Jump to content

சமூக வலைதளங்களை நாம் சரியாகத்தான் பயன்படுத்துகிறோமா? #BeGoodDoGood


Recommended Posts

சமூக வலைதளங்களை நாம் சரியாகத்தான் பயன்படுத்துகிறோமா? #BeGoodDoGood

 

idlenomoresocial_12357.png

நீங்கள் மாநகர பூங்காக்களை கவனித்தது உண்டா?

ஒரு மரத்தின் கீழ் வயது முதிர்ந்த நண்பர்கள் சிலர் வாக்கிங் வந்ததாகச் சொல்லி கதை பேசிக்கொண்டிருப்பார்கள். இன்னொருபுறம், 40 வயதை கடந்த பெண்கள் சிலர் சிமென்ட் பென்ச்சில் லேடீஸ் கிளப் நடத்திக் கொண்டிருப்பார்கள். புதர்களுக்கு நடுவேயும், மெர்க்குரி விளக்கின் வெளிச்சம் அதிகம் பரவிடாத இடங்களிலும் காதல் ஜோடிகள் காதில் கிசுகிசுத்துக் கொண்டிருப்பார்கள். உடலில் பலம் இருப்பவர்கள், காதில் ஹெட்ஃபோனோடு ஓடிக்கொண்டிருப்பார்கள். சிலர் ஆங்காங்கே தனியே அமர்ந்து யோசித்துக் கொண்டிருப்பார்கள். நாய்கள் சில எதையோ தேடிக்கொண்டிருக்கும். சிறுவர்கள் கூட்டம் கிரிக்கெட்டோ, ஃபுட்பாலோ விளையாடிக்கொண்டிருக்கும். ஒரு பெரிய இளைஞர் கூட்டம் சத்தமாக பேசிக்கொண்டிருக்கும். அந்த கூட்டம் மட்டும்தான் அதிக நேரம் பூங்காவிலே இருக்கும். தாத்தாக்களையும், பாட்டிகளையும், காதல் ஜோடிகளையும், ஏன் நாய்களையும் கூட கலாய்த்துக் கொண்டிருக்கும். சிறுவர்களின் பந்து அவர்களிடத்தில் வந்தால் பாகிஸ்தான் எல்லைக்கு அது தூக்கிப் போடப்படும்.

அந்தப் பூங்காதான் சோஷியல் மீடியா. மேலே சொன்ன அத்தனை கதாபாத்திரங்களும் முக்கிய சோஷியல் மீடியாக்களான ஃபேஸ்புக், ட்விட்டரில் உண்டு. ஆனால், நம் கண்களில் அதிகம் படுவது எது? கலாய்க்கும் இளைஞர்கள் கூட்டம்தான். ஆனாலும், பூங்கா அழகானதுதானே?

இதுதான் உண்மையில் சோஷியல் மீடியாவின் நிலை. வாக்கிங்குக்கோ, பேசுவதற்கோ, இளைப்பாறுவதற்கோ பூங்காவுக்கு வரும் கூட்டம் சிறிது நேரத்தில் திரும்பிவிடும். அவர்களின் நிஜ வாழ்வு என்பது பூங்காவுக்கு வெளியில் இருக்கிறது. ஆனால், வெளியே எந்த ஆக்கப்பூர்வமான கடமைகளோ பொறுப்புகளோ இல்லாத கூட்டம் மட்டுமே பூங்காவில் பொழுதைக் கழிக்கும். பூங்காவில் ஆக்கபூர்வமாக பொழுதைக் கழிப்பவர்களை கிண்டலடிக்கும்... எள்ளி நகையாடும். ஏனெனில், அது அவர்கள் பேட்டை என்ற நம்பிக்கை அவர்கள் மனதில் உருவாகியிருக்கும். கிட்டத்தட்ட இதே மனநிலைதான் சமூக வலைதளங்களிலும் நடைமுறையில் இருக்கிறது எனக் கொள்ளலாம். 

