• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
கிருபன்

மிக உள்ளக விசாரணை - ஷோபாசக்தி

Recommended Posts

மிக உள்ளக விசாரணை - ஷோபாசக்தி

ஃப்ரான்ஸ் காஃப்காவினது புகழ்பெற்ற நாவலொன்றுக்கும் இந்தச் சிறுகதைக்கும் ஓர் ஒற்றுமையும் ஒரு வேற்றுமையுமுள்ளன. அவரது நாவலின் தலைப்பு ‘விசாரணை’. இந்தக் கதையின் தலைப்பு ‘மிக உள்ளக விசாரணை’. வேற்றுமை என்னவென்றால், காஃப்காவினது நாயகனுக்கு ஒரு கவுரவமான பெயர் கிடையாதெனினும் அவனை ‘K’ என்ற ஓர் எழுத்தாலாவது காஃப்கா குறித்துக்காட்டினார். நம்முடைய நாயகனுக்கு அதற்குக் கூட வக்கில்லை. இப்போது நாங்கள் நேரடியாகவே கதைக்குச் சென்றுவிடலாம்.

எண்பத்தைந்து மனித மண்டையோடுகளும் குவியலாக மனித எச்சங்களும் அகழ்ந்தெடுக்கப்பட்ட, இருபத்தைந்து வருடங்களிற்கு முந்தைய மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து இந்தக் கதை திடீரெனத் தொடங்குகின்றது.

யாழ்ப்பாணப் பட்டினத்திலிருந்து மண்கும்பான் கிராமம் நான்கு கட்டைகள் தொலைவிலிருக்கிறது. அங்கேதான் தீவுப் பகுதிக்கான பிரதான குடிநீர் வழங்கல் மையமிருக்கிறது. சென்ற வருடம் மார்ச் மாதத்தில் அந்த மையத்திலிருந்து நிலத்திற்குக் கீழாகக் குழாய்களைப் பதித்து, புங்குடுதீவுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான பணிகள் ஆரம்பமாயின. மண்கும்பானிலிருந்து இரண்டு கட்டைகள் தூரம்வரை குழாய்கள் பதிப்பதற்காகப் பூமியை அகழ்வது பெரிய கடினமான காரியமில்லை. மண்கும்பான் மணல் ஈரப் பசையுள்ள பூப்போன்ற குறுமணல். தண்ணீரை வெட்டுவதுபோல நிலத்தை வெட்டிவிடலாம். ஆனால் இரண்டு கட்டைகளிற்கு அப்பால், பூமி களிமண்ணும் ஊரியும் கலந்து கெட்டிப்பட்ட நிலமாகிவிடும். பூமியை அகழ்வதும் குழாய்களைப் பதிப்பதும் கொஞ்சம் சிரமமான காரியமே. அந்தக் கடின நிலம் தொடங்கும் கிராமத்திற்கு ஊரிப்புலம் என்று பெயர்.

ஊரிப்புலத்தில் குடிநீர் வழங்கல் வடிகால் சபை ஊழியர்கள் நவீனரக இராட்சத இயந்திரங்களைப் போட்டுப் பூமியை ஆழக் கிண்டியபோது எண்பத்தைந்து மனித மண்டையோடுகளும் எச்சங்களுமிருந்த சாவுக்குழியைக் கண்டுபிடித்தார்கள். உடனடியாகவே ஊறாத்துறையிலிருந்து காவற்துறை வந்து புதைகுழியைச் சுற்றி அரணமைத்து நின்றுகொண்டது. பொதுமக்களோ ஊடகங்களோ புதைகுழிக்கு அருகில் அனுமதிக்கப்படவில்லை. காவற்துறையின் தடுப்பை மீறிச் செல்ல முயன்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரொருவரை காவற்துறை இளநிலை அதிகாரியொருவன் நெஞ்சில் கை வைத்துத் தள்ளிவிட்டது அங்கே பெரியதொரு தள்ளுமுள்ளையும் உருவாக்கிவிட்டிருந்தது. புதைகுழி குறித்த தகவல் வெளியே பரவியதும் புதைகுழியை நோக்கித் தூரப் பிரதேசங்களிலிருந்தெல்லாம் ஓடிவந்த பொதுமக்கள் மீது அன்று மாலை காவற்துறையால் ஒரு சிறிய தடியடிப்பிரயோகம் நடைபெற்றதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன.

காவற்துறையால் கண்ணும் கருத்துமாகப் பாதுகாப்பட்ட அந்தப் புதைகுழிக்கு, அடுத்தநாள் காலையில் யாழ்ப்பாண மாவட்ட நீதிபதி, சட்டநிபுண வைத்தியர், தொல்பொருள் ஆய்வுப் பணிப்பாளர், தொல்பொருள் அகழ்வுப் பொறுப்பாதிகாரி மற்றும் உயர் காவற்துறை அதிகாரிகள் வந்து சேர்ந்து ஆய்வுகளை நடத்தினார்கள். எட்டு மாத ஆய்வுகளிற்கு பின்பும் அந்த மண்டையோடுகள் யாருடையவையென்றோ, அந்த மனிதப் புதைகுழியை உண்டாக்கியவர்கள் யார் என்பதையோ இந்தக் குழுவினரால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

காணாமற்போனவர்களைத் தேடும் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் ‘இது இராணுவம் உண்டாக்கிய புதைகுழியாக இருக்கலாம்’ எனத் தெரிவித்தார்கள். இன்னும் சில அமைப்புகள் ‘இது விடுதலைப் புலிகளால் உண்டாக்கப்பட்ட புதைகுழியாக இருக்கலாம்’ என்றார்கள். ஆனால் இரண்டு தரப்புகள் சொன்னதற்குமே ஆதாரங்களோ கண்கண்ட சாட்சியங்களோ கிடையாது. ஒரு மண்டையோட்டில் கூட துப்பாக்கிக் குண்டு துளைத்த தடயமோ, வெட்டுப்பட்ட தடயமோ இருக்கவில்லை. புதைகுழிக்குள் ஒரு துப்பாக்கிக் குண்டுகூடக் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தில் அந்த விசாரணை அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதியும் பணி ஓய்வுபெற்றுச் சென்றுவிட்டார்.

இந்த வருடத்தின் தொடக்கத்தில் கனகசபை தியாகராம் என்றொருவர் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். தியாகராம், மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட ஊரிப்புலம் கிராமத்தைச் சேர்ந்தவர். யுத்தத்தால் அந்தக் கிராமமே அழிக்கப்பட்ட பின்பு புலம்பெயர்ந்து பிரான்ஸில் வாழ்பவர். ஊரிப்புலத்தில் மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட செய்தியை அறிந்து பிரான்ஸிலிருந்து இலங்கைக்கு வந்திருந்தார். கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழிக்கு அருகாக ஒரு கிணறு நில மட்டத்தோடு மண்ணால் மூடப்பட்டு இருப்பதாகவும் அந்தக் கிணற்றிலும் மனிதர்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் அந்தக் கிணற்றையும் தோண்டிப் பார்க்கவேண்டும் என்பதாகவும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அவரது மனு இருந்தது. தியாகராமின் மூன்று சகோதர்கள் பல வருடங்களிற்கு முன்பாக ஒரேநாளில் காணாமற்போயிருந்தனர்.

