Sign in to follow this  
நவீனன்

அப்பா.. ஐவர்.. ஆழம்... - நீலவன்

Recommended Posts

அப்பா.. ஐவர்.. ஆழம்... - நீலவன்

 

 
appa aivar1

 

 

அப்பாவின் போக்கு யாருக்கும் பிடிக்கவில்லை. விளங்கினால் தானே பிடிக்கும்?

போனவாரம் ஒருநாள் இரவு பத்துமணிக்குத் திடீரென்று சொல்லிக் கொள்ளாமல் போனவரை இன்னும் காணோம்.

ஆறுமாதங்களில் அப்பா இப்படி ஒரேயடியாய் மாறிப்போய் விட்டார். அதற்கு முன்னால்? அவரது 'டியர்' இருந்தாள்- அம்மா தான்! அவள் கிழித்த கோட்டை அவர் தாண்ட மாட்டார். அவள் போவதற்குப் பத்து தினங்களுக்கு முன்புதான் தன்னுடைய உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றார். வாழ்க்கையில் எது தான் கவனமும், முன்னெச்சரிக்கையும் கலந்த ஒத்திகை போல் நிகழ்கிறது?

அபாண்டமாய்ச் சொல்லக்கூடாது. அப்பா அம்மாவுடன் கூட வாழ்ந்தவரை பச்சைப் பிள்ளையாய்த்தான் அலட்டிக்கொள்ளாமல் இருந்தார். முன்னேற்ற வழிகளில் தீவிரமான ஓர்  அக்கறை அவருக்கு  எப்போதும் இருந்ததாய்க் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாது.

மாதந்தோறும் கைநிறையக் கொண்டு வந்து அம்மாவிடம் கொடுப்பார். அவள் தான் ஜவுளி பாக்கி முதல் பால் பாக்கி ஈறாகப் பட்டுவாடா செய்வாள்.

அப்பாவின் ஆபீசில், அவரைப் போன்ற உத்தியோகஸ்தர்களெல்லாம் 'ராஜ்தூத்' அல்லது லாம்பிரட்டா வைத்துக் கொண்டு நல்ல வசதிகளோடு வாழ்கின்றனர். ஆனால் அப்பா? வலது கைக்குத் தெரியாமல் இடது கையில் வாங்கும் கையூட்டா? அந்தத் திசைப்பக்கம் கூடத் தலை திரும்பாது!  அதற்காகத் திணிக்க முன் வரும் வள்ளல்களை விஜிலன்ஸ் ஆபீசுக்கு அறிமுகம்செய்யத் துணியவும் மாட்டார்; பெருந்தன்மைக்காரர்!

சர்வீஸ் முடிந்து பென்ஷன் ஸ்டேஜ் வந்தபோது ஒரு மச்சு வீடும், பாங்கில் பி.எப்., இன்சூரன்ஸு அது இது எல்லாம் சேர்ந்து வந்த பத்தாயிரமும் தான் 'லைஃபின் அர்த்தங்கள்.

குடும்பம்...அதற்கென்ன குறை? குடும்பக்கட்டுப்பாடு கொள்கைக்கு சிவப்புக்கொடி காட்டி விட்டார்! ஒன்றா? இரண்டா? ஐந்து! மூன்று: சிசர்ஸ், டோனி , பீட்டில்ஸ். இரண்டு: குதிரை வால், பாப். ஆனால் இதுகளுக்கெல்லாம் தாயானவள் ஒரு சந்திரமதி நூற்றாண்டு!

அம்மா இருந்தபோது வீட்டுத்தோட்டத்தில் தலைக்கு முண்டாசு, இடையில் ஒரு நைந்த வேஷ்டி சகிதம், கையில் தாங்கிய மண்வெட்டியில் வியர்வை முத்துக்கள் உதிரும்  வண்ணம் கடுமையாக வேலை செய்வார் அப்பா. மாலை ஐந்தரை அல்லது ஆறு மணிக்கு கீர்த்தனைகள், கீதைப்பேருரைகள்,நவீனங்கள், ரேடியோ இத்யாதி இத்யாதி ... அந்தந்த நேரங்களில்; அந்தந்த வேலைகளைத் தவறாமல் செய்து முடிப்பார்... எல்லாம் ஒரு கம்பியூட்டரின் இயக்கங்கள்.

