• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
Surveyor

துளசி மாடத்துக் காதல்

Recommended Posts

BY: லதா சரவணன்

என் நேர் எதிர் கூடத்தில்தான் நேற்று அவள் இருந்தாள். எத்தனை நாள் பழக்கம் எனக்கும் அவளுக்கும். ஒருவருடம் அல்லது அதற்கும் மேல் இருக்கலாம். அர்த்தமில்லா அறிமுகங்களை தினமும் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அதையெல்லாம் கடந்து அவள் முகம், நான் இந்த வீட்டுக்கு வந்து நான்கு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது, அலங்காரப் பொருள்களில் ஒன்றாகிப்போனேன்.

ஏனோதானோவென்று என் பசி தீர்க்கப்படும், ஆனால் அவள் வந்த இந்த ஒரு வருடத்திற்குள் நான்தான் எத்தனை பாந்தமாய் இருந்தேன். என்னை குளிக்க வைத்து அவளின் தளிர் விரல்களால் மஞ்சள் பூசி, குங்குமப்பொட்டிட்டு உச்சியில் இரண்டு துளி பூ வைத்துவிடாமல் அவள் காலை தொடங்கியதே இல்லை. அதன்பிறகு தான் அவள் மற்ற வேலைகளை கவனிக்கச் செல்வாள்.

இனி இதுதான் உன் வீடு இதுவும் உன் பொறுப்புதான் என்று என்னைக் காட்டி யாரும் பொறுப்பு தராத போதும் அன்னை போல் வாரிக்கொண்டாள் என்றுதான் சொல்லவேண்டும். எப்பப் பாரு கொல்லைப்பக்கமே என்ன வேலை உனக்கு ? எனக்கும் ஆசை இருக்காதா, நான் வீட்டுக்கு வரும் போது நல்லா டிரஸ் பண்ணிகிட்டு என்னை வரவேற்றால் என்ன? அவள் கணவனின் பேச்சுக்கு வெறும் புன்னகை மட்டுமே வெளிவரும், நான் கூட எத்தனையோ முறை நினைத்திருக்கிறேன்.

தெய்வீக அழகு அவள், அதிக அடர் இல்லாத வெளிர் நிறத்திலேதான் புடவைகள் அணிவாள் அதற்குத் தகுந்தாற் போல் இரவிக்கை, மஞ்சள் சரடும், ஒற்றைச் சங்கிலியோடு நுனியில் கூந்தலை முடிச்சிட்டு நெற்றி வகிட்டில் குங்குமத்தின் துணையோடு அவளைப் பார்க்கும் போதே கையெடுத்துக் கும்பிடத்தோன்றும் அழகு, அவனோ எப்போதும் அஞ்சு முழம் புடவையைச் சுற்றிக்கொண்டே இருக்கணுமா என்பான். என் பிரண்ட்ஸ் எல்லாம் பொண்டாட்டி கூட அப்படியிருந்தேன் இப்படியிருந்தேன் என்று பீத்திக்குவான் நீ யென்னடான்னா சுத்த ஜடமா இருக்கியே? என்று முகம் திருப்புவான். இதையெல்லாம் கூடவா பேசிக்கொள்வார்கள் நண்பர்களிடம் என்று எனக்கு குமட்டிக்கொண்டு வரும், அவளுக்கும் அதே நிலைதான் போலும், அவன் மேல் வைத்த கையை எடுத்துவிட்டு போவாள். இதோ பாரும்மா பிறந்த வீட்டுலே எப்படியிருந்தியோ இனிமே இதுதான் உன் வீடு, நாங்கதான் உன் மனுஷங்க.

அதைப் புரிஞ்சிட்டு யாருயாருக்கு என்ன என்ன வேணுமோ அதை சரியான நேரத்திலே செய்யணும் புரிஞ்சுதா?! மாமியாரின் பேச்சுக்கு மறுத்துப் பேசாமல் தலையாட்டினாள். அன்றிலிருந்து அவ்வீட்டிற்கு சம்பளமில்லா வேலைக்காரியாகித்தான் போனாள். அடுக்களைக்கும் கொல்லைப்புறத்திற்கும் அவள் கொலுசின் ஒலியும், மெட்டியொலியும் கேட்டுக் கொண்டே இருக்கும். மாமாவுக்கு தண்ணீர் வெச்சியா ? இட்லி வெந்துட்டா ? ரவிக்கு புளிக்கரைசல் ரொம்ப பிடிக்கும் பண்ணி வைச்சிடு..... எல்லாம் கட்டளைகளாகவே வரும், கணிவு இருக்காது. விரல் விட்டு தேடிவிடலாம் அவள் தனக்கென ஒதுக்கும் தருணங்களை.

