• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
sathiri

கிட்டு பற்றி.. அன்று சிந்திய ரத்தம் தொகுப்பிலிருந்து ..

Recommended Posts

கிட்டு பற்றி.. அன்று சிந்திய ரத்தம்  தொகுப்பிலிருந்து ..

 

கேள்வி ..புலிகள் அமைப்பில் சிறந்தவியூகங்களை அமைத்து சிறப்பாகப் படை நடத்துபவர்கள் என்றால் முதன்மையானவர்களாக யாரையெல்லாம் குறிப்பிடுவீர்கள்.

%25E0%25AE%2595%25E0%25AE%25BF%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2581.jpg

 

பதில் ..புலிகள் அமைப்பில் எல்லாத் தளபதிகளிற்குமே தனித்தமையான சிறப்புக்கள் திறைமைகள் இருந்தது.படை நடத்தலை இரண்டு விதமாகப் பிரிக்லாம் ஒன்று சரியான தகவல்களோடு திட்டமிட்டு அந்தத் திட்டத்தின்படி படைநடத்துவது அதில் இழப்பு அல்லது மாற்றங்கள் ஏற்பட்டு இலக்கை அடைய முடியாத நிலை வந்ததும் நடவடிக்கையை நிறுத்தி விட்டு மீண்டும் ஒரு திட்டத்தை தயாரித்து தாக்குதலை தொடருதல் இப்படி படை நடத்தும் பல திறைமையான தளபதிகள் இருந்தார்கள். ஆனால் அடுத்த வகையான படை நடத்தல் என்னவெனில் யுத்தகளத்தில் ஒவ்வொரு நிமிடமும் ஏற்படும் மாற்றங்களை அவதானித்தபடியே  மறுதரப்பின் வியூகங்களை தகர்ப்தற்காக சண்டைக்களத்தில் நின்றவாறே யுத்தத்தை நிறுத்தாமல் யுக்திகளை உடனுக்குடன் மாற்றியமைத்து இலக்கை அடையும்வரை படை நடத்தும் இராணுவ வல்லுணர்களாக  நான் பார்த்தவர்கள் கிட்டு.பால்ராச்.கருணாவை சொல்வேன்.இவர்களைப் பற்றி கொஞ்சம் விரிவாக சொல்வதனால்  முதலில் கிட்டு ..

 

ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றை  புலிகள் ஆதரவு எதிர்ப்பு அல்லது அரச தரப்பு என்று யார் எழுதினாலும் கிட்டு என்கிற பெயர் தவிர்க்க முடியாதாகும். ஆளுமை உள்ள ஒருவர் .நல்லதொரு சமையற்காரன்.முற் கோபக்கரன்.  ரத்த கொதிப்புக்காரன். . திறைமையான  தளபதி. மற்றைய இயக்கங்களை மோசமாக அழித்த கொலைகாரன்.படை நடத்துவதில் சிறந்த ராணுவ வல்லுனன்.ஆணாதிக்கவாதி.சிறந்த கலைஞன் ஓவியன். இப்படி  எல்லா கோணங்களாலும் எல்லாராலும் பார்க்கப் பட்டதொரு மனிதன்தான் கிட்டு.1985 ம் ஆண்டு தை மாதம் அச்சுவேலி பகுதியில் இருந்த புலிகள் முகாம் மீது   இலங்கை இராணுவத்தால் நடத்தப் பட்ட சுற்றி வழைப்பு தாக்குதலில் அன்றைய யாழ் மாவட்ட தளபதி பண்டிதர் கொல்லப் பட்டதும் அதற்கு அடுத்ததாக  யாழ் மாவட்ட பொறுப்பை யாரிடம் கொடுக்கலாமென   பல பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு  நடாவை   பொறுப்பாக போடலாமென  தலைமை  முடிவெடுத்தபோது  நடா அதனை மறுத்து கிட்டு அல்லது அருணாவிடம் பொறுப்பை கொடுக்குமாறு சொன்னதால் இறுதியாக கிட்டுவிடம் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது.கிட்டு யாழ் மாவட்டத்தை பொறுப்பு எடுத்த காலகட்டமானது முக்கியமானதாதொரு கலகட்டமாக அமைந்தது.

 

இலங்கையரசிற்கெதிரான  ஆயுத  போராட்டம் என்று சுமார் முப்பத்து மூன்று  இயக்கங்கள் தோற்றம் பெற்று அதில் பல மறையத் தொடங்கியும்  ஒரு இயக்கத்தால் மற்றைய இயக்கங்கள்  தடை அல்லது அழிக்கப் படவும் தொடங்கியிருந்த கால மாகும். இங்கு இன்னொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும் 85 ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் வடக்கில் இலங்கை இராணுவத்தின் தொகையை விட ஈழ விடுதலை வேண்டி தொடங்கப் பட்ட இயக்கங்களின் உறுப்பினர்களின் தொகை அதிகமாக இருந்தது  ஆனால் அவர்களிடமான  ஒற்றுமை யின்மை என்பது  கசக்கும் உண்மை.

 ஆரம்பிக்கப் பட்ட இயக்கங்களில் இந்தியாவின் ஆசீர் வாதம் பெற்ற  ரெலோ.ஈ.பி.ஆர்.எல்.எவ்.புலிகள்.ஈரோஸ் என்பன.இந்தியாவின் நிதி உதவியோடும் அவர்களது பயிற்சிகளோடும். பெரும் இயக்கங்களாக வளரத் தொடங்கியிருந்தன.புளொட் அமைப்பானது அப்போ இந்தியஅரசின் நேரடி  உதவிகள் பெறாமல் ஒதுங்கியிருந்தது ஆனால் இந்தியாவில் பல அமைப்புகளின் உதவி அதற்கு இருந்தது.இந்தியாவின் உதவியின்றி தம்பாபிள்ளை  மகேஸ்வரனின் T.E.A  ஜெகனின்  T.E.L.E என்பன ஓரளவு பலத்தோடு இயங்கிய இயக்கங்களாக இருந்தது. இவை அனைத்தும் இணைந்த கூட்டு முயற்சியில் யாழ் குடாவில் முதலாவதாக யாழ் கோட்டை இராணுவ முகாம் இலங்கையிலேயே முதன் முதலாக  கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிற்குள் கொண்டுவரப்பட்டதொரு இராணுவ முகாமாக மாறியிருந்தது.இதன் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு இயக்கங்கள் பாதுகாப்பரண் அமைத்து பாது காக்கத் தொடங்கியிருந்தனர்.