அம்மாவுக்கு மட்டும் ஏன் அப்படிப் பயந்தார்? அப்படி என்ன அவளிடம் ஒரு நடுக்கம்? அந்த அந்தரங்கம் மிகவும் புனிதமானது.

தனது குழந்தைகளைப் பொறுத்தவரை அவர் எப்படி? உடைகளை பிடித்தும் பிடிக்காமலும், பெண்பாலுக்கும் ஆண்பாலுக்கும் மாற்றிக்கொண்டு நாகரீகம் முற்றி விட்ட தோரணையில் உலாவரும் 'அதுகளை' அவர் அதட்டியது உண்டா? ஊஹூம்!

அப்பா பரம சாது. வண்டிக்குதிரைப் பார்வை. 'குழந்தைகள் வளர்ப்புப் புத்தகம்' கருப்பா சிவப்பா? அவருக்கென்ன தெரியும்? ஆபீஸிலும், அக்கம் பக்கத்திலும் அப்பா ஒரு தனி டைப் தான்! இருக்குமிடம் தெரியாது. பெயருக்கென்ன? தேடி வந்து குவிந்தது: 'ராமபத்ரன் (அப்பாதான்) நல்லவர்...'

அப்பாவுக்கு இந்த ஆறு மாதங்களில் என்னநேர்ந்தது? ஒன்றுமே புரியவில்லை. அவர் மீது ஏன் ஐந்தும் நங்கூரங்கள் பாய்ச்சுகின்றன.

மணிக்கணக்கில், நாட்கணக்கில், வாரக்கணக்கில் வீட்டுக்கு வருவதில்லை அவர். அதைத் துல்லியமாய்க் கணக்கிட்டு டைரியில் குறித்துக்கொண்டு அதற்கெல்லாம் கண்ணும் மூக்கும் வைத்துக் கொண்டிருந்தனர் அவர்கள்.

"அம்மா இருந்தால் அப்பா இப்படி ராத்திரி பகலா சுத்துவாரா?"

"குடும்பத் தலைவி இல்லேன்னா குட்டிச் சுவர் தான்--" குதிரை வால் எம்பிக்குதித்தது.

டோனியும், பீட்டில்சும், பாப்பும் தலைக்குத் தலை எகிறிக் கொண்டிருந்தன.  பூனையின் கழுத்தில் யார் மணியைக்காட்டுவது?

குடும்பத்துக்கு ரொம்பவும் வேண்டியவர்கள் கூட அப்பாவைப் பற்றிக் கேட்க அஞ்சினர். ஏன்? அப்படி வாழ்ந்தவர்... பத்தரை மாத்துத் தங்கம்!

கடைசியாக ஐவர் மாநாடு கூடி, முடிவை அறிவித்தது:

கடைக்குட்டி 'பாப்' அப்பா வீட்டுக்குள் நுழைந்ததும் நுழையாததுமாகப் பட்டாசு வெடி வெடிப்பதுபோல் பட் பட்டென்று  கேட்டு விட வேண்டும். அதோடு தீர்ந்ததா? வினாக்களுக்கு விடைகளும் சரியாய்க் கிடைக்க வேண்டும். தெருவில் எத்தனை வெறும் வாய்களுக்கு அவலாய் மெல்ல வழியாகி விட்டது?

போனவாரம் ஒருநாள் இரவு போன அப்பா இந்த வாரம் ஒருநாள் இரவிலோ, பகலிலோ வீட்டுக்கு வரத்தானே போகிறார்? அப்போது 'பாப்' தான் என்கொயரி ஆபீசர்.