”அப்படியென்றால் சோஷியல் மீடியாவில் நல்லதே நடக்கவில்லை என சொல்கிறீர்களா?” என்ற கேள்வி எழலாம். அது நியாயமானதுதான்.

Social-Media_12176.jpg

ஆனால், இதே சமூக ஊடகங்கள்தான், மிக முக்கியமான சம்பவங்களின்போது உச்சபட்ச அக்கறையுடனும் செயல்படுகிறது. முதல்வர் ஜெயலலிதா மரணித்தபோது நாட்டில் சிறு அசம்பாவிதம்கூட நடக்காததற்கு சமூக ஊடகங்களுக்கு மிகமுக்கியப்பங்கு உள்ளது. முதல்வர் ஜெயலலிதா கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் மருத்துவமனையிலேயே இருந்ததும், தங்கள் கருத்துகளை, சந்தேகங்களை நியாயமான முறையில், நாகரிக தொனியில் எழுதிக் கொண்டே இருந்தது. அது சரியான கருத்து விவாதத்துக்கு வழிநடத்திச் சென்றது. எல்லாவற்றிலும் ஒரு சிறு பங்கு விதிவிலக்குகள் இருப்பதைப் போல, இங்கும் உண்டு என்றாலும் அதையும் மீறி பொதுவெளிகளில் மக்கள் மனது ஒரு பெரும் அதிர்ச்சிக்கு எந்நேரமும் தயாராக இருந்ததற்குக் காரணம் சமூக ஊடக விவாதங்கள்! 

ஜெயலலிதா மரணத்துக்குப் பின், அவர் மீதான விமர்சனங்களை ஒதுக்கிவிட்டு, அதிகபட்ச மரியாதையோடு அவரைப் பற்றிய கருத்துகளைப் பகிர்ந்தார்கள். ‘நீங்கள் ஆளக்கூடாது என்றுதான் நினைத்தோம். வாழக்கூடாது என்று நினைக்கவில்லை’ என்று எதிர்கட்சிக்காரர் எழுதிய வரிகள் சமூக வலைதளங்களின் உணர்ச்சிபூர்வமான பகிர்தலுக்கு ஒட்டுமொத்த சாட்சியாக அமைந்தது.

500/1000 ரூபாய் நோட்டுகள் தடைவிஷயங்களில் கட்சி ரீதியான மோதல்கள் இருந்தாலும், பல ஆரோக்கியமான விவாதங்களைக் காணமுடிந்தது. எந்த ஏ.டி.எம்-மில் பணம் கிடைக்கிறது என்ற உருப்படியான தகவல்கள் பகிரப்படுவதை கவனிக்க முடிந்தது. 

 சமீப வர்தா புயல் சமயமும் பெரும் அசம்பாவிதங்கள் நடைபெறாவண்ணம் பலரது கருத்துப் பரிமாற்றங்கள் இருந்தன. எந்தெந்த சாலைகளில் போக்குவரத்து தடைபட்டிருக்கிறது, எந்தப் பகுதிகளில் காற்று பலமாக இருக்கிறது என்பதை உடனுக்குடன் பகிர்ந்து உதவினார்கள் பலர். சென்னை தாண்டி பல ஊர்களில் சமூக ஊடகத்தில் இல்லாத பலருக்கு நேற்றைய தினத்தின் சென்னை நிகழ்வுகளை, சமூக ஊடகங்களில் இருப்பவர்கள்தான் கொண்டுசென்றிருக்கக்கூடும்.

Chennai Flood

இந்த சமூகவலைதளங்கள்தான் சாதனையாளர்கள் செய்ய யோசிக்காதவற்றையெல்லாம் சாதாரணர்கள் சர்வ சாதாரணமாகச் செய்வார்கள் என்று நிரூபித்துக் காட்டியது. இந்த சமூக வலைதளங்கள்தான் தொலைந்த மகனை, மகளை தன் சொந்தமாய் நினைத்து தேட உதவியது. இவைதான், ரத்தம் வேண்டுமென்றாலும் பரப்பியது. ஊர் சுத்தம் ஆகவேண்டுமென்றாலும் உதவியது. அது சென்னை மழையோ, கடலூர் புயலோ தமிழகம் முழுக்கவிருந்து இளைஞர் சக்தியை ஒன்று திரட்டியது.