 

கோட்டை இராணுவ முகாமானது நகரின்  மத்தியில் அமைந்திருந்ததால்  அதன் வீதி  அமைப்பு மற்றும் நெருக்கமான கட்டிடங்கள்  இயக்கங்களிற்கு  பாதுகாப்பானதாவும் இலகுவில் கட்டுப் பாட்டிற்குள்  கொண்டு வருவது சுலபமாகவும் இருந்தது.அதே நேரம் பலாலி. நாவற்குழி.காரைநகர். பருத்தித் துறை  இராணுவ முகாம்களை   புளொட்டும். ரெலோவும் .புலிகள் அமைப்பும் காவலரண்கள் அமைக்கத் தொடங்கியிருந்தாலும் அது அமைந்திருந்த  இடம் தோட்டங்களையும் பற்றை காடுகளாவும். வெளிகளாகவும். இருந்ததால்  சிரமப் பட்டு பல இழப்புக்களை சந்தித்து அவ்வப்போது இராணுவம் வெளியேறுவதும் சண்டைகளும் நடந்து கொண்டேயிருந்தது.கிட்டு பொறுப்பு எடுத்ததுமே யாழ் குடா எங்கும் இராணுவம் மீதான தாக்குதல்களை தீவிரப் படுத்தியிருந்தார்.அதே நேரம் ரெலோ மீதான தாக்குதலை தொடுத்து அது அழிக்கப் பட்டதையடுத்து மற்றைய இயக்கங்களுடனும்  அவ்வப்பொழுது  ஏற்பட்ட  மோதல்களினால்  அவர்களும் இராணுவ முகாம்களை  சுற்றியிருந்த  தங்கள் காவல் நிலைகளை விலக்கிக் கொண்டிருந்தனர். காலப்போக்கில் மற்றைய இயக்கங்களின் மீதும் தாக்குதல்களை தொடுத்தும் தடையும்  செய்ததன் பின்னர்  புலிகள் மட்டுமே தனிப் பெரும் சக்தியாக உருவெடுக்கத் தொடங்கினர்.

 

இங்கு  மற்று இயக்கக் காரர்களிற்கும் அதன் ஆதரவாளர்களிற்கும் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை விட கிட்டு மீதே அதிக கோபம் இருந்தது. அதே நேரம் இலங்கை இராணுவத்தின் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள். மன்னாரில் நடந்த தாக்குதலில் கைது செய்யப்பட்ட இரண்டு இராணுவ வீரர்களை  இலங்கையரசிடம் ஒப்படைப்பு  செய்து  புலிகள் அமைப்பின் அருணா மற்றும் காமினி ஆகியோரை மீட்ட முதலவது கைதிப் பரிமாற்றத்தையும் கிட்டு செய்திருந்தார்.அன்றைய காலகட்டத்தில்  உள்ளுர் பத்திரிகைகள் முதல் பொதுமக்கள் அனைவர் வாயிலும் எங்கும் கிட்டு எதிலும் கிட்டு என்கிற பெயரே உச்சரிக்கப் பட்ட காலங்களாயிருந்தன.எந்த  இராணுவ முகாமில் இருந்து இராணுவம் வெளியேறியிருந்தாலும்  சிறிது நேரத்தில்  கிட்டுவின் பச்சை நிற  ரொயோட்டா லான்சர்  கார் அங்கு வேகமாக வந்து பிறேக் அடிக்கும் தனது மக்னம் ரக கைத் துப்பாக்கியை  சுழற்றியபடி  கிட்டு கீழே இறங்குவார். சில நேரங்களின் கிட்டு சாப்பிட்ட கையை கூட கழுவாது விரலை சூப்பியபடி காரை ஓடிக்கொண்டு வருவார்..   "கையை கழுவிற நேரத்திற்குள்ளை   ஆமி யாழ்ப்பாணத்தை பிடிச்சிடுவாங்கள் அதுதான் கையை கூட கழுவ நேரமில்லாமல் கிட்டு  வாறான்டா".. என்று சக போராளிகளே கிண்டலடிப்பார்கள்.கிட்டுவின் லான்சர் கார் என்கிறபோது நினைவிற்கு வரும் விடயம்  இயக்கங்கள் அனைத்துமே அன்றைய காலத்தில் பொது மக்களிடமிருந்து வாகனங்களை கடத்துவதில்  நீ நான் போட்டி போட்டு செய்து கொண்டிருந்தனர். புளொட்டும்  ரொலோவும்  யாழில் வாகனக் கடத்தலில் பெயர் பேனவர்களாக இருந்தனர்.  யாழ்ப்பாண நகரிற்கு போயிருந்த  சண்லிப்பாயை  சேர்ந்த மதன் என்கிற ரெலோ உறுப்பினர்  வீடு வருவதற்காக  ஒரு  இலங்கை போக்குவரத்து சபை  பேருந்து ஒன்றை கடத்திக் கொண்டு வந்து   வீட்டிற்கு அருகில் வைத்து அதை கொழுத்தி விட்டு வீட்டிற்கு போன  சம்பவமும் நடந்திருந்தது.