படித்திருப்பாள் போலும், அத்திப்பூத்தாற்போல் சில நேரம் அவள் கைகளில் ஏதாவது புத்தகங்கள் முளைத்திருக்கும். என் அருகில் அமர்ந்துதான் புத்தகம் படிப்பாள். மாலை குளிர் வேளையில் வீட்டு ஆட்கள் எல்லாம் தொலைக்காட்சி சீரியலில் முழ்கி இருக்கும்போது அவள் மட்டும் புத்தகத்தோடு ஒரு விளக்கின் வெளிச்சத்தில் படித்துக்கொண்டு இருந்திருக்கிறாள். காற்றில் ஆடும் அவள் கூந்தலை ஒதுக்கிவிட வேண்டும் என்று எனக்குத் தோன்றும் சில நேரம் குறும்பாய் என் இலைகளை அவள் மீது தள்ளவிடுவேன் காற்றை கெஞ்சிக் கூத்தாடி என் தோழமையாக்கிக் கொண்டு, முகத்தில் விழும் இலைகளை அழகாய் ஒதுக்கிவிடுவாள் அது மெத்தென்று அவள் மடியில் போய் சுகமாய் அமரும்.

சில நேரம் வேலையின் அலுப்பில் என் மீது சாய்ந்து கொள்வாள். எவனோ ஒரு கவிஞன் பாடினானே மொட்டுகளே மொட்டுகளே மூச்சுவிடா மொட்டுகளே கண்மணியாள் தூங்குகிறாள் காலையில் மலருங்கள் என்று பாடிடத்தோன்றும் எனக்கு! தடிமனான அந்த இலக்கியப் புத்தகத்தின் படித்த பக்கத்தில் ஒரு இலையைக் கிள்ளி நினைவிற்கு வைத்துக்கொண்டு என் தோளோடு சாய்ந்து கொள்ளும் தோழியின் கண்களில் இருந்து வெண்ணீர் முத்துக்கள் போல் நீர் வழிந்தோடும், துடைக்கத் துடிக்கும் என் மெல்லிதழ்களை கட்டுப்படுத்திக்கொள்வேன், அவளுக்கு என்ன கஷ்டம் இருக்கும்? என் பாஷை புரிந்ததோ என்னவோ அவள் என்னிடம் பேசத் துவங்கினாள்.

ஆஹா என்ன அருமையான குரல் அவளுடையது, நூறு குயிலின் குரலைச் சேர்த்தாற் போல் அத்தனை இனிமை. காதல், கல்யாணம் என்றதும் பல பெண்களைப் போல் நான் ஒன்றும் கற்பனையில் கனவு கண்டதில்லை, ஆனால் சில எதிர்பார்புகள் இருந்தது. அது எல்லாமே பொய்த்துப்போனதுதான் தாங்கிக்கொள்ள முடியவில்லை, தன் சுமையை இறக்கிவிட்டேன் என்று பிறந்தவீடும், தனக்கொரு புதுச்சுமை என்று புகுந்தவீடும் ஏற்றுக்கொள்ளும் இனம், செடியைக் கூட பிடுங்கி வைக்கும் முன் மண்வளம் பார்ப்பதுண்டு. அது போல் பெண்ணை புகுத்தும் போது மனிதவளம் இருக்கிறதா என்று பார்த்திருக்கலாமே! படித்த பெண்ணாகட்டும், பகுத்தறிவு பேசுபவளாகட்டும் இன்னொரு இடத்தில் அவள் கால் ஊன்றி நிலைப்பதற்கான நேரம் கூட ஒதுக்கப்படுவதில்லை, என்னதான் பெண்ணுரிமை, சுதந்திரம் என்று பேசினாலும் எங்களுக்கு எப்போதும் காலம் விடிவதில்லைதான். அவளின் விரல்கள் வடித்த வரிகள் இவை, எத்தனையோ ஏக்கப்பெரூமூச்சுகளின் சூட்டை நான் உணர்ந்திருக்கிறேன்.