இது போன்ற உதவிகள் நிஜ உலகில் இன்னும் அதிகமாக நடந்தன. டெக்னாலஜி, இந்த உதவிகளை தொகுத்து, அதன் ஆக்க சக்தியை அதிகப்படுத்தின என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். ‘ஏதோ ஓர் ஊரில் என்னவோ நடக்கிறது எனக்கென்ன?’ என்றில்லாமல் உணர்வுபூர்வமாக பலரை ஒருங்கிணைக்கும் செயலை இன்றைக்குச் சமூக ஊடகங்கள் செய்து கொண்டிருக்கிறது. ஒரு இக்கட்டான சூழலில் இறங்கி சேவை செய்யும் ஒருவரை பலருக்கு அடையாளம் காட்டியதன் மூலம், அவரைப் போல ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்றுகூட வாய்ப்பை உருவாக்கித்தந்தது சமூக ஊடகங்கள்தான்.  

unnamed_18217.jpg

இன்னொரு உண்மையையும் பார்க்கவேண்டும். நிஜ உலகுக்கும், வர்ச்சுவல் உலகுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. சமூக வலைதளங்கள் “மொக்கை”, “பழசு” என ஒதுக்கிய மஞ்சப்பை என்ற படம் நிஜத்தில் வசூலை வாரிகுவித்தது. “இதுதான் உலக சினிமா” என ட்விட்டர் கொண்டாடிய படம் முதல் காட்சியில் இருந்தே காலியாக இருந்தது. மைதானத்தில் எப்போதும் இருக்கும் கூட்டம் போடும் சத்தம் மட்டுமே அதிகம் கேட்பதால் அதுதான் உண்மை என நம்ப வேண்டியிருக்கிறது. சமூக ஊடகங்களில் கேட்கும் சசிகலா எதிர்ப்புக் குரல்களில் 10 சதவிகிதம் கூட போயஸ் கார்டனின் முன் கேட்கவில்லை. தெருக்களில் கேட்கவில்லை. மக்கள் கூடும் மார்க்கெட் பகுதிகளில் கேட்கவில்லை. ‘என்னது வெறும் 2000தான் எடுக்க முடியுமா?’ என்று கடும்கோபத்துடன் கேட்ட பலரும், சேகர் ரெட்டி வீட்டில் கோடிகளில் 2000 ரூபாய்த்தாள்கள் எடுக்கப்பட்டது தெரிந்தும் பெரிதாக ரியாக்‌ஷன் செய்யாமல் ‘இவனுகளை திருத்த முடியாது’ என்று சும்மா இருந்துவிட்டது. 

சமூக வலைதளங்களில் இருக்கும் சில கூட்டம் மீம்ஸ் போடும். கிண்டலாக ஸ்டேட்டஸ் போடும். நக்கலாக ட்வீட் போடும். அப்படி கிண்டல் அடிப்பதற்காக நாட்டில் ஏதேனும் நிகழக் காத்திருப்பார்கள். நல்லதோ கெட்டதோ, பிறப்போ இறப்போ, மக்களைப் பாதிக்குமோ இல்லையோ... அவர்களுக்கு தேவை ஒரு சம்பவம். அல்லது ஒரு வாசகம். அதை வைத்து அன்றைய பொழுது ஆயிரமாயிரம் லைக்ஸும், சில நூறு ரீட்வீட்களும், ஷேர்களும் வாங்கி விடுவார்கள். எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் அதை ஒரு லைக்குக்கு மட்டுமே ஏற்ற விஷயமாக மாற்றிக்கொண்டிருப்பதை இவர்கள் அறிவதில்லை. நடுநடுவே அப்துல் கலாமுக்கும், அறிவியல் உண்மைகளுக்கும் ஒரு மீம்ஸ் போட்டுவிட்டால் சமூக அக்கறை இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள்.