 

 இது போன்ற சம்பவங்களால் பொது மக்கள்  இவர்கள் மீது வெறுப்படைந்திருந்தாலும்  அவர்கள் கைகளில் ஆயுதம் ஒன்று இருந்ததால்  மனதிற்குள் திட்டியபடி மெளமாக  இருந்தார்கள். அன்றைய காலங்களில் புலிகள் அமைப்பு  தமிழ் மக்களிடம்  இருந்து  வாகனங்களை கடத்தி கெட்ட பெயர் எடுக்காமல்  அவர்கள் சிங்கள பகுதிகளில் போய் வாகனங்களை கடத்திக்கொண்டு வருவார்கள். முக்கியமாக  மடு மாதா திருவிழா தொடங்கி விட்டிருந்தால் ஒரே கொண்டாட்டம்தான்  தென்னிலங்கையில் இருந்து வரும் வியாபாரிகள் பணக்காரர்களின் வாகனங்களை  காட்டுப் பகுதிகளில் வைத்து கடத்திகொண்டு போய் விடுவார்கள்.யாழில் உருந்துளியில்  பயணம்  செய்துகொண்டிருந்த  கிட்டுவிற்கும்  சொகுசு வாகனத்தில்  பயணம் செய்ய ஆசை வந்திருந்தது தனக்கொரு வாகனத்தை கடத்திக் கொண்டுவருமாறு கட்டளையிட்டிருந்தார்.மன்னார்  கண்டி வீதியை இணைக்கும்  கெப்பிற்றி கொலாவ  பகுதியில்  மதியமளவில் தென்னிலங்கை  வாகனங்களிற்காக புலிகள் காத்திருந்தார்கள்  பச்சை நிற  ரொயோட்டா  லான்சர் காரொன்று  வந்து கொண்டிருந்தது  மரக் குற்றியை  வீதியின் குறுக்கே  உருட்டி காரை மறிந்தவர்கள்  துப்பாக்கியை நீட்டினார்கள்  காரில் இரண்டு பிள்ளைகளோடு வந்தவர்  எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு தங்களை  ஒன்றும் செய்து விட வேண்டாமென சிங்களத்தில் கெஞ்சினார். அவர்களை  இறக்கிவிட்டு புலிகள் காரை கொண்டு போகும் வழியில்  காரின் ஆவணங்களை எடுத்து பார்த்தபோதுதான் அது ஒரு தமிழரின் கார் என்று  தெரிய வந்திருந்தது.அந்த காரில்  வந்திருந்தவர் நீர்கொழும்பை சேர்ந்த தமிழ் வைத்தியர் ஒருவர்  அவர்  தனது கார் யாழில் கிட்டு பாவிப்பதை  உறவினர்கள் மூலம் அறிந்துகொண்டு சில காலங்களின் பின்னர் யாழ் வந்தபோது கிட்டுவிடம் சென்று பணம் தரலாம் தான் ஆசையாக  வெளிநாட்டில் இருந்தே  இறக்குமதி செய்த கார்  தனக்கு ராசியானதும் கூட எனவே அதனை தந்து விடுமாறு கேட்டிருந்தார்.அதற்கு கிட்டு நானும் இப்பொழுது ஆசையாக  ஓடித் திரிகிறேன் ராசியாகவும் இருக்கின்றது என்றபடி தனது கைத் துப்பாக்கியை  எடுத்து துணியால் துடைத்தபடி கூறவே  வைத்தியர்  தலையை குனிந்தபடி வந்தவழியே போய் விட்டார்.  இது இப்படியிருக்க...

 

 யாழ் குடாவின்  சிறுவர்கள் கூட  ஒழித்து  பிடித்து விழையாட்டு  கள்ளன் பொலிஸ் விழையாட்டுக்களை  கை விட்டு இடுப்பில் ஒரு கயிற்றையே   பனம் நாரையோ  கட்டிக்கொண்டு  அதில் ஒரு  தடியை  அல்லது திருவிழா துப்பாக்கியை  செருகிக் கொண்டு  கிட்டு மாதிரி நடந்து   ஆமி  இயக்கம் என விழையாடத் தொடங்கியிருந்தார்கள் இளைஞர் யுவதிகள் மனதில்  சினிமா கதாநாயகர்களின்  இடங்கள் அழிக்கப்பட்டு  கிட்டு சாகசங்கள் நிறைந்த   கதாநாயகன் ஆகியிருந்தார்..  இந்த காலகட்டமே  மாத்தையா கிட்டு விரிசல்களிற்கு காரணமாக இருந்தது என்பதோடு பிரபாகரனிற்கும் கிட்டு மீதான ஒரு எச்சரிக்கை பார்வை இருந்து கொண்டேதான் இருந்தது. அன்றைய காலத்தில் பிரபாகரன்  மாத்தையாவையே  ஆதரிப்பவராக இருந்தார் என்பதே உண்மை. ஆனால் இன்றும் மற்றைய இயக்கங்களை  அழித்ததால்தான் தம்மால் போராட முடியவில்லை  அவர்களிடம் ஜன நாயகம் இல்லை  ஆயுதங்களால் அடக்கி ஒடுக்கினார்கள்  அதனால் தமிழீழம் எடுக்க முடியவில்லையென வெளிநாடுகளில் வசிக்கும் மாற்று இயக்கஉறுப்பினர்கள் தொடர்ந்தும் சொல்லி வருகின்றார்கள். .மற்றைய இயக்கங்களிடம்  உட் படுகொலைகளோ மாற்று இயக்கங்கள் மீதான  தாக்குதல்களோ வன்முறையோ மக்கள் மீதான தாக்குதல்கள் கடத்தல் கொலைகளோ துரோகிகள் என்று மண்டையில் போட்டுத் தள்ளிய  இரத்தக் கறை படித்த கைகள்  எங்களிடம் இல்லை நாங்கள் சுத்தமான  ஜனநாயகவாதிகள் என்று யாரும் தங்கள் கைகளை உயர்த்த முடியாதவர்களே.ஆனால் உண்மை என்னவெனில்  மாற்று இயக்கங்களும் அவ்வப்பொழுது  புலிகள் மீதான தாக்குதல்களை  சிறு அளவில் நடத்தியிருந்தாலும் அன்று அவர்களால் புலிகளை அழிக்க முடியவில்லை .கை முந்தியவன் சண்டியன் என்றொரு பழமொழி  ஊரில் உண்டு புலிகளை அன்று அவர்கள் அழிப்பதற்கான ஆயுதவசதி    மனவுறுதி மற்றும் திட்டமிடல் இருக்கவில்லை  இவை அனைத்தும் புலிகளிடம் அல்லது கிட்டுவிடம்  இருந்ததால்  அவர்கள் கை முந்தி  சண்டியர்களாகி அனைத்தையும் செய்து முடித்திருந்தார்கள் .

