Jump to content

Road to Nandikadal- ஒரு பார்வை


Recommended Posts

 

Road to Nandikadal வாசித்து முடித்துவிட்டேன். முகமாலையில் தரித்து நின்ற 53 டிவிசனுக்குத் தலைமை தாங்கிய கமல் குணரத்தின நான்காவது ஈழப்போரில் இறுதியில் புலிகளின் தலைவர் கொல்லப்படுகின்ற தாக்குதல் வரை சொல்வதே இந்த நூல்.  புலிகளின் தலைவரைப் புகழ்ந்திருக்கின்றாரென  2ம் அத்தியாயம் மட்டும் வாசித்துவிட்டு 'புகழ்' பரப்பிய புலி ஆதரவாளர்கள் கடைசி அத்தியாயம் வரை வாசித்திருந்தால் கடும் சினம் வந்திருக்கும். ஒரு நாய் தன் கால் மீது கிடக்கிறது எனவும், நாயின் அடையாள சின்னம் எதுவெனவும் புலிகளின் தலைவரை -அவர் ஒரு மனிதர் என்றளவில் கூட- சிறிதும் மரியாதை கொடுக்காமல்  இருப்பதை வாசித்திருந்தால், புகழைப் பதிந்தவர்கள் தம்  பதிவுகளை மறைத்துவிட்டு ஓடியிருப்பார்கள்.

புலிகளைத் தீவிரவாதிகளென எல்லா இடத்திலும் அடையாளமிடும் கமலுக்கு, அவரை மீறி பல இடங்களில் புலிகளென வந்துவிடுகின்றது. பாவம் அடுத்த பதிப்பிலாவது  replace பட்டனைப் பாவித்து எஞ்சியுள்ள புலிகள் பகுதியை தீவிரவாதிகளென மாற்ற அவர் ஆவன செய்வாரென நம்புவோமாக.

தீவிரவாதிகள் மீது வெஞ்சினம் கொண்டபொழுதிலும் அவர்கள் அலையலையாய்  வந்து முகமாலை, புதுக்குடியிருப்பு பகுதிகளில் மோதியதை எதுகொண்டும் மறைக்க முடியவில்லை. மூன்று வருடங்களுக்குள் நிகழ்ந்த யுத்ததிற்குள் கிட்டத்தட்ட 5,800 படையினர் கொல்லப்பட்டதையும், 29,000 படையினர் போரினால் அங்கவீனப்பட்டதையும் ஒப்புக்கொள்கிறார். 

தீவிரவாதிகளை சில இடங்களில் பாராட்டுகின்றார். அவர்களின் மிகத்துல்லியமான ஆட்டிலறித்தாக்குதல்களை மட்டுமின்றி தங்களால் அவ்வளவு எளிதில் அழிக்கமுடியாது மிக நுட்பமான கோணங்களில் அவற்றை நிறுத்திவைத்திருந்த முறையையும் உலகில் எந்த இடத்திலும் இவ்வாறான கோணங்களில் வைத்து பார்த்ததில்லையெனவும் வியக்கின்றார்.

இரண்டாவது தீவிரவாதிகளின் வேவு பார்க்கும் திறத்தை. முகமாலை போன்ற முக்கிய நிலைகளைத் தாண்டி வந்து அவர்கள் உளவு பார்த்தமை. முக்கியமாய் 8-10 கிலோமீற்றர்கள் மிதக்கும் படகை கைகளால் (கவனிக்க துடுப்பு எதுவும் பாவிக்காது) அளைந்து வந்து உள்நுழைந்தது மட்டுமின்றி தாங்கள் இரவு சாப்பிட்டுவிட்டு மிச்சம் வைக்கும் சாப்பாட்டையும் உண்டு விட்டுசென்ற வேவுப்புலிகளின் திறமையைப் பாராட்டச் செய்கின்றார். அதுவும் அவ்வப்போது சுட்டு சுட்டு வீழ்த்த தொடர்ச்சியாக இப்படி கைகளால் வலித்துக்கொண்டு வந்த உளவுப்புலி பற்றி காமினி பொன்சாகவிற்குக் குறிப்பிட்டபோதுகூட மிகச்சிறந்த நீச்சல்வீரான அவரால் கூட இப்படியும் முடியுமா என நம்பமுடியாது இருந்தது என்கின்றார்.