எலி ஒன்றை கூண்டில் அடைத்து, அதற்கு முன்னால் On-OFF சுவிட்ச் ஒன்று வைக்கப்பட்டது. எலி அந்த சுவிட்சைத் தொட்டு ஆன் பண்ணினால், அதன் மூளையில் டோபோமைன் என்ற வேதிப்பொருள் தூண்டப்படும். சுவிட்சைப் போடும்போது எல்லாம் அதற்கு டோபோமைன் உதவியால் உள்ளுக்குள் பேரானந்தம் உண்டாகும். ஒருகட்டத்தில் ஒவ்வொரு நாளும் விடாமல் அந்த டோபோமைன் பட்டனைத் தட்ட ஆரம்பித்துவிட்டது. விடாமல்... மணிக்கணக்கில், சோறு, தண்ணீர் இல்லாமல் எந்நேரமும் அது டொக்கு டொக்கு எனத் தட்டிக்கொண்டே இருந்தது. ஒருகட்டத்தில் முழுமையாக அந்த பட்டனுக்கே அடிமையாகிவிட்டது. சமூக வலைத்தளங்களின் வழி நடப்பது இது மாதிரியான ஒரு மாற்றம்தான்.

கிட்டத்தட்ட இந்த எலி போலதான் ஆகிறார்கள் நெட்டிசன்ஸ். அவர்களுக்கு உணர்வு மங்குகிறது. எதிர்ப்போ, ஆதரவோ..இரண்டிலுமே அவர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை. கோடி ரூபாய் ஜாக்பாட் அடித்திருக்கிறது என்பதையும், கோடி ரூபாய் ஷேர் மார்க்கெட்டில் போனது என்பதையும் ஒரே மாதிரி பார்க்கத் தொடங்குவார்கள். அதுதான் நிஜத்திலும் நடக்கிறது. இந்த மாற்றத்தை மக்களிடம் வேகமாக கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறது சோஷியல் மீடியா.

இதே சமூகவலைதளத்தில்தானே உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் பகிரப்பட்டு பலரையும் பீதியடைய வைக்கிறது?

netizens_12076.jpgஇப்பொழுதும் ஈழத்தமிழருக்கு வாக்கெடுப்பு நடந்து கொண்டிருக்கிறது; மதுரை மீனாட்சி அம்மன், மோடி, ஜனகனமண, வந்தே மாதரம், புதிய 2000 ரூபாய் நோட்டு என்று எதையவது உலகத்திலேயே சிறந்ததாக ஐ.நா. தேர்ந்தெடுத்ததாக பல வதந்திகள் உலவிக் கொண்டேதான் இருக்கிறது. 2012 என்று குறிப்பிட்டே ‘அவசரம் உடனே ரத்தம் தேவை’ என்று வருகிறது; ஒரு ஷேர் செய்வதன் மூலம் நாம் உண்மையான மனிதனாக, இந்தியனாக, தமிழனாக, ஆணாக, பெண்ணாக எல்லாம் நிரூபித்துத் தொலைய வேண்டியதாக இருக்கிறது; ஐந்து நொடியில் ஷேர் செய்பவர்களுக்கு கடவுள் என்னென்னமோ தருகிறார்; ஒரு பள்ளிப் பேருந்து விபத்தில் சிக்கியதாக அந்தப் பள்ளியின் அருகில் இருப்பவரே ’செய்தி உண்மைதானா?’ என்று விசாரிக்காமல் பகிர்கிறார்; யாரோ ஓர் ஏழைச்சிறுமிக்கு நெட்வொர்க்காரர்கள் பத்து காசு கொடுப்பார்கள் என்று நம்பும் ஒரு பெருங்கூட்டம் இருந்து கொண்டுதானிருக்கிறது; அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்டில் கேன்சருக்கான இலவச மருந்து வைத்திருக்கிறார்கள்; ஏடிஎம் நம்பர் 2442 என்றிருந்தாலும் ரிவர்ஸில் அடித்தால் திருடர்களிடமிருந்து தப்பிக்கலாம்; இப்படி இன்னும்.. இன்னும்...