கெடிலாக் குலுங்கி நின்றது. சோர்வு கவ்வியமுகம். பருமனைச் சற்றுக் குறைத்துக் காட்டும் ஓய்வின்மை. சற்றே ஆடி ஆடி நடந்து முன் அறைக்குள் நுழைந்து 'தொப்' பென்று  கட்டிலின் மீது சாய்ந்தார் அப்பா. கெடிலாக் அவரிடம் விடைபெறாமலே தார்ப்பாதையைத் தேய்த்துக் கொண்டு கிளம்பிற்று.

பூனைக்கு யார் மணி கட்டுவது? எங்கே 'பாப்'? எங்கே 'பாப்'?

அதோ! நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை.... பாரதி பாடிய புதுமைப்பெண் அறைக்குள் போய் விட்டாள்! பின்னாலேயே சுவரோரமாக மற்ற நான்கும் பம்மிச் சென்றன - ஒட்டுக்கேட்க.

'பாப்' உள்ளேபோய் நின்றதும் கேட்டது:

"அப்பா, என் மீதோ எங்கள் மீதோ நீங்க கோபம் காட்டாக் கூடாது. அம்மா போன பின்னாடி நீங்க ரொம்ப மோசமாயிட்டீங்க. வீடு, வாசல், பிள்ளைங்கன்னு அக்கறையே இல்லாம நாள் கணக்கிலே எங்கேயோ போறீங்க, இருக்கீங்க, வர்றீங்க. நாங்க அஞ்சு பேரும் ஊரார் விமரிசனத்தைக் காது நீட்டிக் கேட்க முடியலே..."

பாடத்தை 'பாப்' உதறலோ பதறலோ இடையில் தலை காட்டவிடாமல் ஒப்பித்து விட்டால். எப்படியோ பூனையின் கழுத்தில் மணியைக் கட்டியாகி விட்டது... விளைவு?

சில கணங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்தன. மயானத்தின் அமைதி நிலவியது. மூச்சுப் பேச்சைக்கூட காணோம்?...

அப்பாவின் குரல் இரண்டு நிமிடங்கள் கழித்து தெளிவாகக்கேட்டது.

"அம்மா...சுவரோரம் ஒட்டுக் கேட்கிற பெரியவர்களையும் கொஞ்சம் உள்ளே கூப்பிடம்மா. இத்தனை மாதங்களாக சொல்லப்படாமல் மறைக்கப்பட்டு வந்த விஷயங்களை இப்போது உங்கள் மத்தியில் தேங்காய் உடைத்து விடுகிறேன், உம்...சீக்கிரம் கூப்பிடம்மா."

ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த நான்கும் 'பாப்' வந்து அழைக்கும் முன்னரே அறைக்குள் சென்று, திசைக் கொன்றாய்த் திரும்பி தலை நிமிராமல் நின்றன.

அப்பா மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, வியர்க்க வியர்க்க, குழம்பிய முகத்தில் வலிய மகிழ்ச்சியை வரவழைத்துக் கொண்டு சொன்னார்:

"ஐ ஆம் ஸாரி. உங்கள் அம்மா நம்மை விட்டுப் போய் ஏறத்தாழ ஆறு மாதங்களாகி விட்டன. அவள் இருந்தவரை குடும்பத்தின் நெளிவு சுளிவுகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஞானம் எனக்கு எப்போதும் உரைத்ததில்லை. அவளது அகால மரணமும், என் ரிடையர்மெண்ட்டும் என் பர்சனாலிட்டியைப் பரீட்சித்தன. முடிவில், போகும் வயதில் நானும் ஒரு பொறுப்பான குடும்பியானேன். நீங்கள்...?" குளத்துத் தாமரை லேசான அலை வீச்சால் அசைவது போல, தலையை அசைத்தபடி அவர் சொல்லிக் கொண்டுபோனார்.