 

கிட்டு கதா நாயகன்ஆனார்.இறுதியாக  புளொட்டில் இருந்து பிரிந்த தீப்பொறி குழுவினர்   புளொட்டிற்கு  பயந்து என்.எல்.எவ்.ரி . அமைப்பினரின் பாதுகாப்பில் இருந்தபடியே  அவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எவ். வினரின் தயாரிப்பு கைக்குண்டினை கிட்டு  இரவு வேளை தனது காதலியான சிந்தியாவை சந்திக்க  சென்றிருந்தபோது  கிட்டுவை  நோக்கி மீது எறிந்திருந்தனர். ஆனால் குண்டு வெடித்த நேரம் கிட்டு கார் கதவை திறந்து வெளியே இறங்கிய நேரம் அவரிற்கு பின்னால் இருந்த அவரது மெய் பாதுகாவலர் சாந்தா மணியும் பின் கதவை திற்ததால்  வெடித்த குண்டின் சிதறல்கள்  திறக்கப்பட்ட கார் கதவுகளால் தடுக்கப்பட்டு  கிட்டுவின் காலையும் சாந்தாமணியிலன் கைகளையும் பதம் பார்த்திருந்தது கிட்டுவின் காலும் சாந்தாமணியின் கையும்  சத்திர சிகிச்சை மூலம் அகற்றப் பட்டிருந்தது.இததோடு கிட்டுவின் சகாப்தம்  யாழில் முடிவிற்கு வந்திருந்தது.  இந்த குண்டு வெடிப்பின் தொடர்ச்சியாக இதனை  மாற்று இயக்கங்கள்  செய்திருக்கலாமென நினைத்து கைது செய்யப் பட்ட பலரோடு சிறு குற்றங்கள் மற்றும் நிதி கொடுக்க மறுத்தனால்  கைது செய்யப்பட்டு வைத்திருந்த யாழின் பிரபல  நகைக்கடை வியாபாரி  ஒரு வரும்  தடுத்து வைக்கப் பட்டிருந்த  யாழ் ஸ்ரான்லி வீதியில்  இருந்த  அரசரட்ணம்  என்பவரின்  வீட்டில்வைத்து அருணாவினால்   64 பேர் சுட்டுக் கொல்பட்டிருந்தார்கள்.  இதனையே  கந்தன்  கருணை படுகொலை  என இன்றுவரை  அடையாளப் படுத்தப் படுகின்றது. ஆனால் இது  யாழ்  நல்லூர்  வீதியில்  இருந்த  புலிகளின்  விசாரணை  முகாம்.  கந்தன்  கருணை  என்கிற  வீட்டில் நடந்ததாகவே  பலரும் பதிவு செய்திருக்கிறார்கள்.

 

மாத்தையாவே இதனை செய்திருக்கலாமென வதந்திகளும் பரவியிருந்தது. ஆனால் பலம் வாய்ந்த புலிகளின் புலனாய்வு பிரிவினரால் குண்டெறிந்த  தீப் பொறி குழுவினரை  உடனடியாக கண்டு பிடிக்க முடிந்திருக்கவில்லை  காலப்போக்கில் குண்டெறிந்தவர்களின் விபரங்கள் தெரிந்தபோது  அவர்கள் நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்கள்.

இது கிட்டுவின் ஒரு பக்கம் என்றால் மறு பக்கமானது அவர்  ஜரோப்பா  வரும்வரை  ஒரு ஆணாதிக்க வாதியாகவே இருந்தார்.புலிகள் அமைப்பிற்காக பெண்களை இணைத்துக்கொள்ளும்படி  தொடர்ச்சியாக பிரபாகரன் கோரிக்கை வைத்ததுக்கொண்டிருந்தபோதும்  பக்கத்து வீட்டிற்கு போவதென்றாலும்  பாட்டியின் அல்லது  ஒரு ஆண் துணையோடு போகின்ற  பயம் கொண்ட எமது  பெண்களால்  ஆயுதங்களை தாங்கி காடு மேடுகளில் கடினமாக  திரித்தும் எதிரியோடு போரிடும் மன நிலை அவர்களிடம் இல்லை எனவே அவர்களை  இயக்கத்தில் இணைக்க முடியாது என நேரடியாகவே  பிரபாகரனிடம் தெரிவித்திருந்ததோடு இயக்கத்தில் பெண்களை சேர்ப்பதை எதிர்க்கவும் செய்தார்.ரெலோ இயக்கத்தில் இணைந்து தமிழ்நாட்டிற்கு அழைத்துச் சென்று கைவிடப் பட்ட மற்றும் பெரும்பாலும்  யாழ் தவிர்ந்த மற்றைய மாவட்டங்களில் இருந்து புலிகளில் இணைந்த 53 பெண்களிற்கு  தமிழ் நாட்டில் சிறுமலை பகுதியில் பயிற்சி  முடித்து அவர்களை யாழிற்கு அனுப்ப பிரபாகரன் முடிவெடுத்திருந்ததும் அதனை கிட்டு எதிர்த்ததால் அவர்களை கரன்(சங்கரின் சகோதரர்  இவர் ஒரு திறைமையான  மாலுமி  குமரப்பா புலேந்திரன் அகியோரின்  பயண வள்ளத்தை செலுத்தியவரும் அவர்களோடு கைதாகி குப்பியடித்து இறந்து போனார்) முலம் மன்னாரில்  கொண்டுவந்து  மன்னார் மாவட்ட தளபதி விக்ரரிடம் பொறுப்பு கொடுக்கப் பட்டிருந்தது.  மன்னாரில் விக்கரரின் மரணத்தோடு மன்னாரின் பெரும்பகுதி இராணுவத்தின்  கைகளிற்கு போய்விட பெண்கள் அணி வன்னிக்கு மாத்தையாவின் பொறுப்பில் கொடுக்கப் பட்டிருந்தனர். பின்னர் தமிழ் நாட்டிலிருந்து பிரபாகரன்  யாழ் வந்த பின்னரே  பெண்கள் அணியினர் யாழிற்கு வர வழைக்கப் பட்டு யாழ் கோப்பாய்  பகுதியில் முகம் அமைத்திருந்தனர். 