உலைந்த தலையோடும், கசங்கிய உடையோடும், கலைந்த குங்குமத்தோடும் என்னைக் கடந்து போகும் போதெல்லாம் எதையோ இழந்தாற்போன்ற தருணம் அவளில் கண்டிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் என் எண்ண ஓட்டம் புரிந்தவளைப்போல் அவள் அன்று இரவு பதிலளிப்பாள். அன்பு, ஆசை என்று எதையும் உணர்த்துவதில்லை அவரின் அணைப்பு, வெறும் காமத்தை மட்டுமே உணர்த்துகிறது காதலை இல்லை. மெல்ல மெல்ல மலர வேண்டிய பெண்மைக்கு நேரம் தராமல் தன்னிலை நிறைந்ததும், தலைசரித்து உறங்கும் அவனை, என்ன செய்யலாம் என்று கூட வெகு நேரம் நான் யோசித்திருக்கிறேன். எல்லா ஆண்களுமே இப்படித்தானா ?! ஐந்து பெற்றாளே என் அன்னை அவளும் இப்படியொரு இரவைத்தான் தினம் தினம் தாண்டி வந்திருப்பாளா ?! என்னை மருமகளாய் பார்க்கிறார்கள், அவனின் மனைவியாய் பார்க்கிறார்கள், அவர்கள் இட்ட வேலையைச் செய்யும் சேவகியாய்ப் பார்க்கிறார்கள் மனுஷியாய் மட்டும் பார்ப்பதேயில்லையே ஏன் ? சுமங்கலி என்ற பட்டத்தை சுமந்து கொண்டு, குடும்ப கெளரவத்திற்கென வலம் வரும் ஒரு அடையாளமாகத்தான் தெரிந்திருக்கிறேன்.

பெரியதாக அவரிடம் ஏதும் கேட்டுவிடவில்லை நான். இன்று அவரின் அக்காவும் அத்திம்பேரும் வந்திருக்கிறார்கள். நான் செய்த கடலைக் குருமா, சப்பாத்தியை ஒரு பிடி பிடித்துவிட்டு ரமாவின் சமையல் நன்றாய் இருக்கிறது. ரவி நீ கொடுத்து வைத்தவன்தான் என்று ஏதேச்சையாய் பாராட்டிவிட்டார்கள். அதற்கு அவருக்கு வந்தததே கோபம் சமைக்கத் தெரிந்தால் மட்டும் போதுமா. எந்நேரமும் அழுக்குப் புடவையும் தூக்கிச் சொருவிய கூந்தலுமாய் அடுப்பையே கட்டிக்கொண்டு அழுகிறாள். நாலு எடம் வெளியே போக உடுத்த தெரியலை சரியான நாட்டுப்புறம் என்று குட்டு வைத்தார்.

அவன் விருப்பப்படிதான் நடந்துக்கோயேன் ரமா என்று காதைகடித்துவிட்டுப் போன நாத்திக்கு தெரியுமா? புடவையை தொப்புளுக்கு கிழே கட்டச் சொல்வதும், பாதி மார்பு தெரியும்படி தோள்பட்டை முந்தியை சிறியதாக மடித்து பின் பண்ணச் சொல்லுவதும், இவர் வெளியே கூப்பிட்டுப்போகும் இடம் எப்படி இருக்கும் தெரியுமா? நுனிநாக்கு ஆங்கிலத்தோடு அரைக்கால் சட்டையும் அக்குள் தெரியும் படி ஆடையும் போட்டுக்கொண்டு ரவி என்று மேலே வந்து ஈஷிக்கொள்ளும் பெண்களைப்போல் என்னை வெளியே அழைத்துக்கொண்டு போக பிரியப்படுகிறார். தினமும் சக்கரையோடு போட்டிபோடும் மாமியார், வாதம் வந்து படுத்திருக்கும் மாமனார். இவர்களின் உபாதைகளையும், சொற்களையும் தாங்கிக்கொண்டு வேளா வேளைக்கு உணவளித்து மருந்து மாத்திரைகள் தராமல் போய்த்தான் விடமுடியுமா ?! இதெல்லாம் ஏன் இன்னொரு குடும்பத்தில் தன்னைப்போல் வாழ்க்கைப் பட்டுப் போயிருக்கும் அவளுக்குத் தோன்றாமல் போணது துளசி, இல்லை தன் நிலைமைக்கு நான் எவ்வளவோ தேவலை என்று எண்ணிக்கொண்டு விட்டாளோ ?! ஒரு உணவைக் கூட என் விருப்பப்படி சமைக்கவோ உண்ணவோ முடியவில்லை, சத்தமாய் சிரிக்க முடியவில்லை, ஏன் போன வாரம் அம்மாவும் அப்பாவும் பார்க்க வந்திருந்தார்கள் என்று இரண்டு வார்த்தை சிரித்து பேசிவிட்டேன். உடனே நீ வந்தாத்தான் உன் பொண்ணு சிரிக்கிறா பேசாம அவளை வீட்டுக்கே கூட்டிட்டுப்போயிடு என்று குத்தலாய் பேசினார்களே?! மனதின் எத்தனையோ வெறுமைகளைப் புரிந்துகொள்ளாமல், எனக்கு இது வேண்டும், அது வேண்டும் நீ இப்படித்தான் இருக்கவேண்டும் என்றெல்லாம் எதிர்பார்ப்பவர்கள் உனக்கு என்ன வேண்டும், நீ எப்படி இருக்க விரும்புகிறாய் உன்னுடைய எதிர்பார்ப்பு என்ன ? என்றெல்லாம் ஏன் கேட்பது இல்லை, பெண்ணிற்கு சுயம் இருக்காதா ?! துளசி அவள் கேள்விகளுக்கு மிகப்பெரிய பதிலாய் என்னால் மெளனத்தை மட்டும்தான் தர முடிந்தது.