யாழ்ப்பாண நீதிமன்ற நீதிபதிகளான M.J.நல்லைநாதன், எரங்க கந்தேவத்த ஆகிய இருவர் முன்னும் அந்த மனு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் மனுவை ஏற்றுக்கொண்டார்கள். அந்தக் கிணற்றைத் தோண்டிப் பார்க்க உத்தரவிட்டார்கள். ஆனால் வேலை நடக்கவில்லை.

கிணற்றைத் தோண்டும் வேலைகள் ஏன் தாமதப்படுகின்றன என இன்னொரு மனுவை தியாகராம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறிப்பிட்ட கிணறு ஊரிப்புலம் கிராம முன்னேற்றச் சங்கத்தால் கட்டப்பட்ட சங்கக் கிணறு எனவும் அந்தக் கிணற்றைத் தோண்டுவதற்கு கிராம முன்னேற்றச் சங்கத்தின் அனுமதி வேண்டுமெனவும் அந்த அனுமதியைப் பெறுவதற்கு கிராம முன்னேற்றச் சங்கத்தின் நிர்வாகத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறதெனவும் காவற்துறை நீதிமன்றத்தில் விளக்கமளித்தது.

நீதிபதிகள் காவற்துறையினரின் சமாதானத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. கிராம முன்னேற்றச் சங்கத்தின் அனுமதியில்லாமலேயே கிணற்றைத் தோண்டுவதற்கு நீதிமன்றம் சிறப்பு அனுமதி தருவதாகவும் உடனேயே வேலைகளை ஆரம்பிக்கும்படியும் நீதிபதிகள் காவற்துறைக்கு உத்தரவிட்டனர்.

அதற்குப் பின்பும் வேலை நடக்காததால் தியாகராம் தனது மூன்றாவது மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். ‘மழைக் காலமென்பதால் வேலையைத் தொடங்க முடியவில்லை’ எனக் காவற்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. வேலையை ஆரம்பிப்பதற்கு ஏப்ரல் மாத்தில் ஒரு நாள் குறிக்கப்பட்டது.

குறித்த நாளில் சட்ட நிபுண வைத்தியர் திடீர் விடுமுறையில் சென்றிருந்ததால் வேலை நடைபெறவில்லை. தியாகராம் சலிக்காமல் மறுபடியும் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். இந்தமுறை உண்மையிலேயே கடுப்பான நீதிபதிகள், சம்மந்தப்பட்ட பதின்மூன்று திணைக்களங்களின் அதிகாரிகளையும் அடுத்தநாளே நீதிமன்றிற்கு அழைத்து, மே 15-ம் தேதி கண்டிப்பாகத் தங்களது முன்னிலையில் அந்தக் கிணற்றைத் தோண்டியே ஆகவேண்டுமென உத்தரவிட்டார்கள்.

நீதிபதிகள் கிணற்றைத் தோண்ட குறித்த நாளுக்கு இரண்டு நாட்கள் முன்னதாக, யாழ்ப்பாணத்தில் ஒரு விடுதியில் தங்கியிருந்த தியாகராம் இரகசியப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். இந்தக் கிணறு தோண்டும் விஷயமாக அவர் யாழ்ப்பாணப் பத்திரிகையாளர் மன்றத்தில் கலந்துகொண்டு சில வார்த்தைகளைப் பேசியது பொலிஸாரால் பெரிய குற்றமாகக் கருதப்பட்டது. சட்டப்படி இப்போது பிரஞ்சுப் பிரஜையான தியாகராம் இலங்கை அரசியல் விவகாரங்கள் குறித்து ஊடகங்களில் பேசுவது சட்டவிரோதம் எனச் சொல்லப்பட்டு அவர் உடனடியாகப் பிரான்ஸுக்கு நாடுகடத்தப்பட்டார். இந்தச் செய்தி பெரியளவில் யாராலும் கண்டுகொள்ளப்படவில்லை. கவிஞர்.வ.ஐ.ச.ஜெயபாலன் மட்டுமே முகப்புத்தகத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார். ‘தியாகராம் போலவே என்னையும் இலங்கை அரசு கைதுசெய்து நாடு கடத்தியது. வசந்த காலமொன்றில் எங்கள் மண்ணின் புதைகுழிகளிற்குள்ளிருந்து சூரியப் பூக்கள் மலர்ந்து என்னை வரவேற்கும்’ என்று அவர் நன்நம்பிக்கை தொனிக்க எழுதியிருந்தார்.

மே 15-ம் தேதி காலையில், நீதிபதிகள் நல்லைநாதனும் எரங்க கந்தேவத்தவும் ஒரே வண்டியில் யாழ்ப்பாணத்திலிருந்து பண்ணைப் பாலம் வழியாக ஊரிப்புலம் நோக்கிப் புறப்பட்டார்கள். இருவரும் தங்களது பணியைத் தாங்கள் சட்டப்படியும் சரியாகவும் செய்கிறோம் என்ற உணர்வில் ஊறிப்போயிருந்தார்கள். கந்தேவத்த ஒரு சமயத்தில் தன் அருகேயிருந்த நல்லைநாதனின் கையைப் பற்றி மென்மையாக அழுத்தினர். இந்த சமிக்ஞைக்கு ‘நாங்கள் யாருக்கும் அஞ்சாமல் நீதியின் பக்கமிருப்போம், தைரியமாகயிரும்!’ என்பது அர்த்தப்பாடாகும்.

பருத்தித்துறை பச்சைத் தமிழரான நல்லைநாதனும், உயன புறான் அப்பு பரம்பரையில் வந்த சிங்களவரான கந்தேவத்தவும் நெடுநாளைய நெருங்கிய நண்பர்கள். கொழும்பு சட்டக் கல்லூரியில் ஒன்றாகவே பயின்று, கொழும்பு நீதிமன்றொன்றில் ஒன்றாகவே வழக்கறிஞர்களாகத் தொழில் செய்தவர்கள். நீதிபதிகளாக ஒரே நாளில் நியமிக்கப்பட்டவர்கள். நல்லைநாதன் எவ்வளவு திறமாகச் சிங்களம் பேசுவரோ அதேபோல கந்தேவத்தவும் திறமாகத் தமிழ் பேசுவார். நல்லைநாதன் யாழ்ப்பாணத்திற்கு பணி மாற்றலாகி வந்த ஒரே மாதத்தில் கந்தேவத்தவும் யாழ்ப்பாண நீதிமன்றத்திற்கு வந்து சேர்ந்தார்.

நீதிபதிகள் வந்த வண்டி பண்ணைப் பாலத்தை நீங்கி ஓடி மண்கும்பான் வழியாக ஊரிப்புலத்திற்குள் நுழைந்தது. ஏறக்குறைய நாற்பது வருடங்களிற்குப் பின்பாக நல்லைநாதன் ஊரிப்புலத்துக்கு வருகிறார். அவர் வந்துபோனபோது திறமையான ஓவியனால் வரையப்பட்ட நெய்தல் நிலச் சித்திரம் போல கிடந்த ஊரிப்புலம், இப்போது வெறும் பனங்காடாகக் கிடந்தது. மனிதர்கள் அங்கே ஒருகாலத்தில் வசித்தார்கள் என்பதற்கு இப்போதிருக்கும் ஒரே அடையாளம் அங்கு கடற்கரையையொட்டி இடிந்து கிடந்த குட்டைச் சுவருடைய சிறிய வைரவர் கோயில்தான். அந்தக் கோயிலுக்கு மண்கும்பானிலிருந்து யாரோ வந்து ஒவ்வொருநாளும் விளக்கேற்றிச் சென்றார்கள். மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டு காவற்துறையினரும் இராணுவத்தினரும் இரவு பகலாக இந்த இடத்தையே சுற்றத் தொடங்கிய பின்பு வைரவருக்கு விளக்கேற்றவும் யாரும் வரவில்லை.