 

அதோடு பிரபாகரன்  தொடர்ந்தும் பெண்களை  இயக்கத்தில் இணைப்பதற்கான முயற்சியை  கிட்டுவிடம் சொன்னபோது அதை கிட்டு நடை முறைப் படுத்தாதனால் அதன் பொறுப்பு அரசியல் பிரிவு பொறுப்பாளர் திலீபனிடம் ஒப்படைக்கபட்டிருந்தது.

ஆனால்  எடுத்த எடுப்பிலேயே  பயிற்சி  ஆயுதம் போராட்டம்  என்று  நேரடியாக  இயக்கத்திற்கு   எமது பெண்களை  உள் வாங்குவது கடினம் என்று  புரிந்திருந்ததால் சுதந்திர பறவைகள்  என்கிற ஒரு அமைப்பை  உருவாக்கி முதலுதவி பயிற்சி  அரசியல் பரப்புரை என்று தொடங்கி பின்னர் ஆயுதப்  பயிற்சிகள் கொடுக்கலாமென முடிவெடுத்து  சுதந்திர பறைவகள் என்கிற அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பின் மூலம் யாழ் குடாவில்  சுமார் நூற்று கணக்கான பெண்களை  உள்வாங்க முடிந்திருந்தது அப்படி வடமராச்சி  பகுதியில் சுதந்திர பறைகைள் அமைப்பில் இணைந்த ஒருவர்தர்தான் Niromi de Soyza என்பவர். அவர் தமிழ்புலிகள் என்கிறதொரு புத்தகத்தை  ஆங்கிலத்தில் எழுதியிருந்தார். அதில் தான் ஆயுதப் பயிற்சி பெற்றதொரு பெண்புலி போராளி என்று எழுதியியுமிருந்தார். உண்மையில் இவர் புலிகளின் சுதந்திர பறைவைகள் அமைப்பில் இணைந்திருந்தவர்.  பெண்களிற்கான முதலாவது பயிற்சி முகாம் வடமராச்சி திக்கம் பகுதியில் தொடங்கப் பட்டு சுதந்திர பறைவைகள் அமைப்பை சேர்ந்த பெண்களிற்கு ஆயதப் பயிற்சி கொடுக்கத்தொடங்கியிருந்தனர்.அந்த பயிற்சி முகாமும் ஒப்பிறேசன் லிபரேசன் நடவடிக்கையால்  பாதியில் நின்று போக அதில் பயிற்சி பெற்ற பெண்கள் பலர் வீடுகளிற்கு போய் சேர்ந்துவிட பலர் இயக்கத்தில் தொடர்ந்தும் இருந்தார்கள்.அப்படி பாதி பயிற்சியின்போது  வீடுகளுக்கு  சென்றவர்களில் ஒருவர்தான் Niromi de Soyza .

 

 கிட்டு களத்தில் இருந்து அகற்றப் பட்ட பின்னரே பெண்கள் கட்டமைப்பு பலம் பெற்றிருந்தது. அடுத்ததாக கிட்டு லண்டன் வந்து சேர்ந்ததும்  அவரே அவரது வாழ்வின் இன்னொரு பாகத்தினை பார்க்கத் தொடங்கியிருந்தார்.லண்டன் வந்த புதிதில் கிட்டுவை   லண்டன் வாழ் தமிழர்கள் தினமும் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் வீடுகளிற்கு விருந்திற்கு அழைக்கத் தொடங்கியிருந்தனர். கிட்டு ஒரு  போர்குற்றவாளி  பல கொலைகளிற்கு காரமானவர்  எனவே அவரிற்கு லண்டனில் புகலிடம் கொடுக்கக் கூடாது என மனிதவுரை அமைப்புக்களும் அவரால் பாதிக்கப் பட்ட மாற்று இயக்ககக் காரர்களும் சட்டரீதியான போராட்டங்களை நடாத்தத் தொடங்கியிருந்தனர். அது மட்டுமல்லாமல் புலிகளின்  அனைத்துலகப் பிரிவில் வெளிநாடுகளில் நிதி மேசடிகளில் ஈடுபட்டவர்கள் என கிட்டுவால் விரட்டப் பட்டவர்களும்  கோபத்தில் கிட்டு நடவடிக்கைககள் நடமாமாட்டங்களை  இங்கிலாந்து புலனாய்வு பிரிவிற்கு தகவல்களாக வழங்கிக்கொண்டிருந்தார்கள்.  அதே நேரம்  இந்தியாவும் கிட்டுவிற்கு  இங்கிலாந்து விசா கொடுக்காமல்  இருப்பதற்கான அழுத்தங்களை கொடுத்திருந்தது. இதனால் இங்கிலாந்து கிட்டுவை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டிருந்தது  அதன் பின்னர் கிட்டு சட்ட ரீதியாக  அகதி தஞ்சக் கோரிக்கை வைத்திருந்தார்.அதுவும் நிராகரிக்கப் பட்டிருந்தது. கிட்டுவிற்கு சட்டப் பிரச்சனை என்றதுமே வீட்டிற்கு வில்லங்கத்திற்கு அழைத்து விருந்து கொடுத்தவர்கள் எல்லாரும் கிட்டுவை கண்டாலே ஒழிந்து ஓடத் தொடங்கியிருந்தார்கள். அதன் பின்னர் கிட்டு சுவிசிற்கு வந்தவர் பிரான்ஸ்  யெர்மனி என்று மற்றைய நாடுகளிலும் தஞ்சக் கோரிக்கையை  வைத்தார் இந்த நாடுகளும் அவரது தஞ்சக் கொரிக்கையை நிராகரித்து விட்டிருந்தது.யாழ் வீதிகளில் கதாநாயகனாக வலம் வந்த கிட்டு ஜரோப்பாவில் ஒழிந்து மறைந்து வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார்.அதே காலகட்டத்தில் தான் அமெரிக்கா புலிகளுடன்  அதிகார பூர்வமற்று சில இரகசிய பேரங்களையும். அதே நேரம்  இலங்கை பிரச்சனைக்கு தமிழீழம் அல்லாத ஒரு தீர்வையும் பற்றி பேசுவதற்கு முடிவெடுத்திருந்த நிலையில் தம்முடன் பேசுவதற்கு யாராவது ஒரு புலிகளின் முக்கியமானவரை தெரிவு செய்து அனுப்பும்படி புலிகளின் தலைமைக்கு தகவல் கொடுத்திருந்தார்கள்.வழைமையாக  இது போன்ற வெளிநாட்டவர்களுடனான ராஜதந்திர பேச்சுக்களை அன்ரன் பால சிங்கம் அவர்களே செய்வது வழைமை ஆனால் அன்றைய காலத்தில் கிட்டு ஜரோப்பாவில் விசா பிரச்சனையில் இருந்ததால் அவரை அமெரிக்க அதிகாரிகளுடன் பேசுவதற்காக  அமெரிக்கா அல்லது கனடாவிற்கு அனுப்பிவிடுவது பின்னர் கிட்டு அங்கேயே தங்கியிருந்தபடி இயங்கலாம் என நினைத்த புலிகள் அமைப்பு தமது பக்கம் இரகசிய பேச்சு வார்த்தைக்கு கிட்டுவை அனுப்புவதாக  தெரிவித்து விட்டிருந்தார்கள். கிட்டுவிற்கு ஐரோப்பில் விசா பிரச்சனை என்பதால்  அவர் பெருமளவான தமிழர்களும் தமிழ் சட்டவாளர்களும்  வாழும் அமெரிக்காவிற்கோ  கனடாவிற்கோ வந்தால் அங்கு  அகதி தஞ்சக் கோரிக்கைகையை  வைத்து விட்டு  சட்ட மற்றும் மக்கள் போராட்டங்களை நடத்தலாமென  அமெரிக்கா நினைத்தது.  அதே நேரம்  தாம் நடத்தும்   இரகசிய பேச்சு வார்த்தை விடயங்களும் கசியலாம் எனவே புலிகள் ஒன்று நினைக்க அமெரிக்கா  ஒன்றை நினைத்திருந்தது. அவர்கள் சந்திப்பிற்காக  தெரிவு செய்த நாடு  மெக்சிக்கோ. வேறு வழியின்றி  சுவிசில் இருந்து  மெக்சிக்கோ சென்று பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார்.

