதுவான கருத்து சொல்லப்பட்டது. 

உண்மையில் நடந்தது என்ன? 

தோனிக்கு தற்போது 35 வயதாகிறது. 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் பங்கேற்கும் போது தோனிக்கு 38 வயதாகிவிடும் என்பதை முதல் காரணமாக பி.சி.சி.ஐ வட்டாரத்தில் சொல்கிறார்கள். முப்பந்தைந்து வயது என்றாலும் தோனி தற்போது பக்கா ஃபிட்டாகவே இருக்கிறார். இன்னமும் அவரைப் போல விக்கெட்டுகளுக்கு இடையே வேகமாக ஓடும் வீரர் நம்மிடம் இல்லை. விக்கெட் கீப்பிங்கில் முந்தைய காலகட்டங்களை விட தற்போது தான் சிறுத்தை வேகத்தில் கேட்ச் பிடிக்கிறார், ரன் அவுட் செய்கிறார், ஸ்டம்பிங் செய்கிறார். ஆக ஃபிட்னெஸ் காரணம் காட்டி தோனியை ஒதுக்குவது அபத்தமானது என்பது தெளிவு.

என்ன தான் பிரச்னை? 

கோஹ்லியின் அபார ஃபார்மும், அவரின் தொடர் டெஸ்ட் வெற்றிகளும் தான் தோனிக்கு தற்போது பெரும் நெருக்கடியாக அமைந்துள்ளன. கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை முடிந்தபிறகு தோனி தானாகவே ராஜினாமா செய்வார் என எதிர்பார்த்தது பி.சி.சி.ஐ. ஆனால் தோனி அப்படி எந்தவொரு  முடிவையும் அறிவிக்கவில்லை. இதையடுத்து சீனியர் வீரர்கள் எல்லோருக்கும் ஓய்வு தரப்பட்டு, இளம் வீரர்கள் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கு அனுப்பப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. 2015ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை முடிந்த பிறகு, இந்தியா  ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டது, அப்போது ரஹானே தலைமையிலான அணி அறிவிக்கப்பட்டது. அதே போல கடந்த ஆண்டு சுற்றுப்பயணத்துக்கும்  கேப்டன் பதவிக்கு ரஹானேவைத் தான் டிக்  செய்திருந்தது பி.சி.சி.ஐ 

இப்படியொரு சூழ்நிலையில் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு மேலாக  நிறைய போட்டிகளில் பங்கேற்று வந்தபோதும், 'நான் ஃபிட்டாகத் தான் இருக்கிறேன். ஜிம்பாப்வே தொடருக்கு நான் ரெடி' என அறிவித்தார் தோனி. இது பி.சி.சி.ஐக்கு கடும் நெருக்கடி  ஏற்படுத்தியது. எனினும் தோனி தலைமையில் இளம்  வீரர்கள் விளையாடினால் நிறைய கற்றுக் கொள்வார்கள் எனச் சொல்லி வேண்டா வெறுப்பாக அனுப்பியது பி.சி.சி.ஐ. 

தோனி, dhoni

ஜிம்பாப்வே தொடரில், முதல் டி20 போட்டியில், தோனி கடைசி ஓவரில் பேட்டிங் செய்தும், இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அந்த இடத்தில் இருந்து தோனியின் கேப்டன்சிக்கு முடிவுரை எழுத ஆரம்பித்தது பி.சி.சி.ஐ. அமெரிக்காவில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு மிகப்பெரிய அளவில்  பணப்பயன்கள் இருந்ததால், கோஹ்லி, தோனி என பெரிய ஆட்கள் விளையாடினால் தான் அமெரிக்காவில் கிரிக்கெட் பிரபலமாகும் எனச் சொல்லி  தோனியை கேப்டனாக தொடர அனுமதித்தது. அந்த தொடரில் நடந்த ஒரே போட்டியிலும், இறுதி ஓவரில் தோனியால் வெற்றிக்குத்  தேவையான ரன்களை அடிக்க முடியவில்லை. இது தான் சரியான தருணம் என காத்திருந்த பி.சி.சி.ஐ தோனிக்கு கட்டம் கட்ட ஆரம்பித்தது. 