ஊரிப்புலத்திற்கு தான் வந்துசென்ற நினைவுகளை கண்களை நெற்றிக்குள் சொருகிக்கொண்டு நல்லைநாதன் கந்தேவத்தவுக்குச் சொல்லலானார். அவர் யாழ்ப்பாணத்தில் படித்துக்கொண்டிருந்தபோது தனது நண்பர்களுடன் அடிக்கடி வெள்ளைக் கடற்கரைக்கு நீராட வருவதுண்டு. வெள்ளைக் கடற்கரைக்கு ஊரிப்புலத்தைத் தாண்டித்தான் சென்றாக வேண்டும். ஊரிப்புலம் மூன்று பக்கமும் அடர் பனங்காடுகளாலும் தெற்குப் பக்கத்தில் கடலாலும் சூழப்பட்டு நடுவில் தனித்துக் கிடந்த சின்னஞ் சிறிய கிராமம். ஊரிப்புலத்தில் கிடைக்கும் பனங்கள்ளு, கூவில் கள்ளைவிடத் திறமானது எனப் பெயர் பெற்றிருந்தது. வெள்ளைக் கடற்கரைக்கு வரும்போதெல்லாம் நல்லைநாதனும் நண்பர்களும் ஊரிப்புலத்திற்கு வந்து கள்ளருந்திச் செல்வதுண்டு. நல்லைநாதன் இளம் வயதிலே நோஞ்சானாக இருந்ததால் உடம்பு தேறுவதற்காக, மருந்துபோல தனிப் பனைக் கள்ளை சாடையாகப் பாவிப்பதுண்டு.

நல்லைநாதன் வண்டியை விட்டிறங்கி அங்கிருந்த பனைமரங்களை மெதுவாக அண்ணாந்து பார்த்தார். காய்ந்த காவோலைகளும் உக்கிப்போன மட்டைகளுமாக அந்த மரங்களிருந்தன. கண்ணுக்கு எட்டிய தூரம்வரை மனித நடமாட்டமில்லை. ஒட்டுமொத்தக் கிராமமே சிதறி இடம்பெயர்ந்து அது கைவிடப்பட்ட நிலமாகியிருந்தது.

சென்ற வருடம் புதைகுழி தோண்டியபோது ஏற்பட்ட குழப்பங்களைக் கணக்கிலெடுத்து இந்தமுறை காவற்துறை அதிஉயர் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தது. அவர்களிற்குத் தெரியாமல் ஒரு நாய் கூட உள்ளே நுழைய வழியில்லை. ஊரிப்புலத்திற்குள் ஊடகவியலாளர்களோ பொதுமக்களோ நுழைவதை, கிணற்றைத் தோண்டுவதற்கு இரண்டு நாட்களிற்கு முன்னதாகவே காவற்துறை முற்றாகத் தடைசெய்திருந்தது.

நீதிபதிகளும் அதிகாரிகளும் அமர்வதற்காக, தோண்டப்படயிருந்த கிணற்றுக்கு அருகே சிறிய கூடாரம் அமைக்கப்பட்டு உள்ளே மேசை நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன. கிணற்றைத் தோண்டுவதற்கான உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்ததும் பணியாளர்கள் துரிதமாக இயந்திரங்களை முடுக்கிவிட்டு வேலையில் இறங்கினார்கள்.

அதுவொரு கட்டுக் கிணறு. கிணற்றின் மேலாக நில மட்டத்திலிருந்து மூன்றடி உயரத்திற்கு அறுகோணவடிவில் தடித்த கட்டுச்சுவர் அங்கே இருந்திருக்க வேண்டும் என நீதிபதிகளோடு வந்திருந்த நிபுணர்கள் ஊகம் தெரிவித்தார்கள். அந்தச் சுவர்கள் இடிக்கப்பட்டுக் கிணற்றுக்குள் தள்ளப்பட்டிருக்க வேண்டும். அதற்கு மேலே ஊரி கலந்த களிமண்ணைப் போட்டுக் கிணத்தை நிலமட்டத்திற்கு மூடியிருக்கிறார்கள். இயந்திரங்கள் துரிதமாக கிணற்றை நிரவியிருந்த ஊரியையும் களிமண்ணையும் வெட்டியள்ளி அகற்றிப்போட்டன.

“உள்ளே ஏதாவது கிடைக்கும் என நீர் நம்புகிறீரா?” எனக் கந்தேவத்த மூக்குக் கண்ணாடியைச் சுத்தம் செய்துகொண்டிருந்த நல்லைநாதனிடம் மெல்லிய குரலில் கேட்டார். சற்று யோசித்த நல்லைநாதன் “இந்த ஊர் கிடக்கும் கோலத்தைப் பார்த்தால் மொத்த ஊருமே இந்தக் கிணற்றிற்குள்தான் கிடக்கிறது என்றுதான் எனக்குப் படுகிறது” என்றார்.

கந்தேவத்த மெதுவாகக் கையை நீட்டி நல்லைநாதனின் கையைப் பற்றி மென்மையாக அழுத்தினார். அவரது முகம் இருண்டிருந்தது. பின்பு ‘ தீர்க்கமுடியாத இன்னுமொரு வழக்கு நமக்காக இந்தக் கிணற்றிற்குள் காத்திருக்கிறதா…’ எனத் தனக்குள் முணுமுணுத்துக்கொண்டார்.

நிபுணர்கள் அதுவொரு ஆழமற்ற கிணறு என்று முதலே ஊகம் தெரிவித்திருந்தது சரியானதே. இருபது அடிகளிற்குக் கீழே இடிபாடுகளிற்குள் இடைவெளி தெரிந்தது. இடித்துத் தள்ளப்பட்டிருந்த கிணற்றின் கட்டுச் சுவர் பாளம் பாளமாக ஒன்றின் மீது ஒன்றாகச் செருக்கிக்கிடந்தன. பாளங்களை இயந்திரங்கள் தூக்கி வெளியே எறிந்தபோது கீழே நீர்மட்டம் தெரிந்தது. கிணற்றின் உட்புறச் சுவரில் பாசிபடிந்து அவற்றிடையே சிலவகை நீர்த்தாவரங்கள் வளர்ந்திருந்தன. இயந்திரம் ஒரு பெரிய சீமெந்துப் பாளத்தைத் தூக்கியபோது கிணற்றின் உள்ளே வித்தியாசமாக ஏதோ கிடப்பது தெரியலாயிற்று.

நல்லைநாதனும் கந்தேவத்தவும் உடனடியாகத் தோண்டும் வேலையை நிறுத்தச் சொன்னார்கள். கிணற்றினுள்ளே மேலிருந்து தடித்த கயிறுகள் இறக்கப்பட, திடகாத்திரமான இரண்டுபேர் அந்தக் கயிறுகளிலே உள்ளே இறங்கிச் சென்றார்கள். அவர்கள் கயிற்றில் தொங்கியவாறே ஆழத்திலிருந்து அச்சத்துடனும் வியப்புடனும் கூச்சலிட்டார்கள்:

” இங்கே ஒரு மனிதன் உயிரோடு இருக்கிறான்.”