முற்றத்தில் அரிசி புடைத்துக்கொண்டே அங்கிருக்கும் சிறு கோழிகளோடு விளையாடிக்கொண்டு இருப்பாள். சில அரிசிகளை வேண்டுமென்றே அவள் சிந்துவதும், அக்கோழிகள் தங்கள் சிவந்த அலகுகளாய் கொத்துவதும், இவளின் ரசனை கலந்த பார்வைக்கென்றே நானும் கோழியாய் பிறந்திருக்கலாமே என்று ஏங்கத்தோன்றும் எனக்கு. மாதத்தின் மூன்று நாட்களில் அவள் கொல்லைப்புறம்தான் ! உணவும் நீரும் அவளிருக்கும் இடமே வந்துவிடும், நீண்ட கூந்தலை மெல்லிய விரலைக் கொண்டு கோதிக்கொண்டு அமர்ந்திருப்பாள். என் அருகில் மட்டும் அந்த நாட்களில் வரமாட்டாள். எனக்கும் அவள் ஸ்பரிசம் படாமல், அந்த மூச்சுக்காற்றை இழுக்காமல் அவள் வாசத்தை உணராமல் தவிப்பாகத்தான் இருக்கும்.

இம்மாதிரி வேளைகளில் உடல் வலியைத் தவிர்க்கவே ஒதுக்கி உட்காரவைத்தலும், மனவலியைத் தவிர்க்கவே தனிமையும் என்று எனக்கும் புரிந்தது. ஆனால் அடுத்த நான்காவது நாளே பழையபடி பம்பரமாய் சுழலுவாள். மாசம் பிறக்குதோ இல்லையோ நீ கொல்லைப்புறம் போவது மட்டும் நிக்கவே மாட்டேங்கிறது, அடியேன்னு சொல்ல புருஷன் வந்தா மட்டும் போதுமா ? ஆத்தான்னு சொல்ல புள்ளை வேண்டாமா என்று வார்த்தைகளில் வசவுதுளிகள் மாடத்தின் விளக்கொளியில் அவள் கருவிழிகளில் பளபளக்கும். அதுக்குப்பிறகு அவள் சற்று வதங்கித் தெரிந்தாலும் அதிலும் ஒரு மனோகர ஒளி முகத்தில், மெல்ல மெல்ல அவளின் வயிறு பெருத்துக்கொண்டு வருவதை நான் பார்த்துக்கொண்டே வருகிறேன். சிதறிய பூக்கள் மீண்டும் பூச்சரத்தை சேருவது இல்லை, ஆனால் பெண்ணுக்குள் சிதறிய மகரந்தம் முத்தைத்தருகிறதே ! முற்றத்தில் அமர்ந்து பூக்கள் தொடுத்துக் கொண்டிருந்தாலும் அந்த துளிச்சரத்திற்கு மேல் அவளின் கூந்தல் சொந்தம் கொண்டாடியது இல்லை.