ஒருபக்கம் தோனி தலைமையிலான இந்திய அணி காமாசாமோவென விளையாடியது, தோனி தலைமையிலான அணியில் விராட் கோஹ்லியைத் தவிர வேறு யாரும் பெரிய அளவில் பெர்பார்மென்ஸ் செய்யவில்லை. இதனால் லிமிடேட் ஓவர்ஸ் கிரிக்கெட்டில் மிகப்பெரிய வெற்றிகளை பெற முடியாமல் இந்தியா தள்ளாடியது. அதே சமயம் கோஹ்லி தலைமையிலான டெஸ்ட் கிரிக்கெட் அணி மிகப்பெரிய எழுச்சி கண்டது. வரலாறு காணாத தொடர் வெற்றி பெற்றது. இலங்கை, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் என ஹாட்ரிக் தொடர் ஜெயித்த உற்சாகத்தில் இருந்தது இந்தியா. 

இப்படியொரு சூழ்நிலையில் தான் இந்தியா வந்தது நியூசிலாந்து. தொடருக்கு முன்னதகாவே தோனியிடம் உங்களின்  எதிர்கால திட்டங்கள் என்னென்ன என  சூசகமாக கேட்டது பி.சி.சி.ஐ. தோனி எந்த விதமான பதிலையும் சொல்லவில்லை. இதனால் கடுப்பானது 

amitabh chaudry

பி.சி.சி.ஐ. நியூசிலாந்து தொடரிலேயே விராட் கோஹ்லியை கேப்டனாக்க வேண்டும் என அடம்பிடித்தார் பி.சி.சி.ஐ இணைச் செயலாளர் அமிதாப் சவுதாரி. நீங்கள் சொல்வது சரி தான், என் தேர்வும் தோனி அல்ல, எனினும்  தோனிக்கு இன்னொரு வாய்ப்பு கொடுப்போம் எனச் சொல்லியிருந்தார் அப்போது புதிதாக தேர்வுக் குழு வாரியத் தலைவர் பொறுப்பேற்ற எம்.எஸ்.கே பிரசாத் 

இந்த களேபரங்களுக்கு நடுவே டெஸ்ட் தொடர் ஆரம்பித்தது.டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவிடம் எல்லா போட்டிகளிலும் சரண்டர் ஆனது நியூசி. இதனால் மக்களிடமும் விராட் கோஹ்லியின் கேப்டன்சி இமேஜ் நாளுக்கு நாள் அதிகரித்தது.

 வலுவான நியூசிலாந்து அணிக்கு எதிராக  ஒருநாள் தொடரில் ரெய்னா, யுவராஜ் சிங், அஷ்வின், ஜடேஜா என சீனியர் பிளேயர்கள் யாரையும் தேர்ந்தெடுக்க வில்லை. அஷ்வின், ஜடேஜா ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில்  தொடர்ந்து ஆடுவதால் ஓய்வு தரப்பட்டிருக்கிறது என காரணம் சொன்னார் எம்.எஸ்.கே பிரசாத். காயம்  உள்ளிட்ட சில காரணங்கள் காட்டி புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா என சீனியர் பவுலர்களையும் அணியில் சேர்க்கவில்லை. கேதர் ஜாதவ், மணீஷ் பாண்டே, ஹர்டிக் பாண்டியா, பும்ரா, அக்சர் படேல், அமித் மிஸ்ரா, ஜெயந்த் யாதவ் ஆகியோருக்கு ஒரே தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. தோனியை கேப்டனாகவே அறிவித்தார்கள். இந்த  அணியை வைத்துக் கொண்டு தோனி வழிநடத்தி வெற்றி பெறட்டும் என வீம்பாகவே இந்த முடிவை எடுத்திருந்தது பி.சி.சி.ஐ. 