இதைக் கேட்டதும் நீதிபதிகளின் உணர்வு என்ன, வைத்திய சட்ட நிபுணர்களின் எதிர்வினை என்ன, தொல்பொருள் ஆய்வுப் பணிப்பாளரின் ஊகம் என்ன, காவற்துறையினரிடையே எழுந்த சலசலப்புகள் தானென்ன போன்றவற்றை விபரிப்பது இந்தச் சிறிய கதைக்கு முக்கியமல்ல என்பதால் கதையின் முதற்பாதியை நாங்கள் இங்கேயே நிறுத்திவிட்டு கதையின் மறுபாதிக்குச் செல்வோம்.

2

 

நான்கு வலுவான கயிறுகளில் நீளமும் அகலமுமான பலகையைக் கட்டிக் கிணற்றுக்குள் இறக்கி உள்ளேயிருந்த மனிதனை மேலே தூக்கி எடுத்தபோது செக்கலாகி ஊரிப்புலத்தில் இருள் கவியத் தொடங்கிற்று. கிணற்றுக்கு அருகே நீதிபதிகளது கூடாரத்திற்குள் அந்த மனிதன் ஒரு ரப்பர் தடுக்கில் படுக்க வைக்கப்பட்டிருந்தான். அந்த மனிதனைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அந்த மனிதன் ஓரளவு ஆரோக்கியமாகவே இருக்கிறான் என வியப்புடன் நீதிபதிகளிற்கு அறிவித்தனர். நல்லைநாதன் மெதுவாக கந்தேவத்தவின் கையைப் பற்றி மென்மையாக அழுத்தினார். பின்பு அவர் ஒரு பொலிஸ்காரனை அழைத்து, தூரத்தே தெரிந்த வைரவர் கோயிலில் விளக்கேற்றிவிட்டு வருமாறு பணித்தார். எதுவும் பேசாமல் கடற்கரையை நோக்கி இருளையே பார்த்துக்கொண்டிருந்தார். அங்கே ஒரு சிறு சுடர் தோன்றியதும் ஆழான பெருமூச்சொன்றை வெளியேற்றினார்.

அந்தக் கூடாரத்துக்கு வெளியே காவற்துறை நெருக்கியடித்துக்கொண்டு சுவர்போல வளையமாக நின்றது. மருத்துவர்கள், தொல்லியல் நிபுணர்கள் போன்றவர்கள் கூடாரத்திற்கு வெளியே நாற்காலிகளில் அமர்ந்துகொண்டு புகைபிடிக்கத் தொடங்கினார்கள். கூடாரத்திற்குள் ஏற்றப்பட்டிருந்த ஒரேயொரு விளக்கின் கீழே நாற்காலிகளில் நீதிபதிகள் இருவரும் அமர்ந்திருந்தார்கள்.

உயிரோடு கண்டுபிடிக்கப்பட்ட அந்த மனிதன் இப்போது மெதுவாக எழுந்து உட்கார்ந்தான். நிர்வாணமாயிருந்த அவனது தேகத்தை ஒரு புதிய வெண்ணிறப் போர்வையால் மருத்துவர்கள் மூடிவிட்டிருந்தார்கள். அவன் ஆழமாக மூச்சுகளை உள்ளிளுத்து பெரும் சத்தத்துடன் வெளியேற்றிக்கொண்டிருந்தான். ரோமங்களால் சடைத்துக் கிடந்த அவனது கரிய முகத்திலிருந்த கண்கள் அந்தக் குறைந்த வெளிச்சத்தில் வாத்து முட்டைகளைப் போல உருண்டுகொண்டிருந்தன.
தாங்கள் யார், அங்கே என்ன நடக்கிறது என்பதை நீதிபதிகள் விரிவாக அந்த மனிதனுக்கு விளங்கப்படுத்திவிட்டு அந்த மனிதன் குறித்த தங்களது நீதி விசாரணையை மெல்லத் தொடக்கினார்கள்.

“முதலில், உம்முடைய பெயரென்ன?”

“தெரியவில்லை அய்யா.”

“உமக்குப் பெயரில்லையா?”

“பெயரில்லாமல் எப்படி இருந்திருக்கமுடியும்? பலகாலமாக யாரும் என்னைக் கூப்பிடவில்லை என்பதால் எனது பெயரை நான் மறந்து போய்விட்டேன். எவ்வளவு கடுமையாக யோசித்தாலும் எனது பெயர் ஞாபகத்திற்கு வரமாட்டேன் என்கிறது.”

“உமது பெற்றோர்கள்?”

“அம்மாவுடைய பெயர் அன்னம், அய்யாவுடைய பெயர் செல்லையா. என்னுடன் கூடப் பிறந்தது நான்கு சகோதரிகளும் அய்ந்து சகோதரர்களும். அவர்களை நான் எப்போதுமே நினைத்துக்கொண்டிருப்பதால் அவர்களில் ஒருவருடைய பெயரைக் கூட நான் மறக்கவில்லை.”

“எவ்வளவு காலமாக நீர் இந்தக் கிணற்றிற்குள் இருக்கிறீர்?”

“தெரியவில்லை அய்யா?”

“எப்போது இந்தக் கிணற்றுக்குள் வந்தீர் என்பது ஞாபகமுள்ளதா?”

“தெளிவாக ஞாபகமிருக்கிறது. 1990 -ம் ஆண்டு, ஆவணி 22-ம் தேதி, சனிக்கிழமை. அன்று என்னுடைய இருபத்துநான்காவது பிறந்தநாள். முதல்நாள் மாலையிலேயே எனது கடைசித் தங்கை வெள்ளைக் கடதாசி மட்டையில் தானே வரைந்து தயாரித்த பிறந்தநாள் வாழ்த்து அட்டையை எனக்குக் கொடுத்திருந்தாள். அன்றிரவு, அதாவது வெள்ளிக்கிழமை இரவு நான் வைரவர் கோயிலில் விளக்கேற்றியபோதுதான் என்னைக் கெட்டகாலம் சூழ்ந்துகொண்டது. நான் வெளியே இருக்கும்வரை நான்தான் வைரவர் கோயிலிற்கு தினமும் மாலையில் விளக்கு வைப்பேன். பரம்பரை பரம்பரையாக எங்களது குடும்பம்தான் வைரவருக்கு விளக்கேற்றி வருகிறது. என்னுடைய பூட்டனார் முருகேசுதான் வைரவர் கோயிலை உண்டாக்கி வைத்தது.”

“இதெல்லாம் உமக்கு ஞாபகமிருக்கிறது..உம்முடைய பெயர்தான் உமக்கு ஞாபகம் இல்லையோ?”

“அய்யா..நான் உங்களுக்குப் பதில் சொல்லிக்கொண்டிருக்கும் போதே எனது பெயரை ஞாபகம் கொள்ள முயற்சித்துக்கொண்டுதானிருக்கிறேன்.”

நீதிபதிகளிற்கு தேநீர் வந்தது. அந்த மனிதனுக்குத் தேநீர் கொடுக்கப்பட்டபோது உதடுகளைக் குவித்துப் பெரும் சத்தமெழுப்பி ஊதி ஊதி அவன் தேநீரைக் குடிக்கலானான். மறுபடியும் நீதிபதிகள் ஆரம்பித்தார்கள்.