 

பேச்சு வார்த்தைகள முடிந்ததும்  கிட்டு மீண்டும் ஜரோப்பிற்கு திரும்பவதற்கு எந்த நாடும் விசா வழங்கவில்லை  கிட்டு மீண்டும் பிரபாகரனை சந்திக்கப் போவதற்கான  எந்த உதவிகளையும்  அமெரிக்கவும் செய்யவில்லை காரணம்  அன்றைய காலத்தில்  புலிகளின் தந்திரமான  சர்வதேச வலையமைப்பு  எப்படிப்பட்டது என்று அவர்களிற்கும் தெரியும்.கிட்டு எப்படியும் பிரபாகரனிடம் போய் சேர்ந்து விடுவார் என்பதும் தெரியும். அதே நேரம்  கிட்டுவை பின் தொடர்ந்து  கண்காணித்து இந்த வலையமைப்புக்களை பற்றி அறிந்து கொள்ளவும் அமெரிக்கா உளவுவுப் பிரிவு தீவிரமாக இருந்தது. ஆனால் கிட்டு தந்திரமாக  உக்கிரெனிற்கு கொண்டு வரப்பட்டு பின்னர் போலந்தில் சில காலங்கள் தங்கியிருந்தார்.அடுத்ததாக அவர் பிரபாகரனை சந்திக்கப் போக வேண்டும். ஆனால் மீண்டும் வெறுங்கையுடன் ஊரிற்கு போக விரும்பாத கிட்டு சில ஏவுகணைகளையாவது பெற்றுக்கொண்டு போகும் முயற்சிகளில் ஈடு பட்டிருந்தார். கே.பி கொம்பனியால் கொள்வனவு செய்யப் பட்ட ஆயுதங்களோடு போய் சேருவதென முடிவானது. உக்கிரெனியில் வாங்கிய ஆயுதங்கள் தாய்லாந்திற்கு கொண்டு சேர்க்கப் பட்டதும் கிட்டுவும் தாய்லாந்து போய் சேர்ந்திருந்தார். தாய்லாந்தின் புக்கெற் பகுதியில் இருந்த சிறிய தறை முகம் ஒன்றில் இருந்து   M.V. YAHATA. என்கிற கப்பலில் அமெரிக்காவின்   சமாதான பேச்சு வார்த்தைகளிற்கான குவோக்கர்  என்கிற தீர்வு திட்ட வரைபுகளோடும்  ஆயுதங்களோடும்  கிட்டு கப்பலில் ஏறியிருந்தார். கிட்டுவோடு எப்பொழுதும் கூடவே ஒட்டியிருக்கும்    மானிப்பாயை சேர்ந்த குட்டி சிறி உட்பட புலிகள் உறுப்பினர்கள் ஒன்பது பேருடனும் கப்பல் மாலுமி சிப்பந்திகள் ஒன்பது பேருடனும் கப்பல் புறப்பட்டிருந்தது.

 

கப்பல் புறப்பட்டதுமே அதன் செய்தி பிரபாகரனிற்து தாய்லாந்தில் இருந்து குமாரால்  அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.அந்த செய்தியை  வெளிநாட்டு தொலைத் தொர்பிற்கு பொறுப்பாகவும் பிரபாகரனின் நம்பிக்கைக்கு பாத்திரமாகவும் இருந்த கிருபன் பெற்றுக் கொள்கிறார்.கப்பல்  சர்வதேச கடலிற்குள் இறங்கியதும் வழைமைபோல M.V. YAHATA.என்றிருந்த பெயரில் சில எழுத்துக்களை  அழித்து    AHATA என்கிற பெயரிற்கு மாறி ஆவணங்களும் மாற்றப் பட்ட நிலையில் பயணத்தை தொடந்து கொண்டிருந்தது. அதே நேரம் பிரபாகரனிற்கு தெரிவிக்கும்படி குமாரால் கிருபனிற்கு கொடுக்கப் பட்ட செய்தி முதலில் இந்திய உளவுப் பிரிவின் அதிகாரி ஒருவரிற்கு போய் சேருகின்றது  பின்னரே பிரபாகரனிற்குதெரிவிக்கப் படுகின்றது அதனை கொடுத்தவர் கிருபனே.கிட்டுவை போட்டுக் கொடுத்தவர் மாத்தையா என்றே பொதுவாக பலரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதனை செய்தது கிருபன் என்பது பலரிற்கு தெரியாத விடயம். கிருபனிற்கும்  இந்திய உளவு அதிகாரிகளிற்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டது என்றும் கொஞ்சம் பார்த்து விடலாம்.