ஏற்கனவே ஃபினிஷிங்கில் மட்டும் கொஞ்சம் தடுமாறிக் கொண்டிருக்கும் தோனிக்கு இது  பேரிடியாக அமைந்தது. பேட்டிங்கில் தோனி நான்காவது, ஐந்தாவது நிலையில் களமிறங்க ஆரம்பித்தார். முதல் போட்டியை இந்தியாவும், இரண்டாவது போட்டியை நியூசிலாந்தும் வென்றன, மூன்றாவது போட்டியை இந்தியாவும், நான்காவது போட்டியை நியூசிலாந்தும்  வெல்ல, ஐந்தாவது மற்றும் இறுதிப்போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்தது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 269 மட்டுமே எடுத்திருந்தது, எனினும் மிஸ்ராவின் மாயாஜால பந்துவீச்சால் 190 ரன்கள் வரலாற்றுச்  சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றது இந்திய அணி. தொடரை இந்தியா ஜெயித்தாலும், இது சிறப்பான தொடர் வெற்றி கிடையாது என்பதே ரசிகர்களின் கருத்தாக மாறியது.  தோனி கேப்டனாக தொடர்வதை பற்றி அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராஃபி முடிந்த பிறகு யோசிக்க வேண்டும் என  ஆங்காங்கே முணுமுணுப்பும் எழ  ஆரம்பித்தது 

தோனி ராஜினாமா

அடுத்ததாக இங்கிலாந்து இங்கே வந்தது. இங்கிலாந்து சுற்றுப்பயணம் அவ்வளவு எளிதாக இருக்காது, கோஹ்லிக்கு  சவால்  தரும் தொடராக அமையும்  என்றே எல்லோரும் கணித்தார்கள்.  ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில்  கடைசி நேரத்தில் கோஹ்லியால் தான் தோல்வியில் இருந்து தப்பி டிரா செய்தது இந்தியா. ஆனால் அதன் பிறகு மற்ற டெஸ்ட் போட்டிகள் எல்லாவற்றிலும் இங்கிலாந்து மரண அடி வாங்கியது. உள்ளூரில் 4-0 என ஜெயித்து இங்கிலாந்தை வீட்டுக்கு அனுப்பியது கோஹ்லி படை. கடந்த முறை இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு வந்திருந்த போது, இந்திய அணிக்கு கேப்டன் தோனி தான், அப்போது இங்கிலாந்து டெஸ்ட் தொடரை ஜெயித்துச் சென்றது. அந்த தொடரின் முடிவில் தான் முதன் முதலாக தோனியின் மேல் பெரிய விமர்சனங்கள் எழ ஆரம்பித்தது. இதோ இப்போதைய இங்கிலாந்து தொடரில், இந்தியா கெத்தாக ஜெயித்திருக்கிறது. இது தோனியின் பதவியை பறித்திருக்கிறது.

சென்னையில் கோஹ்லி ஜெயித்ததுமே, ஒருநாள், டி20 தொடர்களுக்கும் கோஹ்லி க்கு மகுடம்  சூட்டிய ஆக  வேண்டும் என  பி.சி.சி.ஐ. முடிவு செய்தது. பி.சி.சி.ஐ தலைவர் அனுராக் தாகூர் மட்டும் இப்போதைக்கு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் இங்கிலாந்து தொடர் முடிந்த பிறகு  தோனி பற்றி முடிவெடுக்கலாம் என சொல்லியிருக்கிறார். நியூசிலாந்து தொடரில் தோனி திணறியதும், இங்கிலாந்து தொடரில் கோஹ்லி ஜொலித்ததையும் கவனித்த இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர் எம்.கே.பிரசாத், தோனிக்கு ரஞ்சி கோப்பையில் ஒரு டெஸ்ட் வைத்தார். 2016- 2017 சீஸனுக்கான ரஞ்சிக் கோப்பை அரையிறுதியில் ஜார்கண்ட்  அணியும், குஜராத் அணியும் மோதின. மேட்ச் நாக்பூரில் நடந்தது.