“உம்மைப் பற்றியும் நீர் எப்படி இந்தக் கிணற்றுக்குள் வந்தீர் என்பதையும் எங்களிற்கு விபரமாகத் தெரிவியும். அதற்கு முன்பு முழுவதுமாகத் தேநீரைக் குடித்துவிடும்.”

அந்த மனிதன் மீதமிருந்த தேநீரோடு கோப்பையைக் கீழே மணலில் வைத்துவிட்டு தனது கதையைச் சொல்லத் தொடங்கினான். உண்மையிலேயே அவனது கதை பெரிதாகச் சுவாரஸ்யமில்லை. கேட்டுக் கேட்டுச் சலித்துப்போன கதைதான். ஆனால் ஒரு சாட்சியம் என்றவகையில் அவனது கதை நீதிபதிகளிற்கும் நமக்கும் மிக முக்கியமானதாக இருக்கிறது :

“ஒரு ஈ தன்னுடைய பெயரை மறந்துவிட்டது எனச் சின்ன வயதில் ஒரு உபகதை படித்திருக்கிறேன். அதுபோலிருக்கிறது என்னுடைய கதை. நான் இந்தக் கிராமத்தை விட்டு அதிகம் வெளியே போனதில்லை. வெளியே போய் வருமளவிற்கு நாட்டு நிலைமைகளும் இருக்கவில்லை. பத்தாவது வகுப்பு வரை படித்திருக்கிறேன். இரண்டு தடவைகள் பத்தாவது வகுப்புப் பரீட்சை எழுதியும் எட்டுப் பாடங்களிலும் தோற்றுவிட்டேன். என்னை முழு முட்டாளென எனது தங்கைகளும் முழுச் சோம்பேறியென்று எனது அய்யாவும் ஏசுவார்கள். ‘அவனொரு போக்கு’ என்று அம்மா சொல்வார். எனக்கும் வேலை செய்வதிலோ, காசு பணம் தேடுவதிலோ நாட்டமே இருக்கவில்லை. ஆனால் சின்ன வயதிலிருந்தே கடவுள் பக்தியும் சமூக சேவை செய்யவேண்டுமென்ற ஈடுபாடும் எனக்கு அதிகமாகவே உண்டு. இது பரவணிப் பழக்கமாக இருக்கலாம். எனது பேரனார் கதிர்காமு பொதுக்காரியங்களில் அதிகமும் ஈடுபாடுள்ளவராக இருந்தாராம். அவரது முயற்சியால்தான் வெள்ளைக் கடற்கரைக்குச் செல்லும் கிறவல் வீதி அமைக்கப்பட்டதென்றும் சொல்வார்கள். அதற்கு முன்பு ஊரிப்புலத்திற்கு சாலை வசதியே இருந்ததில்லையாம்.

ஊரிப்புலத்திற்குள் ‘திருவள்ளுவர் வாசகசாலை’யை நான்தான் முன்னின்று உருவாக்கினேன். அது ஓர் ஓலைக் குடிசை என்றாலும், ஒரேயொரு தினப்பத்திரிகை மட்டுமே அங்க போடப்பட்டாலும், அந்த வாசகசாலை இளைஞர்கள் சந்தித்துப் பேச ஒரு மையமாக இருந்தது. இந்திய இராணுவத்தின் காலத்தில் சண்டை தொடங்கிய மூன்று மாதங்களிற்கு தீவுப் பகுதிக்கு எந்த உணவுப் பொருட்களுமே வரவில்லை. எனது தலைமையில் வாசகசாலை இளைஞர்கள்தான் ஊருக்குப் பொதுவாக கஞ்சி காய்ச்சிச் சனங்களிற்கு ஊற்றினோம். பாடசாலை விளையாட்டுப் போட்டி, வைரவர் கோயில் வேள்வித் திருவிழா, சிரமதானங்கள் எல்லாவற்றையும் நாங்கள் முன்னின்று நடத்தினோம்.

சண்டை தொடங்கியதன் பின்பாக கிழமைக்கு ஒரு சவமாவது ஊரிப்புலம் கடற்கரையில் அடையும். அந்தச் சடலங்கள் பலநாட்களாக உப்பு நீரிலே ஊறிக்கிடந்து கரைக்கு வருவதால் ஊதியும் வெளுத்துப்போயும் கிடக்கும். சில சடலங்களிலே வெடிபட்ட காயங்களுமிருக்கும். கடற்கரையில் மிகப்பெரிய பலூன்கள் போல அந்தச் சடலங்கள் அடைந்து கிடக்கும். தொட்டால் தசை தொட்டவரின் கையோடு பிய்ந்துவரும். அந்தச் சடலம் தமிழனுடையதா சிங்களவனுடையதா இந்தியாக்காரனுடையதா என்றெல்லாம் யாருக்கும் தெரியாது. அந்தச் சடலங்களை அடக்கம் செய்யவும் யாரும் வரமாட்டார்கள். ‘திருவள்ளுவர் வாசகசாலை’ இளைஞர்கள்தான் அந்தச் சடலங்களை தூக்கி எடுத்துக் கடற்கரையில் குழி வெட்டிப் புதைப்போம்.

எங்களது ஊரிலிருந்து எண்பத்துநான்காம் ஆண்டு, இரண்டு இளைஞர்கள் ஒரு இயக்கத்திற்குப் போனார்கள். மாரிகாலத்தில் ஒருநாள் இதோ இந்தக் கிணற்றுக்குள் அவர்களது சடலங்கள் கிடந்தன. அது தற்கொலையா அல்லது கொலையா என யாருக்கும் தெரியாது. ஆனால் அதற்குப் பிறகு எங்களது கிராமத்திலிருந்து யாரும் இயக்கங்களிற்குப் போனது கிடையாது. இந்தப் பக்கத்தில் இயக்கங்களின் நடமாட்டமும் பெரிதாகக் கிடையாது.

இராணுவத்தைப் பற்றிக் கேட்டீர்களென்றால் 1990 ஆவணி மாதம்வரை அவர்கள் ஊரிப்புலத்திற்குள் வந்ததில்லை. நூறு குடிசைவீடுகளுள்ள உக்குட்டிக் கிராமம்தானே இது! ஆவணி மாதம் இருபத்தோராம் தேதி அதிகாலையில் தீவுப்பகுதி முழுவதும் இராணுவம் இறங்கிவிட்டது. ஒரு சிறிய எதிர்ப்புமில்லாமல் அவர்கள் எல்லாத் திசைகளாலும் முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி கிடைத்தது. எந்தப் பக்கத்தாலும் ஓடித் தப்ப வழியில்லை. சனங்கள் எல்லோரும் வீடுகளை விட்டு ஓடிப்போய் பொதுக் கட்டடங்களில் ஒன்றாகக் கூடியிருந்தார்கள். ஊரிப்புலம் முழுவதும் ஊரைக் காலிசெய்துகொண்டு வெள்ளைக் கடற்கரைக்குப் போனோம். அங்கே குருபாபா சியாரம் பெரிய பள்ளிவாசல் இருக்கிறதல்லவா…அங்கே எல்லோரும் கூடியிருந்தோம். இராணுவம் அங்கே வருமென எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம். ஆனால் பள்ளிவாசல் மீது இராணுவம் தாக்குதல் நடத்தாதென நாங்கள் நம்பிக்கையுடனிருந்தோம். பள்ளிவாசலுக்குப் பொறுப்பான பெரியவர்களும் அப்படித்தான் சொன்னார்கள். மதியமாகியும் இராணுவம் அந்தப் பக்கம் வருவதற்கான அறிகுறியே தெரியவில்லை. இராணுவம் எங்கே நிற்கிறது என்று தெரிந்துகொள்ளவும் வசதிகள் இல்லை. பள்ளிவாசல் பெரியவர்களின் ஏற்பாட்டில் எங்களெல்லோருக்கும் மதிய உணவு பெரிய பெரிய கிடாரங்களில் சமைக்கப்பட்டது. அங்கு வைத்துத்தான் எனது கடைசித் தங்கை எனக்கு பிறந்தநாள் வாழ்த்து அட்டையை வரைந்து கொடுத்தாள். பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லுமளவிற்கு மாலைக்குள்ளேயே நிலமை சகஜமாகிவிட்டது. இந்த இரவு பள்ளிவாசலிலேயே படுத்துவிட்டு காலையிலே ஊருக்குத் திரும்பிவிடலாம் எனச் சனங்கள் கதைத்துக்கொண்டார்கள்.

