வாழ்த்தொலிகள்
கேட்கும் தூரத்தில்
நீயிருந்தால் எம் தலைவா!

கைகட்டி ...
வாய்பொத்தி
பார்த்திருப்பாயோ

ஈழத்தில்
எம்மினம்
எதிர்கொள்ளும்
இன்னல்களை

சேய் தவிக்க
தாய் விடுவதில்லை
எம் தாயுமானவே!
நாம் தவித்திருக்க
நீ ஒழித்திருப்பாயா?

அன்னைமண் நீங்கி
அடுத்தவன் மண்ணில்
ஓழித்திருப்பது பேதமை
என்று சொல்லி
இந்துமாகடல் கடந்து
ஈழம்வந்தவன் நீ.

ஈனர்கள் சொல்கின்றார்
கடல் கடந்து நீயும்
கப்பலேறிச்சென்றாயாம்.
இன்னொறுவன் சொல்கின்றான்
இல்லையில்லை
கரும்புலியை வெடிக்கவைத்து
தரைவழியில் தப்பினாயாம்.

முடியாத வயதில்
மூதாதையர் உன்
தாய் தந்தையினை
சொகுசாக கப்பலிலேற்றி
கனடாவில் வாழவைக்க
தெரியாமலா நீயிருந்தாய்?

பச்சைக்குழந்தை பாலா
பருவவயது புதல்வி
தோள் மீறி வளர்த்த மகன்
துணையாள் என
மொத்தக்குடும்பத்தையும்
ஓற்றைநாளில்
உலகத்தின் மறுகோடியில்
சுகபோகமாய் குடியமர்த்த
வல்லமையற்றா மெளனமாயிருந்தாய்?

இல்லையே

மண்ணோடு மண்ணாய்
மாண்டுபோனாலும்
புறமுதுகிட்டோடான்
இந்த புலிவீரன் என்று
சொல்லி களத்தில் எம்மோடு
காத்திருந்தாயே யார் அறிவார்?

என் மக்கள் இன்னல் பட
என் குடும்பம் தப்பித்துபோகுமெனில்
நான் நாட்டுக்காய் போராடவில்லை
வீட்டுக்காய் போராடினேன் என்று
வரலாற்றில் எழுதவைக்கவா
எல்லோரும் முயற்சிக்கின்றீர்கள்
என்று எடுத்தெரிந்து பேசினாயே
இதை எவர் அறிவார்?

வீழ்ந்தால் இம்மண்ணில்தான்
வீழ்வேன் என்றுசொல்லி
உன் காலடியின் மண் எடுத்து
சட்டைப்பையில் போட்டுக்கொண்டு
கட்டியிருந்த பிஸ்டலை
கழட்டி வீசிவிட்டு
கையில் ஏ.கே யோடு
களம் நோக்கிப்போனானே
உன் மூத்தமகன்
அவனின் கடைசி விடைபெறுதல்
இப்படித்தான் இருந்ததென்று
ஈனர்கள் அறிவாரா?

எல்லாம் முடிந்ததென்று
எல்லோரும் ஏதோவோர்
திசைநோக்கி நகர்ந்துசெல்ல
தீர்க்கமாய் நீயும்
உன் நிழல்போல சிலரும்.......

நந்திக்கடலே நீ சொல்லு
மிச்சத்தை

-சுப்ரமணிய பிரபா (2016 - நவம்பர்)