• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
கிருபன்

ஜெயமோகனின் ‘நீர் நிலம் நெருப்பு’ ஆவணப்படம்

Recommended Posts

 

ஜெயமோகனின் ‘நீர் நிலம் நெருப்பு’ ஆவணப்படம்

எழுத்தாளர் ஜெயமோகனை தெரியாதவர்கள் நவீன இலக்கிய உலகில் இருக்க முடியாது. கணிசமான இலக்கிய வாசகர்கள் காலையில் எழுந்தவுடன் அவரது வலைதளம் சென்று படிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். ஜெயமோகன் தனது முதல் நாவலான ‘ரப்பர்’ தொடங்கி விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல், கன்னியாகுமரி, காடு, ஏழாம் உலகம், கொற்றவை ஆகிய நாவல்களால் பரவலான வாசகர்களை தன்பக்கம் ஈர்த்தவர். அவரது ‘அறம்’, ‘வெண்கடல்’ சிறுகதை தொகுதிகளும் இலக்கிய உலகில் நன்றாகப் பேசப்பட்டன. தற்போது, ‘வெண்முரசு’ என்ற தலைப்பில் மகாபாரதம் குறித்த தொடர் நாவல்களை எழுதி வருகிறார். ஜெயமோகன் இலக்கிய உலகில் மட்டுமல்ல; திரைப்பட உலகிலும் பரிச்சயமானவர். இயக்குநர் லோகிததாஸின் ‘கஸ்தூரிமான்’ தொடங்கி வசந்தபாலனின் ‘அங்காடித் தெரு’, ‘காவியத் தலைவன்’, சீனு ராமசாமியின் 'நீர்ப் பறவை' பாலாவின் ‘நான் கடவுள்’ என வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார். மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ திரைப்படத்தில் கதை, வசனம் இரண்டும் எழுதியதோடு திரைக்கதையிலும் பங்குகொண்டு பணியாற்றியிருக்கிறார்.

 

தமிழில் மட்டுமல்ல; மலையாளப் படங்களிலும் நான்கு திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார். ஜெயமோகனின் மகன் அஜிதன், இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றுகிறார். அஜிதன் தனது அப்பாவை வைத்து ‘ஜெயமோகன் - நீர் நிலம் நெருப்பு’ என்ற பெயரில் ஆவணப்படம் ஒன்றை இயக்கி யூடியூபில் வெளியிட்டிருக்கிறார். ஆவணப்படம் வெளியாகி நான்கே நாட்கள் ஆகியுள்ளநிலையில், இந்தப் படத்துக்கு இலக்கிய உலகில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கவிஞர் ரவிசுப்பிரமணியன், கவிஞர் ராஜசுந்தர்ராஜன், எழுத்தாளர் ஆர்.அபிலாஷ் போன்றவர்கள் இந்தப் படத்தை எடுத்துள்ளவிதத்தைப் பாராட்டி முகநூலில் எழுதியுள்ளார்கள். இலக்கிய வாசகர்களும் சமூக வலைதளங்களில் இந்தப் படத்தை பாராட்டியும் இந்தப் படத்தின் லிங்க்-கை பகிர்ந்தும் வருகிறார்கள். அப்படி என்ன இருக்கிறது இந்த ஆவணப்படத்தில்...