சூரியன் விழுந்து செக்கலாகத் தொடங்கிவிட்டது. பள்ளிவாசலில் மஃரிப் தொழுகைக்காகப் பாங்கு சொல்லத் தொடங்கினார்கள். அதைக் கேட்டதிலிருந்து, என்னுடைய வைரவர் இன்று விளக்கில்லாமல் இருக்கிறாரே என்ற ஏக்கம் என்னை வாட்டத் தொடங்கியது. ஊரிப்புலத்தின் காவல் தெய்வம் வெள்ளிக்கிழமை அதுவுமாக விளக்கில்லாமல் இருப்பது ஊருக்கே கேடாகலாம் என்ற எண்ணம் தோன்றியதும் நான் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் மெதுவாக அங்கிருந்து அகன்று கடற்கரை வழியாக ஊரிப்புலத்தை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

கடற்கரை நீளத்திற்கும் தாழையும் ஈச்சையும் பற்றைக் காடாக அடர்ந்திருப்பதால் அவற்றிடையே புகுந்து பதுங்கிப் பதுங்கிக் கவனமாகத்தான் நடந்தேன். தூரத்தில் இராணுவத்தின் நடமாட்டம் தெரிகிறதா எனப் பார்த்துப் பார்த்துத்தான் நடந்தேன். முற்றாக இருள் சூழ்ந்திருந்தபோது ஊரிப்புலத்திற்குள் நுழைந்து எனது வீட்டை அடைந்தேன். எண்ணெய்ப் போத்தலையும் தீப்பெட்டியையும் எடுத்துக்கொண்டு வைரவர் கோயிலை நோக்கி நடந்தேன். ஒரு அசுமாத்தமுமில்லை.

கடலுக்குள் இறங்கிக் கை கால்களைக் கழுவிக்கொண்டு, வைரவர் சூலத்தின் முன்னாக விளக்கை ஏற்றினேன். ஒரு குட்டிச் சுவரும் சிறிய பீடமும் ஒற்றைச் சூலமும் கொண்ட அந்தக் கோயிலில் ஏற்றி வைக்கப்பட்ட ஒற்றைத் திரி ஒளியில் ஊரிப்புலமே பிரகாசிப்பதுபோல தோன்றியது. மனதிற்குள் பெரிய நிம்மதி வந்தது. அப்போதுதான் இராணுவத்தினர்களை நான் கண்டேன். இருளுக்குள் ஒளிந்திருந்த அவர்கள் ஓசைப்படாமல் வந்து வெளிச்சத்தில் நின்றார்கள். என்னுடைய கைகள் உடனேயே கயிற்றால் முதுகுப்புறமாகக் கட்டப்பட்டன. என்னை அவர்கள் நடத்திவந்து இந்தக் கிணற்றுக்கு அருகாகத் தரையில் உட்கார வைத்தார்கள். அடி ஆய்க்கினைகள் எதுவுமில்லை. நான் இங்கிருந்து பார்த்தபோது வைரவர் கோயிலில் சுடர் தெரிந்தது.

என்னைச் சுற்றிவர மனித உருவங்களின் நடமாட்டங்களும் சலசலப்புகளும் கேட்டுக்கொண்டேயிருந்தன. என்ன நடக்கிறதென இருளுக்குள் கூர்ந்து பார்த்தேன். அந்த நிலம் முழுவதும் இராணுவத்தினர் இருப்பதாகத் தோன்றியது. ஒரு ஆமிக்காரன் என்னிடம் வந்து தண்ணீர் வேண்டுமா எனக் கேட்டான். ஆமென்றேன். இதே கிணற்றில் நீர் அள்ளி என் மீது ஊற்றினான். நான் ஒரு மீனைப்போல நீரைப் பருகினேன். படுத்துக்கொள்ளச் சொன்னான். கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டிருந்ததால் மல்லாந்தோ குப்புறவே படுக்க வழியிருக்கவில்லை. ஒருக்களித்துப் படுத்துக்கொண்டேன். அங்கிருந்து தப்பிச் செல்ல வழியிருக்கிறதா எனக் கவனித்தேன். வாய்ப்பே இல்லை. எல்லாப் பக்கங்களிலும் நடமாடும் சத்தமும் சிங்களத்தில் பேசுவதும் கேட்டது. தூரத்தே மெதுவாகக் கேட்ட வாகனங்களின் இரைச்சல் வர வரப் பெரிதாகியது. கண்களை மூடிப் படுத்துக்கொண்டேன். கண்களை மூடியதும், சட்டென என் உடல் பிரகாசிப்பதாக எனக்குத் தோன்றியது. நான் மெல்லிய ஒளியாக என்னைக் கற்பனை செய்துகொண்டேன். நான் வைரவருக்குக் கொண்டுவந்த நெருப்புத்துளி என் இருதயத்தில் பற்றிச் சுடர்வதாகவே உணர்ந்தேன். அந்த மனத் தைரியத்தோடுதான் இரவைக் கழித்தேன்.

விடிந்தபோதுதான் ஊரிப்புலம் முழுவதுமே இராணுவத்தினரால் இரவோடு இரவாக நிரப்பப்பட்டிருந்தது தெரிந்தது. மெதுவாக எழுந்து தரையில் உட்கார்ந்துகொண்டு சுற்றிவரப் பார்வையை ஓட்டினேன். என்னைப் போலவே முதுகுப்புறமாகக் கைகள் கட்டப்பட்டிருந்த பல மனிதர்கள் அங்கு உட்கார்ந்தும் படுத்துமிருப்பதைப் பார்த்தேன். நான் தனியாக இராணுவத்திடம் சிக்கவில்லை எனத் தெரிந்ததும் ஒருவகையான ஆறுதல் மனதைப் பற்றிக்கொண்டது.
பிடித்துவரப்பட்ட எங்களைச் சுற்றிவர ஆயுதங்களுடன் இராணுவத்தினர் நின்றார்களே தவிர அவர்கள் எங்களிற்கு எந்தத் தொல்லையும் தரவில்லை. குறையென்றால் நாள் முழுவதும் எங்களுக்கு அவர்கள் உணவோ நீரோ கொடுக்காததைச் சொல்லலாம். இராணுவத்தினர் பகல் முழுவதும் மண்டைதீவு, மண்கும்பான், அல்லைப்பிட்டி, வேலணைப் பக்கங்களிலிருந்து மனிதர்களைப் பிடித்து சிறிய சிறிய குழுக்களாக நடத்திக் கூட்டிவந்தனர். எல்லா மனிதர்களது கைகளும் முதுகுப்புறங்களில் பிணைக்கப்பட்டிருந்தன. உச்சிப் பொழுதில் எனது அண்ணன்கள் இருவரும் இன்னும் சிலரும் பிடித்துவரப்பட்டார்கள். அவர்களிடையே பள்ளிவாசல் பெரியவர்களுமிருந்தார்கள்.