இப்போதெல்லாம் பல நேரங்கள் என்னுடன் தான் செலவழிக்கிறாள். பூத்துக் குலுங்கும் தாய்மையில் அவளைக் காணவே நிறைவாக இருக்கிறது. எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு ஈரக் கைகளை முந்தானையில் துடைத்தபடியே என்னைக் குளிர்வான நீரால் நனைத்தவள் இவங்களுக்கு பிள்ளைதான் வேணுமாம் பெண் வேண்டாமாம், இதெல்லாம் நான் மட்டும் தீர்மானிக்கிறதா துளசி, உங்க அம்மா மாதிரி பொட்டையா பெத்துப்போடாதே, எங்க வம்சத்தில் எல்லாருக்கும் தலைச்சன் பிள்ளை பையன்தான். ஏண்டா மாசாமாசம் ஸ்கேனு எக்ஸ்ரேன்னு அழறீயே முதல்லயே என்ன குழந்தைன்னு கேக்கறதுக்கு என்ன ? நானும் எத்தனையோ போக்குகாட்டி பேசிப்பாக்கிறேன். அந்த டாக்டருகிட்டே இருந்து ஒரு வார்த்தை கறக்க முடியலையே, ச்சே ! உள்ளே அங்கலாய்ப்பின் குரல், இவங்களுக்கு பெண் குழந்தைதான் பிறக்கணும் துளசி, என்னைப்போல அதுவும் அமைதியாத்தான் இருக்கணும், கல்யாணம் பண்ணிக்குடுத்திட்டு, அய்யோ அங்கே என் பெண் என்ன அவஸ்தைப்படறாளோன்னு கவலைப்படணும். வாரம் ஒருமுறை பெண்ணைப் பார்க்கிறேன்னு வீட்டுக்குள்ளே கூப்பிடாம என்னையும் பேசவிடாம நான் வாசல்ல போய் மூணாம் மனுஷங்க மாதிரி பேசிட்டு வர்றேனே எங்க அப்பா அம்மா கிட்டே அதே வேதனையை இவங்க அனுபவிக்கணும் ?! அதுக்கு எனக்கு பெண் பிள்ளைதான் பொறக்கணும். அவள் என் கண்களுக்கு வியப்பாய் தெரிந்தாள்.

மனம் தாய்மையில் பூரிக்க வேண்டிய வேளையில் ஏன் இத்தனை வருத்தங்கள் இவளுள். அச்சச்சோ நான் பார்த்தியா ஏதோ நினைப்பில் ஏதோதோ பேசிவிட்டேன் என் மகளுக்கும் தானே இதனால் கஷ்டம் வரும். வேண்டாம் வேண்டாம் அவள் செல்லும் இடமாவது உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் இடமாக இருக்கட்டும். கைநிறைய வளையல்களோடு சந்தனமும், ஜவ்வாதும் மணக்க நிறைந்த வயிறோடு தலைகொள்ளா பூ பாரத்தோடு என்னருகில் வந்தமர்ந்தாள். நேரம் நெருங்க நெருங்க எனக்கு பயமா இருக்கு துளசி, அப்படியே எனக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா என்ன செய்றது ? முன்னாடி நான் மட்டும்தான் இப்போ என் குழந்தைவேற இன்னொரு அடிமையை இங்கே விட்டுட்டுப்போக எனக்கு மனசு வரலை,,,, விசும்பினாள் அதன்பிறகு அவள் அடிக்கடி அங்கே வந்து அமர்ந்திருப்பதில்லை ஒரு பத்து பதினைந்து நாட்கள் தான் இருக்கும் திடுமென்று அவளின் அழுகுரல் கேட்டது. வீடெங்கும் காலடிச் சப்தங்கள் வீட்டுலே யாரும் இல்லையே இப்படி திடுமுனா ஒருத்திக்கு வலி வரும் என்று ரமாவின் மாமியாரின் குரல், வந்த புதிதில் அவள் ஒருமுறை சிணுங்கியது நினைவிற்கு வந்தது.

ரவி லேட்டாகப்போவதால் அவனுக்கு அலுவலகத்தில் மெமோ கிடைத்தது. அதற்கும்நான்தான் காரணமாம். நல்லவேளை குழாயில் தண்ணீர் வராததற்கும், மாமாவின் மருந்துபாட்டில் காலியானத்திற்கும், அரிவாள்மனை காய்களை சரியாக வெட்டாததற்கும் என்னை காரணமாக்கவில்லை என் திருமண விஷயத்தில் நளன் தேடிய குருட்டுத் தமயந்தியாகிவிட்டேன் என்று மருவினாள். நான் தலையைச் சிலுப்பி என் பூக்களை அவள் மேல் தூவிவிட்டேன். பிறந்தப்போ தாயோட கவனிப்பில், வளரும்போது தந்தையின் கவனிப்பில் பருவவயதில் எந்த ஆடவனுடன் பேசக்கூடாதுன்னு சொன்ன அப்பாவே, கல்யாணத்திற்குப் பிறகு கணவர்கிட்டே நெருக்கமா பேசும்மான்னு சொல்றார். மாராப்புத் துணியை ஒழுங்காபோடுன்னு சொல்றே அம்மா, புருஷன் மனுசு கோணாம அப்படியிப்படி இருன்னு கல்யாணத்திற்கு பிறகு சொல்றாங்க.