கேமரா மெல்ல பயணித்து நகர ஆரம்பிக்கிறது. சாரதா நகர் போர்டை காட்டுகிறது. ஜெயமோகனின் வீடு காட்டப்படுகிறது. மெல்ல கேமரா படியேறுகிறது. அறையில் ஜெயமோகன் தட்டச்சு செய்து கொண்டிருக்கிறார். மகன் அஜிதனிடம் பேசத் தொடங்குகிறார். நினைவுதெரிந்த முதல் நாளிலிருந்து எழுதிக்கொண்டேதான் இருக்கிறேன் எனச் சொல்லும் ஜெயமோகன், திருவரம்பு என்னும் ஊரில் இருந்த அவரது பூர்வீக வீடு குறித்தும், காலப்போக்கில் அந்த வீடு அழிந்துபோனது குறித்தும் பேசுகிறார். அவரது அப்பா, அம்மா இருவரும் தற்கொலை செய்துகொண்டது எப்படி அவரிடம் கொந்தளிப்பான மனநிலையை ஏற்படுத்தியது. வீட்டைவிட்டு துறவறம் பூண்டு, ஊர் ஊராக அலைந்தது, திருவண்ணாமலையில் ஒரு சாமியார் இவரைப் பார்த்து ஆங்கிலத்தில் ‘உனக்கு இங்கென்ன வேலை? நீ மெய்ஞானம் தேடியெல்லாம் வரவில்லை. உன் கண்களில் பல கனவுகள் தெரிகிறது. போய் வேலையைப் பார்!’ எனத் துரத்தியது என, எந்தத் தடையும் இல்லாமல் தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை, துயரங்களை எந்தத் தடையும் இல்லாமல் கூறுகிறார். தனது படைப்பாக்க செயல்பாடுகள் எவ்விதம் நடந்தன? முதல் நாவலான ‘ரப்பர்’ வந்த பின்னர் இலக்கிய உலகில் நடைபெற்ற மாற்றங்கள் என நிறைய விஷயங்களை உரையாடியிருக்கிறார் ஜெயமோகன். அவர் எழுத்தில் யானைகளும், பாம்புகளும் ஏன் அதிகமாக வருகின்றன? என்பதற்கு என் நிலத்துக்கான உயிரினங்கள் அவை என்கிறார். ரப்பர் பணப்பயிராக உருவெடுத்தபின் காடுகளும் இயற்கையும் எவ்வாறு பாதிப்புக்கு உள்ளாயின என்பதை விளக்குகிறார். மற்ற மரங்களுக்குப் போகும் நீரையும் ரப்பர் மரம் உறிஞ்சிவிடும். அதனால்தான் இந்தப் பகுதியில் தென்னை மரங்கள் இவ்வளவு சூம்பிப் போய் நிற்கின்றன என்கிறார். தனது மனைவி அருண்மொழியைக் கண்டது, கடிதம் கொடுத்தது, காதல் கொண்டது, திருமணம் என அவரது வாழ்வில் நடந்த முக்கிய விஷயங்களை ஒரு தந்தை மகனுக்கு விவரிப்பதுபோலவே படம் முழுவதும் உள்ள தொனி படத்தை ஒன்றிப் பார்க்கும்படி செய்துள்ளது. ஜெயமோகன் தான் வளர்ந்த, வாழ்ந்த இடங்களைக் காட்டும்போது சில இடங்களில் பேச்சு இல்லாமல் அமைதியாக விட்டிருப்பதும் நல்ல உத்தி. ஜெயமோகனின் தனிப்பட்ட பேச்சானது சுவாரஸ்யமாக இருக்கும். இந்த ஆவணப்படம் முழுவதும் எந்த இடத்திலும் டெம்போ கீழே போகாமல் இருப்பதற்கு ஜெயமோகனின் அனுபவ உரையாடலே காரணமாகும்.

இந்தப் படத்தை இயக்கி படத்தொகுப்பு செய்திருக்கிறார் அஜிதன். முதல் முயற்சி என்ற வகையில் பாராட்டலாம். பல இடங்களில் கேமராவை வித்தியாசமான கோணத்தில் பயன்படுத்தியிருக்கிறார். யாராவது இசையமைப்பாளரை வைத்து பின்னணி இசையை மற்றவர்கள் செய்து இருப்பார்கள். ஆனால் தட்டச்சு செய்யும் ஒலி, பறவைகள் எழுப்பும் ஒலிகள், காற்றில் மரங்கள் அசையும் சத்தம் என முழுக்க இயற்கையான பின்னணி சத்தங்களுக்கு நடுவே ஜெயமோகன் பேசுவது அவரது எழுத்தை பிரதிபலிப்பது போல இயல்பாக உள்ளது. படத்தின் படத்தொகுப்பும் சீராக உள்ளது. ஆவணப்படத்தில் சில விஷயங்களை காட்டுவதன் மூலமாக ஒரு எழுத்தாளனின் ஆளுமையை வெளிக்கொண்டு வர முடியும். அந்தவகையில், அஜிதனின் இந்த ஆவணப்படம் ஜெயமோகனின் அன்றாட வாழ்க்கையின் ஒரு நாளை பதிவு செய்வதுபோல இத்தனை வருடம் அவர் செய்துவந்த எழுத்தியக்கத்தின் தொடர்ச்சியை அருமையாக படம் பிடித்துள்ளது. இந்த ஆவணப்படத்தை சென்னை உள்ளிட்ட முக்கிய தமிழக நகரங்களில் வாசகர்களுக்கு திரையிடல் செய்து ஜெயமோகனுடன் கலந்துரையாடல் கூட்டங்களும் நடத்தப்பட இருப்பதாகவும் அவரது நண்பர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த ஆவணப்படத்தின் லிங்க். நீர் நிலம் நெருப்பு - ஆவணப்படம்

- விஜய் மகேந்திரன்

 

http://www.minnambalam.com/k/1478370631

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this