இறுதி புதுமாத்தளின் 800m X 800m நடக்கும் இறுதி யுத்தத்தில் கால்களே இல்லாத சில புலிகள் அவ்வளவு மூர்க்கமான போராடிய திறமையைத் தன்னால் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை என்கின்றார்...

-சார்ஸ்ஸ் அன்ரனி ஓரிரவில் சாதாரண மக்கள் போல இராணுவ எல்லைக்குள் நுழைந்தபோது இது இரவு இப்போது அனுமதிக்கமாட்டோம் என இராணுவம் மறுத்தபோது நடந்த சண்டையிலே கொல்லப்பட்டிருக்கின்றார் என்கின்றார். சார்ஸ் அன்ரனி 800X 800 புதுமாத்தளன் சண்டை box இறுக்கப்பட்டபோது கிட்டத்தட்ட 4 கிலோமீற்றர் தொலைவில் சென்றே இராணுவ எல்லைக்குள் நுழைந்தார் எனச் சொல்லப்படுகின்றது.

புலிகளின் தலைவர் இருக்கின்றாரா அல்லது தப்பிவிட்டாரா என்பது தங்களுக்கு அவரைக் கொல்லும்வரை தெரியாது எனச் சொல்கின்றார்.
புலிகளின் தலைவர் கொல்லப்படுவதற்கு முன் மூன்று அலையலையான தாக்குதல்கள் நடத்தப்படுகின்றது. அந்த தாக்குதலிலேயே பானு, சொர்ணம், மாதவன் மாஸ்டர் உள்ளிட்டோர் கொல்லப்பட்டதாய் கூறுகின்றார். கிட்டத்தட்ட 700 பேர் ஒரு நாளிலே (மே 17) கொல்லப்படுகின்றனர்.

-புலிகளின் தலைவரும் சூசையும் கிட்டத்தட்ட அருகிலேயே நின்றிருக்கின்றனர். 

-புலிகளின் தலைவர் கொல்லப்பட்ட விதம் குறித்து எல்லாவிதமான வதந்திகளையும் - அவர் சரணடைந்து மகிந்தாவின் முன் மண்டியிடவைக்கப்பட்டவர் உட்பட- நிராகரித்து, தன்னைப் போன்றவர்கள் நேரடிச் சாட்சியாக நடந்ததைப் பார்த்தவர்கள் என உறுதியாகச் சொல்கின்றார். இறுதித்தாக்குதலை நடத்திய கொமாண்டோக்களின் படமும் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது.

உடனேயே புலிகளின் தலைவரின் உடலை எரித்து அடையாளமின்றிச் செய்ததாகவும், எல்லாளன் போல நினைவுச்சமாதி ஒருபோதும் அமைத்துவிடக்கூடாதெனவும் எச்சரிக்கையுடன் இருந்ததாகவும் கூறுகின்றார்.

புலிகளின் தலைவரின் உடலை அடையாளங் காட்ட கருணா வந்தபோது, தனக்குக் கேட்க ஒரு இராணுவத்தினன், 'நீங்களும் அவசரப்படாது பிரிந்துவிடாதிருந்தால், உங்கள் உடலையும் இங்கே கிடத்தியிருப்போம்' எனச் சொன்னதையும் இந்தப்புத்தகத்தில் பதிவு செய்கின்றார். கருணா ஒரு புன்சிரிப்புடன் புலிகளின் தலைவரை அடையாளம் காட்டினாலும், தயா மாஸ்டர் கண்களில் நீரோடு இருந்தார் எனவும் எழுதுகின்றார்.

ஆனால், இந்தப் புத்தக்கத்தில் நடேசன், புலித்தேவன் போன்றோர் சரணடைய வந்த காட்சிகளின் பதிவு எதுவும் இல்லை.

புலிகளின் இளையமகனான பாலச்சந்திரன் உயிரோடு சரணடைந்ததும், பிறகு கொல்லப்பட்டதும் பற்றி ஒரு சிறுமூச்சும் இல்லை.