அதுகள் சிலைகள் போல் அவரையே வைத்த விழி வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தன. எதிரே செல்லாத துணியைப் போர்த்தி விட்டது போல் ஓர் ஆழமான உணர்வு.நெஞ்சிலே நெகிழ்ச்சிக் கோடுகள் பாய்வது மாதிரி ஒரு நினைப்பு.

என்னால் இனியும் தொடர்ந்து உங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து விளக்க முடியாது. இதோ, என் உள்ளக்கிடக்கையின் மறு பிரதி. ஒன்று விடாமல், சிற்பி தன் நினைவில் எப்படிச் செதுக்குவானோ அப்படி நான் எழுதிய டைரி இது. அதைக் கொண்டு போய் கூடத்தில் உட்கார்ந்து ஒருவர் வாசிக்க மற்றவர்கள் எல்லாம் கவனமாகக் கேளுங்கள். அப்போதாவது உங்களுக்கெல்லாம் என் போக்கு புரியும்!"

வெளியே உக்கிரமான வெயில் விளாசிக் கொண்டிருந்தது.

பிள்ளைகளின் முகங்களில் ஈயாடவில்லை. தரையில் குத்தி நிறுத்திய மூங்கில்கள் போல் எல்லாம் விறைத்து நின்றிருந்தன. உணர்வுகளே உறங்கி விட்ட பிண்டங்களாய் மாறி விட்டனவோ?

மூத்தது சிசர்ஸ்! கட்டிலின் தலை மாட்டில் இருந்த கறுப்பு பிளாஸ்டிக் உறையிட்டிருந்த கனத்த டைரியை எடுத்துக் கொண்டு கிளம்பியது.

டைரியில் ...

1969 செப்டம்பர் 23- ந் தேதி :

'என் இனிய வாழ்வு அஸ்தமித்தது. நான் ஓர் உதவாக்கரை. பலவீனங்களின் மொத்தம். குருவி தலையில் பனங்காயை வைத்த விட்டுப் பொய் விட்டால் அவள். எப்படிச் சுமப்பேன்? எங்கே, எப்போது, யார் மூலம் சுமையை இறங்குவேன்?'

செப்டம்பர் 29- ந் தேதி:

'என் நண்பர் பம்பாயில் ஹார்பரில் நல்ல லாபம் வரும் வியாபாரம் ஒன்றைச் செய்கிறார். குறுகிய காலத்திலேயே பெரும் புள்ளியானவர். அவர் கூட என் நிலைக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

அக்டோபர் 1-ந் தேதி:

'பம்பாயில் நண்பர் ஒருவர் வரவேற்கிறார். எனக்கு சோதிடத்தில் அபார நம்பிக்கை. மிகப்பிரபலமான ஒரு சோதிட நிபுணரை நான் சந்தித்தேன். என் அந்தராத்மாவையே கலக்கி விட்டார் அவர். என் எதிர்காலத்தைப் படம் பிடித்துக் காண்பித்தார். அந்தத் தேதி என் முன்னே குரோதமான வில்லன் போல் நகைக்கிறது.'

அதே மாதம் 9- ந் தேதி:

'உலகமே புரியாமல் வளர்ந்து விட்ட என் ஐந்து செல்வங்களுக்கு என் மச்சு வீடும், பத்தாயிரமும் எந்த மூளை? பின்னால் பழி யாருக்கு ? உற்றார், உறவினர் பூசல் எத்தனை எழும்? தந்தை மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள்...?

23- ந் தேதி:

'வெள்ளம் வரும் அறிகுறி தென்படுகின்றது, அணைக்கான முஸ்தீபு.'

27-ந் தேதி:

'மீண்டும் பம்பாய் பயணம். நண்பரின் வற்புறுத்தல். பிசினஸ் கடைகால்.'

நவம்பர் 8- ம் தேதி:

பாங்கிலுள்ள பத்தாயிரம்..?

11 ந் தேதி

'பணப்பையோடு பம்பாய்... மெட்றாஸ் டு பாம்பே...'