நாங்கள் எங்களுக்கிடையே மெதுவாகப் பேசிக்கொண்டோம். நாங்கள் பேசுவதை இராணுவத்தினர் தடுத்தார்களில்லை. எங்களை விசாரித்துவிட்டு விடுதலை செய்துவிடுவார்கள் எனச் சிலர் சொன்னார்கள். எல்லோரையும் கப்பலில் ஏற்றி ‘பூசா’ தடுப்புமுகாமுக்கு அனுப்பயிருக்கிறார்கள் எனச் சிலர் சொன்னார்கள்.

எங்களை பெரிய அதிகாரி பார்வையிட இருப்பதாகச் சொல்லி, எங்களை ஒன்பது வரிசைகளில் முன்பின்னாக இராணுவத்தினர் உட்கார வைத்தார்கள். நாங்கள் எல்லாமாக எண்பத்தாறு கைதிகள் அங்கேயிருந்தோம். பெரிய அதிகாரி வந்து எங்களைப் பார்த்தார். அவரது முகத்தில் எந்த உணர்வுமேயில்லை. ஒரு நிமிடம்தான் எங்களைப் பார்த்திருப்பார். பின்பு திரும்பி கடற்கரைப் பக்கமாக நடந்துபோனார்.

சற்று நேரத்தில் எங்களை நோக்கி இரு பாரிய இயந்திரங்களை இராணுவத்தினர் ஓட்டிவருவதைக் கண்டேன். எங்களுக்குச் சற்றுத் தூரத்தில் அவை ஊரியும் களிமண்ணுமான நிலத்தை அகழ்ந்து ஒரு பெரிய குழியொன்றை உண்டாக்கத் தொடங்கின. தூசிப் படலம் பனை வட்டுகளிற்கு மேலாக எழுந்தது. இயந்திரங்களின் இரைச்சல் காதுகளை அடைக்கப்பண்ணிற்று. டீசல் எரியும் வாசனையும் புகையும் வெறும் வயிற்றைக் குமட்டிற்று. என்ன நடக்கயிருக்கிறது என எங்கள் எல்லோருக்குமே புரிந்துபோயிற்று.

வெளிச்சம் பூமிக்குள் குத்தென இறங்கிக்கொண்டிருந்தது. செக்கல் பொழுதை வைத்துப் பார்த்தால் அப்போது மாலை ஆறுமணிக்கு முன்பின்னாக இருக்கலாம். எங்களுக்கு முன்னே திருத்தமான விசாலமான சவக்குழி உருவாகியிருந்தது. இராணுவத்தினர் எங்கள் எண்பத்தாறுபேரையும் எழுப்பி வரிசைகட்டி நிற்க வைத்தார்கள். அந்த வரிசையை நடந்து சென்று சவக்குழிக்குள் இறங்கச் சொன்னார்கள். யாரிடமிருந்தும் ஒரு எதிர்ப்புக் குரலோ மறுப்போ எழுவதாகயில்லை. அழுகின்ற ஓசைகள் கேட்கின்றனவா எனக் காதைக் கூர்மைப்படுத்திக் கேட்டேன். கடலின் இரைச்சல் மட்டுமே கேட்கிறது. வரிசை மெதுவாகச் சவக் குழிக்குள் இறங்கிக்கொண்டிருக்கிறது. என் அண்ணன்கள் இருவரும் முன்பின்னாகக் குழிக்குள் இறங்குவதை நான் கண்டேன். அவர்கள் இருவருமே என்னைத் திரும்பிப் பார்த்தவாறே குழிக்குள் இறங்கினார்கள். வரிசையில் எனக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த பள்ளிவாசல் பெரியவர் அப்போது ராகம் போட்டு முணுமுணுக்கத் தொடங்கினார். நிச்சயமாக அது அவரது இறுதித்தொழுகைக் குரல்தான். நான் அந்தக் குரலையே காதைத் தீட்டி உன்னிப்பாகக் கவனித்தேன். அவரது குரல் சிறிது சிறிதாக உயர்ந்துகொண்டே வருவதுபோலத் தோன்றியது. எனது கால்கள் சடுதியில் வரிசையிலிருந்து விலகி அசையாமல் நின்றன. என்னைக் கடந்து அந்தப் பெரியவர் முன்னே நகர்ந்தார். அவரது குரல் தொழுதுகொண்டேயிருந்தது.

வரிசையிலிருந்து விலகிநின்ற என்னை நோக்கி ஓர் இராணுவவீரன் வேகமாக நடந்துவந்தான். அவனது கண்கள் எனது கண்களை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தன. நல்ல உயரமும் சுருட்டை முடியுமாக இருந்த அவன் ஒரு சாயலில் எனது சின்ன அண்ணன் போலவேயிருந்தான். அவன் என்னருகே வந்ததும் நான் சொன்னேன்:

“வைரவருக்கு விளக்கு வைத்துவிட்டு வந்துவிடுகிறேன்..”

நான் சொன்னது அவனுக்கு விளங்கவில்லை எனத் தெரிந்தது. நான் வைரவர் கோயிலை நோக்கி நடக்கத் தொடங்கினேன். என்னை அவன் தடுக்கவில்லை. நான் மெதுவாக நடந்து இந்தக் கிணற்றருகே வந்தேன். விளக்கு வைப்பதற்கு முன்னதாக முகம், கைகால்களைச் சுத்தப்படுத்த வேண்டும். கிணற்றுக் கட்டில் சில இராணுவவீரர்கள் உட்கார்ந்திருந்தார்கள். நான் அவர்களிடம் சொன்னேன்:

“கொஞ்ச நேரம் எனது கைகளை அவிழ்த்துவிடுங்கள். நான் வைரவருக்கு விளக்கு வைத்துவிட்டு வந்துவிடுகிறேன்..”

ஓர் இராணுவவீரன் எனது தலையைப் பற்றிப் பிடித்தான். இன்னொருவன் எனது கால்களைப் பிடித்தான். அப்படியே என்னைத் தூக்கிக் கிணற்றுக்குள் போட்டார்கள். நான் தட்டுத்தடுமாறி எழுந்து நின்றேன். கிணற்றுக்குள் எனது முழங்கால்கள் வரைதான் தண்ணீரிருந்தது. கிணற்றின் இருளுக்குள் மறைந்து ஓரமாக ஒதுங்கி நின்றுகொண்டு வெளியே துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தங்கள் கேட்கின்றனவா எனக் கவனித்தேன். வெடிச் சத்தங்கள் ஏதும் கேட்கவில்லை. இயந்திரங்கள் உறுமிக்கொண்டு முன்னும் பின்னுமாக நகரும் இரைச்சல்தான் கேட்டுக்கொண்டேயிருந்தது. பின்பு அந்த இரைச்சல் சத்தம் எனக்கு மிக அருகிலேயே கேட்டது. பூமி மெல்ல நடுங்கியது. கிணற்றின் கட்டுச் சுவர் இடிக்கப்பட்டு கிணற்றுக்குள் பாளம் பாளமாக இறங்கலாயிற்று.”