எதையும் பகிர்வதற்கு முன் ஒரு அலைபேசி அழைப்பின்மூலம் அதை உறுதி செய்து கொள்ளலாம். இதை யாரோ சொன்னதுக்கு ‘Not verified’, ‘Just Forwarded' என்றெல்லாம் போட்டு அதே வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள் சிலர்.

unnamed_%281%29_18401.jpg

எவை நல்லவை:

  • ஒவ்வொரு துறையிலும் அரசியல் உண்டு. தடைகள் உண்டு. திறமைகளை மறைத்து வைக்க ‘பங்கர்’கள் உண்டு. இவை அனைத்தையும் உடைத்து எரிகிறது சோஷியல் மீடியா. திறமை இருந்தால் அதை யாராலும் தடுக்க முடியாது. ஒருவருக்கு கூட அறிமுகம் ஆகாத பலர், அவர்களது திறமையால் மட்டுமே பல்லாயிரக்கணக்கானோருக்கு அறிமுகம் ஆனது, அவர்கள் தொட நினைத்த உச்சத்தை தொடுவதற்கான நம்பிக்கை தந்தது என பல நல்ல வெற்றிக்கதைகளும் இங்கே உண்டு.
  • கம்யூனிட்டியை வளர்க்க சோஷியல் மீடியா ஒரு சரியான இடம். உங்களுக்கு ஒரு சினிமாவோ, ஒரு பாடலோ, ஒரு கேட்ஜெட்டோ, ஒரு வீடியோகேமோ பிடிக்கிறது என்றால், அதே ரசனை கொண்டு பலரை அடையாளம் கான சோஷியல் மீடியா உதவும். “அட்ஜஸ்ட்” செய்ய வேண்டிய பல இடங்களில் அப்படி இல்லாமல், பிடித்தபடி இருக்க இங்கே வாய்ப்புகள் ஏராளம். 
  • தொலைந்த உறவுகளையும், மறந்த பால்ய சிநேகிதங்களையும் பளிச் என காட்டும் மாய வெற்றிலைதான் சோஷியல் மீடியா. அவர்களது பெயரோ, ஃபோட்டோவோ மட்டும் தெரிந்தால் போதும். கொஞ்சம் பொறுமையாக தேடி அவர்களை கண்டறியும் வாய்ப்புகள் அதிகம். அவர்கள் எங்கிருந்தாலும் அந்த நட்பை மீண்டும் வளர்த்தெடுக்கலாம்.
  • செய்திகளை தேடித்தேடி அலைய வேண்டியதில்லை. ஹேஷ்டேக் கான்செப்ட் மூலம் நாம் தெரிந்துகொள்ள விரும்பும் விஷயத்தை பற்றி ஒரே ஒரு க்ளிக்கில் தெரிந்து கொள்ளலாம். புதிதாக ஒரு பைக் வந்திருக்கிறதென்றால், அந்த பைக் பற்றிய ஹேஷ்டேகில் அந்த பைக் நிறுவனத்தின் ஓனர் முதல், மிக சமீபமாக அந்த பைக் வாங்கியவரின் கருத்து வரை அனைத்தையும் அதே ஹேஷ்டேகில் படிக்கலாம்.
  • நம்மை நாமே இந்த உலகுக்கு அறிமுகப்படுத்தலாம். அழகிய சட்டை அணிவது முதல், முடியை வித்தியாசமாக கலர் செய்வது வரை எல்லாமே ஒருவரது கவனம் பெறத்தானே? அது சோஷியல் மீடியாவில் இன்னும் எளிது.