                                                          

இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தாகி பின்னர் புலிகளிற்கும் இந்திய இராணுவத்திற்கும்  சண்டை தொடங்கிய பின்னர் தமிழ் நாட்டில் தங்கியிருந்த  புலிகளின்  முக்கிய மூன்று நபர்களை  இந்திய உளவுப் பிரிவான றோ அமைப்புஅவர்களிற்கு வேண்டிய வசதிகள் அனைத்தையும் செய்து கொடுத்து  தங்கள் பக்கம் இழுத்து தம்வசமாக்கி புலிகள் அமைப்பை அழிப்பதோடு அதன்  தலைமைக்கு குறி வைத்தனர். அந்த முக்கிய மூன்று நபர்கள்  இஞ்சினியர் எனப்படும் மகேந்திரன். இவர் புன்னாலைக் கட்டுவனை சேர்ந்தவர்  இவரின் சகோதரர் வாசு புலிகளின் ஆரம்பகால உறுப்பினர் யாழ் குருநகர் பகுதியில் இராணுவ சுற்றிவழைப்பில் மரணம் அடைந்தவர். இஞ்சினியர்  மாத்தையாவின் நெருங்கிய நண்பர்  இவரைப் பற்றி  இன்னொரு பக்கத்தில் விபரமாக பார்க்கலாம்.அடுத்தவர்  இந்திய படை மோதல் காலத்தில் தமிழ்நாட்டில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த கிட்டு . என்னது கிட்டு றோவிற்காக இயங்கினாரா ??என பலரிற்கு ஆச்சரியமாக இருக்கும்.கிட்டு றோ அதிகாரிகளிற்கு ஒத்துளைப்பது போல் போக்கு காட்டியிருந்தார் ஆனால் கிட்டு தங்களிற்கு உண்மையிலேயே ஒத்துளைப்பதாக நம்பிய றோ அதிகாரிகள்  கிட்டுவின் வீட்டுக் காவலை விலக்கியிருந்ததோடு  அவரிற்கு வேண்டிய சகல வசதிகளையும் செய்து கொடுத்தது மட்டுமல்லாமல் அவர்களே  கிட்டுவை கொண்டு போய் வன்னியில் இறக்கி  பிரபாகரனை சந்திப்பதற்காக அனுப்பியும் வைத்திருந்தனர். ஆனால் கிட்டு தங்களிற்கு தண்ணி காட்டியதை  பல காலங்களிற்கு பின்னரே அதவது ராஜுவ் காந்தி கொலை  செய்யப் பட்ட பின்னரே  அவர்களிற்கு தெரிய வந்திருந்தது.அதனாலேயே இந்தியாவும் கிட்டு மீது கடும் கோபத்தில் இருந்தது இதனாலேயே  கிட்டுவிற்கு எந்த நாடும் தங்குமிட அனுமதி வழங்காமல் பார்த்துக் கொண்டார்கள். அடுத்த மூன்றாவது நபர்தான் கிருபன்  வடமராச்சியை சேர்ந்தவர்  இவர் பிரபாகரனிற்கு நெருக்கமானவர்.

 

கிட்டு  தமிழ் நாட்டில் தங்கியிருந்தாலும்  பிரபாகரன் கிட்டுவை பெரியளவு நம்பாமல் கிருபனையே  தமிழ் நாட்டில் புலிகளின் நடவடிக்கைகளிற்கு பொறுப்பாக நியமித்திருந்தார்.கிருபன்  மதுரையில் இருந்தபடி வேதாரணிய  கடற்கரையை  மையமாக வைத்து புலிகளிற்கு வேண்டிய பொருட்களை அனுப்பிக் கொண்டிருந்தார். கிருபன் மதுரையில் தங்கிருந்ததை  அறிந்த கிட்டு  அவரை தொடர்பு கொண்டு தன்னுடைய  அதிகார தோரணையில்  சில வேலைகளை செய்யச் சொல்லி சொன்னபோது கிருபன் மறுத்ததோடு இது யாழ்ப்பாணமும் இல்லை நீ பொறுப்பாளரும் இல்லை இங்கு நான்தான் பொறுப்பாளர்  எனக்கு நீ கட்டளையிட முடியாது என்றதும் கிட்டுவும்  வழைமைபோல் தூசணத்தால் திட்டிவிட  கிட்டுவிற்கும் கிருபனிற்கும் முறுகல் உருவாகியிருந்தது. கிட்டு வன்னிக்கு சென்ற பின்னர்  கிருபன் மதுரையில் கைது செய்யப் பட்டு பூந்தமல்லி சிறையில் அடைக்கபட்டிருந்தார். ஒருநாள்  அவரை நீதி மன்றத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டபோது தப்பியோடி விட்டதாக தமிழ் நாட்டு ஊடகங்கள் அனைத்திலும் செய்தி வெளியாகியிருந்தது. றோ அமைப்பினரே கிருபனை தங்கள் பக்கம் இழுத்திருந்ததோடு  தப்பியோடிய நாடகத்தை நடத்தி அவரை வேதாரணியம் வழியாக  வன்னிக்கு அனுப்பியும் வைத்திருந்தனர். கிருபன் உண்மையிலேயே தப்பி வந்துவிட்டதாக நினைத்த பிரபாகரனும் மீண்டும் அவரை தனது பக்கம் வைத்திருந்ததோடு அவரிடம் சர்வதேச தொலைத் தொடர்பு பொறுப்பையும் ஒப்படைத்திருந்தார். ஆனால் கிருபன் றோ அதிகாரிகளிற்கு முழுக்க  முழுக்க விசுவாசமாக நடந்து கொண்டிருக்காவிட்டாலும்  கிட்டு மீது இருந்த தனிப்பட்ட கோபத்தை பழி தீர்த்துக் கொள்வதற்காக  கிட்டு கப்பலில் வரும் செய்தியை அவர்களிற்கு கொடுத்து விட்டிருந்தார்.