ஜார்கண்ட் அணிக்கு ஆலோசகராக தோனியும் நாக்பூர் சென்றார்.வீரர்களுக்கு வெற்றிக்கான ஆலோசனை வழங்கினார்.கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி மேட்ச் தொடங்கியது. குஜராத் முதல் இன்னிங்ஸில் 390 ரன்களை அடித்தது, மறுநாள் ஜார்கண்ட் பேட்டிங் பிடித்துக் கொண்டிருக்கும் போதே அனுராக் தாகூரை, பி.சி.சி.ஐ தலைவர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கியது உச்ச நீதிமன்றம். அதே நாள் ஜார்கண்ட் 213/5  என திணறிக்கொண்டிருக்க, தோனிக்கு மறைமுகமான  அழுத்தம் தந்து கொண்டிருந்தார் பி.சி.சி.ஐ  இணை செயலாளர் அமிதாப் சவுதாரி. மூன்றாவது நாள் ஆட்டத்தில் ஜார்கண்ட் அணி  408  ரன் எடுத்து நிமிர்ந்தது. மேட்ச் டிரா ஆனால் ஜார்கண்ட் அணிக்கு வெற்றி என்ற சூழ்நிலையில், போட்டியில் நான்காவது நாளில் நம்பமுடியாத வகையில் வெறும் 111 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகி மண்ணை கவ்வியது ஜார்கண்ட் அணி. 

MSK prasad

உடனடியாக  தோனியைப் போய் சந்தியுங்கள் என சொல்லி எம்.எஸ்.கே பிரசாத்தை  அனுப்பினார் அமிதாப் சவுதாரி. கோஹ்லியின் அபாரமான கேப்டன்சி பற்றி புகழ்ந்தது மட்டுமின்றி,  உலகக்கோப்பைக்கு அணியை தயார் செய்ய வேண்டிய அவசியம் குறித்தும் பேசியிருக்கிறார் எம்.எஸ்.கே பிரசாத் . இந்த விஷயங்களை எல்லாமே கூர்ந்து கேட்டுக்கொண்டிருந்த தோனி "சரி நான் கேப்டன்சியை ராஜினாமா செய்கிறேன்" என சொல்ல, "வேறு வழியில்லை, அதே சமயம் எந்த வித உள்நோக்கமும் இல்லை" என வருத்தம் தோய்ந்த குரலில்  சொல்லிவிட்டு திரும்பினார் எம்.கே.பிரசாத். 

அவரிடம் பேசிய அடுத்த ஒரு மணிநேரத்தில், கேப்டன் பதவியை இருந்து விலகுவதாக  பிசிசிஐக்கு அதிகாரப்பூர்வமாக தெரியப்படுத்தினார் தோனி. உடனடியாக விலகல் முடிவை ஏற்றது  பி.சி.சி.ஐ. 

 மீடியாவுக்கு தகவல் தெரிவிப்பதற்கு பதிலாக, ட்விட்டரில் உடனைடியாக தோனி விலகல் பற்றி ட்விட் போட்டது பி.சி.சி.ஐ. ஜனவரி நான்காம் தேதி அன்று அவசர அவசரமாக தோனி கேப்டன் பதவியில் இருந்து  விலகியதின்  பின்னணி இது தான் என விவரிக்கிறார் பீகார் கிரிக்கெட் சங்க செயலாளர் ஆதித்யா வர்மா.

தோனி விலகல் குறித்து கருத்து தெரிவித்த தேர்வுக்குழுத்தலைவர் எம்.எஸ்.கே பிரசாத்  " மிகச்சரியான தருணத்தில் தோனி இந்த முடிவை எடுத்திருக்கிறார். அவரைத் தலை வணங்குகிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோஹ்லி  கேப்டன்ஷிப்  பொறுப்பை ஏற்று அபாரமாகச் செயல்பட முடியும் என நிரூபித்திருப்பத்தை தோனி அறிவார். டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து பார்மெட்டிலும் நம்பர் 1 இடத்தை பிடிப்பது தான் நமது இலக்கு" எனச் சொல்லியிருக்கிறார்.  இந்த வரிகளை முழுமையாக உள்வாங்கினால் தோனி விலகல்  குறித்து புலப்படும்.

இந்திய கிரிக்கெட்டிலும் ஒரு சாம்ராஜ்யம் முடிந்திருக்கிறது, இன்னொரு சாம்ராஜ்யம் பிறந்திருக்கிறது ! இது என்ன முடிவைத் தரப்போகிறது என்பதை வழக்கம் போல பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

http://www.vikatan.com/news/sports/77358-did-bcci-give-much-pressure-on-dhoni-to-relinquish-captaincy.art

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this