எவை கெட்டவை:

  • பெர்சனல் விஷயங்களை தொலைப்பதில் சோஷியல் மீடியா எப்போதும் ஆபத்தான இடம்தான். நமக்கே தெரியாமல், அல்லது விபரீதம் புரியாமல் எங்கேயாவது நமது தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து விடுவோம். அதுவே ஆபத்தில் முடியலாம். அது ஒரு ஃபோட்டோவோ, மொபைல் எண்ணோ, நாம் வெளியூர் போகிறோம் என்ற தகவலோ என எதுவாகவும் இருக்கலாம்.
  • உறுதிப்படுத்தப்படாத தகவலை உதாசீனப்படுத்தாமல், பகிர்வதன்மூலம் யாரோ ஒருவருக்கு தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்துகிறோம். இது நிச்சயம் தவிர்க்க வேண்டிய ஒன்று. 
  • மனரீதியாக ஒருவரை நம்பி நட்பு பாராட்டுவதில், இன்னமும் சிக்கல் நீடிக்கத்தான் செய்கிறது. நட்போடு இருப்பின் நலமே. அதை மீறி வாழ்க்கைத்துணையாக, அல்லது காதலாக அது உருவெடுக்கும்போது அவர்களைப் பற்றி நாம் மனதில் சோஷியல் மீடியாக்களின் மூலம் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பிம்பத்துக்கும் நிஜத்துக்கும் இருக்கும் இடைவெளி நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கலாம்.

ஆரம்ப காலங்களில் பூங்காக்களுக்கு வரையறைகளும் விதிமுறைகளும் குறைவுதான். சுற்றுச்சுவர் கூட இருக்காது. யார், எவர் வேண்டுமானாலும் எப்போதும் அங்கு எதுவும் செய்யலாம் என்ற நிலையே நீடிக்கும். ஆனால், இன்றைக்கு எல்லாப் பூங்காக்களுக்கும் சுற்றுச் சுவர் உண்டு. காவலாளி நியமித்து பராமரிக்கச் செய்கிறார்கள். அடையாளம் தெரியாத முகங்களை உற்று கவனித்து கேள்வி கேட்கும் காவலாளிகளும் உண்டு. இப்போதும் வம்பு வளர்க்கும் கூட்டம் உட்பட அனைத்து தரப்பு மக்களும் அங்கு உண்டு. ஆனால், அவரவர் எல்லையும் பொறுப்பும் உணர்ந்து செயல்படுகிறார்கள். இதே நிலைமையை சமூக ஊடகங்களிலும் கவனிக்க முடிகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் சமூக வலைதள நடவடிக்கைகள் பக்குவமடைந்து கொண்டே வருகிறது. முன்னர் நிஜ உலகத்துக்கும், வெர்ச்சுவல் உலகத்துக்கும் சம்மந்தமே இல்லாமல் இருந்தது. ஆனால், இன்று அந்த இடைவெளி குறைந்து கொண்டே வருகிறது. நாளடைவில் அது ஒரே புள்ளியில் சங்கமிக்கக் கூடும். அதற்கு முன்பாகவே இந்த வர்ச்சுவல் உலகை நாம் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். அது நம் எதிர்காலத்துக்கு மிக வளமானதாக நலமானதாக ஆக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை! 

கங்கை புண்ணியத்தையும், பாவத்தையும் ஒன்றாகவே சுமந்து செல்வதை போலதான் சமூக வலைதளங்களும் இருக்கின்றன. இதில் இருந்து இரண்டையும் பிரித்தறிய வேண்டிய கட்டாயம் இணையவாசிகளுக்கு இருக்கிறது. 

வாசகர்களே, சமூக ஊடகங்களின் செயல்பாடுகள் குறித்த நன்மை தீமைகளை, உங்கள் அனுபவங்களை, கருத்துகளை நீங்களும் கமெண்டில் பகிரலாமே!

http://www.vikatan.com/news/miscellaneous/74949-positive-and-negative-impacts-of-social-media.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.