தீவிரவாதிகளோடு யுத்தம் தொடங்கியது சரி. ஆனால் no fire zone  வரும்வரைக்கும் மக்கள் இழப்பு/கஷ்டம் பற்றி சிறுவிபரிப்புக்களும் இல்லை. ஏதோ இரண்டு இராணுவங்கள் மக்கள் இல்லாத சூனியப்பிரதேசத்தில் சண்டை செய்தனர் என நாங்கள் கற்பனை செய்யவேண்டியதுதான்.

இத்தனை அழிவு நிகழ்ந்தபின்னும், புலிகள் மீது கட்டாய இராணுவ சேர்ப்பு, மக்களை வெளியேவிடாது தடுத்தமை போன்ற பாரிய குற்றச்சாட்டுக்கள் வெளிப்படையாக இருந்தாலும் ஏன் அந்தமக்கள் உட்பட பெரும்பான்மையான தமிழ்மக்கள் மகிந்த ராஜபக்‌ஷாவிற்கு தன் பெரும்பான்மையாக ஆதரவை போரின் பின்பான காலத்தில் கூட காட்டவில்லை என்பதைப் புரியாதவரை, எல்லாளன் - துட்டகைமுனு,, மகிந்த ராஜபக்‌ஷா- பிரபாகரன் போன்றவர்கள் சாதாரண பெயர்களே, இவற்றின் பின்னால் இருக்கும் நுட்பமான பிரச்சினைகள் தீர்க்கப்படாது இருக்கும்வரை இஃதொரு நச்சுச்சூழல் என்பதை அறியாதவரை இந்த அழகிய தீவு அமைதியாக எளிதில் இருக்கமுடியுமா என யோசித்தும் பார்க்கமுடியும்.

வெற்றியை நடத்திக் காட்டிய இராணுவத்தளபதி சிறைக்குள்தான் பின்னர் அனுப்பப்பட்டார். இராணுவப் புரட்சி நடந்துவிடும் என்ற அச்சத்தாலோ என்னவோ போருக்குத்தலைமை தாங்கிய தளபதிகளில் பெரும்பான்மையோர் வெளிநாடுகளுக்கு தூதர்களாகத் துரத்தப்பட்டார்கள்.

ஈழத்தின் இறுதிப்போர் நிகழும்போது 120, 000 இருந்த இராணுவம் கிட்டத்தட்ட 230,000,  இரண்டு மடங்காக்கப்பட்டது. அதுவரை இருந்த 9 டிவிசன் - 20 டிவிசன்களாகவும் ஆக்கப்பட்டன. இவ்வளவு பேரை வைத்துக்கொண்டு, கொல்வதற்கு 'தீவிரவாதிகளும்' இல்லாதுபோகும்போது நாட்டில் எந்தச் சூழ்நிலையும் வரலாம் என்பதையும் அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியாது.

ஒரு தோற்றுப்போன போராட்டத்தை, அவர்கள் 'தீவிரவாதி'களாய் இருந்தாலும் தங்களின் சகோதர்களாகவும், நண்பர்களாகவும் இருந்த அவர்களை 'இயக்கம்' எனற பெயரில் பலர் வெறுக்கலாம், ஆனால் சக மனிதர்களாய் அவர்களை தமிழ்ச்சமூகம் அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுக்காது. மிக மோசமாக அவர்களைச் சித்தரிக்கும் இந்த நூலில் கற்றுக்கொள்ளும் பாடம் என்னவென்றால், 'நாங்கள் எப்போதும் அதிகாரம் மிக்கவர்கள், எங்களால் எதையும் செய்யமுடியும்' என்பதே.

 ஆம், எதையும் செய்யமுடியாது கீழ்மைப்பட்ட ஒரு சமூகம், தன் சாபங்களாலும், குற்றவுணர்வுகளைப் பெருக்குவதன் மூலமும் உங்களின் இருப்புக்களை/மனச்சாட்சிகளை அவ்வளவு எளிதில் உறங்கவிடாது என்றே நம்புகின்றேன்.

Elengo  Dse - முகநூல் மூலம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி அபராஜிதன்...இதில் எல்லாமே எழுதி இருப்பதால் புத்தகம் வாசிக்க வேண்டிய தேவையில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.