நல்லைநாதன் மெதுவாக கந்தேவத்தவின் கையைப் பற்றி மென்மையாக இரு தடவைகள் அழுத்தினார். வெண்ணிறப் போர்வையால் போர்த்தப்பட்டிருந்த மனிதன் கோப்பையிலிருந்த மிகுதித் தேநீரை மெதுவாகக் குடிக்கத் தொடங்கினான்.

நல்லைநாதனும் கந்தேவத்தவும் கிட்டத்தட்ட ஒருமணிநேரம் தங்களிற்குள் மெதுவான குரலில் விவாதித்தார்கள். பின்பு கூடாரத்திற்கு வெளியே சென்று சட்ட வைத்திய நிபுணரிடமும் காவற்துறை அதிகாரிகளிடமும் ஆலோசனை செய்தார்கள். அவர்கள் மறுபடியும் கூடாரத்திற்குள் நுழைந்தபோது அந்த மனிதனின் வாத்து முட்டைக் கண்கள் முன்னிலும் மினுங்கிப் பிரகாசிப்பதைக் கண்டார்கள். “இந்த மனிதனின் உயிர் அவனது கண்களிலிருக்கிறது” என்றார் கந்தேவத்த. நீதிபதிகள் இருவரும் மறுபடியும் ஆசனங்களில் அமர்ந்துகொண்டார்கள்.

“நீர் உம்முடைய பெயரைக் கண்டுபிடித்து விட்டீரா?”

“இன்னும் இல்லை அய்யா.”

“நீர் இவ்வளவு காலமும் மூடப்பட்ட கிணற்றுக்குள் உயிரோடு இருந்தீர் என்பது பெரிய அதிசயமாயிருக்கிறது.”

“அங்கே நிலத்தோடு கொஞ்சத் தண்ணீர் எப்படியிருக்கிறதோ, தாவரங்களும் தவளைகளும் புழுபூச்சிகளும் எப்படியிருக்கின்றனவோ அப்படித்தான் நானும் இருந்தேன். அதிசயமாக எதுவுமில்லை.”

நீதிபதிகள் சற்று மவுனமாகயிருந்துவிட்டு மீண்டும் பேசத் தொடங்கினார்கள்:

“நாட்டில் சண்டை முடிந்து சரியாக ஏழு வருடங்களாகின்றன. சண்டை நடந்த காலம் முழுவதும் பல்லாயிரக்கணக்கில் மனிதர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பல மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எல்லாப் பக்கங்களிலும் தவறிழைக்கப்பட்டிருக்கிறது. நீரே சொன்னதுபோல தமிழரா, சிங்களவரா அல்லது இந்தியரா என்பது தெரியாத மனித எச்சங்கள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. இதையெல்லாம் கடந்துதான் நமது நாட்டில் இப்போது சமாதானம் ஏற்பட்டுள்ளது. இது பகை மறப்புக் காலம்.”

மற்றைய நீதிபதி தொடரலானார்:

“கண்டுபிடிக்கப்படும் இந்தப் புதைகுழிகள் குறித்து சர்வதேசத்தின் முன்னிலையில் விசாரணைகள் தேவையென அந்நிய நாடுகள் எப்போதுமே எங்களை நெருக்குகின்றன. ஆனால் நாங்களோ உள்ளக விசாரணைகளே போதுமென்கிறோம். உள்ளக விசாரணைகளைத் தொடங்கியும் விட்டோம். அந்த விசாரணையின் பகுதியாகத்தான் இந்தக் கிணற்றை அகழ்ந்து உம்மைக் கண்டுபிடித்தோம். நீர் எங்கள் முன்னே வழங்கிய சாட்சியத்தை நாங்கள் முழுமையாகவே ஏற்றுக்கொள்கிறோம்.

ஆனால் உமது சாட்சியத்தால் இந்த நாட்டிற்கும் நாட்டு மக்களிற்கும் என்ன பயன்? ஆறிய புண்ணைக் குத்திக் கிழித்து ஆராய்வது போலுள்ளது உமது சாட்சியம். காயங்களைத் தோண்டிக்கொண்டிருந்தால் புண் எப்படி ஆறும்? உம்முடைய சாட்சியம் பகையைத்தான் வளர்க்குமேயொழிய சமாதானத்தையல்ல.”

மற்றைய நீதிபதி முடிவாகச் சொன்னார்:

“நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் எந்த முயற்சியையும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம். இந்தச் சமாதானத்தை நாங்கள் எதற்காகவும் இழக்கத் தயாரில்லை. நீர் சமூக அக்கறை கொண்டவரென்றும்  ஜனங்களிற்குச் சேவை செய்வதில் ஆர்வமுமுடையவர் என்றும் சொன்னீர். ஆகவே இந்த நாட்டின் பொறுப்புணர்வு மிக்க நற்பிரஜை நீர் என்றே கருதுகின்றோம். சமாதானத்தைக் காப்பாற்றுவது உம்முடைய கடைமை!”

நீதிபதிகள் விசாரணை முடிந்ததன் அடையாளமாக எழுந்து நின்றார்கள்.

பக்குவமாக வெளியே தூக்கி எடுக்கப்பட்டது போலவே, அந்த மனிதன் பக்குவமாக மீண்டும் கிணற்றிற்குள் இறக்கப்பட்டு கிணறு மறுபடியும் மூடப்பட்டது. கனகசபை தியாகராமின் மனு நீதிபதிகளால் தள்ளுபடி செய்யப்பட்டது.

இரண்டு நீதிபதிகளும் சோர்வுடனும் மனப்பாரத்துடனும் அங்கிருந்து புறப்பட்டார்கள். வண்டி இருவரையும் ஏற்றிக்கொண்டு கிளம்பியபோது ஒரு நிமிடம் வண்டியை நிறுத்தச் சொன்ன நல்லைநாதன் அங்கிருந்த காவற்துறை அதிகாரி ஒருவரைத் தன்னருகே அழைத்து ஓர் உத்தரவை வழங்கினார்:

“ஊரிப்புலம் வைரவருக்கு நாள் தவறாது விளக்கேற்றி வைக்கவேண்டும்.”

கந்தேவத்த அப்போது நல்லைநாதனின் கையைப் பற்றி மென்மையாக அழுத்தினார்.

*

('சிலேட்' அக்டோபர் 2016 இதழில் வெளியாகியது)

http://www.shobasakthi.com/shobasakthi/?p=1317

Share this post


Link to post
Share on other sites

இதை வாசிக்க நெஞ்சுக்குள் என்னோ செய்யுது

Share this post


Link to post
Share on other sites

நன்றி கிருபன் இணைத்ததுக்கு.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

Share this post


Link to post
Share on other sites

இணைப்புக்கு நன்றி!

மனிதப்புதைகுளிகள் பேசினால் உலகே தாங்காது. ஆனால் அரசுகள் இப்படியே தமது காலத்தைகடத்தித் தமது இலக்கை அடைந்துவிடுகின்றன.

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

Sign in to follow this