 

கிட்டுவின் கப்பலை கண்காணிக்கத் தொடங்கிய  இந்தியக் கடற்படை சர்வதேசக் கடலில் வைத்து கிட்டுவின் கப்பலை இடை மறித்தார்கள். இந்த செய்தி  கப்பலில் இருந்து தாய்லாந்திற்கும் வன்னிக்கும் அறிவிக்கப் பட்டது. புலிகளின் தலைமை உடனடியாக  தமிழ் நாட்டில் இருந்த தங்கள் ஆதரவாளர்களான நெடுமாறன்.வை.கோ. கொளத்தூர் மணி .சுப.வீர பாண்டியன் ஆகியோரோடு தொடர்பு கொண்டதையடுத்து  அவர்கள்  இந்திய  அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு  கப்பல் சர்வதேச கடலில் போய்க்கொண்டிருப்பதால் அதனை நிறுத்த சட்டப்படி முடியாது எனவே அதனை விட்டு விடுமாறு கேட்டுக் கொண்டனர். கப்பல் சர்வதேசக் கடலில் சென்றாலும் அதில் ஆயுதங்கள் கடத்தப் படுவதாக தகவல் கிடைத்துள்ளது எனவே இந்து சமூத்திர பிராந்தியத்தில் சட்ட விரோத ஆயுதக் கடத்தலை தடுக்கும் உரிமை இந்தியாவிற்கு உள்ளது. எனவே கப்பலை சோதனையிட்டு  அதில் ஆயுதங்கள் எதுவும் இல்லாவிட்டால் நாங்கள் அவர்களை  தொடர்ந்து பயணிக்க அனுமதிப்போம் என்று பதிலை கொடுத்திருந்தனர். புலிகள்  கப்பலில் கிட்டு சமாதான செய்தியோடு வருகிறார்  என்று மட்டுமே  இந்திய அதிகாரிகளோடு பேச்சு வார்த்தையில் ஈடு பட்ட  தங்கள் ஆதரவாளர்களிற்கு தெரிவித்திருந்ததால் அவர்களும் கப்பலில் ஆயுதங்கள் இல்லை எனவே நீங்கள் தாராளமாக சோதனையிடலாம் ஆனால் யாரையும் கைது செய்யக்கூடாது என உறுதியளிக்கவேண்டும் என கேட்டிருந்திருனர்.  இந்திய அதிகாரிகளும் உறுதியளித்திருந்தார்கள். இதற்கிடையில் கிட்டுவின் கப்பலை மறித்திய இந்தியக் கடற்படை   கிட்டு வந்த கப்பலை சோதனையிட வேண்டும் எனவே  இந்திய கரை நோக்கி செல்லுமாறு கட்ளையிட்டதும் அதை மறுத்தததோடு  தங்கள் கப்பலிற்கு அருகில் இந்திய கப்பல் வந்தால் தங்கள் கப்பலை தகர்த்து விடுவோம் என்றும் மிரட்டியிருந்தார்கள். அதனை  இந்திய கடற்படை கப்பலில் இருந்தவர்கள் டெல்லிக்கு  தங்கள் மேலதிகாரிகளிற்கு தெரியப் படுத்திவிட்டு அடுத்த நடவடிக்கைகாக காத்திருந்தனர். கிட்டு தங்கள் கப்பலை  இந்தியக் கரைக்கு செலுத்த மறுத்தததை அறிந்த  இந்திய  அதிகாரிகள்  கிட்டுவின் கப்பலில் உலங்கு வானூர்தி(கெலிகொப்ரர்) மூலம் அதிரடிப்படையினரை  இறக்கி சோதனையிட நடவடிக்கை எடுத்தனர். அந்தமான் தீவுப் பகுதியில் இருந்த இந்திய கடற்படையின் கப்பலொன்று அதிரடிப்படையினர் மற்றும் உலங்கு வானூர்தியை தாங்கியபடி கிட்டு இருந்த கப்பலை அண்மித்திருந்தது.

 

அடுத்ததாக என்ன நடக்கப் போகின்றது என்பதை அறிந்த கிட்டு  கப்பல் பணியாளர்கள் ஒன்பது பேரையும்  தற்பாது காப்பு  படகில் ஏற்றி அவர்களை போகச் சொல்லி விட்டு கப்பலில் இருந்த வெடிபொருட்களை வெடிக்க வைக்குமாறு கட்டளையிட்டு விடுகிறார்  சிறிய படகில் பணியாளர்கள்  சிறிது தூரம் சென்றதுமே  கிட்டுவின் கப்பல் பாரிய வெடிச் சத்தங்களுடன் வெடித்து சிதறத் தொடங்கியிருந்தது. கிட்டு எனும் அலையும் அவரோடு மற்றைய ஒன்பது பேரும்  இந்திய பெருங்கடலில் அடங்கிப்போனார்கள். கப்பல் பணியாளர்களை இந்திய கடற்படை கைது செய்து சிறையிலடைத்தார்கள்.சில வருடங்களிற்கு  பின்னர் கப்பல் பணியாளர்கள் குற்றமற்றவர்கள் என நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு இன்று அவர்கள் வெளி நாடுகளில் வாழ்கிறார்கள்.

Share this post


Link to post
Share on other sites
58 minutes ago, sathiri said:

மன்னார்  கண்டி வீதியை இணைக்கும்  கெப்பிற்றி கொலாவ  பகுதியில்  

A29 இல் வவுனியாவிற்கும் கொறவப்பொத்தானைக்கும் இடையில் அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ளது  

Share this post


Link to post
Share on other sites

சுதந்திர பறவைகள் எனும் சஞ்சிகையை யாழ்களத்திலிருந்த பெண் உறுப்பினர்கள் தொடக்கியிருந்தனர்.ரொம்ப பெருமையாக இருந்தது.

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

Sign in to follow this