ஒரு ஆணும் பெண்ணும் தனியா அறைக்குள்ளே இருந்தா தவறுன்னு சொல்ற சமூகம், கல்யாணம் பண்ணிட்டதால அவர் கூட இருந்ததை உறவு கொண்டதை ஏற்றுக்கொள்ளுது. அந்த தாலி ஒன்னை மட்டும் ஆதாரமா வைச்சு யார் விருப்பத்திற்கும் புகுந்தவீட்டு கதவு ஜன்னலுக்கு ஏன் அது நுழையும் காற்றிற்குக்கூட அடிபணிகிறோம். எனக்கு ஆண்பிள்ளை பிறக்க வேண்டும் துளசி பெண்ணின் மன உணர்வுகளை எப்படி புரிந்துகொள்ளவேண்டும் என்று அதற்கு நான் கற்றுத்தரவேண்டும். பிரசவம் மறுஜென்மம்ன்னு சொல்லுவாங்க, அப்படி எனக்கு ஏதாவது ஆயிட்டா நான் என் குழந்தையையும் கூடவே கூட்டிட்டுப்போயிடுவேன்னு துளசி, அதை இவர்களிடம் விட்டுட்டுப்போக மாட்டேன். அடுத்த வந்த நாட்களில் அவளின் வாசமும், கொலுசு ஒளியும் என்னில் பிரமையயாய் ஒலித்துக் கொண்டே இருந்தது.

நான்காவதுநாள் கூடத்தில் கொண்டுவந்து போடப்பட்டாள் அவள், பக்கத்தில் யாருடைய கைகளிலே அந்த சிசு! தாயை இழந்த வேதனையில் கதறி அழுதது. இப்போதும் அவள் சன்னமாய் பேசியது எனக்குள் கேட்டது. நான் அவளையே சிலரின் நிமிட மறைப்பிற்குப் பிறகு பார்த்துக்கொண்டு இருந்தேன். இறுதி இறப்பில் கூட உன்னை விட்டு என் துணையை விட்டு நான் அழுது சிரித்து இந்த ஓராண்டு காலத்தில் எல்லாமுமாய் இருந்த உன்னிடம் கூட என் பிரிவை சொல்லிக்கொள்ள முடியவில்லை.

துளசி, இறப்பு மட்டுமல்ல என் பிள்ளையை என்னுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தைக் கூட என்னால் அடைய முடியவில்லை, என்னைப்போன்ற பெண்கள் கற்பனைக்கு வாக்கப்பட்டு இருக்கிறார்கள் அவர்களின் வாழ்வு மொத்தமும் கற்பனையிலேயே கரைகிறது. வருகிறேன். என்னைப்போல் என்பிள்ளைக்கும் ஆதரவாய் உன் தோள்கொடு, முடிந்தால் நான் அவள் மேல் கொண்ட அன்பையும், நம்பிக்கையும் சொல்லு. நான் மெல்லமாய் என் இலைகளை அசைத்து உறுதி கொடுத்தேன். அவளை கட்டுப்படுத்தியதைப் போல் என்னையும் சில நூலாம்படைகள் கட்டுப்படுத்தியிருந்தது. அதே மஞ்சள் பூசிய முகம், நெற்றியில் அழகிய குங்குமப்பொட்டு, வேதனையில் மலரும் அவளின் புன்னகையோடு விடைபெற்றாள் அவள்.....! ஏதோ ஒரு குடும்பத்திற்கு அடிமையாகிப் போகப் போகும் குழந்தை இப்போதே அழுகைக்குத் தயாரானது...............!


http://tamil.oneindia.com/art-culture/essays/new-year-special-short-story-270830.html

Share this post


Link to post
Share on other sites

புகுந்த வீட்டில் பிராணாவஸ்தைப் படும் ஒரு பிராமணப் பெண்ணின் கதைபோல் இருக்கு....!

கொஞ்சம் பாசிட்டிவ் ஆகச் சிந்தித்திருக்கலாம்.....! tw_blush:

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

Sign in to follow this