டிசம்பர் 31-ந் தேதி:

'பாம்பே ஸ்டேட் பாங்கில் ஐம்பதாயிரம்.'

1960 ஜனவரி 28-ந் தேதி:

'அஸ்தமனம் வெகு அருகில்.

பிப்ரவரி 28- ந் தேதி :

'மெட்றாஸ் ஸ்டேட் பாங்கில் சரியாய் ஒன்றரை லட்சம் சொச்சம். பூந்ததமல்லிக்கு அருகிலொரு பெரிய சைட். ஒவ்வொரு செல்வமும் ஒவ்வொரு பங்களா கட்டிக்கொள்ள வசதியானது.'

மார்ச் 3-ந் தேதி:

'மெட்றாஸ் டு பாம்பே- இது லாஸ்ட் டிரிப். நண்பன் வெகு குஷி’யாய் என்னோடு இருந்தான். சோதிடரை அன்றுநான் கன்சல்ட் செய்த போது அவன் அங்கு இல்லையே?'

7 ந் தேதி:

'வீட்டுச் சாமான்கள். இதுவரை என் நண்பனிடம் பாதுகாத்து வைக்கப்பட்டவை. இரண்டு லாரிகளில் மெட்றாஸ்க்கு- என் பெரிய பையன் பெயருக்கு- புக் பண்ணினான்நண்பன். கடைசியாக விடைபெற்றேன் அவனிடமிருந்து.'

இன்று 11 ந் தேதி:

'1969 அக்டொபர்  1-ந் தேதி ஞாபகம் வருகிறது. நான் சந்தித்த சோதிட நிபுணர்.. அவர் போட்டுக்காட்டிய என் வாழ்க்கைப் பாடம்... மீனம்பாக்கத்திலிருந்து இதோ காரில்...'

அதோ என் டியர்! 'அவள் 'என்னையும் தன்னோடு ஐக்கியமாக்கிக் கொள்ள அழைக்கிறாள். நான் என் செல்வங்களுக்குச் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகளை செய்து விட்டேன்; மற்ற ஏற்பாடுகளைப் பணம் செய்யும்; கடவுள் செய்வார் நானும் அவளும் அந்த வான வெளி மேகங்களிடையே தலையை நீட்டி நீட்டி எல்லாவற்றையும் பார்ப்போம். இதோ... சோதிடர் சொன்ன கண்டம்...மார்பை அடைக்கிறதே...

டைரியின் சிலபக்கங்களில் முற்றுப் பெறாத மார்ச் 11-ம் தேதி.

"ஐயோ அப்பா..! எங்களை மன்னித்து விடுங்கள், மன்னித்து விடுங்கள்!" என்று ஏக காலத்தில் வீடே இடிந்து விழுவது போல் கத்திக் கொண்டு அறைக்குள் ஐவரும் நுழைந்த போது---

வாயிலிருந்து வழியும் வெண்மையான நுரை, பாதி திறந்தும் திறவாத நிலையில் செருகிய கண்கள், வெளுத்துப்போன முகம்,சாம்பிய உடல், விறைத்து விட்ட நிலையில் இருந்தார் அப்பா. அம்மா அழைத்துக் கொண்டு விட்டாளோ...?

பஞ்சங்கள்...?

நல்ல பெயர்தான் அவர்களுக்கு! ஓவென்றுகதறி விழுந்து புரண்டு அழுதனர் அவர்கள். தன் மரணத்தை முன்கூட்டியே அறிந்திருந்தும், தன் செல்வங்களிடம் சொன்னால் வருத்தப்படுவார்கள் என்று சொல்லாமலே இருந்த அவ்வளவு அருமையான அப்பாவையே ஆழம் பார்த்தவர்களா அவர்கள்?

 

http://www.dinamani.com/

Share this post


Link to post
Share on other sites
suvy    3,184

ஒரு அருமையான தந்தை ..... கடலில் மீன் அழுதால் யாருக்குத் தெரியும்....!

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this